முன்னோக்கு

140,000 க்கு அதிகமான அமெரிக்க குழந்தைகள் கோவிட்-19 க்கு பெற்றோரில் ஒருவரையோ அல்லது ஒரு கவனிப்பாளரையோ இழந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழனன்று Pediatrics இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, 'ஏப்ரல் 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை, அமெரிக்காவில் 1,40,000 க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது கவனிப்பாளர்களாக இருந்த தாத்தா பாட்டியில் ஒருவரையோ இழந்துள்ளதை' கண்டறிந்தது. ஏப்ரல் 2021 இறுதி வரையில் உலகளவில் அந்த எண்ணிக்கை 1.56 மில்லியன் குழந்தைகள் என்று மதிப்பிட்ட அதே ஆய்வின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் சூசன் ஹில்லிஸ் ஜூலை மாதம் The Lancet பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வைப் பின்தொடர்ந்து இந்த முடிவுகள் வருகின்றன.

A procession of vehicles drive past photos of Detroit victims of COVID-19, Monday, Aug. 31, 2020 on Belle Isle in Detroit. (AP Photo/Carlos Osorio) [AP Photo/Carlos Osorio]

இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் போது உலகையே மூழ்கடித்த மிகப் பெரியளவிலான துயரத்தின் அளவை அடிக்கோடிடுகின்றன. அமெரிக்காவில், ஜூன் 30 வாக்கில் கோவிட்-19 ஆல் ஏற்பட்ட 621,656 மரணங்களில் நான்கில் ஒருவர் அந்த குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவராகவோ அல்லது கவனிப்பாளர்களில் ஒருவராகவோ இருந்தனர்.

சமீபத்திய அந்த ஆய்வு குறிப்பிடுகிறது, 'அவர்களுக்கு இருப்பிடமும், தேவைகள் மற்றும் கவனிப்பையும் வழங்கிய அவர்களின் தாய்மார்கள், தந்தையர் அல்லது தாத்தா பாட்டிகளின் மரணங்களால் இந்த குழந்தைகளின் வாழ்க்கை நிரந்தரமாக மாற்றப்படுகிறது,' 'பெற்றோரின் இழப்பு மனநல பிரச்சினைகளுடனும், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவது, சுய-மதிப்பீட்டைக் குறைத்துக் கொள்ளவது, அபாயகரமான பாலியல் நடவடிக்கைகள், தற்கொலை அபாயங்கள், வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம், சுரண்டல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. உடனிருக்கும் தாத்தா-பாட்டியின் இழப்பு என்பது பேரன்-பேத்திகளின் உளவியல்ரீதியான சமூக, நடைமுறை, மற்றும்/ அல்லது நிதி ஆதரவைப் பாதிக்கும். கவனிப்பாளர் மரணத்திற்குப் பிறகு, குடும்ப சூழ்நிலைகள் மாறலாம், குழந்தைகளுக்கு நிச்சயமற்ற இருப்பிட வசதி ஏற்படலாம், பிரிவுகள் மற்றும் வளர்ப்பு ஆதரவு இல்லாமல் போகலாம்,' என்பதையும் அந்த ஆய்வு சேர்த்துக் கொண்டது.

ஒரு தலைமுறை இளைஞர்கள் மீது ஏற்படும் அதிர்ச்சியின் அளவு அளவிட முடியாதது. ஆளும் உயரடுக்கும் அவர்களது ஊடகங்களும் முடிவில்லாமல் ஒவ்வொருவரும் 'வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற மந்திரத்தை திரும்பத் திரும்பக் கூறி வருகின்ற நிலையில், யதார்த்தத்தில் உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 7,000 பேர் கோவிட்-19 ஆல் தொடர்ந்து இறந்து வருவதால் மேலும் மேலும் குடும்பங்கள் சிதைந்து வருகின்றன.

ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரில் ஒருவரைத் தேவையில்லாமல் இழப்பதென்பது வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வாகும், இவர்களின் பெரும்பான்மையினரைக் குறித்து பெருநிறுவன ஊடகங்களில் எழுதப்படுவதும் இல்லை அல்லது குறிப்பிடப்படுவதும் இல்லை. சிலரைக் குறித்து குறிப்பிடப்பட்டாலும் அவை இந்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடி மீது மிகச் சிறிய பார்வையையே வழங்குகின்றன.

ஆகஸ்ட் இறுதியில், கலிபோர்னியாவின் யுகாய்பாவைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் டேவி மற்றும் டேனியல் மசியாஸ் ஒரே வாரத்தில் கோவிட்-19 இல் உயிரிழந்ததும் அனாதை ஆனார்கள். அவர்களின் மொத்தக் குடும்பமும் ஒரு விடுமுறையின் போது வைரஸால் பாதிக்கப்பட்டது, குழந்தைகள் குணமடைந்தனர் என்றாலும், அவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து சீராக இன்னும் அதிகமாக நோய்வாய்பட்டார்கள். அந்த குழந்தைகளில் மூத்தக் குழந்தைக்கு வெறும் 7 வயதே ஆகிறது, அவர்கள் இப்போது அவர்களின் தாத்தா-பாட்டியுடன் வாழ்கிறார்கள். டேனியல் மேசியாஸின் மைத்துனி டெர்ரி செரி அங்கே உள்ளூர் பத்திரிகைகளிடம் கூறுகையில், அவர்கள் 'அம்மா மற்றும் அப்பாவை எதிர்பார்த்து இரவில் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்' என்றார்.

ஆகஸ்ட் மாதம், மிசிசிப்பியில், புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை அனாதையாக தவிக்க விட்டு, 32 வயது தாய் ஒருவர் கோவிட்-19 ஆல் இறந்தார், அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் கணவர் அந்த வைரஸால் இறந்திருந்தார். அதற்கருகில் உள்ள அலபாமாவில், ஏழு குழந்தைகளின் தாய் ஒருவர், அவர் சகோதரியும் மைத்துனரும் அதே மாதத்தில் கோவிட்-19 ஆல் இறந்த பின்னர், அவர்கள் குழந்தைகளையும் ஏற்று இப்போது 12 குழந்தைகளை அவர் வளர்த்து வருகிறார். மிச்சிகனில், ஏழு குழந்தைகளின் தாய் சார்லெட்டா க்ரீன் செப்டம்பர் ஆரம்பத்தில் உயிரிழந்த போது அந்த குழந்தைகள் அனாதைகளாக விடப்பட்டனர், அவர்களின் தந்தை ட்ராய், அவரும் கோவிட்-19 க்கு ஆட்பட்டிருந்த பின்னர், அவர் மனைவி மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருப்பதை அறிந்து விரைவிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.

விரிவான பரிசோதனை மற்றும் நோயின் தடமறிதல் இல்லாத நிலையில், கோவிட்-19 ஐ கட்டுப்படுத்தப்படுவதற்கு முன்னரே பள்ளிகளை மீண்டும் திறந்து விடுவதால் ஏற்படும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக அளவிட எந்த வழியும் இல்லை. பள்ளிகளின் மறுதிறப்பும் அவற்றைச் சுற்றியுள்ள சமூகங்களில் வைரஸ் அதிகரிப்புகளுக்கும் இடையே பல உள்தொடர்புகள் இருப்பதை பல ஆய்வுகளும்அரசு தரவின் பகுப்பாய்வுகளும் எடுத்துக்காட்டுகின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி, கோவிட்-19 ஆல் இறந்த பெற்றோர்கள் மற்றும் கவனிப்பாளர்களில் கணிசமானவர்கள் பாதுகாப்பற்ற பள்ளிகளுக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளால் நோய்தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

உலகெங்கிலும் முதலாளித்துவ அரசியல்வாதிகள், எரிச்சலூட்டும் விதமாக, தொலைதூரக் கற்றலில் போராடிய குழந்தைகளின் மனநலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய அவர்கள் கவலையை வெளியிட்டு பள்ளிகளை மீண்டும் திறக்க அழுத்தமளிக்கின்றனர். யதார்த்தத்தில், பள்ளிகளின் மறுதிறப்பு எப்போதும் இலாபங்களை உருவாக்குவதற்காக பெற்றோர்களை வேலைக்குத் திரும்ப செய்ய வேண்டிய அவசியங்களால் உந்தப்பட்டிருந்தது. இதே அரசியல்வாதிகள் தொடர்ந்து கல்வி மற்றும் சமூக செலவினங்களைக் குறைத்து வந்ததைப் போலவே, இந்த பெருந்தொற்றுக்கு முன்னரே குழந்தைகளின் ஆரோக்கியம் மீது ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை, ஆகவே இன்று கோவிட்-19 இல் பெற்றோர்கள் மற்றும் கவனிப்பாளர்களைப் பறி கொடுத்துள்ள அந்த மில்லியன் கணக்கான குழந்தைகளின் மனநலனைக் குறித்தும் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

ஆளும் உயரடுக்குகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட பெருந்தொற்று கொள்கைகளுக்குச் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் பாரிய எதிர்ப்பு உள்ளதுடன், உலகம் முழுவதும் கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிக்க போராடுவதற்கான விருப்பமும் அதிகரித்து வருகிறது. இது பிரிட்டிஷ் பெற்றோர் லிசா டியஸால் தொடங்கப்பட்ட உலகளாவிய அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்தத்தில் சக்தி வாய்ந்த வெளிப்பாட்டைக் கண்டது. அக்டோபர் 1 உள்ளடங்கலாக அதற்கு முந்தைய வாரம் நெடுகிலும், அந்த நிகழ்வின் பிரதான ஹேஷ்டேக் — #SchoolStrike2021 — உலகெங்கிலும் டஜன் கணக்கான நாடுகளில் 26,000 க்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டது.

கோவிட்-19 இல் பெற்றோர்கள் மற்றும் கவனிப்பாளர்களைப் பறி கொடுத்துள்ள குழந்தைகள் பற்றிய ஆய்வுகள் குறித்து கேட்ட போது, டியஸ் உலக சோசலிச வலைத் தளத்திற்குப் பின்வருமாறு கூறினார், 'அரசாங்கங்களும், எங்களைத் தொடர்ந்து வேலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பவர்களும் மேலும் மேலும் மனநலனைக் குறித்து பேசுகிறார்கள். ஆனால் பெற்றோர்கள் உயிரிழக்கும் ஒரு கடுமையான ஆபத்து உள்ளது, இது ஓரிரண்டு மாதங்களுக்கு தொலைதூரக் கல்வியால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்பை விட அவர்களுக்கு அதிகமான பாதிப்பைக் கொண்டிருக்கும். அவர்களின் பெற்றோரை அவர்களே தற்செயலாக கொன்றுவிட்ட நினைவுகளோடு இப்போது இந்த குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும். பள்ளிகளைப் பாதுகாப்பாக திறக்க முடியாது என்றால், பள்ளிகளில் எந்த விதத்திலேனும் பரவல் இருக்கும் என்றால், அவை மூடப்பட வேண்டும்,” என்றார்.

பெற்றோர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் இழப்புக்குக் கூடுதலாக, குழந்தைகளே கூட கோவிட்-19 ஆல் கடுமையாக பாதிக்கப்படலாம் மற்றும் உயிரிழக்க நேரிடலாம். ஏழு குழந்தைகளில் ஒருவருக்கு நீண்டகால கோவிட் பாதிப்பு உருவாவதாகவும், அந்த நோய்தொற்று ஏற்பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் உயிர்பிழைக்க முடியாத அறிகுறிகள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த வாரம் அமெரிக்காவில் இந்த வைரஸால் 22 குழந்தைகள் உயிரிழந்தன, இது மொத்த குழந்தைகள் இறப்பை 520 க்குக் கொண்டு வந்தது. பிரேசிலில் கோவிட்-19 தான் குழந்தை மரணங்களுக்கான முக்கிய காரணமாக ஆகி உள்ளது, அங்கே 2021 இன் முதல் பாதியில் இந்த வைரஸால் 10-19 வயதுக்குட்பட்ட 1,518 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த கோடையில் இந்தோனேசியாவில் டெல்டா வகை வைரஸின் ஒரு மிகப்பெரிய அதிகரிப்பில், ஜூலையில் மட்டும் 700 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தன.

ஓர் ஒட்டுமொத்த தலைமுறையின் எதிர்காலமும் இப்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல. “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்' அல்லது அதன் வகையாக மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதே உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்தினால், கோவிட்-19 பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வேலையிடங்களிலும் தொடர்ந்து பரவும் என்பதோடு, மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள் என்பதோடு பெருந்திரளான குழந்தைகள் வாழ்வதற்கே அஞ்சுவார்கள்.

இந்த தேவையில்லாத துயரங்களுக்கும் மரணத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே விஞ்ஞான அடிப்படையிலான மற்றும் சாத்தியமான மூலோபாயம் ஒன்று உள்ளது, அது கோவிட்-19 ஐ உலகளவில் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டதாகும். உலகளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டங்கள், பாரியளவில் பரிசோதனை, நோய்தொற்றின் தடம் அறிதல், நோய்தொற்று ஏற்பட்ட நோயாளிகளைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்தல், முகக்கவசம் அணிய செய்தல் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் ஏனைய எல்லா பொது சுகாதார நடைமுறைகளையும் மேற்கொள்வது ஆகியவை அதில் உள்ளடங்கும். நாளாந்த நோயாளிகள் எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு வரும் வரையில், வைரஸ் பரவும் இடங்களும், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமில்லா வேலையிடங்களும் தற்காலிகமாக அடைக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த அடைப்பு காலத்தில் தொழிலாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் முழு வருமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கான விஞ்ஞானபூர்வ அடித்தளத்தையும் அவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதையும் விவரிப்பதே உலக சோசலிச வலைத் தளமும் சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கான சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் ஏற்பாடு செய்துள்ள, “இந்த பெருந்தொற்றுக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கலாம்: முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரு விஷயம்' என்ற அக்டோபர் 24 கூட்டத்தின் மைய ஒருமுனைப்பாக இருக்கும். புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு குழு இந்த பெருந்தொற்றின் தற்போதைய நிலையைத் திறனாய்வு செய்து உலகெங்கிலும் கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிப்பதற்கான போக்கை வரையும். உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த வேலைதிட்டத்துடன் போராட விரும்பும் அனைவரும் இன்றே பதிவு செய்யவும், உங்களின் சக தொழிலாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கவும், மற்றும் இந்த நிகழ்வைக் குறித்து சமூக ஊடகங்களில் பரந்தளவில் பகிர்ந்து கொள்ளவும்.

Loading