முன்னோக்கு

கோவிட்-19 தொற்றுநோயும், பொருளாதார தேசியவாதத்தின் அதிகரிப்பும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரொனா வைரஸ் தொற்றுநோயும் அதன் பொருளாதார விளைவுகளும், உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அனுபவங்களினூடாக, முதலாளித்துவ அமைப்புமுறையின் தனித்துவமான அபத்தங்களுடன் சேர்ந்து, அதன் உள்ளார்ந்த அழுகிய நிலையையும் சீரழிவையும் எடுத்துக்காட்டி உள்ளன.

உண்மையை எடுத்துக்காட்டும் விதமாக ஒருவருக்கு ஒரேயொரு உதாரணமே போதுமானது. அதாவது இந்த புவியில் மிகப்பெரும் பணக்காரரான அமசன் ஸ்தாபகர் ஜெஃப் பெஸோஸ் அவர் சொத்துக்களில் இந்தாண்டு தொடங்கியதில் இருந்து 24 பில்லியன் டாலரை அதிகரித்து 138 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்துக்களை வைத்துள்ளார், அதேவேளையில் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் செவிலியர்களும் சுகாதார தொழிலாளர்களும் அவசியமான பாதுகாப்பு சாதனங்கள் கூட இல்லாமல் இந்த வைரஸிற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இதைப்போன்ற ஏனைய உதாரணங்களும் தாராளமாக உள்ளன. அமெரிக்காவில் சுகாதாரத்துறை ஆணையங்களும் மாநிலங்களும் அவசியமான சாதனங்கள் மற்றும் பொருட்களைப் பெறுவதற்காக முதலாளித்துவ "சுதந்திர சந்தையில்" ஒன்றுக்கொன்று போராட நிர்பந்திக்கப்பட்டுள்ளன. அல்லது அமெரிக்காவில் ஆயிரக் கணக்கானவர்கள் இலவச உணவு வழங்குமிடங்களில் வரிசையில் நிற்கின்ற அதேவேளையில் பால் உற்பத்தியாளர்கள் பாலை வீணாக தரையில் ஊற்றி வருகின்றனர் மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் அவர்களின் உற்பத்திப் பொருட்களை தரையிலேயே போட்டு உழுதுவிடுகின்றனர்.

இப்போது “வழமையான காலங்கள்" என்றழைக்கப்படும் கடந்த காலத்தில் மூடிமறைக்கப்பட்டிருந்த இதுபோன்ற முரண்பாடுகள் அம்பலமாகி வருகின்ற அதேவேளையில், இந்த தொற்றுநோய் நீண்டகாலமாக உண்மையான சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடித்தளத்தை உருவாக்கிய அடிப்படை உண்மைகளையும் எடுத்துக்காட்டி வருகிறது.

முதலும் முக்கியமுமாக, பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் ஒரு சிறிய சிறுபான்மையும், அது எதன் மீது நிற்கிறதோ அந்த இலாபகர அமைப்புமுறையும், மனித உயிர்களுக்கான அச்சுறுத்தலைக் கையாள்வதற்கு அவசியமான பகுத்தறிவார்ந்த ஒழுங்கமைப்புக்கும் பொருளாதார மற்றும் சமூகத்தை விஞ்ஞானபூர்வமாக திட்டமிடுவதற்கும் ஒரு தடையாக நிற்கிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. இந்த தடை நீக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த அளப்பரிய சமூக பிரச்சினையை, இந்த தொற்றுநோய் உருவாக்கிய அசாதாரண நிலைமைகளுடன் மட்டுமே பொருத்திப் பார்ப்பது தவறாக போய்விடும். இது இன்னும் பரந்து விரிந்துள்ளது.

தொழிலாளர்களுக்கு முன்னிருக்கும் உடல்நல ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல், வேலைக்குத் திரும்புவதை ஆதரிப்பவர்கள், ஒரு தொடர்ச்சியான ஊரடங்கு என்பது இன்னும் அதிக பொருளாதார அழுத்தம் மற்றும் மோசமடையும் வறுமை, அத்துடன் உடல்நல பிரச்சினைகள் மற்றும் உளவியல் பிரச்சினைகள் என்பதை அர்த்தப்படுத்துமென கூறுகிறார்கள். ஆனால் இந்த உடல்நல நெருக்கடியைக் கையாளும் அதேவேளையில், இதுபோன்ற பிரச்சினைகளை அனைவருக்கும் வாழ்வதற்கான வருவாயை வழங்குவதற்காக உலகின் பெஸோஸ் போன்றவர்களின் பரந்த செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதன் மூலமாக விரைவாக தீர்த்துவிட முடியும்.

உலக சோசலிச வலைத் தளம் சனிக்கிழமை ஏப்ரல் 18 இல் விவரித்ததைப் போல, ஒட்டுமொத்த நிகர மதிப்பாக9 ட்ரில்லியன் டாலருக்கு நெருக்கமாக உள்ள 250 அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு 100 மில்லியன் வறிய குடும்பங்களுக்குச் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 18 மாதங்களுக்கு 5,000 டாலர் மாத வருவாய் வழங்கும்.

அனைத்திற்கும் மேலாக, ஊரடங்கின் விளைவு என்பது போல அறிவுறுத்தி வேலைக்குத் திரும்புவதற்காக விவரிக்கப்படும் பிரச்சினைகள் உண்மையில் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் "வழமையான" செயல்பாடுகளால் தோற்றுவிக்கப்பட்ட நாளாந்த வாழ்க்கை பிரச்சினைகளாகும். மேலும் அவை, பெருநிறுவனங்களுக்கும் நிதியியல் அமைப்புமுறைக்கும் வழங்கப்பட்ட பிணையெடுப்பின் விளைவாக தோற்றுவிக்கப்பட்ட மலையளவு கற்பனையான மூலதனத்திற்குள், ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறிஞ்சி எடுக்கப்படும் மதிப்பைப் பாய்ச்சும் போது, இந்த தொற்றுநோயை அடுத்து அவை பாரியளவில் தீவிரப்படுத்தப்படும்.

இடைவிடாது மோசமடைந்து வரும் நிலைமைகளால் ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் அவர்களின் உடல்நலனை இழந்துள்ளார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏதேனும் "மறுகட்டமைப்பு" நடவடிக்கையின் விளைவாக தாங்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்படலாம் மற்றும் வறுமை நிலைக்குக் குறைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலின் கீழ் வேலை செய்கின்றனர்.

உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின் ஏற்ற இறக்கங்களின் விளைவாகவும் ஊகவணிகர்களின் நடவடிக்கைகளாலும் அவர்கள் தேவையற்றவர்களின் குவியலில் தூக்கி வீசப்படலாம், அவர்களின் ஓய்வூதியங்கள், ஓய்வு பெறும் வயது அல்லது 401 (k) திட்டங்கள் அகற்றப்படலாம், அவர்களின் அடமானக்கடன் தொகைகள் அதிகரிக்கப்படலாம் என்பது உட்பட இன்னும் பல சாத்தியக்கூறுகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் முகங்கொடுக்கிறார்கள்—இத்தகைய மாற்றங்கள் அவர்களின் வாழ்வை கண் இமைக்கும் நொடியில் நாசப்படுத்திவிடும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தொற்றுநோயால் வெளிப்படுத்தப்பட்ட பைத்தியக்காரத்தனம் குறிப்பாக ஒரு கொடிய சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் அன்றாட செயல்பாடுகளின் படுமோசமான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

இந்த தொற்றுநோய் இந்த இலாபகர அமைப்புமுறையின் அபத்தங்களையும், பகுத்தறிவின்மைகளையும் மற்றும் நாசகரமான விளைவுகளையும் அவிழ்த்துக் காட்டியிருப்பதைப் போலவே, அதேயளவுக்கு தனியார் இலாப திரட்சியை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்டமைப்பான, அதாவது தேசிய-அரசு அமைப்புமுறையின் பிற்போக்குத்தனமான தன்மையையும் அம்பலப்படுத்தி உள்ளது.

அதன் இயல்பிலேயே, இந்த தொற்றுநோய், உடல்நலம் மற்றும் பொருளாதார நிலைப்பாடு இரண்டிலும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவின் அவசியத்தை எடுத்துக்காட்டி உள்ளது.

இந்த வைரஸ் முன்னிறுத்தும் உடல்நலம்சார் அபாயங்களுக்கு அங்கே எந்த தேசிய தீர்வும் இல்லை. இதற்கு ஒரு திட்டமிட்ட உலகளாவிய விடையிறுப்பு அவசியப்படுகிறது. ஒரு தனிப்பட்ட நாடு அதன் எல்லைகளுக்குள் இந்த வைரஸைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடும், ஆனால் பின்னர் உலகின் ஏனைய பாகங்களில் அது தொடர்ந்து பரவுவதன் காரணமாக தொற்றுகளின் "இரண்டாம் அலை" அபாயத்தை அது எதிர்கொள்ளும். இந்த வைரஸிற்கு ஒரு கடவுச்சீட்டும் கிடையாது, அல்லது அது புலம்பெயர்வு கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த தொற்றுநோய் உலகிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனால் இது நெருக்கடியைத் தூண்டிவிட்ட ஒரு நிகழ்வு தான், இதற்கான நிலைமைகள் கணிசமான காலமாக அபிவிருத்தி அடைந்து வந்துள்ளன. இது, முதலாம் உலக போர் வெடிப்பைத் தூண்டிவிட்ட, அந்த மோதலுக்கு அடிப்படை காரணமான ஆஸ்திரிய ஆர்ச்ட்யூக் பிரான்ஸ் ஃபெர்டினான்ட்டின் படுகொலையை போன்று தற்போதைய இந்த நெருக்கடிக்கு அடிப்படையான முதன்மைக்காரணம் இதுவல்ல.

இந்த தொற்றுநோய் நெருக்கடியை மட்டும் தூண்டிவிடவில்லை. இது காட்சிக்கு வருவதற்கு முன்னரே, ஏற்கனவே நன்கு அபிவிருத்தி அடைந்திருந்த நிகழ்வுபோக்குகளை இது விரைவுபடுத்தும் வினையூக்கியாக உள்ளது.

இந்த வைரஸ் வெடிப்பின் மீது ட்ரம்ப் நிர்வாகமும் உலகெங்கிலுமான அதன் கூட்டாளிகளிடம் இருந்தும் இப்போது பொழியப்படும் சீனா மீதான கண்டனங்களுக்கு நீண்டகாலத்திற்கு முன்னரே, அமெரிக்க உளவுத்துறையும் இராணுவ எந்திரங்களும், அரசியல் ஸ்தாபகத்தின்—அதாவது, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவுடன், பாரிய ஊடகங்களின் சக்தி வாய்ந்த பிரிவுகளுடன் சேர்ந்து, சீனாவை அமெரிக்காவின் "தேசிய பாதுகாப்புக்கு" ஓர் அச்சுறுத்தலாக முத்திரை குத்தி இருந்தன.

அமெரிக்க இராணுவ எந்திரத்தின் மூலோபாய திட்டமிடல் ஆவணங்களில், “பயங்கரவாதம் மீதான போர்" என்பது "வல்லரசு போட்டி" சகாப்தத்திற்கான தயாரிப்பே இப்போது அவசியம் என்ற வலியுறுத்தலைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டன, இதில் சீனா தான் அமெரிக்கா பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்திற்கான முக்கிய அபாயமாக முத்திரை குத்தப்பட்டது.

இறக்குமதிகள் மீது வரிவிதித்ததன் மூலமாக வர்த்தகப் போர் தொடங்கப்பட்டிருந்தது, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திக்கான சீனாவின் திட்டம் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஓர் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட்டிருந்தது, இத்துடன் சேர்ந்து சீனத் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது தொடர்ச்சியான தடைகளும் 5G வலையமைப்பு விரிவாக்கத்திலிருந்து சீன நிறுவனம் ஹூவாயை அதன் கூட்டாளிகள் தவிர்க்க வேண்டுமென அமெரிக்காவின் ஓர் உலகளாவிய பிரச்சாரமும் தொடங்கப்பட்டிருந்தன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் "அமெரிக்கா முதலில்" கோட்பாட்டின் கீழ், குறைந்தபட்சம் இந்த தருணத்தில், அமெரிக்காதான் பொருளாதார தேசியவாதத்தின் பிரதான முன்னெடுப்பாளராக உள்ளது என்றாலும், இதே போக்குகள் தான் ஏனைய இடங்களிலும் பிரதிபலிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியமும் விரிசல்கள் மற்றும் மோதல்களால் பிளவுபட்டுள்ளது, அதில் பிரெக்ஸிட் மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த தொற்றுநோய்க்கு ஒரு பொருளாதார விடையிறுப்பின் மீது பிளவுபட்டுள்ளது, ஜேர்மனியின் அரசியல் ஸ்தாபகத்தின் முன்னணி பிரபலங்கள் உலகளாவிய விவகாரங்களில் ஜேர்மனி ஒரு மிகப்பெரிய பாத்திரம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்ற நிலையில், ஐரோப்பியக்கூட்டில் அதன் மேலாதிக்கத்தைப் பேண அது போராடி கொண்டிருக்கிறது.

இந்த தொற்றுநோயின் விளைவாக, வைரஸ் பரவலாலும் அத்துடன் ஊரடங்குடனும் சேர்ந்து உலகளாவிய வினியோக சங்கிலி குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பது பொருளாதார பூகோளமயமாக்கலின் பிரச்சினைகளை அம்பலப்படுத்தி உள்ளதாக குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன, இதன் அர்த்தம் ஒவ்வொரு நாடும் அதன் "சொந்த" பொருளாதார பாதுகாப்பைப் பார்க்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

அமெரிக்க வர்த்தகத்துறை செயலர் வில்பர் ரோஸ் ஜனவரியில், இந்த வைரஸ் வெடிப்பின் விளைவாக, சீனாவில் வினியோக சங்கிலி குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பது அமெரிக்க நிறுவனங்களை மீண்டும் அவற்றின் செயல்பாடுகளை அமெரிக்க மண்ணிற்கே மாற்றுவதற்கு ஊக்குவிக்கும் என்று அறிவித்தபோது அப்போதே இதற்கான தொனியை அமைத்து இருந்தார்.

ஷின்ஜோ அபேயின் ஜப்பானிய அரசாங்கம் சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்றுவதற்கு உற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்காக அதன் பொருளாதார உதவிப்பொதியிலிருந்து 2.2 பில்லியன் டாலர் ஒதுக்கி உள்ளது.

ஏப்ரல் 16 இல் Neil Irwin இன் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று, “நமக்கு தெரிகின்ற விதத்தில் இது உலக பொருளாதாரத்தின் முடிவு,” என்று தலைப்பிடப்பட்டிருந்த அது, வெளியுறவுகள் கவுன்சிலில் மூத்த ஆய்வாளரான எலிசபெத் எக்கானொமியின் கருத்துக்களை மேற்கோளிட்டிருந்தார். ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை எந்தளவுக்குச் சார்ந்திருக்க விரும்புகின்றன என்பதன் மீது "மறுபரிசீலனை" நடந்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இது பூகோளமயமாக்கலின் முடிவு இல்லை என்றாலும், "நெருக்கடி ஏற்பட்டால் அமெரிக்காவில் இங்கே நாங்கள் முக்கிய தொழில்நுட்பங்களை, முக்கிய ஆதாரவளங்களை, தயாரிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டிய உற்பத்தி தகைமைகளை" குறித்து ட்ரம்ப் நிர்வாகம் சிந்திப்பதை இந்த தொற்றுநோய் தீவிரப்படுத்தி உள்ளதாக அப்பெண்மணி மேலும் குறிப்பிட்டார்.

பிரான்சின் நிதியமைச்சர் சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளைக் குறைவாக சார்ந்திருப்பதற்காக, பிரெஞ்சு நிறுவனங்கள் அவற்றின் வினியோக சங்கிலிகளை மறு-மதிப்பீடு செய்யுமாறு அவற்றுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை அனுப்பி உள்ளதாக அக்கட்டுரை குறிப்பிட்டது.

நாளாந்தம் சீன-விரோத வெடிப்புகள் தீவிரமடைந்து வரும் அமெரிக்காவில், தெற்கு கரோலினா குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்செ கிரஹாம் குறிப்பிடுகையில் சீனா வைத்திருக்கும் அமெரிக்க கருவூலத்துறை பத்திரங்களை இரத்து செய்து அமெரிக்கா இந்த கோவிட்-19 சம்பந்தமாக சீனாவைத் தண்டிக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட நிலைமைகளுடன் இப்போது நிலவும் சூழ்நிலையை நேரெதிராக நிறுத்தி பார்ப்பதன் மூலம் இந்த செயல்முறைகளின் வேகத்தை அளவிட முடியும்.

ஏப்ரல் 2009 இல், ஒருங்கிணைந்த விடையிறுப்புக்குப் பொறுப்பேற்பதற்காக இலண்டனில் சந்தித்த ஜி20 தலைவர்கள், இரண்டாம் உலக போருக்கு நிலைமைகளை உருவாக்க உதவிய பெருமந்தநிலைமையில் நாசகரமான பாத்திரம் வகித்த அதே போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் பாதைக்கு அவர்கள் மீண்டும் ஒருபோதும் செல்லப் போவதில்லை என்று சூளுரைத்தனர்.

“பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான" இந்த பொறுப்புறுதி, சில காலத்திற்கு, ஜி20 மற்றும் ஜி7 போன்ற அனைத்து சர்வதேச பொருளாதார அமைப்புகளது அறிக்கைகளிலும் வழமையான அம்சமாக இருந்தது. உலகளாவிய முதலாளித்துவத்தின் போருக்குப் பிந்தைய விவகாரங்களை நெறிப்படுத்துவதற்காக போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு (WTO), ஜி7, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக சுகாதார அமைப்பு (WHO) போன்ற அனைத்து அமைப்புகளும் சீரழிவின் முன்னேறிய நிலையில் உள்ள நிலைமைகளின் கீழ் அல்லது மோதல்களால் சின்னாபின்னமாகி உள்ள நிலைமைகளின் கீழ், இப்போது அந்த வாக்கியம் மறைந்துவிட்டது.

இத்தகைய அபிவிருத்திகளின் முக்கியத்துவத்தை அவற்றின் பரந்த வரலாற்று உள்ளடக்கத்தில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

1871 இல் ஜேர்மனியின் ஐக்கியம், இத்தாலிய தேசிய-அரசின் ஸ்தாபிதம் மற்றும் அமெரிக்க உள்நாட்டு போர் அடித்தளத்தில் ஒரு பொருளாதார சக்தியாக அமெரிக்காவின் அபிவிருத்தி போன்ற தேசிய அரசுகளின் உருவாக்கம் 19 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவ அபிவிருத்திக்கும் மற்றும் மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகளுக்கும் உதவியிருந்தன.

ஆனால் உற்பத்தி சக்திகளின் முன்னேற்றம் தேசிய எல்லைகளுடன் நின்று விடுவதில்லை. அது 19 ஆம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியிலும், 20 நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்திலும் உலகளவில் பரந்து விரிந்தன. ஆனாலும் இந்த பரந்த பொருளாதார அபிவிருத்தி உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையில் ஒரு மத்திய முரண்பாடான ஓர் உலகளாவிய பொருளாதார அபிவிருத்திக்கும் எதிர்விரோத தேசிய அரசுகள் மற்றும் வல்லரசுகளுக்கிடையே உலகம் பங்கிடப்படுவதற்கும் இடையிலான முரண்பாட்டை மேல்மட்டத்திற்குக் கொண்டு வந்ததிலிருந்து, இது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முதலாளித்துவ அரசும் அதை தீர்க்க முயன்ற நிலையிலும் முதலாம் உலக போர் வடிவில் வெடித்த இந்த மோதல், லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, “மனிதகுலத்தின் அனைத்து உற்பத்தியாளர்களின் புத்திசாலித்தனமான, ஒழுங்கமைந்த கூட்டுறவினால் அல்ல, மாறாக வெற்றி பெற்ற நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தால் உலகின் பொருளாதார அமைப்புமுறை சுரண்டப்பட்டதால்" வெடித்தது.

தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவம் தூக்கி வீசப்பட்ட அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சி மட்டுமே இதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழியைக் காட்டியது. அது, உலக சோசலிச புரட்சிக்கான ஆரம்ப அடியாக கருதப்பட்டு போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் லெனினால் அதற்காக போராடப்பட்டது. அதாவது மனிதகுலத்தின் வரலாற்று அபிவிருத்தியில் அவசியமான அடுத்த கட்டமாக சோசலிச அடித்தளங்களில் உலகளாவிய பொருளாதாரத்தை மறுக்கட்டமைப்புக்கான முன்நிபந்தனையாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்பட்டது.

போர் எதையும் தீர்க்கவில்லை. பொருளாதார தேசியவாதம் அதற்கடுத்த இரண்டு தசாப்தங்களில் தீவிரமடைந்து, அது 1939 இல் இன்னும் அதிக நாசகரமான உலக போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்றது.

இரண்டாம் உலக போரின் கடைசி நாட்களிலும் அதற்கு உடனடியாக பின்னரும், உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள், 1930 களின் நிலைமைகளுக்கு மீண்டும் திரும்புவது என்பது அமெரிக்காவிலும் உள்ளடங்கலாக சோசலிச புரட்சியைக் கொண்டு வரும் என்பதால், ஒரு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கும் நாணய முறையும் உருவாக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டனர்.

பிரதான ஏகாதிபத்திய சக்தி, அமெரிக்காவின் பொருளாதார பலத்தின் அடிப்படையில் ஒரு புதிய உலக வர்த்தக முறை மற்றும் நாணய முறையை அபிவிருத்தி செய்வதன் மூலமாக, அங்கே உலகளாவிய பொருளாதார அபிவிருத்திக்கும் எதிர்விரோத தேசிய-அரசுகள் மற்றும் வல்லரசுகளுக்குள் உலகை பங்கிட்டு கொள்வதற்கும் இடையிலான முரண்பாட்டைக் கடந்து செல்வதற்கான ஒரு முயற்சி இருந்தது. இதுதான் 1944 இல் ஸ்தாபிக்கப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் நாணய முறையின் அடித்தளமாக இருந்தது, இதில் தங்கத்திற்கு மாற்றாக அமெரிக்க டாலர் ஒப்புயர்வற்ற சர்வதேச நாணயமாக ஆனது.

ஆனால் இந்த செயல்முறை ஒரு நீண்டகால தீர்வை வழங்கவில்லை. அது வரலாற்று அர்த்தத்தில் அதை தற்காலிகமாக மட்டுமே மேம்படுத்தலுக்கே உதவியது. அது உருவாக்கிய பொருளாதார விரிவாக்கமே கூட அமெரிக்கா அதன் எதிர்விரோதிகள் மீது வைத்திருந்த பொருளாதார மேலாதிக்கத்தின் அஸ்திவாரங்களை பலவீனப்படுத்தியதால், இன்றியமையாத முரண்பாடு மீள-மேலெழும்பியது.

ஆகஸ்ட் 17, 1971 இல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க டாலரில் இருந்து தங்கத்தின் இணைப்பை நீக்குவதென்ற முடிவை எட்டியிருப்பதாக அறிவித்த போது அந்த மேலாதிக்கத்தின் முடிவு தொடங்கியது. அதன் பொருளாதார போட்டியாளர்களுடன் நேரடியாக ஒப்பிடுகையில் அமெரிக்காவின் பலவீனம் என்பது அது உருவாக்கிய முறையை இனிமேல் அதனாலேயே பேண முடியாது என்பதை அர்த்தப்படுத்தியது.

அதற்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்காவின் வரலாற்று பொருளாதார வீழ்ச்சி வேகமாக தொடர்ந்தது. உலக முதலாளித்துவத்தின் பொருளாதார ஜாம்பவான் என்பதிலிருந்து, அது முதலாளித்துவ அழுகல் மற்றும் சீரழிவின் மையமாக மாறியுள்ளது, இது அனைத்திற்கும் மேலாக செல்வவளத் திரட்சி, அடியிலிருக்கும் உற்பத்தி நிகழ்வுபோக்கிலிருந்து முற்றிலும் விலகி, நிதியியல்மயமாக்கும் நிகழ்வுபோக்கிலும், ஒருகாலத்தில் நடந்ததைப் போல தொழில்துறை அபிவிருத்தி மூலமாக அல்லாமல், ஆனால் ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகவணிக வழிவகைகள் மூலமாக இலாபமீட்டுவதன் மூலமாகவும் எடுத்துக்காட்டப்பட்டது.

2008 நிதியியல் நெருக்கடியில் மேற்புறத்திற்கு வந்த அந்த அழுகல் இப்போது இந்த தொற்றுநோயை அடுத்து இன்னும் அதிக கோரமான வடிவங்களில் வெடித்துள்ளது. இது பத்தாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கையிலும் பங்குச் சந்தையின் தற்போதைய அதிகரிப்பில் எடுத்துக்காட்டப்படுகிறது.

ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் காட்சியிலிருந்து மறைய விரும்பவில்லை. அதற்குப் பதிலாக சீனா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் என ஒவ்வொரு முனையிலும் அதன் போட்டியாளர்களால் எதிர்கொள்ளப்பட்டிருக்கும் அது, ஒவ்வொரு இடத்திலும் எதிரிகளைச் சந்தித்து வருவதுடன், போர் உட்பட அனைத்து அவசியமான வழிவகைகள் மூலமாகவும் அதன் நிலையை பேணுவதற்கு தீர்மானகரமாக உள்ளது.

மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் பிரச்சினைகளுக்கான மூலகாரணம் பொருளாதார பூகோளமயமாக்கலோ மற்றும் உலகளவில் பொருளாதார சமூக வாழ்வின் ஒருங்கிணைப்போ இல்லை.

பூகோளமயப்பட்ட உற்பத்தியில், அதுவே கூட, ஒரு முக்கிய முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது, அனைத்து பொருளாதார முன்னேற்றங்களுக்கான சடரீதியிலான அடித்தளத்தை வழங்கும் உழைப்பின் உற்பத்தித்திறனைப் புதிய மட்டங்களுக்கு உயர்த்துகிறது. அனைத்திற்கும் மேலாக, பன்னாட்டு பெருநிறுவனங்கள் அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமிடல் மற்றும் தகவல்தொடர்பின் பரந்த சிக்கலான முறைகள், உலகின் உற்பத்தியாளர்களால் அதாவது சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயகரீதியில் நனவுபூர்வமாக கட்டுப்படுத்தப்பட்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட சர்வதேச சோசலிச பொருளாதாரமான, சமூகத்தின் உயர்ந்த சமூக வடிவத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன.

1934 இல், போர் மேகங்கள் மீண்டுமொருமுறை ஒன்றுதிரண்டு கொண்டிருந்த போது, ட்ரொட்ஸ்கி எச்சரிக்கையில், “தேசிய உலைகளுக்கு" திரும்புவதற்கான பாசிசவாத மற்றும் தேசியவாத ஆட்சிகளது அழைப்பு ஆழ்ந்த முக்கியத்துவம் கொண்டுள்ளதாக எச்சரித்தார்.

முதலாளித்துவ சொத்துடைமையின் அடிப்படையில் ஒத்திசைவான தேசிய பொருளாதார அபிவிருத்திக்கான சாத்தியக்கூறு முற்றிலும் கட்டுக்கதை என்ற அதேவேளையில், அது அச்சுறுத்தும் அரசியல் யதார்த்தத்தையும் கொண்டிருந்தது. அது போருக்குத் தயாரிப்பு செய்வதில் தேசத்தின் பொருளாதார ஆதாரவளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க பிரதான சக்திகளின் முனைவை அர்த்தப்படுத்தியது. முதல் ஏகாதிபத்திய மோதலை விட அதிக நாசகரமான விளைவுகளுடன், அந்த போர் வெறும் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் வெடித்தது.

இன்று, இந்த தொற்றுநோயின் விளைவாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற பொருளாதார தேசியவாத ஊக்குவிப்பு அதே பிற்போக்குத்தனமான உள்ளடக்கத்தைத் தான் கொண்டுள்ளது.

மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் உள்ளவாறே பொருளாதார பூகோளமயமாக்கலில் இருந்து எழவில்லை, மாறாக எதிர்விரோத தேசிய-அரசுகள் மற்றும் வல்லரசுகளாக உலகம் பிரிந்து கிடப்பதன் அடிப்படையிலும் மற்றும் தனியார் இலாபத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ள இந்த பிற்போக்குத்தனமான சமூக மற்றும் அரசியல் ஒழுங்கிற்கும் இந்த முற்போக்கான அபிவிருத்திக்கும் இடையே ஆழமடைந்து வரும் முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளன.

ஆகவே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் இத்தகைய பிற்போக்குத்தனமான தளைகளில் இருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும். இதற்கான பாதைதான் அக்டோபர் 1917 உலக சோசலிச புரட்சியின் ஆரம்ப அடியாக வழங்கப்பட்டது. இந்த பாதை மட்டுந்தான் தற்போதைய நெருக்கடியிலிருந்து முன்னேறி செல்வதற்கான ஒரே பாதையாக இருப்பதால், சர்வதேச தொழிலாள வர்க்கம் இப்போது இந்த பாதைக்குத் திரும்ப வேண்டும்.

Loading