முன்னோக்கு

ட்ரம்ப் கும்பலின் பாசிச வன்முறை விவரங்கள் பற்றி ஜனவரி 6 ஆம் தேதி விசாரணை நடக்கும்போது, குடியரசுக் கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களைப் பாதுகாக்க அணிதிரண்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனவரி 6 ஆட்சி சதி பற்றி விசாரிப்பதற்கான காங்கிரஸ் தேர்வுக்குழுவின் ஆரம்ப விசாரணையில், அமெரிக்க தலைநகரை கைப்பற்ற டொனால்ட் ட்ரம்பால் தூண்டிவிடப்பட்ட ஆயுதமேந்திய பாசிச கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போராடிய நான்கு போலீஸ் அதிகாரிகள் கொலைகார்களின் வன்முறையான நோக்கம் குறித்து தெளிவான சாட்சியம் அளித்தனர்.

தாக்குதலின் ஒளிப்பதிவுகளுடன், புதிதாக வெளியிடப்பட்ட உடலில் பொருத்தப்பட்ட கமெராக்களின் பதிவுகள், இரண்டு அமெரிக்க தலைநகர போலீஸ் அதிகாரிகளான அக்விலினோ கோனெல் மற்றும் ஹாரி டன் மற்றும் இரண்டு வாஷிங்டன் டிசி மெட்ரோ காவல்துறை அதிகாரிகளான மைக்கேல் ஃபனோன் மற்றும் டானியல் ஹோட்ஜஸ் ஆகியோர் அங்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதிகளவில் இருந்ததையும், கூட்டத்தில் இராணுவ உடையணிந்த கிளர்ச்சியாளர்களின் உறுப்பினர்களும் இருந்ததை சுட்டிக்காட்டினர்.

வாஷிங்டனில் உள்ள காங்கிரஸ் கட்டிடத்தின் மீது ஜனவரி 6 தாக்குதல் குறித்து காங்கிரஸ் தேர்வுக் குழு விசாரணையின் பின்னர், 2021, ஜூலை 27, செவ்வாயன்று, பிரதிநிதி லிஸ் செனி, R-Wyo யு.எஸ். தலைநகர போலீஸ் சார்ஜென்ட் அக்விலினோ கோனெல் உடன் பேசுகிறார் (Jim Bourg/AP)

ஜனாதிபதி போட்டியில் ஜோ பைடெனின் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்துவதைத் தடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளைக் கொல்ல கிளர்ச்சியாளர்கள் முனைந்தார்கள் என்பதில் 'சந்தேகமில்லை' என்று அதிகாரி ஹோட்ஜஸ் கூறினார். அவரும் அவரது சக சாட்சிகளும் தாக்குதல்காரர்களால் பலத்த காயமடைந்தனர். அவர்கள் பொலிஸை விட அதிகமாக இருந்தனர். அவர்களின் கட்டளை மேலதிகாரிகளால் 'மரணத்தை ஏற்படுத்தாத' பாரியளவிலான கூட்டங்களை கட்டுப்படுத்தும் வழமையான ஆயுதங்களை தர மறுத்தனர் என்றும் தெரிவித்தனர்.

விசாரணைக்குழு என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, அதிகாரி ஃபனோன், “இந்த நிகழ்வுகள் பலரின் கண்ணுக்கு முன்னால் நிகழ்ந்தன. வன்முறைமிக்க வார்த்தையாடல்கள். 'திருட்டை நிறுத்து' என்ற தலைப்பில் ஒரு பேரணி போன்றவற்றை காணக்கூடியதாக இருந்தது. தேர்தலில் நீங்கள் வாக்குகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜனவரி 6 அன்று நடந்த விபத்து என்று நான் நம்பவில்லை. அந்த பேரணியின் நேரம், இடம் மற்றும் சூழ்நிலை எங்கள் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை நோக்கிய திசையில் இருந்தது” என்றார்.

அமெரிக்காவின் முன்னோடியில்லாத அரசியல் நெருக்கடியால் இந்த விசாரணை ஆதிக்கம் செலுத்தியது. இந்த நெருக்கடி தலைவராக விரும்பிய டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட தலைமையின் கீழ், தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்களின் துணை இராணுவப் பிரிவைக் கொண்டு குடியரசுக் கட்சியை ஒரு பாசிசக் கட்சியாக மாற்றியதன் மூலம் அடையாளப்படுத்தப்பட்டது.

தேசிய மற்றும் மாநில மட்டங்களில் உள்ள குடியரசுக் கட்சியினர் ட்ரம்பிற்கு பின்னால் அணிவகுத்து, அவரது “திருடப்பட்ட தேர்தல்” பொய்யை ஊக்குவித்து, ஜனவரி 6 சதித்திட்டத்தின் எந்தவொரு விசாரணையையும் எதிர்த்தனர். ஒவ்வொரு கட்டத்திலும், பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிரயோசனமற்ற பிரதிபலிப்பால் அவர்கள் தைரியமாக இருந்தனர். “ஒற்றுமை” மற்றும் “இரு கட்சி” என்ற பெயரில், ஜனநாயகக் கட்சியினர் அரசியலமைப்பை தூக்கியெறிந்து ஒரு பாசிச சர்வாதிகாரத்தை திணிப்பதற்கான சதித்திட்டத்தின் அளவை மூடிமறைக்க முயன்று ட்ரம்பின் குடியரசுக் கட்சி கூட்டாளிகளுக்கு நியாயபூர்வமான தன்மையை வழங்க முற்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் சிறுபான்மைபிரிவின் தலைவர் கெவின் மெக்கார்த்தி, ட்ரம்பின் மிக மோசமான பாதுகாவலர்களான ஓஹியோவின் ஜிம் ஜோர்டான் மற்றும் இந்தியானாவின் ஜிம் பேங்க்ஸ் ஆகிய இருவரையும் காங்கரஸின் சபாநாயகர் நான்சி பெலோசி நிராகரித்ததை அடுத்து, அவரது குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து குடியரசுக் கட்சியினரை ட்ரம்பின் அறிவுறுத்தலின் பேரில் வாபஸ் பெற்றார்.

குழுவில் உள்ள இரண்டு குடியரசுக் கட்சியினரான வயோமிங்கின் லிஸ் செனி மற்றும் இல்லிநோய்ஸின் ஆடம் கின்சிங்கர் ஆகியோர் ட்ரம்பிற்கும் 'திருடப்பட்ட தேர்தல்' மற்றும் “பெரிய பொய்' ஆகியவற்றிற்கான வாயளவிலான விமர்சகர்களாவர். அவர்கள் விதிவிலக்காக பெலோசியால் நியமிக்கப்பட்டனர். இது ட்ரம்ப்புக்கு பின்னால் குடியரசுக் கட்சியின் பாசிசத்திற்கான மாற்றத்தை நிரூபிக்கின்றது. இந்த இருவரும் வலதுசாரி இராணுவ பிரதிநிதிகளும் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கை மற்றும் பெருநிறுவன நலன்களின் கடுமையான ஆதரவாளர்களாவர்.

குழு விசாரணையைத் தொடங்குவதற்கு சற்று முன்பு மெக்கார்த்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அவர் குழுவிற்கு பெயரிட்ட ஐந்து குடியரசுக் கட்சியினருடன் மற்றும் பிற காங்கிரஸ் குடியரசுக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து, விசாரணையை ஒரு பாகுபாடான சூனிய வேட்டை என்று கண்டனம் செய்தார். மேலும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தலைநகரைப் பாதுகாக்க நான்சி பெலோசி தவறியதாகக் கூறப்படுவது பற்றி விசாரணைக்கு அவர் கோரினார். பெலோசி மற்றும் அப்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உட்பட பிற அதிகாரிகளைக் கடத்தி/அல்லது கொல்ல ட்ரம்ப் அவர்களை அழைத்திருந்தார் என்ற உண்மையை அவர் புறக்கணித்தார்.

பிற்பகலில், ஜோர்ஜியாவின் மார்ஜோரி டெய்லர் கிரீன் தலைமையில், காங்கிரஸ் குடியரசுக் கட்சியினரின் வெளிப்படையான பாசிசப் பிரிவு, ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 'அரசியல் கைதிகள்' என்று அழைக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக நீதித்துறைக்கு வெளியே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. காங்கிரஸ் மீது ஜனவரி 6 ம் தேதி நடந்த தாக்குதலில் அவருடன் அரிசோனாவின் பௌல் கோசர், புளோரிடாவின் மாட் கெய்ட்ஸ், டெக்சாஸின் லூயி கோமெர்ட் மற்றும் வேர்ஜீனியாவின் பாப் குட் ஆகியோர் இணைந்தனர். அவர்களுக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் பேச்சாளர்களை நோக்கி நகர்ந்தபோது இந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுகளை அடுத்து ட்ரம்ப்பின் ஒரு தொடர் பாசிசக் கண்டனங்கள் தொடர்ந்தன. இதில் முன்னாள் ஜனாதிபதி கிளர்ச்சியை ஆதரித்தார் மற்றும் கடவுள் இல்லாத, 'கம்யூனிஸ்ட்' ஜனநாயகக் கட்சியால் அமெரிக்காவை கைப்பற்றுவதை நிறுத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். கடந்த வாரம் அவர் ஜனவரி 6 கலவரக்காரர்களை 'அன்பான கூட்டம்' என்று அழைத்ததாகவும் 'நான் விரும்பியதை அவர்கள் விரும்பினர்' என்றும் கூறியதாக குறிப்பிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை விசாரணையில் ஜனநாயகக் கட்சியினரின் செயற்பாடு, ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு அவர்களின் முதுகெலும்பு இல்லாத மற்றும் இரு முகம் கொண்ட பதிலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மூன்றரை மணி நேர விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சியினர் யாரும் ட்ரம்பின் பெயரை உச்சரிக்கவில்லை. குடியரசுக் கட்சியினர் அனைவரும் அவருக்கு பின்னால் ஒன்றாக அணிதிரண்டு நிற்பது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் சென்னியை 'இருகட்சி' என்பதற்கான ஆதாரமாகக் காட்டினர்.

சென்னி தான், தனது தொடக்க அறிக்கையில், ட்ரம்பின் பங்கை முழுமையாக விசாரிக்க கோரினார். 'வெள்ளை மாளிகையில் அந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், ஒவ்வொரு உரையாடலும், அந்தத் தாக்குதலின் போதும் அதற்குப் பின்னரும் ஒவ்வொரு சந்திப்பையும்' ஆய்வுசெய்ய குழு கூறியது. இந்த குழு உடனடியாக அழைப்பு ஆணைகளை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் 'வரவிருக்கும் மாதங்களில் அதிக வன்முறை அச்சுறுத்தலையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி 6ஆம் திகதியையும் எதிர்கொள்ளாதிருப்பதற்கு' இதுதான் மாற்று என்று எச்சரித்தார்.

ஜனநாயகக் கட்சியினர் வேண்டுமென்றே விசாரணையை முடிந்தவரை மிகவும் பழமைவாத மற்றும் தேசபக்தி முறையில் வடிவமைத்து, காவல்துறையை ஜனநாயகத்தின் அரணாகப் புகழ்ந்து, காவல்துறையின் உண்மையான புரவலர்கள் குடியரசுக் கட்சியினர் அல்ல தங்களே என்று முன்வைக்க முற்பட்டனர்.

கடந்த ஆறு மாதங்களில், ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க தலைநகரின் காவல்துறையினர் ஜனவரி 6ஆம் திகதி ஈடுபடுத்துவதை வேண்டுமென்றே தடுத்தமை பற்றியும், தளபதிகள் மற்றும் கீழ்மட்ட அணிகளில் பாசிசக் கூறுகள் இருப்பதையும் அம்பலப்படுத்தும் தொடர்ச்சியான வெளிப்படுத்தல்களை நசுக்கியுள்ளனர்.

இதேபோல், தலைநகரில் இருந்து கிளர்ச்சியாளர்களை அகற்ற துருப்புக்களை ஈடுபடுத்துமாறு ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், மைக் பென்ஸ் மற்றும் டி.சி. தேசிய காவல்படையின் தளபதி ஆகியோரின் வேண்டுகோளை ட்ரம்பால் நியமிக்கப்பட்ட பென்டகன் தலைவர்கள் புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்ட காங்கிரஸ் விசாரணையில் சாட்சியங்களை அவர்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.

அதற்கு பதிலாக, அவர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக துருப்புக்களை அனுப்புவதை தாமதப்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை கடத்தி அல்லது கொலை செய்ய பாசிஸ்டுகள் தலைநகரூடாக செல்ல அனுமதித்தனர். தாக்குதல் அதன் உடனடி இலக்குகளில் தோல்வியுற்றது என்பதும், மேலும் அதை நிறுத்த ட்ரம்பும் வெளிப்பட்டது தெளிவாகத் தெரிந்த பின்னரே அவர்கள் துருப்புக்களை அனுப்ப அங்கீகாரம் அளித்தனர்.

ஜனநாயகக் கட்சியின் பதில் அது பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. இது அமெரிக்க பெருநிறுவன-நிதிய தன்னலக்குழு, இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்பின் ஒரு கட்சியாகும். அனைத்து அடிப்படை கேள்விகளிலும், பைடென் நிர்வாகம் ட்ரம்பின் கொள்கைகளைத் தொடர்கிறது.

மனித இழப்பைப் பொருட்படுத்தாமல் வணிகங்களையும் பள்ளிகளையும் மீண்டும் திறக்கும் கொலைகார சமூகநோய் எதிர்ப்பு சக்தி கொள்கையை இது வெளிப்படையாக ஏற்றுக்கொண்டது. இது ட்ரம்பின் சீன-விரோத கொள்கையை முடுக்கிவிட்டு, வூஹான் நுண்ணுயிரி ஆய்வகத்தில் வைரஸ் தோன்றியது என்ற பொய்யை ஊக்குவித்து, வெகுஜன மரணத்திற்கான தனது சொந்த பொறுப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய உலகளாவிய போட்டியாளருக்கு எதிராக போர் வெறியைத் தூண்டவும் செய்தது.

இதற்கிடையில், பெடரல் ரிசர்வ் முடிவில்லாமல் பணம் செலுத்தி பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மற்றும் தொற்று நிவாரணத் திட்டங்களை தூக்கி எறிவதன் மூலம் தொழிலாளர்களை மீண்டும் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்குள் தள்ளுகின்றது. பெசோஸ் மற்றும் மஸ்க் போன்ற கோடீஸ்வரர்கள் சமூக பேரழிவு மற்றும் வெகுஜன மரணத்திலிருந்து தொடர்ந்து இலாபம் ஈட்டுகின்றனர்.

பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் பொலிஸ் வன்முறைக்கு எதிராக இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான தங்கள் பாசாங்கையும் கைவிட்டுவிட்டனர். மாறாக சட்டம் மற்றும் ஒழுங்கின் உண்மையான பாதுகாவலர்களாக தம்மை காட்டி, குடியரசுக் கட்சியினரை வலதுபுறத்தில் இருந்து தாக்கி, தொற்று நிவாரண நிதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பில்லியன்களை உள்ளூர் காவல் துறைகளுக்கு சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனநாயகம் அதன் அடித்தளத்திலிருந்து அழுகிக் கொண்டிருக்கிறது. இது டொனால்ட் ட்ரம்ப் என்று ஒரு தனிநபரால் அல்ல. அவர் ஒரு அறிகுறி அல்லாது நோய் அல்ல. இந்த நோய் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத நெருக்கடி ஆகும். இது உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ளது.

தொழிலாள வர்க்க போர்க்குணம் மற்றும் எதிர்ப்பின் அலை உயரும் என்ற அச்சத்தில் ட்ரம்ப் மற்றும் பாசிசத்திற்கு எதிரான எந்தவொரு தீவிரமான போராட்டத்தையும் ஜனநாயகக் கட்சியினர் எதிர்க்கிறார்கள். எவ்வாறாயினும், இதுதான் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் ஆபத்தைத் தோற்கடிப்பதற்கான உண்மையான அடிப்படையாகும்.

தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் மற்றும் சோசலிசத்திற்கான நனவான போராட்டத்தின் மூலம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.

Loading