மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மே தினம் 2018 சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஏனென்றால் நாம் இந்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான தினத்தை மட்டுமல்ல, மாறாக கார்ல் மார்க்ஸ் பிறந்த 200 ஆம் நினைவாண்டையும் கொண்டாடி வருகிறோம். மெய்யியல், பொருளாதார விஞ்ஞானம், வரலாற்றாய்வியல், சமூக தத்துவம் மற்றும் அரசியல் என இந்த துறைகளில் மார்க்ஸ் நவீன சகாப்தத்தின் மாபெரும் தலைச்சிறந்த பிரமுகர் என்று வலியுறுத்துவதில் சிறிதும் மிகைப்படுத்தல் இருக்க முடியாது. பரந்த பெருந்திரளான மனிதயினத்தின் சமூக நனவையும், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான அதன் போராட்டத்தையும் அபிவிருத்தி செய்வதில் வேறெந்த சிந்தனையாளரும் இந்தளவுக்கு பிரமாண்டமான, காலகாலத்திற்கும் முற்போக்கான விதத்தில் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. மார்க்சின் படைப்புகள், வரலாற்று அபிவிருத்தி போக்கைத் தீர்மானிக்கின்றதும், அவ்விதத்தில் சமூகத்தை சோசலிசமாக மாற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான போராட்டத்தைச் சாத்தியமாக்கின்றதுமான புறநிலை சக்திகளைக் குறித்து மனிதயினம் புரிந்துகொள்வதில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது.
ஹேகலின் புறநிலை கருத்துவாதத்தை அவர் மறுத்துரைத்து, அதை இயங்கியல் அணுகுமுறையில் விமர்சனபூர்வமாக உள்ளீர்த்துக்கொண்டதன் அடிப்படையில், மார்க்ஸ் மெய்யியல் சடவாதத்தை அபிவிருத்தி செய்து, அதை மனிதர்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் பரிணாம ஆய்வுக்குப் பயன்படுத்தினார். மார்க்ஸ் க்கு முன்பிருந்த மிகவும் முன்னேறிய சிந்தனையாளர்கள் கூட —அனைத்திற்கும் மேலாக, மார்க்ஸுக்கு முந்தைய முன்னோடிகளான தலைச்சிறந்த ஹேகலும் ஃபயர்பாஹூம்— சமூக மற்றும் அரசியல் உறவுகளை ஏதோவொரு வகை, அது ஆன்மீகமாகட்டும் அல்லது புத்திஜீவிதமாகட்டும், கருத்துவாத தூண்டுதலில் இருந்து வரையறுத்தனர். எல்வெற்றியுஸ் (Helvetius) மற்றும் பாரொன் டொல்பாஹ் (Baron d’Holbach) இன் எழுத்துக்கள் 1789-1794 இன் பிரமாண்ட பிரெஞ்சு புரட்சிக்கு களம் அமைக்கும் தயாரிப்பில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்த நிலையில், இவர்களைப் போன்ற 18 ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த சடவாத சிந்தனையாளர்களும் கூட, சமூக மற்றும் அரசியல் சூழல் "மக்கள் கருத்துக்களால்", அதாவது சிந்தனையால், தீர்மானிக்கப்படுவதாக நம்பினர். ஆனால் சமூக உறவுகளானது கருத்துக்களின் விளைபொருள் என்ற கருத்துவாத கருத்துரு, யதார்த்தத்துடன் முரண்படுகிறது. மனித உயிர்கள், அவற்றின் நிஜமான வரலாற்று இருப்பில், அப்போது எவ்விதமான சமூக உறவுகள் மேலோங்கி இருக்கின்றதோ அதற்குள் பிறந்து, அதை எதிர்கொண்டு, அதற்குள் தங்களை நனவுபூர்வமின்றி அனுசரித்துப்போகின்றன.
அனைத்து சடவாத மெய்யியலாளர்களிலும் தலைசிறந்த, மார்க்ஸ், மனித சிந்தனைகளின் மற்றும் சித்தாந்த கருத்துருக்களின் தோற்றுவாயைக் கண்டறிந்தார், மேலும் லெனின் பின்னர் மிகத் துல்லியமாக விளங்கப்படுத்தியதைப் போல, “கருத்துக்களின் போக்கு விடயங்களின் போக்கைச் சார்ந்துள்ளது என்ற முடிவான தீர்மானம், விஞ்ஞானபூர்வ உளவியலுடன் மட்டுமே பொருந்தும்,” என்பதை நிரூபித்தார். (லெனின், தொகுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 1, பக்கம் 139-140)
வரலாற்று சடவாத கருத்துருவைக் குறித்த அவரின் ஆரம்ப விவரிப்பிலும், மூலதனத்தின் (Das Kapital) எழுத்துக்களில் அதை அடுத்தடுத்து உறுதிப்படுத்தியதிலும், மார்க்ஸ் —வெளிப்படையாகவே கணக்கிலடங்கா மில்லியன் கணக்கான மனித உயிர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு இடையே, ஒவ்வொன்றும் அவற்றின் தனிப்பட்ட ஆர்வங்கள், அபிலாஷைகள் மற்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விருப்பங்களால் உந்தப்பட்டு, அவற்றின் சொந்த சிறந்த நலன்களுக்குரியதாக அவை எதை நம்புகிறதோ அதை பின்தொடர்ந்த நிலையில்— அதற்கான புறநிலை சக்திகள், இந்த தனிப்பட்ட அகநிலையான நனவிலிருந்து விலகி, சுயாதீனமாகவும் கூட செயல்பட்டு, சமூகத்தின் பொருளாதார கட்டமைப்புக்கு அடித்தளத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை அடையாளம் கண்டார்.
நனவின் அபிவிருத்தியை விவரிப்பதில் மார்க்ஸ் எந்த விதத்திலும் கருத்துவாத அகநிலைவாதத்தில் (idealist subjectivism) தங்கியிருப்பதை நிராகரித்தார். சமூகத்தின் இயல்பைக் குறித்த தவறான கருத்துருக்களும் கூட, அந்த தனிநபர்களிடமிருந்து சுயாதீனமான புறநிலைமைகளது பிரதிபலிப்புகளாகும், அத்தகைய புறநிலைமைகளில் தான் அவை வேரூன்றியுள்ளன. முதலாளித்துவ சமூக உறவுகளின் வெடிப்பார்ந்த குணாம்சத்தை, நேரடியாக கவனிப்பதன் அடிப்படையில், மனிதரால் உணர்ந்து கொள்ளவியலாமல் இருப்பதையும் புரிந்து கொள்ளவியலாமல் இருப்பதையும், தனிநபரினது அறிவுநிலையின் தோல்வியாக விவரித்துவிட முடியாது. மாறாக அது, உழைப்பின் விளைவுகள் பண்டங்களாக வடிவமேற்கும் போது, அந்த உழைப்பின் விளைவுகளிலிருந்து புரிந்து கொள்ளப்பட்ட "புதிரான குணாம்சத்திலிருந்து" (enigmatical character) அவ்விதம் உருவாகிறது. பண்டங்களைப் போலவே, மார்க்ஸ் எழுதினார், "மனிதர்களுக்கு இடையிலான ஒரு தீர்க்கமான சமூக உறவு" அவசியத்திற்கேற்ப “அவர்களின் பார்வையில், விடயங்களுக்கு இடையிலான உறவின் ஓர் அருமையான வடிவை ஏற்கிறது” (மூலதனம், தொகுதி 1, தொகுக்கப்பட்ட படைப்புகளில், தொகுதி 35, பக்கம் 82-83).
சோசலிசத்தைக் "கண்டுபிடித்தவர்கள்" மார்க்ஸோ அவர் வாழ்நாள் நண்பரும் கூட்டுழைப்பாளருமான மாமேதை பிரெடெரிக் ஏங்கெல்ஸோ இல்லை. இந்த வார்த்தை ஏறக்குறைய 1830 களின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. அருட்தந்தை சைமன், ஓவென் (Owen) மற்றும் ஃபூரியரும் (Fourier), குறிப்பாக, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் க்கு முந்தைய "கற்பனாவாத" முன்னோடிகளாக வரலாற்றுக்குள் நுழைந்தனர். இந்த குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள், அப்போதிருந்த சமூகத்தின் குறைபாடுகளைக் குறித்தோ மற்றும் அதை விட மிகவும் பகுத்தறிவார்ந்த அமைப்புக்கான முன்மொழிவுகளைக் குறித்தோ சிறந்த அறிவைக் கொண்டிருக்காதவர்கள் இல்லை. ஆனால் அவர்களின் கருத்துருக்களில் என்ன இல்லாமல் இருந்தது என்றால் உண்மையில் சோசலிசம் எதிலிருந்து மேலெழுமோ அந்த புறநிலை சமூகபொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளைக் குறித்த ஒரு விளக்கம் அவற்றில் இல்லை, அதை அடைவதற்காக போராடக்கூடிய சமூக சக்தியை அடையாளம் காணாமல் இருந்தார்கள்.
மார்க்ஸ் பின்னர் நினைவுகூர்ந்ததைப் போல, அவரும் ஏங்கெல்ஸூம் "முதலாளித்துவ சமூக பொருளாதார கட்டமைப்பின் விஞ்ஞானபூர்வ ஆய்வை" சோசலிச போராட்டத்திற்கான ஒரே ஏற்கத்தக்க தத்துவார்த்த அடித்தளமாக முன்வைத்தனர்", மேலும் "அது ஏதோவொரு கற்பனாவாத அமைப்புமுறையை நடைமுறைக்குள் திணிக்கும் விடயமல்ல, மாறாக நம் கண் முன்னாலேயே சமூகத்தைப் புரட்சிகரமாக ஆக்கும் வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் நனவுபூர்வமாக பங்கெடுப்பதாகும் என்று பரந்த வடிவில் வாதிட்டனர்.” (Herr Vogt, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தொகுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 17, மாஸ்கோ: 1981, பக்கம் 79)
மார்க்ஸ் அவரது தத்துவார்த்த படைப்பின் முக்கியத்துவத்தை விவரிக்கையில், மிதமிஞ்சிய பணிவடக்கத்துடன், மூன்று முக்கியமான ஒன்றோடொன்று இணைந்த கண்டுபிடிப்புகளை அடையாளங்காட்டினார்:
இங்கு நான் புதிதாக செய்தது இதை நிரூபிக்கவேண்டியதாக இருந்தது, அவையாவன: 1. வர்க்கங்களின் இருப்பானது, உற்பத்தி அபிவிருத்தியில் குறிப்பிட்ட வரலாற்று கட்டங்களுடன் மட்டுமே பிணைந்தது; 2. வர்க்க போராட்டமானது இன்றியமையாவிதத்தில் பாட்டாளி வார்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது; 3. இந்த சர்வாதிகாரமே கூட, எல்லா வர்க்கங்களும் அழிக்கப்பட்டுவர்க்கமற்ற சமூகத்திற்கு மாறுவதற்கானது என்பதற்கு அதிகமாய் வேறொன்றுமில்லை (வெய்டெமெய்யெருக்கு எழுதிய மார்க்ஸ் கடிதம், மார்ச் 5, தொகுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 39, பக்கம் 64-65)
மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவர் வாழ்வின் முக்கியத்துவத்தைக் குறித்து கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் மதிப்பீடுகளுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. 2008 பொருளாதாரப் பேரழிவு ஒவ்வொருவரின் நினைவிலும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. வெறுப்பிலும் பேராசையிலும் குருடாகி கிடக்கும், திருத்த முடியாத கம்யூனிச-விரோத பிற்போக்குவாதிகள் மட்டுந்தான், மார்க்ஸ் படைப்பின் நிலைபேறான தன்மையை மறுப்பார்கள். நியாயமாக பார்த்தால் “மார்க்ஸ் கூறியது சரியே!” என்ற வாக்கியமே கூட மிகவும் அடிக்கடி காணக் கிடைக்கிறது. மிகவும் புத்திஜீவித மனசாட்சியுள்ள கல்வியாளர்கள், அவரது உழைப்பின் மதிப்பு தத்துவம் மற்றும் இலாப விகித வீழ்ச்சி போக்கைக் குறித்த பகுப்பாய்வு போன்ற மார்க்ஸ் படைப்பின் முக்கிய அம்சங்கள் மீதான பழமைவாத முதலாளித்துவ பொருளாதாரவாதிகளின் தாக்குதல்களை மறுத்துரைக்க கடும் சிரத்தையான ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவை போன்ற ஆழ்ந்த புத்திஜீவித படைப்புகளை வரவேற்கத்தான் வேண்டும், அவை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஆனால் மார்க்சின் மேதைமையை மிகவும் நேர்மையோடு ஒப்புக்கொள்பவைகளும் கூட அவரின் தத்துவார்த்த படைப்பை அதன் நடைமுறை அரசியலில் இருந்து, அதாவது சமகாலத்திய புரட்சிகர தாக்கங்களில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளில் சிக்கி உள்ளனர். மார்க்சின் படைப்பின் ஏதோவொரு அம்சம் இன்றைய நாளின் பொருளாதார நிலைமைகளைப் புரிந்து கொள்ள "பொருத்தமானதாக" புகழப்படுகிறது என்றாலும், பொருளாதார தத்துவியலாளராக மார்க்சைக் குறித்த மதிப்பீடு மார்க்சிசத்தை உலக சோசலிசப் புரட்சிக்கான தத்துவம், வேலைத்திட்டம் மற்றும் நடைமுறை என்பதிலிருந்து உறுதியாக பிரிந்து நிற்கிறது. மார்க்ஸ் "சம்பந்தப்பட்ட" விவாதங்களில் பெரும்பான்மை, முதலாளித்துவத்தைக் குறித்த மார்க்சின் பொருளாதார விமர்சனத்தைக் கவனத்தில் கொண்டாலும், முதலாளித்துவ அமைப்புமுறையைப் புரட்சிகரமாக தூக்கி வீசுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகளின் வரலாற்று மற்றும் சமகாலத்திய சர்வதேச அரசியல் இயக்கமாக மார்க்சிசத்தின் நிதர்சனமான முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்வதிலிருந்து உறுதியாக பிரிந்து விடுவதால், திரிந்து விடுகின்றன மற்றும் அவ்விதத்தில் மேலோங்கி உள்ளன.
மார்க்சை சோசலிச புரட்சியாளர் என்பதிலிருந்து "பொருளாதார தத்துவவியலாளராக" பிரிப்பது ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலப்போக்கில், “மார்க்சின் தாடியைக் குறைக்க", அதாவது, மார்க்சை ஏதோவொரு வடிவத்தில் முதலாளித்துவ சிந்தாந்தம் மற்றும் குட்டி-முதலாளித்துவ சந்தர்ப்பவாத சீர்திருத்தவாதத்துடன் இணக்குவிக்க எண்ணற்ற முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. மார்க்சிசத்தை சோசலிச புரட்சியிலிருந்து பிரிக்கவும் மற்றும் சர்வதேச சோசலிசத்தை சமூக சீர்திருத்தங்களுக்கான ஓர் இயக்கமாக மாற்றவும், எட்வார்ட் பேர்ன்ஸ்டைன், 1895 இல் ஏங்கெல்ஸ் மரணமடைந்ததும் கிடைத்த வாய்ப்பை பற்றிக்கொண்டார். 20 ஆம் நூற்றாண்டின் போக்கில், மார்க்சிச திருத்தல்கள், அதை எந்தவொரு நிஜமான புரட்சிகர முக்கியத்துவமும் இல்லாத கருவியாக்கவும், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பகிரங்கமாக அதை வெகுஜன சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு வக்காலத்துவாங்குவதாக மாற்றுவதற்கும் சேவையாற்றி, அதிகரித்தளவில் ஒரு பிற்போக்குத்தனமான குணாம்சத்தை ஏற்றன.
மார்க்சின் மரபியம் மீதான தாக்குதல், அவரது தத்துவார்த்த படைப்பின் சடவாத அடித்தளங்களைப் பலவீனப்படுத்தி மதிப்பிழக்க செய்வதற்கான குட்டி-முதலாளித்துவ தத்துவவியலாளர்களின் ஓயாத முயற்சிகளால் ஒத்துழைக்கப்பட்டன. ஏறக்குறைய 1890 களின் தொடக்கத்தில் போலவே, அவர் மரணத்திற்கு வெறும் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், பல்வேறு ஜேர்மன் பேராசிரியர்களும், வர்க்கப் போராட்ட தர்க்கத்தின் அடிப்படையில் இருந்த மார்க்சின் புரட்சிகர நெறிகளை, கான்டின் (Kant) செயல்களுக்கான நோக்கத்தை வரையறுக்கும் வரலாற்றுக்கு அப்பாற்பட்ட "தவிர்க்கவியலாத நிர்பந்தங்களுடன்" இணக்குவிக்க ஆர்வமாக இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகளின் பரந்த பிரிவுகள் மீது அதிகரித்தளவில் செல்வாக்கு செலுத்தி வந்த தத்துவார்த்த பகுத்தறிவின்மையைப் பிரதிபலிக்கும் விதமாக, வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு மீதான புறநிலை விதிகளுக்குட்பட்ட விடயங்கள் தொடர்பான மார்க்சின் வலியுறுத்தல்கள் தாக்குதலின் கீழ் வந்தன.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஈர்ப்பு கொள்வதற்கு, முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்க போராட்ட அபிவிருத்தியை ஆளும் புறநிலை விதிகளைக் குறித்த அறிவு அவசியமல்ல, கட்டுக்கதைகளால் தூண்டப்படுவதே அவசியம் என்று ஜோர்ஜ் சோரெல் (Georges Sorel) பின்னர் ஹென்றி டு மான் (Henri De Man) போன்ற சிந்தனையாளர்கள் வாதிட்டனர். புறநிலை பொருளாதார சக்திகளைக் குறித்த பகுப்பாய்வு மற்றும் புரிதலை விட, நனவுபூர்வமற்ற உளவியல் உந்துதல்களை உள்நோக்குதலே, சோசலிச இயக்கத்திற்கு தொழிலாளர்களை வென்றெடுப்பதற்கு இன்றியமையாதவையாக அறிவிக்கப்பட்டன.
குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகள் பகுத்தறிவின்மையினுள் சென்று கொண்டிருந்த நிலையில், மார்க்ஸ் சிந்தனையில் இருந்த தனிமனித மற்றும் மனிதாபிமான கூறுபாடுகளை ஏங்கெல்ஸ் மூடிமறைத்துவிட்டதாக கூறி, ஒரு கொச்சை சடவாதி (vulgar materialist) மற்றும் நேர்மறைவாதி (positivist) என்ற அவர் மீதான தாக்குதலும் அதனுடன் சேர்ந்திருந்தது. 1844 இல் மெய்யியல் கையெழுத்துப்பிரதி எழுதிய "இளம் மார்க்ஸ்" (Young Marx), மூலதனம் எழுதிய "முதிர்ந்த மார்க்சிற்கு" (Old Marx) மேலே மேலுயர்த்தப்பட்டார். நீட்ஷேயிசம் (Nietzscheism) மற்றும் இருத்தலியல்வாதம் (existentialism) ஆகியவற்றின் செல்வாக்கு, ஃபிரோய்டியன் போலி-விஞ்ஞானம் (Freudian pseudo-science) மற்றும் பிராங்க்பேர்ட் பள்ளியினது பின்-நவீனத்துவத்தின் பகுத்தறிவற்ற வரலாற்றை-நிராகரிக்கும் புத்திஜீவித நிகிலிசவாதம் (அனைத்து முற்போக்கான கருத்துக்களையும் நிராகரித்து தனிமனிதவாத்திற்கு முன்னுரிமை கொடுத்த இளம் ஹேகலியவாதம் - nihilism) ஆகியவற்றைக் கொண்டு சடவாதத்தை நீர்த்துப் போக செய்தமை ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் பிரதான நோக்கமே, மார்க்ஸ் படைப்புகளில் இருந்த இன்றியமையா புரட்சிகர உள்ளடக்கத்தை நசுக்குவதாக இருந்தது.
மார்க்சிசத்திற்கு எதிரான சித்தாந்தப் போரில் முதலாளித்துவ அரசின் உளவுத்துறை முகமைகளும் ஒதுங்கி இருக்கவில்லை. நேற்று பிரிட்டிஷ் Independent பத்திரிகை பிரசுரித்த ஒரு கட்டுரையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட சிஐஏ'இன் இரகசிய ஆய்வு ஆவணம் மீது கவனம் செலுத்துமாறு அழைப்புவிடுக்கிறது. அந்த ஆவணம் குறிப்பிடுகிறது, அந்த முகமை, “பிரெஞ்சு பின்நவீன தத்துவத்திலிருந்து முடிவினை எடுத்துக் கொண்டுள்ளது, அதாவது வரலாற்றின் தவிர்க்கமுடியாத தன்மை பற்றிய... மார்க்சிச கோட்பாட்டை இல்லாதொழிப்பதற்கு, யதார்த்தத்தின் புறநிலை அடித்தளத்தை அது கேள்விக்குட்படுத்துவதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தீர்மானிக்கிறது. பின்நவீன சிந்தனைகளை முன்னுக்குத் தள்ளவும், மத்திய-இடதை உருவாக்கவும், அவ்விதத்தில் மரியாதைக்குரிய கருத்துக்கள் உருவாக்கிய —அதாவது அபாயகரமானவை மற்றும் வெறித்தனமாக தீவிரமானவை என்று கண்டிக்கப்படுவதற்கு வெளிப்புற எல்லையை நிர்ணயிக்கவும், சஞ்சிகைகள், பிரசுரங்கள் மற்றும் விருப்பத்திற்குரிய கல்வி அமைப்புகள் போன்ற முன்னணி அமைப்புகளுக்குள் மில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டன …"
மார்க்சை புரட்சியாளர் என்பதிலிருந்து தத்துவவியலாளராக பிரிப்பது, முதலும் முக்கியமாகவும் மார்க்சின் வாழ்க்கை வரலாறை பொய்மைப்படுத்தலுக்கு இட்டுச் செல்லும். சிந்தனையாளர் மார்க்சை, ஒரு புரட்சியாளராக அவரது அரசியல் அபிவிருத்தி மற்றும் நடவடிக்கையிலிருந்து பிரித்து புரிந்து கொள்ள முடியாது. பிரான்ஸ் மெஹ்ரிங் அவரது மார்க்சின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுவதைப் போல, “ஐயத்திற்கு இடமின்றி மார்க்ஸ் இன் ஈடிணையற்ற நன்மதிப்பானது, அவருக்குள் இருந்த சிந்தனைகளுக்குரிய மனிதர், நடவடிக்கைக்குரிய மனிதருடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்திருந்தார் என்ற உண்மையினால் ஏற்பட்டிருந்தது, அவ்விரண்டும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று உதவி செய்து ஒன்றுக்கொன்று ஒத்துழைத்தன.” (கார்ல் மார்க்ஸ்: அவர் வாழ்வின் கதை, பக்கம் xiii)
மார்ச் 1843 தொடக்கத்தில், மார்க்ஸ் ஆர்னோல்ட் ரூஹ்கிற்கு எழுதினார்: “ஃபயர்பாஹின் நீதிமொழிகள் ஒரேயொரு அம்சத்தில் எனக்கு சரியாகப் படவில்லை, அதாவது அவர் பெரும்பாலானவற்றிற்கு இயற்கையை காரணம்காட்டிவிட்டு, குறைவானவற்றைத்தான் அரசியலை காரணமாக குறிப்பிடுகிறார். ஆனால், அவ்விரண்டையும் ஒன்றுகலப்பதன் மூலமாக மட்டுந்தான் இன்றைய நாளின் மெய்யியல் உண்மையாக மாற முடியும்" (மார்க்ஸ்-ஏங்கெல்ஸ், தொகுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 1, பக்கம் 400). இது ஏதோ போனபோக்கில் குறிப்பிடப்பட்ட வாசகம் அல்ல, மாறாக மார்க்சின் படைப்பு மற்றும் சமகாலத்திய உலகம் இரண்டிலும் மெய்யியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான இன்றியமையாத உறவைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானதாகும்.
அவரது ஃபயர்பாஹ் மீதான ஆய்வறிக்கைகளில், மார்க்ஸ் எழுதினார்: “மனித சிந்தனை புறநிலை உண்மையாக இருக்கின்றதா என்ற கேள்வி ஒரு தத்துவார்த்தக் கேள்வியல்ல, மாறாக ஒரு நடைமுறைக் கேள்வியாகும். மனிதன் உண்மையை நிரூபிக்க வேண்டும், அதாவது அவன் சிந்தனையில் உள்ள யதார்த்தத்தையும், பலத்தையும், இந்த-உலகப்பற்றையும் நடைமுறையில் நிரூபிக்க வேண்டும். சிந்தனையின் யதார்த்தமும் யதார்த்தமின்மையும், நடைமுறையிலிருந்து பிரிந்து இருந்தால், இவை தொடர்பான சர்ச்சை முற்றிலும் மேதமை சார்ந்த பிரச்சினையாகி விடுகிறது" (தொகுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 5, பக்கம் 6).
மனிதன் மனிதனால் ஒடுக்கப்படுவதற்கு எதிரான போராட்டமான, புரட்சிகர அரசியலில் இருந்து பிரிக்கப்பட்ட மெய்யியல், முற்போற்கான முக்கியத்துவமுமின்றி, பயன்பாட்டிற்கு உபயோகமற்ற அனுமானமாக இருக்கும். ஆனால் சர்வதேச தொழிலாளர் இயக்கம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் நீண்ட வரலாற்று போக்கில் புரட்சிகர தத்துவத்தின் உறுதியான அடித்தளமும், அதன் அபிவிருத்தியைக் குறித்த அறிவும் இல்லாத அரசியலானது, திராணியற்ற முன்னேற்பாடற்ற நடவடிக்கைகளுக்கும் முழுமையான காட்டிக்கொடுப்புகளுக்கும் மட்டுமே இட்டுச் செல்லும்.
மார்க்ஸ் மார்ச் 14, 1883 இல் அவரது 64 வயதில் உயிர் துறந்தார். அவரின் சமாதி அருகில் நின்று உரையாற்றுகையில், ஏங்கெல்ஸ் அவரின் அன்பிற்குரிய நண்பரையும் கரங்கோர்த்து நின்ற தோழரையும் "விஞ்ஞான மனிதர்" என்று விவரித்தார். ஆனால், “இது அம்மனிதரின் பாதியை கூட குறிக்காது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். ஏங்கெல்ஸ் அறிவித்தார், மார்க்ஸ், “அவருக்கு முன்பிருந்த அனைவரையும் விட ஒரு புரட்சியாளர். அவர் வாழ்வின் தீர்க்கமான நோக்கம், முதலாளித்துவ சமூகத்தையும் அது நடைமுறைக்கு கொண்டு வந்த அரசு அமைப்புகளையும் தூக்கியெறிவதில் பங்களிப்பதும், நவீனகால பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு பங்களிப்பதுமாக இருந்தது, நவீன பாட்டாளி வர்க்கத்தின் சொந்த நிலைப்பாட்டையும் மற்றும் அதன் தேவைகளையும் குறித்து அதை நனவுபூர்வமாக ஆக்கியதிலும், அதன் விடுதலைக்கான நிலைமைகளைக் குறித்து அதை நனவுபூர்வமாக ஆக்கியதிலும் அவரே முதல் நபராவார். போராடுவதே அவரது அம்சமாக இருந்தது. அவர் ஒரு சிலரைப்போல் மிகக்குறைந்தளவு வெற்றிக்காக உணர்வுபூர்வமாக, விடாப்பிடியாக, வெற்றிகரமாக போராடினார்" (மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் குறித்த நினைவுகூரல்களின் மறுபிரசுரத்தில் இருந்து, மாஸ்கோ, பக்கம் 349)
மார்க்ஸ், இம்மனிதர், 135 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தார். என்றாலும், தொடர்ந்து மாறிவரும் புறரீதியிலான சமூகப்பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்வதற்கான இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாத அணுகுமுறையின் பயன்பாடாக; தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை, முதலாளித்துவ சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதை, தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதை, உலகளவில் ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதை என இவற்றை நோக்கி நோக்குநிலை கொண்ட புரட்சிகர அரசியல் முன்னோக்கின் ஒரு விஞ்ஞானமாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்சிசத்தை, வர்க்க போராட்டம் மற்றும் சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்று அபிவிருத்தியுடனான அதன் தொடர்புகளைப் புரிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே முறையாக புரிந்து கொள்ள முடியும்.
ஏங்கெல்ஸ் ஒருமுறை எழுதினார், இயற்கை விஞ்ஞானங்களின் ஒவ்வொரு முன்னேற்றத்துடனும் சேர்ந்து, சடவாதமும் அதன் வடிவத்தில் மாறும்; அதாவது, பௌதீகம், இரசாயனம், பரிணாம உயிரியல், கணிதம் ஆகியவற்றின் சமீபத்திய முன்னேற்றங்களால் சடவாத உலகைக் குறித்த புரிதலுக்கேற்ப அது அதனை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல, மார்க்சிசமும், பிரத்யேகமாக முதலாளித்துவ சமூக ஆய்வுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானமாக, உலகளவிலான முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்படும் முக்கிய மாற்றங்களைத் தொடர்ச்சியாக ஆய்வுக்குட்படுத்துவதன் மூலமாகவும், மற்றும் சர்வதேச அளவில் வர்க்க போராட்டங்களில் பங்கெடுத்தும், முக்கிய அனுபவங்களை உள்ளீர்த்துக் கொண்டும் அபிவிருத்தி அடைகிறது. மார்க்சிசத்தின் இந்த முக்கிய கூறுபாட்டை கைவிட்டு விட்டு, கடந்த நூற்றாண்டின் புரட்சிகர போராட்டங்களது படிப்பினைகளைப் புறக்கணித்து விட்டோ அல்லது மூடிமறைத்து விட்டோ, எல்லாவற்றிற்கும் "இயங்கியலை" துணைக்கு இழுப்பதென்பது, வெற்று வாய்-வீச்சும் குட்டி-முதலாளித்துவ அரசியல் போலித்தனத்தைப் பயன்படுத்துவதும் என்பதல்லாமல் வேறொன்றுமில்லை.
மார்க்ஸ் பிறந்து இருநூறாம் நினைவாண்டு கொண்டாட்டம் என்பது, அது மார்க்சிசத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுரீதியிலான அபிவிருத்தியின் அடிப்படையில் உள்ளது என்பதால் மட்டுந்தான் நிஜமான புரட்சிகர அரசியல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் போக்கில், ஏகாதிபத்திய போர்கள், புரட்சிகள் மற்றும் எதிர்ப்புரட்சிகள் என தொழிலாள வர்க்கம் பிரமாண்டமான வரலாற்று அனுபவங்களைக் கடந்து வந்துள்ளது. மார்க்சிசம் வார்த்தையளவில் இருக்கும் ஒன்றோ, அல்லது ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் நெறிப்படுத்தப்பட்ட தீர்மானங்களின் ஒரு தொகுப்போ அல்ல. மாறாக, அது உலக சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் நடைமுறையை அபிவிருத்தி செய்ய சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் தொடர்ச்சியான நனவுபூர்வ போராட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிஜமான இயக்கமாக நிற்கிறது. எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகள் தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுகரமான தோல்விகளுக்கு இட்டு சென்ற நிலையில், அதற்கு புரட்சிகர எதிர்ப்பாக 1938 இல், லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார்.
இந்த 80 ஆண்டுகால போக்கில், நான்காம் அகிலம் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரித்துவவாதிகளின் எதிர்ப்புரட்சிகர கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான கடுமையான போராட்டங்களை மட்டுமல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ வர்க்க மற்றும் ஏகாதிபத்திய அழுத்தத்தைப் பிரதிபலிக்கும் சந்தர்ப்பவாதம், மத்தியவாதம் மற்றும் போலி-இடதுவாதத்தின் பல வடிவங்களுக்கு எதிராகவும் போராடி வந்துள்ளது. இத்தகைய அனைத்து சக்திகளுக்கும் எதிரான இந்த போராட்டத்தினூடாக தான், அனைத்துலக குழு தலைமையிலான நான்காம் அகிலம் மார்க்சிசத்தைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்துள்ளது.
நாம் 2018 மே தினத்தை கொண்டாடுகையில், தொழிலாள வர்க்கத்தின் பாரிய புரட்சிகர போராட்டங்களின் ஒரு புதிய காலகட்டம் தொடங்கி இருப்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. வழக்கம் போல, வரலாற்று அரங்கில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி, வேறெவரையும் விட மேலாக போலி-இடது மற்றும் மார்க்சிச-விரோத கல்வியாளர்களின் பிரதிநிதிகளுக்கு ஆச்சரியமாக வருகிறது — ஏனெனில், இவர்களின் புத்திஜீவித மற்றும் அரசியல் கருத்துருக்கள், தொழிலாள வர்க்கத்தை மொத்தத்தில் ஒரு புரட்சிகர சக்தி என்பதை நிராகரிப்பதன் அடிப்படையில் இருப்பதுடன், இதனால், முதலாளித்துவத்தின் நிரந்தரத்தன்மை மீது இவர்கள் குறைவின்றி முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் அது அனைத்தும் "பகுத்தறிவற்றது" (irrational), மனிதயின நாகரீகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு அவசியமான தேவைகளை எதிர்த்து அறைகூவல் விடுக்கும் அது அனைத்தும், “உண்மைக்கு புறம்பானது" (unreal). அதாவது, வரலாற்று மறதியால் அதன் சொந்த தீர்க்கவியலாத முரண்பாட்டு கூறுபாடுகளால் அது நிராகரிக்கப்படுகின்றது. இந்த வாக்கியம் முதலாளித்துவ சமூகம் தொடர்பான வரலாற்றைச் சுமந்துள்ளது. அது தூக்கியெறியப்பட வேண்டும். சமூக ஒட்டுண்ணித்தனம், அரசியல் நோக்குநிலை பிறழ்ச்சி, புத்திஜீவித சோர்வு, தார்மீக உடைவுகள் ஆகியவற்றுக்கான இதுபோன்ற வெளிப்படையான அறிகுறிகளை வேறெந்த ஆளும் வர்க்கமாவது இதற்கு முன்னர் எப்போதேனும் காட்டியுள்ளதா? பில்லியன் கணக்கான மக்களின் உழைப்பால் உருவாக்கப்படும் செல்வ வளத்தின் பெரும்பான்மை பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செலவிட்டு வரும், செல்வந்த தன்னலக் குழுவின் இன்றைய சர்வதேச மாஃபியா கும்பலுடன் ஒப்பிடுகையில், மார்க்ஸ் சகாப்தத்தின் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏறக்குறைய ஒரு பொறுப்பான சகோதரத்துவம் மிக்க வள்ளல்களாக தெரிகின்றனர். முதலாளித்துவ செல்வந்தர்களுடன் தேனொழுகப் பேசி அதிகளவில் சமமாக செல்வ வளத்தைப் பங்கீடு செய்ய இணங்குவிக்க முடியும் என்ற சாண்டர்ஸ் மற்றும் கோர்பின் போன்ற நாடிதளர்ந்த சீர்திருத்தவாதிகளின் வாதங்கள், சித்தப் பிரமைகள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ட்ரொட்ஸ்கி ஒருமுறை வினவியதைப் போல, பணக்காரர்களின் கண்ணியத்திற்கு கண்ணீருடன் முறையீடு செய்வது, மழைக்காக வழிபாடு செய்வதை விட எவ்வாறு சிறப்பாக இருக்கும்? சோசலிச புரட்சி மூலமாக அல்லாமல், மிகப் பிரமாண்டமான இராணுவ எந்திரங்கள், உளவுத்துறை முகமைகள் மற்றும் பொலிஸ் படைகளுடன் சேர்ந்து, உற்பத்தி கருவிகளையும் மற்றும் உலகளாவிய நிதியியல் வலையமைப்புகளையும் சொந்தமாக்கி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த வர்க்கத்துடன் கணக்குகளைப் பேசி தீர்ப்பதற்கு அங்கே எந்த வழியும் இல்லை. ஆனால் இது சாத்தியமா?
“அவற்றின் ஒரு குறிப்பிட்ட அபிவிருத்தி கட்டத்தில்,” மார்க்ஸ் எழுதினார், “சமூகத்தின் சடத்துவ உற்பத்தி சக்திகள் அப்போதைய உற்பத்தி உறவுகளுடன் மோதலுக்கு வருகின்றன. … இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்ற வடிவத்திலிருந்து அவற்றின் விலங்குகளாக மாறுகின்றன. அப்போது தான் சமூகத்தில் புரட்சிகர சகாப்தம் தொடங்குகிறது" (வரலாற்று சடவாதம் மீது மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின், மாஸ்கோ: 1972, பக்கம் 137). இந்த வார்த்தைகள், மிகவும் ஆழமான மற்றும் உடனடி அர்த்தத்தில், இன்றைய முதலாளித்துவம் முகங்கொடுக்கும் வரலாற்று நிலைமையை வரையறுக்கின்றன.
அவர்களிடம் எல்லா செல்வவளமும் அதிகாரமும் இருந்தாலும், ஆளும் உயரடுக்குகள் ஒரு நெருக்கடி மாற்றி ஒரு நெருக்கடியில் சிக்குகின்றன. அமெரிக்காவில் ட்ரம்ப் மேலுயர்ந்திருப்பதே, முதலாளித்துவ வர்க்கத்தின் உலகளாவிய வீழ்ச்சிக்கு மிகவும் கண்கூடான மற்றும் கோரமான வெளிப்பாடாகும். ஆனால் ட்ரம்ப் மேலுயர்ந்திருப்பது வெறுமனே அடையாளத்திற்கு முக்கியத்துவத்தை கொண்டதல்ல. 20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும், முக்கியமாக இரண்டாம் உலக போருக்குப் பின்னர், அமெரிக்கா உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஸ்திரப்பாட்டிற்கும் உயிர்பிழைப்புக்கும் உத்தரவாதமளித்த கடைசி நபராக செயல்பட்டது. இனி அந்த பாத்திரம் வகிக்க அதற்கு திராணியில்லை.
கடந்த கால் நூற்றாண்டாக, அமெரிக்க முதலாளித்துவம் —அதன் நீடித்த பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை, இராணுவ நடவடிக்கைகளைக் கொண்டு, ஈடுகட்டும் முயற்சியில்— புவிசார் அரசியல் மற்றும் நிதியியல் ஸ்திரமின்மையின் நடுமையத்தில் நிற்கிறது. இந்த சூழலில், அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் மீள்எழுச்சியானது அளப்பரிய வரலாற்று முக்கியத்துவம் கொண்டுள்ளது. அமெரிக்காவினுள் வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியானது, ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கும் சாத்தியக்கூறு மீது நம்பிக்கையைப் புதுப்பிப்பதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தைப் புடம்போடும், அவ்விதத்தில் உலகளாவிய தொழிலாள வர்க்க தீவிரப்பாட்டின் நிகழ்ச்சிப்போக்கை தீவிரப்படுத்தும்.
நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கையில் ட்ரொட்ஸ்கி பிரகடனப்படுத்தியவாறு, வரலாற்று விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட அதிக பலமானவை. அந்த ஆய்வுமுடிவு இப்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாள வர்க்கம் பழைய பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களும் மற்றும் எரிச்சலூட்டும் குட்டி-முதலாளித்துவ போலி-இடது அமைப்புகளில் உள்ள அவற்றின் கூட்டாளிகளும் மற்றும் அதன் பிற்போக்குத்தனமான எண்ணற்ற அடையாள அரசியல் வடிவங்களும் திணித்த தளைகளைத் தூக்கியெறியும் நிகழ்ச்சிப்போக்கில் உள்ளது. இந்த சகாப்தத்தின் நிஜமான முற்போக்கான மற்றும் புரட்சிகர போராட்டங்கள், அடையாள-அடிப்படையில் (identity-based) தனிச்சலுகைகளுக்கான உயர்மட்ட நடுத்தர வர்க்க ஏதோவொரு பிரிவுகளின் சுயநலமான வேட்கைகளின் மீதல்ல, தொழிலாள வர்க்கத்தின் அனைவருக்குமான விடுதலை வேட்கை என்பதன் மீது அடித்தளமிட்டிருக்கும்.
இந்த வரலாற்று மே தினத்தில், கார்ல் மார்க்ஸ் பிறந்த 200 வது நினைவாண்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ட்ரொட்ஸ்கிசமே 21 ஆம் நூற்றாண்டின் மார்சிசம் என பிரகடனப்படுத்துகிறது! உலகெங்கிலும் இருந்து இதை கேட்டுக் கொண்டிருக்கும் எங்களின் ஆதரவாளர்களையும், உலக சோசலிச வலைத் தளத்தின் நூறாயிரக் கணக்கான வாசகர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், எங்களின் அணிகளில் இணையுங்கள்! நான்காம் அகிலத்தின் புதிய பிரிவுகளைக் கட்டமையுங்கள்! தொழிலாள வர்க்க வெற்றிக்கும் சர்வதேச ஐக்கியத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த மனிதயினத்தின் சமத்துவத்திற்குரிய உண்மையான சோசலிச கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு புதியதும் உண்மையானதுமான மனித சமூகத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் இணையுங்கள்!