மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் அதிக மழைப்பொழிவு கடுமையான பேரழிவிற்கு வழிவகுத்தது. ஜேர்மன் மாநிலங்களான ரைன்லேண்ட்-பலட்டினேட் (50) மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (43) ஆகியவற்றில் இதுவரை 93 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பெல்ஜியத்திலும் குறைந்தது இதுவரை ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். தற்போது 1,300 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை, ரைன்லேண்ட்-பலட்டினேட்டின் உள்துறை மந்திரி ரோஜர் லேவென்ட்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி) “வீட்டின் அடித்தளங்களை துப்பரவாக்கும்போது இந்த வெள்ளத்தில் உயிர் இழந்த மக்களை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். அதனால் இதன் முடிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை எங்கு முடியும் என்பதை பற்றி இப்போது எதுவம் சொல்லமுடியாது என்பதையே இப்போது கூறமுடியும்'. நிலைமை மிகவும் மோசமாக உள்ளதுடன், இது ஒரு பேரழிவு என்று அவர் கூறினார்.
பல நாட்கள் மழைக்கு பின்னர், ரைன், ருர், மொசெல் மற்றும் பிற சிறிய ஆறுகள் மற்றும் நீரோடைகளின் அளவு உயர்ந்தது. அவற்றில் சில பொங்கி எழும் ஆறுகளாக மாறி முழு நகரங்களையும் நகரங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்தன. சில சந்தர்ப்பங்களில், தண்ணீர் மிக விரைவாக உயர்ந்தபோது, குடியிருப்பாளர்கள் பாதுகாப்பிற்கு தப்பிக்க முடியவில்லை.
ரைன்லாண்ட்-பாலாட்டினேட் ஐபிள் பிராந்தியத்தில் உள்ள ஆர்ஹ்வைலர் மாவட்டம் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஷுல்ட் நகரம் அழிந்துவிட்டது. நான்கு வீடுகள் தண்ணீரினால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இன்னும் பல சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.
பொதுவாக ரைனின் நதியின் துணை நதியான சிறிய அஹ்ர் (Ahr), மழை காரணமாக பொங்கி எழும் நீரோட்டமாக மாறியது. ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. ஆஹ்ர்வைலர் (Ahrweiler) மாவட்டத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை. அவர்கள் வேறு இடங்களில் இடம்பெயர்ந்துவிட்டார்களா அல்லது தங்குமிடத்தைக் கண்டுபிடித்தார்களா அல்லது அவர்களும் அடித்துச் செல்லப்பட்டார்களா என்பது இன்னும் தெரியவில்லை.
வான்வழியாக மீட்கப்படும் வரை பலர் தங்கள் வீடுகளின் கூரைகளில் மணிக்கணக்கில் தங்கியருக்க வேண்டியிருந்தது. மின் தடைகள் மற்றும் தொலைபேசி வலைப்பின்னல்களின் இடையூறு ஆகியவை பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை மோசமாக்கியது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில், அவசர தொலைபேசி இணைப்பு எண்கள் கூட இயங்கவில்லை.
அதிகாரிகளிடமிருந்து எந்த எச்சரிக்கையும் இல்லை அல்லது அவை மிகவும் தாமதமாக வந்தன. குடியிருப்பாளர்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பிற்காக வெளியேற முடியவில்லை.
ஆஹ்ர்வைலரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவர் WSWS இடம் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறினார். அவர்கள் பெற்ற மணல் மூட்டைகளில் மணல் இல்லை. நெருங்கி வரும் வெள்ளம் காரணமாக அவர்கள் மணலைக் கண்டுபிடிப்பது மிகவும் தாமதமானது. குறுகிய நேரத்திற்குள், அடித்தளமும் வீட்டின் கீழ் பகுதியும் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கின.
ஜேர்மனிய வானிலை சேவை பல பகுதிகளில் கனமழை பெய்யவுள்ளதாக எச்சரித்ததால், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். ரியர் நகரின் எஹ்ராங் மாவட்டத்தில், ஒரு மருத்துவமனையிலும் ஓய்வூதிய இல்லத்திலும் இருந்து 2,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள கொலோன்-பொண் பகுதியில் இருந்து இதுவரை குறைந்தது 20 இறப்புகள் பதிவாகியுள்ளன. வெள்ளம் புகுந்த வீட்டு அடித்தளங்களில் பலர் உயிரிழந்தனர். கொலோனில், தீயணைப்பு வீரர்கள் 72 வயதான ஒரு பெண்ணையும், 54 வயதான ஒரு மனிதரையும் ஒரு அடித்தளத்தில் தண்ணீரில் கண்டுபிடித்தனர். ஒய்ஸ்கியர்சன் நகரில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று உயிரிழப்புகள் ரைன்பாக் நகரின் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஒய்ஸ்கியர்சன் நகருக்கு அருகில் ஸ்டெய்ன்பாக் தண்ணீர்அணை அமைந்துள்ளது. இது நிரம்பி வழிய அச்சுறுத்துவதுடன், அருகிலுள்ள ஏராளமான நகரங்களுக்கு ஆபத்தை உள்ளாக்குகிறது.
சோலிங்கன் மற்றும் உனா மாவட்டத்திலும் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. ரூர் பிராந்தியத்தில் ஹேகன் மற்றும் பெர்கிஸ் பிராந்தியத்தில் வூப்பெற்றால் நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹோக்சவர்லாந்து மாவட்டத்தில், ஆல்டெனா முழு நகரமும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆல்டெனாவில், மக்களை மீட்பதில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் இறந்தார். வெள்ளத்தால் அவர் அடித்துச் செல்லப்பட்டார். வேர்டோலில் நடந்த ஒரு மீட்புநடவடிக்கையின் போது மற்றொரு தீயணைப்பு வீரர் உயிர் இழந்தார்.
அண்டை நாடான பெல்ஜியமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெளியேற்றங்கள் மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்க 10 மாகாணங்களில் நான்கில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. ஜேர்மன் எல்லைக்கு அருகே கிழக்கில் உள்ள நாட்டின் இதுவரை 9 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒய்ப்பன் நகரில் ஒருவர், வெர்வியர்ஸில் ஐந்து பேர், பெபின்ஸ்டாரில் ஒருவர் கொல்லப்பட்டனர்.
எல்லை நகரமான ரோமண்ட் உட்பட லிம்பேர்க் மாகாணத்தில் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டனர். அங்கு 5,000 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மாஸ்ட்ரிக்டில் மேலும் தெற்கே, ஆயிரக்கணக்கான மக்களும் வெளியேற்றப்பட்டனர். பெல்ஜிய தேசிய நீர் ஆணையம் மியூஸ் நதியில் பாரிய வெள்ளத்தை எச்சரித்தது. இது லிம்பேர்க் மாகாணத்தின் பெரும்பகுதியை கிட்டத்தட்ட 900,000 மக்களுடன் மூழ்கடிக்கும்.
2013 ஆம் ஆண்டினைப்போல், 195,000 க்கும் அதிகமான மக்களை கொண்ட லீயேஜ் நகரத்தின் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவித்தனர். 'மியூஸ் நதிக்கு அருகே வெள்ளத்தில் மூழ்கக்கூடிய பகுதிகளில் வாழ்வோர் வெளியேற சாத்தியமானால் அவ்வாறு செய்யுமாறு' அவர்கள் வலியுறுத்தினர்.
வெள்ளத்தின் உச்சம் வெள்ளிக்கிழமை காலை வரை எதிர்பார்க்கப்படுகின்றது. நகரத்தில் உள்ள மான்சின் அணை பாலம் சரியாக செயல்படாததால் லீயேஜில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது முதன்முதலில் 1930 களில் கட்டப்பட்டதுடன், இது ஒரு வருடமாக திருத்துமான கட்டுமானத்தில் உள்ளது. மேலும் ஆறு இடங்களில் இரண்டு வாயில்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன. இதன் பொருள் அணையிலிருந்து போதுமான அளவு தண்ணீரை வெளியிட முடியவில்லை. இதனால் நகரத்தின் மையத்தில் வெள்ளம் ஏற்பட்டது.
இப்பகுதியில் ஒரு கட்டுமான பாரம்தூக்கி வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படும் என்றும், அது விழுந்தால் அது பல நீர்உந்து நிலையங்களுக்கு சக்தி அளிக்கும் மின்சார கம்பிகளை வெட்டக்கூடும் என்றும் பெரும் அச்சங்கள் உள்ளன. மின் விநியோகஸ்தர்கள் வியாழக்கிழமை இந்த வரிசையில் முன்கூட்டியே மின்னோட்டத்தை தடுத்துவிட்டனர்.
வாலோனிய பிராந்தியத்தின் ஏழு பிராந்தியங்களில் குழாய் நீரை, “வேகவைத்து” கூட உட்கொள்ள வேண்டாம் என்று வாலோனிய நீர் சங்கம் மக்களை எச்சரித்தது. மின்சாரம் மற்றும் எரிவாயு வலைப்பின்னல்கள் “முன்னோடியில்லாத அளவில் சிக்கல்களை சந்தித்து வருகின்றன” என்று லீயேஜ் மாகாணத்தின் முக்கிய எரிசக்தி விநியோகஸ்தரான ரெசா அறிவித்தது.
சேதத்தின் பாரிய அளவும், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளும், அடுத்த நாட்களில் நிச்சயமாக அதிகரிப்பதற்கான பல காரணங்கள் உள்ளன. இது முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட காலநிலை நெருக்கடியின் விளைவாகும், இது பெருகிய முறையில் ஒருபுறம் தீவிர வெப்பம் மற்றும் வறட்சி, தீவிர மழை மற்றும் மறுபுறம் வெள்ளம் ஆகிய கடுமையான வானிலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கிறது. அதே நேரத்தில், இது பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் பாழடைந்த உள்கட்டமைப்பின் விளைவாகும்.
சமீபத்திய ஆண்டுகளில் மற்றும் பல தசாப்தங்களில், கடுமையான வெள்ளப்பெருக்கு மீண்டும் மீண்டும் நிகழ்ந்த போதிலும், அணை பாதுகாப்பு மற்றும் வெள்ளப் பாதுகாப்பில் போதுமான அல்லது முதலீடு எதுவும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இராணுவத்திற்கான செலவு ஜேர்மனியிலும் ஐரோப்பா முழுவதிலும் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்தக் கொள்கைக்கு பொறுப்பான அதே அரசியல்வாதிகள் இப்போது அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார்கள். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் அமைச்சர் தலைவரும், அதிபருக்கான கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் CDU வேட்பாளருமான ஆர்மின் லாசெட் வியாழக்கிழமை ஆல்டெனா மற்றும் ஹேகன் ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி வழங்கப்படும் என்ற கூறிவருகிறார். இவை பழக்கமான வெற்று வாக்குறுதிகளாகும். முந்தைய பேரழிவுகளிவுகளுக்காக வாக்குறுதியளிக்கப்பட்ட உதவித்தொகைக்காக பலர் இன்னும் காத்திருக்கிறார்கள்.
ரைன்லேண்ட்-பாலாட்டினேட்டின் சமூக ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர் மாலு ட்ரேயர், மத்திய நிதி மந்திரி மற்றும் அதிபருக்கான சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஓலாஃப் ஷொல்ஸ் உடன் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாட் நொய்னார் ஆஹ்ர்வைலர் பிராந்தியத்தை பார்வையிட்டார். தனது விடுமுறையை குறைத்த ஷொல்ஸ், 'இயற்கையால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அழிவு' குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
துக்கம் அனுஷ்டிக்கும் அடையாளமாக, ரைன்லேண்ட்-பாலாட்டினேட்டில் உள்ள பொது கட்டிடங்களின் கொடிகள் வெள்ளிக்கிழமை அரை உயரத்தில் பறக்கவிடப்படும் என்று ட்ரேயர் அறிவித்தார். 'இந்த பேரழிவின் சேதம் முன்னோடியில்லாதது,' என்று அவர் கூறினார். பலர் எல்லாவற்றையும் இழந்துவிட்டனர், துரதிர்ஷ்டவசமாக, இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எவ்வாறாயினும், 'இந்த மோசமான நேரத்தில் நம்பிக்கையின் முதல் அடையாளம்' பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக உதவ மத்திய அரசு அளித்த வாக்குறுதியாகும். 'ஒற்றுமையின் வலுவான சமிக்கைக்காக' ஷொல்ஸுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஷொல்ஸ் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் ஒற்றுமை உண்மையில் எங்குள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனா பிணை எடுப்புப் பொதிகள் என்று அழைக்கப்படும் போக்கில், நூற்றுக்கணக்கான பில்லியன்கள் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டன. அவை இப்போது உழைக்கும் மக்களிடமிருந்து பிழிந்தெடுக்கப்பட உள்ளன. இராணுவ வரவுசெலவுத் திட்டமும் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 10 பில்லியன் யூரோவிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதம் மத்திய தேர்தல்களுக்குப் பிறகு மேலும் உயரும்.