மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் நேற்று சில இரயில்வே தொழிலாளர்களிடையே ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கும், பாரிசிலுள்ள சார்ஸ் டு கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களில் ஊழியர்கள் நடத்தும் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தின் முதல் நாளுக்கும் அழைப்பு விடுத்தன.
பாரிஸ் விமான நிலையங்களில் வேலைநிறுத்த நடவடிக்கையில் பங்கு பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து தொழிற்சங்கங்கள் ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. காலை 11:00 மணிக்கு, தன்னாட்சி தொழிற்சங்கங்களின் தேசிய ஒன்றியத்தின் (UNSA) பாரிஸ் விமான நிலைய கிளையின் பொதுச் செயலாளர் லாரன்ட் காசின், ஓர்லி விமான நிலையத்தில் 30 சதவீத விமானங்கள் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று ட்டுவீட் செய்தார். செய்தி நிறுவனமான AFP ஆனது விமானங்கள் பெரும்பாலும் சாதாரணமாக இயங்குவதாக தெரிவித்தது. வேலைநிறுத்தம் காரணமாக திங்கட்கிழமை வரை விமானங்களில் சில தாமதங்களை எதிர்பார்ப்பதாக பாரிஸ் விமான நிலையங்கள் தெரிவித்தன.
இரயில்வேயில், தொழிலாளர் பொது கூட்டமைப்பு (Confédération générale du travail, CGT) நேற்று அழைப்பு விடுத்த ஒரு நாள் வேலைநிறுத்தம் தேசிய அளவில் TER பிராந்திய விரைவு இரயில்களை பாதித்தது. இது அதிவேக TGV அல்லது மெட்ரோக்களை பாதிக்கவில்லை. Auvergne-Rhône-Alpes, Pays de la Loire, Brittany, East, New Aquitaine மற்றும் Occitania ஆகிய இடங்களில் TER சேவைகள் பாதிக்கப்பட்டன.
மேலும் நேற்று, தொழிற்சங்கங்களானது ஜூலை 3-4 திகதி வார இறுதியில் தேசிய Ouigo இரயில் வலையமைப்புகளில் தங்கள் முன்னைய வேலைநிறுத்த அங்கீகார அறிவிப்புகளை இரத்து செய்வதாக அறிவித்தன.
வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்தபோதிலும், இந்த வேலைநிறுத்தங்களில் பங்கு பெறுவது குறைவாக இருந்தது. வியாழனன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் பிரான்சிலுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான அடையாள நிகழ்வுகளாகத்தான் இருந்தன. தொழிலாள வர்க்கத்தில் பரந்த ஆதரவை அணிதிரட்டுவதற்கான எந்தவொரு தெளிவான கோரிக்கைகளோ அல்லது எந்தவொரு முயற்சியும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட அவைகள், தொழிலாளர்களிடையே நீர்த்துப்போகச் செய்து விட்டுவிட்டு அவர்களை சோர்வடையச் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் நிர்வாகத்துடன் ஒரு உடன்படிக்கையை உருவாக்குகின்றன.
சார்ஸ் டு கோல், ஓர்லி மற்றும் லு பூர்சே விமான நிலையங்களை உள்ளடக்கிய பாரிஸ் விமான நிலையங்களில் (ADP Group) பணியாற்றும் விமான நிறுவன தொழிலாளர்கள் ஒரு பெரிய செலவு வெட்டுத் திட்டத்தை எதிர்கொள்கின்றனர். 5,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் ADP Group ஆனது, தொழிற்சங்கங்களுடன் ஊழியர்களின் பல போனஸ்களை அகற்றும் தொழிலாளர் ஒப்பந்தங்களை சரிசெய்வதற்கான ஒரு திட்டம் (Plan for Adjustment of Labor Contracts) என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொழிற்சங்கங்களின் கருத்துப்படி, இவைகள் 20 சதவிகிதம் வரை ஊதிய வெட்டுகளாகும், அதே நேரத்தில் இது 4-8 சதவிகிதத்திற்கு இடையில் ஊதியக் வெட்டைக் குறிக்கும் என்று நிறுவனமே ஒப்புக்கொள்கிறது. இந்த விதிமுறைகளின் கீழ் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
ADP Group இன் தலைமையகத்திற்கு முன்னால் ஜூன் 18 அன்று தொழிற்சங்கங்கள் அழைத்த ஒரு நாள் எதிர்ப்பு நடவடிக்கையில் சுமார் 700 பேர் ஈடுபட்டனர், அவர்களில் பெரும்பாலோர் செயல்பாடுகளை நிர்வகிப்பவராவர். ADP இல் வாகனத்தரிப்பிடத் தள மேலாளராக 20 ஆண்டுகளாக பணியாற்றிய 44 வயதான ரமேஷ் மோன்சார்ட் என்பவர் Le Monde பத்திரிகையிடம் கூறுகையில், 'நிர்வாகம் உளவியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் எங்களை சோர்வடையச் செய்கிறது.
தொழிற்சங்கங்கள் நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டங்களை எதிர்க்கவில்லை. ஏழு மாதங்களுக்கு முன்புதான், அவர்கள் ADP யுடன் ஒரு 'தன்னிச்சையான' பணிநீக்கத் திட்டத்திற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இது 1,250 வேலைகளை துடைத்தெறிய வழிவகுத்தது, இது முழு தொழிலாளர் தொகுப்பில் ஆறில் ஒரு பங்கிற்கு வேலை பறிபோக வழிவகுத்தது.
அந்த நேரத்தில், இது மேலும் தாக்குதல்களுக்கான நிறுவனத்தின் கோரிக்கைகளை குறைக்கும் என்று தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு கூறின. தொழிற்சங்கங்களுடன் இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க ஒரு வாய்ப்பை வழங்குவதாக ADP நிர்வாகமானது ஒரு அறிக்கையை வெளியிட்டது. 'சமூக உரையாடலுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குவதற்காகவும், கட்டாய பணிநீக்கங்களைத் தவிர்ப்பதற்காகவும் ... பணிநீக்கங்களுக்கு ஒரு புதிய திட்டத்தை முன்மொழிய இந்த வழிகாட்டுதல் விரும்புவதாக அதில் அது கூறியது.
இரயில்வே துறையில், நேற்றைய அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிக்கும் CGT அறிக்கையில் உறுதியான கோரிக்கைகள் எதுவும் இல்லை, 'ஒரு உயர்தர சமூக சட்டத்திற்கான உண்மையான பேச்சுவார்த்தைகள்' மற்றும் 'மறுசீரமைப்பிற்கு முற்றுப்புள்ளி' வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் 2018 இரயில்வே சீர்திருத்தத்துடன் பிணைந்த மறுசீரமைப்பு திணிக்கப்படுவது குறித்த ஒரு அடையாளக் குறிப்பைக் கூட அது குறிப்பிடவில்லை. தொழிலாளர்கள் மத்தியில் சீர்திருத்தத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்தாலும், மக்ரோன் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
புதிய சட்டத்தின் கீழ், 23,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பழைய இரயில்வே தொழிலாளர் சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுவதில்லை, இது அவர்களின் ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளில் ஒரு பெரிய வெட்டை இன்றியமையாததாக்குகின்றது. இந்த சீர்திருத்தமானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தேசியமயமாக்கப்பட்ட SNCF தேசிய இரயில் வலையமைப்பை முழுமையாக தனியார்மயமாக்கத் தொடங்கியது.
2018 இல், SNCF தொழிலாளர்கள் மக்ரோனின் இரயில்வே சீர்திருத்தத்திற்கு எதிராக கடுமையான வேலைநிறுத்தத்தை நடத்தினர். CGT யும் மற்றய தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தியதுடன், தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்களின் பரந்த நடவடிக்கைகளுக்கு அணிதிரட்ட மறுத்து, அதற்கு பதிலாக தொழிலாளர்களை சோர்வடையச் செய்யும் நோக்கத்துடன் பல மாதங்களாக தொடர்ச்சியான மனச்சோர்வடையச் செய்வதற்காக, விட்டுவிட்டு ஈடுபடும் வேலை நிறுத்தங்களை தக்க வைத்துக் கொண்டிருந்தன. ஏற்கனவே பல மாதங்களாக மக்ரோனுடன் இந்த மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுக்கவும் மக்ரோனின் சீர்திருத்தத்தை திணிக்கவும் வேலை செய்தன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் முழுவதிலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து மக்ரோனின் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை திணிக்கின்றன, பெருநிறுவன இலாபங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடுவதற்கான வைரஸ் பரவுவதைத் தடுக்கும் எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கையையும் எதிர்க்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் இந்தக் கொள்கைகளின் விளைவு, பிரான்சில் 110,000 க்கும் அதிகமான மக்கள் மற்றும் ஐரோப்பா கண்டத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் இறப்புக்களாகும். ஐரோப்பாவின் 684 பில்லியனர்களின் செல்வமானது இதே காலகட்டத்தில் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக 3 டிரில்லியன் வரைக்கும் உயர்ந்துள்ளது.
இது ஆளும் வர்க்கத்தின் கொள்கைக்கு இரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பை ஆழப்படுத்தியுள்ளது என்பதை மக்ரோன் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் அறிந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊக்கப் பொதிகள் வடிவில் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் பெரும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த நடவடிக்கைகளுக்கான நிதியானது தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான ஒரு முடுக்கிவிடப்பட்ட தாக்குதலின் மூலம் பெறப்பட உள்ளது.
எவ்வாறெனினும், ஒரு போராட்டம் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமானால், அது பெருநிறுவன சார்பு தொழிற்சங்க எந்திரங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும். இரயில்வே மற்றும் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும், இது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டுகோள் விடுக்க வேண்டும். இவை தொழிலாளர் அரசாங்கங்களுக்கான போராட்டமாகவும், பெருநிறுவனங்கள் ஜனநாயக முறையில் உழைக்கும் மக்களால் கட்டுப்படுத்தப்படும் பொதுப் பயன்பாடுகளாக மாற்றப்படுவது, தனியார் இலாபத்திற்கு அல்லாமல் சமூகத் தேவைக்கு ஏற்ப பொருளாதாரத்தை சோசலிச முறையில் மறுசீரமைப்பது ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் முன்னோக்கை நோக்கி இது இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
- பிரான்சின் அதிவலது Action française கட்சியுடன் தொடர்புடைய முடியாட்சிவாதியொருவர் மக்ரோனை கன்னத்தில் அறைந்தார்
- பிரெஞ்சு நவ-பாசிஸ்டுகள் மெலோன்சோன் வாக்காளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர்
- வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்கள் ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்காக மாக் கனரக வாகனத் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்