மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பழைமைவாத கட்சி பிரதமர் போரிஸ் ஜோன்சனும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்தும், இலையுதிர் காலத்தில் இருந்து குளிர்காலத்தை நோக்கி நெருங்குகையில் கோவிட்-19 நோய்தொற்று அதிகரித்தளவில் பரவி வருவதை தடுக்க அவர்கள் எதையும் செய்யப் போவதில்லை என்பதை நேற்று உறுதிப்படுத்தினர்.
இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் 2021-22 வரை நாட்டை வழிநடத்துவதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான அணுகுமுறை” என்று அரசாங்கம் விவரிப்பதான “திட்டம் A” ஐ உறுதிப்படுத்த டவுனிங் வீதி செய்தியாளர் கூட்டத்திற்கு ஜோன்சன் தலைமை தாங்கினார். அதற்கு முன்னதாக, இந்த திட்டம் “கடுமையான பொருளாதார மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் தேவையின்றி” செயல்படுத்தப்படும் என்று ஜாவித் கூறினார்.
திட்டம் A, 32 பக்க ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளது. இது பிரத்தியேகமாக கூடுதல் தடுப்பூசி வழங்கலை பெரும்பாலும் அடிப்படையாக கொண்டுள்ளது, அதேவேளை ஏனைய தணிப்பு நடவடிக்கைகளுக்கு வெளிப்படையான அனுமதி எதையும் வழங்கவில்லை.
“தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் மாற்றும் சிகிச்சை போன்ற மருந்து தலையீடுகள் மூலம் நமது பாதுகாப்பை உருவாக்குவது” என்பது தலைமை மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின்படி, 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட உடனடி ஊக்கமளிப்பு திட்டத்தை வழங்குவதையும், 12 முதல் 15 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதையும் மையமாகக் கொண்டது.
இது தவிர, “பரிசோதித்தல், தொடர்பு தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல்” நடவடிக்கைகள், தேசிய சுகாதார சேவையை [NHS] “ஆதரித்தல்” மற்றும் “அழுத்தங்களை சமாளித்து சேவைகளை மீட்டெடுப்பதன்” மூலம் சமூகத்தை பராமரித்தல், “தங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று மக்களுக்கு அறிவுறுத்துதல்”, மேலும் “உலகளவில் தடுப்பூசி வழங்கலுக்கு உதவுதல் மற்றும் எல்லையில் அபாயங்களை நிர்வகித்தல்” ஆகியவை திட்டமிடப்பட்ட மேம்போக்கான கடமைகளாக அங்கு உள்ளன.
“போரிஸ் ஜோன்சன் கோவிட் விதிமுறைகளை கிழித்தெறிந்ததால் இனிமேல் தேசிய பூட்டுதல்கள் இல்லை” என்ற தலைப்பில் டெலிகிராஃபில் வெளியான திங்கட்கிழமை கட்டுரையில் அரசாங்க உத்தியின் உண்மையான முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்பட்டது.
“போரிஸ் ஜோன்சன் கோவிட் விதிமுறைகளின் பழைய அமைப்பை கிழித்தெறிந்துவிட்டு குளிர்காலத்திற்காக புதிய அணுகுமுறையை பின்பற்றும் நிலையில், மற்றொரு தேசிய பூட்டுதலுக்கு எதிராக அவர் “முற்றிலும் மவுனம்” சாதிப்பார் என்பதை இந்த வாரம் தெளிவுபடுத்துவார். மேலும் ‘இது ஒரு புதிய இயல்பு. நாம் கோவிட் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற வாதத்தை ஜோன்சன் வழங்குவார் என்று டெலிகிராஃபுக்கு ஒரு மூத்த அரசாங்க ஆதாரம் தெரிவித்தது.” என்று செய்தியிதழ்கள் மகிழ்ந்தன.
வைரஸ் விதிமுறைகளை கைவிடுவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருப்பதால் மட்டுமே இத்தகைய அப்பட்டமான அறிவிப்பை வெளியிடுவதை அரசாங்கம் தவிர்க்கிறது. தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்கள் என அனைத்தும் கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்ததை விட அதிகமாகவே தற்போது உள்ளன.
அரசாங்கத்தின் திட்டம் வெளியிடப்பட்ட நாளில் அரசாங்கத்திற்கு சொந்தமான SAGE ஆலோசனைக் குழுவின் மாதிரியாளர்கள், விரைவான தலையீடு இல்லாத நிலையில், தற்போது நாளொன்றுக்கு 1,000 பேர் கோவிட் பாதிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதுடன் ஒப்பிடுகையில் அடுத்த மாதத்தில் இங்கிலாந்தில் மட்டும் நாளொன்றுக்கு 2,000 முதல் 7,000 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகலாம் என்று எச்சரித்துள்ளனர். இருந்தாலும் கூட, “மக்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்கமளிப்பது… மிகப் பரவலாக பரிசோதனைகள் செய்வது, நோய்தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்துவது, மற்றும் இன்னும் அதிகமாக முகக்கவசம் பயன்படுத்துவது என மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட பரிந்துரைக்கும் வகையில் தெளிவாக செய்திகள் அனுப்புவது” உட்பட “மிகவும் மேம்போக்கான நடவடிக்கைகளை,” எடுக்க மட்டுமே அது அறிவுறுத்தியது.
இது, தேசிய சுகாதார அமைப்புமுறை (NHS) நிலைகுலைந்து போகுமானால் செயல்படுத்தவுள்ள சில குறைந்தபட்ச நடவடிக்கைகளை உள்ளடக்கியதான அரசாங்கத்தின் திட்டம் B ஐ விரைந்து செயல்படுத்துவதற்கான வெறும் முறையீடாகும். தற்செயல் திட்டமாக முன்னெடுக்கப்படுவது எந்த வகையிலும் ஒரு திட்டமாகாது. திட்டம் B இன் முழுப்பகுதியும் நான்கு குறுகிய பத்திகளை உள்ளடக்கியது, முதல் மூன்று பத்திகள், “அபாயத்தின் அளவு அதிகரித்துள்ளது பற்றியும், மேலும் இச்சூழ்நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் மக்களுக்கு தெளிவாகவும் விரைந்தும்” தெரியப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை உள்ளடக்கிய “நடவடிக்கைகள்” பற்றிய விபரங்களை தெரிவிப்பதுடன், “சில அமைப்புகளில் கட்டாய தடுப்பூசி மட்டுமே கோவிட்-நிலை சான்றுக்கு ஏற்றதாக இருக்கும்,” மேலும் “சில அமைப்புகளில் சட்டபூர்வ கட்டாய முகக்கவச பயன்பாடு மட்டுமே கோவிட்-நிலை சான்றுக்கு ஏற்றதாக இருக்கும்” என்பதை அறிமுகப்படுத்துகிறது. உட்புற மற்றும் வெளிப்புற பாரிய மக்கள் கூட்டங்களுக்கு இன்னும் அனுமதிக்கப்படும், கூட்டங்களில் கலந்து கொள்ள அவற்றை நடத்தும் வணிகங்களுக்கு கட்டாய தடுப்பூசி அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
திட்டம் B இன் இறுதி நிபந்தனை என்னவென்றால், “ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, முடியுமானால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய மக்களை மீண்டும் ஒருமுறை கேட்பதற்கு அரசாங்கம் பரிசீலிக்கும்,” அதேவேளை “இது அதிக இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதுடன், B திட்டத்தின் ஏனைய தலையீடுகளை விட பொருளாதாரத்திற்கும் சில வணிகங்களுக்கும் பெரியளவில் உடனடி விலை கொடுப்புக்களை விளைவிக்கும் என்பதால், அவ்வப்போது பெறப்படும் தரவின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று வலியுறுத்துகிறது.
ஜோன்சன், திட்டம் B “பாதுகாப்பு பெட்டகத்திற்குள் பல்வேறு கட்டுப்பாடுகளை” கொண்டிருப்பதாக விவரித்தார், அதேவேளை பூட்டுதல் விதிப்பதைத் தவிர்ப்பதற்கும் பெருநிறுவன இலாபங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும் என அவை கடைசி முயற்சியாக மட்டுமே பிரயோகிக்கப்படும் என்று வலியுறுத்துகிறார். மேலும், “நீங்கள் அவற்றை ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை, அதற்கு மாறாக, அவற்றை நீங்கள் படிப்படியாக செயல்படுத்த விரும்ப வேண்டும்,” என்றும் கூறினார்.
இலையுதிர்/குளிர்கால திட்டத்தின் புள்ளி 76, “தடுப்பூசி மூலமாகவும், நோய்தொற்று பரவுவதை குறைப்பது (அல்லது அதிகரிப்பது), வரைபடத்தில் தொற்றுநோய் வளைவை பெரிதும் வளைப்பது, மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) மீதான அழுத்தத்தை குறைப்பது ஆகியவற்றின் மீது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொள்கை மற்றும் நடத்தையில் ஒப்பீட்டளவில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாகவும் கோவிட்-19 க்கு எதிராக வயது வந்தோருக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தின் வெற்றிக்கு நன்றி, கடந்த காலத்தில் விதிக்கப்பட்ட பூட்டுதல்கள், மற்றும் பொருளாதார மற்றும் சமூக கட்டுப்பாடுகளை விட குறைந்த சேதத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தி இனிமேல் வரும் நோய்தொற்று எழுச்சியை கையாளும் சாத்தியத்தை இது வழங்கும்” என்று தெரிவிக்கிறது.
அரசாங்கத்தின் திட்டம் A மற்றும் திட்டம் B இரண்டுமே கோவிட்-19 இப்போது ஒரு தொற்றுநோய் என்பதுடன் அதை முற்றிலும் ஒழிக்க முடியாது என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இது தடுப்பூசி மற்றும் நோய்தொற்று ஆகியவற்றின் ஊடாக “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை செயல்படுத்தப்படும் என்ற கூற்றை இனிமேல் அடிப்படையாகக் கொண்டிராது, மாறாக “வைரஸூடன் வாழ வேண்டும்” என்ற அப்பட்டமான வலியுறுத்தல் பல வருடங்களுக்கு ஏராளமான மரணங்களை விளைவிக்கும் என்பதாகும்.
“பிரிட்டன் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்ற டெலிகிராஃப் இதழின் திங்கட்கிழமை தலையங்கம், “கோவிட் தற்போது ஒரு தொற்றுநோயாகும், இதன் பொருள், பலருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் அவர்களும் உட்பட, மக்கள் இன்னும் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன், சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவிற்கு கடுமையாக பாதிக்கப்படுவார்கள் மேலும் இறந்து கூட போவார்கள் என்பதாகும்” என அறிவிக்கிறது.
விஞ்ஞான ஆசிரியர் டோம் விப்பிளும் (Tom Whipple) விஞ்ஞான நிருபர் காயா பர்கெஸ்ஸூம் (Kaya Burgess) திங்கட்கிழமை டைம்ஸ் பத்தியில், “கடந்த ஆண்டு இதே நேரத்தில் நாளாந்தம் 4,000 நோய்தொற்றுக்கள் பரவியதுடன், மருத்துவமனையில் 1,000 கோவிட் நோயாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். தற்போது நாளாந்தம் 30,000 நோய்தொற்றுக்கள் பதிவாகி வருவதுடன், 8,000 நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாம் மிகவுயர்ந்த அடிப்படையில் இலையுதிர்கால வீழ்ச்சிக்குள் நுழைகிறோம்” என குறிப்பிட்டனர்.
“தேசத்தை சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை பாதையில் நாம் நடத்தினோமானால் அனைத்தும் சரியாகிவிடும்” என முன்பு பரவலாக நம்பப்பட்டது. ஆனால், “அந்த பாதை குறைந்த தெளிவுள்ளது மற்றும் எப்போது வேண்டுமானாலும் பின்வாங்க வேண்டியது என்பதை எடுத்துக்காட்டிய டெல்டா மாறுபாட்டிற்கு நன்றி. காலப்போக்கில் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது, நோய்தொற்று ஊக்கிகள் மற்றும் நோய்தொற்றுக்களின் ஒவ்வொரு அலையும் அதை அதிகரிக்கச் செய்கிறது. எனவே நமது உண்மையான பாதையின் முடிவுப் புள்ளியான நோய்தொற்று சமநிலையை நாடு நெருங்குகிறது.”
“நோய்தொற்று சமநிலை” என்பது “ஏற்றுக்கொள்ளக்கூடிய” மட்டத்தில் நோய்வாய்ப்படுதலும் மரணங்களும் இருக்கலாம் என்பதாகும். “புதிய பூட்டுதல்களை விதிக்க வாரத்திற்கு சுமார் 1,000 வீதம் இறப்புக்கள் நிகழும் அளவிற்கு “கோவிட்-19 இறப்புக்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை” இருப்பது முன்னுரிமையளிக்கத்தக்கது என்று அறிவிக்கின்ற “செலவு மிச்சப்படுத்தும் பகுப்பாய்வை” (Cost-benefit analysis) அரசாங்கம் ஏற்கனவே இரகசியமாக நடத்தியுள்ளதாக i செய்தியிதழ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது. அப்போது கூட, இது இன்னும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக “விவாதிக்க” மட்டுமே தூண்டும்.
டைம்ஸ், கோவிட் தொற்றுநோயை ஒரு சித்திரவதை செய்யப்பட்ட உருவமாக “இருண்ட குகைக்குள் மணியடிப்பதுடன்” ஒப்பிட்டது. முதல் எதிரொலி சத்தமாகவும் தெளிவாகவும் திரும்புகிறது. எனவே இரண்டாம் முறை பலர் அதைச் செய்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்த ஒவ்வொரு எதிரொலியும் குறைந்து சிதைந்து போகிறது, வேறுபாடுகளை தெளிவாக உணரும் வரை, அது ஒரு மங்கலான நினைவூட்டலாகவே தெரியும். கோவிட் எனும் சவாலாகவுள்ள ஓசை இன்று மிகவும் அமைதியாக உள்ளது. ஒரு நாள் அது நிறுத்தப்படும்.” என்று அதன் வதந்திகளை முடித்துக் கொண்டது.
இது விஞ்ஞானத்திற்கு எதிரான முட்டாள்தனமாகும். காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க முடிவது போல, வைரஸ் தொடர்ந்து மிகுந்த தீங்கற்றதாக மாறும் எனக் கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை. தொற்றுநோயை கட்டுப்படுத்தவும் முடிவுக்குக் கொண்டுவரவும் தவறியமை மேலும் பிறழ்வுகள் தோன்றி இன்னும் கொடிய மாறுபாடுகள் உருவாவதற்கு வழிவகுக்கக்கூடும். இதை தடுப்பது என்பது, ஜோன்சனின் குற்றவியல் அரசாங்கம் மற்றும் அதன் உண்மையான கூட்டாளிகளான தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கு எதிராக ஒவ்வொரு பணியிடத்திலும், சுற்றுப்புறத்திலும் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கி தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும். இது, முக்கிய பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் தேவையான அனைத்து செலவுகளுக்கும் பொறுப்பேற்க வைத்து, அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளையும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் மூடுவது உள்ளிட்ட, வைரஸை இறுதியாக முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரு நனவான திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.