உலகளவில் கோவிட்-19 புதிய நோய்தொற்றுக்களின் ஒருநாள் அதிகரிப்பு அண்ணளவாக 308,000 ஐ எட்டியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 புதிய நோய்தொற்றுக்களின் ஒருநாள் அதிகரிப்பு 307,930 ஐ எட்டியுள்ளதாக திங்களன்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தது. அனைத்து கோவிட்-19 தொற்றுநோய் கண்காணிப்பு தரவுத் தளங்களின் கருத்துப்படி, உலகம் விரைவில் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையில் 30 மில்லியனை கடக்கவுள்ளது தெரிய வருகிறது. நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் பெரும்பகுதி எண்ணிக்கையை கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பல வாரங்களாக தொடர்ந்து உலகளவில் இந்நோய்தொற்றுக்கான மையங்களாக உள்ளன.

வூஹானில், தற்போது பிரபலமற்ற பழைய சந்தையில் ஒரு வழக்கமான வாடிக்கையாளராக இருந்த 61 வயது முதியவர் ஒருவர் கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஜனவரி 11 அன்று முதலாவதாக இறந்ததன் பின்னர், எட்டு மாதங்களுக்கு சற்று கூடுதலான காலகட்டத்தில் அண்ணளவாக 930,000 கோவிட்-19 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக Worldometer கோவிட்-19 தரவுத் தளம் மதிப்பிட்டுள்ளது. நாளாந்த இறப்புக்களின் ஏழுநாள் போக்கு சராசரி ஜூலை மாதம் மத்தியிலிருந்து 5,000 ஐ கடந்துள்ளது, இதன் பொருள் உலகளவிலான மொத்த கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை தோராயமாக இரண்டு வாரங்களில் ஒரு மில்லியனை கடக்கும் என்பதாகும்.

டெக்சாஸில் கோவிட்-19 மருத்துவப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களும் மருத்துவர்களும் [Credit: Miguel Gutierrez Jr.]

உலகளவிலான துல்லியமான கோவிட்-19 இறப்பு விகிதம் (மொத்த இறப்புக்கள் மொத்த நோய்தொற்றுக்களால் வகுக்கப்பட்டது) அதிர்ச்சி தரும் வகையில் 3.18 சதவிகிதமாக உள்ளது. எவ்வாறாயினும், இது நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையை பெரிதும் அதிகரிப்பதாக இருக்கும் என்று கருதி ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ச்சியாக பதிவாகும் அதிகப்படியான இறப்புக்களில் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்த தொற்றுநோயின் கொடிய தன்மை குறித்தோ, அல்லது இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், அழித்தொழிக்கவும் சமூகத்தின் மூல வளங்கள் முழுமையாக ஒன்றுதிரட்டப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் நிபுணர்களும் ஏனைய மருத்துவ விஞ்ஞானிகளும் விடுத்த எச்சரிக்கைகள் குறித்தோ முறையான விவாதம் எதுவும் நடத்தப்படவில்லை.

அடுத்த பல மாதங்களுக்கான முன்கணிப்புக்களோ பயங்கரமானவையாக உள்ளன. பொருளாதாரம் முழு வேகத்தில் செயல்படுவதை உறுதிசெய்ய ஆளும் வர்க்கங்களால் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ள சமூக நோயெதிர்ப்புக் கொள்கையை ஒவ்வொரு நாட்டின் தொழிலாள வர்க்கமும் எதிர்க்கவில்லை என்றால், அதுவே உயிர் பலிகள் மற்றும் நோய்தொற்று பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களின் அதிகரிப்பை துரிதப்படுத்தும்.

“இது கொடிய வஸ்து. இது உங்களது கடுமையான காய்ச்சலைக் காட்டிலும் மிகவும் கொடியது… மேலும், ஐந்து சதவிகித இறப்பு விகிதம் என்பது ஒரு சதவிகிதம் மற்றும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான இறப்பு விகிதத்திற்கு எதிர்மாறாக உள்ளது” என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் வாஷிங்டன் போஸ்டின் மூத்த நிரூபர் பாப் வூட்வார்ட் (Bob Woodward) உரையாடியதை ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புக் கொண்டதன் பின்னர் ஆறு மாதங்களுக்கும் மேலாகிறது.

உலகளவிலான கோவிட்-19 இறப்பு விகிதம் (Credit: Our World in Data)

WSWS குறிப்பிட்டுள்ளபடி, தொற்றுநோயின் கொடிய யதார்த்தமான விளைவை மூடிமறைக்கும் சதியில் ட்ரம்பின் அமைச்சரவை, காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர், மற்றும் ஊடக ஸ்தாபகமும் ஈடுபட்டன. ஐரோப்பிய தலைவர்களுக்கும் சீனா இதேபோன்ற எச்சரிக்கைகளை வழங்கியது முற்றிலும் வெளிப்படையானது, ஏனென்றால் அவர்களது ஏமாற்றும் வாய்ச்சவடால்களும் மோசமான நடவடிக்கைகளும் அநேகமாக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஒத்தவையே.

இந்த வார இறுதிக்குள்ளாக அமெரிக்கா 200,000 இறப்புக்களை கடப்பதற்கு தயாராகவுள்ளது, இது முதலாம் உலகப் போர், கொரியப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகிய போர்களின் அமெரிக்க இறப்புக்களின் மொத்த உண்மையான எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பழமைவாத முன்கணிப்பின்படி, இவ்வெண்ணிக்கை 410,000 ஐ எட்டக்கூடும், இது இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த மொத்த அமெரிக்க போர் இறப்புக்களுக்கு சமமானதாகும்.

இந்த மோசமான புள்ளிவிபரங்கள் ஒருபுறமிருக்க, ட்ரம்ப், தொற்றுநோய் விடயத்தில் நாடு “கடினமான காலத்திற்குப் பின்னர் நிலைமை மேம்படத் தொடங்குகிறது” என அறவிக்கிறார், இது, வியட்நாம் போரின்போது “சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சம்” தெரிவதாக கூறப்பட்டதற்கு, அல்லது ஈராக்கில் மூன்று மாத கால அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின்போது “இலக்கு அடையப்பட்டுவிட்டது,” என்று ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பெருமை பீற்றியதற்கு ஒருபக்கமாக வரலாற்றில் இதுவும் ஒரு இடத்தை பிடிக்கும் என்பதாகத் தெரிகிறது.

கோவிட்-19 நோய்தொற்றுக்களின் ஒட்டுமொத்த உலகளாவிய எண்ணிக்கை (Credit: Our World in Data)

ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை, அவர்களது ஜனாதிபதி வேட்பாளர், ட்ரம்பின் பெரும் தோல்வி மற்றும் வெளிப்படையான அலட்சியத்தின் காரணமாக அரசியல் ரீதியாக இலாபமடைவர் என்று அவர்கள் நம்புகின்றனர். என்றாலும் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களும், தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களை மீண்டும் திறப்பதையும், மற்றும் நோய் மற்றும் இறப்பின் புதிய எழுச்சி அலையை ஏற்கனவே தொட்டுள்ளதான பள்ளிக்கு மீண்டும் திரும்பும் பிரச்சாரத்தையும் ஊக்குவித்து மாநில அளவிலும் அதே கொள்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும் காங்கிரஸிலுள்ள, இரு முதலாளித்துவக் கட்சியினரும் தொற்றுநோயின் தாக்கத்தால் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்ட மில்லியன் கணக்கானோர் மீது தமது அயோக்கியத்தனத்தை காட்டியுள்ளனர். ஜனநாயகக் கட்சியினரோ குடியரசுக் கட்சியினரோ, பெரிய நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் 3 டிரில்லியன் டாலர் பிணையெடுப்பை வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற, வானத்தையும் பூமியையும் புரட்டிப் போட்டதன் பின்னர் கூட, 20 மில்லியன் தொழிலாளர்களுக்கான மத்தியரசின் கூடுதல் வேலையின்மை சலுகைகள் ஜூலை 31 அன்று காலாவதியாகிப்போன நிலையில், தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் தமது ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை.

மக்கள்தொகையில் பெரும்பகுதியினரை நோய்தொற்றிக் கொள்ளும், மில்லியன் கணக்கானவர்களை உயிரிழக்கச் செய்யும், அல்லது அவர்களது ஆரோக்கியத்திற்கு பெரியளவில் மற்றும் வாழ்நாள் முழுவதுமான பாதிப்பை ஏற்படுத்தும் சமூக நோயெதிர்ப்பு பெருக்க கொள்கைக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலான எதிர்ப்பு பெருகி வருவதைக் கண்டே அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துப் பிரிவுகளும் உண்மையாக கவலைப்படுகின்றன. மழலையர் பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படுவது குறித்த போராட்டமே தற்போது மையப் புள்ளியாக உள்ளது, இந்நிலையில் ஜோ பைடென் மற்றும் கமலா ஹரீஸின் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கீழ்ப்படிய வைக்க தொழிற்சங்கங்கள் முயற்சித்த போதிலும் அங்கு வேலைநிறுத்தங்கள் வெடித்தன.

கோவிட்-19 காரணமான ஒட்டுமொத்த உலகளாவிய இறப்புக்கள் (Credit: Our World in Data)

தொழிலாள வர்க்கத்தை ஒடுக்க ஜனநாயகக் கட்சியினர் தொழிற்சங்கங்களையே நம்பியுள்ள அதேவேளை ட்ரம்ப் நிர்வாகம் அதற்கு வெளிப்படையாக படைகளை பயன்படுத்துவதை நோக்கித் திரும்புகிறது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பாளரான Michael Reinoehl ஐ பொலிஸ் சுட்டதை ட்ரம்ப் கூட பாராட்டியுள்ளார், மேலும் விஸ்கான்சினில் கெனோஷாவில் இரண்டு Black Lives Matter எதிர்ப்பாளர்களைக் கொன்ற தீவிர வலதுசாரி துப்பாக்கிதாரியை பாதுகாத்தார். அத்துடன், 1807 கிளர்ச்சிச் சட்டத்தை (Insurrection Act of 1807) செயல்படுத்தவிருப்பதாகவும், அரசியல் எதிரிகளுக்கு எதிராக இராணுவத்தை அழைக்கவிருப்பதாகவும் அவர் பலமுறை அச்சுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெடிக்கும் பாசிச போக்குகளின் மேலதிக அறிகுறியாக, நீண்டகால அரசியல் முகவரும், சமீபத்தில் பொது விவகாரங்களுக்கான சுகாதார மற்றும் மனித சேவைகள் (Health and Human Services of Public Affairs) துறையின் உயர்மட்ட தகவல் தொடர்புகளுக்காக உதவி செயலாளராக நியமிக்கப்பட்டவருமான, மைக்கெல் காப்புட்ரோ (Michael Caputo), மத்திய நோயெதிர்ப்பு அமைப்பான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்குள் (Centers for Disease Control and Prevention) ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக “தேசத்துரோக” நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளின் “எதிர்ப்புப் பிரிவு” ஒன்று உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

காப்புட்ரோ இன் மோசமான கருத்துக்கள் அவர் தனது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் நேரடியாக தொகுத்து வழங்கிய காணொளியில் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது, இது நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கை மூலமாகவும், பின்னர் வாஷிங்டன் போஸ்ட் க்கு காப்புட்ரோ அளித்த பேட்டியின் மூலமாகவும் உறுதியானது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக ட்ரம்பின் பங்கை சிறப்பாக காட்டுவதற்காக CDC உம் HHS உம் வழங்கிய மருத்துவ அறிக்கைகளில் காப்புட்ரோ இன் பங்கு குறித்த ஊடக விமர்சனங்களால் இந்த வசைமாரி வெளிப்படையாக்கப்பட்டது.

பல்வேறு வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் ட்ரம்பின் முன்னாள் ஊழியராக இருந்த காப்புட்ரோ, உலகளவிலான நோய்தொற்றுக்கு மத்தியில், ஏப்ரல் மாதம் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் நியமிக்கப்படுகையில், பொது சுகாதார நெருக்கடி பற்றிய HHS தகவல்தொடர்புகளை மேற்பார்வையிடும் அளவிற்கு அத்துறையில் அவருக்கு பின்னணி எதுவும் கிடையாது.

கடந்த மாதம் ஓரிகானின் போர்ட்லாந்தில் ஒரு வலதுசாரி எதிர்ப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டது, ட்ரம்பிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிரான பரவலான இடதுசாரி வன்முறைக்கு தயாராவதற்கான ஒரு “கருவியாக” இருந்தது என்று தனது காணொளி பதிவில் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தான் தேர்தலில் வெற்றி பெறுவார், ஆனால் அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஜோ பைடென் அதை ஒப்புக்கொள்ள மாட்டார் என்ற நிலையில், “ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு” தயாரிப்பு செய்யப்படும் என்று அவர் முன்கணித்தார்.

“டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் நிற்க மறுத்தால், அப்போது சுடுதல் தொடங்கும்,” என்று அவர் கூறினார். “சீமாட்டிகளே சீமான்களே, உங்களிடம் துப்பாக்கிகள் இருந்தால், தோட்டாக்களை வாங்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால் அது கிடைப்பது கடினமாக ஆகப் போகிறது” என்றும் கூறினார். மேலும் அவர், தான் சரீர ரீதியாக அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தார் என்றும், தன்னுடைய “மன ஆரோக்கியம் நிச்சயமாக தோல்வியடைந்தது” என்றும் கூறினார்.

HHS இல் உயர்மட்ட மக்கள் தொடர்பு பணிக்கு அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் கூட, காப்புட்ரோ மார்ச் 11 அன்று, “ஜனநாயகக் கட்சியின் 2020 வெற்றி மூலோபாயம் வேலைசெய்வதற்கு, 100,000 க்கு மேலான அமெரிக்கர்கள் இறக்க வேண்டும்” என்று ட்வீட் செய்திருந்தார். ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்டு, இரு கட்சிகளின் ஆளுநர்களின் வற்புறுத்தலின் பேரில் அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், இறப்பு எண்ணிக்கை மே மாதம் இறுதிக்குள் இருந்ததை காட்டிலும் தற்போது மிக அதிகமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கு மத்தியில் அமெரிக்க ஆளும் உயரடுக்கு கொண்டுள்ள கொலைகாரக் கொள்கையும், மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் காணப்படும் பாசிச போக்குகளின் எழுச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்வுகளாகும்.

அமெரிக்க முதலாளித்துவம் படுகுழியில் வீழ்ந்து, சிக்கலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற நிலையில், ஆளும் உயரடுக்கின் எந்தவொரு பிரிவினரிடமும் அதற்கான பதில் இல்லை.

கோவிட்-19 குறித்த தனது சமீபத்திய அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்துள்ளபடி:

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது முதலில் மருத்துவ ரீதியான கேள்வி அல்ல. சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை, போர், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சர்வாதிகாரம் போன்ற தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் எந்தவொரு பெரிய பிரச்சினையையும் போல, தொழிலாள வர்க்கம் தனது கைகளில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கும், மற்றும் சமூக தேவையின் அடிப்படையில் சமூகம் முழுவதையும் மறுசீரமைப்பதற்கும் தேவைப்படுவன பற்றி எழுப்புகின்ற ஒரு அரசியல் ரீதியான மற்றும் புரட்சிகரமான கேள்வியாகவே இது உள்ளது.

மேலதிக வாசிப்புக்களுக்கு:

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின

[10 September 2020]

Loading