மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பெருந் தொற்றுநோய் நாளாந்தம் உச்சபட்சத்தை தாண்டி பரவி கொண்டிருக்கும் நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிகின்றன, மருத்துவமனைகள் நோயாளிகளின் வருகையால் மூழ்கி கொண்டிருக்கின்றன, மேலும் இதனால் சுகாதாரப் பணியாளர்களும் சோர்ந்துவிட்டனர்.
வெள்ளிக்கிழமை மட்டும் 203,000 அமெரிக்கர்களுக்கு கோவிட்-19 நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்பதுடன், ஏழு நாள் சராசரி 170,000 க்கும் அதிகமாக உள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும், நாளாந்தம் 1,500 க்கும் அதிகமானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள், இது மே மாதத்திற்கு பின்னைய உச்சபட்ச நிலையாகும். டிசம்பர் மாத மத்தியில் அமெரிக்கா 300,000 இறப்புக்களை பதிவு செய்யும் என்றும், நாளாந்தம் அதிகபட்சம் 21,000 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனைகளில் சேரக்கூடும் என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention-CDC) முன்கணிக்கிறது.
நன்றி தெரிவித்தலுக்காக பயணிப்பதற்கு எதிராக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது, இது ஆண்டின் பரபரப்பான பயண வாரங்களில் ஒன்றாகும். மேலும், வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளில் வசிக்கும் மக்கள் இரவு உணவு விருந்து கொண்டாட்டங்களை தங்களது வீடுகளிலேயே நடத்திக் கொள்ள வேண்டும் என்று மக்களை கட்டுப்படுத்த இது பரிந்துரைக்கிறது.
“அதாவது ஏற்படக்கூடிய சோகம் என்னவென்றால், உங்களது குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் இந்த குடும்ப கூட்டத்தில் பங்கேற்பதால், அவருக்கு கடுமையாக நோய்தொற்று ஏற்படுவதில் சென்று முடியலாம், அவரை மருத்துவமனையில் சேர்க்க நேரிடலாம் அல்லது இறந்து கூட போகலாம். அவ்வாறு நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை,” என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கோவிட்-19 விவகாரம் தொடர்புபட்ட மேலாளரான டாக்டர் ஹென்றி வால்கே, கடந்த வாரம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார்.
இந்த நிலைமைகளின் கீழ், பலர் பயணம் செய்யக்கூடாது என தீர்மானிக்கின்றனர். நன்றி தெரிவித்தல் கொண்டாட்டத்திற்காக பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட பாதிக்கும் மேலாக குறைந்துள்ளது.
என்றாலும், கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளும் பூட்டுதல் நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கு இடையில், விமான நிலைய பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் வழியாக மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர், இது மார்ச் மாதத்திற்கு பின்னைய பரபரப்பான பயண வார இறுதியாக இருந்தது என்று போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீடு திரும்புவதற்கும் அவர்களது குடும்பத்தினரைப் பார்ப்பதற்கும் பயணிகள் விமானங்களில் திரண்டதால் நீள்வரிசைகள் முனையங்கள் வரை அணிவகுத்திருந்தன.
நவம்பர் 25 முதல் நவம்பர் 29 வரை நீடிக்கும் நன்றி தெரிவித்தல் விடுமுறை காலத்தின் போது அமெரிக்கா முழுவதுமாக கார், விமானம் மற்றும் இரயில் மூலம் 50 மில்லியன் பேர் வரை பயணம் செய்வார்கள் என்று அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கம் முன்கணிப்பதாக அனைத்தும் தெரிவிக்கின்றன. இது 2019 ஆம் ஆண்டில் இதே காலத்தில் பயணித்த மக்கள் எண்ணிக்கையிலிருந்து 10 சதவிகிதம் குறைந்துள்ளதை குறித்தாலும், இதுபோன்று பெருமளவில் மக்கள் பயணிக்கும் நிகழ்வுகள் பேரழிவுகர விளைவுகளை ஏற்படுத்தும். சீன சந்திர புத்தாண்டை (Lunar New Year) குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரத்திலிருந்து ஐந்து மில்லியன் மக்கள் பயணித்ததன் விளைவாகத்தான் தொற்றுநோய் அதன் ஆரம்பகட்ட பரவலைக் கண்டது, அதாவது கோவிட்-19 நோய்தொற்றுக்கள் முதன்முதலில் இங்கு தான் கண்டறியப்பட்டன. பின்னர் இந்த வைரஸ் விரைவில் சீனாவிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
அக்டோபர் 12 ஆம் திகதி நன்றி தெரிவித்தல் கொண்டாட்டத்திற்காக கனடா முழுவதுமாக குடும்பங்கள் ஒன்றுகூடியதன் பின்னைய இரண்டு வாரங்களில் அங்கு கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. 1918 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சல் பெருந் தொற்றுநோய் பரவிய காலத்தில், அமெரிக்காவில் நன்றி தெரிவித்தல் விழா கொண்டாடப்பட்டதால் நோய்தொற்றின் பேரழிவுகர மூன்றாவது அலை அங்கு எழுச்சி கண்டு, 1919 கோடை காலம் வரை தொடர்ந்து குறையாமல் பரவிக் கொண்டிருந்தது.
கோவிட்-19 நோய்தொற்று எவ்வாறு பரவுகிறது, மற்றும் அதனால் வயோதிபர் மற்றும் மருத்துவ ரீதியாக பலவீனப்பட்டவர்கள் இடையே அதிகரிக்கும் இறப்பு வீதம் என நோய்தொற்று பற்றி அனைத்தும் அறிந்தும் கூட, ஏன் பலரும் விடுமுறைக்காக பயணம் செய்கின்றனர்?
சிக்கலான மற்றும் மாறுபட்ட காரணிகள் நடைமுறைக்கு வருகின்றன. உதாரணமாக, பல்கலைக்கழக வளாகங்கள் பொறுப்பற்ற வகையில் மீண்டும் திறக்கப்பட்டமை தற்போதைய நோய்தொற்று வெடிப்பை தூண்டுவதற்கு உதவியாக இருந்தது என்ற நிலையில், நேரடி வகுப்புக்கள் இரத்து செய்யப்பட்டு பல மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
நன்றி தெரிவித்தல் கொண்டாட்டம் என்பது அமெரிக்காவின் ஒரு கலாச்சார பாரம்பரியமாகும், இது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடும் ஒரு விழாவாகும். பெருந் தொற்றுநோயின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பெற்றோர், குழந்தைகள், ஏனைய முக்கியமானவர்கள் அல்லது நண்பர்களை பல மாதங்களாக சந்திக்கவில்லை. வேறுபட்ட மட்டங்களிலான சமூக முடக்கங்கள் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்கொண்டுள்ள அதேவேளை, முன்அனுபவித்திராத மன அழுத்தம், குழப்பம் மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பயணம் பாதுகாப்பாக இருக்கக்கூடும், அல்லது குறைந்தபட்சம் ஆபத்தைக் குறைக்க முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். விடுமுறைக்கு முன்னைய நாட்களில், தொற்றுநோய் பரிசோதிப்புக்கான தேவை அதிகரித்துள்ளது, காரணம் என்னவென்றால் பரிசோதனை முடிவு நோய்தொற்று இல்லை என்று தெரிவிப்பதை வைத்து விடுமுறை நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடலாம் என்று மில்லியன் கணக்கானவர்கள் நம்புகிறார்கள். என்றாலும், பரிசோதனை ஆய்வகங்கள், முக்கிய மருத்துவ உபகரணங்களின் விநியோகக் குறைவால், உரிய நேரத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்க முடியாமல் தாமதிக்கின்றன.
ஆளும் வர்க்கமும், ஊடகங்களும், பயணிப்பவர்கள் “சொந்த பொறுப்புணர்வுடன்” நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுக் கூறுவது ஒருபுறம் இருந்தாலும், உண்மை என்னவென்றால், வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருவதானது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன் ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்த “சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும்” கொள்கையின் நேரடி விளைபொருளாகவே உள்ளது.
பெருநிறுவனங்களுக்கு இலாபமீட்டிக் கொடுக்கும் வகையில், தொழிற்சாலைகளிலும் ஏனைய பணியிடங்களிலும் தொழிலாளர்கள் தினமும் தங்களது சக ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பள்ளிகளுக்கும் வேலைகளுக்கும் திரும்பிச் செல்வது பாதுகாப்பானது என்று பொய் கூறுகிறார்கள், அதேவேளை எனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட விமானத்தில் பறப்பதோ அல்லது வாகனத்தில் பயணிப்பதோ எப்படி மோசமாக இருக்க முடியும்? என்று பலர் தங்களுக்குள் கேட்டுக்கொள்கின்றனர்.
மேலும், பெருந் தொற்றுநோய் ஒரு சிறந்த திருப்பத்தை எடுக்க உள்ளது என்று நாளுக்கு நாள் காட்சி விளக்கம் தரும் பிரதான ஊடகங்களால் ஆழ்ந்த குழப்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகக் கட்சியின் தலையங்கக் குரலான நியூ யோர்க் டைம்ஸ், ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள் அவர்களுக்கு பாதுகாப்பான இடங்களே என்று கூறி அவற்றை திறந்து வைத்திருக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையாளரான தோமஸ் ஃபிரீட்மன், “நோயை விட குணமடைதல் மோசமானதாக இருக்கக் கூடாது” என்று நோய்தொற்றை ஆளும் உயரடுக்கு அணுகுவது பற்றி கோஷம் எழுப்பினார்.
இறுதியாக, பொதுக் கல்வி மீதான நான்கு தசாப்த கால தாக்குதல்களின் விளைவாக அமெரிக்காவில் விஞ்ஞான கல்வியின் நிலை மோசமாக உள்ளது, இது, மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பிரிவினர், தங்களையும் மற்றவர்களையும் ஆபத்தில் ஆழ்த்தும் என்பதை அறியாமல், அவர்கள் வைரஸ் இருப்பதை மறுக்கும், பொது இடங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் மற்றும் நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தெளிவான அரசியல் நோக்கங்களுக்காக ட்ரம்ப் தனது நிர்வாக காலத்தில் ஒரு தடுப்பூசி விரைந்து கண்டுபிடிக்கப்படவும் விநியோகிக்கப்படவும் அழுத்தம் கொடுத்த அதேவேளை, ப்ளீச் ஊசி உள்ளிட்ட போலி வைத்தியங்களை மீண்டும் மீண்டும் அவர் ஊக்குவித்து வருவது மக்களிடையே பெரும் அவநம்பிக்கையை விதைத்துள்ளது.
விஞ்ஞானத்தை முறையாக மறுப்பது ட்ரம்ப் நிர்வாகத்துடன் முடிவதல்ல. பின்நவீனத்துவவாதி கல்வியில், பகுத்தறிவை நிராகரிப்பதும், புறநிலை உண்மையை மறுப்பதும் மேலோங்கி நிற்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவில் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு வகிக்கும் தேவாலயங்கள், மூடநம்பிக்கை மற்றும் பின்தங்கிய தன்மையை ஊக்குவிக்கின்றன.
தொழிலாளர் இயக்கத்தின் சீர்குலைவு, மக்கள் நனவை திசைதிருப்புவதிலும், மாசுபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில், ஒரு மூளைச் சாவு அடைந்த மற்றும் கணவரால் கைவிடப்பட்ட டெர்ரி ஷியாவோ (Terry Schiavo) என்ற பெண்மணியின் வழக்கைச் சுற்றிய விநோதமான காட்சியை பற்றிக் குறிப்பிட்டு, உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், மக்கள்தொகையின் பரந்த அடுக்குகளின் மத்தியிலான பின்தங்கிய நிலை மற்றும் மூடநம்பிக்கையின் தாக்கத்திற்குள்ளான சமூக பொருளாதார மாற்றங்களைப் பற்றி குறிப்பிட்டார்:
வெகுஜன அமைப்பின் பிரதான வடிவமாகவும், பெருநிறுவன அதிகாரத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பாகவும் இருந்த அமைப்பு உண்மையில் காணாமற்போனது என்பது, தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாழும் பொருளாதார கட்டமைப்பிற்கும் இடையிலான உறவின் தன்மையை தீவிரமாக மாற்றிவிட்டது. கடந்த காலத்தில் கூட அவர்கள் இந்த கட்டமைப்பை ஒரு வர்க்கமாக நின்று எதிர்த்தனர், தற்போது இந்த கட்டமைப்பை தனிமைப்படுத்தப்பட்ட நபர்களாக எதிர்கொள்கின்றனர். அதாவது, ஒரு சமூகக் கூட்டு உறுப்பினர்களாக அல்ல, மாறாக அவர்கள் சொந்தமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் தங்களைக் காண்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பெருந் தொற்றுநோய் கட்டுப்பாடற்று பரவுகையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் நிலைமையைப் பற்றி இது நன்றாக விவரிக்கிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்காமல், நாளாந்த நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் தாக்கத்தை எதிர்கொள்கின்றனர். ஒட்டுமொத்தமாக தொற்றுநோயின் கொடூரத்தை தமக்குத் தாமே எதிர்கொள்ளும் வகையில் தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்தால் கைவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், நோயைத் தடுக்க மூலவளங்களை திரட்டவோ அல்லது அதன் பாரிய பொருளாதார, சமூக மற்றும் உளவியல் விளைவுகளை நிவர்த்தி செய்யவோ எதுவும் செய்யப்படவில்லை.
தொற்றுநோயின் அபாயங்கள் பற்றியோ அல்லது வைரஸை கட்டுப்படுத்த தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் பற்றியோ தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவுபடுத்துவதில் தொழிற்சங்கங்கள் எந்தவித பங்கையும் கொண்டிருக்கவில்லை. மேலும், பின்தங்கிய தொழிலாளர்களின் ஒரு அடுக்கிற்கு மத்தியில் வளர்த்துவிடப்பட்ட விஞ்ஞான எதிர்ப்பு உணர்வுகளை எதிர்கொள்ளவும் அவை எதையும் செய்யவில்லை. மாறாக, வாகனத் தொழில்கள், மருத்துவமனைகள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் அமசன் சரக்கு கிடங்குகள் போன்ற பணியிடங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதுடன், பலர் இறந்துள்ளனர் என்ற நிலையிலும், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பணியிடங்களை எந்தவித தடையுமில்லாமல் திறந்து வைத்திருப்பதன் மூலம் பெருநிறுவனங்களை தங்களது விருப்பங்களை செயல்படுத்துபவர்களாக பயன்படுத்தி அவர்களுக்கு ஒத்துழைத்துள்ளனர்.
அடுத்த நான்கு வாரங்களில் விரிவடைந்து வியத்தகு முறையில் மோசமடையும் பேரழிவு, பெரும் செல்வந்தர்களின் இலாப நலன்களுக்கு மக்களின் தேவைகள் அடிபணியப்படுவதன் விளைவாகும். பில்லியனர்கள் சாதனை மட்டத்திலான இலாபம் ஈட்டுவதோடு, வோல் ஸ்ட்ரீட் புதிய உயரத்திற்கு உயரும்போது, தொழிலாள வர்க்கம் பெரும் மந்தநிலையிலிருந்து முன்னோடியில்லாத வகையில் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கிறிஸ்மஸுக்குப் பின்னர் முடிவடையும் உதவிகள் மற்றும் வெளியேற்றங்கள் குறித்த தடைகளை நீக்குவதன் மூலம், மில்லியன் கணக்கான மக்கள் தங்களை முற்றிலுமாக ஏழ்மை நிலையில் காண்கின்றனர். ஆளும் வர்க்கத்தால் கலாச்சார பின்தங்கிய தன்மையை மேம்படுத்துவது இப்போது கொலைகார அரசியலுடன் குறுக்கிடுகிறது.
அமெரிக்காவை சூழ்ந்து கொண்டிருக்கும் பேரழிவிற்கு உடனடிக் காரணமாக இருப்பது கொரோனா வைரஸ் பெருந் தொற்றுநோய் என்றாலும், அதன் தாக்கம் அமெரிக்க முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளின் சீரழிவுடன் பிணைந்து கிடக்கிறது.
தொற்றுநோய் ஒரு வரலாற்று நிகழ்வு, முதலாளித்துவத்தின் நீடிக்கும் தன்மை, மனித வாழ்க்கை மற்றும் நாகரிகத்தின் உயிர்வாழ்வையும் அச்சுறுத்துகிறது என்பதை இது நிரூபித்துள்ளது.