மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
போஸ்டனை தளமாகக் கொண்ட உயிரியல்தொழில்நுட்ப நிறுவனமான மொடேர்னா (Moderna) திங்களன்று மனிதர்கள் மீது நடத்தப்பட்ட முதல் COVID-19 தடுப்புமருந்து பரிசோதனை நேர்மறையான முடிவுகளைக் கொண்டுள்ளது என்று அறிவித்ததானது தகவல்சாதனங்களால் ஒரு வெறித்தனமான மற்றும் புகழ்பாடும் அலையால் வரவேற்கப்பட்டது.
மாலை செய்தி இந்த "புரட்சிகர" சிகிச்சையுடன் ஆரம்பித்து, இது ஒரு "திருப்புமுனை" என்று அழைக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு "நம்பிக்கையின் அலைகளை உருவாக்குகிறது" என்று என்.பி.சி நியூஸ் அறிவித்தது. ஃபாக்ஸ் நியூஸ் முதல் சி.என்.என் வரை பிபிஎஸ் வரை அனைத்து இடங்களிலும் இதே மாதிரியானதாகவே இருந்தது.
ஒரு அதிசய சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது எனக்கூறப்பட்டதும் வோல் ஸ்ட்ரீட் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. இந்த செய்திகளால் சந்தைகள் உயர்ந்து, டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. மொடேர்னா இன் பங்குகள் 20 டாலருக்கும் அதிகமாக இருந்தன.
ஆனால் வெறும் 36 மணி நேரத்திற்குள், இந்த பிரச்சாரம் அதன் சொந்த சுமையினாலேயே வீழ்ச்சியடையத் தொடங்கியது.
மொடேர்னா ஆல் வழங்கப்பட்ட தகவல்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதையும், இந்த சிறிய ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு அதன் விளைவுகளை பற்றிய தரவுகள் இல்லை அல்லது உற்பத்தியாளர்களால் அவை தடுக்கப்பட்டிருந்தன என்பதையும் யாரும் கவனிக்கவில்லை.
மருத்துவ வெளியீடான STAT இந்த ஒரு திருப்புமுனை தடுப்புமருந்து குறித்து மிக அடிப்படையான விஞ்ஞான கேள்விகளை எழுப்பிய அறிக்கையை வெளியிட்டபோது, மொடேர்னா பங்குகள் 10 சதவிகிதம் சரிந்து, டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியை அதனுடன் இழுத்துச் சென்றது.
ஆனால் அது அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் அரசாங்கத்தினால் “விரைவான வேகத்தில்” தடுப்புமருந்து அபிவிருத்தி செய்வதற்காக நியமிக்கப்பட்ட மொடேர்னா நிர்வாக உறுப்பினர் Moncef Slaoui க்கு ஒரு விடயமாக இருக்கவில்லை. மொடேர்னாவிலுள்ள தனது பங்குகளை திங்களன்று விற்கப்போவதாக Slaoui வெள்ளிக்கிழமை அறிவித்தார். அதாவது விளம்பரத்தின் எழுச்சியின் விளைவாக அவர் 2.4 மில்லியன் டாலர் பணக்காரர் ஆனார். ஆனால் ஆய்வு குறித்து கேள்விகள் எழுந்தபோது வந்த இழப்புக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
STAT தனது அறிக்கையில், “STAT இனால் கேட்ட பல தடுப்புமருந்து வல்லுநர்கள், கேம்பிரிட்ஜ், மாஸாசுசெட்ஸ் அடித்தளமாக கொண்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தடுப்புமருந்து எவ்வளவு தாக்கம்மிக்கதாக இருக்கலாம் அல்லது இல்லையா என்பதை அறிய உண்மையில் வழி இல்லை என்று முடிவு செய்தனர்”.
விசாரணையில் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனம் (NIAID) ஈடுபட்டிருந்தாலும், "NIAID திங்களன்று ஒரு செய்திக்குறிப்பையும் வெளிவிடாததுடன், மேலும் மொடேர்னாவின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது" என்று STAT குறிப்பிட்டது.
45 பேர் தடுப்புமருந்து பெற்றபோது, மொடேர்னா எட்டு பேரினது முடிவுகளை மட்டுமே வழங்கியது.
மேலும், STAT எழுதியது:
தடுப்பூசி போடப்பட்டவர்களில் நடுநிலையாக்கப்பட்ட நோய்எதிர்ப்புசக்தி பற்றிய அறிக்கை, அவர்களின் இரண்டாவது தடவை தடுப்புமருந்து பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பெறப்பட்ட இரத்தத்திலிருந்து வருகிறது. இரண்டு வாரங்கள் என்பது மிக காலத்திற்கு முந்தியது. அந்த நோய்எதிர்ப்புசக்தி நீடிக்கத்தக்கவையா என்று எங்களுக்குத் தெரியாது”, என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தடுப்புமருந்து ஆராய்ச்சியாளர் அன்னா டர்பின் கூறினார்.
மொடேர்னா தனது செய்திக்குறிப்பில், “தடுப்புமருந்து வழங்கப்பட்டவர்களில் காணப்பட்ட நோயெதிர்ப்புசக்தி அளவுகள், சுகப்பட்ட அல்லது சுகப்பட்டுக்கொண்டிருக்கும் நோயாளிகளில் பொதுவாக காணப்படும் அளவுகளில் அல்லது அதற்கு மேல் இருந்தன” என்று குறிப்பிட்டது. ஆனால் STAT, "சுகப்பட்ட 175 COVID-19 நோயாளிகளில், 10 பேருக்கு கண்டறியக்கூடிய நடுநிலைப்படுத்தும் நோயெதிர்ப்பு சக்தி இல்லை" எனக்குறிப்பிட்டது.
டர்பின் குறிப்பிட்டார், “நான் நினைத்தேன்: பொதுவாக? அதற்கு என்ன பொருள்?"
STAT "அவரது கேள்விக்கு, தற்போதைக்கு பதிலளிக்க முடியாது" என்ற முடிவிற்கு வந்தது.
COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பாரிய அளவிலான வேலையின்மை மற்றும் பரவலான சமூக இடப்பெயர்வு ஆகியவற்றின் கீழ், மொடேர்னா தடுப்புமருந்தை அப்பட்டமாக பொறுப்பற்ற முறையில் ஊக்குவிப்பது, அரசியல் ஸ்தாபகத்தினதும் ஊடகத்துறையினதும் ஒவ்வொரு அம்சத்திலும் பரவியுள்ள வரம்பற்ற அளவிலான ஊழலின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
வோல் ஸ்ட்ரீட் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு, இந்த தொற்றுநோயானது சொர்க்கத்திலிருந்து வந்த அமுதமாகும். அவர்கள் 6 டிரில்லியன் டாலர் பிணையெடுப்பைப் பெற்றிருப்பது மட்டுமல்லாமல், உயிர் காக்கும் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளுக்காக பயந்துபோன மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பார்கள். ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, ஒரு தடுப்புமருந்தின் அபிவிருத்தி என்பது உயிரைப் பாதுகாப்பதைப் பற்றியது அல்ல. ஆனால் கொரோனா வைரஸ் பரிசுத்தொகையை யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிப்பதாகும்.
செய்திஊடகங்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் பின்னர் கிலியட்டின் ரெம்டெசிவிர் போன்றவற்றைப் போலவே, மொடேர்னாவின் தடுப்புமருந்தின் விளம்பரமும் ஒரு பழக்கமான முறையைப் பின்பற்றுகிறது.
மொடேர்னாவின் முடிவுகளைச் சுற்றியுள்ள ஊடகங்களின் கவனம் ஒரு அதிசய சிகிச்சைமுறை கையிற்கு எட்டும் தூரத்தில் உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க உதவுகிறது. ஆளும் வர்க்கத்தின் வேலைக்குச் செல்லும் பிரச்சாரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். கொரோனா வைரஸ் ஆபத்தானது அல்ல, எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் வாழ்க்கை "இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்" என்ற மனநிலையை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.
இருப்பினும், தடுப்புமருந்து பரிசோதனைகளின் அனுபவம், முன்னைய சோதனைகள் பற்றிய வாக்குறுதிகள் விரிவான மக்கள் தொகையினரிடையேயான ஆய்வுகளின் மூலம் அடிக்கடி பின்னடைவுகளால் நிரம்பியுள்ளன என்பதை நிரூபித்துள்ளது. முதல் ஆராய்ச்சி கட்டத்தை கடக்கும் மருந்துகளில் 10 சதவீதம் மட்டுமே இறுதியில் சந்தைக்கு வருகின்றன.
உதாரணமாக, பிரெஞ்சு மருந்து நிறுவனமான Sanofi, 2015 இல் தயாரித்த டெங்கு தடுப்புமருந்து, அதன் பரிசோதனையின் பல கட்டங்களை கடந்து சென்றது. தடுப்பூசி பெற்றவர்கள் நோயின் கடுமையான வடிவத்தை உருவாக்கக்கூடும் என்று கண்டறிந்த ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை கவனத்திற்கு எடுக்காததற்காக நிறுவனம் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலை நோயெதிர்ப்புசக்தி சார்ந்த சார்பு மேம்பாடு என்று அழைக்கப்படுகிறது. இது வைரஸ் தொற்று பிரதிபலிப்பின் மிகவும் மேம்படுத்தப்பட்ட சூழ்நிலையைத் தூண்டும். 800,000 பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர், 2017 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸ் அரசாங்கம் பரவலான மக்கள் அச்சங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த கோபத்தின் மத்தியில் தடுப்பூசி பயன்படுத்துவதை நிறுத்தியது.
காலத்திற்கு முன்கூட்டியே சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளின் விரைவான வளர்ச்சி, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 1957 ஆம் ஆண்டில் மேற்கு ஜேர்மனியில் முதன்முதலில் விற்பனை செய்யப்பட்ட Thalidomide, கவலை, தூக்கமின்மை மற்றும் காலை வியாதி ஆகியவற்றைத் தடுப்பதற்கான ஒரு மேலதிக மருந்தாக ஊக்குவிக்கப்பட்டது. 1961 அளவில், இது கடுமையான பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று அங்கீகரிக்கப்பட்டது. கருச்சிதைவுகளைத் தடுப்பதற்கும், கர்ப்பப் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 1940 களில் 1970 களில் விற்பனை செய்யப்பட்ட ஈஸ்ட்ரோஜன் மாத்திரையான Diethylstilbestrol (DES), DES பயன்படுத்திய பெண்களுக்கு பிறந்த மகள்களுக்கு அரிதான யோனி புற்றுநோயை உருவாக்க வழிவகுத்தது.
NIH இல் NIAID இன் தலைவரும், வெள்ளை மாளிகையின் சுகாதார ஆலோசகருமான டாக்டர் அந்தோனி பௌஸி, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நம்பகமான மற்றும் நிரூபிக்கப்பட்ட தடுப்புமருந்து அவசியம் என்று உடல்நலம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான செனட் குழு முன் நிதானமாகக் குறிப்பிட்டார். ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தடுப்பூசி வழங்குவதாக ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் உறுதியளித்த போதிலும், குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என்று அவர் வலியுறுத்தினார்.
தடுப்புமருந்து அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்பு கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும் மில்லியன் கணக்கானவர்கள் தடுப்பூசி போட வேண்டியிருக்கும். தடுப்பூசியின் பக்க விளைவுகள் 1 சதவிகிதத்தில் கூட மோசமான அல்லது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தினால், இந்த எண்கள் நூறாயிரக்கணக்கானோருக்கு அல்லாமல் மில்லியன் கணக்கான மக்களாக இருக்கும்.
மொடேர்னாவின் தடுப்புமருந்தை ஊடகங்கள் மிகைப்படுத்தியதில் வணிக மற்றும் கொள்ளையடிக்கும் நலன்களுக்கு அப்பால், ஒரு கோவிட்-19 தடுப்புமருந்தை உருவாக்குவதற்கான அமெரிக்க முயற்சியின் முழு கட்டமைப்பும் தேசியவாத புவிசார் அரசியல் நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் “விரைவான வேக” தடுப்புமருந்து மேம்பாட்டுத் திட்டம் “சர்வதேச ஒத்துழைப்பையும் மற்றும் சீனாவிலிருந்து வரும் எந்தவொரு தடுப்புமருந்தையும்” தவிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும் “அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட” தடுப்புமருந்துகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் Science இதழின் சமீபத்திய கட்டுரை குறிப்பிடுகிறது.
அது குறிப்பிடுகிறது, "விரைவான வேகம், எந்த வகையான தடுப்புமருந்தையும் நிராகரிக்கவில்லை என்றாலும், செயலிழந்த வைரஸ் தடுப்புமருந்து சமீபத்தில் கொரோனா வைரஸிலிருந்து குரங்குகளைப் பாதுகாப்பதற்காக சமீபத்தில் காட்டப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்டவற்றையும் இது கருத்தில் கொள்ளாது." இது மேலும் கூறுகிறது, “அமெரிக்காவை பாதுகாப்பதே விரைவான வேகத்தின் முக்கிய குறிக்கோளாகும்.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், COVID-19 தடுப்புமருந்துக்கான முக்கியமான சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. சர்வதேச ஒத்துழைப்பானது முன்கூட்டியே நோய்க்கான எந்தவொரு தீவிரமான பதிலுக்கும் முக்கியமானதாகும்.
இந்த வாரம், 73 வது வருடாந்திர World Health Assembly திறப்பதன் மூலம் குறிக்கப்பட்டது. தொற்றுநோய்களின் எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்கி வருவதோடு, 325,000 க்கும் அதிகமானோர் வைரஸின் அழிவுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தொற்றுநோய்க்கு சீனாவை குற்றம் சாட்ட இதில் அமெரிக்கா முயன்றது.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus இன் கூற்றுப்படி, “COVID-19 இனை அணுகுவதற்கான விரைவாக்கலானது, பல முனைகளில் முயற்சிகளை ஒன்றிணைத்து, பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மலிவு சிகிச்சை மற்றும் தடுப்புமருந்துகளை மிகக் குறுகிய காலத்தில் உறுதிசெய்கிறது. இந்த கருவிகள் COVID-19 ஐக் கடக்கும் கூடுதல் நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால் அவற்றுக்கு சமமான அணுகலை உறுதி செய்ய முடியாவிட்டால் அவை தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவராது. இந்த அசாதாரண சூழ்நிலைகளில், விஞ்ஞானத்தின் முழு சக்தியையும் நாம் கட்டவிழ்த்து விட வேண்டும், அளவிடக்கூடிய, பயன்படுத்தக்கூடிய, மற்றும் அனைவருக்கும், எல்லா இடங்களிலும், ஒரே நேரத்தில் பயனளிக்கும் கண்டுபிடிப்புகளை வழங்க வேண்டும். பாரம்பரிய சந்தை மாதிரிகள் முழு உலகத்தினையும் சமாளிக்க தேவையான அளவில் வழங்காது”.
ஆனால் இந்த அபிலாஷைகள் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் பிரதிபலிப்புக்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். அவை பெரிய நிறுவனங்களை அதிலிருந்து இலாபத்தை பெறக்கூடிய நிலையில் வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளபோதிலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் கைவிட்டுவிட்டன.
மொடேர்னா தடுப்புமருந்து மீதான வெறித்தனத்தின் அடிப்படை படிப்பினை என்னவென்றால், கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் இரண்டு முனைகளில் தொடரவேண்டும்: ஒன்று மருத்துவ முனையில் மற்றது முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான சமூக மற்றும் அரசியல் போராட்ட முனையிலுமாகும்.
இலாபத்தை வழங்குவதற்காக அல்லாமல் பொதுமக்களின் நலனுக்காக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மருந்துத் துறையின் மீதான தனியார் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை விட, கோவிட்-19 தொற்றுநோய்க்கான தீர்வைத் தேடுவதற்கு பெரிய பங்களிப்பு எதுவும் இருக்க முடியாது.