முன்னோக்கு

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் சதி: விஞ்ஞானத்திற்கு எதிராக இலாபம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா எங்கிலுமான பள்ளிகளில் மரணகதியிலான பேரழிவு உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளும் இந்த வைரஸைப் பரப்பக்கூடியவர்கள் என்பதற்கும், அவர்களும் இந்த நோயில் பாதிக்கப்படக்கூடியவர்களே என்பதற்கும் இவ்விரண்டுக்குமே விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும், நூறாயிரக் கணக்கான குழந்தைகளும் ஆசிரியர்களும் ஒவ்வொரு வாரமும் நேரடியாக பள்ளிகளுக்குத் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

Education Weekly இல் வெளியான ஒரு விபரப்பட்டியல், அமெரிக்காவின் மொத்த மாவட்டங்களில் அண்மித்து 3 சதவீதத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தில் 382 பள்ளி மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகளைத் திறப்பதற்கான விபரங்களைப் பட்டியலிடுவதுடன், 200,000 மாணவ, மாணவிகள் ஏற்கனவே வகுப்பறைகளுக்கு திரும்பியுள்ளதையும் ஆகஸ்ட் இறுதி வாக்கில் 2.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முழு நேர பள்ளிகளுக்குத் திரும்பி இருப்பார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவின் அண்மித்து மொத்தம் 14,000 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் அந்த விபரங்கள் விரிவுபடுத்தப்பட்டால், பத்து மில்லியன் கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் அடுத்த சில வாரங்களில் பள்ளிக்குத் திரும்பிவிடுவார்கள்.

நியூ யோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ குமோ, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 135,000 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுடன் நாட்டின் மிகப் பெரிய பள்ளி மாவட்டமான நியூயோர் நகரம் உட்பட, அம்மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்க ஏற்கனவே பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

இந்த அரையாண்டு பருவம் தொடங்குவதற்கு முன்னதாக ஆசிரியர்கள் தங்களின் விருப்பங்களையும் இரங்கல்களையும் தினந்தோறும் எழுதி வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரி வளாங்கங்களுக்குத் திரும்புகையில் அவர்கள் கொரோனா வைரஸால் நோய்தொற்றுக்கு உள்ளாகும் சம்பவத்திற்குப் பள்ளிகள் பொறுப்பாகாது என்பதிலிருந்து அவற்றை விடுவித்துக் கொள்வதற்காக மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் உறுதிமொழிப் பத்திரங்களில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த வைரஸால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை என்ற வாதங்களைக் கொண்டு, ட்ரம்ப் மற்றும் பல்வேறு வலதுசாரி ஆளுநர்களால் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான இந்த முனைவு நியாயப்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகையின் அரசியல் அழுத்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட CDC இன் திருத்திய வழிமுறைகளின் ஆரம்பத்திலேயே, “இந்த வைரஸைப் பரவச் செய்யும் பிரதான உந்துசக்திகளில் குழந்தைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை,” என்று மோசடியாக அறிவிக்கிறது.

திங்கட்கிழமை வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில், ஜனாதிபதி ட்ரம்ப் குழந்தைகள் மத்தியில் நோய்தொற்று பரவி வரும் செய்திகளை அலட்சியப்படுத்தி அறிவிக்கையில், “பெரும்பாலும், அவர்கள் அந்த நோயால் பாதிக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன்... அங்கே சிறியளவில், மிகச் சிறியளவில் மரணம் இருக்கலாம், அவர்கள் மிக விரைவாக குணமாகி விடுகிறார்கள்,” என்றார்.

ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்த தொழிற்சங்கங்கள், அமெரிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பு (AFT) மற்றும் தேசிய கல்வித்துறை ஆணையம் (NEA) ஆகியவை அவற்றின் பாகத்தில், ஈவிரக்கமின்றி பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மக்களின் எதிர்ப்பை ஒடுக்க அவர்களால் ஆனமட்டும் அனைத்தையும் செய்து வருவதுடன், பள்ளிகளைப் பாதுகாப்பாக மீண்டும் திறக்க முடியும் என்று பொய்யாக வாதிடும் பெருநிறுவன மற்றும் அரசியல் குரல்களின் கூச்சல்களில் இணைந்துள்ளன.

இளைஞர்கள் இந்த வைரஸால் "பாதிக்கப்படுவதில்லை" என்ற கூற்று ஓர் அப்பட்டமான பொய்யாகும். சமீபத்திய புள்ளிவிபரங்கள் சிறு குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையேயும் நோய்தொற்று பெருமளவில் அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

• ஜூலை மாத கடைசி இரண்டு வாரங்களில் அண்மித்து 100,000 குழந்தைகளுக்குக் கொரொனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக குழந்தைகள் மருத்துவத்திற்கான அமெரிக்க ஆணையம் ஞாயிற்றுக்கிழமை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இது அதற்கு முந்தைய இரண்டு வாரங்களை விட 40 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட ஏறக்குறைய ஐந்து மில்லியன் கோவிட்-19 நோயாளிகளில், 338,000 க்கும் அதிகமான குழந்தைகள் இருந்தனர்.

• மார்ச் மற்றும் ஜூலை மாத இறுதிக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் ஒரே சீராக அதிகரித்திருப்பதாக வெள்ளிக்கிழமை CDC வெளியிட்ட ஒரு புதிய அறிக்கை கண்டறிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் மூன்றில் ஒன்றை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டியிருந்தது — இந்த விகிதம், கொரோனா வைரஸூடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயது வந்தவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்களின் விகிதத்திற்கு ஒத்திருக்கிறது.

• கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட மழலைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தொண்டை மற்றும் சுவாசக்குழாய் பாதையில் மிகப்பெரும் வைரஸ் தாக்கம் ஏற்பட முடியும் — இது பருவ வயதடைந்தவர்களுக்கு ஏற்படுவதை விட 100 மடங்கு அதிகம் என்பதை சமீபத்தில் வெளியிடப்பட்ட JAMA இன் மற்றொரு ஆய்வு எடுத்துக்காட்டியது.

விஞ்ஞானம் தெளிவாக உள்ளது: இந்த தொற்றுநோய் ஆக்ரோஷமாக தொடர்ந்து கொண்டிருக்கையிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்ள மற்றும் பள்ளியின் மற்ற தொழிலாளர்களிடையே எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நாடுகளில், இந்த விளைவுகள் மிகவும் பயங்கரமாக உள்ளன. இஸ்ரேல் இப்போது புதிய நோய்தொற்றுக்களின் தனிநபர் விகிதத்தில் உலகிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது, அங்கே பல வல்லுனர்களும் பொறுப்பின்றி பள்ளிகளை மீண்டும் திறந்ததையே பிரதான காரணியாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இவ்வார ஆரம்பத்தில் ஜோர்ஜியா உயர்நிலை பள்ளிகளின் அனுபவம், பள்ளிகளை மீண்டும் திறப்பதை நியாயப்படுத்துவதற்காக மாவட்டங்களால் மேற்கோளிடப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி நடவடிக்கைகளின் பிரயோசனமின்மையை எடுத்துக்காட்டுகின்றன. புகைப்படங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் மீது பள்ளி நிர்வாகம் விதித்த தடைகளை மீறி, North Paulding உயர்நிலை பள்ளி மாணவர்கள், வகுப்பறைகளின் முதல் ஒரு சில நாட்களில் அவர்களின் பள்ளிகளில் குழந்தைகள் முகக்கவசமின்றி வளாகங்களில் நெரிசலாக நின்ற புகைப்படங்களைக் கசியவிட்டனர்.

கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவருடன் ஆறு அடிக்குள் 15 நிமிடங்களோ அல்லது அதற்கு அதிகமாகவோ நெருக்கமான தொடர்ப்பில் இருந்த எவரொருவரையும் பள்ளிகள் தனிமைப்படுத்தும் என்ற சுகாதாரத்துறை நெறிமுறையைத் தவிர்ப்பதற்கான மாவட்ட கல்வித்துறையின் சூழ்ச்சியை அந்த கசியவிடப்பட்ட காணொளிகள் அம்பலப்படுத்தின. அந்த கசியவிடப்பட்ட காணொளி துணுக்கில், பொதுக்குழுவின் உறுப்பினர்கள் இந்த நெறிமுறையைத் தவிர்ப்பதற்காக மாணவர்கள் ஒவ்வொரு 14 நிமிடத்திற்கு ஒருமுறை அமருமிடங்களை மாற்றிக் கொள்ள அறிவுறுத்துகிறார்.

அந்த கசியவிடப்பட்ட புகைப்படம் பரபரப்பாக பரவியதும் Paulding உயர்நிலை பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பள்ளிகளில் டஜன் கணக்கான புதிய நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர், இது ஜோர்ஜியாவின் சூழ்நிலை ஒன்றும் விதிவிலக்காக இல்லை மாறாக அதுவும் நடைமுறையின் பாகமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் அவர்கள் மட்டுமே குழந்தைகளின் கல்விசார் தேவைகள் மற்றும் உணர்வுரீதியிலான தேவைகளைக் குறித்த கவலைகளால் உந்தப்பட்டிருப்பதாக ஒன்றுபோல வாதிடுகிறார்கள். திங்கட்கிழமை, புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநர் Ron DeSantis, இந்த அரையாண்டு கல்வி பருவத்தின் முதல் மாதத்தில் இணையவழி வகுப்புகளை மட்டுமே நடத்துவதற்கான அம்மாநிலத்தின் மூன்றாவது மிகப்பெரிய பள்ளிக்கல்வித்துறை மாவட்டத்தின் திட்டத்தை அவர் நிராகரித்து, அதற்கு பதிலாக 223,000 Tampa பகுதி மாணவர்கள் ஆகஸ்ட் 24 இல் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமென கோரிய போது அந்த போலியான வாதத்தைத் தான் பயன்படுத்தினார்.

குழந்தைகளின் நல்வாழ்வு மீதான அக்கறை என்று கூறப்படுவது இவ்விரு பெருநிறுவன ஆதரவிலான கட்சிகளின் எந்தவொரு அரசியல்வாதிகளையும் பொதுக்கல்வியின் நிதி ஒதுக்கீட்டை குறைப்பதில் இருந்தும், பள்ளிகளை மூடுவது மற்றும் அத்தியாவசிய சேவைகளைக் குறைப்பதில் இருந்தும் தடுத்துவிடவில்லை. இதை விட, இந்த வைரஸால் ஓர் ஆசிரியரையோ, பெற்றோர் அல்லது பாட்டி தாத்தாக்களையோ இழக்கும் குழந்தை மீது சுமத்தப்படும் நிரந்தரமான உளவியல் பாதிப்பைக் குறித்தோ அல்லது (ஒரு குழந்தையாக) சமூகரீதியில் பழகுவதும், கட்டியணைப்பதும் மற்றும் விளையாட்டு மைதானங்களில் விளையாடுவதும் விதிமுறைகளுக்கு எதிரானது என்று அன்றாடம் அவர்களுக்குக் கூறப்படும் போது அவர்கள் சமூகரீதியிலும் உணர்வுரீதியிலும் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதையோ குறித்து அவர்களில் எவருமே பேசத் துணியவில்லை.

குழந்தைகளின் பெற்றோர்கள் வேலைக்குத் திரும்பி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் பிரதான பெருநிறுவனங்களின் பாரிய பிணையெடுப்புக்கு நிதி வழங்க அவசியமான பெருநிறுவன இலாபங்களின் ஓட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதுதான் பள்ளிகளுக்கு மீண்டும் குழந்தைகளை மொத்தமாக அனுப்ப விரும்புவதற்கான ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஒரே காரணமாக உள்ளது. வேலைக்குத் திரும்ப செய்வதற்கான இந்த ஆட்கொலை பிரச்சாரத்தை நிறைவேற்றுவதற்கு, இந்த வைரஸுடன் சேர்ந்த உயிரிழப்புகளுடன் சேர்ந்து, அது வழமையானதாக ஆக்கப்பட வேண்டும். அல்லது அதிகரித்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் குரூரமாக கூறியதைப் போல "என்ன நடக்கிறதோ அது தான் நடக்கிறது.”

இதுதான் உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்களின் கொள்கையாக உள்ளது. ஜேர்மனியில் தற்போது நாளொன்றுக்கு அங்கே 1,000 க்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் உள்ள போதினும், அந்நாட்டின் மாநில அரசாங்கங்கள் அனைத்தும் இந்த கோடை விடுமுறைக்குப் பின்னர் ஈவிரக்கமின்றி பள்ளிகளைத் திறக்க நிர்பந்தித்து வருகின்றன. ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் முன்கண்டிராதளவில் நோயாளிகளின் எண்ணிக்கையையும் மரணங்களையும் அறிவித்து வரும் பிரேசில் உட்பட, குறைந்தபட்சம் 20 நாடுகளின் பள்ளிகள், வரவிருக்கும் மாதத்தில் நேரடியான வகுப்பறை கல்வியைத் தொடங்க திட்டமிட்டு வருகின்றன.

ஒவ்வொரு இடத்திலும் கல்வியாளர்களும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழிலாளர்களும் இந்த வெளிப்படையாக கூறப்படாத மரண தண்டனையை ஏற்க மாட்டார்கள், ஏற்கவும் முடியாது. இந்த பெருநிறுவன மற்றும் அரசியல் சூழ்ச்சிக்கு முன்னால் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு மட்டுமே உயிர்களைக் காப்பாற்ற முடியும், காப்பாற்றும். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடையே அதிகரித்த எதிர்ப்பு பெருகி வருகிறது. கடந்த மாதம், அமெரிக்கா எங்கிலுமான போராட்டங்கள் மற்றும் கொலம்பியா, அர்ஜென்டினா, ஹைட்டி மற்றும் பிற நாடுகளிலும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களுடன் சேர்ந்து அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பள்ளிகளைப் பாதுகாப்பின்றி மீண்டும் திறப்பதற்கு எதிரான எதிர்ப்பின் ஒரு வெடிப்பு இருந்தது. ரோட் தீவில் இருந்து டெக்சாஸ் வரையில், தென் ஆபிரிக்கா, பிரிட்டன், இன்னும் பல நாடுகள் வரையில் உலகெங்கிலும், ஒட்டுமொத்தமாக 300,000 க்கும் அதிகமான உறுப்பினர்களுடன், டஜன் கணக்கான பேஸ்புக் குழுக்கள் உருவாகி உள்ளன.

இந்த எதிர்ப்பு ஒழுங்கமைக்கப்பட்டு திருப்பி விடப்பட வேண்டும். பள்ளிகளை மீண்டும் திறப்பதை நிறுத்தவும், இந்த தொற்றுநோய் பரவலைத் தடுக்கவும், இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் நோய்தொற்றுக்கு ஆளாவதையும் மரணங்களையும் முடிவுக்குக் கொண்டு வரவும், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராக, தொழிற்சங்கங்கள் மற்றும் இரண்டு பெருநிறுவன கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக சாமானிய பாதுகாப்புக் குழுக்களைக் கட்டமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கல்வியாளர்களையும் மற்றும் ஒவ்வொரு துறையின் தொழிலாளர்களையும் வலியுறுத்துகிறது.

இந்த வைரஸ் இல்லாதொழிக்கப்படும் வரையில் எல்லா பள்ளிகளும் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பொதுக் கல்வி மற்றும் இணையவழி கல்விக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். அதிவேக இணைய சேவை, உணவு வினியோகம், மனநல கவனிப்பு, சிறப்பு கல்விக்கான ஆதரவு மற்றும் தொலைதூரத்திலிருந்து தரமான கல்வியை வழங்குவதற்கு அவசியமான ஏனைய எல்லா ஆதாரவளங்களும் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வியாளருக்கும் கிடைக்குமாறு உத்தரவாதப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், தங்களின் குழந்தைகளுடன் வீட்டில் தங்கியிருக்கும் பெற்றோர்களுக்கு முழு வருமானம் வழங்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான சர்வதேச சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பும் இந்த போராட்டத்தையே முன்னெடுத்து வருகிறது. ஆசிரியர்கள் உங்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் உதவிக்காக எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த போராட்டத்தை ஆதரிக்குமாறும் IYSSE இல் இணையுமாறும் நாங்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள்: இந்த போராட்டத்தைக் குறித்து தொடர்ந்து செய்திகளைப் பெற உலக சோசலிச வலைத்தளத்தின் கல்வியாளர் சிற்றிதழில் பதிவு செய்யவும்.

Loading