முன்னோக்கு

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி 2020 ஜூலை 19 இல் இருந்து ஜூலை 20 வரையில் அதன் ஆறாவது தேசிய மாநாட்டை நடத்தியது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக, அந்த மாநாடு முற்றிலுமாக இணைய வழியில் நடத்தப்பட்டது.

அதில் பங்கெடுத்தவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கட்சி மாநாட்டில் முதல்முறையாக பங்கெடுத்திருந்தனர். அனைத்துலக்குழுவின் அனைத்து பிரிவினதும் முன்னணி உறுப்பினர்களும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஆதரவு குழுக்களும் மாநாட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

ஐந்து நாட்கள் நடந்த இந்த மாநாடு, “உலகளாவிய தொற்றுநோயும், வர்க்க போராட்டமும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்" என்ற தீர்மானத்தை விவாதித்து பின்னர் அதை நிறைவேற்றி இருந்தது, இது உலக சோசலிச வலைத் தளத்தில் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் இந்த தொற்றுநோயின் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்தையும் அதன் புரட்சிகர தாக்கங்கள் குறித்து விரிவான ஓர் ஆய்வை வழங்குகிறது. "உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் ஏற்கனவே வெகுவாக முன்னேறியுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வரும், உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வாக" அந்த தொற்றுநோயை வரையறுத்து அத்தீர்மானம் குறிப்பிடுகிறது:

தொழிலாள வர்க்கம் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இதற்காக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவும், பொருளாதாரத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கவும், சந்தையின் அராஜகத்தை விஞ்ஞானபூர்வ திட்டமிடலைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கும், தேசிய-அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதையும், சமத்துவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் உலகளாவிய சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதற்கும், ஒடுக்குமுறை மற்றும் வேற்றுமையின் எல்லா வடிவங்களையும் மற்றும் வறுமையையும் இல்லாதொழிக்கவும், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூகக் கலாச்சார மட்டத்தைப் பாரியளவில் மேலுயர்த்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இட்டுச் செல்லும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு அப்பாற்பட்டு அங்கே எந்த முற்போக்கான தீர்வும் இல்லை.

இந்த தீர்மானம் இந்த தொற்றுநோயால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடியைப் பரந்த வரலாற்று, சமூகபொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் ஆராய்கிறது:

கொரோனா வைரஸைத் தோற்றுவித்த குறிப்பிட்ட நிலைமைகள் தற்செயலான மற்றும் எதிர்பாராத தன்மையை கொண்டிருந்தாலும் கூட, இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பு இதற்கு முன்னர் நிலவிய முதலாளித்துவ நெருக்கடியின் நிலைமைகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் நலன்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ வர்க்கம், இதற்கு முந்தைய காலகட்டத்தில் பயன்படுத்திய அதே ஒட்டுண்ணித்தனமான பொருளாதார உறவுகள் மற்றும் சமூக கொள்கைகளை தொடர்ந்துள்ளதோடு, தீவிரப்படுத்தியும் உள்ளது.

இந்த தொற்றுநோய் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையைக் குறிக்கிறது என்பதும், இதன் தாக்கம் இருபதாம் நூற்றாண்டில் போக்கை முதலாம் உலகபோர் வடிவமைத்ததைவிட இருபத்தோராம் நூற்றாண்டின் போக்கைக் கூர்மைப்படுத்துவதில் தீர்க்கமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் என்பதே அந்த ஆவணத்தின் மத்திய கருத்துருவாகும். இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் பிரதானமாக ஒரு மருத்துவப் பிரச்சினை என்ற கண்ணோட்டத்தை நிராகரித்து, அந்த தீர்மானம் விளங்கப்படுத்துகிறது: “முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி அவசியமானதைப் போலவே, இந்த நோய்க்கு ஓர் பயனுள்ள சமூக விடையிறுப்புக்கான நிலைமைகளை உருவாக்க, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான வர்க்க தலையீடு அவசியமாகும்.”

இந்த தீர்மானம் கடந்த அரையாண்டு நிகழ்வுகளின் அடித்தளத்திலுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தர்க்கத்தை ஆராய்கிறது. “தற்போதைய நிலைமையைப் புரிந்து கொள்ளவும் மற்றும் எதிர்கால போக்கை வரைவதற்கும், இந்த தொற்றுநோயின் உலகளாவிய மையமாக ஆகியுள்ள நாட்டில், அதாவது அமெரிக்காவில் இந்த நெருக்கடி எவ்வாறு அபிவிருத்தி அடைந்துள்ளது என்பதை மீளாய்வு செய்வது அவசியமாகும்”.

இந்த தீர்மானம் இந்நெருக்கடியின் அபிவிருத்தியில் உள்ள மூன்று தனித்துவமான கட்டங்களை அடையாளம் காண்கிறது.

“இந்த தொற்றுநோயின் வெடிப்பும், தகவல் மறைப்பும், பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கின் மீட்பும்" என்ற முதல் கட்டம் டிசம்பர் 2019 மற்றும் மார்ச் 27, 2020 இடையிலானது. இந்த காலகட்டத்தில் தான் ட்ரம்ப் நிர்வாகமும் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் காங்கிரஸ் சபை தலைவர்களும் "இந்த தொற்றுநோய் பரவுவதைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுவதை விட அதற்கு மேலாக வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் சக்தி வாய்ந்த வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கும் சமூகரீதியில் பேரழிவுகரமான முடிவுகளை எடுத்தனர்.”

இந்த தொற்றுநோயைத் தடுக்க நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்கம் "ஆபத்துண்டாக்கும் அலட்சிய" கொள்கை ஒன்றைப் பின்தொடர்ந்தது. அதாவது "சந்தைகளின் மீது அந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த கவலைகளால் நிபந்தனைக்கு உட்பட்டு, அந்த வைரஸ் குறித்து அரசாங்கங்கள் அவற்றின் தரப்பில் அலட்சியமான மனோபாவத்தை” ஏற்றிருந்தன. அது பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களை வோல் ஸ்ட்ரீட்டிற்கு பல கோடி டாலர் பிணையெடுப்பு வழங்க தயாரிப்பு செய்யவும் நடைமுறைப்படுத்தவும் பயன்படுத்தியது, இது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரின் அண்மித்து ஒருமனதான ஒப்புதலுடன் மார்ச் 27 இல் நிறைவேற்றப்பட்ட CARES சட்டம் என்றழைக்கப்படுவதை நிறைவேற்றுவதில் போய் முடிந்தது.

ஆளும் வர்க்கம் இந்த தொற்றுநோய்க்கு எந்தவொரு விடையிறுப்பையும் நசுக்க முனைந்த நிலையில், இத்தீர்மானம் தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பின் மீது கவனம் செலுத்த அழைப்பு விடுக்கிறது:

ஆளும் வர்க்கத்தின் “ஆபத்துண்டாக்கும் அலட்சிய" கொள்கைக்கான எதிர்ப்பில், தொழிலாள வர்க்கம் இந்த தொற்றுநோய்க்கு எதிராக தன்னை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் ஹோல் ஃபூட்ஸ் நிறுவனங்களின் தொழிலாளர்கள் வேலை வெளிநடப்புகளையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஒழுங்கமைத்தனர். அமெரிக்கா மற்றும் கனடாவின் வாகனத்துறை தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல தன்னிச்சையான நடவடிக்கைகளை நடத்தினர், அவை ஐரோப்பாவின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலையுடன் பொருந்தி இருந்தன. WSWS இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளும், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வாகனத் தொழில்துறையை மூடு!” என்ற மார்ச் 14 அறிக்கை உட்பட SEP இன் அறிக்கைகளும், பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களால் வாசிக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது. தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வந்த அழுத்தத்தின் கீழ் மற்றும் பிணையெடுப்பு சட்டமசோதா அப்போதும் தயாரிப்பிலேயே இருந்த நிலையில், மத்திய அரசாங்கமும், மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களும் பொருளாதார முடக்கத்திற்கு இணங்க நிர்பந்திக்கப்பட்டன.

மார்ச் 27 மற்றும் மே 31, 2020 இடையிலான இரண்டாம் கட்டத்தில், ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற "வேலைக்குத் திரும்ப செய்வதற்கான" பிரச்சாரமும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களின் வெடிப்பும் மேலோங்கி இருந்தன. வேலைக்குத் திரும்ப நிர்பந்திப்பதற்காக அரசியல் ஸ்தாபகத்திற்குள் நிலவிய இருகட்சிகளது பிரச்சாரத்தையும் அந்த தீர்மானம் மீளாய்வு செய்கிறது. நியூ யோர்க் டைம்ஸில் தோமஸ் ஃபிரெட்மனின் "சமூக நோய் எதிர்ப்புச்சக்தி பெருக்க" கொள்கையை அறிவுறுத்திய ஒரு கட்டுரையுடன் அப்பிரச்சாரம் தொடங்கி இருந்தது. இந்த கொள்கை புதிய நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளின் ஒரு வெடிப்புக்கு இட்டுச் செல்லும் என்ற SEP மற்றும் WSWS இன் எச்சரிக்கைகளை அத்தீர்மானம் மேற்கோளிடுகிறது.

மே மாத இறுதியில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பரவிய பொலிஸ் வன்முறைக்கு எதிரான பல்லின மற்றும் பல வம்சாவழியைச் சேர்ந்தவர்களின் பாரியளவிலான போராட்டங்களை அத்தீர்மானம் பகுத்தாராய்ந்திருந்தது:

அந்த போராட்டங்கள் பொலிஸ் வன்முறையால் தூண்டிவிடப்பட்டிருந்தன என்றாலும், வாழ்க்கை தரங்களில் நீடித்த மற்றும் கடுமையான வீழ்ச்சி, இளைஞர்கள் மீது திணிக்கப்பட்டிருந்த கடுமையான கடன் மட்டங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் இருண்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள், படர்ந்து பரவிய சமூக சமத்துவமின்மை மற்றும் அதன் விளைவுகள், ஜனநாயக உரிமைகளின் பறிப்பு, இப்போதிருக்கும் இருகட்சி அமைப்புமுறை அரசியல் கட்டமைப்புகளின் வடிவமைப்புக்குள் சமூக நிலைமைகளில் நடைமுறையளவில் அர்த்தமுள்ள மாற்றம் மற்றும் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமின்மை ஆகியவற்றின் மீதிருந்த கோபமும் அவற்றின் அடியிலிருந்த காரணங்களாக இருந்தன.

மூன்றாவது கட்டம் ஜூன் 1 இல் வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் பத்திரிகையாளர் சந்திப்புடன் தொடங்கியது, அதில் அவர் போராட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்த கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைக் கையிலெடுப்பதற்கான அவர் விருப்பத்தை அறிவித்தார். இது ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அந்நிர்வாகத்தின் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் முயற்சிகளைத் தொடங்கி வைத்தது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஆரம்ப முயற்சி வெற்றியடையவில்லை என்றாலும், ஜூன் 4 அறிக்கையில் SEP எச்சரிக்கையில், இது இத்தீர்மானத்திலும் மேற்கோளிடப்பட்டுள்ள நிலையில், “இந்த நெருக்கடி முடிந்துவிட்டது என்று நினைப்பதை விட அதிக ஆபத்தானது வேறெதுவும் இல்லை. மாறாக, அது இப்போது தான் தொடங்கி உள்ளது,” என்று குறிப்பிட்டது.

அந்த எச்சரிக்கை, இந்த மாநாடு கூடிய போதே கூட, ஒரேகனின் போர்ட்லாந்தில் ட்ரம்பின் கட்டளையின் கீழ் செயல்படும் மத்திய அரசின் துணை இராணுவப்படைகள் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், உறுதிப்படுத்தப்பட்டது. எதிர்வரவிருக்கும் தேர்தல்களைத் தாமதிக்க அல்லது இரத்து செய்ய கடந்த வாரம் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை முன்கணித்து, அத்தீர்மானம் எச்சரிக்கையில்: “இந்த தேர்தலில் எந்த கட்சி ஜெயித்தாலும் —இதற்கு இத்தேர்தல் நடத்தப்படும் என்று சர்ச்சைக்குரிய அனுமானம் அவசியப்படுகிறது— ட்ரம்ப் நிர்வாகத்தின் போது காணப்பட்ட அதே மாதிரியான கேடுகெட்ட வெளிப்பாட்டைக் காட்டும் போக்குகள் தான் தொடரும், இன்னும் மோசமாகவும் இருக்கும்,” என்று குறிப்பிட்டது.

ட்ரம்புக்கு எதிரான எல்லா எதிர்ப்பையும் இராணுவத்திடம் விட்டுகொடுத்து ஜனநாயகக் கட்சியினர் விடையிறுத்தனர் அதேவேளையில் அவர்கள் சமூக எதிர்ப்பைத் திசைதிருப்ப அவர்களின் சொந்த பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தினர். அத்தீர்மானம் “முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளும் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் அணிசேர்ந்த செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கமும், தொழிலாள வர்க்க போர்குணம் மற்றும் சோசலிச ஆதிக்கம் சம்பந்தமான எந்தவொரு அறிகுறிக்கும் எப்போதும் விரோதமாக இருந்ததுடன், ஆர்ப்பாட்டங்களைத் திசைதிருப்ப தலையீடு செய்து, அவற்றை வெளிப்படையாகவே இனவாத வழியில் திசைதிருப்பின.” எனக்குறிப்பிடுகிறது.

அமெரிக்க வரலாறைத் திருத்தி எழுதுவதற்காக, நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட, ஜனநாயகக் கட்சியின் இனவாத பிரச்சாரத்தின் பின்னணியில் ஒரு பரந்த விவாதத்தில் மாநாட்டு பிரதிநிதிகள் பங்கெடுத்தனர்:

போராட்ட இயக்கத்தை நோக்குநிலைப் பிறழச் செய்யும் மற்றும் வர்க்க போராட்ட வளர்ச்சியை ஒடுக்கும் தீர்மானத்துடன், நியூ யோர்க் டைம்ஸ் அமெரிக்க புரட்சியையும், உள்நாட்டு போர் மற்றும் அதன் பிரதான தலைவர்களையும் மதிப்பிழக்க வைக்க அதன் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியது. இதை அது ஆகஸ்ட் 2019 இல் 1619 திட்டத்தைத் தொடங்கிய போது ஆரம்பித்திருந்தது. கூட்டமைப்பு தலைவர்களின் சிலைகளை நீக்குவதற்கான ஒரு சட்டப்பூர்வ கோரிக்கையாக தொடங்கிய அது, சிலைகளை உருக்குலைப்பதற்கும் மற்றும் வாஷிங்டன், லிங்கன், கிரான்ட், மற்றும் ஒரு பிரபல அடிமை ஒழிப்புவாதியினதும் கூட வாழ்வை நினைவூட்டும் நிலைகளை நீக்குவதற்குமான சந்தர்ப்பமாக ஆனது.

"இனத்தை" அரசியலின் மையத்தில் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளைக் குறித்து குறிப்பிட்டதோடு அல்லாமல், அத்தீர்மானம் குறிப்பிடுகையில், “அமெரிக்காவின் பெருவாரியான சமூக யதார்த்தம் பொருளாதார சமத்துவமின்மையாகும், இது வர்க்க அடித்தளத்தில் அமைந்த சமூக பிளவில் வேரூன்றி உள்ளது,” என்பதை வலியுறுத்தியது.

அத்தீர்மானம் அமெரிக்காவின் தீவிரப்படுத்தப்பட்டு வரும் போர் தயாரிப்புகளைக் குறித்தும் எச்சரித்தது. அனைத்திற்கும் மேலாக, ட்ரம்பும் சரி ஜனநாயகக் கட்சியினரும் சரி வெளிநாடுகளில் போரை விரிவாக்க பொறுபேற்றுள்ளனர். அத்தீர்மானம் குறிப்பிடுகிறது:

இந்த தொற்றுநோய்க்கு மத்தியிலும் அங்கே அமெரிக்காவின் போர்வெறி கொள்கைகளில் எந்த தளர்வும் இருக்கவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோ ரஷ்யாவுக்கு எதிராகவும் மற்றும் அமெரிக்காவின் பிரதான புவிசார் அரசியல் போட்டியாளர் சீனாவுக்கு எதிராகவும் அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு ஆதரவைக் கோருவதற்காக, நிறைய பயண திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் வழமையாக "வூகான் வைரஸ்" என்று குறிப்பிட்டு விரோதத்தை உருவாக்குவதற்கு முனைந்துள்ளது, ஒரு தருணத்தில், எந்தவித ஆதாரமும் இல்லாமல், சீனா அமெரிக்க மக்கள் மீது தொற்றுநோய்க்கு உட்படுத்தியதாக கூட வாதிட்டுள்ளது.

இந்த தீர்மானம் பின்வருமாறு எச்சரிக்கிறது:

போர் அபாயத்தைக் குறைமதிப்பீடு செய்யக்கூடாது. நெருக்கடியில் சிக்கிய ஓர் ஆட்சி—அதற்கு ஹிட்லரின் ஆட்சியே மிகவும் இழிவுகரமான ஓர் எடுத்துக்காட்டு—அதன் சொந்த நாட்டு எல்லைகளுக்குள் ஒரு கடுமையான நெருக்கடியை உணருகையில் அதற்கு ஒரு தீர்வாக போரில் தஞ்சமடைகிறது என்பதற்கு இருபதாம் நூற்றாண்டில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

கடந்த ஏழு மாதகால அதன் பகுப்பாய்வின் அடிப்படையில், அத்தீர்மானம் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு ஒரு முன்னோக்கு மற்றும் வேலைத்திட்ட நடவடிக்கையை முன்வைக்கிறது:

இந்தாண்டின் முதல் அரையாண்டு இத்தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பால் அதிக்கம்செலுத்தப்பட்டு இருந்தது. இந்த இரண்டாவது அரையாண்டில் தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பு முன்னுக்கு வரும். ஆளும் வர்க்க கொள்கைகளின் நாசகரமான விளைவுகள் முதலாளித்துவ அமைப்புமுறையின் சட்டபூர்வத்தன்மைக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் அடியை வழங்கியுள்ளன. சம்பளமின்றி பாரியளவில் இடைக்கால வேலைநீக்கம், கூலி வெட்டுக்கள், மருத்துவக் கவனிப்பு, மருத்துவச் சிகிச்சை உதவி, சமூக பாதுகாப்பு மற்றும் இன்னும் பல அத்தியாவசிய மற்றும் ஏற்கனவே குறைவாக நிதி ஒதுக்கீடு பெறும் சமூக திட்டங்களின் செலவுகளை இன்னும் கூடுதலாக குறைப்பதற்கான கோரிக்கைகள் என பொருளாதார பொறிவுக்கு இந்த பெருநிறுவன விடையிறுப்பானது தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்த எதிர்ப்பைச் சந்திக்கும். பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்வதற்கும் மற்றும் கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கு உதவும் வகையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் எதிர்ப்பு அதிகரிக்கும். அங்கே கடன் வசூலிப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளியேற்றங்களுக்கும் எதிர்ப்பு இருக்கும். ஆகவே, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்க போராட்டத்தின் ஓர் அளப்பரிய அதிகரிப்பையும், கட்சி இதில் தலையீடு செய்தவன் மூலமாக அது அரசியல்ரீதியில் வர்க்க நனவுபூர்வமான மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு தன்மையைப் பெறும் என்றும் எதிர்நோக்குகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளை விவரிக்கையில், இத்தீர்மானம் "இடைமருவு கோரிக்கைகளின்" முக்கியத்துவத்தை விவரிக்கிறது.

ஓர் உறுதியான நிலைமையிலிருந்து எழும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைச் சோசலிச புரட்சி மூலோபாயத்துடன் இணைக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் சம்பந்தமாக, பொறுப்பற்ற மற்றும் குற்றகரமான வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தை நிறுத்துவதற்கும்; பெருநிறுவன-வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பைத் திரும்ப பெறவும்; வேலைவாய்ப்பற்ற அனைவருக்கும் பொருளாதார பாதுகாப்பை வழங்குவதற்கும் மற்றும் மருத்துக் கவனிப்பு உள்கட்டமைப்பை பரந்தளவில் விரிவாக்குவதற்குமான ஓர் அவசரகால திட்டத்திற்கும்; பத்து மில்லியன் கணக்கானவர்கள் முகங்கொடுக்கும் அவசர சமூக நெருக்கடியைப் போக்க பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்யவும்; பிரதான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் ஸ்தாபிக்கவும் போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுப்பதுடன் மற்றும் போராடுகின்றது.

இத்தீர்மானம் மீதான விவாதத்தில், மாநாட்டு பிரதிநிதிகள் புறநிலைமைகளின் அபிவிருத்திக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் நடவடிக்கைக்கும் இடையிலான உறவுகளை வலியுறுத்தினர். வைரஸ் தொற்று பரவலால் முன்நிற்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாக்க ஆலைகளிலும் வேலையிடங்களிலும் சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பு குழுக்களை நிறுவுவதில் SEP இன் அனுபவம் குறித்து அங்கே பரந்த விவாதம் இருந்தது.

அந்த விவாதத்தின் போக்கில் பிரதிநிதிகள் முன்மொழிந்த மாற்றங்களும் கூடுதல் விபரங்களும் அத்தீர்மானத்தின் இறுதி வரைவில் இணைக்கப்பட்டன. அத்தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இணைய வழியில் நடத்தப்பட்டு, அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டு பிரதிநிதிகள் ஒரு புதிய தேசிய குழுவைத் தேர்ந்தெடுத்தனர். எதிர்வரவிருக்கும் தேசிய குழு உறுப்பினர்களில், ஜோசப் கிஷோர் தேசிய செயலராகவும், தேசிய துணை செயலராக லாரன்ஸ் போர்டரும், உலக சோசலிச வலைத் தளத்தில் அமெரிக்க பதிப்பாசிரியராக பாரி கிரேயும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாநாடு டேவிட் நோர்த்தை தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுத்தது.

இந்த மாநாட்டு தீர்மானம், சோசலிச வர்க்க நனவையும் மற்றும் தொழிலாள வர்கத்தின் சுயாதீனமான நடவடிக்கையையும் அபிவிருத்தி செய்வதை நோக்கி திரும்பி இருந்ததுடன், இந்த தொற்றுநோயால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடி மீது ஓர் ஒப்புமையில்லா பகுப்பாய்வை வழங்குகிறது. அது தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தி செய்வதற்கும் புரட்சிகர அரசியலுக்குமான ஒரு திசையை வழங்குகிறது. அது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகவும் கவனமாக வாசிப்பதற்கும் தகுதியுடையதாகும்.

உலகளாவிய தொற்றுநோயும், வர்க்க போராட்டமும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்" என்ற அத்தீர்மானத்தை வாசிக்கவும். SEP மற்றும் ICFI ஐ தொடர்பு கொள்ளவும் இணையவும் இங்கே சொடுக்கவும்.

Loading