ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு |
WSWS : Tamil : நூலகம் |
SEP (Australia) first national congress Resolution 3: Oppose the US war drive against China சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) முதலாம் தேசிய காங்கிரஸ்தீர்மானம் 3: சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பை எதிர்ப்போம் 9 May 2012 Use this version to print | Send feedback பின்வருவது 2012 ஆம் ஆண்டில் ஏப்ரல் 6 முதல் 9 வரை சிட்னியில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) முதலாம் தேசிய காங்கிரசில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்களில் மூன்றாவதாகும். 1. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை மறு உறுதி செய்வதற்கும் இராணுவ வழிமுறைகளின் மூலமாக தனது உலக மேலாதிக்கத்தைப் பராமரிப்பதற்கும் முனைந்து வரும் அமெரிக்காவின் தலைமையில் சீனாவிற்கு எதிராக தயாரிப்பு செய்யப்பட்டு வரும் ஏகாதிபத்தியப் போருக்கான தயாரிப்புகளை சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த காங்கிரஸ் கண்டனம் செய்கிறது. 2. 2007-2008 இல் வெடித்த உலக நிதி நெருக்கடி அமெரிக்காவின் பொருளாதார நிலையில் நிகழ்ந்திருந்த நீண்டகால அரசியல் பின்விளைவுகளைக் கொண்ட வரலாற்று வீழ்ச்சியை மேற்தளத்திற்குக் கொண்டுவந்தது. எண்பது வருடங்களுக்கு முன்பே ட்ரொட்ஸ்கி விளக்குகையில், அமெரிக்கா தனது எதிரிகளின் செலவில் தனது “பிரச்சனைகளையும் சிக்கல்களையும்” தீர்ப்பதற்கு முனைகின்றதொரு நிலையில், “அமெரிக்காவின் மேலாதிக்கம் என்பது பொருளாதார எழுச்சிக் காலகட்டத்தைக் காட்டிலும் நெருக்கடியின் காலகட்டத்தில் தான் மிகவும் முழுமையாகவும், மிகவும் வெளிப்படையாகவும், அத்துடன் மிகவும் ஈவிரக்கமின்றியும் செயல்படும்” என்று கூறினார். ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு முழுமையாக இன்று வரை நிலைத்து நிற்கிறது. 3. சீனாவின் செல்வாக்கு பெருகி வந்ததை, புஷ் ஆட்சி கவனம் செலுத்தாமல் விட்டு விட்டது என்பதான விமர்சனங்களுக்கு பதிலிறுப்பாக, ஒபாமா நிர்வாகம், 2009 இன் மத்தியிலிருந்தே, முந்தைய தசாப்தத்தில் கவனமான வரையப்பட்ட ஆசியாவில் சீனாவின் இராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் நோக்கத்துடனான தாக்குதலைத் தொடக்கியது. ஆசியாவுக்கான புதிய அமெரிக்க “சுழல் மைய நடவடிக்கை”களில் (Pivot) இதுவரை சேர்ந்திருப்பவை பின்வருமாறு: சீனாவின் நட்பு நாடான வட கொரியாவுடனான தென்கொரியாவின் மோதலில் தென்கொரியாவுக்கு ஆதரவு; சர்ச்சைக்குரிய டியாயு/சென்காகு தீவுகள் விவகாரத்தில் சீனாவுடன் ஜப்பான் மேற்கொண்டு வரும் பதட்டத்திற்குரிய மோதலில் ஜப்பானுக்கு ஆதரவு; தைவானுக்கு பெருமளவிலான ஆயுத விற்பனை; தென் சீனக் கடல் பகுதியிலான எல்லைப் பிரச்சினைகளில் அமெரிக்க இராஜதந்திரத் தலையீடு; வியட்நாம், இந்தோனேசியா மற்றும் குறிப்பாக பிலிப்பைன்ஸ் உடன் நெருக்கமான இராணுவ உறவுகள்; கம்போடியாவையும் இன்னும் வெற்றிகரமாய் பர்மாவையும் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து உடைத்துக்கொண்டு வருவதற்கான அமெரிக்க முயற்சிகள்; வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய அமெரிக்க ஏற்பாடுகள்; இந்தியாவுடனான மூலோபாயக் கூட்டை வலுப்படுத்துவது; அத்துடன் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு பிராந்திய “ஜனநாயகங்களின்” ஒரு மூலோபாயத் தொகுப்பினை உருவாக்குவதை நோக்கிய நடவடிக்கைகள். 4. ஒபாமா நிர்வாகத்தின் ஆத்திரமூட்டக் கூடிய இராஜதந்திர-இராணுவ நடவடிக்கைகளை ஒன்றாய் எடுத்துப் பார்த்தால், அவை அமெரிக்க மூலோபாயக் கூட்டணிகளையும், கூட்டுகளையும் மற்றும் தளங்களையும் பயன்படுத்தி சீனாவைச் சுற்றிவளைப்பதையே நோக்கமாய் கொண்டிருப்பதைக் காண முடியும். ஜனவரியில் வெளியிடப்பட்ட பென்டகனின் மூலோபாய ஆவணம், அமெரிக்க இராணுவம் “ஆசிய பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய மறுசமநிலை”க்கு முனைந்து வருவதாகவும், “இப்பிராந்தியத்தில் உரசல் ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பு” சீனாவின் மீது தான் என்றும் வெளிப்படையாக அறிவிக்கிறது. மோதல் ஒன்று உருவாகும் பட்சத்தில் சீனா மீது அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை ஒன்றுக்கு வழிவகை செய்யத்தக்க வகையில் தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமான முக்கியமான கடல் “நீர்வழிப்பாதைகள்” மீது கட்டுப்பாட்டை உறுதி செய்வது தான் அமெரிக்க இராணுவத் திட்டமிடலின் மையமான கவனப் புள்ளியாக இருக்கிறது. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற முனைப்பு வருங்காலத்தில் எதிரி நாடாகும் சாத்தியமுள்ளதொரு நாட்டுக்கு எதிராய் வலிந்து தாக்குதல் தொடுக்கும் இயல்புடையதாகும். அத்தகையதொரு தாக்குதல் அமெரிக்கா மற்றும் சீனாவின் மக்களுக்கும், மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்குமே கூட பேரழிவூட்டும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அணுவாயுத மோதலை தூண்டி விட அச்சுறுத்துகிறது. 5. டெங் சியோபிங்கின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட “அமைதி மற்றும் வளர்ச்சி” வேலைத்திட்டம் தான் சீன ஆட்சியின் உத்தியோகபூர்வ கொள்கையாய் தொடர்ந்தும் இருக்கிறது. சீனா தனது அமைதி நோக்கங்கள் குறித்து என்னவகையான உறுதிமொழிகளையும் உத்தரவாதங்களையும் அமெரிக்காவிற்கு வழங்கினாலும் கூட, அதன் தொடர்ந்த பொருளாதார எழுச்சியானது தவிர்க்கவியலாமல் அமெரிக்காவிடம் இருந்து இராணுவப் பதிலிறுப்பைக் கொண்டு வரும். அதற்கு சீனா இப்போதே தயாரிப்பு செய்து கொண்டாக வேண்டும் என்ற முகாந்திரத்தைக் கூறி மேற்கூறிய கொள்கை கைவிடப்படுவதற்கு சீன இராணுவம் மற்றும் அதிகாரத்துவத்தின் சில பகுதிகள் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றன. லிபியாவில் நேட்டோவின் தலையீட்டாலும் சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களாலும் சீன நலன்களுக்கு விளைந்திருக்கும் பாதிப்பினால் இப்பிரிவினரின் கரங்கள் வலுப்பெற்றுள்ளன. 6. சீனாவின் பொருளாதார, நிதி மற்றும் இராணுவத் திறன்கள் எல்லாம் கடந்த மூன்று தசாப்த காலங்களில் மிகத் துரிதமாய் விரிவு கண்டிருந்த போதிலும் கூட சீனா ஒரு ஏகாதிபத்திய சக்தி அல்ல. சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது உலகின் மிகப் பெரிய மலிவு உழைப்புக் களமாக உற்பத்தியின் பூகோளமயமாக்கல் நிகழ்முறைகளுக்குள் அதன் ஒருங்கிணைப்பில் இருந்து தான் எழுகின்றது. முதலீடுகளுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இன்னும் அது முழுமையாக இலாபங்களின் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும் மிகப்பெரும் நாடுகடந்த பெருநிறுவனங்களையே சார்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிந்த காலம் முதல் அமெரிக்கா நிறுவி மேலாதிக்கம் செலுத்தி வருகின்ற ஏகாதிபத்திய பொருளாதார மற்றும் மூலோபாய ஒழுங்கு சீன முதலாளித்துவத்திற்கு ஒரு இடைவிடாத தடையாக உள்ளது. அமெரிக்க பங்குப்பத்திரங்களை அது பெருமளவில் கொள்முதல் செய்து வைத்திருப்பது அதன் நிதி வலிமையின் வெளிப்பாடு அல்ல, மாறாக சீனப் பொருளாதாரத்திற்கு பெறுமதி குறைவான யுவான் தேவையாய் இருக்கிறது என்பதையும் சீனப் பொருளாதாரம் அமெரிக்க சந்தைகளைச் சார்ந்ததாய் இருக்கிறது என்பதையுமே பிரதிபலிக்கின்றது. இதன் விளைவாய், அமெரிக்க நிதி ஆணையர்களின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையில் இது அதிகம் பாதிப்புறத்தக்கதாய் இருக்கிறது. அதேபோல சீனாவின் விரிந்து செல்லும் இராணுவத்தகமை என்பது அதன் வலிமையின் அடையாளம் அல்ல, மாறாக தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக்கூடியதின் அடையாளமே. அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் இராணுவத் தளங்கள் மற்றும் கூட்டணிகளின் பரந்த உலகளாவிய வலைப்பின்னலைக் கொண்டும், மற்றும் அதன் மிதமிஞ்சிய இராணுவ மேல்நிலையைக் கொண்டும், உலகின் எந்த மூலையிலும் சீன நலன்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் தகமை படைத்ததாய் இருக்கிறது. சீனா, மிக மிக ஸ்திரமற்றதொரு முதலாளித்துவ ஆட்சியால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் ஆளும் உயரடுக்கு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிரிவுகளில் இருந்தும் அவர்களின் ஆண் பெண் வாரிசுகளில் இருந்தும் உருவாகிறது. போலி இடதுகளுக்குள் இருப்பவர்கள் உட்பட சீனாவை ஏகாதிபத்திய சக்தியாக சித்தரிப்பவர்கள் எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காகவோ இல்லையென்றால் தங்களது “நடுநிலைமை”யை பிரகடனப்படுத்துவதற்காகவோ அவ்வாறு செய்கிறார்கள், அதன் மூலம் கொரிய யுத்தத்தின் சமயத்தில் அரசு முதலாளித்துவவாதிகள் செய்ததைப் போல ஏகாதிபத்தியத்திற்கு மறைமுகமான ஆதரவினை வழங்குகின்றனர். 7. சீனாவுக்கு எதிரான போருக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயாரிப்புகளுக்கு இந்த காங்கிரஸ் தெரிவிக்கும் எதிர்ப்பு எந்த விதத்திலும் சீன ஆட்சிக்கோ அல்லது அதன் எந்தப் பிரிவுக்குமோ ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தப்படவில்லை. தற்போதைய அரசு என்பது 1949 புரட்சியின் வெற்றிகளின் மீது ஸ்ராலினிச-மாவோயிச அதிகாரத்துவம் நடத்திய காட்டிக் கொடுப்புகளின் விளைபொருளே. மாவோ ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் ஆரம்பித்து முதலாளித்துவ மீட்சியை நடத்திய இந்த அதிகாரத்துவம், டெங் சியோபிங் மற்றும் அவருக்கு அடுத்து வந்தவர்களின் ஆட்சியின் கீழ் இதனைத் தொடர்ந்தது மற்றும் ஆழப்படுத்தியது. ”அமைதியான எழுச்சி”யின் முன்னோக்கு மற்றும் உலக முதலாளித்துவக் கட்டமைப்புடன் சீனாவை நெருக்கமாய் பிணைத்தது, மற்றும் ஏகாதிபத்திய அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட இராணுவத் தயாரிப்புகளை அதிகரிப்பதற்கான அழைப்பு ஆகிய இரண்டுமே பேரழிவுக்கு மட்டுமே இட்டுச் செல்லத்தக்கவை. 8. பெய்ஜிங் ஆட்சி சீனத் தொழிலாளர்களை ஆசியாவின் மற்ற பகுதிகளிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு மட்டுமே சேவை செய்யும்வகையில் சீனத் தேசியவாதத்தை ஊக்குவிப்பதையும் மற்றும் இராணுவவாதத்தை நோக்கி அது துரிதமாய் திரும்புவதையும் சீனத் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அணு ஆயுதங்கள் உட்பட சீனாவின் இராணுவத்தை விரிவுபடுத்துவதென்பது போருக்கு எதிரான எந்த உத்திரவாதத்தையும் வழங்கப் போவதில்லை, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அதன் போர்த் தயாரிப்புகளை நியாயப்படுத்துவதற்கான மேலதிக சாக்குப்போக்குகளையே வழங்கும். தவிரவும், இந்த ஆட்சியின் ஆயுதக் குவிப்பு என்பது நூறு மில்லியன் கணக்கிலான சாதாரண சீன மக்களின் வாழ்க்கையையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்கிலானதல்ல, மாறாக ஒரு சில நூறு பில்லியனர்களின் தலைமையிலமைந்த நாட்டின் புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார மற்றும் பூகோள-மூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலானது. தனது ஆட்சிக்கு உள்நாட்டில் ஏதேனும் எதிர்ப்பு தோன்றும் சமயத்தில் அந்த எதிர்ப்பினை அடக்க, மலிவு கூலித் தொழிலாளர்களாய் சீனத் தொழிலாளர்களை சுரண்டுவதை சார்ந்திருக்கும் இதே ஏகாதிபத்திய சக்திகளின் துணையுடன், இதே இராணுவத்தை பயன்படுத்துவதற்கு சீன ஆட்சி தயங்கப் போவதில்லை. உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்தது முதலான தொடர்ந்த மூன்று ஆண்டுகளுக்கு சீன அரசாங்கம் தனது உள்நாட்டுப் பாதுகாப்பின் பேரிலான இராணுவ நிதி ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறது என்கின்ற உண்மையானது, அது அமெரிக்காவின் இராணுவ எந்திரத்தைக் காட்டிலும் தனது “சொந்த”த் தொழிலாள வர்க்கத்தைத் தான் மிகப் பெரும் அச்சுறுத்தலாய் காண்கிறது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய மூர்க்கத்தனம் மற்றும் அணுவாயுதப் போரின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான ஒரே வழி முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் சோசலிசப் புரட்சியின் மூலம் தூக்கி வீசுவதாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அரசு மீது தொழிலாள வர்க்கம் எந்த நம்பிக்கையும் வைக்கமுடியாது. போரை எதிர்க்க அது தன் சொந்த புரட்சிகர வர்க்கப் போராட்ட வழிமுறைகளையே நம்பியாக வேண்டும். சீனத் தொழிலாளர்களுக்கான உண்மையான ஒரே கூட்டாளிகள் யாரென்றால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிராந்தியத்தின் மற்றும் உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த, தத்தமது சொந்த அரசாங்கங்களின் கரங்களில் இதேபோன்ற பேரழிவுகளுக்கு முகம் கொடுத்து நிற்கின்ற அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகள் மட்டுமே. 9. சீனத் தொழிலாள வர்க்கம் அது எதிர்கொள்கின்ற பெருகிச் செல்லும் அபாயங்களுக்கு எதிராக அது தனது சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தையும் ஆளும் எந்திரத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கு, அது சீனப் புரட்சியும் அதனையடுத்த சீன அரசின் பரிணாமமும் ஒரு முக்கியமான பாகமாக உள்ளடங்கியிருக்கும் சர்வதேசத் தொழிலாளர்’ இயக்கத்தின் அனுபவங்களில் இருந்து மூலோபாயப் படிப்பினைகளை வரைந்து கொள்வதோடு தன்னை ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்தில் அடித்தளமாகவும் கொள்ள வேண்டும். 10. 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரின் வெடிப்பு மற்றும் 1917 அக்டோபரில் ரஷ்யப் புரட்சியின் வெடிப்பு ஆகியவற்றுடன் தொடங்கிய ஏகாதிபத்திய சகாப்தம் முதலாளித்துவத்தின் மரண ஓலமாக போர் மற்றும் புரட்சிகளின் சகாப்தம் என்ற இயல்பைப் பெற்றிருந்தது என்னும் மார்க்சிசப் புரிதலை 1949 சீனப் புரட்சியானது மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், உலகெங்கிலும் வெடித்த தொழிலாள வர்க்கம் மற்றும் பரந்த காலனித்துவ மக்களது புரட்சிகரப் போராட்டங்களின் பகுதியாக இது நடைபெற்றது. ஆயினும், ஒரு நாட்டிற்கு அடுத்து இன்னொரு நாடு என, ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த போருக்குப் பிந்தைய போராட்டங்களை காட்டிக் கொடுத்தன. முறையே சேர்ச்சில், ரூஸ்வெல்ட் மற்றும் ட்ரூமன் உடன் கையெழுத்திட்ட யால்டா, போஸ்ட்டாம் மற்றும் தெஹ்ரான் ஒப்பந்தங்களின் கீழ், ஸ்ராலின், கிழக்கு ஐரோப்பாவில் இடைத்தாங்கி அரசுகள் என்றழைக்கப்பட்ட அரசுகளின் மீதான மேலாதிக்கத்திற்கான பிரதிபலனாய் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கு உதவினார். சீனாவில், சோவியத் அதிகாரத்துவத்தின் துரோகத்தையும் தாண்டி, ஜப்பானிய ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து நிலவிய கடுமையானதொரு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி, ஆழமான அரசியல் பலவீனமாக இருந்த முதலாளித்துவ கோமிங்டாங் (KMT) ஆட்சி மற்றும் 1925-27 இரண்டாம் சீனப் புரட்சியை ஸ்ராலின் காட்டிக் கொடுத்ததன் விளைவாக தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளுக்கு எதிராய் படுபயங்கரமான அடிகள் விழுந்திருந்தபோதிலும் கூட சக்திவாய்ந்ததொரு மக்கள் எழுச்சியினால் ஸ்ராலினிச சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி உந்தப்பட்டது. ஸ்ராலினின் கொள்கைகளுக்கு இணங்க, ஆரம்பத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தையும் பரந்த மக்களையும் கோமிங்டாங் உடன் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் அதன் முயற்சிகளுக்குக் கீழ்ப்படியச் செய்தது. 1947 அக்டோபரில், பனிப் போரும் தொடங்கி அத்துடன் கோமிங்டாங் அமெரிக்காவின் ஆதரவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை இராணுவரீதியாக நசுக்குவதற்கு ஆயத்தத்தில் இறங்கியபோதுதான் மா சேதுங் இறுதியாக கோமிங்டாங் அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கு அழைப்பு விடுத்தார். அரசியல்ரீதியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் ஒன்றியத்துடனான அதன் பிணைப்பினால் பலமடைந்து இருந்தது. இது, மாஸ்கோவின் ஆட்சி ரஷ்யப் புரட்சியின் பாரம்பரியங்களை உள்ளடக்கியிருப்பதாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இடையே பரவலான ஆனால் தவறான நம்பிக்கையை கொடுத்திருந்தது. இராணுவரீதியாக, மஞ்சூரியாவில் கைப்பற்றப்பட்ட ஜப்பானிய ஆயுதங்களை வழங்கியதன் மூலமாகவும் மற்றும் சோவியத் இராணுவத்தினால் வழங்கப்பட்ட பயிற்சியினாலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் படைகள் வலுவூட்டப்பட்டிருந்தன. கோமிங்டாங் இன் படைகளுக்கு தொடர்ச்சியாய் பல அழிவுகரமான தோல்விகளை கொடுத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949 அக்டோபரில் சீன மக்கள் குடியரசை பிரகடனம் செய்தது. 11. 1949 சீனப் புரட்சியும், அதற்குப் பிந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், உலக ஏகாதிபத்தியத்திற்கு ஒரு உலுக்கும் அடியைக் கொடுத்தது. அது முதலாளித்துவ-நிலப்பிரபு ஆளும் வர்க்கத்தை தூக்கியெறிந்து விவசாயப் புரட்சியை நடத்தி, ஏகாதிபத்தியத்தாலும் பிற்போக்குத்தனமான போர்ப்பிரபுக்களாலும் பல தசாப்தங்களாய் பிளவுபட்டுக் கிடந்த நாட்டை ஒன்றுபடுத்தி, நேரடி ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை முடிவுக்கொண்டு வந்து தொழிற்துறையின் முக்கியமான துறைகளை தேசியமயமாக்கியது, அதன்மூலம் சோசலிச உருமாற்றத்திற்கான அதிமுக்கியமான அடித்தளங்கள் நிறுவப்பட்டு நிரந்தரப் புரட்சி குறித்த ட்ரொட்ஸ்கிச தத்துவம் நிரூபணம் செய்யப்பட்டது. ட்ரொட்ஸ்கி விளங்கப்படுத்தியதைப் போல, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு உட்பட்ட காலனித்துவ நாடுகள் மற்றும் அரைக் காலனித்துவ நாடுகள் உட்பட்ட தாமதப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்தியடைந்த நாடுகளில், பிரதானமாக நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கியெறிவதும் ஏகாதிபத்திய ஆட்சியை ஒழிப்பது உள்ளடங்கலான ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தால் சாதிக்கப்பட முடியாது, மாறாக பரந்த விவசாயிகளுக்கு தலைமை கொடுக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் மூலமாக மட்டுமே சாதிக்கப்பட முடியும். எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை தனது கரங்களில் எடுத்துக் கொண்ட பின்னர், உற்பத்தி சாதனங்கள் தனிச்சொத்துடைமையாய் இருப்பதற்குள்ளாக ஆழமாய் ஊடுருவிச் செல்வதற்கும் சோசலிசத்துக்கான போராட்டத்தை தொடங்குவதற்கும் நிர்ப்பந்திக்கப்படும். சீனப் புரட்சி ஒரு பரந்த சமூக மற்றும் பொருளாதார உருமாற்றத்தை உருவாக்கியுள்ள போதிலும், 1917 ரஷ்யப் புரட்சி போல் அது தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான சுயாதீனமான அமைப்புகளை உருவாக்குகின்ற அரசியல்ரீதியாக அணிதிரட்டப்பட்ட ஒரு தொழிலாள வர்க்கத்தின் மூலமாக நடத்தப்பட்டதல்ல. மாறாக அப்புரட்சி ஆரம்பத்திலிருந்தே தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டங்களை ஒடுக்குவதற்கு முனைந்த ஸ்ராலினிச-மாவோயிச தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாக ஊனமுற்றதாக்கப்பட்டதாக இருந்தது. தொழிலாள வர்க்கத்திற்குள்ளாய் இருந்த பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகளுடன் சேர்ந்து ஏகாதிபத்தியத் தலையீட்டின் அச்சுறுத்தலும் இணைந்து கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதற்கு ஸ்ராலினிச அதிகாரத்துவம் நிர்ப்பந்தம் பெற்றது. 12. புரட்சியில் இருந்து உருவான அரசு ஒரு கலப்புத் தன்மையைப் பெற்றிருந்தது. உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமைகளாய் இருப்பது ஒழிக்கப்பட்டிருந்தது, ஆனால் தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவ ஆட்சியால் அடக்கப்பட்டதாய் இருந்தது, அதனால் அரசியல் அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை. ஒரு உருக்குலைந்த தொழிலாளர்’ அரசாக சோவியத் ஒன்றியம் குறித்தும், மற்றும் இரண்டாம் உலகப் போர் முடிந்த உடனடி வருடங்களில் உற்பத்தி சாதனங்கள் தேசியமயமாக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட உருமாற்றங்கள் குறித்தும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்வைத்த பகுப்பாய்வின் அடிப்படையில், நான்காம் அகிலம் சீனாவை ஒரு “ஊனமுற்ற தொழிலாளர்’ அரசு” என வரையறைப்படுத்தியது. 13. இந்த சமூகவியல் வரையறுப்பு ஒரு அரசியல் முன்னோக்கிற்கும் மற்றும் முன்கணிப்பிற்கும் வடிவம் கொடுத்திருந்தது. ஒரு பக்கத்தில், மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் பொருளாதார உருமாற்றத்தின் முற்போக்கான தன்மையையும், அத்துடன் ஏகாதிபத்தியம் மற்றும் சீன முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக இந்த வெற்றிகளைப் பாதுகாப்பதற்கு சீன மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கும் அவசியத்தையும் இது சுட்டிக்காட்டியது. மறுபக்கத்தில், 1949க்கு பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சி வரலாற்றுரீதியாக தாக்குப் பிடிக்கக் கூடியதல்ல என்பதையும் இது தெளிவாக்கியது. புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாப்பதற்கும் முன்செலுத்துவதற்கும் அதிகாரத்துவத்தைத் தூக்கியெறிந்து தொழிலாளர்களின் ஜனநாயக அமைப்புகளை ஸ்தாபிக்கக் கூடிய ஒரு அரசியல் புரட்சிக்காகப் போராட தொழிலாள வர்க்கத்திற்கு அது வழிகாட்டியது. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத் தலைமை, 1920களில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தை அது தட்டிப் பறித்த வேளையில், நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கு எதிராக அது முதன்முதலில் முன்னெடுத்ததான ”தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் பிற்போக்குத்தனமான தேசியவாத முன்னோக்கினை அடித்தளமாக கொண்டிருந்த ஸ்ராலினிச-மாவோயிச ஆட்சியின் கரங்களில் அதிகாரம் தொடர்ந்து நீடிக்குமானால், முதலாளித்துவ மீட்சியானது தவிர்க்கப்படமுடியாது அதைத்தொடர்ந்து வரும். 14. நான்காம் அகிலத்தின் பகுப்பாய்வானது இயக்கத்தின் வேலைத்திட்ட அடித்தளங்களைத் தாக்கிய இரண்டு போக்குகளுக்கு எதிராய் அபிவிருத்தி செய்யப்பட்டது. கிழக்கு ஐரோப்பாவிலும் பின் சீனாவிலும் ஊனமுற்ற தொழிலாளர்’ அரசுகள் ஸ்தாபிக்கப்பட்டது பிறழ்வு அல்ல மாறாக அது வருங்காலத்திற்கான அலையாகும் என பப்லோவாதிகள் வாதிட்டனர். சோசலிசத்தை நோக்கிய உருமாற்றம் என்பது இனியும் ரஷ்யாவில் நடந்ததைப் போல போல்ஷிவிக் வகை கட்சிகளின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தொடக்கமளிக்கப்படப் போவதில்லை, மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மூலமாக “ஊனமுற்ற தொழிலாளர்’ அரசுகள்” ஸ்தாபிக்கப்படுவதன் ஊடாக அது நிகழும் என்றும் இந்த நிகழ்வுப்போக்கு பல நூற்றாண்டுகாலம் பிடிக்கும் ஒன்று எனவும் அவர்கள் அறிவித்தனர். அரசு முதலாளித்துவப் போக்கு பப்லோவாதத்தை வலதின் பக்கத்தில் இருந்து தாக்கியது. அவர்களைப் பொறுத்தவரை, சோவியத் ஒன்றியம் மட்டுமல்ல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் கூட அரசு முதலாளித்துவ நாடுகளே. தேசியமயமாக்கப்பட்ட சொத்துடமையின் வரலாற்று முக்கியத்துவத்தையும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களுடன் அது கொண்டிருக்கும் உயிர்ப்பு கொண்ட தொடர்பையும் கணக்கிலெடுக்காமல், இந்த அரசு முதலாளித்துவவாதிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பாதுகாக்க ஒன்றுமில்லை என தொடர்ந்து கூறி வந்தனர். பப்லோவாதிகள் மற்றும் அரசு முதலாளித்துவவாதிகள் இரு தரப்புமே தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை உதாசீனம் செய்தனர், ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு ஒரு வரலாற்று செல்தகைமையை மோசடியாக அளித்தனர், அத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை இருக்கின்ற ஸ்ராலினிச, சீர்திருத்தவாத மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு கீழ்ப்படுத்த முனைந்தனர். 15. புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் சீனா முகம் கொடுத்து வரும் தீவிரமான பொருளாதாரப் பிரச்சினைகளில் எதனையும், ஸ்ராலினிச ஆட்சியின் தேசியவாத பொருளாதார வேலைத்திட்டத்தையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதையும் அடிப்படையாகக் கொண்டு தீர்த்து விட முடியாது. இது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் இன்னுமொரு மிக முக்கிய மூலபாகத்தை உறுதி செய்தது: அதாவது உலகப் பொருளாதாரமானது, அனைத்து தேசியப் பொருளாதாரங்களின் மீதும் மேலாதிக்கம் செலுத்துகின்றதான ஒரு சகாப்தத்தில், சோசலிச உருமாற்றமானது தேசிய மண்ணில் தொடங்குகின்ற அதே நேரத்தில் சர்வதேச அரங்கில் மட்டுமே அது பூர்த்தி செய்யப்பட முடியும். 16. பெருகிச் சென்ற இப்பிரச்சினைகளை சீன எல்லைக்குள்ளாய் தீர்ப்பதற்கு ஆட்சியால் முடியாமல் போன நிலை தான் 1950கள் மற்றும் 60களிலான கொள்கை ஊசலாட்டங்களுக்கும், மற்றும் அதனையடுத்து அதிகாரத்துவ எந்திரத்துக்குள்ளாய் நிகழ்ந்த அதிகாரப் போட்டிகளுக்கும் உந்துசக்தியாய் இருந்தது. ஒரு தசாப்த கால பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளான இவற்றில் 1957-58 இன் மாவோவின் முன்நோக்கிய பெரும் பாய்ச்சலின் தோல்வி, சீனாவுக்கும் சோவியத்துக்கும் பிளவு ஏற்பட்டதும் பின் சோவியத் உதவி திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதும், மாவோவின் பாரிய பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியால் தூண்டப்பட்ட உலுக்கியெடுக்கும் வர்க்கப் போராட்டங்கள், மற்றும் சீனாவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் 1969 இல் ஏற்பட்ட எல்லைத் தகராறுகள் ஆகியவை அடங்கும். இது 1972 இல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சீனா நல்லிணக்கம் ஏற்படுவதில் சென்று முடிந்தது. இதே சமயத்தில்தான் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ பொருளாதார எழுச்சியும் நிலைகுலைந்து ஆழமடைந்து சென்ற உலகப் பொருளாதார நெருக்கடி உருவாகி ஆட்சியின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீவிரமாக்கியது. இவையெல்லாம் தேசிய எதேச்சாதிகாரத்தின் அடிப்படையில் தீர்க்க முடியாதவையாக இருந்தன. முதலாளித்துவ மீட்சியை நோக்கிய ஆரம்ப அடிகளை பின்தொடர்ந்து மேற்குடனான வர்த்தகம் விரிவாக்கமடைந்ததுடன், பின் 1978 இல் டெங் சியோ பிங் சீனாவை அந்நிய முதலீட்டுக்குத் திறந்து விட்டார். உலகளாவிய உற்பத்தி நிகழ்முறைகளுக்குள் சீனாவின் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்பானது உள்முகமான சமூக மற்றும் வர்க்கப் பதட்டங்களை மேலும் சிக்கலாக்கவே செய்தது. 1989 இல் இவை பெய்ஜிங் மற்றும் பிற நகரங்களில் பரந்த மக்கள் எழுச்சிகளாய் வெடித்தன. இந்த எழுச்சிகள் எல்லாம் தியானென்மென் சதுக்கப் படுகொலையிலும் மற்றும் அதனையடுத்து போலிஸ் வேட்டையினாலும் ஆட்சியினால் வன்முறை கொண்டு அடக்கப்பட்டன. 17. ஒரு தசாப்த காலமாக முதலாளித்துவத்தை மீட்சி செய்ய சீன ஸ்ராலினிஸ்டுகள் திட்டமிட்டபடி செய்த வேலையின் உச்சக்கட்டம் தான் இந்தப் படுகொலை என்று ஜூன் 8, 1989 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கை விளக்கிக் காட்டியது. “சீனாவின் பரந்த மக்களை அச்சுறுத்துவதும் சீனப் புரட்சியின் சமூக வெற்றிகளை திட்டமிட்டுக் கலைப்பதற்கு எதிராக எழக்கூடிய அத்தனை எதிர்ப்புகளையும் நசுக்குவதும் தான் பெய்ஜிங் ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்படும் குரூரத்தின் முக்கியமான நோக்கமாகும்” என்று அந்த அறிக்கை கூறியது. பீஜிங்கில் ஓடிய இரத்த ஆறு சுதந்திரச் சந்தை வேலைத்திட்டத்திற்கு ஒரு அதிரடியான உத்வேகத்திற்கு வழியமைத்து கொடுத்து அந்நிய முதலீடுகளை வெள்ளமெனப் பாயச் செய்தது, ஏனென்றால் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்திவைக்கவும் தனியார் சொத்துக்களுக்கும் இலாபத்திற்கும் உத்தரவாதம் பெறவும் ஸ்ராலினிச போலிஸ்-அரசு ஆட்சியை நம்பலாம் என்பதை உலகளாவிய பெருநிறுவனங்கள் அறிந்து கொண்டன. 18. சீனா, முதலாளித்துவ உலகச் சந்தைக்குள் ஒருங்கிணைக்கப்பட்டமையானது துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் அது சீன முதலாளித்துவத்திற்கோ அல்லது உலக முதலாளித்துவத்திற்கோ எந்த புதிய ஸ்திரமான அடித்தளத்தையும் வழங்கி விடவில்லை. சீனப் பொருளாதாரமானது, பெருமந்த நிலைக்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் பிடியில் இப்போது சிக்கியிருக்கும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் சந்தைகளைத் தான் முழுமையாகச் சார்ந்திருக்கிறது. மேலும், பொருளாதார விரிவாக்கமானது வெடிப்பு மிகுந்த சமூக முரண்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. முன்னெப்போதையும் விட விரிந்து செல்லும் சமூக ஏற்றத்தாழ்வுக்கு இடையே தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை 400 மில்லியனுக்கு வளர்ச்சி கண்டிருப்பதன் மூலம் இது அடையாளப்படுத்தப்படுகிறது. வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்துச் செல்கின்றன என்பதை, “பரந்த மக்கள் பங்குபெற்ற சம்பவங்களின்” எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 90,000 ஆக இருந்ததில் இருந்து 2010 இல் 180,000 ஆக இரட்டிப்பாகியிருக்கும் நிலை சுட்டிக் காட்டுகிறது. பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடிய “இளவரசர்கள்” மற்றும் “சிவப்பு முதலாளிகளின்” ஆட்சியுடன் ஒரு புரட்சிகர மோதலை நோக்கி சீனத் தொழிலாள வர்க்கம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 19. சீனத் தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டுவதே மிக முக்கியமான பணியாகும். நடப்பு முதலாளித்துவ ஆட்சியை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டே அதேசமயத்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்து அதன் அரசியல் சுயாதீனத்திற்கு இயல்பாகவே குரோதமுடையவர்களாக இருக்கின்ற குட்டி-முதலாளித்துவ போலி-இடதுகளுக்கு எதிரான ஒரு விட்டுக்கொடுக்காத போராட்டத்தின் மூலமாக மட்டுமே இது சாதிக்கப்பட முடியும். இந்த போலி இடதுகளில் பிரதானமானவர்கள் நவ-மாவோயிஸ்டுகள் -Neo-Maoists- ஆவர். டெங் சியோ பிங் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து தான் முதலாளித்துவ மீட்சி தொடங்கியதாக இவர்கள் வலியுறுத்துகின்றனர். உண்மையில், மாவோயிசத்தின் தேசியவாத மற்றும் குட்டி முதலாளித்துவ சித்தாந்தங்களும், எல்லாவற்றுக்கும் மேலாய் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் ஸ்ராலினிசத் தத்துவத்திற்கு அது இணங்கியமைந்ததும் தான் பொருளாதார முட்டுச்சந்திற்கு இட்டுச் சென்று டெங் தலைமையிலான அப்பட்டமான முதலாளித்துவ மீட்சிவாதிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கித் தந்தது. பெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியின் காலகட்டத்தில் ஆட்சியை அச்சுறுத்திய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இராணுவத்தை அணிதிரட்டியது மாவோவே தவிர, டெங் அல்ல. “சுதந்திரச் சந்தை”, முதலாளித்துவ மீட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து முதலாளித்துவ உலகச் சந்தைக்குள் சீனாவின் மறுஒருங்கிணைப்பு என்ற வேலைத்திட்டத்திற்கு, ஒதுக்கமுடியாத முன்நிபந்தனையாக அமைந்த, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கிய திருப்பத்திற்கு தொடக்கமளித்ததும் மாவோ தான். 20. சீனாவில் வரவிருக்கும் புரட்சிகர எழுச்சிகள் சர்வதேச ரீதியாக எழுந்திருக்கக் கூடிய புதிய புரட்சிகரப் போராட்ட காலகட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக எழவிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச தொழிலாள வர்க்கம் பெற்றிருக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அனுபவங்களில் இருந்து பெற்ற அத்தியாவசியமான படிப்பினைகளையும், அத்துடன் ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம் மற்றும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நெடிய போராட்டத்தையும், உள்ளடக்கியுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினை நோக்கி சீனத் தொழிலாள வர்க்கம் திரும்ப வேண்டும். சீனாவிலும் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளை ஸ்தாபிப்பதிலும் கட்டியெழுப்புவதிலும் சோசலிச சமத்துவக் கட்சி ஆற்ற வேண்டியிருக்கும் மையமான பாத்திரத்தை இந்த காங்கிரஸ் உறுதிப்படுத்துகிறது. |