முன்னோக்கு

கிளாஸ்கோ உச்சிமாநாடு, காலநிலை மாற்றம் மற்றும் சோசலிசத்திற்கான தேவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வார இறுதியில் தொடங்கும் இரண்டு வார காலநிலைமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் அரச தலைவர்கள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பிற பிரதிநிதிகள் கூடுகின்றனர்.

ஆகஸ்ட் 5, 2021 வியாழன், ரஷ்யாவில் யாகுட்ஸ்கிற்கு மேற்கே உள்ள கோர்னி உலஸ் பகுதியில் உள்ள கியூயோரேலியாக் கிராமத்திற்கு அருகே காட்டுத் தீ ஏற்பட்ட இடத்தில் தீயணைப்பு படையினர் பணிபுரிகின்றனர். (AP Photo/Ivan Nikiforov)

1992 இல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒப்புக் கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளிள் வழங்கிய ஒப்புதலைத் தொடர்ந்து இந்த ஆண்டு 26 ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளை இது குறிக்கின்றது. அதைத் தொடர்ந்து 29 ஆண்டுகால சர்வதேச பேச்சுவார்த்தைகளில், முதலாளித்துவ அரசாங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியை உருவாக்கி, உலகை பேரழிவை நோக்கி செல்லும் பாதையில் கொண்டு சென்கின்றன. கிளாஸ்கோவில் இந்த ஆண்டு அமர்வும் இதையே உறுதியளிக்கிறது.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டின் கடைசி பேச்சுவார்த்தை அமர்வில் இருந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பருவநிலை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. இதில் ஆஸ்திரேலிய காட்டுத் தீ முதல் அமெரிக்க மேற்கு வரையிலான பாரிய காட்டுத் தீ, ஐரோப்பாவில் பேரழிவுகரமான வெள்ளம், ஆசியா மற்றும் அமெரிக்கா, மற்றும் உலகம் முழுவதும் கொடிய வெப்ப அலைகள் உள்ளடங்குகின்றன.

விஞ்ஞான முன்னேற்றங்கள் காலநிலை மாற்றம் மற்றும் மனிதகுலத்தின் மீதான அதன் தாக்கம் பற்றிய நமது அறிவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. ஆகஸ்டில் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழுவின் சமீபத்திய விரிவான அறிக்கை, இத்தாக்கங்கள் 'பரவலான, விரைவான மற்றும் தீவிரமடைந்து வருகின்றன, மேலும் சில நிகழ்வுகள் இப்போது மாற்ற முடியாதவையாகிவிட்டதை' உறுதிப்படுத்தியது. உலகம் ஏற்கனவே தொழில்துறைக்கு முந்தைய நிலையில் இருந்து 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது. தட்பவெப்ப அமைப்பின் செயலற்ற தன்மை, அடுத்த இரண்டு தசாப்தங்களில் 1.5° C என்ற உலகளாவிய வெப்பநிலை உயர்வைத் தவிர்க்க முடியாததாக ஆக்கியது.

விஞ்ஞானிகளின் கடுமையான எச்சரிக்கைகளோ அல்லது தீவிர வானிலையின் விளைவுகளோ காலநிலை மாற்றத்திற்கான பரிதாபகரமான உலகளாவிய பதிலை அடிப்படையில் மாற்றவில்லை. காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதில் இருக்கும் சர்வதேச இயலாமை பெரும் தொற்றுநோய்க்கு எந்த உலகளாவிய பிரதிபலிப்பும் இல்லாததுடன் இணைந்துள்ளது. இந்த தாமதம் வெகுஜன மரணத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு கூட்டுப் பதிலை அனுமதிக்கும் என்ற நம்பிக்கையில் கிளாஸ்கோ உச்சிமாநாடு ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த நம்பிக்கைகள் இன்னும் பேரழிவு தரும் ஆண்டிற்கு வழிவகுத்துள்ளன. உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2021 இல் இரட்டிப்பாகும்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் உடன்படிக்கைக்குப் பின்னர் ஒவ்வொரு நாட்டினாலும் உறுதிவழங்கப்பட்ட பசுமை இல்லங்களின் வாயு உமிழ்வு இலக்குகளை மறுபரிசீலனை செய்வதே கிளாஸ்கோ நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாகும். இந்த உறுதிப்பாடுகள் முற்றிலும் சுயவிருப்பின்பேரிலானது மற்றும் இதனை அமுலாக்க எவ்விதமான வழிமுறையும் இல்லை. பலமிழந்த ஒன்றாக இருந்தபோதிலும், பாரிஸின் கூட்டு அபிலாஷைகள், 1.5C என விஞ்ஞானிகளால் வலியுறுத்தப்பட்ட இலக்கு ஒருபுறம் இருக்க, வெப்பநிலை அதிகரிப்பை 2.0 C ஆகக் கட்டுப்படுத்தும் குறிக்கோளுக்கு அருகில் கூட உலகை கொண்டு வரவில்லை.

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் பகுப்பாய்வு, நாடுகள் தங்கள் தற்போதைய உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதில் வெற்றிகண்டால், இந்த நூற்றாண்டில் வெப்பநிலை இன்னும் 2.7° C ஆக உயரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் யதார்த்தம் அதைவிட மோசமானது. பெரும்பாலான நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதற்கும், செயல்திறனை அதிகரிப்பதற்கும், போதிய இலக்குகளை அடையத் தேவையான பிற நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் மிகக் குறைவாகவே செய்துள்ளன. தற்போதைய கொள்கைகள் வேகமாக தொடர்ந்தால், உலகம் 2100இல் 3° C வெப்பமயமாதலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நாகரிகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

கிளாஸ்கோவில் வழங்கப்படும் தீர்வு, குறைந்த பேரழிவு தரும் வெப்பமயமாதல் இலக்குகளுக்கு ஏற்ப புதிய, அதிக ஆக்ரோஷமான இலக்குகளை அரசாங்கங்கள் உருவாக்குவதுதான். இருப்பினும், இந்த இலக்குகள் முற்றிலும் சுயவிருப்பின் அடிப்படையிலானவையாகவே இருக்கின்றன. மேலும் இழிந்த கணக்கியல் தந்திரங்களுக்கு வழிவிடுகின்றன. உதாரணமாக, பிரேசில் அதன் 2005 உமிழ்வுகளின் மதிப்பீட்டை மேல்நோக்கி மாற்றியமைத்தது. இதனால் சதவீத அடிப்படையில், அது உறுதியளித்த இலக்கை அடைவதற்கான பாதையில் உள்ளது.

கரியமில மாசுபாட்டை விரைவாகக் குறைப்பதற்கான வாக்குறுதிகளுக்கும் மற்றும் புதைபடிவ எரிபொருளால் இயங்கும் நிலையைத் தக்கவைக்கும் கொள்கைகளின் உண்மைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே பாரிய முரண்பட்ட தன்மை வேறு எந்த நாட்டையும் விட தற்போது வளிமண்டலத்தில் அதிக கரியமில வாயுவை உற்பத்தி செய்வதற்கு காரணமான அமெரிக்காவால் எடுத்துக்காட்டப்படுகின்றது. தசாப்தத்தின் இறுதிக்குள் பசுமை இல்லங்களின் வாயு வெளியீட்டை 2005 இன் பாதியாக குறைப்பதாகவும், 2050க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதாகவும் வாக்குறுதிகளுடன் ஜனாதிபதி பைடென் வெள்ளிக்கிழமை கிளாஸ்கோவிற்கு வந்தார். இதற்கிடையில், அவர் தனது உள்கட்டமைப்பு மற்றும் சமூக செலவின திட்டங்களைக் குறைக்க தனது சொந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான மீதமுள்ள நிதி 10 ஆண்டுகளில் வெறும் 550 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வருடத்தில் போருக்கு தயாராக நாடு செலவழிக்கும் பணத்தில் ஒரு சிறுபகுதியாகும். இந்த காலநிலை நிதியின் பெரும்பகுதி வணிகங்களுக்கான வரிவிட்டுக் கொடுப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தவறான வாக்குறுதிகள் மற்றும் அதற்கான தமது தேசிய பொறுப்புகளை காட்டிக்கொள்வதற்குப் பின்னால் கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் வெடிக்கும் தேசிய போட்டிகள் ஊடுருவி உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை, பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகிய ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து, அதில் மீண்டும் இணைந்த பைடென் நிர்வாகத்தின் கொள்கை மாற்றம், மனிதகுலம் எதிர்கொள்ளும் பேரழிவுப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சர்வதேச கூட்டுழைப்பை நோக்கித் திரும்புவதைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, சீனாவின் எழுச்சியை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் அது ஒரு இராஜதந்திர முன்னணியை மீண்டும் திறக்கிறது.

வியாழனன்று ஒரு உரையில் பைடென் இதை பின்வருமாறு தெளிவுபடுத்தினார். 'காலநிலை நெருக்கடியை, சீனாவிற்கும் மற்றைய உலகில் உள்ள ஏனைய நாடு எல்லாவற்றுக்கும் எதிராக, 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரப் போட்டியில் எதிர்த்து நிற்பதற்கும், வெற்றி பெறுவதற்கும் ஒரு பாதையில் எம்மை ஒன்றாக நிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றுவது' என்று அவர் தனது நோக்கத்தைத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் தேசிய பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து வெள்ளை மாளிகை உத்தரவிட்ட அறிக்கைகளின் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன. காலநிலை மாற்றத்தின் முதல் தேசிய புலனாய்வு மதிப்பீடு கிளாஸ்கோவில் என்ன ஆபத்தில் உள்ளது என்பதை சுருக்கமாகக் கூறுகிறது. 'பாரிஸ் உடன்படிக்கை இலக்குகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் நிகர பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை கட்டுப்ப்படுத்துவதை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது பற்றி நாடுகள் பெருகிய முறையில் வாதிடுவதால் புவிசார் அரசியல் பதட்டங்கள் வளரக்கூடும்' என்று அறிக்கை குறிப்பிட்டது. 'எவ்வளவு விரைவாக செயல்படுவதற்கும் பணம் செலுத்துவதற்கும் யார் அதிக பொறுப்பை ஏற்கிறார்கள். வளங்களைக் கட்டுப்படுத்தவும், சுத்தமான எரிசக்தி மாற்றத்திற்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களில் ஆதிக்கம் செலுத்தவும் நாடுகள் போட்டியிடும் என்பது இந்த விவாதத்தின் மையமாக இருக்கும்.' என்றும் அது குறிப்பிட்டது.

அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் இதேபோன்ற கணக்கீடுகள் பின்பற்றப்படுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக தங்கள் சொந்த தொழிற்துறைக்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்கும், தங்கள் புவிசார் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் உந்தப்படுகின்றன.

இதற்கிடையில், கிளாஸ்கோவில் அரசாங்கங்கள் திட்டமிட்டுச் செய்யும் நடவடிக்கைகளுக்கும் மனிதகுலத்தை காப்பாற்றுவதற்கு தேவையானவற்றுக்கும் இடையே உள்ள இடைவெளி தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இந்த வசந்த காலத்தில், அரசுகளுக்கிடையேயான ஆலோசனை நிறுவனமான சர்வதேச எரிசக்தி நிறுவனம், 2050க்குள் நிகர பூஜ்ஜிய உலகளாவிய எரிசக்தி துறையை அடைவதற்கான சாலை வரைபடத்தை வெளியிட்டது. உலகளாவிய கரியமில வாயு உமிழ்வுகளில் முக்கால் பங்கிற்கு எரிசக்தி துறை காரணமாகும். வெப்பமயமாதலை 1.5 C ஆகக் கட்டுப்படுத்த, அத்தகைய பாதை தேவை என்றது.

  • 'உலகம் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில், எரிசக்தித் துறையின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையிலான இணையற்ற மாற்றங்கள் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்' என்ற உண்மையை அறிக்கை முன்வைக்கிறது. அடுத்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும், பின்வருபவை தேவை என அது குறிப்பிட்டது:
  • அனைத்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களின் அனுமதிகளை உடனடியாக நிறுத்துதல்;
  • மின்சாரத்தில் புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பங்கை 60 சதவீதமாக இரட்டிப்பாக்குவது;
  • மின் துறையில் வருடாந்த முதலீட்டை மூன்று மடங்காக உயர்த்துதல்;
  • முன்னேறிய பொருளாதாரங்களில் இருக்கும் கட்டிடங்களில் பாதியையும் வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு பகுதியையும் மறுசீரமைத்தல்;
  • ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் உலகளாவிய மின்கல உற்பத்தியை இரட்டிப்பாக்குதல்;
  • சூரிய ஒளியிலிருந்து பெறும் வசதிகளை ஐந்து மடங்கு அதிகரிப்பது;
  • 2019ல் 2.5 சதவீதமாக இருந்த மின்சாரத்தால் இயக்கப்படும் புதிய பயணிகள் வாகனங்களை 50 சதவீதமாக மாற்றுவது.

உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் இதற்குத் தகுதியானவை என்று யாராவது நினைக்கிறார்களா? கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் உள்ள அனைவரும் ஒரு திட்டமிட்ட மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபுறம் இருக்க, அவர்களின் முற்றிலும் போதாத வாக்குறுதிகளுக்கு கட்டுப்படுவதைக் கூட ஒப்புக்கொள்ள முடியாதுள்ளது.

வெகுஜன மரணத்தை எதிர்கொண்டாலும் கூட, இந்த தொற்றுநோய் ஆளும் வர்க்கத்தின் உண்மையான முன்னுரிமைகளை நிரூபித்துள்ளது. 2020 மார்ச்சில் நிதிய அமைப்பில் வெடித்த நெருக்கடியில் மத்திய வங்கிகளின் பாரிய தலையீட்டுடன் பொது சுகாதாரத்தை பாதிக்கும் மோசமான நடவடிக்கைகள் ஊடாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை உயர்த்த கிட்டத்தட்ட வரம்பற்ற நிதிகள் கட்டவிழ்த்துவிட்டப்பட்டன. சந்தைகள் தற்காலிகமாக ஸ்திரப்படுத்தப்பட்ட நிலையில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை மாறியது. வைரஸ் பரவவும், மாற்றத்திற்குள்ளாகவும் அனுமதிக்கப்பட்டது. இதன் விளைவாக இலட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர், இதற்கு முடிவே இல்லாதுள்ளது. அதே நேரத்தில், சமூக சமத்துவமின்மை மோசமான புதிய மட்டங்களை எட்டியுள்ளது.

தொற்றுநோயால் முன்வைக்கப்படும் அடிப்படை சவால்களும் காலநிலை மாற்றத்தால் முன்வைக்கப்படுவதைப் போலவே உள்ளன. கொரோனா வைரஸுக்கு எல்லைகள் தெரியாது என்பது போல, கரியமிலை வாயுவுக்கும் தெரியாது. நமது காலத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒரு பயனுள்ள பதிலாக, முதலாளித்துவத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய எல்லைகளை உடைக்கப்பட வேண்டும்.

இதற்கு சமூக வளங்களை தனியார் இலாபங்களுக்கு அல்லாமல் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவதை வழிநடத்த வளங்களின் பாரிய மறுஒதுக்கீடு தேவைப்படுகிறது.

பொருளாதாரத்தின் முக்கிய நெம்புகோல்கள் தனியாரால் கட்டுப்படுத்தப்பட்டு, இலாப நலன்களுக்காக இயங்கும் வரை, புதுப்பிக்கத்தக்க சக்திகொண்ட பொருளாதாரத்திற்கான ஒரு விரைவான மாற்றத்திற்குத் தேவையான பாரிய முதலீடுகள் சாத்தியமற்றது.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் தோல்வி என்பது சுருக்கமாக மனிதர்களால் ஏற்படவில்லை. இது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பான முதலாளித்துவத்தால் ஏற்படுகிறது. முதலாளித்துவத்தில் உள்ள உள்ளார்ந்த முரண்பாடுகளான ஒரு பொருளாதாரரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட உலகத்தை போட்டி நாடுகளாகப் பிரிப்பது மற்றும் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமைக்கும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி ஆகியவை, உருவாகும் காலநிலை மாற்றத்தினால் பேரழிவுகரமான தாக்கங்களைத் தடுக்க நாம் தூக்கியெறிய வேண்டிய ஒரு தடையை முன்வைக்கின்றன. அதற்கு உலகளாவிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட பகுத்தறிவுமிக்க்க பொருளாதாரத் திட்டம் தேவைப்படுகிறது. அதற்கு சோசலிசத்திற்கான போராட்டம் தேவையாகின்றது.

அதன் ஆழத்தில் நோக்கினால், காலநிலை மாற்றம் என்பது அடிப்படையில் ஒரு வர்க்கக் கேள்வியாகும். சமூகம் யாருடைய நலன்களுக்காக இயங்குகிறது? ஒரு சிறிய ஆனால் பிரமாண்டமான செல்வத்தைகொண்ட ஆளும் உயரடுக்கின் சார்பாக செயல்படும் முதலாளித்துவம் தன்னை முற்றிலும் திவாலானதாக நிரூபித்துள்ளது. எனவே தனியார் இலாபத்தை உருவாக்காமல், சமூகத் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் சமூகத்தை மறுகட்டமைப்பதில் தனது அடிப்படை நலன்கள் இணைந்திருக்கும் சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதே அவசர பணியாகும்.

Loading