மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அக்டோபர் 1, வெள்ளிக்கிழமை அன்று, சர்வதேச அளவில் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து, உலகளவில் பல மில்லியன் குழந்தைகளை ஏற்கனவே கோவிட்-19 நோய்தொற்றுக்குள்ளாக்கிய கொலைகார பள்ளிகளை மீளத்திறக்கும் நடவடிக்கையை எதிர்த்து தொடர் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். பிரிட்டிஷ் பெற்றோர் லீசா டியஸ் இது குறித்து விடுத்த சக்திவாய்ந்த அழைப்புக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, ஜப்பான் மற்றும் உலகளவில் ஏராளமான நாடுகளிலிருந்து பரந்த ஆதரவு கிடைத்துள்ளது. தற்காலிக பூட்டுதல்கள் மற்றும் அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்தி கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிப்பதற்கான அழைப்பை தொழிலாளர்கள் அதிகரித்தளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள பெற்றோர்களும் சாமானிய தொழிலாளர்களும் வெள்ளிக்கிழமை ஒரு சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டத்தில் இறங்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளில் மற்றொரு திட்டமிடப்பட்ட வேறுபட்ட தன்மையிலான கூட்டம் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை, தோராயமாக 1.7 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆசிரியர்கள் சங்கமான அமெரிக்க ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு (AFT), Open Schools USA என்ற தீவிர வலதுசாரி பெற்றோர் குழுவுடன் இணைந்து வியாழனன்று ஒரு நகர மன்ற கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகளை எதிர்க்கும், பள்ளிகளில் முகக்கவச பயன்பாட்டிற்கான ஆணைகளையும் அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் இரத்து செய்வதை ஆதரிக்கும், மற்றும் புராண கால “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை” மேம்படுத்துவதற்காக அனைத்து குழந்தைகளுக்கும் தீவிரமாக கோவிட்-19 நோய்தொற்றை பரப்ப முனையும் போலி விஞ்ஞான ஆதரவாளர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு தளத்தை வழங்கும்.
தொடர்ச்சியாக கடந்த ஐந்து வாரங்களில் 200,000 க்கு அதிகமான குழந்தைகள் கோவிட்-19 பாதிப்புக்குள்ளானதாக உத்தியோகபூர்வமாக பதிவான அமெரிக்காவில் தற்போது நிலவும் குழந்தை நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்கள் குறித்து குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க கல்விச்சாலை (AAP) அதன் வாராந்திர அறிக்கையை வெளியிட்டதற்கு அடுத்த நாளில் இந்த நிகழ்ச்சிக்கு அறிவிக்கப்பட்டது. அந்த ஐந்து வாரங்கள் முழுவதுமாக, ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு பலியாகினர். பெரும்பான்மை நோய்தொற்றுகளும் இறப்புகளும், பைடென் நிர்வாகம், ஆசிரியர் சங்கங்கள், மற்றும் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் ஆகியவை கடந்த இரண்டு மாதங்களாக இடையறாது பள்ளிகளை முழுமையாக மீளத்திறந்து வைத்திருந்தமை, மிகவும் வரையறுக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை மட்டும் செயல்படுத்தியமை அல்லது எதையுமே செயல்படுத்தாமை ஆகியவற்றின் விளைவாகவே உருவாகின.
வியாழக்கிழமை நிகழ்ச்சியை AFT தலைவர் ராண்டி வைன்கார்டனும் Open Schools USA அமைப்பின் உறுப்பினர் எரிக் ஹார்ட்மனும் இணைந்து நடத்துவார்கள். நிகழ்ச்சியில் தொடக்கக் கருத்துக்களை ஒரேகான் மாநிலத்தின் போர்ட்லாண்டை சேர்ந்த ஒரு வலதுசாரி பெற்றோரும், Open Schools USA அமைப்பின் ஸ்தாபகருமான Michelle Walker வழங்குவார்.
“பள்ளிகளை திறந்து வைத்திருங்கள். முகக்கவச ஆணைகளை நீக்குங்கள். தடுப்பூசி ஆணைகளை நீக்குங்கள். எதிர்கால தடுப்பூசி ஆணைகளை தடுத்து நிறுத்துங்கள். நமது சமூகங்களையும் நாட்டையும் திறந்து வைத்திருங்கள்” என்று செப்டம்பர் 20 அன்று வாக்கர் ட்வீட் செய்திருந்தார். இவர் பொதுக் கல்வியை கடுமையாக எதிர்ப்பவர் என்பதுடன், அதற்காக நிதி ஒதுக்கப்படுவதை தடுக்க பெற்றோர்கள் தமது குழந்தைகளை அரசு பள்ளிகளில் இருந்து விலக்கிக் கொள்ள வாதிடுகிறார்.
நகர மன்றத்தில் உள்ள “விஞ்ஞானிகளில்” டாக்டர் ஜெய் பட்டாச்சார்யா மற்றும் டாக்டர் ட்ரேசி ஹேக் ஆகிய இருவரும் தொற்றுநோய் பற்றிய தவறான தகவல்களின் முன்னணி கல்வி வழங்குநர்களில் அடங்குவர்.
பட்டாச்சார்யா, “மரணத்தின் அறிக்கை” என உலக சோசலிச வலைத் தளம் வகைப்படுத்தும் Great Barrington பிரகடனத்தின் ஆசிரியர்களில் ஒருவராக அறியப்படுகிறார். “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மூலோபாயத்தின் ஆதரவாளர்களின் மைய ஆவணம், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சுற்றி “மனிதக் கவசம்” என்றழைக்கப்படுவதை உருவாக்க இளைஞர்கள் மத்தியில் நோய்தொற்று விரைந்து பரவ வேண்டும் என வாதிடுகிறது. நடைமுறையில், இது ஒட்டுமொத்த சமுதாயத்தில் பாரியளவில் நோய்தொற்று பரவுவதற்கு வழிவகுப்பதுடன், உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை அகால மரணமடையச் செய்தது.
பட்டாச்சார்யா ஸ்டன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வலதுசாரி ஹூவர் நிறுவனத்தை உருவாக்கியவராவார், மேலும் புளோரிடாவின் பாசிச ஆளுநர் ரான் டிசாண்டிஸால் இவர் ஊக்குவிக்கப்படுகிறார். ஆகஸ்ட் 2020 இல், அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட வேண்டும் அல்லது நிதியை இழக்க வேண்டும் என்ற டிசாண்டிஸின் உத்தரவு மீதான விசாரணையில் பட்டாச்சார்யா புளோரிடாவின் சிறந்த சாட்சியாளராக சேவையாற்றினார், அப்போது பட்டாச்சார்யா தனது கொள்கைகளுக்கு போலி விஞ்ஞான நியாயத்தை வழங்கினார்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை பகிரங்கமாக எதிர்ப்பதில் ஹேக் பிரபலமானவர். சமீபத்திய பிரசுரிக்கப்படாத ஆய்வில், தடுப்பூசி போடப்பட்ட இளைஞர்கள் கோவிட்-19 பாதிப்பை விட தடுப்பூசி பாதிப்பினால் தான் பெரும்பாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என இவர் தவறாக கூறியுள்ளார். இந்த ஆய்வு சக மதிப்பாய்வின் கீழ் மூன்று வெவ்வேறு பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்டது, ஆனால் இதன் தவறான கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டதுடன், Open Schools USA போன்ற தீவிர வலதுசாரி பெற்றோர் குழுக்களாலும், அத்துடன் ஜியோர்ஜியா காங்கிரஸ் பெண் மார்ஜோரி டெய்லர் கிரீன் போன்ற பாசிச அரசியல்வாதிகளாலும் இது ஊக்குவிக்கப்பட்டது.
வைன்கார்டனும் AFT உம் இந்த தீவிர வலதுசாரி சக்திகளுடன் பகிரங்கமாக இணைந்துள்ளமை பள்ளிகளில் “தணிப்பு நடவடிக்கைகள்” பற்றிய அனைத்து பேச்சுக்களும் எப்போதும் ஆளும் உயரடுக்கினரின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளை மூடிமறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டனவே தவிர வேறு எதற்காகவும் அல்ல என்பதை நிரூபிக்கிறது என்பதே உண்மை.
இந்த நிகழ்வு, தொழிற்சங்கங்கள் அதன் உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதோடு அவர்களுக்கு முற்றிலும் விரோதமாக உள்ளன என்ற யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த பள்ளி ஆண்டில் 1,000 க்கு அதிகமான கல்வியாளர்களும் 250 க்கு அதிகமான குழந்தைகளும் கோவிட்-19 ஆல் இறந்து போனதன் பின்னர், பெரும்பாலான குழந்தைகள் தடுப்பூசி போடுவதற்கு தகுதி பெறுவதற்கு முன்னதாகவே, பள்ளிகளை முழுமையாக மீளத்திறக்க வைன்கார்டன் பெரிதும் குரல் கொடுத்தார்.
வியாழக்கிழமை நிகழ்வை அறிவிக்கும் AFT இன் ட்விட்டர் பதிவு பெற்றோர்கள், சாமானிய கல்வியாளர்கள், அத்துடன் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மத்தியில் உண்மையான கோபத்தை தூண்டியது.
கருத்து தெரிவித்தவர்களில் சிலர் வைன்கார்டன் தீவிர வலதுசாரி சக்திகளின் அறியாத கருவி என்றும், இது வெறுமனே தொழிற்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிந்தனையற்ற நிகழ்வு என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். உண்மையில், தொழிற்சங்கம் மற்றும் பாசிசக் கூறுகளுக்கு இடையிலான கூட்டணி தற்செயலானது அல்ல. நிகழ்வின் நோக்கம், மிகவும் பின்தங்கிய மற்றும் விஞ்ஞான எதிர்ப்பு விளிம்பு அடுக்குகளை முன்னோக்கி கொண்டு வருவது, அவர்களுக்கு பார்வையாளர்களை வழங்குவது, மேலும் ஜனநாயகக் கட்சி தலைமையிலான பள்ளி மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள வரையறுக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை இரத்து செய்வதற்கான நியாயத்தை வழங்குவது போன்றவையாகும்.
புதன்கிழமை காலை, வைன்கார்டன் ஒரு தற்காப்பு ட்விட்டர் இடுகையை பதிவிட்டார், அதில் அவர் பாசிஸ்டுகளை AFT ஊக்குவிப்பதை நியாயப்படுத்த முயன்றார். பள்ளிகளில் “தடுப்பூசிக்கு ஆதரவாகவும், முகக்கவசத்திற்கு ஆதரவாகவும்,” பேசப்படும் அதேவேளை, “நான் இப்போது Open Schools USA குழுவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், கலந்துரையாடுகிறேன், அவர்களின் கவலைகளைக் கேட்கிறேன். அதன் பின்னர் தான் ஒரு நகர மன்ற கூட்டத்தில் ஒன்றுகூட நாங்கள் தீர்மானித்தோம்” என்று குறிப்பிட்டார். மேலும், “இன்னும் பேச வேண்டும் என்றே நான் நினைக்கிறேன், நேரடி கற்றலுக்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுவான அடிப்படையைப் பெறுவது மிக முக்கியம்” என்றும் அவர் கூறினார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாமானிய AFT உறுப்பினர்களுக்கு தெரியாமல், வைன்கார்டன் தீவிர வலதுசாரி பெற்றோர் குழுவுடன் இரகசிய கூட்டங்களை நடத்தி, பள்ளிகளை முழுமையாக மீளத்திறப்பதற்கான அவர்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய பொதுவான அடிப்படையைக் கண்டறிய முயன்றார். பாசிஸ்டுகளுடன் “பேச்சுவார்த்தைகள்” நடத்திக் கொண்டிருக்கும் அதேவேளை, வைன்கார்டனும் AFT அதிகாரத்துவமும், தொழிற்சங்கத்திற்குள் உள்ள அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்கி, சாமானிய ஆசிரியர்களுடனான சந்திப்புக்களையும் விவாதங்களையும் நிறுத்திவிட்டனர்.
தீவிர வலதுசாரிக் குழு தவிர, பைடென் நிர்வாகம் மற்றும் அரசு எந்திரத்துடனும் கூட வைன்கார்டன் ஆழமான தொடர்பு வைத்துள்ளார். ஏறத்தாழ 500,000 டாலர் உத்தியோகபூர்வ சம்பளத்துடன், அவர் ஜனநாயக தேசியக் குழுவில் (Democratic National Committee) அமர்த்திருப்பதுடன், அரசு மற்றும் நிதிய தன்னலக்குழுவுடன் தனிப்பட்ட அடையாளம் கொண்டுள்ளார். பெருநிறுவன நலன்களை செயல்படுத்துவது, எதிர்ப்பின் எந்தவித வெளிப்பாட்டையும் நசுக்குவது போன்ற வகையில் இன்று அவர் அனைத்து தொழிற்சங்கங்களின் பெருநிறுவன சார்பு தன்மையை கொண்டுள்ளார்.
வெள்ளை மாளிகை, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), மற்றும் ஆசிரியர்கள் இடையே எழுந்த பெரும் எதிர்ப்பை எதிர்கொள்கையில் பைடென் நிர்வாகத்தின் பள்ளிகளை மீளத்திறக்கும் பிரச்சாரத்திற்கு ஒத்துழைத்த அவரது தொழிற்சங்க துணை அதிகாரிகள் ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் 15 மணிநேரங்களுக்கு கூடுதலாக தொலைபேசியில் பேசுவதாக நியூ யோர்க் டைம்ஸூக்கு அவர் பிப்ரவரியில் தெரிவித்தார். மே 13 உரையில், இந்த இலையுதிர்காலத்தில் பள்ளிகளை முழுமையாகத் திறக்க வைன்கார்டன் கோரினார், மேலும் “பெற்றோர்கள் தமது குழந்தைகளின் கல்விக்காக மட்டுமல்லாமல், அவர்கள் வேலைக்கு செல்ல முடிவதற்காகவும் பள்ளிகளை நம்பியுள்ளனர்” என்று கூறி, இந்த பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள பொருளாதார நோக்கங்களை அவர் தெளிவுபடுத்தினார்.
வைன்கார்டன், நலிவுற்ற தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாகவும் அவற்றை எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கியுள்ள அதிகரித்தளவில் போர்க்குணமிக்க சாமானிய கல்வியாளர்களுக்கு எதிராக பாசிஸ்டுகளை தனது கூட்டாளிகளாக கருதுகிறார்.
அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்தம் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர போராடும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தின் ஆரம்ப வெளிப்பாடாகும். உலகெங்கிலுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த சமூக நலன்களுக்காக பாடுபடும் பொருட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கியுள்ளனர். இந்த குழுக்கள் அதிகரித்தளவில் கோவிட்-19 ஐ ஒழிக்க ஒரு வியூகத்தை முன்னெடுத்து வருகிறது, இதற்கு அனைத்து பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுதல், உலகளவில் ஒருங்கிணைந்த பாரிய தடுப்பூசி திட்டம், உலகளாவிய பரிசோதனை, தொடர்பு தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், மற்றும் வைரஸ் பரவல் சங்கிலியைத் துண்டிக்க ஏனைய அனைத்து பொது நடவடிக்கைகளையும் செயல்படுத்துதல் ஆகியவை தேவைப்படுகிறது.
தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு முன்பாக பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் முன்கூட்டியே மீண்டும் திறக்க வழிவகுத்த அனைத்து அரசியல்வாதிகளும், தொழிற்சங்க அதிகாரிகளும் மற்றும் ஊடகங்களால் பேசப்படும் தலைவர்களும் அவர்கள் பொறுப்பாளியாக்கப்படவுள்ள ஒரு பாரிய சமூக குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். கோவிட்-19 ஐ ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் பற்றிய விஞ்ஞானபூர்வ புரிதலுடன் ஆயுதமேந்திய சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய அணிதிரட்டலால் மட்டுமே உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் தேவையற்ற துன்பத்திற்கும் மரணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை தொற்றுநோயின் முழு அனுபவமும் தெளிவுபடுத்தியுள்ளது.