சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசிய காங்கிரசுக்கு வழங்கிய ஆரம்ப அறிக்கை

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 22-27, 2018 அன்று நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் ஜந்தாவது தேசிய காங்கிரசை ஆரம்பித்து வைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரான டேவிட் நோர்த்தால் இந்த அறிக்கை வழங்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஐந்தாவது காங்கிரஸ், அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிகழ்ச்சிபோக்குகளின் வெடிப்பான ஒன்றுசேரலின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதிலிருந்து உலக புவிசார் அரசியலின் அடித்தளமாக இயங்கி வருகின்ற, ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையேயான சர்வதேச கூட்டணிகள் முறிந்து கொண்டிருக்கின்றன. நீண்டகால நட்புநாடுகள் எதிராளிகளாக மாறிக் கொண்டு தத்தமது இராணுவப் படைகளை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான சார்புநிலையின் முரண்பாடு தவிர்க்கமுடியாதபடி உலகப் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. தனது நீண்ட-கால பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட தனது மேலோங்கிய இராணுவ வலிமையை தாட்சண்யமின்றி பயன்படுத்துகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இந்த நெருக்கடியின் பிரதான கதாபாத்திரமாக இருக்கிறது.

டொனால்ட் ட்ரம்ப்பின் வெளிநாட்டினர்-வெறுப்பு அமெரிக்கா-முதலில் ஆவேசங்கள் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க ஆளும் வர்க்கம் பூண்டிருக்கும் உறுதியின் மிகக் கொடூரமான வெளிப்பாடே ஆகும். அமெரிக்க ஒருசிலவராட்சியில் இருக்கும் வெவ்வேறு கன்னைகள் இடையே உண்மையாகவே மிகக் கடுமையான மோதல் நிலவுகின்ற போதிலும், ட்ரம்பின் மூலோபாய நோக்கங்களுக்கும் அவரது ஜனநாயகக் கட்சி எதிரிகளுடைய மற்றும் உளவு முகமைகளில் இருக்கும் அவர்களது கூட்டாளிகளுடைய மூலோபாய நோக்கங்களுக்கும் இடையில் ஏதேனும் அடிப்படை வித்தியாசங்கள் இருப்பதாக நம்பினால் அது ஒரு மரணகரமான அரசியல் பிழையாகவே இருக்கும். இந்த மோதும் கன்னைகளுக்குள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற எந்தவொரு போக்கும் நிச்சயமாக இல்லை. யார் மோசம், ட்ரம்ப்பா அல்லது அவரது ஜனநாயகக் கட்சி எதிரிகளா என்று முடிவு செய்யக் கூறுவது, உங்களுக்கு நாக பாம்பு கடித்தால் பிடிக்குமா அல்லது மலைப்பாம்பால் உடல் நசுக்கப்படுவது பிடிக்குமா என்று கேட்கப்படுவதைப் போன்றதாகும்.

ஒரு தருணத்தில் ட்ரம்ப்பை விட மோசமாக வேறொருவர் இருக்க முடியாது என்று ஒருவர் கருதலாம். ஆனால் அதன்பின், அவர் ஜனநாயகக் கட்சியின் செனட்டரான மார்க் வார்னர் ரஷ்யாவுக்கு எதிரான போர் மிரட்டலை விடுப்பதையும் அவையின் ஜனநாயகக் கட்சியினர் “அமெரிக்கா, அமெரிக்கா!” என்று கூச்சலிடுவதையும் பார்க்கும்போது, ஒப்பீட்டில் ட்ரம்ப் கிட்டத்தட்ட நாகரிக மனிதராகத் தென்படுகிறார். ஆக, ஷேக்ஸ்பியர் ஆலோசனையளிப்பது தான் இதற்கான ஒரே பொருத்தமான பதில்: “உங்கள் இரண்டு கட்சிகளுமே நாசமாய் போகட்டும்!”

தந்திரோபாயத்தில் எத்தனை கடுமையான பேதங்கள் இருக்கின்றபோதிலும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தைப் பாதுகாப்பது என்ற மூலோபாய இலக்கில் அமெரிக்க நிதி-பெருநிறுவன ஒருசிலவராட்சியின் அத்தனை பிரிவுகளுமே உடன்படுகின்றன. நேட்டோ உடன் சேர்ந்தோ அல்லது அதற்கு எதிராகவோ; ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனியுடன் கூட்டுச் சேர்ந்து போர் நடத்துவதன் மூலமோ, அல்லது ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யாவுடன் சேர்ந்து போர் நடத்துவதன் மூலமோ; அல்லது சீனாவுக்கு எதிராக பொருளாதார நெருக்குதலை அல்லது இராணுவ வலிமையை பயன்படுத்துவதன் மூலமோ, அமெரிக்கா அதன் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அது காணக்கூடிய எந்தவொரு நாட்டிற்கும் எதிராக அவசியமானதாக கருதுகின்ற எந்தவொரு வழிமுறையையும் பிரயோகிக்கும். ட்ரொட்ஸ்கி, பிரமிப்பூட்டும் தொலைநோக்குடன், 1928 இல் எழுதினார்: “அமெரிக்க மேலாதிக்கமானது, எழுச்சிக் காலகட்டத்தை விடவும் நெருக்கடியின் காலகட்டத்தில் மிக முழுமையாகவும், மிக வெளிப்படையாகவும், மற்றும் மிகத் தாட்சண்யமற்றும் செயல்படும்.” [1]

பிரதான சக்திகள் அனைத்துமே வெறித்தனமாக தமது இராணுவப் படைகளை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளன. இராணுவவாதத்தின் வளர்ச்சியும் போருக்கான தயாரிப்புகளின் முன்னேறிய நிலையும் தொழிலாள வர்க்கத்தின் மீதான பொருளாதாரச் சுமைகளை தீவிரப்படுத்துவதுடன், பாரம்பரியமான அரசியல்சட்ட பாதுகாப்புகள் மீது முன்னெப்போதையும்விட அதிகமான கட்டுப்பாடுகளைக் கோருகின்றன. முதலாளித்துவ-ஜனநாயக ஆட்சி வடிவங்களது நெருக்கடி உலகெங்கும் வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது. ஒரு பாரிய இடது-சாரி வெகுஜன எழுச்சிக்கு ஆளும் உயரடுக்குகள் எவ்வாறு பதிலளிக்கும் என்பதற்கான ஒரு கொடூர உதாரணத்தை எகிப்தின் 2013 எதிர்ப்புரட்சி வழங்கியது. ஆளும் வர்க்கங்கள் ஒருதருணத்தில் சலுகைகளைக் கொடுத்து காலஅவகாசம் பெறுவதற்கு தள்ளப்படுகின்ற போதும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே மிருகத்தனமாக திருப்பித் தாக்குகின்றன. ஆயினும், எந்த சந்தர்ப்பத்திலும், தொழிலாள வர்க்கம் முன்முயற்சி பெற்று விட அனுமதிக்கும் எந்த எண்ணமும் அவற்றுக்கு இல்லை. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வலது-சாரி அரசியல் சக்திகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றன, பாரம்பரியமான பிரதானநீரோட்ட முதலாளித்துவக் கட்சிகளை வரவேற்று ஊக்குவிக்கின்ற ஒரு போக்காக இது இருக்கிறது.

ஜேர்மனியில், ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland) கட்சியின் நவ-நாஜிக்கள் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக எழுந்திருக்கின்றனர். 1949 இல், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய நிர்க்கதியான நிலையில், Reichstag என்பது Bundestag என பெயர் மாற்றம் பெற்றது. பழைய கட்டிடத்தில் இப்போது ஒரு நவீன கோபுரமும் பொருத்தப்பட்டுள்ளது. ஆயினும் ஹிட்லரும் கோரிங்கும் புரிந்து கொண்ட மற்றும் ஏற்றுக்கொண்ட மிகப் பரிச்சயமான ஒரு அரசியல் மொழியில் பேசுகின்ற பிரதிநிதிகள் உள்ள அந்த ஒரு கட்டிடத்தின் உச்சியிலேயே அது உள்ளது. அத்துடன், நாஜிசத்திற்கு பலியானவர்கள் மீதான ஒரு துயரகரமான பரிகசிப்பாக, இஸ்ரேலின் அதிவலது-சாரி அரசாங்கமானது —இது உலகெங்கிலும் பாசிச மற்றும் பாதி யூத-விரோத அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளைப் பராமரிக்கிறது— பிரத்யேகமாக யூத மக்களுக்கு மட்டும் சிறப்பான மற்றும் உயர்த்தப்பட்ட சட்ட அந்தஸ்தை வழங்குகின்ற ஒரு அரசியல்சட்ட திருத்தத்திற்கு சட்டநிகரான ஒன்றை அமுல்படுத்தியிருக்கிறது.

இது ஒரு உலகளாவிய போக்கின் வெறும் இரண்டு உதாரணங்கள் மட்டுமே. முதலாளித்துவ அரசுகள் ஒரு எதேச்சாதிகார தன்மையைப் பெற்று வருகின்றன, அத்துடன் உளவு முகமைகளின் மற்றும் அதிகளவில் இராணுவமயமாக்கப்பட்டிருக்கின்ற போலிஸ் படைகளின் ஒடுக்கும் அதிகாரங்களை வலுப்படுத்துகின்றன. இணையத்தில் தகவல்களை தணிக்கை செய்வதற்கும், சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களுக்கு, குறிப்பாக WSWSக்கு, அணுகலை முடக்குவதற்கும், முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் செழுமைக்காலத்தின் போது துன்புறுத்தலுக்குத் தப்பி ஓடிவந்த எண்ணற்ற அகதிகளுக்கு புகலிடம் வழங்கிய இலண்டனில், ஜூலியான் அசான்ஞ் ஒரு அரசியல் கைதியாக இருக்கிறார், ஈக்வடோர் தூதரகத்தை விட்டு வெளியில் வரத் துணிந்தால் உடனடியாகக் கைது செய்யப்படும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருக்கிறார். உலகெங்கிலும் ஏகாதிபத்தியப் போர்களது அட்டூழியங்களாலும் அதீத பொருளாதாரச் சுரண்டலின் பின்விளைவுகளாலும் வீடிழக்கச் செய்யப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள், அவர்களது மிகக்குறைந்தபட்ச மனித உரிமைகளும் கூட இல்லாதொழிக்கப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில், குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்படும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைப்பானது 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவால் தீவிரப்பட்டது. இப்போதைய உலகளாவிய நெருக்கடியானது, அந்தப் பொறிவுக்கான பதிலிறுப்பில் ஆளும் உயரடுக்கினரால் பின்பற்றப்பட்ட கொள்கைகளது விளைவாகும், இக்கொள்கைகள், பங்குச் சந்தைகள் மீட்சியடைந்த போதும் கூட, ஒரு தசாப்தத்திற்கு முன்பாக பொறிவுக்கு இட்டுச் சென்றதன் கீழமைந்த முரண்பாடுகளில் எதுவொன்றையும் தீர்த்து விட்டிருக்கவில்லை. மென்மேலும் தெளிவடைந்து செல்வதைப் போல, நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்கும் அந்நிகழ்ச்சிபோக்கின் போது தன்னை வளப்படுத்திக் கொள்வதற்குமாய் நிதிய ஒருசிலவராட்சியால் பிரயோகிக்கப்பட்ட வழிமுறைகள் அதனுடன் கணக்குத்தீர்த்துக்கொள்ளும் தினத்தை தாமதப்படுத்த மட்டுமே செய்திருக்கின்றன.

1929 வோல் ஸ்ட்ரீட் பொறிவானது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவிலான தீவிரப்படலுக்கு இட்டுச் சென்ற ஒரு உலகளாவிய நெருக்கடிக்கு இட்டுச்சென்றது. ஆனால் சோவியத் ஆட்சியின் அரசியல் சீரழிவும், ஐரோப்பாவில், எல்லாவற்றுக்கும் மேலாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளால் தொழிலாள வர்க்கம் காட்டிக்கொடுக்கப்பட்டதும் பாசிசத்தின் வெற்றியை உத்தரவாதம் செய்ததோடு, பத்து ஆண்டுகளுக்குள்ளாக, இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கும் இட்டுச் சென்றன.

அமெரிக்காவும் பாரிய சமூகப் போராட்டங்களது களமாக இருந்தது. தொழிற்துறை அமைப்புகளது காங்கிரஸ் (CIO) —போலி-இடதுகள் மறக்க விழைகிறார்கள்— 1935 இல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்புக்கு (AFL) எதிரான கிளர்ச்சியில் தோன்றியது-மில்லியன் கணக்கான தொழிலாளர்களது ஒரு இயக்கத்தின் கவனக்குவியப் புள்ளியாக ஆனது. தனது ஐரோப்பிய சகாக்களை விடவும் மிகச் செழுமையாக இருந்த அமெரிக்க ஆளும் வர்க்கமானது —அதன் சொந்த முகாமுக்குள்ளேயே மிகக்கடுமையான எதிர்ப்புடன் தான் எனினும்— ஹூயு லோங், ஹென்றி ஃபோர்ட், பாஸ் ஃபிராங்க் ஹேக், ஃபாதர் கோக்லன் மற்றும் சார்ல்ஸ் லிண்ட்பேர்க் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட அமெரிக்க-வகை, பாசிச வகைகளைக் காட்டிலும், ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்த (New Deal) வேலைத்திட்டத்தைக் கொண்டு பதிலளிக்க தெரிவு செய்தது. ஆனால் சீர்திருத்தவாத புதிய ஒப்பந்தம் அமுலாக்கப்படும் தெரிவுக்கான பிரதிபலனாக, புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தொழிற்சங்க இயக்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “போர் முயற்சி”க்கு தகுதிபாராமல் ஆதரவளிக்கக் கோரி, அதனையும் பிராங்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் பெற்றார்.

அமெரிக்க ஆளும் வர்க்கம், 1929க்குப் பிந்திய சமயத்தில் போல, 2008 பொறிவைப் பின்தொடர்ந்து எந்த சீர்திருத்தவாத தெரிவையும் முன்வைக்கவில்லை. ஒபாமா நிர்வாகம், ரூஸ்வெல்ட் செய்ததைப் போல, “பணம் மாற்றுபவர்களை ரெம்பிள் நகரத்தில் இருந்து விரட்டுவதற்காக”, ”பெருஞ்செல்வ தீயவர்களை”ப் பார்த்து தனது முஷ்டியை உயர்த்தவில்லை. மாறாக, ஒபாமா, பணம் மாற்றுபவர்களது பிரதிநிதிகளை தனது அரசாங்கத்திற்கு அழைத்தார், பெருஞ்செல்வ தீயவர்களை முன்னெப்போதினும் பெருஞ்செல்வந்தர்களாக ஆக்கினார். அரசாங்க-ஏற்பாடில் வங்கிகள் பிணையெடுக்கப்பட்டமையானது, பங்குச் சந்தைகள் அரசின் முழு ஆதரவுடன் பாரிய மற்றும் முன்கண்டிராத ஒரு மட்டத்தில் செல்வத்தை பெருநிறுவன-நிதிய ஒருசிலராட்சியினருக்கு மாற்றிவிடுவதற்கான ஊடகமாக சேவைசெய்கின்ற ஒரு அரசியல்-பொருளாதார அமைப்புமுறையின் ஸ்தாபனமயமாக்கம் என்ற பல தசாப்தங்களாக அபிவிருத்தி கண்டு கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சிபோக்கை பூர்த்தி செய்தது. இந்த அதீத ஒட்டுண்ணித்தன அமைப்புமுறையானது, இறுதி ஆய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலை மற்றும் உற்பத்தி சக்தியில் ஏற்பட்ட உலகளாவிய வீழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

ஒபாமா ஜனாதிபதியானதற்கு ஆறே வாரங்களின் பின்னர், 2009 மார்ச்சில் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது:

ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் முழுக்க முழுக்க பெருநிறுவன மற்றும் நிதிப் பிரபுத்துவத்தின் நலன்களால் தான் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த அர்த்தத்தில், ஒபாமாவை ரூஸ்வெல்ட்டுடன் ஒப்பிடுபவர்கள் மக்களை ஏமாற்றுவதிலோ அல்லது தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வதிலோ ஈடுபட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடியின் சுமை இருந்தபோதிலும், சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு பரிசோதனை செய்வதற்கு, 1930களில் அமெரிக்காவிடம் இருந்த மிகச் செறிந்த பொருளாதார வளங்கள், ரூஸ்வெல்ட்டை அனுமதித்தன. அந்தத் தெரிவு இன்று இனியும் இல்லை. இக்கால முதலாளித்துவத்திடம் அத்தகைய ஆதாரவளங்கள் இல்லை.[2]

ஒபாமா நிர்வாகம் செல்வந்தர்களைப் பிணையெடுத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிபோக்கில், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் கண்களில் அரசியல் அமைப்புமுறையை அது மதிப்பிழக்கச் செய்தது. “நீங்கள் நம்பிக்கை வைக்கத்தக்க மாற்றம்” குறித்த ஒபாமாவின் வாக்குறுதி ஒரு சிடுமூஞ்சித்தனமான மோசடியாக நிரூபணமானது. தேய்ந்து செல்லும் வாழ்க்கை நிலைமைகள் மீதான பரவலான கோபத்தை சுரண்டிக் கொள்வதற்காக வலது-சாரி ஜனரஞ்சக வாய்வீச்சை பிரயோகிக்கும் ட்ரம்ப்பின் —பிரான்சில் லு பென், ஜேர்மனியில் கௌலான்ட் மற்றும் இத்தாலியில் சல்வீனி போல— மேலெழுச்சிக்கு இது பாதை தயாரித்து கொடுத்தது.

அமெரிக்கா இப்போது 1865 உள்நாட்டுப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தின் அதன் மிகப்பெரும் அரசியல் நெருக்கடியில் இருக்கிறது. இப்போதைய நிலைமையை ஒப்பிடக் கூடியதாக இருக்கின்ற கடந்த காலத்தின் எந்த வரலாற்று அனுபவத்தையும் சிந்தித்துப் பார்ப்பதும் கடினமாகும். 1861 இல் வெடித்த “கட்டுக்கடங்காத மோதல்” (“irrepressible conflict”), இறுதி ஆய்வில், அமெரிக்காவின் சக்திவாய்ந்த முதலாளித்துவ அபிவிருத்தியில் இருந்து எழுந்ததாய் இருந்தது. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு துடிப்பான, முற்போக்கான மற்றும் இன்னும் புரட்சிகரமானதும் கூடவான ஒரு கன்னை, அடிமை உரிமையாளர்களது பிற்போக்குக் கிளர்ச்சியுடன் மோதியது. கிட்டத்தட்ட அதற்கு 160 வருடங்களின் பின்னர், இப்போதைய நெருக்கடியானது அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட மிக-முற்றிய வீழ்ச்சியின் விளைபொருளாக இருப்பதோடு, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளது சீரழிவுக்கும் சாட்சியமளிப்பதாக இருக்கிறது. திரும்பக் கூறுகிறேன்: ஆளும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய ஒருசிலவராட்சியின் எந்த போட்டிக் கன்னைகளுக்குள்ளாகவும் எந்த முற்போக்கான போக்கும் கிடையாது.

இந்த மோதல் தீவிரமடைகின்ற நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கமானது இதுகாறும் எதன் ஊடாய் அமெரிக்காவுக்குள்ளாக அரசியல் அதிகாரத்தை செலுத்தி வந்ததோ உலகெங்கிலும் அதன் மேலாதிக்க நிலையை நிலைநாட்டி வந்ததோ அந்த ஸ்தாபனங்கள் அனைத்தின் அரசியல் சட்டபூர்வதன்மையும் கேள்விக்குரியதாகிக் கொண்டிருக்கிறது. அரசின் உச்ச மட்டங்களில் இருக்கும் குரோதப்பட்ட கன்னைகளுக்கு இடையிலான மோதலானது, ஒரு மிக வன்முறையான இயல்பைப் பெறும் விளிம்பில் இருக்கிறது.

அமெரிக்காவிலும் மற்றும் மற்ற பிற பெரும் முதலாளித்துவ நாடுகளிலும், மக்களின் செல்வ உச்சியில் இருக்கும் ஐந்து சதவீதத்தினரிடம் முன்கண்டிராத அளவுக்கு செல்வம் குவிந்திருப்பதானது, பெருகும் சமூக கோபத்தின் கீழமைந்திருக்கிறது. வேலைநிறுத்தங்களின் சமீபத்திய வெடிப்பு, குறிப்பாக அமெரிக்காவில், வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியின் ஆரம்ப அறிகுறியாகும். அதீத சமூக துருவப்படல் நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் தீவிரப்பட்டுக் கொண்டிருப்பதோடு முதலாளித்துவத்திற்கான ஒரு சோசலிச மாற்றீட்டில் ஆர்வத்தை வெளிப்படுத்தத் தொடங்குகிறது. அதன் அரசியல் புரிதலிலும் நோக்கங்களிலும் இப்போதும் வரம்புபட்டிருந்தாலும் கூட, இந்த அபிவிருத்தியின் இயங்குநிலையானது முன்னெப்போதினும் வெளிப்படையானதொரு முதலாளித்துவ-விரோத மற்றும் புரட்சிகர சோசலிச நோக்குநிலையைப் பெறும்.

முற்போக்கானதொரு திட்டநிரலை முன்னெடுப்பதாக ஒருகாலத்தில் கூறிக்கொண்ட அமைப்புகள் இந்த நெருக்கடிக்கான பதிலிறுப்பில் இடது நோக்கி அல்ல, வலது நோக்கி நகர்ந்திருக்கின்றன. நூறாயிரக்கணக்கான டாலர்களில் வருட ஊதியங்கள் அளிக்கப் பெறும் நிர்வாகிகளைத் தலைமையில் கொண்ட தொழிற்சங்கங்கள் —அவற்றை பெருநிறுவன தொழிலாளர் மேலாண்மை கூட்டமைப்புகள் என்று வர்ணிப்பது உகப்பாயிருக்கும்— தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும், சிதறடிப்பதற்கும், விரக்தியடையச் செய்வதற்குமான தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்துகின்றன. போலி-இடது அமைப்புகள் —குறிப்பாக தமது அரசியல் மரபுவழியை சாக்ட்மன்வாதத்திலும் பப்லோவாதத்திலும் காண்பவை— முன்னரிலும் பகிரங்கமாக முதலாளித்துவக் கட்சிகளின் முகவர்களாகவும் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களாகவும் செயல்படுகின்றன. கிரீசில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ் மற்றும் பிரிட்டன் தொழிற் கட்சியில் கோரிபினின் தலைமை போன்ற அத்தகைய சக்திகள் வெகுஜன மக்களிடையே பெருகுகின்ற சமூக எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும் ஒடுக்குவதற்குமாய் முனைகின்றன. அவை அரசியல் செல்வாக்கு பெறுவதானது அதனுடன் இணைந்ததாக அவை அரசுடன் ஒன்றுகலப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அவற்றின் காட்டிக்கொடுப்புக்கும் இட்டுச்செல்கிறது.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (Democratic Socialists of America - DSA) துரித வளர்ச்சி என்பது முக்கியமாக ஜனநாயகக் கட்சிக்கான ஒரு மாற்றீட்டை வேண்டுகின்ற அரசியல் அனுபவமற்ற இளைஞர்களது விருப்பத்தின் விளைபொருளாக இருக்கிறது. ஆயினும் DSA ஒருபோதும் ஜனநாயகக் கட்சியில் இருந்து சுயாதீனமாய் இருந்தது கிடையாது. முதலாளித்துவ அரசியலின் சுற்றுவட்டத்திற்கு வெளியிலான ஒரு இடது-சாரி இயக்கம் அபிவிருத்தியாகி விடாமல் முன்கூட்டி தடுக்கும் பொருட்டு நியூ ஜோர்க் டைம்ஸ் இனாலும் ஜனநாயகக் கட்சியின் மற்ற பிரிவுகளாலும் இது ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது ஒரு பலூனைப் போல DSA ஊதிக் கொண்டிருந்தாலும் இந்த விஸ்தரிப்பானது சூடான காற்றினால் விரிவடைந்த ஒன்றைப்போல் தவிர்க்கவியலாமல் அரசியல் மற்றும் அமைப்புரீதியான நெருக்கடிக்கு கொண்டு செல்லும். DSA ஐ நோக்கி ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களில் மிக அக்கறையான இடது-சாரிக் கூறுகள், அந்த அமைப்பு ஜனநாயகக் கட்சியின் ஒரு தொங்குதசை என்பதையும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு எதிரானது என்பதையும் கற்றுக் கொள்வார்கள்.

நல்லதை மட்டும் பொறுக்கியெடுக்கும்விதமான அரசியல் மேம்பாடுகளும் நேர்த்தியற்ற சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளும், விஞ்ஞானரீதியாக வேரூன்றியதும் வரலாற்றுரீதியாக அறிவூட்டப்பட்டதுமான ஒரு மார்க்சிச வேலைத்திட்டத்திற்கு ஒரு பரிதாபகரமான பிரதியீடாகும். ஒரு பெருந்தன்மையான மற்றும் அனுசரணையான முதலாளித்துவத்திற்கான மனிதாபிமானரீதியிலான விண்ணப்பங்கள் எதுவும் சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கிய அசைந்துகொடுக்காத முனைப்பை தடுத்து நிறுத்தப் போவதில்லை. எதிர்பார்க்கத்தக்க வகையில், DSA, ஊடகங்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், முதலாளித்துவ அடித்தளங்களின் மீதும், அதற்கு சளைக்காமல், ஜனநாயகக் கட்சிக்கான அங்கீகாரத்தின் மீதுமான, நெருக்கடிக்கு ஒரு தீர்வுகாண்பதற்கான அதன் நம்பிக்கை, அரசியல்ரீதியாகவும் புத்திஜீவித்தனரீதியாகவும் திவாலடைந்திருக்கிறது. DSA இன் “தத்துவாசிரியர்கள்” —ஜாக்கோபின் வெளியீட்டாளர்கள் போன்றவர்கள்— புரட்சிகர அனுபவங்களுக்கும் கடந்த காலத்தின் படிப்பினைகளுக்கும் அவர்கள் காட்டும் அலட்சியத்தைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால் அறியாமை, சுய-திருப்தி மற்றும் சிடுமூஞ்சித்தனத்தின் இந்த கலவையானது DSA இன் தத்துவாசிரியர்களை இன்றைய உலகத்தைப் புரிந்து கொள்வதற்கு முற்றிலும் திறனற்றவார்களாய் ஆக்கி விடுகிறது.

தொழிலாள வர்க்கம் “சீர்திருத்தமா அல்லது புரட்சியா” என்ற தெரிவுக்கல்ல, மாறாக “புரட்சியா அல்லது எதிர்ப்புரட்சியா” என்ற தெரிவுக்கே முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் வெடிப்பை ஒட்டிய காலத்தில் எழுதப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி அளித்த எச்சரிக்கையானது, இன்றைய உலகத்தில் இன்னும் பெரும் சக்தியுடன் எதிரொலிக்கிறது: “ஒரு சோசலிசப் புரட்சி இல்லையென்றால், அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தில் என்னவாயிருந்தபோதிலும், ஒரு பேரழிவு ஒட்டுமொத்த மனிதக் கலாச்சாரத்தையும் அச்சுறுத்துகிறது.” [3]

2008 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரஸ் நடந்து ஒரு முழு தசாப்தம் கடந்து விட்டிருக்கிறது. உண்மையில், வேர்க்கர்ஸ் லீக் சோசலிச சமத்துவக் கட்சியாக உருமாற்றம் காண்பதென்பது 1995 ஜூனில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கும் தொழிலாள வர்க்கத்தின் பழைய பாரம்பரிய அமைப்புகளான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசியல் பொறிவு கண்டதற்குமான பதிலிறுப்பாக அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முயற்சிகள், தொழிலாள வர்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதற்கு கல்வியூட்டி, சோசலிசத்துக்கான நனவான போராட்டத்தை புதுப்பிப்பதற்கான அடித்தளங்களை உருவாக்குவதை நோக்கி செலுத்தப்பட வேண்டியிருந்தது.

1991 நவம்பரில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக, பேர்லினில் அனைத்துலகக் குழு ஒரு மாநாட்டை நடத்தியது, ஸ்ராலினிசமும் அதன் வக்காலத்துவாதிகளும் மீளவியலாத மதிப்பிழப்பு கண்டதன் அத்தியாவசியமான வரலாற்றுத் தாக்கங்களை அங்கு அது அடையாளப்படுத்தியது:

இந்த பேர்லின் மாநாடு நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகக் குழுவே இன்று ஒட்டுமொத்த உலகிலும் நன்மதிப்புமிக்க ஒரேபடித்தன்மை மிக்கதான உலக ட்ரொட்ஸ்கிச அமைப்பைக் கொண்டிருக்கிறது. அனைத்துலகக் குழு வெறுமனே நான்காம் அகிலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட போக்கு அல்ல, மாறாக அதுவே, உள்ளபடியே, நான்காம் அகிலமாய் இருக்கிறது. இந்த மாநாட்டில் தொடங்கி, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் வேலைகளுக்கான தலைமைப் பொறுப்புகளை அனைத்துலகக் குழு ஏற்று நடத்தும்.[4]

புறநிலை வரலாற்று நிகழ்ச்சிபோக்கானது எத்தனை நெடியதாக இருந்தபோதிலும், அனைத்துலகக் குழு அதன் அரசியல் வேலைகளில் அத்தியாவசியமான மாற்றங்களை அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது. இந்த புறநிலை கட்டாயமே கழகங்கள் கட்சிகளாக மாற்றப்படுவதன் கீழமைந்ததாகும். அனைத்துலகக் குழுவின் பிரிவுகளது “கழக” (League) வடிவமானது, வெகுஜனக் கட்சிகளுக்கும் தொழிற்சங்க அமைப்புகளுக்கும் —அவற்றுக்குத் தலைமை கொடுப்பது சமூக ஜனநாயகக் கட்சியினராக, ஸ்ராலினிஸ்டுகளாக அல்லது, அமெரிக்காவில் போல, ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களாக யாராக இருந்தாலும் சரி— “கோரிக்கைகள்” வைப்பதையே பிரதான தந்திரோபாய முன்னெடுப்புகளாகக் கொண்டிருந்த ஒரு நெடிய வரலாற்றுக் காலகட்டத்தில் வேரூன்றியிருந்தது. இந்த தந்திரோபாயம், பிற்போக்கான தலைமைகளுடன், நல்லிணக்கம் கூட வேண்டாம், எந்த விதத்திலும் தகவமைத்துக் கொள்வதையும் கூட குறித்திருக்கவில்லை. மாறாக அது, தொழிலாளர்களின் செயலூக்கமான போராட்டங்களில் வெகுஜன அமைப்புகள் கொண்டிருந்த மேலாதிக்கமான பாத்திரத்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மிக வர்க்க-நனவானதும் போர்க்குணமிக்கதுமான பிரிவுகள் மத்தியில் அவை அப்போதும் கொண்டிருந்த மிகக் கணிசமான செல்வாக்கினாலும் தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது. சோசலிசக் கோரிக்கைகள் வைப்பதானது, தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையிலானோர் தமது தலைவர்கள் மீதும் அமைப்புகள் மீதும் அப்போதும் கொண்டிருந்த கணிசமான பிரமைகளை வெல்வதற்கு அவசியமானதாகவும் தவிர்க்கவியலாததாகவும் இருந்தது. பிரிட்டனில் “சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் அதிகாரத்திற்கு வருவது” என்ற கோரிக்கை, பிரான்சில் “ஒரு CP-CGT அரசாங்கத்திற்காக” என்ற கோரிக்கை, மற்றும் அமெரிக்காவில் “தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான ஒரு தொழிலாளர் கட்சிக்காக” என்ற கோரிக்கைகள், அதிகாரத்துவங்களின் வர்க்க-ஒத்துழைப்புவாதத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தினுள் விழிப்பூட்டுவதற்கும் முதலாளித்துவ-விரோத அபிலாசைகளை எதிர்கொள்ளவுமே முன்வைக்கப்பட்டன.

ஆனால் 1980கள் மற்றும் 1990களில் பழைய அதிகாரத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் போன்ற இடைவெளியற்ற காட்டிக்கொடுப்புகளின் வரிசையும், அத்துடன் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டமையும் இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்துடன் கொண்டிருந்த உறவினை, புறநிலையாகவும் சரி ஒரு அகநிலை அர்த்தத்திலும் சரி, மாற்றி விட்டது. இந்த மாற்றத்தை அங்கீகரிக்கத் தவறுவதென்பது பழைய அமைப்புகளின் மீது தொழிலாளவர்க்கம் கொண்டிருந்த பிரமைகளை கடந்துவருவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு தந்திரோபாயம் அத்தகைய பிரமைகளை காப்பாற்றுவதற்கும் இன்னும் ஊக்குவிப்பதற்குமான ஒரு பயனற்றதும், சுய-தோற்கடிப்பிற்குமான முயற்சியாக மாற்றப்படுகின்ற அபாயத்தை தன்னுடன் கொண்டிருந்தது.

இந்த நோக்குநிலை, வேலைகளது புதிய வடிவங்களைக் கோரும் என்பதை SEP கண்டுகொண்டது. இதுவே நான்காம் அகிலத்தின் பிரிவுகளுடனான (அவையும் தமது கழகங்களை கட்சிகளாக மாற்றின) நெருக்கமான ஒத்துழைப்பில், 1998 பிப்ரவரியில் உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்படுவதற்கு இட்டுச் சென்றது.

அடுத்த பத்தாண்டுகளின் போது, சோசலிச சமத்துவக் கட்சி அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் கணிசமான முன்னேற்றங்களைச் செய்தது. பல ஆண்டுகால குறைந்தபட்ச வளர்ச்சிக்குப் பின்னர், கட்சி புதிய சக்திகளை ஈர்க்கவும் எடுக்கவும் தொடங்கியது. இது, 2000 இன் திருடப்பட்ட தேர்தல், 9/11 பயங்கரவாதத்தின் மீதான போரின் தொடக்கம் மற்றும் 2003 இல் ஈராக் மீதான படையெடுப்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருந்த அரசியல் எதிர்ப்புடன் தொடர்புபட்டிருந்து என்பது உண்மையே. ஆயினும் புறநிலை சூழலுக்குள் இருந்த ஆற்றலானது, கண்டுணர்ந்து செயல்பட்டதன் வாயிலாகவே கைவசப்படுத்தப்பட முடிந்தது. SEP இன் அரசியல் மற்றும் அமைப்புரீதியான முன்முயற்சிகள் இன்றியமையா முக்கியத்துவம் கொண்டவையாக இருந்தன.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தத்துவார்த்த வேலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் அவசியமானதாகும். அந்த வேலையானது அத்தியாவசியமாக வரலாற்றின் மீதான தெளிவுபடுத்தலில் கவனம்குவித்தது. 1992 மார்ச் அனைத்துலகக் குழுவின் பன்னிரண்டாவது நிறைபேரவையில் விளக்கப்பட்டவாறாக:

ரஷ்யப் புரட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் உட்கிரகித்துக் கொள்வதன் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் கடுமுயற்சி செய்கிறோம். இப்போதைக்கு, தொழிலாள வர்க்கத்தில் அபரிமிதமான குழப்பம் உள்ளது. அதன் கண்ணோட்டங்கள் ஒரு சரியான வரலாற்று நனவை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்த பொய்யான நனவு பரந்துபட்ட மக்கள் கடந்து வந்திருக்கின்ற முந்தைய வரலாற்று அனுபவங்களில் —கட்சியின் தலையீடின்றி அதனால் உட்கிரகித்துக் கொள்ள இயலாத அனுபவங்கள்— வேரூன்றியிருக்கிறது.

ஸ்ராலினிசம் தான் மார்க்சிசம் என்பதும் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தின் தோல்வியை நிரூபிக்கிறது என்பதும் மில்லியன் கணக்கானோரை நோக்குநிலை பிறழச் செய்வதற்கு பிரயோகிக்கப்பட்ட மிகப்பெரும் பொய்களாகும். இந்தப் பொய்களை மறுப்பதும், ஸ்ராலினிசம் மார்க்சிசத்தின் எதிர்த்தத்துவமாக, வரலாற்றில் மிகப் பயங்கர எதிர்ப்புரட்சியின் விளைபொருளாக இருந்தது என்பதை நிரூபிப்பதும் அவசியமாயிருக்கிறது.[5]

பன்னிரண்டாவது நிறைபேரவையை தொடர்ந்து, அனைத்துலகக் குழு “சோவியத்துக்கு-பிந்திய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளிக்கு எதிரான தாக்குதல்” ஐ தொடங்கியது, மறைந்த நமது தோழர் வாடிம் ஸகரோவிச் ரோகோவின் அதில் ஒரு முக்கியமானதும் முன்னுதாரணமானதுமான பாத்திரத்தை வகித்தார். 1995க்கும் 1998க்கும் இடையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் தோழர் ரோகோவின் வழங்கிய உரைகளுக்கு அனைத்துலகக் குழு ஏற்பாட்டுதவி செய்தது. உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்படுவதற்கு உடனடியாக முன்வந்த இந்த தத்துவார்த்த வேலையின் ஒரு இன்றியமையாத மைல்கல்லாக, சிட்னியில் 1998 ஜனவரி ஆரம்பத்தில் ICFI இன் ஆஸ்திரேலியப் பிரிவின் ஆதரவில் நடத்தப்பட்ட “கோடைப் பள்ளி” அமைந்திருந்தது. அந்தப் பள்ளியில் வழங்கப்பட்ட உரைகள் அடிப்படையான வரலாற்று, அரசியல், மெய்யியல், மற்றும் அழகியல் பிரச்சினைகளில் ICFI இன் காரியாளர்கள் 1990கள் முழுமையிலும் செய்திருந்த வேலைகளின் ஒரு சுருக்கத்தொகுப்பாக இருந்தது.

சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்திற்கு எந்த யதார்த்தரீதியான மாற்றும் அங்கே இருக்கவில்லை என்பதான கூற்றை மறுத்ததும், காஸ்ட்ரோவாதம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்துடன் தொடர்புடைய வடிவங்கள் மீதான ஒரு விமர்சனத்திற்கு ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை செயலுறுத்தியதும், இருபதாம் நூற்றாண்டின் நிறைவில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை ஆய்வுசெய்ததும், சோசலிசத்துக்கான புரட்சிகரப் போராட்டத்துடன் தொழிற்சங்கங்களுக்கு இருந்த உறவை பகுப்பாய்வு செய்ததும், அத்துடன் முதலாளித்துவ சமூகத்தின் மீதான விமர்சனத்தில் கலையின் இடத்தை விளக்கியதுமான விரிவுரைகள் அந்தப் பள்ளியில் இடம்பெற்றிருந்தன.

1998 இல் மேஹ்ரிங் புக்ஸ், வாழ்வின் அறிகையாக கலை (Art as the Cognition of Life) என்ற இடது எதிர்ப்பாளர் அலெக்ஸாண்டர் வோரோன்ஸ்கி படைப்புகளது ஒரு தொகுதியினை —தோழர் ஃபிரெட் வில்லியம்ஸால் மொழிபெயர்க்கப்பட்டது— வெளியிட்டது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்தத் தொகுதியின் வெளியீடும் ஆய்வும், குறிப்பாக ஃபிராய்ட்வாதத்தின் மீதான அதன் விமர்சனமும், மார்க்சிசத்திற்கும், பிராங்ஃபேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான பிளவினை கட்சி அங்கீகரிப்பதற்கு பெருமளவில் பங்களிப்பு செய்தது. தீங்கான தத்துவார்த்த செல்வாக்கையும், சமூக வர்க்கத்திற்கு மேலாக தனிமனித இன, நிற, பாலின மற்றும் பாலியல் அடையாளங்களைத் தூக்கிப்பிடிப்பதை மையமாகக் கொண்ட போலி-இடதுகளின் பிற்போக்குத்தனமான நடுத்தர-வர்க்க அரசியலையும் எதிர்த்துப் போராடுவதில் இந்த தெளிவுபடுத்தல் தீர்மானகரமான முக்கியத்துவம் கொண்டதாக நிரூபணமானது.

2005 ஆகஸ்டில், SEP, ICFI உடன் இணைந்து, “மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள்” என்ற பொருளில் ஒன்பது விரிவுரைகள் கொண்ட ஒரு வரிசைக்கு ஏற்பாடு செய்தது. அதன்பின் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில், 2006 ஜனவரியின் பிற்பகுதியில், ஆஸ்திரேலிய SEP சர்வதேச ஆசிரியர் குழுவின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது, அதில் 13 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்த அறிக்கைகள் ஒரு மார்க்சிச பார்வையில் இருந்து, உலக அரசியல் நிலை குறித்த ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்கின.

2006 மே மாதத்தில், ஏங்கெல்ஸ் மற்றும் மெய்யியல் சடவாதத்தின் மீதான பேராசிரியர் ரொக்மோரின் தாக்குதல் மீதான ஒரு விரிவான விமர்சனம் வெளியிடப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர், 2006 ஜூனில், “மார்க்சிசமும், வரலாறும் & சோசலிச நனவும்” என்ற தலைப்புடன் ஸ்ரைனர் மற்றும் பிரென்னருக்கு நான் ஒரு விரிவான கடிதம் அனுப்பினேன். அவர்களது பிழைகள் குறித்து அவர்களுக்கு உறுதியூட்டுவதல்ல, மாறாக அகநிலை கருத்துவாத பகுத்தறியாவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராக சடவாதத்தைப் பாதுகாப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கும் இடையிலான அத்தியாவசியமான தொடர்பை மேலும் தெளிவுபடுத்துவதே அதன் பிரதான நோக்கமாக இருந்தது.

2007 மே மாதத்தில், பிரிட்டிஷ் கல்வித்துறை அறிஞர்களான இயான் தாட்சர் மற்றும் ஜெஃப்ரி ஸ்வேயின் ஆகியோரால் எழுதப்பட்டிருந்த அவதூறான ட்ரொட்ஸ்கி-விரோத வாழ்க்கைவரலாறுகளுக்கான விரிவான தனது மறுப்பை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது. மேற்கூறப்பட்ட அத்தனை வேலைகளும் உலக சோசலிச வலைத் தளத்தின் அன்றாடப் பிரசுரங்களுடன் சேர்ந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரசுக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த வேலைகளை நினைவுகூருவதன் நோக்கம், தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்பு வேலைகளுக்கு இடையிலான இன்றியமையாத தொடர்பை வலுப்படுத்துவதற்காக ஆகும். 1995 முதல் 2008 வரையான காலகட்டத்தில் ICFI மற்றும் SEP பெற்ற அனுபவமானது, பெரும் அரசியல் மற்றும் அமைப்பு முன்னேற்றங்கள் தளர்ச்சியற்ற தத்துவார்த்த தயாரிப்பினைக் கோருகின்றன என்ற அத்தியாவசிய உண்மையை விளங்கப்படுத்தியது. லெனின் சரியாகக் கூறினார்: “புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் எந்த புரட்சிகர இயக்கமும் இருக்க முடியாது.”

2008க்குள்ளாக ஒரு உத்தியோகபூர்வ ஸ்தாபக காங்கிரசை நடத்துவதை நியாயப்படுத்தத்தக்க அளவுக்கு போதுமான தயாரிப்பு வேலைகள் தெளிவாக செய்யப்பட்டிருந்தன. துல்லியமாக வெளிப்பட சொல்ல வேண்டுமென்றால், அது பல வருடங்கள் முன்பே நடத்தப்பட்டிருக்க முடியும். ஆயினும், 2008க்குள்ளாக, ஒரு ஸ்தாபக காங்கிரசை —அதில் அரசியல் வேலைத்திட்டமும் அமைப்பின் விதிகளும் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விதமாக— நடத்துவது இனியும் தாமதிக்கப்பட முடியாது என்ற கருத்தில் கட்சித் தலைமைக்குள்ளாக ஒரு வலுவான கருத்தொற்றுமை உருவாகியிருந்தது. அபிவிருத்தி கண்டு வந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் அரசியல் தாக்கங்கள் குறித்த எங்களது மதிப்பீடே அந்த கருத்தொற்றுமைக்கான அடிப்படையாக இருந்தது. 2008 ஜனவரி 11 அன்று, ஒரு வாரத்திற்கு முன்பாக ஆன் ஆர்பரில் நடந்த SEP இன் ஒரு தேசியக் கூட்டத்தில் நான் வழங்கியிருந்த ஒரு அறிக்கையின் உரையை WSWS வெளியிட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு ஆரம்பித்தது:

2008 உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி கணிசமாக தீவிரமடைவதைக் கொண்டு குறிக்கப்படும். உலக நிதிய சந்தைகளிலான கொந்தளிப்பு நிலையானது வெறுமனே ஒரு சந்தர்ப்பவசமான சரிவு அல்ல, மாறாக சர்வதேச அரசியலை ஏற்கனவே ஸ்திரம்குலைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆழமான அமைப்புமுறை நோய் ஆகும்.

அந்த அறிக்கை தொடர்ந்தது:

அமெரிக்க வீட்டுச் சந்தைக் குமிழியானது வீட்டுஅடமான கடன்களின் மீதான கட்டுப்பாடற்ற ஊக முதலீடுகளால் எரியூட்டப்பட்டிருந்தது. சர்வதேச வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவங்களுக்கு நூறு பில்லியன்கணக்கான டாலர்கள் நட்டத்தில் முடிந்திருக்கிறது. வீட்டுஅடமான கடன்களுக்கு “பாதுகாப்பு வழங்க”வும், அவற்றின் சந்தேகத்திற்கிடமான தன்மையை மறைக்கவும், ஆபத்தை நிறைய எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்காய் பரவலடையச் செய்வதற்குமாய் நிதி சாதனங்களது விளக்கமற்ற எழுத்துக்களிலான உருவாக்கங்களான SIVக்கள் (கட்டமைப்புடனான முதலீட்டு வாகனங்கள்), CDOக்கள் (சொத்துப்பிணையுடனான கடன் கடப்பாடுகள்) போன்றவை வகுக்கப்பட்டிருந்தன. விளைவு, ஒரு பகுப்பாய்வாளரின் வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளித்துவத்தின் ஆங்கிலோ-அமெரிக்க முறையின் செல்தகைமையையும் நியாயபூர்வதன்மையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்ற, ஒரு சர்வதேச நிதிப் பொறிவில் முடிந்திருக்கிறது.

இந்த பகுப்பாய்வு பின்வரும் முடிவுகளுக்கு இட்டுச்சென்றது: முதலாவது, அமெரிக்காவும் உலகமும் 1930களுக்குப் பிந்தைய மாபெரும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருந்தன. இரண்டாவது, இந்த நெருக்கடியானது வர்க்கப் போராட்டத்தின் ஒரு எழுச்சிக்கு இட்டுச்செல்லும். மூன்றாவது, வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படலானது தொழிலாள வர்க்கத்தை தீவிரமடையச் செய்யும், சோசலிசத்திலும் மார்க்சிசத்திலும் ஆர்வத்தைப் புதுப்பிக்கும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பிரிவுகளை அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்துக்கு, ட்ரொட்ஸ்கிசத்துக்கு, வென்றெடுப்பதற்கு முன்கண்டிராத அளவிலான வாய்ப்புவளங்களை உருவாக்கும்.

ஸ்தாபக காங்கிரஸ் 2008 ஆகஸ்டு 3 அன்று தொடங்கியது. கட்சியின் ஒரு அரசியல்சட்டம், கோட்பாடுகளின் அறிக்கை மற்றும் பிரதான காங்கிரஸ் ஆவணமான சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் ஆகியவை பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த ஆவணம் அதன் தொடக்கப் பகுதியில், SEP இன் வேலையில் வரலாறு பிடிக்கின்ற இடத்தை விளக்கியது:

புரட்சிகர சோசலிச மூலோபாயம் கடந்த காலப் போராட்டங்களது படிப்பினைகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட முடியும். எல்லாவற்றையும் விட, சோசலிஸ்டுகளது கல்வியூட்டலானது நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த ஒரு விரிவான அறிவை அபிவிருத்தி செய்வதை நோக்கி செலுத்தப்பட்டாக வேண்டும். சோசலிசப் புரட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் கூர்முனையாக மார்க்சிசத்தின் அபிவிருத்தியானது அதன் மிக முன்னேறிய வெளிப்பாட்டினை, நான்காம் அகிலம் 1938 இல் அது ஸ்தாபிக்கப்பட்டது முதலாக ஸ்ராலினிசம், திருத்தல்வாதம், ட்ரொட்ஸ்கிசத்தின் பப்லோவாத திருத்தல்கள் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மற்ற அத்தனை வடிவங்களுக்கும் எதிராய் நடத்தி வருகின்ற போராட்டங்களில் கண்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள் மற்றும் அவற்றின் மையமான மூலோபாய படிப்பினைகள் ஆகியவை குறித்த ஒரு பொதுவான மதிப்பீடு இல்லாமல் வேலைத்திட்டம் மற்றும் பணிகள் ஆகிய அத்தியாவசியப் பிரச்சினைகளில் கட்சிக்குள்ளாக அரசியல் உடன்பாடு சாதிக்கப்பட முடியாது. வரலாற்றை தொழிலாள வர்க்கத்தின் “வலிமிக்க அல்லது துன்பம்மிக்க பாதை” (“Via Dolorosa”) என்று ஒருமுறை ரோஸா லுக்செம்பேர்க் விவரித்தார். தொழிலாள வர்க்கம் வரலாற்றில் இருந்து —அதன் வெற்றிகளில் இருந்து மட்டுமல்ல அதன் தோல்விகளில் இருந்துமான படிப்பினைகளை— கற்றுக்கொள்கின்ற மட்டத்திற்கு மட்டுமே அது புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்தின் கோரிக்கைகளுக்கு தயார் செய்யப்பட முடியும்.[6]

ஸ்தாபக காங்கிரஸ் ஆகஸ்டு 9 சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. அதன்பின் சரியாக ஐந்து வாரங்களும் இரண்டு நாளும் கழித்து, 2008 செப்டம்பர் 15 அன்று லேஹ்மன் பிரதர்ஸ் திவால்நிலையை அறிவித்தது, டோவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி குறியீடு 504 புள்ளிகள் சரிந்தது. சந்தைகளை ஸ்திரப்படுத்துவதற்கான பகீரத பிரயத்தனங்கள் பங்கு விலைகளிலான செங்குத்தான சரிவை தற்காலிகமாக நிறுத்தின. ஆயினும் செப்டம்பர் 29 அன்று, சந்தையின் அடிப்பரப்பு காணாமல் போய், 1930களுக்குப் பிந்தைய மோசமான மந்தநிலைக்குக் கட்டியம் கூறியது. தொடர்ந்து வந்த மாதங்களில், நாடாளுமன்றம் தேசியக் கடனை இரட்டிப்பாக்கியது, வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களைப் பிணையெடுப்பதற்காக கூட்டரசாங்க கருவூலம் (Federal Reserve) நூறு பில்லியன் கணக்கான டாலர்களை உறுதியளித்தது. சந்தை 2009 மார்ச்சில் அதன் பொறிவுக்குப் பிந்தைய அடிமட்ட நிலையை எட்டிய பின்னர் ஒரு அதிசயமான மீட்சியைத் தொடக்கியது. வீடுகளின் முன்கூட்டிய அடைப்புகள், மிருகத்தனமான ஊதிய வெட்டுக்கள், மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டமை, மற்றும் சமூக வேலைத்திட்டங்களிலான செலவினங்கள் வெட்டப்பட்டமை ஆகியவற்றின் வடிவில் நெருக்கடியின் சுமை முழுமையாக தொழிலாள வர்க்கத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த தசாப்தத்தின் நிகழ்வுகள் எந்த மட்டத்திற்கு 2008 தொடக்கத்தில் SEP ஆல் கூறப்பட்ட நோய்நிலை அறிக்கையை ஊர்ஜிதம் செய்தன? ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி குறித்த கட்சியின் கணிப்பு, கேள்விக்கிடமின்றி, முழுமையாக நடந்தேறியது. வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சி, 1930களில் விடவும் மிகவும் மெதுவான வேகத்தில் அபிவிருத்தி கண்டிருந்தாலும் கூட, மிகத் தெளிவாக நடந்து வருகிறது. அதன் அபிவிருத்தியின் மந்த வேகமானது வரலாற்றினால் பக்குவப்படுத்தப்பட்டிருந்த பல காரணிகளை, எல்லாவற்றையும் விட, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவில் ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் கடந்த கால காட்டிக்கொடுப்புகளது நீண்ட-கால தாக்கத்தை, கொண்டே விளக்கப்படக் கூடியதாகும். பல தசாப்தங்களாக ஸ்ராலினிசம் வரலாற்றை பொய்மைப்படுத்தியது, பிரம்மாண்டமான குற்றங்களை இழைத்தது, மார்க்சிசத்தின் ஒரு வக்கிரமான மற்றும் ஊழலடைந்த திரிப்பை உலகின் முன்வைத்தது, தொழிலாள வர்க்கத்தை சோசலிசத்திடம் இருந்து அந்நியப்படுத்தியது. இறுதியாக, 1989க்கும் 1991க்கும் இடையில் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகள் துரிதமாக கலைக்கப்பட்டமையானது முதலாளித்துவத்திற்கான ஒரு மாற்றீட்டின் சாத்தியம் குறித்தே ஆழமான வேருடைய அவநம்பிக்கைக்கு இட்டுச்சென்றது.

வர்க்க நனவிலான வீழ்ச்சி, குறிப்பாக 1991க்குப் பின்னர், முதலாளித்துவ சமூகத்தின் ஒரு பரந்த கலாச்சார மற்றும் புத்திஜீவித சீரழிவினை பிரதிபலித்தது. மார்க்சிசத்திற்கு எதிரான அதன் போரில், ஆளும் வர்க்கம் பெரும்விலை கொடுத்து ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது, ஏனென்றால் குறிப்பிடத்தக்க சிந்தனைகளும் முன்னோக்கும் இல்லாமல், உத்வேகமளிக்கத்தக்க கவனத்திற்குரிய கலைப்படைப்புத் திறனின்றி, பல்கலைக்கழகங்களின் சிடுமூஞ்சித்தனமான மற்றும் கோழைத்தனமான பின்நவீனத்துவ போலி-புத்திஜீவித்தட்டின் சேவைகளைச் சார்ந்ததாய் ஒரு தரிசாகிக் கிடந்த புத்திஜீவித சூழலில் அது விடப்பட்டிருந்தது.

இந்த சமூக சூழலின் அத்தனை மோசமான அம்சங்களும் —முடிவற்ற சுய-நுகர்வு, சர்வசதா காலமும் தனிமனித செல்வம் மற்றும் அந்தஸ்து குறித்த சிந்தனை, சமூகப் பொறுப்பைக் காட்டிலும் தனிமனிதக் கவலைகளைத் தூக்கிப் பிடிப்பது, ஜனநாயக உரிமைகளை நோக்கிய அலட்சியம், மற்றும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி ஒரு ஆழமான வேர்கொண்ட குரோதம் ஆகியவை— தமது வெளிப்பாட்டை அடையாள அரசியலில் காண்கின்றன. அரசியல்ரீதியாகவும் புத்திஜீவித்தனரீதியாகவும் பிற்போக்கான இந்த சூழல் —வரலாற்று, முற்போக்கு சமூக மற்றும் ஜனநாயக நனவு இதில் ஒடுக்கப்படுகிறது— வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியை மந்தப்படுத்துவதில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது.

முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக தன்னை பாதுகாப்பதற்கும் எதிர்த்துப் போராடுவதற்கும் தொழிலாள வர்க்கம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் சரீரரீதியாக ஒடுக்குகின்ற பெருநிறுவன தொழிற்சங்கங்கள் மூலமாக இந்த கலாச்சார மற்றும் புத்திஜீவிதக் காரணிகள் மேலும் மோசமடையச் செய்யப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில், தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மிக அடிப்படை வடிவமான வேலைநிறுத்தங்களை தடுப்பதற்காக, அதிகாரத்துவத்தின் —பெருநிறுவனங்கள் மற்றும் அரசுடன் சேர்ந்து— கட்டுப்பாட்டில் இருந்த செறிந்த ஆதாரவளங்கள் தாட்சண்யமற்று பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

ஆயினும் சமீபத்தில் நடந்த, உத்தியோகபூர்வ அங்கீகரிப்பின்றி சாமானிய ஆசிரியர்களால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தங்களது அலையானது தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியின் தொடக்கத்தைக் குறித்து நிற்கிறது. வர்க்கப் போராட்டத்தின் ஒரு மேலெழுச்சி அலை அங்கே இருக்கிறது, 2008 இல் SEP முன்கணித்ததைப் போல, அதனுடன் வர்க்க நனவும் சோசலிசத்திற்கான ஆர்வமும் மறுமலர்ச்சி காண்பதும் கைகோர்த்திருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியில் இருந்தும் தொழிலாள வர்க்க நனவின் தீவிரப்படலில் இருந்தும் எழுகின்ற —தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான— சவால்கள் மீது தான், வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளும் (The Resurgence of Class Struggle and the Tasks of the Socialist Equality Party) என்ற முன்னோக்குகள் தீர்மானம் பிரதான அக்கறை செலுத்துகிறது.

அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் இப்போதைய சூழ்நிலையை யதார்த்தஅறிவுடனும் நம்பிக்கையுணர்வுடனும் பார்க்கின்றன. இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றுடனொன்று முரண்படவில்லை. இரண்டுமே ஒரு புரட்சிகர முன்னோக்கின் அத்தியாவசிய பாகங்களாகும். அவநம்பிக்கை என்பது, வரைவு முன்னோக்கு சொல்வதைப் போல, “வரலாற்றுரீதியற்ற அகநிலைவாதத்தின் மிகவும் குறும் பார்வை கொண்ட மற்றும் பயனற்ற வடிவம்” என்றால், நம்பிக்கையுணர்வானது மனித சமூகத்தின் செயல்பாடுகளில் வெளிப்பாடு காண்கின்ற —எத்தனை சிக்கலான மற்றும் முரண்பாடான விதத்தில் என்றபோதும்— வரலாற்று விதிகள் மீதான ஒரு புரிதலில் வேரூன்றியதாகும். நம்பிக்கையுணர்வு என்பது, சிறந்தது நடக்க வேண்டும் என்று நம்புவதும், திரு.மிக்கோபர் போல, “ஏதோ நடக்கும்” என்று எதிர்பார்ப்பதுமான ஒரு விடயம் அல்ல என்பதையும் வலியுறுத்தியாக வேண்டும். நாம் சடவாதிகள், ஆகவே நிகழ்வுகளின் விளைமுடிவுகளைத் தீர்மானிப்பதில் நாம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறோம் என்பதை புரிந்துகொள்கிறோம். வரைவு முன்னோக்கு கூறுவதைப் போல:

இந்த வரலாற்றுச் சூழ்நிலைக்குள்ளாக, புரட்சிகரக் கட்சி அதனளவிலேயே கூட, புறநிலை நெருக்கடியின் விளைமுடிவைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. புரட்சிகரக் கட்சியின் தாக்கத்தை தவிர்த்து விட்டு புறநிலைமையை மதிப்பீடு செய்வதும் அரசியல் சாத்தியங்கள் குறித்த ஒரு யதார்த்தரீதியிலான மதிப்பீடு செய்வதும் மார்க்சிசத்திற்கு முற்றிலும் அந்நியமானதாகும். மார்க்சிச புரட்சிகரக் கட்சியானது வெறுமனே நிகழ்வுகளின் மீது கருத்திடுவதோடு நிற்பதில்லை, அது பகுப்பாய்வு செய்கின்ற நிகழ்வுகளில் அதுவும் பங்குபெறுகிறது, தொழிலாளர்’ அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தில் அதன் தலைமையின் மூலமாக உலகை மாற்றுவதற்கு அது பாடுபடுகிறது.

நான் மேற்கோளிட்ட பத்தி “நான்காம் அகிலத்தின் எண்பது ஆண்டுகள்” என்ற தலைப்பு கொண்ட ஆவணத்தின் பகுதியை அறிமுகம் செய்கிறது. முன்னோக்கு தீர்மானத்தில் புதிதாக நிறைய விடயங்கள் இருக்கின்றன. அரசியல் சூழ்நிலை குறித்த கட்சியின் புரிதலில் ஒரு குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை அது குறிக்கிறது, அத்துடன் அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் முக்கியமான அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களில் கட்சியின் செயலூக்கமான பங்கேற்பின் அனுபவத்தினை அது பிரதிபலிக்கிறது மற்றும் பிரயோகிக்கிறது. மேலும், வர்க்கப் போராட்டத்தின் புறநிலை அபிவிருத்திக்கும் கட்சியின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான உறவை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது, அத்துடன் இந்த காங்கிரஸ் நிறைவைடைந்ததில் இருந்து கட்சியால் கையிலெடுக்கப்பட்டாக வேண்டிய அரசியல் மற்றும் நடைமுறை முன்முயற்சிகளை துல்லியமாக அடையாளப்படுத்துகிறது.

ஆயினும் வரைவில் நான்காம் அகிலத்தின் வரலாற்றை கையாளும் பகுதிகள் தான் ஆவணத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் கருவை பிரதிநிதித்துவம் செய்வதாக நான் நம்புகிறேன். சோசலிச சமத்துவக் கட்சி தனக்கு அடித்தளமாகக் கொண்டுள்ள வரலாற்று அனுபவங்கள், வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளை வரைவு முன்னோக்கின் இந்த பகுதி இரத்தினச்சுருக்கமாக தொகுத்துக் கூறுகிறது.

ஆண்டுதினங்களுக்கு நமது கட்சி கொடுக்கின்ற கவனம் என்பது வெறுமனே வரலாற்றில் கொண்டிருக்கின்ற கல்விரீதியான ஆர்வத்தின், ஒரு அரசியல் பாரம்பரியத்தின் மீதான முறையான ஒப்புதலின், அல்லது, குறைந்தபட்சமாக, கடந்த கால விடயங்களது ஒரு உணர்ச்சிபூர்வ நினைவுகூரல் வகையின் வெளிப்பாடு அல்ல. மாறாக, தொழிலாள வர்க்கமும் புரட்சிகர இயக்கமும் கடந்து வந்திருக்கின்ற இன்றியமையாத அனுபவங்களை, இப்போது நிலவுகின்ற நிலைமைகளின் வெளிச்சத்தில், மறுஆய்வு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஆண்டுதினங்கள் அமைகின்றன. மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை, கடந்த கால அனுபவங்களின் வழி வேலை செய்வதென்பது வருங்காலப் போராட்டங்களுக்கான ஒரு அத்தியாவசியத் தயாரிப்பாக இருந்து வந்திருக்கிறது.

ட்ரொட்ஸ்கியின் முடிவுகளும் வாய்ப்புகளும் (Results and Prospects) எனும் விமர்சனரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயத்தில் —நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் விரித்துரைப்புக்கான அடிப்படையை இது உருவாக்கியது— மிக முக்கியமான அத்தியாயம் “1789-1848-1905” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் நீண்டதொரு காலகட்டத்தில் முதலாளித்துவப் புரட்சி கண்டிருந்த பரிணாம வளர்ச்சி மீதான வரலாற்றுத் திறனாய்வானது, எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் புதிய பாத்திரம் குறித்த ஒரு ஆழமான உட்பார்வைக்கு ட்ரொட்ஸ்கியை அழைத்துச் சென்றது; இருபதாம் நூற்றாண்டில் ரஷ்யாவிலும் மற்றும் உலகெங்கிலும் மார்க்சிச புரட்சிகர மூலோபாயத்திற்கு மிக நீண்டகால தாக்கங்களை இது கொண்டிருந்தது. 1917 கோடையில் லெனினால் எழுதப்பட்டிருந்த அரசும் புரட்சியும், பிரதானமாக, 1871 இன் பாரிஸ் கம்யூன் குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுத்துக்கள் மீதான ஒரு விரிவான ஆய்வைக் கொண்டதாய் இருந்தது. இந்தத் திறனாய்வில் இருந்து லெனின் பெற்ற முடிவுகள், 1917 செப்டம்பர் மற்றும் அக்டோபரில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக ஆதரவை வென்றெடுப்பதற்கு அவர் நடத்திய போராட்டத்திற்கான தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்கின.

அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்குள்ளாக வெறும் சுலோகங்களையும் ஒரு தொகை கோரிக்கைகளையும் மட்டும் அறிமுகம் செய்வதில்லை. அவை கணிசமான முக்கியத்துவமுடையவை தான், என்றாலும் தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதற்கும் அதன் அரசியல் நனவை சோசலிசப் புரட்சியை நடத்துவதற்குப் போதுமான அளவுக்கு உயர்த்துவதற்கும் அவை போதாது. தொழிலாள வர்க்கம் அது முகம் கொடுத்திருக்கும் நெருக்கடியையும் கடமைகளையும் புரிந்துகொள்வதற்கு, அது வாழுகின்ற மற்றும் போராடுகின்ற வரலாற்று சகாப்தத்தின் தன்மை குறித்து கட்டாயம் புரிந்து கொண்டாக வேண்டும்.

மேலும், புரட்சிகர மூலோபாயத்தையும் பொருத்தமான தந்திரோபாயத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு, தொழிலாள வர்க்கம் கடந்த நூற்றாண்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் புரட்சிகரப் போராட்டங்கள் குறித்து போதுமான அளவுக்கு அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இறுதியாக, தொழிலாள வர்க்கம் அதன் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்ற அமைப்புகள் மற்றும் போக்குகளை மதிப்பீடு செய்வதற்கு, அவற்றின் வரலாறு, அவற்றின் அரசியல் பாரம்பரியம், மற்றும் கடந்த காலப் போராட்டங்களில் அவை வகித்த பாத்திரம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு பரந்த வரலாற்று அனுபவத்தின் உருவடிவாக உள்ளது. வரலாறை தொடர்ந்து ஆய்வு செய்வது, அதன் படிப்பினைகளை உட்கிரகித்துக் கொள்வது, மற்றும் வேலைத்திட்டத்தின் சூத்திரப்படுத்தலிலும் நடைமுறைக்கு வழிகாட்டுவதிலும் வரலாற்று அறிவின் பாத்திரம் ஆகியவைதான், ICFI ஐ சோசலிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கின்ற மற்ற ஒவ்வொரு அரசியல் அமைப்பில் இருந்தும் போக்கில் இருந்தும் தனித்துவப்படுத்திக் காட்டுகிறது.

வரைவு முன்னோக்கு கூறுகிறது:

இந்த ஆண்டு 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் எண்பதாவது ஆண்டாகும். நான்காம் அகிலம் உயிர்வாழ்ந்திருக்கக் கூடிய எண்பது ஆண்டுகளில் அறுபத்தியைந்து ஆண்டுகளுக்கு அதன் வேலைகள் அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழாகவே அபிவிருத்தி செய்யப்பட்டு வந்திருக்கின்றன. 2018 இல் முழுமையாக காணக்கூடிய ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், எந்த வரலாற்று பகுப்பாய்வு, கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தின் மீது நான்காம் அகிலம் 1938 இல் ஸ்தாபிக்கப்பட்டதோ, 1953 இல் அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்த பகிரங்க கடிதத்தின் வெளியீட்டில் எவை உறுதி செய்யப்பட்டனவோ, வரலாற்று அபிவிருத்தியின் ஒட்டுமொத்தப் பாதையின் மூலமாக அவை நிரூபணம் பெற்றிருக்கின்றன என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை.

ட்ரொட்ஸ்கி கையாண்ட அரசியல் பிரச்சினைகள், ஒரு புறநிலையான அர்த்தத்தில், இன்றைய வரலாற்றுக் காலகட்டத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதால், அவரது எழுத்துக்கள் தமது அசாதாரண பொருத்தத்தை இன்றளவும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும், அவர் போராடிய வேலைத்திட்டமும் கோட்பாடுகளும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைகளில் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாறு அதன் காலத்தின் போராட்டங்களுடன் அது கொண்டிருக்கின்ற ஒரு தொடர்ச்சியான மற்றும் தீவிரமான உறவையே அதன் அத்தியாவசிய உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் இருந்தும் வர்க்கப் போராட்டத்திலும் தொழிலாள வர்க்கத்தின் நனவிலுமான அதன் பிரதிபலிப்பில் இருந்தும் எழுகின்ற அரசியல் பிரச்சினைகள் மற்றும் மோதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பிரிவு அளிக்கின்ற நனவான பதிலிறுப்பை நான்காம் அகிலத்தின் வரலாறு பதிவுசெய்கிறது.

அனைத்துலகக் குழு அதன் வரலாறு குறித்த ஒரு விரிவான கணக்கை வழங்க முடியும். என்ன நடந்தது என்பதை மட்டுமல்ல, முக்கிய அரசியல் மோதல்களின் கீழமைந்த சமூக மற்றும் அரசியல் காரணங்கள், நான்காம் அகிலத்திற்குள் எழுந்த அரசியல் பேதங்களின் முக்கியத்துவம், மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் சம்பந்தப்பட்டதும் அவர்களை பாதிக்கக் கூடியதுமான புறநிலை சமூக நிகழ்ச்சிபோக்குகள் மற்றும் அரசியல் மோதல்களுடன் அவை கொண்டிருக்கும் உறவு ஆகியவற்றுக்கான விளக்கத்தையும் அது வழங்குகிறது.

SWP க்குள்ளாக ஜேம்ஸ் பி. கனனால் கொடூரமாக பலியாக்கப்பட்ட ஒரு எதிரணியின் தீரமிக்க தலைவர்களாக மொரோ-கோல்ட்மன் கன்னையை பெருமைப்படுத்துவதற்கு வரலாற்றாசிரியர்கள் டானியல் கெய்டோவும் வெல்லியா லுப்பரேல்லோவும் செய்திருக்கும் முயற்சிகளுக்கு, நாம் காக்கும் மரபியம் புதிய பதிப்பிற்கு எழுதிய முன்னுரையில், நான் கவனம் ஈர்த்திருக்கிறேன். கனன் கன்னையின் வெற்றிதான் நான்காம் அகிலத்தை கையாலாகாத்தனத்திற்கு சபித்ததாக அறிவிக்குமளவிற்கு கெய்டோவும் லுப்பரேல்லோவும் செல்கின்றனர். இந்த அடிப்படையில், மொரோ-கோல்ட்மனுக்குப் பிந்தைய SWP இன், அத்துடன் அனைத்துலகக் குழுவின், ஒட்டுமொத்த வரலாற்றையும், கிட்டத்தட்ட அர்த்தமற்றதாகக் கூறி அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்கள் எழுதுகின்றனர்:

இந்த பகுப்பாய்வு சரி என்றால், நான்காம் அகிலத்தின் நெருக்கடி, பெரும்பாலும் வாதிடப்படுவதைப் போல, 1953 இல் மிஷேல் பப்லோவின் “ஆழமான நுழைவுவாத” தந்திரோபாயத்தால் தூண்டப்பட்ட சர்ச்சையில் இருந்து தொடங்கியதல்ல, மாறாக அதற்கு பத்து வருடங்கள் முன்பாக, ஐரோப்பாவில் முசோலினியின் வீழ்ச்சி, மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பாவின் முதலாளித்துவ வர்க்கங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஜனநாயக எதிர்ப்புரட்சியின் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டமை ஆகியவற்றின் ஒரு விளைவாக அபிவிருத்தி கண்டிருந்த புதிய சூழ்நிலைக்கு தக்கவாறு தனது தந்திரோபாயத்தை தகவமைத்துக் கொள்ள SWP இன் தலைமையால் இயலாமலிருந்ததில் இருந்தே தொடங்கியதாகும்.[7]

1940 இல் SWP இல் இருந்தான குட்டி-முதலாளித்துவ சிறுபான்மை உடைவுக்குப் பின்னர் மக்ஸ் சாக்ட்மனால் உருவாக்கப்பட்ட தொழிலாளர்கள் கட்சியுடன் SWP ஐ மறுஇணைவு செய்வதற்கு மொரோவும் கோல்ட்மனும் ஆதரவளித்தனர் என்று கெய்டோவும் லுப்பரேல்லோவும் போகிற போக்கில் குறிப்பிடுகின்றனர். மொரோ-கோல்ட்மன் போக்கின் “இழிவான முடிவு” குறித்தும் விரித்துரைப்பு இல்லாமல் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர். மொரோவும் கோல்ட்மனும், அவர்களது கூட்டாளி ஜோன் வான் ஹெஜெனோர்ட்டும் சேர்ந்து, ஏகாதிபத்திய-ஆதரவு கம்யூனிசவிரோத முகாமுக்குள் சென்றதும் அந்த “இழிவான முடிவு”க்குள் இடம்பெற்றிருந்தது என்ன என்பதை அவர்கள் விளக்கத் தவறுகின்றனர். அதேபோல மக்ஸ் சாக்ட்மன் மற்றும் அவரது தொழிலாளர்கள் கட்சியின் (Workers’ Party) அரசியல் பரிணாமம் குறித்தும் அவர்கள் விவாதிப்பதில்லை. சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO), அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பு (DSA), மற்றும், நாம் சேர்த்துக் கூறியாக வேண்டும், சமகால நவ-பழமைவாத இயக்கத்தின் பெரும்பகுதி ஆகியவற்றின் அரசியலில் சாக்ட்மனின் மனவேட்கையும் அரசியலும் உயிர்வாழ்கின்ற நிலையில் இது வெறுமனே பழமைஆய்வு மற்றும் ஏட்டறிவு ஆர்வம் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல.

1953 இல், தொழிலாளர்கள் கட்சியின் செய்தித்தாளான தொழிலாளர் நடவடிக்கை (Labor Action) இல் சாக்ட்மன் எழுதிய ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அது இவ்வாறு தொடங்கியது:

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நாசகரமானதாகும். மறைந்த ரூஸ்வெல்ட்டின் போர் ஒப்பந்தத்தின் (Roosevelt’s War Deal) கீழ் அது இருந்தது, ட்ரூமனின் நியாயமான ஒப்பந்தத்தின் (Truman’s Fair Deal) கீழும் அது இருந்தது, ஐசனோவரின் நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் அது மோசமடைந்திருக்கிறது.

சாக்ட்மன் தொடர்ந்தார்:

இரண்டாம் உலகப் போரின் பாதையில், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இருந்த ஒரு டசின் நாடுகளில் தமது சர்வாதிபத்திய அதிகாரத்தை வெல்வதிலும் வலுப்படுத்துவதிலும் ஸ்ராலினிஸ்டுகள் வெற்றிபெற்றனர். அளவிலும் முக்கியத்துவத்திலும் இதனுடன் ஒப்பிடத்தக்க ஒரு சாம்ராஜ்யம், இத்தனை வேகத்தில், இவ்வளவு குறைவான எதிர்ப்புடன், அத்துடன் இத்தனை மிகக் குறைந்த செலவில், ஒரு துப்பாக்கி குண்டும் கூட சுடப்படாமல், ஸ்தாபிக்கப்பட்டதாக இன்னொரு உதாரணத்தை வரலாற்றில் இருந்து நினைவுகூர்வது கடினம்.

இன்னும் இருக்கிறது: பலம்வாய்ந்த அமெரிக்கா உள்ளிட அத்தனை முதலாளித்துவ சக்திகளது தலைவர்களும் அரசியல் பெருந்தலைவர்களும், இந்த ஸ்ராலினிச வெற்றிகளைத் தடுக்க வழியற்று கைகட்டி நின்றனர், என்ன செய்வதெனத் தெரியாமல் முடியைப் பிய்த்துக் கொண்டனர். நமது வாழ்நாளில் இதற்கு நிகரான வேறொன்று இருக்கவில்லை.

இன்னும் இருக்கிறது: உண்மை என்னவென்றால் ஓரளவுக்கு பொறுப்பான பிற்போக்குவாதிகளுக்கு நேற்றைய வெளியுறவுக் கொள்கையைத் தவிர்த்த வேறு மாற்று இருக்கவில்லை. அந்தக் கொள்கையே இன்று ரூஸ்வெல்ட் மற்றும் ட்ரூமேனின் கீழ் இருந்ததாக —அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறிப்பிட்ட நிலை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்ட ஒரு ஏகாதிபத்தியக் கொள்கை— இருக்கிறது.

ஏகாதிபத்தியத்தின் மீதான வெறுப்பும் அதனை ஒழிப்பதற்கான உறுதியுமே தனித்துவமான பொது குணாம்சமாக இருக்கின்றதான இன்றைய உலகில், ஒரு ஏகாதிபத்தியக் கொள்கையை செயலுறுத்த முயலுகின்ற யாராக இருந்தாலும், நாசத்தைத் தவிர வேறு எதனையும் அறுவடை செய்ய முடியாது. தன்னளவில் அதுவே உலகின் மிக கொடுங்கோன்மையானதாகவும் ஏகாதிபத்திய சக்தியாகவும் இருக்கின்ற ஸ்ராலினிசத்துக்கு எதிராக அந்தக் கொள்கை செலுத்தப்படுகின்ற போதும் இது உண்மையாகவே இருக்கிறது.

வாஷிங்டனின் இப்போதைய கொள்கைக்கு எந்த நடைமுறைரீதியான பிற்போக்கு மாற்றுமில்லை என்பதால், ஸ்ராலினிசத்துக்கு எதிரான போராட்டம் நம்பிக்கையில்லாதது என்று முடிவாகி விடாது. ஐசனோவர்-ட்ரூமன்-ரூஸ்வெல்ட் கொள்கைக்கு ஒரு மாற்று இருக்கிறது.

அதன் பெயர்: ஒரு ஜனநாயக வெளியுறவுக் கொள்கை.

உண்மையில், வெளியுறவுத் துறை மற்றும் சிஐஏ இன் தலைமையகங்களுக்கு புது வண்ணம் பூசப்பட்டு, ஏகாதிபத்திய முத்திரை தாங்கியிருந்த பலகைகள் ஜனநாயக முத்திரை தாங்கிய புதிய பலகைகளைக் கொண்டு பிரதியிடப்படும் வகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு புதிய விளம்பர பிரச்சாரத்தை வழங்குவதைத் தவிர்த்து சாக்ட்மன் ஆலோசனையில் வேறெதுவும் இல்லை.

சாக்ட்மனிடம் இன்னுமொரு முன்மொழிவும் இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை புதியஜனநாயக வடிவத்தில் காட்டுவது வெளிநாடுகளில் கவனத்தில் எடுக்கப்படவேண்டுமானால் இந்தப் பிரச்சாரமானது, தம்மை ஒரு சுதந்திரமான மற்றும் சுயாதீனமான தொழிலாளர் இயக்கத்தின் பிரதம தூதர்களாக முன்நிறுத்துகின்ற அமெரிக்க தொழிற்சங்கங்களை ஈடுபடுத்த வேண்டியிருப்பதுடன்; அவற்றின் வளங்களைப் பயன்படுத்தவும் வேண்டியிருக்கும். சாக்ட்மன் தனது கட்டுரையின் நிறைவில் பிரகடனம் செய்தவாறாக:

ஒரு பெரும் வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அமெரிக்க தொழிலாளர் இயக்கமானது, அதன் மிக முற்போக்கான கூறுகளில் இருந்து தொடங்கி, இன்று பூமியின் மிக சக்திவாய்ந்த இயக்கத்தின் குரலாக இருக்கின்ற தனது குரலில் அதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டு, அந்தக் குரலானது ஜனநாயகத்திற்கான வெளியுறவுக் கொள்கைக்கு தொழிலாளர்களின் விட்டுக்கொடுக்காத அர்ப்பணிப்பை சூளுரைத்தால் மட்டுமே.

CIO உடன் விரைவில் இணையவிருந்த AFL சாக்ட்மனின் அழைப்புக்கு பதிலளித்தது, “ஜனநாயகத்தின் வெளியுறவுக் கொள்கை” யை அமல்படுத்துவதற்கு பாரிய வளங்களை அர்ப்பணித்தது. சாக்ட்மனும் ரொம் கான் போன்ற அவரது எடுபிடிகளும் புதிதாக ஒன்றுபட்டிருந்த AFL-CIO வின் பிற்போக்கான தலைவர் ஜோர்ஜ் மீனியின் செல்வாக்கான ஆலோசகர்கள் ஆயினர். சாக்ட்மனும் பன்றிகள் விரிகுடா (Bay of Pigs) படையெடுப்பை ஆதரித்து -இதனை அவர் போர்க்குணமிக்க கியூப தொழிற்சங்கவாதிகளது நடவடிக்கை எனப் புகழ்ந்தார். மற்றும் வியட்நாம் மீதான அமெரிக்க படையெடுப்பை ஆதரித்தன் மூலம் “ஜனநாயகத்தின் வெளியுறவுக் கொள்கை”க்கு தான் கொண்டிருந்த உறுதிப்பாட்டிற்கான வலிமையான உதாரணங்களை வழங்கினார். ஜனநாயக சுய-நிர்ணயத்திற்கான போராட்டம் என்ற பேரில், கணிசமான உத்வேகத்துடன் சாக்ட்மன் சூழுரைத்த இன்னுமொரு விடயம் சோவியத் ஏகாதிபத்தியத்திடம் இருந்து உக்ரேன் விடுதலை என்பதாகும்.

சாக்ட்மனின் “ஜனநாயகத்தின் வெளியுறவுக் கொள்கை”யின் சமகால அவதாரமே ISO இன் வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது, அதன் கொடிய செயலுறுத்தத்தை சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிடுவதற்கு அது நடத்துகின்ற பிரச்சாரத்தில் காண்கிறது.

நாம் காக்கும் மரபியத்தின் புதிய பதிப்புக்கான முன்னுரையில் விளக்கப்பட்டுள்ளவாறு, “நான்காம் அகிலத்திற்குள்ளான மோதல்களுக்கு கீழமைந்திருந்த புறநிலையான சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிபோக்குகளை —உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்தும் ஏகாதிபத்திய இரண்டாம் உலகப் போரின் போதும் அதன் பின்னருமான உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் இருந்தும் எழுகின்றவை—” அடையாளம் காண்பதற்கு அனைத்துலகக் குழு மட்டுமே திறன்பெற்றிருக்கிறது.

எண்பது ஆண்டு காலகட்டத்தை திரும்பிப் பார்த்தால், நான்காம் அகிலத்தின் வரலாற்றிலான அத்தனை முக்கிய அத்தியாயங்களது புறநிலை வரலாற்று முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வது சாத்தியமாகின்றது: 1940 இல் சோசலிச தொழிலாளர் கட்சியில் குட்டி-முதலாளித்துவ சிறுபான்மைக்கு எதிரான போராட்டம், 1946 இல் மொரோ-கோல்ட்மனின் வலது-சாரி சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தின் நிராகரிப்பு, 1953 இல் பகிரங்க கடிதத்தின் வெளியீடும் அனைத்துலகக் குழுவின் ஸ்தாபகமும், 1963 இல் பப்லோவாதிகளுடனான மறுஇணைவை அனைத்துலகக் குழு நிராகரித்தமை, 1985 டிசம்பர் 16 இல் WRP ஐ அனைத்துலகக் குழு இடைநீக்கம் செய்வதிலும் 1986 பிப்ரவரி இறுதி உடைவிலும் உச்சமடைந்ததான 1982க்கும் 1985க்கும் இடையிலான காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராய் வேர்க்கர்ஸ் லீக்கிற்குள்ளாக உருவான எதிர்ப்பு. இந்த அதிமுக்கிய அத்தியாயங்கள் ஒவ்வொன்றின் போதும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவிதி —அதாவது உலக சோசலிசத்திற்கான நனவான போராட்டத்தின் உயிர்வாழ்க்கை— பணயத்தில் இருந்தது.

உலக நெருக்கடியின் அபிவிருத்தியும் ட்ரொட்ஸ்கிசத்தின் மூலோபாயக் கருத்தாக்கங்களை எதிர்த்த மற்றும் திருத்த முனைந்த அத்தனை போக்குகளது அரசியல் பரிணாமவளர்ச்சியும், தனது எண்பது ஆண்டுகள் இருப்பில் அறுபத்தியைந்து ஆண்டுகளுக்கு அனைத்துலகக் குழுவால் தலைமை கொடுக்கப்பட்டு வந்திருக்கின்ற நான்காம் அகிலத்தால் நடத்தப்பட்டு வந்திருக்கும் போராட்டங்களை சரியென நிரூபித்திருக்கின்றன.

சோவியத் அதிகாரத்துவம் ஒரு புதிய வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்ததாக சாக்ட்மன் கூறியமை 1989-91 நிகழ்வுகளின் மூலம் தீர்மானகரமாக மறுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒருபோதும் எந்தவொரு வர்க்கமும் தனது அரசைக் கலைத்து தனது செல்வத்திற்கும் அரசியல் அடையாளத்திற்குமான அடிப்படையை உருவாக்கியிருந்த சொத்து வடிவங்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டதில்லை. பப்லோவாதத்தைப் பொறுத்தவரை, ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை அது வழங்கியமையும், இதேபோல, ஸ்ராலினிச அரசுகள் தம்மைத் தாமே கலைத்துக் கொண்டதின் மூலமாக மறுக்கப்பட்டது.

வரலாற்று நிகழ்வுகள் நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளையும் வேலைத்திட்டத்தையும் ஊர்ஜிதம் செய்துள்ளன. எண்பது ஆண்டுகள் நீண்ட, அரசியல் போராட்டத்தின் ஒரு விரிந்த அனுபவமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும் சோசலிச சமத்துவக் கட்சியிலும் குவியப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் காரியாளர்கள், அபிவிருத்தியடைகின்ற வர்க்கப் போராட்டத்தில் இந்த அனுபவத்தை நனவுடன் பயன்படுத்தி உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு மிகவும் வர்க்க-நனவான மற்றும் போர்க்குணமிக்க தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வென்றெடுக்க இப்போது அழைப்புவிடப்படுகின்றனர்.

Notes:

[1] The Third International After Lenin (New York: Pathfinder, 2002), p. 29

[2] David North, The Economic Crisis and the Return of History (Oak Park: Mehring, 2012) p. 27

[3] Documents of the Fourth International: The Formative Years (1933-40), New York: Pathfinder, 1973, p. 181

[4] David North, “A Historic Victory for the Working Class and the Fourth International,” Report to the World Conference of Workers Against Imperialist War and Colonialism, November 16, 1991, in The Fourth International, Volume 19, No. 1, p. 13

[5] David North, “After the demise of the USSR: The Struggle for Marxism and the Tasks of the Fourth International,” Report to the Twelfth Plenum of the ICFI, March 11, 1992, in The Fourth International, Volume 19, Number 1, p. 75

[6] The Historical & International Foundations of the Socialist Equality Party (Oak Park: Mehring, 2008), p. 2

[7] Daniel Gaido and Velia Luparello, “Strategy and Tactics in a Revolutionary Period: U.S. Trotskyism and the European Revolution, 1943-1946” in Science & Society, Vol. 78, No. 4, October 2014

Loading