முன்னோக்கு

கேர்னிக்கா, லிடிசே, மை லாய் ... இப்போது டலொன் அன்வில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஈராக் மற்றும் சிரியாவில் டலொன் அன்வில் என்றழைக்கப்பட்ட ஒரு படுகொலைப் படையைக் கொண்டு திட்டமிட்டு ஆண்டுக்கணக்கில் அமெரிக்கா நடத்திய அப்பாவி பொதுமக்கள் மீதான பாரிய படுகொலையைக் காலவரிசைப்படுத்தி நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

US MQ-9 Reaper Drone (Image credit: U.S. Air Force/Paul Ridgeway public domain)

இந்தப் படைப்பிரிவு மக்கள் கூட்டங்கள் மீதும் குடியிருப்பு கட்டிடங்கள் மீதும் விமானத் தாக்குதல்களையும், டிரோன் மூலமாக ஏவுகணைகள் செலுத்துவதையும் வழிநடத்தியது, இதில் 'விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகள், வீதிகளில் இருந்த குழந்தைகள், இராணுவச் சண்டைகளில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குடும்பங்கள், கட்டிடங்களில் பதுங்கி இருந்த கிராமவாசிகள் என இந்த மோதலில் பங்கு வகிக்காதவர்கள் கொல்லப்பட்டனர்.”

குறிப்பாக மூன்று சம்பவங்களை எடுத்துக்காட்டுக்களாக டைம்ஸ் நினைவூட்டுகிறது:

  • மூன்று ஆண்கள் 'மூவரும் கேன்வாஸ் பைகளுடன், 2016 இலையுதிர் காலத்தில் மன்பிஜ் நகர் அருகிலுள்ள ஓர் ஆலிவ் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை, அவர்கள் சண்டை நடக்கும் இடத்திற்கு அருகிலும் இல்லை, ஆனால் அவர்கள் சண்டையிட்டு வரும் எதிரிகளாக தான் இருக்க வேண்டும், ஓர் ஏவுகணை கொண்டு அவர்கள் கொல்லப்பட வேண்டுமென அந்த தாக்கும் படைப்பிரிவு வலியுறுத்தியது.”
  • மார்ச் 2017 ஆரம்பத்தில், 'டலொன் அன்வில், சிரியாவின் விவசாய சிறுநகரமான கராமா என்றழைக்கப்படும் இடத்திற்கு சூறையாடும் ஒரு ட்ரோனை அனுப்பியது,' அங்கிருந்த அனைவரும் தப்பியோடி விட்டதாகவும், யாராவது எஞ்சியிருந்தால் சட்டபூர்வ இலக்குக்கு ஆளாக்கப்படுவார் என்று அந்த செயற்படை அறிவித்தது. அந்த சூறையாடும் டிரோன் ஒரு வீட்டின் மீது 500 பவுண்ட் குண்டு ஒன்றை வீசியது, தூசிப் படலம் நீங்கிய போது, “அங்கே பெண்களும் குழந்தைகளும் பகுதியாக இடிந்த கட்டிடத்திற்கு வெளியே அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்ததையும், சிலர் உடல் அங்கங்களை இழந்திருந்ததையும், சிலர் இறந்தவர்களை இழுத்து கிடத்திக் கொண்டிருந்ததையும்,” இன்ஃப்ராரெட் கேமராக்கள் காட்டின. குறைந்தது 23 பேர் இறந்திருந்தனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர்.
  • ISIS வசமிருந்த மிகப்பெரிய சிரிய நகரமான ரக்கா மீது, ஜூன் 2017 இல், அமெரிக்க-ஆதரவிலான தாக்குதல் நடத்தப்பட்ட போது, அப்பாவி பொதுமக்கள் அந்த சண்டையிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக, “யூப்ரரேடஸ் ஆற்றைக் கடக்க தற்காலிக பயணப் படகுகளில் ஏறினர்.” அந்த படைப்பிரிவு தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டது, அதில் பல படகுகள் சிதைக்கப்பட்டன, “குறைந்தது 30 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் சடலங்கள் அந்த மென்னீரில் மிதந்து சென்றன.”

ட்ரோன்-ஏவுகணைத் தாக்குதல்களின் காட்சிகளைப் பார்த்த பகுப்பாய்வாளர்கள், தெளிவாக குழந்தைகளின் சடலங்கள் என்பது தெரிவதை 'ISIS போராளிகளின்' சடலங்கள் என்று முத்திரைக் குத்தியமை போன்ற டலொன் அன்வில் படைப்பிரிவின் வாதங்கள் மீது சர்ச்சையைத் தொடங்கினர். இதற்கு விடையிறுப்பாக, ஒருவரைச் சுடுவதற்கு முன்னதாக அல்லது தாக்குவதற்கு முன்னதாக தங்களின் உடலில் பொருத்தப்பட்ட கேமராக்களைத் திசைதிருப்பி விடும் அமெரிக்க சிப்பாய்களைப் போல, டலொன் அன்வில் நடவடிக்கையாளர்களும் 'காணொளி ஆதாரத் தொகுப்பு இல்லாமல் செய்வதற்காக, தாக்குதல் நடப்பதற்குச் சற்று முன்னதாக இலக்குகளில் இருந்து டிரோன் கேமராக்களைத் திருப்பி விட தொடங்கினார்கள்,” என்று ஒரு முன்னாள் அதிகாரி டைம்ஸிற்குத் தெரிவித்தார்.

பெரும்பாலான தாக்குதல்களை டலொன் அன்வில் 'தற்காப்புக்காக' செய்யப்பட்டதாக முத்திரை குத்தியது, ஏனென்றால் தாக்கும் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படுவதைப் போல, இதற்கு உளவுத்தகவல் அடிப்படையிலான நியாயப்பாடு அவசியமில்லை.

டலொன் அன்வில் என்பது மிகப்பெரிய செயற்படை 9 (Task Force 9) க்கு உள்ளே உள்ள ஒரு டெல்டா படைப்பிரிவின் பெயராகும், இது 2014 இல் இருந்து 2019 வரையில் ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிக் அரசு (ISIS) படைகளுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக செயல்பட்டது. செயற்படை 9 இன் நடவடிக்கைகள் கடந்த மாதம் பிரசுரிக்கப்பட்ட டைம்ஸின் முந்தைய முதல்பக்க அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தன, பாகுஸ் நகரம் மீதான ஒரு விமானத் தாக்குதலின் விபரங்களும் அதில் உள்ளடங்கி இருந்தன, அத்தாக்குதலில் 500 பவுண்ட் மற்றும் 2,000 பவுண்ட் குண்டுகளால் குறைந்தது 80 பெண்கள் மற்றும் குழந்தைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டனர்.

வேண்டுமென்ற அப்பாவி மக்களைப் பாரியளவில் கொன்றதற்கான பெரும் ஆதாரத்தை வழங்கும் இந்த விபரங்கள், 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் இழிவார்ந்த போர் குற்றங்கள் சிலவற்றுடன் இதை ஒப்பிடக் கோருகிறது.

  • கேர்னிக்கா — இந்த பாஸ்க் நகரம் ஸ்பானிய குடியரசுக்கு எதிரான பாசிச எழுச்சியின் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் கோரிக்கைக்கு இணங்க ஏப்ரல் 26, 1937 இல் இத்தாலிய மற்றும் ஜேர்மன் குண்டுவீசிகளால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது. சுமார் நான்கு மணி நேரம் மழையென குண்டுகள் வீசப்பட்டன, இதில் 1,654 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதில் தான் செறிவார்ந்த பயங்கர குண்டுவீசும் புதிய விமானப்படை உத்தி (Luftwaffe tactic of saturation terror bombing) முதல்முறையாக பரிசோதிக்கப்பட்டது, விரைவிலேயே இரண்டாம் உலக போரில் அது இரண்டு தரப்பிலும் கையிலெடுக்கப்பட்டது. அந்த திட்டமிட்ட வெகுஜன படுகொலை உலகையே அதிர வைத்ததுடன், பிக்காசோவின் புகழ்வாய்ந்த சித்திரத்தில் நினைவுச்சின்னமாக பொதியப்பட்டது.
  • லிடிசே — இந்த செக் கிராமம் போஹிமியா (Bohemia) மற்றும் மொராவியாவின் (Moravia) ரைஹ் பாதுகாவலரான ரைய்ன்ஹார்ட் ஹெட்ரிச் படுகொலைக்கான கடுமையான நடவடிக்கையாக ஜூன் 10, 1942 இல் நாஜிக்களால் அழிக்கப்பட்டது. ஹிட்லர் மற்றும் ஹெட்ரிச் ஹெம்லெர் உத்தரவுகளின் கீழ், ஜேர்மன் படைகள் அந்த கிராமத்தைச் சுற்றி வளைத்து, 15 மற்றும் அதற்கு அதிக வயதுடைய ஒவ்வொரு ஆணையும் கொன்றதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பியது. மொத்தம் 173 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பெண்களில் சிலர் பல ஆண்டுகள் அடிமை உழைப்புக்காக உயிர்வாழ விடப்பட்டார்கள், ஆனால் 82 குழந்தைகள் ஒரு சில வாரங்களுக்குள் செல்ம்னோ சித்திரவதை முகாமில் (Chelmno extermination camp) விஷவாயுவால் கொல்லப்பட்டார்கள். அந்த கிராமத்தின் ஒவ்வொரு கட்டிடமும் அழிக்கப்பட்டதுடன், நிலம் தலைகீழாக உழுது போடப்பட்டது.
  • மை லாய் — இது, வியட்நாம் போரில் மிகவும் இழிவுகரமான அமெரிக்காவின் படுகொலைக் களமான சாங் மை கிராமத்திற்கு அமெரிக்க இராணுவம் தேர்ந்தெடுத்த பெயராகும். லெப்டினென்ட் வில்லியம் கால்லெ உத்தரவின் கீழ் இருந்த ஒரு படை மார்ச் 16, 1968 இல் அக்கிராமத்தைச் சுற்றி வளைத்து, திட்டமிட்டு 500 க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் படுகொலை செய்யத் தொடங்கியது. சில பெண்கள் துப்பாக்கி முனையில் பலரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். நவம்பர் 1969 இல் நடத்தப்பட்ட அந்த அட்டூழியம் வெளியான போது அது உலகெங்கிலும் கொந்தளிப்பை உண்டாக்கியதுடன், ஒரு 'ஜனநாயக' ஏகாதிபத்திய சக்தி நாஜிக்களின் அணுகுமுறைக்கு நிகரான கொடூரமான அணுகுமுறைகளைப் பயன்படுத்தியதை வெளிப்படுத்தியது. கால்லெ மட்டுமே வழக்கில் இழுக்கப்பட்டார், ஹிட்லரின் அதிகாரிகள் தங்களைப் பாதுகாக்க கூறிய அதே காரணத்தை அவரும் கூறினார், அதாவது அவர் வெறுமனே 'உத்தரவுகளை பின்பற்றியதாக' தெரிவித்தார்.

இந்தக் கொலைகள் 'அடாவடித்தனமான' அல்லது கீழ்மட்ட நடவடிக்கையாளர்களால் நடத்தப்பட்டதாக டைம்ஸ் வாதிடுகிறது, ஆனால் உண்மை என்னவென்றால் 'சிறப்பு' மரணப் படைப்பிரிவுகளைத் திட்டமிட்டு ஊக்குவித்தமை ஒபாமா மற்றும் ட்ரம்ப் பதவிக் காலத்தில் ஒரு மத்திய அம்சமாக இருந்தது, அவ்விரு ஜனாதிபதிகளுமே அமெரிக்காவின் போர் நோக்கங்களை எட்ட அவற்றை அவசியமாக பார்த்தார்கள்.

ISIS போருக்கு எதிரான ஒரு அமெரிக்க தளபதி முறையான கட்டளைச் சங்கிலி வழி செல்லாமல், கீழ்நிலை அதிகாரிகள் தாக்குதல்களுக்கு உத்தரவிட அனுமதித்து முடிவெடுத்ததே அப்பாவி மக்களின் சடலங்கள் குவிவதில் ஒரு காரணியாக இருந்தது என்றும், “தாக்குதல் கட்டளை அறையில் பணியிலிருந்த மூத்த நியமன டெல்டா செயல்பாட்டாளர் — வழக்கமாக முதல் நிலை சார்ஜென்ட் அல்லது தலைமை சார்ஜென்ட்' நடவடிக்கை எடுக்க கட்டளை கொடுக்கலாம் என்ற புள்ளியை இது எட்டியிருந்தது என்றும் டைம்ஸ் அறிக்கை வாதிடுகிறது.

இத்தகைய குறிப்புகள் பாரிய படுகொலைக்கான பழியைக் கீழ்நிலை பிரமுகர்களின் மீதோ, அல்லது அதிகாரத்தில் உள்ள 'அடாவடித்தனமான' தனிநபர்கள் மீதோ சுமத்துவதற்கான உயர்மட்ட அதிகாரிகளின் ஒரு முயற்சியைப் பிரதிநிதித்துவம் செய்யலாம் என்றாலும், அத்தகைய பலிக்கடா ஆக்கும் முயற்சியும் வீணாகிவிடுகிறது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் அமெரிக்க அரசின் உயர்மட்டங்களில் முடிவெடுக்கப்பட்ட ஒரு கொள்கைக்கு சேவையாற்றியது. ISIS தாக்குதலுக்கு முன்னால் ஈராக்கின் அமெரிக்க கைப்பாவை ஆட்சியின் துருப்புகள் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூலைக் கைவிட்டு தலைதெறிக்க ஓடிய திடீர் நெருக்கடிக்கு, ஒபாமா நிர்வாகம், அப்பிராந்தியத்திற்கு அமெரிக்க துருப்புகளையும், போர் விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகளையும் அனுப்பியதன் மூலம் விடையிறுத்தது.

பின்னர் சிஐஏ இயக்குனர் ஆன ஜோன் பிரெனென் தலைமையில் இருந்த பயங்கரவாத-எதிர்ப்பு குழுவுடன் வெள்ளை மாளிகையில் நடந்த வாராந்தர கூட்டங்களில் ஒபாமா பங்கு பற்றினார் என்பதும், அக்குழு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக டிரோன் ஏவுகணை தாக்குதல்களுக்கான இலக்குகள் பட்டியலை அவர் முன் வைத்தது என்பதும் நன்கறிந்த விஷயமாகும். இத்தகைய 'பயங்கரவாத செவ்வாய்கள்', இவ்வாறு தான் அவை அறியப்பட்டன, அமெரிக்க டிரோன் ஏவுகணைத் தாக்குதலில் யேமனில் கொல்லப்பட்ட, அடிப்படைவாத பிரச்சாரகராக மாறிய அமெரிக்காவில் பிறந்த யெமனிய அமெரிக்கர் அன்வர் அல்-அவ்லாகியின் படுகொலை போன்ற தாக்குதல்களை நடைமுறையில் கொண்டு வந்தன.

டைம்ஸில் விவரிக்கப்பட்ட குற்றங்களின் பிரதான இடம் சிரியா என்பதைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் சிரிய ஜனாதிபதி பஷர் அசாத்தை புதிய ஹிட்லராக பூதாகரமாக காட்ட 10 ஆண்டு காலமாக நீண்டவொரு பிரச்சாரத்தைத் தொடுத்துள்ளன, இந்த முயற்சியை இப்போது கலைக்கப்பட்டு விட்ட சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு மற்றும் ஜாகோபின் இதழ் போன்ற குழுக்கள் உட்பட சர்வதேச போலி-இடது ஆதரித்துள்ளது. இத்தகைய குழுக்கள் அசாத் உடனான போரில் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிக் அடிப்படைவாத குழுக்களை ஆதரித்த அதேவேளையில், இத்தகைய சக்திகளும், மற்றும் அமெரிக்க இராணுவமும், சிரிய மக்களுக்கு எதிராக நடத்தி உள்ள அட்டூழியங்களைக் குறித்து மவுனமாக இருக்கின்றன.

இதே போல, கடந்த ஆண்டு, அமெரிக்க ஊடகங்கள் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஜின்ஜியாங்கில் வீகர் தேசியவாதிகளைச் சீனா ஒடுக்குவதால் பெய்ஜிங் இனப்படுகொலைக்கு குற்றவாளி ஆகிறது என்று வாதிட்டு, சீன அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களால் நிரம்பி இருந்தன. வெளியுறவுத்துறை தகவல்படி, ஜின்ஜியாங்கில் முஸ்லீம் கலாச்சாரத்தைத் திட்டமிட்டு ஒடுக்குவதில் சீனா ஈடுபட்டுள்ளதாம். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா மற்றும் யெமனின் இரத்தந்தோய்ந்த போர்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கையையும் சீனாவினால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கையையும் ஒப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும்.

உச்சபட்ச பாசாங்குத்தனத்தைப் பொறுத்த வரையில், டைம்ஸ் செய்திகளே கூட போதுமானதாகும். சிரியாவில் அமெரிக்க அரசாங்கம் நடத்திய அட்டூழியங்களை அதன் செய்தி பக்கங்களே விவரிக்கின்றன. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலியன் அசான்ஜூம் விக்கிலீக்ஸூம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் விபரங்களை வெளியிட்டதுடன், ஈராக்கில் இரண்டு ராய்டர்ஸ் பத்திரிகையாளர்கள் உட்பட டஜன் கணக்கானவர்களை அப்பாச்சி ஹெலிகாப்டர் துப்பாக்கி கொண்டு படுகொலை செய்ததைக் காட்டும் வேட்டையாடும் 'கூட்டுப் படுகொலை' காணொளி உள்ளடங்கலாக, அப்பாவி மக்களைப் படுகொலை செய்யும் அமெரிக்க இராணுவத்தின் எண்ணற்ற விபரங்களை ஆவணப்படுத்தும் அமெரிக்க இராணுவ உள்அலுவலக ஆவணங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

ஆனால் டைம்ஸால் விவரிக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பான அதே அரசாங்கத்தால் அவர் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு வழக்கில் இழுக்கப்படவும், சிறையில் அடைக்கப்படவும் மற்றும் மரண தண்டனையே கூட விதிக்கப்படக்கூடிய உடனடி அபாயத்தை முகங்கொடுக்கும் அசான்ஜின் பாதுகாப்புக்காக டைம்ஸ் ஒரேயொரு வார்த்தை கூட கூறியதில்லை.

டைம்ஸின் இந்த இரண்டு நீண்ட கட்டுரைகளும் அமெரிக்க போர் குற்றங்களுக்கு மறுக்கவியலா ஆதாரங்களை வழங்குகின்றன. பிரதான அமெரிக்க போர் குற்றவாளிகள் யார் என்பது நன்கு தெரிந்ததே: உயர்மட்ட கட்டளையக பொறுப்பில் இருந்த நிர்வாகத்துறை அதிகாரிகளை மட்டுமே பெயரிட்டு கூறினால், பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஜோசப் பைடென், ரிச்சார்ட் செனெ, மைக் பென்ஸ், ஜோன் பிரெனென், டொனால்ட் ரூம்ஸ்ஃபீல்ட், லியோன் பனெட்டா, கொண்டாலிசா ரைஸ் ஆகியோராவர். மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் போர் குற்றங்களை அம்பலப்படுத்த அர்பணிக்கப்படும் எதிர்கால நூரெம்பேர்க் விசாரணை ஆணையம் இவர்கள் அனைவரையும் விசாரணைக் கூண்டில் ஏற்றும்.

Loading