Print Version|Feedback
Tamil nationalists back stepped-up police-state repression in Sri Lanka
தமிழ் தேசியவாதிகள் இலங்கையில் பொலிஸ்-அரச அடக்குமுறை நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்
By K. Nesan
16 August 2017
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டில், கடந்த மூன்று வாரங்களாக சுமார் 100 பேர் வரை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாத பிற்பகுதியில் எண்ணெய் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்கு இலங்கை இராணுவம் அணிதிரட்டப்பட்டதிலிருந்து, உள்நாட்டுப் போர் காலத்தில் போல், பாதுகாப்புப் படைகள் குடாநாடு முழுவதும் வீதித் தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகளை அமைத்து, பொது மக்கள் மத்தியில் பீதியையும் பயத்தையும் பரப்பியுள்ளனர்.
2015 ஜனவரியில், அமெரிக்க திட்டமிடலில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே, அரசாங்கம் அதிகரித்த வகையில் சமூக சீற்றத்தை தடுக்க பொலிஸிலும் இராணுவத்தில் பெரிதும் தங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள பொலிஸ் பயங்கரவாதமானது தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகள் மீதான தீவிரப்படுத்தப்படும் தாக்குதல்களின் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டதாக சொல்லப்படும் கொலை முயற்சியே இந்த அடக்குமுறையை முன்னெடுப்பதற்கான சாக்குப் போக்காக பயன்படுத்தப்படுகிறது. ஜூலை 22 அன்று இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு தெரு மோதலில் தலையிட்டபோது, ஒரு தாக்குதல்காரர் இளஞ்செழியனின் போலிஸ் பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியினை பறித்து சுட்டதில் அந்த அதிகாரி கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த போது இளம்செழியன் பயணித்த வாகனம் ஒரு போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டிருந்தது. சில மணி நேரத்தில், அந்தத் தாக்குதல் நீதிபதியை இலக்காகக் கொண்டதல்ல என்று போலீசார் அறிவித்தனர்.
பல தடவைகளில் சந்தேக நபர்களின் சட்ட உரிமைகளை மறுத்தும், அவரது சட்டம் ஒழுங்கு கண்ணோடத்திற்காகவும் அபகீர்த்தி பெற்றவரான இளஞ்செழியன் அரச தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார். "யாழ்ப்பாணத்தில் மிகவும் ஆபத்தான வழக்குகளை நான் கையாள்கிறேன். நீதித்துறை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நான் அதிகாரிகளுக்கு அழைப்புவிடுக்கிறேன்," என அவர் பிரகடனம் செய்தார்.
அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் "பயங்கரவாதம்" இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தன. மதத் தலைவர்களுடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் சந்திப்பு ஒன்றை நடத்திய பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர, யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகள் நிலைநிறுத்தப்படும் என அச்சுறுத்தினார். "பயங்கரவாதம் நாட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றப்படவில்லை, புலிகள் அமைப்பு மீண்டும் வருவதற்கான முயற்சிகளை என்ன விலை கொடுத்தாவது தோற்கடிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
தமிழ் தேசியவாத அமைப்புக்கள் பொலிஸ் மற்றும் இராணுவ பிரிவுகளை அனுப்புவதற்கான அரசாங்கத்தின் அழைப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன், ஜயசுந்தராவின் அறிக்கையையோ பொலிஸ் பயங்கரவாதத்தையோ பற்றி கருத்துத் தெரிவிக்காத அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், பொலிஸை பாதுகாத்து, குற்றவியல் கும்பல்கள் இப்பகுதியில் செயற்படுவதாகவும் தெரிவித்தார். சிறிசேனவின் "நல்லாட்சி" அரசாங்கத்தை இழிவுபடுத்த இராஜபக்ஷவும் கூட்டு எதிர்ப்பும் இந்தக் கும்பல்களை பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், "யுத்த பயிற்சி பெற்றவர்கள்" இத்தகைய குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக கூறி, ஜயசுந்தராவின் அறிக்கையை நியாயப்படுத்தினார். இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கு தனது அனுதாபத்தை சுட்டிக்காட்டிய அவர், "வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன். ஆனால் குற்றங்கள் நடைபெறும் பொழுது அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டம், ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்" என்றார்.
தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி மேலும் அவர், குற்றவாளிகளுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்துவதை எதிர்க்கும் எவரும், உண்மையில் குற்றவாளிகளை ஆதரிக்கின்றனர் என மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை எதிர்ப்பவராக விக்னேஸ்வரனை பொதுவாக தமிழ் தேசியவாதிகள் சித்தரிக்கின்றனர். விக்னேஸ்வரன் அவ்வப்போது அரசாங்கத்திற்கு மேல் வைக்கும் சம்பிரதாய விமர்சனங்களின் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது வளர்ச்சியடைந்து வரும் தமிழ் தொழிலாளர்கள், ஏழைகளின் வெறுப்பினை தமிழ் தேசியவாத முட்டுச்சந்திக்குள் திருப்பி விடுவது என்பதை இந்த நிகழ்வுகள் அடிகோடிட்டு உறுதி செய்கின்றது.
தமிழ் தேசியவாதிகள் அடக்குமுறைகளை ஆதரிப்பது, ஆழமான அரசியல் நெருக்கடியின் தோற்றத்தை பிரதிபலிக்கிறது. சமீபத்திய எரிபொருள் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் நிரூபிக்கப்பட்டதைப் போல, சிறிசேன அரசாங்கம் வெகுஜனங்கள் மத்தியில் மதிப்பிழந்து, தொழிலாள வர்க்கத்தின் ஆழமான எதிர்ப்பை முகங்கொடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது போன்ற அதன் பொருளாதார நோக்கங்களை சிறிசேன அடையவில்லை என முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகள் புகார் கூறுகின்றன. அவர்கள் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு ஆக்கிரோஷமான மோதலை கோருகின்றனர், மேலும் வெகுஜனங்களுக்கு எதிராக சர்வாதிகார, பொலிஸ்-அரச பயங்கரவாதத்துக்கு அழைப்புவிடுக்கின்றனர்.
"எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள்: எம்.ஆர் [மஹிந்த ராஜபக்ஷ] அதிகாரத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?" என்ற தலைப்பில் டெய்லி மிரர் பத்திரிகை ஒரு ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டது. இந்த கட்டுரை, "தீர்க்கமான முறையில் செயல்பட கூடிய" இராஜபக்ஷவைப் போல் அன்றி, சிறிசேனவின் அரசாங்கம், "தனது பொருளாதார மற்றும் அரசியல் நோக்கத்தை நடைமுறைப்படுத்த அரசியல் குறிக்கோள் குறைவால் முடங்கிப் போயுள்ளது" என முறைப்பாடு செய்கின்றது.
இராஜபக்ஷவிற்கு, எதிர்ப்பாளர்களை அகற்ற இராணுவத்தை அனுப்பவும், சில நேரங்களில் காணாமல் ஆக்கப்பட போகின்றவர்களை கடத்துவதற்கு குண்டர் படை மற்றும் வெள்ளை வேன்களைப் பயன்படுத்தும் “அரசியல் திறன்” இருந்தது என்று மிரர் கூறிக்கொள்கின்றது. அவர் அதிகாரத்தில் இருந்திருந்தால், வேலைநிறுத்தம் செய்த “டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்ய துணிந்திருக்க மாட்டார்கள். பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பார்கள், ஆனால் இப்போது செய்வது போல் அடிக்கடி அல்ல."
தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொலைகார அடக்குமுறைக்கு ஒப்புதல் அளித்த மிரர், "காந்தியும் அவரது சுயபூர்த்தி கொள்கையும், இந்தியாவின் மில்லியன் கணக்கான ஏழைகளின் மோசமான வாழ்க்கை நிலைமையை உயர்த்துவதற்கு செய்தவை மிகச் சொற்பமே. ஆனால் நரேந்திர மோடி செய்தார். ஆகுஸ்டோ பினோசே மற்றும் டெங் சியோபிங்கும் செய்தனர். பிந்தைய மூவரும் உங்களது ஒரு சிறந்த அரசாங்கத்திற்கான சிறந்த தலைவராக இருக்க மாட்டார்கள். இருப்பினும், உலகம் கற்பனையானது அல்ல, தலைவர்கள் தங்கள் மக்களின் நீண்டகால நலன்களுக்காக உண்மையிலேயே சேவையாற்ற வேண்டும் என்றால், கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்."
இந்த அறிக்கை காலனித்துவ எதிர்ப்பு உணர்வை அசாதாரணமாக நிராகரிக்கின்றது மற்றும் இந்த கருத்துக்கள் உலக ஏகாதிபத்தியத்தின் பக்கம் டெய்லி மிரர் சார்ந்திருப்பதை காட்டுகிறது. பினோசே, சிலி நாட்டு இராணுவ சர்வாதிகாரியாவார். டெங், முதலாளித்துவத்தை மறு ஸ்தாபிதம் செய்தவதை மேற்பார்வை செய்த சீன ஸ்ராலினிசவாதி ஆவார். மற்றும், தற்போதைய இந்தியப் பிரதமர் 2002ல் முஸ்லீம்-விரோத படுகொலைகளின் போது குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்தவர். இவர்கள் அனைவரும், தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்கு, பரந்த படுகொலைகளை மேற்பார்வை செய்தவர்கள், மற்றும் தங்களது நாடுகளை ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் மலிவு கூலி உழைப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக ஆக்கினர்.
வடக்கில் பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசியவாதிகள் ஆதரவு வழங்குவதானது, இலங்கை முதலாளித்துவ வர்க்கத்துக்குள் இருந்து இப்போது எழும், தொழிலாள வர்க்கத்தை ஈவிரக்கமற்று நசுக்குவதற்கும் சுரண்டுவதற்குமான வெறித்தனமான கோரிக்கைகளின் மற்றொரு வெளிப்பாடு ஆகும்.
2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் கூட்டமைப்பும் தமிழ் தேசியவாதிகளும், "நல்லாட்சியை" பெறவும் "ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிக்கவும்" மற்றும் இராஜபக்ஷவின் பொலிஸ்-இராணுவ அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்க-ஆதரவு பெற்ற வேட்பாளரான சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களை வலியுறுத்தினர். புதிய அரசாங்கம் யாழ் குடாநாட்டை போலவே வட இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வறுமைக்கு விரைவான நிவாரணம் வழங்கும் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தனர்.
புதிய அரசாங்கமானது அரசியல் கைதிகளை விடுதலை செய்யும், மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையை நடத்தும் என தமிழ் கூட்டமைப்பு வாக்குறுதியளித்தது. இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள், காணாமற்போன ஆயிரக்கணக்கானோரின் விவகாரம் தெளிவுபடுத்தப்படும், யுத்த விதவைகளுக்கு நட்ட ஈடு வழங்கப்படும், மற்றும் இராணுவம் பொது மக்களின் காணிகளில் இருந்து வெளியேறும், போன்ற வாக்குறுதிகளையும் அது கொடுத்தது.
அதன் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றாததோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்து சமுத்திரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த தயாரிப்புகளின் கருவியாக சேவையாற்றும், போர் குற்றவாளிகளை உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்துடன் அணிசேர்ந்துள்ளது. சிறிசேனவின் கீழ் கிட்டத்தட்ட மூன்று ஆண்டு கால "நல்லாட்சி" இன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும், அனைத்து இனங்களும் அடங்கிய இலங்கை தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மீது தாக்குதல் நடத்தவும் உதவுகிறது.
பாரம்பரியமாக, தமிழ் தேசியவாதிகள் தங்களை தமிழ் சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டு, தெற்கில் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டங்கள் பற்றி கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து வந்தனர். எவ்வாறெனினும், இப்பொழுது, தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக வேலைநிறுத்தங்களை கண்டனம் செய்வதோடு தெற்கில் தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்த கோருகிறது.
கடந்த மாதம் எரிபெருள் தொழிலாளர் வேலைநிறுத்தம் வெடித்தபோது, இராஜபக்ஷவுடன் சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக ஒரு பாராளுமன்ற விவாதத்தில் சம்பந்தன் தொழிலாளர்களை குற்றம் சாட்டினர். "சதித்திட்டங்கள் மூலம் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு செய்வதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது" என்று அவர் குறிப்பிட்டார். பெயரளவிலான ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதியாக இருந்த போதிலும், அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையாக செயல்பட எதேச்சதிகார சட்டங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், "அத்தகைய இயக்கங்களுக்கு எதிராக அரசாங்கம் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும், அந்த முடிவுகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும்" என அவர் கோரினார்.
தனியார்மயமாக்கம் மற்றும் தனியார் வகுப்பு கட்டணங்களுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்த அரசு மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தை (GMOA) கண்டனம் செய்த சுமந்திரன், வேலை நிறுத்தம் செய்த வைத்தியர்களை குற்றவாளிகள் என்றார். பாராளுமன்றத்தில், "தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ கவனிப்பை நீங்கள் மறுத்தால், அது குற்றவியல் அலட்சியம் ஆகும், உங்கள் சொந்த சுயநல நோக்கங்களை அடைவதற்கு நீங்கள் அப்படி செய்தால், அது குற்றவியலைக் காட்டிலும் மோசமானது என்று நான் கூறுவேன்," என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகள், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசியவாதிகளும் சிறிசேன அரசாங்கத்தின் அச்சாணியாக செயல்படுகின்றனர் என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வை நிரூபிக்கின்றன. அவர்கள் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு உடந்தையாக இருப்பதுடன், சிறிசேனே அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துடன் முழுமையான மோதலுக்குத் தயாரிக்கின்ற நிலையிலும் அதை ஆதரிக்கின்றது.