முன்னோக்கு

இன-வகுப்புவாத அரசியலும், ஆப்ரகாம் லிங்கனின் இரண்டாவது படுகொலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர், பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனத்தவர் பங்குபற்றிய பாரிய ஆர்ப்பாட்டங்கள், இனவாத பிளவுகளை ஊக்குவிக்க முயல்பவர்களால், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் ஒற்றுமையைக் குலைக்கவும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்க போராட்டத்தின் அபிவிருத்திக்கு குழிபறிக்கவும் கையகப்படுத்தப்பட்டு தவறாக திசைதிருப்பப்பட்டு வரும் அபாயத்தில் உள்ளன. இந்த பிரச்சாரம் இப்போது அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டு போருக்குத் தலைமை கொடுத்த தலைவர்களின் சிலைகளை உடைத்து சிதைப்பதன் மீது ஒருமுனைப்பட்டுள்ளது.

அடிமைப்படுத்துதவற்கான அதிகாரத்தை அழித்து அடிமைப்படுத்தப்பட்ட மில்லியன் கணக்கான ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு விடுதலை வழங்கிய இரண்டாம் அமெரிக்க புரட்சியின் போது, அந்நாட்டை வழிநடத்திய அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனின் நினைவைக் கௌரவிக்கும் நினைவுச்சின்னங்கள் அசுரத்தனமாக தாக்கப்பட்டதால் உருவாகி உள்ள விரக்தியினை வெளிப்படுத்த போதுமான வார்த்தைகளைக் காண்பது கடினமாக உள்ளது.

கூட்டமைப்பு இராணுவம் (Confederate army) சரணடைந்த போது அது நான்காண்டு கால உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில் அதற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களுக்குப் பின்னர் ஏப்ரல் 14, 1865 அன்று மாலை, லிங்கன் அடிமைத்தனத்திற்கு ஆதரவான நடிகர் ஜோன் வில்கெஸ் பூத்தால் (John Wilkes Booth) தலையில் சுடப்பட்டார். அதற்கு ஒன்பது மணி நேரத்திற்குப் பின்னர், ஏப்ரல் 15 காலை 7:22 க்கு, அந்த கொலையாளி ஏற்படுத்திய காயத்தால் லிங்கன் உயிரிழந்தார். லிங்கனின் மரணப் படுக்கைக்கு அருகில் நின்றவாறு போருக்கான செயலர் எட்வின் ஸ்டான்டன் பிரபலமான இந்த வாசகத்தை அறிவித்தார்: “இப்போது இவர் சகாப்தத்திற்கு உரியவராகிவிட்டார்”.

லிங்கனின் உயிர் தியாகம் அமெரிக்கா எங்கிலும் மற்றும் உலகெங்கிலும் அலையென பொங்கிய துக்கத்தை உண்டாக்கியது. தொழிலாள வர்க்கம் ஒரு தலைச்சிறந்த ஜனநாயக மற்றும் மனித சமத்துவத்திற்கான பாதுகாவலரை இழந்து விட்டதாக உணர்ந்தது. லிங்கனின் படுகொலைக்கு சில நாட்களுக்குப் பின்னர், சர்வதேச உழைப்பாளர் சங்கத்தின் சார்பாக கார்ல் மார்க்ஸ் எழுதுகையில், “நல்ல மனிதர் என்பதோடு நின்றுவிடாமல், தலைச்சிறந்த மனிதராக வெற்றி பெற்ற அரிய மனிதர்களில் அவரும் ஒருவர்,” என்று எழுதினார்.

ஆபிரகாம் லிங்கன் ஓர் அசாதாரணமான சிக்கலான மனிதர், அவரின் வாழ்வும் அரசியலும் அவர் காலத்தின் முரண்பாடுகளைப் பிரதிபலித்தது. அவர் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, அவரால் "வரலாற்றிலிருந்து தப்பிவிட" முடியவில்லை. ஒன்றியத்தை (Union) காப்பாற்றும் தீர்மானத்துடன் அவர் புரட்சிகர நடவடிக்கையை கையிலெடுக்க, அந்த இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போரின் தர்க்கத்தால் முன்நகர்த்தப்பட்டார். மூர்க்கமான போராட்டத்தின் போக்கில், லிங்கன் ஒரு "புதிய சுதந்திரத்திற்குப் பிறப்பளிக்க" தங்களின் உயிரைத் தியாகம் செய்து போராடிய நூறாயிரக் கணக்கான அமெரிக்கர்களால் உத்வேகமடைந்து அந்த புரட்சிகர-ஜனநாயக அபிலாஷைகளுக்கு வெளிப்பாட்டை வழங்கினார்.

அமெரிக்காவில் அரசியல் மேலெழுச்சியின் ஒவ்வொரு காலகட்டமும் லிங்கனின் வாழ்விலிருந்து உத்வேகத்தைப் பெற்றுள்ளது. 1922 இல் வாஷிங்டன் டிசி இல் லிங்கன் நினைவுச்சின்னம் திறக்கப்பட்டதற்குப் பின்னர், இன ஒடுக்குமுறைக்கு எதிரான மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தின் மிக முக்கிய சில தருணங்களின் இடமாகவும் அது ஆகியிருந்தது. 1939 இல், ஐரோப்பாவில் ஹிட்லரின் நாஜிக்கள் அணிவகுத்து கொண்டிருந்த போது அமெரிக்க ஆளும் உயரடுக்குகளிடையே பாசிசத்திற்கான பல அனுதாபிகள் இருந்த போது, பிரபல ஆபிரிக்க அமெரிக்க பாடகி மரியான் ஆண்டர்சனுக்கு (Marian Anderson) அரசியலமைப்பு அவையில் பாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது, அவர் 75,000 பேர் கூடியிருந்த ஒரு கூட்டத்தின் முன்னால் லிங்கன் நினைவுச்சின்னத்தின் படிகளில் நின்று பாடினார்.

1963 இல், வாஷிங்டன் அணிவகுப்பில், ஜூனியர் மார்டின் லூதர் கிங் அதே இடத்திலிருந்து தான் "எனக்கொரு கனவுண்டு" (I Have a Dream) உரையை வழங்கி, 250,000 பேர் கூடியிருந்த ஒரு கூட்டத்தின் முன்னால் சமத்துவம் மற்றும் இன நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுத்தார். அந்த தசாப்தத்தின் இறுதியில், வியட்நாம் போரை எதிர்த்த பத்தாயிரக் கணக்கான இளைஞர்களும் அதே நினைவிடத்தில் தான் ஒன்றுகூடியிருந்தனர்.

1930 களின் தொழிலாள வர்க்க மேலெழுச்சியானது Young Mr. Lincoln (1939) மற்றும் Abe Lincoln in Illinois (1940) திரைப்படங்கள் உட்பட பல தலைசிறந்த கலைத்துவமான லிங்கன் படங்களுடன் தொடர்புபட்டிருந்தது என்பது தற்செயலானதில்லை. ஆரோன் கோப்லாந்தின் (Aaron Copeland) தலைசிறந்த நேசிக்கப்படும் இசைக் கச்சேரி-விளக்கவுரை, Lincoln Portrait (1942), அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி "அவர் நாட்டு மக்களின் நினைவில் என்றென்றும் அழியாது வாழ்கிறார்" என்ற அறிவிப்புடன் நிறைவடைகிறது.

ஆனால் இப்போதோ, ஃபோர்ட் நாடக அரங்கின் துன்பியலுக்கு 155 ஆண்டுகளுக்குப் பின்னர், லிங்கன் இரண்டாவது படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது வெற்றியடையக் கூடாது.

காங்கிரஸில் வாக்குரிமை இல்லாத வாஷிங்டன் டிசி இன் பிரதிநிதி Eleanor Holmes Norton கூறுகையில், அவர் வாஷிங்டன் டிசி இன் லிங்கன் பூங்காவிலிருந்து புகழ்பெற்ற அந்த விடுதலை நினைவுச்சின்னத்தை நீக்குவதற்கு ஒரு தீர்மானம் கொண்டு வரவிருப்பதாக தெரிவித்தார். முன்னாள் அடிமைகளால் செலவிடப்பட்டு, 1876 இல் கறுப்பின அடிமை ஒழிப்புவாதி பிரெட்ரிக் டுக்ளஸால் முன்னெடுக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டிருந்த அந்த நினைவுச்சின்னத்தை உடைத்தெறிய விரும்புவதாக இனவெறிப் பிடித்த போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

“டிசி இல் லிங்கன் பூங்காவில் விடுதலை மீட்பு சிலையை வடிவமைத்தவர்கள் ஆபிரிக்க அமெரிக்கர்களின் கண்ணோட்டங்களைக் கருத்தில் கொள்ளவில்லை,” என்று நோர்டன் ஒரு ட்வீட் செய்தியில் அறிவித்தார். அந்த சிலையை வடித்த சிற்பி அதைக் கொண்டு உள்நாட்டு போரின் சுதந்திரத்தை அடையாளப்படுத்த உத்தேசித்திருந்த நிலையில், ஓட்டப்பந்தய வீரரின் நிலையில் குனிந்தவாறு இருக்கும் ஓர் அடிமைக்கு லிங்கன் விடுதலை அளிப்பதாக அந்த நினைவுச்சின்னம் சித்தரிப்பதால் அந்த சிலை "கறுப்பின சமூகத்தை" இழிவுபடுத்துவதாக ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

நோர்டனின் பிற்போக்குத்தனமான முயற்சி, போஸ்டன் ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளால் ஆதரிக்கப்படுகிறது. நோர்டன் அந்நகரில் விடுதலை மீட்பு நினைவுச்சின்னத்தின் நகல்மாதிரியை நீக்குவதற்கான கோரிக்கையைப் பெறுவதற்காக வரவிருக்கும் வாரங்களில் விபரங்களைக் கேட்க உள்ளார்.

கூட்டமைப்பு படைகளுக்கு எதிரானவர்களால் இலக்கு வைக்கப்பட்டவர்களில் லிங்கன் மட்டுமே ஒரே தலைவர் இல்லை. கடந்த வாரம் சியாட்டிலில், வெற்றிகரமான ஒன்றியத்தின் ஆயுதப்படையின் தலைச்சிறந்த தளபதியும் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியுமான Ulysses S. Grant இன் சிலையும் உடைக்கப்பட்டது.

புகழ்பெற்ற 54 வது மாசசூசெட்ஸ் தன்னார்வு தரைப்படைப் பிரிவைக் கௌரவிக்கும் போஸ்டன் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டமை இனவாத நடவடிக்கையின் இன்னும் இழிவார்ந்த ஓர் எடுத்துக்காட்டாகும். அடிமை ஒழிப்புவாதி Robert Gould Shaw தலைமையில் 54 வது மாசசூசெட்ஸ் படைப்பிரிவு உள்நாட்டு போரில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கறுப்பினத்தவர்களைக் முழுமையாக கொண்ட இரண்டாவது படைப்பிரிவாக இருந்தது. திரைப்படம் Glory (1989) இல் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருந்த இந்த 54 வது படைப்பிரிவுக்கு வெள்ளையின அதிகாரி ஷா தலைமை கொடுத்தார் என்ற உண்மையை போராட்டக்காரர்கள் நிராகரிக்கிறார்கள். நியூ யோர்க் டைம்ஸின் கலைத்துறை விமர்சனப்பிரிவின் துணை தலைவர் ஹோலாண்ட் காட்டர் அந்த நினைவுச்சின்னத்தை, ஷா அவரின் ஆபிரிக்க அமெரிக்க படைப்பிரிவுக்குத் தலைமை கொடுப்பதாக அது சித்தரிப்பதற்காக அதை "வெள்ளையின மேலாதிக்க" காட்சி என்பதாக அவதூறு செய்தார்.

மற்றொரு ஒன்றிய நினைவுச்சின்னமான அடிமை ஒழிப்புவாதி ஹன்ஸ் கிறிஸ்டைன் ஹெக்கின் (Hans Christian Heg, 1829-1863) சிலை விஸ்கான்சின் மாடிசனில் செவ்வாயன்று இரவு கீழே வீழ்த்தப்பட்டது. அந்த சிலையின் தலைப்பகுதி உடைக்கப்பட்டு ஆற்றுக்குள் வீசி எறியப்பட்டது.

ஒரு நோர்வீஜிய புலம்பெயர்ந்தவரான ஹெக், கூட்டமைப்புக்கு எதிராக ஸ்கன்டினேவிய படைப்பிரிவு என்றறியப்படும் 15 வது விஸ்கான்சின் படைப்பிரிவுக்குத் தலைமை வகித்தார். அந்த போருக்கு முன்னதாக, சுதந்திர தேசக் கட்சியின் (Free Soil Party) ஓர் உறுப்பினராக இருந்த ஹெக் அடிமைத்தனத்தைக் கடுமையாக எதிர்த்ததுடன், விஸ்கான்சினில் அடிமைத்தன-எதிர்ப்பாளரை பிடிக்கும் போராளிகள் குழுவுக்குத் தலைமை கொடுத்தார். அவர் செப்டம்பர் 1863 இல் சிக்காமௌகா (Chickamauga) போரில் 33 வயதில் கொல்லப்பட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி தாராளவாத நொண்டி சாக்குபோக்குகளையும் மற்றும் இத்தகைய நினைவுச்சின்னங்களை அவமதிப்பதை நியாயப்படுத்துவதற்காக கூறப்படும் நியாயப்பாடுகள் அனைத்தையும் நிராகரிக்கிறது. அவர்களால் என்ன உத்தேசகங்கள் விவரிக்கப்பட்டாலும், நடவடிக்கைகள் புறநிலை முக்கியத்துவத்தையும், மிகவும் நிஜமான அரசியல் விளைவுகளையும் கொண்டுள்ளன.

லிங்கன் நினைவுச்சின்னங்களையும் மற்றும் அமெரிக்க புரட்சியின் மற்றும் உள்நாட்டு போரின் தலைவர்களை கௌரவிக்கும் நினைவுச்சின்னங்களையும் சிதைப்பதென்பது இனவாத வெறுப்புகளைத் தூண்டிவிடுவதை நோக்கமாக கொண்ட அரசியல் ஆத்திரமூட்டல்களாக உள்ளன. இதுபோன்ற ஆத்திரமூட்டல்கள் வகுப்புவாத அரசியலின் நன்கறியப்பட்ட வடிவங்களாகும், இவை இந்து வெறியர்கள் முஸ்லீம் மசூதிகளை எரிப்பதையும், முஸ்லீம் வெறியர்கள் இந்து கோயில்களை எரிப்பதையும் ஒத்திருக்கின்றன. அமெரிக்காவில் இங்கே, இந்த சிலைகள் "வெள்ளையின" ஆட்சிக்கான எடுத்துக்காட்டுகளாக தாக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிலைகள் மீதான தாக்குதல்கள், அமெரிக்க அரசியலை வகுப்புவாதப்படுத்தவும் தீவிரமயப்படுத்தவும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பல்வேறு பிற்போக்குத்தனமான கூறுபாடுகள் மற்றும் இரண்டு முதலாளித்துவ கட்சிகளது பிரச்சாரத்தின் விளைவாகும். இந்த பிரச்சாரத்தின் அதிகரித்து வரும் தீவிரத்தன்மை தொழிலாள வர்க்க போர்குணத்தின் மேலெழுச்சிக்கு ஒரு விடையிறுப்பாகும், இது முதலாளித்துவத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களில் காணப்பட்ட பல இனத்தவரின் ஒற்றுமையை வரவேற்பதிலிருந்து விலகி, ஆளும் உயரடுக்கும் நடுத்தர வர்க்கத்தின் மிகவும் செல்வ செழிப்பான பிரிவுகளும் அதன் அரசியல் உள்நோக்கங்களால் பீதியடைந்துள்ளன.

இனவாத அரசியலை ஊக்குவிப்பதில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கு இடையே உழைப்புப் பிரிவினை உள்ளது. ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் அவர்களின் பொருளாதார பாதுகாப்பின்மைகளை இனவாத விரோதத்தைத் தூண்டிவிடும் விதத்திலும், முதலாளித்துவ அமைப்புமுறையிலிருந்து சமூக கோபத்தைத் திசைதிருப்பி விடும் விதத்திலும் மோசடி செய்து, அமெரிக்க சமூகத்தில் மிகவும் அரசியல்ரீதியில் நோக்குநிலை பிறழ்ந்த கூறுபாடுகளுக்கு முறையிடுகிறார்கள்.

ஜனநாயகக் கட்சியோ எல்லா சமூக பிரச்சினைகளையும் மற்றும் மோதல்களையும் இனவாத அர்த்தத்தில் விவரித்தும், மதிப்பிட்டும் மற்றொரு விதமான வகுப்புவாத அரசியல் வகைப்பாட்டைப் பயன்படுத்துகிறது. வறுமை, பொலிஸ் காட்டுமிராண்டித்தனம், வேலைவாய்ப்பின்மை, குறைவூதியம், தொற்றுநோய் மரணங்கள் என எவ்விதமான பிரத்தியேகமான விடயங்களாக இருந்தாலும், அது ஏறத்தாழ பிரத்தியேகமாக இனவாத அர்த்தத்தில் வரையறுக்கப்படுகிறது. இந்த தீவிரப்படுத்தப்பட்ட கற்பனை உலகில், எல்லா சிரமங்களில் இருந்து விலக்களிக்கும் ஓர் உள்ளார்ந்த "தனிச்சலுகையை" “வெள்ளையினத்தவர்கள்" கொண்டிருக்கிறார்களாம்.

இன்றைய யதார்த்தத்தினை விகாரப்படுத்தும் திரித்துக்கூறலுக்காக, கடந்த காலத்தைக் குறித்த விகாரப்படுத்தும் திரித்தல்கூறல்கள் போதுமானளவு தேவைப்படுகின்றது. சமகாலத்திய அமெரிக்காவை இடைவிடாத இனவாத போர்முறையின் நிலமாக சித்தரிப்பதற்கு, அதே அர்த்தத்தில் ஒரு வரலாற்று கட்டுக்கதையை உருவாக்க வேண்டியிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் இடத்தில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த வரலாறும் என்றுமுள்ள இனவாத மோதலின் கதையாக சித்தரித்துக் காட்டப்படுகிறது.

இந்த தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்னரே கூட, சமகால வகுப்புவாத அரசியலுக்கான இனவாத அடித்தளங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் வெகுவாக நடந்து வந்தன. ஜனநாயகக் கட்சியின் பெருநிறுவன மற்றும் நிதியியல் புரவலர்களின் பிரதான குரலான நியூ யோர்க் டைம்ஸ் வஞ்சகமான 1619 திட்டத்தை இட்டுக்கட்டியது, ஓர் இனவாத கட்டுக்கதையை ஊக்குவிப்பதே இதன் மத்திய நோக்கமாக இருந்தது. அமெரிக்க புரட்சியே வட அமெரிக்க அடிமைத்தனத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டது என்பதும், இனவாத கொள்கையாளர் ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான உள்நாட்டு போருக்கும் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுமே ஆகஸ்ட் 2019 இல் வெளியிடப்பட்ட அந்த திட்டத்தின் பிரதான வாதமாக இருந்தது. அந்த புதிய கதை, அடிமைகள் தங்களைத்தாங்களே விடுதலைப்படுத்திக் கொண்டனர் என்று தொடர்ந்தது.

ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, நிஜமான சமூக முரண்பாடுகளை மூடிமறைப்பதே வரலாறைக் குறித்த இந்த பொய்களின் நோக்கமாகும். இந்த விடயத்தில், முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட மலைப்பூட்டும் அளவிற்கான சமூக சமத்துவமின்மை மட்டங்களில் முரண்பாடுகள் உள்ளடங்கி உள்ளன. வர்க்க போராட்ட அணுகுமுறைகள் மூலமாக ஒரு முற்போக்கான அடித்தளத்தில் மட்டுமே இந்த முரண்பாடுகளைத் தீர்க்க முடியும், இதில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் அதை சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்யவும் போராடுகிறது. வர்க்க அடையாளத்தை இனவாத அடையாளத்தின் நச்சு ஆவிக்குள் கரைத்து விடுவதன் மூலம் இந்த போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான மற்றும் நாசப்படுத்துவதற்கான முயற்சிகள், தவிர்க்கவியலாமல் பாசிசவாத திசைக்கு இட்டுச் செல்கின்றன.

வகுப்புவாதத்தின் இனவாத வடிவங்களை ஊக்குவிப்பதன் மூலமாக, ஆளும் வர்க்கத்தின் எல்லா கன்னைகளும் தொழிலாள வர்க்கத்தை இன்னும் அதிகமாக சுரண்டுவதற்காக மற்றும் புரட்சியின் அச்சுறுத்தலைக் கலைத்து விடுவதற்காக தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த முயல்கின்றன. அமெரிக்க சமூகம் கோவிட்-19 தொற்றுநோய் சுமையின் கீழ் பாரமேறி இருக்கும்போது, இது 120,000 க்கும் அதிகமானவர்களைப் பலி கொண்டுள்ளதுடன் பெருமந்தநிலையின் அளவிற்கு ஒரு பொருளாதார நெருக்கடியைத் தூண்டிவிட்டுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியினரோ முன்பினும் அதிகமாக இனம் தான் அடிப்படை பிரச்சினை என்றாக்க வெறித்தனமாக முயன்று வருகின்றனர்.

தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் சோசலிச அரசியலே இந்த இனவாத வகுப்புவாத அரசியலுக்கு மாற்றீடாகும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமாகும், இந்த முன்னோக்குடன் உடன்படுபவர்கள் எமது கட்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Loading