Print Version|Feedback
Lessons of protests against murder of Jaffna University students in Sri Lanka
இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களது கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் படிப்பினைகள்
By K.Nesan and V. Gnana
24 November 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவு தமிழ் மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர், நாடெங்கிலும் நடந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் தொழிலாளர்களுக்கு முக்கியமான அரசியல் படிப்பினைகளை வழங்குகின்றன. நாடு முழுமையிலும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த போலிஸ் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 20 அன்று, ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பவுன்ராஜ். சுலக்சன் மற்றும் நடராசா. கஜன் மீது இலங்கை போலிஸ் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மரணகரமான விபத்து நிகழ்ந்தது. அந்த இருவரில் ஒருவரது மார்பிலும் தலையிலும் துப்பாக்கிரவைகள் கண்டெடுக்கப்பட்டன; இன்னொருவர் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்குப் பகுதியின் பத்து பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் இந்த கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த கொலைகளுக்கு அரசாங்கத்தைக் குற்றம்சாட்டிய அவர்கள், மாணவர்கள் கொல்லப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரினர். ஊடக மற்றும் சிவில் அமைப்புகள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இணைந்து கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாகாணங்களில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிகழ்வுகள், அமெரிக்க ஆதரவுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் “நல்லாட்சி” அரசாங்கம் அமர்த்தப்பட்டது முதலாகவே சோசலிச சமத்துவக் கட்சி (SEP) காட்டி வந்திருந்த எதிர்ப்பை சரியென நிரூபணம் செய்துள்ளன. சுலக்சனும், கஜனும் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு துன்பியலான விபத்து அல்ல. இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக சிறிசேன மற்றும் அவரது தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) கூட்டுக்கள் திணித்த போலிஸ்-அரசு நிலைமைகளில் இருந்தே இது நேரடியாய் ஊற்றெடுக்கிறது.
சிறிசேன ஆட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராய் செப்டம்பர் 24 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மக்களின் எதிர்ப்புணர்வு இன்னும் பெருகிச் செல்லும் நிலைக்கு மத்தியிலும், வெகுஜனங்கள் தன்னியல்பாக இன பேதங்களை கடந்து தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கு முனைப்பு காட்டி வருவதன் மத்தியிலும் தான் இந்தக் கொலை நடந்தேறியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் கூட்டாக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்திருந்தனர் என்பதோடு, சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் போலிஸ் கொலைகளுக்கு எதிராக ஒரே அறிக்கையையே வாசித்தனர்.
ஆயினும், போலிஸ்-அரசு நடவடிக்கைகளையும் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இனரீதியாக பிளவுபடுத்துவதற்கு ஆளும் வர்க்கம் செய்கின்ற முயற்சிகளை எதிர்ப்பதற்கு, உணர்மைமிக்க ஒற்றுமை உணர்வு மட்டுமே போதுமானதாக இருக்கப் போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் மற்றும் கொழும்பு ஆட்சிக்கும் எதிரான போராட்டத்திலும், தமிழ் மற்றும் சிங்கள தேசியவாதத்திற்கு எதிரான ஒரு தயவுதாட்சண்யமற்ற போராட்டத்திலும் இன வேறுபாடுகளை கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டம் அங்கே கண்டிப்பாக தேவைப்படுகிறது.
மாணவர்களும் அவர்களது குடும்பத்தாரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு குரோதமாகவே உள்ளனர், அதன் தலைவரான ஆர்.சம்பந்தன் சிறிசேனாவை சந்தித்து இக்கொலை குறித்த “பாரபட்சமற்ற விசாரணைக்கு” ஆலோசனையளித்தார். வடக்கு மாகாணத்தின் கல்வித்துறை அமைச்சரான தம்பிராஜா குருகுலராஜா கிளிநொச்சியின் ஒரு தொழிலாள வர்க்க பகுதியில் நடந்த கஜனின் இறுதி ஊர்வலத்தில் பேசுவதற்கு முயற்சி செய்தபோது, மாணவர்கள் அவரது கையிலிருந்த மைக்கை பிடுங்கி பத்திரிகையாளர்களை அகன்று விடுமாறு கூறியதை அடுத்து, அவர் அங்கிருந்து தப்பிக்க நேரிட்டது.
தமிழ்நெட்டில் இருக்கும் தனது எடுபிடிகளைக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு இதற்களித்த பதிலில், “ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பங்குபெறுவதற்கு அடித்தட்டு மக்களை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க மறுத்ததற்காக மாணவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்” என்று எழுதியது.
மாணவர்கள் உணர்மை ரீதியாகவே தமிழ் தேசியவாதிகளை எதிர்க்கின்ற அதேநேரத்தில், மாணவர் அமைப்புகளின் தலைவர்களோ தமிழ் தேசியவாதத்தை தங்களுக்கு அடித்தளமாகக் கொள்வதுடன், “அரசியல் வேண்டாம்” என்ற பிற்போக்குத்தனமான அழைப்புகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான மறைப்பையும் வழங்குகின்றனர். ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சிறிசேனவும் பல்கலைக்கழக நிர்வாகமும் விடுத்த அழைப்புகளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். சிறிசேனவுடனான சந்திப்பின்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் சம்பந்தன் வைத்த அதே கோரிக்கைகளாகவே இருந்தன.
ஒரு விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட போலிஸ்காரர்களை தண்டிக்கவும், அத்துடன் மாணவர்களைப் பறிகொடுத்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கேட்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அவர்களது முன்னோக்கு இருந்தது. சிறிசேன ஆதரவு யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு, துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் தலைமையில், சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை வழங்கியது. வசந்தி அவரின் கணிப்பை இவ்வாறு தெரிவித்தார்: “மாஜிஸ்திரேட் விசாரணையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் [மாணவர்களது] பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் இரண்டு மாணவர்களின் மரணம் குறித்த சட்ட நடைமுறையை துரிதப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை [அரசாங்கம்] எடுக்கும்.”
சிறிசேனவுக்கு அவரது அரசியல் கூட்டாளிகள் மூலமாக முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோரிக்கைகள் முற்றிலும் கையாலாகத்தனமானவை என நிரூபணமாயின. கொலைகள் நடந்து ஒரு மாதத்திற்கு பின்னரும், சம்பந்தப்பட்ட போலிஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதாக வந்த மேலோட்டமான வாக்குறுதிகளைத் தவிர்த்து, விசாரணையில் இருந்து வேறொன்றும் வெளிவந்திருக்கவில்லை. இதனிடையே, வடக்கில் பரவும் கைதுகளின் ஒரு அலையுடன் இராணுவ-போலிஸ் ஆக்கிரமிப்பானது மேலும் தீவிரப்படவே செய்திருக்கிறது.
விசேட அதிரடிப் படை (STF) மற்றும் உளவுப் படைகள் உள்ளிட்ட புதிய போலிஸ் படைகள், இந்தக் கொலைகளை விசாரணை செய்வதான பேரில் அனுப்பப்பட்டிருக்கின்றன. “ஆவா குழுவை” சேர்ந்தவர்கள் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் பல்வேறு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வடக்கில் போலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான போராட்டத்தை கையிலெடுக்கையில், தமிழ், சிங்கள தொழிலாளர்களும் இளைஞர்களும் இலங்கையில் உள்ள ஆளும் முதலாளித்துவ உயரடுக்குடன் மட்டுமல்லாது, அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மோதலிலும் நுழைகின்றனர். தமிழ் தேசியவாதிகளுக்கும் மற்றும் கொழும்பில் இருக்கும் ஆட்சியின் அத்தனை கன்னைகளுக்குமான நனவான எதிர்ப்பின் மூலமாக மட்டுமே இந்தப் போராட்டம் அபிவிருத்தியடைய முடியும். அவர்கள் ஏகாதிபத்தியத்துடனோ அல்லது சீனாவில் இருக்கும் முதலாளித்துவ ஆட்சியுடனோ பிணைந்திருக்கும் ஊழலடைந்த இலங்கை முதலாளித்துவத்தின் அடுக்குகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இலங்கை போலிசுக்கும் ஆதரவாக வெறுமனே இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகள் மட்டும் இருக்கவில்லை. அமெரிக்கா, சீனாவுக்கு எதிரான தனது “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யின் பகுதியாக, சென்ற ஆண்டில் ஆட்சிமாற்ற நடவடிக்கையை ஒழுங்கமைத்து, சீன ஆதரவு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அகற்றி விட்டு அவரிடத்தில் சிறிசேனவை பிரதியிட்டது. யாழ்ப்பாணத்தை சுற்றிலும் இராணுவமும் போலிசும் நிறுத்தப்படுவதை, சீனாவுடன் போர் நேருகின்ற சந்தர்ப்பத்தில் தான் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க விரும்புகின்ற ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ஒழுங்கை பராமரிப்பதற்கு முக்கியமான நடவடிக்கையாக அமெரிக்கா கருதுகின்றது.
சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, ஆசியாவில் ஏகாதிபத்தியத்தின் போர் முனைப்புக்கு அது காட்டும் எதிர்ப்பின் அடிப்படையில் இந்த ஆட்சி-மாற்ற நடவடிக்கையை எதிர்த்தது. உண்மையில், சிறிசேன இலங்கைக்கு “நல்லாட்சி”யைக் கொண்டு வருவார் என்பதான அமெரிக்காவின் பாவனை இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே நொருங்கிப் போய்விட்டது. சிறிசேனவும் அவரது வலது-சாரி பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் பொருளாதார தாராளவாத நடவடிக்கைகளையும் அறிமுகம் செய்து, தொழிலாளர்களையும் ஏழைகளையும் தாக்கினர். நாடாளுமன்றத்தில் 2017 இல் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கைக்கான ஆலோசனைகள் புதிய கொடூரமான தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதையே நிரூபிக்கின்றன.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பல தசாப்தங்களாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறிசேனாவும் சம்பந்தனும் வாக்குறுதியளித்தனர். ஒரு சிலர் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். எஞ்சிய கைதிகளை விடுதலை செய்வது குறித்த கேள்விக்கு, சிறைச்சாலை சாவிகளை தான் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு அலையவில்லை என்று சம்பந்தன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சிடுமூஞ்சித்தனமாக அறிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளில் எதுவுமே முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளின் மூலமாக தீர்க்கப்பட முடியாது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கோபம் பெருகிச் செல்வதன் மத்தியில், இத்தீவில் பல தசாப்த காலமாக குருதிகொட்டுதலையும், உள்நாட்டுப் போரையும் உருவாக்கியிருந்த பிரித்தாளும் பழைய தந்திரத்திற்கே அவர்கள் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழர்-விரோத வகுப்புவாதத்தை கிளறி விடுவதன் மூலமாக பொதுமக்களின் கோபத்தை கைப்புரட்டு செய்வதே, பெருமளவுக்கு சீனக் கடன்கள் மீது சார்ந்திருக்கும் சிறிசேனவின் ஆட்சியின் நெருக்கடிக்கு, இராஜபக்ஷவின் “பொது எதிர்ப்பு அணி” காட்டும் பதிலிறுப்பாக இருக்கிறது. இது, தனது கூட்டுக் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு வடக்கில் போலிசையும் ஆக்கிரமிப்பு இராணுவப் படைகளையும் ஆதரித்து வருகிறது. சிங்கள இனவாதக் கட்சியான JHU வின் தலைவரான நிஷாந்தா சிறீ வர்ணசிங்க, குற்றவியல் நடவடிக்கைகளின் பின்னால் ”புனர்வாழ்வு” அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் காரியாளர்கள் இருப்பதாகக் கூறி, போலிஸ் கொலைகளை பாதுகாத்துப் பேசினார். இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அத்தனை 12,000 பேர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.
தமிழ்நெட் தனது பங்காக, யாழ்ப்பாணத்தில் போலிஸ் கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக, ஒட்டுமொத்த சிங்கள மக்களின் மீதும் அவதூறான வகையில் தாக்கியுள்ளது. பெயர்கூறப்படாத ஒரு “மூத்த மாணவர் தலைவரை” மேற்கோள் காட்டி அது கூறியது: “இந்த நடவடிக்கையானது, தீவின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, இனப்படுகொலை அரசின் நலன்களுக்கு சேவைசெய்யும் விதமாய் தனது கரங்களில் ஆயுதங்களைச் சுமக்கின்ற ஒவ்வொரு சிங்களவனுக்கும் துணிச்சலூட்டியிருக்கிறது.”
சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் மாணவர் அமைப்பான சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் போர் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தமது பணிகளின் மையத்தில் கொண்டுள்ளன. யாழ்ப்பாணத்திலும் மற்றும் இலங்கை முழுமையிலும் சோசலிச சமத்துவக் கட்சியையும் அதன் மாணவர் அமைப்பான சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பையும் ஆதரிப்பதற்கும், அவற்றைக் கட்டியெழுப்புவதற்கும் முன்வர வேண்டும் என தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.