மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கொரோனா தொற்று பரவுகையில், 2011 இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரினால் தூண்டப்பட்ட போட்டி ஏகாதிபத்திய ஆதரவு போர்ப்பிரபுகளுக்கு இடையிலான தசாப்தகால உள்நாட்டுப் போர், கட்டுப்பாட்டை இழந்து வருகிறது.
ஜூலை 5 ம் தேதி, அடையாளம் தெரியாத போர் விமானங்கள் அல்-வாத்தியா விமானத் தளத்தில் குண்டு வீசின. இத்தளமானது இத்தாலிய ஆதரவுடைய தேசிய உடன்படிக்கை அரசாங்க (Government of National Accord - GNA) படைகள் சமீபத்தில் பிரெஞ்சு ஆதரவுடைய லிபிய தேசிய இராணுவம் (Libyan National Army - LNA) கலீஃபா ஹப்தாரின் படைகளிடமிருந்து திரும்ப கைப்பற்றின. இந்த தாக்குதல் விமான நிலையத்தை சேதப்படுத்தியதுடன் மற்றும் துருக்கியில் இருந்து கிடைத்த இராணுவத் தளபாடங்களையும் அழித்தது. இது இத்தாலியுடன் GNA இற்கு அதன் ஆதரவை ஒருங்கிணைத்து வருகிறது. LNA அதிகாரி கலீத் அல் மஹ்ஜூப் அல் அரேபியா செய்திசேவையிடம், “தளத்தின் தாக்குதலுக்கு ஒத்த பிற தாக்குதல்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். ... லிபியாவில் எண்ணெயை பெறும் அபிலாஷைகளைக் கொண்டுள்ள துருக்கியுடன் நாங்கள் உண்மையான போரில் இருக்கிறோம்” என்றார்.
துருக்கிய இராணுவ வட்டாரங்களை காட்டி ஸ்பெயினின் செய்தி தளமான Atalayar "துருக்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிரான ஒன்பது துல்லியமான வான் தாக்குதல்கள்" அடங்கியுள்ளதுடன், இது பல துருக்கிய உளவுத்துறை அதிகாரிகளை காயப்படுத்தியது. தாக்குதல்கள் "வெற்றிகரமானவை" என்றும் "மூன்று ராடார்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன" என்றும் அவர்கள் மேலும் கூறினர். எவ்வாறாயினும், மாஸ்கோ LNA இற்கு வழங்கிய மிக்-29 அல்லது சூ-24 ஜெட் விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக வெளியான செய்திகளை Atalayar மறுத்து, இது பிரெஞ்சு தயாரிப்பான ரஃபால் ஜெட் விமானங்களினால் நடாத்தப்பட்டது என்று கூறியது.
எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளெல்லாம் ரஃபால் விமானங்களை பயன்படுத்துவதுடன், LNA இனை ஆதரிக்கின்றன. மேலும் அல்-வாத்தியா மீது இவை குண்டு வீசியிருக்கக்கூடும். ஜூன் 21 அன்று, எகிப்திய சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்- சிசி துருக்கிக்கு எதிராக லிபியாவில் தலையிடுவதாக அச்சுறுத்தினார்.
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அலுவலகம் தாக்குதல் பற்றி பதிலளித்து, துருக்கி லிபியாவில் நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று ட்வீட் செய்து, கடலோர நகரமான சிர்ட்டே மற்றும் லிபியாவின் மிகப்பெரிய விமானத் தளமான அல் ஜுஃப்ராவை (Al Jufra) தாக்கியது. இவ்விரண்டும் மத்திய லிபியாவில் அமைந்துள்ளதுடன் மற்றும் LNA படைகளின் கைகளிலுள்ளது. எண்ணெய் விநியோக பாதைகளின் மீதான கட்டுப்பாடு மற்றும் LNA இற்கான ரஷ்ய ஆதரவு ஆகியவற்றை அது மேற்கோளிட்டு தனது தலையீட்டை நியாயப்படுத்தியது.
திரிப்போலியில் இருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள அல்-வாத்தியாவின் மீதான தாக்குதல், துருக்கிய மற்றும் இத்தாலிய அதிகாரிகளின் வருகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. துருக்கிய பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர், திரிப்போலிக்கு ஒரு பயணத்தை முடித்த சில மணிநேரங்களுக்கு பின்னர்தான் இது இடம்பெற்றது, "துருக்கிய இறையாண்மையும், எங்கள் முன்னோர்களும் அங்கிருந்து திரும்பிசென்ற பின்னர் லிபியாவிற்கு என்றென்றும் திரும்புவோம்" என்று அறிவித்தார். இது லிபியாவின் மீது 1911 வரை துருக்கிய ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. இத்தாலி லிபியாவை பின்னர் கைப்பற்றி 1943 இரண்டாம் உலகப் போரின்போது அதன் தோல்விவரை ஒரு காலனியாக வைத்திருந்தது.
ஜூன் 24 அன்று, இத்தாலிய வெளியுறவு மந்திரி லூயிஜி டி மாயோ, திரிப்போலிக்கு விஜயம் செய்தார். இங்கு துருக்கிய-இத்தாலிய கடற்படை பயிற்சிகளுக்கு இடையே அங்காராவில் தனது துருக்கிய சமதரப்பான மெவ்லட் கவுசோக்லுவை சந்தித்தார். திரிப்போலியில், ரோமின் மூலோபாய நலன்களுக்கு போர் முக்கியமானது என்று அவர் கூறினார். "எங்கள் வெளியுறவுக் கொள்கைக்கும் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கும் லிபியா முன்னுரிமை வாய்ந்தது" என்று குறிப்பிட்டார்.
அல்-வாத்தியா மீதான தாக்குதல் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளிடையேயும், பிராந்திய சக்திகளிடையேயும், 2011 போரிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை பிரிப்பது பற்றிய கசப்பான பிளவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
2011இல் எகிப்து மற்றும் துனிசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளுக்கு மத்தியில், பாரிஸ், லண்டன் மற்றும் வாஷிங்டன் லிபியா மீது குண்டு வீசவும், கேர்னல் முகம்மர் கடாபியை கவிழ்க்க இஸ்லாமிய மற்றும் பழங்குடி போராளிகளை ஆயுதமயமாக்கவும் நேட்டோவை முன்தள்ளின. பேர்லின் போரில் சேர மறுத்துவிட்டது. ஆரம்ப துருக்கிய ஆட்சேபனைகளை எதிர்த்துப் போரிடும் சக்திகள் கடுமையாக நிராகரித்தன. பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற குட்டி முதலாளித்துவ போலி-இடது குழுக்களும் மேற்கத்திய ஊடகங்களும் இது லிபிய ஆர்ப்பாட்டக்கார்களை பாதுகாப்பதற்கான ஒரு மனிதாபிமானப் போர் என்று கூறியது. ஆனால் அது லிபியா மீதான ஏகாதிபத்திய சூறையாடலாகும்.
இது, ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையில் சிரியாவில் நடந்து வரும் பினாமி போருக்கான நிலைமைகளை மட்டுமல்லாமல், லிபியாவில் அணிதிரட்டப்பட்ட பல இஸ்லாமிய பினாமி போராளிகளை சிரியாவிற்கு அனுப்பியது மட்டுமல்லாமல், லிபியாவையும் அதன் பாரிய எண்ணெய் இருப்புக்களையும் பங்கிட்டுக்கொள்வதற்கான இரக்கமற்ற போராட்டத்திற்கு இது களம் அமைத்தது.
2011 போரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போட்டி ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இப்போது லிபியாவை அழித்து வருகிறது. தொற்றுக்களின் எண்ணிக்கை ஜூன் கடைசி இரண்டு வாரங்களில் 713 ஆக இரட்டிப்பாகி, இப்போது 1,117 ஆக உள்ளது. 269 பேர் மட்டுமே நோயிலிருந்து மீண்டுள்ளனர், 34 பேர் இறந்துவிட்டனர். ஒரு தசாப்த கால இரத்தக்களரியால் சுகாதார மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு சிதைந்துள்ளதால் நாடு முழுவதும் இந்த நோய் பரவுகின்றது.
இந்த மாதம், சர்வதேச மீட்புக் குழு பின்வருமாறு அறிவித்தது: “இந்த ஆண்டு உலகின் மருத்துவ வசதிகள் மீது அதிக எண்ணிக்கையிலான தாக்குதல் நடாத்தப்பட்ட நாடாக லிபியா பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், முதலுதவி வாகனம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது. அது வாகனத்தையும், அருகிலுள்ள சுகாதார வசதி நிலையத்தையும் கடுமையாக சேதப்படுத்தியது. கடந்த வாரம் ஒரு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட உடலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியால் இரண்டு மருத்துவர்கள் கொல்லப்பட்டனர். லிபியாவின் சுகாதார அமைப்பு ஏற்கனவே முறிவடைந்தநிலையில் இருப்பதால், இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள், நாட்டின் மருத்துவ குழுக்களுக்கு தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதை இன்னும் கடினமாக்குகிறது”.
நேட்டோ சக்திகள், மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளைக் கொண்டுவருவதில்லை. மாறாக லிபியாவை சூறையாடி, சண்டையை ஒரு முழுமையான பிராந்திய யுத்தமாக விரிவுபடுத்த அச்சுறுத்துகின்றன. இதில் பல பிராந்திய சக்திகள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. துருக்கி மற்றும் அல்ஜீரியா GNA இனை ஆதரிக்கின்றன. எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் LNA ஆதரிக்கின்றன. இஸ்லாமிய ஆதிக்கம் செலுத்தும் GNA இற்கு எதிராக LNA இனை ஆதரிக்க மாஸ்கோ தலையிட்டுள்ளது. இருப்பினும், மோதலின் ஒரு தீர்க்கமான அம்சமாக இருப்பது பிரான்சின் Total மற்றும் இத்தாலியின் ENI போன்ற முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கிடையில் உள்ளது.
ஜூலை 3 ம் தேதி, துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனம், GNA “நாட்டின் கிழக்கு மற்றும் எண்ணெய் வயல்களின் நுழைவாயிலான சிர்டே ஐ நோக்கி முன்னேறி வருகிறது” என்று எழுதியது. இது இரண்டு காரணங்களுக்காக சிர்ட்டை "முக்கியமானது" என்று அழைத்தது: “முதலாவதாக, லிபியாவின் எண்ணெய் மண்டலத்தின் நுழைவாயிலாக சிர்ட்டே குறிப்பிடத்தக்க பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளது. இதில் அல்-ஜுவேடினா, ராவின் லானுஃப், மார்சா அல் ப்ரேகா, மற்றும் சித்ர் போன்ற முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இவை லிபியாவின் எண்ணெய் ஏற்றுமதியில் 60 சதவீதத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. இரண்டாவதாக, இது ஒரு மூலோபாய நகரமாகும். இது லிபிய கடற்கரையோரத்தை தலைநகரில் இருந்து மேற்கு நோக்கியும், பெங்காசியை கிழக்கு நோக்கியும் கட்டுப்படுத்த GNA இற்கு உதவும்”.
GNA இன் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு லிபியாவில் எண்ணெய் வயல்களில் ENI ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் "எண்ணெய் அரைப்பிறை" பிராந்தியத்தில் உள்ள பல எண்ணெய் இருப்புக்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் Total இன் கட்டுப்பாட்டில் உள்ளன. LNA இராணுவக்குழுக்கள் பெங்காசியைச் சுற்றியுள்ள சிரேனிகா பிராந்தியத்தில், கடாபிக்கு எதிரான நேட்டோ ஆதரவு கிளர்ச்சியின் மையமான ஃபெஸானிலும் தமது கட்டுப்பாட்டை வைத்திருக்கின்றன. தெற்கு லிபியாவில் உள்ள இந்த பகுதி இரண்டு முன்னாள் பிரெஞ்சு காலனிகளான நைஜர் மற்றும் சாட் ஆகியவற்றின் எல்லையாக உள்ளது. இதனை மாலி மற்றும் சஹேலில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாக பாரிஸ் தனது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் பெருகிய முறையில் தெளிவாகின்றன. ஹப்தாருக்கான பிரெஞ்சு ஆதரவு குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய வெளியுறவு குழுவின் தாரெக் மெகெரிசி பைனான்சியல் டைம்ஸிடம் பின்வருமாறு கூறினார்: “லிபியாவில் ஜேர்மனி மற்றும் இத்தாலிக்கு மாறாக பிரான்ஸ் வெவ்வேறு நலன்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த நலன்களைப் பாதுகாக்க அது நகர்ந்துள்ளது. இது சஹேலில் பாதுகாப்பு நலன்களை கொண்டிருப்பதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒரு பரந்த பாதுகாப்பு கூட்டணியையும் கட்டியெழுப்புகின்றது. இதில் எகிப்தும் ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது”.
சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு அமைப்பின் (French Institute on International Relations - IFRI) இன் டோரத்தே ஷ்மித், ஹாஃப்டாரில் சமீபத்தில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களினால் பாரிஸ் "மூலோபாய பீதியில்" இருப்பதாக கூறினார். நேட்டோவில் வளர்ந்து வரும் குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை அப்பெண்மணி சுட்டிக்காட்டி, "இந்த விவகாரத்தில் பிரான்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, எல்லோரும் அமெரிக்க தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்" என்றார்.
மேலும் மோதல்கள் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கான ஒரே வழி, ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தொடங்கப்பட்ட போராட்டங்களை மீண்டும் தொடங்குவதும், இந்த போராட்டங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் இணைத்து ஒரு சோசலிச எதிர்ப்பு போர் இயக்கமாக்குவதாகும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர தலையீடு இல்லாததால், ஆளும் உயரடுக்கினர் அனைவரும் போரை நோக்கிச் செல்கின்றனர்
மத்தியதரைக் கடலில் கடற்படை பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. லிபியாவிற்குச் செல்லும் ஒரு வணிகக் கப்பலை, துருக்கிய போர்க்கப்பல் சோதிக்க முயன்றபோது ஒரு பிரெஞ்சு போர் கப்பலை சுடுவதாக அச்சுறுத்தியதை எதிர்த்து ஜூலை 1 ம் தேதி மத்திய தரைக் கடலில் நேட்டோ நடவடிக்கைகளில் இருந்து பிரான்ஸ் விலகிக்கொண்டது. லிபிய நகரமான மிஸ்ராட்டாவில் துருக்கி ஒரு கடற்படைத் தளத்தை அமைக்க முனைவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், எகிப்து தனது பங்கிற்கு, ரஷ்ய “Bastion” கடலோர பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் பரிந்துரைக்கும் மேலதிக கட்டுரைகள்:
லிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது
[25 June 2020]
லிபியா உள்நாட்டு போருக்குள் சரிகிறது: போலி-இடதின் ஏகாதிபத்திய-ஆதரவினது கசப்பான விளைபயன்
[12 April 2019]