மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பாரிசில் ஒவ்வொரு இரவிலும், நெடுஞ்சாலை மேம்பாலங்களுக்கு அடியில், உள்ளூர் விளையாட்டு மைதானங்களில், பூங்காக்களில் என பரவலாக கூடார முகாம்களில் ஆயிரக்கணக்கான அகதிகள் தெருவில் தூங்குகின்றனர். அவர்களுக்கு அரசாங்க குடியிருப்பு, உதவித்தொகை, உணவு என எந்த உதவியும் கிடைப்பதில்லை என்பதுடன், அவர்களுக்கு வேலை செய்யவும் சட்டபூர்வ உரிமை கிடையாது. அவர்கள் பிரெஞ்சு அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மேற்பார்வையிலான, மேலும் ஒட்டுமொத்த பிரெஞ்சு அரசியல் ஸ்தாபக ஆதரவிலான புலம்பெயர்ந்தோருக்கு எதிரான குற்றவியல் ஆட்சியினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
கடந்த வாரம், உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், பாரிசின் 19வது நிர்வாக வட்டாரத்தின் லா சப்பெல் அருகிலுள்ள பகுதிக்கும் மற்றும் சென் டெனிஸ் புறநகர் பகுதிக்கும் இடையிலான முகாம்களில் அடைக்கலம் நாடியுள்ளவர்களில் டசின் கணக்கானவர்களை பேட்டி கண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் 25 வயதுக்கு குறைவானவர்கள் —மிகக் குறைந்த வயதினராக 15 வயதினரும் அதிகபட்ச வயதினராக 45 வயதினரும் உள்ளனர்— என்பதுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாரிசில் அவர்கள் வீடற்றவர்களாக வாழ்கின்ற நிலையில், அன்றாட உணவுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும், தனிப்பட்ட குடிமக்களையும் அவர்கள் சார்ந்திருப்பதுடன், தெரு மூலைகளில் சுற்றுலா பயணிகளுக்கு தேவைப்படும் சிறிய அழகுப் பொருட்கள், மது மற்றும் சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்து பிழைக்கின்றனர்.
France Terre d’Asile என்ற புலம்பெயர்வு உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, லா சப்பெல் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மட்டும் 1,500 இல் இருந்து 2,000 இற்கு உட்பட்ட எண்ணிக்கையில் வீடற்ற அகதிகள் வசிக்கின்றனர். நாடெங்கிலும் பல்லாயிரத்திற்கு அதிகமானோர் இதே நிலைமைகளில் வசிக்கின்றனர் என்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் நாடுகடத்தப்படுவதற்கு அவர்கள் காத்திருக்கும் தடுப்புக்காவல் மையங்களின் வலையமைப்பில் சிறைப்பிடித்து வைக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், பிரான்ஸ் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் பல நூற்றாண்டு காலனித்துவப் போர்கள் மற்றும் ஒடுக்குமுறையினால் உருவாக்கப்பட்ட வறுமை, சமூக முறிவு நிலைமைகளிலிருந்து தப்பிக்க, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேறியவர்களாவர்.
பிரான்சில் அடைக்கலம் கோருவதற்கு அகதிகள் அவர்களது ஜனநாயக மற்றும் சட்டபூர்வமான உரிமையைப் பயன்படுத்துவதைத் தடுக்க நோக்கம் கொண்ட இந்த மோசமான குடியேற்ற எதிர்ப்பு திட்டத்திற்கு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் உடந்தையாக உள்ளது. அவர்களின் அவலநிலை குறித்து மவுனமாக தீட்டப்படும் சதி, மக்ரோன் நிரவாகத்தின் கொள்கையை ஆதரிக்கும் ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் மற்றும் சோசலிசக் கட்சி வரையிலும் நீண்டுள்ளது.
லா சப்பல் சுற்று சாலையின் கீழ் வசிப்பவர்களில் 26 வயதான அப்துல்லாவும் ஒருவர். அவர் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கே வந்துள்ளார். தற்போது, அவர் பாதசாரிகள் கடப்பு சந்திப்புக்களில் சிகரெட்டுகளை விற்று அவர் பிழைப்பு நடத்துகிறார்.
2016 இல் சூடானிலிருந்து தப்பித்து பின்னர் பிரான்ஸை அடைவதற்கு அவருக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. அவர் லிபியா வழியாக வடக்கே பயணித்து, மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலியை நோக்கி பயணம் செய்தார். இது மலிவான பாதை, ஆனால் மிகவும் ஆபத்தானது. 2011 இல், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மனிதாபிமான பாசாங்குகளின் கீழ் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக ஒரு புதிய காலனித்துவப் போரை தொடங்கி, தற்போதைய உள்நாட்டுப் போரில் லிபியாவை மூழ்கடித்ததுடன், போட்டி போராளிகளை அடிப்படையாக கொண்ட ஒரு நிலையற்ற வலதுசாரி கைப்பாவை ஆட்சியை அங்கு நிறுவியுள்ளன.
2015 ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய ஒன்றியம் லிபிய கடலோரக் காவல்படைக்கு ஐரோப்பாவுக்குச் செல்ல முயற்சிக்கும் அகதிகளைத் தடுக்க ஆயுதங்கள், கப்பல்கள் மற்றும் பணத்தையும் வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி தடுப்பு மையங்களில் தப்பியோட முயற்சிக்கும் அகதிகளை மீதான சிறையதிகாரிகளின் சித்திரவதை, அடிமைத்தனம், கொலை மற்றும் கற்பழிப்பு ஆகியவை பொதுவானதாக உள்ளன.
இறுதியாக வெற்றி பெறுவதற்கு முன்னர் அப்துல்லா ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய மூன்று முயற்சிகளை மேற்கொண்டார். 2017 இன் பிற்பகுதியில் அவரது முதல் முயற்சியின்போது, லிபிய கடலோர காவல்படை 130 பேரை ஏற்றிச் சென்ற சிறிய படகை கைப்பற்றியது. அப்போது அவர்கள் “படகை கவிழ்க்க எங்களைச் சுற்றி வட்டமிட்டனர்,” என்று அவர் கூறினார். மேலும், “அனைவரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். நான் மேலே வந்தபோது அனைவரும் அலறிக் கொண்டிருந்தனர். நான் சுற்றிலும் பார்த்த போது அங்கு மூன்று பேர், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் எனக்கு முன்னால் மிதப்பதைக் கண்டேன். அன்று, அவர்களை அப்படியே தண்ணீரில் விட்டுவிட்டனர்” என்றும் அவர் கூறினார்.
அனைத்து பயணிகளும் மிஸ்ராட்டாவில் உள்ள ஒரு தடுப்புக்காவல் மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதியில் அப்துல்லா தப்பித்து, திரிப்போலிக்கு பயணம் செய்தார், மேலும் மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றார். படகு மீண்டும் லிபிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது என்பதுடன், இந்த முறை அவர் மீண்டும் தப்பிப்பதற்கு முன்னர் ஆறு மாதங்கள் ட்ரிக் அல்- சிக்கா தடுப்புக்காவல் மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். “அனைவரும் அங்கு ஊதியமின்றி உழைத்தாக வேண்டும்,” என்று இரண்டாவது சிறை பற்றி அவர் கூறினார். “வேலை செய்பவர்கள் சாப்பிடுகிறார்கள் மற்றவர்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். அந்த சிறை அருவருக்கத்தக்கது, அங்கு கழிவறைகளுக்குப் பதிலாக திறந்தவெளியில் வாளிகள் தான் வைக்கப்பட்டிருக்கும்” என்றும் அவர் கூறினார்.
ஜூன் 2018 இல், இறுதியாக ஒரு முறை தப்பிப்பதற்கு அப்துல்லா முயற்சி செய்தார். இந்த முறை அவரது படகை ஒரு வணிக கப்பல் மீட்டதுடன், எல்லை கடந்து மருத்துவர்களால் இயக்கப்படுவதான, பயணிகளை ஐரோப்பாவிற்கு கொண்டு சேர்க்கும் ஒரு மீட்புக் கப்பலான அக்குவாரியஸிற்கு அவர் மாற்றப்பட்டார். கடந்த நவம்பரில் இருந்து அக்குவாரியஸ் மீட்புக் கப்பல் அதன் கடற்பயண உரிமைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் இயங்க முடியவில்லை — அத்துடன் பிரான்சும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும், மத்தியதரைக் கடலில் அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் தடுக்கும் மற்றும் அகதிகள் நீரில் மூழ்குவதை அல்லது லிபிய சிறைகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதை உறுதிசெய்வதற்கான அவர்களது மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, கொடியுடன் அது பயணிப்பதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டன.
ஆனால் பிரான்சில், அப்துல்லாவின் புகலிடம் விசா விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை. அவர் பிரான்சில் வாழ அனுமதிக்கப்பட்ட போதிலும், பிறப்புச் சான்றிதழ் அல்லது அவரது சொந்த ஊரைப் பற்றிய உத்தியோகபூர்வ ஆவணங்கள் (அதாவது அவர் முதலில் 12வது வயதில் தனது ஊரிலிருந்து தப்பித்தார்), இல்லாத நிலையில் அவர் வேலை செய்யும் உரிமையிலிருந்து பயனடைய மாட்டார்.
"இப்போது நான் இங்கே சாலையில் தூங்குகிறேன்," என்று அவர் கூறினார். அவரது கூடாரத்தில் ஒரு மெத்தையும், சில மாற்று உடைகளும் இருந்தன. அங்கு 20 மீட்டர் தொலைவில் எலிகளைக் காணலாம், அத்துடன் அவர் தூங்குமிடத்திலிருந்து இரண்டு மீட்டருக்கு குறைவான தொலைவில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் கார்களும் ட்ரக்குகளும் கடந்து செல்கின்றன. மேலும், “என்னிடம் ஆவணங்கள் இல்லாததால் நான் வேலை செய்ய முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே இப்போது நான் என்ன செய்ய முடியும்? ஒருவர் ஆபிரிக்காவை விட்டு வெளியேறி ஐரோப்பாவைப் பற்றி சிந்திக்கும் போது, அவர் வேலை செய்ய முடியும், ஆவணங்கள் கிடைக்கும், மேலும் வாழ முடியும் என்றுதான் நினைக்கிறார். ஆனால் இது அப்படி இல்லை. நீங்கள் தெருக்களில் தூங்குகிறீர்கள். வெளியேற ஒரு வழியைக் காணமுடியாத நிலையில் பைத்தியம் பிடிக்கிறது, இங்கே பாலத்தின் அடியில் நிறைய பேர் உள்ளார்கள்.” என்றும் அவர் கூறினார்.
பாரிஸிலிருந்து வடக்கே சென்-டெனிஸ் பகுதிக்குச் செல்லும் சாலையோரம் எங்கிலும் நிறைய கூடாரங்களின் மற்ற குழுக்கள் உள்ளன. ஒரு கிலோமீட்டருக்கு குறைவான தொலைவில், சென் டெனிஸ் பூங்காவில், சூடானைச் சேர்ந்த 24 வயதான முன்னாள் சட்ட மாணவர் அப்துல் வசிக்கிறார். அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தண்டனைக்குரிய குடியேற்ற முறையின் கீழ், “Dublined” என்று பாரிசிய புகலிடம் கோருவோர் குறிப்பிடப்படும் வகையை சேர்ந்தவராவார். இது 2013 ஆம் ஆண்டின் டப்ளின் குடியேற்ற ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்டது, ஏதாவதொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டில் தனது வருகையை பதிவு செய்த எந்தவொரு அகதியும், மற்றொரு நாட்டில் அடைக்கலம் கோரி மீண்டும் விண்ணப்பிக்க 18 மாதங்கள் காத்திருக்கவேண்டும் என்று அது கூறுகிறது.
“நான் இத்தாலிக்கு வந்ததும், அவர்கள் எனது கைரேகைகளை எடுத்துவிட்டார்கள்,” என்று லா சப்பெல் அருகிலுள்ள கிறிஸ்தவ மதப் பிரிவு சர்வதேச தொண்டு அமைப்பு மையத்தில் (Salvation Army center) வெள்ளியன்று அமர்ந்திருந்தபோது அப்துல் கூறினார், அங்குதான் 200 க்கும் மேற்பட்ட அகதிகள் தினமும் குளிப்பதுடன், தங்களது செல் போன்களுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்கிறார்கள். “எனவே இறுதியில் நான் இங்கு வந்தபோது, நான் காத்திருக்க வேண்டும் என்று மட்டும் கூறினார்கள், ஆனால் அவர்கள் எனக்கு எதையும் கொடுக்கவில்லை. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடற்றவனாக நான் இங்கு இருக்கிறேன். எனது புதிய விண்ணப்பத்தைக் கூட ஒரு மாதத்திற்கு முன்னர் தான் சமர்ப்பித்தேன்” என்றும் அவர் கூறினார்.
பிரான்சில் அடைக்கலம் கோருவதற்கான சாதாரண நடைமுறையைப் போல, அவரது விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், அப்துல் அவரது கோரிக்கை குறித்து பின்தொடர, கூட்டம் பற்றிய ஒரு குறுஞ்செய்திக்காக (SMS) “காத்திருக்கும்” படி அப்துலுக்கு கூறப்பட்டது. அந்த குறுஞ்செய்தி அவர்களுக்கு எப்போது வரும் என்பது பற்றி அவர்களுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை, அதை பெறுவதற்கே பெரும்பாலும் ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேலும் அவர்கள் காத்திருக்க நேரலாம்.
“நான் தெருவில் சாப்பிடுகிறேன். சில நேரங்களில் நான் சாப்பிடுவதும் இல்லை. சில நேரங்களில் தனிப்பட்ட நபர்கள் அவர்கள் வீட்டில் சமைத்த உணவை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பெரும்பாலும் நான் பட்டினி கிடக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பிரான்சில் வசிப்பதற்கான உரிமையைக் கோரி, வரலாற்று சிறப்புமிக்க பாந்தெயோன் கட்டிடத்தில் 700 க்கும் மேற்பட்ட அகதிகளால் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் ஆக்கிரமிப்பிலும் அப்துல் கலந்து கொண்டார். “எகிப்திலிருந்து இத்தாலிக்கு என்னுடன் பயணித்த என் நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்பில் உள்ள துண்டுப்பிரசுரத்தின் புகைப்பட நகலை நான் பெற்றேன்,” என்றும், “நாங்கள் இங்கே இருக்கிறோம், நாங்கள் உயிர்வாழ்கிறோம் என்பதை காட்டுவதற்காக மட்டுமே நான் செல்ல விரும்பினேன். தற்போது, நான் உயிருடன் இல்லை என்பது போல உள்ளது. அரசாங்கம் எங்களுக்காக எதையும் செய்யவில்லை,” என்றும் அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான மிருகத்தனமான பொலிஸ் ஒடுக்குமுறையை அவர் விவரித்தார். கட்டிடத்திற்குள் நுழைந்த பொலிஸ், “நீங்கள் வெளியேறினால், வெளியே இருந்து நீங்கள் போராடலாம்” என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். "பிரான்சில், எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எங்களுக்கு சுதந்திரம் உள்ளது" என்று அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் அந்தக் குழு கட்டிடத்தை விட்டு வெளியேறியவுடன், பொலிசார் அவர்களை தாக்கினர். “தப்பிப்பதற்கு மக்கள் நாலாப்புறங்களிலும் ஓடிக்கொண்டிருந்தனர்,” என்றும், “பொலிசார் யாரையெல்லாம் கைது செய்ய முடியுமோ அவர்களை கைது செய்து கொண்டிருந்தனர். நான் ஓடாததால், என்னையும் கைது செய்தனர். இங்கே இருப்பதற்கு எனக்கு உரிமை உண்டு என்று நான் கூறினேன். இறுதியில் மூன்று பொலிசார் என்னை அணுகினர், அதில் ஒருவர் என்னை தடியால் தாக்கினார், அப்போது நான் தரையில் விழுந்தவுடன் அவர்கள் தொடர்ந்து எனது கால்களில் அடித்தனர்” என்று அவர் கூறினார்.
குற்றச்சாட்டு ஏதுமின்றி அவரை விடுவிப்பதற்கு முன்னர், 24 மணித்தியாலங்களுக்கு அப்துலை பொலிசார் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். “நான் எனது அடையாள ஆவணங்கள் அனைத்தையும் மற்றும் விண்ணப்பத்தையும் எனது பையில் வைத்திருந்ததால் அவர்கள் என்னை வெளியே விட்டனர்,” என்று அவர் கூறினார். “இன்னும் பலரிடம் ஆவணங்கள் இல்லை என்பதால், அவர்கள் நாடுகடத்தும் மையங்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.”
“பிரெஞ்சு அரசாங்கம் இத்தாலியில் இருக்கும் சல்வீனியை விமர்சிக்கிறது,” என்று அப்துல் குறிப்பிட்டார். “ஆனால் இதுவும் அதே போன்ற கொள்கைதான். குறைந்தபட்சம் லம்பேடுசாவில் எனக்கு தங்க ஒரு வீடும், உண்ண உணவும் கிடைத்தது, இங்கு எதுவுமில்லை. இது வேண்டுமென்றே நிகழ்த்தப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் எங்களிடம் என்ன சொல்கிறார்கள் என்றால்: "நீங்கள் அங்கேயே இருங்கள், அல்லது நீங்கள் இங்கு வர விரும்பினால், நல்லது, ஆனால் அது மிக துன்பகரமாக இருக்கும்."
அருகிலுள்ள சென்-டெனிஸ் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில், டசின் கணக்கான அகதிகள் வாங்குகளிலும் கூடாரங்களிலும் தூங்குகின்றனர், துணிகளை தங்குமிடத்திற்கு சுவர்களாகவும் பயன்படுத்துகின்றனர். சோமாலியாவைச் சேர்ந்த 44 வயது மூசா என்பவர், இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பாவில் வசித்து வருகிறார், மேலும் ஜேர்மனியில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர் அவர் பிரான்சுக்கு தப்பித்து வந்தார் என்ற நிலையில், அவர் நாடுகடத்தப்படுவதற்கு அச்சுறுத்தப்பட்டார். அவரது நீண்டகால முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க லிரிகா மற்றும் டிலிடின் போன்ற மருத்துவ பரிந்துரைகள் உட்பட, தனது ஆவணங்களை அவர் தன்னுடன் வைத்திருந்தார். இந்த மருந்துகளைப் பெற அவருக்கு எந்த வழியும் இல்லை என்பதுடன், இரண்டு நாட்களாக அவர் எதுவும் சாப்பிடவில்லை. “பெரும்பாலான நாட்களில் இரவு 9 மணிக்கு யாரோ ஒருவர், ரொட்டி, தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை கொண்டு வந்து தருகிறார்,” என்று அவர் கூறினார்.
டேவிட் (29), முகமதி (32), மற்றும் அக்பரி (26) ஆகியோரும் அதே விளையாட்டு மைதானத்தில் வசிக்கின்றனர். அவர்கள் மூவரும், கடந்த 18 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் தலைமையிலான போரினால் அழிந்துபோயுள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஜேர்மனியில் தஞ்சம் கோரிய அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரும் பிரான்சுக்கு தப்பித்வர்களாவர்.
“ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் காலை 11.00 மணி வரை உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க குறிப்பிட்ட எண்ணில் தொடர்புகொள்ள நாங்கள் முயற்சிக்கவேண்டும்,” என்று டேவிட் கூறினார். “நீங்கள் தொலைபேசியில் 2 மணி நேரம் காத்திருந்தாலும், எவரும் பதிலளிப்பதில்லை.” அவர் ஒருவரை அணுகவும், பொலிஸ் தலைமையகத்தில் அவரது கோரிக்கையை முன்வைக்க ஆரம்ப சந்திப்பிற்கு பதிவு செய்யவும் ஒரு மாத காலம் பிடித்தது. “அவர் எனது கைரேகைகளை எடுத்துக் கொண்டார், பின்னர், நான் ஒரு டப்ளின் வகையை சேர்ந்ததால், நான் காத்திருக்க வேண்டும் அல்லது திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று அவர் கூறினார். எனக்கு செல்வதற்கு இடமில்லை. எனவே நான் இங்கேயே இருக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
லா சப்பெலில் உள்ள நெடுஞ்சாலையின் கீழ், 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட எட்டு இளைஞர்களிடம் நாங்கள் பேசினோம், அவர்கள் அனைவரும் வீடற்றவர்கள். அவர்கள், 50 சதவிகித வறுமை விகிதம் கொண்ட பிரெஞ்சின் முன்னாள் காலனித்துவ நாடான கினியாவிலிருந்து வெவ்வேறு வழிகளில் பிரான்சுக்கு வந்தவர்கள், மேலும் இரண்டு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை அவர்கள் பிரான்சில் உள்ளனர். அவர்களில் ஒருவரான 17 வயது குவாட்டோர்ஸ் என்பவர் பிப்ரவரி முதல் பாரிசில் இருந்து வருகிறார். அவரது பிறப்புச் சான்றிதழை அதிகாரிகளுக்கு வழங்க முடியாததால் அவரது விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
"நான் எனது படிப்பைத் தொடர விரும்புகிறேன், பல்கலைக்கழகத்திற்குச் செல்ல விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். மேலும், “நான் சமூகவியல் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். என்னிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை என்பதால், இங்கு என்னால் வேலைக்கு செல்லவோ அல்லது படிக்கவோ முடியாது. என்னால் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுக்கவும் முடியாது. நாங்கள் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெறவில்லை. சாதாரண மக்கள் வந்து எங்களுக்கு உணவு கொடுப்பதால் மட்டுமே நாங்கள் உயிர் வாழ்கிறோம், அவர்கள் எங்களுக்காக தியாகம் செய்கிறார்கள் அரசாங்கம் அல்ல,” என்றும் அவர் கூறினார்.
“ஐரோப்பிய ஒன்றியம் அதன் முகத்தை மறைத்துக் கொள்வதை நிறுத்தி, புலம்பெயர்ந்தோருக்கு உதவ அது முன்வர வேண்டும்,” என்று அவர் கருத்து தெரிவித்தார். மேலும், “அவர்கள் எங்களை இப்படியே இங்கும் மவுமனாக அதேபோல மத்தியதரைக் கடலிலும் விட்டுவிடுகிறார்கள்” என்றார்.
பிரெஞ்சு அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் ஸ்தாபித்த மிருகத்தனமான அகதிகள் எதிர்ப்பு முறை என்பது, ஒட்டுமொத்த தொழிலாள வர்கத்திற்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகும். ஆப்பிரிக்கா எங்கிலுமான பரந்த சித்திரவதை முகாம்கள், பிரான்ஸை அடைந்தவர்களின் கட்டாய வீடற்ற நிலை மற்றும் வறுமை, எதிர்ப்பவர்கள் மீதான பொலிஸ் ஒடுக்குமுறை ஆகியவை அனைத்தும், முன்னோடியில்லாத வகையில் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக எதிர்ப்பு வளர்ந்து வரும் நிலையில், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் அடக்குமுறைக்கான கருவிகளாக உள்ளன.