மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதன்கிழமை, சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பிலிப்பைன்ஸ் வலிமைமிக்க ரோட்ரிகோ டுரேற்ற இன் மிருகத்தனமான ஆட்சியை பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்ததை விளக்கி வரலாற்றாசிரியர் ஜோசப் ஸ்காலிஸின் ஒரு விரிவுரையை நிகழ்த்த ஒழுங்கமைத்தது.
“முதலில் சோகம், இரண்டாவது கேலிக்கூத்து: மார்கோஸ், டுரேற்ற மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள்” என்ற தலைப்பிலான சொற்பொழிவு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP), அதன் நிறுவனர் மற்றும் “கோட்பாட்டாளர்” ஜோஸ் மரியா சிஸன் ஆகியோரின் இரட்டை வேடம் மற்றும் அவர்கள் அடித்தளமாக கொண்டிருந்த ஸ்ராலினிசம் மற்றும் மாவோவாதத்தின் திவாலான முன்னோக்கு தொடர்பான பாரிய அம்பலப்படுத்தலாக இருந்தது.
சமகால மூல ஆதாரங்களை கொண்ட ஒரு விரிவான ஆய்வு, 2016 ல் பாசிச பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவிற்கும் முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கோஸ் சர்வாதிகாரத்திற்கு வழங்கிய ஆதரவுக்கும் இடையிலான அரசியல் தொடர்ச்சியை இது நிரூபிக்கிறது.
சொற்பொழிவுக்கு முந்தைய நாட்களில், ஸ்காலிஸ் மீது அவதூறான தாக்குதலை சிஸன் தொடங்கினார். எந்தவொரு ஆதாரங்கள் இல்லாமல் அவரை சிஐஏ முகவராக முத்திரை குத்தினார். விரிவுரைக்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 25 அன்று, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி தனது செய்தித்தாளான Ang Bayan இன் சிறப்பு பதிப்பை சீஸனுடன் ஒரு நேர்காணலுக்கு அர்ப்பணித்தது. "பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிலிப்பைன்ஸ் புரட்சி மீதான ட்ரொட்ஸ்கிச தாக்குதல்களை விமர்சித்தல்" என்ற தலைப்பில், ஸ்காலிஸுக்கு எதிரான தனது பொய்களை எந்த ஆதாரமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் சிஸன் கூறினார்.
தனது விரிவுரையை ஆரம்பிக்கும்போது, "பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி டுரேற்ற இன் செயல்படுத்துபவர் மற்றும் ஆதரவாளர்" என்பது ஒரு பெரிய பொய் என்ற சீஸனின் பொய்யான அறிவிப்பை முறையாக ஸ்காலிஸ் திட்டமிட்டபடி இல்லாதொழித்தார். சிஸன், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய முன்னணி அமைப்புகளும் பாசிச ஜனாதிபதிக்கும் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான அவரது போருக்கான ஆதரவு ஆகிய பற்றிய புகைப்படங்கள் மற்றும் மேற்கோள்களின் வடிவத்தில் ஸ்காலிஸ் மறுக்கமுடியாத ஆதாரத்தை வழங்கினார். அவரது விரிவுரை, மாவோவாத சித்தாந்தம் பற்றிய ஆய்வின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிராக விதிவிலக்கின்றி திரும்பிய டுரேற்ற போன்ற நபர்களை, “முற்போக்கான முதலாளித்துவத்தின்” பிரதிநிதிகளாக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி உயர்த்தியது ஏன் என்பதை விளக்கினார்.
இந்த விரிவுரையில் முன்னணி கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பரந்த பொதுமக்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை உட்பட ஆசியாவின் பெரும்பகுதி மற்றும் பிலிப்பைன்ஸிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் இருந்தனர். பங்கேற்பாளர்கள் இணைய கலந்துரையாடல் மன்றத்தினாடாக நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து விரிவுரையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
விரிவுரைக்குப் பின்னர், சமூக ஊடகங்களில் பொது விவாதம் தொடர்ந்தது, அங்கு மக்கள் ஸ்காலிஸ் பற்றி தமது பிரதிபலிப்பை வெளியிட்டனர். அவர்களின் பிரதிபலிப்பு மிகவும் சாதகமானதாக இருந்தது. "நான் விரிவுரையால் அடித்துச் செல்லப்பட்டேன்" என்று ஒருவர் எழுதினார். “நான் பார்த்தேன், இறுகிப்போனேன், பல தெளிவுபடுத்தல்கள், ஆழமான ஆராய்ச்சி,” என்று மற்றொருவர் வெளியிட்டார். இந்த விளக்கவுரை "வெடிப்புத்தன்மையானது!" மற்றும் "ஒரு தீவிரமான பேச்சு, வரலாற்றுத் தகவல்களால் நிறைந்திருக்கிறது." ஒரு வர்ணனையாளர் ஸ்காலிஸின் "துணிச்சலான மற்றும் பூமி அதிரும் விளக்கக்காட்சிக்கு" நன்றி தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்காக வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலைமைகளின் கீழ் வரலாற்று உண்மைக்கான உணர்ச்சிமிக்க வேண்டுகோளுடன் ஸ்காலிஸின் விரிவுரை முடிகிறது. இந்த சொற்பொழிவு, கடந்த நூற்றாண்டில் ஸ்ராலினிசம் மற்றும் அதன் சீன மாதிரியான மாவோவாதம் ஆற்றிய தீங்கு விளைவித்த பாத்திரத்தை அறிமுகப்படுத்த பரவலாக விநியோகிக்கப்பட்டு ஆய்வு செய்ய தகுதியானது. விரிவுரையின் இணைப்பை சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகளில் பரவலாக பகிர்ந்து கொள்ள எங்கள் வாசகர்களை ஊக்குவிக்கிறோம்.