மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மினசோட்டாவின் மினியாபோலிஸில் நினைவு நாள் அன்று ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்டதை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கண்டிப்பதுடன் மற்றும் அவரது மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடரக் கோருகிறது.
ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொல்லப்பட்டது ஒரு கொடூரமான குற்றமாகும். ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட், திங்கள்கிழமை அவரை விட்டுவிடுமாறு கோரிய ஒரு தொகை மக்களின் முன்னால் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தரையில் அழுத்தப்பட்டதால் இறந்தார். குற்றத்தின் பெரும்பகுதி பார்வையாளர் ஒருவரின் வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் சிக்கியது.
ஒரு வீடியோவில் வெள்ளை நிறத்தில் இருக்கும் அதிகாரி டெரெக் சொவ்வின், 46 வயதான ஃபுளோய்ட் தனது உயிருக்கு மன்றாடி “என்னால் மூச்சுவிட முடியாதுள்ளது”, “நீங்கள் என்னைக் கொல்லப் போகிறீர்கள்”! என்று அழுகையில் பல நிமிடங்கள் அவரின் கழுத்தில் முழங்காலை வைத்து பலவந்தமாக அழுத்தினார்.
போலி பத்து டாலரினை பயன்படுத்த முயற்சித்ததாக உள்ளூர் கடையிலிருந்து வந்த அழைப்புக்குப் பின்னர், ஃப்ளோய்ட் கைது செய்யப்பட்டார். கடையின் உரிமையாளர் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, இது போலியானதா இல்லையா என்பது ஃப்ளோய்ட்டுக்கு தெரியுமா என்று தனக்குத் தெரியாது. பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஃப்ளோய்ட்டை கைப்பற்றி அவரது வாகனத்திலிருந்து இழுத்து, கைவிலங்கு இட்ட பின்னர் அவரது உடல் உணர்வற்று செல்லும்வரை அவரை ஒரு இறுக்கிப்பிடியில் வைத்திருந்தனர்.
ஃப்ளோய்ட்டை கட்டுப்படுத்த உதவிய மற்ற மூன்று அதிகாரிகள் தோமஸ் லேன், டூ தாவோ மற்றும் ஜே. அலெக்சாண்டர் குயெங் (Thomas Lane, Tou Thao and J. Alexander Kueng) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ பொலிஸ் அறிக்கையில், ஃப்ளோய்ட் கைது செய்யப்படுவதை எதிர்த்தார் என்று குறிப்பிடுகையில், உள்ளூர் உணவக உரிமையாளரால் புதன்கிழமை வெளியிடப்பட்ட கண்காணிப்பு வீடியோ, அவர் தனது காரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு போலீசாரால் கைவிலங்கு செய்யப்பட்ட எந்தக் கட்டத்திலும் அவர் எதிர்த்து போராடவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.
அவரது மரணம் எந்தவொரு நியாயமும் இல்லாமல் பட்டப்பகலில் ஒரு தெளிவான கொலை என்றாலும், புதன்கிழமை மாலை வரை சொவ்வின், லேன், தாவோ மற்றும் குயெங் ஆகியோர் சுதந்திரமான மனிதர்களாகவே உள்ளனர். பொலிஸ் திணைக்களத்தால் ஊதியம் இன்றி அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் செவ்வாயன்று மக்கள் கோபத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஜனநாயகக் கட்சி மேயர் ஜேக்கப் ஃப்ரே ஆல் பதவிநீக்கப்பட்டனர்.
இந்தக் கொலையும் மற்றும் ஃப்ளோய்ட்டின் கொலையாளிகளைக் கைதுசெய்ய மறுத்ததும் இரண்டு நாள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அனைத்து இனங்களின் தொழிலாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளோய்ட் கொல்லப்பட்ட தெருசந்தியிலும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் வெள்ளை மற்றும் கறுப்பின ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிசார் பல சுற்று கண்ணீர்ப்புகை மற்றும் இரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். மேலும் நேற்று இரவு மினியாபோலிஸ் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டன.
ஜோர்ஜ் ஃப்ளோய்ட்டின் கொலை அமெரிக்க பொலிஸின் கைகளில் இடம்பெறும் முடிவில்லாத மரணங்களில் சமீபத்தியதாகும். இந்த ஆண்டு இதுவரை killbypolice.net இன் படி 400 பொலிஸ் கொலைகள் நடந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும் எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாகும்.
மிசூரியின் ஃபேர்குசனில் (ஆகஸ்ட் 9, 2014) மைக்கேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகின்றன. நியூயோர்க் நகரில் (ஜூலை 17, 2014) எரிக் கார்னர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். இது பொலிஸ் வன்முறைக்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. இந்த இடைப்பட்ட காலத்தில் சுமார் 6,000 பேர் போலீசாரால் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் வன்முறை சம்பவங்களில் இனவெறி ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் கொலைகள் வெள்ளையின பொலிஸாரால் செய்யப்படுகையில், ஆபிரிக்க அமெரிக்கர்களும் ஹிஸ்பானியர்களும் துன்புறுத்தல், துஷ்பிரயோகம், கைது மற்றும் சிறைவாசம் ஆகியவற்றிற்கு மக்களின் விகிதாசாரத்திற்கு பொருத்தமில்லாதளவில் குறிவைக்கப்படுகிறார்கள். ட்ரம்ப் நிர்வாகம் வேண்டுமென்றே காவல்துறை அதிகாரிகள் உட்பட மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்குத்தனமான அடுக்குகளை வளர்த்துள்ளது. "குண்டர்களை" "முரட்டுத்தனமாக" நடத்துவதற்கான காட்சிகளைப் பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளதுடன், மேலும் "மிகவும் தயவாக" இருக்கக்கூடாது என்று பொலிஸை ஊக்குவித்துள்ளார்.
ஆனால், பொலிஸ் வன்முறைக்கான மூலஆதாரம் இன விரோதம் அல்ல, மாறாக வர்க்க ஒடுக்குமுறையாகும். பொலிஸ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிடையே காணப்படும் பொதுவான தன்மை என்னவெனில் அவர்கள் கருப்பு, வெள்ளை, ஹிஸ்பானிக் அல்லது பூர்வீக அமெரிக்கர்களாக இருப்பதுடன், அவர்கள் ஏழைகளாகவும் மற்றும் மக்கள் தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராகவும் இருக்கின்றனர்.
பொலிஸ் வன்முறைக்கு இனவெறி தான் காரணம் என்று கூறுவதில் கறுப்பின மக்களின் வாழ்விற்கான அமைப்பு (Black Lives Matter) மற்றும் இன அரசியலின் மற்ற ஆதரவாளர்களின் பங்கு, அதிகமான கறுப்பின போலீஸ் அதிகாரிகளை பணியமர்த்துவது அல்லது அதிகமான கறுப்பின அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பது பிரச்சினையை தீர்க்கும் என்ற கருத்தை ஊக்குவிப்பதாகும். தவிர்க்க முடியாமல், இதன் பொருள் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் இரட்டைக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சியின் பின்னால் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதாகும். பொலிஸ் வன்முறையின் தொற்றுநோய் தடையின்றி தொடரும்.
இந்த பயங்கர ஆட்சி, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கண்காணிப்பில் பொங்கி எழுந்து பாசிச குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பின் கீழ் தொடர்கிறது. ஒரு மாநிலத்தில் ஜனநாயக அல்லது குடியரசுக் கட்சி ஆளுநர் இருக்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமலும் நகர மேயர் அல்லது காவல்துறைத் தலைவர் கருப்பு, வெள்ளை, ஆண், பெண், ஈரின அல்லது ஓரினச் சேர்க்கையாளராக இருந்தாலும் பொலிஸ் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன.
ஒரு சோமாலிய-அமெரிக்க மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரி, ஜஸ்டின் டாமண்ட் என்ற வெள்ளைப் பெண்ணை தனது வீட்டின் பின்புறகொல்லையில் சுட்டுக் கொன்று மூன்று வருடங்கள் ஆகின்றன. அருகிலுள்ள புறநகரில் உள்ள ஒரு ஹிஸ்பானிக் காவல்துறை அதிகாரி ஒரு ஆபிரிக்க அமெரிக்க மனிதரான பிலாண்டோ காஸ்டில் ஒரு போக்குவரத்து சந்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இது பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
பொலிஸ் வன்முறையின் ஒரு குறிப்பாக மிருகத்தனமான செயல் பகிரங்கமாக அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் (தவிர்க்க முடியாமல் அது ஒளிப்பதிவில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது) ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் விசாரணை நடாத்துவதென வாக்குறுதிகளில் ஈடுபடுகிறார்கள். கிட்டத்தட்ட எப்போதும், இந்த விசாரணைகள் வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்க தவறிவிடுகின்றன.
லெனின் தனது அரசும் புரட்சியும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி அரச அதிகாரமானது "சிறைச்சாலைகள் போன்றவற்றை கொண்ட ஆயுதமேந்திய மனிதர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது." ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸை மேற்கோள் காட்டி லெனின் குறிப்பிட்டது, அரசு என்பது அடிப்படையில் “வர்க்க விரோதங்களின் சமரசமின்மையின் ஒரு தோற்றமும் மற்றும் வெளிப்பாடும்” என்றும், “ஒரு அரசினுள் வர்க்க விரோதங்கள் தீவிரமடைகையில் அதற்கேற்ற விகிதத்தில் அரசின் அதிகாரமும் வன்முறையும் பலமாக வளர்ச்சியடைகின்றன”என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன், இந்த வர்க்க விரோதங்கள் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகின்றன. பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு மக்களைப் பாதுகாக்க எதுவும் செய்யாமல், தொற்றுநோயைப் பயன்படுத்தி ட்ரில்லியன் கணக்கான டாலர்களை தனக்கு மாற்றிக் கொள்கின்றது. இதற்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன.
இதைத் தொடர்ந்து "பொருளாதாரத்தை மீண்டும் திறக்க" மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு இலாபத்தை வழங்க தொழிலாளர்களுக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆளும் உயரடுக்கு பரந்த வேலையின்மை மற்றும் அரசை திவாலாக்குவது ஆகியவற்றை சுரண்டலை அதிகரிக்கவும், சமூக திட்டங்களை அழிக்கவும், மக்களை வறுமையாக்கவும் திட்டமிட்டுள்ளது.
நிதிய பிரபுத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதல்தான் அரசின் மிருகத்தனத்திற்கும் வன்முறைக்கும் அடிப்படை ஆதாரமாகும். அதே மோதலானது இந்த மிருகத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரு அரசியல் இயக்கத்திற்கான புறநிலை அடித்தளத்தை, அதாவது அரசியல் சக்தியை தனது கைகளில் எடுத்துக்கொண்டு முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முழு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும்
ஐக்கியப்பட்ட இயக்கத்தின் உருவாக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றது.
இந்த போராட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி தலைமை தாங்குகிறது. சோசலிசம் 2020.org இல் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சேர்ந்து ஆதரிக்கவும்.