சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part  5

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 5

By the the Socialist Equality Party (Sri Lanka)
30 March 2012

Use this version to print | Send feedback

11- இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் கலைப்பு

11-1. யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர இயக்கங்களின் தேய்வும் பிரிட்டனின் தெற்காசிய காலனிகளுக்கு உத்தியோகபூர்வமாக சுதந்திரம் வழங்கப்பட்டமையும், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி மீது புதிய தேசிய கட்டுமானத்திற்கும்  மற்றும் அரச கட்டமைப்புகளுக்கும் தகவமைத்துக் கொள்வதற்கான பிரம்மாண்டமான அரசியல் அழுத்தங்களை உருவாக்கி விட்டன. நடுத்தர வர்க்கத் தட்டுக்களைப் பொறுத்தவரை, “சுதந்திரம்” என்பது பாராளுமன்ற அரசியல் சூழலில் புதிய வாய்ப்புகளையும், விரிவடைந்து வந்த அரச அதிகாரத்துவத்திலும் மற்றும் அரசுக்குச் சொந்தமான கூட்டுத்தாபனங்களிலும் தொழில் பதவிகளையும் திறந்து விட்டிருந்தது. உலகளாவிய முதலாளித்துவம் ஸ்திரமடைந்ததும் யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதாரச் செழுமையும், ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்து முன்னாள் காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் தொழிலாள வர்க்கத்துக்கு சலுகைகளை வழங்க இயலுமையை ஏற்படுத்திக் கொடுத்தது விசேடமாக, ஒரு போர்க்குணம் கொண்ட பாட்டாளி வர்க்கத்தையும் அவர்களில் ஒரு பகுதியினர் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் புரட்சிகரத் தலைமையின் கீழ் இருந்த நிலையையும் எதிர்கொண்ட, ஒரு பலவீனமான முதலாளித்துவ வர்க்கம் இருந்த இலங்கையில் இது உண்மையானதாக இருந்தது. ஒரு சோசலிசப் புரட்சி அவசியமானதல்ல மற்றும் பாராளுமன்றத் தந்திரோபாயங்கள் மற்றும் போர்க்குணம் மிக்க தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பின் ஊடாக பெருமளவு தொழிலாளர்களால் சிறிது சிறிதாக முன்னேற முடியும் என்கிற சீர்திருத்தவாத மாயைகள் தற்காலிகமான பொருளாதார வெற்றிகளால் ஊக்குவிக்கப்பட்டன.

11-2. 1948 மற்றும் 1950ம் ஆண்டுகளுக்கு இடையில், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தேசியவாதத்தின் பக்கம் பின்வாங்கியமையே, அது கலைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 1946ல் வெளியிடப்பட்ட இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ..) யின் “இலங்கைக்கான வேலைத்திட்டத்தின்” ஆரம்ப பகுதி, இலங்கையிலும் இந்தியாவிலும் சோசலிசப் புரட்சியானது மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது என சக்திவாய்ந்த முறையில் வாதிட்டது. “புரட்சிக்காக உயர்ந்த மட்டத்தில் மக்கள் அணிதிரட்டப்பட்டிருந்தாலும் கூட, இலங்கையில் தமது பலத்தை காத்துக்கொள்வதற்காக ஏகாதிபத்தியவாதிகள் திரட்டும் சக்திகளை மீறி முன்செல்வதற்குத் தேவையான ஆற்றலை, இந்தத் தீவின் புரட்சிகர வெகுஜன இயக்கத்தினால் தனியாக வெளி உதவியின்றி உருவாக்க முடியாது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு இலங்கை வெறும் பொருளாதாரச் சுரண்டலுக்கான களம் மட்டுமல்ல, அது அவர்களது ஒட்டு மொத்த சாம்ராஜ்ஜியத்தினதும்  பாதுகாப்புக்கான ஒரு மூலோபாய வெளிக்காவல் அரணாகும். மறுபக்கம், கிழக்கில் பிரிட்டிஷ் வல்லாதிக்கத்தின் ஒரு உறுதியான கோட்டையாக இலங்கை பேணப்பட்டு வரும் அதே வேளை, இந்தியாவில் முழுமையான விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது. இந்த ஆய்வுப் புள்ளியில் இருந்து, இலங்கையிலான ஒரு புரட்சிகரப் போராட்டம், அதன் சகல மட்டத்திலும் கண்டத்தின் புரட்சிகரப் போராட்டத்துடன் பிணைந்துள்ளதுடன், ஒட்டுமொத்தமாக இந்தியப் புரட்சியைப் பொறுத்தளவில், ஒரு மாநிலத்திற்குரிய அம்சத்தைக் கொண்டிருக்கும் என நாம் சொல்லலாம்.”  இந்தியப் பிரிவினை மற்றும் இலங்கை சுதந்திரம் சம்பந்தமாக பி.எல்.பீ.. விமர்சனம் செய்த போதிலும், கட்சி அதன் சர்வதேசிய முன்நோக்கில் இருந்து பின்வாங்கி, புதிதாக அமைக்கப்பட்ட அரசுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. பி.எல்.பீ.. இலங்கையிலும் இந்தியாவிலும் அமைப்பு ரீதியில் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிற பிரச்சினை இல்லை என்ற போதிலும், நான்காம் அகிலத்தின் புதிய பகுதியொன்றை ஸ்தாபிக்கும் விடயத்தில், ஐக்கியப்பட்ட புரட்சிகர முன்நோக்குக்காகப் போராட வேண்டிய முறை பற்றியும் மற்றும் அமைப்பு ரீதியில் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதைப் பற்றியும் தீவிரமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக, அநேகமான இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதிகள் தீவுக்குத் திரும்பியிருந்த நிலையில், ஏறத்தாழ ஒரு பிளவே தோன்றியது. இந்தியாவில் இருந்த கட்சியை பலியிட்டு, அவர்களது அரசியல் நடவடிக்கைகளுக்கான குவியப்புள்ளியாக இலங்கை மாறியது. யுத்தத்துக்குப் பிந்திய முதலாளித்துவ மறுஸ்திரப்படலால் உருவாக்கப்பட்ட அரசியல் சிக்கல்கள் உச்சத்துக்கு வந்த நிலையில், நுழைவுவாதமும் “இடது ஐக்கியமும்” விரைவாக வளர்ச்சி காண்பதற்கான வழியை ஏற்படுத்தும், என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி, குட்டி முதலாளித்துவ தீவிரவாத கட்சிகளுக்குள் கலைத்துவிடப்பட்டது.

11-3. 1948ல் காங்கிரசில் இருந்து பிரிந்த காங்கிரஸ் சோசலிஸ்டுகளால் அமைக்கப்பட்ட இந்திய சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழையுமாறு இலங்கையில் இருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதிகள்தான் இந்தியாவில் பி.எல்.பீ..க்கு அழுத்தம் கொடுத்தனர். 1930களில், அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி (Socialist Party of America) மற்றும் தொழிலாளர் அகிலத்தின் பிரான்ஸ் பகுதி (SFIO) ஆகியவற்றில் இருந்து முக்கியமான பகுதியினரை அரும்பிக் கொண்டிருந்த நான்காம் அகிலத்துக்குள் வென்றெடுப்பதற்காக, ட்ரொட்ஸ்கி பரிந்துரை செய்த வழிமுறையை சுட்டிக்காட்டியே, இந்திய பி.எல்.பீ..யில் இருந்த லங்கா சமசமாஜக் கட்சி ஆதரவாளர்கள் அவர்களது “நுழைவுத் தந்திரோபாயத்துக்காக” வாதிட்டார்கள். பாசிசத்தின் எழுச்சி மற்றும் ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்கள் காரணமாக, இத்தகைய சமூக ஜனநாயக அமைப்புக்கள், புரட்சிகர அரசியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் புள்ளியாக ஆகியிருந்ததனாலேயே ஒரு சுருக்கமான தந்திரோபாய திட்டமாக 1930களில் அத்தகைய நுழைவு பரிந்துரைக்கப்பட்டது. இத்தகைய கட்சிகளுக்குள் தமது புரட்சிகர சர்வதேசிய முன்னோக்கிற்குப் போராடுவதற்கான கணிசமானளவு சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொண்ட ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கியமான பகுதியினரை வென்றெடுத்தனர். இடதுபக்கமன்றி, வலது பக்கமாக மட்டும் பாராளுமன்ற தேசியவாத பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இந்திய சோசலிஸ்ட் கட்சிக்கு அத்தகைய நிலைமைகளில் எதுவும் பொருந்தாது. 1947 இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி மாநாட்டில் இந்த நுழைவு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த விடயத்திற்கு அழுத்தம் கொடுத்த அந்த தந்திரோபாயத்தின் ஆதரவாளர்கள், சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்காலத்தில் தீவிரமயமாவர் என்ற எதிர்பார்ப்பில், அதற்குள் நீண்ட காலத்துக்கு நுழைந்திருக்க வேண்டும் எனத் தொடர்ந்தும் வாதிட்டனர். எந்தவொரு திடீர் நகர்வுக்கும் எதிராக, பாரிஸில் இருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக செயலகம் விடுத்த எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி, 1948 அக்டோபரில் கல்கத்தாவில் நடந்த ஒரு விசேட மாநாட்டில் இத்தகைய நுழைவுக்கு வாக்களித்தது.

11-4. சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழைந்தமை ஆரம்பத்தில் இருந்தே அழிவுகரமானதாக இருந்தது. இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தனிநபர்கள் என்ற அடிப்படையில் உறுப்புரிமைக்காக விண்ணப்பிக்கத் தள்ளப்பட்டார்கள். அவர்களால் ஒரு தனியான உட்குழுவை அமைக்க முடியாமல் போனதோடு கலந்துரையாடலுக்கான ஆவணங்களை சுற்றுக்கு விடவும் முடியாமல் போனது. அதே சமயம் சோசலிஸ்ட் கட்சி, குறிப்பாக முன்னர் ஒரு உறுப்பினரையுமே  கொண்டிராத சென்னை (மெட்ராஸ்) போன்ற பெருநகரங்களில், தமது கட்சியின் அமைப்புக்களை கட்டியெழுப்புவதற்காக முன்னாள் பி.எல்.பீ.. உறுப்பினர்களின் திறமைகளை சுரண்டிக்கொண்டது. சோசலிஸ்ட் கட்சியின் தலைமை மேலும் வலதுபக்கம் திரும்பிய நிலையில், அது மேலும் மேலும் எந்தவொரு விமர்சனத்தையும் அல்லது விவாதத்தையும் தடுத்தது. 1952ல் நடந்த பொதுத் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி திறமை காட்டாததை அடுத்தும், அது முதலாளித்துவ கிசான் மஸூர் பிரஜா கட்சியுடன் (விவசாயிகள் தொழிலாளரகள் மக்கள் கட்சி) கூட்டுச் சேர்ந்த பின்னரும், முன்னாள் பி.எல்.பீ.. உறுப்பினர்கள் அதில் இருந்து பிரிந்தார்கள். ஆயினும், அந்தக் கட்டத்தில், பி.எல்.பீ.. அடிபணிந்து போன அதே அரசியல் அழுத்தங்களை பிரதிபலித்த மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரின் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாத போக்கு நான்காம் அகிலத்தினுள் எழுந்திருந்தது. இந்தியாவில் பி.எல்.பீ.. இன் மிச்சங்களையும் பப்லோவாதம் துரிதமாக அழித்தது.

11-5. இலங்கையில், அதிலும் குறிப்பாக பிளவுபட்ட “இடது” வாக்கு, 1949 இடைத் தேர்தலில் யூ.என்.பீ.க்கு அத்தொகுதியில் வெல்வதற்கு வாய்ப்பளித்ததற்குப் பின், லங்கா சமசமாஜக் கட்சியுடன் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியை இணைப்பதற்கு அழுத்தங்கள் பெருகின. பாராளுமன்ற மற்றும் தொழிற்சங்க களங்களில் கட்சியைப் பலப்படுத்துவதன் பேரில்  ஐக்கியப்படுவதற்கான வாதப் புள்ளியாக அந்த இடைத்தேர்தல் ஆனது. 1950 ஜூனில், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி இணைக்கப்பட்டமை, இரு ட்ரொட்ஸ்கிக் கட்சிகளின் கூட்டிணைவாக லங்கா சமசமாஜக் கட்சியின் பல்வேறு வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அது, பாராளுமன்றவாதம் மற்றும் தொழிற்சங்க வாத்திற்கு துரிதமாக இடமளித்த ஒரு சந்தர்ப்பவாத ஏற்பாட்டுக்குள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி கலைத்துவிடப்படுவதாகவே இருந்தது. இந்த இணைப்பின் விளைவாக, எதிர்க்கட்சி ஆசனங்களில் மிகப்பெருங் குழுவின் தலைவர் என்ற முறையில், என்.எம்.பெரேரா பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். இணைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிலிப் குணவரத்தனா, மேலுமொரு அடி வலதுபக்கமாக வைத்து, லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து முழுமையாக பிரிந்ததோடு தனது சொந்தக் கட்சியான புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி [Viplavakari LSSP -VLSSP] அமைத்துக்கொண்டார்.

11-6. ஐக்கியப்படுத்தப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் வேலைத்திட்டம் இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டது. அது இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியும் நான்காம் அகிலமும் கடந்து வந்த தீர்க்கமான வரலாற்று அனுபவங்கள் சம்பந்தமாக எந்த ஆய்வு செய்வதையும் தவிர்ப்பதற்காக வரையப்பட்டபொதுவான நன்கு யாவருமறிந்த விடயங்களின் ஒரு தொகுப்பாக அது இருந்தது. அது ஆசியா அல்லது அனைத்துலகம் இல்லாவிட்டாலும் இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் யுத்தத்துக்குப் பிந்திய அரசியல் அனுபவங்கள் எதையும் பற்றிக் கூட குறிப்பிடவில்லை. சீனப் புரட்சி நடந்து ஒரு ஆண்டுகூட ஆகாதிருந்த போதும், அது பற்றிக்கூட குறிப்படப்படவில்லை. அந்த வேலைத்திட்டம் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தைப் பற்றி தெளிவாக எதையும் கூறவில்லை. முன்னைய ஐந்து ஆண்டுகளுள் தோன்றிய அரசியல் வேறுபாடுகள் பற்றி எதுவும் கலந்துரையாடப்படவில்லை. அந்த வேலைத் திட்டம், கட்சி “சகல வடிவிலுமான பேரினவாதத்தையும் சமரசமற்று எதிர்ப்பதாக” பிரகடனம் செய்த போதிலும், 1947ல் பண்டாரநாயக்கவின் இனவாத அரசியலுக்கு லங்கா சமசமாஜக் கட்சி அடிபணிந்ததைப் பற்றி அது ஆராயவில்லை. அதேபோல், “உண்மையான தேசிய சுதந்திரத்துக்கான” தேவையைப் பற்றி அது குறிப்பிட்ட போதிலும், 1948ல் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை லங்கா சமசமாஜக் கட்சி புறக்கணித்ததைப் பற்றி அதில் ஆராயப்படவில்லை. உண்மையில், இந்தக் “கூட்டிணைவானது” சமசமாஜவாதத்துக்கு, அதாவது இலங்கையில் தீவிரவாதத்தின் தேசிய பாரம்பரியத்துக்கு திரும்புவதற்கு சமமானதாக இருந்தது. இத்தகைய பிரச்சினைகளை கலந்துரையாடத் தவறியமை, புதிய கட்சியினுள்ளான உண்மையான உறவுகளை அம்பலப்படுத்தியது: வலதுசாரித் தட்டுக்களின் தலைமைப் பொறுப்பில் என்.எம். பெரேரா இருந்த அதேவேளை, முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள் அவரை “ட்ரொட்ஸ்கிசத்தால்” அலங்கரித்தனர். ஒரு அரசியல் விளக்கத்தைக் கோரவும் அந்த கொள்கையற்ற ஐக்கியத்தை எதிர்க்கவும் தலையிடுவதற்கு மாறாக, மிஷேல் பப்லோவின் தலைமையிலான அனைத்துலக செயலகம், அதை ஆசீர்வதித்ததோடு லங்கா சமசமாஜக் கட்சியை நான்காம் அகிலத்தின் இலங்கை பகுதியாக ஏற்றுக்கொண்டது.

12. பப்லோவாத சந்தர்ப்பவாதம்

12-1. யுத்தத்துக்குப் பிந்திய முதலாளித்துவ மறு ஸ்திரமாக்கத்தினால் உருவாக்கப்பட்ட அரசியல் அழுத்தங்கள், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டதில் காட்சிக்கு வந்ததுடன் நான்காம் அகிலத்துக்குள் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலின் தலைமையில் தலைநீட்டிய திருத்தல்வாத போக்கில் அதன் தத்துவார்த்த வெளிப்பாட்டைக் கண்டது. ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பண்பைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டை பப்லோ கைவிட்டதுடன் தொடங்கிய பிரச்சினை, மார்க்சிசத்தின் அடிப்படைகள் அனைத்தையும் திருத்தும் வேலையை தழுவிக்கொள்வது வரை சென்றது. அந்தத் திருத்தங்கள், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான போராட்டத்தை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் இயக்கங்களுக்குள் இயங்கும் முதலாளித்துவ முகவர்களுக்குள் நான்காம் அகலத்தின் பகுதிகளை ஒட்டு மொத்தமாக கலைத்து விடும் வேலையைக் கொண்டு பதிலீடு செய்வதாக இருந்தது.

12-2. கிழக்கு ஐரோப்பாவின் இடைத்தடை அரசுகள் (Buffer states) என்பவற்றின் ஸ்ராலினிச ஆட்சிகள் 1947-1948ல் தொழிற்துறையை தேசியமயமாக்கல் மற்றும் அதிகாரத்துவ அரச திட்டமிடலைத் தொடங்குதல் ஆகியவற்றை நோக்கி திடுதிப்பென திரும்பியதைக் கொண்டே நான்காம் அகிலம், கவனமாக ஆழ்ந்து ஆராய்ந்த பின்னர் அவற்றை “உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்” என குணாதிசயப்படுத்தியது. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளைபொருளான சோவியத் ஒன்றியத்தைப் போலன்றி, இந்த அரசுகள் ஆரம்பத்தில் இருந்தே “உருக்குலைந்த வடிவத்திலிருந்தன”. சொத்து உறவுகளிலான மாற்றங்கள், போல்ஷிவிக் வகையிலான ஒரு கட்சியின் தலைமையின் கீழ், பாட்டாளி வர்க்க அதிகாரத்தின் வெகுஜன அங்கங்களில் இருந்து, அதாவது சோவியத்துக்களில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அவை தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன நடவடிக்கையையும் நசுக்கும் ஸ்ராலினிசக் கட்சிகளினால் மேலிருந்து திணிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, நான்காம் அகிலம் விளக்கியது போல்: “உலகின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, இடைத்தடை மண்டலத்தை சோவியத் ஒன்றியத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்கின்ற உணர்வுடன் சோவியத் அதிகாரத்துவத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் அளவை விட, சோவியத் அதிகாரத்துவத்தால் அதிலும் குறிப்பாக இடைத்தடை மண்டலத்தினுள் அதன் நடவடிக்கைகள் ஊடாக உலகத் தொழிலாளர்களின் நனவுக்கு எதிராக கொடுக்கப்பட்ட அடிகளின் எடை அதிகமானதாக இருந்தது.” [21]

12-3. பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது போல்: “உருக்குலைந்த என்ற பதத்தின் பயன்பாடானது, 1917 அக்டோபரில் முதலாளித்துவ அரசை தூக்கிவீசியதற்கும் கிழக்கு ஐரோப்பாவில் 1940களின் பிற்பகுதியில் இடம்பெற்ற கவிழ்ப்புகளுக்கும் இடையிலான தீர்க்கமான வரலாற்று வித்தியாசத்தின் மீது, அதாவது பாட்டாளி வர்க்கத்தின் வெகுஜன அங்கங்களான சோவியத்துகளின் தலைமையில் போல்ஷிவிக் வகையானதொரு கட்சி அமைந்த நிலை இல்லாதிருந்தமையின் மீது, கவனத்தை குவிக்கிறது. தவிரவும், இந்த சொற்பதமானது, பிறப்பிலேயே தோன்றிய உருக்குலைந்த மற்றும் விநோத குணத்தின் முத்திரையை பொருளாதார மற்றும் அரசியல் வட்டத்தின் ஒவ்வொரு துறையிலுமான தன் நடவடிக்கைகளில் தாங்கியிருக்கின்றதும் சந்தேகத்துக்குரிய வரலாற்று தாக்குப்பிடிப்பு சக்தியைக் கொண்டதுமான அரசு ஆட்சிகளின் தற்காலிக வாழ்நிலையை மட்டுமே குறித்துக் காட்டுகின்றது.  ஆகையால், இச்சொற்பதத்தின் பயன்பாடு அந்த அரசுகளை புதிய வரலாற்று அலங்காரச் சொற்களால் அலங்கரிப்பதாகாது. அதற்கெல்லாம் தூரத்தில், உருக்குலைந்த என்ற அதன் அடைமொழி, ஸ்ராலினிசத்தின் வரலாற்று திவால்நிலையை கோடிட்டுக் காட்டுவதோடு, ஒரு உண்மையான மார்க்சிசத் தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டியதன், ஒரு அரசியல் புரட்சியில் ஆளும் அதிகாரத்துவத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியதன், உண்மையான தொழிலாளர் அதிகாரத்தின் அங்கங்களை உருவாக்க வேண்டியதன், மற்றும் அரச அமைப்புக்குள்ளும் பொருளாதாரத்துக்குள்ளும் இன்னமும் அழியாதிருக்கும் பழைய முதலாளித்துவ உறவுகளின் சுவடுகளை அழிக்க வேண்டியதன் அவசியத்தை அவசரமாக சுட்டிக் காட்டுகிறது.[22] எவ்வாறெனினும், பப்லோ 1949 இலேயே, ஒரு தற்காலிகத் தன்மை கொண்ட இடைமருவல்காலத்திற்கான குணாதிசயப்படுத்தலை, ஸ்ராலினிசத்துக்கு வரலாற்றில் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வழங்கக் கூடிய வகையில் “நூற்றாண்டுகள்” நீடிக்கும் “உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்” பற்றிய நீண்டகால முன்னோக்காக மாற்றினார். பனிப்போரின் கட்டுமானத்திற்குள் தகவமைத்துக் கொள்கின்ற விதமாக பப்லோ, முதலாளித்துவத்துக்கு எதிரான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை, “முதலாளித்துவ அரசும் ஸ்ராலினிச உலகும் இன்றியமையாது இணைந்து அமைகின்ற” ஒரு புதிய “புறநிலை யதார்த்தத்தை”க் கொண்டு பதிலீடு செய்தார்.

12-4. இந்த புதிய “யதார்த்தத்தில்”, தொழிலாள வர்க்கத்துக்கும் நான்காம் அகிலத்துக்கும் எந்தவொரு சுயாதீன பாத்திரமும்  கிடையாது. 1951ல் நடந்த மூன்றாவது உலக காங்கிரஸில், தனது தத்துவத்தின் கலைப்புவாத தாக்கங்களை வெளிக்கொணர்ந்த பப்லோ தெரிவித்ததாவது: “இன்னும் மேலும் எங்களை கடந்த காலத்தில் இருந்து வேறுபடுத்துவதும், இன்று எமது இயக்கத்துக்கு சிறப்புப் பண்பை ஏற்படுத்துவதும் மற்றும் எமது எதிர்கால வெற்றிகளுக்கு நிச்சயமான அளவுகோலைக் கொண்டிருப்பதுவும் எதுவெனில், பெரும்பாலும் குழப்பமான, அநேகமாக துரோகத்தனமான, சந்தர்ப்பவாத, மத்தியவாத, அதிகாரத்துவவாத மற்றும் முதலாளித்துவ அல்லது குட்டி முதலாளித்துவ தலைமைகளையும் கூட உள்ளடக்கியதாக இருக்கின்ற, தற்போதைய வெகுஜன இயக்கத்தை புரிந்து கொள்வதற்கும் அதனைப் பாராட்டுவதற்குமான எமது திறன் வளர்கிறது என்பதும், அந்த வெகுஜன இயக்கத்தை இருக்கின்ற இடத்தில் இருந்து உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்துவதற்கான இலக்குடன் அந்த இயக்கத்துக்குள் ஒரு இடத்தை தேடுவதற்கான எமது முயற்சியுமே ஆகும்.”[23]

12-5. லத்தீன் அமெரிக்கா தொடர்பான விடயத்தில், ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு வெகுஜன இயக்கங்களின் தலைமையின் வர்க்கப் பண்பை பொருட்படுத்தாமல், அவற்றுக்குள் ட்ரொட்ஸ்கிச இயக்கங்களைக் கலைத்துவிடுவதற்கு பப்லோ அழைப்பு விடுத்தார். அத்தகைய இயக்கங்களை “பிற்போக்கு, பாசிச அல்லது எங்களுக்குப் பிரயோசனமற்றது என வகைப்படுத்துவது, பழைய முறையிலான ‘டரொட்ஸ்கிச’ முதிர்ச்சியின்மையையும், வெகுஜன இயக்கங்களைப் பற்றி கொள்கைப் பிடிவாதமுடைய, அருவமான மற்றும் புத்திஜீவிகளுக்குரிய வகையில் மதிப்பீடு செய்வதையும் நிரூபிப்பதாகும்... தென் ஆபிரிக்கா, எகிப்து, வட ஆபிரிக்க காலனிகள், மற்றும் அருகாமை கிழக்கில் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவது என்பது, இப்போது தேசியவாத, ஏகாதிபத்திய-விரோத வெகுஜன இயக்கங்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்து அந்த இயக்கங்களுக்குள் ஒன்றிணையும் பாதையில் பயணிப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்,” [24] என அவர் பிரகடனம் செய்தார். இந்த நோக்குநிலை, நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும், மற்றும் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைமைகளில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விடுதலைக்காக போராடுவதையும் கைவிடுவதை பிரதிநிதித்துவம் செய்தது. இந்த வேலைத் திட்டத்தின் தாக்கங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏற்கனவே வெளிப்பட்டுள்ளன. இங்கு பண்டாரநாயக்காவுக்கு தாம் தகவமைத்துக் கொண்டதை நியாயப்படுத்துவதற்காக, பிலிப் குணவர்த்தனாவும் என்.எம். பெரேராவும் பி.எல்.பீ..யின் “கொள்கைப் பிடிப்பான, அருவமான மற்றும் புத்திஜீவிகளுக்குரிய” பழைய ட்ரொட்ஸ்கிசத்துக்கு எதிராக இதேபோன்ற வாதங்களை முன்னெடுத்தனர்.

12-6. 1948ல், பி.எல்.பீ.. இந்திய சோசலிஸ்ட் கட்சியினுள் நுழைவதற்கு எதிராக பப்லோ எச்சரித்தார். ஆயினும், 1952 பெப்பிரவரியில், உலகம் பூராவும் எல்லா நாடுகளிலும் ஒரு விசேட வடிவிலான நுழைவுவாதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்தார். இந்தியாவில் போல், நுழைவுவாதம் இப்போது ஒரு தற்காலிக தந்திரோபாயமாக இருக்கவில்லை. அது ஒரு நீண்டகால முன்நோக்காக மாறியிருந்தது. தற்போதுள்ள தொழிலாளர் அமைப்புக்களின் ஊடாகவே எந்தவொரு எதிர்காலத் தீவிரமயமாக்கமும் இடம்பெறும் என்ற ஊகத்தின் மீது அது நியாயப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த விசேட வடிவிலான நுழைவுவாதத்தின் விளைவு, முன்னாள் பி.எல்.பீ.. தலைவர்களின் விரக்தி மற்றும் நோக்குநிலை பிறழ்வில் ஏற்கனவே வெளிப்பட்டுள்ளது. அவர்கள் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்துக்கான எந்தவொரு போராட்டத்தையும் தடுக்கும் ஒரு அமைப்புக்குள் சிக்கிக்கொண்டிருந்தார்கள். சர்வதேசரீதியாக இந்த சந்தர்ப்பவாத உபாயத்தைப் பிரயோகித்தமையானது நான்காம் அகிலத்தின் மேலும் பல பகுதிகளின் சிதைவில் விளைந்தது.

12-7. புறநிலைவாத வழிமுறையே, பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் தத்துவார்த்த  அடித்தளமாகும். பின்னர் விளக்கப்பட்டது போல்: “புரட்சிகரமான நடைமுறை செயற்பாட்டை விட வியாக்கியானபடுத்துவதும், போராட்டத்தை விட கவனிப்பாய்வும்தான் புறநிலைவாதத்தின் நிலைப்பாடாகும்; அது, என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவதை விட, என்ன நடக்கின்றது என்பதை நியாயப்படுத்துகிறது. இந்த வழிமுறையை அடித்தளமாகக் கொண்டிருக்கக்கூடிய ஒரு முன்னோக்கில் ட்ரொட்ஸ்கிசம், அதிகாரத்தைக் கைப்பற்றவும் வரலாற்றுப் பாதையை மாற்றியமைக்கவும் உறுதிபூண்டுள்ள ஒரு கட்சியின் நடைமுறை செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் தத்துவமாக கண்டுணரப்படாது, மாறாக இறுதியில் நான்காம் அகிலத்திற்கு விரோதமான பாட்டாளி வர்க்கமல்லாத சக்திகளின் தலைமையின் கீழ் சோசலிசம் எட்டப்படுவதான ஒரு வரலாற்று நிகழ்முறைக்குரிய ஒரு பொதுவான  விளக்கமாகவே இருக்கும். நிகழ்வுகளின் பாதையில் ட்ரொட்ஸ்கிசத்துக்கு ஏதாவதொரு நேரடிப் பாத்திரத்திற்கான நற்பெயர் கிட்டக் கூடுமாயின், அது ஸ்ராலினிஸ்டுகளின், நவ-ஸ்ராலினிஸ்டுகளின், அரை-ஸ்ராலினிஸ்டுகளின் மற்றும், நிச்சயமாக, ஏதாவதொரு வகையைச் சேர்ந்த குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளின் நடவடிக்கைகளை நனவின்றி வழிநடத்தும், வெறுமனே ஒரு வகையிலான உணர்வுக்குக் கட்டுப்பட்ட மனோவியல் நிகழ்வாக மட்டுமே இருந்தது.”[25]

12-8. இந்த புறநிலைவாத வழிமுறை, நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை அது நான்காம் அகிலத்தின் பிரிவுகளின் நடவடிக்கைகளுக்கான ஒரு புரட்சிகர வழிகாட்டியாக இருந்ததில் இருந்து, ஏனைய கட்சிகள் மற்றும் தலைமைகளின் ஊடகங்களின் ஊடாக, தன்னை செதுக்கிக் கொள்கின்ற ஒரு தடுக்கவியலாத வரலாற்று நிகழ்முறையின் வெளிப்புற விவரிப்பாக மாற்றியது. நிரந்தரப் புரட்சித் தத்துவமானது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளை கட்டியெழுப்புவதற்கு வழிவகைகளை வழங்குவதற்குப் பதிலாக, முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் தலைமையில் வளர்ச்சியுறும் இயக்கங்களைப் போற்றுவதற்கான ஒரு வழிமுறையாக பப்லோவாதிகளால் மாற்றப்பட்டது.

12-9. 1953 நவம்பர் 16 அன்று, அமெரிக்க சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின்  (American Socialist Workers Party -SWP) தலைவர் ஜேம்ஸ். பீ. கனன், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தை பிரசுரித்ததுடன் பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான அரசியல் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த பகிரங்கக் கடிதம், மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அணிதிரளும் புள்ளியாக இருந்ததோடு பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பகுதிகளின் ஆதரவுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஸ்தாபிப்பதற்கு வழியமைத்தது. அந்தக் கடிதம் ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை சுருங்கக் கூறியது.

1. முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலம், மோசமாகிவரும் பொருளாதார மந்த நிலைகள், உலகப் போர்கள் மற்றும் பாசிசம் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிப்பாடுகளின் மூலம் உலக நாகரீகத்தை ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகின்றது. அணு ஆயுதத் தயாரிப்பு இன்று இந்த அபாயத்தை சாத்தியமானளவு அபாயகரமான வழியில் எடுத்துக்காட்டுகின்றது.

2. திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தைக் கொண்டு முதலாளித்துவத்தை உலக அளவில் மாற்றீடு செய்வதன் மூலமும் அவ்வாறாய் முதலாளித்துவத்தினால் அதன் ஆரம்ப நாட்களில் திறந்து விடப்பட்ட வளர்ச்சிச் சுருளை தொடர்ந்து  செய்வதன் மூலமும் மட்டுமே பாதாளத்தை நோக்கிய சரிவை தடுக்க முடியும்,

3. இத்தகைய பணி சமூகத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பாதையை நாடுவதற்கு, சமூக சக்திகளிடையேயான உலக உறவு இன்று போல் வேறெப்போதும் சாதகமானதாக இருந்திருக்கவில்லை என்றபோதிலும், தொழிலாள வர்க்கமானது ஒரு தலைமை நெருக்கடிக்கு முகம் கொடுத்து நிற்கின்றது.

4. இந்த உலக-வரலாற்று குறிக்கோளை முன்னெடுக்க தன்னைத் தயார்படுத்திக்கொள்வதற்கு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம், லெனின் உருவாக்கிய பாணியிலான ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியை கட்டியமைக்கவேண்டும்; அதாவது, அக்கட்சி ஜனநாயகத்தையும் மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் ஒரு போர்க்குணம் மிக்க கட்சியாக இருக்கும். முடிவுகளை எடுப்பதில் ஜனநாயகமும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும் இருக்கும். உறுப்பினர்களால் கட்டுப்படுத்தக்கூடிய தலைமையையும், தாக்குதலின் கீழும் ஒழுங்கமுறையான வகையில் முன்னெடுத்துச் செல்லும் திறம்படைத்த உறுப்பினர்களையும் கொண்ட கட்சியாக அது இருக்கும்.

5. 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் கௌரவத்தைச் சுரண்டி தொழிலாளர்களை ஈர்த்து, பின்னர் அத்தொழிலாளர்களது நம்பிக்கையைக் காட்டிக்கொடுத்து, அவர்களை சமூக ஜனநாயகத்தின் பிடிக்குள்ளோ, உணர்ச்சியின்மையின் பிடிக்குள்ளோ அல்லது மீண்டும் முதலாளித்துவத்திலான பிரமைகளுக்குள்ளோ தூக்கிவீசுகின்ற ஸ்ராலினிசம் தான் இதற்கான பிரதான தடைக்கல்லாக இருக்கிறது.  பாசிச அல்லது முடியாட்சி சக்திகள் திண்ணப்படுகின்ற வடிவத்திலும், முதலாளித்துவத்தால் உரம்போடப்பட்டு தயாரிப்பு செய்யப்படுகின்ற புதிய போர்கள் வெடித்ததின் வடிவத்திலும் இந்தக் காட்டிக் கொடுப்புகளுக்கான அபராதத் தொகை உழைக்கும் மக்களாலேயே செலுத்தப்பட்டு வந்திருக்கின்றது.  எனவேதான், நான்காம் அகிலம், சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.

6. நான்காம் அகிலத்தின் பல பிரிவுகளும், அதன் வேலைத்திட்டத்துக்கு ஆதரவான கட்சிகளும் அல்லது குழுக்களும் நெகிழ்வான தந்திரோபாயங்களின் தேவைகளுக்கு முகம் கொடுப்பதானது, அதே அளவுக்கு ஸ்ராலினிசத்துக்கு சரணடையாமல் ஏகாதிபத்தியத்துக்கும் (தேசியவாத வடிவாக்கங்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவம் போன்றவை) அதன் சகல குட்டி-முதலாளித்துவ முகமைகளுக்கும் எதிராக எவ்வாறு போராடுவது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருப்பதை அனைத்துக்கும் மேலாக அவசரமானதாக்குகிறது. மறுதிசையில், ஏகாதிபத்தியத்துக்குச் சரணடையாமல் (இறுதி ஆய்வுகளில் ஏகாதிபத்தியத்தின் ஒரு குட்டி முதலாளித்துவ முகமையான) ஸ்ராலினிசத்துக்கு எதிராகப் போராடுவது எப்படி என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். [26]

12-10. இந்த பகிரங்கக் கடிதம், 1953ல் கிழக்கு ஜேர்மனியில் நடந்த வேலைநிறுத்த இயக்கத்திலும் பிரான்சில் நடந்த பொதுவேலைநிறுத்தத்திலும் ஸ்ராலினிசத்துக்கு ஒரு அரசியல் மூடுதிரையை வழங்குவதில் பப்லோ வகித்த பாத்திரத்தை திறனாய்வு செய்தது. பப்லோவின் கைகளில் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைவிதியை ஆராய்ந்த அக்கடிதம் தெரிவித்ததாவது: நான்காம் அகிலத்தின் சீனப் பிரிவின் அரசியல் நிலைப்பாடு பற்றி பப்லோ அவதூறாக திரிபுபடுத்தியமை குறிப்பாக கோபமூட்டுகிறது. அவர்களை ‘பிரிவினைவாதிகளாகவும்’ ‘புரட்சியினால் அகதிகளாக்கப்பட்டவர்களாகவும்’ பப்லோ குழு சித்தரித்தது... ஸ்ராலினிசம் தொடர்பான பப்லோவின் சமரசப் போக்கு, எமது சீனத் தோழர்களின் உறுதியான கொள்கைப்பிடிப்பான நிலைப்பாட்டின் மீது சாம்பலை பூசிய அதேவேளை, மாவோவின் ஆட்சியை ரோஜா நிறத்தில் அழகுபடுத்துவதற்கு அவரைத் தடுத்துநிறுத்தவியலாமல் வழிநடத்தியது.[27]

12-11. மாவோயிச ஆட்சியின் பரிணாமத்தை மிகவும் கவனமாக அவதானித்த பின்னரே, அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சீனாவை ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசு எனக் குறிப்பிட்டன. 1955 தேசிய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தில், சீனப் புரட்சி சம்பந்தமாக ஒரு விரிவான பகுப்பாய்வை சோசலிச தொழிலாளர் கட்சி வழங்கியது. உலக அரசியலில் சீனப் புரட்சியின் தாக்கம் மற்றும் சீனாவுக்குள் வர்க்க உறவுகளின் மாற்றங்கள் அதேபோல் ஸ்ராலினிச சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கொள்கைகளிலான மாற்றங்களைப் பற்றி அதில் பகுப்பாய்வு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்முறையை சாராம்சப்படுத்திய அந்த ஆவணம் முடிவுசெய்ததாவது: 1949 புரட்சியின் பின்னர் “புறநிலை இயக்கவியல்களும், ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கு எதிரான போராட்டத்தின் உள்ளார்ந்த தர்க்கமும் முதலாளித்துவத்துடன் முறித்துக்கொள்வதற்கும், தீர்மானகரமான உற்பத்தி சாதனங்களை தேசியமயமாக்கவும், வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது ஏகபோகத்தை கொண்டுவரவும், திட்டமிடலை மேற்கொள்ளவும், இந்த முறையில் ஒரு தொழிலாளர்’ அரசின் அடித்தளங்களாக அமைகின்ற உற்பத்தி உறவுகளையும் ஸ்தாபனங்களையும் அறிமுகம் செய்வதற்கான பாதையை உருவாக்கித் தரவும் அதிகாரத்துவத்தை நிர்ப்பந்தித்தன. ஸ்ராலினிச வடிவத்தில் என்றாலும் மூன்றாம் சீனப் புரட்சியில் நேர்ந்த ஸ்ராலினிச உருக்குலைவின் காரணத்தினாலேயே இன்று சீனா இத்தகைய ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாக இருக்கிறது.”[28]

12-12. சீன ஆட்சியின் அடுத்துவந்த பரிணாமம், அதாவது 1980களில் முதலாளித்துவ சொத்து உறவுகளை நாடியதோடு நாட்டை உலகின் முன்னணி மலிவு உழைப்புக் களமாக மாற்றியமை, அனைத்துலகக் குழுவின் அடிப்படை நிலைப்பாட்டை நிரூபித்தது. காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலில் ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தது போல, தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான அரசியல் புரட்சியொன்றின் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை தூக்கியெறியாவிட்டால், “தனிநாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத முன்னோக்கினால் வழிநடத்தப்படும் மாவோவாதிகள், தவிர்க்க முடியாமால் முதலாளித்துவத்தை மீள் ஸ்தாபிதம் செய்யும் முகவர்களாக ஆவார்கள் என்று பப்லோவாதிகளுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு  வலியுறுத்தியது. அதே சமயம், சீனப் புரட்சியின் பிரமாண்டமான அலையையும் அதன் பின்னர் நடந்த தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கல் மற்றும் பொருளாதார திட்டமிடலை நிறுவுதல் போன்றவற்றையும் உதாசீனம் செய்து, அதன் மூலம், உருக்குலைந்த தொழிலாளர் அரசுக்கு எதிராக ஏகாதிபத்தியத்தின் பக்கம் வெளிப்படையாகவோ அல்லது மௌனமாகவோ சாய்ந்திருந்த பல்வேறு “அரச முதலாளித்துவ” போக்குகளையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு எதிர்த்தது.

 

[21] [நாம் காக்கும் மரபுரிமைகள் (The Heritage We Defend), wsws.org, தமிழ், நூலகம்]

[22] அதே நூல்

[23] அதே நூல்

[24] அதே நூல்

[25] அதே நூல்

[26] திருத்தல்வாதத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கிஸம் (In Trotskyism Versus Revisionism, Volume One (London: New Park, 1974), pp. 299-300.)

[27] அதே நூல்

[28] சீனப் புரட்சியும் அதன் பின்னரும் (The Third Chinese Revolution and its aftermath, Education for Socialists, Socialist Workers Party National Education Department, 1976, p. 7.)