செங்கடலில் உள்ள சரக்கு கப்பலைக் குறிவைத்து ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை வேண்டுமென்றும் ஆத்திரமூட்டும் வகையிலும் அதிகரிக்க, செங்கடலிலுள்ள, ஈரான் அரசுடன் இணைக்கப்பட்ட Islamic Republic of Iran Shipping Lines என்ற கப்பல் நிறுவனத்தின் MV Saviz சரக்குக் கப்பலை செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியது.

முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பால் ஒருதலைப்பட்சமாக கைவிடப்பட்ட, கூட்டு விரிவாக்க செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action) என்றறியப்படும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மீண்டும் திரும்புவது குறித்து விவாதிக்க முக்கிய சக்திகள் ஈரானை வியன்னாவில் சந்திக்கும் நிலையில், தெஹ்ரான் பதிலடி கொடுக்கும் சாத்தியமும் மற்றும் முழுமையான போராக உருவெடுக்கும் ஆபத்தும் உள்ள போதிலும், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தனது கடல்வழி தாக்குதலை தொடர தீர்மானித்துள்ளதை இது சமிக்ஞை செய்கிறது.

MV Saviz (Credit: MNA)

இஸ்ரேலிய கப்பல்கள் மீதான ஈரானின் முன்னைய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜிபூட்டி கடற்கரைக்கு அருகே தனது கடற்படை ஈரான் கப்பலைத் தாக்கியதாக இஸ்ரேல் அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது பற்றி அநாமதேய அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதை நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோள்காட்டியது.

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாதே (Saeed Khatibzadeh) கூறுகையில், இன்றைய தாக்குதல், “கப்பலின் மேற்பகுதியில் இணைக்கப்பட்ட அகழ்பீரங்கி கொண்டு நிகழ்த்தப்பட்டதால், சிறிதளவு சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது” என்றார். மேலும் அவர், Saviz கப்பல் “இராணுவம் சாராத கப்பல்” என்றும், செங்கடல் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் முக்கியமான தடுப்புப்புள்ளியாகவுள்ள பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) ஜலசந்தியிலும் உள்ள “கப்பல் வழித்தடங்களில் பாதுகாப்புக்காகவும், கடற்கொள்ளைக்காரர்களை எதிர்க்கவும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது” என்றும் கூறினார்.

2016 பிற்பகுதியிலிருந்து செங்கடலிலுள்ள இந்த கப்பல், செங்கடலிலுள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை சைனியப் பிரிவு கப்பல் தொகுப்பிற்கு “தாயகமாக” உள்ளது என்றும், கப்பல் தளத்தில் இருந்த சீருடை அணிந்த நபர்களும், மற்றும் காவல்படை பயன்படுத்தும் சிறிய படகுகளும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமெரிக்க மற்றும் சவுதி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நடுக்கடலில் இருந்து ஈரானைச் சாராத பிற கப்பல்களுக்கு எண்ணெய் ஏற்றுமதியை மாற்றுவதன் மூலம் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்கான தெஹ்ரானின் முயற்சிகளில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல், ஈரானுக்கு எதிரான அதன் கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் நீண்டகால, இரகசிய தாக்குதலின் ஒரு பகுதியாகவுள்ளது.

கடந்த மாதம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அமெரிக்க அதிகாரிகளின் கூற்றை மேற்கோள்காட்டி, கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிரியாவுக்கு சென்ற குறைந்தது ஒரு டசின் கப்பல்களை இஸ்ரேல் தாக்கியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றன, என்றாலும் அவற்றில் சில சிரியாவிலுள்ள ஹெஸ்பொல்லா உட்பட தெஹ்ரானின் கூட்டாளிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றன என்று முதல் முறையாக இந்த தகவல்களை வெளியிட்டன. இந்த வாரம் தொடக்கத்தில் டைம்ஸூக்கு கசியவிடப்பட்டது போல, ஜேர்னலுக்கு கசியவிடப்பட்ட செய்திகளும், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுத்து சீனாவை தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தீவிர பேச்சுவார்த்தைகளுக்கான இஸ்ரேலின் முயற்சிகளை எதிர்க்கும் அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

Ha’aretz செய்தியிதழின் ஒரு அறிக்கை, அல் குட்ஸ் (Al Quds), ஹெஸ்பொல்லா (Hezbollah) மற்றும் ஷியைட் (Shi’ite) ஆயுதக் குழுக்களுக்கு இரண்டரை ஆண்டுகளில் 500,000 டாலர் மதிப்பீட்டிலான இழப்பை ஏற்படுத்தி, சுமார் 20 ஈரானிய டேங்கர்களை நாசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறது. சேதத்தை ஏற்படுத்தி ஆனால் வேண்டுமென்றே கப்பல்களை மூழ்கடிப்பதைத் தவிர்த்த இந்த தாக்குதல்கள், சிரியாவிற்கு ஈரான் எண்ணெய் விநியோகிப்பதை சீர்குலைக்கும் மற்றும் சிரிய ஆட்சிப் படைகளுக்கு ஆதரவளிக்கும் ஷியைட் மற்றும் ஹெஸ்பொல்லா ஆயுதக்குழுக்களுக்கு நிதியளிக்கும் வருவாய் வழியைத் தடுக்கும் இரட்டை நோக்கத்திற்காக நடத்தப்பட்டன. மேலும், 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செங்கடலில் ஈரானிய டேங்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய சிரிய மற்றும் ஈரானிய கூற்றுக்களையும் இந்த செய்தியிதழ் உறுதிப்படுத்தியது.

சர்வதேச கடற்பரப்பில் சிவிலிய கப்பல்கள் மீதான இத்தகைய இராணுவத் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும் என்பதுடன், சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலை உட்படுத்தும் சாத்தியம் இருந்தாலும், ஜேர்னல் இந்த விடயம் குறித்து மவுனமாக இருந்தது. மேலும் இவை, கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்துக்களை அதிகரிப்பதன் மூலம், பிராந்தியத்தில் கடல் வணிகத்திற்கான காப்பீட்டு கட்டணங்களை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

MV Savid கப்பல் மீதான இந்த தாக்குதல், கடந்த மாதம் மத்தியதரைக் கடலில் பயணம் செய்த மற்றொரு கப்பலை இஸ்ரேல் சேதப்படுத்தியதாக ஈரான் குற்றம்சாட்டிய போது, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் விடுத்த அறிக்கைக்குப் பின்னர் ஈரானிய கப்பல் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலாகும்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் பற்றிய ஜேர்னலின் வெளியீடுகளை தொடர்ந்து, தெஹ்ரான் இனிமேல் கண்மூடித்தனமாக இருக்க முடியாது, அதற்கு பதிலாக, ஒன்று அரேபியன் கடலிலும், மற்றொன்று மத்தியதரைக் கடலிலும் உள்ளதான இரண்டு இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியது என்று செய்திகள் வெளிவரும் அளவிற்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலான பதிலடி கொடுக்கும்.

ஈரானிய கப்பல்கள் மீதான இஸ்ரேலின் இரகசியத் தாக்குதல்கள் அதன் நடவடிக்கைகளில் ஒரு புதிய முன்னணிக்கு வழிவகுத்தன, அவை பெரும்பாலும் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களாக இருந்தன. டெல் அவிவ் ஈரானை தனிமைப்படுத்துவதற்கான அதன் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க தலைமையிலான பினாமிப் போர் தொடங்கப்பட்டதிலிருந்து, அண்டை நாடான சிரியாவில் லெபனானின் ஹெஸ்பொல்லா உட்பட ஈரானுடன் இணைக்கப்பட்ட இலக்குகள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியதை அது ஒப்புக்கொண்டுள்ளது. இது, Natanz அணுசக்தி நிலையத்தில் உள்ள ஒரு மேம்பட்ட மையவிலக்கு ஒருங்கிணைப்பு ஆலையை அழித்ததான ஜூலை மாதம் நடத்தப்பட்ட தாக்குதலும், மற்றும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டின் அணுசக்தி திட்டத்தை நிறுவிய முன்னணி ஈரானிய விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேஹ் (Mohsen Fakhrizadeh) படுகொலை செய்யப்பட்டதும் உட்பட, ஈரானுக்குள் தொடர்ச்சியான பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

2018 இல் JCPOA ஐ வாஷிங்டன் ஒருதலைபட்சமாக இரத்து செய்ததன் பின்னர் தொடங்கப்பட்டதான, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரானுக்கு எதிரான “அதிகபட்ச அழுத்தம்” குறித்த பிரச்சாரத்துடன் இணைந்ததாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மில்லியன் கணக்கான ஈரானியர்கள் பசி மற்றும் நோய், வெடித்துப் பரவும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் முக்கிய மருந்துகளும் மற்றும் மருத்துவ பொருட்களும் விநியோகிக்கப்படுவதில் உள்ள நெருக்கடி ஆகியவை குறித்து கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கையில், போருக்கு ஒப்பாக, எப்போதும் நெருக்கடிக்குள்ளாக்கும் பொருளாதாரத் தடைகள், அதிலும் குறிப்பாக ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி தொழில் மீதான தடைகள், மற்றும் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள், ஈரானின் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.

ஈரானின் வெளியுறவு விவகார அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் (Mohammad Javad Zarif), இந்த ஆண்டு தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் மீது விதித்த, மீள விதித்த அல்லது மறுபெயரிட்டதுமான சுமார் 1,600 பொருளாதாரத் தடைகளால் நாட்டிற்கு 1 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு நேரடி மற்றும் மறைமுக பொருளாதார சேதம் ஏற்பட்டது என்று கூறினார். பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான லெபனான் உட்பட, பரந்த அளவிலான பிராந்திய விளைவுகளையும் பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தியுள்ளன, லெபனானின் வங்கிகள் லெபனான் மற்றும் சிரிய குடிமக்களுக்கும், அத்துடன் ஹெஸ்பொல்லாவிற்கும் பணத்தை அனுப்புவதற்கான வழி வகைகளாக செயல்பட்டன.

இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு “ஆபத்தான” 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்பக்கூடாது என்று வலியுறுத்தி, “இதற்கு இணையாக, எங்கள் பிராந்தியத்தில் ஈரானிய சண்டையை தொடர்ந்து நாங்கள் தடுக்க வேண்டும். இந்த அச்சுறுத்தல் தத்துவார்த்த விடயம் அல்ல. நான் இதை வாய்சவுடலாக சொல்லவில்லை. பூமியை எதிர்கொள்வதில் வெறுமனே நம்மை அழிக்க அச்சுறுத்துவதான ஈரானின் வெறித்தனமான ஆட்சியை எதிர்கொள்வது குறித்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று செவ்வாய்க்கிழமை அவரது Likud கட்சிக்கு தெரிவித்தார்.

JCPOA வில் மீண்டும் இணையவும் மற்றும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்கவும் பைடென் நிர்வாகம் எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் நாசப்படுத்த நெதன்யாகு உறுதியாக இருக்கும் அதேவேளை, இந்த தாக்குதல்கள் தெஹ்ரான் அதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்திய ஆயுதக்குழுக்களுக்கு அது அளிக்கும் ஆதரவுடன் சேர்ந்து, அதன் அணுசக்தி அபிலாஷைகளை கடுமையாகவும் நீண்ட காலத்திற்கும் கட்டுப்படுத்த ஒப்புக்கொள்வதற்கு அதனை வலியுறுத்தும் இஸ்ரேலின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக உள்ளன என்று இஸ்ரேலிய அதிகாரி கூறியதை நியூயோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டது.

ஐரோப்பிய சக்திகளான சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான வழிகள் குறித்து ஈரானும் அமெரிக்காவும் வியன்னாவில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த போது, நெதன்யாகுவும் பேசினார். தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இரண்டுமே பேச்சுவார்த்தைகளை “ஆக்கப்பூர்வமானவை” என்று வர்ணித்தன. அணுசக்தி ஒப்பந்தத்துடன் தொடர்பில்லாத வேறுபட்ட பல பிரிவுகளையும் உள்ளடக்கி, 2018 முதல் ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளின் சிக்கலான வலையை வாஷிங்டன் ஊர்ஜிதமாக நீக்கியவுடன் ஒப்பந்தத்திற்கு ஈரான் முழு இணக்கத்துடன் திரும்பும் என்று தெஹ்ரான் வலியுறுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அவரது போர்வெறி என்பது, இலஞ்சம், ஊழல் மற்றும் நம்பிக்கை மீறல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீண்டகாலம் தாமதிக்கப்பட்ட விசாரணைக்கான தெளிவான அமர்வுகளை திங்களன்று ஆரம்பிப்பதன் மூலம் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டது, இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் பல ஆண்டுகள் சிறைவாசத்தை எதிர்கொள்வார். நீதிமன்றத்தில் அவர் தன்னை தற்காத்து கொள்ள முடியும் என்று கருதி இராஜினாமா செய்ய மறுத்ததுடன், அவர் தனது வழக்கு விசாரணையை அரசு வழக்குரைஞர் அலுவலகம் “அதிகார துஷ்பிரயோகம்” செய்வதாக குறிப்பிட்டு, “இது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி போல் தோன்றுகிறது” என்று கூறினார். திங்கட்கிழமை அமர்வு முடிந்து வெளியேறிய பின்னர், நெதன்யாகு, அரசு வழக்குரைஞர் சட்டவிரோதமாக ஆதாரங்களை சேதப்படுத்தியதாகவும், தனக்கு எதிராக ஒரு “சூனியவேட்டை” நடத்தி ஒரு நீதித்துறை “சதி” செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நெதன்யாகு, தன் மீது வழக்கு தொடுக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கும், மற்றும் வரவிருக்கும் அரசியலமைப்பு நெருக்கடி பற்றி எச்சரிக்க அவரது விமர்சகர்களைத் தூண்டி, நீதித்துறை அமைப்பை திறம்பட நடுநிலையாக்க அதிகரிக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும் சட்டங்களை இயற்றுவதற்கு ஏதுவாக வலுவான ஒரு கூட்டணி அரசாங்கத்தை ஒழுங்கமைக்கும் ஒரு முயற்சியாக, அதிகரித்து வரும் வேலையின்மை வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு மத்தியில், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் நான்கு முடிவில்லாத தேர்தல்களை நடத்தியுள்ளார். ஜனாதிபதி ரியூவென் ரிவ்லின் (Reuven Rivlin), நெசெட்டில் (Knesset) மிகப்பெரிய கட்சியான லிகுட் கட்சியைச் சேர்ந்த நெதன்யாகுவை ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்ய அழைப்பு விடுத்துள்ள போதிலும், இன்னும் அடுத்த தேர்தலுக்கு துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவரால் அதைச் செய்ய முடியாது என்று பரவலாக நம்பப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், ஈரானுடனான போருக்கு தூண்டுவது சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் பதட்டங்களை வெளிப்புறமாக திசைதிருப்ப உதவும் என்றும், மேலும் அத்தகைய போர் முழு பிராந்தியத்தையும், உண்மையில் முழு உலகையும் மூழ்கடிக்கக்கூடும் என்றாலும், அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்க வைத்துக் கொள்ள அவருக்கு உதவும் என்றும் நெதன்யாகு கணக்கிடுகிறார்.

Loading