உக்ரேன் மீதான ஏகாதிபத்திய சார்பு போலி-இடது நிகழ்வு, அமைப்பாளர்களுக்கு தோல்வியில் முடிந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 13, ஞாயிற்றுக்கிழமை, பல்வேறு ஏகாதிபத்திய சார்பு போலி-இடது போக்குகளின் பிரதிநிதிகள், அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலுக்கு தங்கள் ஆதரவை விளக்குவதற்கும் அதனுடன் இணைந்த பிரச்சாரத்தை உற்சாகப்படுத்துவதற்கும் ஒரு இணையவழி நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

'ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக: உக்ரேன், ரஷ்யா, நேட்டோ மற்றும் அமெரிக்கா' என்ற தலைப்பில், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்ட்டுகள் (DSA) உடன் இணைந்த டெம்பெஸ்ட் கலெக்டிவ் (Tempest Collective) நிதியுதவி அளித்து இதை நடத்தியது. அது பல போலி-இடது குழுக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றது: Against the Current, ஹேமார்க்கெட் புக்ஸ் (இப்போது செயல்படாத சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) வெளியீட்டகம்), New Politics, (மாடிசன், விஸ்கான்சனில் உள்ள DSA கிளை) மற்றும் ஜேர்மனியின் மார்க்ஸ் 21 உடன் தொடர்புடைய அமெரிக்க குழு ஆகியவை. இந்த நிகழ்வின் நடுவராக முன்னாள் ISO உறுப்பினர் லீ வெங்ராஃப் (Lee Wengraf) மற்றும் பேச்சாளர்களில் ஜில்பேர் அஷ்கார் (Gilbert Achcar), ரஷ்ய சோசலிஸ்ட் இயக்கத்தின் (RSM) இல்யா புட்ரைட்ஸ்கிஸ் (Ilya Budraitskis), ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பேராசிரியர் ஹோ-ஃபங் ஹங் (Ho-Fung Hung) மற்றும் எரின் காஸ் (தற்போது DSA உறுப்பினர், முன்பு ISO) ஆகியோர் அடங்குவர்.

2014 இல் ஜில்பேர் அஷ்கார் (Wikimedia Commons)

அஷ்கார் சிறப்புரையாற்றினார். நீண்டகாலமாக பப்லோவாதியும் இலண்டனின் ஆபிரிக்க மற்றும் ஓரியண்டல் ஆய்வுப் பள்ளியில் பேராசிரியருமான இவர், ஊதியம் பெறும் பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகருமாவார்.

அஷ்காரின் கருத்துக்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் ஆற்றிய பாத்திரத்தை புறக்கணித்து, புட்டின் அரசாங்கத்தின் வலதுசாரி பாத்திரத்தின் மீது கிட்டத்தட்ட முழுமையாக கவனம் செலுத்துவதன் மூலம் விவாதத்திற்கான தொனியை அமைத்தன. அவர் அமெரிக்காவையும் நேட்டோவையும் குறிப்பிட்டால், அது புட்டினின் எழுச்சிக்கு அவர்களைக் குறை கூறுவதற்கு மட்டுமே. அமெரிக்காவையோ அல்லது ஐரோப்பிய சக்திகளையோ விமர்சிக்காமல், 'சமகால ரஷ்யாவின் ஏகாதிபத்திய தன்மை பற்றி எந்த விவாதமும் சாத்தியமில்லை' என அஷ்கார் அறிவித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்த எதிர்ப்பையும் புட்டினுக்கான ஆதரவுடன் அஷ்கார் சமப்படுத்தினார். அவர் விளக்கினார்:

'அமெரிக்க அரசாங்கத்தின் ஒவ்வொரு எதிரியையும் ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதும் இந்த தானாக முழங்கால் நடுங்கும் எதிர்வினைகள் உங்களிடம் உள்ளன,' என்று அவர் கூறினார். 'இப்போது, இந்த வகையான அணுகுமுறையை நாம் குறிப்பாக சிரியாவில் தெளிவாகக் கண்டோம். உண்மையில் உலகின் மிக மோசமான சர்வாதிகாரங்களில் ஒன்றை ஆதரிப்பதற்காக, சிரியாவில் ரஷ்ய ஏகாதிபத்தியத்தால் தொடங்கப்பட்ட இந்த பயங்கரமான அழிவுப் போரை இடதுசாரிகளின் ஒரு பகுதி ஆதரித்துள்ளது” என அஷ்கார் கூறினார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஏகாதிபத்தியப் போர்களுக்கு அஷ்காரின் சொந்த ஆதரவு “தானாக முழங்கால் நடுக்கமாக” மாறி இருக்கிறது. 30,000 லிபியர்களைக் கொன்ற லிபியா மீதான அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் சிரியாவில் அமெரிக்க ஆதரவு உள்நாட்டுப் போரை அவர் ஆதரித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், அஷ்கார் ஏகாதிபத்திய சக்திகளுக்கு உக்ரேனுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்புமாறு அழைப்பு விடுத்தார்: 'ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிபந்தனைகள் இல்லாமல் தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்' என எழுதினார்.

அமெரிக்க/நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கு “தானாக முழங்கால் நடுங்கும்” எதிர்ப்பு என அஷ்கார் அழைப்பது உண்மையில் மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடாகும், இது புறநிலை சமூக உறவுகளின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 'ஜனநாயக' ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் நடவடிக்கைகளை தவறான மனிதாபிமான நடிப்புக்களின் கீழ் நியாயப்படுத்தும் முயற்சிகளை நிராகரிக்கிறது. வெளிச்சம் கண்ட ஒரு அரசியல் துரோகியின் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம், அஷ்கார் மார்க்சிசத்திற்கு நம்பகமான அறிவுசார் அடித்தளம் இல்லை என மறுக்க முயற்சிக்கிறார். அதே தர்க்கத்தின்படி, மருத்துவ அறிவியலில் “தானாக முழங்கால் நடுங்கும்” நம்பிக்கைக்காக மருத்துவமனை நோயாளியை அல்லது உயிரியல் மற்றும் இயற்பியலில் “தானாக முழங்கால் நடுங்கும்” நம்பிக்கைக்காக ஒரு விஞ்ஞானியை அஷ்கார் கண்டிக்கலாம். 'தானாக முழங்கால் நடுங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு' என்ற அக்ஷாருடைய குறிப்புகள், ஏகாதிபத்தியத்திடம் தனது சொந்த அழுகிய சரணாகதியை நியாயப்படுத்தும் முயற்சிகள் மட்டுமே.

ரஷ்ய சோசலிஸ்ட் இயக்கத்தின் (RSM) இல்யா புட்ரைட்ஸ்கிஸ் அடுத்து பேசியதோடு, அமெரிக்க/நேட்டோ போர் உந்துதலின் இடதுசாரி எதிர்ப்பாளர்கள் மீதான அஷ்காரின் தாக்குதலை உறுதிப்படுத்தினார். உக்ரேனில் அமெரிக்கா தலைமையிலான 2014 சதியை ஆதரித்து, ரஷ்யாவின் பாசிச எதிர்ப்பாளர்களுடன் சிவப்பு-பழுப்பு நிற கூட்டணிக்கு அழைப்பு விடுத்த புட்ரைட்ஸ்கிஸ், “ரஷ்யாவில் விளாடிமிர் புட்டினின் பிற்போக்குத்தனமான, இரத்தக்களரி மற்றும் குற்றவியல் சர்வாதிகாரத்திற்கு மேற்கத்திய இடதுசாரிகள் எந்த சாக்குப்போக்குகளையும் கொண்டு வரக்கூடாது.' புட்ரைட்ஸ்கிஸ் ரஷ்யாவை பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பிய ஒரே குற்றவாளியாக சித்தரித்து, 'உக்ரேன் மக்களுடன் சர்வதேச ஒற்றுமைக்கு' அழைப்பு விடுத்தார்.

ஹோ-ஃபங் ஹங் பின்னர், ரஷ்யாவிற்கு போதுமான ஆக்கிரோஷமற்ற பதிலடி, சீனாவை பலப்படுத்த மட்டுமே செய்யும் என்று எச்சரித்தார், இரு நாடுகளையும் 'நவீன பேரரசுகள்' என அழைத்தார். உக்ரேனின் கட்டுப்பாட்டைப் பெறுவதில் புட்டின் வெற்றி பெற்றால், 'தைவானில் இதேபோன்ற செயலைச் செய்வதில் சீனா அதிக அதிகாரம் பெற்றதாகவும் வசதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும்' என்று ஹங் கூறினார்.

DSA உறுப்பினர் எரின் காஸ் கடைசியாகப் பேசினார், உக்ரேன் மீதான புட்டின் படையெடுப்பை எதிர்க்கும் ஆர்ப்பாட்டங்களில் உக்ரேனிய தேசியவாதிகளின் போருக்கான அழைப்புகளை சோசலிஸ்டுகள் எதிர்க்கக் கூடாது என்றார். எதிர்ப்புக்கள், 'தடைகள், பறக்கத் தடை பகுதிகள் மற்றும் பொதுவாக மேற்கத்திய தலையீடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன' என்ற உண்மைக்கு பதிலளித்த காஸ், 'சோசலிஸ்டுகள் இந்த நடவடிக்கைகளை உண்மையில் காட்ட முடிந்த இடத்தில், அவர்கள் அந்த கோரிக்கைகளுக்கு எதிராக வாதிடுவதன் மூலம் துரதிர்ஷ்டவசமாக மிகவும் விரோதமான அணுகுமுறையை எடுத்துள்ளனர்.

காஸ் முடித்தார், 'இந்த நேரத்தில் அமெரிக்க சோசலிஸ்டுகள் ஒன்றாக இணைந்து எடுக்க வேண்டிய ஒரேயொரு அடிப்படை நிலைப்பாடு மட்டுமே உள்ளது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், அதுதான் ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தங்களைக் காத்துக் கொள்ளும் உக்ரேனியர்களின் உரிமைக்கான முழுமையான ஆதரவின் நிலைப்பாடு ஆகும்.'

காஸ்ஸுக்குப் பின்னர் அஷ்கார் உடனடியாகப் பேசினார், 'எரின் கூறியதை நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன், அமெரிக்காவிலும் எங்கும் சோசலிச சர்வதேசிய நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதை எரின் மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார்.'... அவர் மேலும் கூறினார், 'ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கு உக்ரேனிய மக்களின் எதிர்ப்பானது நம் அனைவருக்கும் ஒரு வரையறுக்கும் தருணம்... ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பெயரில் விளாடிமிர் புட்டினைப் பாராட்டிக்கொண்டே இருக்க ஒருவர் முற்றிலும் குருடனாக இருக்க வேண்டும். வார்த்தைக்கு மன்னிக்கவும், இது உண்மையில் பூரணமானது, முற்றிலும் முட்டாள்தனமானது”.

கலந்துரையாடலில் சுமார் 45 நிமிடங்கள் அஷ்கார் மற்றும் புட்ரைட்ஸ்கிஸ் பேசிய பின்னர், WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் பொது கருத்துக்கள் பதிவு செய்யுமிடத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார், பங்கேற்பாளர்கள் அனைவரையும் பயன்படுத்துமாறு நிகழ்ச்சியின் நடுவர் ஊக்குவித்தார். பொது நிகழ்வில் தனது பெயரை பதிவுசெய்து அடையாளப்படுத்திய நோர்த் எழுதினார்:

'இது ஸ்டீராய்டுகளின் மீதான சாக்ட்மனிசம். 40 நிமிட வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகளின் இந்த வலை கருத்தரங்கில், அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தை கண்டித்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை. மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் அமெரிக்க-நேட்டோ நடத்திய கடந்த 31 ஆண்டுகால போர்களுக்கும் இந்த பினாமி போரின் தொடக்கத்திற்கும் இடையே எந்த தொடர்பும் காட்டப்படவில்லை.”

நிகழ்வு தொடர்ந்தபோது, பொது கருத்துக்கள் பதிவு செய்யுமிடத்தில் நோர்த் கூடுதல் கருத்துகளை பதிவிட்டார். 'இது இடதுபுறத்தில் இருந்து புட்டினுக்கு எதிரான எதிர்ப்பு அல்ல' என்று நோர்த் ஒரு பதிவில் எழுதினார். மேலும் 'ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கு அது எந்த முன்னோக்கையும் வழங்கவில்லை. ஸ்ராலினிஸ்டுகளால் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததன் சோகமான மற்றும் பேரழிவுகரமான விளைவுதான் இந்தப் போர் என்பதை உண்மையான சோசலிஸ்டுகள் வலியுறுத்திக் காட்டுவார்கள்” என பதிவிட்டார்.

மற்றொரு கருத்துப் பதிவில் நோர்த் தொடர்ந்தார்: 'சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மூன்று மாயையான கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டது: 1) முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு ரஷ்யாவின் மீது செல்வத்தைப் பொழியும்; 2) அது ஜனநாயகத்தின் மலர்ச்சிக்கு வழிவகுக்கும்; மற்றும் 3) ரஷ்யா மேற்கு நாடுகளால் அரவணைக்கப்படும். ஏகாதிபத்தியத்தின் பிரச்சினையை ஒருவர் எழுப்பினால், முற்றிலும் திசைதிருப்பப்பட்ட புத்திஜீவிகளும் நோமன்குளோத்ராவுடன் பிணைக்கப்பட்டுள்ள மற்றவர்களும் சிரித்தார்கள். இது போல்ஷிவிக்குகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கற்பனை ஆவி (bogeyman) என்று அவர்கள் கூறினர்.”

பங்கேற்பாளர்கள் நோர்த்தின் கருத்துக்களுடன் தங்கள் உடன்பாட்டைத் தெரிவித்தபோது, நிகழ்வின் நடுவரான வெங்ராஃப், 'கருத்துரைப் பகுதியில் மற்றவர்களிடம் மரியாதையுடனும் தோழமையுடனும் இருங்கள்' என பங்கேற்பாளர்களை பதட்டத்துடன் கேட்டுக் கொண்டார். அவர்கள் கருத்துரைப் பகுதியில் நோர்த்தின் விமர்சனங்களுக்கு சாதகமான பதில்களை கண்காணித்தபோது பேச்சாளர்களின் முகங்கள் இருண்டன.

உக்ரேனின் தற்காப்பு உரிமை என்று அழைக்கப்படுவதற்குப் பதிலளிக்கும் வகையில், நோர்த் 'உக்ரேனின் வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கம் சுயநிர்ணயத்திற்காகப் போராடவில்லை, அது நேட்டோவின் ஒரு பகுதியாக இருப்பதற்கான உரிமைக்காகப் போராடுகிறது” என ஒரு கருத்தை வெளியிட்டார்,

பின்னர் மற்றொரு கருத்துரைப் பகுதி செய்தியில், லியோன் ட்ரொட்ஸ்கியின் போரும் நான்காம் அகிலமும் என்ற நூலில் இருந்து ஒரு பகுதியை நோர்த் மேற்கோள் காட்டினார். அவர் எழுதினார்:

ட்ரொட்ஸ்கி கூட்டத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்: “தேசிய பாதுகாப்பைப் போதிக்கும் ஒரு 'சோசலிஸ்ட்’ ஒரு குட்டி-முதலாளித்துவ பிற்போக்குவாதி, அழுகிக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்கிறார். போரின் சமயத்தில் தன்னை தேசிய அரசுடன் பிணைத்துக் கொள்ளாதிருப்பதும், போர் வரைபடத்தை அல்லாமல் வர்க்கப் போராட்ட வரைபடத்தைப் பின்பற்றுவதும், அமைதிக் காலத்தில் தேசிய அரசின் மீது சமரசமற்ற போரை ஏற்கனவே அறிவித்த ஒரு கட்சியால் மட்டுமே இது சாத்தியமாகக் கூடியதாகும். ஏகாதிபத்திய அரசின் புறநிலையான பிற்போக்குப் பாத்திரத்தை அது முழுமையாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, பாட்டாளி வர்க்க முன்னணிப் படை அனைத்து வகையான சமூக-தேசபக்தியிலிருந்தும் விடுபட முடியும், அதாவது: 'தேசிய பாதுகாப்பு' என்ற கருத்தியல் மற்றும் அரசியலில் இருந்து உண்மையான முறிவு என்பது, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கண்ணோட்டத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பதே இதன் பொருள்.

இந்தக் கருத்துக்கள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை மிக நன்றாகத் தாக்கியது, அவர்கள் உடனடியாக எந்தவித எச்சரிக்கையுமின்றி நிகழ்ச்சியில் இருந்து நோர்த்தை வெளியேற்றினர்.

நோர்த் வெளியேற்றப்பட்டதைக் கலந்துகொண்டவர்கள் அறிந்ததும், கணிசமான எண்ணிக்கையிலானோர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை தணிக்கையின் ஜனநாயக விரோத ஆதரவாளர்கள் என்று கண்டிக்கத் தொடங்கினர். நிகழ்ச்சியின் பேச்சாளர்கள் மேலும் கலந்துரையாடலை தொடரத் தயங்கினர். தொகுப்பாளரின் வேண்டுகோளின் பேரில் எரின் காஸ் மீண்டும் பேச மறுத்துவிட்டார். அவர்கள் அவசர அவசரமாக நிறைவுரை கூறியதுடன், நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

கூட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பொது கருத்துரைப் பகுதியில் செய்திகளை எழுதியதற்காக டேவிட் நோர்த்தை வெளியேற்றும் அமைப்பாளரின் முடிவு ஆகியவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போலி-இடது பாதுகாவலர்கள் சோசலிச இடதுகளின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் போது பதிலளிக்க முடியாது என்பதை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உக்ரேனில் 'ஜனநாயகத்திற்காக' போராடுகிறது என்று கூறினாலும், அமைப்பாளர்கள் தங்கள் சொந்த அரட்டையில் கூட ஜனநாயகத்தை மதிக்க இயலாது என்பதை நிரூபித்துள்ளனர். இந்த நிகழ்வு, அமைப்பாளர்களுக்கும் அதனுடன் தொடர்புடைய அரசியல் போக்குகளுக்கும் அரசியல் தோல்வியாக அமைந்தது.

Loading