மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
எட்டு பாகங்கள் கொண்ட இச் சிறு பிரசுரம் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய தாக்குதலுக்கு முன்னோடியாக இருந்த பிரான்சின் 1968 மே—ஜூன் சம்பவங்களின் அரசியல் முக்கியத்துவம் குறித்து ஆராய்கிறது. இது, மே—ஜூன் 68 இன் 40வது வருட பூர்த்தி வேளையில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலருமான பீட்டர் சுவார்ட்ஸ் ஆல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். ஆரம்பத்தில் மே 28, 2008 இல் இருந்து உலக சோசலிச வலைத் தளத்தின் ஆங்கில மொழி பக்கத்தில் எட்டு பாகங்களாக பிரசுரிக்கப்பட்டது. பின்னர் பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
பாகம் 1, மாணவர் எழுச்சி மற்றும் பொது வேலைநிறுத்தம் அபிவிருத்தி அடைந்ததிலிருந்து மே மாத இறுதியில் அது அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது வரையில் விவரிக்கிறது. பாகம் 2, அவற்றின் மீது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் அதனுடன் இணைந்திருந்த தொழிற்சங்கமான CGT உம் எவ்வாறு கட்டுப்பாட்டை கொண்டிருந்தன என்பது குறித்தும் மற்றும், ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோல் மீண்டும் அதிகாரத்திற்கு வர அவை எவ்வாறு உதவின என்பதையும் ஆராய்கின்றது. பாகங்கள் 3, 4 பப்லோவாதிகள் வகித்த பாத்திரம் குறித்து ஆராய்கின்றன; பாகங்கள் 5, 6, 7, 8 பியர் லம்பேர் இன் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பைக் (OCI) குறித்து ஆராய்கின்றன.
ஆயினும் கடந்த பத்து வருட நிகழ்வுகளின் வெளிச்சத்தில் ஒரு புதிய அறிமுகம் சேர்த்துக் கொள்ளப்படுள்ளது.
*******
1
அறிமுகம்
ஒரு புரட்சிகர சூழல் அபிவிருத்தியடைகிறது
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, 1968 மே-ஜூன் மாதத்தில் ஒரு பொது வேலைநிறுத்தம் பிரான்சை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியது. சுமார் 10 மில்லியன் தொழிலாளர்கள் கருவிகளைக் கீழே போட்விட்டு தொழிற்சாலைகளை ஆக்கிரமித்தனர், நாட்டின் பொருளாதார வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தனர். பிரெஞ்சு முதலாளித்துவமும் டு கோல் ஆட்சியும் உயிர்பிழைத்ததென்றால் அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அது மேலாதிக்கம் செலுத்திய CGT தொழிற்சங்கத்திற்கும் மட்டுமே அவை நன்றிக்கடன்பட்டுள்ளன, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இவை தம் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்தன. பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு முன்பாக, வியட்நாமிலான போருக்கு எதிராகவும், ஈரானிய ஷா ஆட்சிக்கு எதிராகவும், ஒடுக்குமுறை சமூக சூழல் மற்றும் பிற துன்பங்களுக்கு எதிராகவும் இளைஞர்களது ஒரு உலகளாவிய தீவிரப்படல் நிகழ்ந்திருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய தாக்குதலுக்கு முகவுரையாக அது இருந்தது. இந்தத் தாக்குதல் 1970களின் மத்தி வரையில் நீடித்தது, அரசாங்கங்களை இராஜினாமா செய்யத் தள்ளியது, சர்வாதிகாரங்களை வீழ்த்தியது, ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ ஆட்சியையே அது கேள்விக்குறியாக்கியது. ஜேர்மனி 1969 செப்டம்பர் வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டது என்றால், இத்தாலி “சூடான இலையுதிர்காலத்திற்கு” ஆட்பட்டது. போலந்திலும் செக்கோஸ்லாவாக்கியாவிலும் (பிராக் வசந்தம்) தொழிலாளர்கள் ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். பிரிட்டனில் சுரங்கத் தொழிலாளர்கள் 1974 இல் கன்சர்வேட்டிவ் ஹீத் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து கீழிறக்கினர். கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் வலது-சாரி சர்வாதிகாரங்கள் வீழ்ந்தன. அமெரிக்கா வியட்நாமில் இருந்து தோல்விகண்டு திரும்பத் தள்ளப்பட்டது.
அரை நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர், அந்த புரட்சிகரக் காலகட்டத்தில் இருந்தான படிப்பினைகள் செறிந்த முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன. வர்க்கப் போராட்டம் ஒரு நெடிய காலத்திற்கு ஒடுக்கப்பட்டு வந்திருந்த போதிலும் கூட, வர்க்க முரண்பாடுகள் இனியும் கட்டுப்படுத்தி வைக்கமுடியாத அளவுக்கான ஒரு புள்ளியை இப்போது எட்டி விட்டிருக்கின்றன. உலகெங்கிலும், முதலாளித்துவம் ஆழமான நெருக்கடியில் இருக்கிறது. மக்களின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சி கண்டு வருகிற நிலையில், சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் கற்பனைக்குஎட்டாத மட்டங்களுக்கு தம்மை வளப்படுத்திக் கொண்டு வருகின்றனர். ஏகாதிபத்திய சக்திகள் அத்தனையினது ஆளும் வர்க்கங்களும் அதிகரித்துச் செல்கின்ற சமூக மற்றும் சர்வதேசியப் பதட்டங்களுக்கு போர், இராணுவவாதம், மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றைக் கொண்டு பதிலிறுத்திக் கொண்டிருக்கின்றன. பெருகும் எதிர்ப்பு மற்றும் வர்க்கப் போராட்டம் கூர்மையடைவது ஆகியவற்றின் அறிகுறிகள் உலகெங்கும் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றன- அமெரிக்காவில் ஆசிரியர்களது வேலைநிறுத்தங்கள், பிரான்சில் இரயில்வே தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள், மற்றும் ஜேர்மனியில் புதிய கூட்டுப் பேச்சுவார்த்தை உடன்பாடுகள் தொடர்பாக நடைபெறுகின்ற தொழிற்துறை மற்றும் பொதுத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களில் மிகப்பெரும் பங்கேற்பு ஆகியவை ஆரம்ப வெடிப்புகள் மட்டுமே.
1968 முதல் 1975 வரையான காலத்தில் முதலாளித்துவம் உயிர்தப்பியது என்றால் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும், மற்றும் தொழிற்சங்கங்களுமே அதன் காரணமாகும், இவை தமது பரந்த செல்வாக்கைப் பயன்படுத்தி போராட்டங்களைக் கட்டுப்படுத்தி அவற்றை தோல்விக்கு இட்டுச் சென்றன. தொழிலாள வர்க்கத்தின் தாக்குதல் இந்த அதிகாரத்துவ எந்திரங்களின் செல்வாக்கைப் பலவீனப்படுத்திய போதிலும், தங்களை “சோசலிஸ்ட்”, “மார்க்சிஸ்ட்” மற்றும் இன்னும் “ட்ரொட்ஸ்கிஸ்ட்” என்றும் கூட விவரித்துக் கொண்ட பல்தரப்பான அமைப்புகள் ஒரு புரட்சிகரத் தலைமை உருவாவதைத் தடுத்ததோடு, மாறாக சமூக ஜனநாயகக் கட்சிகளை நோக்கித் திரும்பின. பிரான்சில், பிரான்சுவா மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சி அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கியமான சாதனமாக ஆனது; ஜேர்மனியில் வில்லி பிராண்ட் இன் கீழான சமூக ஜனநாயகக் கட்சி 1970களில் தமது செல்வாக்கின் உச்சத்தை எட்டியது.
கம்யூனிச அகிலமானது (மூன்றாம் அகிலம்) ஸ்ராலினிசத்தின் செல்வாக்கின் கீழ் திருப்பவியலாத வண்ணம் முதலாளித்துவ எதிர்-புரட்சியின் முகாமுக்கு சென்றுவிட்ட காரணத்தால், 1930களில், லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கும் முன்முயற்சியை மேற்கொண்டார். இருப்பினும், 1938 இல் ஸ்தாபிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, நான்காம் அகிலத்திற்குள் குட்டி-முதலாளித்துவப் போக்குகள் எழுந்திருந்தன, அவை தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கான —சீனாவில் 1927 இல், ஜேர்மனியில் 1933 இல், மற்றும் ஸ்பெயினில் 1939 இல்— பழியை அதன் தலைமையின் காட்டிக்கொடுப்புகள் மீது சுமத்துவதற்கு மாறாக, தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகரக் கடமையைப் பூர்த்தி செய்வதற்கு திறனற்றதாக இருந்ததாகச் சொல்லப்பட்டதன் மீது சுமத்தின.
ஸ்ராலினிச, சமூக ஜனநாயக, மற்றும் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் புறநிலை நிகழ்வுகளின் அழுத்தத்தின் கீழ் புரட்சிகர நடவடிக்கைகளை தழுவிக் கொள்ளத் தள்ளப்படும் என்பதாய் கூறி நான்காம் அகிலத்தின் பிரிவுகளை அவற்றுக்குள் கலைப்பதற்கு மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு திருத்தல்வாதப் போக்கு செய்த முயற்சியில், 1953 இல், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தின் மீதான தாக்குதல் உச்சமடைந்திருந்தது. ட்ரொட்ஸ்கிசத்திற்கான “மாற்றீடுகளாக” அல்ஜீரியாவில் பென் பெல்லா மற்றும் கியூபாவில் ஃபிடெல் காஸ்ட்ரோ போன்ற ஸ்ராலினிச மற்றும் தேசியவாதத் தலைவர்களை அவர்கள் புகழ்ந்தனர். இந்தக் காலகட்டத்தின் போதுதான், பப்லோவாதத் திருத்தல்வாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதை பாதுகாப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (International Committee of the Fourth International - ICFI) ஸ்தாபிக்கப்பட்டது.
1968 நிகழ்வுகளின் சமயத்தில் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் (United Secretariat) பிரெஞ்சு பிரிவான பியர் பிராங்க் தலைமையிலான சர்வதேச கம்யூனிச கட்சி (Parti communiste internationaliste – PCI), மற்றும் அலென் கிறிவினின் புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் இயக்கம் (Jeunesse communiste révolutionnaire – JCR) ஆகியவை வகித்த பாத்திரம் குறித்து இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது பகுதிகள் விளக்கவிருக்கின்றன. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியினதும் (PCF), அதன் தொழிற்சங்க கூட்டாளியான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பினதும் (Confédération générale du travail – CGT) காட்டிக்கொடுப்புகளை JCR மூடிமறைத்ததோடு, அராஜகவாத, மாவோயிச மற்றும் பிற குட்டி-முதலாளித்துவ மாணவர் குழுக்களுக்குள் தன்னை பிசிறின்றி கலைத்துக் கொண்டது. இன்று, அவற்றின் எஞ்சியிருக்கும் அங்கத்தவர்கள், ட்ரொட்ஸ்கிசத்தை வெளிப்படையாக நிராகரிப்பதும், ஸ்ராலினிஸ்டுகள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிற முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒத்துழைத்து வேலைசெய்து வருவதும், அத்துடன் லிபியா மற்றும் சிரியாவில் “மனிதாபிமான” ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வந்திருப்பதுமான NPA (Nouveau parti anticapitaliste புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி) இன் பகுதியாக இருக்கின்றனர். 1974 இல் LCR (Ligue Communiste Révolutionnaire) என்று பெயர்மாற்றப்பட்ட JCR இன் முன்னாள் உறுப்பினர்கள் பலர் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிற முதலாளித்துவ அமைப்புகளில் நீண்ட தொழில்வாழ்க்கையை கொண்டிருந்தனர்.
1968 இல் ICFI மட்டுமே, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் ஆகியவற்றின் அரசியல் செல்வாக்கிற்கு எதிராகப் போராடி வந்த ஒரே போக்காக இருந்தது. ஆயினும், பெரும் அதிகாரத்துவ அமைப்புகளால் மட்டுமல்லாது, பப்லோவாதத்தின் வெறுப்பூட்டத்தக்க பாத்திரத்தினாலும் உருவாக்கப்பட்டிருந்த அதீத தனிமைப்படல் நிலைமைகளின் கீழ் தான் அது இந்தப் போராட்டத்தை நடத்தியது. சமூக மற்றும் தத்துவார்த்த அழுத்தங்களுக்குள்ளாக அது வேலைசெய்துவந்த நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சொந்த அணிகளுக்குள்ளும் தகவமைத்துக் கொள்ளும் போக்குகள் அபிவிருத்தி கண்டன.
1953 இல் ICFI இன் உருவாக்கத்தில் இணை-ஸ்தாபகராக இருந்த OCI (Organisation communiste internationaliste பியர்லம்பேர்தலைமையிலானசர்வதேசகம்யூனிஸ்ட்அமைப்பு) 1968 இல் ஒரு மத்தியவாதக் கொள்கையை பின்பற்றியது. அனுபவமில்லாத அங்கத்தவர்கள் ஆயிரக்கணக்கில் கட்சிக்குள் பாய்ந்த நிலையில், அது கூர்மையாக வலது நோக்கித் திரும்பியது. 1971 இல், அனைத்துலகக் குழுவுடன் முறிவு கண்ட OCI அதன் உறுப்பினர்களை பிரான்சுவா மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சி (PS) க்கு உள்ளாக அனுப்பியது. இந்த சமயத்தில் PS இல் நுழைந்த OCI இன் அங்கத்தவர்களில் அதன்பின் PS இன் தலைவராகவும் பிரான்சின் பிரதமராகவும் ஆன லியோனல் ஜோஸ்பன், PS இன் இப்போதைய தலைவரான ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் (Jean-Christophe Cambadélis), மற்றும் பிரெஞ்சு இடது கட்சியின் ஸ்தாபகரும் அடிபணியா பிரான்ஸ் (La France insoumise – LFI) இயக்கத்தின் தலைவருமான ஜோன் லூக்-மெலோன்சோன் ஆகியோரும் அடங்குவர். ஒரு “இடது” தேசியவாதியான மெலோன்சோன் ஒரு அணு-ஆயுத வல்லமை கொண்ட சக்தியாக பிரான்ஸை பாதுகாப்பதோடு கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகம் செய்வதற்கும் அழைப்பு விடுக்கிறார்.
இந்தத் தொடரின் கடைசி நான்கு பாகங்கள் OCI இன் பாத்திரம், அதன் வரலாறு, மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கான ஆதரவின் முக்கியமான முட்டுத்தூணாக அது உருமாற்றம் காண இட்டுச் சென்ற தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஆகியவற்றை விரிவாக அலசுகிறது. இந்த அனுபவங்களைக் கற்பதும் புரிந்துகொள்வதும் வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தைத் தயாரிப்பு செய்வதில் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
பப்லோவாதிகள் மற்றும் OCI இன் பரிணாமவளர்ச்சியானது, கல்விப்புலம் சார்ந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியில் நிகழ்ந்த ஒரு வலதுநோக்கிய நகர்வின் பகுதியாக இருந்தது. 1968 இல் மாணவர் தலைவர்கள் பலரும் மார்க்சிசமாகத் தோற்றமளிக்கின்ற வார்த்தையாடல்களைப் பயன்படுத்தினர் என்றபோதும், அவர்களது கருத்தாக்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை மறுத்த ஃபிராங்பேர்ட் பள்ளி, இருத்தலியல்வாதம், மற்றும் பிற மார்க்சிச-விரோதப் போக்குகளால் உருக்கொடுக்கப்பட்டதாக இருந்தது. புரட்சி என்பதில் —இது அவர்கள் மிதமிஞ்சி பயன்படுத்திய ஒரு கருத்தாக்கமாக இருந்தது— அவர்கள் தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதை அர்த்தப்படுத்தவில்லை, மாறாக குட்டிமுதலாளித்துவ தனியாளின் சமூக, தனிமனித, மற்றும் பாலியல் விடுதலையையே அர்த்தப்படுத்தினர்.
பிரான்சில் 1968 மேயில் தொழிலாள வர்க்கம் தலையீடு செய்தமையானது “பிரெஞ்சு புத்திஜீவிகளது பரந்த அடுக்குகள் மீது மனஅதிர்ச்சி தரும் ஒரு விளைவைக் கொண்டிருந்தது” என்று உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், “போலி-இடதுகளின் தத்துவார்த்த மற்றும் வரலாற்று மூலங்கள்” என்ற தனது கட்டுரையில் எழுதினார். “புரட்சியுடனான அவர்களது ஸ்பரிசம் வலது நோக்கிய ஒரு கூர்மையான நகர்வை இயங்கச் செய்தது.” ஜோன் பிரான்சுவா றுவெல் (Jean-Francois Revel) மற்றும் பேர்னார்-ஹென்றி லெவி (Bernard-Henri Levy) உள்ளிட்ட “புதிய மெய்யியலாளர்கள்” என்பதாய் சொல்லப்பட்டவர்கள் “’மனித உரிமைகள்’ என்னும் கபடமான பதாகையின் கீழ் கம்யூனிச-விரோதத்தை தழுவிக் கொண்டனர்.” ஜோன்-பிரான்சுவா லியோத்தார் (Jean-Francois Lyotard) தலைமையிலான மெய்யியலாளர்களின் இன்னுமொரு குழு, “பின்நவீனத்துவம் குறித்த புத்திஜீவிதரீதியான நிஹிலிய (nihilist) சூத்திரமாக்கங்களைக் கொண்டு தமது மார்க்சிச மறுதலிப்பை நியாயப்படுத்தியது”. இருத்தலியல்வாத எழுத்தாளர் ஆண்ட்ரே கோர்ஸ் (André Gorz), “தொழிலாள வர்க்கத்துக்கு பிரியாவிடை!” (“Farewell to the Working Class!”) என்ற ஆத்திரமூட்டலான தலைப்புடன் ஒரு புத்தகத்தை எழுதினார்.
இந்த புத்திஜீவிகள் அனைவரும், யாருக்கு 1968 தமது சொந்த சமூகரீதியான முன்னேற்றத்திற்கான ஒரு களமாக இருந்ததோ, யார் அதன்பின்னர் அரசாங்க அமைச்சரவைகளிலும், ஆசிரியர் குழு அலுவலகங்களிலும், இன்னும் பெருநிறுவன இயக்குநரகங்களிலும் கூட தலைமையான பதவிகளை நிரப்பினரோ, அந்த நடுத்தர வர்க்கத்தின் சார்பாகப் பேசினர். இந்தத் தொடரின் நான்காம் பாகத்தில் மேற்கோளிடப்படுகின்றவாறாக, LCR இன் ஒரு நீண்டகால உறுப்பினரான எட்வீ பிளெனெல் (Edwy Plenel), முன்னணி பிரெஞ்சு தினசரியான Le Monde இன் ஆசிரியராக, 2001 இல் பின்வருமாறு எழுதினார்: “நான் மட்டும் தனியாக இல்லை: அதி இடதில் —ட்ரொட்ஸ்கிஸ்டாக அல்லது ட்ரொட்ஸ்கிசவாதி அல்லாதவராக— செயலூக்கத்துடன் இயங்கியதன் பின்னர், போராளிப் படிப்பினைகளை நிராகரித்து அந்த காலகட்டத்திலான எங்களது பிரமைகளை, பகுதி விமர்சனரீதியாக, திரும்பிப் பார்த்தவர்களாய் நிச்சயமாய் பத்தாயிரக்கணக்கில் நாங்கள் இருந்தோம்.”
நீண்டகாலமாய் ’68 இன் போராளிகளில் இருந்து தமது தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கின்ற ஜேர்மனியின் பசுமைக் கட்சியினர் இந்த நிகழ்ச்சிப்போக்கின் உருவடிவாய் திகழ்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள், சூழலியல், மற்றும் அமைதிவாதம் ஆகியவற்றுக்கான ஒரு குட்டி-முதலாளித்துவக் கட்சியாக இருந்ததில் இருந்து ஜேர்மன் இராணுவவாதத்திற்கான ஒரு நம்பகமான முட்டுத்தூணாக அவர்கள் உருமாற்றம் கண்டனர். குறைந்தபட்சம் ஊடகங்களைப் பொறுத்தவரையேனும், பிரான்சின் மாணவர் கிளர்ச்சியின் மிக நன்கறிந்த தலைவரான டானியல் கோன்-பென்டிட், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் முதல் இராணுவத் தலையீடான அதன் யூகோஸ்லாவியத் தலையீட்டுக்கு பொறுப்பானவராய் இருந்த 1999 இல் ஜேர்மன் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜோஸ்கா ஃபிஷ்சருக்கு வழிகாட்டியாகவும் தனிப்பட்ட நண்பராகவும் இருந்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருக்கும் பசுமைக் கட்சியின் அங்கத்தவராக, கோன்-பென்டிட் லிபியா மீதான போரை ஆதரித்தார், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கிறார் அத்துடன் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை புகழ்கிறார்.
இன்று விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் வர்க்க மோதலானது 1968-75 இன் போராட்டங்களின் போதான நிலைமைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதான நிலைமைகளின் கீழ் நடந்து கொண்டிருக்கிறது.
முதலாவதாய், முதலாளித்துவத்திற்கு சமூக விட்டுக்கொடுப்புகள் செய்ய இனியும் பொருளாதார ஆதாரவளம் இல்லை. 1968 இயக்கமானது, பகுதியாக, 1971 இல் பிரெட்டன் வூட்ஸ் முறை முடிவுக்கு வருவதற்கும் 1973 இல் மேலதிகமான மந்தநிலைக்கும் இட்டுச் சென்ற 1966 இன் முதல் பெரிய போருக்குப் பிந்தைய மந்தநிலையினால் தூண்டப்பட்டதாக இருந்தது. ஆனபோதும் போருக்குப் பிந்தைய எழுச்சியானது இந்தக் காலகட்டத்திற்கு சற்றுமுன்னர் தான் அதன் உச்சப்புள்ளியை எட்டியிருந்தது. ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளில் கணிசமான மேம்பாடுகளைக் கொடுத்து முதலாளித்துவ வர்க்கம் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. கிளர்ச்சி செய்த மாணவர்களை வீதிகளில் இருந்து திரும்பக் கொண்டுவருகின்ற விதமாக பல்கலைக்கழகங்கள் கணிசமாக விரிவாக்கம் செய்யப்பட்டன.
ஒரு தேசியக் கட்டமைப்புக்குள்ளான இத்தகைய சீர்திருத்தங்கள் இன்று இனியும் சாத்தியமில்லாதவையாக இருக்கின்றன. போட்டித்திறனுக்கான உலகளாவிய போட்டியும் உற்பத்தியின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் சர்வதேச நிதிச் சந்தைகளது மேலாதிக்கமும் பாதாளத்தை நோக்கிய ஒரு தாட்சண்யமற்ற ஓட்டத்தை தொடக்கிவிட்டிருக்கின்றன.
இரண்டாவதாக, அரை நூற்றாண்டுக்கு முன்பாக மில்லியன் கணக்கில் அங்கத்தவர்களைக் கொண்டிருந்ததும் முதலாளித்துவம் தப்பிப்பிழைப்பதை உத்தரவாதம் செய்ததுமான ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அமைப்புகள் இப்போது பரவலாக மதிப்பிழந்திருக்கின்றன. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டு விட்டதற்குப் பின்னர் சோவியத் ஒன்றியமும் இருக்கவில்லை. சீனா மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாக முதலாளித்துவச் சுரண்டலுக்கான ஒரு புகலிடமாக மாற்றப்பட்டு விட்டிருக்கிறது. மற்ற சமூக ஜனநாயகக் கட்சிகளைப் போலவே, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியும் உருக்குலைந்து விட்டிருக்கிறது, ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. தொழிற்சங்கங்கள் வேலை வெட்டுக்களை ஒழுங்கமைக்கின்ற இணை-மேலாளர்களாக உருமாற்றம் கண்டு, தொழிலாளர்களால் வெறுக்கப்படுபவையாக ஆகியிருக்கின்றன.
1968 இல் அனைத்துலகக் குழுவை தனிமைப்படுத்திய போலி-இடது அமைப்புகள் முதலாளித்துவ அரசு மற்றும் அதன் ஸ்தாபனங்களுக்குள்ளாக தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு விட்டிருக்கின்றன. அவை தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களையும் ஏகாதிபத்தியப் போர்களையும் ஆதரிக்கின்றன. எல்லா இடங்களையும் விட கிரீசில் —இங்கு “தீவிர இடதுகளின் கூட்டணி” (சிரிசா) சர்வதேச வங்கிகளின் தரப்பில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை சீரழிப்பதற்கு பொறுப்பேற்றுக் கொண்டது— இது மிகத் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகிறது. வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்கள், தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சிக்குபொறியாக ஆகியிருக்கும் இந்த அதிகாரத்துவ அமைப்புகள் மற்றும் அவற்றின் போலி-இடது தொங்குதசைகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் அபிவிருத்திகாண இருக்கின்றன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், பப்லோவாதத் திருத்தல்வாதம், மற்றும் குட்டி-முதலாளித்துவ போலி-இடது அரசியலின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான அதன் வரலாற்றுச்சிறப்புமிக்க போராட்டமும் இந்தப் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதில் தீர்மானகரமானதாய் நிரூபணமாகும். இந்த போக்குகளது வலது-நோக்கிய பயணப்பாதையை முன்கணிப்பதற்கும் அவற்றின் பாத்திரத்தை அம்பலப்படுத்துவதற்கும் இது திறம்படைத்திருப்பதானது, இப்போது கட்டியெழுப்பப்பட்டாக வேண்டியது மார்க்சிசக் கட்சியாகும் இது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. ICFIம் அதன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste) மட்டுமே முதலாளித்துவத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்ற திறம்படைத்த ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரே போக்கு ஆகும்.
1968 க்கு முன்னர் பிரான்ஸ்
1960 களில் பிரான்ஸ் ஆழ்ந்த முரண்பாடுகளால் குணாம்சப்பட்டிருந்தது. அந்த அரசியல் ஆட்சி சர்வாதிபத்தியமாக, ஆழ்ந்த பிற்போக்குத்தனமானதாக இருந்தது. ஏதோ வேறொரு சகாப்தத்திலிருந்து வந்தவராக தெரிந்த, மற்றும், ஐந்தாம் குடியரசை தனது தனிப்பட்ட வடிவத்தின் ஆளுருவாக்க மாதிரியாக ஜெனரால் டு கோல் விளங்கினார். 1958 இல் டு கோல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு 68 வயதாகும், 1969 இல் அவர் இராஜினாமா செய்தபோது அவருக்கு வயது 78. ஆனால் அந்த பழைய ஜெனராலின் வாட்டிவதைத்த ஆட்சியின் கீழ், பிரெஞ்சு சமூகத்தின் சமூகச் சேர்க்கையை அடிப்படைரீதியில் மாற்றியமைத்து, ஒரு வேகமான பொருளாதார நவீனமயமாக்கல் நடந்து வந்தது.
இரண்டாம் உலக போரின் முடிவில், பிரான்சின் பெரும் பகுதிகள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் அப்போது நிலத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். அதற்கடுத்த 20 ஆண்டுகளில், பிரெஞ்சு விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் நிலத்தை விட்டு நகரங்களை நோக்கி நகர்ந்தார்கள், அங்கே அவர்கள் —புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து— ஓர் இளம் போர்குணமிக்க சமூக அடுக்காக விளங்கிய மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமே கட்டுப்படுத்த சிரமப்பட்டு கொண்டிருந்த, தொழிலாள வர்க்க பிரிவினருடன் இணைந்தனர்.
1962 இல் அல்ஜீரிய போர் முடிந்த பின்னர், பிரெஞ்சு பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. அதன் காலனிநாடுகளின் இழப்பு, பிரெஞ்சு முதலாளித்துவத்தை இன்னும் பலமாக ஐரோப்பாவை நோக்கி அதன் பொருளாதாரத்தை திருப்ப நிர்பந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் (European Economic Community) ஸ்தாபக ஆவணமாக விளங்கிய ரோம் உடன்படிக்கையில், 1957 இல் அப்போதே பிரான்ஸ் கையெழுத்திட்டிருந்தது. ஐரோப்பாவின் பொருளாதார ஒருங்கிணைவு தொழிற்துறையில் புதிய பிரிவுகளைக் கட்டமைக்க சாதகமாக இருந்தது, அது நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் ஏனைய பழைய தொழிற்துறைகளின் வீழ்ச்சியை ஈடுகட்டுவதையும் விட மேலதிகமாக இருந்தது. வாகனத்துறை, விமானத்துறை, விண்வெளித்துறை, ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் புதிய நிறுவனங்களும் புதிய தொழிற்சாலைகளும் அரசாங்கத்தின் உதவியுடன் திறக்கப்பட்டன. பெரும்பாலும் பழைய தொழிற்துறை மையங்களுக்கு வெளியே அமைந்திருந்த அவை, 1968 பொது வேலைநிறுத்தத்தின் பலம்வாய்ந்த மையங்களாக இருந்தன.
நோர்மோன்டியில் இருந்த கோன் (Caen) நகரம் இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். அந்நகரில் வசித்தோரின் எண்ணிக்கை 1954 மற்றும் 1968க்குள் 90,000 இல் இருந்து 150,000 ஆக அதிகரித்தது, அதில் பாதிப்பேர் 30 வயதிற்கு குறைவானவர்கள். கார் உற்பத்தி நிறுவனமான ரெனோல்ட்டின் துணை நிறுவனம் சாவியம் (Saviem) சுமார் 3,000 தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் ஜனவரியில், அதாவது பொது வேலைநிறுத்தத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், தற்காலிகமாக ஆலையை ஆக்கிரமித்தும் பொலிஸூடன் மூர்க்கமாக சண்டைகளில் ஈடுபட்டு, வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர்.
தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு தீவிரமயமாதல் போக்கு இருந்தது. பழைய, கத்தோலிக்க தொழிற்சங்கம், CFTC (Confédération Française des Travailleurs Chrétiens) உடைந்தது, அதிலிருந்த பெரும்பான்மை அங்கத்தவர்கள் மதசார்பற்ற அடிப்படையில் CFDT ஐ (Confédération Française Démocratique du Travail) மறுஒழுங்கமைத்தனர். அது "வர்க்க போராட்டத்தை" ஏற்றுக் கொண்டதுடன், 1966 தொடக்கத்தில் CGT உடன் சேர்ந்து ஓர் ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்கும் உடன்பட்டது.
புதிய தொழிற்சாலைகள் ஸ்தாபிக்கப்பட்டமை, அதனுடன் சேர்ந்து கல்வித்துறையின் துடிப்பார்ந்த விரிவாக்கத்தைக் கொண்டு வந்தது. புதிய பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், திறன்சார் தொழிலாளர்கள் உடனடியாக அவசியப்பட்டனர். 1962 மற்றும் 1968க்கு இடையில் மட்டும், மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. பல்கலைக்கழகங்களில் நெரிசல் அதிகரித்தது, ஆனால் அவை தொழிற்சாலைகளைப் போலவே போதுமான வசதிகளை கொண்டிருக்காததுடன், பழமைவாத மனோபாவங்களைக் கொண்ட ஓர் பரம்பரை ஆட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.
மாணவ விடுதி அறைகளில் தங்கும் ஆண்களோ/பெண்களோ எதிர் பாலின மாணவ அறைகளுக்குச் செல்லக்கூடாது போன்ற ஏனைய விடயங்களோடு சேர்ந்து, மோசமான படிப்பிட நிலைமைகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஏதேச்சதிகார அணுகுமுறை ஆகியவற்றின் மீதான எதிர்ப்பு, மாணவர் தீவிரமயப்படுத்தலின் ஒரு முக்கிய காரணியாக இருந்தன. அவர்கள் விரைவிலேயே அதுபோன்ற பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுடன் இணைத்தனர். மே 1966 இல் வியட்நாம் போருக்கு எதிராக முதல் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓராண்டுக்குப் பின்னர், 2 ஜூன் 1967 இல், மாணவர் பென்னோ ஒனெசோர்க் (Benno Ohnesorg) பேர்லினில் பொலிஸால் சுட்டுக் கொல்லப்பட்டதால் உண்டான ஜேர்மன் மாணவர் போராட்டங்கள் பிரான்சிலும் எதிரொலித்தன.
அதே ஆண்டில் உலகளாவிய மந்தநிலைமையின் தாக்கங்கள் உணரப்பட்டு வந்ததுடன், அவை தொழிலாளர்கள் மீது தீவிரமயமடைவதற்கான தாக்கங்களை கொண்டிருந்தன. வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலையிட நிலைமைகள் ஆண்டுக்கணக்காக பொருளாதார அபிவிருத்தியின் வேகத்திலிருந்து பின்தங்கி வீழ்ச்சி அடைந்திருந்தன. ஊதியங்கள் குறைக்கப்பட்டு, வேலை நேரங்கள் நீடிக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்குள் தொழிலாளர்களுக்கு எவ்வித உரிமைகளும் இல்லாமல் இருந்தது. இப்போது வேலைவாய்ப்பின்மையும் வேலைபளுவும் அதிகரிக்க தொடங்கி இருந்தது. சுரங்கத்தொழில்துறை, எஃகுத்துறை, ஜவுளித்துறை மற்றும் கட்டுமானத்துறை தொழிற்சாலைகள் மந்தமடைந்தன.
கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே தொழிற்சங்கங்களின் தலைமை மேலேயிருந்து போராட்டங்களை ஒழுங்கமைத்தன. ஆனால் அடிமட்டத்திலிருந்து உள்ளூர் போராட்டங்கள் உருவானதுடன், அவை பொலிஸால் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கப்பட்டன. பெப்ரவரி 1967 இல் பெஸன்சோன் (Besançon) நகரில் ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனம் றோடியாசெற்றா (Rhodiacéta) இன் தொழிலாளர்களே, வேலை வெட்டுக்களுக்கு எதிராக போராடியும் சிறந்த வேலையிட நிலைமைகளைக் கோரியும், அவர்களது ஆலையை முதன்முதலில் ஆக்கிரமித்தனர்.
விவசாயிகளும் வீழ்ச்சியடைந்துவந்த வருவாய்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 1967 இல் பிரான்சின் மேற்கில், விவசாயிகளின் பல ஆர்ப்பாட்டங்கள் வீதிச் சண்டைகளாக வளர்ந்தன. அப்போதைய ஒரு பொலிஸ் அறிக்கையின்படி, அந்த விவசாயிகள் "எண்ணிக்கையில் அதிகமாக, ஆக்ரோஷமாக, ஒழுங்கமைக்கப்பட்டரீதியில், இரும்பு தகடுகள், உருளைக்கற்கள், உலோக குத்தூசிகள், போத்தல்கள் மற்றும் கூழாங்கற்கள் போன்ற பல வீசியெறியும் பொருட்களுடன் ஆயுதமேந்தி" இருந்தனர்.
1968 இன் தொடக்கத்தில், பிரான்ஸ் ஒப்பீட்டளவில் மேற்பார்வைக்கு அமைதியாக இருப்பதாக தெரிந்தது, ஆனால் அடியில் சமூக பதட்டங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. ஒட்டுமொத்த நாடும் ஒரு வெடி உலைக்கு ஒத்திருந்தது. மொத்தமும் வெடிப்பதற்கு ஏதேனும் ஒரு சிறிய தீப்பொறி போதுமானதாக இருந்தது. அந்த தீப்பொறி, மாணவர் போராட்டங்களால் வழங்கப்பட்டது.
மாணவர்கள் கிளர்ச்சியும் பொது வேலைநிறுத்தமும்
1960 களில் கட்டப்பட்ட கல்லூரிகளில் நாந்தேர் (Nanterre) பல்கலைக்கழகமும் ஒன்றாகும். பாரீஸில் இருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், முன்னர் ஆயுத படைகளுக்கு சொந்தமாக இருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த அது, 1964 இல் திறக்கப்பட்டது. அதைச் சுற்றி வறுமை-நிறைந்த அண்டைகுடியிருப்புகளும், “குடிசை சேரிகள்" (Bidonvilles) என்றழைக்கப்படுபவை மற்றும் தொழிற்சாலைகளும் நிறைந்திருந்தன. போராடிவந்த மாணவர்கள், ஜனவரி 8, 1968 இல், ஒரு புதிய நீச்சல்குளம் திறக்க அப்பகுதிக்கு வந்திருந்த இளைஞர் மந்திரி பிரான்சுவா மிஸ்ஸோஃப் (François Missoffe) உடன் மோதலில் இறங்கினர்.
அந்த சம்பவமே ஒப்பீட்டளவில் பெரிய முக்கியமானதல்ல என்றபோதினும், மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும், அத்துடன் பொலிஸின் தொடர்ச்சியான தலையீடுகளும், மோதலைத் தீவிரப்படுத்தியதுடன், நாந்தேரை ஓர் இயக்கத்திற்கு தொடக்க புள்ளியாக மாற்றியது. அது வேகமாக அந்நாடு முழுவதிலும் இருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கும் பரவியது. சிறந்த படிப்பிட நிலைமைகள், பல்கலைக்கழகங்களை அணுகுவதற்குரிய கட்டுப்பாடற்ற வசதி, மேலும் தனிநபர் சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம், கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை போன்ற கோரிக்கைகளும், அதனுடன் ஜனவரியின் இறுதியில் டெட் படையெடுப்பு (Tet Offensive) தொடங்கிய வியட்நாமுக்கு எதிரான அமெரிக்க போருக்கு எதிர்ப்பும் அதன் மையத்தில் இருந்தன.
கோன் (Caen) மற்றும் போர்தோ (Bordeaux) போன்ற சில நகரங்களில், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் உயர்நிலைபள்ளி மாணவர்களும் ஒன்றுசேர்ந்து வீதிகளில் இறங்கினர். ஒரு சீற்றங்கொண்ட வலதுசாரியால், பேர்லின் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜேர்மன் மாணவர் ரூடி டுட்ஸ்க்க (Rudi Dutschke) இற்கு ஆதரவாக ஏப்ரல் 12 அன்று, பாரீஸில் ஒரு ஒற்றுமையுணர்வை காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மார்ச் 22 இல், 142 மாணவர்கள் நாந்தேர் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தை ஆக்கிரமித்தனர். அந்நிர்வாகம் பல்கலைக்கழகத்தை முற்றிலுமாக ஒரு மாதத்திற்கு மூடுவதாக அறிவித்து தனது பதிலை காட்டியது. பின்னர் அந்த மோதல் பாரீஸின் இலத்தீன் வட்டார பகுதியில் (Quartier latin) அமைந்துள்ள பிரான்ஸின் மிகப்பழைய பல்கலைக்கழகமான சோர்போனுக்கு திசைதிரும்பியது. மே 3 இல், பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எவ்வாறு நடவடிக்கையை முன்னெடுப்பது என்பது குறித்து விவாதிக்க ஒன்றுகூடினர். இதற்கிடையே அதிதீவிர வலதுசாரி குழுக்கள் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன. பல்கலைக்கழக தலைவர் பொலிஸை அழைத்தார்; பொலிஸ் அந்த வளாகத்தை விடுவிக்கத் தொடங்கியதும், ஒரு மிகப்பெரிய, தன்னியல்பான ஆர்ப்பாட்டம் வெடித்தது. பொலிஸ் மிகவும் மூர்க்கமாக எதிர்நடவடிக்கை காட்டியது, மாணவர்களோ தடையரண்களை எழுப்பி விடையிறுப்பு காட்டினார்கள். அந்த இரவுக்குள், சுமார் நூற்றுக் கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டனர்; நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த கைது நடவடிக்கைகளுக்கு அடுத்த நாள், முழுமையாக பொலிஸ் அதிகாரிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் நீதிமன்றம், 13 மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதித்தது.
அரசாங்கமும் ஊடகங்களும், இலத்தீன் வட்டார பகுதியில் நடந்த வீதிப் போராட்டங்களை தீவிரமயப்படுத்தப்பட்ட குழுக்களின் மற்றும் தொல்லை கொடுப்பவர்களின் வேலையாக சித்தரிக்க முனைந்தன. கம்யூனிஸ்ட் கட்சியும் மாணவர்களுக்கு எதிரான கூச்சலில் இணைந்து கொண்டது. அதன் இரண்டாவது முக்கிய பிரமுகர் ஜோர்ஜ் மார்ஷே (Georges Marchais), இவர் பின்னர் அக்கட்சியில் பொது செயலாளராக ஆனார், இவர் கட்சி நாளிதழ் l’Humanité இன் முதல் பக்கத்தில் மாணவ “போலிப் புரட்சியாளர்களுக்கு” எதிராக ஒருதலைபட்சமாக தாக்கினார். "பாசிச ஆத்திரமூட்டுவோருக்கு" துணைபோவதாக அவர் அவர்களைக் குற்றஞ்சாட்டினார். அனைத்திற்கும் மேலாக மாணவர்கள் "துண்டறிக்கைகள் மற்றும் ஏனைய பிரச்சார அறிக்கைகளை அதிக எண்ணிக்கையில் ஆலை வாயில்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசித்த மாவட்டங்களிலும் வினியோகித்த" சம்பவத்தால், மார்ஷே நிலைகுலைந்து போனார். அவர் காழ்ப்புணர்ச்சியோடு பின்வருமாறு அறிவித்தார்: “இந்த பொய்புரட்சியாளர்கள் கோலிச ஆட்சி மற்றும் பெரிய முதலாளித்துவ ஏகபோகங்களின் நலன்களுக்கு புறநிலைரீதியாக சேவை செய்வதற்காக, அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.”
ஆனால் அதுபோன்ற வெறுப்பூட்டல்கள் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பப்பட்ட பொலிஸின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அறிந்து நாடே அதிர்ந்து போனது. சம்பவங்கள் இப்போது அவற்றின் சொந்த வேகத்தை எடுத்தன. கடந்து சென்ற ஒவ்வொரு நாளும் பாரீஸில் ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெரியளவில் வளர்ந்ததுடன், ஏனைய நகரங்களிலும் பரவின. அவை பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக திரும்பியதுடன், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரின. உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். மே 8 அன்று, மேற்கு பிரான்சில் முதல் ஒருநாள் வேலைநிறுத்தம் நடந்தது.
மே 10-11 இல் இருந்து இலத்தீன் வட்டார பகுதி, “தடையரண்களின் இரவாக” (“Nuit des barricades”) மாறியது. பல்கலைக்கழகம் இருந்த பகுதியில் பத்தாயிரக் கணக்கானவர்கள் அவர்களே தடையரண்களாக நின்றார்கள், பின்னர் அங்கே அதிகாலை இரண்டு மணியளவில் பொலிஸ் கண்ணீர் புகைகுண்டுகளைப் பிரயோகித்து தாக்கியது. அதில் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
அதற்கடுத்த நாள், பிரதம மந்திரி ஜோர்ஜ் பொம்பிடோ (Georges Pompidou), அப்போதுதான் ஈரான் அரசு விஜயத்திலிருந்து திரும்பியிருந்த அவர், சோர்போன் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுமென்றும், காவலில் வைக்கப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார். ஆனால் அவரது நடவடிக்கைகளாலும் கூட நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குமிகுந்த CGT உட்பட தொழிற்சங்கங்கள் பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக மே 13 இல் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன. அவை வேறு ஏதேனும் வகையில் நடந்து கொண்டால், போர்குணமிக்க தொழிலாளர்கள் மீதான கட்டுப்பாட்டை அவை இழக்க நேரிடுமென தொழிற்சங்கங்கள் அஞ்சின.
வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எண்ணற்ற நகரங்கள், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டன. பாரீஸில் மட்டும் 800,000 பேர் வீதிகளில் இறங்கினர். அரசியல் கோரிக்கைகள் முன்னுக்கு வந்தன. பலர் அரசாங்கம் அகற்றப்பட வேண்டுமெனக் கோரினர். மாலை வேளையில், சோர்போன் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்கள் மீண்டும் மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.
வேலைநிறுத்தங்களை ஒரு நாளோடு மட்டுப்படுத்தும் தொழிற்சங்கங்களின் திட்டம் நடைமுறையில் தோல்வி அடைந்தது. அதற்கடுத்த நாள், மே 14 அன்று, தொழிலாளர்கள் நான்ந்த் (Nantes) என்னும் நகரத்தில் இருந்த Sud-Aviation (சுட்-அவியேசன்) என்னும் விமான தயாரிப்பு ஆலையை ஆக்கிரமித்தனர். அந்த ஆலை ஒரு மாதம் தொழிலாளர்களது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, அதன் நிர்வாக கட்டிடத்தின் மீது செங்கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அதன் பிராந்திய இயக்குனர் டுவோஷெல் (Duvochel) 16 நாட்கள் ஆக்கிரமிப்பாளர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அந்நேரத்தில் Sud-Aviation இன் பொது மேலாளராக இருந்தவர் மொறிஸ் பப்போன் (Maurice Papon), இவர் ஒரு நாஜி ஒத்துழைப்பாளரும், போர் குற்றவாளியும் ஆவார். 1961 இல் அவர் பாரீஸின் பொலிஸ் தலைவராக இருந்தபோது, அல்ஜீரிய போருக்கு எதிரான போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் படுகொலைக்கு பொறுப்பாகி இருந்தார்.
ஏனைய ஆலைகளில் இருந்த தொழிலாளர்களும் Sud-Aviation ஐ முன்னுதாரணமாக கொண்டு பின்தொடர்ந்தனர். மே 15 இல் இருந்து மே 20 வரையில் நாடெங்கிலும் ஆக்கிரமிப்பு அலை பரவியது. எங்கெங்கிலும் செங்கொடிகள் பறக்கவிடப்பட்டன, பல ஆலைகளில் நிர்வாகம் சிறைபிடிக்கப்பட்டது. அந்நடவடிக்கைகள் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களைப் பாதித்தன, அதில் 1947 வேலைநிறுத்த அலையில் ஒரு மத்திய பாத்திரம் வகித்த பியான்கூர் இல் இருந்த பிரதான ரினோல்ட் ஆலையான அந்நாட்டின் மிகப்பெரிய தொழிற்சாலையும் உள்ளடங்கும்.
ஆரம்பத்தில் தொழிலாளர்கள் உடனடி கோரிக்கைகளைத்தான் உயர்த்தினர், அது இடத்திற்கு இடம் மாறுப்பட்டும் இருந்தது: நியாயமான ஊதியம், வேலை நேரத்தைக் குறைப்பது, பணிநீக்கங்கள் கூடாது, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு அதிக உரிமைகள் போன்றவை அதில் இருந்தன. ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அவற்றை சுற்றியிருந்த பகுதிகளில் உருவாகிய தொழிலாளர்களது குழுக்கள் மற்றும் நடவடிக்கை குழுக்களில் உள்ளூர் குடிவாசிகளும், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களும் வேலைநிறுத்த தொழிலாளர்கள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பணியாளர்களுடன் இணைந்து கொண்டனர். அந்த குழுக்கள் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க பொறுப்பேற்றதுடன், ஆழ்ந்த அரசியல் விவாத சபைகளை அபிவிருத்தி செய்தன. அது பெரியளவில் மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தி இருந்தது.
மே 20 இல் ஒரு பொது வேலைநிறுத்தத்துடன் ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பித்தது, ஆனால் தொழிற்சங்கங்களோ அல்லது ஏனைய எந்தவொரு அமைப்புகளோ அதுபோன்றவொரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன, உற்பத்தி மற்றும் போக்குவரத்து அமைப்புமுறை முடங்கியது. கலைஞர்கள், இதழாளர்கள், கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் கூட அந்த இயக்கத்தில் இணைந்தனர். பிரான்சின் 15 மில்லியன் பலமான தொழிலாளர் சக்தியில், பத்து மில்லியன் கணக்கானவர்கள் அந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் வந்த ஆய்வுகள் இந்த எண்ணிக்கையை சுமார் 7-9 மில்லியன் என்று குறைத்து திருத்தம் செய்தன, ஆனால் அப்படியிருந்தாலும் கூட அது பிரெஞ்சு வரலாற்றில் மிக பிரமாண்டமான பொது வேலைநிறுத்தமாக இருக்கிறது. 1936 பொது வேலைநிறுத்தத்தில் 3 மில்லியன் தொழிலாளர்கள் "மட்டுமே" பங்கெடுத்தனர், அதேவேளையில் 1947 பொது வேலைநிறுத்தத்தில் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர்.
மே 22 மற்றும் 30க்கு இடையே அந்த வேலைநிறுத்தம் அதன் உச்சத்தை எட்டியது, ஆனால் ஜூலை வரையில் அது நீடித்தது. 4 மில்லியனுக்கு அதிகமான தொழிலாளர்கள் மூன்று வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர், 2 மில்லியன் பேர் நான்கு வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரெஞ்சு தொழில் அமைச்சகத்தின் தகவல்படி, 1968 இல் வேலைநிறுத்தத்தின் காரணமாக மொத்தம் 150 மில்லியன் வேலை நாட்கள் இழக்கப்பட்டது. இதனோடு ஒப்பிடுகையில், எட்வார்ட் ஹீத் தலைமையிலான பழமைவாத கட்சி அரசாங்கத்தை கவிழ்த்த, 1974 பிரிட்டன் சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் மொத்தம் 14 மில்லியன் வேலை நாட்கள் இழக்கப்பட்டன.
மே 20 வாக்கில் அந்த அரசாங்கம் பெரிதும் நாட்டின் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. டு கோல் மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை —அதாவது "பத்து ஆண்டுகள் போதும்" என்ற முழக்கம்— ஊடுருவி பரந்து பரவியது. மே 24 அன்று, டு கோல் தேசத்திற்கு ஆற்றிய தொலைக்காட்சி வழி உரையுடன் நிலைமையின் மீது மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற முயன்றார். பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக உரிமைகள் வழங்க ஒரு வெகுஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர் உறுதியளித்தார். ஆனால் அவரது பிரசன்னம் அவரது திராணியற்றதன்மையைத்தான் எடுத்துக்காட்டியது. அவர் உரை முற்றிலும் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில், பிரான்சில் ஒரு புரட்சிகர சூழல் உருவாகி இருந்தது, வரலாற்றிலேயே இதைப்போன்ற ஒருசில முன்மாதிரிகள்தான் இருக்கின்றன. ஒரு தீர்க்கரமான தலைமையுடன், அந்த இயக்கமே டு கோல் மற்றும் அவரது ஐந்தாம் குடியரசின் அரசியல் தலைவிதிக்கு முடிவுகட்டியிருக்கும். அப்போதும் பாதுகாப்பு படைகள் ஆட்சிக்குப் பின்னால் நின்றிருந்த போதிலும் அவை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் எதிர்ப்பின் முன் நின்றுபிடித்திருந்திருக்க முடியாது. அந்த இயக்கத்தின் உயர்ந்துசென்ற அளவானது அக்கட்சி அணிகளில் இருந்தவர்களையே நிலைகுலைக்கும் அளவிற்கு பாதிப்பைக் கொண்டிருந்திருக்கும்.
2
PCF மற்றும் CGT இன் காட்டிக்கொடுப்பு
முதல் பகுதி மாணவர்களின் எழுச்சியின் பரிணாமத்திற்கும் மே மாத இறுதியில் உச்சம்பெற்றிருந்தஅவர்களின் பொது வேலைநிறுத்தத்திற்கும் அர்ப்பணித்திருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் CGT யும் நிலைமையைக் கட்டுப்படுத்த டு கோலுக்கு எப்படி உதவியது என்பதை இரண்டாம் பகுதி ஆராய்கிறது.
மே 20, 1968 இல் இருந்து பிரான்ஸ் ஸ்தம்பித்திருக்கிறது. ஊதியம் பெறுவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பொது வேலைநிறுத்தத்தில் பங்குபற்றி இருக்கின்றனர்; மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்திருக்கின்றனர். இந்நிலைமையில் டு கோல் மற்றும் அவரது அரசாங்கத்தின் விதி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (Parti communiste français—PCF) மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (Confederation Generale du Travail—CGT) கரங்களில் இருக்கிறது. அவர்கள், ஜனாதிபதி சார்லஸ் டு கோல் அரசியல்ரீதியாக உயிர் பிழைத்திருப்பதற்கும் மற்றும் ஐந்தாம் குடியரசினை காப்பாற்றுவதற்கும் பொறுப்புறுதி ஏற்றிருந்தனர். 1968 இல், அப்போதும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி சுமார் 350,000 அங்கத்தவர்களுடன் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக இருந்தது. அது 1967 இல் 22.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 1948 இல் 4 மில்லியனாக இருந்த CGT அங்கத்தவர்களின் எண்ணிக்கை 2.3 மில்லியனுக்கு குறைந்துவிட்ட போதினும், அது பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் மேலாளுமை கொண்ட தொழிற்சங்கமாக இருந்தது. அதன் பொது செயலாளர் ஜோர்ஜ் செகி (Georges Séguy) பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் குழுவில் [பொலிட்பீரோவில்] இடம் பெற்றிருந்தார்.
நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, மாணவர் போராட்டங்களை நோக்கி PCF உம் CGT உம் வெளிப்படையான வெறுப்புடன் தமது பிரதிபலிப்பை காட்டின. மாணவர்களை தொல்லை கொடுப்பவர்களாகவும் மற்றும் கோலிச முகவர்களாகவும் பரிகாசம் செய்த ஜோர்ஜ் மார்ஷே (Georges Marchais) இன் இழிவார்ந்த மே 3 ஆம் தேதி கட்டுரை ஒரு விதிவிலக்காக இருக்கவில்லை, மாறாக அதுவே நடைமுறை விதியாக மாறியிருந்தது. PCF இன் நாளிதழ் l’Humanité “இடது தீவிர போக்கினருக்கு" (gauchistes - கோசிஸ்ட்ஸ்) எதிரான வசைப்பேச்சுக்களில் சோர்வுறவில்லை, அதில் PCF இன் வலதுசாரி போக்கை எதிர்க்கின்ற ஒவ்வொருவரையும் உள்ளடக்குகிறது. தொழிலாளர்களும் மாணவர்களும் இணைந்த ஆர்ப்பாட்டங்களை CGT தொழிற்சங்கம் நிராகரிக்கிறது, தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்ற மாணவர்களை தொழிற்சாலைகளை நெருங்கவிடாது இருக்குமாறு அதன் அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்துகிறது.
தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளும் பொது வேலைநிறுத்தமும் CGT தொழிற்சங்கத்தின் விருப்பத்திற்கு எதிராகவும் மற்றும் அதன் கட்டுப்பாட்டிற்கு வெளியிலும் அபிவிருத்தி அடைந்திருந்தன. ஏனைய எல்லா ஆக்கிரமிப்புகளுக்கும் ஒரு முன்மாதிரியாக மாறிய Sud aviation ஆக்கிரமிப்பு, Force Ouvrière (FO) தொழிற்சங்கத்தின் முயற்சியால் எழுகிறது. அத்தொழிற்சங்கம், நான்ந்த் நகரத்தில் மிகக் குறைந்த ஊதியம் பெறுவோரின் குழுக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்ததுடன், ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியான OCI அங்கத்தவர், ஈவ் றொக்ரோன் (Yves Rocton) இன் வழிகாட்டுதலில் இருந்தது.
ஆக்கிரமிப்புகளை CGT தடுக்கவில்லை என்றபோதினும், அது அவற்றை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும், தொழில்துறை கோரிக்கைகளுடன் மட்டும் அவற்றை மட்டுப்படுத்தி வைக்கவும் முயல்கிறது. மத்திய வேலைநிறுத்த குழு ஒன்றை ஸ்தாபிப்பதை அது எதிர்ப்பதுடன், தொழிற்சாலைகளுக்கு வெளியிலிருந்த சக்திகளுடனான எந்த கூட்டுறவையும் அது நிராகரிக்கிறது. முன்னணி நிர்வாக அதிகாரிகளை தடுப்புக்காவலில் வைப்பதற்கு அனுமதிக்கவும் அது மறுக்கிறது.
மே 16 அன்று, அதன் போட்டி தொழிற்சங்கமான தொழிலாளர்களின் பிரெஞ்சு ஜனநாயக கூட்டமைப்பின் தலைமை (Confédération Française Démocratique du Travail – CFDT) ஓர் அறிக்கை வெளியிடுகிறது. அதன்மூலம் அது ஆக்கிரமிப்புகள் அலையின் மீது அதன் மேலாளுமையை பெற முயல்கிறது. CGTக்கு முரண்பட்ட வகையில், அது மாணவர் எழுச்சிகளை நோக்கி சாதகமான அணுகுமுறையை கொண்டிருந்தது. அவ்வெழுச்சிகளைக் குறித்து அது குறிப்பிடுகையில், "தங்களின் பொறுப்புணர்வுகளைச் செயல்படுத்த முடியாமலிருக்கும் ஒரு சமூகத்தின் நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்க கட்டமைப்புகளுக்கு எதிராக" அவ்வெழுச்சிகள் திரும்பி இருப்பதாக குறிப்பிடுகிறது. தொழிற்சாலைகளின் "சுய-நிர்வாகம்:” (autogestion) அதாவது “தொழிலக மற்றும் நிர்வாக எதேச்சதிகாரத்தை, சுய-நிர்வாக அடிப்படையிலான நிர்வாக கட்டமைப்புகளைக் கொண்டு பிரதியீடு செய்ய வேண்டுமென்ற" முழக்கங்களை CFDT முன்னெடுக்கிறது.
CGT தலைவர் ஜோர்ஜ் செகி நிதானமிழந்த ஆத்திரத்துடன் பிரதிபலிப்பை காட்டினார். அவர் CFDTஐ பகிரங்கமாக தாக்குகிறார். வளர்ந்துவரும் அந்த இயக்கத்திற்கு எவ்வித பொதுவான நோக்குநிலை வழங்கும் எந்தவொரு முயற்சியையும், அம்முயற்சி எந்தளவிற்கு மட்டுப்பட்டதாக இருந்தாலும் கூட, அதை அவர் நிராகரிக்கிறார். மிஷேல் றொக்காவின் (Michel Rocard) இடது-சீர்திருத்தவாத ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் (Parti Socialiste Unifié — PSU) செல்வாக்கின் கீழ் இருந்த CFDT இன் கோரிக்கையும், ஒரு முட்டுச்சந்திற்கு இட்டு செல்வதாக இருக்கிறது. அது முதலாளித்துவ ஆட்சியையும் சரி, முதலாளித்துவ சந்தையின் மேலாதிக்கத்தையும் சரி கேள்விக்குட்படுத்தவில்லை.
இறுதியாக மே 25 அன்று, சுற்றி வளைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நேரடியாக உதவ CGT அவசரம் காட்டுகிறது. மாலை 3 மணிக்கு, தொழிற்சங்கங்களின், முதலாளிகள் அமைப்புகளின் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் Rue de Grenelle (கிறெனெல் வீதி) இல் உள்ள தொழிற்துறை அமைச்சகத்தில் ஒன்றுகூடுகின்றனர். எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு துரிதமாக தொழிற்சாலைகளில் ஒழுங்கைக் கொண்டு வருவதே அவர்களது நோக்கமாக இருக்கிறது. அதில் எல்லா தொழிற்சங்கங்களும் பிரதிநிதித்துவம் செய்திருக்கின்ற போதினும், பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய பிரத்தியேகமாக இரண்டு நபர்களால், பிரதம மந்திரி ஜோர்ஜ் பொம்பிடு (Georges Pompidou) மற்றும் CGT தலைவர் ஜோர்ஜ் செகி இனால் நடத்தப்பட்டன.
பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கோரியவாறு வெவ்வேறு ஊதிய தரம்பிரித்தலுக்கு இடையிலிருந்த இடைவெளியைக் குறைக்காமல், செகி ஒரு சீரான ஊதிய உயர்வை விரும்புகிறார். அதனுடன் சேர்ந்து, தொழிற்சங்கங்களின் அந்தஸ்து பலப்படுத்தப்பட வேண்டுமென்கிறார். இந்த பிரச்சினையில் முதலாளிமார்களின் அமைப்புகளுக்கு எதிராக பொம்பிடு இன் ஆதரவு அவருக்கு இருக்கிறது. “போதிய பயிற்சியும், உரிய செல்வாக்கும் உள்ள தொழிற்சங்கங்களின் மூலமாக தொழிலாள வர்க்கத்தை ஒருங்கிணைக்க அரசாங்கம் உடன்படுகிறது, இது தொழிற்சாலையை சுமூகமாக நடத்த உதவும்,” என்பது தான் கூட்டத்தின் முடிவில் சூத்திரப்படுத்தப்பட்ட குறிப்புகளாக இருக்கின்றன.
பேச்சுவார்த்தை மேடையில் அரசாங்கத்தின் தரப்பில் ஜோர்ஜ் பொம்பிடு உடன் அமர்ந்திருந்த மற்றவர்கள், எதிர்கால ஜனாதிபதியாக ஆகவிருந்த ஜாக் சிராக் மற்றும் எதிர்கால பிரதம மந்திரியாக ஆகவிருந்த எடுவார்ட் பலடூர் (Edouard Balladur) ஆகியோர் ஆவர். தற்போது பதவியிலிருக்கும் நிக்கோலா சார்க்கோசி போலவே, அவர்கள் அனைவருமே அந்நேரத்தில் அந்த உடன்படிக்கையுடனும், தொழிலாள வர்க்கத்தை "ஒருங்கிணைக்க" தொழிற்சங்கங்களை உபயோகிப்பது என்பதிலும் இணங்கி இருந்தார்கள். அப்போதிருந்து “கிறெனெல்” (Grenelle) என்ற சொற்பிரயோகமே, அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான அதுபோன்ற உயர்மட்ட மாநாடுகளுக்கான ஒரு இணைச்சொல்லாக மாறியுள்ளது.
அப்பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர்கள் வெறும் இரண்டே நாட்களில் உடன்பாட்டிற்கு வருகின்றனர். மே 27, திங்களன்று அதிகாலை, அவர்கள் கிறெனெல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அது ஏழு சதவீத ஊதிய உயர்வும், மணிக்கு 2.22 பிராங்கில் இருந்து 3 பிராங்காக குறைந்தபட்ச கூலி உயர்வும், தொழிற்சாலைகளில் சட்டபூர்வமாக தொழிற்சங்கங்களை அமைப்பதும் அதில் உள்ளடங்கி இருந்தது. படிப்படியாக ஊதியங்களை உயர்த்துவது, வேலைநிறுத்த நாட்களுக்கும் முழு ஊதியம், சமூக பாதுகாப்புக்கு கவலையளிக்கும் அரசாங்க நெறிமுறைகளை திரும்ப பெறுவது ஆகிய அதன் பிரதான கோரிக்கைகளை CGT கைவிடுகிறது. PCF மற்றும் CGT உடன் எவ்விதமான முன் உடன்பாடும் இல்லாமல், றொக்காவின் PSU, CFDT மற்றும் UNEF (பிரான்ஸ் தேசிய மாணவர் சங்கம்—Union Nationale des Étudiants de France) ஆகியவை ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடுகின்றன என்பதை அறிந்ததும், செகி உடனடியாக ஓர் உடன்படிக்கைக்கு அழுத்தமளித்து, அவர் ஜாக் சிராக் உடன் நேருக்கு-நேரான ஒரு கலந்துரையாடலில் அதனை அதிகாலையில் உத்தரவாதம் செய்கின்றார்.
காலை 7:30 மணிக்கு, செகி உம் மற்றும் பொம்பிடு உம் பத்திரிகையாளர் கூட்டத்தின் முன்தோன்றி, கிறெனெல் உடன்படிக்கையை அறிவிக்கின்றனர். செகி விவரித்தார்: “தாமதமின்றி வேலையைத் தொடங்கலாம்". ரினோல்ட் ஆலை தொழிலாளர்களிடையே அந்த உடன்படிக்கைக்கு சம்மதம் பெற, அவர் தனிப்பட்டரீதியில் பியான்கூர் செல்கிறார். ஆனால் அந்த உடன்படிக்கையை ஓர் ஆத்திரமூட்டலாக கருதிய அவர்கள், ஒருசில பிராங்குகளுக்காக விட்டுகொடுக்க தயாராக இல்லை. செகி உடன் சர்ச்சை ஏற்படுகிறது, கூட்டான கூச்சல்களை அவர் முகங்கொடுக்கிறார். அச்செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவுகிறது, யாருமே போராட்டத்தை நிறுத்துவதற்கு நாட்டம் கொள்ளவில்லை. அதற்கடுத்த நாள் Le Monde இன் தலைப்பு செய்தி பின்வருமாறு வெளியாகிறது: “வேலைநிறுத்தகாரர்களை மீண்டும் வேலையைத் தொடருமாறு செய்ய CGT ஆல் முடியவில்லை" (La CGT n’a pu convaincre les grévistes de reprendre le travail).
அதிகாரம் பற்றிய பிரச்சினை முன்வைக்கப்படுகிறது
அரசியல் நெருக்கடி இப்போது அதன் உச்சநிலையை எட்டுகிறது. ஒட்டுமொத்த நாடே பெரும் குழப்பத்தில் இருக்கிறது. அரசாங்கம் அதன் அதிகாரத்தை இழந்துவிட்டிருப்பதுடன், தொழிலாளர்கள் மீதான அதன் கட்டுப்பாட்டை CGT இழந்திருந்தது. நாட்டின் மீது யார் அதிகாரம் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இப்போது பகிரங்கமாக முன் வந்திருக்கிறது என்பதில் அங்கே யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை.
அதுவரையில் மிகுந்த எச்சரிக்கையோடு பின்புலத்தில் இருந்துவந்த சமூக ஜனநாயகவாதிகள், இப்போது அவர்களது குரலை உயர்த்துகின்றனர். டு கோல் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியானதால், ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்திற்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. பிரான்சுவா மித்திரோன் மே 28 அன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டுகிறார், அது தொலைக்காட்சியில் விரிவாக ஒளிபரப்பப்படுகிறது. அவர் ஓர் இடைக்கால அரசாங்கத்திற்கும், அத்துடன் புதிய ஜனாதிபதி தேர்தல்களுக்கும் அவரது ஆதரவை அறிவிக்கிறார். அதில் அவரேயொரு வேட்பாளராக நிற்க விரும்புவதாகவும் அறிவிக்கிறார்.
நான்காம் குடியரசில் தங்களைத்தாங்களே மதிப்பிழக்குமாறு செய்து கொண்டதும், எவ்வித பாரிய அடித்தளமும் இல்லாததுமாக இருந்த தாராளவாத மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளின் ஒரு கூட்டணியான ஜனநாயக மற்றும் சோசலிச இடதின் கூட்டமைப்பிற்கு (Fédération de la Gauche démocrate et socialiste - FGDS) மித்திரோன் தலைமை வகித்து வந்தார். 1965 இல், ஜனாதிபதி தேர்தல்களில் அவர் டு கோல் ஐ எதிர்த்து நின்றதுடன், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியாலும் ஆதரிக்கப்பட்டார்.
PSU, CFDT மற்றும் UNEF மாணவர் கூட்டமைப்பு ஆகியவை பியர் மொன்டெஸ்-பிரான்ஸின் (Pierre Mendès-France) மீது நம்பிக்கை வைத்திருந்தன. முற்றிலும் ஒரு முதலாளித்துவ வர்க்க கட்சியான தீவிரவாதப்போக்கு சோசலிஸ்டுகளின் (Radical Socialists) ஓர் அங்கத்தவரான மொன்டெஸ்-பிரான்ஸ், 1936 இல், லெயோன் புளூம் (Léon Blum) இன் மக்கள் முன்னணி அரசாங்கத்தில் இணைந்திருந்தவராவார். போரின் போது, அவர் ஜெனரால் டு கோல் ஐ ஆதரித்தார். நான்காம் குடியரசில், 1954 இல் அரசு தலைவராக இருந்து வியட்நாமிலிருந்து பிரெஞ்சு துருப்புகளைத் திரும்ப பெறுவதை அவர் ஒழுங்கமைத்ததற்காக, வலதுசாரிகளின் வெறுப்பை சம்பாதித்திருந்தார். 1968 இல் அவர் PSUக்கு நெருக்கமாக இருந்தார்.
மொன்டெஸ்-பிரான்ஸ் இன் முறைப்படி அறிவிக்கப்பட்ட மேற்கை நோக்கிய நிலைநோக்கு என்பது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அவரை ஒரு பரம-எதிரியாக கருதுகிறது என்பதை அர்த்தப்படுத்தியது. அவர், பாரீஸின் சார்லெட்டி மைதானத்தில் PSU, CFDT மற்றும் UNEF இன் ஒரு பெரிய கூட்டத்தில் தோன்றிய போது, மே 27 இல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகங்களில் எச்சரிக்கை மணி பலமாக ஒலிக்கிறது. மித்திரோனும் மொன்டெஸ்-பிரான்ஸ் உம் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் எவ்வித செல்வாக்கும் இல்லாத ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கிவிடுவார்களோ என்று அது அஞ்சுகிறது.
மே 29 இல், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் CGT உம் அவற்றின் சொந்த ஆர்ப்பாட்டங்களைப் பாரீஸில் ஒழுங்கமைக்கின்றன; பல நூறு ஆயிரக் கணக்கானவர்கள் "ஒரு மக்கள் அரசாங்கத்திற்காக" என்ற முழக்கத்தின் கீழ் தலைநகரில் அணிவகுக்கின்றனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரமான ரீதியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கனவிலும் நினைக்கவில்லை. ஒரு "மக்கள் அரசாங்கத்திற்கான" அதன் கோரிக்கையானது, ஐந்தாம் குடியரசு அமைப்புகளுக்கு சவால்விடுக்காமல், தொழிற்சாலைகளில் இருந்த புரட்சிகர உணர்வுகளைச் சாந்தப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. “ஜனநாயக மாற்றமே” அவசியமென வலியுறுத்தியதன் மூலமாக, புரட்சிகர நடவடிக்கையை நிராகரிப்பதை CGT தெளிவுபடுத்தியது.
பாரீஸின் தலைமை பொலிஸ் அதிகாரி பின்னர் அறிவிக்கையில், CGT-PCF ஆர்ப்பாட்டம் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லையென்றும், ஒரு பாரம்பரிய, கட்டுப்பாட்டிற்குட்பட்ட தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தையே அவர் எதிர்பார்ப்பதாகவும், அது தான் நடக்கிறது என்றும் அவர் அறிவித்தார். ஆனால் நிலைமை, ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தவர்களின் கீழ் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இராணுவ துணைப்படை துருப்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், பாரீஸ் புறநகர் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக டாங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
மே 30 அன்று, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு நிலைமையை விவாதிக்க ஒன்று கூடியது. அதிகாரத்தை ஏற்க அக்கட்சிக்கு எவ்வித விருப்பமும் இல்லை என்பதையும், நிலவும் ஒழுங்கமைப்பைப் பேணுவதில் தான் அது முழுமையாக அக்கறை கொண்டிருக்கிறது என்பதையும் அக்கூட்டத்தின் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா உறுதி செய்கிறது. ஆறு மாதங்களுக்குப் பின்னர், மத்திய குழுவின் அறிக்கை ஒன்று, இதே மனோபாவத்தை அதன் வார்த்தைகளிலேயே நியாயப்படுத்துகிறது: “சக்திகளின் சமநிலை, தொழிலாள வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் கடந்த மே மாதம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை அனுமதிக்கவில்லை" என அது அறிவித்தது.
மே 30 ஆம் தேதி கூட்டத்தில், பொது செயலாளர் எமில் வால்டெக்-றொஷே (Émile Waldeck-Rochet) அறிவிக்கையில், பிரான்சுவா மித்திரோன் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு போதிய செல்வாக்கை வழங்கினால், அவரின் கீழ் ஓர் இடைக்கால அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கு தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். அதுபோன்றவொரு அரசாங்கம் மூன்று பணிகளை நிறைவேற்ற வேண்டுமென அவர் கூறுகிறார்: அரசு மீண்டும் செயல்படுமாறு செய்ய வேண்டும், வேலைநிறுத்தக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விடையிறுக்க வேண்டும், மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்த வேண்டும் என்பனவாகும்.
எவ்வாறிருந்தபோதினும் உடனடியாக நாடாளுமன்ற தேர்தல்களை நடத்துவது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு விருப்பமான தேர்வாக உள்ளது. கட்சி செய்தி தொடர்பாளர் பொதுவான மனோபாவத்தை தொகுத்தளித்தார்: “ஒரு பொது தேர்தலில் இருந்து மட்டுந்தான் நம்மால் இலாபமடைய முடியும்,” என்றார்.
அந்நாளின் நிலைமை கத்தி முனையில் நிற்பதாக உள்ளது. ஜெனரால் டு கோல் அதற்கு முந்தைய மாலை சுவடு தெரியாமல் தலைமறைவாகி இருந்தார். பாடன்-பாடனுக்கு சென்ற அவர், அங்கே ஜேர்மனியில் இருந்த பிரெஞ்சு துருப்புகளின் தளபதி ஜெனரால் மஸ்சு (General Massu) உடன் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறார். மஸ்சு அல்ஜீரிய போரில் அவர் வகித்த பாத்திரத்திற்காக இழிபெயரெடுத்தவர். டு கோல் தப்பிப்பதற்கு திட்டமிட்டாரா அல்லது வெறுமனே அவரிடம் ஆதரவு கோரினாரா என்பது இன்று வரையில் சர்ச்சைக்குரியதாக உள்ளது. பின்னர் அவரது நினைவுக்குறிப்புகளில் மஸ்சு குறிப்பிடுகையில், அவர் டு கோலை பாரீஸிற்கு திரும்பி சென்று, பிரெஞ்சு மக்களுக்கு பகிரங்கமாக எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.
பின்னர் மே 30 அன்று மதியம், டு கோல் வானொலியில் ஓர் உரை நிகழ்த்துகிறார். குடியரசு ஆபத்தில் இருப்பதாகவும், அது பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். அவர் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்து, ஜூன் 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்தார். அதே நேரத்தில், அந்த ஜெனராலின் பல நூறு ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள், பிரெஞ்சு தேசிய நிறத்தின் கீழ் சாம்ப்ஸ் எலிசே இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அதே நாள் மாலை, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி டு கோல் இன் முடிவை ஆதரித்து, அதன் சொந்த கொள்கையின் விளைவாக கிடைத்த வெற்றியாக, அதை முன்வைக்கிறது. அது ஐந்தாம் குடியரசின் சட்டபூர்வ கட்டமைப்பிற்கு அதன் ஆதரவை வழங்கியதோடு, “செங்கொடியினதும் அந்நாட்டின் மூவண்ண கொடியினதும்" ஐக்கியத்தை பிரகடனம் செய்து, அது தன்னைத்தானே கோலிஸ்ட்டுகளுக்கு உகந்த கட்சியாக காட்டிக்கொள்ள முனைகிறது. மே 31 அன்று, CGT தலைவர் ஜோர்ஜ் செகி தேர்தல்களுக்கு அவரது உடன்பாட்டை அறிவிக்கிறார். அவர், “தேர்தல்கள் நடத்துவதை CGT தடுக்காது,” என்று கூறுகிறார், அது நாட்டை பீடித்துள்ள இயக்கமற்றநிலை, பொது வேலைநிறுத்தத்தை கைவிடும் அளவிற்குசெல்லும் என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறது. “தொழிலாளர்களின் நலனுக்காகவே, அவர்களது மாற்றத்திற்கான விருப்பத்தை அது வெளிப்படுத்துவதாக,” அவர் தெரிவிக்கிறார்.
தேர்தல் தேதிக்கு முன்னதாக வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முடிவுக்குக் கொண்டு வர, இப்போது CGT அதன் மொத்த சக்தியையும் பிரயோகிக்கிறது, இது ஏதோவிதத்தில் அதற்கு மிகவும் சிரமத்துடன் மட்டுமே செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஆனால் படிப்படியாக வேலைநிறுத்த முனை சிதைக்கப்படுகிறது. தொழிற்சாலை உடன்படிக்கைகள் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புகின்றனர், ஆனால் மிகவும் போர்குணமிக்க பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன, பொலிஸ் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற தொடங்குகின்றன. ஜூன் 16 அன்று, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ரினோல்ட்-பியான்கூர் தொழிலாளர்கள் வேலையை தொடங்குகிறார்கள்; அதே நாளில்தான் சோர்போன் பல்கலைக்கழகத்திலிருந்தும் பின்வாங்கப்படுகின்றது.
எவ்வாறிருந்த போதினும், இறுதி வேலைநிறுத்தங்களும் மற்றும் ஆக்கிரமிப்புகளும் முடிவுக்கு வருவதற்கு அப்போதும் வாரக்கணக்காகிறது. பல மாதங்களுக்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட உண்மையில் நாடு அமைதி நிலைமைக்குத் திரும்பி இருக்கவில்லை. ஆனால் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டிருந்தது. CGT இன் வரலாற்றை எழுதிய ஓர் ஆசிரியர் மிஷேல் ட்ரேஃப்யூஸ் (Michel Dreyfus), பொது வேலைநிறுத்தத்தின் உச்சக்கட்டத்தில் மிகவும் செல்வாக்குமிகுந்த தொழிற்சங்கங்களின் மனோபாவம் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்: “மே 1968 இல், சக்திகளின் சமநிலை அதற்கு சாதகமாக தென்பட்டபோதும், CGT வேண்டுமென்றே அரசுடன் மோதலுக்கு வருவதை தவிர்த்துக் கொண்டது.”
வலதுசாரி எதிர்தாக்குதல்
மே முதல் வாரங்களில், வலதுசாரி அரசியல் முற்றுமுழுதாக முடமாகி இருந்ததுடன், தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தன. இப்போது அவை படிப்படையாக அதன் செயல்பாடுகளை மற்றும் அதன் தன்னம்பிக்கையை மீட்டுக் கொண்டு வருகின்றன, இதற்கு PCF மற்றும் CGTக்கு தான் நன்றி கூற வேண்டும். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது, வீதிகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து போராட்டங்கள் வாக்குப் பெட்டிகளை நோக்கி மாறுகின்றன, இது டு கோல் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஆதாயமளிக்கிறது. இப்போது அவர்கள், “மௌனமான பெரும்பான்மையினரின்" அச்சங்களுக்கு முறையிட்டு, சமூகத்தின் மிகவும் முனைப்பற்ற மற்றும் பின்தங்கிய பிரிவுகளை அரங்கத்திற்குள் கொண்டு வரக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள்.
இந்த திசையில் முதல்முயற்சிகளை ஏற்கனவே மே மாதத்தில் பார்க்க முடிந்தது. அரசாங்கம் அரசு-கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் மீது (இந்த சமயத்தில் அங்கே தனியார் ஒளிபரப்பாளர்கள் இருக்கவில்லை) கடுமையான தணிக்கை நடவடிக்கைகளை அமுலாக்குகிறது. மே 19 இல், அது எதிர்கட்சிகளுக்கு பயன்படக்கூடிய தகவல்களை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சிக்கு தடைவிதிக்கிறது. பிரான்சிஸிற்குள் ஒளிபரப்பைப் பெறக்கூடியதாக இருந்த, வெளிநாட்டு ஒளிபரப்பு அமைப்புகளின் இதழாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து நேரடியான செய்திகளை அறிவித்து வந்த நிலையில், மே 23 இல், அது அவர்களால் பயன்படுத்தப்பட்ட அலைவரிசைகளை நிறுத்துகிறது.
மே 22 இல், அரசாங்கம் டானியல் கோன்-பென்டிற் (Daniel Cohn-Bendit) இன் குடியிருப்பு அனுமதியைத் திரும்ப பெறுகிறது. ஜேர்மன் கடவுச்சீட்டைக் கொண்டிருந்த இந்த மாணவர் தலைவர், நாஜிக்களிடமிருந்து தப்பிக்க பிரான்சிற்கு தப்பியோடி வந்த ஒரு யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். நாஜி ஆட்சி வெறும் 23 ஆண்டுகளுக்கு முன்னர்தான் முடிவுக்கு வந்திருந்தது, இந்நடவடிக்கையின் அடையாளமயப்படுத்தல்கள் எதிலும் காணக்கூடியதாக இருந்தது. அங்கே பாரிய கோபம் நிலவியது, மாணவர் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக மாறியிருக்கின்றன. மீண்டும் அங்கே வன்முறையான வீதி போராட்டங்கள் நிகழ்கின்றன. மாணவர்களை CGT தொடர்ந்து தனிமைப்படுத்தி, அவர்களுடன் எந்தவித கூட்டு நடவடிக்கையையும் நிராகரிக்கின்ற போதினும், மாணவர்கள் பல சமயங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பில்லாமலேயே நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்—அது நிலைமையைத் தீவிரப்படுத்த மட்டுமே சேவை செய்கிறது.
மே 24 அன்று, வன்முறை போராட்டங்கள் இருவரை பலி வாங்குகிறது. லியோனில், ஒரு பொலிஸ்காரர் உயிரிழக்கிறார், பாரீஸில் ஓர் இளம் ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்படுகிறார். அந்த அதிர்ச்சி பிரமாண்டமாக உள்ளது, ஊடகங்களோ "மாணவர் வன்முறை குற்றவாளிகளுக்கு" எதிராக காதைப் பிளக்கும் அளவிற்கு பிரச்சாரமிடத் தொடங்குகின்றன.
சில கோலிஸ்ட்டுகள், குடியரசின் பாதுகாப்பிற்காக குழு (CDR) ஒன்றை உருவாக்குகின்றனர், அது அல்ஜீரிய பிரெஞ்சு பின்னணிகளில் இருக்கும் அதிவலது உட்கூறுகளுடன் ஒத்துழைக்கிறது. அல்ஜீரியாவிற்கு கோல் சுதந்திரம் வழங்கியதால், அல்ஜீரிய பிரெஞ்சு பின்னணியில் உள்ளவர்கள் கோல் ஐ ஒரு துரோகியாகவே கருதுகின்றனர், ஆனால் புரட்சியின் ஆபத்து வெவ்வேறு வலதுசாரி கன்னைகளை ஐக்கியப்படுத்த சேவை செய்கிறது. மே 30 இல், "அல்ஜீரியா பிரெஞ்சினுடையது" (Algérie française) என்ற கூச்சல்கள் சாம்ப்ஸ் எலிசே இன் கோலிச அடையாளங்களுடன் இணைகின்றன. டு கோலுக்கு ஆதரவான முதல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் கூட்டாக தயாரிக்கப்படுகிறது. 1961 இல் அவருக்கு எதிராக அல்ஜீரியாவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்த ஜெனரல் ராவுல் சலோன் (Raoul Salan) மற்றும் அவருடன் OAS பயங்கரவாத அமைப்பின் ஏனைய 10 அங்கத்தவர்களையும், ஜூன் 17 இல், டு கோல் மன்னிப்பளித்ததன் மூலம் தனது நன்றிக்கடனை தீர்த்துக்கொள்கிறார்.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும், அரசு ஒடுக்குமுறை அங்கங்கள் மிகவும் சுய-நம்பிக்கையோடு செயல்படத் தொடங்குகின்றன. மே 31 இல், உள்துறை மந்திரி கிறிஸ்தியான் ஃபுஷே (Christian Fouchet) மாற்றப்பட்டு, றேமொன் மார்செலான் (Raymond Marcellin) நியமிக்கப்படுகிறார். "இறுதியில், ஒரு உண்மையான ஃபுஷே” வந்துள்ளார் என்ற வார்த்தைகளோடு டு கோல் அவரை வரவேற்றார் —அது ஜோசப் ஃபுஷே (Joseph Fouché) ஐ குறித்த ஒரு குறிப்பாகும், அவர் 1789 பிரெஞ்சு புரட்சியின் தோல்விக்குப் பின்னர், பரவலாக பீதியூட்டிய ஒடுக்குமுறை எந்திரம் ஒன்றை உருவாக்கி, நெப்போலிய இயக்குனரகத்தின் கீழ் பொலிஸ்துறை மந்திரியாக இருந்தவராவார்.
மார்செலான் மிக மிக கடுமையாக செயல்படுகிறார். அவர் நியமிக்கப்பட்ட அன்றைய நாளிலேயே, எரிபொருள் வினியோகங்கள் நடப்பதற்கும், போக்குவரத்து மீண்டும் செயல்படுவதற்குமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே வீதிகளிலிருந்து மறியல் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். ஜூன் 12 அன்று, தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து வீதி ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதே நாளில், அவர் எல்லா புரட்சிகர அமைப்புகளையும் கலைக்க உத்தரவிடுகிறார், அத்துடன் இருநூறு "சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்கள்" நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அந்த தடை, ட்ரொட்ஸ்கிச OCI, அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள், அலென் கிறிவின் (Alain Krivine) இன் JCR (புரட்சிகர இளைஞர் கம்யூனிஸ்ட் — Jeunesses communistes révolutionnaires), டானியல் கோன்-பென்டிற் இன் அராஜகவாத "மார்ச் 22 இயக்கம்", அத்துடன் மாவோயிச அமைப்புகளையும் பாதிக்கிறது. ஒவ்வொரு அங்கத்தவரையும் கண்காணித்து அவர்களை குறித்து தகவல் சேகரிக்குமாறு உள்நாட்டு இரகசிய சேவைக்கு (Renseignements généraux) உத்தரவிடப்படுகிறது.
மார்செலான் ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்கிறார், இந்த காலகட்டத்தில் அவரால் பொலிஸ், இரகசிய சேவை மற்றும் சிறப்பு கலக ஒடுப்பு பொலிஸ் (CRS) ஆகியவற்றை உயர்ந்தளவில் தயார் செய்யப்பட்ட உள்நாட்டு போர் எந்திரங்களாக அபிவிருத்தி செய்ய முடிகிறது. அவர் பொலிஸ் படைகளுக்கான செலவுகளை இரட்டிப்பாக்குவதுடன், அதை நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களுடன் ஆயுதமேந்தச் செய்து, 20,000 புதிய பொலிஸ் அதிகாரிகளையும் நியமிக்கிறார்.
கோலிஸ்ட்டுகள் அச்சத்தினை அடித்தளமாக்கொண்ட ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்துகின்றனர். அவர்கள் ஓர் உள்நாட்டு போர் அபாயத்தை உயர்த்திக்காட்டுகின்றனர், ஒரு சர்வாதிபத்தியத்தை குறித்தும், கம்யூனிஸ்ட் அதிகாரத்தை கைப்பற்றுவதைக் குறித்தும் எச்சரிக்கின்றனர், குடியரசு மற்றும் தேசத்தின் ஐக்கியம் குறித்து பாசாங்கு செய்கின்றனர். எதிர்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இந்த கூச்சலில் இணைந்து கொள்கின்றன. “இடது தீவிர போக்கினருக்கு" எதிராக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான கிளர்ச்சிகள், வலதுசாரிகளின் பிரச்சார ஆலைகளில் அரைத்த அதே மாவை அரைக்கிறது. தேர்தலுக்கு முன்னர் தொலைக்காட்சியில் பிரான்சுவா மித்திரோன் இவ்வாறு எதிர்ப்புரை வழங்குகிறார்: “தாக்குதல்களுக்கு இடையிலும், நாங்கள், முதல் நாளிலிருந்து, தந்தை நாட்டின் ஐக்கியம் மற்றும் சமாதானத்தைப் பேணுவதைக் குறித்து மட்டுமே சிந்தித்து வந்துள்ளோம்,” என்கிறார்.
இந்த தேர்தல் உத்தியோகபூர்வ இடதிற்கு ஒரு பெருந்தோல்வியாக இருக்கிறது. கோலிஸ்ட்டுகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் 46 சதவீத வாக்குகள் பெறுகின்றனர், மிகப் பலமான எதிர்கட்சியான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, அதற்கு ஓராண்டுக்கு முன்னர் பெற்றதை விடவும் மிகவும் குறைவாக, 20 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுகிறது. இடங்களின் ஒதுக்கீடு என்று வரும்போது முடிவு இன்னும் படுமோசமாக இருக்கும் என்பதை பெரும்பான்மை தேர்தல் உரிமை முறை (first-past-the-post) அர்த்தப்படுத்துகிறது. ஐந்தில் நான்கு பங்கு இடங்கள் வலதுசாரி முதலாளித்துவ வர்க்க கட்சிகளுக்கு செல்கின்றன — 59 சதவீதம் கோலிஸ்ட்டுகளுக்கும், 13 சதவீதம் தாராளவாதிகளுக்கும், 7 சதவீதம் மத்திய கட்சிகளுக்கும் செல்கின்றன. மித்திரோனின் ஜனநாயக மற்றும் சோசலிச இடது கூட்டமைப்பு (Fédération de la gauche démocrate et socialiste – FGDS) 12 சதவீத இடங்களைப் பெறுகிறது, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 7 சதவீதம் மட்டும் பெறுகிறது. அனைத்திற்கும் மேலாக, பழமைவாத கிராமப்புற பகுதிகளில் ஒரு பாரிய பெரும்பான்மை வலதிற்கு வாக்களிக்கிறது; மிகவும் செயலூக்கத்துடன் இருந்த உட்கூறுகளில் பலருக்கு —அதாவது உயர்நிலை பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளம் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்வோர்களுக்கு— அப்போது வாக்களிக்கும் உரிமை இல்லை. உத்தியோகபூர்வ வாக்களிக்கும் வயது 21 ஆகும், அவசர அவசரமாக அழைப்புவிடுக்கப்பட்ட தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலும் புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
புரட்சிகர நெருக்கடி தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முதலாளித்துவ வர்க்கம் மீண்டுமொருமுறை அதிகாரத்தில் அதன் பிடியை மீளமைத்து கொள்கிறது. இப்போது டு கோல் ஐ அமைதியாக பிரதியீடு செய்யவும் மற்றும் அதன் ஆட்சியை பாதுகாக்க கூடிய மற்றும் வரவிருக்கின்ற தசாப்தங்களில் தொழிலாள வர்க்கத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடிய புதிய அரசியல் பொறிமுறையான மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சியை அபிவிருத்தி செய்யவும் அதற்கு கால அவகாசம் கிடைக்கிறது. இதற்காக அது ஒரு பொருளாதார விலை கொடுக்க வேண்டி உள்ளது. இறுதியாக கிறெனெல் உடன்படிக்கை நடைமுறைக்கு வருகிறது, உழைக்கும் மக்கள் அதையடுத்து வரவிருந்த ஆண்டுகளில் அவர்களது வாழ்க்கைத் தரங்களில் ஒரு தெளிவான மேம்பாட்டைக் காண்கிறார்கள். ஆனால் இந்த முன்னேற்றங்கள் என்றென்றைக்கும் நீடித்திருக்கவில்லை, இப்போது அவை பெரிதும் திரும்ப எடுக்கப்பட்டு வருகின்றன.
3
அலன் கிறிவினின் JCR எவ்வாறு ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளை மூடிமறைத்தது (1)
பிரான்சின்1968 மே-ஜூன் சம்பவங்களைக் குறித்த தொடர்ச்சியான கட்டுரைகளில் இது மூன்றாம் பாகமாகும். பப்லோவாதிகள் வகித்த பாத்திரம் குறித்து பாகங்கள் 3 மற்றும் 4 ஆராய்கின்றன; இறுதிப் பாகம் பியர் லம்பேர் இன் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பைக் (OCI) குறித்து ஆராயும்.
ஜனாதிபதி டு கோலும் அவரது ஐந்தாம் குடியரசும், மே 1968 இல் அரசியல்ரீதியில் உயிர்பிழைத்தமைக்காக, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (PCF) மற்றும் அதன் தொழிற்சங்க கிளையான தொழிலாளர் பொது கூட்டமைப்புக்கும் (CGT) கடன்பட்டிருந்தனர். எவ்வாறிருந்த போதினும், 1945 மற்றும் 1968க்கு இடையே, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மிக வெளிப்படையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. பொது வேலைநிறுத்தத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள், அவர்களைவிட மிகவும் தீவிர நிலைப்பாட்டினை எடுத்திருந்த ஏனைய அரசியல் சக்திகளின் ஒத்துழைப்பை சார்ந்திருந்தனர் என்றாலும், பரந்த இயக்கத்தின் மீது அதன் ஆதிக்கத்தை கொண்டிருப்பதை PCF உறுதிப்படுத்தி கொண்டது.
இவ்விடயத்தில் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான பப்லோவாத ஐக்கிய செயலகம் மற்றும் அதன் பிரெஞ்சு ஆதரவாளர்கள், அலன் கிறிவின் தலைமையிலான புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பு (Jeunesse Communiste Révolutionnaire―JCR) மற்றும் பியர் பிராங் தலைமையிலான சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (Parti Communiste Internationaliste―PCI) ஆகியவை ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. அவர்கள் இளைஞர்களது தீவிரமயமாக்கல் ஒரு தீவிர புரட்சிகர மாற்றீடாக அபிவிருத்தி அடைவதை தடுத்ததுடன், பொது வேலைநிறுத்தத்தை அவ்விதத்தில் ஸ்ரானிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உதவினர்.
நாஜி ஜேர்மனியின் மீது சோவியத் செம்படையின் வெற்றியும், பாசிச-விரோத எதிர்ப்பியக்கத்தில் (anti-fascist Résistance) பிரெஞ்சு கட்சி வகித்த சொந்த பாத்திரம் ஆகியவற்றின் காரணமாக, இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அரசியல் ஆளுமையை கொண்டிருந்தது. விச்சி ஆட்சியின் வடிவில் இருந்த பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம், நாஜிக்களுடனான அதன் ஒத்துழைப்பின் மூலமாக தன்னைத்தானே மதிப்பிழக்க செய்திருந்தது. மேலும் அங்கே தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர் மத்தியிலும் ஒரு சோசலிச சமூகத்திற்கான பலமான எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. ஆனால் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தலைவர் மொறிஸ் தொரேஸ் (Maurice Thorez), முதலாளித்துவ ஆட்சியை மீள்-ஸ்தாபிதம் செய்வதற்கு அவரது மொத்த அரசியல் அதிகாரத்தையும் பிரயோகித்தார். தொரேஸ் அவரே தனிப்பட்டரீதியில், டு கோல் நிறுவிய போருக்குப் பிந்தைய முதல் அரசாங்கத்தில் பங்கெடுத்ததுடன், எதிர்ப்பியக்கத்தை நிராயுதபாணியாக்குவதை உறுதிப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார்.
போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முதலாளித்துவ சமூக மறுஸ்திரப்படுத்தலில் அது வகித்த பாத்திரத்திற்காக, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஆதரவு சிறுக சிறுக குறைந்து வந்தது. அக்கட்சி வியட்நாம் மற்றும் அல்ஜீரியாவிற்கு எதிரான காலனித்துவ போர்களுக்கு அதன் ஆதரவை வழங்கியிருந்ததுடன், 1956 இல் நிகிடா குருஷ்சேவ் அளித்த உரையில் ஸ்ராலினிச குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அது மேற்கொண்டும் மதிப்பிழந்தது. இதனை தொடர்ந்து ஹங்கேரி மற்றும் போலாந்தில் ஸ்ராலினிச துருப்புக்களால் பெருந்திரளான மக்கள் மேலெழுச்சிகள் இரத்தக்களரியுடன் ஒடுக்கப்பட்டமை நடந்தது. 1968 இல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அப்போதும் தொழிலாள வர்க்க அங்கத்துவ எண்ணிக்கையில் மிகப்பெரிய கட்சியாக இருந்தபோதினும், அது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதன் செல்வாக்கைப் பெரிதும் இழந்திருந்தது.
குறிப்பாக கம்யூனிஸ்ட் மாணவர் கூட்டமைப்பு (Union des Étudiants Communistes―UEC) ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தது. 1963 இல் இருந்து UEC க்குள் ―"இத்தாலிய" கன்னை (கிராம்ஷி மற்றும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்), "மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்" (மாவோ சே துங் ஆதரவாளர்கள்) மற்றும் "ட்ரொட்ஸ்கிச" கன்னை என― பல்வேறு கன்னைகள் உருவாயின, அவை பின்னர் வெளியேற்றப்பட்டு அவற்றின் சொந்த அமைப்புகளை நிறுவின. இந்த காலகட்டம் "அதிதீவிர இடது" என்றழைக்கப்பட்டதன் தோற்றத்தைக் குறித்தது. அரசியல் அரங்கில் அவற்றின் உதயம், "போர்க்குணமிக்க இளைஞர்களின் ஓர் ஆக்கபூர்வமான பகுதி பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து உடைத்துக் கொண்டு எழுச்சி பெற்றதைக்" குறிப்பதாக வரலாற்றாளர் மிஷேல் ஸன்கரிணி-ஃபூர்னெல் (Michelle Zancarini-Fournel) 1968 இயக்கம் குறித்த அவரது நூலில் குறிப்பிட்டார். [1]
CGT இன் ஆளுமை 1968 இல் அதிகரித்த அழுத்தத்தின் கீழ் இருந்தது. போட்டி தொழிற்சங்கங்களான Force Ouvrière மற்றும் CFDT (Confédération Française Démocratique du Travail) போன்றவை அப்போது இடது-சீர்திருத்தவாத PSU (Parti Socialiste Unifié) இன் செல்வாக்கின் கீழ் இருந்தன. அவை போர்குணமிக்க நிலைப்பாட்டை ஏற்றதுடன் CGT க்கு சவாலாக நின்றன. குறிப்பாக CFDT ஆல் சேவைத்துறை மற்றும் பொதுத்துறை சேவைகளில் ஆதரவைத் திரட்ட முடிந்தது.
இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், ஐக்கிய செயலகத்தில் அணிதிரண்டிருந்த பப்லோவாதிகள், ஸ்ராலினிஸ்டுகளின் அதிகாரத்தை பாதுகாப்பதிலும் சாத்தியமான அளவில் பொது வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுப்பதிலும் ஒரு மிக முக்கிய பாத்திரம் வகித்தனர்.
பப்லோவாதத்தின் தோற்றுவாய்கள்
நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்திற்கு எதிரான ஓர் அரசியல் தாக்குதலின் விளைவாக, 1950களின் தொடக்கத்தில் பப்லோவாத ஐக்கிய செயலகம் உருவானது. நான்காம் அகிலத்தின் செயலாளர் மிஷேல் பப்லோ, 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திற்கான அடித்தளமாக உருவாக்கியிருந்த, ஸ்ராலினிசம் குறித்த ஒட்டுமொத்த பகுப்பாய்வையும் நிராகரித்தார்.
1933 இல் ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தின் தோல்வியை தொடர்ந்து, கம்யூனிச அகிலத்தினுள் ஸ்ராலினிச சீரழிவின் அளவானது, அகிலத்தை சீர்திருத்துவதை அடிப்படையாக கொண்ட எந்தவொரு கொள்கையையுமே ஏற்கவியலாதவாறு செய்திருந்ததாக ட்ரொட்ஸ்கி தீர்மானித்தார். ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதை சாத்தியமாக்கியிருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் காட்டிக்கொடுப்பிலிருந்து தொடங்கி, அதையடுத்து ஜேர்மன் தோல்வியிலிருந்து எந்தவொரு படிப்பினைகளையும் பெற கம்யூனிச அகிலம் மறுத்ததைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானகரமாக முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றுவிட்டதாக ட்ரொட்ஸ்கி முடிவுக்கு வந்தார். எதிர்கால புரட்சிகரப் போராட்டம் என்பது, ஒரு புதிய பாட்டாளி வர்க்க தலைமையை கட்டியெழுப்பவதிலேயே தங்கியிருப்பதாக அவர் வலியுறுத்தினார். அவர் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் பின்வறுமாறு எழுதினார்: “மனிதகுலத்தின் கலாச்சார நெருக்கடியாகியுள்ள பாட்டாளி வர்க்க தலைமையின் நெருக்கடியை நான்காம் அகிலத்தால் மட்டுமே தீர்க்க முடியும்".
இந்த கண்ணோட்டத்தை பப்லோ நிராகரித்தார். அவர், கிழக்கு ஐரோப்பாவின் புதிய ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள் உதயமானதைக் கொண்டு, எதிர்காலத்தில் ஸ்ராலினிசம் வரலாற்றுரீதியில் ஒரு முற்போக்கான பாத்திரம் வகிக்க முடியுமென்ற முடிவுக்கு வந்தார். அதுபோன்றவொரு முன்னோக்கு நான்காம் அகிலத்தேயே கலைப்பதற்குரியதாக இருந்தது. ஸ்ராலினிச பாரிய அமைப்புகளிலிருந்து சுயாதீனமான வகையில் நான்காம் அகிலத்தின் பிரிவுகளைக் கட்டமைப்பதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை என்பதே பப்லோவின் கருத்தாகும். அதற்கு மாறாக நடப்பிலுள்ள ஸ்ராலினிச கட்சிகளுக்குள் நுழைந்து, அவர்களின் தலைவர்களில் இடதுசாரிப் பிரிவினர் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதே என்றளவிற்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பணி சுருக்கப்பட்டது.
அரசியல்ரீதியிலும் தத்துவார்த்தரீதியிலும் நனவுபூர்வமான முன்னணிப்-படை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துகின்ற, ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் ஒட்டுமொத்த மார்க்சிச கருத்துருவையும் பப்லோ நிராகரிப்பதில் போய் நின்றார். பப்லோவை பொறுத்த வரையில் தலைமைப் பாத்திரம் என்பது, தொழிற்சங்கவாதிகள், இடது சீர்திருத்தவாதிகள், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள், காலனித்துவ மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் இருந்த தேசிய விடுதலை இயக்கங்கள் போன்ற மார்க்சிஸ்ட்-அல்லாத மற்றும் பாட்டாளி வர்க்கம்-அல்லாத சக்திகளிடம் ஒப்படைக்கலாம், அவை புறநிலை சக்திகளின் அழுத்தத்தின் கீழ் இடது நோக்கி இட்டு செல்லப்படும் என்பதாக இருந்தது. பப்லோ தனிப்பட்டரீதியில் தன்னைத்தானே அல்ஜீரிய தேசிய சுதந்திர முன்னணிக்கு (Front de Libération Nationale - FLN) சேவைசெய்ய இருத்திக்கொண்டதுடன், அதன் வெற்றிக்குப் பின்னர் ஒரு மூன்றாண்டு காலத்திற்கு அல்ஜீரிய அரசாங்கத்துடனேயே கூட இணைந்திருந்தார்.
பப்லோவின் கடுந்தாக்குதல் நான்காம் அகிலத்தை உடைத்தது. பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மை அவரது திரித்தல்களை நிராகரித்ததால், பியர் பிராங் தலைமையிலான சிறுபான்மையினரால் அதிகாரத்துவரீதியில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். 1953 இல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ஒரு கடுமையான விமர்சனத்துடன் பப்லோவாத திரித்தல்களுக்கு விடையிறுத்ததுடன், அது அனைத்து மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் சர்வதேச ஐக்கியத்திற்கு அழைப்புவிடுத்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டது. இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு அடித்தளமாக மாறியது, அதில் பிரெஞ்சு பெரும்பான்மையும் உள்ளடங்கும்.
ஆனால், சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), பப்லோவாதம் மீதான அதன் எதிர்ப்பை, தொடர்ந்து பேணவில்லை. அதற்கடுத்த 10 ஆண்டுகளின் போது, SWP பெருமளவில் பப்லோவாதிகளுடனான அதன் கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு, இறுதியில் 1963 இல் (அமெரிக்க) ஐக்கிய செயலகத்தை உருவாக்க அவர்களுடைனேயே இணைந்தது. இதற்கிடையே ஏர்னெஸ்ட் மண்டேல் அமெரிக்க தலைமையை ஏற்றார். பப்லோ அதிகரித்தளவில் இரண்டாம்பட்ச பாத்திரம் வகிக்க தள்ளப்பட்டிருந்தார், பின்னர் விரைவிலேயே ஐக்கிய செயலகத்திலிருந்து வெளியேறினார். பிடல் காஸ்ட்ரோவிற்கும் அவரது குட்டி முதலாளித்துவ தேசியவாத "26வது ஜூலை இயக்கத்திற்கும்" நிபந்தனையற்ற ஆதரவு என்பதன் அடித்தளத்தில் 1963 மறுஐக்கியம் அமைந்திருந்தது. கியூபாவில் காஸ்ட்ரோ அதிகாரத்தைக் கைப்பற்றியமை ஒரு தொழிலாளர் அரசை அமைத்ததாகவும், காஸ்ட்ரோ, ஏர்னெஸ்டோ "சே" குவேரா மற்றும் ஏனைய கியூப தலைவர்கள் "இயல்பிலேயே மார்க்சிஸ்டுகளின்" பாத்திரம் வகித்ததாகவும் ஐக்கிய செயலகத்தால் கூறப்பட்டது.
இந்த முன்னோக்கு கியூபாவின் தொழிலாள வர்க்கத்தை, அதன் சொந்த அங்கங்கள் ஒருபோதும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்ற நிலையில், அவர்களை நிராயுதபாணியாக்க மட்டும் சேவை செய்யவில்லை; அது ஸ்ராலினிச மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளுக்கு விமர்சனமற்ற ஆதரவு வழங்கி, அவர்களின் பிடியை பெருந்திரளான மக்கள் மீது பலப்படுத்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் நிராயுதபாணியாக ஆக்கியது. இவ்வாறு செய்கையில், பப்லோவாதம் ஏகாதிபத்தியத்தின் இரண்டாவது முகமையாக உருவெடுத்தது. தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பார்வையில் பழைய அதிகாரத்துவ எந்திரங்கள் அதிகளவில் மதிப்பிழந்து கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், அது வகித்த பாத்திரம் முன்பினும் அதிக முக்கியத்துவம் மிக்கதாக மாறியிருந்தது.
இது, SWP மற்றும் பப்லோவாதிகளின் ஐக்கியத்திற்கு வெறும் ஓராண்டுக்குப் பின்னர் இலங்கையில் உறுதி செய்யப்பட்டது. பாரிய செல்வாக்கு பெற்றிருந்த ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியான லங்கா சம சமாஜ கட்சி (LSSP) 1964 இல் தேசியவாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. அரசாங்கத்திற்குள் LSSP நுழைந்ததற்கு விலையாக, சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவளிப்பதற்காக அந்நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் கைவிடப்பட்டனர். அந்நாடு இன்னமும் இக்காட்டிக்கொடுப்பின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அந்நடவடிக்கை தமிழ் சிறுபான்மையினரை பாரபட்சம் காட்டி ஒதுக்கி வைப்பதை மேலும் பலப்படுத்தியதோடு, மூன்று தசாப்தங்களாக இலங்கை இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போரில் மூழ்குவதற்கும் இட்டுச் சென்றது.
1968 இல் பிரான்சில் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்ற உதவுவதிலும் பப்லோவாதிகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். அந்த முக்கிய சம்பவங்களின்போது அவர்களது பாத்திரத்தை ஒருவர் ஆராய்வாரேயானால், இரண்டு விடயங்கள் அதிர்ச்சியூட்டும்: ஒன்று ஸ்ராலினிசத்தை நோக்கிய அவர்களது ஒப்புக்கொள்ளும் நிலைப்பாடு, மற்றது மாணவர் சூழலில் மேலோங்கியிருந்த "புதிய இடதின்" மார்க்சிச-விரோத தத்துவங்களை அவர்கள் விமர்சனமற்று ஏற்றுக் கொண்டமை.
அலன் கிறிவினும், புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பும் (JCR)
இரண்டாம் உலக போர் முடிந்தபோது பிரான்சில் நான்காம் அகிலம் கணிசமானளவிற்கு செல்வாக்கு கொண்டிருந்தது. 1944 இல் பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிச இயக்கம், போரின்போது பிளவுபட்டிருந்த இது, சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியை (Parti Communiste Internationaliste ― PCI) உருவாக்குவதற்காக மறுஐக்கியமாகி இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் PCI சுமார் 1,000 அங்கத்தவர்களைக் கொண்டிருந்ததுடன், நாடாளுமன்ற தேர்தல்களில் 11 வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்கள் 2 இல் இருந்து 5 சதவீத வாக்குகளைப் பெற்றனர். அவ்வமைப்பின் நாளிதழ் La Vérité விற்பனை நிலையங்களில் விற்கப்பட்டதோடு, ஒரு பரந்த வாசகர் வட்டத்தையும் கொண்டிருந்தது. அதன் செல்வாக்கு ஏனைய அமைப்புகளிலும் விரிவடைந்தது; மொத்தம் 20,000 அங்கத்தவர் எண்ணிக்கையுடன் சோசலிஸ்ட் இளைஞர் அமைப்பின் ஒட்டுமொத்த தலைமையும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஆதரித்தது. PCI இன் அங்கத்தவர்கள் வேலை நிறுத்த இயக்கத்தில் ஒரு பிரதான பாத்திரம் வகித்தனர். அந்நாட்டையே அதிர வைத்த அந்த வேலைநிறுத்தம், 1947 இல் அரசாங்கத்திலிருந்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறுவதற்கு அதை நிர்பந்தித்தது.
எவ்வாறிருந்த போதினும், அதற்கடுத்து வந்த ஆண்டுகளில் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் (PCI) புரட்சிகர நோக்குநிலை அதன் சொந்த அணிகளுக்குள் இருந்த உட்கூறுகளிடம் இருந்தே தொடர்ச்சியான தாக்குதலின் கீழ் வந்தது. 1947 இல் சமூக-ஜனநாயக SFIO (Section Française de l’Internationale Ouvrière) கூர்மையாக வலதிற்கு நகர்ந்து, அதன் இளைஞர் அமைப்பைக் கலைத்துடன், அதன் ட்ரொட்ஸ்கிச தலைவரையும் வெளியேற்றியது. அப்போது PCI இன் செயலாளரான ஈவான் கிறேப்போ (Yvan Craipeau) இன் தலைமையிலிருந்த அந்த வலதுசாரி அணி, எந்தவொரு புரட்சிகர முன்னோக்கையும் ஒதுக்கித் தள்ளி தனது பிரதிபலிப்பை காட்டியது. ஓராண்டுக்குப் பின்னர் அந்த அணி, பிரெஞ்சு மெய்யியலாளர் ஜோன்-போல் சார்த்ர் (Jean-Paul Sartre) [Rassemblement Démocratique Révolutionnaire―RDR] தலைமையிலான பரந்த இடது இயக்கத்திற்குள் PCI ஐ கலைத்துவிடுவதற்கு ஆதரவாக வாதிட்டதும் அது வெளியேற்றப்பட்டது. கிறேப்போ உட்பட, வெளியேற்றப்பட்ட முன்னணி பிரமுகர்களில் பலர், பின்னர் PSU இல் மீள்எழுச்சி கண்டனர்.
அதே ஆண்டில், 1948 இல், கொர்னேலுயிஸ் காஸ்ட்ரோறியாடிஸ் (Cornelius Castoriadis) மற்றும் குளோட் லுஃபோர் (Claude Lefort) தலைமையிலான சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா (Socialisme ou barbarie) எனும் மற்றொரு குழு PCI இல் இருந்து வெளியேறியது. இந்த குழு, சோவியத் ஒன்றியத்தை ஓர் உருக்குலைந்த தொழிலாளர் அரசாக எடுத்துக்காட்டிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை நிராகரித்தும், "அதிகாரத்துவ முதலாளித்துவத்தின்" அமைப்புமுறைக்குள் ஸ்ராலினிச ஆட்சி ஒரு புதிய வர்க்கமென வாதிட்டும், பனிப்போர் ஆரம்பித்ததற்கு தமது பிரதிபலிப்பை காட்டின. இந்த நிலைப்பாட்டின் அடித்தளத்தில் இக்குழு மார்க்சிசத்திற்கு விரோதமான எண்ணிறைந்த நிலைப்பாடுகளை அபிவிருத்தி செய்தது. Socialisme ou barbarie குழுவின் எழுத்துக்கள் மாணவர் இயக்கத்தின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தி வந்தது, அத்துடன் அதன் அங்கத்தவர்களில் ஒருவரான ஜோன்-பிரான்சுவா லியோத்தார் (Jean François Lyotard) பின்னர் பின்நவீனத்துவத்துடன் தொடர்புபட்ட சித்தாந்தத்தை அபிவிருத்தி செய்வதில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்தார்.
எவ்வாறிருப்பினும் பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய அடியாக இருந்தது பப்லோவாதமாகும். சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (PCI) அரசியல்ரீதியிலும் அமைப்புரீதியிலும் மிஷேல் பப்லோவின் கலைப்புவாத (liquidationist) கொள்கை மற்றும் அதையடுத்து பப்லோவாத சிறுபான்மையினரால் பெரும்பான்மை பிரிவு வெளியேற்றப்பட்டமை ஆகியவற்றால் பலவீனமடைந்தது. பியர் லம்பேர் (Pierre Lambert) தலைமையிலான PCI இன் பெரும்பான்மையினர் குறித்து இக்கட்டுரை தொடரின் இறுதி பாகத்தில் விவரிக்கப்படும். பிளவுபட்ட பின்னர் பியர் பிராங் (Pierre Frank) தலைமையிலான பப்லோவாத சிறுபான்மையினர், அல்ஜீரிய போரில் தேசிய சுதந்திர இயக்கத்திற்கு (FLN) நடைமுறை உதவிகள் மற்றும் தளவாட பரிவர்த்தனை உதவிகளை வழங்குவதன் மீது கவனம் செலுத்தினர். 1960களின் போது அது தொழிற்சாலைகளுக்குள் பெரியளவில் ஏதும் செல்வாக்கு கொண்டிருக்கவில்லை. ஆனால் அது மாணவர் வட்டாரங்களில் ஆதரவைப் பெற்றிருந்ததுடன், 1968 இல் அதுபோன்ற அடுக்குகள் மத்தியில் ஓர் முக்கிய பாத்திரம் வகித்தது. அராஜகவாத டானியல் கோன்-பென்டிற் மற்றும் மாவோயிச அலன் ஜிமார் போன்ற பிரபலங்களோடு மாணவர் எழுச்சியில் நன்கறியப்பட்ட முகங்களில் ஒன்றாக இருந்தவர் அதன் முன்னணி அங்கத்தவரான அலன் கிறிவின் ஆவார்.
1955 இல் அவரது 14 வயதில் ஸ்ராலினிச இளைஞர் இயக்கத்தில் இணைந்த கிறிவின், 1957 இல் மாஸ்கோவில் இளைஞர் விழாவில் பங்கெடுத்த ஓர் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவின் பாகமாக இருந்தார். அவர் அல்ஜீரிய FLN அங்கத்தவர்களைச் சந்தித்தார் என்பதும், அல்ஜீரியாவை பொறுத்த வரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை நோக்கி ஒரு விமர்சனரீதியிலான மனோபாவத்தை வளர்த்தார் என்பதும் அவரது சுயசரிதையில் உள்ளது. ஓராண்டுக்குப் பின்னர் அவர் அல்ஜீரிய பிரச்சினை மீது பப்லோவாத PCI உடன் ஒத்துழைக்க தொடங்கினார். கிறிவின் ஆரம்பத்தில் அவருக்கு PCI இன் பின்புலம் குறித்து தெரியாது என்று வாதிடுகிறார், ஆனால் அவரது இரண்டு சகோதரர்கள் அவ்வமைப்பின் தலைமையில் இருந்த நிலையில் இது பெரும்பாலும் அவ்வாறிருக்க சாத்தியமில்லை. குறைந்தபட்சம் 1961 இல், எந்தவொரு சம்பவத்திலும் அவர் PCI உடன் இணைந்திருந்தார், அதேவேளையில் ஸ்ராலினிச மாணவர் அமைப்பான UEC க்குள் (Union des étudiants communistes) தொடர்ந்து உத்தியோகபூர்வமாக வேலை செய்து வந்தார்.
கிறிவின் வேகமாக PCI மற்றும் ஐக்கிய செயலகத்தின் தலைமைக்குள் வளர்ந்தார். 1965 இல் 24 வயதிலிருந்த கிறிவின், பியர் பிராங் மற்றும் மிஷேல் லுக்கென் (Michel Lequenne) உடன் சேர்ந்து கட்சியினது அரசியல் குழுவின் உயர்மட்ட தலைமையில் இடம் பெற்றிருந்தார். அதே ஆண்டு அவர் லுக்கென்னுக்கு மாற்றாக ஐக்கிய செயலகத்தின் நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்டார்.
1966 இல் பாரீஸ் பல்கலைக்கழகத்தில் (La Sorbonne) UEC இன் கிறிவின் பிரிவு, இடதின் பொது ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா மித்திரோனுக்கு ஆதரவு வழங்க மறுத்ததற்காக ஸ்ராலினிச தலைமையால் வெளியேற்றப்பட்டது. ஏனைய UEC இன் கிளர்ச்சி பிரிவுகளுடன் சேர்ந்து அவர் JCR ஐ (Jeunesse Communiste Révolutionnaire) நிறுவ சென்றார், ஏறத்தாழ முழுமையாக மாணவர்களைக் கொண்டிருந்த அது, PCI போலின்றி, வெளிப்படையாக தன்னைத்தானே ட்ரொட்ஸ்கிசத்திற்கு பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை. 1969 ஏப்ரலில் JCR மற்றும் PCI அப்போது Ligue Communiste ஐ (1974 இல் இருந்து, இது Ligue Communiste Révolutionnaire―LCR என்றானது) உருவாக்க உத்தியோகபூர்வமாக இணைந்தன, முன்னதாக பிரெஞ்சு உள்துறை மந்திரி அவ்விரு அமைப்புகளுக்கும் ஓராண்டு தடைவிதித்திருந்தார்.
அதற்கு முன்னரே, 1968 இல் மூர்க்கமான உத்வேகத்துடன் ஆனால் சிறிதளவே அரசியல் அனுபவம் கொண்ட ஓர் இளம் முதிர்ச்சி பெறாத அமைப்பாக இருந்த JCR ஐ முன்னுக்குக் கொண்டு வர கிறிவின் முயற்சித்தார்: “நாம் சில நூறு அங்கத்துவர்கள் கொண்ட ஓர் அமைப்பாக இருக்கலாம், அவர்களின் சராசரி வயது அனேகமாக அந்நேரத்தில் சட்டபூர்வ வயது வந்தோர் வயதான இருப்பத்தி ஒன்றை ஒத்திருந்தது. ஒரு கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் இருந்து மற்றொன்றுக்கு ஒன்று மாற்றி ஒன்றாக அடுத்தடுத்த மிக முக்கிய வேலைகளால் உந்தப்பட்டிருந்த நாம் விடயங்களை முழுமையாக சிந்திக்கக்கூட நேரமில்லாமல் இருந்தோம் என்பதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை. நமது கட்டுப்பாடான சக்திகளின் கண்ணோட்டத்தில் நாம் பல்கலைக்கழகங்களிலும், வேலை நிறுத்தம் மற்றும் வீதிகளிலும் நமது வீடுகளில் இருப்பதைப் போல உணர்ந்தோம். அரசாங்கத்தினது பிரச்சினைக்குத் தீர்வு மற்றொரு மட்டத்தில் நடந்தது, அதன் மீது நாம் மிகக் குறைவாகவே செல்வாக்கு கொண்டிருந்தோம்”. [2]
உண்மையில், அதுபோன்ற வாதங்கள் ஏற்புடையதாக இருக்கவில்லை. 1968 இல் 27 வயதிலிருந்த அலன் கிறிவின் ஒப்பீட்டளவில் அப்போது இளம் வயதில் இருந்தார் என்றாலும் ஏற்கனவே கணிசமானளவிற்கு அரசியல் அனுபவம் பெற்றிருந்தார். அவர் ஸ்ராலினிச அமைப்புகளைக் குறித்த ஆழ்ந்த புரிதலைப் பெற்றிருந்தார், மேலும் ஐக்கிய செயலகத்தின் ஓர் அங்கத்தவராக அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் நிலவிய சர்வதேச மோதல்களைக் குறித்து முற்றிலும் பரிச்சயமாக இருந்தார். அந்நேரத்தில் ஏற்கனவே அவர் பல்கலைக்கழகத்தை விட்டிருந்தார் என்றாலும், பின்னர் அவர் JCR இன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அதற்குள் மீண்டும் நுழைந்திருந்தார்.
1968 மே-ஜூனில், JCR இன் அரசியல் நடவடிக்கையை பருவமடையாத சிறார்களின் அனுபவமற்ற நடவடிக்கையாக விட்டுவிட முடியாது, அதற்கு மாறாக அவை மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பப்லோவாதத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட அரசியல் போக்கால் வழிநடத்தப்பட்டிருந்தது. ஐக்கிய செயலகம் (United Secretariat), நான்காம் அகிலத்திலிருந்து உடைத்துக் கொண்டு சென்ற பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அது அதன் அரசியலை மட்டும் மாற்றியிருக்கவில்லை மாறாக அதன் சமூக நோக்குநிலையையே மாற்றி இருந்தது. அது ஒரு பாட்டாளி வர்க்க சக்தியாக இருக்கவில்லை, அதற்கு மாறாக அது ஒரு குட்டி முதலாளித்துவ இயக்கமாக இருந்தது. பப்லோவாதிகள் ஒன்றரை தசாப்தங்களுக்கு, ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாத எந்திரங்களின் பிழைப்புவாதிகளுக்கு ஆதரவளிக்க முயற்சித்திருந்தனர் என்பதுடன், தேசிய இயக்கங்களை ஊக்குவித்து வந்தனர். அதுபோன்ற இயக்கங்களின் சமூக நோக்குநிலை பப்லோவாதிகளினது இரண்டாவது இயல்பான தன்மையாக மாறியிருந்தது. மார்க்சிசத்தின் ஒரு தத்துவார்த்த திரித்தல்வாதமாக தொடங்கிய அது, அவர்களது அரசியல் அங்க இலட்சணத்தின் அமைப்புரீதியிலான பாகமாக மாறியிருந்தது―அதற்கு முன்னர் வரையில் அது ஸ்தூலமான ஆட்சியெல்லையிலிருந்து அரசியலுக்கு மாறும் வரையறைகளில் அனுமதிக்கத்தக்க அளவில் இருந்தது.
1848 ஐரோப்பிய புரட்சிகளின் தோல்வியிலிருந்து படிப்பினைகளை வரைகையில், மார்க்ஸ், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோக்கை தொழிலாள வர்க்க முன்னோக்கிலிருந்து பின்வருமாறு வேறுபடுத்தி காட்டினார்: “ஜனநாயக குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர், ஒட்டுமொத்த சமூகத்தையும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கேற்ப மாற்றுவதிலிருந்து விலகி, நிலவும் சமூகத்தை சாத்தியமான அளவிற்கு அவர்களுக்கு சௌகரியமாக மற்றும் அவர்களால் சகித்துக் கொள்ளத்தக்க சமூக நிலைமைகளின் ஒரு மாற்றத்தை மட்டுமே விரும்புவர்.”[3] இந்த பண்புமயப்படுத்தல் (characterisation), 1968 இல் சமமான அளவில் பப்லோவாதிகளுக்கு பொருத்தமாக இருந்தது. இது அராஜவாதம் மற்றும் ஏனைய குட்டி-முதலாளித்துவ இயக்கங்களை நோக்கிய அவர்களின் விமர்சனமற்ற மனோபாவத்திலிருந்து தெளிபடுத்தப்பட்டது, அத்தகைய இயக்கங்களுக்கு எதிராக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் முந்தைய நாட்களில் சமரசத்திற்கிடமின்றி போராடப்பட்டது. அந்த காலகட்டத்திலும் சரி, இன்றைய காலகட்டத்திலும் சரி அவர்கள் அதுபோன்ற பிரச்சினைகளை இன, ஆண்பால்/பெண்பால் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளோடு இணைத்திருந்தனர், தொடர்ந்து இணைத்து வருகின்றனர் என்பதும் வெளிப்படையாக முக்கியத்துவம் மிக்கதாகும்; மேலும் தொழிலாள வர்க்கத்தை தூற்றும் தேசியவாத இயக்கங்களின் தலைவர்களை அவர்கள் உத்வேகப்படுத்துவதுடன், தங்களைத்தாங்களே கிராமப்புற மத்தியதர வர்க்க அடுக்குகளை நோக்கி சாய்த்துக் கொள்கின்றனர். இந்த விடயம் ரஷ்ய வெகுஜனவாதிகளுக்கு (Populists) எதிராக லெனினால் போராடப்பட்டது.
“ட்ரொட்ஸ்கிஸ்டை விட அதிகளவில் குவேராயிஸ்ட்"
அனைத்திற்கும் மேலாக கியூப தலைமைக்கு வழங்கிய முற்றிலும் விமர்சனமற்ற ஆதரவால் கிறிவினின் JCR குணாம்சப்பட்டிருந்தது ― இந்த பிரச்சினை தான் 1963 ஐக்கியத்தின் இதயதானத்தில் இருந்தது. LCR இன் வரலாற்றை எழுதிய ஆசிரியர் ஜோன்-போல் சால் (Jean-Paul Salles), “ஒரு அமைப்பின் அடையாளம், மே 68 க்கு முன்னர் பல விதத்திலும் ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்பதை விட பெரிதும் குவேராவாதிகளாக தெரிந்ததாக" குறிப்பிடுகிறார். [4]
அக்டோபர் 19, 1967 இல், பொலிவியாவில் சே குவேராவின் படுகொலைக்கு 10 நாட்களுக்குப் பின்னர், பாரீஸ் மூச்சுவாலிற்ரே (Mutualit) மண்டபத்தில் JCR அவருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. குவேராவின் படங்கள் JCR கூட்டத்தில் எங்கெங்கும் நிறைந்திருந்தது. 2006 இன் அவரது சுயசரிதத்தில் அலன் கிறிவின் எழுதுகையில், “மூன்றாம் உலக நாடுகளின் சுதந்திர போராட்டங்களைக் குறித்த எங்களின் மிகவும் முக்கிய குறிப்புப்புள்ளி ஐயத்திற்கிடமின்றி கியூப புரட்சியாகும், அது 'ட்ரொட்ஸ்கோ-குவேராவாதிகள்' (‘Trotsko-Guevarists’) என்றழைக்கப்படுமளவிற்கு எங்களை இட்டுச் சென்றது … குறிப்பாக சே குவேரா எங்களின் பார்வையில் புரட்சிகர போராளியின் முன்மாதிரியாக உருவாகியிருந்தார்,” என்கிறார். [5]
சே குவேராவை பெருமைப்படுத்தியதுடன், LCR, தொழிலாள வர்க்கத்தின் தலைமையைக் கட்டியெழுப்புவதுடன் பிணைந்திருந்த அதிமுக்கிய பிரச்சினைகளை தட்டிக்கழித்தது. அந்த அல்ஜீரிய-கியூப புரட்சியாளரின் வாழ்க்கை சம்பவங்களில் காணக்கூடிய ஒரேயொரு பொதுவான பகுதி இருக்கிறதென்றால், அது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மீதான அவரது அசைக்கமுடியாத விரோதமாகும். அதற்கு பதிலாக அவர் ஒரு சிறிய ஆயுதமேந்திய சிறுபான்மையை —கிராமப்புற பகுதிகளில் செயல்படும் ஒரு கெரில்லா துருப்பு— தொழிலாள வர்க்கத்திலிருந்து சுயாதீனமாக, சோசலிசப் புரட்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும் என்ற நிலைப்பாட்டை பிரதிநிதித்துவம் செய்தார். இதற்கு ஒரு தத்துவமோ அல்லது ஓர் அரசியல் முன்னோக்கோ தேவைப்படவில்லை. ஒரு சிறிய குழுவின் நடவடிக்கையும், உத்வேகமும் மட்டும் அவசியமாக இருந்தது. அரசியல் நனவைப் பெறுவதற்கும், அவர்களது சொந்த சுதந்திர போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட பெருந்திரளான மக்களின் இயலுமை மறுக்கப்பட்டது.
ஜனவரி 1968 இல் JCR இன் நாளிதழான Avant-Garde Jeunesse, குவேராவின் கருத்துருக்களைப் பின்வருமாறு பரப்பியது: “நடப்பு சூழல்களைப் பொருட்படுத்தாமல், கெரில்லாக்கள், குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலகட்டம் வரையிலோ, சுரண்டப்படும் ஒட்டுமொத்த மக்களை ஆட்சிக்கு எதிரான ஒரு முன்னணி போராட்டத்திற்குள் அவர்களால் கொண்டு வர முடியும் வரையில், அவர்கள் தங்களைத்தாங்களே அபிவிருத்தி செய்துகொள்ள அழைப்புவிடுவார்கள்”.
ஆனால் குவேராவினால் இலத்தீன் அமெரிக்காவில் பின்பற்றப்பட்ட கெரில்லா மூலோபாயம், அந்தளவிற்கு சுலபமாக பிரான்சிற்கு கொண்டு வரமுடியவில்லை. அதற்கு பதிலாக மண்டேல், பிராங் மற்றும் கிறிவின் இந்த முன்னணிப்-படையின் (avant-garde) பாத்திரத்தை மாணவர்களுக்கு வழங்கினர். அவர்கள், மாணவர்களது தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் உடனான அவர்களது வீதிப் போராட்டங்களை பெருமைப்படுத்தினர். குவேராவின் கருத்துருக்கள், எந்தவொரு முக்கிய அரசியல் நிலைநோக்கையும் விலையாக கொடுத்து குருட்டுத்தனமான நடவடிக்கைவாதத்தை (activism) நியாயப்படுத்த சேவை செய்தது. அவ்வாறு செய்ததன் மூலமாக, பப்லோவாதிகள் முற்றிலுமாக புதிய இடதின் மார்க்சிச-விரோத தத்துவங்களை ஏற்றிருந்தனர். மாணவர்களிடையே ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்துவந்த புதிய இடது, அதன்மூலமாக ஒரு உண்மையான மார்க்சிச நோக்குநிலைக்குரிய பாதையைத் தடுத்தது.
அங்கே அராஜவாத டானியல் கோன்-பென்டிற், மாவோயிச அலன் ஜிமார் மற்றும் 1968 சம்பவங்களில் பிரதானமாக இருந்த ஏனைய மாணவர் தலைவர்களுக்கும், "ட்ரொட்ஸ்கிச" அலன் கிறிவினுக்கும் இடையே எந்தவொரு குறிப்பிடத்தக்க அரசியல் வித்தியாசமும் இருக்கவில்லை. அவர்கள் இலத்தீன் வட்டார பகுதியில் நடந்த வீதி போராட்டங்களில் அக்கம்பக்கமாக கலந்துகொண்டிருந்தனர். ஜோன்-போல் சால் எழுதுகிறார்: “மே 6-11 வாரத்தின் போது JCR இன் அங்கத்தவர்கள் முன்னணியில் நின்றிருந்ததுடன், கோன்-பென்டிற் மற்றும் அராஜவாதிகளுடன் உடன் இணைந்து எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் பங்குபற்றினர் ― இரவு நேர தடையரண்களும் அதில் உள்ளடங்கும்.[6] அப்போது உக்கிரமான வீதிப் போராட்டங்களின் காட்சியைக் கொண்டிருந்த இலத்தீன் வட்டார மூச்சுவாலிற்ரே மண்டபத்தில், மே 9 அன்று, நீண்ட காலத்திற்கு முன்னரே தயாரிப்பு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தை JCR கூட்டியது. 3,000 க்கும் மேற்பட்டவர்கள் அக்கூட்டத்தில் பங்கெடுத்தனர், பிரதான பேச்சாளர்களில் ஒருவராக டானியல் கோன்-பென்டிற் இருந்தார்.
அதே காலகட்டத்தில் இலத்தீன் அமெரிக்காவில் ஐக்கிய செயலகம் நிபந்தனையின்றி சே குவேராவின் கெரில்லா முன்னோக்கை ஆதரித்தது. மே 1969 இல் இத்தாலியில் நடத்தப்பட்ட அதன் 9வது உலக காங்கிரஸில், அமெரிக்க பிரிவு அதன் தென்-அமெரிக்க பிரிவுகளை சே குவேராவின் முன்மாதிரியை பின்பற்றுமாறும், அவரது ஆதரவாளர்களுடன் ஐக்கியப்பட்டிருக்குமாறும் அறிவுறுத்தியது. இது, போராட்டத்தை கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் ஓர் ஆயுதமேந்திய கெரில்லா போராட்டத்திற்கு ஆதரவாக நகர்புறத்தை மையமாக கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்திற்கு புறமுதுகு காட்டுவதை அர்த்தப்படுத்தியது. இந்த மூலோபாயத்தை ஆதரித்த காங்கிரஸில் இருந்த பெரும்பான்மை பிரதிநிதிகளில் ஏர்னெஸ்ட் மண்டேல் மற்றும் பிரெஞ்சு பிரதிநிதிகள் பியர் பிராங் மற்றும் அலன் கிறிவின் ஆகியோரும் உள்ளடங்கி இருந்தனர். கெரில்லா-பாணி போராட்ட முன்னோக்கின் பேரழிவுகரமான விளைவுகள் கண்கூடாக அதிகரித்ததும், அது ஐக்கிய செயலகத்திற்குள் சர்ச்சைக்குரிய ஒரு ஆதாரமாக மாறியிருந்த போதினும், அவர்கள் 10 ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் இந்த மூலோபாயத்தில் உறுதியாக இருந்தனர். இந்த பாதையைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த மற்றும் கெரில்லா போராட்ட பாதையை எடுத்திருந்த ஆயிரக் கணக்கான இளைஞர்கள் அர்த்தமேயில்லாமல் அவர்களது உயிரைத் தியாகம் செய்தனர், அதேவேளையில் கெரில்லா-கடத்தல்கள், பிணைக்கைதிகளைப் பிடித்துவைத்தல் மற்றும் வன்முறை மோதல்கள் போன்ற நடவடிக்கைகள் வெறுமனே தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் நோக்குநிலை பிறழ வைக்க மட்டுமே சேவை செய்தன.
“புரட்சிகர முன்னணிப்-படையாக" மாணவர்கள்
மாணவர்கள் வகித்த பாத்திரத்தில், பப்லோவாதிகள் எடுத்த முற்றிலும் விமர்சனமற்ற நிலைப்பாடானது, ஜூன் 1968 இன் தொடக்கத்தில், JCRக்கு தடைவிதிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக, பியர் பிராங்கால் எழுதப்பட்ட மே மாத சம்பவங்கள் குறித்த ஒரு நீண்ட கட்டுரையில் வெளிப்படையாக உள்ளது.
“மே மாத புரட்சிகர முன்னணிப் படை இளைஞர்களைக் கொண்டிருந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது,” என்று எழுதிய பிராங் தொடர்ந்து இதையும் சேர்த்துக் கொண்டார்: “அரசியல்ரீதியில் பன்முகமாக இருந்த முன்னணி படைக்குள் சிறுபான்மையினர் மட்டுமே ஒழுங்கமைந்திருந்த நிலையிலும், அது மொத்தத்தில் ஓர் உயர்ந்த அரசியல் மட்டத்தை கொண்டிருந்தது. முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிசத்தைக் கட்டமைக்கும் ஒரு சமூகத்தை நிறுவுவதே, அந்த இயக்கத்தின் நோக்கமென்பதை அது உணர்ந்திருந்தது. 'சோசலிசத்திற்கான சமாதான மற்றும் நாடாளுமன்ற பாதைகளின்' கொள்கை மற்றும் 'சமாதான சகவாழ்வு' கொள்கை என்பது சோசலிசத்தைக் காட்டிகொடுப்பதாகும் என்பதையும் அது உணர்ந்திருந்தது. அது எல்லாவிதமான குட்டி முதலாளித்துவ வர்க்க தேசியவாதத்தை நிராகரித்ததுடன், மிகவும் குறிப்பிடத்தக்க பாணியில் அதன் சர்வதேசியவாதத்தை வெளிப்படுத்தியது. அது பலமாக அதிகாரத்துவ-எதிர்ப்பு நனவைக் கொண்டிருந்ததுடன், அதன் படிநிலைகளில் ஜனநாயகத்திற்கு உத்தரவாதமளிக்க மூர்க்கத்துடன் தீர்மானகரமாக இருந்தது.” [7]
பிராங், சோர்போன் பல்கலைக்கழகத்தை “'இரட்டை அதிகாரத்தின்' மிகவும் அபிவிருத்தி அடைந்த வடிவமாக” மற்றும் “பிரெஞ்சு சோசலிச குடியரசின் முதல் சுதந்திர பிராந்தியமாக” வர்ணிக்குமளவிற்கு கூட சென்றார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்: “நவ-முதலாளித்துவ பாவனையாளர் சமூகத்திற்கு மாணவர் எதிர்ப்புக்கு தூண்டுபொருளான சித்தாந்தம், அவர்களது போராட்டத்தில் அவர்கள் பயன்படுத்திய அணுகுமுறைகள், சமூகத்தில் அவர்கள் கொண்டிருந்த மற்றும் கொண்டிருக்க போகின்ற இடம் (இது அவர்களில் பெரும்பான்மையினரை உயர்மட்ட அரசு தொழில் வழங்குனர்களாக அல்லது முதலாளித்துவவாதிகளாக ஆக்கும்) இந்த போராட்டத்திற்குக் குறிப்பிடத்தக்களவிற்கு ஒரு சோசலிச, புரட்சிகர, மற்றும் சர்வதேசிய குணாம்சத்தை வழங்கியது”. மாணவர்களது போராட்டம், "ஒரு புரட்சிகர மார்க்சிச அர்த்தத்தில் ஒரு மிக உயர்ந்த அரசியல் மட்டத்தை" எடுத்துக்காட்டியது.[8]
யதார்த்தத்தில் அங்கே மாணவர்களின் மத்தியில் மார்க்சிச அர்த்தத்திலான எந்த புரட்சிகர நனவின் சுவடும் இருக்கவில்லை. மாணவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்த அரசியல் கருத்துருக்கள், “புதிய இடது” என்றழைக்கப்பட்டதன் தத்துவார்த்த கிடங்கிற்குள் அவர்களது தோற்றுவாயைக் கொண்டிருந்ததுடன், அவை மார்க்சிசத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன.
பிரான்சில் '68 இயக்கம் குறித்து வரலாற்றாளர் இங்கிரிட் கில்ஷ்செர்-ஹோல்ட்ரை (Ingrid Gilcher-Holtey) பின்வருமாறு எழுதுகிறார்: “அந்த நிகழ்ச்சிப்போக்கை முன்னுக்குக் கொண்டு சென்ற அந்த மாணவர் குழுக்கள், வெளிப்படையாக தங்களைத்தாங்களே புதிய இடதின் புத்திஜீவித ஆலோசகர்களின் மீது அமைத்துக் கொண்டிருந்தன அல்லது அவர்களது கருத்துருக்கள் மற்றும் விமர்சனங்களால், குறிப்பாக ‘Socialisme ou barbarie’ மற்றும் ‘Arguments’ அமைப்புகளைச் சுற்றியிருந்த குழுவான 'Situationist International' இன் எழுத்துக்களால் மேலாளுமை பெற்றிருந்தன. அவர்களது மூலோபாய நடவடிக்கை (நேரடியாக ஆத்திரமூட்டுவது) மற்றும் அவர்களது சொந்த சுய-கருத்துரு (வறட்டுவாத-எதிர்ப்பு, அதிகாரத்துவ-எதிர்ப்பு, அமைப்புரீதியிலான-எதிர்ப்பு, சர்வாதிபத்திய-எதிர்ப்பு ஆகியவை) இரண்டுமே புதிய இடதின் ஒருங்கிணைக்கும் வடிவங்களுக்கு சரியாக பொருந்தி இருந்தன”. [9]
தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர வர்க்கமாக கருத்துவதற்கு பதிலாக, புதிய இடது, தொழிலாளர்களை நுகர்வு மற்றும் ஊடங்களினூடாக முதலாளித்துவ வர்க்க சமூகத்திற்குள் முற்றிலுமாக ஒருங்கிணைந்திருந்த ஒரு பின்தங்கிய மக்களாக பார்த்தது. புதிய இடது, அதன் சமூக பகுப்பாய்வில், முதலாளித்துவ சுரண்டல் என்ற இடத்தில் உடைமை மாற்றத்தின் பாத்திரத்தை ―உடைமை மாற்றம் என்பதை முற்றிலும் உளவியல்ரீதியான அல்லது வாழ்வியல்வாத அர்த்தத்தில்― வலியுறுத்தியது. “புரட்சி” தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட முடியாது, மாறாக புத்திஜீவித மற்றும் சமூகத்தின் விளிம்பிலிருந்த குழுக்களால் முன்னெடுக்கப்படுமென அது வலியுறுத்தியது. புதிய இடதைப் பொறுத்த வரையில், உந்துசக்திகளாக இருப்பவை முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க முரண்பாடுகள் அல்ல, மாறாக "விமர்சனபூர்வ சிந்தனையும்" மற்றும் ஓர் அறிவொளிபெற்ற மேற்தட்டின் நடவடிக்கைகளாகும். புரட்சியின் இலக்கு இனியும் அதிகார மாற்றம் மற்றும் உடைமை சார்ந்த மாற்றமாக இருக்கவில்லை, மாறாக பாலியல் உறவுகளின் மாற்றங்கள் போன்ற சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களாகும் என்று அது கருதியது. புதிய இடதின் பிரதிநிதிகளது கருத்துப்படி அதுபோன்ற கலாச்சார மாற்றங்கள் ஒரு சமூக புரட்சிக்கான முன்நிபந்தனைகளாக இருந்தன.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்த நன்கறியப்பட்ட இரண்டு மாணவர் தலைவர்கள், டானியல் கோன்-பென்டிற் மற்றும் ரூடி டுட்ஷ்க (Rudi Dutschke) இருவரும் “Situationist International” ஆல் ஈர்க்கப்பட்டிருந்தனர். அது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கொண்டு நனவில் மாற்றத்தைக் கொண்டு வர பிரச்சாரம் செய்தது. நிஜத்தில் டாடாவினதும் (Dada- 20ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய நவீன-படைப்பியக்கம்) மற்றும் மிகையதார்த்தவாத பாரம்பரியத்தில் வேரூன்றிய கலைஞர்களின் ஒரு குழுவால் உருவாக்கப்பட்ட Situationists அமைப்பு, நடைமுறை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. Situationists இன் ஒரு சமீபத்திய கட்டுரை அதை இவ்வாறு குறிப்பிடுகிறது: “செயல்வீரர்களின் இடையூறு, தீவிரப்பாடு, துஷ்பிரயோகம், மறுமதிப்பீடு மற்றும் உறுதியான அன்றாட நிலைமைகளை விளையாட்டுத்தனமாக மறுஉருவாக்கம் செய்வது ஆகியவையே அனைத்து விதத்திலும் ஊடுருவி பரவிய சலிப்பிலிருந்து எழும் ஆழ்ந்த உறக்கத்தின் சர்வ வல்லமை பிடியில் சிக்கியுள்ள அனைவரது நனவையும் நிரந்தரமாக புரட்சிகரமயப்படுத்த மற்றும் உயர்த்த வழிவகைகளாக உள்ளன”. [10]
அதுபோன்ற நிலைப்பாடுகள் மார்க்சிசத்திற்கு எவ்விதமான தொடர்புமற்ற விடயங்களாகும். தீர்க்க முடியாத வர்க்க மோதல்களால் குணாம்சப்பட்ட ஒரு சமூகத்திற்குள் இருக்கும் அதன் நிலைமையில் வேரூன்றி இருந்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை அவர்கள் மறுத்தனர். புறநிலைரீதியில் அமைந்திருந்த வர்க்க போராட்டமே புரட்சிக்கு உந்துசக்தியாக உள்ளது. அதன் விளைவாக மார்க்சிச புரட்சியாளர்களது பணி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை தூண்டிவிடுவதல்ல அதற்கு மாறாக அதன் அரசியல் நனவை உயர்த்துவதும் மற்றும் அதன் சொந்த விதிக்கு அதுவே பொறுப்பேற்க உதவும் வகையில் ஒரு புரட்சிகர தலைமையை வழங்குவதும் ஆகும்.
இலத்தீன் வட்டாரப் பகுதியில் முன்னணிப் பாத்திரம் வகித்த அராஜகவாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் ஏனைய குட்டி முதலாளித்துவ வர்க்க குழுக்கள் "ஒரு புரட்சிகர மார்க்சிச அர்த்தத்தில் மிகவும் உயர்ந்த அரசியல் மட்டத்தை" (பியர் பிராங்) எடுத்துக்காட்டினார்கள் என்று மட்டும் பப்லோவாதிகள் அறிவிக்கவில்லை, அவர்கள் அவர்களது சாகச நடவடிக்கையில் உத்வேகத்துடன் பங்குபற்றிய அதுபோன்ற அரசியல் கண்ணோட்டங்களையும் முன் கொண்டு வந்தனர்.
இலத்தீன் வட்டாரப் பகுதியில் அராஜகவாதத்தால் ஈர்க்கப்பட்ட வீதிப் போராட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களது அரசியல் கல்வியூட்டலில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்பதோடு, அது ஒருபோதும் பிரெஞ்சு அரசிற்கு ஓர் ஆழ்ந்த அச்சுறுத்தலை முன்னிறுத்தவில்லை. 1968 இல் அந்த அரசு ஒரு நவீன பொலிஸ் அமைப்பையும் மற்றும் இரண்டு காலனித்துவ போர்களின் போக்கில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மற்றும் நேட்டோவின் ஆதரவில் சார்ந்திருக்கக்கூடிய இராணுவத்தையும் கொண்டிருந்தது. அதை 19ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட புரட்சிகர தந்திரோபாய வழிமுறைகளான தலைநகர வீதிகளில் தடையரண்களைக் கட்டமைப்பது போன்றவற்றால் கவிழ்க்க முடியாது. இலத்தீன் வட்டாரத்தின் வீதிப் போராட்டங்களில் காணப்பட்ட பெரியளவிலான வன்முறைகளுக்கு பிரதான பொறுப்பாக பாதுகாப்பு படைகளே இருந்த போதினும், அங்கே மாணவர்கள் ஆர்வத்துடன் தடையரண்களை அமைத்து, பொலிஸூடன் ஆடு புலி ஆட்டம் விளையாடி கொண்டிருந்ததில் இருந்த அவர்களது குழந்தைத்தனமான புரட்சிகர கவர்ச்சிவாதமும் அதற்கு ஒரு ஐயுறவுக்கிடமில்லாத காரணியாக இருந்தது.
4
அலன் கிறிவினின் JCR எவ்வாறு ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளை மூடிமறைத்தது (2)
ஸ்ராலினிசத்திற்கு ஒரு மூடிமறைப்பு
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் CGT தொழிற்சங்கத்தின் ஸ்ராலினிஸ்டுகள் இளைஞர்களின் கிளர்ச்சிகரமான உத்வேகத்தை வெறுத்தொதுக்கியதுடன், gauchistes (இடதுசாரி தீவிர போக்கினர்) என்றும் மற்றும் ஆத்திரமூட்டுபவர்கள் என்றும் அவர்களால் குறிப்பிடப்பட்ட இடதுசாரி மாணவர் குழுக்களால் அவர்கள் வெறுக்கப்பட்ட போதினும் கூட, அரசியல்ரீதியாக ஸ்ராலினிஸ்டுகளால் அவர்களுடன் சாத்தியமான அளவிற்கு கூடி வாழ முடிந்திருந்தது. டானியல் கோன்-பென்டிற் இன் அராஜகவாத நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்திற்குள் ஸ்ராலினிஸ்டுகளின் மேலாதிக்கத்தை அரிதாகவே அச்சுறுத்தியது. அதேபோல சீன கலாச்சாரப் புரட்சிக்கானதும் மற்றும் ஆயுதமேந்திய போராட்டத்திற்கான மாவோவாதிகளின் ஆதரவினாலும் அதேமாதிரி அவர்களது மேலாதிக்கத்தையும் அச்சுறுத்தமுடியாது இருந்தது.
மேலும் பப்லோவாதிகள், மிக கவனமாக ஸ்ராலினிஸ்டுகளுடனான மோதல்களை தவிர்த்துக் கொண்டனர். அவர்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் ஸ்ராலினிச தலைமைக்கு இடையிலான உறவுகளைக் கொதிப்பாக்கும் அல்லது பின்னர் ஒரு நெருக்கடிக்கு கொண்டு வரும் எந்தவொரு அரசியல் முனைவுகளையும் தவிர்த்தனர். 1968 நெருக்கடியின் உச்சகட்ட சூழலில், தொழிலாளர்கள் கிறெனெல் உடன்படிக்கையை நிராகரித்துடன், அதிகாரத்தைக் கையிலெடுப்பது மீதான பிரச்சினை நிகழ்ச்சி நிரலில் இருந்தபோது, JCR (Jeunesse Communiste Révolutionnaire), ஸ்ராலினிஸ்டுகளுக்கு ஒரு மூடிமறைப்பை வழங்கியது. இந்த சம்பவங்களுக்கு இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், அலன் கிறிவின் மற்றும் டானியல் பென்சாயிட் JCR இன் பங்கினை சிறப்பாக எடுத்துக்காட்டும் முயற்சியாக 1968 இன் சுயபரிசோதனை ஒன்றை எழுதினார்கள். ஆனால் அது அதன் நிஜமான பாத்திரத்தை தெளிவாக அம்பலமாக்கியது. [11]
பாரிய இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட இரண்டு மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்களிலும் JCR பங்கெடுத்தது. அவை, மே 27 இல் சார்லெட்டி (Charléty) மைதானத்தில் UNEF (Union Nationale des Étudiants de France) மாணவர் அமைப்பு, CFDT தொழிற்சங்கம் மற்றும் PSU ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பாரிய கூட்டம், மற்றும் மே 29 இல் PCF மற்றும் CGT இன் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை ஆகும்.
அப்போது PSU இன் ஓர் அங்கத்தவராக இருந்த அனுபவமிக்க முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதி பியர் மொன்டெஸ்-பிரான்ஸ் இன் கீழ் ஒரு இடைமருவு அரசாங்கத்திற்கு பாதை வகுப்பதே சார்லெட்டி மைதான பொதுக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. ஒழுங்கை மீட்டமைக்க மற்றும் புதிய தேர்தல்களுக்கு தயாரிப்பு செய்வதற்காக வேலைநிறுத்தத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே அதுபோன்றவொரு அரசாங்கத்தின் பணியாக இருந்திருக்கும்.
இந்த விடயத்தில் வலதுசாரி பத்திரிகையின் பிரிவுகளே கூட, அதுபோன்றவொரு "இடது" அரசாங்கத்தால் தான் அப்போதைய ஒழுங்கமைப்பை பாதுகாக்க முடியுமென உடன்பட்டிருந்தன. நிதிய பத்திரிகை Les Echos மே 28 இல், சீர்திருத்தமா, புரட்சியா அல்லது "அராஜகவாதமா" என்பதற்கிடையே மட்டுமே விருப்பத்தேர்வு இருப்பதாக எழுதியது. “வெளியே வருவதற்கு ஒரு பாதை கண்டறியப்பட வேண்டும்" என்ற தலைப்பின் கீழ் அது பின்வருமாறு குறிப்பிட்டது:
“யாரும் யாரையும் நம்பவோ அல்லது யார் சொல்வதையும் கேட்கவோ தயாராக இல்லை. ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டுக்கு CGT ஓர் அரணாக இருக்குமென இப்போது வரையில் தென்பட்டது. ஆனால் இப்போதோ அது யாருடைய கிளர்ச்சி எழுச்சிசியை குறைமதிப்பீடு செய்திருந்ததோ, கலகத்தில் ஈடுபட்டுள்ள அந்த பொதுவான நபர்களாலேயே அது நிலைகுலைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்தக்காரர்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர், அவர்கள் எந்த வாக்குறுதியையும் —அது யாருடையதாக இருந்தாலும்— இனியும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அரசாங்கத்தைக் குறித்து கூற வேண்டியதே இல்லை.... ஜெனராலின் (டு கோல்) சமீபத்திய ஒரு துரதிருஷ்டவசமான பேச்சில் 'சீர்திருத்தத்திற்கு ஒப்புக் கொள்கிறேன், சீர்குலைவு வேண்டாம்' என்று கூறியிருக்கிறார். சீர்திருத்தமா அராஜகவாதமா எது வெற்றி பெறும் என்பது தெளிவாக இல்லாத நிலைமைகளின் கீழ் இன்று அவ்விரண்டையும் ஒருவர் எதிர்கொள்கிறார்.”
இந்நேரத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைய பெரிதும் தயாரிப்பு செய்திருந்தது. அதன் பொதுச் செயலாளர் வால்டெக் றொஷே (Waldeck Rochet) அறிவிக்கையில், “ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மக்களின் ஜனநாயக ஐக்கிய அரசாங்கத்தைக் கொண்டு, கோலிச ஆட்சியைப் பிரதியீடு" செய்வதற்கான நிலைமைகள் குறித்து விவாதிக்க அவரும் பிரான்சுவா மித்திரோனும் உடனடியாக சந்திக்க இருப்பதாக மே 27 இல் முன்மொழிந்தார். ஸ்ராலினிச வார்த்தை பிரயோகங்களில் பரிச்சயமானவர்களுக்கு, “ஜனநாயக ஐக்கியத்திற்கான மக்களின் அரசாங்கம்" என்பது முதலாளித்துவ சொத்துறவுகளைப் பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை அர்த்தப்படுத்துகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இருந்திருக்காது.
ஆனால் PCF இல்லாமலேயே, மித்திரோனும் மொன்டெஸ்-பிரான்ஸ் உம் கூட்டாக ஓர் அரசாங்கத்தை அமைத்துவிடுவார்களோ என்று அது அஞ்சியது. ஆகவே CGT உடன் இணைந்து, மே 29 இல் "மக்களின் அரசாங்கம்" என்ற முழக்கத்தின் கீழ் அதன் சொந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை அது ஏற்பாடு செய்தது. முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து ஒரு புரட்சிகரமான வழியில் அதிகாரத்தைப் பிடிப்பது குறித்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் கனவிலும் நினைத்ததில்லை என்றபோதினும், மித்திரோன் உடனோ அல்லது ஏனைய சில முதலாளித்துவ அரசியல்வாதிகளுடனோ சேர்ந்து ஒரு கூட்டணிக்காக மட்டுமே அது போராடி இருந்த போதினும், அந்த முழக்கம் பெருந்திரளான மக்களின் புரட்சிகர மனோபாவத்தை ஏற்றது.
“மக்களின் அரசாங்கத்தை ஏற்போம்! மித்திரோன், மொன்டெஸ்-பிரான்ஸ் வேண்டாம்!” என்ற முழக்கத்தின் கீழ் PCF-CGT ஆர்ப்பாட்டத்தில் JCR பங்கெடுத்தது, அவ்விதத்தில் அது நடைமுறையில் PCF இன் உபாயத்திற்கு ஆதரவளித்தது. கிறிவின் மற்றும் பென்சாயிட் அவர்களது சுயபரிசோதனை குறித்த ஆய்வில் JCR இன் முழக்கம் குறித்து பின்வருமாறு எழுதினார்கள்:
“அந்த சூத்திரமாக்கல் தெளிவின்றி கையாளப்பட்டது. வேலைநிறுத்தம் மற்றும் அதன் அங்கங்களின் மிகவும் போர்குணமிக்க வெளிப்பாடாக கூறத்தகுந்த ஒரு மக்களின் அரசாங்கத்தை, அது, அரசியல் பிரமுகர்களின் ஓர் அரசாங்கத்திற்கு எதிர்நிலையில் கொண்டு வந்திருந்தது. இடது கட்சிகளின் ஒரு கூட்டணி அரசாங்கத்தை முற்றிலுமாக நிராகரிக்காமல், அது, தொழிலாள வர்க்கத்துடன் எந்தவொரு தெளிவான தொடர்புமின்றி இருந்த மற்றும் வர்க்க கூட்டுறவின் அடிப்படையில் அப்போதிருந்த அமைப்புக்களில் இருந்த தமது சுயவுரிமையை பயன்படுத்த பின்னடித்த பிரமுகர்களையும் அது தாக்கியது.... ஆழ்ந்து ஆராய்ந்த தெளிவை அது கொண்டிருக்காத நிலையில், “மக்களின் அரசாங்கம்" என்ற சூத்திரமயமாக்கல், இடது கட்சிகளின் ஓர் அரசாங்கத்தைக் குறித்தது என்பதற்கு எவ்வித விபரங்களுக்குள்ளும் செல்ல வேண்டியதே இல்லை.” [12]
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உள்ளடங்கிய ஒரு இடது முதலாளித்துவ அரசாங்கமே "அந்த வேலைநிறுத்தம் மற்றும் அதன் அங்கங்களின் விளைபொருளாக" இருக்குமென்பதை தொழிலாள வர்க்கத்தின் "மிகவும் போர்குணமிக்க பிரிவுகளை" நம்புமாறு செய்வதே JCR ஆல் பயன்படுத்தப்பட்ட இந்த சூத்திரமாக்கலின் நோக்கமாக இருந்தது. இது வெளிப்படையான ஓர் ஒப்புக்கொள்ளலாகும். புரட்சிகர நெருக்கடி அதன் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில், CGT அதன் அதிகாரத்தை இழந்துவிட்டிருந்த நேரத்தில், செல்வாக்கெல்லையிலிருந்து டு கோல் காணாமல் போயிருந்த அந்த வேளையில், அதாவது பகிரங்கமாக மற்றும் தீர்க்கமாக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருந்த அந்நேரத்தின் போது, JCR “தெளிவில்லா" பாத்திரம் வகித்ததுடன், வேண்டுமென்றே உறுதியின்றி இருந்தது. யார் நாட்டின் அதிகாரத்தை கொண்டிருந்தார்கள் என்ற தீர்க்கமான கேள்வியை அது தவிர்த்தது.
ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்து JCR ஏற்றுக் கொண்ட "மக்களின் அரசாங்கத்திற்கான" கோரிக்கை, மக்களிடையே கணிசமான ஆதரவைப் பெற்றது. ஆனால் அந்த கோரிக்கை பொதுவாகவும், ஒன்றிற்கும் கடமைப்பாடின்றியும் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோரிக்கையை சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிர போக்கினர் உடனான ஒரு கூட்டு அரசாங்கத்திற்கான கோரிக்கையாக புரிந்து கொண்டது, அத்தகையவர்களின் மிக முக்கிய பணி அப்போதிருந்த ஒழுங்கைப் பேணுவதாகவே இருந்திருக்கும். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனையில் புரட்சிகரமாக அதிகாரத்தைக் கையிலெடுப்பது குறித்து மேலதிகமாக அங்கே ஒன்றும் இருக்கவில்லை. பப்லோவாதிகள் இந்த நிலைப்பாட்டை ஒருபோதும் சவால் செய்யவில்லை என்பதுடன், அவர்களும் ஸ்ராலினிஸ்டுகளின் பின்னால் சென்றனர்.
JCR என்ன செய்திருக்க வேண்டும்?
அதிகாரத்தை பிடிப்பதற்கு அவசியமான ஆதரவு JCR க்கு இருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் ஒரு சிறுபான்மையினராக இருந்தாலுமே கூட புரட்சிகர மார்க்சிஸ்டுகள் அவர்களின் வேலைத்திட்டத்திற்காக எவ்வாறு போராடி, பெரும்பான்மை தொழிலாளர்களை அவர்கள் தரப்பில் வென்றெடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் எண்ணிறந்த வரலாற்று முன்மாதிரிகள் உள்ளன.
ரஷ்யாவில், 1917 இன் தொடக்கத்தில், மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களை விட லெனினின் போல்ஷிவிக்குகளுக்கு கணிசமானளவிற்கு வெகு குறைவான ஆதரவே இருந்தது. இருந்தபோதினும் திறமையான மற்றும் கோட்பாட்டுரீதியிலான அரசியலைப் பயன்படுத்தி, போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை வென்று, அக்டோபரில் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேலை செய்தனர். ட்ரொட்ஸ்கி 1933 இல் இருந்து 1935 வரை நாடுகடத்தப்பட்டு பிரான்சில் இருந்தபோது, அவர் பிரெஞ்சு பிரிவின் நடவடிக்கைகளில் செயலூக்கத்துடன் ஆர்வங்காட்டினார், மேலும் ஒரு சிறுபான்மையாக இருந்தாலும் அது எவ்வாறு ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராட முடியும் என்பதைக் குறித்து விரிவான பரிந்துரைகளை முன்வைத்தார். சீர்திருத்தவாத கட்சி எந்திரத்திடமிருந்து (பின்னர் ஸ்ராலினிச கட்சி எந்திரத்திடமிருந்தும் கூட) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் என்பதும் மற்றும் ஒரு சுயாதீனமான புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதுமே எப்போதும் மத்திய பிரச்சினையாக இருந்தது.
லெனின் 1917 இல் நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்து ரஷ்யா திரும்பியபோது, மென்ஷிவிக்குகளும் சமூக புரட்சியாளர்களும் மந்திரி பதவிகள் ஏற்றிருந்த இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை நோக்கிய போல்ஷிவிக்குகளின் அரை-மனதான மனோபாவத்தை அவர் தாக்கினார். அவர் உறுதியான எதிர்ப்பையும், சோவியத்துக்கள் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு வேலைத்திட்டத்தையும் வலியுறுத்தினார்.
இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போல்ஷிவிக்குகள், தொழிலாளர்களை இறுதியில் அவர்களது சீர்திருத்தவாத தலைவர்களிடமிருந்து முறிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு தந்திரோபாயத்தைப் பிரயோகித்தனர், அது முந்தையவர்களுக்கும் மற்றும் பிந்தையவர்களுக்கும் இடையிலான இடைவெளியை ஆழப்படுத்தியது. சமூகப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து முறித்துக் கொண்டு, அவர்களது சொந்த கரங்களில் அதிகாரத்தை எடுக்க வேண்டுமென போல்ஷிவிக்குகள் கோரினர். சமூகப் புரட்சியாளர்களும் மற்றும் மென்ஷிவிக்குகளும் முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து சுயாதீனப்பட்ட ஓர் அரசாங்கத்தை அமைக்க தகைமையற்று இருந்ததை நிரூபித்த போதினும், “மென்ஷிவிக்குகள் மற்றும் சமூகப் புரட்சியாளர்களுக்கு, போல்ஷிவிக்குகளின் கோரிக்கை:” என்பதில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார், இந்த அனுபவம் குறித்து பின்னர் அவர் இடைமருவு வேலைத்திட்டத்தில் (Transitional Programme) குறிப்பிட்டிருந்தார்: “'முதலாளித்துவ வர்க்கத்துடன் முறித்துக் கொண்டு, அதிகாரத்தை உங்கள் சொந்த கரங்களில் எடுங்கள்!' அது பெருந்திரளான மக்களுக்கு பிரமாண்டமான கல்வியூட்டலின் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். அதிகாரத்தை எடுக்க மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களின் பிடிவாதமான விருப்பமின்மை, மிக வேகமாக ஜூலை நாட்களின் போது அம்பலமானது, நிச்சயமாக அது பாரிய மக்களின் கருத்துக்கு முன்னால் அவர்களைப் பலவீனப்படுத்தியதுடன், போல்ஷிவிக்குகளின் வெற்றிக்கு தயாரிப்பு செய்தது.” [13]
1968 இல், பொது வேலைநிறுத்தத்திற்கான அணிதிரட்டலின் அடிப்படையில் PCF ம் CGT ம் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும் எனக் கோருவதை JCR முன்னிறுத்தியிருக்கலாம். முதலாளித்துவ கட்சிகளை நோக்கிய ஸ்ராலினிஸ்டுகளின் சமரச மனோபாவத்திற்கு எதிராக திட்டமிட்ட கிளர்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து, இந்த கோரிக்கை மிகப் பிரமாண்ட அரசியல் உந்துசக்தியை கொண்டிருந்திருக்கும். அது தொழிலாள வர்க்கத்திற்கும் ஸ்ராலினிச தலைமைக்கும் இடையிலான மோதலை கூர்மையாக்கி இருக்கும் என்பதுடன், அவர்களிடமிருந்து அரசியல்ரீதியில் தொழிலாளர்கள் முறித்துக் கொள்ளவும் உதவியிருக்கும். ஆனால் அதுபோன்ற கோரிக்கைகளுடன் ஸ்ராலினிஸ்டுகளை ஒரு சிக்கலான நிலைக்கு கொண்டு வருவது பப்லோவாதிகளின் சிந்தனைகளுக்கு மிகவும் அப்பாற்பட்டு இருந்தது. புரட்சிகர நெருக்கடி அதன் உச்சநிலையை தொட்டபோது, அவர்கள் தாம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நம்பகரமான முண்டுகோல்கள் என்பதை நிரூபித்தனர்.
எவ்வாறிருப்பினும் முதலாளித்துவ பத்திரிகைகளில் பகிரங்கமாக எழுதப்பட்டு வந்த நிலைமைகளின் கீழ், பப்லோவாதிகளால் ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தை புறக்கணிக்க முடியவில்லை. ஜூன் 1968 இல் பியர் பிராங், “5 மில்லியன் வாக்குகளுக்காக 10 மில்லியன் வேலைநிறுத்தக்காரர்களின் வேட்கையைக் காட்டிக்கொடுத்ததாக" PCF ஐயும் CGT ஐயும் குற்றஞ்சாட்டினார். “PCF தலைமையின் இந்த காட்டிக்கொடுப்பை" அவர் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் வரலாற்று காட்டிக்கொடுப்புடனேயே கூட ஒப்பிட்டார்: “1918-19 ஜேர்மன் புரட்சிக்கு எதிராக Noskes மற்றும் Eberts நடந்து கொண்ட விதத்தின் அளவிற்கு இந்த தலைமை இதுவரை செய்யவில்லை, ஏனென்றால், முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதன் தேவை இருந்திருக்கவில்லை. ஆனால் 'அதிதீவிர இடதுகளை' நோக்கிய அதன் நடத்தை, அவசியம் எழும்போது அது அவ்வாறு செய்ய தயாராகவே உள்ளது என்பதில் எவ்வித சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை.” [14]
ஆனால் இதுவரையில் அதன் ஒட்டுமொத்த அரசியல் ஆற்றலையும் சாகச நடவடிக்கைகள் மீது ஒன்றுதிரட்டிய JCR, மாணவர்களை புரட்சிகர முன்னணிப்-படையாக அறிவித்த நிலையில், பப்லோவாதிகளோ நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவின் வடிவில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புதல் என்ற மிகவும் தீர்க்கமான பிரச்சினையை தட்டிக் கழித்தனர். அவர்கள் வேண்டுமென்றே ஸ்ராலினிஸ்டுகளின் மேலாளுமை குறித்த கேள்வியை தவிர்த்தனர். நான்காம் அகிலத்தில் 1953 உடைவுக்கு இட்டுச் சென்ற அதன் அமைப்பை ஸ்ராலினிசத்திற்குள் கரைத்துவிடும் பப்லோவாத முன்னோக்கே 1968 இல் அவர்களது கொள்கைகளின் மையப்புள்ளியாக இருந்தது.
அவர்கள், ஸ்ராலினிசத்துடன் முறித்துக்கொள்ளவும் அழைப்புவிடுக்கவில்லை, நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கும் அவர்கள் போராடவில்லை. அதற்கு மாறாக அவர்களது கொள்கைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களது நடவடிக்கைகள், ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பை தன்னியல்பாக கடந்து சென்று, தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியைத் தீர்க்கும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இருந்தன. அதன்விளைவாக JCR அதுவே ஒரு நிஜமான புரட்சிகர முன்னணிப்-படையின் அபிவிருத்திக்கு மிக முக்கிய தடையாக மாறியது.
1935 இல் லியோன் ட்ரொட்ஸ்கி, மக்கள் முன்னணியை எதிர்க்கும் வகையில் பிரான்சில் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவதை ஊக்குவித்தார். "Radical Party (தீவிரவாத கட்சி) வடிவில், ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டணியாக" மக்கள் முன்னணியை அவர் குணாம்சப்படுத்தினார்.
"மக்கள் முன்னணிக்காக ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம், தொழிற்சாலை, படையினர் குடியிருப்பு அல்லது கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இருநூறு, ஐநூறு அல்லது ஆயிரம் குடியானவர்கள், போராட்ட நடவடிக்கைகளின் போது, உள்ளூர் நடவடிக்கை குழுவிற்கு அவர்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்,” என்றவர் எழுதினார். நடவடிக்கை குழுக்களை தேர்ந்தெடுப்பதில் தொழிலாளர்கள் மட்டுமல்ல, “மாறாக பொதுச்சேவைத்துறை, பணியாளர்கள், உத்தியோகத்தர்கள், முன்னாள் போர் வீரர்கள், கலைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிறுவிவசாயிகளும் கூட அதில் பங்கெடுக்கலாம். இவ்விதத்தில் நடவடிக்கை குழுக்கள், குட்டி முதலாளித்துவத்தின் மீது பாட்டாளி வர்க்கம் மேலாளுமை கொள்வதற்குரிய போராட்ட பணிகளுடன் நெருக்கமாக இணைந்திருக்கும். ஆனால் அவர்கள் தொழிலாளர்களின் அதிகாரத்துவத்திற்கும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை மிகவும் சிக்கலாக்குவார்கள்.” அது "அனைத்து மற்றும் ஒவ்வொரு மக்களின் பொதுவான ஜனநாயக பிரதிநிதித்துவமாக இல்லாமல், மாறாக போராடுகின்ற பெருந்திரளான மக்களின் புரட்சிகர பிரதிநிதித்துவமாக இருக்கும். நடவடிக்கை குழு, போராட்டத்திற்குரிய கருவியாக மாறும்,” என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். அதுவே "கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் எதிர்-புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்குரிய ஒரே வழிவகையாக" இருக்கும் என்றார். (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது) [15]
1968 இல் பப்லோவாதிகள் நடவடிக்கை குழுக்களுக்கான இந்த கோரிக்கையை ஏற்றனர். சான்றாக, மே 21 அன்று, வேலையிடங்களில் வேலைநிறுத்தக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களிலும் புறநகர் பகுதிகளிலும் நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் அழைப்பு விடுத்து JCR ஒரு துண்டறிக்கையை வினியோகித்தது. அந்த துண்டறிக்கை தொழிலாளர்களின் அரசாங்கத்தை அமைக்க அழைப்புவிடுத்ததுடன், பின்வருமாறு வலியுறுத்தியது: “நாம் விரும்பும் அதிகாரம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் வேலைநிறுத்தத்திலிருந்தும், நடவடிக்கை குழுக்களிலிருந்தும் மேலெழ வேண்டும்.” ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிர போக்கினரைப் பப்லோவாதிகள் தழுவிக் கொண்டமை, இந்த கோரிக்கையின் எந்தவொரு புரட்சிகர உள்ளடக்கத்தையும் இல்லாதொழித்துவிட்டது. ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதிலிருந்து விலகி, பப்லோவாதிகளால் எழுப்பப்பட்ட அந்த கோரிக்கைகள், வெறுமனே முற்றிலுமான சந்தர்ப்பவாத கொள்கைகளாக இருந்த தீவிர போக்கின் பின்புல குரலை ஒத்திருந்தது.[16]
ட்ரொட்ஸ்கிக்கு எதிராக பியர் பிராங்
பியர் பிராங் அதுபோன்றவொரு அரசியல் பாத்திரம் வகித்தது இதுதான் முதல்முறை அல்ல. அவர் அதேபோன்ற காரணங்களுக்காக 1935 இல் ட்ரொட்ஸ்கியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார், பின்னர் அதையடுத்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதேநேரத்தில் அவர் La Commune இதழைச் சுற்றி றேமோன்ட் மொலினியே (Raymond Molinier) உடன் சேர்ந்து ஒரு குழுவுக்குத் தலைமை ஏற்றிருந்தார். அக்குழு மத்தியவாத இயக்கங்களுடன் —குறிப்பாக மார்சோ பிவேர் (Marceau Pivert) தலைமையிலான புரட்சிகர இடதுடன் (Gauche révolutionnaire)— “புரட்சிகர நடவடிக்கை" என்ற பெயரில் ஐக்கியத்தைக் கோரியது. பிவேர் திருத்தமுடியாத ஒரு மத்தியவாதியாக இருந்தார். சாத்தியமானளவிற்கு புரட்சிகர வார்த்தை பிரயோகங்களில் நாட்டங்கொண்டிருந்த போதினும், நடைமுறையில் அவர் 1936 பொது வேலை நிறுத்தத்தை திணறடித்த லெயோன் புளூம் (Léon Blum) தலைமையிலான மக்கள் முன்னணி அரசாங்கத்தில் இடது கன்னையாக இருந்தார்.
ட்ரொட்ஸ்கி, பிவேர் இன் மத்தியவாதத்தையும், மொலினியே மற்றும் பிராங்கின் உபாயங்களையும் சளைக்காமல் எதிர்த்தார். “பிவேர் போக்கினது சாரம் வெறுமனே இது தான்: புரட்சிகர முழங்கங்களை ஏற்றுக்கொள், ஆனால் [ஒரு வலதுசாரி சமூக ஜனநாயகவாதியான] ஷிரோம்ஸ்கி (Zyromsky) மற்றும் புளூம் இடமிருந்து உடைத்துக்கொள்வது மற்றும் ஒரு புதிய கட்சியையும் புதிய அகிலத்தையும் உருவாக்குவது போன்ற அவசியமான முடிவுகளை எடுப்பதில்லை. 'புரட்சிகரமான' முழக்கங்களிலிருந்து அவசியமான தீர்மானங்களைப் பெறாமல், அவற்றை ஏற்றுக் கொள்வதும், புதிய கட்சி மற்றும் புதிய அகிலத்தை உருவாக்குவதுமாக இருந்தது. அது இல்லையென்றால், அனைத்து 'புரட்சிகர' முழக்கங்களும் பயனற்ற வெற்று முழக்கங்களாக மாறிவிடுகின்றது.” அவர் மொலினியே மற்றும் பிராங்கை, “பின்கதவுப் பேச்சுவார்த்தைகள் ஊடாக, தனிப்பட்ட சூழ்ச்சிகள் மூலமாக, புரட்சிகர இடதின் அனுதாபங்களைப் பெற முயல்வதாகவும் மற்றும் அனைத்திற்கும் மேலாக நமது முழக்கங்களையும் மத்தியவாதிகள் மீதான விமர்சனங்களையும் அவர்கள் கைதுறந்துவிட்டதாகவும்" குற்றஞ்சாட்டினார். [17]
அடுத்தடுத்த கட்டுரையில், ட்ரொட்ஸ்கி, மொலினியே மற்றும் பிராங் இன் நிலைப்பாடுகளை ஓர் அரசியல் குற்றமாக வர்ணித்தார். அவர்கள் தமது வேலைதிட்டத்தை மறைப்பதாகவும் மற்றும் தொழிலாளர்களுக்கு "பிழையான பாதையை காட்டுவதாகவும்" அவர்களை ட்ரொட்ஸ்கி குற்றஞ்சாட்டினார். “அதுவொரு குற்றமாகும்!” ஒருங்கிணைந்த நடைமுறை வேலைகளை விட புரட்சிகர வேலைத்திட்டத்தின் பாதுகாப்பே முன்னுரிமையானது என்றவர் வலியுறுத்தினார். “'பாரிய பத்திரிகையா'? புரட்சிகர நடவடிக்கையா? எங்கிலும் கம்யூன்களா? … மிகவும் அருமை, மிகவும் அருமை தான். … ஆனால் வேலைத்திட்டம் தான் முதலில்!” [18]
“புதிய புரட்சிகரக் கட்சி இல்லாமல், பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் பேரழிவுக்குள் தள்ளப்படுகிறது,” என அவர் தொடர்ந்தார். “பாட்டாளி வர்க்கத்தின் கட்சி அகிலமாக மட்டுமே இருக்க முடியும். இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலம் புரட்சிக்கு மிகப்பெரிய தடையாக மாறிவிட்டன. ஒரு புதிய அகிலத்தை —நான்காம் அகிலத்தை— உருவாக்குவது அவசியாகும். அதன் அவசியத்தை நாம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். குட்டி-முதலாளித்துவ மத்தியவாதிகள், அவர்களின் சொந்த கருத்துக்களது விளைவுகளின் முன்னால் ஒவ்வொரு படியிலும் தடுமாறுகின்றனர். புரட்சிகர தொழிலாளி, இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலத்துடனான அவரது மரபார்ந்த இணைப்பால் முடமாக்கப்படலாம், ஆனால் அந்த உண்மையை அவர் புரிந்து கொள்ளும் போது, அவர் நேரடியாக நான்காம் அகிலத்தின் பதாகைக்குள் வருவார். இதற்காகத்தான் நாம் ஒரு முழுமையான வேலைத்திட்டத்தை பெருந்திரளான மக்களுக்கு முன்வைக்க வேண்டும். தெளிவற்ற சூத்திரங்கள் மூலமாக, நாம் மொலினியேக்கு மட்டுந்தான் சேவை செய்ய முடியும், அவரே கூட பிவேருக்கு சேவை செய்து வருகிறார், அதையொட்டி அவர் லெயோன் புளூமுக்கு மூடிமறைப்பை வழங்குகிறார். மேலும் புளூம் அவரது அனைத்து சக்தியையும் [பாசிசவாதி] de la Rocque க்கு பின்னால் செலவிடுகிறார் ...” (19)
பியர் பிராங் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி உடனான அவரது மோதலில் இருந்து ஒன்றையுமே கற்றுக்கொள்ளவில்லை. ஏதேனும் இருக்கிறதென்றால், அவர் 1935 இல் இருந்ததை விட 1968 இல் இன்னும் அதிகமாக வலதின் தரப்பில் நின்றார் என்பது தான். இம்முறை அவர் மார்சோ பிவேர் போன்ற மத்தியவாதிகளுடன் மட்டுமல்ல, மாறாக அராஜகவாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்க விரோத போக்குகளுடனும் நல்லிணக்கம் பேண முயற்சித்தார். 1935 இல் ஓர் "அரசியல் குற்றம்" குறித்த ட்ரொட்ஸ்கியின் கண்டனம், 1968 இல் இன்னும் அதிகமாகவே நியாயமானதாகியது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் புரட்சிகர மார்க்சிசத்தை நோக்கி திருப்புவதற்கு பப்லோவாதிகள் முக்கிய தடையாக விளங்கினர்.
இறுதியில் அவர்கள், ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்புக்கான மற்றும் அவர்களது சொந்த இயலாமைக்கான பொறுப்புகளை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்தினர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிவினும் மற்றும் பென்சாயிட்டும் எழுதினார்கள்: “அந்த இயக்கத்தின் ஆரம்பத்தில் ஒழுங்கமைந்திருந்த புரட்சிகர சக்திகளின் பலவீனங்களை, ஸ்ராலினிசம் மற்றும் சமூக-ஜனநாயகத்தின் குற்றங்களாக ஒருவரால் குற்றஞ்சாட்ட முடியும். ஆனால் ஒரு பித்துபிடித்த கருத்துவாதத்திற்குள் மூழ்குவதை ஒருவர் தவிர்க்க விரும்பினால், பின், ஒரு உருத்திரிந்த வகையில், அது தொழிலாள வர்க்கத்தின், அவர்களது போர்குணமிக்க போக்குகளின், தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்த அவர்களின் இயல்பான முன்னணி படையின் அதிக பொதுவான நிலைமையின் ஒரு வெளிப்பாடாகவும் உள்ளது.” அங்கே போராட்டத்தின் இயக்கவியலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தன என்று அவர்கள் தொடர்கின்றனர்: “எவ்வாறிருந்த போதினும் இவையெல்லாம் இரண்டாம்பட்சமாகவே இருந்தன.... வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பெருந்திரளானோர், ஒரு சமூக மோதலை ஒழுங்கு தீர்த்துக்கொள்ளவும் மற்றும் ஒரு சர்வாதிபத்திய ஆட்சியின் நுகத்தடியை அகற்றவும் விரும்பினர். அவ்விடத்திலிருந்து இருந்து, புரட்சி வரையில் இன்னமும் நிறையத் தூரம் போக வேண்டி இருந்தது.” [20]
அதற்கடுத்த 20 ஆண்டுகள் கழித்து, கிறிவின் இன்னும் கூடுதலாக வெளிப்படையாக எடுத்துரைத்தார்: அவரது சுயசரிதத்தில் அவர் எழுதினார்: “நிச்சயமாக, JCR இன் தலைமையில் அந்த இயக்கம் எவ்வளவு தூரம் போகுமென்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அது எங்கே போகாது என்பது எங்களுக்கு முற்றிலும் துல்லியமாக தெரிந்தது. அது கடந்து செல்ல முடியாத அளவிலான ஒரு கிளர்ச்சி எழுச்சியாக இருந்தது, ஆனால் அதுவொரு புரட்சியாக இருக்கவில்லை: அங்கே ஒரு வேலைத்திட்டமோ, அல்லது, அதிகாரத்தை கையிலெடுக்க தயாராக இருந்த நம்பகமான அமைப்புகளோ இருக்கவில்லை.” [21]
இவ்விதமாக வாதிடும் போக்கு பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்குரியதாகும். ஸ்பானிய POUM உடனான அவரது கருத்து விவாதத்தில் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிடுகையில், அதையொரு "ஆற்றலற்ற மெய்யியல்,” (Impotent philosophy) என்று வர்ணித்தார், அது "மேலோட்டமான தொடர் அபிவிருத்திகளில், தோல்விகளை ஒரு அவசியமான இணைப்பாக இணங்குவிக்க முயல்கிறது, [மேலும்] தோல்விக்கு காரணமான வேலைத்திட்டங்கள், கட்சிகள், தனிமனிதப்பண்புகள் போன்ற உறுதியான காரணிகள் மீது அது கேள்வி எழுப்ப மறுக்கிறது.” [22]
புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) இன்று
பிரெஞ்சு உள்துறை மந்திரி றேமோன்ட் மார்செலான் (Raymond Marcellin), மொத்தம் 12 இடதுசாரி அமைப்புகளை ஜூன் 12, 1968 இல் அவர் கலைத்த போது, மற்றும் ஜூன் 28, 1973 இல் பாரீஸில் ஒரு பாசிச-விரோத ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் பொலிஸ் உடனான வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, இரண்டு முறைகளுக்கு குறைவில்லாமல், JCR மற்றும் அதற்கு பின்னர் வந்த கம்யூனிஸ்ட் கழகத்திற்கு (Ligue communiste) தடைவிதித்தார். ஆனால் 1968க்கு பின்னர், ஆளும் மேற்தட்டின் மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட உட்கூறுகள், முதலாளித்துவ ஒழுங்கிற்கு LCR ஓர் அச்சுறுத்தல் அல்ல என்பதிலும், நெருக்கடி சமயங்களில் அவ்வமைப்பைச் சார்ந்திருக்கலாம் என்பதிலும் தெளிவாக இருந்தன.
1968 இன் புரட்சிகர அலை எழுச்சிக்குப் பின்னர், புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும் (LCR) அது இணைந்து வேலைசெய்து வந்த அமைப்புகளும், ஸ்தாபக கட்சிகள், முதலாளித்துவ ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு எந்திரத்திற்கு ஆளணிகளை திரட்டுவதற்கு உகந்த விளைநிலமாகின. முன்னாள் LCR அங்கத்தவர்கள், சோசலிஸ்ட் கட்சியின் முன்னணிப் பதவிகளிலும் (ஹென்றி வேபர், ஜூலியான் ட்ரே, ஜெரார்ட் ஃபிலோச், இன்னும் பலர்), மெய்யியல் தலைவர்களின் இடங்களிலும் (டானியல் பென்சாய்ட்) மற்றும் முன்னணி முதலாளித்துவ நாளிதழ்களின் ஆசிரியர் குழுக்களிலும் ஆக்கிரமித்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) பதவிகளில் இருந்து புகழ்பெற்ற நாளிதழ் Le Monde இன் ஆசிரியர் குழு தலைமைக்கு உயர்ந்த எட்வி பிளெனெல் (Edwy Plenel) அவரது நினைவுக்குறிப்புகளில் இவ்வாறு எழுதுகிறார்: “நான் மட்டும் ஒரே ஆளில்லை: நிச்சயமாக தீவிரஇடதில் பின்னர் செயல்பட்டு வந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அல்லது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அல்லாதவர்கள் என பத்தாயிரக் கணக்கானவர்கள் எங்களின் ஆரம்பகால கோபத்திற்கு எமது விசுவாசத்தை கொண்டிருந்தாலும் நாங்கள் பெற்ற பயிற்சிகளுக்கு எங்களது நன்றிக்கடனை மூடிமறைக்காமல் போர்குணமிக்க படிப்பினைகளையும் மற்றும் அக்காலகட்டத்திலிருந்த எங்களின் நப்பாசைகளையும் விமர்சனபூர்வமாக திரும்பி பார்ப்பதை நிராகரித்தோம்.” [23]
அராஜகவாத டானியல் கோன்-பென்டிற், 1998 இல் இருந்து 2005 வரையில் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஜோஸ்கா பிஷ்ஷெசரின் நெருக்கமான நண்பராக, அரசியல் ஆலோசகராக ஆகியிருந்தார். கோன்-பென்டிற் இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பசுமை கட்சியினரின் நாடாளுமன்ற குழுவிற்குத் தலைமை வகிக்கிறார் என்பதுடன், இப்போது முற்றிலும் வலதுசாரி கட்சியான ஒன்றில் வலதுசாரியாக இருக்கிறார்.
1990 இல், தேசிய கல்வித்துறையின் தலைமை கண்காணிப்பாளராக பதவியேற்ற மாவோயிச அலன் ஜிமார், சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான பல்வேறு அமைச்சகங்களில் பலமுறை இணை செயலாளர் பதவிகளை நிரப்பச் சென்றார். நாளிதழ் Libération இன் ஸ்தாபிதமும் மாவோயிசத்துடன் அதன் வேர்களைக் கொண்டிருந்தது. உண்மையில் அது ஒரு மாவோயிச பதிப்பாக, மெய்யியலாளர் ஜோன்-போல் சார்த்ர் (Jean-Paul Sartre) ஐ தலைமை ஆசிரியராக கொண்டு, 1973 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
பிரான்சில் தொழில்வாழ்வின் ஏணிகளில் மேலே ஏற முடிந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான 1968 இன் தீவிரப்போக்கினரை, வெறுமனே “ஊதாரி மகன்களின் மறுவரவு" என்ற அடித்தளத்தில் விவரித்து விடமுடியாது. அதற்கு மாறாக அது பப்லோவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளது முன்னோக்கின் விளைபொருளாகும், அவர்கள்தான், அவர்களது தீவிர வீராவேச பேச்சுக்களுக்கு இடையே, எப்போதும் முற்றிலும் முதலாளித்துவ ஒழுங்கிற்கு பொருத்தமான சந்தர்ப்பவாத கொள்கைகளை பின்தொடர்ந்தனர்.
1968 ஐ விட மிக மிக தீவிரமாக உள்ள ஒரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் வெளிச்சத்தில், புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) சேவைகள் இப்போது முன்பினும் அதிகமாக தேவைப்படுகிறது. பூகோளமயப்பட்ட உற்பத்தி, சர்வதேச நிதியியல் நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் எண்ணெய் விலைகள் என இவை ஒவ்வொரு நாட்டையும் போலவே பிரான்சிலும் சமூக சமரசங்களுக்கான அடித்தளத்தை இல்லாதொழித்துள்ளது. இதற்கிடையே PCF மற்றும் CGT ஆகியவை அவை முன்னிருந்த நிலையிலிருந்து வெறுமனே பலமிழந்துபோயிருப்பதுடன், தொழிலாளர் சக்தியில் வெறும் 7 சதவீதம் மட்டுமே தொழிற்சங்கத்துடன் ஒழுங்கமைந்திருக்கின்றனர். 1968 சம்பவங்களின் பிற்போக்குத்தனத்திலிருந்து நிறுவப்பட்டதும் மற்றும் கடந்த மூன்று தசாப்தங்களில் முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கிய முண்டுகோல் என்பதாக நிரூபித்துள்ளதுமான சோசலிஸ்ட் கட்சி, பிளவுபட்டுள்ளதுடன், வேகமாக ஆதரவை இழந்து வருகிறது. சமூக பதட்டங்கள் உடையும் புள்ளியில் உள்ளன, கடந்த 12 ஆண்டுகளாக அந்நாடு வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஒரு அலை மாற்றி ஒரு அலையால் அதிர்ந்து போயுள்ளது.
இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், சமூக நெருக்கடிக்கு ஒரு சீர்திருத்தவாத தீர்வில் எந்த நம்பிக்கையும் கொண்டிராத பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நோக்குநிலையை பிறழச் செய்ய, மற்றும் அவ்விதத்தில் ஒரு புரட்சிகர மாற்றீட்டை எடுப்பதிலிருந்து அவர்களை தடுக்க தகைமை கொண்ட ஒரு புதிய இடது முண்டுகோல் ஆளும் உயரடுக்கு தேவைப்படுகிறது. இதுதான் தவறுக்கிடமின்றி புதிய "முதலாளித்து-எதிர்ப்பு கட்சிக்கு" (NPA) ஒப்படைக்கப்பட்டுள்ள பாத்திரம் ஆகும். இந்த ஆண்டின் இறுதியில் அக்கட்சியை நிறுவ LCR திட்டமிட்டு வருகிறது. அதன் செய்தி தொடர்பாளரும் அலன் கிறிவினின் செல்லப்பிள்ளையுமான ஒலிவியே பெசன்ஸநோ (Olivier Besancenot), கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், அதில் அவர் 1.5 மில்லியன் வாக்குகளை வென்றிருந்த நிலையில், ஊடகங்களால் ஆர்வத்துடன் அரவணைக்கப்பட்டுள்ளார்.
1968 இன் JCR க்கும் இன்றைய LCR இன் "முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சிக்கும்" இடையிலான சமாந்தரங்கள் ஒரேமாதிரி மிகவும் வெளிப்படையாக உள்ளன. பெசன்ஸநோவால் ஒரு முக்கிய முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் சே குவேராவைப் பெருமைப்படுத்துவதுடன் அவர்கள் தொடங்குகிறார்கள். அவர் சே குவேரா குறித்து கடந்த ஆண்டு ஒரு புத்தகம் கூட எழுதினார். பல்வேறு குட்டி முதலாளித்துவ தீவிர போக்குகளை LCR விமர்சனபூர்வமின்றி ஏற்றுக்கொள்வதும் இவ்வாறான மேலதிக சமாந்தரங்களில் உள்ளடங்கும். அவரது புதிய கட்சி "அரசியல் கட்சிகளின் முன்னாள் அங்கத்தவர்கள், தொழிற்சங்க இயக்கத்தின் நடவடிக்கையாளர்கள், பெண்ணியல்வாதிகள், தாராளவாதத்தினை எதிர்ப்பவர்கள், அராஜகவாதிகள், கம்யூனிஸ்ட்டுக்கள் அல்லது புதிய தாராளவாத எதிர்ப்பாளர்கள்" ஆகியோருக்கு திறந்திருப்பதாக பெசன்ஸநோ கூறுகிறார். இதற்கும் கூடுதலாக அவர் மிகத் தெளிவாக ட்ரொட்ஸ்கிசத்துடனான எந்தவொரு வரலாற்று இணைப்பையும் நிராகரிக்கிறார். எந்தவொரு தெளிவான வேலைத்திட்டமும் இல்லாத, அதுபோன்றவொரு கோட்பாடற்ற அல்லது பலகோட்பாடு கொண்ட கட்சியை, ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்விக்க மிக சுலபமாக கையாளவும், ஒழுங்கமைக்கவும் முடியும்.
ஆகவே 1968 இன் படிப்பினைகள் வெறுமனே வரலாற்று ஆர்வம் சார்ந்ததல்ல. அந்த நேரத்தில் ஆளும் வர்க்கம், புரட்சிகர நெருக்கடியின் ஒரு காலகட்டத்தில் அதன் ஆட்சியை ஸ்திரப்படுத்தி, அதன் கட்டுப்பாட்டை, ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பப்லோவாதிகளின் உதவியுடன், மீட்டமைத்துக் கொள்ள முடிந்தது. தொழிலாள வர்க்கம் இரண்டாவது சுற்றில் ஏமாற்றப்படுவதற்கு தன்னைத்தானே அனுமதிக்க போவதில்லை.
5
சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) மத்தியவாத போக்கு (1)
சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) உத்தியோகபூர்வமாக 1971 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) உடைத்துக் கொண்டது. ஆனால் 1968 இல் அது பின்பற்றிய அரசியல் போக்கானது, ஏற்கனவே 1950களின் தொடக்கத்தில் ஏனைய ICFI இன் பிரிவுகளுடன் சேர்ந்து பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக அது பாதுகாத்து வந்த புரட்சிகர முன்னோக்கிலிருந்து வெகுதூரத்திற்கு விலகிப்போயிருந்தது.
1968 இல் OCI ஆல் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், நான்காம் அகிலத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மரபுகளை விட பெரிதும் மத்தியவாத மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கவாதத்தின் மரபுகளை ஒத்திருந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் தொழிலாளர் பொது கூட்டமைப்பின் (CGT) ஸ்ராலினிச தலைமை மே மாத பொது வேலைநிறுத்தத்தை நசுக்கி, கோலிச ஆட்சியைப் பாதுகாக்க முடிந்தது என்ற உண்மையில், பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பிரெஞ்சு ஆதரவாளர்களுடனும், அலன் கிறிவின் தலைமையிலான புரட்சிகர இளைஞர் கம்யூனிஸ்ட் (Jeunesse Communiste Révolutionnaire — JCR) மற்றும் பியர் பிராங் தலைமையிலான சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (Parti Communiste Internationaliste — PCI) ஆகியவற்றுடனும் சேர்ந்து, OCI உம் பெரியளவில் பொறுப்பை கொண்டுள்ளது.
ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவிற்கு அழைப்புவிடுவதே (comité central de grève), OCI இன் அரசியல் போக்கின் பிரதான அச்சாக இருந்தது. இது "ஐக்கியத்திற்கான", அல்லது OCI ஆல் விரும்பப்பட்ட சூத்திரத்தின்படி, “தொழிலாளர்கள் மற்றும் அதன் அமைப்புகளின் ஐக்கிய வர்க்க முன்னணிக்கான" (unité de front de classe ouvrière et de ses organisations) அழைப்புடன் மூழ்கி இணைந்திருந்தது. 1968 இன் மிகமுக்கிய மாதங்களில், இவைதான் OCI மற்றும் அதனுடன் இணைந்திருந்த அமைப்புகளது அனைத்து அறிக்கைகளிலும் மற்றும் அரசியல் கோரிக்கைகளிலும் காணக்கூடிய பிரதான முழக்கங்களாக இருந்தன.
அந்த பொது வேலைநிறுத்தத்திற்கு ஓராண்டுக்குப் பின்னர் பிரசுரித்த அதன் 300 பக்க நூலில் OCI அந்நேரத்திய அதன் பொதுவான நோக்குநிலையை தொகுத்தளித்திருந்தது. அதில் OCI முடிவாக அறிவித்தது: “அதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் … தொழிலாளர்களின் மற்றும் அவர்களது அமைப்புகளின் ஒருங்கிணைந்த வர்க்க முன்னணிக்கான போராட்டத்தில் உள்ளடங்கி இருந்தது. அந்த போராட்டம் 1968 மே இல் ஒரு தேசிய பொது வேலைநிறுத்த குழுவிற்கான சுலோகத்தில் பிரத்தியேக வடிவத்தை எடுத்தது.”
OCI இன் பத்திரிகையான Information Ouvrières இல் ஒரு சிறப்பு பதிப்பாக அந்நூல் பிரசுரிக்கப்பட்டது, அதன் ஆசிரியர் பிரான்சுவா டு மாஸ்ஸோ (François de Massot), 1950 இல் இருந்து அவ்வமைப்பின் ஒரு முக்கிய அங்கத்தவர் ஆவார். டு மாஸ்ஸோ அன்றாட அபிவிருத்திகளைக் குறித்து ஒரு விரிவான விவரிப்பை அந்நூலில் வழங்குவதுடன், OCI இன் தலையீடு குறித்த விரிவான ஆவணங்களையும் அது வழங்குகிறது. அதில் அரசியல் கோரிக்கைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களின் மறுபிரசுரமும் உள்ளடங்கும். OCI இன் அரசியல் போக்கை துல்லியமாக வரைவதை அந்நூல் சாத்தியமாக்குகிறது. [24]
“ஐக்கிய வர்க்க முன்னணி”
மத்தியவாதத்திற்கு எதிரான ஒரு நீண்ட அரசியல் போராட்டத்தில் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்திருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, ஐக்கிய முன்னணி கோரிக்கைக்கு பின்வரும் வார்த்தைகளோடு அவரது அணுகுமுறையை தொகுத்தளித்திருந்தார்: “ஐக்கிய முன்னணி கொள்கையை சூளுரைக்கும் அந்த மத்தியவாதி, அதை புரட்சிகர உள்ளடக்கமின்றி வெறுமைப்படுத்தி, அதையொரு தந்திரோபாய அணுகுமுறை என்பதிலிருந்து ஓர் உயர்ந்த கோட்பாடு என்பதாக உருமாற்றுகிறார்.” 1932 இல், மத்தியவாத ஜேர்மன் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (Sozialistischen Arbeiter Partei – SAP) குறித்து அவர் எழுதினார்: “எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய முன்னணியின் கொள்கை ஒரு புரட்சிகர கட்சியின் ஒரு வேலைத்திட்டமாக சேவை செய்ய முடியாது. இடைப்பட்ட காலத்தில், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் இப்போது அதன் மீது தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது,” என்றார். [25]
இந்த கண்டனம் 1968 இல் OCI இன் நடவடிக்கைக்கும் அதேயளவிற்கு பொருந்துகிறது. அது, ஐக்கிய முன்னணி கொள்கையை, ஒரு தந்திரோபாய அணுகுமுறை என்பதிலிருந்து அதன் பிரதான வேலைத்திட்ட கோட்பாடாக மாற்றியிருந்தது. ஐக்கிய முன்னணி என்ற பெயரிலிருந்து, அனைத்து தொழிற்சங்கங்களின் ஐக்கியம் என்பதாக அது புரிந்து கொண்ட நிலையில், நிஜமான புரட்சிகர நடவடிக்கையின் எந்தவொரு வடிவத்தையும் அது தவிர்த்தது.
அதன் கோரிக்கைகள் மற்றும் அறிக்கைகள் அனைத்திலும் வழமையாக காணப்பட்ட, "தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் ஐக்கிய வர்க்க முன்னணிக்கான" புதிய சூத்திரத்தின் முக்கியத்துவமாகும். அப்போதிருக்கும் பாரிய அமைப்புகளின் இருப்பை நிராகரிப்பதற்காக, பப்லோவாதிகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ மாணவர் தலைவர்களை OCI மிகச் சரியாக குற்றஞ்சாட்டிய போதினும், அது அதே அமைப்புகளை நோக்கி ஒரு அடிபணிந்த அணுகுமுறையை ஏற்று, தொழிலாளர்களால் எடுக்கப்படும் எந்தவொரு போராட்டமும் அதன் கட்டமைப்பிற்குள்ளேயே இருக்கவேண்டும் என அது வலியுறுத்தியது.
ஏற்கனவே 1967 இன் கோடையில், OCI ஏற்பாடு செய்த ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “தொழிற்சங்கங்கங்களுக்கே இயல்பாக உரித்தான ஒரு கடமையான, அதன் பதவிகளில் இருப்பவர்களின் ஒரு கடமையான ஐக்கியத்திற்கான நடவடிக்கையை எடுக்கும் தொழிலாளர் அமைப்புகளினதும் தொழிற்சங்க தலைமையகத்தின் இடத்தினை எடுப்பது எமது நோக்கமல்ல என்று நாம் முழுமனதுடன் அறிவிக்கிறோம்,” என்று குறிப்பிட்டது.
டு மாஸ்ஸோ அவரது நூலில் இந்த தீர்மானத்தை மேற்கோளிடுவதுடன், தொழிற்சங்கங்கள் அவற்றினது தலைமையின் கொள்கைகள் எவ்வாறிருப்பினும், அவை தொழிலாள வர்க்க நலன்களை உள்ளடக்கி உள்ளன என்ற வாதத்துடன் அதை நியாயப்படுத்த செல்கிறார். அவர் எழுதுகிறார்: “சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாளர்களே அபிவிருத்தி செய்துள்ள அமைப்புகளைக் கொண்டும் மற்றும் அவர்களது வர்க்க எதிரிக்கு எதிராக அவர்களை ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு வழிவகையாக சேவை செய்கின்ற அந்த அமைப்புகளூடாகவே அவர்கள் ஒரு வர்க்கமாகின்றனர். போராட்டத்தில் அவை கொண்டுள்ள புறநிலை நிலைமையின் காரணமாக —அதாவது குறிப்பிட்ட காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் அவற்றின் தலைமையினது கொள்கையிலிருந்து சுயாதீனமாக இருப்பதால்— அத்தகைய அமைப்புகள் சுரண்டலுக்கு எதிரான அவற்றின் தொடர்ச்சியான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடுகளையே உள்ளடக்கி உள்ளன. ஐக்கியப்பட்ட தொழிலாளர் முன்னணியை, பாட்டாளி வர்க்கத்தினது வர்க்க அமைப்புகளின் வழிமுறையாக மட்டும்தான் யதார்த்தமாக்கப்பட முடியும்,” என்கிறார். (அழுத்தம் சேர்க்கப்பட்டது).
இந்த மதிப்பீட்டிலிருந்து செயல்பட்ட OCI, 1968 இல், தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ-சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை விமர்சிப்பதை தவிர்த்தது. தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தார்கள் என்ற கண்டனத்தை மட்டுமே அவர்கள் தொழிற்சங்க தலைமைகளுக்கு எதிராக எழுப்பினார்கள். வெவ்வேறு தொழிற்சங்கங்களுக்கு இடையே எல்லா மட்டங்களிலும் கூட்டு-ஒத்துழைப்புக்கு அழைப்புவிடுவதுடன், OCI இன் சொந்த அரசியல் முன்னெடுப்புக்களும் கூட மட்டுப்பட்டு இருந்தன. இதுதான், நாம் பின்னர் பார்க்கவிருப்பதைப் போல, அவர்கள் அழைப்பு விடுத்த ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவிற்கான கோரிக்கைக்கு அடிப்படை சாரமாக இருந்தது.
பரந்தளவில் வினியோகிக்கப்பட்ட அதன் துண்டறிக்கைகள் மற்றும் கோரிக்கைகளில், OCI, ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மீது எந்தவொரு பகிரங்கமான விமர்சனம் வைப்பதையும் கூட தவிர்த்துக் கொண்டது. ஒரு சிறிய வாசகர் வட்டத்திற்கான தத்துவார்த்த கட்டுரைகளிலும் மற்றும் பகுப்பாய்வுகளிலும் ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் குறித்து கையாளப்பட்ட போதினும், பெருந்திரளான மக்களை நோக்கிய அதன் துண்டுப்பிரசுரங்களில் OCI சர்வசாதாரணமாக, சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச தொழிற்சங்க தலைவர்களுடன் ஒன்றுபடுமாறு அழைப்புவிட்டது.
ஐக்கிய முன்னணி குறித்த OCI இன் பொருள்விளக்கம், மார்க்சிச இயக்கத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட தந்திரோபாயத்துடன் பொதுவான எதையும் கொண்டிருக்கவில்லை. 1922 இல் லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகையில், “ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை சார்ந்திருக்கும் அரசியல் அமைப்புகளுக்கு இடையே, தவிர்க்கவியலாத கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் ஓர் ஐக்கிய முன்னணியின் சாத்தியக்கூறை அதற்கு உத்தரவாதப்படுத்த வேண்டியது ஓர் அவசர அவசியமாகும்,” என்று கூறி ஐக்கிய முன்னணியின் அவசியத்தை விவரித்திருந்தார். [26]
அதற்கு ஓராண்டுக்கு முன்னதாக, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (Kommunistische Partei Deutschlands - KPD) ஐக்கிய முன்னணி கொள்கையை முன்னெடுக்க வேண்டுமென கம்யூனிச அகிலத்தின் (Comintern) மூன்றாம் காங்கிரஸ் வலியுறுத்தி இருந்தது. தனிமைப்படுத்தப்பட்டு தோல்வியடைந்திருந்த KPD இன் ஒரு மேலெழுச்சியான "மார்ச் இயக்கம்" என்றழைக்கப்பட்டதிலிருந்து கம்யூனிச அகிலம் படிப்பினைகளை எடுத்தது. KPD அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முன்னதாக முதலில் பெருந்திரளான மக்களின் ஆதரவை "வென்றெடுக்க" வேண்டுமென, அந்த தோல்வியிலிருந்து அது முடிவுக்கு வந்தது. அது ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கான கோரிக்கை, சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களின் தலையீடு மற்றும் பல இடைமருவு கோரிக்கை ஆகியவற்றுடன் ஐக்கிய முன்னணி கொள்கையை நேரடியாக பிணைத்தது, ஏனெனில், ட்ரொட்ஸ்கி எடுத்துரைத்ததைப் போல, “ஒரு புரட்சிகர சகாப்தத்தில், அது ஏதோ வித்தியாசமான விதத்தில் இருந்தாலும் கூட, பெருந்திரளான மக்கள் அவர்களது அன்றாட வாழ்வை தொடர்ந்து நடத்துகின்றனர்” [27]
பத்தாண்டுகளுக்கு பின்னர், ட்ரொட்ஸ்கி மீண்டுமொருமுறை ஜேர்மனியில் ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை ஏற்குமாறு அழைப்புவிடுத்தார். இப்போதோ அது ஹிட்லர் அதிகாரத்தை ஏற்பதிலிருந்து தடுப்பதற்கான பிரச்சினையாக இருந்தது. ட்ரொட்ஸ்கி வாதிடுகையில், தேசிய சோசலிசத்தின் (நாஜிசம்) அதிகரித்து வந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஓர் ஐக்கிய முன்னணியை அமைக்குமாறு கம்யூனிஸ்ட்டுக்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளிடம் வலியுறுத்தினார். அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் அதுபோன்றவொரு போக்கை பிடிவாதமாக மறுத்தனர். ஸ்ராலினிச KPD தலைவர்கள் சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) "சமூக பாசிசவாதிகள்" என்று வரைவிலக்கணமிட்டு, அதனுடன் ஒத்துழைக்க மறுத்தமை, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி முடமாக்கி ஹிட்லரின் வெற்றியை சாத்தியமாக்கியது.
1920களின் ஆரம்ப மற்றும் 1930களின் ஆரம்ப சந்தர்ப்பங்களிலுமே ஐக்கிய முன்னணி என்பது புரட்சிகர மூலோபாயத்திற்கு ஒரு பதிலீடாக அல்ல, ஒரு தந்திரோபாயமாக முன்னெடுக்கப்பட்டது. அது நடைமுறை பிரச்சினைகள் மீதான கூட்டு-ஒத்துழைப்பில் மட்டுப்பட்டு இருந்ததுடன், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அதன் சொந்த வேலைத்திட்டத்தை கைவிட வேண்டுமென்றோ அல்லது சமூக ஜனநாயகக் கட்சி மீதான விமர்சனத்தை கைவிட வேண்டுமென்பதையோ அர்த்தப்படுத்தவில்லை.
ஒரு ஐக்கிய முன்னணியின் அடிப்படையில் சமூக ஜனநாயக தலைவர்களை புரட்சியாளர்களாக மாற்றிவிட முடியுமென ஒருபோதும் ட்ரொட்ஸ்கி பிரமைகளை வழங்கியதில்லை. அதற்கு மாறாக, சமூக ஜனநாயக தலைவர்களின் செல்வாக்கிலிருந்து பெருந்திரளான மக்களை முறித்துக் கொள்ள செய்வதே ஐக்கிய முன்னணியின் நோக்கமாக இருந்தது.
கம்யூனிஸ்டுகள், எவ்வித முன்நிபந்தனைகளையும் வைக்காமல், அவர்களது அன்றாட நலன்களைப் பாதுகாக்க மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியுடன் பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் சமூக ஜனநாயக தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்டி இருந்தால், அது முதலாளித்துவ அரசுடன் ஒத்துழைக்க விரும்பிய SPD இன் தலைமையை பலவீனப்படுத்த மட்டுமே சேவை செய்திருக்கும். பின்னர் SPD இன் அங்கத்தவர்கள், அவர்களது சொந்த அனுபவத்தின் அடிப்படையில், அவர்களே அவர்களது அமைப்பு மற்றும் அவர்களது தலைமையின் மதிப்பை தீர்மானித்திருப்பார்கள்.
எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய முன்னணி என்பது, ஒரு சுயாதீனமான புரட்சிகர கொள்கையை கைவிடுதலை அர்த்தப்படுத்தவில்லை. ட்ரொட்ஸ்கி 1932 இல், “போராட்டத்திற்கு சீர்திருத்தவாதிகள் தடை போட ஆரம்பிக்கும் சமயத்தில், இயக்கத்திற்கு வெளிப்படையாக சேதம் ஏற்படவிருக்கின்றபோது, நிலைமைக்கு எதிர்-நிலைப்பாடு எடுப்பதற்காக மற்றும் பெருந்திரளான மக்களின் சிந்தனைக்கு ஏற்ப, நாம் ஒரு சுயாதீனமான அமைப்பாக, நமது தற்காலிக அரைகுறை-கூட்டாளிகள் இல்லாமலேயே, அப்போராட்டத்தை அதன் முடிவு வரையில் இட்டுச்செல்ல எப்போதும் நாம் உரிமை கொண்டிருக்கிறோம்,” என்று வலியுறுத்தினார். [28]
மார்க்சிசத்திற்கு பதிலாக தொழிற்சங்கவாதம்
OCI ஐக்கிய முன்னணியை, ஒரு புரட்சிகர தந்திரோபாயம் என்பதிலிருந்து தொழிற்சங்கங்களிடம் அதன் சொந்த அடிபணிவுக்கு ஒரு சந்தர்ப்பவாத நியாயப்பாடாக மாற்றியது. OCI வலியுறுத்துகையில், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் இத்தகைய அமைப்புகளின் வடிவங்களுக்குள் மட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க எந்திரத்திற்கும் இடையே மோதலைத் தீவிரப்படுத்தக்கூடிய எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
உண்மையில், ஒரு சிறுபான்மை தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைந்திருந்தனர். அதே நேரத்தில், தொழிலாளர் சக்தியில் வெறும் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தொழிற்சங்க மயப்படுத்தப்பட்டிருந்தனர். (இன்றோ இந்த எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.) மொத்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும் மற்றும் இளைஞர்களில் பெரும் பெரும்பான்மையினரும் தொழிற்சங்கங்களுடன் ஒழுங்கமையவில்லை என்பதோடு, அவர்கள் முற்றிலும் சரியாகவே அவற்றின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களை தொழிற்சங்கங்கள நோக்கி திருப்பிவிடுவதற்கு அப்பாற்பட்டு, OCI ஆல் அத்தகைய அடுக்குகளுக்கு ஒரு முன்னோக்கை வழங்க முடியவில்லை.
மாணவர் அமைப்பு UNEF ஐ நோக்கி மாணவர்கள் திரும்பியிருந்தனர், அதுவோ அந்நேரத்தில் மிஷேல் றொக்கா தலைமையிலான சமூக ஜனநாயக, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் (Parti socialiste unifié—PSU) மேலாளுமையில் இருந்தது. டு மாஸ்ஸோ எழுதுகிறார்: “எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்கு மாணவர்களுக்கு ஒரு தொழிற்சங்கம், அதாவது Union National des Étudiants de France, வேண்டும்… நிஜமான போராட்டம் தொடங்குகையில், UNEF அதன் தலைமையின் தயக்கம் மற்றும் பலவீனங்களுக்கு இடையிலும் அதன் முழு முக்கியத்துவத்தை மீளப்பெற்றுக்கொண்டது. ஒரு மாணவர் தொழிற்சங்க அமைப்பாக பாத்திரம் வகிப்பதனால் அதன் பொறுப்பான தலையீடு ஊடாக, அது ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பெருந்திரளான மாணவர்களின் விடயமாக்கியதுடன், தொழிலாளர் அமைப்புகளை அவற்றின் சொந்த கடமைப்பாடுகளை எதிர்கொள்ளவும் செய்தது. அதுவே மாணவர்களை ஒன்றுதிரட்டுவதற்கான வழிவகை என்பதோடு, அதேநேரத்தில் அது ஐக்கிய முன்னணிக்கான ஒரு நிஜமான போராட்டத்தையும் சாத்தியமாக்குகிறது" (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது).
பப்லோவாதிகளுக்கு எதிரான ஒரு தாக்குதலில் டு மாஸ்ஸோ எழுதுகிறார்: “தொழிலாளர்களின் மற்றும் அடிமட்டத்திலிருந்து ஐக்கிய முன்னணி என்றழைக்கப்படுவதற்கு ஆதரவாக உள்ள அவர்களது அமைப்புகளின் ஐக்கிய முன்னணிக்கான போராட்டத்தை யாரெல்லாம் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் ஒன்றரை நூற்றாண்டு கால போராட்டம் மற்றும் தியாகங்களிலிருந்து தொழிலாள வர்க்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்புகளையே நிராகரிக்கின்றனர். அந்த அமைப்புகளே தம்மை ஒரு வர்க்கமாக உருவமைத்துக்கொண்டதும், தன்னைப்பற்றியும் மற்றும் மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் நனவுபூர்வமாகவும் இருந்தன. அவற்றில் இருப்பவர்களே இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தவிர்க்கவியலாமல் ஒன்றிணைந்து வருகின்றனர். யாரெல்லாம் அவர்களது அதிகாரத்துவ தலைமையைக் காட்டி, பாரிய அமைப்புகளை குழப்புகிறார்களோ, யாரெல்லாம் 'CGT காட்டிக்கொடுப்பு' என்று அலறுகிறார்களோ, அவர்களது கரங்களில் துடைத்தழிக்கும் அழிப்பானை வைத்துக் கொண்டு தொழிற்சங்கங்களையும் அரசியல் கட்சிகளையும் வர்க்க போராட்டத்தின் வரைபடத்திலிருந்து வெறுமனே அழிக்க பாய்கிறார்களோ, அவர்கள் அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து பின்வாங்குகிறார்கள்,” என்கிறார்.
தொழிலாள வர்க்கம் இந்த அமைப்புகளில், "ஒரு வர்க்கமாக, தானே நனவுபூர்வமாக, மூலதனத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் தன்னைத்தானே உள்ளடக்கி இருந்தது" என்று தொழிற்சங்கங்களை பெருமைப்படுத்தியமை, மார்க்சிச மரபியத்துடன் எதையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அதற்கு மாறாக இது தொழிற்சங்கவாதத்தின் (syndicalism) மரபியத்திலிருந்தே வருகிறது. அத்தகைய தொழிற்சங்கவாதம் பிரான்சில் ஒரு நீண்டகால மற்றும் இழிவார்ந்த வரலாறைக் கொண்டுள்ளது. மார்க்சிச இயக்கம் எப்போதுமே தொழிற்சங்கங்கள் குறித்து ஒரு விமர்சனபூர்வ நிலைப்பாட்டை பேணி வந்துள்ளன. ஏற்கனவே இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், லெனின், தொழிற்சங்க நனவு என்பது முதலாளித்துவ நனவாகும் என்றும், (ஜேர்மனியில் 1914 இல் இருந்து 1918 வரையில் இருந்ததைப் போல) அதிதீவிர சமூக பதட்டமான காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்களினது இயக்கத்தின் அதீதவலதுசாரிப்பிரிவாக இருந்தன என்றும் வலியுறுத்தினார். [29]
பிரெஞ்சு தொழிற்சங்கவாதிகள், தொழிற்சங்க வேலையில் அரசியல் கட்சிகளின் தலையீடு-இல்லாத கோட்பாட்டை வலியுறுத்தினர். 1906 இல் CGT அதன் அமியான் (Amiens) சாசனத்தில் அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் தொழிற்சங்கங்கள் முற்றிலும் சுதந்திரமாக இருக்கும் கோட்பாட்டுக்கு உருவடிவம் கொடுத்தது. இந்த சுதந்திரம், அதிகரித்துவரும் பழமைவாதம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் நாடாளுமன்ற அறிவுமந்தத்திற்கு எதிராக திரும்பியிருந்த வரையில், பிரெஞ்சு தொழிற்சங்கவாதம் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு புரட்சிகர தகமையை கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, அது கட்சியின் பாத்திரத்தை நிராகரித்தபோதும், அது "தொழிலாள வர்க்கத்தின் ஒரு நாடாளுமன்ற-எதிர்ப்பு கட்சி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.” [30]
எவ்வாறிருந்த போதினும், தொழிற்சங்கங்களின் அரசியல் சுதந்திரம் குறித்த கோட்பாடு, புரட்சிகர கட்சியின் மேலாளுமைக்கு எதிராக திருப்பி விடப்பட்ட போது, அது தொடர்ந்து அவ்விதமாக இருக்கவில்லை. 1921 இல், அப்போது கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு முன்னணி உறுப்பினரான ட்ரொட்ஸ்கி எழுதினார்: “கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே அங்கே ஒரு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற தொழிற் பங்கீடு உள்ளது என்ற தத்துவமும் மற்றும் அவற்றிடையே ஒன்றுக்கொன்று பரஸ்பர தலையீடோ அல்லது நேரடி தலையீடோ செய்யாத நடைமுறை இருக்க வேண்டும் என்ற தத்துவமும், ஐயத்திற்கிடமின்றி பிரெஞ்சு அரசியல் அபிவிருத்தியின் ஒரு விளைபொருளாகும். அது அதன் மிகவும் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். இந்த தத்துவம் கலப்படமற்ற சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் அமைகிறது.
“தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைந்த தொழிலாளர் அதிகாரத்துவம், கூலி உடன்படிக்கைகளை தீர்மானிக்கின்ற வரைக்கும், சோசலிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் சீர்திருத்தங்களை பாதுகாக்கின்ற அதேவேளையில், இந்த தொழிற் பங்கீடு மற்றும் பரஸ்பரம் தலையீடு செய்யக்கூடாது என்பதெல்லாம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சாத்தியமானதாக இருக்கும். ஆனால் நிஜமான பெருந்திரளான பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்குள் இழுக்கப்படுகையில், அந்த இயக்கம் ஒரு நிஜமான புரட்சிகர குணாம்சத்தை ஏற்ற உடனேயே, பின்னர் இந்த தலையீடு-செய்யா கோட்பாடு (principle of non-intervention) பிற்போக்குத்தனமான மேதாவித்தனமாக சீரழிகிறது.
“தொழிலாள வர்க்கத்தின் உயிர்வாழும் வரலாற்று அனுபவங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், மற்றும் ஒட்டுமொத்த போராட்டத்தையும் தத்துவார்த்தரீதியில் பொதுக்கோட்பாடாக்கி, நடைமுறையில் கொண்டு செல்லும் தகைமையை கொண்டிருக்கும் ஓர் அமைப்பு, அதன் தலைமையில் இருந்தால் மட்டுமே தொழிலாள வர்க்கம் வெற்றி பெற முடியும். அதன் வரலாற்று கடமையின் அர்த்தத்தில், அக்கட்சி தொழிலாள வர்க்கத்தின் மிகவும் நனவுபூர்வமான மற்றும் செயலூக்கமான சிறுபான்மையை மட்டுமே உள்ளடக்கி இருக்க முடியும். மறுபுறம், தொழிற்சங்கங்களோ தொழிலாள வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக அணைத்துக்கொள்ள முனைகின்றன. பாட்டாளி வர்க்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினுள் ஐக்கியப்பட்டுள்ள அதன் முன்னணிப் படையாக, ஒரு சித்தாந்த மற்றும் அரசியல் தலைமை அவசியமாக தேவைப்படுகின்றது என்று உணர்பவர்கள், அக்கட்சி அவ்விதத்தில் தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் அத்துடன் பாரிய தொழிலாள வர்க்க அமைப்புகளுக்கு உள்ளேயும் முன்னணி சக்தியாக மாற வேண்டும் என்பதை உணர்கிறார்கள்.” [31]
இந்த தொழிற்சங்கவாத மரபு, OCI க்குள் நீண்டகாலத்திற்கு கணிசமான செல்வாக்கு கொண்டிருந்தது. ஒருவர் பியர் லம்பேர் ஐ நம்புவாரானால் தொழிற்சங்கங்களுடனான அவரது அமைப்பின் உறவு, ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு மார்க்சிச கோட்பாடுகளை விட தொழிற்சங்கவாத அடித்தளத்தைக் கொண்டிருந்ததை காணலாம்.
1947 இல் அமியான் சாசனத்தை அவரது சொந்த அமைப்பில் மீட்டமைத்ததாக லம்பேர் அவரது வாழ்வின் இறுதியில் எழுதிய ஒரு சுயசரித நூலில் பெருமைபட்டுக் கொண்டார். போரின் போது சட்டவிரோத தொழிற்சங்க வேலையிலிருந்தும் மற்றும் ஸ்ராலினிச மேலாளுமை கொண்ட CGT உடனான அவரது அனுபவங்களின் அடிப்படையிலும், அவர் ட்ரொட்ஸ்கிச அமைப்பின் பிரான்ஸ் மாநாட்டின் போது ஒரு திருத்த தீர்மானத்தை முன்மொழிந்தார், “அக்கூட்டம் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பரஸ்பர சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டு, 21 நிபந்தனைகளில் புள்ளிகள் 9 மற்றும் 10 ஐ பிரதியீடு செய்ய ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.” [32]
அந்த "21 நிபந்தனைகள்", 1920 இல் சீர்திருத்தவாத மற்றும் மத்தியவாத அமைப்புகளை விலக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கம்யூனிச அகிலத்தின் இரண்டாம் உலக மாநாட்டில் கொண்டு வரப்பட்ட அங்கத்துவத்திற்கான நிபந்தனைகளைக் குறிக்கின்றன. புள்ளி 9, "தொழிற்சங்கங்களுக்குள் முறையாக மற்றும் உறுதியாக கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்ய" மற்றும் "சமூக தேசியவாதிகளின் தேசத்துரோகங்களை மற்றும் 'மத்தியவாதிகளின்' தயக்கங்களை எங்கெங்கிலும் அம்பலப்படுத்த" அங்கத்துவ கட்சிகளை கடமைப்பட்டிருக்க செய்கிறது. புள்ளி 10, “மஞ்சள் தொழிற்சங்க அமைப்புகளின் ஆம்ஸ்டர்டாம் 'அகிலத்துடன்'” உடைத்துக்கொள்ளுமாறு மற்றும் கம்யூனிச அகிலத்துடன் இணைந்திருந்த தொழிற்சங்கங்களை ஆதரிக்குமாறு கோருகிறது.
“கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பரஸ்பரம் சுயாதீனமாக இருப்பதற்கு ஒப்புகை" வழங்கும் அந்த இரண்டு புள்ளிகளைப் பிரதியீடு செய்தமை, சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தைக் கைவிடுவதைக் குறித்தது.
அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு
சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) விமர்சனபூர்வமற்ற ரீதியில் தொழிற்சங்கங்களை பெருமைப்படுத்திய அதேவேளையில், அது பெரிதும் இரகசியமாக வைத்திருந்த அதன் சொந்த அடையாளம் குறித்து ஓர் அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி வந்தது. அது, அரசியல் அடையாளத்தைத் துல்லியமாக இருட்டில் வைத்திருந்த தொழிலாளர் கூட்டணி குழுக்கள் (Comités d’alliance ouvrière) போன்ற முன்னணி அமைப்புகளுக்கு பின்னால் மறைந்திருக்க விரும்பி, அரிதாகவே அதன் சொந்தப் பெயரில் பேசியது. அதன் முன்னணி அமைப்புகளில் ஒன்றாக இருந்த OCI ஐ அவர் குறிப்பிடுகிறாரா, அல்லது செயலூக்கத்துடன் இருந்த தொழிற்சங்கவாதிகளின் ஒரு குழுவைக் குறிப்பிடுகிறாரா என்பதைத் தெளிவுபடுத்தாமல், அவர் வழமையாக "புரட்சிகர முன்னணிப்படை" என்று எழுதுகிறார்.
கோலிச ஆட்சி உடனான மோதல் மே 29 இல் அதன் உச்சக்கட்ட புள்ளியை எட்டிய நிலையில், தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தனமான பாத்திரம் பெரிதும் கண்கூடாக மாறியிருந்த நிலையில், தொழிலாளர்கள் கூட்டணி குழுக்களால் (Comités d’alliance ouvrière) வெளியிடப்பட்டு பரந்தளவில் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பையோ அல்லது நான்காம் அகிலத்தையோ கட்டமைப்பதற்கு அழைப்பு விடுக்கவில்லை, அதற்கு மாறாக அது ஒரு போலியான "புரட்சிகர தொழிலாளர் கழகத்தை" (Revolutionary Workers League) உருவாக்க அழைப்பு விடுத்தது.
இந்த "புரட்சிகர தொழிலாளர் கழகம்" ஒரு பகல் கனவாக இருந்தது. அதுகுறித்து யாரும் அதற்கு முன்னர் கேள்விபட்டிருக்கவில்லை. அதில் அங்கத்தவர்களும் இருக்கவில்லை, ஒரு வேலைத்திட்டமும் இல்லை, ஒரு யாப்பும் அதில் இல்லை. அதுவொரு ஸ்தூலமான அமைப்பாக இருக்கவில்லை. டிசம்பர் 1967 இல் OCI ஆல் வரையப்பட்ட 40-பக்க அறிக்கையின் இறுதியில் மட்டுந்தான் இந்த அமைப்பு குறித்து குறிப்பிடப்படுகிறது.
அங்கே, “புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்பும் பாதையின் ஒரு கட்டமாக" “புரட்சிகர தொழிலாளர் கழகம்" வர்ணிக்கப்படுகிறது. அந்த அறிக்கையின்படி, OCI இன் வேலைத்திட்டம் மட்டுமே "மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடிக்கு ஒரு பதிலை வழங்க முடியும், ஆனால் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்கள் உடனடியாக அதில் சேர தயாராக இல்லை,” என்ற அனுமானத்திலிருந்து “புரட்சிகர தொழிலாளர் கழகத்தின்" முன்னோக்கு எழுகிறது. [33]
இவ்விதமான அரசியல் உருமறைப்பு (political camouflage), OCI மற்றும் அதன் வழிவந்த அமைப்புகளின் ஒட்டுமொத்த வரலாறு எங்கிலும் ஒரே சீராக மீண்டும் மீண்டும் நடந்துள்ளன. அது மத்திரியோஸ்கா (Matryoshka) பொம்மையை நினைவூட்டுகிறது. ஒரு ரஷ்ய பொம்மை அதற்குள் மற்றொன்றை மறைத்து வைத்திருப்பதைப் போல, OCI (சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு) ஒன்றன்பின் ஒன்றாகவரும் ஒரு முன்னணியின் அல்லது அவ்விதமாக உருத்தரித்த அமைப்புகளின் பின்னால் தனது அடையாளத்தை மறைக்க முயல்கிறது. ஒரு அரசியல் அவதானிக்கு, எதனுடன் தான் கையாளுகின்றார் என்பது ஒருபோதும் உண்மையில் தெரிவதில்லை.
இந்த அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பவாத வடிவமாகும். "உண்மையைக் கூறுங்கள்!” என்ற அடிப்படை புரட்சிகர கோட்பாட்டிலிருந்து OCI விலகியதுடன், தொழிலாளர்களுக்கு அதன் நிஜமான முகத்தைக் காட்ட மறுத்தது. சிறிய வட்டத்துக்குள் நான்காம் அகிலத்தை தொழுது கொண்ட அதேவேளையில், அது பெருந்திரளான மக்களுக்கு ஒரு நீர்த்துப்போன வேலைத்திட்டத்தை முன்வைத்தது, இதைத்தான் அவர்கள் ஏற்க தயாராக இருந்தார்கள் என்பதைப் போல உணர வைத்தது.
ஒரு புரட்சிகரக் கட்சி அதன் ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தையும் பகிரங்கமாக முன்வைப்பதை தவிர்க்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம் என்பது உண்மை தான். உதாரணமாக ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் அல்லது ஒரு பிற்போக்குத்தனமான தொழிற்சங்கத்திற்குள் அவ்வாறு அதை முன்வைக்காமல் இருக்கலாம். ஆனால் OCI ஐ பொறுத்த வரையில், அப்பணி அரசு எந்திரம் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஏமாற்றுவதற்காக இருக்கவில்லை, அவை இரண்டுமே அக்கட்சியின் அடையாளம் குறித்து நன்கறிந்திருந்தன. ஆனால் ஒரு புதிய நோக்குநிலையைக் காண வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் அரசியல் வாழ்விற்குள் நுழைந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை OCI ஏமாற்றியது.
குறிப்பாக, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கீழ்படிநிலைகளில் இருந்தவர்களுடன் OCI எவ்வித சங்கடத்தையும் தவிர்க்க விரும்பியது, ஏனெனில் அது அவர்களது ஆதரவை விடாப்பிடியாக பெற முயன்றது. அது அதன் சொந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டதன் மூலமாக, அத்தகைய செயல்பாட்டாளர்கள் (Functionaries) ட்ரொட்ஸ்கிச-விரோத அதிகாரத்துவ மேலடுக்குகளுடன் ஒரு பகிரங்க மோதல் அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், OCI உடனான உறவுகளுக்குள் நுழையும் வகையிலான நிலைமைகளை உருவாக்கியது.
இத்தகைய கீழ்மட்ட (lower-rank) தொழிற்சங்க செயல்பாட்டாளர்களை, OCI, "தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்களாக" அல்லது "இயல்பிலேயே அந்த வர்க்கத்தின் ஒழுங்கமைப்பாளர்களாக" விவரித்தது. இந்த இரண்டு வசனங்களுமே மீண்டும் மீண்டும் அதன் எழுத்துக்களில் எடுத்துக்காட்டப்படுகிறது. ஒட்டுமொத்த அங்கத்தவர் மீது கட்டுப்பாட்டை பேணுவதற்கு, இந்த அடுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவ எந்திரத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை OCI தெளிவாக புரிந்து வைத்திருந்தது. எவ்வாறிருந்தபோதினும், அதிகாரத்துவத்தின் உயர்மட்ட மற்றும் கீழ்மட்டங்களுக்கு இடையிலான —அதாவது "அதிகாரத்துவ எந்திரத்திற்கும்" மற்றும் "காரியாளர்களுக்கும்" இடையிலான— பிந்தையவர்களை ஒரு புரட்சிகர திசையில் தள்ளிச்செல்லும் என்று அது வாதிட்டது.
1968 இன் தொடக்கத்தில்la vérité இல் கட்சியால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை குறிப்பிடுகையில், "அந்த வர்க்கத்தின் மீது அதிகாரத்துவ எந்திரம் —அதாவது அனைத்திற்கும் மேலாக ஸ்ராலினிச அதிகாரத்துவ எந்திரம்— அதன் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு கருவியாக இருக்கும் மத்தியஸ்தர்களும், அடுத்ததாக பாட்டாளி வர்க்கத்தை ஒரு வர்க்கமாக அபிவிருத்தி செய்ய மற்றும் ஒழுங்கமைக்க உதவும் போர்குணமிக்க அடுக்கினரும் என இவ்விரு வகையினருமே" “காரியாளர்கள்" ஆவர் என்று விவரிக்கிறது. இத்தகைய "அமைப்புரீதியிலான காரியாளர்களின்" எண்ணிக்கை “10,000 இல் இருந்து 15,000 நடவடிக்கையாளர்களாக" உள்ளது, இவர்கள் "மிகப் பெரியளவில் கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்டு, ஒழுங்கமைக்கப்படுகின்றனர்,” என்றும் அதே அறிக்கை குறிப்பிடுகிறது. [34]
“அதிகாரத்துவ எந்திரத்தின் முதலாளித்துவ-ஆதரவு நோக்குநிலையை தங்களின் வர்க்கத்திற்காக போராடவும் மற்றும் எதிர்ப்பை தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையாளர்கள் மற்றும் அமைப்புரீதியிலான காரியாளர்களுடன், இவர்கள் தங்களின் வர்க்கத்திற்காக போராட மற்றும் எதிர்ப்பை வழங்க நிர்பந்திக்கப்படுகின்ற நிலையில், மோதலுக்குள் கொண்டு வருகின்ற புறநிலை முரண்பாடுகளை தகர்க்கவும் மற்றும் முதிர்ச்சியடைய செய்வதையுமே" OCI அதன் சொந்தக் கடமையாக கண்டது.
மேற்குறிப்பிடப்பட்ட பந்திகள் பப்லோவாதத்தின் மீதான கடுமையான தாக்குதல்களோடு பிணைந்தவை ஆகும். ஆனால், யதார்த்தத்தில், 1968 இல் தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளை நோக்கி OCI ஆல் ஏற்கப்பட்டிருந்த அணுகுமுறை, சித்தாந்தரீதியில் 1953 இல் பப்லோவாதிகள் ஏற்றிருந்ததற்கு ஒத்திருந்தது.
ஒரு புதிய புரட்சிகர தாக்குதல், நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் வடிவத்தில் அபிவிருத்தி அடையாது, மாறாக புறநிலை சம்பவங்களின் அழுத்தத்தின் கீழ், ஸ்ராலினிச அதிகாரத்துவ எந்திரத்தின் பிரிவுகள் இடதிற்கு நகரும் வடிவை எடுக்குமென அந்நேரத்தில் பப்லோ தீர்மானித்திருந்தார். அதே பாணியில், OCI "அமைப்புகளின் உள்ளிருக்கும் உள்முரண்பாடுகளில் இருந்தும், அந்த வர்க்கத்தின் அதிகாரத்துவ எந்திரம் மற்றும் அமைப்புரீதியிலான காரியாளர்களுக்கு இடையிலான தற்போதைய முரண்பாடு முதிர்ச்சி அடைவதிலிருந்தும் ஒரு புரட்சிகர அபிவிருத்தி எழுமென எதிர்நோக்கியது.” [35]
1968 இல் தொழிற்சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஆழமான பிளவுகளும் பதட்டங்களும் நிலவிய நிலையில், ஸ்ராலினிசத்துடன் அரசியல்ரீதியில் முறித்துக்கொண்டு, அதற்கு எதிரான ஒரு பகிரங்க போராட்டத்திலிருந்து மட்டுமே கூட ஒரு புரட்சிகர இயக்கம் அபிவிருத்தி அடைந்திருக்கும். ஆனால் OCI, அதன் சொந்த அடையாளத்தை மறைத்தும், ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை ஒரு மூலோபாயமாக மேலுயர்த்திபிடித்தும் அந்த பணியை தட்டிக்கழித்தது.
டு மாஸ்ஸோவின் நூலின் பல பந்திகளில் ஸ்ராலினிஸ்டுகளே கூட ஒரு புரட்சிகர திசையில் திரும்புவார்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது. சான்றாக அந்த எழுத்தாளர், மே 13 அன்று ஸ்ராலினிச இளைஞர் அமைப்பு அறிவித்த ஒரு அழைப்பை, அது "தீவிர இடதை" தாக்கவில்லை; கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு அழைப்புவிடுத்தது என்பதுடன்; தொழிலாளர்களது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது என்பதற்காக அவர் அதைப் பாராட்டுகிறார். “அந்த அதிகாரத்துவ எந்திரம், அவ்வியக்கத்தை பின்தொடர தான் நிர்பந்திக்கப்பட்டதாக பார்க்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மீது கட்டுப்பாட்டை பராமரிப்பதற்காகவும் மற்றும் முன்முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்காகவும், அது ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும், குறிப்பிட்ட வரம்புகளோடும் கூட, முன்னேறிச் செல்கிறது: அதாவது தலைமையை எடுப்பதை நோக்கி செல்கிறது… இவ்விதமாக முன்செல்வதன் மூலமாக, அந்த அதிகாரத்துவ எந்திரம் அதனைச் சுற்றியுள்ள நடவடிக்கையாளர்களை ஒன்றுதிரட்டுவதுடன், பின்னர் அவர்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தையே தீவிரமயப்படுத்துகிறது” என டு மாஸ்ஸோ குறிப்பிடுகிறார். [36]
6
சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) மத்தியவாத போக்கு (2)
“மத்திய வேலைநிறுத்தக்குழுவிற்கான” முழக்கம்
1935 இல், லியோன் ட்ரொட்ஸ்கி அவரது பிரெஞ்சு ஆதரவாளர்களுக்கு "நடவடிக்கை குழுக்களின்" (Comités d'action) முழக்கத்தை பரிந்துரைந்தார். அந்த நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு துரிதமான தீவிரமயமாக்கல் அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்தது, ஆனால் அது பெரிதும் ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் முதலாளித்துவ தீவிர போக்கினரின் எதிர்-புரட்சிகர கூட்டணியான, மக்கள் முன்னணியின் செல்வாக்கின் கீழ் இருந்தது. அத்தகைய சூழல்களின் கீழ், ட்ரொட்ஸ்கி, பெருந்திரளான மக்கள் மீது செல்வாக்கு கொண்டிருந்த மக்கள் முன்னணியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கை குழுக்களை ஒரு வழிவகையாக கருதியதுடன், அவற்றின் சுயாதீனமான முன்னெடுப்புக்களையும் ஊக்குவித்தார்.
“மக்கள் முன்னணியின் தலைமையானது, போராடிக் கொண்டிருக்கும் பாரிய மக்களின் விருப்பத்தை நேரடியாகவும் உடனடியாகவும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். எவ்வாறு? மிக எளிமையாக கூறுவதானால்: தேர்தல்கள் மூலமாக,” என்றவர் எழுதினார். “மக்கள் முன்னணிக்கு ஆதரவாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம், தொழிற்சாலை, படைவீரர் குடியிருப்பு மனை அல்லது கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இருநூறு, ஐந்நூறு அல்லது ஆயிரம் குடியானவர்களும், போராட்ட நடவடிக்கைகளின் போது, உள்ளூர் நடவடிக்கை குழுவிற்கு அவர்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள். போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் அனைவரும் அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருப்பார்கள்,” என்றவர் எழுதினார். [37]
1968 இல் OCI இனது தலையீட்டின் மையத்தில் இருந்த "மத்திய வேலைநிறுத்த குழுவிற்கான" (Comité central de grève) முழக்கம், ட்ரொட்ஸ்கியின் முன்மொழிவுகளில் இருந்து பெறப்பட்டது. OCI அறிக்கைகள், ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களிலிருந்து ஏறத்தாழ வார்த்தை மாறாமல் எடுக்கப்பட்ட பல சூத்திரமாக்கல்களைக் கொண்டுள்ளது. ஆனால், ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை பொறுத்த வரையில், OCI அம்முழக்கத்தின் எந்தவொரு புரட்சிகர உள்ளடக்கமும் இல்லாமல் அதனை சூறையாடியிருந்தது.
அதன் பல அறிக்கைகள், தேசிய வேலைநிறுத்த குழு எந்த மாதிரியான அதிகார படிநிலைகளின் மீது தங்கியிருக்க வேண்டுமென, அதிகாரத்துவரீதியில் வெவ்வேறு மட்டங்களைக் குறித்து துல்லியமாக கணக்கெடுப்பதில் மட்டுப்பட்டிருந்தன. இதற்கு ஒரு பொருத்தமான சான்று, “ஆம், தொழிலாளர்களால் வெல்ல முடியும்: மத்திய வேலைநிறுத்த குழு எனும் வெற்றியின் ஆயுதத்தை உருவாக்குவோம்!” என்று தலைப்பிட்ட அறிக்கையாகும். மே 23 அன்று பிரசுரிக்கப்பட்ட அது பொது வேலைநிறுத்தத்தின் இடையே Informations Ouvrières இன் ஒரு சிறப்பு பதிப்பாக பரந்தளவில் வினியோகிக்கப்பட்டது.
அந்த அறிக்கை பின்வரும் பந்தியை கொண்டுள்ளது: “தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பொது இயக்கத்தை தோற்கடிக்கவியலாத ஒரேயொரு வெற்றிகரமான சக்தியாக எவ்வாறு ஐக்கியப்படுத்துவது? இந்த கேள்விக்கு ஒரேயொரு பதில் மட்டுமே உள்ளது: உள்ளூர் வேலைநிறுத்த குழுக்களின் அமைப்பை வெவ்வேறு-தொழில்துறைசார் வேலைநிறுத்த குழுக்களாக்க வேண்டும்; துறைசார்ந்தளவில், பிரதிநிதிகள், துறைரீதியிலான மற்றும் பிராந்திய ரீதியிலான வெவ்வேறு-தொழில்துறைசார் வேலைநிறுத்த குழுக்களை உருவாக்க வேண்டும். வேலைநிறுத்த குழுக்களின் கூட்டமைப்பும் மற்றும் தொழிலாளர்களது அமைப்புகளும், தேசியளவில் ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவை உருவாக்க வேண்டும்.
“ஒரு வேலைநிறுத்த குழுவில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையாளரும், ஒரு மறியல் போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு தொழிலாளரும் அதேபோன்ற பாணியில் அந்நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். வர்க்க இயக்கத்தின் பரந்த பெருந்திரளான மக்களின் தலைமையும் மற்றும் முடிவுகளும், தொழிற்சாலை வேலைநிறுத்த குழுக்களில் இருந்து உருவாகும் வெவ்வேறு-தொழில்துறைசார் வேலைநிறுத்த குழுக்களுக்குள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். நிறுவனங்களுக்குள் வேலைநிறுத்தக்காரர்களின் கூட்டங்களும், எல்லா நிறுவனங்களைச் சேர்ந்த எல்லா வேலைநிறுத்தக்காரர்களின் கூட்டங்களும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருங்கிணைந்து முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.”
வெறும் வார்த்தையளவில் மட்டுமல்ல, மாறாக இந்த அறிக்கையின் உள்ளடக்கமே கூட ஒரு புரட்சிகர தொழிலாளரின் போராடும் உத்வேகத்தைக் காட்டிலும், ஒரு கணக்காளரின் அதிகாரத்துவ மனோபாவத்துடன் மிகப் பொதுவாக பொருந்தியுள்ளது. அதன் குறிக்கோள், கழுத்தை நெரிக்கும் அனைத்து அதிகாரத்துவ அமைப்புகளின் பிடியிலிருந்தும் தொழிலாளர்களை சுயாதீனப்படுத்துவதாக இருக்கவில்லை, மாறாக ஒன்றுக்கொன்று விரோதமாக இருந்த அதிகாரத்துவ அமைப்புகளுக்கு இடையிலான பிளவுகளை தீர்ப்பதற்காக இருந்தது. நடவடிக்கை குழு "மட்டுமே கட்சியின் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் எதிர்-புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே வழிவகை" என்று ட்ரொட்ஸ்கி எழுதியிருந்த நிலையில், OCI ஐ பொறுத்த வரையில், மத்திய வேலைநிறுத்த குழுவே "தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களது கட்சிகளின் ஐக்கிய முன்னணியின் உயர்ந்தபட்ச வெளிப்பாடாக" இருந்தது.
ட்ரொட்ஸ்கி நடவடிக்கை குழுக்களை, விவாதத்தின் மற்றும் அரசியல் போராட்டத்தின் அரங்கங்களாக கருதினார்: “கட்சிகளுடன் ஒப்பிடுகையில், நடவடிக்கை குழுக்களை புரட்சிகர நாடாளுமன்றம் என்று அழைக்கலாம்: இதற்காக கட்சிகளை தவிர்த்துவிடுவது என்பதல்ல, மாறாக, அதற்கு முரண்பட்ட வகையில், அவை முன்தேவையாக இருக்கின்றன; அதேநேரத்தில் அவை நடவடிக்கையினூடாக பரிசோதிக்கப்படுகின்றன என்பதுடன் பெருந்திரளான மக்கள் சீரழிந்த கட்சிகளின் செல்வாக்கிலிருந்து தங்களைத்தாங்களே விடுவித்துக் கொள்ள பயில்கின்றனர்.”
OCI ஐ பொறுத்த வரையில், மத்திய வேலைநிறுத்த குழு என்பது சீரழிந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளுடன் தொழிலாளர்களின் "ஐக்கியத்தை" ஸ்தாபிக்க சேவை செய்வதாக இருந்தது.
வேலைநிறுத்த குழுக்களின் முழக்கத்தை இடைமருவுக் கோரிக்கைகளின் ஒரு வேலைத்திட்டத்துடன் இணைப்பதைக் கூட OCI தவிர்த்துக் கொண்டது. டு மாஸ்ஸோ இன் நூலின் பின்வரும் பந்தி தெளிவுபடுத்துவதைப் போல, OCI ஐ பொறுத்த வரையில், அந்த வேலைநிறுத்த குழுவே வேலைத்திட்டமாக இருந்தது: “ஒருவர் பார்ப்பதைப் போல, மத்திய வேலைநிறுத்த குழு குறித்த பிரச்சினையுடன் பொது வேலைநிறுத்தத்தின் தலைவிதியும் தொடர்புபட்டுள்ளது. இந்த குறிக்கோள், பொது வேலைநிறுத்தத்தின் அடிப்படை நோக்கங்களையும் மற்றும் அதன் அரசியல் விளைவுகளையும் குறித்த வரையறைகளின் விடயங்களையும், வேலைநிறுத்தத்தை ஐக்கியப்படுத்தும் அம்சங்களையும், ஐக்கியப்பட்ட தொழிலாளர்களது முன்னணியை கைவரப்பெறுவதற்கான விடயங்களையும்... என, மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில், அமைப்புரீதியில், இயக்கத்தின் தேவைகளை வெளிப்படுத்தும் ஓர் அமைப்பின் எல்லா அம்சங்களையும் ஒன்றிணைக்கிறது,” என்று எழுதுகிறார். [38]
இந்த "அமைப்புரீதியில்—மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில்" என்பது தெளிவாக OCI இன் மத்தியவாத கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்டுகளை பொறுத்த வரையில், உச்சகட்ட அரசியல் பிரச்சினைகள் என்பது முன்னோக்கு குறித்த பிரச்சினையாகும். மத்தியவாதிகளைப் பொறுத்த வரையில், அவை அமைப்புரீதியிலான பிரச்சினைகளாக உள்ளன. ஆனால் 1968 பொது வேலைநிறுத்தமும் மற்றும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் ஏனைய எண்ணிறந்த அனுபவங்களும் எடுத்துக்காட்டியுள்ளதைப் போல, அமைப்புரீதியிலான ஐக்கியத்திற்கு விடுப்பதன் மூலம், சமூகத்தின் சோசலிச மாற்றத்துடன் பிணைந்துள்ள சிக்கலான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியாது. அதற்கு ஓர் அரசியல் முன்னோக்கு அவசியப்படுவதுடன், அது முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்தும் மற்றும் அதன் சீர்திருத்தவாத, மத்தியவாத அமைப்புகளிடமிருந்து தெளிவாக விலகி இருக்குமாறும் கோருகிறது.
நடவடிக்கை குழுக்கள் பற்றிய அவரது கட்டுரையில், ட்ரொட்ஸ்கி பகிரங்கமாக தாக்கிய ஒரு இழிவார்ந்த மத்தியவாதியான மார்சோ பிவேர் இன் கருத்துக்களை, OCI இன் கருத்துக்கள், பலமாக நினைவுக்குக் கொண்டு வருகின்றன. “மத்தியவாதிகள் எந்தளவிற்கு 'வெகுஜனங்கள்' குறித்து பிதற்றுகிறார்கள் என்பது விடயமே அல்ல,” என்று எழுதிய ட்ரொட்ஸ்கி, “அவர்கள் எப்போதும் தங்களைத்தாங்களே சீர்திருத்தவாத எந்திரத்தின் மீது தமது நிலைநோக்கை கொண்டிருப்பர். மார்சோ பிவேர், இந்த அல்லது அந்த புரட்சிகர முழக்கத்தைத் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே, அதை வார்த்தையளவில் "அமைப்புரீதியிலான ஐக்கிய" கோட்பாட்டிற்கு அடிபணிய செய்கிறார். இந்த "அமைப்புரீதியிலான ஐக்கியம்" நடைமுறையில் புரட்சியாளர்களுக்கு எதிராக தேசப்பற்றாளர்களுடன் ஐக்கியப்படுவதற்கு திரும்புகிறது. ஒருங்கிணைந்த சமூக-தேசப்பற்று எந்திரங்களின் எதிர்ப்பை நிர்மூலமாக்குவதில் பெருந்திரளான மக்களின் வாழ்வா சாவா பிரச்சினை என்று வரும் நேரத்தில், இடது மத்தியவாதிகள் இத்தகைய எந்திரங்களின் 'ஐக்கியத்தை', புரட்சிகர போராட்ட நலன்களுக்கு மேலாக நிற்கும் ஒரு பரிபூரண 'நன்மையாக' கருதுகின்றனர்.”
ட்ரொட்ஸ்கி நடவடிக்கை குழு குறித்த அவரது கருத்துக்களை மீண்டுமொருமுறை தெளிவுபடுத்தி அவரது பகுப்பாய்வை முடித்தார்: “சமூக-தேசபற்றாளர்களின் துரோகத்தனமான தலைமையிலிருந்து பெருந்திரளான மக்களை விடுவிப்பதின் அவசியத்தை, இறுதி வரையில், புரிந்து வைத்துள்ளவர்களால் மட்டுமே நடவடிக்கை குழுக்கள் கட்டமைக்கப்படும். பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கான நிலைமை, தற்போதைய தலைமையை ஒழித்துக்கட்டுவதாகும். இத்தகைய நிலைமைகளின் கீழ் 'ஐக்கியம்' என்ற முழக்கம் முட்டாள்தனமானது மட்டுமல்ல, ஒரு குற்றமும் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்திய மற்றும் சர்வதேச சங்க (League of Nations) முகவர்களுடன் ஐக்கியம் வேண்டாம். புரட்சிகர நடவடிக்கை குழுக்களை, அவர்களின் நயவஞ்சக தலைமைக்கு எதிர்நிலையில் நிறுத்துவது அவசியமாகும். மார்சோ பிவேர் ஐ தலைமையில் கொண்டிருக்கும் 'புரட்சிகர இடது' என்றழைக்கப்படுவதன் எதிர்புரட்சிகர கொள்கைகளை இரக்கமின்றி அம்பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இத்தகைய குழுக்களைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்.” [மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]
பொது வேலைநிறுத்தத்தின் போது OCI
1968 இல் OCI இன் சக்திகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதினும், அவர்கள் பப்லோவாதிகளை விட அப்போது மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர். OCI, Fédération des etudiants révolutionnaires (FER) எனும் அதன் சொந்த மாணவர் அமைப்பை கொண்டிருந்ததுடன், பப்லோவாதிகளை போலில்லாமல், பல தொழிற்சாலைகளிலும் ஆதரவாளர்களைக் கொண்டிருந்தது.
புதிய இடது மற்றும் பப்லோவாதிகளின் கருத்துக்களை FER நிராகரித்தது. புதிய இடது மாணவர்களுக்கு "புரட்சிகர முன்னணிப்-படையின்" பாத்திரத்தை வழங்கி, விமர்சனமின்றி மாணவர்களது சாகச நடவடிக்கைகளை ஆதரித்தது. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நோக்குநிலை வழங்க FER போராடியதுடன், அந்த அடித்தளத்தில் எண்ணிறந்த புதிய அங்கத்தவர்களை வென்றெடுத்தது.
ஆனால் இந்த நோக்குநிலை, மத்தியவாத அடித்தளத்தில் அமைந்திருந்ததுடன், எஞ்சியவை அமைப்புரீதியிலான நடவடிக்கைகளுடன் மட்டுப்பட்டு இருந்தன. அது OCI இன் "ஐக்கிய முன்னணி" கொள்கைகளின் கட்டமைப்பிற்குள் செயல்பட்டது, அதாவது பிரதானமாக அது ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவிற்கான அழைப்புடன் பிணைந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரியளவிலான கூட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுக்குமாறு தொழிற்சங்கங்களுக்கு முறையீடுகளை வைத்திருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கைகளுக்கு எதிராகவோ அல்லது முதலாளித்துவ சித்தாந்தத்தின் இனப்பெருக்க களமாக இருந்த பல்கலைக்கழகங்களில் தீர்க்கமாக இருந்துவந்த புதிய இடதின் தத்துவங்களுக்கு எதிராகவோ FER ஒரு திட்டமிட்ட தாக்குதலை முன்னெடுக்கவில்லை.
இலத்தீன் வட்டார பகுதியில் நடந்த வீதி சண்டைகளின் போது, பப்லோவாத Jeunesse communiste révolutionnaire (JCR) ஆல் மே 8 அன்று பாரீஸின் முச்சுவாலிற்ரே மண்டபத்தில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் FER இன் தலையீடு குறித்து டு மாஸ்ஸோ அவரது நூலில் வர்ணிக்கிறார். JCR இன் பேச்சாளர் ஒருவர், அராஜகவாத டானியல் கோன்-பென்டிற்றால் கைதட்டி பாரட்டப்பட்டதுடன், அவர் அரசியல் போக்கைத் தெளிவுபடுத்துவது, இந்த இயக்கத்தையே உடைக்குமென கூறி, அவ்வாறு செய்வதை எதிர்த்து பேசுமளவிற்குச் சென்றார். அதற்கு பதிலாக அவர் வலியுறுத்துகையில், இது அனைவரும் உடன்படக்கூடிய கருத்துக்களைக் கண்டுபிடிக்கும் ஒரு விடயமென்றார். “ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாதபோது, பொலிஸிற்கு எதிராக போராடுபவர்களே நிஜமான புரட்சியாளர்கள்,” என்று JCR இன் பேச்சாளர் அறிவித்தார்.
இந்த நிலைப்பாட்டை FER இன் பிரதிநிதிகள் எதிர்த்தனர், அவர்கள் எல்லா மாணவர்களது முயற்சிகளையும் "தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு மத்திய ஆர்ப்பாட்ட" முழக்கத்தில் கொண்டு வந்து ஒருங்குவிக்குமாறு பரிந்துரைத்தனர். அந்த போராட்டம் "[மத்திய மாணவர் அமைப்பான] UNEF இன் ஆதரவுடன் ஒரு தேசிய வேலைநிறுத்த குழுவை மற்றும் வேலை நிறுத்த குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, மேற்கொண்டும் விரிவாக்கப்பட வேண்டும்,” என்று FER வாதிட்டது. இரண்டு நாட்களுக்குப் பின்னர், “இலத்தீன் வட்டாரப் பகுதியில் 500,000 தொழிலாளர்கள்" என்ற முழக்கத்தின் கீழ் FER அதன் சொந்த கூட்டத்தை நடத்தியது. இந்த முழக்கத்தைக் கொண்ட பத்தாயிரக் கணக்கான துண்டு பிரசுரங்கள் தொழிற்சாலைகளில் வினியோகிக்கப்பட்டன. [39]
சில நாட்கள் கழித்து தொழிற்சங்கங்கள், மே 13 இல், ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கும், மில்லியன் கணக்கானவர்கள் பங்கெடுத்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்புவிடுக்க நிர்பந்திக்கப்பட்டன. அந்த இயக்கம் அவர்களின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருந்தது. அதற்கடுத்து வந்த நாட்களில், அந்த வேலைநிறுத்தம் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பங்கெடுத்த தொழிற்சாலை ஆக்கிரமிப்பு அலைகளுடன் சேர்ந்து, ஒட்டுமொத்த நாடு முழுவதும் பரவி, முற்றிலுமாக பிரான்சையே முடக்கியது.
ஆனால் OCI மற்றும் FER அவற்றின் தொழிற்சங்கவாத போக்கை பேணி வந்தன. இப்போது அவை முற்றிலுமாக ஒரு தேசிய வேலைநிறுத்த குழுவிற்கான கோரிக்கை மீது ஒருங்குவிந்திருந்தன. மே 13 அன்று, OCI வழமைக்குமாறான விதத்தில் அதன் சொந்த பெயரில் ஒரு துண்டு பிரசுரம் வெளியிட்டது, அது அதற்கடுத்து வந்த நாட்களில் தொழிற்சாலைகளில் ஆயிரக் கணக்கில் வினியோகிக்கப்பட்டன.
வெறும் இருபது வரிகள் கொண்டிருந்த அந்த துண்டறிக்கை, ஒரேயொரு அரசியல் அறிவிப்பைக் கூட வழங்கவில்லை. அது (“போராட்டம் தொடங்கி உள்ளது,” “ஐக்கியம் வாழ்க,” “வெற்றி,” “முன்னோக்கி செல்வோம்,” “தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஐக்கியப்பட்டால், நாமே வெல்வோம்" என்ற) ஓய்ந்துபோன வெற்று வார்த்தைகளின் ஒரு தொகுப்பையும் மற்றும் (“டு கோல் ஒழிக,” “இந்த பொலிஸ் அரசு ஒழிக" என்ற) பொதுவான முழக்கங்களையும் கொண்டிருந்தது.
இந்த தொனி ஏதோ போதுமானளவிற்கு கடுமையாக இல்லை என்பதை போல, அந்த வார்த்தைகள் பெரிய மற்றும் கொட்டை எழுத்துக்களில் வைக்கப்பட்டன. அந்த துண்டறிக்கை பின்வரும் வார்த்தைகளுடன் அதன் உச்சதொனிக்குச் சென்றது: “Renault, Panhard, S.N.E.C.M.A இல் உள்ள தொழிலாளர்களே, எல்லா தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பட்டறைகளில் உள்ள தொழிலாளர்களே — வெற்றி நம்மைச் சார்ந்துள்ளது. நாம் வேலை செய்வதை நிறுத்த வேண்டும், ஆர்ப்பாட்டத்தில் இறங்க வேண்டும், நமது வேலைநிறுத்த குழுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்றது.
அரசியல் பணிகளை நெறிப்படுத்துவதற்காகவோ அல்லது தொழிலாளர்களுக்கு அவற்றை விளங்கப்படுத்துவதற்காகவோ புதிய நிலைமைகளை ஆராயும் முயற்சி அங்கே அறவே இருக்கவில்லை. வேகமாக அபிவிருத்தி அடைந்துவந்த புரட்சிகர நிலைமையை முகங்கொடுத்த நிலையில், OCI இல் இருந்த அனைவரும் கூட்டு நடவடிக்கைக்கு பொதுவான அழைப்பு விடுக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மித்திரோனின் FGDS இன் பாத்திரம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை; தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோக பாத்திரம் குறித்தும் எச்சரிக்கைகள் இல்லை; தொழிலாளர் அரசாங்கம் குறித்த பிரச்சினை மீது எதுவொன்றும் உச்சரிக்கப்படவே இல்லை.
இரண்டு வாரங்கள் கழித்து, மே 27 இல், அரசாங்கம், முதலாளிமார்களின் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பேரம்பேசப்பட்ட கிறெனெல் உடன்படிக்கையை வேலைநிறுத்த தொழிலாளர்கள் நிராகரித்தனர். அதிகாரம் பற்றிய பிரச்சினை பகிரங்கமாக முன்னுக்கு வந்தது.
இது குறித்து டு மாஸ்ஸோ தெளிவாக இருந்தார். அவர் எழுதுகிறார், “ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக மில்லியன் கணக்கான வேலைநிறுத்தக்காரர்கள் அரசு எந்திரத்தை அதிர செய்துள்ளனர். அரசாங்க, வணிக மற்றும் தொழிலாளர் இயக்க தலைவர்களுக்கு இடையே எட்டப்பட்ட, மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் ஒதுக்கித்தள்ளப்பட்டுள்ளன… இப்போது, நேரடியாக அதிகார பிரச்சினை எழுகிறது… பொது வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய, அரசாங்கம் துடைத்தெறியப்பட்டாக வேண்டும்.” [40]
இதற்கிடையே OCI, சம்பவங்களின் வாலைப்பிடித்து தொங்கிக் கொண்டிருந்தது. தொழிலாளர் கூட்டணி குழுக்களது (Comités d’alliance ouvrière) ஆதரவின் கீழ் அது பிரசுரித்த, பெரும் எண்ணிக்கையில் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டறிக்கையில், அரசாங்க பிரச்சினை குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை.
“கையெழுத்திடாதீர்கள்!” இது தான் பெரிய பெரிய தடித்த எழுத்துக்களில் அரை பக்கத்திற்கு ஐந்து முறை திரும்ப திரும்ப எழுதப்பட்டிருந்தது. அந்நேரத்தில் கிறெனெல் உடன்படிக்கையில் கையெழுத்திடுவது குறித்த எந்தவொரு பேச்சும், எந்த அம்சத்திலும், பயனற்றதாக இருந்தது. CGT தலைவர் ஜோர்ஜ் செகி (Georges Séguy) ஐ வரவேற்பதில் ரினோல்ட் தொழிலாளர்கள் விரோதம் காட்டியதற்குப் பின்னர், அந்த தொழிற்சங்கம் பயந்து, தற்காலிகமாக பின்வாங்கியது.
OCI இன் அந்த துண்டு பிரசுரம், “[பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகளான] CGT, CGT-FO, FEN இன் தலைவர்களே: அரசாங்கம் மற்றும் அரசுக்கு எதிராக நீங்கள் UNEF உடன் ஓர் ஒருங்கிணைந்த வர்க்க முன்னணியை ஸ்தாபிக்க வேண்டும்,” என்ற கோரிக்கையைக் கொண்டிருந்தது.
அதே நாளில், சீர்திருத்தவாத PSU (ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி), UNEF மற்றும் CFDT தொழிற்சங்கத்தின் ஒரு பாரிய கூட்டம், பாரீஸின் சார்லெட்டி மைதானத்தில் நடந்தது, அது பியர் மொன்டெஸ்-பிரான்ஸ் இன் கீழ் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கு சுமூகமான பாதை அமைத்துக் கொடுப்பதற்காக நடத்தப்பட்டது. "ஒரு இருமுனை அரசியல் நடவடிக்கைக்குத்" தயாரிப்பு செய்த அந்த கூட்டத்தை, டு மாஸ்ஸோ குதர்க்க புத்தியோடு, "குழப்பங்களின் ஒன்றுகூடலாக" வர்ணிக்கிறார்.
“முதலாவதாக,” அவர் தொடர்கிறார், “பொது வேலைநிறுத்தத்தின் போர்க் குணமிக்க பாகத்தின் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது, ஸ்ராலினிசம் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில், கட்டுப்பாட்டை 'மீண்டும் பெறுவதே' நோக்கமாகும்… அனைத்திற்கும் மேலாக, முதல் குறிக்கோளுடன் நேரடியாக இணைப்பு கொண்டரீதியில், மந்திரிசபை நெருக்கடிக்கு ஒரு முதலாளித்துவ தீர்வைக் காண அடித்தளம் தயார் செய்யப்பட வேண்டும். மொன்டெஸ்-பிரான்ஸ்… இந்த மணிப்பொழுதின் மனிதராக முன்நிற்கிறார்… " [41]
ஆனால் இங்கே OCI உம் அதற்கு இணங்கியது, ஆனால் அதன் கண்ணோட்டத்தைத் தெளிவாக எடுத்துக்காட்ட அங்கே அதற்கு அருமையான வாய்ப்பு இருந்தது. பியர் லம்பேர் சார்லெட்டி மைதானத்தில் ஒரு பேச்சாளராக இருந்தார். அங்கே கூடியிருந்த 50,000 மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே அவர் பேசினார்—OCI இன் தலைவராக அவரது தகைமையில் பேசவில்லை, மாறாக அவர் எதற்காக வேலை செய்து வந்தாரோ "அந்த Force Ouvrière social insurance இன் காரியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாக குழு பணியாளர்களின்" பெயரில், ஒரு தொழிற்சங்கவாதியாக பேசினார்.
அவர் அறிவிக்கையில், "முக்கியமான போராட்டம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது; பொது வேலைநிறுத்தம் அரசாங்கம் குறித்த பிரச்சினையை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது; டு கோல் மற்றும் பொம்பிடு இன் அரசாங்கத்தால் வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியாது,” என்று அவர் அறிவிக்கிறார். டு மாஸ்ஸோ அறிக்கையிலிருந்து என்ன தெரிய வருகிறதென்றால், அவர் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தின் அபாயங்களைக் குறித்து எச்சரிக்கவும் இல்லை, அல்லது தொழிலாளர் அரசாங்கம் மீதான பிரச்சினையைக் குறிப்பிடவும் இல்லை. அதற்கு மாறாக லம்பேர், உள்ளூர் வேலைநிறுத்த குழுக்கள் மற்றும் ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவை அமைப்பதற்கு அழைப்புவிடுத்தும், அதை அவர் வெற்றிக்கான பாதையாக சித்தரித்துக் காட்டியும் தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொண்டார். [42]
இதற்கிடையே, வீதிகளில், அந்த அழைப்பு "மக்களின் அரசாங்கம்" (Gouvernement populaire) என்பதாக எதிரொலித்தது. தொழிலாளர்களது கோரிக்கைகள் லம்பேர் இன் கோரிக்கைகளை விட தெளிவாக மிகவும் முன்னேறியவையாக இருந்தன.
"மக்களின் அரசாங்க"த்துக்கான அழைப்பு
மாஸ்ஸோ எழுதுகிறார்: “பிரான்ஸ் எங்கிலும் மே 27 இல் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன, அங்கே 'கையெழுத்திட வேண்டாம்!' என்பதன் உள்நோக்கங்கள், அரசாங்கம் மற்றும் அரசு என்பதாக, அரசியல் வார்த்தைகளுக்குள் மொழிமாறி உள்ளன… 'ஒரு மக்களின் அரசாங்கம்!' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிடுகின்றனர், அதாவது இது நாங்கள் பொது வேலைநிறுத்தத்தின் நோக்கங்களுக்கு விடையிறுக்கும் ஓர் அரசாங்கத்தை விரும்புகிறோம் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. 'டு கோல் இராஜினாமா செய்தாக வேண்டும்,' 'டு கோல் ஒழிக' என்று பத்தாயிரக் கணக்கான மக்களால் எங்கெங்கிலும் உரக்க ஒலிக்கப்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் தலைவிதியே பணயத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக எடுத்துக்காட்டி வருகின்றனர்.” [43]
ஒரு "மக்களின் அரசாங்கம்" என்ற இந்த அழைப்பை அரசியல் உள்ளடக்கத்தில் கொண்டு வர OCI முயலவில்லை. அனைத்திற்கும் மேலாக, அதுபோன்றவொரு அரசாங்கத்தை யார் உருவாக்க வேண்டும் என்பதையோ அல்லது அதன் அரசியல் வேலைதிட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதையோ அது விளங்கப்படுத்தவில்லை. இது PCF மற்றும் CGT இன் ஸ்ராலினிஸ்டுகளுக்கு தாமாகவே "மக்களின் அரசாங்கம்" என்ற முழக்கத்தை உயர்த்த உதவியது. ஆனால் அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தைக் கையிலெடுக்க கருதியதில்லை என்பதுடன், அதற்கு மாறாக அவர்கள் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தில் பங்கெடுப்பது குறித்து மித்திரோனுடன் திரைக்குப் பின்னால் பேரம்பேசி கொண்டிருந்தனர்.
இந்த விரிவுரை தொடரின் நான்காம் பாகத்தில் விவரிக்கப்பட்டதைப் போல, PCF மற்றும் CGT-இன் அரசாங்கத்திற்காக என கோரிக்கை வைத்திருந்தால் இந்நேரத்தில் அது பிரமாண்டமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியிருந்திருக்கக்கூடும். அது ஸ்ராலினிச தலைவர்களின் சூழ்ச்சிகளை தகர்த்தெறிந்து, அவர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதலைத் தீவிரப்படுத்தி இருக்கும்.
ட்ரொட்ஸ்கி "இடைமருவு வேலைத்திட்டத்தில்" அதுபோன்றவொரு தந்திரோபாயத்தை அறிவுறுத்தினார். அவர் ரஷ்ய புரட்சியின் போக்கில் போல்ஷிவிக்களுக்கு கிடைத்த அனுபவங்களின் அடித்தளத்தில் தன்னைத்தானே நிறுத்தி கொண்டு, எழுதினார்: “மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களுக்கு போல்ஷிவிக்களின் கோரிக்கை: 'முதலாளித்துவத்தை உடையுங்கள், அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுங்கள்!' என்பது பெருந்திரளான மக்களிடையே பிரமாண்டமான கல்வியூட்டலின் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கையிலெடுக்க பிடிவாதமாக மறுத்தமை, ஜூலை நாட்களில் வியத்தகு முறையில் அம்பலமாகி, மக்களின் கருத்தோட்டத்தின் முன்னால் முற்றிலுமாக அவர்களின் மதிப்பை கீழிறக்கியதுடன், போல்ஷிவிக்குகளின் வெற்றிக்கு தயாரிப்பு செய்தது.” [44]
ஆனால் OCI ஒருபோதும் அதுபோன்றவொரு கோரிக்கையை எழுப்பவில்லை என்பதுடன், அதற்கு மாறாக ஸ்ராலினிஸ்டுகளின் ஏமாற்றுத்தனத்தை விமர்சிக்காமல், மே 29 இல் "ஒரு மக்களின் அரசாங்கத்திற்காக" என்ற முழக்கத்தின் கீழ் நடந்த CGT இன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் UNEF மற்றும் CFDT உம் பங்கெடுக்கவில்லை என்பதற்காக, OCI அவற்றை தாக்கியது. (பிரான்சிலிருந்து டானியல் கோன்-பென்டிற் வெளியேற்றப்பட்டமைக்கு CGT கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற அடித்தளத்தில்) அவை பங்கெடுக்கவில்லை. OCI இதற்கு முன்னர் வரையிலும், CGT இன் நோக்கங்களிலிருந்து சுதந்திரமாக, அனைத்து தொழிற்சங்கங்களது ஓர் கூட்டு ஆர்ப்பாட்டம், தானாகவே ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கு பாதையைத் திறந்துவிடுமென வாதிட்டது. “ஒரேசீராக, அனைத்து தொழிற்சங்க அமைப்புகளாலும் ஏற்பாடு செய்யப்படும் இது, பொது வேலைநிறுத்தத்தின் மீதும், தொழிலாளர்களது அமைப்புகள் மீதும் தங்கியிருக்கும் ஓர் அரசாங்கத்திற்கு பாதையை திறந்துவிடும்,” என்று டு மாஸ்ஸோ எழுதுகிறார். [45]
மே 29 ஆர்ப்பாட்டத்தில் Comités d’alliance ouvrière ஆல் பிரசுரிக்கப்பட்ட துண்டு பிரசுரமும், ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காக OCI ஆல் அழைப்பிடப்பட்ட "மத்திய மற்றும் தேசிய வேலைநிறுத்த கமிட்டிக்கு" இணையாக இருந்தது: “தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு தொழிலாளர் அரசாகங்கமாக அது மட்டுமே இருக்கும்,” என்று அந்த துண்டறிக்கை அறிவித்தது. [46]
இது, தொழிலாளர்களின் அரசாங்கம் சார்ந்திருக்கக்கூடிய தொழிலாளர்களின் சபைகள் அல்லது சோவியத் போன்றதன் ஒரு வகையாக, OCI, வேலைநிறுத்த குழுவை கருதியது என்பதை இது அர்த்தப்படுத்தியதா? அந்த துண்டு பிரசுரத்தில் பயன்படுத்தப்பட்ட சூத்திரமயமாக்கல் அதைத்தான் பரிந்துரைக்கிறது. ஆனால் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உதாரணமாக நிற்கிறது. OCI இந்த பிரச்சினை மீது வெளிப்படையாக முடிவெடுக்காமல் இருந்துள்ளது.
அனைத்திற்கும் மேலாக, வேலைநிறுத்த குழுக்கள் மற்றும் தொழிலாளர் சபைகள் புரட்சிகர தலைமையின் பிரச்சினையை தீர்க்கவில்லை. அவை ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம் நடத்துவதற்குரிய களமாக இருக்கின்றனவே அன்றி, இந்த போராட்டத்திற்கு அவை ஒரு மாற்றீடு கிடையாது. ஆனால் OCI இன் துண்டு பிரசுரத்தில், PCF மற்றும் CGT குறித்து எந்தவொரு விமர்சனபூர்வ வார்த்தை கூட இருக்கவில்லை. அவை குறித்து குறிப்பிடப்படவும் கூட இல்லை.
CGT ஆர்ப்பாட்டம் பாரீஸில் மட்டும் அரை மில்லியன் மக்களை வீதிகளில் கண்டது, அதற்கடுத்த நாள், ஜனாதிபதி டு கோல் வானொலியில் தேசத்திற்கு உரையாற்றி, நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். PCF மற்றும் CGT புதிய தேர்தல்களுக்கான அறிவிப்பை வரவேற்றதுடன், அவை ஒழுங்காக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு வாக்குறுதியளித்தன, அது பொது வேலைநிறுத்தத்தை கைவிட அழைப்பு விடுப்பதற்கு ஒப்பானதாக இருந்தது.
வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கான கோரிக்கை உடனும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு முறையீடுகளுடனும் OCI எதிர்வினை காட்டியது: “ஒவ்வொன்றும் நமது உடனடி பதிலைச் சார்ந்துள்ளது! ஒவ்வொன்றும் தொழிற்சங்க தலைமையகங்களிலிருந்தும் மற்றும் தொழிலாளர் கட்சிகளிடமிருந்தும் வரும் அழைப்பைச் சார்ந்துள்ளது! பொது வேலைநிறுத்தம் பொலிஸ் அரசை தோற்கடிக்கும்!” என்றது. [47]
இதுதான் அதற்கடுத்துவந்த நாட்களில் OCI இன் அரசியல் போக்காக இருந்தது: அதாவது ஐக்கியத்திற்கு, தொடர்ந்து போராடுவதற்கு மற்றும் பின்வாங்காமல் இருப்பதற்கு என இவற்றிற்கான அழைப்பு, பொது வேலைநிறுத்தத்தை மூச்சடைக்க செய்த அதே தொழிற்சங்கங்களிடம் மற்றும் கட்சிகளிடம் கொண்டு செல்லப்பட்டன.
OCI இன் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் உட்பட ஒரு டஜன் கணக்கான ஏனைய அமைப்புகளோடு சேர்த்து, உள்துறை மந்திரி ஜூன் 12 இல், OCI க்கும் தடைவிதித்தார்.
7
சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) மத்தியவாத போக்கு (3)
OCI இன்வலதை நோக்கியபரிணாமம்
1968 சம்பவங்கள் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) வரலாற்றில் ஒரு திருப்புமுனையை குறிக்கிறது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் வேரூன்றியிருந்த OCI, பொது வேலைநிறுத்த வேளையில் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மத்தியவாத திசையில் பரிணமித்திருந்ததுடன், அதன் கொள்கைகள் அதிகரித்தளவில் ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாத அதிகாரத்துவங்களை நோக்கி சாய்ந்திருந்தது. மூன்றாண்டுகளுக்கு பின்னர், அது சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் உடைத்துக் கொண்டதுடன் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஒரு முக்கிய முண்டுகோலாக, அவ்விதத்தில், பிரெஞ்சு முதலாளித்துவ அரசின் ஒரு முக்கிய முண்டுகோலாக மாறியிருந்தது.
மாணவர் இயக்கமும் மற்றும் பொது வேலைநிறுத்தமும், OCI க்கு பல ஆயிரக்கணக்கான புதிய அங்கத்தவர்களையும் மற்றும் தொடர்புகளையும் கொண்டு வந்திருந்தது. அவர்கள் வெளிப்பார்வைக்கு ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் இணைந்திருந்தனர். ஆனால் OCI இன் மத்தியவாத போக்கு, அவர்களை அதிகாரத்துவ அமைப்பு எந்திரங்களை நோக்கி நோக்குநிலை கொள்ள செய்திருந்தது. அவர்கள் மார்க்சிஸ்டுகளாக பயிற்றுவிக்கப்படவில்லை, மாறாக சந்தர்ப்பவாதிகளாக கல்வியூட்டப்பட்டார்கள்.
படிப்படியாக பழைய காரியாளர்களின் இடத்தைப் பிடித்த இத்தகைய இளைஞர்கள், OCI இன் வலதுநோக்கிய அபிவிருத்தியில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். அவர்களில் பலர் பின்னர் சோசலிஸ்ட் கட்சிக்கு மாறியதுடன், அதனுடன் சேர்ந்து ஓர் தொழில்முறை அரசியல் வாழ்வை மேற்கொள்ள தொடங்கினர். அது அவர்களை உயர்ந்த அரசு பதவிகளுக்குக் கொண்டு சென்றது.
OCI இன் வலதுநோக்கிய பரிணாமம், "தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்கள்" என்று குறிப்பிட்டு, அது 1968 இல் சிறப்பு கவனம் செலுத்தி வந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கீழ்மட்ட பதவிகளில் இருந்தவர்களை அது "தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்கள்" என்று குறிப்பிட்டமை, ஒரு சமூக அடுக்கின் எழுச்சியோடு நெருக்கமாக பிணைந்திருந்தது.
நாம் பார்த்துள்ளதைப்போல, கூர்மையடையும் அரசியல் நெருக்கடி இத்தகைய "காரியாளர்களை" “கட்சி எந்திரத்துடன்" மோதலுக்குக் கொண்டு வந்து, அவர்களை இடதிற்கு திரும்ப நிர்பந்திக்குமென OCI நம்பியது. இந்த நம்பிக்கை தொழிற்சங்கங்களின் தன்மை பற்றிய ஒரு தவறான புரிதலின் அடித்தளத்தில் மட்டும் இருக்கவில்லை, கோலிச ஆட்சியைக் குறித்த ஒரு பிழையான மதிப்பீட்டின் மீதும் தங்கியிருந்தது. அந்த ஆட்சியை OCI பாரியளவில் மிகைமதிப்பீடு செய்தது.
1958 இல் இருந்து, அல்ஜீரிய நெருக்கடியின் உச்சத்தில் ஜெனரால் டு கோல் ஆட்சிக்கு திரும்பிய போதும் மற்றும் அவரது தனிப்பட்ட தேவைகளுக்கு பொருந்தியிருக்ககூடிய ஓர் அரசியலமைப்பை கொண்டுவந்த போதும், OCI அவரது ஆட்சியை போனபார்ட்டிசம் என்று குணாம்சப்படுத்தி இருந்தது. “பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் ஏனைய அரசியல் பிரமுகர்கள் மத்தியில் வெறுமனே டு கோல் ஒரு கூறு மட்டுமல்ல,” மாறாக டு கோல் அவரது வர்க்கத்தினால் நிர்ப்பந்திக்கப்பட்டு, மேலும் அவர் அதனால் ஆதரிக்கப்பட்டார். ஏனெனில் "எல்லா சமூக அடுக்குகளையும் அடிபணிய செய்கின்ற, பொருளாதாரத்தின் அனைத்து ஆதாரவளங்களையும் ஒன்றுதிரட்டுகின்ற மற்றும் முழுமையாக பெரும் மூலதனத்திற்கு ஆதரவாக சமூகத்தின் எல்லா பகுதிகளையும் ஒன்றுதிரட்டுகின்ற ஒரு பலமான அரசு ஆதரவு கொடுத்தால் மட்டுமே பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராகவும் மற்றும் அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராகவும் அதனால் அதன் போராட்டத்தை நடத்த முடியும்,” என்று OCI, “கோலிச போனபார்ட்டிசமும் முன்னணிப்-படையின் பணிகளும்" என்ற தலைப்பின் கீழ் 1968 இன் தொடக்கத்தில் ஒரு வேலைத்திட்ட கட்டுரையை எழுதி la vérité இல் பிரசுரித்தது. [48]
OCI, டு கோல் ஐ ஏறத்தாழ மனிதசக்திக்கு அப்பாற்பட்ட மனிதராக காட்டியது. “அவரால் நிறுவப்பட்ட அரசு ஓர் இரும்புபிடியாகும், அது ஒரு தளர்ந்த மற்றும் பலவீனமான முதலாளித்துவ வர்க்கம் அதன் காலில் உறுதியாக நிற்க உதவுகிறது,” என்று அந்த கட்டுரை வாதிட்டது. “பாராளுமன்றம் ஒரு போலிமூடுதிரையாக இருந்ததுடன், தொழிலாளர்களின் தலைவர்கள் பெருந்திரளான மக்களிடையே தேர்தல் பிரமைகளைக் காப்பாற்றி வைக்க" உதவியது.
நீண்டகாலமாக, OCI ஒருவகை தலைமறைவான முறையில் இயங்கிவந்தது. ஏனெனில் டு கோல் பகிரங்கமாக சர்வாதிகார ஆட்சி வடிவத்தை எடுப்பார் என்று அது எதிர்பார்த்தது. ஒரு கடுமையான நெருக்கடி ஏற்படும் வேளையில், அவர் அரசுக்குள் ஒருங்கிணைந்துள்ள தொழிற்சங்க தலைவர்களின் ஆதரவுடன் தொழிலாளர் இயக்கத்தை நசுக்குவார் என்று அது நம்பியிருந்தது.
OCI எழுதியது: “தொழிலாளர்களின் இயக்கத்தை அரசியல்ரீதியில் நசுக்க, அந்த வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்களை அழிப்பதும் மற்றும் கலைப்பதுமே, டு கோல் மற்றும் அந்த கட்சி எந்திரங்களின் பொதுவான நோக்கமாகும். “போனபார்ட்டிசத்தினது கொலைவெறி திட்டங்களின் நேரடி முகவர்களாக மாறி, அரசுக்குள் தங்களைத்தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டோ அல்லது அதன் கீழ் செல்லும் விதத்திலோ" அந்த "கட்சி எந்திரங்கள்" மாற்றீட்டை முகங்கொடுத்தன, அதேவேளையில் "வர்க்க போராட்ட களத்தில் இருந்த அமைப்புரீதியிலான காரியாளர்கள், கட்சி எந்திரங்களின் அரசியலில் இருந்து தங்களைத்தாங்களே விலக்கிக் கொள்ள நகர்வார்கள்.”
ஆனால் 1968 இல், யதார்த்தமானது OCI என்ன கருதியதோ அதிலிருந்து மிகவும் வேறுபட்டு இருந்தது. அது எதிர்பார்த்ததையும் விட கோலிச ஆட்சி மிகவும் பலவீனமாக இருந்தது. அது 10 மில்லியன் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்தை பலவந்தமாக ஒடுக்க துணியவில்லை. அதை அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக, அது "கட்சி எந்திரங்களின்" சேவையை மட்டும் பயன்படுத்தவில்லை, மாறாக, அனைத்திற்கும் மேலாக, OCI யார் மீது நம்பிக்கை வைத்திருந்ததோ அந்த "காரியாளர்களின்" சேவைகளையும் பயன்படுத்தியது. அது ஒப்பீட்டளவில் மிக சிறியளவில் தொழிலாளர்களுக்கு சடரீதியிலான சலுகைகளை வழங்கிய போதினும், பொது வேலைநிறுத்தத்திலிருந்து நிஜமாக ஆதாயமடைந்தவர்கள் அத்தகைய "காரியாளர்களாகத்" தான் இருந்தார்கள்.
தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் ஒரு பரந்த அடுக்கை பொறுத்த வரையில், 1968 ஆம் ஆண்டு, அதற்கு பணம்-கொழிக்கும் பதவிகளையும் அத்துடன் அவர்களுக்கு அரசியல் செல்வாக்கையும் வழங்கிய ஒரு சமூக முன்னேற்றத்தின் தொடக்கத்தை குறிப்பதாக இருந்தது. தொழில்துறைக்குள் தொழிற்சங்கங்களை சட்டபூர்வமாக நங்கூரமிடுவதும் மற்றும் ஸ்திரப்படுத்துவதும், கிறெனெல் உடன்படிக்கையின் பாகமாக இருந்தன. இதை அரசாங்கம், முதலாளிமார்களது அமைப்புகளின் ஆரம்ப எதிர்ப்புகளுக்கு எதிராக வலியுறுத்தி இருந்தது.
அது தொழிற்சங்கங்களால் மற்றும் தொழில் வழங்குனர்களால் சமூகநல காப்புறுதி முறையின் கூட்டு நிர்வாகத்தைத் தொடர்வதற்கும் உத்தரவாதம் அளித்தது. அரசு-மானிய வரவு-செலவு திட்டத்தில் பில்லியன் கணக்கில் மதிப்புடைய பல்வேறு சமூகநல காப்புறுதி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தொழிற்சங்க அங்கத்தவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்த போதினும் கூட, (பல முக்கிய OCI அங்கத்தவர்கள் உட்பட) எண்ணிறைந்த தொழிற்சங்க அதிகாரிகளுக்கு, தொடர்ந்து பெரும் தொகைகள் கிடைத்தன.
அதற்கும் கூடுதலாக, உடைந்து பிரிந்திருந்த சமூக ஜனநாயகக் குழுக்கள் 1969 இல் சோசலிஸ்ட் கட்சிக்குள் ஒருங்கிணைந்ததுடன், அக்கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் கூட்டணி, பல செயல்பாட்டாளர்களுக்கு அரசியல் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்கியது. அல்ஜீரிய போர் மற்றும் நான்காம் குடியரசில் அது வகித்த இழிவார்ந்த பாத்திரத்தால் மதிப்பிழந்திருந்த "இடது", மீண்டுமொருமுறை ஓர் அரசியல் சக்தியாக ஆனது. அது உள்ளாட்சி அளவிலும், பிராந்தியளவிலும் மற்றும் (பிரான்சுவா மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்) தேசியளவிலும் பல்வேறு மிகவும் மதிப்புடைய பதவிகளை ஏற்றிருந்தது.
1968க்குப் பின்னர், OCI அதன் நோக்குநிலையை அதிகாரத்துவத்தை நோக்கி பேணி வந்ததுடன், அதன் சமூக உயர்வுக்கேற்ற அரசியல் வேலைத்திட்டத்தையும் ஏற்றிருந்தது. 1971 வாக்கில், அது "காரியாளர்களுக்கும்" மற்றும் "கட்சி எந்திரத்திற்கும்" இடையே ஒரு வேறுபாட்டை வரைந்திருக்கவில்லை என்பதுடன், அது "கட்சி எந்திரத்திடம்" நன்மதிப்பைப் பெற முயன்றது. 1968 இல் OCI இன் மூர்க்கமான தாக்குதலுக்கு உள்ளான மித்திரோன், இப்போது பாரீஸ் கம்யூனின் நூறாவது நினைவாண்டு விழாவில் மிகப்பெரிய OCI பேரணியில் ஒரு பேச்சாளராக ஆகியிருந்தார். “ஒருங்கிணைந்த வர்க்க முன்னணி" (Front unique de classe) என்பது இப்போது, "மத்திய வேலைநிறுத்த குழுவுடன்" (Comité central de grève) அல்லாது, மாறாக சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் கூட்டணியுடன் அடையாளம் காணப்பட்டது.
சில தீவிர போக்கு குழுக்கள் அவற்றின் சொந்த தேர்தல் வேட்பாளர்களை முன்னிறுத்தின என்பதற்காக OCI அவற்றையும் கண்டித்தது. பப்லோவாத சர்வதேச கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Internationaliste – பிற்கால LCR) அதன் சொந்த ஜனாதிபதி வேட்பாளராக அலன் கிறிவினை நிறுத்தியது என்பதற்காக, 1969 இல், OCI அதையும் ஆக்ரோஷமாக தாக்கியது. OCI அதன் இளைஞர் பத்திரிகை Jeunesse révolutionnaire இல் குறிப்பிடுகையில், "தங்களின் அமைப்புகள் மற்றும் கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்கும் தொழிலாளர்களிடம் இருந்து, 'முன்னேறிய' தொழிலாளர்களை" இது பிளவுபடுத்துவதுடன், "முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஸ்ராலினிச எந்திரத்திற்கு தளவாடங்களை" வழங்குவதாக குறிப்பிட்டது. 1974 இல், Lutte Ouvrière (தொழிலாளர் போராட்டம்) இன் ஆர்லெட் லாகியே (Arlette Laguiller) மற்றும் கிறிவின் தேர்தலில் பங்கெடுத்ததற்காக அவர்களை "ஐக்கிய தொழிலாளர் முன்னணிக்கு எதிரான கோட்பாடற்ற வேட்பாளர்கள்" என்று கண்டித்தது. [49]
1971 இல், OCI அதன் பல அங்கத்தவர்களை சோசலிஸ்ட் கட்சிக்குள் அனுப்பியது. அவர்களது பணி ஒரு கன்னையை அபிவிருத்தி செய்வதாக இருக்கவில்லை, மாறாக மித்திரோனை ஆதரிப்பதாக இருந்தது. இத்தகைய OCI அங்கத்தவர்களில் மிகவும் வெற்றிகரமாக இருந்தவர், லியோனெல் ஜோஸ்பன். இவர் எதிர்கால ஜனாதிபதியின் ஆலோசகர்கள் வட்டத்திற்குள் வேகமாக இணைந்துகொண்டதுடன், இறுதியாக 1981 இல் அவரே சோசலிஸ்ட் கட்சியின் தலைவராகவும் ஆனார். அந்நேரத்தில் ஜோஸ்பன் அப்போதும் OCI இன் ஓர் அங்கத்தவராக இருந்ததுடன், ஆலோசனைகளுக்காக பியர் லம்பேர் ஐ வழமையாக சந்தித்தார். அவரது விருப்பத்திற்குரியவரின் (ஜோஸ்பனின்) நிஜமான அரசியல் அடையாளம் குறித்து மித்திரோன் நன்கறிந்திருந்தார் என்பதை நேரில் பார்த்தவர்கள் அதற்குப் பின்னர் உறுதிப்படுத்தி உள்ளனர். 1997 இல் இருந்து 2002 வரையில், ஜோஸ்பன் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரியாக இருந்தார்.
மூன்றாவது மிகப்பெரிய பிரெஞ்சு தொழிற்சங்க கூட்டமைப்பான Force Ouvrière (தொழிலாளர் சக்தி - FO) மற்றும் மாணவர் கூட்டமைப்பு UNEF இன் "அமைப்பு எந்திரத்தையும்" OCI கைப்பற்றி இருந்தது. பல ஆண்டுகளாக, கட்சி அங்கத்தவர்களோ அல்லது நெருக்கமான ஆதரவாளர்களோ அவ்விரு அமைப்புகளின் தலைமையில் இருந்தனர். OCI இன் மாணவர் பிரிவு வேலைகளுக்கு பல ஆண்டுகள் பொறுப்பாக இருந்த ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் (Jean-Christophe Cambadélis, இவர் 2014 ஏப்பிரலில் இருந்து பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராவர்), 1986 இல், அவர் 450 OCI அங்கத்தவர்களுடன், OCI இன் மத்திய குழுவிலிருந்து நேரடியாக சோசலிஸ்ட் கட்சியின் தலைமைக்குள் நகர்ந்தார்.
1985 இல் இருந்து, OCI எச்சரிக்கையுடன் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து தன்னைத்தானே விலக்கிக்கொள்ளத் தொடங்கியது. சோசலிஸ்ட் கட்சி 1981 இல் இருந்து முதலாளித்துவ குடியரசிற்கு அதன் ஜனாதிபதியை வழங்கி இருந்ததுடன், பெரு வணிக நலன்களுக்கு ஆதரவான கொள்கைகளை பின்பற்றும் அதன் அரசாங்கத்தை நிறுவி இருந்தது. OCI, தொழிலாளர் கட்சிக்கான ஒரு இயக்கத்தை (Mouvement pour un Parti des travailleurs – MPPT) உருவாக்கியது. இது முற்றிலும் OCI இன் ஒரு உருவாக்கம் தான் என்றாலும், அந்த அமைப்பிற்குள் "ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" ஒரு சிறுபான்மையினராக மட்டுமே இருந்ததாகவும், அது சமூக ஜனநாயக, கம்யூனிஸ்ட் மற்றும் அராஜகவாத-தொழிற்சங்கவாத போக்குகளுக்கு திறந்திருப்பதாகவும் எப்போதும் OCI வலியுறுத்தியது. தங்களின் சொந்த அமைப்புகளது தலைமையுடன் மோதலுக்கு வந்த அல்லது அவர்களது வாழ்க்கை முன்னேற்றங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டதற்காக மோதலுக்குள் வந்த, அதிருப்தி கொண்ட தொழிற்சங்கத்தின் மற்றும் கட்சியின் அதிகாரத்துவவாதிகளின் ஒரு திரட்சியாக MPPT இருந்தது.
1985 இல் MPPT, தொழிலாளர் கட்சி (Parti des travailleurs —PT) என பெயர் மாற்றம் செய்துகொண்டது. ஜூன் 2008 இல் அது, சுதந்திர தொழிலாளர் கட்சிக்குள் (Parti ouvrier independent — POI) தன்னை கலைத்துக்கொண்டது. “சோசலிசம், குடியரசு மற்றும் ஜனநாயகத்திற்காக" என்ற இந்த புதிய கட்சியின் முழக்கம் ஐயத்திற்கிடமின்றி வலதுசாரி சமூக ஜனநாயகத்தின் மரபியமாகும். அது பூகோளமயமாக்கலின் விளைவுகளுக்கு தேசிய அரசை ஊக்குவிப்பதன் மூலமாக விடையிறுப்பு காட்டிய, குட்டி முதலாளித்துவ மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அடுக்குகளுக்காக பேசுகிறது. அதன் அரசியல் வேலை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கிளர்ச்சியின் மீது மையங்கொண்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக அது ஒரு சோசலிச ஐரோப்பாவை முன்னிறுத்தவில்லை, மாறாக "ஐரோப்பாவின் அனைத்து மக்களுக்கான ஒரு சுதந்திர மற்றும் சகோதரத்துவ ஒன்றியத்தை" முன்னிறுத்துகிறது. POI இன் இன்னொரு சுலோகம், “ஆம், ஐரோப்பிய மக்களின் இறையாண்மைக்காக" என்று கூறுகிறது. இத்தகைய சுலோகங்களுக்கு அடியிலிருந்த தேசியவாத உள்தொனி தவிர்க்கமுடியாததாக இருந்தது. தட்டிக்கழிக்கவியலாத அளவிற்கு தேசியவாத தொனிகள் அமைந்துள்ளன.
OCI இன் மத்தியவாத வேர்கள்
OCI இன் மத்தியவாத பிறழ்வு 1968க்கு நீண்டகாலத்திற்கு முன்னரே ஆரம்பித்திருந்தது. 1968 இல் OCI இன் தலையீட்டை தீர்மானிக்கவிருந்த கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) ஜூன் 1967 இல், OCI க்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியது. குறிப்பாக, அக்கடிதம் அனைத்துலகக் குழுவின் நம்பகத்தன்மை மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான அதன் போராட்டத்தின் முக்கியத்துவத்தை நோக்கி OCI இன் அதிகரித்துவந்த ஐயுறவை குறிப்பிட்டுக் காட்டியது. [50]
அதற்கு ஓராண்டுக்கு முன்னதாக, ICFI இன் மூன்றாம் உலக மாநாட்டில், SLL ஆல் சமர்பிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை OCI ஆதரித்திருந்தது. நான்காம் அகிலத்தை அழிப்பதற்கான திருத்தல்வாத முயற்சிகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அத்தீர்மானம் வலியுறுத்தியது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது கட்சி கட்டும் மிக முக்கிய பணிகளிலிருந்து ஒரு திசைதிருப்பம் அல்ல. அதற்கு மாறாக, ட்ரொட்ஸ்கிச இயக்கம் பப்லோவாதத்திற்கு எதிராக மார்க்சிசத்தை உறுதியாக பாதுகாப்பதில், முதலாளித்துவ வர்க்கத்தின் சித்தாந்த அழுத்தத்திற்கு எதிராக போராடி, அதன் புரட்சிகர முன்னோக்கை அபிவிருத்தி செய்வது என்று அம்மாநாடு வலியுறுத்தியது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை உள்ளடக்கி இருப்பதாகவும், அது, ஒரு புதிய பாட்டாளி வர்க்க தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான முன்நிபந்தனை என்றும் அம்மாநாடு வலியுறுத்தியது.
SLL இன் அந்த தீர்மானம், ஸ்பாட்டசிஸ்ட் போக்கு மற்றும் Voix Ouvrière குழுவிற்கு (இன்றைய Lutte Ouvrière) எதிராக திரும்பி இருந்தது. அவையும் அம்மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தன. “நான்காம் அகிலத்தின் மறுகட்டமைப்பு" என்ற அந்த பிரதான தீர்மானத்தின் தலைப்பானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழிக்கப்பட்டிருப்பதை போலவும் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக 1953 இல் இருந்து நடத்தப்பட்ட அனைத்துலகக் குழுவின் போராட்டம் எந்தவித தத்துவார்த்த மற்றும் அரசியல் முக்கியத்துவமும் கொண்டிருக்காததாகவும், ஆகவே ஏதோவிதத்தில் அது இரட்டை அர்த்தம் கொண்டிருந்ததாக அவை பொருள்விளக்கம் அளித்தன. பரந்தரீதியில் அரசியல் பொதுமன்னிப்பின் அடித்தளத்தில் நான்காம் அகிலத்தை "மறுகட்டுமானம்" செய்ய அவர்கள் போராடி வந்தனர், அவ்விதத்தில் 1953 இன் உடைவுக்கு இட்டுச் சென்ற முக்கிய வேலைதிட்ட பிரச்சினைகள் ஓரங்கட்டப்பட்டு விட்டன. அதுபோன்றவொரு ஒழித்துக்கட்டும் போக்கை அனைத்துலகக் குழு எதிர்ப்பதைக் கண்டதும், இந்த இரண்டு அமைப்புகளும் அம்மாநாட்டிலிருந்து வெளியேறின.
பப்லோவாதிகளுக்கு எதிரான ICFI இன் வரலாற்று ரீதியிலான போராட்டத்திற்கு எதிராக, ஸ்பாட்டசிஸ்ட் போக்கு மற்றும் Voix Ouvrière ஆல் காட்டப்பட்ட வெறித்தனமான விரோதத்தை முகங்கொடுத்த OCI, மூன்றாம் மாநாட்டில் தன்னைத்தானே SLL உடன் அணிசேர்த்துக் கொண்டதுடன், அதன் தீர்மானத்திற்கும் வாக்களித்தது. ஆனால் OCI கணிசமான அளவிற்கு அதன் சொந்த தனிவிருப்புரிமைகளை பேணி வந்தது என்பது விரைவிலேயே தெளிவானது.
மே 1967 இல், அது பிரசுரித்த ஓர் அறிக்கை, மூன்றாம் உலக மாநாட்டின் சாதனைகளை பகிரங்கமாக கேள்விக்குட்படுத்தியது. மூன்றாம் உலக மாநாட்டிற்கு பின்னரில் இருந்து "அனைத்துலகக் குழுவின் நடவடிக்கை குறித்த ஒரு இருப்பு நிலைக்குறிப்பு அறிக்கை" வரைய வேண்டுமென்ற சாக்குபோக்கின் கீழ் மற்றும் "அனைத்துலகக் குழுவின் மூன்றாம் மாநாட்டில் விவாதிக்க முடியாமல் போன பிரச்சினைகளை தீர்க்க, அவசியமான பகிரங்க விவாதங்களுக்கு திறந்துவிட" கோரி, OCI நான்காம் அகிலத்தின் தடையற்ற தொடர்ச்சியை மறுத்தது. [51]
“பப்லோவாத தலைமையின் திவால்நிலைமையை அறிவித்துள்ள நாம், வெறுமனே பப்லோவாத சர்வதேச செயலகத்தின் [International Secretariat] இடத்தை அனைத்துலகக் குழு எடுத்து கொண்டதுடன், நான்காம் அகிலம் சாதாரணமாகவும் எளிமையாகவும் தொடர்ச்சியாக இருக்கின்றது என்று கூறிவிட முடியாது" என்று OCI இன் அந்த ஆவணம் குறிப்பிட்டது. “நான்காம் அகிலத்தின் பழைய தலைமை அனைத்தும் ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் அழுத்தத்தின் கீழ் அடிபணிந்தன,” என்று அறிவிக்குமளவிற்கு அது சென்றது.
“பப்லோவாத நெருக்கடி நான்காம் அகிலத்தை அமைப்புரீதியில் உருக்குலைத்துவிட்டது,” என்று குறிப்பிட்ட OCI இன் அந்த ஆவணம் தொடர்ந்து, “ஒன்றுதிரண்டிருக்கும் தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்… 'பழைய மன்னர் இறந்துவிட்டார், புதிய மன்னர் வாழ்க' என்று நாம் கத்திக் கொண்டிருக்க முடியாது. நாம் இத்தகைய பிரச்சினைகள் மீது ஒரு விவாதத்தைத் தொடங்க வேண்டும், அதுபோன்றவொரு விவாதம் அனைத்துலகக் குழுவிற்குள் முற்றிலுமாக இதுவரையில் எடுக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டது.
அந்த ஆவணம் பின்வரும் அறிவிப்பில் அதன் உச்சத்தை அடைந்தது: “அடிப்படையில், எதிர் வர்க்க சக்திகளின் அழுத்தங்களின் கீழ் நான்காம் அகிலம் அழிந்துவிட்டது… அனைத்துலகக் குழு நான்காம் அகிலத்தின் தலைமையே அல்ல… நான்காம் அகிலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு அனைத்துலகக் குழு உந்து சக்தியாக இருக்கிறது” என்றது. [52]
பின்னர் அந்த ஆவணம், பப்லோவாதத்தைக் குறித்த அனைத்துலகக் குழுவின் முந்தைய பகுப்பாய்விலிருந்து முற்றிலும் வேறுபட்டவிதத்தில், அதை எடுத்துக்காட்டியது. மார்க்சிச வேலைதிட்டத்தை திருத்தியமைத்ததற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தையும் கைவிட்டதற்கும், நான்காம் அகிலத்தை கலைக்க கோரியதற்கும் பப்லோவாதிகளை OCI குற்றம்சாட்டாது, அதற்கு மாறாக, "ஒரு பூர்த்திசெய்யப்பட்ட நான்காம் அகிலத்திற்கான கருத்துக்களையும், அதீத-மத்தியமயப்பட்ட கட்டமைப்பு மற்றும் உலக மாநாடுகளைக் கொண்ட ஒரு கூர்கோபுர பாணியிலான அமைப்பு படிநிலையை கொண்ட கட்சிக் கருத்தையும்" பப்லோவாதிகள் பேணி வருவதற்காக அவர்களைக் குறைகூறியது. ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை "ஒரு கட்டிமுடிக்கப்பட்ட ஒன்றாகவோ அல்லது ஒரு பூர்த்தியாக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டிருப்பதாகவோ கருதவில்லை என்று வாதிடுமளவிற்கு அது சென்றது.” [53]
ஸ்பாட்டசிஸ்ட் போக்கு மற்றும் Voix Ouvrière உடனான சர்ச்சைக்குப் பின்னர், பிரிட்டிஷ் SLL வேகமாக இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதுடன், அனைத்துலகக் குழுவின் பாத்திரத்தை குறித்து சவால் விடுக்கும் OCI இன் முயற்சியை முற்றிலுமாக நிராகரித்தது. “மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுத்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சீர்திருத்தவாதிகளுக்கு எதிரான வெறுப்பார்ந்த அனுபவத்தை உள்ளடக்கியிருப்பதை நான்காம் அகிலத்தின் எதிர்காலம் பிரதிநிதித்துவம் செய்கிறது,” என்று அது எழுதியது. “நான்காம் அகிலம் இந்த தேவையை பூர்த்தி செய்ய நனவுபூர்வமாக தலைமைக்காக போராட வேண்டும்… திரித்தல்வாதத்திற்கு எதிரான இந்த போராட்டம் மட்டுமே, முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் இழுக்கப்படும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் தலைமையை எடுத்துக்கொள்வதற்கு காரியாளர்களை தயார் செய்ய முடியும்… பப்லோவாதிகளுக்கு எதிரான இந்த உயிரோட்டமான போராட்டமும், இந்த போராட்டத்தின் அடித்தளத்தில் காரியாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு பயிற்சியளிப்பதும் 1952 இலிருந்து நான்காம் அகிலத்தின் ஜீவநாடியாக இருந்தது.” [54]
SLL, நான்காம் அகிலத்தின் வரலாற்று தொடர்ச்சியை பாதுகாத்ததோடு தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அது வர்க்க போராட்டத்தின் புறநிலை மாற்றங்களுக்கும் மற்றும் OCI இன் அதிகரித்துவந்த ஐயுறவுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டியது. உலகெங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவந்த தீவிரமயப்பாட்டையும் மற்றும் அதன் சொந்த காரியாளர்களின் எண்ணிறந்த பலவீனத்தையும் முகங்கொடுத்த OCI, தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிச நனவிற்காக ஓர் கடும்பிரயத்தமான போராட்டத்தை நடத்தாமல் அதன் செல்வாக்கை வென்றெடுக்க அனுமதிக்கும் ஒரு சந்தர்ப்பவாத குறுக்குவழியை காண முயன்றது. இதுதான், ஒரு "அதீத-மத்திமயப்பட்ட" அகிலத்தை பப்லோவாதிகள் பரிந்துரைத்து வருகின்றனர் என்ற அதன் குற்றச்சாட்டின், ட்ரொட்ஸ்கி எவ்வித உறுதியான கட்டமைப்பும் இல்லாத ஓர் அகிலத்தை விரும்பினார் என்ற அதன் வாதத்தினதும், மற்றும் மூன்றாம் உலக மாநாட்டிற்குப் பின்னர் அனைத்துலகக் குழுவின் அமைப்புரீதியிலான பலவீனங்கள் மற்றும் தவறுகளின் மீது OCI தங்கியிருந்ததன் அர்த்தமாக இருந்தது.
ஆகவே SLL பின்வருமாறு எச்சரித்தது: “மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில், தொழிலாளர்களின் தீவிரமயப்படுத்தல் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது… அதுபோன்றவொரு அபிவிருத்திக் கட்டத்தில் ஒரு புரட்சிகர கட்சி தொழிலாள வர்க்கத்திற்குள் அந்த நிலைமைக்கு புரட்சிகரமான விதத்தில் அல்லாமல் மாறாக தொழிலாளர்கள் பழைய தலைமையின் கீழான —அதாவது தவிர்க்கவியலாத ஆரம்ப குழப்பத்துடன்— அவர்களின் சொந்த அனுபவங்களுடன் மட்டுப்பட்ட போராட்டத்தின் தரங்களுக்கு அடிபணிந்துபோகும் ஓர் அபாயம் எப்போதுமே அங்கே நிலவுகிறது. சுயாதீனமான கட்சிக்கான மற்றும் இடைமருவு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் இவ்வாறான திருத்தங்கள் வழமையாக, தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமாக செல்வதற்காக, போராட்டத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதற்காக, இறுதி எச்சரிக்கைகளை முன்நிறுத்தாமல் இருப்பதற்காக, வறட்டுவாதத்தை தவிர்த்தொதுக்குவதற்காக, இன்ன பிறவற்றிற்காக என்ற போர்வையில் கொண்டு செல்லப்படுகின்றன" (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது). [55]
OCI இன் சந்தர்ப்பவாத நோக்குநிலை குறிப்பாக "ஐக்கிய முன்னணி" என்ற அதன் பொருள்விளக்கத்தில் மிக தெளிவாக வெளிப்பட்டது. OCI எழுதியது: “பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவிற்கு ஒரு அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்கு ஒரு ஐக்கிய முன்னணிக்காக பரிந்துரை கடிதங்கள் அனுப்புவதென்பது, 1944 மற்றும் 1951க்கு இடையே [OCI க்கு முன்னோடி அமைப்பான] PCI இன் மரபாக இருந்தது.” PCI இன் எண்ணிறைந்த பலவீனங்களுக்கு இடையே, அதுபோன்றவொரு கொள்கை யதார்த்தமற்றதாக இருந்தது ஏனென்றால்: “PCI க்கும் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு ஐக்கிய முன்னணிக்கான அடித்தளத்தை வழங்கக்கூடிய எந்த ஒரு பிரிவிற்கு அது தலைமை வகித்தது?”
OCI தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஓர் ஐக்கிய முன்னணி குறித்த நமது கொள்கை இப்போது வேறுவிதமானது. நாம் தொழிலாள வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைகளுக்கு (SFIO, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க தலைமைகள்) முன்னேறிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்துகிறோம்; ஆகவே முதலாளித்துவ வர்க்கத்துடன் உடைத்துக் கொள்ள வேண்டியதும் மற்றும் ஒருங்கிணைந்த வர்க்க முன்னணியை முன்னுக்குக் கொண்டு வர வேண்டியதும் அவசியமாகும்… நாம் ஐக்கிய முன்னணிக்கான போராட்டத்திற்கு இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் போர்குணமிக்கவர்களின் அடுக்குகளை ஒழுங்கமைத்து ஒன்றுதிரட்டுகிறோம். ஐக்கிய முன்னணிக்கான இத்தகைய போராட்டத்தினூடாக நாம் OCI ஐ கட்டியெழுப்பி வருகிறோம்,” என்றது. [56]
சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) “ஐக்கிய முன்னணி" இன் இந்த கருத்துருவை பலமாக எதிர்த்தது. அக்கட்சி "தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாத மற்றும் மத்தியவாத அரசியல் தலைமைகளுக்கு சவால்விடுக்கும் அதன் சொந்த கொள்கைகளைக் கொண்டு பலமாக போராட வேண்டுமென" அது வலியுறுத்தியது. “சுயாதீனமான தலைமைக்கான போராட்டத்திற்கு எதிராக, ஓர் எளிமையான வழியில், ஒரு மாற்றீடாக ஐக்கிய முன்னணி முன்னிறுத்தப்படுகின்ற" போது, அது தொழிலாளர்களை புரட்சிகர தலைமையின் பாதையிலிருந்து திசைதிருப்புகிறது. “உலக நெருக்கடியின் இந்த கட்டத்தில், திரித்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் இந்த கட்டத்தில், போல்ஷிவிக் கட்சியைக் கட்டியெழுப்புவதிலிருந்து அனைத்து வலியுறுத்தல்களையும் தவிர்ப்பது, வர்க்க எதிரியின் முழு அழுத்தத்திற்கு உடனடியாக கதவைத் திறந்துவிடுவதாக இருக்கும். ஒருங்கிணைந்த வர்க்க முன்னணி (Front unique de classe) என்றழைக்கப்படுவது இந்த அபாயகரமான போக்கின், ஒரு பேரழிவுகரமான போக்கின் ஒரு வெளிப்பாடாகும்,” என்று SLL எச்சரித்தது (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது). [57]
OCI இன் கொள்கை, உள்ளடக்கத்தில் எதனை அர்த்தப்படுத்தியது என்பதைக் குறித்து SLL எழுதியது: “முதலில் ஐக்கிய முன்னணி, இதனூடாக, இரண்டாம் பட்சமாக கட்சி. நாங்கள் இதை நிராகரிக்கிறோம்.” அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “OCI ஆல் முன்மொழியப்பட்ட வடிவம், முற்றிலும் நிச்சயமாக பப்லோவாத 'நுழைவுவாத' தத்துவத்தை போலவே, கலைத்து விடுவதற்குரிய ஒரு தயாரிப்பாக இருக்கிறது… இரண்டு விடயங்களிலும் உள்ள சாரம், புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதன் மத்திய முக்கியத்துவத்தை கைவிடுவதாக உள்ளது" (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது). [58]
நாம் பார்த்துள்ளதைப் போல, SLL ஆல் முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை OCI நிராகரித்தது. அதற்கு மாறாக, 1968 இன் புரட்சிகர சம்பவங்களில் OCI இன் தலையீடு SLL ஆல் விமர்சிக்கப்பட்ட அரசியல் போக்கின் அடிப்படையிலேயே இருந்தது, மற்றும், SLL முன்அனுமானித்தவாறே, இந்த நோக்குநிலை தவிர்க்கவியலாதவாறு ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கலைத்துவிடுவதற்கு இட்டு சென்றது.
ஜூன் 19, 1967 இன் கடிதம், OCI இன் அரசியல் போக்கு குறித்து பிரிட்டிஷ் பிரிவால் வைக்கப்பட்ட கடைசி விரிவார்ந்த விமர்சனமாக இருந்தது. அதற்கடுத்து வந்த ஆண்டுகளில், OCI இன் போக்கைக் குறித்து SLL எந்தவொரு முழுமையான பகுப்பாய்வையும் முன்னெடுக்கவில்லை. அது, மே-ஜூன் 1968 இன் சம்பவங்கள் குறித்து ரொம் கெம்ப் ஆல் எழுதப்பட்ட மேலோட்டமான கட்டுரை தொடர்களை பிரசுரித்தது, அக்கட்டுரைகளோ OCI வகித்த பாத்திரம் குறித்து பெரிதும் தவிர்த்திருந்தன. 1968 இல் அப்போதும் OCI உத்தியோகபூர்வமாக அனைத்துலகக் குழுவின் ஓர் அங்கமாக இருந்தது என்ற அடித்தளத்தில், பகிரங்கமாக விமர்சிப்பதை தவிர்த்துக் கொண்டதாக நியாயப்படுத்தப்பட்ட போதினும், 1971 இல் ICFI உடன் உடைத்துக் கொண்ட பின்னரும் கூட OCI இன் மத்தியவாத சீரழிவின் வேர்களை SLL ஆராயத் தவறியது.
அதுபோன்றவொரு ஆய்வு அனைத்துலகக் குழுவின் காரியாளர்களை அரசியல்ரீதியில் மற்றும் தத்துவார்த்தரீதியில் ஆயுதபாணியாக்க அத்தியாவசியமாக அவசியமாகும். OCI இன் மத்தியவாத நோக்குநிலை எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை எடுத்துக்காட்ட 1968 சம்பவங்களுக்கும் மற்றும் 1966க்கும் வெகுவாக முன்னால் சென்று பார்ப்பதும் மற்றும் அதுபோன்றவொரு சீரழிவுடன் பிணைந்திருந்த அரசியல் பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதும் அதன் பணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மெய்யியல்ரீதியிலான கருத்துவேறுபாடுகளின் இரண்டாம்பட்சமான வெளிப்பாடாகவே, இந்த அரசியல் கருத்துவேறுபாடுகளில் உள்ளடங்கி இருந்ததாகவும், மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த ஆழமான விசாரணை அறிவாதார முறையிலான பிரச்சினைகளின் ஒரு கோட்பாட்டளவிலான விவாதத்தால் பிரதியீடு செய்யப்படலாம் என்றும் அறிவித்து, SLL அந்த பணியை தவிர்த்துக் கொண்டது. இயங்கியல் சடவாதத்தை OCI மார்க்சிச தத்துவ அறிவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற இந்த ஒரே காரணத்தின் அடித்தளத்தில், OCI உடனான அதன் உடைவை SLL நியாயப்படுத்தியது.
SLL இன் பக்கத்தில் இந்த தட்டிக்கழிப்புக்குப் பின்னால், அதன் சொந்த மட்டங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் இருந்தன, அதை அக்கட்சியின் தலைமை விவாதிக்க விரும்பவில்லை. OCI உடனான சர்ச்சையால் தூண்டிவிடப்பட்ட ஒரு பகிரங்கமான விவாதமானது, அரசியல் தெளிவாக்கலை விட மிக முக்கியமானதாக அவை கருதிய, தமது நடைமுறைரீதியிலான மற்றும் அமைப்புரீதியிலான வெற்றிகளை அது குழப்பிவிடும் என்று தலைமை மிக முக்கியமாக கருதியது.
இறுதியில், OCI இன் சீரழிவை ஆராய மறுத்தமைக்கு SLL ஒரு பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்படாததுடன், அவை SLLக்குள் அவற்றின் பாதையைக் கண்டன. 1974 இல், SLL/WRP இன் (WRP இன் முன்னோடி அமைப்பு SLL) தொழிற்சங்க வேலைகளின் தலைவர் அலன் தொர்னெட் என்பவர் மூலமாக, தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் (WRP) OCI ஆல் கணிசமான பதட்டங்களை தூண்டிவிட முடிந்தது. அதிலிருந்து எழுந்த நெருக்கடியில், WRP தொழிற்சாலைகளுக்குள் இருந்த அதன் அங்கத்துவ எண்ணிக்கையின் பெரும் பாகங்களை இழந்தது. பிரான்சில் OCI ஏற்றதைப் போலவே, 1970களின் இறுதி வாக்கில், பிரிட்டனில் WRP உம் —அனைத்திற்கும் மேலாக தொழிற்சங்கங்கள், தொழிற்கட்சி மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் இருந்த தேசியவாத இயக்கங்கள் உடனான அதன் உறவுகளோடு தொடர்புபட்ட விதத்தில்— அதிகரித்தளவில் ஒரு சந்தர்ப்பவாத போக்கை ஏற்றது. இறுதியில், 1985 இல், WRP அதன் உள் முரண்பாடுகளால் பிளவுண்டது.
8
சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) மத்தியவாத போக்கு (4)
பியர் லம்பேர் இன் அரசியல் பின்புலம்
சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) அரசியல் சீரழிவை பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) ஆராய தவறியதன் விளைவாக, அதன் வரலாறு பல ஆண்டுகளாக அறியப்படாமல் இருந்தது. OCI இன் அரசியல் அபிவிருத்தியை குறித்தும், அதன் உள்கட்சி விவாதங்கள் மற்றும் அதன் தலைவர்களின் பின்புலம் குறித்தும் மிக குறைவாகவே அறியப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் பிரான்சில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தனிநபர் நினைவுகூரல்களும், பல்வேறு தரத்திலான வரலாற்று படைப்புகளும் மற்றும் கல்வித்துறைசார்ந்த தீவிர ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. அதிகரித்துவரும் ஆர்வத்திற்கான ஒரு பிரதான காரணம், முன்னாள் OCI உறுப்பினரான லியோனல் ஜோஸ்பன் 1997 இல் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டமையும், மற்றும் தங்களைத்தாங்களே ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று அறிவித்துக்கொண்ட ஆர்லெட் லாகியே (Arlette Laguiller) மற்றும் ஒலிவியே பெசன்ஸநோ (Olivier Besancenot) போன்றவர்களின் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிகளும் ஆகும்.
செப்டம்பர் 2006 இல், நவீன பிரெஞ்சு தொழிலாளர் இயக்கங்களின் வரலாற்றாளரும், Histoire de la CGT என்ற நூலின் ஆசிரியருமான மிஷேல் ட்ரேஃப்யூஸ் (Michel Dreyfus) இன் வழிகாட்டுதலின் கீழ் ஜோன் என்ஜேன் (Jean Hentzgen) பாரீஸ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஆசிரியரிடம் அவரது முதுநிலை ஆய்வறிக்கையை சமர்பித்தார், அது OCI இன் ஆரம்பகால வரலாறை விரிவாக கையாண்டிருந்தது. [59]
பரந்தளவிலான ஆவணங்கள், சமகாலத்திய ஆதாரநபர்களுடனான நேர்காணல்கள் மற்றும் ஏற்கனவே இருந்த படைப்புகளை ஆதாரமாக கொண்டு, அதன் ஆசிரியர், 1952 இல் இருந்து 1955 வரையில் [OCI இன் முன்னோடி அமைப்பான] PCI பெரும்பான்மையின் வரலாறை கணக்கில் கொண்டு வந்திருந்தார். 1952 இல் மிஷேல் பப்லோ, பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மையான PCI ஐ நான்காம் அகிலத்திலிருந்து வெளியேற்றினார். ஏனெனில் அது, அவரது "ஒரு சிறப்புவகை நுழைவுவாத" கொள்கையை எதிர்த்தது. அதாவது அக்கொள்கை PCI ஐ ஒரு சுயாதீன அமைப்பாக இருப்பதை கலைப்பதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நுழைவதாக இருந்தது. 1953 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஸ்தாபக அமைப்புகளில் ஒன்றாக PCI பெரும்பான்மை இருந்தது. 1965 இல் இருந்து, அது அதனை OCI என்று அழைத்துக்கொண்டது.
ஆரம்பத்திலிருந்தே PCI பெரும்பான்மைக்குள் இரண்டு வேறுபட்ட சிந்தனைஓட்டங்கள் இருந்தன என்பதை என்ஜேன் இன் படைப்பு தெளிவுபடுத்துகிறது. ஒன்று, பியர் லம்பேர் தலைமையிலானது, அது ஒரு தொழிற்சங்கவாத கண்ணோட்ட குணாம்சத்தில் இருந்தது. அது அதன் வேலைகளை, தொழிற்சங்கங்கள் மீது ஒருங்குவித்திருந்ததுடன், பின்னர் அது சமூக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களின் மீது ஒருங்குவிந்தது. மார்செல் பிலெய்ப்துறு (Marcel Bleibtreu) தலைமையிலான இரண்டாவது, கம்யூனிஸ்ட் கட்சியுடனான மோதல்களுக்கு கூடிய கவனம் செலுத்தியது.
இந்த இரண்டு சிந்தனைபோக்குகளுக்கு இடையிலான கருத்துவேறுபாடு ஆழமாக மற்றும் கசப்புடன் வளர்ந்தது. மார்ச் 1953 இல், லம்பேர் PCI இன் தலைவராக பிலெய்ப்துறு ஐ பிரதியீடு செய்தார். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பிலெய்ப்துறு உம் மற்றும் அவருக்கு நெருக்கமான தோழர்களும் அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பிற்கு இடையிலும் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இரண்டு கன்னைகளுமே கணிசமானளவிற்கு அரசியல் பலவீனத்துடன் இருந்தன. மேலும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்துடன் தொடர்புபட்ட பல சிக்கலான கேள்விகள் ஒருபோதும் அந்த பிரெஞ்சு பிரிவில் உண்மையாக தெளிவுபடுத்தப்படவே இல்லை.
நவம்பர் 1950 இல் நான்காம் அகிலத்தின் சர்வதேச நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் பப்லோவின் திருத்தல்வாத ஆய்வறிக்கையை எதிர்த்த முதல் நபர் Favre என்ற கட்சி புனைபெயரைக்கொண்ட மார்செல் பிலெய்ப்துறு (Marcel Bleibtreu) ஆவார். “பப்லோ எங்கே செல்கிறார்?” என்ற தலைப்பின் கீழ், அவர் ஆழ்ந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த விமர்சனத்தை அவர்களிடம் சமர்பித்தார். [60]
இந்த ஆவணம் ஜூன் 1951 இல் பிரசுரிக்கப்பட்டதுடன், பிரெஞ்சு பெரும்பான்மையினது அரசியல் நோக்குநிலைக்கு ஒரு பிரதான வழியில் பங்களித்தது. அப்போக்கின் மிக முக்கிய தலைவராக விளங்கிய 1918 இல் பிறந்த பிலெய்ப்துறு, 1934 இல் சமூக ஜனநாயக SFIO க்குள் இயங்கிவந்த பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் இணைந்தார். போருக்குப் பின்னர், அவர் அக்கட்சியின் பத்திரிகையான La vérité இன் பதிப்பாசிரியராக இருந்ததுடன், PCI இன் அரசியல் செயலாளரானார். தொழில்ரீதியில் ஒரு மருத்துவரான அவர், 2001 இல் மரணமடைந்தார்.
பியர் லம்பேர் (1920-2008), 1937 இல் றேமோன்ட் மொலினியே மற்றும் பியர் பிராங் இன் குழுவில் இணைந்தார். அது, அதன் சந்தர்ப்பவாத போக்கின் காரணமாக, அந்நேரத்தில் ட்ரொட்ஸ்கி மற்றும் உத்தியோகபூர்வ பிரெஞ்சு பிரிவிலிருந்து கூர்மையாக விலகியிருந்தது. போரின் காரணமாக, லம்பேர் சட்டவிரோதமாக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் செயல்பட்டு வந்தார், 1944 இல் பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் மறுஐக்கியத்திற்கு பின்னர் அவர் அவர்களது தொழிற்சங்க வேலைகளுக்கு தலைமை ஏற்றார். அவர் சிறிது ஆரம்ப தயக்கங்களுக்கு பின்னர் பப்லோவாத-எதிர்ப்பு பெரும்பான்மையை ஆதரித்தார். “ஒரு சிறப்புவகையான நுழைவுவாத" கொள்கை PCI இன் தொழிற்சங்க வேலைகளை அழிக்க அச்சுறுத்தியது என்பதே அவர் பப்லோவாத-எதிர்ப்பு பெரும்பான்மையை இறுதியாக ஆதரித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிகிறது. இந்த வேலையின் உள்ளடக்கத்திற்குள், தொழிற்சாலைகளில் இருந்த பல இளம் தோழர்கள் மிக தைரியத்துடன் ஸ்ராலினிஸ்டுகளை எதிர்த்தனர்.
லம்பேரின் பிந்தைய கொள்கைகளின் பல குணாம்சங்கள், பப்லோவாதிகளுடன் பிளவுறுவதற்கு முன்னரே வெளிப்படத் தொடங்கி இருந்தது. 1947 இல் அவர், அரசியல் கட்சிகளிடமிருந்து தொழிற்சங்கங்களின் முழு சுதந்திரத்தை வலியுறுத்திய ஒரு தீர்மானத்தை PCIக்குள் திணித்தார் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். 1950இல் இருந்து 1952 வரையில், லம்பேர் L’Unité (ஐக்கியம்) என்று தலைப்பிட்ட ஒரு தொழிற்சங்க பத்திரிகையின் பிரசுரத்தில் பங்கெடுத்தார், அதன் ஆசிரியர் குழு பல்வேறு அரசியல் நோக்குநிலைகள் கொண்ட தொழிற்சங்கவாதிகளை உள்ளடக்கி இருந்தது. PCI இல் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமல்லாது, அதில் பகிரங்கமான கம்யூனிச-எதிர்ப்பாளர்கள் உட்பட அராஜகவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் இருந்தனர். 1947 இல் இருந்து 1992 வரையில் லுவார் அட்லாடண்டிக் (Loire Atlantique) பிராந்தியத்தில் Force Ouvrière தொழிற்சங்கத்தின் செயலாளராக இருந்த அராஜகவாத அலெக்ஸாண்ட்ர் எபேர் (Alexandre Hébert) போன்ற அவர்களில் சிலர், வாழ்நாள் முழுவதும் லம்பேருக்கு விசுவாசமாக இருந்தனர்.
ஜூலை 1952 இல், PCI அதன் எட்டாவது மாநாட்டை நடத்தியது, அதிலே முதல்முறையாக பெரும்பான்மையும் மற்றும் பப்லோவாத சிறுபான்மையும் தனித்தனியாக சந்தித்தன. பெரும்பான்மையினரின் மாநாட்டில் பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டமே மையத்தில் இருந்தது, அதற்கு பிலெய்ப்துறு மற்றும் லம்பேர் உடன்பட்டிருந்தனர். PCI தன்னைத்தானே நான்காம் அகிலத்திலிருந்து வெளியேற்றி கொள்ள கூடாது என்பதிலும், அதற்கு மாறாக உள்ளிருந்தே போக்கை மாற்றுவதற்கும் மற்றும் அது மீண்டும்-இணைந்திருப்பதற்கும் போராட வேண்டுமென்பதிலும் அவர்கள் உடன்பட்டிருந்தனர்.
ஆனால் அரசியல் வேலைகளின் திசை குறித்து பதட்டங்கள் அபிவிருத்தி அடைந்தன. ஒட்டுமொத்த பிரிவையும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கலைப்பது பற்றிய பப்லோவின் கொள்கையை பிலெய்ப்துறு நிராகரித்த போதினும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட காரியாளர்களின் ஒரு இரகசிய கன்னையை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியமெனக் கருதினார். லம்பேர், அதுபோன்ற வேலைக்கு அமைப்பு பலவீனமாக இருந்ததாக கருதியதுடன், கட்சியின் அனைத்து சக்திகளையும் தொழிற்சங்க வேலையில் ஒன்றுதிரட்ட முனைந்தார்.
இத்தகைய பதட்டங்கள் அதற்கடுத்து வரவிருந்த மாதங்களில் தீவிரமடைந்தன. டிசம்பர் இறுதியில் நடந்த ஒரு மத்திய குழு கூட்டத்தில், பிலெய்ப்துறு அரசியல் அறிக்கை சமர்பித்தார்; தொழிற்சங்க வேலை குறித்து லம்பேர் அறிக்கை அளித்தார். என்ஜேன் இந்த எதிரெதிர் கண்ணோட்டங்களை பின்வருமாறு தொகுத்தளிக்கிறார்:
“சுயாதீனமான கட்சியின் தலையீட்டை இரகசிய கன்னையின் வேலையுடன் இணைத்து, [கம்யூனிஸ்ட் கட்சிக்குள்] இடது எதிர்ப்பாளர்களை உருவாக்குவதற்கு PCI உதவ வேண்டும் என்பதும், இந்த இடது எதிர்ப்பின் அடித்தளத்தில் புரட்சிகர கட்சி அபிவிருத்தி செய்யப்படும்,” என்பதும் பிலெய்ப்துறுவின் கருத்தாக இருந்தது.
லம்பேர் இன் கருத்தின்படி, “மிகவும் பலவீனமாக இருந்த தொழிற்சங்க அமைப்புகளை, முதலாவதாக CGT யையும் அதேபோல் FO இனையும் மறுகட்டமைப்பதே புரட்சியாளர்களின் முதல் பணியாகும். செயலூக்கத்துடனான தொழிற்சங்க வேலையானது, ட்ரொட்ஸ்கிஸ்டுகளை மக்களுள் ஊடுருவவும் அங்கே நிலைநிறுத்திக்கொள்ளவும் அனுமதிக்கும். அவர்களது வெற்றிகரமான முழக்கங்களின் மூலமாகவும் மற்றும் அவர்கள் முன்மொழியும் நடவடிக்கைகளை கொண்டும், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தொழிலாளர்களை நடவடிக்கைக்குள் ஒன்றுதிரட்டுவதில் வெற்றி பெற்று, படிப்படியாக தலைமை பாத்திரம் எடுப்பார்கள்,” என்றிருந்தது. [61]
இவ்விரு கண்ணோட்டங்களுமே கேடுவிளைவிக்கும் வகையில் பப்லோவாதிகளின் கண்ணோட்டங்களுக்கு நெருக்கமாக இருந்தன. அவர்கள் [பப்லோவாதிகள்], புரட்சிகர கட்சியானது நான்காம் அகிலத்தின் தற்போதைய காரியாளர்களில் இருந்து எழப்போவதில்லை, அதற்கு மாறாக ஸ்ராலினிச அல்லது சீர்திருத்தவாத அமைப்புகளுக்குள் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் ஆதிக்கம்செலுத்தப்படும் ஒரு இடது கன்னையிலிருந்தே எழும் என்று தெரிவித்து வந்தார்கள்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் (PCF) ஓர் இடது எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கான பிலெய்ப்துறுவின் நம்பிக்கைகள், ஆன்ட்ரே மார்ட்டி (André Marty) உடன் ஓர் கூட்டணியில் அவற்றின் தெளிவான வெளிப்பாட்டை கண்டது. 1919 இல் ஒடெஸ்ஸாவிற்கு அருகே ஒரு பிரெஞ்சு போர்கப்பல் விவகாரத்தில் அதிகாரிகளுக்கு கீழ்படிய மறுத்ததற்காக புகழ்பெற்றிருந்த இந்த ஸ்ராலினிச மூத்த தலைவர் [ஆன்ட்ரே மார்ட்டி], 1935 இல் இருந்து 1943 வரையில் கம்யூனிச அகிலத்தின் செயலாளராக இருந்தார் என்பதுடன், ஸ்பானிய உள்நாட்டு போரில் சர்வதேச படைப்பிரிவுகளை ஒழுங்கமைத்தவராவார். அவர் 1952 இல் அவமதிக்கப்பட்டு, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்பெயினில் இடது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மார்ட்டியின் மூர்க்கமான நடவடிக்கைகள் அவருக்கு "ஆல்பஸெட்டே இன் கொலைகாரர்" (“Butcher of Albacete”) என்ற பெயரை ஈட்டியிருந்த போதினும், அவரது ஸ்ராலினிச கடந்தகாலத்தை குறித்து அவர் ஒரு உள்ளார்ந்த கணக்கைதீர்த்துக்கொண்டதற்கு அங்கே மிகச்சிறியளவே அறிகுறிகள் இருந்த நிலையிலும், பிலெய்ப்துறு அவரை இடது எதிர்ப்பின் தலைவராக மதித்தார்.
கூடி இயங்குவதற்கு ஆர்வங்காட்டிய, ஆனால் பப்லோவாதிகளுடனும் தொடர்பில் இருந்த மார்ட்டி ஐ பிலெய்ப்துறு தனிப்பட்டரீதியில் சந்தித்தார். PCI பெரும்பான்மை, மார்ட்டி ஐ பாதுகாக்க ஒரு பிரச்சாரம் மேற்கொண்டதுடன், அந்நோக்கத்திற்காக கம்யூனிச மறுசீரமைப்பு குழுவை (Comités de redressement communiste) உருவாக்கியது, அக்குழு ஸ்ராலினிச தலைமைக்கு எதிராக ஓர் இடது எதிர்ப்பை உருவாக்க இருந்தது. ஜனவரி 1953 இல், La Vérité மார்ட்டிக்கு பின்வருமாறு அழைப்புவிட்டது: “முன்னோக்கி செல்லுங்கள், நீங்கள் முன்னணி தலைவராவதுடன், பின்னர் இந்நாட்டின் புரட்சிகர பாட்டாளிகளை ஒழுங்கமைப்பவர்களாகவும் ஆவீர்கள்!” [62]
சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மார்ட்டி உடன் கூட்டாக இருந்து வந்த பிலெய்ப்துறு, அக்காலக்கட்டத்தில் PCIக்குள் கணிசமான எதிர்ப்பை எதிர்கொண்டார். “பப்லோ இல்லாத பப்லோயிசத்தை" அறிவுறுத்தியதற்காக பிலெய்ப்துறு குற்றம்சாட்டப்பட்டதுடன், அது கணிசமான அளவிற்கு அவரது அதிகாரத்திற்கு குழிபறித்தது. மார்ச் 1953 வாக்கில், அவர் மத்திய குழுவின் சிறுபான்மையினரில் இடம்பெற்றிருந்த நிலையில், லம்பேர் PCI இன் தலைமையை ஏற்றார்.
பிலெய்ப்துறு, ஆன்ட்ரே மார்ட்டி உடன் தொடர்பை பேணி வந்த அதேவேளையில், லம்பேர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு முன்னணி அங்கத்தவரான, தொழிற்சங்க கூட்டமைப்பு CGT இன் தலைவர் பெனுவா ஃபிரஷோன் (Benoît Frachon) மீது பெரும் எதிர்ப்பார்ப்புகளை வைத்திருந்தார்.
1951 இல் மற்றும் மீண்டும் 1953 இல், ஃபிரஷோன் அனைத்து தொழிற்சங்கங்களின் ஐக்கிய நடவடிக்கைக்கு அழைப்புவிடுத்ததுடன், அவ்விதத்தில் லம்பேர் இன் முழு ஆதரவைப் பெற்றார். ஃபிரஷோன் மற்றும் ஏனைய PCF தலைவர்களுக்கு இடையே அங்கே பதட்டங்கள் நிலவிய போதினும், அவை ஒருபோதும் ஓர் அடிப்படை குணாம்சத்தைப் பெறவில்லை. அதற்கு மாறாக, “ஐக்கிய நடவடிக்கைக்காக" CGT தரப்பினை நோக்கி திரும்பியமை, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தில் இணைவதற்குரிய சாத்தியக்கூறுகளை கருத்தில்கொண்டு, அவ்விதத்தில் சீர்திருத்தவாத கட்சிகளுடன் நெருங்கிசெல்ல முனைந்து வருகிறது என்ற உண்மையுடன் பிணைந்திருந்தது.
1954 இல், சோசலிஸ்டுகள் மற்றும் தீவிர போக்கு சோசலிஸ்டுகள் மற்றும் பியர் மொன்டெஸ்-பிரான்ஸ் இன் கீழ் இடது கோலிசவாதிகளின் ஒரு கூட்டரசாங்கத்திற்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. இருந்தபோதினும் CGT அமைப்பு எந்திரம் PCFக்கு முரண்பட்ட விதத்தில் பெருந்திரளான மக்களுடன் இணைந்திருந்ததாக லம்பேர் வாதிட்டார்.
ஐக்கியத்திற்கான கோரிக்கையே, PCI இன் தொழிற்சங்க வேலையின் மையத்தில் இருந்தது. 1953 இல் இருந்து, அது உள்ளூர் மட்டத்திலும் மற்றும் தேசிய மட்டத்திலும் இருந்த வெவ்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்க "தொழிற்சங்கங்களின் ஐக்கிய நடவடிக்கைக்கான தேசிய மன்றம்" (“Assises nationales pour l'unité d'action syndicale.”) என்பதற்கு அழைப்புவிடுத்திருந்தது. தொழிற்சங்க வாழ்வின் அனைத்து பிரச்சினைகளையும், "தொழிற்சங்கங்களின் ஐக்கிய நடவடிக்கைக்கான தேசிய மன்றம்" என்ற முழக்கத்துடன் இணைக்குமாறு, தொழிற்சங்கங்களில் இருந்த PCI அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொழிற்சங்க தலைவர்களை பொறுத்த வரையில், பெரிதும் விமர்சனமற்ற நிலைப்பாட்டையே PCI பேணிவந்தது. மார்ச் 1954 இல், அது ஏற்பாடு செய்த ஒரு தேசிய மாநாடு, மிக வெளிப்படையாக "ஜனநாயக ஐக்கியத்தின்" (unité dans la démocratie) மீது மையமிட்டிருந்ததே அன்றி, கட்சி வேலைத்திட்டத்தின் மீது அல்ல. இம்மாநாட்டில், தபால்துறை தொழிற்சங்கத்தின் பொது செயலரும் மற்றும் உயர்மட்ட CGT அதிகாரியுமான ஜோர்ஜ் ஃபிரிஷ்மான் கலந்து கொண்டமை ஒரு பெரும் வெற்றியாக கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் "மன்றத்துக்கான நிரந்தரக் குழுவிற்கு", (Comité permanent des Assises) மூன்று ட்ரொட்ஸ்கிஸ்டுகள் உள்ளடங்கிய ஒரு பிரதிநிதிகள் குழுவை CGT உட்பட பல்வேறு தொழிற்சங்க தலைமையகங்களுக்கு அனுப்பியது.
இறுதியில் லம்பேர் தனிப்பட்டரீதியில் CGT தலைவர் ஃபிரஷோன் ஐ சந்தித்தார், அத்துடன் அவரின் வலியுறுத்தலின் பேரில், அவர் முன்னர் எதிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தாரோ அதே தொழிற்சங்கத்தின் ஓர் அங்கத்தவராக மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். தொழிற்சங்க ஐக்கியத்திற்கான PCI இன் பிரச்சாரம் அதிகாரத்துவத்திற்கு அச்சுறுத்தலை முன்வைக்கவில்லை என்று ஃபிரஷோன் நம்பினார்.
நவம்பர் 16, 1953 இல், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) “பகிரங்கக் கடிதம்” ஒன்றை பிரசுரித்தது. அது பப்லோவாதிகளுடன் முறித்துக் கொண்டு அனைத்துலகக் குழுவை ஸ்தாபிப்பதற்கு அழைப்புவிடுத்தது. இது PCI ஆல் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. அவர்களின் சர்வதேச தனிமைப்பாடு இப்போது முடிவுக்கு வந்திருந்தது.
“ட்ரொட்ஸ்கிசம் வெற்றி பெறும், நான்காம் [அகிலத்தின்] கலைப்புவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஒரு அழைப்பு" என்ற தலைப்புடன் La Vérité வெளியானது. நவம்பர் 23 அன்று, PCI பாரீஸில் அனைத்துலகக் குழுவின் முதல் கூட்டத்தைக் கூட்டியது. அப்போது பிலெய்ப்துறு கட்சி செயலாளராக இருக்கவில்லை என்பதால் அனைத்துலகக் குழுவில் PCI ஐ அவர் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, அந்த பாத்திரத்தை அதன் செயலாளராக ஜெரார் ப்ளொக் (Gérard Bloch) ஏற்றிருந்தார். இந்த மாற்றத்திற்கு இடையிலும், PCIக்குள் சர்ச்சைகள் குறைவின்றி தொடர்ந்து இருந்து வந்தன.
மேலதிக கருத்துவேறுபாடுகளும் ஏற்கனவே இருந்தவைகளுடன் சேர்ந்து கொண்டன. ஸ்ராலினின் மரணம் மற்றும் கிழக்கு ஜேர்மனியில் ஜூன் 1953 மேலெழுச்சி ஒடுக்கப்பட்டமை ஆகியவற்றிற்குப் பின்னர், ஸ்ராலினிச கட்சிகளை குறித்த வெவ்வேறு மதிப்பீடுகள் அபிவிருத்தி அடைந்தன. அதிகாரத்துவத்திற்குள் வெளிப்பார்வைக்கு இடதுசாரி சிந்தனை ஓட்டங்களாக இருந்தவற்றிற்கு விமர்சனபூர்வ ஆதரவு வழங்க பிலெய்ப்துறு இன் போக்கு வாதிட்டது, அதேவேளையில் லம்பேர் மற்றும் ப்ளொக் ஐ சுற்றியிருந்த கட்சி பெரும்பான்மை இந்த நிலைப்பாட்டை நிராகரித்ததுடன், கிழக்கு பேர்லினில் நடந்ததிருந்ததைப் போன்ற தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சிக்கு அழைப்புவிடுத்தது.
தேசிய விடுதலை இயக்கங்கள் குறித்தும் அங்கே கருத்துவேறுபாடுகள் இருந்தன. இதிலும், லம்பேர் பப்லோவாதிகளை போன்ற அதே விதத்தில் எவ்வித விமர்சனமும் இன்றி நிபந்தனையற்ற ஆதரவிற்கு அழைப்புவிடுத்தார், அதேவேளையில் பிலெய்ப்துறு இன் போக்கோ சகோதரத்துவ விமர்சனத்துடன் சேர்ந்த ஆதரவைத் தெரிவித்தது.
மே 1952 இல் இருந்து, PCI அல்ஜீரிய சுதந்திர இயக்கம் MTLD (Mouvement pour le Triomphe des Libertés Démocratiques) மற்றும் MNA (Mouvement national Algérien) இன் தலைவர் மெஸ்சலி ஹாட்ஜ் (Messali Hadj) உடன் நெருக்கமான அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவுகளைப் பேணியது. அல்ஜீரியாவிலிருந்து ஹாட்ஜ் பொலிஸால் வெளியேற்றப்பட்ட போது, PCI அங்கத்தவர்கள் அவரது குழந்தைகளின் பராமரிப்பை ஏற்றனர். பிரான்சில் இருந்த பல அல்ஜீரிய தொழிலாளர்கள் MTLD ஐ ஆதரித்தனர் என்பதுடன், அவர்களில் சிலர் CGT தொழிற்சங்கத்திற்குள் PCI உடன் நெருக்கமாக வேலை செய்து வந்தனர். ஆனால் ஹாட்ஜ் ஒரு முதலாளித்துவ தேசியவாதியாக இருந்தார் மற்றும் தொடர்ந்தும் அவ்வாறே நீடித்திருந்தார்.
1954 இல் அல்ஜீரிய விடுதலை போர் தொடங்கியதும், லம்பேர் ஆல் சிலகாலத்திற்கு ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சியாக ஒப்பிட்டுக்காட்டப்பட்டிருந்த MNA க்கான ஆதரவு, இன்னும் கூடுதலாக PCI இன் வேலைகளின் மையத்திற்கு நகர்ந்தது. PCI தளவாட வினியோக பணிகளை ஏற்றதுடன், சட்டவிரோத வேலைகளிலும் பங்கெடுத்தது. பிலெய்ப்துறு போக்கு இந்த நிலைப்பாட்டை விமர்சித்தது மற்றும் "MTLD மற்றும் அதன் குறைபாடுகளை குறித்து ஓர் இழிவார்ந்த சந்தர்ப்பவாத மனோபாவத்தை" தலைமை எடுத்துக்காட்டுவதாக குற்றஞ்சாட்டியது. [63]
அல்ஜீரியாவில், MTLD இன் ஆயுதமேந்திய தலைமறைவான அமைப்பிற்குள் ஏற்பட்ட உடைவிலிருந்து எழுந்ததும் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் சில வேர்களைக் கொண்டதுமான தேசிய விடுதலை முன்னணி (Front de libération national - FLN) MNA இன் இடத்தை பிடித்துக்கொண்டது. அதற்கு ஆயுதங்கள் வினியோகித்ததுடன் சேர்ந்து, அதன் அரசியல் எதிராளிகளுக்கு எதிராக அதன் சொந்த இரக்கமற்ற நடவடிக்கைகளையும் நடாத்திய கமால் அப்தெல் நாசரின் கீழ் இருந்த எகிப்திய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக அது தனது சக்திகளை பயன்படுத்தியது. ஹாட்ஜ் அரசியல்ரீதியில் வலதிற்கு நகர்ந்து, அதிகரித்துவந்த அவரது தனிமைப்பாட்டிற்கு எதிர்வினை காட்டினார். 1958 இன் கோடையில், அவரது ஆதரவாளர்கள் பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதும், PCI அவருடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டது.
PCIக்குள் இருந்த கன்னைவாத பதட்டங்கள் 1954 ஆம் ஆண்டில் அதிகளவில் கசப்பாக மாறின. அனைத்துலகக் குழு, அனைத்திற்கும் மேலாக அதன் பிரிட்டிஷ் பிரிவு, அந்த பதட்டங்களை குறைப்பதற்கும் மற்றும் அவ்விரு பிரிவுகளுக்கும் இடையே சாதகமான கூட்டு-ஒத்துழைப்பிற்காகவும் செலவிட்ட உழைப்பு விரயமானது. இறுதியில் பிலெய்ப்துறு மற்றும் அவரது இரு ஆதரவாளர்களான மிஷேல் லுக்கென் மற்றும் லூசியான் ஃபொன்ரனெல் ஆகியோர் அரசியல் குழுவின் விருப்பங்களுக்கு எதிராக ஒரு பொலிஸ் அழைப்பாணைகளுக்கு பதிலளித்தார்கள் என்ற ஓர் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் வெளியேற்றப்பட்டார்கள். பொலிஸ் நிலையத்தில் ஒருமுறை, அப்போதைய கட்சிக் கொள்கை கோரியவாறு விளக்கம் கூறுவதற்கு அவர்கள் மறுத்திருந்தனர். ஆனால் அரசியல் பிரிவு அந்த அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு கோரியிருந்தது, அந்நடவடிக்கை அவர்கள் கைது செய்யப்பட இட்டுச் சென்றிருக்கும்.
மே 21, 1955 தேதியிட்ட அறிக்கை ஒன்றில், அனைத்துலகக் குழு பிலெய்ப்துறு, லுக்கென் மற்றும் ஃபொன்ரனெல் ஆகியோரை மீண்டும் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து முன்னணி கட்சி குழுக்களிலும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமென்றும் கோரி, அவர்களை வெளியேற்றியதற்காக அதன் கோபத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இது பலனளிக்கவில்லை. PCI மத்திய குழு, அனைத்துலகக் குழுவின் கோரிக்கைகளை நிராகரித்தது.
அனைத்துலகக் குழுவின் வேலைகளில் ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே வகித்து வந்த PCI இன் மீது, லம்பேர் இன் போக்கு இப்போது மேலாளுமை கொண்டிருந்தது. 1963 இல், அமெரிக்க SWP பப்லோவாதிகளுடன் ஐக்கிய செயலகத்தில் மறுஐக்கியப்பட்ட போது, பிரெஞ்சு பிரிவு அனைத்துலகக் குழுவுடன் சேர்ந்திருந்தது. ஆனால், மறுஐக்கியத்திற்கு எதிரான அனைத்து முக்கிய ஆவணங்களும் பிரிட்டிஷ் பிரிவால் எழுதப்பட்டன.
பிரான்சில், PCI தன்னைத்தானே தொழிற்சாலைகளுக்குள் வேலை செய்ய அர்பணித்திருந்தது, அங்கே அது பல ஆண்டுகள் சந்தர்ப்பவாத Voix Ouvrière (தொழிலாளர் குரல்) உடன் ஒரு வசதியான தொழிற்பங்கீட்டை பேணி வந்தது. இது, அனைத்துலகக் குழுவின் மூன்றாம் உலக மாநாட்டில் எழுந்த மோதலைத் தொடர்ந்து, 1966 இல் மட்டுமே முடிவுக்கு வந்தது. 1959 இல் இருந்து, அவ்விரு அமைப்புகளும் கூட்டாக துண்டுப்பிரசுரங்களை தயாரித்ததுடன், தொழிற்சாலைகளுக்கு வெளியே அவற்றை கூட்டாக வினியோகித்தன. ஒரு காரை சொந்தமாக வைத்திருந்த ஒரு மருந்து விற்பகரான VO இன் தலைவர் ஹார்டி (Hardy), பெரும்பாலும் லம்பேர் ஐ அவர்களின் கூட்டு பயணத்தின் போது உடனழைத்து சென்றார்.
அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், பிலெய்ப்துறு மற்றும் லுக்கென் உம் கூடுதலாக வலதிற்கு நகர்ந்தனர். அவர்கள் புதிய இடதில் (Nouvelle Gauche) இணைந்ததுடன், அங்கே அவர்கள் அவர்களின் சொந்த போக்கை அபிவிருத்தி செய்தனர். ஒரு இடதுசாரி குடை இயக்கமான, பின்னர் பல அரசு தலைவர்களும் மற்றும் மந்திரிகளும் அதில் இணையவிருந்த ஒன்றான Partie socialiste unifié (PSU) ஐ ஸ்தாபிப்பதில் அவர்கள் பங்கெடுத்தனர். 1968 இல், மிஷேல் ரொக்காவின் தலைமையின் கீழ் PSU, UNEF மாணவர் கூட்டமைப்பை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.
PSU இன் அரசியல் குழு அங்கத்தவராக சில காலமிருந்த பிலெய்ப்துறு, 1964 இல் அவர் வெளியேறும் வரையில் பொது செயலாளராகவும் சேவை செய்தார். அதன்பின்னர் அவர், வியட்நாமிற்கு சமாதானம், குழந்தை வறுமைக்கு எதிராக மற்றும் 1990களில், ஈராக் தடையாணைகளுக்கு எதிரான என எண்ணிறைந்த முன்னெடுப்புகளில் ஈடுபட்டார். லுக்கென் தேசியவாத ஆட்சியை ஆதரிக்க 1963 இல் அல்ஜீரியாவிற்கு சென்றார், அங்கே அவர் பப்லோவாதிகளுடன் இணைந்ததுடன், ஐக்கிய செயலகத்தின் ஓர் அங்கத்தவரானார். 1974 இல் இருந்து 1995 வரையில், அவர் Libération நாளிதழில் பணியாற்றினார். லுக்கென் 2006 இல் மரணமடைந்தார்.
1968 இல் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட OCI இன் மத்தியவாதம், ஒரு நீண்ட முன்-வரலாற்றை கொண்டிருந்தது. இறுதி பகுப்பாய்வுகளில், பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை பிரெஞ்சு பிரிவு கைவிட்டதன் விளைபொருளாக அது இருந்தது.
குறிப்புகள்:
1. Michelle Zancarini-Fournel, “1962-1968: Le champ des possibles” in 68: Une histoire collective, Paris: 2008
2. Daniel Bensaid, Alain Krivine, Mai si! 1968-1988: Rebelles et repentis, Montreuil: 1988, p. 39
3. Karl Marx and Friedrich Engels, “Speech to the Central Authority of the Communist League”
4. Jean-Paul Salles, La Ligue communiste révolutionnaire, Rennes: 2005, p. 49
5. Alain Krivine, Ça te passera avec l’âge, Flammarion: 2006, pp. 93-94
6. Jean-Paul Salles, ibid., p. 52
7. Pierre Frank, “Mai 68: première phase de la révolution socialiste française”
8. Pierre Frank, ibid.
9. Ingrid Gilcher-Holtey, “Mai 68 in Frankreich” in 1968: Vom Ereignis zum Mythos, Frankfurt am Main: 2008, p. 25
10. archplus 183, Zeitschrift für Architektur und Städtebau, May 2007
11. Alain Krivine, Daniel Bensaid, “Mai si! 1968-1988: Rebelles et repentis,” Montreuil: 1988
12. ibid., pp. 39-40
13. Leon Trotsky, The Transitional Program, Labour Publications, New York: 1981, p. 24
14. Pierre Frank, “Mai 68: première phase de la révolution socialiste française”
15. Leon Trotsky, “Committees of Action—Not People’s Front,” November 26, 1935, in Whither France?
16. Jeunesse Communiste Revolutionnaire, “Workers, Students,” May 21, 1968
17. Leon Trotsky, “What is a ‘Mass Paper’?” in “The Crisis of the French section (1935-36),” New York: 1977, pp. 98, 101
18. Leon Trotsky, “Against False Passports in Politics,” ibid, pp. 115, 119
19. ibid, pp. 119-120
20. Krivine, Bensaid, ibid, p. 43
21. Alain Krivine, “Ça te passera avec l’âge,” Flammarion: 2006, pp. 103-104
22. Leon Trotsky, “Class, Party and Leadership”
23. Edwy Plenel, “Secrets de jeunesse”, Editions Stock: 2001, pp. 21-22
24. François de Massot, “La grève générale (Mai-Juin 1968),” Supplément au numéro 437 d’ “Informations Ouvrières.” All quotes in the above article, if not indicated otherwise, are from this book.
25. Leon Trotsky, “Two Articles On Centrism” (February/March 1934), Leon Trotsky, “What Next? Vital Questions for the German Proletariat” (January 1932).
26. Leon Trotsky, “What Next? Vital Questions for the German Proletariat” (January 1932).
27. Leon Trotsky, “The Third International After Lenin”.
28. Leon Trotsky, “What Next? Vital Questions for the German Proletariat” (January 1932).
29. On the attitude of the Marxist movement to the trade unions see: David North, “Marxism and the Trade Unions”.
30. Leon Trotsky, “A School of Revolutionary Strategy”.
31. Leon Trotsky, “A School of Revolutionary Strategy”.
32. Daniel Gluckstein, Pierre Lambert, “Itinéraires,” Éditions du Rocher 2002, p. 51
33. La vérité, no. 541, avril-mai 1968
34. “Le bonapartisme gaulliste et les tâches de l’avant-garde,” la vérité No. 540, février-mars 1968, pp. 13-14
35. “Le bonapartisme gaulliste et les tâches de l’avant-garde,” la vérité No. 540, février-mars 1968, p. 15
36. François de Massot, « La grève générale (Mai-Juin 1968),” p. 58
37. This and the following quotes from Trotsky, unless otherwise indicated, are taken from: Leon Trotsky, “Committees of Action—Not People’s Front” (November 26, 1935).
38. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 123
39. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 48
40. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 188
41. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 195
42. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, pp. 196-197
43. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 197
44. Leon Trotsky, “The Transitional Programme”.
45. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 203
46. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 304
47. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 248
48. “Le bonapartisme gaulliste et les tâches de l’avant-garde,” la vérité No. 540, février-mars 1968
49. Quoted in Jean-Paul Salles, “La ligue communiste révolutionnaire,” Rennes 2005, p. 98
50. “Reply to the OCI by the Central Committee of the SLL, June 19, 1967,” in Trotskyism versus Revisionism, Volume 5, London 1975, pp. 107-132
51. “Statement by the OCI, May 1967” in Trotskyism versus Revisionism, Volume 5, London 1975, p. 84
52. ibid. pp. 91-95
53. ibid. p. 92
54. “Reply to the OCI by the Central Committee of the SLL, June 19, 1967,” ibid. pp. 107-114
55. ibid., pp. 113-114
56. “Statement by the OCI, May 1967,” ibid. p. 95
57. ibid. pp. 123-24
58. ibid. p. 125
59. Jean Hentzgen, “Agir au sein de la classe. Les trotskystes français majoritaires de 1952 à 1955,” Université de Paris I, Septembre 2006.
60. “‘Where is Pablo Going?’ by Bleibtreu (Favre), June 1951” in Trotskyism versus Revisionism, vol. 1, London, 1974
61. Hentzgen, op.cit., p. 57
62. quoted in ibid. p. 60
63. quoted in ibid. p. 148