சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part  12

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 12

By the the Socialist Equality Party (Sri Lanka)
7 April 2012

Use this version to print | Send feedback

31. சோசலிச சமத்துவக் கட்சி

31-1 1996ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றியதானது தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புகளின் உருமாற்றங்களைப் பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எடுத்த முடிவுகளின் விளைவாகும். யுத்தத்துக்குப் பிந்திய ஸ்திரமாக்கல் மற்றும் பொருளாதார விரிவாக்க நிலைமைகளின் கீழ், பல்வேறு தொழிற்சங்க, சமூக ஜனநாயகவாத மற்றும் ஸ்ராலினிச அமைப்புக்களால், தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால வரலாற்று நலன்கள் காட்டிக்கொடுக்கப்பட்ட அதேவேளை, தேசியப் பொருளாதார ஒழுங்கமைப்பு என்ற கட்டமைப்பினுள் தொழிலாள வர்க்கத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட உடனடி வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்தது. இந்த நிலைமையில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச அமைப்புகள், சோசலிச எண்ணம் கொண்ட தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களின் பரந்த தட்டினரின் அரசியல் விசுவாசத்தை பெற்றிருக்கின்றன என்பதை புரிந்துகொண்ட அனைத்துலக் குழுவின் பிரிவுகள், கழகங்கள் என்ற வடிவத்தை எடுத்திருந்தன. லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து பிரிந்து, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலான ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளது அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பாதையில் செல்ல வேண்டும் என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த கோரிக்கை, இந்த கட்சிகளை அம்பலப்படுத்துவதோடு தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய தட்டினரை வெற்றிகொள்வதை இலக்காகக் கொண்டிருந்தது. ஆயினும், உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது தேசிய சீர்திருத்தவாதத்தின் எந்தவொரு புறநிலை அடித்தளத்தையும் தகர்த்தெறிந்திருந்ததோடு பழைய அமைப்புகளை, 'சர்வதேசப் போட்டித்திறன்' என்னும் முடிவில்லாத ஓட்டத்தில் தொழில்கள், தொழில் நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை வெட்டித் தள்ளுவதில் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நேரடியான முகவர்களாக மாற்றியிருந்தது. இந்தக் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட அல்லது அதன் பேரில் பேசிவரும் அமைப்புகளாக இனிமேலும் எந்தவகையிலும் கருத முடியாது.

31-2. லங்கா சமசமாஜக் கட்சியும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும், முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த சந்திரிகா குமாரதுங்காவின் கீழ், மூன்றாவது ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் 1994ல் நுழைந்து கொண்டன. இந்த இரண்டு கட்சிகளும், 1970களில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தில் பங்கேற்றதினால் தொழிலாள வர்க்கத்தில் உருவாகியிருந்த ஆழமான குரோதத்தில் இருந்தே ஒருபோதும் மீண்டிருக்கவில்லை. பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்ட போது லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றுக் கூடுகளாகவே இருந்தன. சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுப்பது ஒரு புறம் இருக்க, இந்தக் கட்சிகளில் எதுவும் அடிப்படை சமூக சீர்திருத்தங்களுக்காக போராடும் என்று கூட தொழிலாளர்கள் எதிர்பார்க்கவில்லை. குமாரதுங்கா யுத்தத்தை உக்கிரமாக்கியதோடு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலை முன்னெடுத்த போது, அதற்கு லங்கா சமசமாஜக் கட்சியும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் வழங்கிய ஆதரவினால் மிச்சமிருந்த போலி நம்பிக்கைகளும் துரிதமாகக் கலைந்து போயின. இதனையடுத்து, அவை சுதந்திரமான கட்சிகளாக இருப்பதை விட, ஏறத்தாழ ஸ்ரீ.ல.சு.க.யின் கன்னைகளாகவே செயல்பட்டன.  

31-3. நவ சமசமாஜக் கட்சி இதன் தலைவர்கள், முதல் இரண்டு கூட்டணி அரசாங்கங்களையும் ஒருபோதும் எதிர்த்திருக்கவில்லை - குமாரதுங்காவின் தேர்வினை ஆதரித்தது. வாசுதேவ நாணயக்காராவின் தலைமையிலான ஒரு கன்னை, நவ சமசமாஜக் கட்சியின் வர்க்க ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் இருந்து தர்க்கரீதியான முடிவை எடுத்து, பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொண்டது. நவ சமசமாஜக் கட்சியும் அதன் துணை விளைவான ஐக்கிய சோசலிசக் கட்சியும் (USP), கொழும்பு அரசியல் ஆளும்வர்க்கத்தை சுற்றி வரும் கோள்களாக இருந்து வந்ததோடு மேலும் மேலும் அவலட்சணமான, தொடர்ச்சியான, அரசியல் பந்தங்களில் இணைந்துகொண்டன. 1990களின் நடுப்பகுதியில், பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வளர்ச்சி கண்ட நிலையில், சற்றே ஒரு தசாப்தத்திற்கு முன்னர் துப்பாக்கிதாரிகள் மூலம் தனது உறுப்பினர்களையே சுட்டுக் கொன்ற மக்கள் விடுதலை முன்னணியுடன் நவ சமசமாஜக் கட்சி  ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டது. குமாரதுங்காவினால் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி தொழிற்சங்கங்களில் ஒரு இருப்பை ஸ்தாபிப்பதற்கான ஒரு படிக்கல்லாக நவ சமசமாஜக் கட்சியை பயன்படுத்திக் கொண்டு, பின்னர் கூட்டணியிலிருந்து உடைத்துக்கொண்டது. தமது பல்வேறு மாற்றங்கள் மற்றும் திருப்பங்களின் சமயத்திலும், நவ சமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் (USP) ஒரு விடயத்தில் ஒரே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தன: அது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தின் மீதான அவற்றின் பகைமை உணர்விலாகும்.

31-4. இலங்கையில் தொழிற்சங்கங்களின் பரிணாமம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் தொழிற்சங்க அமைப்புகளுக்கு சமாந்தரமானவையாகும். பூகோளமயமான உற்பத்தியின் தாக்கத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான உரிமைகளைப் பாதுகாப்பதைக் கூடக் கைவிட்டிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், நிர்வாகத்தின் நேரடி முகவர்களாக உருமாறியிருக்கின்றன. தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புகளை அடுத்து, குறிப்பாக 1980 பொது வேலைநிறுத்தத்தின் பின்னர், தொழிற்சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை பாதாளத்திற்கு சரிந்தது. ஆயினும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள அவற்றின் சமதரப்பினரைப் போலன்றி, இலங்கையில் இருந்த தொழிற்சங்கங்கள், பெரும்பகுதி வருவாய்க்கான மாற்று வழிகள் இல்லாமல் இருந்ததால், துரிதமாக சிதைவுற்றன. தொழிற்சங்கங்கள் கட்சியுடனான இணைப்புகளைக் கொண்டிருந்ததனால், பழைய கட்சித் தலைமைகள் மீதான வெறுப்பு அவற்றின் பாதாள வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்தின.

31-5. தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் - முதல் எடுத்துக்காட்டாய் வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) – ஒரு விசேட தன்மையை கொண்டிருக்கிறது. இ.தொ.கா. ஒரு தொழிற்சங்கம் என்பதை விட, ஒரு தந்தைவழி சேவைக்குணமுள்ள சமுதாயமாகவே எப்போதும் செயற்பட்டது. வீட்டு வசதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாடசாலை நடவடிக்கைகள் முதல் திருமணங்கள், மரணச் சடங்குகள் மற்றும் சமயக் கொண்டாட்டங்கள் வரை, தோட்டத்துறை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், நிர்வாகத்தின் ஆதரவுடன், அது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததன் காரணமாக, கணிசமான உறுப்பினர் எண்ணிக்கையையும் ஆதாரவளங்களையும் பெற்றிருந்தது. தனது உறுப்பினர்களை ஒரு அடிமை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள், பாராளுமன்றத்துக்குள் நுழைந்துகொண்டதோடு அமைச்சர் பதவிகளுக்கும் தனியந்தஸ்துகளுக்கும் பேரம் பேசினர். மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) போன்ற பல்வேறு மாற்று தொழிற்சங்கங்களும் வேறுவழியில் இயங்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றினை ஒடுக்குவதற்கு ஒன்றுபட்டு செயற்படுகின்ற இந்த அமைப்புகளில் எதுவும், தொழிலாளர்கள் இடையே எந்தவொரு கணிசமான சாதகமான ஆதரவையும் பெற்றிருக்கவில்லை.

31-6 சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை, தொழிலாள வர்க்கத்தின் புதிய இயக்கங்களைத் தயாரிப்பதில் இன்றியமையாத ஆரம்பப் படி ஆகும். இத்தகைய இயக்கங்கள், பழைய அமைப்புகளின் ஊடாக தோன்றப் போவதில்லை. மாறாக, அவற்றுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியிலேயே தோன்றும் அது சோசலிச சமத்துவக் கட்சியினால் அரசியல் ரீதியில் தயார் செய்யப்பட்டு திட்டமிட்டு வழிநடத்தப்படும் கிளர்ச்சியாகும். சோசலிசத்தின் இன்றியமையாத குறிக்கோளாய் சமூக சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதில் - பல தசாப்தங்களாக சோசலிசம் என்ற பதம் சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாதத்தினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இக்குறிக்கோள் மங்கச் செய்யப்பட்டிருந்தது -  கவனத்தை குவிமையப்படுத்துவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே, சோசலிச சமத்துவக் கட்சி என்ற புதிய பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1996 முன்னோக்கு ஆவணம், ''தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அனைத்து பழைய கட்சிகள் மற்றும் அதிகாரத்துவங்களுக்கும் இடையிலான உறவில் மாற்றமேற்பட்டிருப்பதை அங்கீகரிப்பதானது, எதிர்வரவிருக்கும் வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்களுக்கான தலைமையை அனைத்துலகக் குழுவின் பகுதிகளை எடுத்துக்கொள்ளக் கோருகிறது'', என்ற முடிவுக்கு வந்தது.

32. உலக சோசலிச வலைத் தளம்

32-1. 1998ல் உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டமை, அனைத்துலகக் குழுவினதும் உலகத் தொழிலாள வர்க்கத்தினதும் அபிவிருத்தியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையைக் குறித்தது. கணினித் தொழில்நுட்பத்திலான புரட்சிகர அபிவிருத்திகளில் அனுகூலத்தை எடுத்துக்கொண்டு, உலக சோசலிச வலைத் தளத்தை பிரசுரிப்பதற்கு நாளாந்தம் தனது பகுதிகளின் அரசியல் வேலைகளை ஒருங்கிணைப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெற்ற திறன், தொழிலாளர் புரட்சிக் கட்சி உடனான 1985-86 பிளவுக்குப் பின்னர் சாதிக்கப்பட்டிருந்த வேலைத்திட்ட தெளிவு மற்றும் ஐக்கியத்தில் இருந்து கிடைத்ததாகும். உலக சோசலிச வலைத் தளம், அனைத்துலகக் குழு அதன் வாசகர் வட்டத்தை பெருமளவுக்கு விரிவுபடுத்திக்கொள்வதற்கு அனுமதித்தது மட்டுமன்றி, அதைச் சூழ, சர்வதேச தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கு ஒரு நனவான அரசியல் சக்தியாக ஒன்றுதிரள்வதற்கும் ஒரு புதிய அடித்தளத்தையும் வழங்கியுள்ளது.

32-2. உலக சோசலிச வலைத் தளமானது வெறுமனே ஒரு தொழில்நுட்பரீதியான அல்லது அமைப்புரீதியான முன்முயற்சி அன்று, மாறாக அடிப்படையான அரசியல் கருத்துருக்களில் அது வேரூன்றியிருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 18வது நிறைபேரவையில் (Plenum), டேவிட் நோர்த் இந்த அடித்தளங்களை விவரித்தார்: “(1) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மூலோபாயம் மற்றும் தந்திரோபாய ஒழுங்கமைப்பின் அடிப்படையாக, சர்வதேசியவாதத்தின் முதன்மையை பற்றிய அனைத்துலகக் குழுவின் வலியுறுத்தல். (2) பிற்போக்கு தொழிலாளர் அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது செலுத்திய ஆதிக்கத்துக்கு எதிராக அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தின் சமரசமற்ற பண்பு. (3) தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய சர்வதேச புரட்சிகர இயக்கத்தின் இன்றியமையாத புத்திஜீவித்தன, இன்னும் சொன்னால், “தூய முதற்கோளாக ஒரு உண்மையான சோசலிச அரசியல் கலாச்சாரத்தை மறுமலர்ச்சி செய்வதற்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம். இது தான் சோசலிசப் புரட்சிக்கான அத்தியாவசியமான புத்திஜீவித்தன சாரமும் முன்நிபந்தனையும் ஆகும். (4) முதலாளித்துவ நெருக்கடியின் அபிவிருத்தி, வர்க்கப் போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சி தொடர்பான விடயத்தில், தன்னியல்புவாதம் (spontaneism) மற்றும் அரசியல் விதிவசவாதத்துக்கு (political fatalism) எதிரான போராட்டம்''.[69]

32-3. உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீடானது செய்தித்தாள்களை தயாரித்து விநியோகிப்பதில் குவிமையப்படுத்தப்பட்ட கட்சி வேலையின் முந்தைய வடிவங்களில் இருந்து கணிசமாக வேறுபடுவதாகும். உலக சோசலிச வலைத் தளம் மூலம் மிகப்பெரும் சர்வதேச வாசகர் வட்டத்தை முறையாக சென்றடைய முடிகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஒப்பீட்டளவில் செய்தித்தாள்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்து அந்தளவிலான வாசகர் மட்டத்தை எட்டுவது சாத்தியமற்றதாகவே இருந்தது. உலக சோசலிச வலைத் தளம் ஊடான நாளாந்த வெளியீடுகள், அனைத்துலகக் குழுவின் சகல பகுதிகளதும் வேலையை முண்கண்டிராதளவு ஒருங்கிணைத்ததோடு, ஒரு புதிய புரட்சிகர தொழிலாள வர்க்கத் தாக்குதலை அரசியல் ரீதியில் தயார் செய்து வழிநடத்துவதற்குத் தேவையான மார்க்சிச அரசியல் மற்றும் தத்துவார்த்த பகுப்பாய்வின் மீது அவர்களின் வேலையை ஒருமுகப்படுத்தியது. இலங்கை விடயத்தில், உலக சோசலிச வலைத் தளம் மீதான கூட்டுழைப்பு, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி பல ஆண்டுகளாக முகங்கொடுத்த ஒப்பீட்டளவிலான தனிமையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

32-4. 1998ல் கட்சியின் வேலைத்திட்டத்திற்காக பிரச்சாரம் செய்ததற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த கட்சியின் உறுப்பினர்கள் நால்வரை விடுதலை செய்வதற்கு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் முன்னெடுத்த பரவலான பிரச்சாரத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் போராட்டத்தின் ஒரு சாதனமாக உலக சோசலிச வலைத் தளத்தின் தாக்கம் தீர்க்கமாக உறுதிசெய்யப்பட்டது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் உட்பட, பரந்த சர்வதேச பிரச்சாரத்தின் தாக்கத்தை எதிர்கொண்ட விடுதலைப் புலிகள், இறுதியில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை தீங்கின்றி விடுதலை செய்தனர்

33.  2000 ஆவது ஆண்டின் இலங்கை நெருக்கடி

33-1. புத்தாயிரமாண்டு பிறந்த போது, 2000 ஏப்ரலில் ஆனையிறவு விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்தது தொடங்கி தொடர்ச்சியான இராணுவப் படுதோல்விகளால் இலங்கை அரசாங்கம் முற்றுமுதலான குழப்பத்தில் இருந்தது. ''1948ல் இருந்து கொழும்பு ஆட்சி எதிர்கொண்ட மிகக் கடுமையான நெருக்கடி'' என்று அவரே வருணித்த நிலைமையின் மத்தியில், ஜனாதிபதி குமாரதுங்கா அரசியல் ஆதரவுக்கு ஏங்கிக்கொண்டிருந்தார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உத்தியோகபூர்வ கட்சி அந்தஸ்து மறுக்கப்பட்டு வந்திருந்த நிலையில், திடீரென சோசலிச சமத்துவக் கட்சிக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தின் பின்னர், அரசியல் நெருக்கடியைப் பற்றி கலந்துரையாடுவதற்கான அனைத்துக் கட்சி மாநாடு ஒன்றில் பங்குகொள்ளுமாறு ஜனாதிபதியின் அழைப்பு ஒன்று சோசலிச சமத்துவக் கட்சிக்கு கிடைத்தது. அந்த அழைப்பை நிராகரித்து விஜே டயஸ் விடுத்த அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தைகள் ''அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ள முடிவுகளுக்கு முத்திரை குத்துவதாகவும், அதன் கொள்கைகளுக்கு நம்பகத்தன்மையை வழங்குவதாகவும், மற்றும் தீவு முழுவதிலும் வாழும் சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களுக்கு அழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருந்த ஒரு போரைத் தொடர்வதற்கு ஆதரவைப் பெறுவதற்குமானதாகவுமே'' காணப்படுகின்றது என கண்டனம் செய்தார்.

33-2. 2000 ஜூனில் நடந்த உலக சோசலிச வலைத் தள மற்றும் அனைத்துலகக் குழுவின் அமர்வில், குமாரதுங்காவின் கடிதத்தின் முக்கியத்துவமும் அனைத்துலகக் குழுவின் சகல பகுதிகளுக்குமான அரசியல் படிப்பினைகளும் மிகவிரிவாக கலந்துரையாடப்பட்டன. டேவிட் நோர்த் தனது ஆரம்ப அறிக்கையில் விளக்கியதாவது: ''நமது இயக்கத்தின் ஒரு பகுதி, தேசிய அரசாங்கத்துடனான அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கான ஒரு அழைப்பைப் பெற்றிருக்கிறது என்பதை அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக நாம் காணவேண்டும். இது கௌரவப்படுத்தப்பட்டதாக உணர்வதற்கான விடயம் அல்ல - நாம் நிச்சயமாக அப்படி நினைக்கவில்லை. மாறாக நாம் சில காலமாகவே கூறி வரும் ஒரு விடயத்திற்கு ஒரு முக்கியமான ஆதாரமாக ஆகியிருக்கிறது: குறிப்பிட்ட கட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் உறவுகள் ஆதிக்கம் செலுத்திய மற்றும் எதுவும் மாறாததாகவும் ஏறத்தாழ நகர்த்த முடியாததாகவும் காணப்பட்ட நடப்பில் உள்ள மற்றும் நெடுங்காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த அரசியல் உறவுகளின் தோற்றத்துக்கு கீழாக, மாபெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. மேற்பரப்புக்குக் கீழாக வர்க்க உறவுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தில் பாரியளவிலான மாற்றங்களாலும் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார இடைத்தொடர்புகளின்  வடிவங்களில் மாற்றங்களாலும் அதாவது, உற்பத்தி வழிமுறை மற்றும் உற்பத்தி உறவுகளிலான ஆழமான மாற்றங்களாலும் தீவிரமாக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார அடித்தட்டுகளின் நகர்வுகள், ஒட்டுமொத்த அரசியல் மேற்கட்டுமானத்திலும் பிரமாண்டமான மாற்றங்களை கட்டியெழுப்பிக்கொண்டிருப்பதோடு திடீரென்ற, தீவிரமான மற்றும் அழிவுகரமான அரசியல் உருமாற்றங்களுக்கான வழியைத் தயார் செய்துகொண்டிருக்கின்றன''.

33-3. சுயதிருப்தி அல்லது அரசியல் செயலின்மையை நோக்கிய எந்தவொரு போக்குக்கும் எதிராக இந்த அமர்வு எச்சரிக்கை விடுத்தது. முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு புதிய ஆதரவுத் தளத்தை அனைத்துலகக் குழுவின் பகுதிகளின் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய முயற்சிகள் போலவே, அரச அடக்குமுறை பயன்படுத்தப்படுவது உள்ளடங்கிய, திடீர் அரசியல் மாற்றங்களுக்கும் அனைத்துலகக் குழு தயாராக இருக்க வேண்டும். கட்சியை தயார்ப்படுத்தவும் மற்றும் அது தயாரின்மைக்குள் சிக்கிக் கொள்ளாதிருப்பதை உறுதிப்படுத்தவும் தேவையான நிலையான அரசியல் கோட்பாட்டு வேலைகள் இங்கு வலியறுத்தப்பட்டுள்ளன. அரசியல் பிரச்சினைகள் சம்பந்தமாக இடைவிடாது செயலாற்றுவதன் மூலம், கட்சி தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் முன்னணிப் படையின் மீதும் முதலாளித்துவ சமுதாயத்தால் தன்னிச்சையாக உருவாக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிர்நடவடிக்கை எடுப்பதுடன், அது குட்டி முதலாளித்துவ மற்றும் காட்சிவாத முறையில் விடயங்களில் இறங்காது என்பதையும் உறுதிசெய்கிறது. தொழிலாள வர்க்க மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் புரட்சிகர சோசலிச இயக்கத்தின் அபிவிருத்திக்கு இன்றியமையாத அங்கமாக, அனைத்துலகக் குழுவின் பகுதிகளின் பாத்திரத்தை சிறப்படையச் செய்வதும் இதில் அடங்கும்.

34. போரும் இராணுவவாதமும்

34-1 பனிப்போர் கால பூகோள அரசியல் கட்டமைப்பின் முடிவு, ஏகாதிபத்திய போட்டிகள் தீவிரமடைவதற்கும் இராணுவவாதம் வெடிப்பதற்கும் வழிவகுத்தது. எஞ்சியிருக்கும் ஒரே ''வல்லரசாக'' அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது எஞ்சியிருக்கும் இராணுவ வலிமையை மூர்க்கமாகப் பயன்படுத்துவதன் ஊடாக தனது பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு முனைந்தது. 1990ல் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததை சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, அமெரிக்கா எரிசக்தி வளம் மிகுந்த மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு நீண்டகாலமாகக் கொண்டிருந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. 1990-91 வளைகுடாப் போரை, தனது சொந்த எதிர்கால கொள்ளையடிக்கும் இலட்சியங்களை நியாயப்படுத்துவதற்கான வழியாக ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும், அதேபோல் சோவியத் மற்றும் சீனாவின் ஆட்சிகளும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் அதிகாரத்துவங்களும் ஆதரித்தன.  ''ஏகாதிபத்தியப் போரையும் காலனியாக்கத்தையும் எதிர்'' என்ற தலைப்பிலான தனது 1991 வேலைத்திட்ட அறிக்கையில், நவ காலனித்துவத்தின் ஒரு புதிய காலகட்டம் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற முடிவை அனைத்துலகக் குழு எடுத்தது. ''இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற ஏறத்தாழ ஈராக்கைத் துண்டாடும் நடவடிக்கையானது, ஏகாதிபத்தியவாதிகளால் உலகம் புதிதாக மறு பங்கீடு செய்யப்படுவதன் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. ஏகாதிபத்தியத்துக்கு வக்காலத்து வாங்கும் சந்தர்ப்பவாதிகளால் கடந்து போய் விட்ட சகாப்தத்திற்கு சொந்தமானவை என்று கூறப்பட்ட நாடுகளைக் கைப்பற்றி இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, மீண்டும் அன்றாட நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[70]

34-2. முதலாவது வளைகுடாப் போர், ஐக்கிய நாடுகள் சபையின் பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, 1999ல் சேர்பியாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தலையீட்டுக்கு அத்தகைய போலிமறைப்பு இருக்கவில்லை. பால்கன்களில் நேட்டோவின் போருக்கு கூறப்பட்ட கொசோவோ மக்களை இனப்படுகொலை செய்யப்படுவதை தடுப்பது என்ற சாக்குப் போக்கு, மேலதிக நவ-காலனித்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நியாயப்படுத்துவதாகவே ஒரு மனிதாபிமான போலிச்சாக்காக பொதுமைப்படுத்தப்பட்டது. உண்மையில், பால்கன் யுத்தமானது சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவைத் தொடர்ந்து, குறிப்பாக புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட, வளங்கள் நிறைந்த மத்திய ஆசியாவின் குடியரசுகளில் திறந்துவிடப்படும் வாய்ப்புகளை சுரண்டுவதற்கான பரந்த அமெரிக்க மூலோபாயத்தின் பகுதியாகும். மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை கைப்பற்றுவதற்கான அமெரிக்க குறிக்கோள்களை முன்நகர்த்துகையில், 2001 செப்டம்பர் 11 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை பற்றிக் கொண்ட புஷ் நிர்வாகம், அதனை 2001ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கவும் 2003ல் ஈராக்கை ஆக்கிரமிப்பதற்குமான நியாய ஆதாரமாக ஆக்கியது.முன்கூட்டியே யுத்தம் செய்தல் என்ற புஷ்ஷின் புதிய கோட்பாடு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாஜி தலைவர்கள் மீதான விசாரணைக்கு காரணமாக இருந்த - ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை முன்னெடுத்த - அடிப்படைக் குற்றத்துடன் ஒப்பிடக்கூடியதாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், பிரான்ஸ் தலைமையில் ஈராக் போருக்கு காட்டப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்கு, மத்திய கிழக்கில் ஏனைய சக்திகள் நீண்டகாலமாக பாதுகாத்து வந்த நலன்களில் அமெரிக்கா குறுக்கே நுழைக்கிறது என்ற அச்சம் மட்டுமே அடிப்படையாக இருந்தது. ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக சர்வதேசரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட பரந்த வெகுஜனப் போராட்டங்கள் முன்னெப்போதுமில்லா அளவு எழுச்சி கண்டதானது, போர் எதிர்ப்பு இயக்கத்தின் புறநிலையான, புரட்சிகர சாத்தியத்தை கோடிட்டுக் காட்டியதோடு, அதன் அரசியல் பலவீனத்தையும், அதாவது அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது .நா. ஊடாக யுத்தத்தை நிறுத்திவிட முடியும் என்று முழு போலி-தீவிரவாத அமைப்புக்களால் உருவாக்கிவிடப்பட்ட அழிவுகரமான மாயையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த ஆர்ப்பாட்டங்களின் தோல்வியானது, இலாப அமைப்புமுறை மற்றும் உலகம் முதலாளித்துவ தேசிய அரசுகளாக காலத்திற்கொவ்வாத முறையில் பிரிக்கப்பட்டுள்ளமை போன்ற அடித்தளமான காரணிகளை தூக்கி வீசுவதற்கு, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே யுத்தம் தடுக்கப்பட முடியும் என்ற மார்க்சிசத்தின் அடிப்படைப் படிப்பினையை கோடிட்டுக் காட்டியது.

34-3. கடந்த இரண்டு தசாப்தங்களிலான அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு, உலகம் முழுவதையும், குறிப்பாக தெற்கு ஆசியாவை ஆழமாக ஆட்டங்காணச் செய்யுமளவு பாதித்துள்ளது. பாகிஸ்தானும் இந்தியாவும் தனது எதிரிக்கு எதிராக பேரினவாத உணர்வுகளை கிளறி விடுவதன் மூலம் உள்நாட்டில் கூர்மையான சமூகப் பதட்டங்களை திசைதிருப்பிவிட முயல்கின்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் உக்கிரமடைந்து வந்திருக்கின்றன. 1998ல் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பரிசோதித்ததுடன், 1999ல் பாகிஸ்தான் துருப்புக்களும் இஸ்லாமிய போராளிகளும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் இருக்கும் கார்கில் பகுதியினுள் ஊடுருவி ஆக்கிரமித்த சமயத்தில் ஏறக்குறைய இரண்டு நாடுகளும் மோதலின் விளிம்பில் நின்றன. போராளிகளை ஆதரிப்பதை கைவிடும்படி அமெரிக்கா பாகிஸ்தானை நிர்ப்பந்தம் செய்ததை அடுத்து, ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தலைமையிலான இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 2001ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருமாறும், அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டிற்கு உதவுமாறும் முஷாரப்பை நிர்ப்பந்தித்ததால் அமெரிக்கா பாகிஸ்தானை மேலும் ஆட்டங்காணச் செய்தது. வாஷிங்டனின் போலியான பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்ட புது டில்லி, இஸ்லாமாபாத் சம்பந்தமாக மேலும் மேலும் மோதலையே நாடும் அணுகுமுறையை எடுத்தது. 2001 டிசம்பரில் புது டில்லியில் பாராளுமன்ற கட்டிடத்தின் மீது இஸ்லாமிய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்தியா பாகிஸ்தானுடனான எல்லையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான துருப்புக்களை நிறுத்தியது. பின்வாங்குவதற்கு முந்தைய மாதங்களில், இரண்டு அணு ஆயுத சக்திகளும் ஒரு முழுமூச்சான போரின் விளிம்பில் நின்றன. தசாப்தம் பூராவும் நீண்ட ஆப்கானிஸ்தான் மீதான நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் எல்லைகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளதுடன், ஜனாதிபதி ஒபாமாவின் கீழ், அது ஆப்-பாக் (ஆப்கான்-பாகிஸ்தான்) போராக ஆகியிருக்கின்றது. அதிகரித்துவரும் சி.ஐ.ஏ.யின் ஆளில்லா விமானத் தாக்குதல்களும் பாகிஸ்தானுக்குள் பழங்குடிப் பிரதேசங்களில் அமெரிக்க-ஆதரவு பாகிஸ்தான் இராணுவத்தின் அழிவுகரமான நடவடிக்கைகளும், இஸ்லாமாபாத்தில் ஆழமான அரசியல் நெருக்கடியை பெருகச் செய்துள்ளன. 1947ன் பின்னர், தெற்காசியாவில் முதலாவது நேரடி ஏகாதிபத்திய தலையீடான இந்த ஆப்-பாக் போரை எதிர்ப்பதற்கு, பிற்போக்கு இஸ்லாமியக் குழுக்களைத் தவிர வேறு எவரும் முன்வரத் தவறியதைக் காட்டிலும், இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவத்தினதும் மற்றும் தொழிலாள வர்க்கத்திலுள்ள அதன் முகவர்களினதும் அரசியல் திவால்நிலையை வெளிக்காட்டுவதற்கு வேறு சாட்சியங்கள் கிடையாது.

35. முதலாளித்துவத்தின் நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

35-1. 2008 செப்டம்பரில் அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மென் பிரதர்சின் பொறிவுடன் வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியானது ஒரு காலகட்டத்திற்குரிய பொருளாதாரச் வீழ்ச்சி அல்ல, மாறாக முதலாளித்துவ ஒழுங்கின் அடிப்படையான நிலைமுறிவாகும். நிதிய முறைமைக்கும் பிரதான கூட்டுத்தாபனங்களுக்கும் முண்டு கொடுப்பதற்கு, அரசாங்கங்களால் உட்செலுத்தப்பட்ட டிரில்லியன் கணக்கான டொலர்கள் பொருளாதார அமைப்பினை மறுஸ்திரம் செய்து விட்டிருந்ததாகத் தோன்றிய நம்பிக்கைகள் எல்லாம் துரிதமாக மறைந்துவிட்டன. இந்த பிணையெடுப்புகளும் ஊக்குவிப்புப் பொதிகளும், உண்மையில் தனியார் சுரண்டல்காரர்கள் மற்றும் ஊக வணிகர்களின் மலை போன்று குவிந்திருந்த திரும்பிச் செலுத்தமுடியாத கடனை, அரசாங்கக் கணக்கிற்கு மாற்றி விட்டு, இப்போது ஒவ்வொரு நாட்டிலும் சிக்கன நடவடிக்கைகளின் வடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி இன்னும் விரிந்து சென்று, பெரும் ஆபத்தான வடிவங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான நிக் பீம்ஸ் விளக்கியதாவது: நிலைமுறிவு என்றால் முதலாளித்துவம் தீடீரென இயங்காது நின்று போய் விடுகிறது என்று அர்த்தமல்ல. இது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டம் திறப்பதை அடையாளப்படுத்துகிறது, இதில் பழைய கட்டமைப்புகளான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளும் மற்றும் அத்துடன் சித்தாந்தங்கள் மற்றும் சிந்திக்கும் வழிவகைகளும் சமுதாயத்தின் தலைவிதியை தானே முடிவெடுக்கும் புதிய வகையிலான அரசியல் போராட்டம் அபிவிருத்தியடைவதற்கு பாதையை திறந்து விடுகின்றன.”

35-2. மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி, பூகோள-அரசியல் பகைமைகளை -முதலாவதாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பகைமைகளை- மேலும் மோசமாக்கும். சீனாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சியானது அது எரிசக்தி, மூலப் பொருள் மற்றும் சந்தைகளுக்காக உலகத்தில் தேடியலைகின்ற நிலையில், தவிர்க்கவியலாமல் அதனை அதன் மிக ஸ்தாபகமான எதிரிகளுடனும் மற்றும் இந்தியா போன்ற எழுச்சியுறும் சக்திகளுடனும் போட்டிக்கு இட்டுச் செல்லும். தனது கடற் பாதையைப் பாதுகாக்க, சீனா தனது இராணுவ சக்தியை, குறிப்பாக கடற்படையின் சக்தியை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்ற போதிலும், இது மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நெடுங்காலமாக நிலவும் அமெரிக்க மேலாதிக்கத்தை அச்சுறுத்துகிறது. இப்போது, உலகின் மிகப்பெரும் கடன்கார நாடான அமெரிக்கா, உலகின் பொருளாதார ஆதிக்க சக்தி என்ற அதன் யுத்தத்துக்குப் பிந்தைய நிலையை ஏற்கனவே இழந்துள்ளதோடு தனது எதிரிகளை கீழறுக்க தன்னிடம் எஞ்சியிருக்கின்ற இராணுவ பலத்தை ஈவிரக்கமின்றி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவால் தனது முந்தைய ஆதிக்கத்தை அமைதியான முறையில் கைவிட முடியாதது அதேவேளையில், தனது சொந்த கூர்மையான பொருளாதார மற்றும் சமூக ஸ்திரமின்மைகளால் நொருங்கிப் போய்க் கிடக்கும் சீனாவால் வாஷிங்டன் நிபந்தனைகளை விதிப்பதை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே வர்த்தக மற்றும் நாணய மதிப்பு மோதல்களில் வெளிப்படையாகியிருக்கும், உக்கிரமடைந்துவரும் இந்தப் பகைமை, கடுமை தணியாது ஏனைய சக்திகளையும் இதனுள் தவிர்க்கமுடியாமல் இழுத்துக்கொள்வதுடன் மனித குலத்தை இன்னுமொரு பேரழிவான உலகப் போருக்குள் தள்ளிவிடவும் அச்சுறுத்துகிறது.

35-3. ஒட்டுமொத்த ஆசியாவும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உக்கிரமடைகின்ற போட்டிக்கான களமாக மாற்றப்பட்டு வந்துள்ளது. வடகிழக்கு ஆசியாவில் தனது முந்தைய மேலாதிக்க நிலையை தூக்கி நிறுத்துவதற்காக, ஜப்பான் அமெரிக்காவுடனான தனது இராணுவக் கூட்டணியை பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு உலக சக்தியாவதற்கு தனது சொந்த இலட்சியங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவும், வாஷங்டனுடன் ஒரு மூலோபாயக் கூட்டணியை ஸ்தாபித்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் வர்க்கம் ஒரு அடிப்படையான இருதலைக்கொள்ளி நிலையை எதிர்கொள்கின்றது: அது இப்போது ஆசியாவில் ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய வர்த்தகக் பங்காளியாக இருக்கின்ற சீனாவுக்கும், இன்னமும் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும் பலம்வாய்ந்த இராணுவ சக்தியாகவும் இருந்துவரும் அமெரிக்காவிற்கும் இடையே சமநிலையை வைத்துக்கொள்வது எப்படி என்பதே ஆகும். இந்தப் பூகோள அரசியல் சண்டையின் அழிவுகரமான பின்விளைவுகள், ஏற்கனவே மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்குட்பட்ட ஒரு காலனித்துவ காவலரணாக ஆகியுள்ள ஆப்கானிஸ்தானிலும், மற்றும் அதன் அருகிலிருக்கும், அரசியல் நெருக்கடி மற்றும் மோதலால் அதிர்ந்துபோயுள்ள பாகிஸ்தானிலும் ஏற்கனவே காணக்கூடியதாகவுள்ளது.

35-4. இந்தியப் பெருங்கடலின் பிரதான போக்குவரத்துப் பாதையின் மத்தியில் அமைந்திருப்பதன் விளைவாக, இலங்கை இந்தப் போட்டியின் சுழலுக்குள் இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தீவின் நீண்ட உள்நாட்டு யுத்தம் 2009ல் முடிவுக்கு வந்தமை, கொழும்பில் ஆதிக்க நிலைக்காக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா இடையிலான போட்டியைத் தீவிரமாக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் தோல்வி நிச்சயமானதாக தோன்றிய போதே, சீனா இலங்கைக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவியை வழங்கி தனது செல்வாக்கை பெருமளவு விரிவுபடுத்திக்கொண்டுள்ளது என்பதை அமெரிக்கா தாமதமாகக் கண்டுகொண்டது. பதிலுக்கு பர்மா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் உட்பட இந்தியப் பெருங்கடலில், தனது மூலோபாய துறைமுக வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதன் பாகமாக, இலங்கையின் தெற்கு நகரான ஹம்பாந்தொட்டையில் ஒரு பெரிய புதிய துறைமுகத்தை உருவாக்க சீனா அனுமதிக்கப்பட்டது. 2009 டிசம்பரில் முன்வைக்கப்பட்ட ஒரு அமெரிக்க செனட் அறிக்கையில், அமெரிக்கா இலங்கையை இழக்க முடியாது என்று அப்பட்டமாக அறிவிக்கப்பட்டிருந்ததில்         இருந்து, அமெரிக்காவுக்கு இத்தீவின் மூலோபாய முக்கியத்துவம் கோடிட்டுக் காட்டப்பட்டது. பிராந்தியம் பூராவும் உள்ள தனது சமதரப்பினரைப் போலவே, இலங்கை அரசாங்கமும் ஒரு ஆபத்தான சமநிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு மோதலுக்குள் தீவு இழுக்கப்படுவதை தடுக்கப் போவதில்லை.

35-5. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் 2006ல் மீண்டும் தொடங்கப்பட்ட யுத்தம் தீவை அழிவிற்குள்ளாக்கியது. சகல பெரும் வல்லரசுகளதும் ஆதரவுடன், அரசாங்கமும் இராணுவமும் கொடூரமான முற்றுகை யுத்தத்தை முன்னெடுத்ததில், பல பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் நகரங்களும் கிராமங்களும் சிதைக்கப்பட்டன. இந்த யுத்தமானது ஜனநாயக உரிமைகள் மீதான நீண்டகால விளைவுகளைக் கொண்ட தாக்குதல்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய பொருளாதார சுமைகளை திணிப்பதுடன் சேர்ந்தே நடந்தேறியது.  இராணுவத்துடன் நெருக்கமாக செயற்பட்ட அரசாங்கத்தைச் சார்ந்த கொலைப் படைகள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொன்றன அல்லது காணாமல் போகச் செய்தனர். 2007 மார்ச்சில் கடற்படையின் கட்டுப்பாட்டிலான ஊர்காவற்துறை தீவுக்கு சென்றுகொண்டிருந்த போது, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரன் காணாமல் போய்விட்டார். இந்த வழக்கு தொடர்பான எந்தவொரு விசாரணையையும் தடுத்த அரசாங்கமே, அவர் காணாமல் போனதற்கும் கொல்லப்பட்டிருப்பதற்கான சாத்தியத்திற்கும் அரசியல் ரீதியில் பொறுப்பாளியாகும்.

35-6. உள்நாட்டுப் போரின் முடிவு, ஜனாதிபதி மகிந்த இராஜபக்க்ஷ வாக்குறுதியளித்ததைப் போல சமாதானத்தையும் சுபிட்சத்தையும் கொண்டு வந்திருக்கவில்லை. போருக்கு செலவிடுவதற்காக தீவை முழுதாக அடகு வைத்திருக்கும் நிலையில், அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு பொதுத் துறை வேலைகள், சேவைகள் மற்றும் மானியங்களில் பெரும் வெட்டுக்களை மேற்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊதியங்களில் ஏறக்குறைய எவ்வித அதிகரிப்பும் செய்யப்படாத போதிலும், அடிப்படைப் பொருட்களின் விலைகள் உட்பட விலைவாசி வானளாவ உயர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பெரும் பகுதியினருக்கு இன்னலை உருவாக்கியிருக்கிறது. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி அண்மைய சமூக புள்ளிவிபரங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. உயர்மட்டத்தில் உள்ள 20 சதவீதத்தினர் மொத்த குடும்ப வருவாய் அளவில் 54.1 சதவீதத்தைப் பெறுகின்ற அதேவேளையில் சமூகத்தில் கீழிருக்கும் 20 சதவீதத்தினரோ மொத்த குடும்ப வருவாயில் வெறும் 4.5 சதவீதத்தையே பெறுகின்றனர். உழைக்கும் மக்களை நெருக்கும் தேவைகள் மற்றும் அபிலாசைகளில் எதுவும், இலங்கையின் அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவிலும் வெளிப்பாடைக் காணவில்லை. எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்தின் போரையும் சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாக சர்வதேச நாணய நிதியத்தால் உத்தரவிடப்படும் சந்தை-சார்பு பொருளாதாரத் திட்டத்தையும் முழுமையாக ஆதரித்தன.

35-7. இராஜபக்க்ஷ அரசாங்கம், கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் மிகப்பெரும் பாதுகாப்புப் படைகள் மீது தங்கியிருப்பது, இலங்கை முதலாளித்துவத்தின் அரசியல் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. போர் முடிந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, கொடூரமான அவசரகால அதிகாரங்கள் இன்னமும் அமுலில் இருப்பதோடு துருப்புகளில் எதுவும் கலைக்கப்படவில்லை. மாறாக, 60,000 குடும்பங்களை பலவந்தமாக இடம்பெயரச் செய்யும், பிரமாண்டமான கொழும்பு சேரிகளை அகற்றும் திட்டம் போன்ற, முன்னர் படையினருக்குத் தொடர்பற்றவை என கருதப்பட்டுவந்த அரசாங்கத்தின் வேலைகளுக்குள் இராணுவம் நுழைந்து கொண்டிருக்கின்றது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு படையினரைப் போல தொழிலாளர்களும் தியாகம் செய்ய வேண்டும் என்ற இராஜபக்க்ஷவின் அறிவுறுத்தலில் பொதுவாழ்க்கை இராணுவமயப்படுத்தப்படுவது சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. இராஜபக்க்ஷ அரசாங்கமானது மேலும் மேலும் பாராளுமன்றம், அரசியலமைப்பு அல்லது நீதிமன்றங்களை துச்சமாக மதித்து இயங்கும், ஒரு அரசியல்-இராணுவ சூழ்ச்சிக்குழுவாகவே செயல்படுகிறது. பொலிஸ்-அரசு எந்திரம், எல்லாவற்றுக்கும் மேலாய் தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்குவதையே இலக்காகக் கொண்டுள்ளது.

35-8. நீண்டகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடித்தளத்தில் உள்ள பிரச்சினைகளில் எதுவும் விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியினால் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. உத்தியோகப்பூர்வ சுதந்திரத்தின் ஆறு தசாப்தங்களுக்குப் பின்னரும், இலங்கை முதலாளித்துவத்தால் இனவாத அடிப்படையில் தீவைத் துண்டாடுவதன் மூலமாகவே அதிகாரத்தில் தொற்றிக் கொண்டிருக்க முடிந்திருக்கிறது. படைவலிமை மூலம் மட்டுமே அது ஐக்கியத்தைப் பேணிவந்துள்ளது என்பது வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிரமாண்டமான இராணுவ ஆக்கிரமிப்பில் தற்போது வெளிப்படையாகியுள்ளது. தசாப்தகாலமாக பலப்படுத்தப்பட்ட பாரபட்சங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் உணரப்படும் துயரங்களும் கோபங்களும் தவிர்க்கமுடியாமல் புதிய வடிவங்களில் வெடிக்கும். ஆயினும், அவசியமான அரசியல் படிப்பினைகள் கிரகித்துக்கொள்ளப்பட வேண்டும். புலிகளின் தோல்வியானது அடிப்படையில் இராணுவத் தோல்வி அல்ல, மாறாக அதன் அரசியல் முன்னோக்கில் உள்ளடங்கியிருந்த பலவீனங்களின் விளைவே ஆகும். ஆரம்பத்தில் இருந்தே, இந்தியா அல்லது ஏனைய பிராந்திய மற்றும் உலக சக்திகளின் ஆதரவுடன், தமிழ் முதலாளித்துவத்தின் சார்பாக ஒரு முதலாளித்துவ ஈழத்தை அமைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இதே சக்திகள் புலிகளுக்கு எதிராக தீர்க்கமாகத் திரும்பியபோது, இராணுவத் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் பயனற்ற கோரிக்கையை வைக்குமளவுக்கு கீழிறங்கி வந்தனர். இலங்கையின் முதலாளித்துவத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் எதிராக, உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்துவதற்கு சமுதாயத்தில் வல்லமைபடைத்த ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆனாலும், தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களை வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படுத்தும் எந்தவொரு நோக்கத்துக்கும் புலிகள் எப்போதும் இயல்பாகவே எதிரானவர்களாக இருந்தனர். சிங்களப் பொதுமக்கள் மீதான புலிகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொழும்பு ஸ்தாபனத்தின் தேவைகளுக்குப் பயன்பட்டதோடு இனவாதப் பிளவை ஆழப்படுத்தியது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளில், அவர்கள் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சமூகத் தேவைகளையும் நசுக்கினர். அதனால், தமது இறுதிக் கட்டத்தில், தீவிலும் மற்றும் பிராந்தியம் முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்திற்கு இல்லா விட்டாலும், தமிழ் வெகுஜனளுக்கும் கூட எந்தவொரு பரந்த அறைகூவலும் விடுக்க புலிகளின் தலைமைத்துவம் முற்றிலும் இலாயக்கற்று இருந்தது. புலிகளின் வீழ்ச்சியானது முதலாளித்துவ பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துப் போக்குகளதும் திவால்நிலைக்கான ஒரு வெளிப்படையான ஆதாரமாகும்.

35-9. கடந்த கால் நூற்றாண்டு கால யுத்தம், ஒவ்வொரு அரசியல் போக்கினையும் பரிசோதித்து விட்டது. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான அதன் மூலோபாயத்தின் அத்தியாவசிமான அங்கமாக, தமிழ் மக்களதும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க, ஒரு தொடர்ச்சியான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் இயலுமை கொண்டது என்பதை நிரூபித்தது. சகல பக்கங்களிலும் இருந்து வந்த, அரசியல் மற்றும் சரீரரீதியான தாக்குதல்களை தாங்கக் கூடிய சோசலிச சமத்துவக் கட்சியின் திறன், அது காலூன்றியுள்ள கோட்பாடுகளின் வலிமையில் இருந்து ஊற்றெடுக்கின்றது. நிரந்தரப் புரட்சி தத்துவத்தினதும் மூலோபாயத்தினதும் பாதுகாப்பும் அபிவிருத்தியும், முதலாளித்துவத்தின் அனைத்துவிதமான பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகப் போராடுவதில் மட்டுமே தங்கியிருக்கின்றது. நான்கு தசாப்தத்துக்கும் மேலாக, ட்ரொட்ஸ்கிசத்துக்காக ஒரு சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்ததில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேர் பரப்பியுள்ளதோடு உழைக்கும் மக்களின் வரலாற்று நலன்களைப் பாதுகாக்கின்ற ஒரே கட்சியாக தன்னை ஸ்தாபித்துக்கொண்டுள்ளது.

35-10. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தெற்காசியா முழுவதிலும் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர அரசுகள் அனைத்திலும், தேசிய வேலைத்திட்டத்தின் முழுத் தோல்வியை இலங்கை மிகவும் நுணுக்கமாக காட்சிப்படுத்துகிறது. கண்ணியமான வாழ்க்கைத் தரங்களுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்குமான வெகுஜனங்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய எங்குமே முதலாளித்துவ அரசாங்கங்களால் முடியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலும் பின்தங்கிய நிலையிலும் மூழ்கிப்போயுள்ளனர். இலங்கையில் தசாப்தகாலங்கள் நீண்டிருந்த உள்நாட்டுப் போருக்கு இணையாக, பிராந்தியம் முழுவதிலும் ஆளும் கும்பலின் போட்டிப் பிரிவுகள் தங்களது சொந்த குறுகிய நலன்களை மேம்படுத்துவதற்காக இனவாத, வகுப்புவாத மற்றும் மொழிப் பிளவுகளை பிற்போக்குத்தனமாக சுரண்டிக் கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கம் ஒரு புதிய புரட்சிகரக் கொந்தளிப்பு காலகட்டத்தினுள் பிரவேசிக்கின்ற நிலையில், இன்றியமையாத அரசியல் படிப்பினைகளைப் பெறுவது அத்தியாவசியமானதாகும். தேச எல்லைகளுக்குள்ளும் அதைக் கடந்தும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே, முதலாளித்துவத்தின் காலங்கடந்த அமைப்புமுறையைத் தூக்கியெறிவதற்கும் அதனை ஒரு உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் பதிலீடு செய்வதற்கும் அவசியமான புரட்சிகர சக்தியை அபிவிருத்தி செய்ய முடியும். சோசலிச சமத்துவக் கட்சி, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் சிறந்த புரட்சிகரப் பாரம்பரியங்களுக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதோடு, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பிரிக்கமுடியாத பாகமாக, தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்திற்காக போராடுவதற்கு அனைத்துலக் குழுவின் வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொள்கிறது.

35-11. இடைவிடாத பொருளாதார நெருக்கடிகள், கூர்மையடைந்துவரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பகைமைகள், இராணுவவாதத்தின் வளர்ச்சி, ஆழமடையும் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் கட்டமைப்புகளில் இருந்து சாதாரண மக்களின் ஆழமானமான அந்நியப்படுதலும், போர்கள் மற்றும் புரட்சிகளின் ஒரு புதிய நீண்ட காலகட்டத்தின் தெளிவான அறிகுறிகள் ஆகும். முதலாளித்துவத்தின் நெருக்கடி மிகப் பிரமாண்டமான வர்க்கப் போராட்டங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதற்கான சமீபத்திய சாட்சியங்களே வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலுமான எழுச்சிகளாகும். ஆயினும், முதலாளித்துவ நிலைமுறிவு அபிவிருத்திகாணுகின்ற அளவுக்கும், தொழிலாள வர்க்கத்தின் நடப்பு அரசியல் நனவுக்கும் இடையில் ஒரு பெரும் இடைவெளி காணப்படுகிறது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரள்வைத் தடுக்கும் சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத முகவர்களுக்கு எதிராக, ஒரு புரட்சிகரக் கட்சி நடத்தும் ஒரு பொறுமையான மற்றும் சளைக்காத அரசியல் போராட்டத்தின் மூலமாகவே இந்த இடைவெளியை வெல்ல முடியும். அவ்வாறு செயற்படுவதன் மூலம், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் புதிய சுயாதீனமான அமைப்புகள் உருவாவதை ஊக்குவித்து, உதவி செய்யும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு இடைவிடாத அரசியல் போராட்டத்தின் ஊடாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு இன்றியமையாத தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான அத்தியாவசியமான கூட்டணியை ஏற்படுத்த கட்சி முயற்சிக்கும்.

35-12. ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் நனவினை அதன் சர்வதேசிய மற்றும் வரலாற்றுக் கடமைகளுக்கு உயர்த்துவதற்காக ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பும் முக்கிய பிரச்சினை எஞ்சியிருக்கின்றது. சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் முந்தைய மூலோபாய அனுபவங்களில் இருந்து அவசியமான படிப்பினைகளை பெற்றுக்கொண்டுள்ள மிக முன்னேறிய விஞ்ஞானபூர்வமான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியால் மட்டுமே, அந்த பாத்திரத்தை வகிக்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளும் மட்டுமே சமகால மார்க்சிசத்தின், அதாவது ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று பாரம்பரியத்தின் உருவடிவாகத் திகழ்கின்றன. அந்த அடிப்படையிலேயே, சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும், மிகவும் தொலைநோக்கும் சுய அர்ப்பணிப்பும் கொண்ட தொழிலாளர்களும் இளைஞர்களும் கட்சியின் பதாகைக்கு வென்றெடுக்கப்படுவதோடு அவர்கள் உலக சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதற்கான சடரீதியான சக்திகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு கல்வியூட்டவும், அதனை அணிதிரட்டவும் ஐக்கியப்படுத்தவும் முயற்சிக்கின்றன.

69. The Historical and International Foundations of the Socialist Equality Party (Australia) (Mehring Books, Sydney, 2010), p. 146.

70. Fourth International, Volume 18, No. 1, Summer–Fall 1991, p. 2.

71. Nick Beams, The World Economic Crisis: A Marxist Analysis (October 2008) http://www.wsws.org/articles/2008/oct2008/nbe1-o04.shtml.