சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part  11

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 11

By the the Socialist Equality Party (Sri Lanka)
6 April 2012

Use this version to print | Send feedback

26. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் சர்வதேச முன்னோக்குகள்

26-1. 1988 ஆகஸ்டில் வெளியான, “உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்” என்ற அனைத்துலகக் குழுவின் முன்னோக்குத் தீர்மானம், உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் பற்றிய முழு விரிவான பகுப்பாய்வுகளை முதல் தடவையாக வழங்கியது. இத்தகைய வேலைகளை பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி 1970களின் ஆரம்பத்தில் இருந்தே கைவிட்டிருந்தது. அந்தத் தீர்மானம், அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பகுதிகளதும் நெருக்கமான ஒருங்கிணைவிற்கு அடித்தளத்தை அமைத்தது. உற்பத்தி நிகழ்வுபோக்குகளது முன்கண்டிராத அளவிலான பூகோள ஒருங்கிணைப்பின் உள்ளர்த்தங்களை ஆய்வு செய்வதே இந்த ஆவணத்தின் மையமாக இருந்தது. உலகப் பொருளாதார உறவுகளிலான ஒரு பண்புரீதியான நகர்வைக் குறிக்கும், உற்பத்தி நிகழ்வுபோக்குகளில் இத்தகைய பூகோள ஒருங்கிணைப்பு, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியத்தையும் உலக சோசலிசப் பொருளாதாரத்திற்கான அடித்தளத்தையும் புறநிலையில் பலப்படுத்தியுள்ளது. “வர்க்கப் போராட்டம் என்பது வடிவத்தில் மட்டுமே தேசியரீதியானது, ஆனால் சாராம்சத்தில் அது சர்வதேசப் போராட்டமாகும், என்பதே வெகுகாலமாக மார்க்சிசத்தின் அடிப்படை கூற்றாக இருந்து வந்திருக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைப் பொறுத்தளவில், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேசத் தன்மையை எடுத்தாக வேண்டும்... தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான போராட்டங்களும் கூட, சர்வதேச அளவில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை முன்வைக்கின்றன. முன்கண்டிராத அளவிலான மூலதனத்தின் சர்வதேச இயக்கமானது வெவ்வேறு நாடுகளின் தொழிலாள இயக்கத்தின் அனைத்து தேசியவாத வேலைத்திட்டங்களையும் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் பிற்போக்குத்தனமானவையாகவும் ஆக்கியிருக்கின்றன. சகல இடங்களிலும் இத்தகைய வேலைத்திட்டங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உலகச் சந்தையில் “தங்களது” முதலாளித்துவ நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்கு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை திட்டமிட்டுக் குறைப்பதில் “தங்களது” ஆளும் வர்க்கங்களுடன் விரும்பி ஒத்துழைப்பதையே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றன”[61]

26-2. தேசிய அடித்தளம் கொண்ட வேலைத்திட்டங்களின் திவால்நிலை, தொழிலாள வர்க்கத்தின் பழைய தலைமைகளை பரவலாகப் பற்றிக்கொண்டுள்ள “கைவிடுதல்வாத” அலையில் பிரதிபலிக்கின்றது. “பாட்டாளி வர்க்கம் சமூகத்தில் ஒரு தனித்துவமான வர்க்கமாக இருப்பதுடன் அது முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக தனது சுயாதீனமான நலன்களைப் பாதுகாத்தாக வேண்டும் என்ற அடிப்படை கொள்கைகளைக் கூட” ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் புறக்கணிக்கின்றன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் அதிகரித்துவரும் சீரழிவை அனைத்துலகக் குழு விரிவாக ஆராய்ந்தது. சகல நடுத்தர வர்க்க சந்தர்ப்பவாத போக்குகளுக்கும் எதிராக, கோர்பச்சேவின் கிளாஸ்த்நோஸ்ட்டும் (ஒளிவுமறைவின்மை glasnost) மற்றும் பெரெஸ்துரோய்காவும் (புனர்நிர்மாணம்  perestroika) முதலாளித்துவ மீட்சிக்கான கொள்கைகளே என்று நான்காம் அகிலம் வலியுறுத்தியமை துரிதமாக நிரூபணமும் ஆனது. இலங்கையில் தமிழ் ஆயுதக் குழுக்களின் நெருக்கடி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு இடைவிடாத போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய முதலாளித்துவம் இலாயக்கற்றதாக இருப்பதில் இருந்தே எழுகின்றது என அந்த ஆவணம் நிறுவியது. புது டில்லியிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவானது, பாலஸ்தீனக் கிளர்ச்சியை (intifada) அரபு முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான நலன்களுக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) அடிபணியச்செய்ததற்கும், நிக்கராகுவாவின் சன்டாநிஸ்டாக்கள் வலதுசாரி கொண்ட்ரா கிளர்ச்சியாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கும் சமாந்தரமாய் கூறத்தக்கது.

26-3. உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பு, முதலாளித்துவத்தின் ஒரு புதிய பொற்காலத்தைத் திறந்து விடுவதற்கு மாறாக, உலகப் பொருளாதாரத்திற்கும் காலங்கடந்துபோய்விட்ட தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலும், மற்றும் சமூக உற்பத்திக்கும் தனியார் சொத்துடைமைக்கும் இடையிலும் அமைந்திருக்கக் கூடிய அடிப்படை முரண்பாடுகளை ஒரு புதிய உச்சத்திற்கு தீவிரமாக உயர்த்தியது. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, ஏகாதிபத்திய உட் பகைமைகளின் அதிகரிப்பு, குறிப்பாக ஆசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புதிய பெரும் படையணிகளின் தோற்றம், பின்தங்கிய நாடுகள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுதல் மற்றும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி ஆகியவை உட்பட, புரட்சிகர எழுச்சிகளின் ஒரு புதிய காலகட்டத்திற்கான உந்துசக்திகளை இத்தீர்மானம் அடையாளம் கண்டது.

26-4. தனது மூலோபாயப் பணிகளுக்குத் திரும்பிய அனைத்துலகக் குழு, பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவின் பெறுபேறாக இருந்த மிச்சசொச்சமான தேசியவாதப் போக்குகளில் இருந்து மீள்வதன் பேரில், 1985-86 பிளவினைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் படிப்பினைகளை சுருக்கமாக விவரித்தது. “புரட்சிகர சர்வதேசியவாதமானது சந்தர்ப்பவாதத்திற்கு நேர்விரோத அரசியல் எதிரியாகும். சந்தர்ப்பவாதமானது ஏதேனும் ஒரு வடிவத்தில், அவ்வப்போதான தேசியச் சூழலுக்குள் அரசியல் வாழ்க்கையின் யதார்த்தங்கள் என சொல்லப்படுவனவற்றுக்கு ஒரு நிச்சயமான அடிபணிவை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் குறுக்கு வழிகளைத் தேடும் சந்தர்ப்பவாதம், உலக சோசலிசப் புரட்சிக்கான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு மேலாக ஏதேனும் ஒரு தேசியவாத தந்திரோபாயத்தை உயர்த்திப் பிடிக்கும். ஒரு சந்தர்ப்பவாதி, உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை மிகவும் அரூபமானதாகக் கருதி, ஸ்தூலமான தந்திரோபாய முன்முயற்சிகளெனக் கூறப்படுவதன் மீது பேராவல் கொள்கின்றார். ஒரு சந்தர்ப்பவாதி, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச பண்பை ‘மறக்க’ முடிவு செய்வதோடு மட்டுமன்றி, ஒவ்வொரு நாட்டிலுமான நெருக்கடியின் தவிர்க்கவியலாத தோற்றுவாய் உலகளாவிய முரண்பாடுகளிலேயே இருக்கின்ற நிலையில், அந்த நெருக்கடியை ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உண்மையையும் அவர் ‘காணத்தவறுகிறார்’. கட்சியின் அரசியல் செயற்திட்டங்களில் ஒரு தேசிய தந்திரோபாயம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் ஆற்றினாலும், அந்த தேசிய தந்திரோபாயம், அனைத்துலகக் குழுவின் உலக மூலோபாயத்திலிருந்து வேறாக்கப்பட்டு அதற்கு மேலானதாக இருத்தப்பட்டாலோ, அல்லது அதற்குச் சமமான ஒன்றைச் செய்தாலோ, அதனால் அதன் புரட்சிகர உள்ளடக்கத்தைக் காக்க முடியாது. இதனால், அனைத்துலகக் குழுவின் பகுதிகள், அவை செயல்படுகின்ற நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கத்துக்கு செய்யக் கூடிய மைய வரலாற்றுப் பங்களிப்பு, உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கிற்கான கூட்டான ஐக்கியப்பட்ட போராட்டம் ஆகும்.”[62]

27. சோவியத் ஒன்றியத்தின் பொறிவு

27-1. இந்த சர்வதேசிய முன்னோக்கு அனைத்துலகக் குழுவினை 1989ல் வெடித்த ஸ்ராலினிசத்தின் அரசியல் நெருக்கடிக்கு தயார்படுத்தியிருந்தது. சீனாவில் வெகுஜனப் போராட்டங்களுடன் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி வெடித்ததைத் தொடர்ந்து, கிழக்கு  ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் பொறிந்ததுடன், அதன் உச்சகட்டமாக 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் அழிவு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் அடியாக விழுந்ததுடன் கணிசமானளவு நோக்குநிலை தவறலையும் குழப்பத்தையும் விளைவித்தது. முதலாளித்துவத்தின் வெற்றி ஆரவாரத்துக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தின் முடிவானது முதலாளித்துவ சந்தையின் வெற்றியையோ சோசலிசத்தின் முடிவையோ குறிக்கவில்லை என்று அனைத்துலகக் குழு மட்டுமே வலியுறுத்தியது. 1936ல் வெளியான “காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி” என்னும் எதிர்கால நிகழ்வினை எடுத்துக்காட்டிய தனது நூலில், ட்ரொட்ஸ்கி சோவியத் தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கிவீச ஒரு அரசியல் புரட்சியை நடத்தாவிடில், ரஷ்யப் புரட்சியின் எஞ்சியிருக்கும் சமூக வெற்றிகள் இறுதியாகக் அழிக்கப்படுவதோடு முதலாளித்துவ சொத்து உறவுகள் மீள்ஸ்தாபிதம் செய்யப்படும் என்பதை முன்னறிவித்திருந்தார். சோவியத் ஒன்றியத்தின் முடிவு சோசலிசத்தின் தோல்வியைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக, ஸ்ராலினிசத்தினதும் பூகோள உற்பத்தியின் தாக்கத்தின் கீழ் அதன் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் பிற்போக்கு தேசியவாத முன்னோக்கினதும் தோல்வியையே குறித்தது. உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை நெடுங்காலத்துக்கு முன்பே கைவிட்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம், தன்னை பூகோள முதலாளித்துவத்துடன் ஒருங்கிணைத்து, அதன் ஊடாக, முதலாளித்துவ தனியார் சொத்துடமையில் தனது சொந்த சிறப்புரிமைகளை ஆழப் பதியவைப்பதன் மூலமே சோவியத் பொருளாதாரத்தின் நெருக்கடிக்கும் வளர்ச்சிகண்டுவந்த தொழிலாள வர்க்கத்தின் அமைதியின்மைக்கும் பதிலிறுத்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, யுத்தத்துக்குப் பிந்திய ஒழுங்கின் பொறிவினதும் மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கும் திவாலான தேசிய அரசுக்கும் இடையிலான முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் உக்கிரமடைந்ததனதும் ஒரு விளைவே ஆகும். முதலாளித்துவத்துக்கு ஒரு புதிய செழிப்பான காலத்தை திறந்து விடுவதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தினதும் அதன் தன்னிறைவு (சுய தேவை பூர்த்தி) தேசிய பொருளாதாரத்தினதும் முடிவு, தேசிய பொருளாதார ஒழுங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்த சகல கட்சிகளிதும் மற்றும் அமைப்புகளினதும் உருமாற்றத்தை அல்லது பொறிவை முன்னறிவித்தது. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் தீவிரமடைகின்றமை தவிர்க்கவியலாமல் ஆழமான பொருளாதார நெருக்கடி, போர்கள் மற்றும் புரட்சியின் ஒரு புதிய காலகட்டத்திற்கு வழிவகுக்கும்.

27-2. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவ மீட்சிக்கு தனது சொந்த பதிலிறுப்பை அபிவிருத்தி செய்யவியலாமல் போனதென்பது, பல்வேறு ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசிய அதிகாரத்துவங்களின் நெடுங்கால ஆதிக்கத்தினாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, 1930களில் ஸ்ராலின் மற்றும் அவரது அடியாட்களால் புரட்சிகர மார்க்சிசத்தின் மிகச்சிறந்த பிரதிநிதிகள் படுகொலை செய்யப்பட்டதாலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவுக்கு இழைக்கப்பட்ட பிரம்மாண்டமான சேதாரத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சோசலிசப் புரட்சி தன்னியல்பாக எழும் என்ற எந்தவொரு கருத்துருவுக்கும் எதிராக, அனைத்துலகக் குழுவின் 12வது நிறைவுப் பேரவைக்கு (Plenum) டேவிட் நோர்த் வழங்கிய அறிக்கை விளக்கியது: “வர்க்கப் போராட்டங்கள் தீவிரமடைவதானது புரட்சிகர இயக்கத்திற்கு பொதுவான அடித்தளத்தை வழங்குகிறது. ஆனால் அதன் அபிவிருத்திக்கு அவசியமாகின்ற, ஒரு உண்மையான புரட்சிகர சூழ்நிலைக்கான வரலாற்று அமைவை தயாரிக்கின்ற அரசியல், புத்திஜீவித்தன, இன்னும் சேர்த்துக்கொண்டால் கலாச்சார ரீதியான சூழலை அதனால் தானாகவே நேரடியாகவும் தன்னியல்பாகவும் உருவாக்கி விட முடியாது,”[63]. தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிசத்தின் மகத்தான அரசியல் கலாச்சாரத்தை மீளஸ்தாபிதம் செய்யும் பொறுப்பு அனைத்துலகக் குழுவின் தோள்களில் சுமத்தப்படுகிறது என்று அந்த அறிக்கை முடிவடைகின்றது. மலையெனக் குவிந்த பொய்களின் கீழ், ரஷ்யப் புரட்சியினதும் குறிப்பாக லியோன் ட்ரொட்ஸ்கியின் வேலைகளினதும் முக்கியத்துவத்தை புதைத்து விட முயன்ற, “சோவியத்துக்குப் பிந்தைய பொய்மைப்படுத்தல் பள்ளி” என்று அனைத்துலகக் குழுவால் வகைப்படுத்தப்பட்ட, பல்வேறு கூறுகளை முறையாக அம்பலப்படுத்துவதே அனைத்துலகக் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளின் இன்றியமையாத அங்கங்களாக இருந்தன.

27-3. கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் குடியரசுகளிலும், ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி, அந்நிய முதலீட்டுக்குத் துரிதமாக திறந்து விடப்படுவதற்கும், அரும்பிவந்த அரசியல் கொள்ளைக் கூட்டத்தால் அரசு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப்படுவதற்கும் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் திகைப்பூட்டும் வகையில் சரிந்து போவதற்கும் வழிவகுத்தது. சீனாவில் முதலாளித்துவ மீட்சி நிகழ்வுப்போக்கு இன்னும் நெடியதாய் இருந்தது. புரட்சி நடந்து வெறும் 23 ஆண்டுகளே கடந்திருந்த நிலையில், 1972ல் மாவோவாத ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு கூட்டிணைவுக்குச் சென்றமை, ஏறத்தாழ சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஒரு கூட்டணிக்கும் சீனாவின் பொருளாதார உறவுகளை மேற்குடன் மீள் ஸ்தாபிதம் செய்துகொள்வதற்கும் வழி வகுத்தது. 1978ல் டெங் சியாவோபிங் ஆட்சிக்கு வந்த பின்னர், சீனாவை வெளிநாட்டு முதலீட்டுக்குத் திறந்துவிடுவதும் முதலாளித்துவ சந்தை உறவுகளை மீட்பதும் ஆரம்பிக்கப்பட்டமை, தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சிகண்டுவந்த எதிர்ப்பை உருவாக்கிவிட்டது. 1989 ஜூனில் தியனென்மென் சதுக்க ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக நசுக்கப்பட்ட உடன், அனைத்துலகக் குழு வெளியிட்ட “சீனாவில் அரசியல் புரட்சியின் வெற்றிக்கு” என்ற தலைப்பிலான அறிக்கை விளக்கியதாவது: “சீனாவில் முதலாளித்துவ மீட்சிக்கும் மற்றும் அதன் பொருளாதாரத்தை உலக ஏகாதிபத்திய கட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்பதற்கும் பெய்ஜிங் ஸ்ராலினிஸ்டுகள் திட்டமிட்டு செயற்பட்டு வந்த ஒரு தசாப்த காலத்தின் அரசியல் உச்சகட்டமே கடந்த வார மக்கள் படுகொலைகளாகும். பெய்ஜிங் அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் பயங்கரத்தின் பிரதான நோக்கம், சீன வெகுஜனங்களை பயமுறுத்துவதும் சீனப் புரட்சியின் சமூக வெற்றிகளை அது வேண்டுமென்றே அழிப்பதற்கு எதிராக எழும் அனைத்து எதிர்ப்புக்களையும் நசுக்குவதுமே ஆகும்.”[64] இந்த அடக்குமுறையைத் தொடர்ந்து, தொழிலாள வர்க்கத்தை அடக்கவும் தனியார் இலாபத்தை உத்தரவாதப்படுத்தவும் சகல வழிமுறைகளையும் பயன்படுத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிஸ் அரச ஆட்சி தயங்கப் போவதில்லை என்பதையே தியனென்மென் சதுக்கப் படுகொலைகள் உறுதிப்படுத்துகின்றன என்ற முடிவிற்கு, பன்னாட்டுக் கூட்டுத்தாபனங்கள் வந்த நிலையில், சீனாவுக்குள் வெளிநாட்டு முதலீடு பெருக்கெடுத்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் சீனாவில் முதலாளித்துவ மீட்சியுடன் அரச அதிகாரத்துவத்துடன் நெருக்கமுடைய ஒரு முதலாளித்துவத்தின் தோற்றம், சமூகப் பிளவு ஆழமடைதல், மற்றும் 1949க்கு முந்திய சீனாவின் சமூகக் கேடுகள் பல மீண்டும் தலைநீட்டியமை ஆகியவையும் கைகோர்த்து நடந்தன.

27-4. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, சோவியத் சந்தைகள், பொருளாதார உதவி மற்றும் பூகோள அரசியல் ஆதரவிலும் தங்கியிருந்த இந்தியாவுக்கு மட்டுமன்றி, ஆசியா முழுவதிலும் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களை கொண்டிருந்தது. 1991ல், அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்த காங்கிரஸ் அரசாங்கம், இந்திய தேசியப் பொருளாதாரக் கட்டுப்பாடு என்னும் கட்டமைப்பை கழற்றி, அந்நிய முதலீட்டுக்குத் திறந்து விடும் செயற்பாட்டைத் தொடங்கியது. இந்திய ஸ்ராலினிசக் கட்சிகள் புதிய நோக்குநிலையை ஆதரித்ததோடு மட்டுமன்றி, அவை அதிகாரத்தில் இருந்த மேற்கு வங்காளம் மற்றும் கேரளா மாநிலங்களில், சந்தை-சார்பு மறுசீரமைப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொறுப்பேற்றுக்கொண்டது. பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் இருந்த முதலாளித்துவ வர்க்கம், சோவியத் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அரசியல்ரீதியாக சமநிலையில் இருக்கவும், ரஷ்யா மற்றும் சீனாவின் உதவியுடன் “ஏகாதிபத்திய-விரோதிகளாக” காட்டிக்கொள்ளவும் கொண்டிருந்த திறனும் பனிப்போர் கட்டமைப்பின் பொறிவால் முடிவுக்கு வந்தது. சோவியத் ஒன்றியத்துடன் வலுவான உறவுகளை வைத்துக் கொண்டு, அணிசேரா இயக்கம் என்பதன் முன்னணி உறுப்பினராகத் திகழ்ந்த இந்தியாவில் இந்த நிகழ்வுப்போக்கு குறிப்பாக மிகத் திட்டவட்டமானதாக இருந்தது. புது டெல்லி அமெரிக்காவுடனான தனது தொடர்புகளை திருத்தியமைத்துக்கொண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்ற தேசிய இயக்கங்களுக்கான தனது முன்னைய ஆதரவைக் கைவிட்டது.

27-5. முன்னாள் சோவியத் சார்பு நாடுகளிலும் சீனாவிலும் முதலாளித்துவத்தை அப்பட்டமாகத் தழுவிக் கொண்டமை, பிராந்தியத்தின் ஸ்ராலினிசக் கட்சிகளின் அரசியல் நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. அவை ஒன்று தாய்லாந்தின் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் முழுமையாக கவிழ்ந்து போயின, அல்லது பிலிப்பைன்சின் கம்யூனிஸ்ட் கட்சி போல் உடைந்துபோயின, அல்லது ஜப்பான் மற்றும் இந்தியாவில் போன்று அரசியல் அமைப்புமுறையினுள் தங்களை முழுமையாக ஒருங்கிணைத்துக்கொண்டன. இலங்கையில் “புலிப் பொருளாதாரத்துக்கு” விடுதலைப் புலிகள் அமைப்பு வக்காலத்து வாங்கி சிறந்த உதாரணமாக திகழ்ந்தது போல், பல்வேறு ஆயுதமேந்திய தேசிய விடுதலை இயக்கங்களும் தங்களது முன்னைய “சோசலிச” தோரணையை வேகமாகக் கலைத்து, சந்தை சித்தாந்தத்தை தழுவிக் கொண்டதோடு ஏகாதிபத்தியத்துடன் தங்களது சொந்த உறவை ஏற்படுத்திக்கொள்ள முயன்றன.

28. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் ஐக்கிய முன்னணியும்

28-1. இலங்கையில் 1980களின் பிற்பகுதி மற்றும் 1990களின் ஆரம்ப காலம் பூராவும் ஒரு தீவிரமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஆதிக்கம் செலுத்தியது. வடக்கில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் மூண்ட நிலையில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் அதிகரித்துவந்த அமைதியின்மையை, அரசு ஒடுக்குமுறை மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பேரினவாதப் பிரச்சாரமும் ஒன்றுசேர்ந்து தடம்புரளச் செய்தது. ஒப்பந்தத்தை ஆதரித்த அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் மக்கள் விடுதலை முன்னணியின் துப்பாக்கிதாரிகள் இலக்குவைத்தனர். வேலைநிறுத்தங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தால் அல்லது அதில் பங்கேற்றால் மரண தண்டனை பிறப்பிக்கும் இராணுவச் சட்டத்தை அரசாங்கம் 1988 நவம்பரில் திணித்தது. ஒப்பந்தத்தை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சியின் ரணசிங்க பிரேமதாச 1988 டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தலில் வென்றதோடு உடனடியாக முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்த மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர முயற்சித்தார்.

28-2. ஐ.தே.க. அரசாங்கத்திற்கும் மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பீ.க்கும் இடையில் நடைமுறையிலிருந்த ஒரு கூட்டணி, அரச ஒடுக்குமுறையுடனும் அதே போல் “தாயகத்தைப் பாதுகாக்க” மக்கள் விடுதலை முன்னணி அழைப்புவிடுக்கும் “வேலைநிறுத்தங்களில்” இணையாமல் அதன் கட்டளைகளை எதிர்க்கும் எவர் மீதும் மக்கள் விடுதலை முன்னணி தொடுத்த பாசிசத் தாக்குதல்களுடனும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பேரினவாதப் பிரச்சாரத்துக்கும் எதிராக தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்குப் போராடிய ஒரே கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். இந்த அடிப்படையில் 1988 ஜூன் மாதத்தில் மத்திய வங்கி ஊழியர் சங்கத் தலைமையை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வென்றது. அதன் நிலைப்பாட்டின் விளைவாக, பொலிஸ் சோதனைகள் மற்றும் கைதுகள், அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் தாக்குதல்களையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்கொண்டது. மக்கள் விடுதலை முன்னணி குண்டர்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று உறுப்பினர்களை கொன்றனர். 1988 நவம்பர் 12 அன்று ஆர்.ஏ. பிட்டவெலவும் 1988 டிசம்பர் 23 அன்று பீ.எச். குணபாலவும் 1989 ஜூன் 23 அன்று கிரேஷன் கீகியனகேயும் கொல்லப்பட்டனர்.

28-3. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அனைத்துலகக் குழுவில் உள்ள தனது சகோதரக் கட்சிகளுடன் ஒத்துழைத்து, அரச ஒடுக்குமுறையில் இருந்தும் மக்கள் விடுதலை முன்னணியின் தாக்குதல்களில் இருந்தும் தொழிலாளர்களையும் அவர்களது அமைப்புகளையும் பாதுகாக்க உடனடியான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சகல தொழிலாள வர்க்கக் கட்சிகளதும் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கு 1988 நவம்பரில் பிரச்சாரமொன்றை ஆரம்பித்தது. தொழிலாள வர்க்க கட்சிகளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி போன்ற இலங்கை முதலாளித்துவத்தின் கட்சிகளிடம் இருந்து பிரிவதற்கும் “அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் வர்க்க வலிமையை” அணிதிரட்டுவதற்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அழைப்பு விடுத்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது தொழிலாளர்களது பாதுகாப்புப் படைகள் மற்றும் நடவடிக்கைக் குழுக்கள், கூட்டு மறியல் போராட்டங்கள் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்யவும் அழைப்பு விடுத்ததோடு, மிகச் சிரமமான சூழ்நிலையிலும் தனது கோரிக்கைகளுக்காக தொழிலாள வர்க்கத்தில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. ஐக்கிய முன்னணிக்கான அனைத்துலகக் குழுவின் சர்வதேசப் பிரச்சாரத்தின் பகுதியாக, ஆஸ்திரேலிய சோசலிச தொழிலாளர் கழகத்துடன் இணைந்து இரண்டு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு ஒரு விரிவான சுற்றுப் பயணமும் மேற்கொண்டனர்.

28-4. ஐக்கிய முன்னணிக்கான அழைப்பானது அதை ஏகமனதாக எதிர்த்த சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்கு மன்னிப்பு வழங்குவதை எந்த வகையிலும் அர்த்தப்படுத்தவில்லை. அவை அனைத்தினதும் சார்பாகப் பேசிய நவசமசமாஜக் கட்சி, தான் “புதிய பாட்டாளிவர்க்க சீர்திருத்தவாத வெகுஜனப் போக்கு” என போலியாக வருணித்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்தமைக்காக, ஐக்கிய முன்னணியை ”குறுங்குழுவாத” மற்றும் “தீவிர-இடது” எனக் கண்டனம் செய்தது. ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அமைத்துக்கொண்ட நவசமசமாஜக் கட்சியின் சொந்த “ஐக்கிய சோசலிசக் கூட்டணி” மக்கள் முன்னணிவாதத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாய் இருந்தது. ஐ.தே.க. அரசாங்கத்திடம் இருந்தும் அரசு எந்திரத்திடம் இருந்தும் பாதுகாப்புப் பெறுவதை இது இலக்காகக் கொண்டிருந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது பதிலில் எச்சரித்தது: “முதலாவதாக இது [ஐக்கிய முன்னணியை நிராகரிப்பது], தனது வர்க்க எதிரிக்கு எதிராக தொழிலாள வர்க்கம் எடுக்கும் நடைமுறை நடவடிக்கைகளின் செயலூக்கமிக்க அமைப்பிற்கு முற்றிலும் விரோதமான ஒரு நடவடிக்கை ஆகும். இரண்டாவதாக, இது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வேலைத்திட்டங்களின் மீது உருவாக்கப்பட்ட முன்னணிகளுடன் கட்டிப் போட்டு, பலவீனப்படுத்துவதோடு அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதுடன், தொழிலாள வர்க்கத்தையும் ஏழை விவசாயிகளையும் ஒரு இரத்த ஆற்றில் மூழ்கடிப்பதற்கான வாய்ப்பையும் வர்க்க எதிரிக்கு உருவாக்கித் தருகிறது”. “இடது” கட்சிகள், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எந்தவிதத்திலும் விமர்சிப்பதைக் கைவிட்டு அதற்குப் பிரதியுபகாரமாக ஆயுதங்களை பெற்றுக் கொண்ட அதே வேளை, இந்தத் துரோகத்துக்காக நூற்றுக்கணக்கான போர்க்குணம் மிகுந்த தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் தங்கள் உயிரால் விலை கொடுத்தனர்.

29.  புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் விவசாயிகளும்

29-1. தெற்கில் சமூக அமைதியின்மை பெருகுவதை எதிர்கொண்ட ஜனாதிபதி பிரேமதாச, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக ஒரு திட்டவட்டமான பொது நிலைப்பாட்டை எடுத்து, இந்தியத் துருப்புகள் 1989 ஜூலை அளவில் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரினார். 1989 ஜூன் மாதத்தில் விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவர்களுக்கு இரகசியமாக ஆயுதங்களும் விநியோகித்த அவர், அதன் மூலம் இந்திய இராணுவத்திற்கு எதிரான அவர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு உதவினார். மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் தோல்விகண்ட நிலையில், ஐ.தே.க. அதற்கு எதிராகவும், இன்னும் பரந்தளவில் அதன் சமூக அடித்தளமான சிங்கள விவசாயிகளுக்கு எதிராகவும் திரும்பியது. 1989 நவம்பரில் அதன் உயர்மட்டத் தலைவர் ரோஹண விஜேவீர உட்பட, அநேகமான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களை பாதுகாப்புப் படைகள் கைது செய்ததுடன் கொடூரமாகப் படுகொலையும் செய்தன. இந்தப் படுகொலைகள், அடுத்த இரண்டாண்டுகளில் கிராமப்புற மக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினராலும் அவர்களோடு தொடர்புபட்ட கொலைப் படைகளாலும் முன்னெடுக்கப்படவிருந்த ஏறத்தாழ ஒரு யுத்தத்தின் ஆரம்பமாக இருந்தது. ஒரு மதிப்பீட்டின்படி இதில் 60,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

29-2. இலங்கை ஆளும் வர்க்கத்தின் இந்த திடீர் திருப்பம் புதிய அரசியல் சவால்களை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன் நிறுத்தியதுடன் அவை அனைத்துலகக் குழுவுக்குள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இந்த அரச ஒடுக்குமுறையின் மிகப்பெரும் ஆபத்தைப் பற்றி தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கவும் கிராமப்புற இளைஞர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை எதிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு உத்வேகத்துடன் அழைப்பு விடுக்கவும் வேண்டிய அவசியம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு ஏற்பட்டது. இது வெறுமனே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களின் தலைவிதி குறித்த விடயம் அல்ல, மாறாக, அந்த அமைப்பு தங்கியிருந்த சமூக அடித்தளம் பற்றிய விடயமாகும். 1971 ஏப்ரல் எழுச்சியின் போது அது செய்ததைப் போலவே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது வேலையின் அத்தனை அம்சங்களிலும் அரசாங்கத்திற்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பைப் பராமரிப்பதோடு கிராமப்புற மக்களை பாதுகாப்பதில் வெற்றி காண வேண்டியிருந்தது. அதன் மூலம், சோசலிசப் புரட்சிக்கு அவசியமான தொழிலாள வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டணியை உறுதியாக உருவாக்க வேண்டியிருந்தது.

29-3. தெற்கில் கிராமப்புற இளைஞர்கள் அரச படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதையும் வடக்கில் இந்திய இராணுவம் திரும்பப் பெறப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீதான போர் புதுப்பிக்கப்படுவதையும் எதிர்த்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு பூரணமான அறிக்கையை வெளியிட்டது. சிங்கள மற்றும் தமிழ் கிராமப்புற மக்களின் பாதுகாப்பானது, முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசின் வடிவத்தில் தொழிலாளர்களதும் மற்றும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை நிறுவுவதற்குமான போராட்டத்துடன் பிரிக்கமுடியாதளவு பிணைந்துள்ளது என்று அது விளக்கியது. வடக்கில் போரை ஆதரிப்பதற்காகவும் தெற்கில் கிராமப்புற மக்களைப் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அரசியல் ரீதியான மற்றும் சுயாதீனமான அணிதிரள்வைத் தடுப்பதற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத் தலைமைகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சியையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் குற்றம் சுமத்தியது. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகளின் ஜனநாயக அபிலாசைகளையும் அவர்களை நெருக்கும் பொருளாதாரத் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு இடைமருவுக் கோரிக்கைகளைக் கொண்ட ஒரு விரிவான வேலைத்திட்டத்தை இந்த அறிக்கை செய்து காட்டியிருந்தது. இந்த அடிப்படையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அரச படைகளால் முன்னெடுக்கப்படும் கொடுமைகளை அம்பலப்படுத்தவும் கிராமப்புற இளைஞர்களைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டுவதற்கும் ஒரு விரிவான பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

30. தேசியப் பிரச்சினை

30-1. பால்கன், கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றியதை அடுத்து அனைத்துலகக் குழு தேசியப் பிரச்சினை குறித்த ஒரு தீர்க்கமான மீளாய்வுக்கு மீண்டும் திரும்பியது. லெனின் 1913-16ல் தான் எழுதியவற்றில், ஜாரிசத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் ஆதரவை வெல்வதற்குமான ஒரு வழிமுறையாக “சுய-நிர்ணயத்துக்கான உரிமையை” பரிந்துரைத்தார். ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல்: “இந்த விடயத்தில் போல்ஷிவிக் கட்சி எந்த விதத்திலும் பிரிவினைக் கொள்கையை கையிலெடுக்கவில்லை. பொது அரசின் எல்லைகளுக்குள் ஏதேனும் ஒரு தேசியம் பலவந்தமாக தக்கவைக்கப்படுவது உட்பட, தேசிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக சமரசமற்று போராடுவதற்கான கடமைப்பாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டது. இந்த வழியில் மட்டும் தான் ரஷ்யத் தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக வென்றெடுக்க முடியும்[65] ஆயினும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான தசாப்தங்களில், பப்லோவாதிகளும்  ஏனைய ஏராளமான குட்டி முதலாளித்துவ போலி-மார்க்சிஸ்டுகளும் “சுய-நிர்ணயத்திற்கான உரிமையை” திட்டமிட்டு திரிபுபடுத்தி, ஏறத்தாழ எந்தவொரு தேசிய-இனப் பிரிவினைவாத கோரிக்கைக்கும் ஆதரவளிக்க தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் கடமைப்பட்டுள்ளது என அர்த்தப்படுத்தின.

30-2. லெனினின் நிலைப்பாடு எப்போதும் சமூகப்-பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியின் அடிப்படையில் நிபந்தனைக்குரியதாகவே இருந்திருக்கிறது. முதலாம் உலகப் போருக்கு சற்று முன்னதாக, லெனின் கிழக்கு ஐரோப்பா, பால்கன் மற்றும் ஜாரிச பேரரசுகளில் சுய-நிர்ணயத்துக்கான உரிமையை பரிந்துரைத்தபோது, அந்தப் பிராந்தியங்கள் இன்னமும் விவசாயிகளின் செல்வாக்கில் இருந்ததோடு முதலாளித்துவமும் தேசிய இயக்கமும் மிகப் பெருமளவில் அவற்றின் குழந்தைப் பருவத்திலேயே இருந்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை அடுத்து, இந்தப் பிராந்தியங்களிலும் மற்றும் உலகைச் சூழவும் நிலைமைகள் மிகப் பரந்தளவில் வேறுபட்டவையாக இருந்தன. முன்னாள்-ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகளதும் முதலாளித்துவவாதிகளதும் சிறு கும்பல்கள், முதலாளித்துவ மீட்சி நிகழ்வுப்போக்கின் பாகமாக, தங்களது சொந்தப் பிராந்தியத்தை உருவாக்கியெடுக்கும் பொருட்டு, கிழக்கு ஐரோப்பா, பால்கன் மற்றும் ரஷ்யாவில் இன, மத உணர்வுகளைத் தூண்டி விட்டனர். இந்த இயக்கங்கள், ஏகாதிபத்திய-விரோதிகளாக இருப்பதற்கு மாறாக, ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெற செயலூக்கத்துடன் முயற்சித்தன. இந்த ஏகாதிபத்திய சக்திகள், பால்கனின் விடயத்தில் போல், தங்களது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய இலட்சியங்களை முன்நகர்த்துவதற்கான கருவியாக பிரிவினைவாதத்தை ஊக்குவித்தன. லெனினது காலத்தில், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலுமான காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளின் தேசிய இயக்கங்கள் ஆரம்பித்திருக்கவும் கூட இல்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் பின் “சுதந்திரம்” பெற்ற இந்த தேசிய இயக்கங்கள், அடிப்படை ஜனநாயகக் கடமைகளை தீர்ப்பதில் பரிதாபகரமாகத் தோல்விகண்டமையே இனம், மதம், மற்றும் மொழி அடிப்படையிலான புதிய பிரிவினைவாதப் போக்குகள் முளைத்தெழுவதற்குக் காரணமாகியது. 

30-3.. உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது இருபதாம் நூற்றாண்டின் முடிவில் தேசிய-பிரிவினைவாத இயக்கங்கள் பரவுவதற்கு பிரதான காரணியாக இருந்தது. பூகோளமயமாக்க நிகழ்வுப் போக்கானது பூகோளச் சந்தை மற்றும் பூகோள ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், தேசிய சந்தை மற்றும் தேசியரீதியில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியின் முக்கியத்துவத்தை பரந்தளவில் குறைத்துள்ளது. அனைத்துலகக் குழு விளக்கியது போல்: “புதிய பூகோள பொருளாதார உறவுகள், தற்போதைய அரசுகளில் இருந்து பிரிந்துபோக முனைகின்ற, ஒரு புதிய வகை தேசியவாத இயக்கத்திற்கு புறநிலை உந்துதலை வழங்கியுள்ளன. உலகளாவியரீதியில் நகரும் மூலதனம், உலகச் சந்தையுடன் தம்மை நேரடியாக இணைத்துக்கொள்ளும் இயலுமையை சிறிய பிராந்தியங்களுக்கு வழங்கியுள்ளது. ஹொங் கொங், சிங்கப்பூர் மற்றும் தைவானும் அபிவிருத்தியின் புதிய மாதிரிகளாக ஆகியிருக்கின்றன. ஒரு சிறிய கடற்கரைத் தீவு போதுமான போக்குவரத்து இணைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மலிவு உழைப்பு விநியோகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால், அது, குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட ஒரு பெரிய நாட்டைக் காட்டிலும், பன்னாட்டு மூலதனத்துக்கான அதிக கவர்ச்சிகரமான தளமாக நிரூபணமாகலாம்[66]

30-4. புதிய பிரிவினைவாத இயக்கங்களின் பண்பை சுருங்க விவரித்த அனைத்துலகக் குழு விளக்கியதாவது: “இந்தியாவிலும் சீனாவிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியின் தேசிய இயக்கங்கள், “ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சிதறிக் கிடக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் முற்போக்கான கடமையை மேற்கொண்டன. இந்தப் பணி தேசிய முதலாளித்துவத்தின் தலைமையின் கீழ் எட்ட முடியாதது என்பது நிரூபணமானது. புதிய வடிவிலான தேசியவாதம், உள்ளூர் சுரண்டல்காரர்களின் ஆதாயத்திற்காக நடப்பில் உள்ள அரசுகளை பிரிக்கும் நோக்கத்துடன் இன, மொழி மற்றும் மதத்தின் அடிப்படையிலான பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது. இத்தகைய இயக்கங்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அதேபோல் எந்த அர்த்தத்திலும் அவை ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளின் வடிவமாகவும் இல்லை. அவை தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் வர்க்கப் போராட்டத்தை இன-வகுப்புவாதப் போராட்டமாக திசைதிருப்புவதற்குமே சேவை செய்கின்றன[67] தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் நோக்கத்தில், அனைத்துலகக் குழுவானது, தேசிய பிரிவினைவாத இயக்கங்கள் பெருகுவதையும் மற்றும் அவை தனித்தனியான முதலாளித்துவ அரசுகள் உருவாவதை நியாயப்படுத்துவதற்கு “சுய-நிர்ணய உரிமையைப்” பயன்படுத்துவதை பற்றியும் ஒரு விமர்சனரீதியான அணுகுமுறையை, இன்னும் குரோதமானதுமான  அணுகுமுறையையும் கூட வலியுறுத்தியது

30-5. தேசிய முதலாளித்துவம் ஜனநாயகப் புரட்சியை கருவறுத்தமையும் மற்றும் அதனதன் தேசியவாத வேலைத்திட்டத்தின் தோல்வியும் மதம், சாதி, மொழி மற்றும் இனத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்தரப்பட்ட பிளவுபட்ட முதலாளித்துவப் போக்குகளை உருவாக்கியிருக்கக் கூடியதான தெற்காசியாவிற்கு இந்தப் பகுப்பாய்வு குறிப்பாகப் பொருந்தும். இந்தியாவில், தேசியப் பொருளாதாரக் கட்டுப்பாடு என்னும் பழைய திட்டங்களில் இருந்து திரும்பி அந்நிய முதலீட்டையும் உலகளாவிய உற்பத்தி முறைகளுக்குள் ஒருங்கிணைப்பையும் தழுவிக் கொண்டதானது பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தியிருப்பதோடு சமூக சமத்துவமின்மையையும் ஆழப்படுத்தயிருக்கிறது. இதன் விளைவான சமூக நெருக்கடியும் வெகுஜன சீற்றமும், பல்வேறு முதலாளித்துவ போக்குகளால், காஷ்மீர், தமிழ்நாடு, அஸாம் மற்றும் வட-கிழக்கின் ஏனைய பாகங்களில் இனரீதியில் வரையறுக்கப்பட்ட தனியான தேசிய அரசுகளை உருவாக்குவதற்கு நெருக்குவது உட்பட, இனப் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க சுரண்டிக்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துலகக் குழு விளக்கியதாவது: “பழைய முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் உடைவிற்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி எவ்வாறு பதிலிறுப்பு செய்கிறது? என்பதே இங்குள்ள முக்கிய கேள்வியாகும். இந்த நாடுகளின் வெகுஜனங்கள், காலனித்துவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு (decolonisation) மத பிரத்தியேகவாதத்தினால (particularism) நிறுவப்பட்ட அரசுத் துண்டுகளை அடிப்படையாகக் புதிய பிரிவினைவாத இயக்கங்களின் ஊடாக தங்களது நலன்களை முன்னெடுக்க வேண்டுமா? அத்தகையதொரு முன்னோக்கை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்தியாவில் அல்லது வேறெங்கிலும் சரி, அத்தகைய குட்டி அரசுகள் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எந்த முன்னேற்றமான வழியையும் வழங்காது. அதிகப்பட்சம், அவற்றால் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்கி, நாடு கடந்த மூலதனத்துடன் தனது சொந்த ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொள்ள முடியுமெனில், தனியந்தஸ்து பெற்ற வர்க்கங்களின் ஒரு சிறிய பிரிவினருக்காக அந்த அரசுகளால் இலாபத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் வெகுஜனங்களைப் பொறுத்தவரை, இனமோதல்களின் இரத்த ஆறு ஓடுவதற்கும், சுரண்டல் உக்கிரமாக்கப்படுவதற்கும் மட்டுமே வாய்ப்பை ஏற்படுத்தும்.”[68]

30-6. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கலந்துரையாடலின் பாகமாக, “தமிழ் மக்களின் சுய நிர்ணய” உரிமைக்கு ஆதரவளிப்பதானது, நடைமுறை அரசியல் அர்த்தத்தில், முற்போக்கான உள்ளடக்கம் எதையும் கொண்டிருக்காத விடுதலைப் புலிகளின் தேசிய பிரிவினைவாத வேலைத்திட்டத்தை ஆதரிப்பதை மட்டுமே அர்த்தப்படுத்தும் என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முடிவு செய்தது. 1990ல் போர் மீண்டும் தொடங்கியபோது, புலிகள் மேலும் மேலும் ஆழமான ஜனநாயக-விரோத மற்றும் இனவாதப் பண்பை எடுத்தனர்: அரசியல் எதிர்ப்பை சட்டவிரோதமாக்குவது மற்றும் அரசியல் எதிரிகளைக் கொலைசெய்வது; முஸ்லீம்கள் அனைவரையும் “எதிரியின் முகவர்கள்” எனக் கண்டனம் செய்து அவர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது; சிறைப்பிடித்த இராணுவத்தினரையும் பொலிசையும் கொலைசெய்வது; மற்றும் அப்பாவி சிங்கள மக்களை கண்மூடித்தனமாக கொல்வது ஆகியவை அதில் அடங்கும். புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை நிராகரிக்கும் அதே வேளை, தீவின் ஒற்றிணைப்பை இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாகப் பராமரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்  தொடர்ந்து விட்டுக்கொடுப்பின்றி எதிர்த்து வந்துள்ளது.  வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இராணுவப் படைகள் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்ற அதன் கோரிக்கை, எந்தவிதத்திலும் ஒரு தனி ஈழத்தை ஆதரிப்பதை அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, தமிழர்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறையை எதிர்ப்பதில், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஐக்கியப்படுத்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முயற்சிக்கின்றது.

61. [உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்] The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, pp. 6–7.

62. அதே நூல் பக்கம் 70-71

63. [டேவிட் நோர்த் எழுதிய “மார்க்சிசத்துக்கான போராட்டமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்”.] David North, “The Struggle for Marxism and the Tasks of the Fourth International,” Fourth International, Volume 19, Number 1, Fall Winter 1992, p. 74.

64. [நான்காம் அகிலம்] Fourth International, Volume 16, Nos. 1–2, p. 1.

65. [லியோன் ட்ரொட்ஸ்கியின் ரஷ்யப் புரட்சியின் வரலாறு] Leon Trotsky, History of the Russian Revolution, Volume 3 (London: Sphere Books, 1967) pp. 41–42.

66. [பூகோளமயமாக்கமும் அனைத்துலகத் தொழிலாள வர்க்கமும்]International Committee of the Fourth International, Globalisation and the International Working Class, Mehring Books, 1998, p. 108.

67. அதே நூல் பக்கம் 109.

68. அதே நூல் பக்கம் 115..