மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பெடரல் ரிசர்வின் கொள்கை வகுக்கும் குழுவின் நேற்று முடிவடைந்த இரண்டு நாள் கூட்டத்திலிருந்து ஒரு தெளிவான தீர்மானத்தைப் பெற முடியும்.
உலகின் அந்த பிரதான மத்திய வங்கி, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அதன் கொள்கைகள் உருவாக்கியுள்ள ஊகவணிக மூலதனம் மற்றும் மலையென குவிந்துள்ள கடன்களில் இருந்து அதன் ஆதரவைத் திரும்ப பெறும் என்பது போன்ற எதிர்பார்ப்பிற்குரிய எதையும் அது செய்யப் போவதில்லை என்பதோடு, வரலாற்றில் இதுவரை கண்டிராதளவில் நிதிய தன்னலக்குழு செல்வ செழிப்பில் கொழிக்க உதவியுள்ள அதிமலிவு பணப் பாய்ச்சலை அது தொடர்ந்து தொடரும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
2024 இல் அல்ல 2023 இறுதியிலேயே நடைமுறையளவில் பூஜ்ஜியமாக உள்ள அதன் அடிப்படை வட்டி விகிதத்தை அதிகரிக்க தொடங்கும் என்ற பெடரலின் சமிக்ஞை, நிதிய செய்தி ஊடகங்களில், “கடுமையானது" என்று வர்ணிக்கப்பட்டது. பெடரல் முன்னரும் கூட இதுபோல சுட்டிக் காட்டி இருந்தது என்றாலும், உண்மையில், அது அதன் பண மதிப்புக் கொள்கையை மாற்ற ஒரு சுண்டு விரலையும் உயர்த்தவில்லை.
பெருந்தொற்று ஆரம்பித்த போது மார்ச் 2020 இல் நிதிய சந்தைகள் உறைந்து போனதற்கு விடையிறுத்து தொடங்கிய, பெடரலின் சொத்திருப்புக் கொள்முதல் திட்டம், மாதத்திற்கு 120 பில்லியன் டாலர் வீதம் தொடர இருக்கிறது.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக, பெடரல் அதன் நிதிய சொத்திருப்பு கொள்முதல்களைக் "குறைக்க" தொடங்குமா என்று நிதியியல் வட்டாரங்களில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டிருந்தது. பெடரல் தலைவர் ஜெரோம் பவல், நிதியச் சந்தைகளைச் சீர்குலைக்க எதுவும் செய்யப்படாது என்று மறுஉத்தரவாதங்கள் அளிக்க சிரமம் எடுக்க வேண்டியிருந்தது.
சொத்திருப்புகளை வாங்கும் அளவைக் குறைப்பதற்கான தரமுறை "தொலைதூரத்தில்" இருப்பதாக கூறிய அவர், அதேவேளையில் பெடரல் "குறைப்பதைக் குறித்து பேசி வருகிறது,” எந்த நடவடிக்கையும் "முறையாக, படிப்படியாக மற்றும் வெளிப்படையானதாக" இருக்கும் மற்றும் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றார். இது, ஆதரவை நிறுத்துவதற்கான எந்த குறிப்பும் சந்தை கொந்தளிப்பின் முதல் அறிகுறியிலேயே திரும்பப் பெறப்படும் என்பதற்கு நடைமுறையளவில் நிதியச் சந்தைகளுக்கு ஓர் உத்தரவாதம் வழங்குவதாக இருந்தது.
2008 உலக நிதிய நெருக்கடிக்கு முன்னர், பெடரல் கணக்கில் சுமார் 900 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதிய சொத்திருப்புக்கள் இருந்தன. அது பணத்தை அச்சடித்துப் புழக்கத்தில் விடும் நடவடிக்கையின் (quantitative easing) விளைவாக விரைவிலேயே 4 ட்ரில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்து, பின்னர் 2020 இல் மீண்டும் 8 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது, இப்போது அது இந்தாண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 9 ட்ரில்லியன் டாலரை எட்டும் பாதையில் போய் கொண்டிருக்கிறது.
ஏனைய முக்கிய மத்திய வங்கிகளாலும் பின்பற்றப்பட்ட பெடரலின் கொள்கைகள் இரண்டு விளைவுகளை ஏற்படுத்தி இருந்தன. முதலாவதாக, அவை செல்வத்தை ஓர் உலகளாவிய பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் கைகளில் மாற்றுவதற்கு நேரடியாக உதவியுள்ளன. ஏப்ரலில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2020 இல் மட்டும் உலக பில்லியனர்களின் நிகர செல்வவளம் 8 ட்ரில்லியன் டாலரில் இருந்து 13.1 ட்ரில்லியன் டாலராக 60 சதவீதம் அதிகரித்தது, இது "மனித வரலாற்றிலேயே அதிவிரைவாக செய்யப்பட்ட செல்வவள பரிமாற்றம்" என்று அந்த பத்திரிகை விவரித்தது.
இரண்டாவதாக, அவை ஒரு மலையளவுக்குக் கடனை உருவாக்கி உள்ளன. இந்த நிகழ்முறையின் அளவைப் பற்றி இவ்வார வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு கட்டுரையில் சில அறிகுறிகளுடன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு அதற்கு முந்தைய உயர்வை விட அண்மித்து 600 மில்லியன் டாலர்கள் அதிகமாக, 1.7 ட்ரில்லியன் டாலர் பத்திரங்களை வெளியிட்ட பின்னர், மார்ச் மாத இறுதியில் அமெரிக்க பெருநிறுவனங்களின் மொத்த கடன் 11.2 ட்ரில்லியன் டாலராக இருந்தது, இது அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் பாதிக்குச் சமமாகும் என்றது குறிப்பிட்டது.
இதே நிலைமை தான் ஐரோப்பாவிலும் நிலவுகிறது, அங்கே ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஐரோப்பிய மத்திய வங்கியின் பூஜ்ஜிய வட்டி விகிதக் கொள்கை மற்றும் அதன் நிதிய சொத்திருப்பு வாங்குதல்கள் மற்றும் நேரடி அரசு ஆதரவு ஆகியவற்றால் மட்டுமே தாக்குப் பிடித்து நிற்கின்றன.
இந்த நடவடிக்கையின் அளவு, பிரெஞ்சு நிதி மந்திரி புருனோ லு மேர் கூறிய சமீபத்திய கருத்துக்களில் எடுத்துக்காட்டப்பட்டது. "நாங்கள் திடீரென்று எங்கள் ஆதரவைக் குறைத்து, டஜன் கணக்கான திவால்நிலைமைகளைத் தூண்ட விரும்பவில்லை," என்றார்.
மலையளவு கடன் உருவாகி இருப்பது பெடரல் ரிசர்வ் கொள்கைகளின் ஒரேயொரு விளைவு தான். உலக நிதிய அமைப்புமுறைக்குள் அதிமலிவு பணத்தை வெள்ளமென பாய்ச்சியமை, சில உதாரணங்களைக் குறிப்பிடுவதானால், பண்டங்களில் இருந்து வீடுகள், பங்குகள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் வரை, ஊகவணிக அலையை ஊக்குவித்துள்ளது.
வோல் ஸ்ட்ரீட் வர்த்தகம் அதிகபட்ச உச்சத்தில் இருக்கும் நிலையில், பங்குகள் மீதான விலை-வருவாய் விகிதங்களும், சந்தை மதிப்பீடுகளை மதிப்பிடுவதற்கான வழக்கமான அளவீடுகளும் அதிகரித்துள்ளன.
பெருநிறுவன பெருமதிப்பற்ற பத்திரங்கள் மீதான இலாபம்—முதலீட்டு தரத்திற்கும் கீழே பட்டியலிடப்படும் இவை—எந்த காலத்தை விடவும் குறைந்து வீழ்ச்சி அடைந்துள்ளது. பிட்காய்ன்கள் வாங்குவதற்காக 500 மில்லியன் டாலர் பெருமதிப்பற்ற பத்திரங்களை சந்தையில் வெளியிட்டு, “வாங்குவதற்கு மிகவும் விலை குறைவு" என்பதால் Moody நிறுவன பட்டியலில் அனுகூலமான இடத்தைப் பெற்றதாக ஒரு நிறுவனம் குறித்து இவ்வாரம் ப்ளூம்பேர்க் குறிப்பிட்டது.
பண்டங்கள் தான் ஊகவணிகத்தின் மையமாக இருந்து வருகின்றன என்பதால், விலைகள் மூர்க்கமாக ஏற்றயிறக்கத்திற்கு உள்ளாகி வருகிறது. மே மாதம், அமெரிக்காவில் குறைவாக ஸ்திரமாக இருந்த விலைகள் சாதனையளவுக்கு உயர்ந்து, பின்னர் இம்மாதம் 41 சதவீதம் சரிந்தன. இரும்புத் தாது மற்றும் தாமிரம் போன்ற தொழில்துறை பண்டங்களும் ஊகவணிகத்திற்கு உட்பட்டுள்ளன, இதனால் அவற்றின் விலைகள் முன்பில்லாத உயரங்களுக்கு சென்றுள்ளது.
உலகளவிலான சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 2008 உலக நிதிய நெருக்கடிக்கு முன்பிருந்தே வீட்டுத்துறையில் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன, நியூசிலாந்து கடந்தாண்டு 22 சதவீத உயர்வைப் பதிவு செய்தது, அமெரிக்கா 13.5 சதவீத அதிகரிப்பைக் கண்டது.
பெடரல் மற்றும் பிற மத்திய வங்கிகளால் ஊக்குவிக்கப்படும் இந்த பரந்த ஊகவணிக தீவிரப்படுத்தலின் புறநிலை முக்கியத்துவத்தைத் தொழிலாள வர்க்கம் புரிந்து கொள்வது அதன் தற்போதைய போராட்டங்களுக்கு இன்றியமையாததாகும். கடன், பெருநிறுவனப் பத்திரங்கள், மற்றும் பிற நிதியச் சொத்திருப்புக்கள் ஆகியவற்றை தான் மார்க்ஸ் பாவனை மூலதனம் (fictitious capital) என்று வகைப்படுத்தினார். அதாவது, அவற்றுக்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லை. மாறாக, பகுப்பாய்வின் இறுதியில், அவை உற்பத்தி நிகழ்முறையில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறியப்படும் உபரி மதிப்பில் உரிமை கோருகின்றன.
பாவனை மூலதனம் மலையளவுக்கு விரிவடைவது வர்க்கப் போராட்ட அபிவிருத்தியில் தீர்க்கமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த சொத்துக்களின் உரிமைகோரல்களை நிறைவேற்றுவதற்காக—முன்னெப்போதையும் விட அதிகளவில் உபரி மதிப்பைப் பெறுவதற்காக—இவை, தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலை மிகப்பெரியளவில் தீவிரப்படுத்துவதற்கான முன்நிமித்தங்களாகும்.
பெடரல் கூட்டத்தைத் தொடர்ந்து பவல் வழங்கிய விளக்கவுரை மற்றும் கேள்வி-பதில் அமர்வின் போது, பணவீக்கம் மற்றும் அது அதிகரிப்புக்கான வாய்ப்புக்கள் மீது அவர் கணிசமானளவுக்குக் கவனம் செலுத்தினார்.
மத்திய வங்கியின் பிரதான கவலை உள்ளவாறே விலை உயர்வுகள் அல்ல, மாறாக அவை கூலிகள் மற்றும் ஏனைய கோரிக்கைகளுக்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சியைக் கொண்டு வருகிறதா மற்றும் உபரி மதிப்பின் ஓட்டத்தை அதிகரிப்பதற்கான நிதி மூலதனத்தின் இடைவிடாத கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய உழைப்பு மற்றும் வேலையிட நிலைமைகளில் செய்யப்படும் "மறுசீரமைப்புக்கு" எதிர்ப்பைக் கொண்டு வருகிறதா என்பது தான் அதன் பிரதான கவலையாக உள்ளது.
நிரந்தர பணவீக்க அதிகரிப்பானது கூலி உயர்வு போராட்டங்களை ஏற்படுத்தினால், பெடரல் அதன் பணமதிப்புக் கொள்கை வழிவகைகளைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதை பவல் சுட்டிக்காட்டினார்.
ஆனால் பணமதிப்புக் கொள்கை—பொருளாதாரத்தில் "அதிக சூடாதல்" எனப்படுவதைத் தடுக்க அதிக வட்டிவிகிதங்கள்—மட்டுமே போதாது. அனைத்திற்கும் மேலாக, இது ஒரு நிதிய நெருக்கடியை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டுள்ளது.
ஆகவே, மற்ற வழிவகைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது, இவற்றில் முக்கியமானது தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நிதிமூலதனத்தின் தொழில்துறை பொலிஸ் படையாக பயன்படுத்துவது, இந்த முறை தான் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொழிற்சங்க எந்திரங்களால் ஒழுங்கமைக்கப்படும் கூலிகளை நசுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தை முன்னெடுக்க ஒரு சர்வதேச கூட்டணியை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைப்பதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் முன்னெடுக்கும் போராட்டத்தின் முக்கியத்துவம் இங்கே தான் உள்ளது.
இந்தக் குழுக்கள் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கால் வழிநடத்தப்படும் அளவிற்கு அபிவிருத்தி அடைந்து முன்நகரும். ஆழமடைந்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி, இந்த வேலைத்திட்டத்திற்கான புறநிலை தேவையை மட்டும் வெளிப்படுத்தவில்லை; இது முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் அதன் அனைத்து அமைப்புக்களும் முன்னெடுத்த கருத்தியல் உதிரித்திட்டங்களையும் தகர்த்துள்ளது.
முதலாளித்துவ சுதந்திர சந்தை என்றழைக்கப்படுவது ஓர் இயற்கை விதி போல செயல்படுகிறது என்றும், அது மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய, ஒரே சாத்தியமான, சமூக பொருளாதார அமைப்பு வடிவமாக உள்ளது, ஆகவே மனிததேவையைப் பூர்த்தி செய்வதற்காக பொருளாதாரம் மீதான நனவான கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறையின் அடிப்படையில் ஒரு சோசலிச வேலைத்திட்டம் பகுத்தறிவற்றது என்றும், இவை தான் பல நூற்றாண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்ட, ஆளும் உயரடுக்குகளின் மையக் கோட்பாடாகும்.
சோசலிச இயக்கம் இந்த கண்ணோட்டத்தைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி, அதன் அபத்தத்தை எடுத்துக்காட்டி உள்ளது, அதுவாவது: மனிதகுலம் பிரபஞ்சத்தின் வெளிப்புறப் பகுதிகள் மற்றும் அணுவின் உள் கட்டமைப்பு மற்றும் வாழ்க்கையின் இயங்குமுறைகளை ஆராய முடியும் என்றாலும், அதனால் நனவுடன் சமூகத்தை ஒழுங்கமைக்க முடியாது என்று அது வாதிடுகிறது.
நீண்ட காலத்திற்கு முன்பே தத்துவார்த்தரீதியில் மறுக்கப்பட்ட சுதந்திர சந்தையின் கோட்பாடுகள் இப்போது நடைமுறையிலேயே சின்னாபின்னமாகி வருகின்றன. சுதந்திரச் சந்தை என்றழைக்கப்படுவதன் செயல்பாடு முடங்கிவிட்டது. பெடரல் வடிவில், முதலாளித்துவ அரசின் தினசரி தலையீடு இல்லாமல், அது ஒரு நொடியில் பொறிந்து போய்விடும்.
அரசு இப்போது தலைமை பொருளாதார ஒழுங்கமைப்பாளர் பொறுப்பை ஏற்றுள்ளது. இன்றைய முக்கிய கேள்வியே, அது யாருடைய நலன்களுக்காக செயல்படும் என்பது தான். தன்னலக் குழுக்களைச் செல்வ செழிப்பாக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள்ளாக்கும் கருவியாக விளங்கும், தற்போதைய முதலாளித்துவ அரசு, தூக்கியெறியப்பட்டு தொழிலாளர்களின் ஓர் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அது தான் இப்போது கட்டவிழ்ந்து வரும் போராட்டங்களின் உள்ளார்ந்த தர்க்கமாகும்.