மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன.
செவ்வாயன்று, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் நேட்டோவானது உக்ரேனின் நேட்டோ அங்கத்துவம் குறித்து முடிவு செய்யும் என்றும், விரைவுபடுத்தப்பட்ட சேர்க்கைக்கு அழுத்தம் கொடுத்து வரும் உக்ரேனுக்கு "அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்க" உரிமை உண்டு என்றும் வலியுறுத்தினார். உக்ரேனிய எல்லையை நோக்கி ரஷ்யா தனது துருப்புக்களை நகர்த்தியதற்காக அவர் கண்டனம் செய்தார், இந்த நடவடிக்கையை "நியாயமற்றது, விவரிக்க முடியாதது மற்றும் ஆழமானது" என்று அழைத்தார்.
ஸ்டொல்டென்பேர்க் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் உக்ரேனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை பிரஸ்ஸல்ஸில் சந்தித்தனர், அவர் உக்ரேனை நேட்டோவில் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு நாள் முன்னதாக, CNN ஆனது உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டது, ரஷ்யாவுடனான மோதல் அதிகரிக்கும் அபாயத்திலும் கூட, அவர் நேட்டோ விரைவில் உக்ரேனை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் பேசினார், மீண்டும் உக்ரேனுக்கு அமெரிக்க ஆதரவை வலியுறுத்தினார். அமெரிக்க-ரஷ்யா உறவுகள் குறித்து விவாதிக்க வரும் மாதங்களில் ஒரு உச்சிமாநாட்டையும் அவர் முன்மொழிந்தார், மேலும் நிலைமையை "தணிக்க" ரஷ்யாவை வலியுறுத்தினார்.
உண்மையில், நேட்டோவும் உக்ரேனும்தான் இப்பகுதியில் பதட்டங்களை ஆக்கிரோஷமாக அதிகரித்து வருகின்றன. உடனடியாக மோதலின் தற்போதைய வெடிப்பின் அடித்தளத்தில் ஜெலென்ஸ்கி அரசாங்கத்தால் கிரிமியாவை "மீண்டும் கைப்பற்ற" ஒரு மூலோபாயத்தை தேர்ந்தெடுத்தது, மற்றும் கிழக்கு உக்ரேனில் ஒரு உக்ரேனிய தாக்குதல் பற்றிய வெளிப்படையான விவாதங்களும் இருந்தது. இரண்டுமே உக்ரேன் ரஷ்யாவுடன் முழு அளவிலான போருக்கு தயாராகி வருகிறது என்று அறிவிப்பதற்கு சமமானதாக இருந்தன.
2014 பெப்ரவரியில் விக்டர் யானுகோவிச்சின் ரஷ்ய சார்பு அரசாங்கத்திற்கு எதிராக அதிவலது சக்திகளால் கியேவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு விடையிறுக்கும் வகையில், ரஷ்யா அதன் கருங்கடல் கடற்படையின் கடற்படைத் தளத்தை கிரிமிய தீபகற்பத்துடன் இணைத்துக் கொண்டது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனிய இராணுவத்திற்கும் இடையே கிழக்கு உக்ரேனில் இப்போது ஏழு ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரைத் தூண்டியது, இது 14,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டுள்ளது மற்றும் மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயரவைத்துள்ளது.
உக்ரேனிய அரசாங்கம் இந்த ஆத்திரமூட்டல்களை ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜோ பைடென் பதவியேற்ற சில வாரங்களுக்குப் பின்னர் தொடங்கியது, அவர் ரஷ்யா மற்றும் சீனா இரண்டிற்கும் எதிராக ஒரு ஆக்கிரோஷமான போக்கை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்கா இப்போது ஏப்ரல் 14 முதல் துருக்கிய நீரிணை வழியாக கருங்கடலுக்கு இரண்டு போர்க் கப்பல்களை நிலைநிறுத்த அனுப்புகிறது. ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவின் கருத்துப்படி, எல்லாவற்றிற்கும் மேலாக கருங்கடல் பிராந்தியம் மற்றும் பால்டிக்குகளில், நேட்டோ 40,000 துருப்புக்களையும் 15,000 இராணுவ தளவாடங்களையும் ரஷ்யாவின் எல்லைகளில் குவித்துள்ளது.
செவ்வாயன்று, நேட்டோவானது அடைக்கப்பட்ட கேடயங்கள் (Locked Shields) என்பதை 2021 ஐ அறிமுகப்படுத்தியது, இது லகின் மிகப்பெரிய சைபர் போர் பயிற்சி என்று விவரிக்கப்பட்டுள்ளது. பால்டிக்குகளில் கவனம் செலுத்தும் இது, சர்வதேச மோதல்களின் போது, நீர் சுத்திகரிப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் போன்ற சிவிலியன் மற்றும் இராணுவ உள்கட்டமைப்பை எவ்வாறு பாதுகாப்பது என்பதை நேட்டோ பயிற்சி செய்வதை உள்ளடக்கியது.
ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில் அமெரிக்காவை ஒரு "பகைவர்" என்று அழைத்துள்ளார். இரண்டு போர்க் கப்பல்களை அமெரிக்கா நிலைநிறுத்துவதை கண்டித்த அவர், "கிரிமியா மற்றும் நமது கருங்கடல் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் இருக்குமாறு" அமெரிக்காவை எச்சரித்தார். "அது அவர்களின் சொந்த நன்மைக்காக இருக்கும்" என்றார். ரஷ்யா இப்போது அதன் தெற்கு போர்முனையிலும் கருங்கடலிலும் இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
நேட்டோவின் நடவடிக்கைகள், எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரேனிய நேட்டோ அங்கத்துவத்தின் அச்சுறுத்தல்கள், அசாதாரணமான பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்கள் ஆகும், இது நேரடியாக அணுஆயுதம் கொண்ட ரஷ்யாவிற்கும் நேட்டோ சக்திகளுக்கும் இடையிலான போர் அபாயத்தை முன்வைக்கிறது.
உக்ரேனின் நேட்டோ உறுப்புரிமையானது சிவப்புக் கோட்டைக் கடக்கும் என்று ரஷ்யா நீண்ட காலமாக எச்சரித்துள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தினால் கலைக்கப்பட்டதிலிருந்து, நேட்டோ, இதற்கு முரணான வாக்குறுதிகள் இருந்தபோதிலும், போலந்து, ருமேனியா, பல்கேரியா மற்றும் பால்டிக் நாடுகள் உட்பட ரஷ்யாவின் எல்லைகளுக்கு இன்னும் நெருக்கமாக விரிவடைந்துள்ளது. 2004 மற்றும் 2014 ல் அமெரிக்காவும் ஜேர்மனியும் உக்ரேனில் இரண்டு ஆட்சிக் கவிழ்ப்புகளை ஏற்பாடு செய்ததும் ரஷ்யாவை சுற்றி வளைப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
கருங்கடல் பிராந்தியமானது அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இது ரஷ்யா மற்றும் சீனா இரண்டையும் எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஐரோப்பிய கொள்கை பகுப்பாய்வு சிந்தனைக் குழுவின் (CEPA) சமீபத்திய அறிக்கை, " BSR [கருங்கடல் பிராந்தியத்தில்] வளர்ந்து வரும் ரஷ்ய (மற்றும் சீன) செல்வாக்கு மத்திய கிழக்கு, மத்தியதரைக்கடல் மற்றும் தென்மேற்கு ஆசியாவில் பரந்த மேற்கத்திய நலன்களை பாதிக்கிறது" என்று வலியுறுத்தியது.
அமெரிக்க ஐரோப்பாவின் இராணுவ (US Army Europe) முன்னாள் தளபதியால் இயற்றப்பட்ட இந்த அறிக்கை, "ஜோர்ஜியாவை நேட்டோவிற்குள் அழைக்கவும், உக்ரேனின் அங்கத்துவத்திற்கு விரைவான பாதையில் வைக்கவும்" நேட்டோவை வலியுறுத்தியது. அது மேலும் ரஷியன் கருங்கடல் கடற்படை கிரிமியா கடற்கரையில் "பாதிக்கப்படக்கூடியதாக" செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டது, "ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை நிலைநிறுத்தல் ... மற்றும் கண்ணிவெடிகளை விதைத்தல் திறனை ஏற்படுத்துதல்" ஆகியவைகளையும் உள்ளடக்கியிருந்தது.
உக்ரேன் உட்பட பல நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை நிறுவியுள்ள இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை மற்றய சமீபத்திய சிந்தனைக் குழு அறிக்கைகள் வலியுறுத்தியுள்ளன.
துல்லியமாக பல்வேறு புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் நலன்கள் குறுக்கிடுவதால், கருங்கடல் பிராந்தியத்தில் நெருக்கடி ஒரு பேரழிவுகரமான பிராந்திய, மற்றும் உலகளாவிய போரைக் கூட தூண்டும் திறனைக் கொண்டுள்ளது. ஏற்கனவே, துருக்கி, போலந்து மற்றும் பெலருஸ் ஆகிய நாடுகளில் இந்த மோதல் வரையப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஜெலென்ஸ்கியை சந்தித்து, போரிடுகிற "கிரிமியன் தளத்தை" (Crimean Platform) அங்கீகரித்தார். மேலும், அங்காரா வழங்கிய அனுமதியின் காரணமாகத்தான் அமெரிக்கா சட்டபூர்வமாக அதன் போர்க் கப்பல்களை கருங்கடலுக்கு அனுப்ப முடிகிறது.
கூட்டத்திற்கு முன்னர், புட்டின் எர்டோகனை அழைத்து, மோதலில் உக்ரேனை ஆதரிக்க வேண்டாம் என்றும், கருங்கடலுக்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடையே செல்லும் பாதையை ஒழுங்குபடுத்தும் 1936 மான்ட்ரெக்ஸ் உடன்படிக்கையை (Montreux convention) அகற்றவேண்டாம் என்றும் வெளிப்படையாக வலியுறுத்தினார், இது போர்க் கப்பல் நிலைநிறுத்தல்களை மட்டுப்படுத்துகிறது. ஒரு அரச டூமா பிரதிநிதி கூறியது போல், கருங்கடல் "ஒரு அமெரிக்க ஏரியாக" மாறுவதைத் தடுக்க ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தால் மாண்ட்ரெக்ஸ் மாநாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
திங்களன்று, ரஷ்யா துருக்கியுடனான அனைத்து விமானப் பயணத்தையும் நிறுத்தி வைத்தது, நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகள் வெடித்ததை மேற்கோள் காட்டியது. பிரிட்டன் உட்பட மற்றய நாடுகளும் பெருந்தொற்று நோய் காரணமாக துருக்கிக்கு விமானப் பயணத்தை மூடிக் கொண்டாலும், இந்த நடவடிக்கை எர்டோகன் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவு கொடுத்ததற்கு ஒரு விடையிறுப்பு என்று விமர்சகர்கள் ஊகிக்கின்றனர்.
பெலருஸ் மற்றும் போலந்தில் துருப்புக்களின் நடமாட்டமும் நடைபெற்றுள்ளது. இந்த வார தொடக்கத்தில், போலந்து அரசாங்கமானது பெலருஸ் உடனான அதன் எல்லைகளுக்கு துருப்புக்களை அனுப்பத் தொடங்கியதாக கூறப்படுகிறது. கருங்கடலில் ஏற்பட்ட நெருக்கடிக்கும் இந்த நிலைப்பாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வார்சோ மறுத்துள்ளது. எவ்வாறெனினும், ரஷ்யாவானது உக்ரேனிய-பெலருசிய எல்லைக்கு துருப்புக்களை அனுப்பியதாக கூறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் இது வந்துள்ளது. செவ்வாயன்று, பெலருசிய பாதுகாப்பு அமைச்சகம் போலந்து-பெலருசிய எல்லையில் ஒரு அடையாளம் தெரியாத விமானம் பெலருசிய வான்வெளியை மீறியதை அடுத்து போலந்து தூதரகத்தின் இராஜதந்திரி அதிகாரிக்கு அழைப்பாணையை அனுப்பியது.
சமீபத்திய மாதங்களில் பெலருஸ் மற்றும் போலந்திற்கு இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன, ஏனெனில் வார்சோவானது லூக்காசென்கோ எதிர்ப்பு எதிர்க்கட்சியை வெளிப்படையாக ஆதரித்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரேனிய அரசாங்கமான ஜெலென்ஸ்கிக்கு எதிரான நேட்டோ போர் உந்துதலுடனும் வார்சோ நெருக்கமாக இணைந்துள்ளது, அதன் "கிரிமியன் தளத்தை" வார்சோ ஆதரிக்கிறது.
இதற்கு மாறாக, ஆரம்பத்தில் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளையும் உள்ளடக்கிய வெகுஜன எதிர்ப்புக்களால் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி அலெக்சாண்டர் லூக்காசென்கோ, சமீபத்தில் அரசியல் மற்றும் இராணுவ ஆதரவுக்காக ரஷ்ய தன்னலக்குழுவை நோக்கித் திரும்பியுள்ளார், இது கியேவுடன் பெலருஸின் முந்தைய நெருக்கமான உறவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய போர் நெருக்கடியானது 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசக் கலைப்பின் பேரழிவுகரமான விளைவை அப்பட்டமாக அடிக்கோடிட்டுக் கொண்டிருக்கிறது, இது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் அக்டோபர் புரட்சியை பல தசாப்தங்களாக காட்டிக் கொடுக்கப்பட்டதன் உச்சக்கட்டம் ஆகும்.
முதலாளித்துவம் மீள் புனருத்தாரணம் செய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், எல்லா இடங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவற்ற போர்களானது வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பெரும் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. முன்னாள் சோவியத் ஒன்றியமே ஒரு புவிசார் அரசியல் வெடிமருந்து கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
தயாராகிக் கொண்டிருக்கும் பேரழிவுகரமான போர்களில் தொழிலாள வர்க்கத்திற்கு அக்கறை இல்லை. ஏற்கனவே, இந்த பெருந்தொற்று நோய்க்கு ஆளும் வர்க்கத்தின் குற்றவியல் பிரதிபலிப்பின் காரணமாக, பிராந்தியம் முழுவதிலுமுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன மற்றும் கோவிட்-19 இலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில், இரண்டு உலகப் போர்களையும் விட அதிகமான மக்கள் பெருந்தொற்று நோயால் இறந்துள்ளனர்.
உக்ரேனில் ரஷ்யாவுடனான மோதல் விரிவாக்கம் ஒருபுறம் இருக்க, எந்தவொரு தொடர்ச்சிக்கும் மாபெரும் மக்கள் விரோதப் போக்கு உள்ளது. எவ்வாறெனினும், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் ஏகாதிபத்திய போருக்கான எதிர்ப்பானது ஒரு அரசியல் வேலைத்திட்டத்துடனும் தலைமையுடனும் ஆயுதபாணியாக்கப்பட்டிருக்க வேண்டும்.
போர்கள் மற்றும் சமூகப் புரட்சியின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கத்தை முன்னறிவிக்கும் வகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது 1991 நவம்பரில் பேர்லினில் ஏகாதிபத்தியப் போர் மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தது. கிட்டத்தட்ட சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர், 1991 மே மாதம் மாநாட்டிற்காக அணிதிரள்விற்காக வெளியிடப்பட்ட அறிக்கையானது "ஏகாதிபத்தியத்தின் தோல்வி மற்றும் காலனித்துவம் மற்றும் போர் அச்சுறுத்தல் ஆகியவற்றை தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் மூலம் மட்டுமே உத்தரவாதம் செய்ய முடியும். நான்காம் அகிலத்தை — சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இந்த ஐக்கியத்தை அடைய முடியும்" என்று அறிவித்தது.
பேர்லின் போர் எதிர்ப்பு மாநாடு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு குறித்து மேலும் அறிய இங்கேஅழுத்தம் செய்யவும்.