மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கில் பல பகுதிகளில் டிசம்பர் 10, வெள்ளியன்று மாலையில் வீசிய கொடிய, பருவம் கடந்த தொடர்ச்சியான சூறாவளிகள் பற்றிய விபரங்கள் தொடர்ந்து வெளி வருகின்றன. இந்த சூப்பர்செல் சூறாவளி ஆறு மாநிலங்கள் ஊடாக பயணித்து, பரந்த அளவிலான அழிவுகளை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது.
இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றாலும், 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியரின் கூற்றுப்படி, மாநிலம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. “இந்த சூறாவளி தாக்கியபோது, அது ஒரு கூரையை மட்டும் எடுக்கவில்லை, இது கடந்த காலத்தில் நாம் பார்த்தது போன்றதே,” என்று திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பெஷியர் கூறினார். மேலும், “அது வீடுகள் முழுவதையும் தாக்கியது. மக்கள், விலங்குகள், இன்னும் எஞ்சியவை அனைத்தும் இப்போதுதான் போய்விட்டன” என்றார்.
பலத்த காற்றில் வீடுகளை இழக்காத பல்லாயிரக்கணக்கான மக்கள், அப்பகுதி முழுவதும் மின் கம்பங்கள் சரிந்து போனதால் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.
இதுவரை பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான இறப்புக்கள் கென்டக்கியில் நிகழ்ந்துள்ளன, இதுவரை 74 இறப்புக்கள் பதிவாகியுள்ளன, இருப்பினும் 105 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களில், கென்டக்கியின் மேஃபீல்டில் உள்ள மேஃபீல்ட் நுகர்வோர் தயாரிப்புகள் (Mayfield Consumer Products) மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் இறந்த எட்டு பேரும் அடங்குவர்.
குறைந்தது 10 தொழிலாளர்களைப் பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை. Bed, Bath & Beyond வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த தொழிற்சாலை, விடுமுறையில் பொருட்கள் வாங்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 24 மணிநேரமும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு கடுமையாக வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டிருந்தது. சூறாவளி, தொழிற்சாலையை அழித்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் தொழிலாளர்கள் தங்குமிடத்திற்கு செல்லுமாறு கூறப்பட்டிருந்தனர்.
வரவிருக்கும் சூறாவளிகளை எதிர்பார்த்து, அது தாக்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக தொழிற்சாலையிலிருந்து வெளியேற தொழிலாளர்கள் மாலை 5.30 மணியிலிருந்து நிர்வாகத்திடம் மன்றாடத் தொடங்கினர். ஆனால் நிர்வாகம் வெளியேறும் எவரையும் பணிநீக்கம் செய்யப் போவதாக அச்சுறுத்தி பதிலிறுத்தது.
“மக்கள் அங்கிருந்து வெளியேற முடியுமா அல்லது வீட்டிற்குச் செல்ல முடியுமா என்று கேட்டனர்,” என்று 21 வயதான Mckayla Emery என்ற தொழிலாளி மருத்துவமனை படுக்கையில் இருந்தவாறு NBC News க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார், அங்கு அவர் காயங்களிலிருந்து மீண்டு வருகிறார்.
“நான் வெளியேற அனுமதி கேட்டேன், அவர்கள் என்னை பணிநீக்கம் செய்யப் போவதாக மிரட்டினர்,” என்று 20 வயது எலிஜா ஜோன்சன் NBC News க்கு விளக்கினார். அப்போது “இதுபோன்ற வானிலையில் கூட, நீங்கள் என்னை பணிநீக்கம் செய்வீர்களா?” என்று ஜோன்சன் கேட்டதற்கு, மேலாளர் “ஆம்” என்று பதிலளித்துள்ளார்.
ஆரம்பத்தில், தொழிலாளர்கள் நடைபாதைகளிலும் குளியலறைகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர், இருப்பினும் அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாக மேற்பார்வையாளர்கள் கருதியவுடன், தொழிலாளர்கள் மீண்டும் உற்பத்தி தளத்திற்கு அனுப்பப்பட்டனர்.
“Quad-State” சூறாவளி வடகிழக்கு ஆர்கன்சாஸைத் தொட்டு, டென்னிசியில் சிறிது நேரம் கடப்பதற்கு முன்னால் மிசூரியின் தென்கிழக்கு முனையில் நுழைந்து, பின்னர் கென்டக்கி வழியாக சுமார் 200 மைல்கள் வரை பயணித்தது. பூர்வாங்க மதிப்பீடுகள், சூறாவளி ஒரு EF4 ஆக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன, இருப்பினும் இது EF5 ஆக திருத்தப்படலாம், இது மேம்படுத்தப்பட்ட புஜிட்டா (EF) அளவில் மிக உயர்ந்த மதிப்பீடாகும்.
தேசிய வானிலை சேவை, EF5 என்பது இவ்வாறு வகைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கிறது, “வலுவாக கட்டமைக்கப்பட்ட வீடுகளின் அடித்தளங்கள் தூக்கி எறியப்பட்டு, கணிசமான தொலைவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிதைக்கப்பட்டது; தன்னியக்க அளவிலான ஏவுகணைகள் பல நூறு அடிகள் அல்லது அதற்கு மேலாக பாய்வது போல; மரங்கள் அகற்றப்பட்டன,” மேலும் மூன்று வினாடிகளில் மணிக்கு 200 மைல் வேகத்தில் காற்று வீசியது. மேஃபீல்டில், குப்பைகள் 37,000 அடி உயரத்திற்கு தூக்கியெறியப்பட்டன, மேலும் பல வீடுகள் அவற்றின் அஸ்திவாரங்களிலிருந்து தகர்ந்து, கான்கிரீட் அடுக்குகளை மட்டுமே விட்டுச் சென்றன.
மேஃபீல்டின் வடமேற்கே சுமார் ஒரு மணிநேரம் பயணிக்கும் தொலைவில் அமைந்துள்ள கென்டக்கியில் உள்ள டாசன் ஸ்பிரிங்ஸின் மேயர் கிறிஸ் ஸ்மைலி, “சுமார் 75 சதவிகிதம் சமூகம் அழிக்கப்பட்டுவிட்டது” என்று அறிவித்தார். அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின்படி, டாசன் ஸ்பிரிங்ஸின் மக்கள்தொகை 2019 இல் 2,452 ஆகவும், சராசரி குடும்ப வருமானம் 25,221 டாலராகவும் உள்ளது.
டாசன் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த ஓக்லின் கூன் என்ற 2 வயது சிறுமி புயலில் சிக்கி உயிரிழந்ததாக நேற்று தெரிவிக்கப்பட்டது, மாநிலத்தின் பாதிக்கப்பட்டவர்களில் மிகக் குறைந்த வயதினராக அவர் இருந்தார். பத்திரிகை செய்திகளின்படி, அவரது குடும்பத்தினர் குளியலறையில் தஞ்சம் அடைந்திருந்தபோது, திடீரென அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.
மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக ஒன்பது மாவட்டங்களில் இருந்து 300 கென்டக்கி தேசிய காவலர் துருப்புக்களை ஆளுநர் பெஷியர் திரட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில், “சுமார் 36 முதல் 50 ஆயிரம் கென்டக்கியர்கள் மின்சார வசதி இல்லாமல் இருந்தனர்” என்று பெஷியர் கூறினார். உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் இன்னும் செய்யப்படவில்லை என்றாலும், சேதத்தின் அளவு பில்லியன் டாலர்களில் இருக்கும் என கருதப்படுகிறது.
தேசிய காவல்படைக்கு கூடுதலாக, கூட்டாட்சி அவசரகால மேலாண்மை முகமையும் (Federal Emergency Management Agency-FEMA) நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கென்டக்கியின் அவசரகால மேலாண்மை இயக்குநர் மைக்கேல் டோசெட் CNN உடன் பேசுகையில், “நிகழ்ந்துள்ள பேரழிவு முற்றிலும் நீங்கள் ஒரு போர் மண்டலத்தில் காணக்கூடியதாகும். இது எங்களது வணிக மற்றும் குடியிருப்பு [sic] சொத்துக்கள் முழுவதையும் முற்றிலும் அகற்றிய ஒரு நிகழ்வாகும்” என்று கூறினார்.
இல்லினாய்ஸில் உள்ள எட்வர்ட்ஸ்வில்லில், அமசன் விநியோகக் கிடங்கை சூறாவளி தாக்கியதில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். செயற்கைக்கோளின் சூறாவளிக்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்கள் கிட்டத்தட்ட பாதியளவு கிடங்கு அழிக்கப்பட்டுவிட்டதைக் காட்டுகின்றன. சூறாவளி கிடங்கைத் தாக்கியபோது அங்கு எத்தனை தொழிலாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பல மாற்றுப்பணிகளில் சுமார் 190 பேர் இந்த கிடங்கில் வேலை செய்கின்றனர். அமசன் பொதுவாக கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் பெரும்பாலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது, அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 3,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஒப்பந்ததாரர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.
மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (Occupational Safety and Health Administration-OSHA), அமசன் நிறைவேற்று மையத்தில் நிகழ்ந்துள்ள அழிவு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணை முடிய ஆறு மாதங்கள் வரை ஆகலாம், மற்றும் டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்திற்கு பெயரளவிலான, மிகக் குறைந்த அபராதம் விதிக்கப்படலாம்.
1950 களில் இருந்து குறைந்தது 21 பருவம் கடந்த டிசம்பர் சூறாவளிகள் அங்கு நிகழ்ந்துள்ளன, அவை சராசரியாக மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் இடைவெளியில் உருவாகின்றன. F5/EF5 சூறாவளிகள் அரிதாகவே உருவாகின்றன, 1950 முதல் இதுவரை அத்தகைய 59 சூறாவளிகள் மட்டுமே பதிவாகியுள்ளன. 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் EF5 ஆக மதிப்பிடப்பட்ட மிக மோசமான சூறாவளி, 2011 இல் மிசூரியின் ஜோப்ளின் வழியாக பயணித்து 158 பேரைக் கொன்றது.
மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் இடையிலான தொடர்புகளை விஞ்ஞானிகள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், விஞ்ஞானிகளால் சூறாவளிக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான ஒரு நேரடி தொடர்பை இதுவரை தீர்மானிக்க முடியவில்லை. Carbon Brief வெளியிட்ட ஒரு அறிக்கை, “கடந்த சில தசாப்தங்களாக அமெரிக்காவில் கவனிக்கத்தக்க அளவிற்கு வலுவான சூறாவளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை,” அதேவேளை சூறாவளிகள் மேலும் தொகுப்பானதாகவும், தீவிரமானதாகவும் மாறியுள்ளதாக” கூறுகிறது.