மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த முன்னோக்கு உரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவருமான டேவிட் நோர்த் மே 3 அன்று நடந்த இணையவழி சர்வதேச மே தின பேரணியைத் தொடக்கி வைத்து நிகழ்த்திய பேச்சின் உரைவடிவமாகும்.
உலகெங்கும் 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்த 2015 இணையவழி மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று செவிமடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சார்பாக சகோதரத்துவத்துடனான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பேரணி மூன்று வழியிலான நோக்கத்தை கொண்டிருக்கிறது:
முதலாவது, இராணுவ வன்முறையின் இடைவிடாத அதிகரிப்பு தடுத்து நிறுத்தப்படாத பட்சத்தில் ஒட்டுமொத்த உலகத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியாத பரிமாணங்களைக் கொண்ட ஒரு பேரழிவு சூழ அச்சுறுத்துகின்ற நிலையில், அதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு ஒரு குரல் கொடுப்பது.
இரண்டாவது, உலகெங்கிலும் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களால் பின்பற்றப்படும் இராணுவவாதக் கொள்கைகளுக்கு உந்துசக்தியாக இருக்கும் உலகளாவிய நெருக்கடியின் பிரதான பொருளாதார, புவியரசியல் மற்றும் சமூகக் காரணங்களையும் மற்றும் இயக்கவியலையும் குறித்த ஒரு பகுப்பாய்வை வழங்குவது.
மூன்றாவதாக, போருக்கு எதிரான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர இயக்கம் தனக்கு அடித்தளமாகக் கொள்ள வேண்டிய அரசியல் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தை விவரித்து கூறுவது.
ஓராண்டிற்கு முன்பாக அனைத்துலகக் குழுவானது தனது முதல் இணையவழி மே தினப் பேரணியை நடத்தியது. அவ்வேளையில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் பின்பற்றிய கொள்கைகள் ஒரு மூன்றாம் உலகப் போருக்கு அடிக்கல் நாட்டிக் கொண்டிருந்தன என்று எச்சரித்திருந்தோம். கடந்த பன்னிரண்டு மாதங்களின் நிகழ்வுகள் இந்த எச்சரிக்கைகளுக்கு வலுச் சேர்த்துள்ளன.
கடந்த ஆண்டு அமெரிக்காவினாலும் அதன் முக்கிய ஏகாதிபத்திய கூட்டாளிகளாலும் தூண்டப்பட்ட இராணுவ வன்முறையின் இடைவிடாத அதிகரிப்பைக் கண்டது. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்று அழைக்கப்பட்டதான ஒன்று, ஒரு நாட்டில் இருந்து அடுத்த நாட்டிற்கு, ஒரு கண்டத்தில் இருந்து அடுத்த கண்டத்திற்கு என விரிவாக்கம் காண்கிறது. 9/11 சம்பவங்களின் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், உலகெங்கும் அமெரிக்க இராணுவ சக்தியைக் கட்டவிழ்த்து விடுவதற்கான ஒரு போலிச்சாக்காகவே “பயங்கரவாதத்தின் மீதான போர்” சேவை செய்திருக்கிறது என்பது கண்ணை மூடிக்கொண்டிருப்பவர்களை தவிர மற்ற அனைவருக்குமே வெட்டவெளிச்சமாகி விட்டிருக்கிறது.
2001 இல் ஆப்கானிஸ்தானிலும் 2003 இல் ஈராக்கிலுமான அமெரிக்க ஆக்கிரமிப்புகள் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவிலான குருதிதோய்ந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆரம்பச்சுற்றுகள் மட்டுமே. அமெரிக்க இராணுவப் படைகளின் நேரடித் தலையீடாகவோ அல்லது அமெரிக்க-ஆதரவு கூலிப்படைகளின் மூலமாகவோ நடந்திருந்த இந்த இராணுவத் தலையீடுகள் கடந்த பத்தாண்டு காலத்தில் நூறாயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளின் விளைவாக ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உருரீதியாகவும் சமூகரீதியாகவும் நாசம் செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் பின்பற்றப்பட்ட குற்றவியல் கொள்கைகளுக்கு பலியான எண்ணிறந்த மக்களில், லிபியக் கரையில் இருந்து கிளம்பி மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்த அகதிகளும் அடங்குவர்.
இந்த பிராந்தியத் தலையீடுகள் எல்லாமே மேலெழுந்து வருகின்ற உலகளாவிய யுத்தத் திட்டத்தின் பகுதியே என்பதையே கடந்த ஆண்டின் நிகழ்வுகள் மிகத்தெளிவாக காட்டியிருக்கின்றன. இதேவேளை அமெரிக்காவானது ரஷ்யா மற்றும் சீனாவுடனான அதன் மோதலை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகமானது, அசாதாரணமான பொறுப்பின்மையுடன், ரஷ்யாவின் இராணுவப் பதிலிறுப்பை தூண்டக் கணக்கிட்டு மேற்கொள்ளப்படுவதைப் போன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. 2014 பிப்ரவரியில் அமெரிக்க ஏற்பாட்டிலான உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்பானது, அணுஆயுதம் கொண்ட ரஷ்யாவுடனான ஒரு மோதலுக்கு தொடக்கமளித்தது. அவ்வாறான ஒரு விளிம்பில் இருந்து பின்னிழுக்க முனைவதற்கு அப்பால், அமெரிக்காவானது, ஜேர்மனி மற்றும் பிற நேட்டோ சக்திகளின் ஆதரவுடன் ரஷ்யாவுக்கு எதிரான தனது பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இராணுவக் கூட்டணிகள் மற்றும் வெவ்வேறு ஐரோப்பிய அரசுகள் இடையிலான வாக்குறுதிகள் ஆகியவற்றின் ஒரு சிக்கலான வலைப்பின்னல் இருந்தமையும் மற்றும் இதில் சம்பந்தப்பட்டிருந்த அரசாங்கங்களினால் இவற்றின் அரசியல் தாக்கங்களும் பின்விளைவுகளும் மிகக்குறைவாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தமையும் மற்றும் பாரிய வெகுஜன மக்களிடம் இவை மறைக்கப்பட்டமையும் 1914 ஜூலை-ஆகஸ்டில் முதலாம் உலகப் போரின் வெடிப்பிற்கு கணிசமான பங்களிப்பைச் செய்தது என்பது நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வரலாற்று உண்மையாகும். 1914 ஜூலையில் ஜேர்மனியிடம் இருந்து “வெற்றுப்பத்திரத்தை” (Blank Check) பெற்றிருக்கவில்லை என்றால், ஆஸ்திரிய-ஹங்கேரி அரசாங்கமானது இரண்டு வாரங்கள் தள்ளி சேர்பியாவுக்கு எதிராக போருக்குச் செல்வதற்கு பின்னடித்திருக்ககூடும். பிரான்ஸ் ரஷ்யாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள்தான் ஜாரிச ஆட்சி சேர்பியாவுக்கு ஆதரவாக இராணுவரீதியாக தலையீடு செய்வதற்கு ஊக்குவித்தது.
நூறு ஆண்டுகளின் பின், வரலாறு மீண்டும் திரும்புகிறது. சென்ற ஆண்டில் ஒபாமா சிறிய பால்டிக் அரசான எஸ்தோனியாவின் தலைநகர் ராலனுக்கு (Tallinn) விஜயம் செய்தபோது அங்கு ஒரு பொதுக் கூட்ட உரையில் பின்வருமாறு அறிவித்தார்:
நான் எஸ்தோனியா மக்களுக்கும் பால்டிக் மக்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன், இன்று நாங்கள் உடன்படிக்கை கூட்டணிக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம். ஒருவருக்கொருவர் ஆற்ற வேண்டிய முக்கிய கடமை நமக்கு இருக்கிறது. ஒருவர் மீதான தாக்குதல் அனைவர் மீதுமான தாக்குதல் என்பதை ஷரத்து 5 மிகத் தெளிவாக சொல்கிறது. ஆகவே, அத்தகைய ஒரு தருணத்தில், “யார் உதவிக்கு வருவார்கள்” என்ற கேள்வி உங்களுக்கு மீண்டும் எழுமானால், உங்களுக்கு பதில் தெரிந்திருக்கும். அமெரிக்க இராணுவப் படைகள் உள்ளிட்ட நேட்டோ கூட்டணி உதவிக்கு வரும் என்பது, “இங்கே, இப்போது, இத்தருணத்தில்!” நாங்கள் இங்கே எஸ்தோனியாவில் இருப்போம். நாங்கள் இங்கே லாத்வியாவில் இருப்போம். நாங்கள் இங்கே லித்வேனியாவில் இருப்போம்”.
எஸ்தோனியாவிலுள்ள அரசியல்ஸ்திரமற்ற, பொறுப்பற்ற வலது-சாரி அரசாங்கத்திற்கு ஒபாமா நிர்வாகம் அளித்திருக்கும் இராணுவ வாக்குறுதியின் தாக்கங்கள், அமெரிக்கர்களில் எத்தனை பேருக்கு புரிவது கூட இருக்கட்டும், தெரிந்திருக்கும்? ராலனுக்கும், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்கிற்கும் இடையிலுள்ள தூரம் வெறும் 230 மைல்கள் தான், அதாவது நியூயோர்க் நகரத்திற்கும் வாஷிங்டன் டிசிக்கும் இடையிலான தூரத்தைக் காட்டிலும் பத்து மைல்கள் குறைவான தூரம் தான். எஸ்தோனிய மக்கள்தொகையில் ஏறக்குறைய கால்வாசிப் பேர் ரஷ்ய இனத்தவர்.
உக்ரேன் மோதல், ரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையில் நடந்துவரும் பதட்டங்கள், மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் மற்றும் கருங்கடல் பிராந்தியத்திற்குள்ளுமான நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கம் இவற்றின் பின்புலத்தில், ராலன் இல் ஒபாமாவின் உரை, பால்டிக் ஆட்சிகளுக்கு வழங்கப்பட்ட “வெற்றுப்பத்திரத்திற்கு” சமமானது என்று ரஷ்யா புரிந்துகொள்ளக் கூடும் என்பதை கற்பனை செய்வது அத்தனை சிரமமா என்ன? மேலும், ஒபாமா உண்மையிலேயே நன்கு தெரிந்து தான் கூறினாரென்றால் —அப்படித்தான் யாரும் அனுமானித்தாக வேண்டும்—அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் பால்டிக் அரசுகளுக்கு ஆதரவாய் ரஷ்யாவுக்கு எதிராக போருக்கு —அது அணுஆயுதப் போராக இருப்பதும் நன்கு சாத்தியமாயினும்— செல்லவிருக்கின்றன.
ஈரோ-ஆசிய நிலப்பரப்பின் மறுபக்கத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் சீனாவைச் சுற்றிவளைக்கும் தங்கள் நோக்கத்தை இடைவிடாது பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். “ஆசியாவை நோக்கிய திருப்பம்’’ என்பது —இது குறித்து இன்றைய ஏனைய பேச்சாளர்கள் இன்னும் விரிவாக ஆராய்வார்கள்— சீனாவுக்கு எதிரான போருக்கு திட்டமிட்டபடி தயாரிப்பு செய்வதற்கான ஒரு சங்கேத பெயரேயன்றி வேறொன்றுமில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அடிப்படையான நம்பிக்கையை, ‘சமாதான சகவாழ்வை’, ’பரஸ்பர புரிந்துணர்வை’, ஒரு மூலோபாயக் கூட்டை, அல்லது புதிய வகையிலான முக்கிய நாட்டு உறவுகளை கட்டியெழுப்புவதற்கான எந்த உண்மையான சாத்தியவளமும் இருக்கவில்லை என்று, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான சீனா விடயத்திலான அமெரிக்க கொள்கை குறித்த ஒரு முக்கிய ஆய்வில் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ குழு மிகவெளிப்படையாக அறிவித்தது.
ஆகவே அமெரிக்கா, இன்றியமையாத அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக சீனாவை கையாளும் பொருட்டு தனது “அரசியல் உறுதி”யையும் இராணுவச் செயல்திறன்களையும் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது. அமெரிக்காவில் கொள்கை உருவாக்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்களை பொறுத்தவரை, அவர்கள் சீனாவுடனான போரை, தவிர்க்கமுடியாத ஒன்று என்பதாகவே பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
இத்தகையதொரு மூலோபாயக் கண்ணோட்டத்தின் தோற்றமானது, முந்தைய உலகப் போர்கள் மீதான ஆய்வு உறுதி செய்வதைப் போல, ஒரு இராணுவப் பிரளயத்தின் வெடிப்பிற்கான இன்னுமொரு பங்களிப்புக் காரணியாக ஆகக் கூடும். முதலாம் உலகப் போர் வரலாற்றாளர் ஒருவர் சமீபத்தில் எழுதியிருந்தார்: “போர் என்பது தவிர்க்கமுடியாதது என்று அனுமானிக்கப்பட்டு விட்டால், அப்போது தலைவர்கள் மற்றும் இராணுவங்களின் கணிப்பீடுகள் மாறுகின்றன. போர் வேண்டுமா அல்லது அது செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியெல்லாம் அதன்பின் எழுவதில்லை, எப்போது மிகவும் சாதகமான முறையில் போரிடமுடியும் என்பதே அப்போது கேள்வியாக இருக்கும்.” (The Next Great War? The Roots of World War I and the Risk of U.S.-China Conflict, ed. Richard N. Rosencrance and Steven E. Miller, p. xi.)
அடிப்படையான பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நலன்களே, சீனா தொடர்பாக அமெரிக்காவின் கொள்கையின் மூர்க்கத்தனமான குணாம்சத்தை உந்துகின்றது என்பது நன்கறிந்ததே. சீனாவின் வளர்ந்து செல்லும் பொருளாதார சக்தி ஆசியாவிலும் மற்றும் உலகெங்கிலும் தனது மேலாதிக்க நிலைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க ஆளும் உயரடுக்கு கருதுகின்றது. மேலும், பல தசாப்த கால பொருளாதார தேக்கம், தொழிற்துறை மற்றும் உற்பத்தித்துறை உள்கட்டமைப்பின் சிதைவு இவற்றின் ஒரு பின்விளைவாக, ஆளும் வர்க்கமானது இராணுவ வலிமையை அப்பட்டமாக பிரயோகிப்பதன் மூலமாக மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கம் தக்கவைக்கப்பட முடியும் என்று உறுதியாக நம்புகிறது.
இந்த சர்வதேசக் காரணிகளுடன், அமெரிக்க முதலாளித்துவம் எந்த முற்போக்கான பதிலையும் கொண்டிராத தீவிரமான சமூக முரண்பாடுகளால் பிளவுபட்டுக் கிடக்கும் அமெரிக்காவின் உள்முக நெருக்கடியின் தாக்கத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒட்டுண்ணித்தனமானதும், முடிவற்ற சுயநலம் வாய்ந்ததும் மற்றும் அடிப்படையாக குற்றவியல்தன்மையானதுமான ஒரு நிதிய உயரடுக்கின் நலன்களுக்காக, சமூகத்தை சூறையாடுவதற்கு வழிவகையளிக்கும் ஒரு பொறிமுறை என்பதற்கு சற்று மேலான ஒன்றாக அமெரிக்க அரசியல் அமைப்புமுறை சீரழிந்து விட்டிருக்கிறது. அமெரிக்க மக்களில் பாரிய எண்ணிக்கையிலானோரை அவர்களது சமூகத் துயரத்திற்கான உண்மையான உள்நாட்டுக் காரணங்களில் இருந்து திசைதிருப்பும் நோக்கத்தில் அவர்களின் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் பயன்படுத்திக்கொள்வது முடிவின்றி சென்று கொண்டிருக்கும் “பயங்கரவாதத்தின் மீதான போரின்” மைய நோக்கங்களில் ஒன்றாய் இருக்கிறது.
அமெரிக்காதான் உலகெங்கிலுமான ஏகாதிபத்திய வன்முறையின் அரசியல் நரம்பு மண்டலமாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், இறுதி ஆய்வில், அமெரிக்க அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் கொள்கைகளானவை உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கான ஒரு பிரதிபலிப்பாகும். இந்த நெருக்கடியின் அத்தியாவசியமான கூறுகள் யாதெனில் 1) உற்பத்தி சாதனங்கள் தனிச்சொத்துடைமையாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையின் அராஜகக் குணம், 2) முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் தற்போதைய கட்டமைப்புக்குள்ளாக ஒரு உலகளவில் ஒன்றுடன் ஒன்றிணைந்த பொருளாதாரத்தின் பரந்துவிரிந்த உற்பத்தித் திறன்களை சமூகரீதியாய் முற்போக்கான ஒரு வகையில் மறுசீரமைப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான சாத்தியமின்மை.
பொருளாதார சந்தைகளுக்கும் பூகோள அரசியல் செல்வாக்கிற்குமான போராட்டத்தில், முன்னெப்போதையும் விட மிக அதிக எண்ணிக்கையிலான ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சக்திகள் பங்குபெற்றிருப்பதானது, இந்த நெருக்கடியின் உலகளாவிய தன்மைக்குச் சான்றாகவுள்ளது. அனைத்து முதலாளித்துவ சக்திகளும் தமது காலனித்துவ அபிலாசைகளைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதுடன், தங்களது கடந்த காலக் குற்றங்களை மறைப்பதற்காக வரலாற்றை பொய்மைப்படுத்துகின்ற மட்டத்திற்கும் கூட இது விரிந்து செல்கிறது. செல்வாக்கு மிக்க ஜேர்மன் பேராசிரியர்கள், நாஜிக்கள் நடத்திய போருக்கு மன்னிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியப் பிரதமர் 1915 இல் Gallipoli இல் ஆயிரக்கணக்கான இளம் உயிர்கள் பலியானதைக் கொண்டாடுவதோடு, இந்த கொலைக்களத்தை எதிர்கால தியாகங்களுக்கான ஒரு முன்னுதாரணமாகவும் போற்றுகிறார்.
கட்டவிழும் உலகளாவிய நெருக்கடியில் ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும், அவற்றின் இடையிலான முரண்பட்ட நலன்கள் மற்றும் உந்துதல்கள் என்னவாக இருந்தபோதிலும், ஒரு பிற்போக்குத்தனமான பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவும் சீனாவும் தமது சொந்த இராணுவத் திட்டங்களை முடுக்கி விடுவதன் மூலமும், அதேசமயத்தில் தேசிய பேரினவாதத்தை தூண்டுவது மற்றும் அதற்கு கோரிக்கைவிடுவதன் மூலமும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளில் சிறியளவும் முற்போக்கான அம்சம் எதுவுமில்லை.
ரஷ்யாவின் அணுஆயுதக் கிடங்கு அதனை வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் என்ற புட்டினின் கூற்றானது, மூலோபாயத் திவால்நிலையுடன் மிக அதீதமான தேசிய விதிவசவாதத்தைக் கலந்ததாக இருக்கிறது. இராணுவச் செலவினங்களிலான சீனாவின் பாரிய அதிகரிப்பு பாதுகாப்பையும் கொண்டு வரப் போவதில்லை அல்லது அமைதியையும் கொண்டு வரப் போவதில்லை. அதன் இராணுவச் செலவினத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் சக்திகள் இப்பிராந்தியத்தில் அவற்றின் சொந்த இராணுவப் படைவலிமையைக் கட்டியெழுப்புவதற்கு நியாயம் கற்பிக்கின்றன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, அனைத்து போட்டியிடும் தேசிய சக்திகளுக்கும் சமரசமற்ற வகையில் குரோதமானதாகும். சோசலிச சர்வதேசியவாதத்தின் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே எங்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைந்திருக்கிறது. போருக்கு எதிரான எங்களது போராட்டத்தில், எந்த தேசிய அரசாங்கத்தையும் நோக்கி நாங்கள் திரும்பப்போவதில்லை, மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கியே திரும்புகிறோம். சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில், முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் நனவான போராட்டத்தை தளைகளற்று அபிவிருத்தி செய்வதே தேசங்களுக்கு இடையிலான போருக்கு ஒரேயொரு ஆற்றல்வாய்ந்த மாற்றுமருந்தாகும்.
எமது உலகளாவிய பார்வையாளர்களில், எங்களது இலட்சியங்களுக்கு தமது அனுதாபத்தை கொண்டிருத்தாலும் அனைத்துலகக் குழுவால் முன்வைக்கப்படுகின்ற சர்வதேச வேலைத்திட்டத்தின் செல்தகைமை குறித்த தங்களது ஐயுறவுவாதத்தை கைவிடுவது கடினமானதாக இருப்பதாக கருதுபவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. இந்த ஐயுறவுவாதத்திற்கான மறுப்பு, உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்த ஒரு புறநிலை ஆய்விலும் வரலாற்றின் படிப்பினைகளிலுமே காணத்தக்கதாகும்.
அணுஆயுத சக்திகள் இடையிலான ஒரு உலகளாவிய போராக மரணகரமாய் பரவுவதற்கு அச்சுறுத்துகின்ற, இராணுவ வன்முறையின் கேடுவாய்ந்த பரவலானது, தற்போதுள்ள சொத்து உறவுகள் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள்ளாக உலக முதலாளித்துவத்தின் அமைப்புமுறைரீதியான நெருக்கடியை கட்டுப்படுத்தி வைப்பதற்கு ஆளும் உயரடுக்கு முன்னெப்போதினும் விரக்தியுடன் மேற்கொள்கின்ற முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஆயினும், இதே நெருக்கடி தான், உற்பத்தி சாதனங்களது முதலாளித்துவ சொத்துடமையையும் அத்துடன் தேசிய-அரசு அமைப்புமுறையையேயும் ஒழிப்பதன் மூலம் இந்த நெருக்கடியை தீர்க்கும் பொருட்டு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரப் போராட்டத்திற்குள் தள்ளுகிறது.
சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, 1915 மே மாதத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி “ஏகாதிபத்தியமும் தேசிய சிந்தனையும்” என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில், முதலாம் உலகப் போரின் வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்தார்.
நடப்பு ஏகாதிபத்திய போரானது, பொருளாதாரத்தின் அடித்தளங்களையே அழிப்பதன் மூலம், தேசிய சிந்தனையின் ஆன்ம பரிதாபநிலையை அல்லது அரைவேக்காட்டுத்தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுதலும் மற்றும் உருப்பெருக்கிக் காட்டுதலும், முதலாளித்துவ சமூகத்தின் அபிவிருத்தி இட்டுச் சென்றிருக்கக் கூடிய ஒரு முட்டுச் சந்தின் மிகத் திடமான வெளிப்பாடாக இருக்கிறது. சோசலிசம் மட்டுமே, உலகப் பொருளாதாரத்தை தேசியத் தளைகளில் இருந்து விடுதலை செய்கிறது, இவ்வாறாக தேசிய கலாச்சாரத்தை தேசங்களுக்கு இடையிலான பொருளாதாரப் போட்டியின் பிடியில் இருந்து விடுதலை செய்கிறது. சோசலிசம் மட்டுமே ஒட்டுமொத்த மனித கலாச்சாரத்திற்கும் ஒரு படுபயங்கரமான அச்சுறுத்தலாக நம் முன் வந்து நிற்கக் கூடிய முரண்பாடுகளில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியை வழங்குகிறது.
அதற்குப் பல மாதங்களின் பின், 1915 செப்டம்பரில் முதலாம் உலகப் போரின் இருண்ட மணித்தியாலங்களில், 38 சோசலிஸ்டுகள் போருக்கான எதிர்ப்பை வழிநடத்துவதற்கான ஒரு வேலைத்திட்டத்தையும் மூலோபாயத்தையும் விவாதிப்பதற்காய் சிம்மர்வால்ட் (Zimmerwald) என்ற சுவிட்சர்லாந்தின் ஒரு சிறிய கிராமத்தில் கூடியிருந்தனர். வெறும் 38 பேர் மட்டுமே! இந்த 38 சோசலிஸ்டுகளில் லெனினின் குழுவில் வெறும் ஐந்து பேர் தான் இருந்தனர். லெனின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சி அப்போது வரை ஒரு மிகச் சிறிய அமைப்பாகவே இருந்தது.
ஆனால் போரின் அரசியல் பின்னல்கள் தொடர்பான லெனினின் மதிப்பீடு, மிகத் தொலைநோக்குடையதாக இருந்தது. ஒரு ஸ்திரமான சமநிலையான நிலைமையிலிருந்து ஒரு துர்பாக்கியமான மற்றும் தற்காலிகமான ஒரு தடம்புரளலாக போர் வந்திருக்கவில்லை என்பதால் யுத்தம் முடிந்தவுடன் 1914 ஆகஸ்டுக்கு முன் நிலவிய நிலைக்கு ஏறக்குறைய ஒத்த நிலை மீண்டும் ஸ்தாபிக்கப்பட முடியாது என்பதை ட்ரொட்ஸ்கி போலவே லெனினும் வலியுறுத்தினார். போரானது பழைய உலக முதலாளித்துவ ஒழுங்கின் உடைவைக் குறித்ததாக இருந்தது.
உலகப் போர் வெடிக்க இட்டுச் சென்ற அதே முரண்பாடுகள்தான், உலக சோசலிசப் புரட்சிக்கும் இட்டுச் செல்லவிருந்தன என்பதே லெனின் முன்வைத்த அடிப்படையான மூலோபாயக் கருத்தாக்கமாக அமைந்திருந்தது.
முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சிக்கு, தமது தத்துவார்த்த, அரசியல் மற்றும் நடைமுறை, அமைப்புரீதியான வேலைகளின் மூலமாக தயாரிப்பு செய்வதே மார்க்சிஸ்டுகளின் மையமான கடமையாக இருந்தது. அனைத்துக்கும் மேல், போருக்கு எதிரான போராட்டமானது சமரசமற்ற சோசலிச சர்வதேசியவாதத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருந்தது. ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்து போரை ஆதரித்திருந்த சந்தர்ப்பவாத இரண்டாம் அகிலத்திற்கு எதிராய் ஒரு புதிய புரட்சிகர சர்வதேச கட்சியைக் கட்டியெழுப்புவது இதற்கு அவசியமாக இருந்தது. 1915 இல் லெனினின் நிலைப்பாட்டிற்கு ஒரு சிறுபான்மை எண்ணிக்கையின் ஆதரவே இருந்தது. ஆனால் இரண்டே வருடங்களுக்குள், மில்லியன் கணக்கிலானோர் அவரது வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். லெனினின் பகுப்பாய்வு சரியென்பது அக்டோபர் புரட்சியின் வெற்றியின் மூலமாக நிரூபணமானது.
இந்த மகத்தான வரலாற்று அனுபவத்தின் படிப்பினைகள், ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான ஒரு புதிய இயக்கத்தின் அபிவிருத்திக்கு உத்வேகம் அளிக்க வேண்டும், வழிநடத்த வேண்டும். முதலாளித்துவம் ஒரு முட்டுக்கட்டையான நிலைக்கு வந்துசேர்ந்துள்ளது. அதன் கைங்கரியத்தால் விளைகின்ற சமூகத் துயரமும் மற்றும் திட்டமிட்ட நாசமும் முன்னெப்போதையும் விட பெரும் அவமதிப்பைத் தூண்டுகிறது. அமெரிக்காவிற்குள்ளாக, தொழிலாள வர்க்க எதிர்ப்பின் முதற் கிளர்ச்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலக ஏகாதிபத்தியத்தின் வெகு மையத்திலான இந்த எதிர்ப்பானது, தொடர்ந்து பெருகிச் செல்லும். நாங்கள் அபாயங்களை குறைமதிப்பீடு செய்யவில்லை; அதேபோல அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகெங்கிலும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றல்களையும் நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. மனிதகுலத்தின் விதி என்ற வரலாற்றுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதாகவே தொடர்கிறது.
வரலாற்றின் சில தருணங்களில் வெகுஜனங்கள் முன்னேறி, அவர்கள் மீது ஒடுக்குமுறையாளர்களால் திணிக்கப்படக்கூடிய முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிகிறார்கள். அத்தகையதொரு வரலாற்றுத் தருணத்தையே நாம் இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த இணையவழிப் பேரணியில், ஐந்து பேரை விடுவோம், 38 பேரையும் விடக் கணிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் இருந்து இன்று செவிமடுத்துக் கொண்டிருக்கும் அன்பார்ந்த தோழர்கள் மற்றும் நண்பர்களாகிய நீங்கள் அனைவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் அதற்காகப் போராடுகின்ற தூதுக்குழுவினராக உங்களைக் காணவும் செயல்படவும் வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் அரசியல் நனவை உயர்த்துவதற்காக தளர்வின்றி உழைக்க களமிறங்குமாறு உங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதில் சோம்பி இருப்பதற்கோ அல்லது விதிவசவாதத்திற்கோ எந்த இடமுமில்லை.
முதலாளித்துவத்தின் புறநிலை முரண்பாடுகள் தொழிலாள வர்க்கம் தீவிரமயப்படுவதற்கான ஒரு சக்திவாய்ந்த உந்துசக்தியை வழங்கும். ஆயினும் அவர்களுக்கு ஒரு நனவான புரட்சிகர சோசலிச நோக்குநிலையைக் கொண்டு செல்லும் பொருட்டு, அபிவிருத்தி அடையும் போராட்டங்களில் நாம் தலையீடு செய்தாக வேண்டும். வரலாற்று சூழலைப் புரிந்து கொள்வதுடன் சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன் உடன்பாடு கொண்ட அனைவரும் ”போர் மீது போர்” நடத்துவதும், நான்காம் அகிலத்தில் இணைவதும், அதனை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டியெழுப்ப உதவுவதும் அவர்கள் எதிர்கொள்கின்ற மாபெரும் கடமையாகும், மேலும் கூறினால் அது தட்டிக்கழிக்கவியலாத பொறுப்பும் ஆகும்.