ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு |
WSWS : Tamil : நூலகம் |
SEP (Australia) first national congressResolution 2: Against imperialist warஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடுதீர்மானம் 2: ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக9 May 2012Use this version to print | Send feedback 1. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டினரும் சிரியாவிற்குள்ளான அவற்றின் தலையீட்டை அதிகரிப்பதையும் ஈரானுக்கு எதிரான அவற்றின் முன்னேறிய போர் தயாரிப்புகளையும் இந்த காங்கிரஸ் கண்டனம் செய்கிறது. இந்த புதிய இராணுவ முனைப்புகளை முன்னெடுப்பதில், சிரியா மற்றும் ஈரான் ஆட்சிகளை ஜனநாயகத்தின் விரோதிகளாகவும் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களாகவும் ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டுச் சித்தரித்து வருகிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு ஒரு பயங்கர அச்சுறுத்தலாக இருப்பதாக ஒபாமா நிர்வாகம் கூறுகின்ற சிடுமூஞ்சித்தனமான புகார்கள் எல்லாம், இணைந்துபோகும் ஊடகங்களின் வழியாக கடமையுடன் ஊதிப் பெருக்கப்படுகிறது. சிரியாவிலும் ஈரானிலும் “ஜனநாயக”த்திற்கு அழைப்பு விடுக்கும் அதே சமயத்தில், அதற்கு, ஜனநாயக உரிமைகளை நசுக்குவதில் இழிபுகழ் பெற்ற சவுதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற எதேச்சாதிகார வளைகுடா நாடுகளின் ஆதரவை அமெரிக்கா சார்ந்திருக்கிறது. தனது “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற மோசடி நடவடிக்கையின் பகுதியாக தெஹ்ரான் மற்றும் டமாஸ்கஸைக் குறிவைக்கின்ற அமெரிக்கா, ஆனால் லிபியாவிலும் சிரியாவிலும் தனது வேலையை முடிக்க இஸ்லாமியவாதிகளையும் அல்-குவேதாவுடன் இணைந்த கிளர்ச்சிக் குழுக்களையும் நம்பியிருக்கிறது. ஈரானிய ஆட்சி அணு ஆயுதங்களைக் கட்ட முனைகிறது என்பதான அமெரிக்கக் குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகவும் கேள்விக்குரியனவாகும். அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள இஸ்ரேல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைப் போலன்றி ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதோடு, அதன் அணுசக்தி நிலையங்கள் அனைத்தும் தொடர்ச்சியான ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுகளுக்கு உட்படுபவையாக உள்ளன. ஈரான் அணு ஆயுதங்கள் பெற்றால் அது ஒரு இராணுவத் தாக்குதல் விடயத்திலான அமெரிக்காவின் திட்டங்களை சிக்கலாக்கி விடும் என்பது தான் அமெரிக்காவின் பிரதான கவலை. ஈரானை அமெரிக்க நலன்களுக்கு கீழ்ப்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்க-தலைமையிலான தீவிரமான இராஜதந்திர நெருக்குதல், முடக்கும் பொருளாதாரத் தடைகள், மற்றும் இறுதியாக போர் ஆகியவற்றின் ஒரு இடைவிடாத பிரச்சாரத்திற்கான ஒரு சாக்கு தான் இந்த அணு ஆயுதப் பிரச்சினை என்பதே உண்மையாகும். 2. மத்திய கிழக்கிலான ஒரு புதிய போர் இப்பிராந்தியத்தைச் சூழ்வதற்கும் ஒரு பரந்த உலகளாவிய காட்டுத்தீயை தூண்டிவிடுவதற்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்று இந்த காங்கிரஸ் எச்சரிக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எரிவளம் மிகுந்த பிராந்தியங்களில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலையை வலுப்படுத்தும் பொருட்டு, ஏற்கனவே ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் அது செய்ததைப் போன்று, சிரியாவிலும் ஈரானிலும் அமெரிக்க ஆதரவு ஆட்சிகளை நிறுவுவது தான் அமெரிக்காவின் கொள்ளையடிக்கும் திட்டங்களுக்கான உண்மையான நோக்கமாய் அமைந்திருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் முஸ்தீபுகள் போட்டி நாடுகளது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை நேரடியாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ஐநா பாதுகாப்பு குழுவில் சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களுக்கு எதிராக தடுப்பு அதிகாரத்தைப் பிரயோகித்தன, அத்துடன் ஈரானுக்கு எதிராக மேலதிகத் தடைகள் விதிப்பதையும் எதிர்த்தன. மத்திய கிழக்கிலான போட்டிகளுடன் ஆழமடைகின்ற உலகப் பொருளாதார நெருக்கடியினால் உருவாக்கப்பட்ட அதிகரிக்கின்ற பூகோள-அரசியல் பதட்டங்களும், அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பதட்டங்களும் இணைந்து ஒரு பரந்த போருக்கான அச்சுறுத்தலை முன்வைக்கின்றன. 3. லிபியத் தலைவர் முமார் கடாபியை அகற்றி விட்டு மேற்கு நாடுகளுக்கு ஆதரவான தேசிய இடைக்கால குழுவின் (NTC) ஆட்சியை நிறுவிய 2011 இல் லிபியாவில் நேட்டோ நடத்திய போர் தான் சிரியாவில் ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கான முன்மாதிரியாக ஆகியிருக்கிறது. துனிசியா மற்றும் எகிப்தில் நடந்த புரட்சிகர எழுச்சிகளை ஒட்டி, வட ஆபிரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களுக்கு எதிரானதொரு நுழைவிடத்தை உருவாக்குவதற்கும் அத்துடன் கடாபியை அகற்றுவதற்கான சந்தர்ப்பத்தைச் சுரண்டுவதற்குமாய் அமெரிக்காவும் நேட்டோவும் லிபியாவில் தலையீடு செய்தன. “பொதுமக்களைக் காப்பதற்கான” ஐநா தீர்மானம் என்கிற சாக்கினைக் கூறிக் கொண்டு, குறைந்தபட்சம் 80,000 லிபிய உயிர்களுக்குச் சேதம் விளைவித்த ஒரு குற்றவியல் போரை நடத்துவதில் NTC இன் கிளர்ச்சியாளர்களுக்கு நேட்டோ போர் விமானங்கள் உதவின. அந்நாட்டிற்குள்ளாக சிறப்புப் படைகளை அமர்த்தியும் அத்துடன் லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை வழங்கியும் சர்வதேச சட்டத்தை நேட்டோ பகிரங்கமாக மீறியது. இதன் இறுதிவிளைவாய், கூட்டமாய் சிறையில் தள்ளுவது, சித்திரவதை செய்வது மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகளை நிகழ்த்துவது ஆகியவற்றுக்குப் பொறுப்பானதும், மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் எரிசக்தி பெருநிறுவனங்களின் சார்பாக ஆட்சி செய்கின்றதுமான ஒரு ஆழமான ஜனநாயக-விரோத அரசு லிபியாவில் ஆட்சியில் அமர்ந்தது. 4. அமெரிக்க இராணுவவாதம் வெடித்து எழுந்தது தான் உலக அரசியலின் மிகவும் ஸ்திரம்குலைக்கும் காரணியாக இருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்கு பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது வரலாற்றுவழியான பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்ய தனது இராணுவ மிதமிஞ்சிய இராணுவ மேலாதிக்கத்தை, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருக்கும் தனது போட்டியாளர்களின் நலன்களைப் பலவீனப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள முனைந்து வந்திருக்கிறது. 1990-91 இல் ஈராக்குக்கு எதிரான முதலாம் வளைகுடாப் போரைத் தொடர்ந்து 1993-95 இல் சோமாலியாவிற்குள் அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீடு வந்தது, அதனைத் தொடர்ந்து 1998-99 பால்கன் போர்கள், 2001 இல் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் 2003 இல் ஈராக் ஊடுருவல் ஆகியவை வந்தன. அமெரிக்க நடவடிக்கைகளின் முரட்டுத்தன்மைக்கும் குற்றவியல்தன்மைக்கும் வரலாற்று சமாந்திரத்தை வேண்டுமென்றால் இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற காலத்தில் ஜேர்மன் நாசிக்களும், இத்தாலிய பாசிஸ்டுகளும் மற்றும் ஜப்பானிய இராணுவவாதிகளும் நடத்திய கொள்ளைப் போர்களில் காணலாம். தற்காப்பிற்காக முன்கூட்டி முதலில் போர்தாக்குதல் தொடுப்பது என்ற புஷ் நிர்வாகத்தின் கொள்கை வலிந்து தாக்கும் போர்களுக்கு, அதாவது நூரெம்பேர்கில் நாஜி போர்க் குற்றவாளிகளின் முக்கிய குற்றச்சாட்டாக அமைந்திருந்த அதே குற்றத்திற்கு, நியாயம் கற்பிக்கிறது. புஷ்ஷின் கொள்கையை ஒபாமா விரிவாக்கியிருக்கிறார். அமெரிக்கக் குடிமக்கள் உட்பட உலகின் எந்தப் பகுதியில் இருப்பவராயிருந்தாலும் சரி அவர் பாதுகாப்பு அச்சுறுத்தலாய் தோன்றுவதாய்க் கருதப்பட்டால் அவரைக் கொலை செய்ய அமெரிக்க ஆளில்லா விமானங்களையும் சிறப்புப் படைகளையும் வரைமுறையின்றிப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரமளித்திருப்பதும் இதில் அடங்கும். 5. இரண்டு தசாப்தங்களாய் அதிகரித்துச் செல்வதும் முடிவின்றித் தொடர்வதுமாய் இருக்கின்ற இராணுவவாதமும் போரும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக, குறிப்பாக இளைஞர்களிடையே பரந்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளன. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும், போருக்கான மூல காரணமாகிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராய் செலுத்தப்படுகின்ற ஒரு உண்மையான போர்-எதிர்ப்பு இயக்கம் அபிவிருத்தி காண்பதற்கான முட்டுக்கட்டைகளாக, முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாக “இடது” தாராளவாதிகளும், பசுமைவாதிகளும் அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாய் போலி-இடது அமைப்புகளும் செயல்பட்டு வந்திருக்கின்றனர். மார்க்சிச விரோதமான இந்த அடுக்குகள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களுக்கு ஆழமான குரோதம் படைத்தவை. கடந்த இரண்டு தசாப்த காலத்தில், நிதிமயமாக்கல் மற்றும் துரிதமாய் பங்குகளின் விலை உயர்வது ஆகிய நிகழ்முறைகளின் மூலமாய் பெரும் வளமை பெற்ற வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தின் ஒரு அடுக்கு தான் இவர்களது சமூக அடித்தளமாய் உள்ளது. தங்களது பொருளியல் நலன்கள் தங்களது ”சொந்த” ஏகாதிபத்திய சக்தியுடன் உயிர்ப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது என்கின்ற உணர்வு இந்த அடுக்கினரிடையே பெருகி வந்ததன் விளைவாக, இந்த முன்னாள்-இடதுகள் எல்லாம் இன்னும் அப்பட்டமாக ஏகாதிபத்தியப் போருக்கான பிரச்சாரகர்களாக மாறியிருக்கின்றனர். 6. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், மேற்கின் “நாகரிகமயமாக்கல் நடவடிக்கை” என்ற பாவனையின்கீழ் பெரும் சக்திகள் எல்லாம் காலனித்துவக் கொள்ளையிலும் போரிலும் ஈடுபட்டன. இப்போது இந்த மனிதாபிமான போலிக்கதைகள் எல்லாம் ஐநாவின் “பாதுகாப்பதற்கான பொறுப்பு” என்ற பேரில் மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ளன. பால்கன் போரின் சமயத்தில் முன்னாள் இடதுகளின் ஒரு பிரிவு நேரடியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கொள்ளையிடும் தலையீட்டின் பின்னால் நின்று கொண்டு, கொசவோ மக்களின் படுகொலையை தடுப்பது தான் நோக்கம் என்று கூறிய கிளின்டன் மற்றும் பிளேயரின் மோசடியான மனிதாபிமானக் கூற்றுகளை எதிரொலித்தன. இதே அரசியல் சூழலில் இருந்த மற்றவர்கள் எல்லாம், 2003 பிப்ரவரி-மார்ச் காலத்தில் எழுந்த முன்கண்டிராத சர்வதேச எதிர்ப்புகளை, போரை நிறுத்துவதற்கு ஐ.நாவை நோக்கி அல்லது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை நோக்கி பலனற்ற கோரிக்கைகள் வைப்பதை நோக்கித் திசைதிருப்புவதற்கு தமது “இடது” சான்றிதழ்களை பயன்படுத்திய சமயத்திலும் கூட, இவர்களோ “சர்வாதிகாரி ஹூசைனை” வெளியேற்றுவதற்கு ஈராக்கிற்குள் குற்றவியல் தன்மையுடன் தலையீடுசெய்ய வக்காலத்து வாங்குபவர்களாய் ஆகினர். 7. ஒபாமா பதவியிலிருத்தப்பட்டதானது போலி-இடதுகள் ஏகாதிபத்தியத்தின் முகாமுக்குள் இன்னும் பகிரங்கமாய் நகர்ந்ததை அடையாளப்படுத்தியது. புஷ் நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம் கொண்டிருந்தவர்கள் அவர் தனக்கு முன்னால் இருந்தவர் செய்த ஏகாதிபத்திய சூழ்ச்சிகளையும் போர்களையும் அச்சுப்பிரதிபோல் பின்பற்றி, தொடர்ந்து மேற்கொண்ட நிலையிலும் ஒபாமாவை நியாயத்திற்கான ஒரு புதிய குரலாய் தழுவிக் கொண்டனர். அமெரிக்க வரலாற்று ஆசிரியரான ஜூவான் கோல் (Juan Cole), ஈராக் ஆக்கிரமிப்புக்கு விமர்சனம் செய்தவர் என்ற முறையில் தனக்குக் கிட்டியிருந்த மரியாதையை கொஞ்சமும் வெட்கமின்றி, லிபியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடுநோக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காய் பயன்படுத்தினார். திரிப்போலியின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருந்த நிலையில், பப்லோவாதியான ஜில்பேர்ட் அஷ்கார் (Gilbert Achcar) லிபியா மீது நேட்டோ போதுமான எண்ணிக்கையில் குண்டுகள் வீசவில்லை என்று குறைகூறினார். பிரான்ஸின் பப்லோவாதிகளான புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியினர் (NPA) ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பின் நின்று, அவரது அரசாங்கம் கடாபி-எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு சட்டவிரோதமாய் ஆயுதங்கள் வழங்கியதை நியாயப்படுத்தினர். நேட்டோவின் வான்வழிப் போரை பகிரங்கமாய் வழிமொழியாத அமைப்புகள் லிபியாவிற்குள் இருந்த நேட்டோ-ஆதரவு “புரட்சிகரவாதிகளுக்கு”- அதாவது NTC பதாகையின் கீழ் ஒன்று கூடியிருந்த கடாபியின் முன்னாள் விசுவாசிகள், சிஐஏ முகவர்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் முதலாளித்துவ தாராளவாதிகள் ஆகியோரின் ஒரு பிற்போக்குத்தனமான திரட்டிற்கு - ஆதரவளித்தன. இப்போது முன்னாள்-இடதுகள் எல்லாம் இதே வேலையைத் தான் சிரியாவிலும் செய்கின்றனர். ஒரு புதிய ஏகாதிபத்தியத் தலையீட்டின் களப் படைகளுக்கு, அதாவது மேற்கு ஆதரவு சிரிய தேசியக் கவுன்சில் மற்றும் சிரிய சுதந்திர இராணுவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வலது-சாரி அசாத்-எதிர்ப்புப் படையினருக்கு, ஆதரவளித்து கொண்டிருக்கின்றனர். கடாபி தூக்கிவீசப்பட்டதற்குப் பின்னர் சிரியாவின் எதிர்ப்புப் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்திய அஷ்கார் சிரியாவில் அந்நிய இராணுவத் தலையீட்டுக்கு ஆதரவளிக்க அவர்களை அழைத்தார். 8. பிராந்தியமயப்படுத்தப்பட்ட ஏகாதிபத்தியத் தலையீடுகளின் மற்றும் போர்களின் அதிகரிக்கும் உத்வேகம் என்பது எந்தத் தளர்ச்சியுமில்லாமல் பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதல்களுக்கும் பேரழிவூட்டும் உலகளாவிய ஒரு காட்டுத்தீ போன்ற மோதலுக்கும் இட்டுச்செல்லும். சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்கின்ற இரண்டு அடிப்படையான மாற்றுகளுக்கே சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மீண்டும் முகம் கொடுக்கிறது. ஏகாதிபத்தியப் போருக்கான மூல காரணம் முதலாளித்துவ இலாப அமைப்புமுறையிலேயே அமைந்திருக்கிறது என்ற மார்க்சிச விளக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான போர்-எதிர்ப்பு இயக்கமானது கட்டியெழுப்பப்பட முடியும் என்பதை இந்த காங்கிரஸ் மீண்டும் திட்டவட்டமாய் உறுதி செய்கிறது. இது அரசியல் தலைவர்களின் பகுத்தறிவின்மையில் இருந்தோ அல்லது தகுதியின்மையில் இருந்தோ எழுவதல்ல, மாறாக உலகளாவியரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்திற்கும் தேசிய அரசுகள் தொடர்ந்து இருப்பதற்கும் இடையிலமைந்த, அத்துடன் உலக அளவில் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் அத்தனை பொருளாதார நடவடிக்கைகளையும் ஒரு சிறு முதலாளித்துவ வர்க்க சிறுபான்மை எண்ணிக்கையின் தனியார் இலாபத் திரட்சிக்கென கீழ்ப்படியச் செய்வதற்கும் இடையிலமைந்த முரண்பாடுகளில் இருந்து எழுவதாகும். உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாய் இருப்பதையோ அல்லது தேசிய-அரசு அமைப்புமுறையையோ கட்டிக்காப்பதில் எந்த நலனும் கொண்டிராத ஒரே சமூக வர்க்கமான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட புரட்சிகர மற்றும் சோசலிச இயக்கம் மட்டுமே ஒரு புதிய உலகப் போரைத் தடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தியாகும். தோல்வியடைந்து விட்ட இலாப அமைப்புமுறையை தூக்கியெறிந்து உலகளாவத் திட்டமிடப்பட்ட ஒரு சோசலிசப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற பொதுவான அபாயமானது அகற்றப்பட முடியும். 9. ஆஸ்திரேலிய தொழிலாளர்களை இந்த முன்னோக்கிற்கு வென்றெடுப்பது தான் சோசலிச சமத்துவக் கட்சிக்கு முன்நிற்கும் மிக முக்கியமான பணி ஆகும். முதலாளித்துவம் மனித குலத்தை ஒரு புதிய உலகப் போருக்குள் அமிழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில், முதலாளித்துவ வர்க்கமும் அதன் முகமைகளும் உழைக்கும் மக்களின் சிந்தனைகளை நஞ்சாக்குவதற்கு தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் ஊக்குவித்து வருகின்றன. மத்திய கிழக்கிலான போர்களுக்கும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ முஸ்தீபுகளுக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகின்ற ஆதரவை நியாயப்படுத்தும் நோக்கோடு திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகின்ற சீன-விரோத மற்றும் முஸ்லீம்-விரோதக் கற்பிதங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அரசியல் பொறுப்புடைமை குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சிக்கு உள்ளது. அதேபோல ஏகாதிபத்தியம் தனது நோக்கங்களை மறைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கவும் பயன்படுத்துகின்ற அமைதிவாதம், ஆயுதக்குறைப்பு, நடுநிலை, ஜனநாயகம் மற்றும் மனிதாபிமானவாதம் ஆகியவற்றின் போலியான கருத்துருக்களையும் சோசலிச சமத்துவக் கட்சி முறைப்படியாக அம்பலப்படுத்தும். தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை புரட்சிகர ரீதியில் தூக்கியெறிந்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாமலேயே போர் என்பது தடுக்கப்பட்டு விட முடியும் என்று கூறுகின்ற ஒவ்வொரு போக்கையும் கடுமையாக அம்பலப்படுத்துவதன் ஊடாகவே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பயிற்றுவித்தல் நடைபெற முடியும். |