மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei—SGP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) கிரேக்க-துருக்கிய எல்லையில் அகதிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் போரைக் கண்டனம் செய்கின்றன. சமீபத்திய நாட்களில் உலகெங்கிலும் காணப்படும் காட்சிகள் ஐரோப்பிய வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களை நினைவூட்டுகின்றன, இவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அக்கண்டம் எங்கிலுமான அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களின் தன்மையை அம்பலப்படுத்துகின்றன.
அதிர்ந்து போயுள்ள பொதுமக்களின் கண்களுக்கு முன்னால், கனரக ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் இராணுவப் படைப்பிரிவுகள் ஐரோப்பாவில் தஞ்சம் கோர மத்திய கிழக்கு மோதல்களில் இருந்து தப்பியோடி வந்துள்ள நிராயுதபாணியான அகதிகளுக்கு எதிராக தலையீடு செய்து வருகின்றன. வாரயிறுதி வாக்கில், கிரேக்க சிப்பாய்கள் எல்லையைக் கடந்து வருவதிலிருந்து 10,000 அகதிகளைப் பலவந்தமாக தடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். நிஜமான தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதைக் குறித்தும் அகதிகள் கொல்லப்பட்டதன் மீதும் முதல் அறிக்கைகள் நேற்று வெளிவரத் தொடங்கின.
கிளர்ச்சிகரமான ஓர் இளைஞர் குழு தரையில் அசைவின்றி கிடந்த ஒருவருக்கு உதவ முயன்று கொண்டிருந்ததை எடுத்துக்காட்டி பிபிசி பத்திரிகையாளர் முஹீரா அல் ஷரீஃப் அவர் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்தார். அவர் முகம் இரத்தக்கறை படிந்திருந்தது. “இவர், இன்று காலை கிரேக்க இராணுவத்தால் கொல்லப்பட்ட புலம்பெயர்ந்த சிரியர் அஹ்மத் அபு இமாத். அஹ்மத் நூற்றுக் கணக்கான புலம்பெயர்ந்தோருடன் இப்சாலா எல்லையைக் கடக்க முயன்றபோது காலை 9:07 க்கு கிரேக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அஹ்மத்தின் உடல் திரும்ப துருக்கிக்குக் கொண்டு செல்லப்பட்டது,” என்று அல் ஷரீஃப் எழுதினார்.
கிரேக்க அரசு செய்தி தொடர்பாளர் Stelios Petsas அந்த காணொளியை "போலி செய்தி" மற்றும் துருக்கிய பிரச்சாரம் என்று விவரித்தார். ஆனால் கிரேக்க அரசாங்கம் அகதிகளுக்கு எதிராக இன்னும் அதிகளவில் பரந்த மரணகதியிலான நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்பது தெளிவாக உள்ளது. திங்கட்கிழமையில் இருந்து, கிரேக்க இராணுவப் பிரிவுகள் கிழக்கு ஏகியன் கடல் தீவுகளில் குண்டுவீச்சு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன, அங்கே பத்தாயிரக் கணக்கான அகதிகள் பயங்கரமான நிலைமைகளில் கூட்ட நெரிசலான முகாம்களில் அழிந்து வருகிறார்கள்.
இந்த போர் பயிற்சிகள் துருக்கியின் லெஸ்பொஸ், சியொஸ் மற்றும் சமொஸ் தீவுகளில் இருந்து அதற்கு ஒரு நாள் முன்னர் வந்திறங்க தொடங்கிய படகுகளுக்கு நேரடியாக விடையிறுப்பாக இருந்தன. கிரேக்க பொது ஒளிபரப்பாளரிடம் இருந்து வந்த ஓர் அறிக்கையின்படி, இந்த நடைமுறையில் குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது மூழ்கி இறந்தது. அதை மோசமான நிலமாக ஆக்க முயலும் எவரொருவரும் கைது செய்யப்பட்டு வருகிறார். இதை செய்வதற்காக, கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய தஞ்சம் கோரும் சட்டத்தை இடைநிறுத்தம் செய்துள்ளது. “எங்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நமது எல்லைகள் மீது தடுப்புமுறையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. உடனடியாக தொடங்கி, ஒரு மாதத்திற்கு நாங்கள் எந்த தஞ்சம் கோரும் விண்ணப்பத்தையும் ஏற்க மாட்டோம்,” என்று ஞாயிற்றுக் கிழமை பழமைவாத கிரேக்க பிரதம மந்திரி Kyriakos Mitsotakis தெரிவித்தார்.
சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான இத்தகைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த, கிரேக்க இராணுவமும் பொலிஸூம் பெரும்பாலும் உள்ளூர் பாசிசவாத குண்டர் கூட்டங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர், இவர்கள் அகதிகளையும், உதவி பணியாளர்கள், பத்திரிகையாளர்களையும் தாக்குகின்றனர். ஜேர்மன் புகைப்பட பத்திரிகையாளர் மைக்கெல் ட்ரேம்மர், லெஸ்பொஸில் ஓர் இளைஞர் கூட்டம் எவ்வாறு கிரேக்க கடல் ரோந்துப்படையின் முன்னாலேயே பெண்கள் மற்றும் குழந்தைகள் நிறைந்த ஒரு படகு முழுவதையும் தாக்கியது என்பதை ஆவணப்படுத்தினார், இதற்கு முன்னர் அவர்கள் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ட்ரேம்மரைக் கடுமையாக அடித்திருந்தனர். “தலைக் காயத்திற்கு தையல் போட வேண்டியிருந்தது. என் தலையிலும் உடலிலும் எனக்கு சிராய்ப்பு காயங்கள் உள்ளன,” என்றவர் Die Zeit க்குத் தெரிவித்தார்.
அகதிகளுக்கு எதிராக, அவர்களுக்கு அனுதாபம் காட்டும் எவரொருவருக்கு எதிராகவும், அல்லது அந்த பிரச்சினை குறித்து விமர்சனபூர்வமாக செய்திகள் வெளியிடுபவருக்கு எதிராகவும் கூட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், பேர்லின், பாரீஸ் மற்றும் புரூசெல்ஸின் முழு ஆதரவை அனுபவிக்கிறது. ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வொன் டெல் லெயென் கிரீஸ் மற்றும் பல்கேரியாவுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். “அங்கே நிலவும் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் கிரீஸ் மற்றும் பல்கேரியாவுக்கு அனைத்து அவசியமான ஆதரவும் வழங்குவதே எங்கள் முன்னுரிமை,” என்றவர் அறிவித்தார். “கிரீஸ் இப்போது முகங்கொடுக்கும் சவால் ஐரோப்பிய சவாலாகும்,” என்றார்.
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் இதே விதத்தில் பேசினார். “கிரீஸ் மற்றும் பல்கேரியாவுடன் முழு ஒத்துழைப்பு. ஐரோப்பிய முயற்சிகளுக்குப் பங்களிப்பு செய்யவும், அவசர உதவிகளை வழங்கவும், அதன் எல்லைகளைப் பாதுகாக்கவும் பிரான்ஸ் தயாராக உள்ளது. நாம் மனிதாபிமான மற்றும் புலம்பெயர்வு கொள்கை நெருக்கடியைத் தடுக்க ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
“சவால்" மற்றும் "உதவி" என்பதைக் கொண்டு வொன் டெர் லெயென் மற்றும் மக்ரோன் என்ன அர்த்தப்படுத்துகிறார்கள் என்பதை கிரேக்க-துருக்கிய எல்லையில் தெளிவாக பார்க்க முடிகிறது: அதாவது, இராணுவ சிப்பாய்கள் மற்றும் பாசிசவாத குண்டர்களை அணிதிரட்டுவதன் மூலமாக "ஐரோப்பிய கோட்டை" ஐ பாதுகாப்பதாகும்.
செய்திகளின்படி, இழிபெயரெடுத்த ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு முகமை ஃபிரொன்டெக்ஸ் கிரீஸிற்குப் பக்கபலங்களை அனுப்பி உள்ளது. அரசின் எச்சரிக்கை சமிக்ஞை உயர்மட்டத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது, செயற்கைக்கோள்கள் மற்றும் விமானங்கள் மூலமான வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல்கேரியாவும் அதன் எல்லையில் 350 கூடுதல் துருப்புகள் மற்றும் சிறப்பு படைகளை நிலைநிறுத்தி உள்ளது. ஏனைய நாடுகளும் இதேபோன்ற நடைமுறைகளுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன. ஆஸ்திரேலிய சான்சிலர் செபஸ்தியன் குர்ஜ், வியன்னாவில் பசுமை கட்சியினருடன் சேர்ந்து ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை வகித்து வரும் இவர், ஆஸ்திரிய பொலிஸ் படைகளைக் கொண்டு மேற்கு பால்கன் வழியை ஒட்டிய எல்லைகளைப் பலப்படுத்த அச்சுறுத்தினார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பழமைவாத நாடாளுமன்ற குழுவின் தலைவர் மன்ஃபிரட் வேபர் திங்கட்கிழமை வழங்கிய கருத்துக்களில் அகதிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளின் அளவைத் தெளிவுபடுத்தினார். “ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போதுமானளவுக்கு நீண்டகாலமாக பேசியே வந்துள்ளன,” கிரீஸிற்கு அவசர உதவி தேவைப்படுகிறது, 10,000 ஐரோப்பிய எல்லை சிப்பாய்களை நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஓர் "உடனடி திட்டம்" அவசியப்படுகிறது என்றவர் தெரிவித்தார்.
“அகதிகள் பிரச்சினைக்கு இறுதி தீர்வு" கோருவதற்காக 2018 இல் நாஜி-பாணியிலான மொழியைப் பயன்படுத்திய வேபர், Deutschlandfunk வானொலி நிலையத்துடனான ஒரு பேட்டியில், கிரேக்க இராணுவத்தின் மூர்க்கமான நடவடிக்கைகளைப் பாராட்டினார். பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் சிக்கன நடவடிக்கைகள், இராணுவ மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் உள்நாட்டு அரசு ஒடுக்குமுறை எந்திரத்திற்கு எதிராகவும், இராணுவவாதம் மற்றும் பாசிச பயங்கரவாதத்தின் அதிகரிப்புக்கு எதிராகவும் போராட தொடங்கி உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்டதே யதார்த்தத்தில் அகதிகளுக்கு எதிரான போர் என்பதைக் குறித்து அவர் எந்த ஐயத்திற்கும் இடம் வைக்கவில்லை.
“வெளி எல்லைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை மற்றும் சட்டம் மதிக்கப்படுகிறது என்பதை அரசு உத்திரவாதப்படுத்தினால், பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்சில், ஆர்ப்பாட்டங்களிலும் அதேபோல செய்ய … கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்த, அது ஆற்றல் கொண்டிருக்கும். வீதிகளில் வன்முறை என்றால் அதை தான் ஜேர்மனியர்களாகிய நாங்கள் செய்கிறோம்,” என்றவர் ஆத்திரமூட்டும் விதத்தில் அறிவித்தார்.
சிரியாவில் ஜேர்மன்-ஐரோப்பிய இராணுவ தலையீட்டுக்கான வாய்ப்பையும் வேபர் விட்டுவிடவில்லை—அகதிகள் விடயத்தில் அங்காரா மற்றும் புரூசெல்ஸிற்கு இடையே எட்டப்பட்ட அருவருக்கத்தக்க உடன்படிக்கையை அவர் நடைமுறையளவில் கைவிட்டிருப்பதன் மூலமாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் இந்த விளைவைத்தான் பெற முயன்று வருகிறார். “அன்னகிரேட் கிரம்ப்-காரன்பவர் சில மாதங்களுக்கு முன்னர் அறிவுறுத்தியதைப் போல, அம்மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்க, அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டை வழங்க, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார ஆணையுடன் சர்வதேச கட்டளையங்கத்தின் கீழ் வடக்கு சிரியாவில் அது ஒரு மண்டலத்தை ஸ்தாபிக்க முடியாதா?” என்று வேபர் கேள்வி எழுப்பினார். “இப்போது சிரியாவில் நாம் கொண்டிருக்கும் சித்திரவதையான நிலைமைக்கு அது நிச்சயமாக சிறந்த தீர்வாக இருக்கும்,” என்றார்.
1933 இல் "தேசிய சோசலிசம் என்றால் என்ன?” என்ற அவர் கட்டுரையில் ட்ரொட்ஸ்கி எழுதியதை ஒருவர் நினைவுகூர நிர்பந்திக்கப்படுகிறார்: “அவநம்பிக்கை அடைந்த ஒவ்வொரு குட்டி-முதலாளியும் ஹிட்லராகிவிட முடியாது, மாறாக அவநம்பிக்கை அடைந்த ஒவ்வொரு குட்டி-முதலாளியிடமும் ஹிட்லரின் ஒரு துகள் இருக்கும்.”
ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் முழுமையாக தீவிர வலது ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) அகதிகள் கொள்கையைத் தழுவியுள்ள நிலையில், அது அதிகரித்தளவில் அதன் வெளிநாட்டு மற்றும் இராணுவக் கொள்கைகளில் நாஜிக்களின் அடியொற்றி சென்று கொண்டிருக்கிறது. “சிரியாவுக்கு சிறந்ததாக இருக்கும்" என்று வேபர் எதை எரிச்சலூட்டும் விதத்தில் குறிப்பிடுகிறாரோ அது யதார்த்தத்தில் இன்னும் அதிக மரணங்களையும் நாசங்களையும் மட்டுமே உண்டாக்கும். ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு மண்டலம் உருவாக்குவது, சிரியாவில் ஒன்பது ஆண்டுகளாகவும் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் மூன்று தசாப்தங்களாகவும் ஆக்ரோஷமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஏகாதிபத்திய நலன்கள் மற்றும் எண்ணெய்க்கான போரை மேற்கொண்டும் தூண்டிவிட்டு, பிரதான சக்திகளுக்கு இடையிலான ஒரு நேரடி மோதல் அபாயத்தை உயர்த்தும்.
லியோன் ட்ரொட்ஸ்கி, இரண்டாம் உலக போரின் ஆரம்ப கட்டங்களில் எழுதிய ஏகாதிபத்திய போர் சம்பந்தமான நான்காம் அகிலத்தின் அறிக்கையில், முதலாளித்துவம், அகதிகள்-விரோத கிளர்ச்சி, இனவாதம் மற்றும் போருக்கு இடையிலான தொடர்பைக் குறிப்பிட்டார்.
“முதலாளித்துவ உலகின் சீரழிவு மிதமிஞ்சிவிட்டது,” என்று எழுதிய அவர், “விமானப் போக்குவரத்து, தந்திச் சேவை, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி என இந்த சகாப்தத்தில் ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டுக்கான பயணமானது கடவுச்சீட்டுக்கள் மற்றும் நுழைவனுமதிகளால் முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தகம் விரிவடைந்து உள்நாட்டளவிலான வர்த்தகம் வீழ்ச்சி அடைந்து வரும் இந்த காலக்கட்டம், அதே நேரத்தில், பேரினவாதத்தின் மிகவும் குறிப்பாக யூத-எதிர்ப்புவாதத்தின் அசுரத்தனமான தீவிரப்பட்ட காலக்கட்டமாக உள்ளது. … நிலத்தின் பரந்த விரிவாக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப அற்புதங்களுக்கு மத்தியில், அதுவும் இவை மனிதனையும் அத்துடன் உலகையுமே விண்ணளவுக்கு வெற்றி கொண்டிருக்கும் நிலையில், முதலாளித்துவ வர்க்கம் நமது இந்த புவியை ஓர் வெறுக்கத்தக்க சிறைக்கூடமாக மாற்றி உள்ளது,” என்று குறிப்பிட்டார். [1]
ஐரோப்பா எங்கிலுமான போலி-இடது கட்சிகள், கிரீஸில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ் மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி ஆகியவை போர்-சார்பு, சிக்கன-நடவடிக்கைகள் சார்பு கொள்கைகளை ஆதரிக்கின்றன. “ஆம், எல்லைகளைப் பாதுகாப்பதற்கு உரிமை உண்டு. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது,” என்று திங்களன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இடது கட்சி உறுப்பினர் Özlem Demirel குறிப்பிட்டார். தொழிலாள வர்க்கம் புரட்சிகரமான பணிகளை எதிர்கொண்டுள்ளதையே இது எடுத்துக்காட்டுகிறது. 1930 களைப் போலவே, முதலாளித்துவத்தை சீர்திருத்தவோ அல்லது அமைதிப்படுத்தவோ முடியாது. அது தூக்கியெறியப்பட்டு, சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.
ஐரோப்பிய வெளி எல்லைகளில் அகதிகளுக்கு எதிரான போர் என்பது, சமீபத்தில் ஹானோ மற்றும் ஹாலேயில் போலவே, புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக அல்லது யூத பின்புலத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வலதுசாரி தீவிரவாத பயங்கரத்தின் மறுபக்கமாகும். இவ்விரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது. ஆளும் வர்க்கம் அதன் நலன்கள் மற்றும் செல்வவளத்தைப் பாதுகாக்க அதன் இராணுவவாதம் மற்றும் சமூக பிரித்தெடுத்தல் கொள்கையை எந்தளவுக்கு அதிக ஆக்ரோஷமாக பின்தொடர்கிறதோ, அந்தளவுக்கு அது பகிரங்கமாக எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்க சர்வாதிகாரம் மற்றும் பாசிச வன்முறையில் தஞ்சம் அடைகிறது.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை நிராகரிக்குமாறும், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஐரோப்பா எங்கிலும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை எதிர்ப்பதை ஒருங்கிணைப்பதில் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க வேலையிடங்களிலும், பயிற்சி மையங்கள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அண்டை பகுதிகளில் சுயாதீனமான நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு குழுக்களை உருவாக்க வேண்டும். பின்வரும் கோரிக்கைகள் சாத்திமான அளவுக்குப் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் மற்றும் எழுப்பப்பட வேண்டும்:
· வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க துருப்புகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும் என்பதுடன், அப்பகுதியில் அகதிகளுக்கான சிறை முகாம்கள் கலைக்கப்பட வேண்டும்; அனைத்து அகதிகளும் அவர்கள் விரும்பும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்.
· கிரீஸ் மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள "அகதிகளின் விபர சேகரிப்பு" மையங்கள் கலைக்கப்பட வேண்டும்; ஐரோப்பாவில் உள்ள அனைத்து அகதிகளும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
· ஐரோப்பிய ஒன்றியத்தின் Frontex எல்லை பாதுகாப்பு முகமை கலைக்கப்பட வேண்டும் மற்றும் இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட்டு எல்லா எல்லைகளும் திறந்து விடப்பட வேண்டும்.
· ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடு கடத்தும் எந்திரத்துடனான ஒத்துழைப்பும், இனச் சுத்திகரிப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு அரசு கொள்கைகளும் நிராகரிக்கப்பட வேண்டும்.
· பொதுச் சேவைகள், மருத்துவச் சிகிச்சை மற்றும் பயிற்சிகளுக்காக ட்ரில்லியன் கணக்கிலான யூரோக்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் மற்றும் தொழிலாளர் எந்த நாட்டில் பிறந்தார் என்பதன் அடிப்படையில் இல்லாமல் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வேலைகள் வழங்கப்பட வேண்டும். மிகப்பெரும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தேசியமயப்படுத்தப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
· முதலாளித்துவம், பாசிசவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக நிற்போம்!
[1] Leon Trotsky, Manifesto of the Fourth International on Imperialist War, May 1940