முன்னோக்கு

பள்ளிகளை மீண்டும் திறக்கும் முனைவைத் தடுக்க நாடுதழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருவதற்கு இடையிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே இப்போது ஓர் இயக்கம் அதிகரித்து வருகிறது.

கடந்த மாதமெங்கிலும், அமெரிக்காவில் 300,000 க்கும் அதிகமான கல்வியாளர்களும் பெற்றோர்களும் பள்ளிக்குத் திரும்ப செய்யும் பிரச்சாரத்தை எதிர்க்கும் பேஸ்புக் குழுக்களில் இணைந்துள்ளனர். அங்கே மிசிசிபி, அரிசோனா, புளோரிடா, லோவா, அலபாமா மற்றும் இன்னும் பல மாநிலங்களிலும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இருந்துள்ளன. திங்களன்று, அந்நாடு எங்கிலும் டஜன் கணக்கான நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த இயக்கம் வெற்றியடைவதற்கு, அது ஆளும் உயரடுக்குகளின் ஆட்கொலை கொள்கைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எல்லா பிரிவுகளையும் கல்வியாளர்களுடன் ஒரு பொது வேலைநிறுத்த இயக்கத்தில் ஐக்கியப்படுத்தும், நாடுதழுவிய ஒரு போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருதரப்பினராலும் ஆதரிக்கப்படும், மீண்டும் பள்ளிகளைத் திறப்பதற்கான முனைவு, வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பரந்த பிரச்சாரத்தின் அச்சாணியாக உள்ளது. மே மாதம் நடைமுறைக்கு முன்வைக்கப்பட்ட, வேலைக்குத் தொழிலாளர்களைத் திரும்ப செய்வதற்கான கோரிக்கை ஏற்கனவே ஜூன் மற்றும் ஜூலையில் 50,000 உயிரிழப்புகளுக்குப் பொறுப்பாகிறது. ஆனால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லையானால் ஆளும் வர்க்கத்தால் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்ய முடியாது.

தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்திப்பது அல்லது பட்டினி, வீடற்ற நிலைமை மற்றும் கொடிய வறுமையை முகங்கொடுக்க செய்வதற்காக, மத்திய அரசின் வேலைவாய்ப்பின்மை சலுகைகளைக் குறைப்பது அல்லது நீக்குவதற்கான முயற்சியை உந்திக் கொண்டிருக்கும் அதே தர்க்கம் தான் இதையும் முன்நகர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த கட்டத்தில் விஞ்ஞானம் தெளிவாக உள்ளது: கோவிட்-19 தொற்று சம அளவில் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடியதே என்பதுடன், பெரியவர்களுக்கு சமமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ கூட வைரஸ் சுமை உள்ளது, பெரிதும் அது அறிகுறிகள் இல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம், அந்த வைரஸ் எந்த வயதினரிடையேயும் அதிகபட்ச விகிதத்தில் பரவுகிறது. கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்ட குறைந்தபட்சம் நான்கு பள்ளிகளில் ஏற்கனவே கோவிட்-19 நோய்தொற்று இருக்கும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீண்டும் திறக்கப்படும் எந்தவொரு பள்ளியும், விரைவிலேயே சமூக எங்கிலும் அந்த வைரஸ் பரவுவதற்கான ஒரு மிகப்பெரிய காரணியாக ஆகிவிடும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மீண்டும் பள்ளிகளைத் திறப்பதற்கான முயற்சி என்பது, மாணவ/மாணவிகள் நோய்வாய்பட்டு உயிரிழப்பதையும், ஆசிரியர்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பதையும், பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பதையும் அர்த்தப்படுத்தும்.

நாடுதழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி (SEP) பள்ளிகளிலும், வேலையிடங்களிலும் மற்றும் அண்டைஅயல் பகுதிகளிலும் பின்வரும் கோரிக்கைகளை மேலுயர்த்தி விவாதிக்குமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது:

அந்த வைரஸ் முற்றிலுமாக களைந்தெறியப்படும் வரையில் எல்லா பள்ளிகளையும் மூடி வையுங்கள்! அமெரிக்கா எங்கிலும் அந்த வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் நிலையில், நேரில் கற்பித்தல் பாதுகாப்பாக செய்ய முடியாது.

பொதுக் கல்வி மற்றும் இணையவழி கல்விக்கு முழு நிதி ஒதுக்கீட்டை வழங்கு! உயர்வேக இணைய அணுகல், உணவு வினியோகம், மனநல ஆரோக்கிய கவனிப்பு, சிறப்பு கல்விக்கான ஆதரவு, சிறந்த தரத்திலான தொலைநிலை கல்வியை வழங்குவதற்கு அவசியமான இன்னும் இதர ஆதாரவளங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் மற்றும் கல்வியாளருக்கும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

அத்தியாவசியமற்ற உற்பத்தி அனைத்தையும் நிறுத்துங்கள்! இந்த தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும் வரையில், உணவு உற்பத்தி, மருத்துவக் கவனிப்பு மற்றும் சரக்கு பரிவர்த்தனை போன்ற முக்கிய தொழில்துறைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும். அந்த தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கும் நோய்தொற்று ஏற்படுவதில் இருந்து தடுக்க அதிநவீன பாதுகாப்பு நடைமுறைகள் இருக்க வேண்டும். அத்தியாவசியமல்லாத தொழில்துறையின் எல்லா தொழிலாளர்களுக்கும் மற்றும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் முழு வேலைவாய்ப்பின்மை சலுகையுடன், இலவச மருத்துவக் கவனிப்பை அணுகுவதற்கான வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

சோதனை மற்றும் தொடர்பு தடமறிதலின் பாரிய நீட்டிப்புக்கு! இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக, அனைவருக்கும் பரிசோதனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு, நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களைப் பரிசோதித்து தனிமைப்படுத்தும் வகையில் எந்தவொரு நோயாளிகளையும் பின்தொடர்வதற்கு நூறாயிரக் கணக்கான நோய்தொற்று தடயம் பின்தொடர்பாளர்களை நியமிக்கப்பட வேண்டும்.

இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டை சார்ந்துள்ளது என்பதை கடந்த ஏழு மாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆளும் வர்க்கம் அதன் இலாப நலன்களைக் குறுக்காக வெட்டும் எந்தவொரு நடவடிக்கையையும் சகித்துக் கொள்ளாது என்பதாலேயே, தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கையும் இந்த தொற்றுநோயும் கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருக்கின்றன.

இதன் அர்த்தம் இந்த தொற்றுநோய் அதிகரிக்கத் தான் செய்யும் என்றால், அவ்வாறே உள்ளது. பாரியளவில் உயிரிழப்புகளுக்கு ஆளும் வர்க்கம் காட்டும் அலட்சியம் இந்த வாரயிறுதியில் Axios உடனான ஒரு பேட்டியில் ட்ரம்பால் மிகவும் அப்பட்டமாக வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 1,000 பேர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மைக்கு விடையிறுக்குமாறு வினவிய போது, “அவர்கள் உயிரிழக்கிறார்கள், அது உண்மை தான். என்ன நடக்கிறதோ அது தான்,” என்று பதிலளித்தார்.

ஒருவருக்கு இதை விட தெளிவான வர்க்கக் கொள்கை மீதான ஓர் அறிக்கை கிடைக்காது. திங்கட்கிழமை மாலை ட்வீட்டரில் "பள்ளிகளைத் திறந்து விடுங்கள்!!!” என்று கோரிக்கை விடுத்து, காலத்திற்கு முந்தியே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பிரச்சாரத்திற்கு முன்னோக்கி அழுத்தமளிப்பதற்கு அவர் தீர்மானகரமாக இருப்பதை ட்ரம்ப் அறிவித்தார்.

ட்ரம்ப் வெறுமனே அவருக்காக மட்டும் பேசவில்லை. “பள்ளிகளை மீண்டும் வலுக்கட்டாயமாக திறப்பது,” என்று தலைப்பிட்ட திங்கட்கிழமை தலையங்கம் ஒன்றில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த கொள்கையை முன்நகர்த்திக் கொண்டிருக்கும் சமூக நலன்களுக்கு வடிகால் வழங்குகிறது.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சியை எதிர்ப்பதன் மூலம் "அரசியல் பலவந்தத்தில்" ஈடுபடுவதற்காக ஜேர்னல் போராடிவரும் ஆசிரியர்களைக் குறைகூறுகிறது. “இழந்த கல்வியை சகித்துக்கொள்ள வேண்டிய குழந்தைகள், அவர்களின் பிணைக்கைதிகளாக உள்ளனர்,” என்று வோல் ஸ்ட்ரீட்டின் அந்த ஊதுகுழல் எழுதுகிறது. ஆசிரியர்கள் "பெற்றோர்கள் மற்றும் வரி செலுத்துவோர்கள் அவர்களின் குழந்தைகள் படிக்க வேண்டுமானால் ஆசிரியர்களின் திட்டநிரலுக்கேற்ப ஆட வேண்டுமென அவர்களை வற்புறுத்துவதற்காக" ஆசிரியர்கள் முயற்சி வருகிறார்கள் என்று அது அறிவிக்கிறது.

என்ன இழிவானதொரு பாசாங்குத்தனம்! அரசு நிதி ஒதுக்கீட்டை வெட்டியும் மற்றும் தனியார் பள்ளிகளை (charter schools) ஊக்குவித்தும், தனியார் மற்றும் பகுதிவாரி பள்ளிகளுக்கு (parochial schools) நிதிகளைத் திருப்பி விடுவதற்காக பரீட்சைகள் மற்றும் "பள்ளி தேர்வு" திட்டங்களைத் தரமுறைப்படுத்தியும் பல தசாப்தங்களாக ஆளும் வர்க்கம் திட்டமிட்டு பொதுக் கல்வியைத் தரந்தாழ்த்தி உள்ளது.

ஆசிரியர்கள் விட்டுக்கொடுப்புகளை பெறுவதற்காக இந்த தொற்றுநோயை பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டும் ஜேர்னல் காழ்ப்புணர்ச்சியைக் கொண்டுள்ளது. யதார்த்தத்தில் மார்ச் மாத இறுதியில் இருகட்சிகளது அண்மித்து ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட CARES சட்டம் மூலமாக நிதியியல் செல்வந்த தட்டு தான், ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பிணையெடுப்பு பணத்தைக் கோருவதற்காக இந்த தொற்றுநோயைப் பயன்படுத்தி உள்ளன. அரசு கருவூலத்தைக் கொள்ளையடித்துள்ள ஆளும் வர்க்கம் இப்போது அதற்கு பணத்தைக் கொழிக்கச் செய்யும் இலாபங்களை உருவாக்குவதற்காக தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு கோருகிறது.

“அமெரிக்க குழந்தைகளின் கல்வி மீது எந்த அரசியல் சக்திக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது,” என்று குறிப்பிட்டு அந்த தலையங்கம் நிறைவு செய்கிறது. வர்க்க வார்த்தைகளில் கூறுவதானால், பள்ளிகளை மீண்டும் திறப்பதன் மீதோ அல்லது தொடர்ந்து மூடி வைத்திருப்பதன் மீதோ கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கம் எதையும் கூறக்கூடாதென ஜேர்னல் கோருகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அது இருகட்சிகளது ஆதரவையும் பெற்றுள்ளது. நேற்று நியூ யோர்க் நகரில், ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஜனநாயகக் கட்சியின் நகரசபை தலைவர் பில் டு பிளாசியோவின் திட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினர்.

குடியரசு கட்சி ஆளுநர்களும் சரி ஜனநாயகக் கட்சி ஆளுநர்களும் சரி இரண்டு தரப்பினருமே இந்த தொற்றுநோய் பரவி வருகின்ற போதினும் அத்தியாவசியமல்லாத உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை நீக்கியதுடன், பெருநிறுவனங்களுக்கான இலாபங்களை உருவாக்குவதற்காக தொழிலாளர்கள் அவர்களின் ஆரோக்கியத்தையும் உயிரையும் ஆபத்திற்குட்படுத்தி அவர்களை திரும்ப வேலைக்கு அனுப்பினர்.

ஆசிரியர்கள் தனியாக போராடவில்லை. அங்கே ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திலும் கோபமும் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. K-12 பள்ளிகளில் உள்ள மாணவர்களும் பெற்றோர்களும், அத்துடன் மீண்டும் திறப்பதற்கு நகர்ந்து வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களும் கூட அவர்களின் கூட்டாளிகளாவர்.

இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள், மருத்துவத்துறை தொழிலாளர்கள், பண்ணைக் கூலித் தொழிலாளர்கள், அமசன், UPS மற்றும் USPS இன் சரக்கு பரிவர்த்தனை தொழிலாளர்களும், போக்குவரத்து தொழிலாளர்கள், சேவை தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் ஒரே எதிரியைத் தான் எதிர்கொள்கின்றனர். மிச்சிகன் மற்றும் ஓஹியோவின் வாகனத்துறை தொழிலாளர்கள் அவர்களின் எதிர்ப்பை ஒழுங்கமைக்க ஏற்கனவே சாமானிய தொழிலாளர்களின் சுயாதீனமான பாதுகாப்பு குழுக்களை உருவாக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்த வாரம் மத்திய அரசின் வேலைவாய்ப்பின்மை சலுகைகள் முடிவுக்கு வருவதால் அது வேலையற்ற மில்லியன் கணக்கானவர்களை வறுமை மற்றும் வெளியேற்றத்தைக் கொண்டு அச்சுறுத்துகிறது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும், இந்த சலுகைகளை எந்தளவுக்கு வெட்டலாம் என்றும், எந்தளவுக்கு வேகமாக தொழிலாளர்களை மிரட்டுவதற்கு சிறந்த நிலைமைகளை உருவாக்கி அவர்களை வேலைக்குத் திரும்ப செய்யலாம் என்றும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவில் ஆசிரியர்களின் எதிர்ப்பானது ஒரு சர்வதேச இயக்கத்தின் பாகமாக உள்ளது. பிரிட்டன், தென்னாபிரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் ஆளும் வர்க்கமும் இதே கொள்கையை அமலாக்கி வரும் நிலையில், அந்நாடுகளில் பள்ளிகள் திறப்பதை எதிர்க்கும் பேஸ்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

திரும்ப எதிர்த்து போராடுவதற்கு, ஆசிரியர்கள் சுயாதீனமான சாமானிய குழு அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஆசிரியர் சங்கங்கள் ஒழுங்கமைக்கும் போராட்டங்கள் முற்றிலும் போதுமானதல்ல. ஜனநாயகக் கட்சி மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு அடிபணிந்த அமெரிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பு (AFT) மற்றும் தேசியக் கல்வி கூட்டமைப்பு (NEA) ஆகியவை கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் தீவிரமயப்படல் குறித்து மிக உயர்ந்தளவில் நனவுபூர்வமாக உள்ளதுடன், இந்த இயக்கத்தை முன்கூட்டியே கட்டுப்படுத்துவதற்கு முனைந்து வருகின்றன. 2018 மற்றும் 2019 இல், மேற்கு வேர்ஜினியாவில் தொடங்கிய தொடர்ச்சியான பல ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களை இந்த தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்ததுடன் முடிவுக் கொண்டு வருவதை முடுக்கி விட்டன.

பள்ளிகளைத் திறப்பதற்கு எதிராகவும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த கொள்கைக்கு எதிராகவும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்ய தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழில்துறை மற்றும் பிரிவிலும் ஒன்றோடொன்று இணைந்த சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவாக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

விஞ்ஞானிகளும் தொற்றுநோய் நிபுணர்களும் வலியுறுத்தும் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான ஆசிரியர்கள் கோரும் நடவடிக்கைகள் இந்த தொற்றுநோய் பரவலைத் தடுக்க அவசியமானவையாகும். முற்றிலும் எதிரெதிரான இரண்டு சமூக நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள். ஆளும் வர்க்கம் இலாபங்கள் மற்றும் மரணங்களுக்காக போராடுகிறது.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்கும் கையளிக்கப்பட்டுள்ள ட்ரில்லியன்கள், அனைவருக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் மருத்துவக் கவனிப்பு மற்றும் பொதுக் கல்வி கிடைக்கும் விதத்தில் முழு வேலைவாய்ப்பின்மை சலுகைகளை வழங்குவதற்காக திருப்பி விடப்பட வேண்டும்.

நாடுதழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்தை அபிவிருத்தி செய்வது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தூண்டுதலை உருவாக்கும் என்பதுடன், இதே வாழ்வா சாவா பிரச்சினையை முகங்கொடுக்கும் தொழிலாளர்களிடையே சர்வதேச அளவில் ஆதரவைத் திரட்டும். அதுபோன்றவொரு போராட்டத்தின் தர்க்கமானது, அதிகரித்தளவில் எதேச்சதிகார நடவடிக்கைகள் மூலமாக அதன் ஆட்சியைப் பேணுவதற்கு முயன்று வரும் ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஆளும் வர்க்கத்துடன் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை ஒரு நேரடியான மோதலில் கொண்டு வந்து நிறுத்தும்.

தொழிலாள வர்க்கத்தின் எல்லா உரிமைகளும், வாழ்வுரிமையும் கூட, ஆளும் வர்க்கத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதையும், பொருளாதார வாழ்வைத் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைக்காக மறுஒழுங்கமைப்பு செய்வதையும் சார்ந்துள்ளது.

இந்த தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட எல்லா அவலங்களுக்கும் மூலகாரணமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பாரியளவில் அணித்திரட்டுவதே, பள்ளிகள் மீண்டும் திறப்பதை நிறுத்துவதற்கும், இந்த தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்கும் மற்றும் இன்னும் அதிகமாக மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய்தொற்று மற்றும் மரணங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் ஒரே வழியாகும்.

இந்த போராட்டத்தைத் தான் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் இயக்கமும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் முன்னெடுத்து வருகின்றன. உங்கள் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கான உதவிக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு ஆசிரியர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த போராட்டத்தை ஆதரிக்குமாறும், IYSSE இல் இணையுமாறும் நாங்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த போராட்டம் குறித்து மேற்கொண்டு தொடர்ந்து தகவல்களைப் பெற உலக சோசலிச வலைத்தளத்தின் கல்வியாளர் சிற்றிதழுக்குப் பதிவு செய்யவும்.

Loading