ரஷ்ய புரட்சியும் |
WSWS : Tamil : நூலகம் |
Lenins Theory of Socialist Consciousness: The Origins of Bolshevism and What Is To Be Done?1 லெனினின் சோசலிச நனவுத் தத்துவம்: போல்ஷிவிசம் மற்றும் என்ன செய்ய வேண்டும்? என்பவற்றின் தோற்றுவாய்Use this version to print - PDF | Send feedback இன்றைய உரையானது சோசலிச அரசியல் தத்துவத்தின் மிக முக்கிய படைப்புகளில் ஒன்றான லெனினின் என்ன செய்ய வேண்டும்? மீதான ஒரு பகுப்பாய்வுக்காய் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த படைப்பைபோல் தவறான பொருள்விளக்கத்திற்கும் பொய்மைப்படுத்தலுக்கும் உள்ளான படைப்புகள் வெகுசிலவே. முதலாளித்துவ கல்வியறிவாளர்களில் இருக்கும் எண்ணிலடங்கா லெனின்-வெறுப்பாளர்களுக்கு இவர்களில் சிலர் 1991 வரை லெனினைப் போற்றுவதை வேலையாகக் கொண்டிருந்தவர்கள் இந்த நூல் தான் இருபதாம் நூற்றாண்டின் தீமைகள் அனைத்திற்கும் இல்லாவிடினும், பலதீமைகளுக்கு இறுதிப் பொறுப்பானதாகும். இந்தக் கண்டனங்களுக்கு பதிலளிப்பதோடு சேர்த்து, ஜாரிச ரஷ்யாவில் 1902 ஆம் ஆண்டில் ஒரு சிறிய சோசலிச இயக்கத்திற்காக எழுதப்பட்டதான இந்தப் படைப்பு, இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலும் சோசலிச இயக்கத்திற்கான தத்துவார்த்த மற்றும் நடைமுறைப் பொருத்தத்தை ஒரு அசாதாரணமான மட்டத்திற்கு தக்கவைத்திருக்க முடிந்தது எவ்வாறு என்பதையும் விளக்க விழைகிறேன். அரை நூற்றாண்டு காலத்தில் ஈடுசொல்ல முடியாத துன்பம் மற்றும் தியாகம், ஈடு சொல்ல முடியாத புரட்சிகர சாகசம், நம்பமுடியாத ஆற்றல், ஐரோப்பிய அனுபவத்தின் மீதான தேடல், ஆய்வு, நடைமுறை சோதனை, ஏமாற்றம், சரிபார்ப்பு மற்றும் ஒப்பீடு ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பு இவற்றினால் அனுபவித்த வேதனையின் ஊடாகத் தான் ரஷ்யா ஒரே சரியான புரட்சிகரத் தத்துவமான மார்க்சிசத்தை எட்டியது என்று போல்ஷிவிக் கட்சி அதிகாரத்திற்கு வந்த பல வருடங்களுக்குப் பின்னர் லெனின் எழுதினார்.2 அந்த அனுபவமானது ஏறக்குறைய ஒரு முழு நூற்றாண்டு காலம் நீடித்தது. 1825 இல் ஜாரிச எதேச்சாதிகாரத்தைத் தூக்கியெறிய அரசாட்சியின் இராணுவத்தில் இடம்பெற்றிருந்த உயர்-இராணுவ அதிகாரிகளின் ஒரு குழு முயற்சி செய்து தோல்வியடைந்தது தொடங்கி, ரஷ்ய புத்திஜீவி அடுக்கின் ஒரு சிறிய பிரிவுக்குள்ளாக சுய-தியாகம், கறைபடியாமை மற்றும் அச்சமற்ற பேரார்வம் ஆகியவற்றின் ஒரு பாரம்பரியம் தோன்றியது. மிருகத்தனமான ஜாரிச ஆட்சித் தலைமையின் கீழிருந்த வறுமை மற்றும் சமூக பின்தங்கியநிலை என்னும் பயங்கரமான மற்றும் சீரழிந்துசெல்லும் எதார்த்தத்தை மாற்றுவதற்கு அது முனைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதையில், எதேச்சாதிகார ஆட்சியைத் தூக்கியெறிவதற்காய் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு புரட்சிகர இயக்கம் மெல்ல மெல்ல உருக்கொண்டது. இளம் ட்ரொட்ஸ்கி என்ற வாழ்க்கைச்சரித நூலில் மாக்ஸ் ஈஸ்ட்மென் (அவர் சோசலிசவாதியாக இருந்த வருடங்களின் சமயத்தில்) ஒரு அற்புதமான பத்தியில் ரஷ்ய புரட்சிகரவாதி என்ற ஆளுமை குறித்து பின்வரும் விவரிப்பை நமக்கு அளிக்கிறார்: ரஷ்யாவில் இந்தப் புரட்சியை பூர்த்தி செய்வதற்காய் ஒரு அற்புதமான ஆண்களினதும் பெண்களினதும் தலைமுறை பிறந்திருந்தது. நாட்டின் எந்த ஒரு மூலையிலிருக்கும் பகுதிக்கும் நீங்கள் பயணம் செய்து பாருங்கள், உங்கள் பெட்டியில் அல்லது பேருந்தில் கொஞ்சம் அமைதியான, வலிமையான, சிந்தனைமிகுந்த முகத்தினை நீங்கள் பார்ப்பீர்கள் வெள்ளையான மெய்யியல் மிளிரும் நெற்றியும் மெல்லிய பழுப்பு நிற தாடியும் கொண்ட ஒரு நடுத்தர வயது மனிதராய் இருக்கலாம், அல்லது கூர்மையான புருவங்களையும் உறுதியான தாய்மை நிரம்பிய தோற்றமும் கொண்ட ஒரு வயதான பெண்மணியாக இருக்கலாம், அல்லது ஒரு நடுத்தர வயது ஆண், அல்லது ஒரு இளம் பெண்ணாகக் கூட இருக்கும், ஒப்பனையற்ற அழகாய் தெரிவார், ஆனால் அவர்கள் ஒரு கடினமான கடந்தகாலத்தை தமக்கு பின்னால் கொண்டிருப்பதுபோல் தோன்றும். விசாரித்துப் பார்த்தீர்களென்றால் தெரியும், அவர்கள் பழைய கட்சிப் பணியாளர்கள் என்று. தியாக-நம்பிக்கையின் ஒரு திடமான மற்றும் உறுதியான வம்சாவளியாக பயங்கரவாத இயக்கத்தின் பாரம்பரியத்திலே சீராட்டி வளர்க்கப்பட்டு, மனிதகுலத்தை நேசிக்கவும், உணர்ச்சிவசமற்று சிந்திக்கவும் மற்றும் தமக்குத் தாமே சொந்த எஜமானர்களாக இருக்கவும், மரணத்தை தமது தோழமையாய் அனுமதித்தவர்களாகவும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்பட்டவர்களான இவர்கள் இளம் வயதிலேயே எதார்த்தமாக சிந்திப்பது என்ற ஒரு புதிய விடயத்தை கற்றுக் கொண்டார்கள். கைது மற்றும் நாடுகடத்தல் ஆகிய நெருப்புகளில் அவர்கள் புடம்போடப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஏறக்குறைய ஒரு உயர்குடிமக்களுக்கான விருதுகளை பெறக்கூடியவர்களாக, Knights of the Round Table அல்லது Samurai வீரர்கள் போன்று சாகசம் புரிவதற்கு நம்பத்தகுந்த ஆண் பெண்களது ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட வரிசையாக, ஆனாலும் தமது பெருந்தகைமைக்கான உரிமையை கடந்த காலத்தில் அல்லாமல் எதிர்காலத்தில் கொண்டவர்களாய் இருந்தார்கள். 3 ரஷ்யப் புரட்சிகர இயக்கமானது, அதன் ஆரம்ப கட்டங்களில், தன்னை தொழிலாள வர்க்கத்தை நோக்கி திருப்பியிருக்கவில்லை. பதிலாக, மக்களில் மிகப்பெரும்பான்மையானோராய் இருந்த விவசாயிகளை நோக்கியே அது நோக்குநிலை கொண்டிருந்தது. பண்ணையடிமைத்தனத்தில் இருந்து விவசாயிகள் பூர்வாங்க விடுதலை பெற்றமை - 1861 இல் ஜார் அலெக்சாண்டரால் பிரகடனம் செய்யப்பட்டது - ரஷ்ய சாம்ராஜ்யத்தின் சமூக-அரசியல் கட்டமைப்பின் முரண்பாடுகளை தீவிரப்படுத்தியது. 1870கள் ஒரு மாணவர்--இளைஞர் இயக்கத்தின் தொடக்கத்தைக் கண்டது. இவர்கள் விவசாயிகளிடையே சென்று அவர்களுக்கு கல்வியூட்டி அவர்களை நனவான அரசியல் நடவடிக்கைக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். இந்த இயக்கங்களில் முக்கிய அரசியல் செல்வாக்கு என்பது அராஜகவாதத்தின் தத்துவாசிரியர்களிடம் இருந்து, பிரதானமாக லாவ்ரோவ் மற்றும் பக்கூனின் ஆகியோரிடமிருந்து, வந்தது. விவசாய வெகுஜனங்களின் ஒரு எழுச்சியில் இருந்து, ரஷ்யாவின் புரட்சிகர உருமாற்றத்தை பக்கூனின் மனக்கண்ணால் கண்டார். விவசாயி வர்க்க நிலையற்றதன்மையும் அரசு ஒடுக்குமுறையும் ஒன்றுசேர்ந்து இந்த இயக்கத்தை சதிச்செயல் மற்றும் பயங்கரவாதப் போராட்ட வழிமுறைகளை ஏற்கத் தள்ளியது. இந்த பயங்கரவாத அமைப்புகளில் மிகக் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது நரோத்னாயா வோல்யா, (Narodnaia Volya, மக்களின் விருப்பம்). ஜி.வி.பிளெஹானோவ்: ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை ரஷ்யாவில், ஜனரஞ்சக வாதம் (populism), அதன் பயங்கரவாத நோக்குநிலை இவற்றின் மேலாதிக்க செல்வாக்கிற்கு எதிராக, ஜி.வி. பிளெஹானோவினால் (1856-1918) நிகழ்த்தப்பட்ட போராட்டத்தில் 1880களில் மார்க்சிச இயக்கத்தின் தத்துவார்த்த அரசியல் அஸ்திவாரங்கள் நிறுவப்பெற்றன. ஜனரஞ்சக வாதத்திற்கும் புதிய மார்க்சிச போக்கிற்கும் இடையேயான மோதலுக்கு அடியில் இருந்த முக்கிய பிரச்சினை வரலாற்று முன்னோக்கு பற்றியதாகும். அதாவது சோசலிசத்திற்கான ரஷ்ய பாதை ஒரு விவசாயப் புரட்சி மூலம் அடையப்பெறுமா, அதில் விவசாய சொத்துடைமையின் பாரம்பரிய சமூகவடிவங்கள் சோசசலிசத்திற்கான அடிப்படையை வழங்குமா? அல்லது ரஷ்ய முதலாளித்துவ வளர்ச்சியையும் நவீன தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியையும் தொடர்ந்து, ஜாரிசத்தை தூக்கிவீசுதலும், ஜனநாயகக் குடியரசை நிறுவுதலும் மற்றும் சோசலிச உருமாற்றத்திற்கான ஆரம்பமாக இருக்குமா? என்பதுதான். பயங்கரவாதத்திற்கு எதிராகவும் தீர்மானகரமான புரட்சிகர சக்தியாக விவசாயிகளை ஜனரஞ்சகரீதியாக குணாம்சப்படுத்துவதற்கு எதிராகவும் வாதிடுகையில், முன்பு ஜனரஞ்சக இயக்கத்தில் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்த பிளெஹானோவ் ரஷ்யா முதலாளித்துவப் பாதைகளில் அபிவிருத்தியடைந்து கொண்டிருந்தது என்பதை வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சிப்போக்கின் தவிர்க்கவியலாத விளைவாக ஒரு தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கம் பெருகி வளரும் என்றும் அவர் வாதிட்டார். எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிவதிலும், ரஷ்யாவை ஜனநாயகமயப்படுத்துவதிலும், நிலப்பிரபுத்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார மிச்சசொச்சங்கள் அத்தனையையும் துடைத்தெறிவதிலும், அத்துடன் சோசலிசத்துக்கான உருமாற்றத்தை தொடக்குவதிலும் புதிய சமூக வர்க்கம் தான் தீர்மானகரமான சக்தியாக இருக்கப் போகிறது என்று அவர் வலியுறுத்தினார். மார்க்ஸ் மரணித்த ஆண்டான 1883 இல், பிளெஹானோவ், தொழிலாளர் விடுதலைக் குழுவை (Emancipation of Labor Group) ஸ்தாபகம் செய்தமைக்கு அரசியல் தொலைநோக்குப் பார்வை அவசியமாக இருந்தது, புத்திஜீவித தீரமும் மற்றும் உடல் தீரமும் கூட அவசியமாயிருந்தது என்பதை குறிப்பிடவும் அவசியமில்லை. பிளெஹானோவ் தனது நாட்களின் ரஷ்ய ஜனரஞ்சகவாதிகளுக்கு எதிராக முன்னெடுத்த வாதங்கள் பின்னாளில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு (Russian Social Democratic Labor Party) அடித்தளமாக அமைந்த வேலைத்திட்ட அடித்தளங்களை ஸ்தாபித்துத் தந்தது மட்டுமல்ல; இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும், சொல்லப்போனால் இன்றுவரையிலும் கூட, சோசலிச இயக்கத்தை விடாது துரத்தி வந்திருக்கக் கூடிய வர்க்க நோக்குநிலை மற்றும் புரட்சிகர மூலோபாயம் குறித்த மிகமுக்கிய பிரச்சினைகள் பலவற்றையும் கூட பிளெஹானோவ் முன்னெதிர்பார்த்திருந்தார். இன்று பிளெஹானோவ் இரண்டாம் அகில (1889-1914) சகாப்தத்தில் வாழ்ந்த மார்க்சிச மெய்யியலின் மிக முக்கியமான பொருள்விளக்க அறிஞர்களில் ஒருவராக பிரதானமாக நினைவுகூரப்படுகிறார் ஆனாலும் போதுமான அங்கீகரிப்பு என்பது இல்லாமலிருக்கிறது. இந்த வகையில், அவரது அநேக படைப்புகள் பொதுவாக அறியாமையுடனான விமர்சனத்துக்கு குறிப்பாக ஹேகல் மற்றும் இயங்கியல் வழிமுறையின் முக்கியத்துவத்தை பிளெஹானோவ் அங்கீகரிக்கத் தவறி விட்டார் என்பதாகக் கூறுபவர்களிடமிருந்து ஆட்படுகின்றன. அத்தகைய விவாதக்கள முழக்கங்களை படிக்கும்போதெல்லாம், அவற்றின் ஆசிரியர்கள் பிளெஹானோவின் படைப்புகளைக் கண்டனம் செய்யச் செல்வதற்கு முன்பாக உண்மையில் நேரம் ஒதுக்கி அவற்றை நன்கு வாசித்தால் நன்றாயிருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 4 புரட்சிகர மூலோபாயத்திற்கு பிளெஹானோவ் வழங்கிய பங்களிப்பில், உதாசீனப்படுத்தப்படுகின்றது என்று கூறமுடியாவிட்டாலும் குறைமதிப்பீடு செய்யப்படுகின்ற இன்னொரு அம்சமும் இருக்கிறது: முதலாளித்துவத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வது, சோசலிச நனவின் உருவாக்கத்தில் ஒரு மிகமுக்கிய கூறாக அவர் வலியுறுத்தியமை தான் அது. தொழிலாளர் விடுதலை இயக்கத்தை நிறுவிய சில காலத்திலேயே எழுதப்பெற்ற, அவருடைய முந்தைய படைப்புக்களில் மிக முக்கியமானதான சோசலிசமும் அரசியல் போராட்டமும் என்ற நூலில், அரசியலின் முக்கியத்துவத்தை நிராகரித்து, தொழிலாளர்கள் தங்களை அரசியல் நலன்களில் பிணைத்துக் கொண்டு கறைபடியவிடக் கூடாது என்ற கருத்தைக் கூறியிருந்த ரஷ்ய அராஜகவாதிகளின் நிலைப்பாட்டை பிளெஹானோவ் முற்றிலும் எதிர்த்தார். " 'அரசியலில்' அக்கறை காட்டியதற்காக, அரசியலில் ஆதிக்கத்தை அடைந்த எந்த வர்க்கமும் வருத்தப்பட நேர்ந்ததில்லை. மாறாக, அவை ஒவ்வொன்றும் அரசியலில் ஆதிக்கத்தை அடைந்த பின்னர்தான் தமது வளர்ச்சியின் உச்ச நிலையை அடைந்திருந்தன. சமூக மறுகட்டமைப்பிற்கான ஒரு திறமையான கருவிதான் அரசியல் போராட்டம் என்பதை வரலாறு நிரூபித்துள்ளதை நாம் ஏற்கவேண்டும்." என்று பிளெஹானோவ் குறிப்பிட்டார். அதன்பின் பிளெஹானோவ் வர்க்க நனவின் அபிவிருத்தியிலான முக்கிய கட்டங்களை ஆராய்ந்தார். நீளமான மேற்கோளாக இருப்பினும் கூட பின்வரும் பத்தியானது பொருத்தத்தில் காலத்திற்கும் தாக்குப்பிடித்து நிற்பதாகும்: தன்னுடைய பொருளாதார நிலைமைக்கும், அரசில் தான் கொண்டுள்ள அரசியல் பங்கிற்கும் இடையே உள்ள தொடர்பைப்பற்றி ஒடுக்கப்பட்ட வர்க்கம் சிறிது சிறிதாகத்தான் தெளிவடைகிறது. நீண்ட காலம் தன்னுடைய பொருளாதாரப் பணிகளை பற்றிக்கூட அது அறிந்து கொள்ளுவதில்லை. இவ் வர்க்கத்தில் இருக்கும் தனி நபர்கள், சமூக அமைப்பின் எந்த காரணிகளால் தங்களுக்கு இத்தகைய இழிநிலை ஏற்பட்டுள்ளது என்பதைச் சிந்திக்கக்கூட முடியாமல், தங்களுடைய அன்றாட வாழ்விற்காக கடுமையாகப் போராடுகின்றார்கள். தங்கள் மீது வரும் தாக்குதல்கள், எங்கிருந்து, எவரால் தொடக்கப்படுகின்றன என்று கூட அறியாமல், அவற்றை தவிர்க்க அவர்கள் முற்படுகின்றனர். இறுதி ஆய்வில் அவர்கள்தான் தாக்குதல்களுக்கு இலக்கும் ஆவர். இதுகாறும் அவர்களுக்கு வர்க்க நனவு இருந்ததில்லை. தனிப்பட்ட ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான அவர்களுடைய போராட்டத்தில் வழிகாட்டும் உயர் சிந்தனைகளும் இல்லை. அடக்குமுறைக்குட்பட்டுள்ள வர்க்கம் தனக்கானதாக இன்னும் இல்லை. நாளடைவில் அது சமூகத்தில் மிக முன்னேறிய வர்க்கமாக உருவாகும். ஆனால், அது அந்த நிலையினதாக இன்னும் ஆகவில்லை. ஆளும் வர்க்கத்தின் நனவாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள சக்திக்கு எதிராக தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களாக அல்லது தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களின் குழுவாக தனித்தனியாக எதிர்த்து நிற்கும் முயற்சிகளாகவே உள்ளன. உதாரணத்திற்கு, இப்பொழுதும் கூட தீவிரமாக சுரண்டும் முதலாளியை குறிப்பாக வெறுக்கும் தொழிலாளர்களை நாம் காண்கின்றோம். ஆனால், சுரண்டும் வர்க்கம் முழுவதும் எதிர்க்கப்படவேண்டும் என்பதும், அதேபோல் ஒரு மனிதன் மற்றைய மனிதனை சுரண்டும் சாத்தியத்தைகூட இல்லாதொழிக்கலாம் என்ற சிந்தனையும் வரவில்லை. ஆயினும், சிறிது சிறிதாக பொதுமைப்படுத்தும் நிகழ்ச்சிப்போக்கு ஏற்படுகிறது, ஒடுக்கப்பட்டவர்கள் தாங்கள் ஒரு வர்க்கம் என்பது பற்றி நனவடைய முற்படுகின்றனர். ஆனால், தங்களுடைய வர்க்க நிலைமை பற்றிய தனித்துவமான அம்சங்களைப் பற்றி அவர்கள் புரிந்திருத்தல்கூட ஒருதலைப்பட்சமாகத்தான் இருக்கின்றது: அவர்களுடைய உட்பார்வையில் இருந்து முழு சமூக இயங்குமுறையில் இருக்கும் தூண்டும் மற்றும் உந்துதல் சக்திகள் மறைந்துதான் இருக்கும். சுரண்டும் வர்க்கம், அவர்களுக்கு தனிப்பட்ட முதலாளிகளின் கூட்டாக தோன்றுகிறதே அன்றி, அவர்கள் அரசியல் அமைப்பின் இழைகளினால் இணைந்து தொகுப்பாயிருப்போர் என்று தோன்றுவதில்லை. இந்த வளர்ச்சிக் கட்டத்தில் ஒடுக்கப்பட்டுள்ளவர்கள் சிந்தனைகளில் தெளிவு இல்லை... "சமுதாயத்திற்கும்" "அரசிற்கும்" என்ன தொடர்பு உள்ளது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. வர்க்க முரண்பாடுகளுக்கு மேலான ஒன்றாக அரச அதிகாரம் தன்னிச்சையாய் செயல்படுவதாக அவர்களால் கருதப்படுகிறது. அதன் பிரதிநிதிகள் எதிரெதிரான வர்க்கங்களை சமரசப்படுத்துபவர்களாகவும் இயற்கை நீதிபதிகளாகவும் தோன்றுகின்றனர் மற்றும் அவர்களிடத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் முழு நம்பிக்கை வைக்கின்றனர். உதவிக்கான அதன் கோரிக்கைகள் மீது அவர்களிடமிருந்து பதில் கிடைக்காத போது அது மிகப்பெரும் அதிர்ச்சியடைகிறது. இதற்கு அடுத்த, கடைசி வளர்ச்சிக் கட்டத்தில்தான் ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னுடைய நிலைமை பற்றி முழுமையான தெளிவை அடைகிறது. சமுதாயத்திற்கும் அரசிற்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி இப்பொழுது அது உணர்கிறது. சுரண்டும் அரசியல் அமைப்பை உருவாக்குபவர்களிடம் அதன் சுரண்டலாளர்களை கட்டுப்படுத்துங்கள் என்று இப்பொழுது அது முறையிடுவதில்லை, அரசு என்பது தன்னை ஒடுக்குபவர்களது அரணாகவும் பாதுகாப்பாகவும் சேவைசெய்யக் கூடிய ஒரு கோட்டையாக இருக்கிறது, ஒடுக்கப்படுபவர்கள் இந்தக் கோட்டையை கைப்பற்றி தமது சொந்தப் பாதுகாப்புக்காய் மறுஒழுங்கு செய்தாக வேண்டும், அதன் நடுநிலைத்தன்மையை நம்பி அவர்கள் ஒதுங்கிச் சென்று விட முடியாது என்பதை அது அறிகிறது. ஒரு நீண்ட நெடுங்காலத்திற்கு அவர்கள் சலுகைகளுக்காக மட்டும் போராடுகிறார்கள், அவர்களுக்கு மேலாதிக்கத்தைத் தராமல் மாறாக வருங்கால மேலாதிக்கத்திற்காய் அபிவிருத்தியடைவதற்கும் முதிர்ச்சியடைவதற்குமான சாத்தியத்தை மட்டுமே தருகின்றதான சீர்திருத்தங்களை மட்டுமே அவர்கள் கோருகிறார்கள்; இந்த சீர்திருத்தங்கள் அவர்களது கோரிக்கைகளது மிக அவசரமானதையும் உடனடியானதையும் மட்டும் பூர்த்தி செய்யக் கூடியவை, நாட்டின் சமூக வாழ்வின் மீதான அவர்களது செல்வாக்கை மிகக் குறைவாகவே விரிவுபடுத்தக் கூடியவை. பகைவனின் பிராந்தியத்தின் தனித்தனியான சிறிய துண்டுகளுக்கான கடினமான போராட்டப் பள்ளியின் வழி பயின்று தான் ஒடுக்கப்படும் வர்க்கமானது, தீர்மானகரமான யுத்தத்திற்கு அவசியமான சளைப்பின்மையையும், துணிச்சலையும் மற்றும் அபிவிருத்தியையும் பெறுகிறது. ஆனால் இந்த பண்புகளை அடைந்தபின், அந்த வர்க்கம் தன்னுடைய விரோதிகளை வரலாற்றால் கண்டனத்திற்குட்பட்டுவிட்ட வர்க்கமாக இறுதியில் காணமுடிகிறது, இதன் பின் தன்னுடைய வெற்றி பற்றி இதற்கு எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை. ஒரு அரசியல் போராட்டமாக ஆகும் மட்டத்திற்கு நனவானதாக ஆகக்கூடிய புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் நீண்டதொரு நாடகத்தில், புரட்சி என்று அழைக்கப்படுவதானது கடைசிக் காட்சி மட்டுமே.5 பிளெஹானோவால் நடத்தப்பட்ட போராட்டம், சோசலிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களின் அடிப்படை பொறுப்புகளை வரையறுத்தது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவின் அபிவிருத்திமீது அவர்களின் அனைத்து முயற்சிகளையும் ஒருமுகப்படுத்தவும் சோசலிசப் புரட்சியின் தலைவனாக அதன் வரலாற்றுப் பாத்திரத்திற்காக அதனை தயாரிக்கவும் ஆகும். இந்த வரையறையில் உள்ளடங்கி இருப்பது கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் ஆகும். இந்த சாதனத்தின் மூலம்தான், ஒரு திட்டவட்டமான அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த நனவு எழுச்சியுறுகிறது; அபிவிருத்தி செய்யப்படுகிறது; ஒழுங்கமைக்கப்படுகிறது. பிளெஹானோவின் எழுத்துக்கள் ஜனரஞ்சகவாதிகளை நெருக்கடியில் தள்ளின. 1880களின் பிந்தைய பகுதிக்குள்ளாகவே, வெறும் ஒரு தசாப்தத்திற்கு முன்னால் மக்களுக்கான இலட்சியத்திலிருந்தான ஒரு ஓடுகாலியாக தாங்கள் கண்டனம் செய்த ஒரு மனிதரிடமிருந்தான அடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் தடுமாறினார்கள் என்பது தெளிவானது. ஜாரிச ஆட்சியைப் பயமுறுத்தி அதன் பாதைகளை மாற்றிக் கொள்ளச் செய்வதே பயங்கரவாதத்தின் நோக்கமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிய பிளெஹானோவும் அதிகரித்துவந்த மார்க்சிஸ்டுகளின் படையணியும், பயங்கரவாதிகளை வெடிகுண்டுகளுடனான தாராளவாதிகள் என்று வருணித்தனர் - இந்த விவரிப்பு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு போலவே இப்போதும் கூட பொருத்தமானதாய் இருப்பதைப் பார்க்கலாம். மேலும் அவர்களுடைய பயங்கரவாதம், தொழிலாள வர்க்கத்தின் நனவை வளர்க்க வேண்டும் என்ற நீண்டகாலப் போராட்டத்தை புறக்கணிக்கிறது என்றும் பிளெஹானோவ் வலியுறுத்தினார். மேலும், அவர்களுடைய பயங்கரவாதம், தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்துவதற்கான நீண்ட போராட்டத்தை புறக்கணித்து, பதிலாக சாகசம்புரிகின்ற தனிநபர்களது பழிவாங்கும் தாக்குதல்களுடன் வெகுஜனங்களை பெரிதும் கவரவைக்கும் முயற்சியில், அவர்களை மதிகெடச் செய்யவும் மனம்சோர்வுறச்செய்யவும் மட்டுமே பயன்படும் என்று பிளெஹானோவ் வலியுறுத்தினார். பிளெஹானோவின் முன்னோடியான எழுத்துக்கள் 1880களின் பிற்பகுதியிலும் மற்றும் 1890களின் ஆரம்ப காலத்திலும் புரட்சிகரப் போராட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்த புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களது ஒரு ஒட்டுமொத்த தலைமுறை மீதும் செல்வாக்கு செலுத்தியது. நகர்ப்புறத்திலும் நாட்டுப்புறத்திலுமான சமூக உருமாற்றங்கள் மேலும் மேலும் பிளெஹானோவின் பகுப்பாய்வுக்கு பொருந்திப் போகப்போக, அவரது விவாதத்திறனின் தாக்கம் மிகப்பெரியதாகிச் சென்றது. லெனினின் தோற்றம் 1890களுக்குள்ளாக எல்லாம் ரஷ்யா ஒரு துரிதமான பொருளாதார அபிவிருத்திக்குள் சென்று கொண்டிருந்தது, தொழிற்துறை வளர்ச்சியானது சக்தி அதிகரித்துச் சென்ற தொழிலாள வர்க்கத்தை உருவாக்கியது. இந்த சூழ்நிலைகளின் கீழ் தான், உயிர்த்தியாகம் செய்திருந்த ஒரு புரட்சிகர பயங்கரவாதியின் இளைய சகோதரரான விளாடிமிர் இலியிச் உல்யனோவ் புரட்சிகர இயக்கத்திற்குள் நுழைந்தார். 1893 இல் மக்களின் நண்பர்கள் அமைப்பினர் யார் அவர்கள் எவ்வாறு சமூக ஜனநாயகக் கட்சியினருடன் மோதுகின்றனர் (What the Friends of the People Are and How They Fight the Social Democrats) என்ற தலைப்பில் ஜனரஞ்சக இயக்கத்தின் மீதான ஒரு விமர்சனத்தின் மூலம் அவர் ஒரு தத்துவாசிரியராக தனது மரியாதையை ஸ்தாபித்தார். உல்யனோவ்-லெனின், மிகைலோவ்ஸ்கியின் அகநிலை சமூகவியல் என்று அவர் அடையாளமிட்ட ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவதில் தனது படைப்பின் பெரும்பகுதியை அர்ப்பணித்தார். நரோத்னிக் (ஜனரஞ்சக) இயக்கத்தின் அரசியல் ரஷ்யாவில் நிலவிய சமூக உறவுகளின் மீதான ஒரு அறிவியல் ஆய்வை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை அவர் விளங்கப்படுத்திக் காட்டினார். பண்ட உற்பத்தி பெரும் அபிவிருத்தியுற்று விட்டிருந்தது என்பதுடன், பெரும் தொழிற்துறைகள் ஸ்தாபிக்கப்பட்டு அவை எந்த உடைமையும் இல்லாதிருந்த பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களது உழைப்புசக்தியை விலைக்கு வாங்கிச் சுரண்டிய தனிநபர்களின் கரங்களில் குவிந்திருந்தது என்ற உண்மையை சந்திக்க நரோத்னிக்குகள் மறுத்ததை அவர் எடுத்துக்காட்டினார். பொருளாதார பகுப்பாய்வைக் காட்டிலும் - இது ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் அபிவிருத்தி என்ற அவரது அடுத்த முக்கிய படைப்பில் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது - நரோத்னிக் இயக்கத்தின் வர்க்க இயல்பை லெனின் குணாதிசயப்படுத்திக் காட்டியது தான் இன்னும் கூடுதல் முக்கியத்துவமானதாக இருந்தது. நரோத்னிக்குகள் அடிப்படையில் குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகளே, இவர்களது கண்ணோட்டங்கள் விவசாயி வர்க்கத்தின் சமூக நிலையையே பிரதிபலித்தன என்று அவர் விளக்கினார். ஜனநாயகக் கேள்விகளுடன் தொடர்புபட்ட ஜாரிச எதேச்சாதிகாரத்தை ஒழிப்பது, நாட்டுப்புறங்களில் நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்களை அழிப்பது, நிலத்தை தேசியமயமாக்குவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை லெனின் வலியுறுத்திய அதேசமயத்தில் ஜனநாயக இயக்கங்களுக்கும் மற்றும் சோசலிச இயக்கங்களுக்குமான தனித்துவத்தை அலட்சியப்படுத்துவது அடிப்படையான தவறு என்பதில் அவர் உணர்வுபூர்வமான உறுதியுடன் இருந்தார். பாட்டாளி வர்க்கத்தை எதேச்சாதிகாரத்தின் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ ஜனநாயக எதிரிகளுக்குக் கீழ்ப்படியச் செய்யும் போக்கு தான் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நனவை அபிவிருத்தி செய்வதில் மிகப்பெரும் இடையூறாக இருந்தது. மிகைலோவ்ஸ்கியின் கண்ணோட்டங்கள் மீதான தனது தாக்குதலில், லெனின், குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதியின் சோசலிசம் என்று அழைக்கப்படுவதற்கும் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வாதிட்டார். அதிகபட்சமாய், குட்டி முதலாளித்துவத்தின் சோசலிசம் என்பது, மூலதனத்தின் சக்திவாய்ந்த பெருக்கத்திற்கும் அது வங்கி மற்றும் தொழிற்துறை அதிபதிகளின் கரங்களில் குவிவதற்குமான அதன் ஏமாற்றம் கலந்த வெறுப்பை பிரதிபலிக்கிறது. குட்டி-முதலாளித்துவ சோசலிசம், முதலாளித்துவத்தின் அபிவிருத்தி மீதான ஒரு விஞ்ஞானபூர்வமான மற்றும் வரலாற்றுரீதியான பகுப்பாய்வைச் செய்வதற்கு திறனற்றதாகும். அப்படியொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும் கூட, உயர்வு காண்கின்ற வர்க்கமாக இருப்பதற்கு அப்பாற்பட்டு கடந்தகால பொருளாதாரத்தின் உயிர்பிழைத்த துண்டுகளையே பிரதிநித்துவப்படுத்தும் குட்டி-முதலாளித்துவத்தின் நம்பிக்கையற்றதொரு நிலையையே அது எடுத்துக்காட்டும். புரட்சிகர சோசலிச இயக்கமானது, தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக குட்டி-முதலாளித்துவ ஜனநாயக சித்தாந்தத்தின் செல்வாக்கிற்கு எதிராகப் போராடியாக வேண்டும் என்பதே லெனின் அதிலிருந்து எடுத்த முடிவாகும். சோசலிச கோரிக்கைகளுக்கும் முதலாளித்துவ-ஜனநாயகக் கோரிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அது புரிந்து வைத்திருக்க வேண்டும். எதேச்சாதிகாரத்தை ஒழிப்பதும் நிலப்புரபுத்துவ சொத்துரிமைகளை அழிப்பதும் வரலாற்றுரீதியாக முற்போக்கானவை என்ற அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலுக்கு முடிவை அவை உத்தரவாதப்படுத்துவதில்லை. உண்மையில், இந்தக் கோரிக்கைகள் நிறைவேறுவதன் விளைபொருளாக, முதலாளித்துவத்தின் அபிவிருத்தி மேலும் அதிகரித்து கூலி-உழைப்புச் சுரண்டல் தீவிரப்படவே செய்யும். அதற்காக தொழிலாள வர்க்கம் ஜனநாயகப் போராட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. அதற்கு நேரெதிராக, தொழிலாள வர்க்கம் தான் ஜனநாயகப் போராட்டத்தின் முன்னணிப் படையாக இருந்தாக வேண்டும். ஆனால் எந்த நிலைமைகளிலும் அது முதலாளித்துவ அல்லது குட்டிமுதலாளித்துவ பதாகையின் கீழ் அந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது. அதைக்காட்டிலும், முதலாளித்துவத்திற்கே எதிரான போராட்டத்திற்கு வழிவகை செய்துதரும் பொருட்டு மட்டுமே அது ஜனநாயகத்திற்கான போராட்டத்தை நடத்தியாக வேண்டும். தொழிலாளர்கள் ஜாரிசத்திற்கு எதிராகப் போரிடுவதான பேரில், தமது சுயாதீனமான வர்க்க நோக்கங்களை பின்னால் வைத்து விட்டு, வேலைத்திட்ட பிரச்சினைகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல், ஆட்சியின் அத்தனை அரசியல் எதிரிகளுடனும் கூட்டணிகளை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை வைத்த ஒட்டவைப்பாளர்களையும் கூட்டணிக்கு ஆதரவாய் பேசுபவர்களையும் லெனின் கண்டனம் செய்தார். மார்க்சிஸ்டுகள் ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்தது, தாராளவாதிகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கு தகவமைப்பதன் மூலம் அல்ல, மாறாக ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தமது சொந்த சுயாதீன அரசியல் கட்சியில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதன் மூலம் ஆகும். ரஷ்ய ஜனரஞ்சகவாதத்தின் தன்மையை தொகுத்து கூறிய லெனின் எழுதினார்: மக்களின் நலன்கள் குறித்தான இனிக்கும் பேச்சை நம்ப மறுத்து இன்னும் ஆழத்திற்குச் செல்ல முயற்சி செய்தீர்களானால், முழுக்க முழுக்க குட்டி முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகளுடனேயே நீங்கள் உரையாடிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள் . 6 தொழிலாளி தன்னை ஒடுக்கிய அமைப்புமுறையின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பையும், அத்துடன் இந்த அமைப்புமுறையின் கீழ் வர்க்க குரோதங்கள் அத்தியாவசியமானதாகவும் தவிர்க்கமுடியாததாகவும் அமைந்திருப்பதையும் புரிந்து கொள்ளச் செய்கின்றதை நோக்கி புரட்சிகரக் கட்சியின் வேலைகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தனது படைப்பை நிறைவு செய்கையில், லெனின் வலியுறுத்தினார். அதன் முன்னேறிய பிரதிநிதிகள் விஞ்ஞான சோசலிசத்தின் சிந்தனைகளில், ரஷ்ய தொழிலாளியின் வரலாற்றுப் பாத்திரம் என்ற சிந்தனையில் தேர்ச்சி பெற்றுவிடுகின்ற போது, இந்த சிந்தனைகள் பரவலாகின்றபோது, தொழிலாளர்களின் இப்போதைய ஆங்காங்கேயான பொருளாதாரப் போரை நனவான வர்க்கப் போராட்டமாக மாற்றுவதற்கு தொழிலாளர்களிடையே ஸ்திரமான அமைப்புகள் உருவாக்கப்படுகின்றபோது அப்போது ரஷ்ய தொழிலாளி, அத்தனை ஜனநாயக பிரிவினரினதும் தலைக்கு மேலுயர்ந்து, வரம்பிலா ஆட்சியதிகாரத்தை (absolutism) தூக்கியெறிந்து ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை (அக்கம் பக்கமாக அனைத்து நாடுகளது பாட்டாளி வர்க்கத்துடன்) வெற்றிகரமான கம்யூனிசப் புரட்சிக்கான வெளிப்படையான அரசியல் போராட்டத்திற்கான நேரான பாதையின் வழியே தலைமை தாங்கிச்செல்வார்.7 மிகவும் உயிர்ப்பானதும் வருங்கால நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்தத்தக்கதுமாக இருந்த இந்தப் படைப்பில், லெனின், போல்ஷிவிக் கட்சியின் கட்டுமானத்திற்கு வழிகாட்டவிருந்த கருத்தாக்கங்களை அபிவிருத்தி செய்தார். கட்சி என்ற கருத்தாக்கத்தையோ அல்லது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஒழுங்கமைப்பு என்ற கருத்தாக்கத்தையோ அவர் முதலில் கண்டுபிடிக்கவில்லை. என்றாலும் இந்தக் கருத்தாக்கங்களுக்கு சமப்படுத்தப்படமுடியாத தீவிரத்துடனான ஒரு அரசியல் உறுதியை அவர் அளித்தார். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஒழுங்கமைப்பிற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் நலன்களை பிரதிபலித்த தத்துவங்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு எதிரான ஒரு தீவிரப் போராட்டம் அவசியமாக இருக்கிறது என்பதில் அவர் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். 1900 ஆம் ஆண்டில், நமது இயக்கத்தின் அவசரமான கடமைகள் என்ற அவரது கட்டுரையில் லெனின் எழுதினார்: சமூக-ஜனநாயகம் என்பது தொழிலாள-வர்க்க இயக்கம் மற்றும் சோசலிசத்தின் சேர்க்கையாகும். தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு தனித்தனியான கட்டத்திலும் செயலூக்கமற்று அதற்கு சேவை செய்வது அல்ல அதன் கடமை, மாறாக ஒட்டுமொத்தமாக இயக்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதும், இயக்கத்திற்கு அதன் இறுதியான நோக்கத்தையும் அரசியல் கடமைகளையும் சுட்டிக் காட்டுவதும், அத்துடன் அதன் அரசியல் மற்றும் சித்தாந்த சுயாதீனத்தை பாதுகாப்பதுமே அதன் கடமையாகும். சமூக-ஜனநாயகத்தில் இருந்து தனிமைப்படும்போது, தொழிலாள-வர்க்க இயக்கமே கீழ்த்தரமாகி தவிர்க்கவியலாமல் முதலாளித்துவ தன்மை பெற்றதாகவும் ஆகிவிடுகிறது. வெறும் பொருளாதாரப் போராட்டத்தை நிகழ்த்துவதன் மூலமாக, உழைக்கும் வர்க்கம் அதன் அரசியல் சுயாதீனத்தை இழந்து விடுகிறது; அது மற்ற கட்சிகளின் வாலாக மாறி உழைக்கும் வர்க்கங்களது விடுதலை உழைக்கும் வர்க்கங்களாலேயே தான் வெல்லப்பட்டாக வேண்டும் என்ற மகத்தான கோட்பாட்டைக் காட்டிக்கொடுக்கிறது. ஒவ்வொரு நாட்டிலுமே தொழிலாள வர்க்க இயக்கம் சோசலிசத்தில் இருந்து தனித்து நிலவியதான, இரண்டும் அதனதன் வழிகளில் செயல்பட்டதான ஒரு காலகட்டம் இருந்து வந்திருக்கிறது; ஒவ்வொரு நாட்டிலுமே இந்த தனிமைப்படலானது சோசலிசம் மற்றும் தொழிலாள-வர்க்க இயக்கம் இரண்டையுமே பலவீனப்படுத்தவே செய்திருந்தது. சோசலிசத்தை தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றுகலப்பது மட்டுமே அத்தனை நாடுகளிலும் இரண்டிற்குமான ஒரு நீடித்து இருக்ககூடிய அடித்தளத்தை உருவாக்கித் தந்திருக்கின்றன.8 பொருளாதாரவாதத்திற்கு எதிரான போராட்டம் ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சிக்குள்ளாக பொருளாதாரவாதம் என்றழைக்கப்பட்டதான ஒரு புதிய போக்கு எழுந்திருந்தது. இதன் இருப்பு ஜேர்மனியில் பேர்ன்ஸ்டைன்வாத திருத்தல்வாதத்தின் வளர்ச்சியுடன் பிணைந்ததாய் இருந்தது. இந்த பொருளாதாரவாதத்தினர் புரட்சிகர அரசியல் போராட்டத்தை சிறுமைப்படுத்தினர். தங்களை 1890களின் மத்தியில் தன்னியல்பான தொழிலாள வர்க்க இயக்கத்தினை நோக்கி தகவமைத்துக் கொண்ட அவர்கள், சமூக ஜனநாயக இயக்கமானது வேலைநிறுத்தப் போராட்டங்களின் அபிவிருத்தியிலும் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டத்தின் பிற அம்சங்களிலும் கவனம் குவிக்க வேண்டும் என்று ஆலோசனையளித்தனர். இந்த அணுகுமுறையின் வெளிப்பாடு, தொழிலாளர் இயக்கமானது அதனது புரட்சிகர சோசலிச இலக்குகளை கைவிடவேண்டும் என்பதாகும். எதேச்சாதிகாரத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்திலான இடத்திற்கான பெருமை, தாராளவாத ஜனநாயக முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுக்காய் விட்டுக் கொடுக்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டது. பிளெஹானோவ் மற்றும் லெனின் பிரகடனம் செய்திருந்த சுயாதீனமான புரட்சிகர வேலைத்திட்டமானது, முதலாளித்துவ சமூகத்தின் கட்டமைப்பிற்குள்ளேயே தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு சாதகமாய் கைதுறக்கப்பட கேட்கப்பட்டது. அல்லது, இ.டி.குஸ்கோவா 1899 இல் வெளியிடப்பட்ட கிறிடோ (Credo) அறிக்கையில் பின்வருமாறு ஆலோசனையளித்தவாறாக: சகிப்புத்தன்மையற்ற மார்க்சிசம், எதிர்மறை மார்க்சிசம், ஆதிநிலை மார்க்சிசம் (இது சமூகத்தின் வர்க்கப் பிரிவினை என்ற ஒரு கருத்தாக்கத்தை மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்) ஆகியவை ஜனநாயக மார்க்சிசத்திற்கு வழிவிடும், சமகால சமூகத்தின் மத்தியில் கட்சியின் சமூக இடநிலையானது மிகச் சடுதியில் மாற வேண்டியதாயிருக்கும். கட்சியானது சமூகத்தை அங்கீகரிக்கும்: அதன் குறுகிய ஸ்தாபனரீதியான கடமைகள், பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், உட்குழுவாதக் கடமைகளானவை சமூகக் கடமைகளாக விரிவு காண வேண்டியிருக்கும், அத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அதன் உந்துதலானது மாற்றத்திற்கும், உழைக்கும் வர்க்கங்களது (அனைத்து) உரிமைகளை மிக முழுமையாகவும் திறம்பட்ட வழியிலும் பாதுகாக்கின்ற நோக்கத்துடன் நடப்பு நிலைமைகளுக்கு தகவமைத்துக் கொண்ட ஜனநாயக வழிகளின் பாதையில் சமகால சமூகத்தை சீர்திருத்துவதற்குமான ஒரு விருப்பத்தைக் கொண்டு உருமாற்றப்படும்.9 அத்தோடு முடியவில்லை: கிறிடோ அறிவித்தது, தொழிலாளர்களது சுயாதீனமான அரசியல் கட்சி குறித்த பேச்சுக்கள் எல்லாம் அந்நிய நோக்கங்களையும் அந்நிய சாதனைகளையும் நமது மண்ணில் விதைத்ததன் விளைபொருளே அன்றி வேறெதுவுமில்லை.10 பொருளாதாரவாதமானது ஒரு சர்வதேச இயல்நிகழ்வாக இருந்தது: மேற்கு ஐரோப்பாவின் தொழிலாளர் இயக்கத்தில் மார்க்சிசமானது மேலாதிக்கம் படைத்த அரசியல் மற்றும் சித்தாந்த சக்தியாக உருவெடுத்திருந்த நிலைமைகளின் கீழ், அந்த தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக மார்க்சிசத்திற்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்பு என்று கூறத்தக்கதான ஒன்று அபிவிருத்தியுற்றது. திருத்தல்வாதத்தின் வளர்ச்சியானது தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக மார்க்சிச செல்வாக்கு விரிவடைவதற்கான எதிர்நடவடிக்கையாகவும் அதனை பலவீனப்படுத்தவும் முதலாளித்துவத்தின் குட்டி-முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் செய்த முயற்சியை பிரதிபலித்தது. 1899இல், பிரெஞ்சு சோசலிஸ்டான மில்லரென்ட் (Millerand) ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்தபோது, இந்த திருத்தல்வாதத்தின் தாக்கங்கள் மிகத் தெளிவாக வெளிப்பட ஆகியிருந்தன. சந்தர்ப்பவாதத்தின் வெடிப்பானது சர்வதேச சமூக ஜனநாயகத்திற்கு உள்ளாக ஒரு நெருக்கடியை தூண்டியது. இதற்கெதிராக முதன்முதல் வெளிப்பட்டவர் பிளெஹானோவ் ஆவர். அதன்பின்னர், ரோசா லுக்சம்பேர்க் சீர்திருத்தமா அல்லது புரட்சியா? என்ற தனது அற்புதமான சிறுநூலைக் கொண்டு இந்தப் போராட்டத்திற்கு பங்களித்தார். ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள், தயக்கத்துடன், இந்தக் கோதாவுக்குள் இழுக்கப்பட்டனர். ஆனாலும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டமானது ரஷ்யாவில் லெனின் தலைமையில் அபிவிருத்தியுற்றதைப் போல வேறெங்கிலும் மிக முழுமையாக அபிவிருத்தி காணவில்லை. இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், ரஷ்ய சோசலிச இயக்கமானது ஒரு ஒன்றுபட்ட அரசியல் அமைப்பாக இருக்கவில்லை. தங்களை சோசலிஸ்டுகளாக, இன்னும் ஒருபடி மேலே மார்க்சிஸ்டுகளாகவும் அடையாளம் கண்டு கொண்ட ஏராளமான போக்குகளும் குழுக்களும் இருந்தன, ஆனாலும் அவை தமது அரசியல் மற்றும் நடைமுறை வேலைகளை, பிராந்தியத்திற்குள்ளான அடிப்படையில், அல்லது தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு குறிப்பிட்ட இன அல்லது மதக் குழுவின் பிரதிநிதியாக மேற்கொண்டனர். The Jewish Bund மதரீதியான அமைப்பில் மிகப் பிரபலமானதாக இருந்தது. 1890களின் இரண்டாம் பாதியில் ரஷ்ய தொழிலாளர் இயக்கமானது வலுப்பெற்ற நிலையில், வேலைத்திட்ட மற்றும் ஒழுங்கமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பின் தேவை வெளிப்படையாகவும் அவசியமாகவும் ஆனது. 1898 இல் மின்ஸ்க் நகரில் அனைத்து ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியினரது மாநாட்டை நடத்துவதற்கான முதல் முயற்சி, போலிஸ் ஒடுக்குமுறை மற்றும் மாநாட்டின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமையின் விளைவாக நடக்காமல் போனது. இந்த பின்னடைவிற்கு பிந்தைய சமயங்களில், ஒரு காங்கிரசை கூட்டுவதற்கான திட்டங்கள் எல்லாம் பொருளாதாரவாதப் போக்கின் எழுச்சியானது ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக இருந்த ரஷ்ய சோசலிச இயக்கத்தில் அதிகரித்துச்சென்ற வேற்றியல்புள்ள தன்மையினால் மேலும் சிக்கலாயின. தீப்பொறி (இஸ்க்ரா-Iskra) பிளெஹானோவ்தான் இப்போதும் ரஷ்ய சோசலிசத்தின் மரியாதைக்குரிய தத்துவார்த்த தலைவராக இருந்தார் என்றபோதும் ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியினரின் ஒன்றுபட்ட காங்கிரசை கூட்டுவதற்கான தயாரிப்பு வேலையின் பாதையில் உல்யனோவ்-லெனின் பிரதானமான ஆளுமையாக எழுந்தார். ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் புதிய அரசியல் செய்தித்தாளான தீப்பொறி (Iskra) வெளியீட்டில் அவர் ஆற்றிய முன்னிலைப் பாத்திரம் அவரது செல்வாக்கிற்கான அடிப்படையை அளித்திருந்தது. அரசியல் தஞ்சமடைந்தோர் இயக்கத்திற்குள்ளாகவும் (ιmigrι movement) ரஷ்யாவில் நடைமுறை புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்டுகள் இடையேயும் தீப்பொறி மரியாதை பெற்றதென்றால் அதன் காரணம், ரஷ்யா முழுவதுமான அடிப்படையில் அது தத்துவார்த்த, அரசியல், அமைப்புரீதியான ஒருமைப்பாட்டை வழங்கியிருந்தது, இது இல்லாதிருந்தால் ஒரு சிதறுண்ட இயக்கமாகவே இருந்திருக்கும். 1900 டிசம்பரில் தான் தீப்பொறியின் முதல் பதிப்பு வெளியானது. அதன் முகப்புப் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான அறிக்கையில் லெனின் விளக்கினார்: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்திக்கும் அரசியல் ஒழுங்கமைப்புக்கும் வழிவகை ஏற்படுத்தித் தருவதே நமது பிரதான மற்றும் அடிப்படையான கடமை ஆகும். அத்தனை சிறப்புக் கடமைகளையும் மற்றும் குறிப்பிட்ட போராட்ட வழிமுறைகளையும் இக்கடமைக்கு கீழ்ப்படியச் செய்ய மறுத்து இக்கடமையை பின்னால் தள்ளுகின்ற எவராயினும், அவர்கள் ஒரு தவறான பாதையை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதோடு இயக்கத்திற்கும் தீவிரமானதொரு தீங்கிழைப்பதற்கு காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள்.11 ஒரு நூற்றாண்டு கடந்த பின்னும் கூட சமகால நிலைமைகளுக்கு பொருத்தமாய் அமைகின்றதான வார்த்தைகளில் லெனின், தொழிலாளர்களுக்கு அவர்களது வாழ்க்கையின் அசாதாரணமான தருணங்களில் மட்டும், விசேடமான சந்தர்ப்பங்களில் மட்டும் அரசியலுக்கு பழக்குவதே பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுவோரை கடுமையாக விமர்சனம் செய்தார். போர்க்குணமிக்க தொழிற்சங்கவாதமும் பொருளாதாரக் கோரிக்கைகள் மீதான கிளர்ச்சியும் தான் தொழிலாள வர்க்கத்தில் தீவிரப்பட்ட நடவடிக்கையின் ஆதியும் அந்தமும் என்று கூறுவதாக இருந்த பொருளாதாரவாதப் போக்கின் பிரதிநிதிகளை வார்த்தைகளால் தீவிரமாக தாக்கிய லெனின், தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வியூட்டலும் அதன் சுயாதீனமான சோசலிச அரசியல் கட்சியை உருவாக்குதலும் தான் சோசலிஸ்டுகள் முகம் கொடுத்த தீர்மானகரமான கடமையாக இருந்தது என்று வலியுறுத்தினார். லெனின் எழுதினார்: வரலாற்றில் ஒரேயொரு வர்க்கமும் கூட ஒரு இயக்கத்தை ஒழுங்கமைத்து அதனை வழிநடத்தும் திறன்படைத்த அதன் அரசியல் தலைவர்களையும், அதன் முக்கிய பிரதிநிதிகளை உருவாக்காமல் அதிகாரத்தை எட்டியதாக சரித்திரமில்லை. நிறைவாக லெனின், அதிகம் பேசத் தேவையில்லை என்பதுபோல, நம்மை எதிர்கொண்டு நிற்கும் மிகப் பற்றியெரியும் பிரச்சினைகளில் இடம்பெறுகிறதான, அமைப்பு குறித்த பிரச்சினைகளுக்கு வரவிருக்கும் பதிப்புகளில் தொடர்ச்சியான கட்டுரைகளை அர்ப்பணிக்க ஆலோசனையை அளித்தார். என்ன செய்ய வேண்டும்? இந்த யோசனையில் இருந்து எழுந்தது என்னவென்றால், இருபதாம் நூற்றாண்டின் மிகுந்த தாக்கம் படைத்த மற்றும் சர்ச்சைக்கு உட்பட்ட அரசியல் கட்டுரையான லெனினின் என்ன செய்ய வேண்டும்? இந்த நூல், அதிலும் குறிப்பாக 1917 போல்ஷிவிக் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் இது தூண்டிய சர்ச்சையை மனதில் கொண்டு பார்த்தால், இது முதன்முதலில் 1902 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டபோது ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களால், மிக முக்கியமாக பிளெஹானோவினால், அரசியல் கடமைகள் மற்றும் அமைப்பு விடயத்திலான பிரச்சினைகளில் கட்சிக் கோட்பாடுகளது ஒரு அங்கீகாரமான அறிக்கையாக இது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த உண்மையாக இருக்கிறது. செவ்வியல் மார்க்சிசத்தில் எந்த அடிப்படையும் கொண்டிராத ஒரு சதிச்செயல்ரீதியான மற்றும் சர்வாதிகாரக் கூறினை என்ன செய்ய வேண்டும்? சோசலிசத்திற்குள் அறிமுகம் செய்தது என்று லெனினின் சிறுநூல் மீதான கண்டனங்களில் பலவும் கூறுகின்ற நிலையில், இந்த உண்மை ஓரளவுக்கு அரசியல் முக்கியத்துவம் கொண்டதாகவும் இருக்கிறது. பொருளாதாரவாதப் போக்கினால், அதாவது எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் ரஷ்ய சீடர்களால், எழுப்பப்பட்ட விமர்சனத்திற்கான சுதந்திரம் என்ற கோரிக்கையை ஆய்வு செய்வதில் இருந்து லெனினின் சிறுநூல் தொடங்குகிறது. முதலில் கேட்கும்போது கண்ணியமான ஜனநாயகரீதியான கோரிக்கையாகவும் ஏற்பைக் கோருவதாகவும் தோன்றக் கூடிய இந்த முழக்கத்தை, சர்வதேச சமூக ஜனநாயகத்திற்குள் மார்க்சிசத்தின் மரபொழுங்கை பாதுகாத்து நிற்பவர்களுக்கும் அந்த மரபொழுங்கின் மீது கொஞ்சம்கொஞ்சமாக தத்துவார்த்த மற்றும் அரசியல் தாக்குதலை முன்னெடுத்து வந்திருப்பவர்களான திருத்தல்வாதிகளுக்கும் இடையில் கொதித்துக் கொண்டிருந்த மோதலின் உள்ளடக்கத்தினுள் அவர் இருத்திக் காட்டினார். ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் வேலைத்திட்ட அடித்தளங்களின் மீதான பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த திருத்தல்கள் தமது அரசியல் வெளிப்பாட்டை பிரெஞ்சு சோசலிஸ்டான அலெக்ஸாண்டர் மில்லெரண்ட், ஜனாதிபதி வால்டெக் ருஸ்சோ (Waldeck-Rousseau) இன் அரசாங்கத்திற்குள் நுழைந்ததில் கண்டன என்று குறிப்பிட்ட லெனின் பின்வருமாறு கூறுகிறார், விமர்சன சுதந்திரம் என்ற முழக்கமானது, சமூக ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பவாதப் போக்கிற்கான சுதந்திரம் என்றும், சமூக ஜனநாயகக் கட்சியை சீர்திருத்தங்களுக்கான ஒரு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றுவதற்கான சுதந்திரம் என்றும், முதலாளித்துவ சிந்தனைகளையும் முதலாளித்துவக் கூறுகளையும் சோசலிசத்திற்குள் கொண்டுவருவதற்கான சுதந்திரம் என்றுமே பொருள்படுகிறது, என்றார்.13 இந்தக் கோரிக்கைக்கு லெனின் அளித்த பதிலில் விமர்சனம் செய்வதற்கு திருத்தல்வாதிகளுக்கு இருக்கின்ற உரிமையை எவரொருவரும் மறுக்கவில்லை என்றார். ஆனால் அவர்களது விமர்சனங்களை நிராகரிப்பதற்கும் புரட்சிகர சமூக ஜனநாயகத்தை ஒரு சீர்திருத்தவாத இயக்கமாக மாற்றுவதற்குச் செய்யப்படும் முயற்சியை எதிர்த்துப் போராடுவதற்கும் அதே அளவுக்கான உரிமை மார்க்சிஸ்டுகளுக்கும் இருக்கிறது என்பதை அவர் வலியுறுத்திக் காட்டினார். ரஷ்யாவில் பொருளாதாரவாதப் போக்கின் மூலங்களை சுருக்கமாக திறனாய்வு செய்ததின் பின்னர், லெனின், தத்துவத்திற்கு அது காட்டும் பொதுவான அலட்சியத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். பொருளாதாரவாதிகள் பீற்றுகின்ற விமர்சனத்திற்கான சுதந்திரம் என்பது ஒரு தத்துவத்தை இன்னொன்றைக் கொண்டு பிரதியீடு செய்வதைக் குறிப்பிடவில்லை, மாறாக ஒட்டுமொத்தமாக அத்தனை ஒன்றுபட்ட மற்றும் சிந்திக்கப்பட்ட தத்துவத்தில் இருந்தும் சுதந்திரம் பெறுவதையே குறிக்கிறது; இது திரட்டுவாதம் (eclecticism) மற்றும் கோட்பாடின்மையையுமே குறிக்கிறது.14 இந்த அலட்சியத்தை நியாயப்படுத்துகின்ற திருத்தல்வாதிகள், சோசலிச இயக்கத்தின் உண்மையான நடைமுறை முன்னேற்றங்களே ஒரு டஜன் வேலைத்திட்டங்களை விடவும் கூடுதல் முக்கியத்துவம் படைத்தவை என்ற மார்க்சின் கூற்றை அதன் உள்ளடக்கத்திலிருந்து இருந்து பிரித்தெடுத்து மேற்கோளிட்டுக் காட்டுகின்றனர் என்பதையும் லெனின் அவதானிக்கின்றார். தத்துவார்த்தக் குழப்பத்தின் ஒரு காலகட்டத்தில் இந்த வார்த்தைகளை திரும்பத் திரும்பக் கூறுவதென்பது, இறுதி ஊர்வலத்தில் சோகத்தை அனுசரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான தினம் உங்களுக்கு மீண்டும் கிடைக்கட்டும் என்று வாழ்த்துவதை போன்றதாகும் என்று லெனின் பதில்கூறுகிறார். அதன்பின் அவர், எத்தனை முறை மேற்கோளிட்டாலும் அது அதிகமில்லை எனக் கூறத்தக்கதான வார்த்தைகளில், அறிவிக்கிறார்: புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இல்லை. சந்தர்ப்பவாதத்தின் நவநாகரீகமான போதனையும் நடைமுறை செயல்பாட்டின் குறுகிய வடிவங்களுக்கான விடலை மோகமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துச் செல்கின்றதான ஒரு சமயத்தில் இந்த சிந்தனையை எத்தனை வலிமையாக வலியுறுத்தினாலும் அது மிகையில்லை.15 மிக முன்னேறிய தத்துவத்தால் வழிநடத்தப்படுகின்ற ஒரு கட்சி மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரத் தலைமையை வழங்க முடியும் என்று வாதிடும் அவர், ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் நம்மிடம் நாகரிகமாகி விட்டிருப்பதைப் போல, சமூக ஜனநாயகத்தின் மாபெரும் போராட்டத்தின் இரண்டு வடிவங்களை அல்ல, மாறாக மூன்று வடிவங்களை அடையாளம் கண்டிருந்தார். முதலிரண்டிற்கு இணையாக தத்துவார்த்தப் போராட்டத்தையும் கொண்டுவந்து நிறுத்தினார்16 என்று நினைவுகூர்கிறார். இதுநாள்வரை உயிர்நிலைத்திருக்கும் ஒரே விஞ்ஞான சோசலிசமான ஜேர்மன் விஞ்ஞான சோசலிசமானது அதற்கு முன்வந்த ஜேர்மன் மெய்யியல் இல்லாமல், குறிப்பாக ஹேகலின் மெய்யியல் இல்லாமல், ஒருபோதும் உருப்பெற்றிருக்க முடியாது. தொழிலாளர்களிடையே தத்துவார்த்தத்திற்கான ஒரு உணர்வு இல்லாமல், இந்த விஞ்ஞான சோசலிசமானது அவர்களது இரத்தத்திற்குள்ளும் சதைக்குள்ளும் இப்போதிருப்பதைப் போல ஒருபோதும் ஊடுருவியிருக்க முடியாது17 என்ற ஏங்கெல்ஸின் கூற்றை லெனின் மேற்கோளிட்டுக் காட்டுகிறார். வெகுஜனங்களின் தன்னியல்பான தன்மையும் சமூக ஜனநாயகவாதிகளின் நனவும் என்ற தலைப்பில் என்ன செய்ய வேண்டும்? இன் இரண்டாவது பகுதி அமைந்திருக்கிறது. சந்தேகத்திற்கிடமில்லாமல் இதுதான் லெனினின் இந்த சிறுநூலில் மிக முக்கியமான பகுதி என்பதோடு தவிர்க்கவியலாமல், சளைக்காத தாக்குதலுக்கும் தவறான பொருள்விளக்கத்திற்கும் ஆளான பகுதியும் ஆகும். லெனின் ஒரு பிடிவாதக் குணம் கொண்ட மேற்தட்டுவாதியாக, பரந்த எண்ணிக்கையிலான தொழிலாள வெகுஜனங்களை அவமதிப்பவராக, அவர்களது அபிலாஷைகளில் முகம்சுளித்தவராக, அவர்களது அன்றாடப் போராட்டங்களுக்கு குரோதமானவராக, தனிநபர் அதிகாரத்தில் மோகம் கொண்டு அவரும் அவரது சாபக்கேடான கட்சியும் தமது இரும்புக்கரம் கொண்ட தனியொருகட்சியின் ஆட்சிக்குழு சர்வாதிகாரத்தை அப்பாவிகளான ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துகின்ற நாளை மட்டுமே எண்ணிக் கனவு காண்பவராக தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொள்வது இந்தப் பிரிவில்தான் என்று நமக்கெல்லாம் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆகவே இந்தப் பிரிவை சிறப்புக் கவனத்துடன் ஆராய்வது நமக்கெல்லாம் மதிப்பானதாகும். ஒருபக்கத்தில் மார்க்சிசத்திற்கும் புரட்சிகரக் கட்சிக்கும் இடையிலான உறவின் தன்மை, இன்னொரு பக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான இயக்கத்திற்கும், அந்த இயக்கத்தின் பாதையில் தொழிலாளர்களிடையே அபிவிருத்தி காண்கின்ற சமூக நனவின் வடிவங்களுக்கும் இடையிலான உறவின் தன்மை, இவைதான் லெனினால் பகுப்பாய்வு செய்யப்படுகின்ற அதிமுக்கியமான பிரச்சினை ஆகும். ரஷ்ய தொழிலாளர்களிடையேயான நனவின் வடிவங்களது பரிணாம வளர்ச்சியை 1860கள் மற்றும் 1870களிலான வர்க்க மோதலின் ஆரம்ப வெளிப்பாடுகளுடன் தொடங்கி அவர் ஆய்கின்றார். தொழிலாளர்கள் எந்திரங்களை உடைத்து அழிப்பது உள்ளடங்கிய மிக ஆதிவடிவத் தன்மையை அந்தப் போராட்டங்கள் கொண்டிருந்தன. விரக்தியால் உந்தப்பட்டும், தமது கலகத்தின் சமூக மற்றும் வர்க்கத் தன்மை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாத நிலையிலும், இந்த தன்னியல்பான வெடிப்புகளில் வர்க்க நனவு ஒரு கரு வடிவத்தில் மட்டுமே வெளிப்பட்டது. மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் அபிவிருத்தியுற்ற சூழ்நிலையோ மிகக் கணிசமாய் முன்னேறியதாக இருந்தது. ஆரம்பகால போராட்டங்களுடன் ஒப்பிட்டால், 1890களில் வேலைநிறுத்தங்கள் தொழிலாளர்களிடையேயான நனவின் கணிசமாய் உயர்வானதொரு மட்டத்தை வெளிப்படுத்தின. வேலைநிறுத்தங்கள் மிகக் கூடுதலான ஒழுங்கமைப்பைப் பெற்று விட்டிருந்தன என்பதோடு மிக விரிவான கோரிக்கைகளையும் கூட முன்னெடுத்தன. ஆனாலும் இந்தப் போராட்டங்களில் தொழிலாளர்கள் காட்டிய நனவு என்பது சமூக ஜனநாயகத் தன்மையைக் காட்டிலும் ஒரு தொழிற்சங்கவாதியினது மட்டத்தில் தான் இருந்தது. அதாவது, வேலைநிறுத்தங்கள் ஒரு அரசியல் தன்மை படைத்த கோரிக்கைகளை எழுப்பவில்லை, அதேபோல தொழிலாளர்களுக்கும் நிலவிவருகின்ற சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கிற்கும் இடையிலான மோதலின் ஆழமான மற்றும் சமரசப்படுத்தமுடியாத தன்மை குறித்த ஒரு விழிப்புணர்வையும் அவை வெளிப்படுத்தவில்லை. அதனைக் காட்டிலும், தொழிலாளர்கள் இருக்கின்ற சமூக அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள்ளேயே தமது நிலைமையை மேம்படுத்த மட்டுமே முனைந்தனர். தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான இயக்கமானது சமூக ஜனநாயக, அதாவது புரட்சிகர, நனவினை அதுவாகவே தன்னியல்பாக அபிவிருத்தி செய்து விட முடியாது என்ற அர்த்தத்தில் இந்த வரம்பு தவிர்க்கமுடியாததாக இருந்தது. இந்த இடத்தில் தான் ஏராளமான பல கண்டனங்களைத் தூண்டியதான வாதத்தை லெனின் அறிமுகம் செய்கிறார். அவர் எழுதுகிறார்: தொழிலாளர்களிடையே சமூக-ஜனநாயக நனவு இருந்து வந்திருக்க முடியாது என்பதை நாங்கள் கூறியிருக்கிறோம். அது அவர்களுக்கு வெளியில் இருந்து தான் கொண்டுவரப்பட வேண்டியிருக்கிறது. தொழிலாள வர்க்கம், பிரத்யேகமாக அதன் சொந்த முயற்சியை மட்டும் கொண்டு, தொழிற்-சங்க நனவை மட்டுமே, அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவதும், முதலாளிகளுக்கு எதிராகப் போராடுவதும், அத்தியாவசியமான தொழிலாளர் சட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்ற அரசாங்கத்தை நெருக்குவதற்கு பாடுபடுவதும் அவசியமானது என்ற மனஉறுதியை மட்டுமே, அபிவிருத்தி செய்ய முடியும் என்பதையே அத்தனை நாடுகளின் வரலாறும் நமக்குக் காட்டுகின்றன. ஆனால், சோசலிச தத்துவமோ, உடைமை வர்க்கங்களது கல்வியூட்டப்பட்ட பிரதிநிதிகளின் மூலமாக, புத்திஜீவிகளின் மூலமாக விஸ்தரிக்கப்பட்ட மெய்யியல், வரலாற்று, மற்றும் பொருளாதார தத்துவங்களில் இருந்து வளர்ச்சி கண்டதாகும். நவீன விஞ்ஞான சோசலிசத்தின் ஸ்தாபகர்களான மார்க்ஸும் ஏங்கெல்ஸுமே கூட அவர்களது சமூக அந்தஸ்தின் படி முதலாளித்துவ புத்திஜீவித்தட்டை சேர்ந்தவர்களே. ஏறக்குறைய இதே வழியில் தான், ரஷ்யாவில் சமூக ஜனநாயக தத்துவார்த்த சித்தாந்தம், தொழிலாள-வர்க்கத்தின் தன்னியல்பான வளர்ச்சியிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக எழுந்ததாகும்; இது புரட்சிகர சோசலிச புத்திஜீவித் தட்டினரிடையே சிந்தனை அபிவிருத்தி கண்டதன் ஒரு இயல்பான மற்றும் தவிர்க்கவியலாத விளைபொருளாக எழுந்திருந்ததாகும்.18 மார்க்சிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பாக அபிவிருத்திகாணும் தொழிற்சங்க, அதாவது முதலாளித்துவ நனவிற்கும் இடையிலான உறவு குறித்த தனது பொருள்விளக்கத்திற்கு ஆதரவாக லெனின் கார்ல் காவுட்ஸ்கியின் ஒப்புதலான கருத்துரைகளுடன் ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சியின் வரைவு வேலைத்திட்டத்தை மேற்கோளிடுகிறார்: எந்த அளவுக்கு அதிகமாக முதலாளித்துவ அபிவிருத்தி பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறதோ அந்த அளவுக்கு அதிகமாய் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராட நிர்ப்பந்தம் பெற்று அதற்கு வலுப்பெற்றதாக ஆகிறது. சோசலிசத்தின் சாத்தியம் குறித்தும் அவசியம் குறித்தும் நனவுடையதாக பாட்டாளி வர்க்கம் ஆகிறது. இந்தத் தொடர்பில் சோசலிச நனவு என்பது பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்தின் ஒரு அவசியமான மற்றும் நேரடியான விளைபொருளாக இருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால் இது முழுக்க உண்மையற்றதாகும். சோசலிசம், ஒரு சித்தாந்தமாக, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை போலவே, தனது வேர்களை நவீன பொருளாதார உறவுகளில் கொண்டிருக்கிறது என்பதும், அதனைப் போலவே முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட வெகுஜனங்களது வறுமை மற்றும் துயரம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து எழுகிறது என்பதும் வாஸ்தவம் தான். ஆனால் சோசலிசமும் வர்க்கப் போராட்டமும் ஏககாலத்தில் எழுந்தாலும் அவை ஒன்றிலிருந்து இன்னொன்று பிறப்பதல்ல; இரண்டுமே வெவ்வேறு நிலைமைகளின் கீழ் தோன்றுகின்றன. நவீன சோசலிச நனவு என்பது ஆழமான விஞ்ஞான அறிவின் அடிப்படையில் மட்டுமே எழ முடியும். சொல்லப் போனால், நவீன பொருளாதார விஞ்ஞானமானது நவீன தொழில்நுட்பத்தின் அளவுக்கு சோசலிச உற்பத்திக்கான ஒரு நிபந்தனையாக இருக்கிறது, பாட்டாளி வர்க்கம் எவ்வளவு தான் விரும்பினாலும் இந்த இரண்டில் எதுவொன்றையும் அதனால் உருவாக்கி விட முடியாது; இரண்டும் நவீன சமூக நிகழ்ச்சிப்போக்கில் இருந்து தோன்றுபவை. விஞ்ஞானத்தின் வாகனம் பாட்டாளி வர்க்கம் அல்ல, மாறாக முதலாளித்துவ புத்திஜீவி அடுக்கே [கார்ல் காவுட்ஸ்கியின் அழுத்தம்] : இந்த அடுக்கைச் சேர்ந்த தனி மனிதர்களின் மூளையில் தான் நவீன சோசலிசம் தோற்றம் கொண்டது, அவர்கள் தான் இதனை மிகவும் புத்திஜீவித அபிவிருத்தி கொண்ட பாட்டாளி வர்க்கத்தினருடன் பகிர்ந்துகொண்டு, அவர்கள் அதனை நிலைமைகள் அனுமதிக்கின்ற சமயங்களில் பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்திற்குள் அறிமுகம் செய்தனர். இவ்வாறாக, சோசலிச நனவு என்பது பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்திற்குள்ளாக வெளியில் இருந்து [von Aussen Hineingretagenes] உள்ளே அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றாக இருக்கின்றதே அன்றி, அதற்குள்ளிருந்து தன்னியல்பாக [urwuchsig] எழுந்த ஒன்றாக இருக்கவில்லை. இதற்கேற்பவே, பாட்டாளி வர்க்கத்தை அதன் நிலை குறித்த நனவையும் அதன் கடமை குறித்த நனவையும் கொண்டு நிரப்புவதே சமூக ஜனநாயகத்தின் கடமை என்று பழைய Hainfeld வேலைத்திட்டமானது மிகச் சரியாகக் கூறியது. வர்க்கப் போராட்டத்திலிருந்து நனவு தானாக எழுந்திருக்குமானால் அவ்வாறு செய்வதற்கு அவசியமே அங்கு இருந்திருக்காது.19 அந்தப் பத்தியில் இருந்து லெனின் பின்வரும் முடிவுக்கு வருகிறார்: உழைக்கும் வெகுஜனங்கள் அவர்களது இயக்கத்தின் நிகழ்ச்சிப்போக்கிலேயே சூத்திரப்படுத்தக் கூடிய ஒரு சுயாதீனமான சித்தாந்தம் குறித்த பேச்சே கிடையாது என்பதால், இருக்கின்ற ஒரே தெரிவு முதலாளித்துவ சித்தாந்தமா அல்லது சோசலிச சித்தாந்தமா என்பதுதான். இடையில் வேறெந்தப் பாதையும் கிடையாது (ஏனென்றால் மனிதகுலம் மூன்றாவதாய் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கியிருக்கவில்லை, தவிரவும், வர்க்க குரோதங்களால் கிழிக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் வர்க்கமல்லாத அல்லது வர்க்கங்களுக்கு மேலானதொரு சித்தாந்தம் ஒருபோதும் இருக்க முடியாது). ஆகவே, எந்த வகையிலும் சோசலிச சித்தாந்தத்தை சிறுமைப்படுத்துதல் என்பதோ, அதிலிருந்து கிஞ்சித்தும் விலகுதல் என்பதோ முதலாளித்துவ சித்தாந்தத்தை வலுப்படுத்துதல் என்றே பொருள்படுகின்றது. தன்னியல்பான தன்மை குறித்து பெரும் பேச்சு இருக்கிறது. ஆனால் தொழிலாள-வர்க்க இயக்கத்தின் தன்னியல்பான அபிவிருத்தியானது முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு அது அடிபணிவதற்கும், கிறிடோ வேலைத்திட்டத்தின் பாதைகளில் அது அபிவிருத்தி காண்பதற்குமே இட்டுச் செல்கிறது. ஏனென்றால் தன்னியல்பான தொழிலாள-வர்க்க இயக்கம் என்பது தொழிற்சங்க வாதமாகும், Nur-Gewerkschaftlerei ஆகும், அத்துடன் தொழிற்சங்கவாதம் என்பதன் பொருள் தொழிலாளர்களை முதலாளித்துவத்திற்கு சித்தாந்தரீதியாக அடிமைப்படுத்துதல் என்பதே ஆகும். ஆகவே இந்த தன்னியல்புக்கு எதிராக போராடுவதும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் சிறகுகளுக்குக் கீழ் கொண்டுவரப் பாடுபடுகின்ற இந்த தன்னியல்பான தொழிற்சங்கவாத முனைப்புகளில் இருந்து அதனைத் திருப்பி புரட்சிகர சமூக-ஜனநாயகத்தின் சிறகுகளின் கீழ் அதனைக் கொண்டுவருவது நமது கடமையாகும், சமூக-ஜனநாயகத்தின் கடமையாகும்.20 இந்த பத்திகள்தான் போல்ஷிவிக் மேல்தட்டுவாதத்தின் (elitism) அத்தியாவசியமான வெளிப்பாடு என்றும், இவற்றில் தான் அதன் வருங்கால சர்வாதிபத்திய பரிணாம வளர்ச்சியின் ஆதி நுண்ணுயிர்கள் உயிர்வாழ்வதாகவும் மீண்டும் மீண்டும் கண்டனம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.21 துன்பங்களுக்கான விதைகள் (The Seeds of Evil) என்ற தலைப்பிலான ஒரு நூலில் ராபின் பிளிக் மேலே மேற்கோளிடப்பட்ட கடைசி வாக்கியத்தை (முதலாளித்துவ சிறகின் கீழ் வருவதற்கு தொழிற்சங்கவாதி முனைப்பு காட்டுவது குறித்து லெனின் பேசுகின்ற இடம்) குறிப்பிட்டுக் கூறுகிறார்: மார்க்சிச மரபுவழியை பாதுகாப்பவராக அறியப்படுவதில் பொதுவாய் மிகுந்த அக்கறை காட்டுகின்ற ஒருவரிடமிருந்தான முற்றிலும் அசாதாரணமான ஒரு சூத்திரமாக்கல் இது என்பதுடன், அதன் அகம்பாவத்தில் ஜேர்மன் சமூக-ஜனநாயகவாதியான எட்வார்ட் பேர்ன்ஸ்டைனினால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு மார்க்சிச திருத்தலுக்கும் நிச்சயமாய் நிகராகக் கூடியதாகும் அரசியல் மேற்தட்டுவாதம் மற்றும் அமைப்புரீதியான கைப்புரட்டல் ஆகியவை பற்றிய ஒரு அபிவிருத்தி செய்யப்பட்ட ஆய்வு ஒன்றையும் மார்க்சும் ஏங்கெல்சும் தமது எழுத்துக்களில் ஒருபோதும் சொல்லாது விட்டு விட்டார்கள்.22 என்ன செய்ய வேண்டும்? மீதான கோலகோவ்ஸ்கியின் தாக்குதல் ஏட்டறிவு மெய்யியலாளரான Leszek Kolakowski எழுதி 1978 இல் முதன்முதல் வெளியிடப்பட்ட மூன்று தொகுதிகள் கொண்ட மிகப் பிரபல படைப்பான மார்க்சிசத்தின் பிரதான போக்குகள் (Main Currents of Marxism) என்ற தலைப்பிலான நூலில் இந்த வாதம் மிகக் குறிப்பிடத்தக்கவிதத்தில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. தன்னியல்பான தொழிலாளர் இயக்கம், ஒரு சோசலிச சித்தாந்தத்தை அபிவிருத்தி செய்ய முடியாது, ஆகவே அங்கே ஒரு முதலாளித்துவ சித்தாந்தம் இருந்தாக வேண்டும் என்ற லெனினின் திட்டவட்டத்தை ஒரு நூதனமானது என்று அவர் நிராகரிக்கிறார். தொழிலாளர் இயக்கம் ஒரு சோசலிசக் கட்சியால் தலைமை தாங்கப்படவில்லை என்றால் அது ஒரு முதலாளித்துவத் தன்மையை பெற்றாகிவிடும் என்ற அவதானிப்பும் கோலகோவ்ஸ்கிக்கு பெரும் தொந்தரவு செய்வதாக இருக்கிறது. இதற்கு துணையாக இன்னொரு அவதானிப்பும் வருகிறது: தொழிலாள வர்க்க இயக்கம் என்பது அந்தப் பெயரின் உண்மையான அர்த்தத்தில் அதாவது ஒரு அரசியல் புரட்சிகர இயக்கமாக, தொழிலாளர்களின் ஒரு இயக்கமாக வரையறை செய்யப்படுவதில்லையாம், மாறாக சரியான சித்தாந்தத்தை, அதாவது மார்க்சிச சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும் வரையறையின் படி பாட்டாளி வர்க்கதன்மை பெற்றதாக வரையறை செய்யப்படுமாம். வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், ஒரு புரட்சிகரக் கட்சியின் வர்க்க கூட்டமைவானது, வர்க்க குணாம்சத்தை தீர்மானிப்பதில் எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லையாம்.23 பாட்டாளி வர்க்கத்தின் அனுபவபூர்வ நனவு பொதுவாகவே பின்தங்கியதாகவே காணப்படும் தான், என்றபோதும் அதன் வரலாற்று நலனுக்கு எது உகந்தது என்பதும், எந்தவொரு குறிப்பிட்ட தருணத்திலும் அதன் உண்மையான நனவு என்னவாக இருக்க வேண்டும் என்பதும் கட்சிக்குத் தெரியும் என்று கிண்டல் செய்கின்ற சில அவமதிப்பான கருத்துகளுடன் கோலகோவ்ஸ்கி தொடர்ந்து முன்செல்கிறார். 24 ஒரு சின்னஞ்சிறு அரசியல் கட்சி அதன் வேலைத்திட்டத்துடன் பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் உடன்படவில்லை என்றபோதும், அல்லது இன்னும் சொன்னால் அதனை அவர்கள் புரிந்து கொள்ளக் கூட இல்லை என்கின்ற நிலையிலும் கூட, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை தனது வேலைத்திட்டம் எடுத்துரைப்பதாக அபத்தமாக வேடமிடுவதை அம்பலப்படுத்தி, நம்பமுடியாத அளவுக்குப் புத்திசாலித்தனமாக பேசுவதாகத்தான் இந்த வகைக் கருத்துகளை உதிர்க்கும் ஆசிரியர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவர் அக்கறையுடன் கவனமாக சிந்தித்துப் பார்க்காத வரை மட்டுமே, இந்த வகையான வாதங்கள் புத்திசாலித்தனமானவையாகக் காட்சியளிக்கும். கோலகோவ்ஸ்கியின் வாதம் சரியென்றால், தொழிலாள வர்க்கத்தினது என்றாலும் சரி அல்லது, முதலாளித்துவத்திற்கு என்றாலும் கூட, எந்தவொரு அரசியல் கட்சிக்குமான தேவை என்ன இருக்கிறது? அத்தனை அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களுமே பரந்த சமூக சமுதாயங்களது நலன்களின் பேரில் பேசுவதாகவும் அந்த நலன்களை எடுத்துரைத்து பேசுவதாகவும் தான் கூறிக் கொள்கின்றனர் இல்லையா? முதலாளித்துவத்தின் வரலாற்றையே ஒருவர் எடுத்துக் கொண்டால் கூட, ஒரு வர்க்கமாக அதன் நலன்கள் அரசியல் கட்சிகளினால் தானே அடையாளம் காணப்பட்டு, வரையறை செய்யப்பட்டு, எடுத்துரைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதன் தலைவர்கள் தமது வர்க்கத்தினை, அல்லது குறைந்தபட்சம் அதற்குள்ளிருக்கும் மிக அதிமுக்கியமான கூறுகளையேனும், தாம் போராடி வந்த முன்னோக்கிற்காகவும் வேலைத்திட்டத்திற்காகவும் வென்றெடுக்கின்ற வரையிலும், ஒரு சிறிய சிறுபான்மைக் கன்னையாக இன்னும் கூறினால் சட்டவிரோதமான நிலையில், எதிர்ப்புத்தரப்பினருள் இயங்க தள்ளப்பட்ட நிலைமையில் கூட இருந்துள்ளனர். ப்யூரிட்டனிசம் (தூய்மைவாதம்) இங்கிலாந்தில் அரை-நூற்றாண்டு காலத்திற்கு ஒரு மத-அரசியல் போக்காக இருந்து வந்து அதன்பின் மேலுயர்ந்து வந்த முதலாளித்துவத்திற்குள் மேலாதிக்கமான போக்காக எழுச்சி கண்டு குரோம்வெல்லின் தலைமையின் கீழ் ஸ்டூவர்ட் முடியாட்சி மீதான புரட்சியின் வெற்றியையும் ஈட்டியதாகும். நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அரசியல்மயமான ரூஸ்சோவாதிகளது ஜாக்கோபின் கட்சி 1789 மற்றும் 1792 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவத்திற்குள்ளான கடுமையான குழுமோதல்களில் இருந்து பிரெஞ்சுப் புரட்சியின் தலைமையாக எழுந்து வந்தது. அதற்குச் சளைக்காத பொருத்தமான உதாரணங்களை அமெரிக்க வரலாற்றில் இருந்து, புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து இப்போதைய காலம் வரையில் எடுத்தளிக்க முடியும். ஒரு வர்க்கத்தின் புறநிலை நலன்களை வெளிப்படுத்தும் கொள்கைகள் அதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிலைமைகளை ஸ்தாபிப்பதற்கு அவசியமான வழிவகைகளை அடையாளம் காணுகின்றதும் அத்துடன் வேலைத்திட்டரீதியாக சூத்திரப்படுத்துகின்றதுமான கொள்கைகள் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அந்த வர்க்கத்தின் பெரும்பான்மையினரால், அல்லது இன்னும் கூறினால் கணிசமான எண்ணிக்கை கொண்ட ஒரு பிரிவினால் கூட, உணரப்பட்டவையாய் இருக்க வேண்டும் என்பதில்லை. அடிமைமுறை ஒழிப்பு என்பது, வரலாறு நமக்கு நிறைவாக எடுத்துக்காட்டியவாறு, அமெரிக்க தேசிய அரசு ஸ்திரமடைவதற்கும், முதலாளித்துவத்தின் தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியானது பரந்த அளவில் முடுக்கி விடப்படுவதற்குமே இட்டுச் சென்றது. அப்படியிருந்தும் கூட, அடிமைமுறைக்கு எதிரான போராட்டத்தின் அரசியல் முன்னணிப் படையாக இருந்த, அடிமைமுறை ஒழிப்புவாதிகள், வடக்கு மாநிலங்களில் இருந்த முதலாளித்துவத்திற்குள்ளாக தெற்குடனான ஒரு மோதலுக்கு எதிராகவும் அதுகுறித்து அச்சம்கொண்டுமிருந்த காரணத்தால் உருவாகியிருந்த ஒரு சக்திவாய்ந்த எதிர்ப்புக்கு எதிராக பல தசாப்தங்கள் நீண்டதான ஒரு கடுமையான போராட்டத்தை நடத்துவதற்கு தள்ளப்பட்டார்கள். அமெரிக்க தேசிய அரசு மற்றும் வடக்கு முதலாளித்துவத்தின் நீண்டகால அபிவிருத்தியின் சிறந்த நலன்களுக்கு எது உகந்ததாய் இருந்தது என்பதை வடக்கு தொழிலதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மற்றும் இந்த விடயத்தைப் பொறுத்தவரை, நகர்ப்புற தொழிலாளர்கள் ஆகியோரின் மிகப் பெரும் எண்ணிக்கையிலானோரைக் காட்டிலும் மிகச் சிறப்பாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலிருந்த அடிமைமுறை ஒழிப்புவாதிகள் புரிந்து கொண்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால அடிமையொழிப்புவாதிகள் இதுபோல் வெளிப்படையான வர்க்க அம்சங்களில் தமது வேலைத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் விளக்கியிருக்கவில்லை என்பது உண்மைதான். என்றாலும், அவர்கள் தமது காலத்திற்குப் பொருத்தமான மொழியில், வளர்ந்து வந்த வடக்கு முதலாளித்துவத்தின் நலன்களை, அந்த வர்க்கத்தின் அரசியல்ரீதியாய் மிகத் தொலைநோக்கு கொண்ட பிரிவுகளால் உணரப்பட்டவாறு, வெளிப்படுத்தினார்கள் என்ற உண்மையை இது மாற்றி விடப் போவதில்லை. முதலாளித்துவத்தின் புறநிலை நலன்களை வரையறை செய்வதையும் அதற்காக போராடுவதையும் அதே வர்க்கத்தின் பெரும்பான்மையான எண்ணிக்கையின் எதிர்ப்புக்கு மத்தியில் நடத்த நேர்ந்த காலங்களுக்கு ஒரு மிகச் சமீபத்திய உதாரணமாய் ரூஸ்வெல்ட்டின் கீழான ஜனநாயகக் கட்சி உதாரணத்தைக் கூறலாம். அமெரிக்க முதலாளித்துவத்திற்குள் ஒரு கன்னையானது அது மிக நிச்சயமாய் ஒரு சிறுபான்மை தான் தொழிலாள வர்க்கத்திற்கு கணிசமான சலுகைகளை வழங்குவதை உள்ளடக்கிய பெரும் சமூக சீர்திருத்தங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் முதலாளித்துவத்திற்கு விமோசனம் சாத்தியமில்லை என்பதில் மிக நம்பிக்கை பூண்டிருந்தது. ரூஸ்வெல்ட் அந்த கன்னையையே பிரதிநிதித்துவம் செய்தார். ஆளும் உயரடுக்கினர் தமது வர்க்க நலன்களைப் புரிந்து கொள்வதில் உதவுவதற்கு அரசியல், சமூகவியல், பொருளாதாரம், சர்வதேச விவகாரங்கள் மற்றும் இன்ன பிற துறைகளில் இருக்கும் நூறாயிரக்கணக்கிலான நிபுணர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட என்னை அனுமதிக்கவேண்டும். தனது உண்மையான நலன்கள் எங்கே அமைந்திருக்கிறது என்பதை உணர்வது ஒரு சராசரி தொழிலாளியைக் காட்டிலும் ஒரு சராசரி முதலாளிக்கு மிக எளிதானது காரணங்களை நான் சொல்கிறேன் என்றபோதிலும், ஆளும் வர்க்கக் கொள்கையின் சூத்திரமாக்கல் என்பது ஒருபோதும் ஒரு சராசரியான அமெரிக்க தொழிலதிபரோ, அல்லது சராசரியான பல-மில்லியன் பெருநிறுவன அதிகாரியோ சிந்திப்பதன் வெறும் ஒரு நேரடியான பிரதிபலிப்பாக ஒருபோதும் இருக்காது. நனவை அபிவிருத்தி செய்வதற்கும் சோசலிச கட்சிக்கும் இடையிலான உறவு குறித்த லெனினின் கருத்தாக்கத்திற்கு எந்த மார்க்சிச அடித்தளமும் இல்லை என்று கோலகோவ்ஸ்கி கூறும்போது மார்க்சும் ஏங்கெல்சும் இது தொடர்பாக உண்மையில் எழுதியிருக்கும் விடயங்களை வெறுமனே கண்டுகொள்ளாமல் போவது அவருக்கு அவசியமாகி விடுகிறது. 1844 இல் எழுதப்பட்ட புனிதக் குடும்பம் என்ற நூலில், சோசலிச வேலைத்திட்ட சூத்திரமாக்கலை அவர்கள் விளக்கினர்: இந்த அல்லது அந்தப் பாட்டாளி, அல்லது ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கமும் கூட, குறிப்பிட்ட தருணத்தில் தனது நோக்கமாக எதனைக் கருதுகின்றது என்பதல்ல கேள்வி. பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன, அதன் இருப்பின் பிரகாரம், அது வரலாற்று ரீதியாக என்ன செய்ய நிர்ப்பந்திக்கப்படும் என்பதைப் பற்றிய கேள்வியாகும் இது. அதன் நோக்கமும் வரலாற்று நடவடிக்கையும், அதன் சொந்த வாழ்க்கை சூழ்நிலையிலும் அதேபோல இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஒழுங்கமைப்பிலும், புலப்படத்தக்கதாகவும் திரும்பவியலாததாகவும் முன்னறிகுறி காட்டிக் கொண்டிருக்கின்றன. 25 லெனின் மீதான ஒரு பின்நவீனத்துவ விமர்சனம் என்ன செய்ய வேண்டும்? மீது தாக்குதல் நடத்துகின்ற இன்னொரு புத்தகத்திலும் மேலே மேற்கோளிடப்பட்ட பத்தி எடுத்துக்காட்டப்படுகிறது, கோலாகோவ்ஸ்கி போல, லெனினை மட்டுமே மதிப்பிழக்கச் செய்யும் நோக்கத்துடன் அது மட்டுப்படவில்லை. லெனின் உண்மையில் ஒரு மரபுமாறாத மார்க்சிஸ்ட் என்பதே பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான நீல் ஹார்டிங்கின் நிலைப்பாடு. என்ன செய்ய வேண்டும்? இல் லெனின் முன்னெடுத்த கருத்தாக்கங்கள் மார்க்ஸ் தனது புனிதக் குடும்பம் படைப்பில் எழுதியிருந்ததைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தன என்கிறார் இவர். ஹார்டிங் கூறுகின்றவாறாக: பாட்டாளி வர்க்கத்தின் துயரங்களை எடுத்துரைப்பது மற்றும் ஒழுங்கமைப்பதிலும் அவர்களது அரசியல் போராட்டத்திற்கு தலைமை கொடுப்பதிலும் சோசலிச புத்திஜீவித்தட்டுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புரிமையான பாத்திரம் என்பது, மார்க்சிசத்தில் இருந்தான ஒரு லெனினிச தடம்விலகலாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, உண்மையில் ஒட்டுமொத்தமாய் மார்க்சிசத்தின் விடாப்பிடியான தன்மைக்கு மையத்தானமாக இருப்பதாகும். பாட்டாளி வர்க்கத்தின் நீண்டகால நலன்கள் மற்றும் இலக்குகள் குறித்த ஒரு மிக ஆழமான அறிவை எந்த ஒரு பாட்டாளியையோ அல்லது பாட்டாளிகளின் குழுவோ கொண்டிருந்ததைவிட அதிகமாய் தமக்கிருந்ததாய் மார்க்ஸ் (மற்றும் அவருக்குப் பின்வந்த அத்தனை மார்க்சிஸ்டுகளும்) திட்டவட்டமாய் கூற நேரிட்டது.26 லெனின், மார்க்சை திருத்தியதாக கோலகோவ்ஸ்கியும், லெனின் மார்க்சையே அடிப்படையாகக் கொண்டிருந்ததாக ஹார்டிங்கும் வலியுறுத்திய அதேவேளையில், என்ன செய்ய வேண்டும்? மீதான அவர்களது கண்டனமானது, சோசலிச வர்க்க நனவானது தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு அரசியல் கட்சியின் மூலமாகக் கொண்டுவரப்பட வேண்டியிருக்கிறது என்றும், எந்தவொரு கட்சியும் தனது வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்ள முடியும் என்றுமாக அமைகின்றதொரு கூற்றை நிராகரிப்பதில் இருந்து தோன்றுகிறது. புறநிலை உண்மை என்ற ஒன்று உள்ளது, அது விஞ்ஞானத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளது, அத்துடன் உலகமானது ஒரு புறநிலையான அர்த்தத்தில் அறியக்கூடியது மற்றும் விதிகளால் ஆளப்படுவது என்பதும், முறையான, பொதுமைப்படுத்தப்பட்ட (அல்லது புறநிலை) விஞ்ஞான அறிவானது உடனடி அனுபவத்தால் பெறுகின்ற அகநிலை அறிவைக் காட்டிலும் சிறப்புரிமை படைத்ததாகும் என்ற நம்பிக்கையில் இருந்தும் தேற்றம் செய்யப்படுவதாகும் என்று மார்க்சிச வலியுறுத்தல் கூறுகின்றது.27 புறநிலை உண்மை என்பது பொதுக் கருத்திலிருந்து பெறப்படுகின்ற முடிவுகளில் இருந்து சுயாதீனமாக, இன்னும் அவற்றுக்கு எதிரானதாகவும் கூட, கருதப்பட வேண்டிய ஒன்றாகும் என்ற மார்க்சிசக் கருத்தாக்கத்தின் மீது ஹார்டிங் தாக்குகிறார். கட்சி குறித்த தத்துவத்தின் அடிப்படை அடித்தளங்கள் விடயத்தில் லெனினிசமானது ஒட்டுமொத்தமாக மார்க்சிசத்தின் ஒரு வாரிசாகவே இருக்கிறது. அதேபோன்று சிறப்பு வகையான ஒரு அறிவுக்கு உரிமைகோருவது போன்றும், அதேபோன்று பாட்டாளி வர்க்கத்திற்கு எது நன்மை என்பதை தொழிலாளர்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு மட்டும் நடத்தி கண்டுபிடிக்க முடியாது என்ற அகம்பாவமானதொரு மனஉறுதியின் மீதும் அது தனது அடித்தளத்தை கொண்டுள்ளது.28 சமகால முன்னாள்-இடது ஏட்டறிவாளர்களுக்கு மிகவும் விருப்பமான நவநாகரிக பின்நவீனத்துவ வார்த்தைகளது உதவியுடன், விஞ்ஞானபூர்வ அறிவு என்பது, அதன் உள்ளடக்கத்தில் உட்பொதிந்த தரத்திற்கு முழுதும் பொருத்தமற்ற, மற்றும் கலாச்சாரரீதியாய் தரம் குறைந்த ஏனைய வெளிப்பாட்டு வடிவங்களின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முடிந்திருக்கின்ற வெறும் ஒரு சிறப்புச்சலுகை படைத்த சொல்லாடல் வழிவகையாக மறுவரையறை செய்யப்படுகிறது. ஹார்டிங், மார்க்சும் லெனினும் ஏற்றுக் கொண்ட வரலாற்று உட்பொதிவு என்னும் நிழலுருக் கருத்து என்று அவர் குறிப்பிட்டுக் காட்டுகின்ற ஒன்றை நிராகரிக்கிறார்; அதாவது, சமூகத்தின் அபிவிருத்தியை முழுமையாகப் படித்தால், எந்தக் குறிப்பிட்ட பொதுவான போக்குகள் நிலைநிற்கப் பெற்று மேலாதிக்கமடைந்த பின்னர், மனிதனை குறிப்பிட்ட வழிகளில் செயல்படத் தூண்டியதோ, அந்தப் போக்குகளைக் கண்டுபிடிக்க முடியும் என்ற கருத்தை. 29 என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு அடித்தளமாக இருக்கும் மெய்யியல் கருத்தாக்கங்கள் கட்சியின் பாத்திரம் குறித்த லெனினின் கருத்தாக்கத்திற்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மார்க்சிச செயல்திட்டத்திற்கும், கீழமைகின்றதாக இருக்கின்ற மையமான தத்துவார்த்த மற்றும் மெய்யியல் பிரச்சினைக்கு இது நம்மைக் கொண்டு செல்கிறது. ஹார்டிங் உறுதியாய் கூறுவதைப் போல, தொழிலாளர்களது சிந்தனையில் அவர்களது உடனடி அனுபவங்களது அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற கண்ணோட்டங்களும் அபிப்பிராயங்களும் சமூக அபிவிருத்தியின் நியதிகளுக்குள் ஊடுருவிக் காணும் ஒரு ஆழ்ந்தபார்வையினை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியடைந்த அறிவைக் காட்டிலும் சளைக்காத செல்தகைமையும் நியாயமும் உடையவை என்றால், அப்போது தொழிலாளர்களுக்கு அவர்களது நடைமுறையை விஞ்ஞானத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நியதிகளால்-ஆளப்படும் போக்குகளுடன் ஒரேகோட்டில் கொண்டுவரப் போராடுகின்ற ஒரு அரசியல் கட்சிக்கான அவசியம் எதுவும் இருக்கப் போவதில்லை. ஹார்டிங்கின் வாதங்களின் அடிப்படையில், ஒருவர் எந்த வடிவத்திலும் விஞ்ஞானத்திற்கான அவசியமே இல்லை என்றும் மறுக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்ட விழைகிறேன். உடனடியான உணர்வுகளை தன்னில் வெளிப்படுத்தும் யதார்த்தத்திற்கும், தத்துவார்த்த பொதுநிலைக்கருத்து மற்றும் ஒரு சிக்கலான நெடிய நிகழ்முறை கொண்ட ஆய்வின் ஊடாக எழுந்துவரும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்து விஞ்ஞானம் அடுத்தபடிக்கு செல்கிறது. நாம் எதிர்நோக்கும் பிரதான கேள்வி: புறநிலை சமூக யதார்த்தமானது அப்படியொரு யதார்த்தம் இருப்பதாக அனுமானிக்கையில் (அதுவே, ஏட்டறிவாளிகளை பொறுத்தவரை ஒரு பெரிய சந்தேகமாக இருக்கிறது) தனித்தனியான தொழிலாளர்களால், அல்லது ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தினால், உடனடி அனுபவத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட முடியுமா? இந்தப் பிரச்சினைக்குத்தான் லெனின் தனது பெரும் நேரத்தை, அதிலும் குறிப்பாக பல வருடங்களுக்குப் பின்னர் சடவாதமும் அனுபவவாத-விமர்சனமும் (Materialism and Empirio-Criticism) என்ற தத்துவார்த்தரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்ற கட்டுரையை எழுதுகின்ற சமயத்தில், அர்ப்பணித்தார். லெனின் எழுதினார்: எத்தகைய சிக்கல்தன்மையும் கொண்ட அனைத்து சமூக உருவாக்கங்களிலும் குறிப்பாக முதலாளித்துவ சமூக உருவாக்கத்தில் மனிதர்கள் அவர்தம் ஒன்றுகலப்பின்போது என்ன வகையான சமூக உறவுகள் உருவாக்கப்படுகின்றன, எந்த விதிகளின் படி அவை அபிவிருத்தி காண்கின்றன போன்றவை குறித்து நனவு கொண்டிருப்பதில்லை. உதாரணமாக, தன்னுடைய தானியத்தை விற்கின்ற ஒரு விவசாயி உலகச் சந்தையிலுள்ள உலகளாவிய தானிய உற்பத்தியாளர்களுடனான இடைத்தொடர்புக்குள் நுழைகிறார். ஆனால் அது குறித்து அவருக்கு நனவு இருப்பதில்லை; இந்த பரிவர்த்தனையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற சமூக உறவுகளின் வகை குறித்தும் கூட அவர் நனவாக இருப்பதில்லை. சமூக நனவு சமூக இருப்பை பிரதிபலிக்கிறது இதுதான் மார்க்ஸ் கற்றுக் கொடுத்தது. ஒரு பிரதிபலிப்பானது பிரதிபலிக்கப்படுவதன் கிட்டத்தட்ட ஒரு அச்சுஅசலான பிரதியாகக் கூட இருக்கலாம், ஆனாலும் அதற்காக இரண்டும் ஒரேவிதமானது என்பது குறித்துப் பேசுவதென்பது அபத்தமாகி விடும்.30 உலகப் பொருளாதார அமைப்புமுறையிலுள்ள ஒவ்வொரு தனித்தனி உற்பத்தியாளரும், உற்பத்தி நுட்பத்திற்குள் இந்த மாற்றம் அல்லது அந்த மாற்றத்தை தான் கொண்டுவருவதை உணர்கிறார்; குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களை மற்றவர்களுக்காக தான் பரிவர்த்தனை செய்வதை ஒவ்வொரு உரிமையாளரும் உணர்கிறார்; ஆனாலும் கூட, இவ்வாறு செய்வதன் மூலம் சமூக இருப்பையும் மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்த உற்பத்தியாளர்களும் உரிமையாளர்களும் உணர்வதில்லை. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தில் இந்த மாற்றங்களை அவற்றின் அத்தனை கிளைகளுடனும் கூட்டிப் பார்த்து கணக்கிட வேண்டுமென்றால் எழுபது மார்க்ஸ்களும் கூடப் போதாது. இந்த மாற்றங்களுக்கான விதிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டிருக்கின்றன என்பதும், இந்த மாற்றங்கள் மற்றும் அவற்றின் வரலாற்று அபிவிருத்தியின் புறநிலையான தர்க்கமானது அதன் முக்கிய மற்றும் அடிப்படையான அம்சங்களில் வெளிப்படுத்தப்பட்டு விட்டிருக்கிறது என்பதுமே மிக முக்கியமான விடயமாகும். புறநிலை என்றால், மக்களின் நனவாக இருக்கும் ஒரு சமுதாயம், நனவாக இருக்கும் வாழ்நிலையில் இருந்து சுயாதீனமாக இருக்க முடியும், அபிவிருத்தி காணமுடியும் என்ற அர்த்தத்தில் அல்ல, (போக்டனோவ் தனது தத்துவத்தின் மூலமாக இத்தகைய அற்பங்களைத் தான் வலியுறுத்துகிறார்), சமூகமாக இருத்தல் மக்களின் சமூக நனவில் இருந்து சுயாதீனப்பட்டு நிலவுவதாகும் என்ற அர்த்தத்திலாகும். நீங்கள் வாழ்கிறீர்கள், வேலை செய்கிறீர்கள், குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள், பொருட்களை உற்பத்தி செய்து அவற்றைப் பரிவர்த்தனையும் செய்கிறீர்கள் என்ற விடயமானது புறநிலையான அவசியமானதொரு நிகழ்வுச் சங்கிலிக்கு, ஒரு அபிவிருத்திச் சங்கிலிக்கு வித்திடுகின்றது. இச்சங்கிலி உங்களது சமூக நனவிலிருந்து சுயாதீனமானது என்பதோடு அதனால் ஒருபோதும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத ஒன்றுமாகும். ஒருவரின் சமூக நனவிற்கும் அனைத்து முதலாளித்துவ நாடுகளது முன்னேறிய வர்க்கங்களது நனவிற்கும் எத்தனை சாத்தியமோ அத்தனை திட்டவட்டமான, தெளிவான மற்றும் அதிமுக்கியமானதொரு பாணியில், அதனை தகவமைப்பது சாத்தியமாகக் கூடிய வகையில், பொருளாதாரப் பரிணாமத்தின் (சமூக வாழ்வின் பரிணாமம்) புறநிலை தர்க்கத்தை அதன் பொதுவான மற்றும் அடிப்படையான சிறப்பம்சங்களில், புரிந்து கொள்வதே மனிதகுலத்தின் மிக உயரிய கடமையாகும்.31 மனிதர்கள் வேலைக்குச் செல்கின்ற போது, தான் செல்லும் வேலையை ஒரு இம்மியளவான உட்கூறாகக் கொண்டிருக்கக் கூடிய உலகளாவிய பொருளாதார இடையுறவுகளது ஒரு பரந்த வலைப்பின்னலைக் குறித்து எந்த மட்டத்திற்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்? மிகப் புத்திசாலியான ஒரு தொழிலாளியே கூட, தனது வேலை அல்லது தனது நிறுவனம், பொருட்கள் மற்றும் சேவைகளது உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையிலான நவீன நாடுகடந்த சிக்கலான நிகழ்ச்சிப்போக்குகளுடன் கொண்டிருக்கும் உறவு குறித்து ஒரு தெளிவில்லாத மனச்சித்திரத்தையே கொண்டிருப்பார் என்று ஒருவர் தாராளமாக அனுமானிக்க முடியும். அதைப் போலவே சர்வதேச முதலாளித்துவ நிதியின் மர்மங்கள், உலகளாவிய தனியார் முதலீட்டு நிதியங்களது பாத்திரங்கள், மற்றும் ஒவ்வொரு நாளும் நிதிச் சொத்துக்களிலான பல பத்து பில்லியன் டாலர்கள் சர்வதேச எல்லைகளை கடந்து செல்வதற்கு வகைசெய்கிறதான இரகசியமானதும் பெரும்பாலும் ஊடுருவிக் காண முடியாததுமான (இந்தத் துறையின் நிபுணர்களுக்கே கூட) வழிகள் ஆகியவற்றை ஊடுருவி ஆராயும் ஒரு நிலையில் தனிப்பட்ட ஒரு தொழிலாளி இருக்க மாட்டார். பெருநிறுவனத் தலைவர்களும் அரசியல்தலைவர்களும் எந்த முக்கிய ஏட்டுக்கல்வி ஸ்தாபனங்களது பகுப்பாய்வுகள் மற்றும் அறிவுரைகள் மீது தங்கியிருக்கின்றனரோ அந்த ஸ்தாபனங்களே கூட அநேக சமயங்களில் தமது கைவசம் இருக்கும் தரவுகளது அர்த்தத்திற்குப் பொருள்விளக்கம் கொள்வதில் தமக்குள் பிளவுபட்டுக் கிடக்கும் அளவுக்கு நவீன முதலாளித்துவ உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நிதித் துறைகளது எதார்த்தங்கள் மிக மிகச் சிக்கலானவை. ஆனால் வர்க்க நனவுப் பிரச்சினை என்பது நவீன பொருளாதார வாழ்க்கையின் சிக்கலான நிகழ்வுப்போக்கை உட்கிரகிப்பது மற்றும் கைத்தேர்ச்சி பெறுவது என்ற நன்கறிந்த சிக்கலைக் கடந்து செல்வதாகும். மிக அடிப்படையானதொரு மட்டத்தில், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான உறவுக்குக் கூடப் போக வேண்டாம், ஒரு தனிப்பட்ட தொழிலாளிக்கும் அவரது முதலாளிக்கும் இடையிலான சமூக உறவின் துல்லியமான தன்மையானது, புலனுணர்வு மட்டத்திலோ உடனடி அனுபவத்திலோ புரிந்து கொள்ளப்படுவதில்லை, புரிந்து கொள்ளப்படவும் முடியாது. தான் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதியாக நம்புகின்ற ஒரு தொழிலாளியும் கூட, தனது சொந்த கசப்பான தனிமனித அனுபவத்தைக் கொண்டு, அந்த சுரண்டலின் கீழமைகின்ற சமூகப்பொருளாதார பொறிமுறையை புரிந்துகொண்டு விட முடியாது. மேலும், சுரண்டல் என்ற கருத்தே எளிதாகப் புரிந்து விடக் கூடியதான ஒரு விடயம் அல்ல. என்கையில் தனக்கு உரிய சம்பளம் கிடைக்கப் பெறுவதில்லை என்ற உள்ளுணர்வில் இருந்து ஒருவர் நேரடியாக அதனைத் தேற்றம் செய்து விடுவதற்கெல்லாம் நாம் போகவும் அவசியமில்லை. ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்கின்ற ஒரு தொழிலாளி தனது உழைப்பு-சக்தியை விற்பனை செய்வதற்கே நாம் விலைகூறுகிறோம் என்பதையோ, அல்லது அந்த உழைப்பு-சக்தியின் தனித்துவமான பண்பே அது என்னவிலைக்கு வாங்கப்பட்டதோ (சம்பளம்) அதனைக் காட்டிலும் அதிகமானதொரு கூட்டுத்தொகைக்கான மதிப்பை உற்பத்தி செய்கின்ற திறனை அது கொண்டிருப்பது தான் என்பதையோ, அத்துடன் இலாபமானது உழைப்பு சக்திக்கான செலவு மற்றும் அது உற்பத்தி செய்கின்ற மதிப்பு இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தில் இருந்துதான் பெறப்படுகின்றது என்பதையோ உணர்வது கிடையாது. அதேபோல, ஒரு தொழிலாளி பண்டம் ஒன்றை குறிப்பிட்டதொரு தொகைக்கு வாங்கும்போது, அந்தப் பரிவர்த்தனையின் சாரமானது பொருட்களுக்கு இடையிலான உறவு (ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலாடை அல்லது வேறேதெனும் ஒரு பண்டம்) அல்ல மாறாக மனிதர்களுக்கு இடையிலான உறவே ஆகும் என்பதையும் அவர் அறியமாட்டார். உண்மையில், பணத்தின் தன்மையையும், மதிப்பு வடிவத்தின் வெளிப்பாடாக அது வரலாற்றுரீதியில் எவ்வாறு வளர்ந்து வந்தது என்பதையும், பண்டங்களின் உற்பத்தியும் பரிவர்த்தனையும் உலகமயமாக்கப்பட்டதொரு சமூகத்தில் இது எவ்வாறு முதலாளித்துவ சமூகத்தின் கீழமைந்த சமூக உறவுகளுக்கு முகமூடியாக சேவை செய்கிறது என்பதையும் அவர் புரிந்து கொள்வதில்லை. மேற்கூறிய கடைசிப் புள்ளி, மார்க்சின் மிக முக்கியமான படைப்பான மூலதனத்தின் தத்துவார்த்த-அறிவாதாரஆய்வியல் அடித்தளத்திற்கு ஒரு பொதுவான அறிமுகமாக சேவை செய்யத்தக்கதாகும். முதலாம் தொகுதியின் முதல் அத்தியாயத்தின் நிறைவுப் பகுதியில், மார்க்ஸ் தனது பண்ட வழிபாட்டுவாதம் (commodity fetishism) என்ற தத்துவத்தை அறிமுகம் செய்கிறார், இது முதலாளித்துவ சமூகத்திற்குள்ளான சமூக உறவுகளது புதிரமைப்பின் மூலாதாரத்தை அதாவது, இந்தக் குறிப்பிட்ட பொருளாதார அமைப்புமுறைக்குள்ளாக, மனிதர்களுக்கு இடையிலான உறவு பொருட்களுக்கு இடையிலான உறவுகளாக அத்தியாவசியமாகக் காட்சியளிப்பதன் காரணம் என்ன என்பதை விளக்கிக் காட்டுகிறது. தொழிலாளி அவர் வாழுகின்ற அமைப்புமுறையின் சமூகப் பின்விளைவுகளை எவ்வளவுதான் வெறுத்தாலும், அதன் மூலங்களையோ அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளையோ அல்லது அதன் இருப்பின் வரலாற்றுரீதியாக-மட்டுப்பட்ட தன்மையையோ உடனடி அனுபவத்தின் அடிப்படையில், சட்டென்று புரிந்து விடக் கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள் குறித்தும், மூலதனத்திற்கும் கூலி-உழைப்பிற்கும் இடையிலான சுரண்டல் உறவு குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் தவிர்க்கவியலா தன்மை மற்றும் அதன் புரட்சிகர பின்விளைவுகள் குறித்துமான புரிதல் என்பது உண்மையான விஞ்ஞானபூர்வமான வேலையின் அடிப்படையில் எழுந்ததாகும். அதனுடன் மார்க்ஸின் பெயர் என்றென்றும் பிணைக்கப்பட்டிருக்கும். இந்த விஞ்ஞானத்தின் மூலமாகப் பெற்ற அறிவும், இந்த அறிவை எட்டுவதிலும் விரிவுபடுத்துவதிலும் சம்பந்தப்பட்ட பகுப்பாய்வு வழிமுறையும் தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டுசெல்லப்பட்டாக வேண்டும். அதுவே புரட்சிகரக் கட்சியின் கடமையாகும். லெனின் ஒரு மேற்தட்டுவாதி என்றால், இருட்டடிப்பின் (obscurantism) எண்ணற்ற வடிவங்களுக்கு எதிராய் விஞ்ஞான உண்மை என்ற பதாகையின் கீழ் போராடி வந்திருக்கும் அத்தனை பேருக்குமே இதே பட்டத்தைத்தான் கொடுத்தாக வேண்டியிருக்கும். அறியாமை மற்றும் மனித மூளைகளின் மீதான அடக்குமுறை இவற்றின் ஒவ்வொரு வடிவத்தையும் நிரந்தரமாய் எதிர்த்து நிற்பதற்கு, தான் சபதம் பூண்டிருப்பதாய் தோமஸ் ஜெபர்சன் எழுதவில்லையா? நியாயமாகப் பார்த்தால், தொழிலாள வர்க்கம் அரசியல் மற்றும் கலாச்சார அறிவொளிமயப்படுத்தலை சிறுமைப்படுத்தி, எதிர்த்து, இவ்வாறாய் அப்பணியை அவ்வர்க்கத்தை சுரண்டுபவர்களிடமே விட்டுவிடுபவர்கள் மீதுதான் மேற்தட்டுவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டியதாகும். இறுதியாக, முதலாளித்துவ சமூகத்திற்குள் தன்னியல்பாக உருவாக்கப்படுகின்ற தொழிலாள வர்க்க நனவு வடிவங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான அவசியத்தை லெனின் வலியுறுத்தியதும், வெகுஜன ஊடகங்களது பரப்புரை சாதனங்களின் பரப்பலின் கீழ் உருப்பெறுகின்ற இழிவான பொதுக் கருத்துக்கு அவர் காட்டிய குரோதமும் ஜனநாயகமற்றதாகவும் இன்னும் சர்வாதிபத்தியமானதாகவும் இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம். தொழிலாள வர்க்கத்தின் உண்மையான அரசியல் மற்றும் வரலாற்று நலன்கள் வெளிப்பாடு காணத்தக்க வகையிலான ஒரு மாறுபட்ட, முதலாளித்துவ-வகையற்ற பொதுக் கருத்து வடிவத்தினை உருவாக்க சோசலிச இயக்கம் காட்டக் கூடிய முனைப்பினால் கிளறப்பட்டு வெளிப்படக் கூடிய வர்க்க நலன்கள் மற்றும் சமூகத் தப்பெண்ணங்களில் ஆழமாக வேரூன்றியதாக இருக்கின்ற ஒரு சமூக கசப்பின் வடிவம் தான் இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அமைந்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவை அபிவிருத்தி செய்வதற்கு மார்க்சிச இயக்கம் செய்யக் கூடிய முயற்சிகளைக் காட்டிலும் கூடுதல் ஆழமான ஜனநாயக செயல்திட்டம் வேறெதுவும் இருக்க முடியாது. லெனின் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தனது வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கவில்லை. அதற்கு மாறாய், 1917 நிகழ்வுகளுக்கு முந்தைய கால்-நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் அவரது அரசியல் வேலைகள் அனைத்துமே ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளது சிந்தனையை விஞ்ஞான மட்டத்திற்கு உயர்த்த முனைந்தன. அதில் அவரும், போல்ஷிவிக் கட்சியும் வெற்றியும் பெற்றிருந்தனர். இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் லெனின், ஜோன் ரீட் குறிப்பிட்டதைப் போல, ஒரு வித்தியாசமான மக்கள் தலைவர் - முழுக்க புத்திஜீவித்தன குணாதிசயம் நிரம்பியதான ஒரு தலைவர் .... எளிமையான வார்த்தைகளில் ஆழமான சிந்தனைகளை விளக்குகின்ற, ஒரு ஸ்தூலமான சூழ்நிலையை பகுப்பாய்வு செய்கின்ற ஆற்றல் அவருக்கு இருந்தது. மதிநுட்பத்துடன் சேர்ந்து, மகத்தான புத்திஜீவித்தன துடுக்கும் சேர்ந்திருந்த தலைவராக திகழ்ந்தார். 32 தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவை கொண்டுசெல்வதற்கான அவசியத்தை முதலில் பிரகடனம் செய்தவர் லெனின் அல்ல. பொருளாதாரவாதிகள் தன்னியல்பான கூறுகளை புகழ்பாடியதன் மீதான அவரது கண்டனங்கள் மார்க்சின் மூலதனம் மீதான ஒரு ஆழமான வாசிப்பினாலும், முதலாளித்துவமானது மக்களிடையே ஸ்தாபகமாகி விட்டிருந்த உற்பத்தி உறவுகளது ஒரு அமைப்புமுறையாக எவ்வாறு சுரண்டலின் உண்மையான சமூகரீதியாக-வேரூன்றிய பொறிமுறைகளை மறைக்கிறது என்பதைப் புரிந்து கொண்டிருந்ததாலும் உணரப்பட்டவையாக இருந்ததை நிச்சயமாய் கூறமுடியும். தொழிலாள வர்க்கத்திற்குள் நனவை அறிமுகம் செய்வதற்கு லெனின் வலியுறுத்தியதில் அல்ல இது ஐரோப்பாவெங்கிலும் மார்க்சிஸ்டுகள் பரவலாக ஒப்புக் கொண்டதாகவே இருந்தது மாறாக இந்தக் கட்டளையை எத்தனை சீர்மையுடனும் விடாப்பிடியாகவும் அவர் செயலுறுத்திக் காட்டினார் என்பதிலும், அதிலிருந்து எத்தனை தொலைநோக்கான அரசியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான முடிவுகளுக்கு அவர் வந்தார் என்பதிலுமே ஒரு அரசியல் சிந்தனையாளராக அவரது சொந்த மேதைமை வெளிப்பட்டது. அரசியல் அம்பலப்படுத்தல்களும் வர்க்க நனவும் அப்படியானால் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை எப்படித்தான் அபிவிருத்தி செய்வது? இந்தக் கேள்விக்கு லெனின் அளித்த பதில் கவனமான ஆய்வுக்கு உரியதாகும். பொருளாதாரவாதிகளைப் பொறுத்தவரை, பொருளாதார அத்தியாவசிய உணவுப்பாட்டு பிரச்சினைகள் மற்றும் தொழிற்சாலையில் முகம்கொடுக்கக் கூடிய உடனடிப் பிரச்சினைகள் தொடர்பான கிளர்ச்சிதான் வர்க்க நனவை அபிவிருத்தி செய்வதில் பிரதான வழிவகையாக சேவைசெய்தது. உண்மையான வர்க்க நனவு இப்படியானதொரு குறுகிய பொருளாதார அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட முடியும் என்பதான கருத்தை லெனின் வெளிப்படையாக நிராகரித்தார். உடனடிப் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பான கிளர்ச்சியானது தொழிற்சங்க நனவை, அதாவது தொழிலாள வர்க்கத்தின் முதலாளித்துவ நனவை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது. புரட்சிகர வர்க்க நனவை அபிவிருத்தி செய்வதற்கு, அரசியல் அம்பலப்படுத்தல்கள் என்று தான் குறிப்பிடுகின்ற ஒன்று குறித்த கிளர்ச்சியில் சோசலிஸ்டுகள் கவனம்குவிப்பது அவசியமாயிருப்பதாக லெனின் வலியுறுத்தினார். அத்தகைய அம்பலப்படுத்தல்கள் அல்லாமல் வேறெந்தவொரு வழியிலும் வெகுஜனங்கள் அரசியல் நனவிலும் புரட்சிகர நடவடிக்கையிலும் பயிற்றுவிக்கப்பட முடியாது. எனவே, இந்த வகை நடவடிக்கை என்பது ஒட்டுமொத்தமாய் சர்வதேச சமூக ஜனநாயகத்தின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது, அரசியல் சுதந்திரமும் கூட எந்த வகையிலும் அம்பலப்படுத்தல்களை அகற்றி விடுவதில்லை; அவற்றின் திசை வட்டத்தை மட்டுமே அது கொஞ்சம் இடம்மாற்றுகிறது.33 பொருத்தத்தை சிறிதும் இழந்துவிடாத வார்த்தைகளில் அல்லது, இன்னும் சொன்னால் நமது சொந்தக் காலத்தில், சோசலிச நனவின் தன்மை மற்றும் முக்கியத்துவம் குறித்த விடயத்தில் ஏற்பட்ட மலைக்க வைக்கும் வீழ்ச்சியின் காரணத்தினால், முக்கியத்துவம் உண்மையில் அதிகரித்திருப்பதான வார்த்தைகளில் லெனின் எழுதினார்: கொடுங்கோன்மை, ஒடுக்குமுறை, வன்முறை மற்றும் வசையின் அத்தனை சந்தர்ப்பங்களிலும், பாதிக்கப்பட்டது எந்த வர்க்கமாக இருந்தாலும் சரி, பதில் கொடுப்பதற்கு தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்படாத வரை, மேலும் வேறெந்த கண்ணோட்டத்தில் இருந்தும் இல்லாமல் ஒரு சமூக ஜனநாயகக் கண்ணோட்டத்தில் (அதாவது புரட்சிகர) இருந்து மட்டுமே பதில் கொடுப்பதற்கு அவர்கள் பயிற்றுவிக்கப்படாத வரையில் தொழிலாள-வர்க்கத்தின் நனவானது உண்மையான அரசியல் நனவாக ஆக முடியாது. ஸ்தூலமான, எல்லாவற்றுக்கும் மேல் விடயரீதியான மற்றும் அரசியல்ரீதியான உண்மைகள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து, சமூகத்தின் பிற வர்க்கம் ஒவ்வொன்றின் புத்திஜீவித, தார்மீக, மற்றும் அரசியல் வாழ்வின் வெளிப்பாடுகள் அத்தனையையும் கவனிப்பதற்கு தொழிலாளர்கள் கற்றுக் கொள்ளாத வரையிலும்; மக்களின் அத்தனை வர்க்கங்கள், அடுக்குகள் மற்றும் குழுக்களது வாழ்க்கை மற்றும் நடவடிக்கையின் அத்தனை அம்சங்களின் மீதான சடவாத பகுப்பாய்வு மற்றும் சடவாத மதிப்பீட்டை நடைமுறையில் செயலுறுத்துவதற்கு அவர்கள் கற்றுக் கொள்ளாத வரையிலும், உழைக்கும் வெகுஜனங்களின் நனவு உண்மையான வர்க்க-நனவாக இருக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் கவனத்தை, அவதானத்தை, மற்றும் நனவை பிரத்யேகமாக, அல்லது பிரதானமாகவேனும், அதன்மீதே குவிக்கச் செய்பவர்கள் சமூக-ஜனநாயகவாதிகளாய் இருக்க முடியாது; ஏனென்றால் தொழிலாள வர்க்கத்தின் சுய-அறிதல் என்பது, அரசியல் வாழ்வின் அனுபவத்தின் மூலமாகப் பெறப்பட்ட நவீன சமூகத்தின் பல்வேறு வர்க்கங்கள் அத்தனைக்கும் இடையிலான உறவுகள் குறித்த ஒரு முழுமையான தெளிவான தத்துவார்த்தப் புரிதலின் மீதே, முழுமையாக அல்லாமல், கலைக்கவியலாத வண்ணம் பிணைக்கப்பட்டிருக்கிறது (தத்துவார்த்தப் புரிதலைக் காட்டிலும் நடைமுறைப் புரிதலென்று சொல்வது இன்னும் உண்மையாக இருக்கும்). இந்தக் காரணத்தினால், நமது பொருளாதாரவாதிகள் உபதேசிப்பதைப் போல, பரந்த மக்களை அரசியல் இயக்கத்திற்குள் இழுப்பதற்கு மிகப் பரவலாய் உபயோகப்படுத்தக்கூடிய சாதனமாக பொருளாதாரப் போராட்டத்தைக் கருதுவது என்பது அதன் நடைமுறை முக்கியத்துவத்தில் மிகப் பயங்கர தீங்கானதும் பிற்போக்கானதும் ஆகும்.34 தொழிலாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் அவர்களது ஆதரவை வெல்வதற்குமான துரிதமானதும் சுலபமானதுமான வழி பொருளாதார மற்றும் வேலைத்தள பிரச்சினைகளில் கவனத்தைக் குவிப்பதுதான் என்றும், தொழிலாளர்களின் அன்றாட பொருளாதாரப் போராட்டங்களில்தான் சோசலிஸ்டுகளின் பிரதான நடவடிக்கை அமைந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தல்வாதிகள் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதான விடயத்தில் உண்மையில் தன்னியல்பான தொழிலாளர் இயக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பங்களிப்பையும் செய்து கொண்டிருக்கவில்லை என்பதை லெனின் வலியுறுத்திக் கூறினார். சொல்லப் போனால், அவர்கள் புரட்சிகர சோசலிஸ்டுகளாக செயல்படவில்லை, மாறாக வெறும் தொழிற்சங்கவாதிகளாக மட்டுமே செயல்பட்டார்கள். தொழிலாளர்கள் ஏற்கனவே அறிந்த விடயத்தைப் பற்றி அவர்களிடம் பேசுவது சோசலிஸ்டுகளது வேலையாக இருக்க முடியாது மாறாக, அவர்கள் தமது உடனடியான பொருளாதார அனுபவத்தின் மூலமாக பெற முடியாத ஒன்றைக் குறித்து, அரசியல் அறிவு குறித்துப் பேசுவதே அவர்களின் கடமையாக இருக்க முடியும். ஒரு தொழிலாளியின் குரலை ஒலிக்கும் விதமாக லெனின் எழுதினார், புத்திஜீவிகளாகிய நீங்கள் இந்த அறிவைப் பெற முடியும், எங்களுக்கு அதனைக் கொண்டுவந்து சேர்ப்பதில் இதுவரை நீங்கள் செய்திருப்பதைக் காட்டிலும் நூறு மடங்கு மற்றும் ஆயிரம் மடங்கு அதிகமாய் செய்வது உங்களது கடமையாகும்; அத்துடன் அதனை நீங்கள் விவாதங்கள், துண்டறிக்கைகள் மற்றும் கட்டுரைகளின் வடிவத்தில் மட்டுமல்லாது (இவை பல சமயங்களில் வெளிப்படையாகச் சொல்வதற்கு மன்னிக்கவும் ரொம்பவும் மந்தமானதாக இருக்கின்றன), இந்தத் தருணத்தில் வாழ்வின் அத்தனை பிரிவுகளிலும் நமது அரசாங்கமும் நமது ஆளும் வர்க்கங்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதன் மீதான தெள்ளத்தெளிவான அம்பலப்படுத்தல்களது வடிவத்திலும் கொண்டுதர வேண்டியது கட்டாயமாகும்.35 தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டங்களில் இருந்து ஒதுங்குவது என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவற்றுக்கு உணர்ச்சியற்று இருப்பதைக் கூட லெனின் ஆலோசனையளிக்கவில்லை. ஆனால் சோசலிஸ்டுகள் தீமையான வழியில் அத்தகைய போராட்டங்களின் மீது மட்டும் நிலைகுத்தி சிந்திப்பது, அவர்கள் தமது ஆர்ப்பாட்டங்களையும் நடைமுறை செயல்பாடுகளையும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொழிற்சங்கவாத போராட்டங்களுடன் நிறுத்திக் கொள்கின்ற போக்கு, மற்றும் சமூகத்திற்குள்ளான புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற அதிமுக்கிய அரசியல் பிரச்சினைகளுக்கு அவர்கள் காட்டுகின்ற அலட்சியம் இவற்றையே அவர் எதிர்த்தார். மேலும், சோசலிஸ்டுகள் தொழிற்சங்கப் போராட்டங்களில் தலையீடு செய்கின்றபோது, அவர்களது உண்மையான பொறுப்பு என்னவாக இருந்ததென்றால், தொழிலாளர்களிடையே பொருளாதாரப் போராட்டம் உருவாக்குகின்ற அரசியல் நனவின் பொறிகளை, சமூக-ஜனநாயக அரசியல் நனவின் மட்டத்திற்கு உயர்த்துவதற்கான நோக்கத்திற்காய் பயன்படுத்திக் கொள்வதே ஆகும் என்று லெனின் எழுதினார்.36 என்ன செய்ய வேண்டும்? மீதான இந்தத் திறனாய்வுக்கு நான் இவ்வளவு அதிகமான நேரம் அர்ப்பணித்ததற்கு காரணம், நாம் ஆய்வு செய்திருப்பது வெறுமனே ஒரு நூற்றாண்டுக்கும் மேல் அதிகமான காலத்திற்கு முன்பாய் எழுதப்பட்ட ஒரு நூல் என்பதால் மட்டுமல்ல, உலக சோசலிச வலைத் தளம் தனக்கு அடித்தளமாய் கொண்டிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவின் அபிவிருத்தி குறித்த தத்துவார்த்த கருத்தாக்கத்தை நாம் ஆய்வு செய்திருக்கிறோம் என்பதால் தான். 1 Lecture delivered August 15, 2005, at the summer school of the Socialist Equality Party (US) in Ann Arbor, Michigan. 2 V.I. Lenin, Collected Works, Volume 31 (Moscow: Progress Publishers, 1966), pp. 2526. 3 Max Eastman, The Young Trotsky (London: New Park Publications, 1980), pp. 5354. 4 Among Plekhanovs most important works on Marxist philosophy are The Development of the Monist View of History, Essays on the History of Materialism, Materialism or Kantianism and For the Sixtieth Anniversary of Hegels Death. 5 Georgi Plekhanov, Selected Philosophical Works, Volume 1 (Moscow: Progress Publishers, 1976), pp. 7879. 6 V.I. Lenin, Collected Works, Volume 1 (Moscow, Progress Publishers, 1963), p. 295296. 7 Ibid., p. 300. 8 V.I. Lenin, Collected Works, Volume 4 (Moscow: Progress Publishers, 1964), p. 368. 9 Neil Harding, ed., Marxism in Russia, Key Documents, 18791906, (Cambridge: Cambridge University Press, 1983), p. 251. 10 Ibid., p. 252. 11 V.I. Lenin, Collected Works, Volume 4, p. 369. 12 Ibid., p. 370. 13 V.I. Lenin, Collected Works, Volume 5 (Moscow: Foreign Language Publishing House, 1961), p. 355. 14 Ibid., p. 369. 15 Ibid. 16 Ibid., p. 370. 17 Ibid., p. 371. 18 Ibid., pp. 375376. 19 Ibid., pp. 384385. 20 Ibid., pp. 384-385. 21 2006 ஆம் ஆண்டில், இந்த உரை நிகழ்த்தப்பட்டதன் ஒரு வருடத்திற்குப் பின்னர், Lars Lih என்ற சுயேச்சையான அறிஞர் என்ன செய்ய வேண்டும்? மீதான 867 பக்க ஆய்வு மற்றும் அதன் புதிய மொழிபெயர்ப்பை வெளியிட்டார். லெனின் மறுகண்டுபிடிப்பு (Lenin Rediscovered) என்ற தலைப்பிலான இந்த நூல், என்ன செய்ய வேண்டும்? இல் லெனின் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக சோசலிச நனவு உள்ளே கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்ற பகுதிகள் மோசடியான பத்திகள் என்றும் அவை உண்மையில் அந்த புத்தகத்திற்கு சொந்தமானவை அல்ல, லெனின் அவற்றைச் சேர்த்ததே ஒரு விபத்து போல் நடந்த விடயம் என்றும் கூறுகிறது. சோசலிச நனவு தொழிலாள வர்க்கத்திற்குள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று விளக்குகின்ற பத்தியானது, லெனின் என்ன செய்ய வேண்டும் மீதான தீவிரமான வேலைகளை ஏற்கனவே துவக்கி விட்டிருந்ததான நிலையில் கவுட்ஸ்கி வெளியிட்டிருந்த சில குறிப்புகளால் உந்தப்பட்டு கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டவை ஆகும் என்று Lih நமக்குத் தெரிவிக்கிறார். [Lenin Rediscovered (Boston: Brill, 2006), p. 655]. தன்னுடைய வரைவில் கவுட்ஸ்கியின் ஆளுமையை உதவிக்கு அழைத்துக்கொள்ள முயன்றே தனது வரைவில் ஒரு இடத்தை அவர் தேட நேர்ந்ததால் தான் அவர் அந்த பத்தியை சேர்த்ததாக Lih தெரிவிக்கிறார். [அதே நூல் பக். 637]. தன்னுடைய இந்த அதிவிநோதமான ஆய்வறிக்கைக்கு என்ன செய்ய வேண்டும்? இன் உள்ளடக்கம் ஆதரவாய் இல்லையே என்று சுட்டிக் காட்டக் கூடியவர்களுடைய ஆட்சேபங்களை முன்கூட்டி எதிர்பார்க்கின்ற Lih வலியுறுத்துகிறார், வெறும் லெனினை மட்டும் படித்தால் லெனினைப் புரிந்து கொள்ள முடியாது. [அதே நூல், பக் 21]. என்ன செய்ய வேண்டும்? இல் மிக முக்கியமான பகுதிகள் லெனினின் புத்தகத்திற்கு உரியவை அல்ல என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே Lih தனது இந்த பாரிய தடித்த ஆய்வு புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய விடயம் தான்! 22 Robin Blick, The Seeds of Evil: Lenin and the Origins of Bolshevik Elitism (London: Steyne Publications, 1995), p. 17. 23 Leszek Kolakowski, The Main Currents of Marxism, Volume 2, The Golden Age (Oxford: Oxford University Press, 1978), pp. 389390. 24 Ibid., p. 390. 25 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 4 (New York: International Publishers, 1975), p. 37. 26 Neil Harding, Leninism (Durham, NC: Duke University Press, 1996), p. 34. 27 Ibid., p. 173. 28 Ibid., p. 174. 29 Ibid., p. 172. 30 V.I. Lenin, Collected Works, Volume 14 (Progress Publishers, 1977), p. 323. 31 Ibid., p. 325. 32 John Reed, Ten Days That Shook the World (London: Penguin Books, 1977), p. 128. 33 Lenin, Collected Works, Volume 5, p. 412. 34 Ibid., pp. 412413. 35 Ibid., p. 417. 36 Ibid., p. 416. |