மக்ரோனின் பாரிய நோய்தொற்று கொள்கைக்கு எதிரான போராட்டத்தைப் பிரான்சின் Révolution permanente குழு தடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உத்தியோகபூர்வ பெருந்தொற்று நெறிமுறைகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் மற்றும் அதற்கு அப்பாலும் ஆசிரியர்களும் மாணவர்களும் அணிதிரண்டு வரும் நிலையில், பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் (NPA) தொடர்புடைய Révolution permanente குழு பள்ளிகளில் பாரிய நோய்தொற்றுக்களை நிறுத்துவதற்கான போராட்டத்தைத் தடுக்க செயல்பட்டு வருகிறது.

இந்த பெருந்தொற்றுக்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த, சர்வதேச போராட்டத்தைத் தொடுக்க சுயாதீனமான, சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைக்க கோரி பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES) விடுத்த அழைப்பிலிருந்து அதை ஒரு வர்க்கப் பிளவு பிரிக்கிறது. இன்றைய பிரெஞ்சு பள்ளி வேலைநிறுத்தம் போன்ற அணித்திரள்வுகளில் இணையுமாறு ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளையில், அது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் தொழிற்சங்க பேச்சுவார்த்தைகள் என்ற திவாலான தேசிய கட்டமைப்பில் அவர்களைக் கட்டிப்போட செயற்படுகிறது.

ஜனவரி 13, 2022 அன்று லில்லில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம். (AP புகைப்படம்/மைக்கேல் ஸ்பிங்லர்) [AP Photo/Michel Spingler]

ஜனவரி 13 பிரெஞ்சு ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் மேலும் கூடுதலாக ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளையில், Révolution permanente குழு அனைத்திற்கும் மேலாக இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவசியமான சர்வதேச போராட்டத்தைத் தவிர்க்கிறது. ஒருவர் பாரிய நோய்தொற்றுக்களை ஏற்றுக் கொண்டு, 'வைரஸுடன் வாழ' வேண்டும் என்ற மக்ரோனின் வாதங்களை மறைமுகமாக ஏற்றுக் கொள்ளும் அது, சம்பள உயர்வுகளுக்கான அழைப்புகளுடன் சேர்ந்து இந்த வைரஸ் பரவலை ஓரளவுக்கு மெதுவாக்கும் ஒரு சில தணிப்பு கொள்கைகளுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கிறது. “கல்வித்துறையில் வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்தம்: இந்த போராட்டத்தைத் தொடருங்கள், ஆழப்படுத்துங்கள்,” என்ற அதன் கட்டுரையில், அது முற்றிலும் தேசிய கட்டமைப்புக்குள் இன்னும் பல ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கிறது:

உண்மையில் இது, 'இரும்பு கொதித்துக் கொண்டிருக்கும் போதே தட்டி வளைக்கும்' ஒரு விஷயமாகும். … ஆசிரியர்கள் பல மாதங்களாக அல்லது ஆண்டுகளாக கூட எதை கோரி வருகிறார்களோ, அதாவது, வேலையிட சுகாதார நெறிமுறை, பொதுக் கல்விக்குப் போதியளவில் முழு-நேர பணியாளர்களை நியமிப்பது, இந்த பெருந்தொற்றின் போது வகுப்புறை எண்ணிக்கையைக் குறைப்பது, பத்தாண்டு கால சம்பள உயர்வின்மைக்குப் பின்னர் சம்பள அதிகரிப்புகள், இரண்டாண்டு கால பெருந்தொற்றின் பின்னணியில் [கல்வித்துறை அமைச்சர் ஜோன்-மிஷேல்] புளோங்கேரின் தகுதியற்ற சீர்திருத்தத்தை நிறுத்துவது, Parcoursup பல்கலைக்கழக விண்ணப்ப முறை சீர்திருத்தம், வர்க்க அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளை இரத்து செய்வது ஆகியவற்றை வென்றெடுப்பதற்கு இது மட்டுமே ஒரே வழியாக உள்ளது.

ஆனால் 'வேலையிட சுகாதார நெறிமுறை' என்பது கோவிட்-19 பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவது என்ற ஒன்றேயொன்றை மட்டுமே அர்த்தப்படுத்தும். உலகெங்கிலும் இந்த வைரஸால் 18 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர், ஐரோப்பாவில் 1.5 மில்லியன் பேர் மற்றும் பிரான்சில் 127,000 பேர்; பிரான்சில் ஒவ்வொரு வாரமும் 1,000 க்கும் அதிகமானர்கள் ஐரோப்பாவில் 20,000 க்கும் அதிகமானவர்களின் உயிரை அது பறிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா-பாட்டியினரை நோய்தொற்றுக்கு உள்ளாக்கும் அல்லது தங்களின் அன்புக்குரியவர்களைக் கொல்லும் ஒரு வைரஸைப் பரப்பும் அனுபவத்தைக் கொடுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக வேலைநிறுத்தம் செய்து வரும் ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். தற்போது குழந்தைகளின் மூளைகள் மற்றும் ஏனைய முக்கிய அங்கங்களில் தங்கும் இந்த வைரஸின் நீண்டகால பாதிப்பு அறியப்படவில்லை.

ஓமிக்ரோன் வகையின் மிகவும் நோய்தொற்று ஏற்படுத்தும் காற்றுவழி பரவும் இயல்பை வைத்து பார்த்தால், Révolution permanente கோருவதைப் போல, இந்த பெருந்தொற்றின் போது வகுப்பு அளவைக் குறிப்பதால் இந்த பெருந்தொற்றைத் தடுக்க முடியாது. அடுத்தடுத்து இரண்டு நாட்களில் பிரான்ஸ் அண்மித்து 500,000 நோயாளிகளைப் பதிவு செய்த பின்னர், சுமார் 5.5 மில்லியன் பேர், அல்லது பிரெஞ்சு மக்களில் 8 சதவீதத்தினருக்கு இப்போது கோவிட்-19 நோய் உள்ளது. நோயாளிகளையும் முதலாளிகள் வேலைக்குத் திரும்ப செய்ய நிர்பந்திக்கும் வகையில் தனிமைப்படுத்தும் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இந்த வைரஸ் தொடர்ந்து சமூக எங்கிலும் பாரியளவில் பரவும், வகுப்பறைகளில் மாணவர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் சிறிது விலகி அமர்ந்தாலும் கூட பள்ளிகளிலும் இது பரவும் என்பதும் இதில் உள்ளடங்குகிறது.

அத்தியாவசியமற்ற உற்பத்திகளை நிறுத்தி, இணையவழி கற்பித்தலுக்கு நகர்ந்து, ஒரு சர்வதேச பொது முடக்கமே இந்த வைரஸின் பாரிய பரவலைத் தடுக்க ஒரே வழியாகும். இந்த பெருந்தொற்றின் ஆரம்ப மாதங்களில் பிரான்சில் இருந்த கடுமையான அடைப்பைப் போலில்லாமல், இந்த பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பரவலாக நிதி உதவிகளும்; இணைய வழி கற்பித்தலுக்கு பாரியளவில் முதலீடும் தேவைப்படுகிறது; நோய்தொற்று மீண்டும் எழுவதைத் தடுக்க பொது முடக்கத்திற்குப் பின்னரும் நோயின் தடம் அறிதல் மற்றும் ஒரு பூஜ்ஜிய கோவிட் கொள்கையைப் பின்பற்றுவதும் அவசியப்படுகிறது.

சீனா, தாய்வான் மற்றும் —வங்கிகளின் கோரிக்கைகளுக்கு அது அடிபணியும் வரையில்—நியூசிலாந்து உட்பட பல ஆசிய-பசிபிக் நாடுகள் பூஜ்ஜிய கோவிட் கொள்கையைப் பின்பற்றின என்ற உண்மை குறித்து Révolution permanente சிறிதும் வாய்திறக்கவில்லை. இவை ஒரு சில மாதங்களிலேயே இந்த பெருந்தொற்றைத் தடுப்பதில் வெற்றி அடைந்தன என்பதோடு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வைரஸ்களின் மீளெழுச்சியையும் தடுத்துள்ளன. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 5,000 க்கும் குறைவான இறப்புகளே ஏற்பட்டன, பொருளாதார இடம் பெயர்வும் மிகவும் குறைவாக இருந்தது, ஐரோப்பியர்கள் மீது விதிக்கப்பட்டதை விடவும் தனிநபர்கள் நகர்வுகள் மீது மிகவும் குறைவான கட்டுப்பாடுகளே இருந்தன.

இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியம் மீது Révolution permanente மௌனமாகி விடுகிறது, அது சாத்தியமில்லை என்பதால் அல்ல, மாறாக ஏனென்றால் அதன் அரசியல் நோக்குநிலை மற்றும் அது பாதுகாக்கும் சடவாத நலன்களை அது குறுக்காக வெட்டுகிறது என்பதால் ஆகும். பிரான்சின் குட்டி-முதலாளித்துவ தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சௌகரியமான நிலைப்பாட்டை எடுக்கும் நோக்கில், மற்றும் முதலாளித்துவ அரசுடன் அதன் பேரம்பேசும் கட்டமைப்புக்குள் செயல்படுவதற்காக, இத்தகைய அதிகாரத்துவங்கள் மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி வருவதாக அரசியல் பிரமையை அது முன்னெடுக்கிறது.

“உள்ளூர் மட்டத்தில் வேலைநிறுத்தக்காரர்களின் கூட்டங்களை ஒழுங்கமைத்து விரிவாக்குவதன் மூலம், இந்த இயக்கத்தை விரிவாக்க' அழைப்பு விடுத்து, அது எழுதுகிறது:

இன்னும் பரவலாக, சாத்தியமானளவுக்கு இன்னும் பெரியளவில் ஜனவரி 27 இல் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு நாள் வேலைநிறுத்தத்தைக் கட்டமைக்கும் முன்னோக்குடன், ஒட்டுமொத்த உலக தொழிலாளர்களின் ஒரு போர் திட்டத்தைத் தொழிற்சங்க தலைமைகளிடம் கட்டமைக்குமாறு நாம் கோர வேண்டும். அதுபோன்றவொரு சந்திப்பில் இருந்து நம்மால் நிறைய ஆதாயமடைய முடியும். … சம்பளங்களுக்காக வேலைநிறுத்தங்கள் நடந்து வருகின்ற அதேவேளையில், பெருநிறுவன இலாபங்களோ வெடிப்பார்ந்து உள்ளன, அனைவருக்கும் சம்பள உயர்வுகளைக் கோருவதற்கான அவசியத்தை நாம் வலியுறுத்த வேண்டும். முடிவாக, அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒரு மாற்று சுகாதார மூலோபாயம் அவசரமாக கொண்டு வரப்பட வேண்டும், அது மெடெஃப் வணிக சம்மேளனத்தின் உத்தரவுகளால் அல்லாமல், தொழிலாளர்கள் மற்றும் மக்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

மக்ரோனுக்கு எதிரான ஒரு 'போர் திட்டத்தை” தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் கோருவது அர்த்தமற்றது. ஜனவரி 13 நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் பாரியளவில் பங்குபற்றியதும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பணியாளர்களுக்கு இன்னும் கூடுதலாக N95 ரக முகக்கவசங்கள் வழங்கவும் இன்னும் கூடுதலாக வேலை மாற்றுவதற்கான ஆசிரியர்களை நியமிப்பதற்குமான அவர் வாக்குறுதிகளை புளோங்கேர் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த அவர்கள் முயற்சிப்பதாக மட்டுமே தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினார்கள். இந்த பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சீரழிவை முடிவுக்குக் கொண்டு வருவது ஒருபுறம் இருக்கட்டும், பள்ளிகளில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் பேரலையை மெதுவாக்கக் கூட அவர்களால் எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை.

மக்ரோனின் கொள்கைகளைப் பொதுமக்களுக்கு விற்பதற்காகவே தொழிற்சங்கங்கள் செயல்பட்டன, மக்ரோன் அரசாங்கமோ ஏற்கனவே இணைய வழி கற்பித்தலைக் கைகழுவி விட்டது. வேலைநிறுத்தக்காரர்களின் கூட்டங்கள், அதாவது, தொழிலாளர்களுக்குப் பதில் கூறும் சாமானிய தொழிலாளர் குழுக்கள், மக்ரோனின் சிக்கன நடவடிக்கை மற்றும் பாரிய நோய்தொற்று ஏற்படுத்தும் கொள்கைகளை எதிர்த்து போராடுவதற்காக கட்டமைக்கப்பட வேண்டும் என்றாலும் அதை தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக சோசலிசத்திற்கான பகிரங்கமான மற்றும் நனவுபூர்வமான ஒரு போராட்டத்தில் ஒரு சர்வதேச அடித்தளத்தில் மட்டுமே கட்டமைக்க முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES), இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராட, NPA, Révolution permanente மற்றும் அதன் அர்ஜென்டைன் துணை அமைப்புகள், மொரேனோய்ட் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PTS) மற்றும் Izquierda Diario வலைத்தளம் போன்ற குட்டி-முதலாளித்துவ குழுக்களை முடிவாக நனவுபூர்வமாக நிராகரிப்பது அவசியமென வலியுறுத்துகிறது.

முதலாம் உலகப் போரைப் போலவே—ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சி மற்றும் 1918 இல் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மேலெழுச்சிக்குப் பின்னர் மட்டுமே நிறுத்த இதை நிறுத்த முடிந்தது—அதைப் போலவே, இந்த பெருந்தொற்றும் உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வாகும். கோவிட்-19 க்கு எதிராக ஒரு விஞ்ஞானபூர்வ கொள்கையைப் பின்பற்ற ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளுக்குச் சக்தி இல்லை என்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் ஓர் ஆழ்ந்த, தீர்க்கவியலாத நெருக்கடியுடன் பிணைந்துள்ளது, சோசலிசத்திற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டத்தில் அதைத் தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும்.

மக்கள் செல்வத்தை நேரடியாக தங்கள் பைகளுக்கு மாற்ற அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் யூரோ மண்டலத்தில் பாரியளவில் அரசின் பிணையெடுப்பு கோரியதன் மூலம் நிதியியல் பிரபுத்துவம் இந்த பெருந்தொற்றுக்கு எதிர்வினையாற்றியது. இந்த பெருந்தொற்றின் முதலாண்டில் ஐரோப்பிய பில்லியனர்கள் மட்டுமே அவர்களின் செல்வவளத்தில் 1 ட்ரில்லியன் டாலருக்கும் கூடுதலாக சேர்ந்துக் கொண்ட நிலையில், இந்த தொகைகளுக்கு அரசுக் கடன்களைப் பாரியளவில் அதிகரித்து நிதி வழங்கப்பட்டன. அரசாங்க கடன் பிரான்சில் இப்போது தாங்கொணா அளவுக்கு 116 சதவீதத்தை எட்டியுள்ளது, ஸ்பெயினில் 122 சதவீதத்தையும், இத்தாலியில் 155 சதவீதத்தையும் எட்டியுள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளால் சம்பள உயர்வுக்கான ஒரு போராட்டம் இந்த சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் மிகப்பெரும் நிதிய ஒட்டுண்ணிகள் மற்றும் முதலாளித்துவ அரசு எந்திரத்தில் உள்ள அவர்களின் பாதுகாவலர்களுடன் நேரடியாக ஒரு மோதலுக்குச் செல்கிறது.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் கிரேக்க கூட்டாளிகளான சிரிசாவின் (SYRIZA, “தீவிர இடதின் கூட்டணி') அனுபவத்திலிருந்து முக்கிய அரசியல் பாடங்களை எடுத்தாக வேண்டும். கிரேக்க பொதுக் கடனை ஊதிப் பெரிதாக்கிய கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் திணித்த பின்னர், இப்போது இத்தகைய மட்டங்களை பிரதான ஐரோப்பிய பொருளாதாரங்களே எட்டியுள்ள நிலையில், ஸ்ராலினிசவாதிகள் மற்றும் பிரிட்டனின் போலி-இடது சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (SWP) இன் ஒரு கூட்டணியான சிரிசா, 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது. NPA ஆல் புகழப்பட்ட அது ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர சூளுரைத்திருந்தது.

ஆனால் தேசியவாதம் மற்றும் கிரேக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பிணைந்த சிரிசா, அது ஏற்றுக் கொள்ளவியலாத அளவில் இருந்த தொழிலாள வர்க்க கோரிக்கைகளைக் கண்டு பீதியடைந்தது. வெறும் ஒரு சில மாதங்களில், அது அதன் தேர்தல் வாக்குறுதிகளை மறுத்தளித்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க முதலாளித்துவத்துடன் அணி சேர்ந்து, பத்து பில்லியன் கணக்கான யூரோகளைப் புதிய சமூக வெட்டுக்களாக திணித்தது. அது சவூதி அரேபியாவின் இரத்தந்தோய்ந்த யேமன் போருக்காக அதை ஆயுதமயப்படுத்தும் அளவுக்குச் சென்றது, கிரேக்கத் தீவுகளில் அகதிகளுக்கு மிகப்பெரிய தடுப்புக்காவல் முகாம்களை அமைத்தது, மேலும் —நல்லெண்ண நடவடிக்கையைப் பொறுத்த வரையில்— அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான பில்லியனர் டொனால்ட் ட்ரம்புடன் அது 'பொதுவான ஜனநாயக கோட்பாடுகளை' பகிர்ந்து கொண்டது.

எந்த எல்லைகளையும் அறியாத மற்றும் கடவுச்சீட்டுக்களுக்கு அவசியமில்லாத ஒரு வைரஸிற்கு எதிராக, இந்த வைரஸை உலகளவில் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்கின்ற நிலையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே சர்வதேச அளவில் ஒரு சக்தி வாய்ந்த இயக்கம் உருவெடுத்து வருகிறது. இந்த பெருந்தொற்றைத் தடுக்கவும் மற்றும் சமூகத்தின் அத்தியாவசிய தேவைகளுக்குப் பொருளாதாரத்தை அடிபணிய செய்யவும் இந்த இயக்கத்திற்குத் தேவைப்படும் வேலைத்திட்டம் மற்றும் அரசியல் நனவைக் கொண்டு இந்த இயக்கத்தை ஆயுதபாணியாக்க, இந்த வைரஸிடம் ஆளும் உயரடுக்கு சரணடைந்ததை மூடிமறைக்கும், அவர்கள் முன்னிருக்கும் சிரிசா போன்ற, போலி-இடது சக்திகளுடன் முறித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த பெருந்தொற்றைக் குறித்த விஞ்ஞானபூர்வ புரிதல், ஆளும் வர்க்கத்தின் பொறுப்பு, அதை எப்படி தடுப்பது ஆகியவற்றைக் கொண்டு தொழிலாளர்களை ஆயுதபாணிக்க கோவிட்-19 பெருந்தொற்று மீது ICFI ஓர் உலகளாவிய தொழிலாளர் விசாரணையை நடத்தி வருகிறது. ஆனால் இந்த பெருந்தொற்றைத் தடுக்கவும் விஞ்ஞானபூர்வ கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் போராடுவது, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் Révolution permanente இன் மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கான நோக்குநிலையுடன் முறித்துக் கொண்டு, சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச போராட்டத்தை முன்னெடுக்கும் சுயாதீனமான, சாமானிய தொழிலாளர் குழுக்கள் உருவாக்கப்படுவதைச் சார்ந்துள்ளது.

Loading