ஜேர்மனியின் "புதிய வெளியுறவுக் கொள்கை சகாப்தம்" எவ்வாறு தயாரிக்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் ஜேர்மன் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் பிரமாண்டமான அதிகரிப்பை அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் அறிவித்தார். 'ஜேர்மன் இராணுவ சிறப்பு நிதி' 100 பில்லியன் யூரோக்கள், ஏற்கனவே 2022 க்கான வரவு-செலவுத் திட்டத்தில் இருந்த 50 பில்லியன் யூரோக்களுடன் சேர்ந்து, இந்த ஆண்டு இராணுவ வரவு-செலவுத் திட்டம் மூன்று மடங்காகும்.

Olaf Scholz (SPD) (AP Photo/Michael Sohn)

அதன் பின்னர் இராணுவச் செலவுகள் தொடர்ந்து உயரும். 'இனிமேல், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதத்திற்கும் மேலாக நமது பாதுகாப்பில் ஆண்டுதோறும் முதலீடு செய்வோம்' என்று ஷோல்ஸ் கூறினார். 2021 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், 24 யூரோ பில்லியன் அதிகரித்து 71 பில்லியன் யூரோ அல்லது கிட்டத்தட்ட 80 பில்லியன் டாலராக அதிகரிக்கும்.

ஒட்டுமொத்தமாக, இது இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னரான ஜேர்மனியின் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கும் திட்டமாகும். மேலும் இது ஜேர்மனியை ஒரே இரவில் ஐரோப்பாவின் வலிமையான இராணுவ சக்தியாக மாற்றுகிறது. ஒப்பிடுகையில், சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் (IISS) படி, பிரிட்டனின் இராணுவச் செலவு கடந்த ஆண்டு 61.5 பில்லியன் டாலர்கள், ரஷ்யாவின் 60.6 பில்லியன் டாலர்கள் மற்றும் பிரான்சின் 55 பில்லியன் டாலர்கள் ஆக இருந்தது.

பாராளுமன்ற விவாதத்தில், ஷோல்ஸ் மற்றும் அரசாங்க மற்றும் எதிர்க் கட்சியின் மற்ற பேச்சாளர்கள் உக்ரேனுக்கு எதிரான புட்டினின் ஆக்கிரமிப்பைக் குறிப்பிடுவதன் மூலம் இந்த 'புதிய வெளியுறவுக் கொள்கை சகாப்தத்தை' நியாயப்படுத்தினர். இது வெறும் பிரச்சாரத்தை தவிர வேறொன்றுமில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், '100 பில்லியன் பாஸூக்கா' (The 100-billion bazooka) என்ற தலைப்பில் Der Spiegel இன் அறிக்கையின்படி, கடந்த அக்டோபரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் போது மறுஆயுதமயமாக்கல் திட்டம் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டு இறுதி முடிவெடுக்கப்பட்டது. 'இந்த கருத்து சில காலமாக பாதுகாப்பு அமைச்சகத்தில் விவாதிக்கப்பட்டது' என்று செய்தி இதழ் எழுதுகிறது. 'மாதங்களுக்கு முன்பு, இராணுவ திட்டமிடுபவர்கள் மற்றும் திணைக்களத்தின் வரவு-செலவுத் திட்ட அதிகாரிகள் ஏற்கனவே தொடர்ச்சியான இரகசிய தயாரிப்புக்களை வரைந்தனர். அவை கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட பேச்சுவார்த்தையாளர்களுக்கு அனுப்பப்பட்டன.'

நேட்டோ போர்த்தயாரிப்புகளால் தூண்டப்பட்ட உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, 'இப்போது நினைத்துக்கூட பார்க்க முடியாததைச் சாத்தியமாக்கியுள்ளது' என்று Der Spiegel தெரிவிக்கிறது. 'பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் ஒரு வலுவான சமிக்ஞையை அனுப்ப,... சான்சிலர் மாளிகை மீண்டும் பழைய ஆவணங்களை வெளியே கொண்டு வந்தது'. குறிப்பாக, 'அக்டோபர் 26 தேதியிட்ட ஒரு இரகசிய, ஆறு பக்க விவாதப் பத்திரம்' இதில் அடங்கும். இந்த பத்திரம் குறிப்பாக 102 பில்லியன் யூரோக்கள் 'ஜேர்மன் இராணுவ சிறப்பு நிதியை' வகுத்தது. அதில் 'இராணுவ திட்டமிடுபவர்கள்' குறிப்பாக 'பணம் எங்கு முதலீடு செய்யப்பட வேண்டும்' என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Der Spiegel இல் உள்ள கட்டுரை, திட்டமிடப்பட்ட கொள்முதல்கள் பற்றிய மேலோட்டத்தை வழங்குகிறது.

சுமார் 34 பில்லியன் யூரோக்கள் “பன்னாட்டு ஆயுதத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். ஹைப்பர்சோனிக் ஆயுதங்களுக்கு எதிரான பாதுகாப்பிற்கான 'ட்விஸ்டர்' (“Twister”) அமைப்பு, மற்றும் 'மூலோபாய விமான போக்குவரத்துக்கான' ஒரு 'போர் கிளவுட்' (“Combat Cloud”) அதில் உள்ளடங்கும். கூடுதலாக, புதிய ஐரோப்பிய எதிர்கால ஆகாயப் போர் அமைப்புமுறை திட்டம் (European Future Combat Air System), ஜேர்மன்-பிரெஞ்சு முக்கிய தரைப் போர் அமைப்புமுறை (German-French Main Ground Combat System) மற்றும் யூரோட்ரோன் (Eurodrone) போன்ற பாரிய திட்டங்கள் உள்ளன.

கூடுதலாக, புதிய பீரங்கி அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகள் பிரிட்டனுடன் இணைந்து உருவாக்கப்படும். நெதர்லாந்துடன் ஒரு புதிய போர்க்கப்பல் மற்றும் வான்வழி தளங்கள் மற்றும் நோர்வேயுடன் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பம் ஆகியவை உருவாக்கப்படும்.

சிறப்பு நிதியின் பெரும்பகுதி (சுமார் 68 பில்லியன் யூரோக்கள்) 'தேசிய பெரிய அளவிலான திட்டங்களுக்கு' ஒதுக்கப்பட்டுள்ளது. 'முன்னைய டொர்னாடோ போர் விமானத்தின் வாரிசு ஒன்றை உருவாக்குவது 'முன்னுரிமைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது' என்று கட்டுரை கூறுகிறது. நவீனமயமாக்கப்பட்ட யூரோஃபைட்டர் ஜெட் விமானங்கள் மற்றும் US F-35 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான செலவு சுமார் 15 பில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு புதிய கனரக போக்குவரத்து ஹெலிகாப்டருக்கு அண்ணளவாக 5 பில்லியன் யூரோவும், கையிருப்பு வசதிகளை நிரப்ப புதிய வெடிமருந்துகளுக்காக 20 பில்லியன் யூரோவும் ஒதுக்கப்பட்டது. இந்த நேரத்தில், 'டாங்கிகள், கப்பல்கள் அல்லது ஹெலிகாப்டர்களுக்கு எல்லா இடங்களிலும் ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் பற்றாக்குறை உள்ளது.' மற்றொரு 'முக்கிய பணி' என்பது 'நிலம் சார்ந்த செயல்பாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல்' ஆகும். அதாவது இராணுவத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளை நவீனமயமாக்குவது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய போர்க்கப்பல்கள் மற்றும் “Patriot” வான் பாதுகாப்பு அமைப்புகளின் நவீனமயமாக்கலுக்கு இன்னும் பில்லியன்கள் வழங்கப்படவுள்ளன. இவை 'இராணுவ திட்டமிடுபவர்களால் அவர்களின் வரைவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் உள்ளடக்கவில்லை' என்று Der Spiegel வலியுறுத்துகிறது.

இந்த பாரிய மறுஆயுதமயமாக்கல் திட்டம் ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். மூன்றாம் குடியரசு வீழ்ச்சியடைந்து எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர், மனிதகுல வரலாற்றில் யூதப்படுகொலை மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான அழிப்புப் போரைக் கொண்டுமிகப் பெரிய குற்றங்களைச் செய்த ஆளும் வர்க்கம், அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட்டுவிட்டு ஒரு இராணுவ வல்லரசாகத் திரும்புகிறது.

ஷோல்ஸால் அறிவிக்கப்பட்ட 'புதிய வெளியுறவுக் கொள்கை சகாப்தம்' சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டதாகும். உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவை ஜேர்மன் இராணுவவாதத்தை உயிர்த்தெழுப்புவதற்கான ஆளும் வர்க்கத்தின் இந்த சதியை தொடர்ந்து ஆவணப்படுத்தி கடுமையாக கண்டனம் செய்துள்ளன. இந்த ஆபத்தான வளர்ச்சியின் மிக முக்கியமான கட்டங்கள் மட்டுமே இங்கே எடுத்துக்காட்டப்படுகின்றன.

ஏற்கனவே 2013 இல், 50 க்கும் மேற்பட்ட முன்னணி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இராணுவம் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய ஜேர்மன் வெளிநாட்டு உறவுகளுக்கான குழுவின் (SWP) சிந்தனைக் குழுவின் கீழ் புதிய வெளியுறவுக் கொள்கை மூலோபாயத்தை உருவாக்கினர். 'புதிய சக்தி- புதிய பொறுப்பு” என்பதன் கீழ் ஜேர்மனி மீண்டும் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் உலகளாவிய 'தலைமைப் பாத்திரத்தை' வகிக்க வேண்டும் என்று அது கோரியது. ஒரு 'வர்த்தக மற்றும் ஏற்றுமதி தேசம்' என்றவகையில் ஜேர்மனி 'மற்ற சந்தைகளிலும் மற்றும் சர்வதேச வர்த்தக வழிகள் மற்றும் மூலப்பொருட்களுக்கான அணுகலிலும்' மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாக சார்ந்துள்ளது என அது வலியுறுத்தியது.

இந்த மூலோபாய ஆய்வறிக்கையின் அடிப்படையில், ஜனாதிபதி ஜோகாயிம் கவுக் மற்றும் பெரும் கூட்டணியின் முன்னணி பிரதிநிதிகள் 2014 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் 'இராணுவ கட்டுப்பாட்டின் முடிவை' உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். ஜேர்மனி 'உலக அரசியலில் வெளியே இருந்து கருத்து தெரிவிப்பதைவிட மிகவும் பெரியது' மேலும் 'வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு மிகவும் தீர்க்கமான மற்றும் கணிசமான பங்களிப்பை வழங்க விரைவாக தயாராக இருக்க வேண்டும்' என்று அப்போது வெளியுறவு மந்திரியாக இருந்து பின்னர் ஜனாதிபதியான பிராங்க்-வால்டர் ஸ்ரைய்ன்மையர் (SPD) கூறினார்.

உக்ரேனில் முதன்முறையாக இந்த மூலோபாயம் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது. அமெரிக்காவுடன் சேர்ந்து, ஜேர்மனி பெப்ரவரி 2014 இல் கியேவில் வலதுசாரி சதியை ஆதரித்து மற்றும் ரஷ்ய-விரோத ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டுவர ஸ்வோபோடா போன்ற பாசிசக் கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டில் நுழைந்தது.

அந்த நிலையிலும், ரஷ்யாவுடனான மோதல் தீவிரமடைவதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது. செப்டம்பர் 2014 இல், கட்சியின் சிறப்பு மாநாட்டில் போர் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தை நோக்கி திரும்புவதற்கு எதிராக ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது:

அரசியல் செயற்பாட்டாளர்கள், இராணுவப் பிரமுகர்கள், உளவுத்துறை அமைப்புகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பிற கருத்து உருவாக்குபவர்கள் அடங்கிய குழு நிகழ்வுகளைக் கையாண்டு, மனிதகுலம் முழுவதையும் இரத்தக்களரிக்குள் ஆழ்த்த அச்சுறுத்தும் முடிவுகளை எடுத்துள்ளது... ரஷ்யாவுடனான அணுவாயுதப் போர் இப்போது கற்பனையான சாத்தியம் அல்ல. ஆனால் ஒரு உண்மையான ஆபத்து என அதில் குறிப்பிட்டது.

இராணுவவாதம் மற்றும் தேசியவாதத்தின் மீள்வருகையானது வரலாற்றின் வெளிச்சத்தில் ஜேர்மனியில் பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டதையும் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால்தான் ஆளும் வர்க்கம் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் மீது மௌனத்தின் திரையை வரைய வரலாற்றை மாற்றி எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளது. 'பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சாரகர்கள் ஜேர்மன் பேரரசின் போர்க் கொள்கைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதுடன் மட்டும் திருப்தியடையவில்லை. அவர்கள் ஹிட்லரின் நற்பெயருக்கு மறுவாழ்வு கொடுக்கவும் முயற்சி செய்கிறார்கள்,” என்று அது அறிவித்தது.

அப்போதிருந்து, ஜேர்மன் இராணுவவாதம் திரும்புவதற்கான பிரச்சாரம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளில் இராணுவ-வரவு செலவுத் திட்டம் சுமார் 32 பில்லியன் யூரோக்களிலிருந்து கிட்டத்தட்ட 50 பில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது. ஜேர்மன் இராணுவத்தின் சர்வதேச இராணுவ நடவடிக்கைகள் மாலி மற்றும் மத்திய கிழக்கின் பணிகளுடன் பாரியளவில் விரிவுபடுத்தப்பட்டன. மேலும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் மறுஆயுதமாக்கலில் ஜேர்மனியும் முக்கிய பங்கு வகித்தது. முக்கியமாக லித்துவேனியாவிற்கு ஒரு போர்க்குழுவை அனுப்பியது.

அதே நேரத்தில், ஜேர்மனி அதன் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களுக்காக பெரும் போர்களை நடத்தத் தயாராக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறி, பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆவணங்கள் வரையப்பட்டன. 2018 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஜேர்மன் இராணுவக் கோட்பாடு' பின்வருமாறு 'தெரிந்த மற்றும் புதிய சவால்கள், அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இராணுவத்தை தயார்ப்படுத்துவதே குறிக்கோள்' என்று கூறுகிறது.

ஜேர்மன் இராணுவம் ஒரு சுருக்கமான அணிதிரட்டலுக்குப் பின்னர் எல்லைகளுக்கு அல்லது கூட்டணி பிரதேசத்திற்கு அப்பால் நிலைநிறுத்துவதற்கு அதன் வசம் படைகள் மற்றும் வழிமுறைகள் இருக்க வேண்டும். இது மூலோபாய நடைமுறைப்படுத்தல் திறன்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்... கூட்டணி எல்லைக்குள் கூட்டுப் பாதுகாப்பு என்பது சிறிய அளவிலான செயல்பாடுகள் முதல் கூட்டணி எல்லைக்கு உள்ளேயும் வெளியை உள்ள பகுதிகளிலும் மிகப் பெரிய செயல்பாட்டின் கட்டமைப்பிற்குள் தேவையானதை கோரும் செயற்படுத்தல் வரை இருக்கலாம்.

இப்போது, ஜேர்மன் போர் தாக்குதல் ரஷ்யாவிற்கு எதிராக இயக்கப்படுகிறது. ஆரம்ப தயக்கத்திற்குப் பின்னர், ஜேர்மனி உக்ரேனுக்கான இராணுவ ஆதரவில் முன்னணியில் உள்ளது. இந்த வார தொடக்கத்தில், 2,700 தரையிலிருந்து வான்வழியில் தாக்கும் 'ஸ்ட்ரெலா' ஏவுகணைகளை கியேவிற்கு வழங்குவதாக பேர்லின் அறிவித்தது. கடந்த சனிக்கிழமை, 1,000 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 'ஸ்டிங்கர்' ஏவுகணைகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

'ஜேர்மனி உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் ஒரு பெரிய முன்னோக்கிய அடியை முன்னெடுத்துள்ளது மற்றும் சில பழைய தடைகளை உடைத்துவிட்டது,' என ஸ்ரைன்மையர் நேற்று லித்துவேனியாவில் உள்ள ஜேர்மன் துருப்புக்களிடம் விஜயம் செய்தபோது மகிழ்ச்சியடைந்தார். ஜனாதிபதி பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் 'குறிப்பிடத்தக்க அதிகரிப்பை' பாராட்டி மற்றும் ரஷ்யாவை ஒரு நீண்ட இராணுவ மோதலுடன் வெளிப்படையாக அச்சுறுத்தினார். 'போர் உடனடியாக முடியும் என்பதை எதுவும் சுட்டிக்காட்டவில்லை. நாங்கள் ஆழ்ந்து மூச்சுவிடுவது தேவைப்படும். நாங்கள் அதைப் பெறுவோம்” என்றார்.

குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்யாவிற்கு எதிரான ஜேர்மன் முனைப்பு, 1914 மற்றும் 1941 போன்ற வழிகளில் பெருகிய முறையில் செல்கின்றது. இது பெயரளவிலான 'இடது' பாராளுமன்றக் கட்சிகளால் முன்னோக்கி தள்ளப்படுகிறது. சமூக ஜனநாயகக் கட்சியினர் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், பசுமைவாதிகளின் வெளியுறவு மற்றும் பொருளாதார அமைச்சகத்திற்கும் தலைமை தாங்குகின்றனர். இடது கட்சியும் முழுமையாக களத்தில் உள்ளது. அதன் முன்னணிக் கட்சிப் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் உக்ரேனுக்கான ஆயுத விநியோகத்தையும் ஆதரிக்கின்றனர். மேலும் இராணுவத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பை மீண்டும் அறிமுகப்படுத்தக் கோருகின்றனர்.

இங்கு ஜேர்மனி அதிக ஆயுதம் ஏந்திய, ஆக்கிரமிப்பு இராணுவ சக்தியாக திரும்புவது ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயும் ஜேர்மனி மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்களை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த் மார்ச் 1 அன்று ட்விட்டரில் பின்வருமாறு எழுதினார்:

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே மேலாதிக்க பொருளாதார சக்தியாக இருக்கும் ஜேர்மனி, இப்போது மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் மேலாதிக்க இராணுவ சக்தியாக மாறும் போக்கில் இருக்கின்றது. இது பிரான்சுக்கு நல்ல செய்தி அல்ல. அதனால்தான் மக்ரோன் புட்டினுடனான தனது தொடர்பைத் திறந்து வைக்க முயற்சிக்கிறார்.

பிரிட்டனும் பிரான்சும் 1989ல் ஜேர்மனியை மீண்டும் ஒன்றிணைப்பதை கடுமையாக எதிர்த்ததை நினைவுகூர வேண்டும். அவர்கள் இதை அவ்வாறு பகிரங்கமாகச் சொல்லத் துணியவில்லை என்றாலும், மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜேர்மனியைக் கட்டுப்படுத்த முடியாது என்று பிரதமர் தாட்சரும் ஜனாதிபதி மித்திரோனும் பயந்தனர்.

அவர் தொடர்ந்தார்

அதன் படைகள் தற்போது ரஷ்யாவிற்கு எதிராக இயக்கப்பட்டாலும், நேட்டோ கூட்டணி தனக்குள்ளேயே வெடிக்கும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. உக்ரேன் போர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முழு ஒழுங்கமைப்பின் இறுதி மற்றும் தீர்க்கமான முறிவைக் குறிக்கிறது.

ஏகாதிபத்திய வன்முறையின் எரிமலை வெடிப்பை உலகம் எதிர்கொள்கிறது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதையும் உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதையும் நோக்கிய சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியின் மூலம் மட்டுமே இந்தப் பேரழிவைத் தவிர்க்க முடியும்.

Loading