மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மினியாபொலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிஸால் கொலை செய்யப்பட்டதை அடுத்து வெடித்த பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான வெகுஜன இயக்கம் இனவாத அரசியலின் பிற்போக்குத்தனமான மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு குணாம்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஆர்ப்பாட்டங்கள் அவற்றின் பல்லின மற்றும் பல வம்சாவழியை சேர்ந்தோர் கலந்துகொண்ட குணாதிசயத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இனவெறிக்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் பரந்த உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை அவர்கள் நிரூபித்துள்ளனர். ட்ரம்பின் மீது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பினதும் மீதான பரந்த வெறுப்பை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், பொலிஸ் மிருகத்தனத்திற்கும் இன பாகுபாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கோரி வெள்ளையின மற்றும் கறுப்பின நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அருகருகே அணிவகுத்துச் செல்வது ஜனநாயகக் கட்சி அலுவலர்களையும் அவர்களது கறுப்பின தேசியவாத கூட்டாளிகளையும் அச்சுறுத்தியுள்ளது.
Nation இதழில் குறிப்பாக ஒரு மோசமான கருத்தில், "ஒரே ஒரு சாத்தியமான முடிவு இருக்கிறது: வெள்ளை அமெரிக்கா அதன் கொலையாளி பொலிஸ்காரர்களை விரும்புகிறது" என்ற தலைப்பில், வெளியீட்டின் "நீதித்துறை நிருபர்" எலி மிஸ்டல் மே 27 அன்று பின்வருமாறு எழுதினார்: "காவல்துறை ஒருபோதும் தானாக முன்வந்து கறுப்பின மற்றும் பொதுநிற மக்களை கொலை செய்வதை நிறுத்தப்போவதில்லை. இந்த நாட்டில் பெரும்பான்மையான வெள்ளையின மக்கள் கொலைகளை நிறுத்தும் வரை இந்த கொலைகள் தொடரும். ”
அவர் மேலும் கூறுகிறார்: “காவல்துறையினர் வெள்ளையினத்தவருக்காக வேலை செய்கிறார்கள், அவர்கள் அதை அறிவார்கள். வெள்ளையின மக்களுக்கும் அது தெரியும். காவல்துறையினர் யாரைப் பாதுகாக்க வேண்டும், பணியாற்ற வேண்டும் என்று வெள்ளையர்களுக்குத் தெரியும், அது கறுப்பு மற்றும் பழுப்பு நிற மக்கள் அல்ல என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். ”
இனவெறி பொலிஸ் கொலைகளுக்கு "வெள்ளையின மக்களை" மிஸ்டல் குற்றம் சாட்டுகிறார். கொடூரமான பொலிஸ் வன்முறைக்கு காரணமானதாகக் கருதப்படும் கொலைகார பொலிஸ்காரர்களுக்கு இது அவர்களின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவாகும். இதேபோல், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், எப்படி ஒரு இனவெறி எதிர்ப்பாளராக இருப்பது என்ற புத்தகத்தின் ஆசிரியருமான இப்ராம் கெண்டி நேற்று பின்வருமாறு அறிவித்தார், “எங்களிடம் ஏராளமான அமெரிக்கர்கள் இனவாத கருத்துக்களில் ஊறியுள்ளனர், இனவாத கருத்துக்கள், அவர்களை, தாம் அதனுள் ஊறியிருப்பதை அறிவதை தடுக்கின்றன. இனவாத சக்தியானது அவர்களின் தலையில் இனவெறி கருத்துக்களை மழையெனப் பொழிகின்றது என்பதை தெரிந்து கொள்வதைத் தடுக்கின்றன. ”
இது இனவெறியை எதிர்க்கும் மற்றும் பொலிஸ் கொலைகளால் திகைத்துப்போகின்ற பெரும்பான்மையான வெள்ளையினத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான அவதூறு மட்டுமல்ல, இது பொதுவாக இனவெறி மற்றும் பொலிஸ் வன்முறையின் உண்மையான மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பு மற்றும் அதன் அரச எந்திரத்தின் பங்கை மறைக்கின்றது.
காவல்துறை என்பது எந்தவொரு மக்கள் குழுவை மட்டுமல்ல, அவர்கள் எந்த ஒரு இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. காவல்துறை என்பது முதலாளித்துவ அரசின் ஒரு அங்கமாகும். இது சுரண்டல் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதன் மூலம் பெருநிறுவன-நிதிய ஆளும் வர்க்கத்தின் சொத்துக்கள், செல்வம் மற்றும் அதிகாரத்தை பாதுகாக்கும் "ஆயுதமேந்திய மனிதர்களின் சிறப்பு அமைப்புகளாகும்". அவர்கள் சமுதாயத்தின் மிகவும் பின்தங்கிய அடுக்குகளில் இருந்து அணிதிரட்டப்படுவதுடன் மற்றும் உழைக்கும் மற்றும் ஏழை மக்களை அவமதிக்க போதிக்கப்படுகின்றார்கள். இனவாதம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கான முதலாளிகளின் நீண்டகால கருவியாகும். இது சமுதாயத்தை ஆளும் நிதியதன்னலக் குழுவினால், ஆயுதமேந்தியவர்களின் மத்தியில் ஊக்குவிக்கப்படுகின்றது.
ஆபிரிக்க அமெரிக்கர்களில் ஏராளமானோர் பொலிஸ் வன்முறை மற்றும் கொலைக்கு பலியாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் பொலிசால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் வெள்ளையர்கள் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த ஆண்டு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 429 பேரில், வலைத் தள ஒருங்கிணைப்பாளரான killbypolice.net இன் கூற்றுப்படி, அவர்களில் 170 க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளையர்கள், ஒரு பன்முகத்தன்மை கொண்டவர்கள், 88 பேர் கறுப்பினத்தவர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் வெள்ளையினத்தவரை "வெளியேயிருந்துவரும் கிளர்ச்சியாளர்கள்" என்று முத்திரை குத்த முயன்றனர். கடந்த கோடையில் டைம்ஸ் வெளியிட்ட மதிப்பிழந்த “1619 திட்டத்தின்” முதன்மை எழுத்தாளர் நியூ யோர்க் டைம்ஸ் ஊழியர் பத்திரிகையாளர் நிக்கோல் ஹனா-ஜோன்ஸ் மே 30 அன்று பின்வருமாறு ட்வீட் செய்தார், “இந்த எழுச்சிகளில் கலந்துகொள்ளும் இவர்கள் அழிவை உருவாக்க கறுப்பினத்தவரின் வலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். பத்திரிகையாளர்களாகிய எங்களுக்கு கூறுவதற்கு ஆழமான கதைகள் உள்ளன. ”
பின்னர், ஜோன்ஸ் அவர் குறிப்பிடும் "மக்கள்" வெள்ளையினத்தவர் என்று குறிப்பிட்டார். "வெள்ளையின எதிர்ப்பாளர்கள் கறுப்பு நகரங்களை கிழித்து எறிவது நட்புக்காக அல்ல" என்று அவர் எழுதினார்.
"1619 திட்டம்" அமெரிக்க வரலாறு அனைத்தையும் இனவெறிக்கு எதிரான கறுப்பின மக்களின் போராட்டமாக முன்வைக்க முயன்றது, இது "வெள்ளை" அமெரிக்காவின் "மரபணுக்களில்" பொதிந்துள்ளது. இந்த வரலாற்று பொய்மைப்படுத்தலின் போக்கில், அமெரிக்கப் புரட்சியை அடிமைதாரர்களின் பிரிட்டிஷ் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சதி என்று சித்தரித்தார். ஆபிரகாம் லிங்கனை ஒரு இனவாதி என்று கண்டித்து ஆயிரக்கணக்கான வெள்ளையினத்தவர்கள் இறந்த ஒரு உள்நாட்டுப் போரின் மூலம் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது என்ற உண்மையை புறக்கணித்தார்.
கடந்த மாத பிற்பகுதியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அறிவிக்கப்பட்டபோது, டெட்ராய்ட் நகர மேயர் மைக் டுக்கன், காவல்துறைத் தலைவர் ஜேம்ஸ் கிரெய்க் மற்றும் பல "ஆர்வலர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள் அந்த வார இறுதியில் நடைபெற்ற பல்லின எதிர்ப்புக்களில் கலந்துகொண்டவர்களை "புறநகர் மக்கள்" (அதாவது இளைஞர்கள் பெரும்பாலும் டெட்ராய்டுக்கு வெளியே உள்ள வெள்ளை இனத்தவர் பகுதிகள்) என்று குறிப்பிட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய, "அவர்களை உயிருடன் வைத்திருங்கள்" அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரேமண்ட் வினன்ஸ், "எங்கள் நகரத்திற்குள் ஊடுருவி" கலவரம் மற்றும் கொள்ளையடிக்க "புறநகர் மக்கள்" என்று அழைக்கப்படுபவர்களைக் கண்டித்தார். "அமைப்பை அழிப்பதற்கான" முயற்சிகளை கண்டித்து, பொலிஸ் திணைக்களத்தின் மீதான தனது "அன்பை" வெளிப்படுத்திய அவர், "எங்களை ஒருபோதும் விற்க முடியாது, ஆனால் அதற்கு விலைசெலுத்தப் போகிறோம்" என்று அறிவித்தார்.
அடுத்த நாள் NBC யின் “Meet the Press” நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், அட்லாண்டா மேயர் கெய்ஷா லான்ஸ் பாட்டம்ஸ் தனது நகரத்தில் ஒரு நாள் முன்பு பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிர்ப்பை காட்டியவர்களை “மிகவும் பல்வேறுவகைப்பட்ட கூட்டம்” எனக்கண்டித்தார். "அட்லாண்டாவில் எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், இந்த எதிர்ப்பு, ஒரு உடல்சார்ந்த நிலைப்பாட்டில் கூட, எங்கள் சாதாரண ஆர்ப்பாட்டங்களைப் போல் இல்லை," என்று அவர் புகார் கூறினார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அதே மொழியைக் கொண்டு, இன அடிப்படையில் போராட்டங்களைத் தாக்கும் ஜனநாயகக் கட்சி அலுவலகர்களும், கறுப்பின தேசியவாதிகளும், அவர்களை அடக்குவதற்கும், சுடுவதற்கும் காவல்துறையின் முயற்சிகளுக்கு உதவுகிறார்கள். பொலிஸ் மிருகத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழைப்பை ஆதரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், "இந்த சக்திகள் யாருடைய நலன்களுக்காக சேவை செய்கின்றன?" என்று தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்:
பொலிஸ் மிருகத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிராக ஒரு வெகுஜன பல்லின இயக்கத்தின் தோற்றம் அமெரிக்காவின் முழு அரசியல் அமைப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, ஆளும் வர்க்கம், அரசியல் ரீதியாக ஜனநாயகக் கட்சி மூலமாக மட்டுமல்லாமல் ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்கள் மூலமாகவும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும், முதலாளித்துவ சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் அடிப்படை வர்க்கப் பிரச்சினைகளை மறைப்பதற்கும் ஒரு முயற்சியாக இன அரசியலை ஊக்குவித்துள்ளது.
இது கறுப்பினத்தவர்களின் ஒரு அடுக்கை நகரங்களின் நிர்வாகத்திலும், ஒபாமாவுடன் வெள்ளை மாளிகையிலும் உயர்த்தியுள்ளது. மேலும் உயர் நடுத்தர வர்க்க மற்றும் முதலாளித்துவ ஆபிரிக்க அமெரிக்கர்களின் ஒரு குறுகிய பிரிவினரை பெருநிறுவன அதிகார பதவிகளில், காவல்துறை, இராணுவம் மற்றும் பிறவற்றில் வளர்த்துள்ளது. இன மற்றும் அடையாள அரசியல் முதலாளித்துவ ஆட்சியின் கருத்தியல் மற்றும் அரசியல் முண்டு தூணாக மாறியுள்ளது.
இவை எதுவுமே ஆபிரிக்க அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினர் எதிர்கொள்ளும் வறுமையையும் ஒடுக்குமுறையையும் குறைக்கவில்லை. மாறாக, பொலிஸ் திணைக்களங்களில், காங்கிரஸின் அரங்குகளிலும், வோல் ஸ்ட்ரீட்டிலும் அதிகமான கறுப்பினத்தவர்களைச் சேர்ப்பது கறுப்பினத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மோசமாக்குவதோடு கைகோர்த்துள்ளது.
ஆபிரிக்க அமெரிக்க மக்கள்தொகையின் பணக்கார மற்றும் ஏழ்மையான பிரிவினரிடையே செல்வ படிநிலையானது உலகத்தில் இந்த வளர்ச்சியடைந்த நாட்டில் மிக மோசமானதாக உள்ளது. 2017 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, ஆபிரிக்க அமெரிக்க மக்கள்தொகையில் மேல்மட்ட 10 சதவிகிதத்தினர் அனைத்து செல்வங்களிலும் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானதை கட்டுப்படுத்துகின்றனர். அதே நேரத்தில் ஆபிரிக்க அமெரிக்கர்களில் கீழ்மட்ட 50 சதவிகிதத்தினர் எதிர்மறையான அல்லது எவ்விதசெல்வத்தையும் கொண்டிருக்கவில்லை. பராக் ஒபாமாவின் ஜனாதிபதி காலத்தில் இந்த சமத்துவமின்மை விரைவாக உயர்ந்து, ஆபிரிக்க அமெரிக்கர்களில் மேல்மட்ட 1 சதவிகிதத்தினர் தங்கள் செல்வத்தின் பங்கை 19.4 இலிருந்து 40.5 விகிதமாக இரட்டிப்பாக்கினர்.
மக்கள் தொகை முழுவதும், சமூக சமத்துவமின்மை வெடிக்கும் தன்மையுடன் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஒரு தன்னலக்குழுவின் சமூகமும், அத்தகைய சமூகம் ஜனநாயக உரிமைகளுக்கு பொருத்தமற்றும் இருக்கின்றது.
சமத்துவமின்மையும் வறுமையும் அதிகரிப்பதால், காவல்துறையின் மிருகத்தனமும் அதிகரித்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக, காவல்துறை முறையாக இராணுவமயமாக்கப்பட்டு, தொழிலாள வர்க்க சமூகங்களை ஆக்கிரமித்துள்ள ஒரு உண்மையான கொலைக் குழுக்களாக மாற்றப்பட்டுள்ளது.
ஒபாமா நிர்வாகம் பாதுகாப்புத் துறையின் 1033 திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பொலிஸ் இராணுவமயமாக்கலை விரிவுபடுத்தியது. இந்த திட்டம் பொலிஸ் துறைகளுக்கு "அதிகப்படியான" இராணுவ தர ஆயுதங்களை வழங்குகிறது. 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது இராணுவத்திலிருந்து 5.1 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களை உள்நாட்டு சட்ட அமலாக்கத்திற்கு வழங்கியது. இது ட்ரம்பின் ஜனாதிபதி காலத்தில் வெறுமனே விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இன அரசியலை ஊக்குவிப்பவர்கள் சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பிலிருந்தும், உழைக்கும் மக்களின் வறுமையிலிருந்தும் பயனடைந்த ஒரு செல்வந்தர் மற்றும் சலுகை பெற்ற அடுக்கின் நலன்களை வெளிப்படுத்துகிறார்கள். பணக்கார 10 சதவிகிதத்தின் ஒரு பகுதியான இந்த அடுக்கு முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதில் ஒரு உறுதியான ஆர்வத்தைக் கொண்டுள்ளது. இது முதல் ஐந்து சதவிகிதத்தினரின் ஏகபோக உரிமையின் ஒரு பெரிய பகுதியையும் தனக்கு ஒரு சதவிகிதத்தையும் நாடுகிறது. இது முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன ஒன்றுபட்ட இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு அச்சமடைகிறது. இதனால் இது புறநிலைரீதியாக வெள்ளையின மற்றும் கறுப்பின தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அணியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.