ரஷ்ய புரட்சியும் |
WSWS : Tamil : நூலகம் |
2 Was There an Alternative to Stalinism?1 அங்கே ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததா?1இங்கே கிளாஸ்கோவ் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த அழைப்புவிடுத்தமைக்காக முதலில் ரஷ்ய மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளுக்கான பயிலகத்திற்கு நன்றிகூற என்னை அனுமதியுங்கள். நானொரு தொழில்ரீதியிலான வரலாற்றாளன் கிடையாது. ஆனால் வரலாற்று ஆய்வு என்பது தவிர்க்கவியலாதவாறு நான்காம் அகிலத்தில் உறுப்பினராவதற்கு அவசியமாகும். உண்மையில், நான்காம் அகிலத்திற்குள்ளேயே அங்கே வரலாறு மற்றும் அரசியலைப் பிரிக்கும் ஒரு தெளிவான எல்லைக்கோடு ஒருபோதும் இருந்ததில்லை. இது ட்ரொட்ஸ்கிஸ்டுகளை எல்லா தரப்பினரினதும் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றது. சமகாலத்திய அரசியல் விவாதங்களுக்குள் வரலாற்று பிரச்சினைகளை நாங்கள் கொண்டு வருவதை அரசியல் எதிர்ப்பாளர்கள் ஆட்சேபிக்கிறார்கள், அதேவேளையில் தொழில்ரீதியில் வந்த வரலாற்றாளர்களோ, ரஷ்ய புரட்சி மற்றும் அதற்கு பிந்தையதைக் குறித்து நாங்கள் என்ன கூறுகிறோமோ அதை வெறும் அரசியல் என்று கூறி பெரும்பாலும் உதறி விடுகிறார்கள். எங்கள் அரசியல் எதிர்ப்பாளர்களுடன் நான் ஒரு சமரசத்திற்கான எந்த சாத்தியக்கூறையும் காணவில்லை. வேலைத்திட்டம் குறித்த எண்ணிலடங்கா பிரச்சினைகள் மீதான எங்களின் கருத்துவேறுபாடுகள், பொதுவாக, தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சோசலிச இயக்கத்தின் பணிகளுக்கு, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களின் தொடர்பைக் குறித்த மிக வேறுபட்ட கருத்துருக்களில் பிரதிபலிக்கின்றன. ஆனால் அங்கே ஒரு புதுப்பிக்கப்பட்ட உரையாடலின் அத்தியாவசிய தேவை இருப்பதாக நான் கருதுகிறேன், மேலும், ரஷ்ய மற்றும் சோவியத் வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக ஆராய, அக்டோபர் புரட்சியிலிருந்து தங்களின் அரசியல் மரபியத்தைக் கொண்டுள்ள மார்க்சிஸ்டுகளுக்கும் மற்றும் பொறுப்பான வரலாற்றாளர்களுக்கும், அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், அவர்களுக்கிடையே ஓர் ஆக்கபூர்வமான புத்திஜீவித கூட்டுறவு ஓரளவுக்கு சாத்தியமென்றே நான் கருதுகிறேன். அக்டோபர் புரட்சியும் சோவியத் ஒன்றியமும் ஒரு குற்றகரமான சதித்திட்டத்தின் விளைபொருளாகவும், அறியாத மக்கள் மீது அது ஒரு அன்னியப்பட்ட மற்றும் நடைமுறைக்குதவாத வறட்டுத்தத்துவமாக திணிக்கப்பட்டதாகவும் கூறும் உள்நோக்கத்துடன் போலிவரலாற்று இலக்கியங்கள் பல, சோவியத் ஒன்றியத்தின் பொறிவுக்குப் பின்னர் பெருக்கெடுத்தன. இத்தகைய போக்குடைய படைப்புகள், ஸ்தாபக பத்திரிகைகளின் பிரமிப்பூட்டும் திறனாய்வுகளில் வழக்கமாக தலைசிறந்தவைகளாக வர்ணிக்கப்பட்டதுடன், இவை கூடுதலாக இரண்டு நெருக்கமாக தொடர்புடைய சித்தாந்த பள்ளிகளின் தயாரிப்புகளாக பெரும்பாலும் வெளிவந்தன. முதலாவதில், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ரிச்சார்ட் பைப்ஸ் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மார்டின் மாலியா போன்றவர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட, பழைய பனிப்போர் காலத்திய கம்யூனிச-எதிர்ப்பாளர்கள் உள்ளனர். இரண்டாவதில், மறுகட்டமைப்பு செய்து கொண்ட ஸ்ராலினிஸ்டுகள், அதாவது போல்ஷிவிசத்தால் பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக்கொள்வது ஆதாயமளிக்கும் என்றானதும், அதை சமீபத்தில் கண்டுகொண்டுள்ள, பழைய சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் பாதுகாவலர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் கூட இதில் உள்ளனர். இந்த பள்ளியின் மிகவும் இழிவார்ந்த பிரதிநிதி தளபதி டிமிட்ரி வோல்கொகோனொவ் (Dmitri Volkogonov) ஆவார். வோல்கொகோனொவ் சமீபத்திய அவரது லெனின் சுயசரிதத்தில், ஜனவரி 1918இன் அரசியலமைப்பு சட்டமன்ற கலைப்பிற்கு பக்கம் பக்கமாக அர்ப்பணிக்கிறார், அந்நடவடிக்கையை வோல்கொகோனொவ் போல்ஷிவிக் குற்றத்தன்மைக்கான பிரதான சான்றுகளில் ஒன்றாக எடுத்துக்காட்டுகிறார். அரசியலமைப்பு சட்டமன்றத்தைக் கலைத்ததன் மூலமாக, லெனின் "அதிகார இலக்கை அடைய உதவும்வரை எந்த பரிசோதனையையும் செய்யும் உரிமை தனக்கு இருப்பதாக தனக்குத்தானே நம்பிக்கொண்டு, ஒரு கற்பனாவாத வெறியராக (utopian fanatic), மார்க்சிச வகைப்பட்ட புதிய புத்திஜீவியாக, தன்னைத்தானே வெளிப்படுத்தியதாக" வோல்கொகோனொவ் எழுதுகிறார்.2 அந்நடவடிக்கைக்கு ஒருவர் எந்தவிதத்தில் பொருள்விளக்கம் அளிக்க விரும்பினாலும் சரி, அந்த அரசியலமைப்பு சட்டமன்றம் கலைக்கப்பட்டபோது உண்மையில் எவரொருவரும் கொல்லப்படவில்லை. ஆனால் லெனினின் ஒழுக்கநெறி மீதான இந்த கடுமையான குற்றப்பத்திரிகையை அவர் எழுதியிருந்து நீண்டகாலம் ஆகவில்லை, வோல்கொகோனொவ், ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சினின் தலைமை இராணுவ ஆலோசகராக அவரது தகைமையில் இருந்து, ரஷ்ய நாடாளுமன்ற கட்டிடம், வெள்ளை மாளிகை, மீதான அக்டோபர் 1993 குண்டுவீச்சை மேற்பார்வையிட்டார். அதில் 1,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். லெனினுக்கு அவரின் மறுப்புரைகளை தெரிவிக்கின்ற அதேவேளையில், பரிசோதனைகள் செய்வதற்கு அவருக்கு சொந்த உரிமை இருப்பதாக வோல்கொகோனொவ் உறுதியாக நம்புவதாக தோன்றுகின்றது. பகுப்பாய்வின் இறுதியாக கூறுவதானால், இதெல்லாம் சேவை செய்துவருகின்ற அதிகாரத்தின் குறிப்பிட்ட வர்க்க நலன்களைச் சார்ந்துள்ளது. சோவியத்திற்குப்-பிந்தைய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளி பைப்ஸ், மலியா மற்றும் வோல்கொகோனொவ் வெவ்வேறு போக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், இதை சோவியத்திற்குப்-பிந்தைய ஒரு புதிய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளி என்று தான் பொருத்தமாக சித்தரிக்க முடியும் என்பதோடு, அதை மறுப்பது ஆழ்ந்த மேதைமை கொண்ட அனைவரதும் அவசர பணியாகும். இந்த பள்ளியின் நோக்கம், ரஷ்ய புரட்சியை மதிப்பிழக்கச் செய்வது மட்டுமல்ல, மாறாக அவற்றின் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட முழுமைத்தன்மையில் ரஷ்ய புரட்சியின் போக்கைத் தீர்மானித்திருந்த, சிக்கலான பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுபோக்குகளை நேர்மையான முறையில் விஞ்ஞானபூர்வமாக ஆராயும் அனைத்தையும் தீவிரமாக தன்னம்பிக்கை இழக்கசெய்வதும், மற்றும் சித்தாந்த அச்சுறுத்தலின் ஒரு சூழலை ஊக்குவிப்பதும் ஆகும். இந்த தாக்குதலின் பாதிப்புகள் நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளது. பகுப்பாய்வின் இறுதியாக கூறுவதானால், மார்க்சிசம் எதிலிருந்து எழுந்ததோ, நூற்றாண்டுகளுக்கு நீண்ட, அந்த முற்போக்கான புரட்சிகர சிந்தனை மற்றும் போராட்டத்தின் ஒட்டுமொத்த மரபும் தான், இந்த வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளியின் இலக்காக உள்ளது. அந்த பிரச்சினையை நான் ஏதோ அதிக மிகைப்படுத்தி காட்டுவதாக குற்றஞ்சாட்டப்படுவதை தவிர்க்க, மாஸ்கோவில் உள்ள ரஷ்ய விஞ்ஞான பயிலகத்தின் (Russian Academy of Sciences) ஒரு அங்கத்தவரான பேராசிரியர் அலெக்சாண்டர் சௌடிநோவ், 1995இன் ஆகஸ்ட் இறுதியில்-செப்டம்பர் தொடக்கத்தில் மொன்ட்ரீயாலில் நடந்த வரலாற்று விஞ்ஞானத்தின் 18வது சர்வதேச காங்கிரஸில் வழங்கிய உரையை மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள். செயிண்ட் மாத்தேயு மற்றும் செயிண்ட் அகுஸ்டினை மேற்கோளிட்டுக்காட்டி, மனிதனின் துயரங்களுக்கு ஒரு மதசார்பற்ற தீர்வின் சாத்தியக்கூறு இருப்பதாக கருதுபவர்களை சௌடிநோவ், கற்பனாவாத சிந்தனையின் பலவேறுபட்ட கலவையின் பிரதிநிதிகளாக குறிப்பிட்டு கடுமையாக சாடினார். கடவுளால் மட்டுமே இந்த வாழ்வின் கெடுதல்களையும், பாதிப்புகளையும் நீக்க முடியும், ஆனால் அவர் உலக அழிவின் போது மட்டும் தான் அவ்வாறு செய்வார்," என்று முழங்கினார். ஆம் உண்மை தான், இது வரலாற்று விஞ்ஞானங்களுக்கான ஒரு சர்வதேச மாநாட்டில் தான் கூறப்பட்டது. சௌடிநோவ் வலியுறுத்துகையில், அனைத்து சமூக தீமைகளையும் அகற்றும் மற்றும், அதன் விளைவாக, தீமைகளற்ற அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சாத்தியக்கூறின் பிரமையிலிருந்து கிறிஸ்த்தவம் மக்களை விடுவித்தது," என்றார். மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் சமூக அரசியல் சிந்தனையிலிருந்து கிறிஸ்த்தவம் அகற்றப்பட்டது [இது] பண்டைய மெய்யியலின் கற்பனாவாத மரபை மீட்டுயிர்ப்பித்து விட்டதாக" சௌடிநோவ் புலம்பினார். அவர், அறிவொளி காலகட்டத்திற்கு நகர்வதற்கு முன்னதாக, மோரெ மற்றும் காம்பனெல்லாவைக் கோபத்தோடு திட்டினார், அறிவொளிமயமாக்க காலக்கட்டத்தில் தான் ரூசோ, மாப்லி, டிடேரோ ஆகியோரால் நிறைய தீய படைப்புகள் சேர்க்கப்பட்டதாம், சௌடிநோவ் கூற்றுப்படி, ஏனைய பலர், அவ்வளவாக பிரபலமாகாதவர்கள்." அந்த பகுத்தறிவாளர்களின் மகத்தான படைப்புகள் தான் ரொபேஸ்பியரையும், பின்னர் மார்க்சையும், நிச்சயமாக, லெனினையும் வளர்த்தெடுத்தன. இறுதியாக, சௌடிநோவ் அவரது முடிவுரைக்கு வந்தார்: இறுதியில், முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால், முந்தைய சகாப்தங்களில் மக்கள் நனவிலிருந்து கிறிஸ்த்தவம் அகற்றப்பட்டதன்-குறைக்கப்பட்டதன்- விளைவே இருபதாம் நூற்றாண்டின் சர்வாதிபத்திய ஆட்சிகளாகும்.3 இவை அனைத்தும் டஜன் கணக்கான பேராசிரியர்களின் முன்னிலையில் கூறப்பட்டவை, அவர்களில் பலர் தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தர்மசங்கடத்தில் இருக்க வேண்டியிருந்ததற்கு சரியான காரணமும் இருந்தது. சௌடிநோவ்-ராஸ்புட்டின் அந்த பிதற்றல்களுக்கு பொருத்தமான இடம், வரலாற்று விஞ்ஞானங்களின் ஒரு மாநாடு அல்ல. மாறாக ரஷ்ய பழைமைவாத மதக்குழுவின் ஒரு தேவாலயமாகும். மேதைகளின் ஒரு மாநாட்டு அரங்கம் அதுபோன்ற இறையியல் பிதற்றல்களுக்கு இடமளித்ததும், மேலும் அதையும்விட மோசமாக, சௌடிநோவ்வை சவால்விடுக்க ஒரேயொரு வரலாற்றாளர் கூட எழுந்திருக்கவில்லை என்பதும், புத்திஜீவித தரத்தில் ஏற்பட்டிருந்த அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும். பழைய பனிப்போர் காலத்திய கம்யூனிச-எதிர்ப்பாளர்கள் மற்றும் மறுகட்டமைப்பு செய்துகொண்ட ஸ்ராலினிஸ்டுகள் என இரண்டு தரப்பிலிருந்தும் வழங்கப்பட்ட பகுப்பாய்வில் அங்கே விவரிக்கப்படாத ஒரு முரண்பாடு உள்ளது. ஒருபுறம், அவர்கள் மார்க்சிசத்தை ஓர் இறுக்கமான நியதிவாதமாக (determinism) குறிப்பிடுகிறார்கள், அது ரஷ்ய சமூகத்தின் மீது ஒரு நடைமுறைக்குதவாத சந்தை-விரோத கற்பனையை திணிக்க போல்ஷிவிக்களின் முயற்சிக்கு தத்துவார்த்த ஆதாரமாக இருந்ததாக அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் பின்னர், நியதிவாதத்தின்" இந்த கடுமையான எதிர்ப்பாளர்களே, 1917க்குப் பிந்தைய சோவியத் வரலாற்றைக் குறித்த அவர்களின் பொருள்விளக்கத்தில் அவர்களே இன்னும் மிகத்தீவிர நியதிவாதத்தை ஏற்கிறார்கள், அதை போல்ஷிவிக் சித்தாந்தத்தால் கட்டவிழ்ந்த தடுக்கவியலாத விளைவாக அவர்களே விவரிக்கிறார்கள். சோவியத் வரலாறின் ஒவ்வொரு அத்தியாயமும், அக்டோபர் புரட்சியிலிருந்து தவிர்க்கவியலாமல் எழுந்ததென நமக்குக் கூறப்படுகிறது. ஏப்ரல் 1917இல் பின்லாந்து இரயில் நிலையத்தில் லெனின் இறங்கிய பின்னர், இரக்கமற்ற மார்க்சிஸ்டுகளால் கட்டளையிடப்பட்ட, அந்த வரலாற்று இரயில் வண்டி, ஒரே தடத்தில் பயணித்து, முன்கூட்டியே வகுத்துவைத்ததைப் போல லுப்யன்கா மற்றும் கட்டாய உழைப்பு முகாம்களின் கூட்டத்தில் தரித்துநின்று, 1991 இன் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. ட்ரொட்ஸ்கியை குறித்த ஸ்ராலினின் அச்சம் இந்த பொருள்விளக்கம் பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்ற உண்மையே, அங்கே ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததா? என்ற இந்த சொற்பொழிவின் தலைப்பைக் கொண்டே சுட்டிக்காட்டப்படுகிறது. உண்மையில் இவ்வாறு ஒரு கேள்வியை முன்வைப்பது ஆகச்சிறந்த வகையில் ஒரு ஊகிக்கக்கூடிய பதிலே சாத்தியமென்பதை அர்த்தப்படுத்துகின்றது. எது எவ்வாறிருந்தபோதினும், விடயம் அவ்வாறிருக்கவில்லை. சோவியத் ஒன்றிய வரலாறைக் குறித்த ஆய்வு, ஸ்ராலினிசத்திற்கு அங்கே ஒரு மாற்றீடு இருந்தது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அதிகாரத்துவத்தின் வளர்ச்சியும் மற்றும் அது அரசியல்ரீதியாக அதிகாரத்தைக் கைப்பற்றியதையும், போல்ஷிவிக் கட்சிக்குள்ளிருந்து நனவுபூர்வமாக மற்றும் திட்டமிட்டவகையிலும் எதிர்க்கப்பட்டது. லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையின் கீழ் 1923இல் எழுந்த எதிர்ப்பு, மிகமுக்கிய எதிர்ப்பாக இருந்தது. ஸ்ராலினும் மற்றும் சோவியத் அதிகாரத்துவமுமே அங்கே நிச்சயமாக எதிர்ப்பு இருந்தது என்று கருதினார்கள் என்பதே, ஸ்ராலினிசத்திற்கு அங்கே ஒரு மாற்றீடு இருந்ததா?" என்ற கேள்விக்கான பதிலாகும். ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், அது எந்தளவுக்கு தயவுதாட்சண்யமின்றி இருந்ததோ அதேயளவுக்கு கொடூரமாகவும் இருந்தது. போல்ஷிவிசத்தின் தொடர்ச்சியென்று கூறிக்கொண்ட அவரது சொந்த வாதத்தின் போலித்தன்மையில் எப்போதும் நனவுபூர்வமாக இருந்த ஸ்ராலினே, அவரது ஆட்சிக்கு மிகவும் ஆபத்தான அரசியல் எதிர்ப்பை ட்ரொட்ஸ்கி பிரதிநிதித்துவம் செய்வதாக நம்பினார். டிமிட்ரி வோல்கொகோனொவ்வால் எழுதப்பட்ட அந்த சோவியத் சர்வாதிகாரியின் 1987 சுயசரிதத்தின், எல்லா இடங்களிலும், ட்ரொட்ஸ்கி மீதான ஸ்ராலினின் அச்சத்தை விளக்கமாக சித்தரிப்பதைக் காணலாம். ஸ்ராலினின் பிரத்யேக நூலகத்திலிருந்து அவருக்கு கிடைத்த ஆவணங்களில் தன்னை அடித்தளமாக கொண்டு, வோல்கொகோனொவ் தனிமைப்படுத்தப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த ஒருவர் மீதான அச்சத்தில் அந்த சர்வவல்லமை படைத்த சர்வாதிகாரி வாழ்ந்ததைச் சித்திரமாக வரைந்து காட்டுகிறார். ட்ரொட்ஸ்கியைக் குறித்து அல்லது ட்ரொட்ஸ்கியால் எழுத்தப்பட்ட அனைத்தையும், ஸ்ராலின் அவரது ஆய்வுக்காக ஒரு பிரத்யேக அலுமாரியில் வைத்திருந்ததாக வோல்கொகோனொவ் குறிப்பிடுகிறார். ஸ்ராலினிடம் இருந்த இத்தகைய எழுத்துக்களின் பிரதிகளில் நிறைய இடங்களில் அடிக்கோடிடப்பட்டிருந்ததாகவும் மற்றும் அவதூறு கருத்துக்களால் நிரப்பப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். ட்ரொட்ஸ்கி அங்கு இல்லாத போதும், அவர் இல்லாதிருக்கையில் ஸ்ராலின் இன்னும் அதிகமாக அவரை வெறுக்கத் தொடங்கினார், மேலும் ட்ரொட்ஸ்கியின் பேயுரு அடிக்கடி அந்த அடாவழியில் அதிகாரத்தைப் பறித்தவரை துரத்த திரும்பி வந்தது. ட்ரொட்ஸ்கியை வெளிநாட்டுக்கு நாடுகடத்த உடன்பட்டதற்காக ஸ்ராலின் தன்னைத்தானே சபித்துக் கொண்டார். அவர் ட்ரொட்ஸ்கியிடம் அஞ்சினார் என்பதை தனக்குத்தானே கூட அவர் அப்போது ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக அவரை நினைத்து அஞ்சினார். (லேவ்வின் யெட்டிஷ் மொழி வடிவத்தைப் பயன்படுத்தி, அவர் அவரது மனதில் ட்ரொட்ஸ்கிக்கு பதிலளிக்க விழைந்த நிலையில்) மூர்க்கமான வன்முறையாக கொதித்தெழுந்திருந்த லெவ் டாவிடோவிச்சின் (Leib Davidovich) "பிரச்சினையை" அவரால் ஒருபோதும் தீர்க்க முடியாதென அவர் உணர்ந்தார்.4 வோல்கொகோனொவ் தொடர்கிறார்: ட்ரொட்ஸ்கி அவரது சொந்த அமைப்பை, நான்காம் அகிலத்தை, உருவாக்கி இருந்தார் என்பதே ட்ரொட்ஸ்கியின் பேயுரு குறித்து ஸ்ராலின் அஞ்சியதற்கு பிரதான காரணமாக இருந்தது ... ஸ்ராலின் தானே உருவாக்கி இருந்த வலியையும் விட அந்த பேயுரு மிகவும் கொடுமையாக பழி தீர்த்து வந்தது. ... ட்ரொட்ஸ்கி அவருக்காக மட்டும் பேசவில்லை, மாறாக மௌனமான அவரது ஆதரவாளர்கள் மற்றும் சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த எதிர்ப்பாளர்கள் அனைவருக்காகவும் பேசி வந்தார் என்ற சிந்தனையே ஸ்ராலினுக்கு குறிப்பாக வலிமிகுந்ததாக இருந்தது. ஸ்ராலினின் பொய்மைப்படுத்தும் பள்ளி, போல்ஷிவிக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம், அல்லது ஸ்ராலினிச தேர்மிடோர் (The Stalinist Thermidor) போன்ற ட்ரொட்ஸ்கியின் படைப்புகளை அவர் வாசித்த போது, அந்த தலைவர் ஏறத்தாழ அவரின் சுய-கட்டுப்பாட்டை இழந்து போனார். ... ... ட்ரொட்ஸ்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் டஜன் கணக்கான நாடுகளில் பிரசுரிக்கப்பட்டன என்பதுடன், இவற்றிலிருந்துதான் ஸ்ராலினைக் குறித்த அதன் உலக கருத்துக்கள் உருவச்சாயலை உருவாக்கிக்கொண்டதே தவிர, வொய்ட்வான்கர் மற்றும் பார்புஸ் போன்றவர்களின் புத்தகங்களில் இருந்து அல்ல.5 வோல்கொகோனொவுக்கு ட்ரொட்ஸ்கியின் தனிமனிதவியல்புகள் மீதோ அல்லது அரசியல் சிந்தனைகள் மீதோ முற்றிலுமாக எந்த அனுதாபமும் கிடையாது. ட்ரொட்ஸ்கியை ஸ்ராலினுக்கு ஒரு மாற்றீடாக பார்க்கும் எண்ணமே வோல்கொகோனொவுக்கு வெறுப்புக்குரியதாகும். ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் மற்றும் எழுத்துக்களை மிகவும் மோசமான வெளிச்சத்தில் காட்ட அவரால் ஆனமட்டும் அனைத்தும் செய்கிறார். ஆனால் ஸ்ராலினைத் தீர்மானகரமாக காட்டுவதற்கான அவரது இந்த நடவடிக்கை, அனைத்தையும் விட, அவரால் நாடுகடத்தப்பட்ட அவரது எதிராளியின் நடவடிக்கைகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக செய்கிறது. இந்த நடவடிக்கை, அதன் சொந்த வழியில், உள்நோக்கமின்றி இருப்பினும் கூட, ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பை மிகவும் சாபக்கேடான பாத்திரமாக கையாண்டுள்ள சோவியத் வரலாற்றின் எத்தனையோ தொகுதிகளது வெளிப்படையான பலவீனத்தை அடிக்கோடிடுகிறது. அக்டோபர் புரட்சியின் ஒரு தலைவராக மற்றும் ஸ்ராலினிச ஆட்சியின் மிக முக்கிய மார்க்சிச எதிர்ப்பாளராக லியோன் ட்ரொட்ஸ்கியின் தனிமனிதவியல்புகள் மற்றும் அரசியல் பாத்திரம், சோவியத் வரலாற்றின் எல்லா விவாதங்களிலும் பிணைந்துள்ளது. அவர், இன்றும் கூட, குறிப்பிடக்கூடாத தலையாய நபராகவே" இருக்கிறார். ஸ்ராலினிஸ்டுகளுக்கும் சரி, மார்க்சிச-விரோத முதலாளித்துவ வரலாற்றாளர்களுக்கும் சரி ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கையாள்வதென்பது எப்போதுமே ஒரு சிக்கலான பிரச்சினையாக இருந்துள்ளது. சோவியத் ஒன்றியத்திற்குள், ஸ்ராலினின் மரணம் மற்றும் குருஷேவின் அம்பலப்படுத்தல்களுக்குப் பின்னரும் கூட, அந்த ஆட்சி அவரது [ட்ரொட்ஸ்கியினது] நடவடிக்கைகள் மற்றும் சிந்தனைகள் குறித்து ஒரு நேர்மையான கணக்கீடு செய்ய அனுமதிக்கவில்லை. ஸ்ராலினால் கொல்லப்பட்ட போல்ஷிவிக் தலைவர்கள் அனைவரிலும், ட்ரொட்ஸ்கி ஒரேயொருவருக்கு மட்டும் தான் சோவியத் ஒன்றியத்தால் ஒருபோதும் உத்தியோகபூர்வ மறுவாழ்வு வழங்கப்படவில்லை. 1987 நவம்பரின் இறுதியில், கிளாஸ்நோஸ்ட் (glasnost- வெளிப்படைக்கொள்கை) செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில், அக்டோபர் புரட்சியின் எழுபதாவது ஆண்டுதின நிகழ்வில், கோர்பசேவ் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது சோவியத் ஒன்றியம் குறித்த மீளாய்வை வழங்கியபோது, சோசலிசத்திற்கு ஸ்ராலினின் பங்களிப்புகள் பற்றிக் கூற அந்த சோவியத் தலைவர் சில கனிவான வார்த்தைகளைக் கண்ட நிலையிலும் கூட, ட்ரொட்ஸ்கியை கடுமையாக சாடினார். ட்ரொட்ஸ்கியின் வரலாற்று பாத்திரம் ஏன் சோவியத் அதிகாரத்துவத்துக்கு அந்தளவுக்கு கஷ்டங்களை அளித்ததென்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. அவரது எழுத்துக்களின் ஆவணத்தொகுப்பு, ஒட்டுமொத்த ஸ்ராலினிச ஆட்சியின் மீதும் பதிலளிக்க முடியாத ஒரு குற்றப்பத்திரிகையை உள்ளடக்கி இருந்தது, அது அவரது தலைசிறந்த அரசியல் படைப்பாக காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற தலைப்பில் தொகுத்தளிப்பட்டிருந்தது. கொடுங்கோல் ஆட்சி அவசியமாக இருந்ததுடன், அது போல்ஷிவிசத்தின் நிஜமான வெளிப்பாடு என்ற மார்க்சிச-விரோத வரலாற்றாளர்கள் மத்தியில் இருந்த ஆய்வை, ஸ்ராலினுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியால் நடத்தப்பட்ட போராட்டம் கேள்விக்கிடமின்றி சவால்விடுக்கிறது. மார்க்சிச-விரோத வரலாற்றாளர்களால் ட்ரொட்ஸ்கியை புறக்கணிக்க முடியாதிருப்பதால், அவர்கள் ஸ்ராலினிசத்திற்கு எதிராக அவர் நடத்திய அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவத்தை சிக்கலாக்க, பொதுவாக அவர்களால் முடிந்தமட்டிலும் வேலை செய்துள்ளனர். நன்கறியப்பட்ட மார்க்சிச-விரோத வரலாற்றாளர்களில் ஒருவர் அதையும் கடந்து சென்றுள்ளார். பேராசிரியர் லெசெக் கோலகோவ்ஸ்கியின், மார்க்சிசத்தின் பிரதான போக்குகள் (The Main Currents of Marxism) எனும் பிரபலமான மூன்று-தொகுதி நூலை மேற்கோளிட என்னை அனுமதியுங்கள். அதில் அவர் எழுதுகிறார்: பல ஆய்வாளர்கள், இந்த எழுத்தாளர் உட்பட, ஸ்ராலினின் கீழ் அபிவிருத்தி அடைந்த சோவியத் அமைப்புமுறை லெனினிசத்தின் ஒரு தொடர்ச்சியாகும், மேலும் லெனினின் அரசியல் மற்றும் சித்தாந்த கோட்பாடுகள் மீது ஸ்தாபிக்கப்பட்ட அந்த அரசு ஒரு ஸ்ராலினிச வடிவத்தில் மட்டுமே தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது என நம்பினர்.[6] உண்மையில், லெனினின் அரசியல் மற்றும் சித்தாந்த கோட்பாடுகளை" ஸ்ராலினிசம் நியாயபூர்வமான மற்றும் அத்தியாவசிய வேதவாக்காக பிரதிநிதித்துவம் செய்ததென்றால், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பால் நடத்தப்பட்ட போராட்டத்தை ஒருவருக்கு எவ்வாறு விளக்குவது? கோலகோவ்ஸ்கி இந்த கேள்வியை அனுமானத்திற்கு விட்டுவிட்டு, பின்வரும் விளக்கத்தை வழங்குகிறார்: ட்ரொட்ஸ்கிஸ்டுகள், நிச்சயமாக ட்ரொட்ஸ்கியே கூட, அதிகாரத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதை ஒரு வரலாற்று திருப்புமுனையாக கருதினார்கள்; ஆனால் அவர்களுடன் உடன்படுவதற்கு அங்கே எந்த காரணமும் இருக்கவில்லை, நாம் பார்க்கவிருப்பதைப் போல, ட்ரொட்ஸ்கிசம்" ஒருபோதும் இருந்திருக்கவில்லை, மாறாக அது ஸ்ராலினால் உண்டாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என நிலைநிறுத்த முடியும். ஸ்ராலின் மற்றும் ட்ரொட்ஸ்கிக்கு இடையே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நிஜமாகவே கருத்துவேறுபாடுகள் இருந்தன, ஆனால் அவர்கள் முற்றிலுமாக தனிப்பட்ட அதிகார போட்டியில் பெரிதாக்கப்பட்டிருந்தார்கள் என்பதுடன் அவர்கள் ஒருபோதும் இரண்டு சுயாதீனமான, ஒத்திசைவான தத்துவங்களைக் கொண்டிருக்கவில்லை. ... எவ்வாறிருந்த போதினும், யதார்த்தத்தில், அவ்விரு மனிதர்களுக்கு இடையே, எந்தவொரு தத்துவார்த்த கருத்துமுரண்பாடுகள் ஒருபுறம் இருக்கட்டும், அங்கே எந்த அடிப்படையான அரசியல் எதிர்ப்புமே கூட இருக்கவில்லை.7 ஸ்ராலினிசத்திற்கு அங்கே மாற்றீடு இருக்கவில்லை என்ற வாதத்திற்கு குழிபறிக்கும் வரலாற்று உண்மைகள் மீதான வெறுப்பார்ந்த அலட்சியத்தையும் மற்றும் புத்திஜீவித திவால்நிலைமையையும் கோலகோவ்ஸ்கியின் வலியுறுத்தல் நிரூபிக்கிறது. போல்ஷிவிக் கட்சியை உடைத்த போராட்டமும், 1920கள் மற்றும் 1930களில் சர்வதேச கம்யூனிச இயக்கமும், சாரத்தில், ஒன்றுமே இல்லையென குறிப்பிட்டு, ஒருவர் நம்பவியலாததை ஏற்றுக்கொள்ள வேண்டுமென கோரும் ஒரு ஆய்வுடன், என்ன நம்பகத்தன்மையை இணைக்க முடியும்? ஸ்ராலினால் உத்தரவிடப்பட்ட பாரிய படுகொலைகள், மற்றும் அவர்களது அரசியல் வாழ்க்கை வரலாறு அல்லது புத்திஜீவித நலன்களுக்காக, ட்ரொட்ஸ்கிசத்துடன் மிக தொலைதூர தொடர்பு கொண்டிருந்த காரணத்திற்காக, சந்தேகிக்கப்பட்ட அனைவரையும் சோவியத் ஒன்றியத்திற்குள் அழித்தமை இதெல்லாம் நடந்ததாக கூறப்படுகிறதே, சோவியத் சர்வாதிகாரிக்கு ட்ரொட்ஸ்கி உடன் எந்த அடிப்படை அரசியல் அல்லது தத்துவார்த்த கருத்துமுரண்பாடும் இல்லாமலா இதெல்லாம் நடத்தப்பட்டது. மேலும், அதே காலகட்டத்தில், சோவியத் ஆட்சியை கண்டித்து ஆயிரக் கணக்கான கட்டுரைகளை ட்ரொட்ஸ்கி எழுதினார் என்பதும், ஸ்ராலினின் கொள்கைகளை தூக்கியெறிய அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்ப அவர் ஓய்வின்றி உழைத்தார் என்பதும், நாம் நம்புமாறு உள்ளதே, இதெல்லாம் ஸ்ராலினின் கொள்கைகளுடனான அவரின் உடன்பாடுகளை மூடிமறைப்பதற்கு மட்டுந்தானா செய்யப்பட்டது! ஸ்ராலினிசம் தவிர்க்கவியலாததாக இருந்ததா? அவர்கள் தொடங்கும் புள்ளியை சித்தாந்தரீதியில் உந்தப்பட்ட தீர்மானமாக அதாவது ஸ்ராலினிச கொடுங்கோல் ஆட்சி போல்ஷிவிக் தத்துவம் மற்றும் அரசியலின் முன்தீர்மானிக்கப்பட்ட விளைவு என்று எடுத்துப்பார்த்தால், சோவியத்திற்குப் பிந்தைய பொய்மைப்படுத்தும் பள்ளியின் ஆதரவாளர்கள், அவற்றிற்கு வேறுவிதமாக குறிப்பிட்டுக் காட்டும் உண்மைகளை ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த எழுத்தாளர்களின் தொழில்ரீதியிலான தரங்கள் வருந்தத்தக்க அளவுக்கு சரிந்து போயுள்ளன. இருந்தபோதிலும், சோவியத்திற்குப் பிந்தைய பொய்மைப்படுத்தும் பள்ளியின் சித்தாந்த முற்கோள்களுக்கு எவ்விதத்திலும் அனுதாபம் காட்டாத பல மாணவர்களுக்கும் கூட, அந்த வாதத்தின் அடியிலிருக்கும் உட்கருத்து குறிப்பிட்டளவுக்கு கவர்ச்சிகரமான ஈர்ப்பை அளிக்கின்றன. மொத்தத்தில், லெனினில் இருந்து ஸ்ராலின் வரையிலான மாற்றத்தை ஒருவருக்கு எவ்வாறு விளங்க வைப்பது? அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒருசில ஆண்டுகளுக்கு உள்ளேயே, போல்ஷிவிக் ஆட்சி ஓர் இரக்கமற்ற சர்வாதிகாரமாக மாறியிருந்தது என்பது உண்மை தானே? போல்ஷிவிக் கட்சிக்குள், அதுவும் குறிப்பாக அதன் சித்தாந்தத்திற்குள் இந்த மாற்றத்தின் விதைகளைக் காண்பது அர்த்தமற்றதா? இந்த வாதம் புதிதல்ல. 1930களின் பின்னால், ஸ்ராலினிச கொடூரத்தின் உச்சக்கட்டத்தில், ட்ரொட்ஸ்கியின் பழைய தோழர்களே கூட படுகொலை செய்யப்பட்டு, அவரே GPU படுகொலையாளர்களால் பின்தொடரப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் புரட்சியின் ஒரு தலைவராக அவரும் சோவியத் ஆட்சியின் பெருங்கொடுமைகளுக்கு பொறுப்பாகிறார் என்ற குற்றச்சாட்டை ட்ரொட்ஸ்கி மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு வந்தார். இத்தகைய விமர்சனங்களின் வரலாற்று செய்முறையில் இருந்த அடிப்படை குறைபாட்டை குறிப்பிட்டுக் காட்டி அவர் அத்தகைய தாக்குதல்களுக்கு பதிலளித்தார். ஸ்ராலினிசத்தின் மூலத்தை போல்ஷிவிசத்தின் சித்தாந்தத்தில் கண்டறிய முனைகையில் அதாவது நிஜமான தீமையின் கருத்துருவை சோவியத் அரசியல் ஆய்வுக்கு மாற்றுவதன் மூலமாக மார்க்சிச-விரோதிகள், அது கருத்தரிக்கமுடியாத கருவறைக்குள் உருப்பெற்றதாக, போல்ஷிவிசத்தை ஆராய்ந்தார்கள். போல்ஷிவிக் கட்சி, ரஷ்ய புரட்சியின் பரந்த சமூக வெளியில், அதன் அனைத்து இயக்கவியலுடன் ஒரேயொரு உட்கூறாக அங்கே இருந்தது என்ற உண்மையை அவர்கள் கவனிக்கத் தவறினார்கள். ரஷ்ய புரட்சியின் அபிவிருத்தியில் நிச்சயமாக போல்ஷிவிக் கட்சி தீர்க்கமான அரசியல் காரணியாக இருந்தபோதினும், அது அதை ஆகாயத்திலிருந்து உருவாக்கிக் கொள்ளவில்லை. மேலும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரும் கூட, போல்ஷிவிக் கட்சி அதற்காக சமூக யதார்த்தத்தின் ஒட்டுமொத்த நிர்ணயிப்பாளராக மாறிவிடவில்லை. அதன் அதிகார வரம்புகள் பாரிய முந்தைய வரலாற்று காரணிகளால் நிபந்தனைக்குட்பட்டு இருந்தன, அதுவும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாறிகளின் ஒரு சிக்கலான இடைத்தொடர்புகளைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை. கட்சி மட்டுமே மேலாதிக்கம் செலுத்தவில்லை; அதிகாரத்தை எடுத்ததன் மீது அது எதிர்கொண்டிருந்த சமூக நிலைமைகள், கட்சியின் மீதும் மேலாதிக்கம் செலுத்தின. போல்ஷிவிக் கட்சி, அரசாணைகள் மூலமாக, உற்பத்திச் சாதனங்களின் தனியார் சொத்துடைமையை வேண்டுமானால் அகற்ற முடியும், ஆனால் ஆயிரமாண்டு கால ரஷ்ய வரலாற்றை அதனால் அகற்ற முடியாது. சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் பின்தங்கிய நிலைமையின் வெவ்வேறு வடிவங்கள் அனைத்தையும் அதனால் அகற்ற முடியாது, அவை பல நூற்றாண்டுகளாக ரஷ்ய வரலாற்று அபிவிருத்தியின் பாரம்பரியமாக இருந்தன. எல்லா மனித உயிர்களும், அவற்றின் உயிரியியல் வளர்ச்சியின் பொதுவான வடிவத்தைத் தீர்மானிக்கும் மரபணுக்களை அவற்றின் DNAக்குள் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த இயற்கையான நிகழ்வுபோக்கிலும் கூட, தொழில்துறை தாக்கங்களால் மாற்றப்பட்ட ஒரு சூழல் போன்ற, மனித உடலுக்கு வெளியே இருக்கும் நிலைமைகளின் மேலாதிக்கம் ஒன்றும், முக்கியமற்ற பாத்திரமில்லையே. ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் தலைவிதி, சமூக விலங்குகளாக அவர்கள் உயிர்வாழ்கிறார்கள் என்ற நிலைப்புள்ளியிலிருந்து பார்க்கப்பட்டால், அவர்கள் வாழும் வரலாற்று சூழல்கள் அவர்கள் வளர்ச்சியில் தனித்த உடலியல்ரீதியான அம்சங்களில் கூட மிக தீர்க்கமாக செல்வாக்கு செலுத்துகிறதென்பதை நாம் அறிவோம். மனிதயின வளர்ச்சியில் வெளிப்புற மற்றும் சமூகரீதியில்-நிபந்தனைக்குட்பட்ட காரணிகள் தீர்க்கமாக மேலாதிக்கம் செலுத்துவதை மானுடவியலாளர்களால் நிராகரிக்க முடியாதென்றால், வரலாற்றாளர்களும் ஒரு சிக்கலான அரசியல் நிகழ்வுப்போக்கை, போல்ஷிவிக் கட்சியின் கண்ணுக்குத்தெரியாத பொதுவான தத்துவார்த்த ஆய்வுகளுக்குள் கலந்திருந்த கருத்துக்களோடு பொருந்திய விதத்திலேயே அதன் அரசியல் பரிணாமம் இருந்தது என்பதைப் போல, கையாள முயற்சிக்க மாட்டார்கள். சோவியத்திற்குப் பிந்தைய பொய்மைப்படுத்தும் பள்ளியின் சித்தாந்த மாறாநிலைவாதிகளுக்கான (metaphysicians) எங்கள் மறுப்புரைக்கு, போல்ஷிவிக் கட்சி முழுநிறைவானது என்று நாம் கற்பித்துக் கூறுவதோ, அல்லது அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி செய்த அரசியல் பிழைகள் 1921இல் பத்தாவது கட்சி காங்கிரஸில் உட்கட்சி கன்னைகளுக்கு தடைவிதித்தமை போன்றவை ஏதோவழியில் அதிகாரத்துவ வளர்ச்சிக்கு மற்றும் தவிர்க்கவியலாமல் ஸ்ராலினிச சர்வாதிகாரம் ஒன்றுதிரள்வதற்கு பங்களிப்பு செய்தது என்ற சாத்தியக்கூறை மறுப்பதோ தேவைப்படவில்லை. குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ், ஒரு சர்வாதிகார ஆட்சியைக் கட்டியெழுப்பும் அம்சங்கள் போல்ஷிவிசத்தின் அமைப்புரீதியிலான கருத்துருக்களிலும் வடிவங்களிலும் அங்கே இருந்திருக்கலாம் மற்றும் ஸ்ராலினால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு ஒருவர் வரக்கூடும். ஆனால் அதிலுள்ள முக்கியமான வரிகள், குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் என்பதே ஆகும். போல்ஷிவிசம் அதற்குள்ளேயே முரண்பட்ட போக்குகளைக் கொண்டிருந்தது. ஆனால் அவற்றின் அபிவிருத்தியை, ஒட்டுமொத்தமாக சோவியத் சமூகம் எதிர்கொண்டிருந்த பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளின் அபிவிருத்தியின் உள்ளடக்கத்தில் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கிய தனிநபர்கள் வகித்த பாத்திரத்தைக் கருத்தில் எடுத்தாலும் கூட, பிரதான புறநிலைமைகள் மற்றும் சூழ்நிலைமைகளை அடையாளம் காண்பதும் அவசியமாகும். ஸ்ராலினின் அரசியல் பரிணாமம் 1920களில் இடது எதிர்ப்பில் உறுப்பினராக இருந்த சிலரில் ஒருவரும்எதிர்ப்பாளர்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்ட 84 பேரில் ஒருவர்மற்றும் ஸ்ராலினிடமிருந்து தப்பிப் பிழைத்திருந்த இவான் விராசெவ்வுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் மாஸ்கோவில் விவாதித்திருந்தேன். அவருக்கு ட்ரொட்ஸ்கியை மற்றும் ஸ்ராலின் உட்பட போல்ஷிவிக் கட்சியில் இருந்த பெரும்பாலான ஏனைய தலைவர்களையும் நன்றாகத் தெரியும். ஸ்ராலின் பல ஆண்டுகள் அவருடன் மிக நெருக்கமாக வேலை செய்திருந்த அவரது தோழர்களை நிர்மூலமாக்க உத்தரவிடுவதற்கு, அவரை ஒரு தகுதியுடைய நபராக நம்புவதற்கு இட்டுச் சென்றதைக் குறித்து ஏதாவது கூற முடியுமா என நான் விராசெவ்விடம் கேட்டேன். விராசெவ் அவரே இந்த கேள்வியை பலமுறை தனக்குத்தானே எழுப்பி இருந்ததாகவும், ஆனால் அதுபோன்ற குற்றங்களுக்கு ஸ்ராலின் தகுதியுடையவராக இருந்தார் என்பதை நம்புவதற்கு இட்டுச் சென்ற எதுவொன்றையும் அவரால் நினைவுகூர முடியவில்லையென்றும் பதிலுரைத்தார். விராசெவ் பின்னர் இந்த பின்வரும் தகவலைத் தொடர்புபடுத்தினார். 1922இல், அவர் மாகாணங்களின் ஒரு முக்கிய பணிக்காக மாஸ்கோவிலிருந்து புறப்பட இருந்தார். அவர் உடல்வலிகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார், இருந்தும் அவரது பயணத்தைத் தள்ளி வைக்குமாறு கோர அவருக்கு விருப்பமில்லை. அவர் புறப்படுவதற்கு முன்னதாக, கட்சி அமைப்புக்குப் பொறுப்பாக இருந்த ஸ்ராலினைச் சந்திப்பது அவரது கடமையாக இருந்தது. அவர் கிரெம்ளினுக்குச் சென்று, அங்கே உடனடியாக செல்லவேண்டியிருந்த அவரது பயணத்தின் விபரங்களை ஸ்ராலினுடன் மீளாய்வு செய்தார். அந்த விவாதத்தின் சில இடங்களில், ஸ்ராலின் விராசெவ்வின் உடல்நல அசௌகரியத்தைப் புரிந்து கொண்டதாக தெரிந்தது. ஸ்ராலின் முற்றிலும் எச்சரிக்கை அடைந்ததுடன், அவரது முழு அணுகுமுறையும் நிஜமான கவலையை வெளிப்படுத்துவதாக தெரிந்தது. அவரது உடல்நல அவதிகளோடு அதுபோன்ற ஆபத்துக்களை எடுப்பதை அனுமதிக்க முடியாது என்று விராசெவ்வுக்குத் தெரிவித்து, ஸ்ராலின் அவர் பயணத்தை ஒத்தி வைக்குமாறு உத்தரவிட்டதுடன், விராசெவ்வுக்கு கிரெம்ளினின் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யவும் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசி இருந்தார். அதன் பின்னர், விராசெவ்வுக்கு ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, ஸ்ராலின் அவரது அதிகார அமைப்பை கட்டமைப்பதிலேயே கவலை கொண்டவராக இருந்திருக்கலாம், ஆனால் அப்போதும் அவர் நிஜமான மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தகைமை கொண்டிருந்தார் என்பதை அவரது வெளிப்பாடுகள் காட்டின என்று விராசெவ் இணக்கமாக தெரிவித்தார். ஸ்ராலின் அரக்கத்தனமான குற்றங்களைச் செய்தார். பாரிய படுகொலைகளுக்கு அவரைத் தகுதியுடையவராக ஆக்கிய, அந்த உள்ளார்ந்த உளவியல் அம்சங்கள் அவரது தனிமனிதவியல்புக்குள் தங்கியிருக்கவில்லையென நம்புவது சிரமம் தான். ஆனால் ஸ்ராலின் விடயத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய மனநோயியல் மற்றும் குற்றகர போக்குகள் குறிப்பிட்ட பல புறநிலைமைகளால் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு, ஒரு குறிப்பிட்ட கோரமான வடிவத்தை எடுத்தன. அதை பொறுத்தவரையில், 1930களின் இறுதியில் ட்ரொட்ஸ்கியால் வழங்கப்பட்ட ஒரு ஆய்வுரையைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். முழு அதிகாரத்தை அவர் பெறுவார் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததைப் போலவே, இடது எதிர்ப்புடனான அவரது போராட்டத்தின் விளைவை ஸ்ராலின் முன்கணித்திருந்தால், அதை தொடங்கியிருக்கவே மாட்டார் என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். இதற்கு முரண்பட்ட விதத்தில், அவர் மிக குறைவாகவே முன்கணித்தார் என்பதே, அவரது எதிர்ப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஸ்ராலினின் அரசியல் ஆதாயங்களில் ஒன்றாக இருந்தது. அவரது சொந்த நடைமுறைவாதத்தில் சௌகரியமாக இருந்துகொண்டு அவர், ட்ரொட்ஸ்கியின் அரசியல் மாற்றீடுகளை தேடுவதில் ஒரு முக்கிய பாத்திரம்வகித்த தீவிர தத்துவார்த்த பகுப்பாய்வுகளின் அடித்தளத்தில் இருந்த கோட்பாட்டுரீதியிலான சிந்தனைகளிலிருந்து விடுபட்டிருந்தார். அவரது கொள்கைகள், உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச அளவிலும், பேரழிவுக்கு இட்டுச் செல்லுமென்ற எதிர்த்தரப்பின் அவசர எச்சரிக்கைகள், ஏதோ பீதியூட்டும்-பரப்புரைகளாக ஸ்ராலினால் நிராகரிக்கப்பட்டன. ஜூன் 15, 1926 தேதியிட்டு சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட, ஸ்ராலினிடமிருந்து மொலோடொவ்வுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தை நாம் காணப்பெற்றோம், அதில் ஒரு வாசகம் ஸ்ராலினைக் குறித்த ஒரு பெரும் புரிதலை வெளிப்படுத்துகிறது: பொருளாதார விடயங்களைக் குறித்து நான் எச்சரிக்கை அடையவில்லை," அவர் எழுதினார். ரெகோவ் அவற்றைக் கவனித்துக் கொள்வார். பொருளாதார விடயங்களில் எதிர்த்தரப்பு முற்றிலுமாக பூஜ்ஜியம் புள்ளிகளைத் தான் வெல்கிறது."8 சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி எதில் தங்கியிருந்ததோ அந்த ஒரு பிரச்சினையின் ஒட்டுமொத்த முக்கியத்துவத்தைக் குறித்த ஸ்ராலினின் தனிப்பட்ட மதிப்பீடு இது தான். அது "பூஜ்ஜிய புள்ளிகளுக்கு" மதிப்புடையதாக இருந்தது. புதிய பொருளாதார கொள்கையினது (NEP) ஆளுமையின் கீழ் திரண்டுவந்த சோவியத் பொருளாதாரத்தின் முரண்பாடுகள், அவரது கண்முன்னால் இறுதியில் வெடிக்கும் என்பதையோ, வெறும் ஒருசில ஆண்டுகளுக்கு பின்னர், அவரை மூர்க்கமாக, இரக்கமின்றி, படுகொலைக்குரிய கொள்கைகளை பாரியளவில் ஒன்றுதிரட்டி ஏற்குமாறு உந்தும் என்பதையோ அவரால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. அக்டோபர் புரட்சியின் சர்வதேச உள்ளடக்கம் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கும் மற்றும் சர்வதேச, அதுவும் குறிப்பாக ஐரோப்பிய, பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்களுக்கும் இடையிலான பிரிக்கவியலாத தொடர்பே, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கிலும் மற்றும் லெனினின் "ஏப்ரல் ஆய்வுரைகள்" இரண்டிலும் மையமாக இருந்தது. லெனினோ அல்லது ட்ரொட்ஸ்கியோ இருவருமே அக்டோபர் புரட்சியை பிரதானமாக தேசிய வரையறைகளில் பார்க்கவில்லை. இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டதை, அவர்கள் முதலாம் உலக யுத்தத்தால் எடுத்துக்காட்டப்பட்ட உலகளாவிய முதலாளித்துவ முரண்பாடுகளுக்கு, சர்வதேச பாட்டாளி வர்க்க தீர்வுகாணலின் ஒரு தொடக்கமாக அதை புரிந்திருந்தார்கள் மற்றும் நியாயப்படுத்தினார்கள். இந்த முன்னோக்கு, பொருளாதாரரீதியில் பின்தங்கிய ரஷ்யாவின் எல்லைகளுக்குள் ஒரு தன்னிறைவான சோசலிச அமைப்புமுறையை ஸ்தாபிக்கும் இலட்சியத்துடன், எதையும் பொதுவாக கொண்டிருக்கவில்லை. இது லெனின் மரணத்திற்குப் பல மாதங்களுக்குப் பின்னர், புக்ஹாரின் மற்றும் ஸ்ராலினும் தேசிய அடிப்படையில், தனியொரு நாட்டில் சோசலிசத்தை ஸ்தாபிக்க முடியுமென்ற கருத்தை 1924 இலையுதிர் காலத்தில் அறிமுகப்படுத்தியதில் வந்துமுடிந்தது. அதற்கு முன்னர் வரையில், ஒரு சோசலிச பொருளாதார அபிவிருத்தி ஒருபுறம் இருக்கட்டும், போல்ஷிவிக் அரசாங்கம் உயிர்பிழைத்திருப்பது என்பது மேற்கு ஐரோப்பாவில் சோசலிச புரட்சிகளின் வெற்றியைச் சார்ந்திருந்தது என்பதே மார்க்சிசத்தின் ஒரு மூலசூத்திர முற்கோளாக இருந்தது. அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுவது சோவியத் ரஷ்யா பிழைத்திருப்பதற்கு அத்தியாவசியமான அரசியல், நிதியியல், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஆதாரவளங்களை வழங்கும் என்பது உள்ளார்த்தமாக நம்பப்பட்டது. அதிகாரத்திற்கான போராட்டத்தை, அதுபோன்ற தொலைதூர சர்வதேச புரட்சிகர கணக்கீடுகளின் அடித்தளத்தில் நிலைநிறுத்தும் போல்ஷிவிக்களுக்கு பித்துபிடித்து விட்டதாக வாதிடலாம் இவ்வாறு மென்ஷிவிக்குகளால் மற்றும் ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளிடையே இருந்த அவர்களின் கூட்டாளிகளால் அப்போது வாதிடப்பட்டது. இருந்தபோதினும், லெனின் தொடர்பாக விமர்சனமற்றதன்மையை அறவே கொண்டிராத ரோசா லுக்செம்பேர்க், துல்லியமாக போல்ஷிவிசத்தின் உள்நோக்கத்தை, மிகத் தாராளமாக புகழ்வதற்கு மதிப்புடைய ஒன்றாக கண்டார் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் 1918இல் இவ்வாறு எழுதினார்: ரஷ்ய புரட்சியின் தலைவிதி முற்றிலுமாக சர்வதேச சம்பவங்களைச் சார்ந்துள்ளது. போல்ஷிவிக்குகள் அவர்களின் கொள்கையை முற்றிலுமாக உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் அடித்தளத்தில் கொண்டிருப்பதானது, அவர்களின் அரசியல் தொலைநோக்குப் பார்வைக்கும் மற்றும் கோட்பாட்டின் உறுதித்தன்மைக்கும் மற்றும் அவர்களது கொள்கைகளின் உறுதியான நோக்கெல்லைக்கும் மிகத் தெளிவான சான்றாகும்.9 லுக்செம்பேர்க் போல்ஷிவிக் ஆட்சிக்கான வாய்ப்புவளங்கள் குறித்து நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. அதேபோல போல்ஷிவிக்குகள் அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவர்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் பல அம்சங்களுடன் அவருக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்ககூடாதென்றோ அல்லது அவர்களின் அரசியல் பிழைகள் ஏதோவொருவித கற்பனாவாத வெறித்தனத்தின் வெளிப்பாடுகள் என்றோ கருத்துக்கூற அவருக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. ஜனநாயக ஒடுக்குமுறையை மற்றும் அதீத வன்முறை பிரயோகத்தை லுக்செம்பேர்க் விமர்சித்த போதும் கூட, அவரது அறநெறிசார்ந்த அந்த கண்டனங்களை அவர் போல்ஷிவிக்குகள் மீது திருப்பி இருக்கவில்லை, மாறாக ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள் மீது திருப்பி இருந்தார், புரட்சிகர கோட்பாட்டுகளை அவர்கள் காட்டிக்கொடுத்தமையும் மற்றும் ரஷ்யாவின் பெரும் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பு உட்பட ஜேர்மன் அரசாங்கத்தின் யுத்த கொள்கைகளுக்கு அவர்களின் ஆதரவும், சோவியத் அரசாங்கத்தை அதுபோன்ற ஒரு சிக்கலான நிலைமையில் நிறுத்தி இருந்தது. அத்தகைய சூழ்நிலைகளில் லெனினும் அவரது தோழர்களும் நேர்த்தியான ஜனநாயகத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் உயர்ந்த சர்வாதிகாரத்தை மற்றும் ஒரு வளமான சோசலிச பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வந்திருக்க ஏதாவது மாயவித்தை செய்திருக்க வேண்டுமென நாம் எதிர்பார்த்தால், அது அவர்களிடமிருந்து நாம் ஏதோ மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட தன்மையை கோருவதாகத் தான் இருக்கும். ... ...நாம் அனைவருமே வரலாற்று விதிகளுக்கு உட்பட்டிருக்கிறோம், மேலும் சர்வதேசரீதியில் மட்டும் தான் சமூகத்தின் சோசலிச ஒழுங்கமைப்பை கொண்டுவர முடியும். வரலாற்று சாத்தியக்கூறுகளின் வரம்புக்குள் இருந்து, ஒரு நிஜமான புரட்சிகர கட்சி பங்களிப்பு செய்யக்கூடிய ஒவ்வொன்றுக்கும் அவர்கள் தகைமை பெற்றிருந்தார்கள் என்பதை போல்ஷிவிக்குகள் காட்டியுள்ளனர். அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்துவார்கள் எனக் கருத முடியாது. உலக யுத்தத்தால் நலிந்து போன, ஏகாதிபத்தியத்தால் குரல்வளை நெரிக்கப்பட்ட, சர்வதேச பாட்டாளி வர்க்கம் காட்டிக்கொடுக்கப்பட்டு, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மண்ணில் ஒரு முன்மாதிரியான மற்றும் பிழைகளற்ற பாட்டாளி வர்க்க புரட்சி என்பது ஒரு அதிசயமாகத் தான் இருக்க முடியும்.10 லுக்செம்பேர்க் இவ்வாறு முடித்திருந்தார்: அவசியமற்றதிலிருந்து அவசியத்தை வேறுபடுத்திக் காட்ட நடைமுறைக்கு என்ன வந்திருக்கிறதென்றால், போல்ஷிவிக்குகளது கொள்கைகளிலிருந்து திடீரென தனித்துவமாக வெளிவந்திருக்கும் கருமூலம் ஆகும். ... அது இந்த அல்லது அந்த ஏதோவொரு தந்திரோபாயங்களின் இரண்டாந்தர பிரச்சினை குறித்த விடயமல்ல, மாறாக பாட்டாளி வர்க்கத்தின் செயல் தகைமையின், நடவடிக்கை பலத்தினது, சோசலிச அதிகாரம் மீதான விருப்பத்தின், இன்னும் இதுபோன்றவொரு விடயமாகும். இதில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி மற்றும் அவர்களது நண்பர்கள் முதலிடத்தில் இருந்தார்கள், அவர்கள் உலக பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக முன்னால் சென்றார்கள்; அவர்கள் மட்டுந்தான் இப்போது வரையில் "நான் துணிந்திருந்தேன்!" என்று பெருமிதத்தோடு உரக்கக் கூற முடியும்.11 இந்த வார்த்தைகள் இன்றும், சுமார் எண்பது ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, எந்தளவுக்கு உணர்ச்சிகரமாக இருக்கின்றன! அந்த காலகட்டத்தின் மிகவும் நனவுபூர்வமான சோசலிஸ்டுகள், ரஷ்ய புரட்சி தனிமைப்படுத்தப்படுவது அது உயிர்பிழைப்பதற்கே பெரும் ஆபத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை நன்கறிந்து வைத்திருந்தார்கள் என்ற உண்மைக்கு அவை சாட்சியாக உள்ளன. முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஐரோப்பிய, அனைத்திற்கும் மேலாக, ஜேர்மானிய தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட தோல்விகள் சோவியத் ஆட்சியின் அரசியல் சிதைவுக்கு பிரதான காரணமாக இருந்தன. சோவியத் ஒன்றியம் தனிமைப்படுத்தப்பட்டமை, போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைச் சாத்தியப்படுத்தி இருந்த, வர்க்க சக்திகளின் உறவுகளை வேகமாக மாற்றியது. இங்கே நாம் முற்றிலும் ஒரு தத்துவார்த்த பிரச்சினையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை, மாறாக ஒரு ஸ்தூலமான யதார்த்தத்தைப் பேசிக் கொண்டிருக்கிறோம். அக்டோபர் புரட்சியின் கோட்பாட்டுரீதியிலான சமூக அடித்தளம் (principal social base) மிகவும் சிறியது, ஆனால் தொழிலாள வர்க்கம் மூலோபாயரீதியில் பலமாக நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் மீது விழுந்த உள்நாட்டு போர் தாக்கத்தை விலக்கி வைத்துவிட்டு, போல்ஷிவிசத்தின் நெருக்கடியைப் புரிந்து கொள்ள முடியாது. உள்நாட்டு யுத்தத்திற்குக் கொடுக்கப்பட்ட விலைகள் போல்ஷிவிக் கட்சியின் சிதைவுக்கான காரணங்கள் குறித்த அவரது எழுத்துக்களில் ட்ரொட்ஸ்கி பலமுறையும், 1921 உள்நாட்டு போர் முடிவால் தொழிலாள வர்க்கம் ஸ்தூலமாகவும், ஆன்மரீதியிலும் களைத்து போயிருந்ததைக் குறிப்பிட்டார். மனசாட்சிக்கு நேர்மையான வரலாற்றாளர்களின் சமீபத்திய ஆய்வுகள் ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய விதத்தில், இவர்களது எழுத்துக்கள் பொதுமக்களுக்கு வெகு குறைவாகவே தெரிய வந்திருக்கின்றன சோவியத் அரசாங்கம் எந்தளவுக்கு சமூக பேரழிவை எதிர்கொண்டிருந்தது என்பதன் மீது உள்ளது உள்ளவாறே ஆழமாக வெளிச்சத்தைப் பாய்ச்சும் முக்கிய தகவல்களை வழங்குகின்றன. சோவியத் அரசும் புரட்சிகளுக்கு இடையிலான சமூகமும், 1918-1929, இந்த ஒரு மதிப்பார்ந்த ஆய்வில் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் லூயிஸ் சீகெல்பௌம் உள்நாட்டு போரின் போக்கில் தொழில்துறை தொழிலாள வர்க்கம் சுருங்கியதன் மீது புள்ளிவிபரங்களை அளிக்கிறார். புரட்சியின் காலகட்டத்தில், அங்கே பதினாறுக்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகளில் மொத்தம் 3.5 மில்லியன் தொழிலாளர்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை 1918இல் இரண்டு மில்லியனாகவும், 1920இன் இறுதியில் 1.5 மில்லியனாகவும் வீழ்ச்சியுற்றது. மிகப்பெரிய தொழில்துறை மையங்களில் படுமோசமான இழப்புகள் இருந்தன. பெட்ரோகிராட்டில் ஜனவரி 1917இல் தொழில்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை 406,000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. 1920இன் நடுப்பகுதியில் அந்த எண்ணிக்கை 123,000ஆக வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்த முழு எண்ணிக்கை வீழ்ச்சிக்கு கூடுதலாக, அந்நகரின் மொத்த மக்கள்தொகையின் சதவீதத்தில் பாட்டாளி வர்க்கத்தின் அளவும் கணிசமாக சரிந்தது. 1918 மற்றும் 1920க்கு இடையே மாஸ்கோ சுமார் 100,000 தொழிலாளர்களை இழந்தது, மற்றும் அதே காலக்கட்டத்தின் போது ஒரல்ஸில் இருந்த தொழிற்சாலை மற்றும் சுரங்க தொழிலாளர்களின் எண்ணிக்கை 340,000 இல் இருந்து 155,000 ஆக சரிந்தது. சோவியத் பொருளாதாரத்தின் பிரதான தொழில்துறை மற்றும் உற்பத்தி துறைகள் மலைப்பூட்டும் அளவுக்கு இழப்புகளால் பாதிக்கப்பட்டன. ஜவுளித்துறை ஆலைகள் அதன் தொழிலாளர் சக்தியில் 72 சதவீதத்தை இழந்தது. இயந்திர மற்றும் உலோகத்தொழில் துறை 57 சதவீதம் இழந்தது. பாட்டாளி வர்க்கத்தின் வீழ்ச்சி, நகர்ப்புற மக்கள்தொகை குறைந்து வந்த ஒரு பொதுவான நிகழ்வுப்போக்கின் பாகமாக இருந்தது. பெட்ரோகிராட்டில் 1917இல் 2.5 மில்லியனாக இருந்த மக்கள் தொகை, 1920 வாக்கில் வெறும் 722,000 மக்களாக விடப்பட்டது, இது ஒரு அரை-நூற்றாண்டுக்கு முன்னர் அந்நகரில் வாழ்ந்த அதே அளவிலான எண்ணிக்கையாகும். பெப்ரவரி 1917 மற்றும் 1920 இறுதிக்கு இடையே மாஸ்கோவின் மக்கள்தொகை இரண்டு மில்லியனில் இருந்து வெறும் ஒரு மில்லியனுக்கு சற்று அதிகமாக வீழ்ச்சி கண்டது, இது 1897இன் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டதையும் விட சற்று குறைந்த எண்ணிக்கையாகும். இந்த அழிவுகரமான நிகழ்வுப்போக்கில் பல காரணிகள் பங்களிப்பு செய்தன, அதில் மிக முக்கியமானதில் நோயும் ஒன்றாகும். பத்து ஆயிரக் கணக்கான மக்கள் காலரா, சளிக் காய்ச்சல், டைபஸ் (typhus) மற்றும் தொண்டைக்கரப்பான் போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டார்கள். 1917இல் ஆயிரத்திற்கு 23.7 என்றிருந்த மாஸ்கோ இறப்பு விகிதம், 1920இல் 45.4 ஆக அதிகரித்தது. ஏகாதிபத்திய-ஆதரவிலான வெண்படையினருடன் சண்டையிட புதிதாக-உருவாக்கப்பட்ட செம்படை இராணுவத்திற்கு துருப்புகளின் அவசியம் அதிகளவில் ஏற்பட்டதும், மக்கள்தொகை குறைந்தமை மற்றும் தொழில்துறை மூடல்களில் இருந்த மற்றொரு பிரதான காரணியாக இருந்தது. செம்படையின் ஒன்றுதிரட்டல்கள், 1918 மற்றும் 1920க்கு இடையே ஒரு அரை-மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றி இருந்தது. இந்த பேரழிவுகரமான சமுதாய-நிலையின் தாக்கம் பொருளாதாரரீதியில் மட்டுமல்ல, மாறாக அரசியல்ரீதியாகவும் உணரப்பட்டது. செம்படை அதன் வெற்றிகளுக்கு, பெரிதும், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் வர்க்க-நனவார்ந்த பிரிவுகளின் அர்பணிப்பு மற்றும் ஈடுபாட்டை சார்ந்திருந்தது. தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் சிதைவில், துல்லியமாக 1917இன் புரட்சிகர போராட்டங்களிலும், தொழிற்சாலை குழுக்களிலும் மற்றும் ஏனைய கட்சி-தலைமையிலான அமைப்புகளிலும் முக்கிய பங்கு வகித்திருந்த அந்த தொழிலாளர்களின் இழப்பும் உள்ளடங்கி இருந்தது. குறைந்தபட்சம் சோவியத்துக்களிலும் மற்றும் பின்னர் அரசியலமைப்பு நாடாளுமன்ற தேர்தல்களிலும் போல்ஷிவிக்குகளுக்கு வாக்களித்திருந்தனர் என்றரீதியில், எண்ணிக்கை-அளவில் தொழிலாளர்களின் கணிசமான பகுதியினர் உள்நாட்டு போரின் தேவைகளால் தொழில்துறை இருப்பிடங்களிலிருந்து வெளியேறி இருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அனுபவித்த இழப்புகள் மலைப்பூட்டுவதாக இருந்தன. செம்படையில் சேவையாற்றிய 500,000 கம்யூனிஸ்டுகளில் 200,000 பேர் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக 1919இன் இலையுதிர் காலத்தில், பிரதான வெற்றிகளின் விளைவாக சோவியத் அரசாங்கத்தின் இராணுவ நிலைப்பாடு மேம்படுத்தப்பட்டதற்கு பின்னர், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புதிய உறுப்பினர்களின் உள்வரவின் மீது கவனத்தைக் குவிப்பதன் மூலமாக புரட்சிகர தோழர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அத்தகைய அழிவார்ந்த இறப்புவிகிதங்களின் அரசியல் தாக்கங்களைச் சரியாக கணிக்க முடியும். ஆகஸ்ட் 1919 மற்றும் மார்ச் 1920க்கு இடையே, கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 150,000இல் இருந்து 600,000ஆக அதிகரித்தது. புதிதாக உள்ளெடுக்கப்பட்டவர்களின் திறமை, பொதுவாக, இழந்தவர்களினதை விட பெரிதும் குறைவாக இருந்தது. உள்நாட்டு போர் முடிந்தபோது, சோவியத் அரசாங்கம் மற்றும் ஆளும் கட்சியின் சமூக மற்றும் அரசியல் அடித்தளம் கணிசமான அளவுக்கு மாற்றப்பட்டிருந்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" எதனை அது அடித்தளமாக கொண்டிருந்ததோ அந்த பாட்டாளி வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவை இழந்திருந்தது. மேலும் அந்த "முன்னணி கட்சி", நீண்டகால அனுபவத்தின் பலத்தால், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு நிஜமான அரசியல் முன்னணிப்படையில் பங்குவகித்தவர்களில் ஒரு பெரும் பிரிவை இழந்திருந்தது. அனைத்திற்கும் மேலாக, போல்ஷிவிக் கட்சியின் உண்மையான சமூக சேர்க்கை ஓர் அடிப்படை மாற்றத்திற்கு உள்ளானது. பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கைக்கு மாறாக, அவர்களின் சமூக தோற்றுவாய் அலுவலகங்களில் பணிபுரிந்தவர்கள் என வர்ணிக்கப்பட்ட, உறுப்பினர்களின் சதவீதம் கணிசமான அளவுக்கு அதிகரித்திருந்தது. சீகெல்பௌம், கட்சி மற்றும் அரசு அமைப்புகளின் விவகாரங்களில் இத்தகைய "கீழ் மத்தியதர அடுக்குகள்" (lower middle strata), அல்லது குட்டி முதலாளித்துவத்தின், அதிகரித்துவந்த முக்கியத்துவத்தின் மீது கவனத்தைக் கொண்டு செல்கிறார். இந்த கீழ் மத்தியதர அடுக்குகள் இவ்விதத்தில் வெற்றிகரமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சிக்குள் தங்களைத்தாங்களே இணைத்துக் கொண்டது. புரட்சிகர நிலையின் சமூக சேர்க்கை பெரிதும் பன்முகத்தன்மையில் இருந்ததுடன், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்ததையும் விட குறைந்த பாட்டாளிகளைக் கொண்டதாக இருந்தது என்பதே இறுதிவிளைவாகும். நிஜமான புரட்சிகர திட்டத்திற்கு அன்னியப்பட்ட ஒரு குறிப்பிட்ட உளவியலை அவர்கள் கொண்டிருந்தார்களோ இல்லையோ, ஆனால் அரசின் அன்றாட செயல்பாடுகளில் இத்தகைய "அன்னியப்பட்ட உட்கூறுகள்" என்ன தாக்கத்தைக் கொண்டிருந்தன என்பது முற்றிலும் தெளிவாக இருந்தது.12 போல்ஷிவிக் கட்சியின் குணாம்சம், காலாகாலமாக இருந்த தொழிலாள வர்க்க காரியாளர்களின் இழப்பால் மற்றும் பத்து ஆயிரக் கணக்கான அனுபவமற்ற மற்றும் அரசியல்ரீதியாக-கேள்விக்குட்படுத்த வேண்டிய நியமனங்களாக இருந்தவர்களின் உள்வரவால் மட்டும் மாற்றப்படவில்லை. புரட்சி மற்றும் உள்நாட்டு போரின் ஆண்டுகளில் உயிர்பிழைத்திருந்த பழைய காரியாளர்கள் மத்தியிலிருந்தே, (எதிர்ப்பில் இணைந்திருந்த ட்ரொட்ஸ்கியின் மிக நெருங்கிய அரசியல் கூட்டாளி கிறிஸ்தியான் ராகோவ்ஸ்கியால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை பிரயோகத்தை எடுத்து கூறுவதானால்) அதிகாரத்திற்கான தொழில்ரீதியிலான தேவைகள்" முன்கணிக்கவியலாதவாறு மிக அதிக எண்ணிக்கையில் வந்தன. மக்கள்தொகையில் ஒரு பாரிய பெரும்பகுதி கல்வியறிவற்றும் மற்றும் வரம்புக்குட்பட்ட தொழில்நுட்ப திறமைகளுடனும் இருந்த ஒரு பின்தங்கிய நாட்டில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கட்சி உறுப்பினர்களே மேலாண்மை மற்றும் நிர்வாக பொறுப்புகளுக்குள் இழுக்கப்பட்டார்கள். எண்ணிக்கையில்லா மற்றும் முன்பைவிட விரிவடைந்துவந்த அரசு முகமைகளும் மற்றும் கட்சி அமைப்புகளும் ஏதோவொரு வித மேலாண்மை திறன்களைக் கொண்டிருந்த காரியாளர்களின் சேவைகளைப் பெற, ஒருவருக்கொருவரை போட்டியிடச் செய்தது. இவ்விதத்தில் கட்சி காரியாளர்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவு அதிகாரத்துவமயமாக்கல் நிகழ்வுபோக்கினுள் இழுத்துச்செல்லப்பட்டிருந்தது. பொருளாதார குழப்பங்கள் மற்றும் கடுமையான வறுமைக்கு இடையே, அரசின் மற்றும் கட்சியின் அமைப்புகள் மற்றும் முகமைகளுக்குள் இருந்த பதவிகள், தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்பிற்கு சில சிறிய நடவடிக்கையை வழங்கின. வேலையிடத்தில் அன்றாடம் சுமாரான உணவு கிடைப்பதற்கான வாய்ப்பிருந்ததே தனிச்சிறப்பு சலுகையாக இருந்தது. சிறிய ஆனால் முக்கியமான அனைத்துவிதமான வழிகளிலும், ஓர் அதிகாரத்துவ ஜாதி, குறிப்பிட்ட சமூக நலன்களுடன், படிப்படியாக வடிவமெடுத்தது. புதிய பொருளாதார கொள்கையின் தாக்கம் சோவியத் அரசாங்கம் 1921இல் புதிய பொருளாதார கொள்கையை (NEP) அறிமுகப்படுத்தியது. ரஷ்யாவில் ஒழுங்கமைந்த பொருளாதார நடவடிக்கையின் அடித்தளங்களை மீட்டமைப்பதற்காக அது ஒரு முதலாளித்துவ சந்தையின் புதுப்பிப்பை ஊக்குவித்தது. தனிமைப்படுத்தப்பட்ட சோவியத் அரசு எதிர்கொண்டிருந்த சீரழிந்த பொருளாதார நிலைமைக்கு ஒரு அவசிய விடையிறுப்பாக அது இருந்தபோதிலும் கூட, NEP, ஆளும் கட்சிக்குள் அரசியல் சீரழிவின் நிகழ்வுபோக்கை தீவிரப்படுத்தியது. அரசு மற்றும் கட்சியின் பாட்டாளி வர்க்க அடித்தளம் வேகமாக பலவீனமடைந்து கொண்டிருந்த உண்மையுடன் சேர்ந்து, சோவியத் ரஷ்யாவுக்குள் முதலாளித்துவ போக்குகளின் வளர்ச்சிக்கு NEPஆல் அளிக்கப்பட்ட ஊக்கம், அபாயகரமான அரசியல் விளைவுகளை பெறுவதோடு பிணைந்திருந்தது. போல்ஷிவிக் புரட்சியை இயற்கை பிரளயமாக பார்த்து வந்த சமூக உட்கூறுகளுக்குள் புதிய பொருளாதார கொள்கை புதிய ஜீவனை பாய்ச்சியது. வியாபாரிகளும் வர்த்தகர்களும் மீள்-எழுச்சி பெற்றனர், 1922 வாக்கில் மாஸ்கோவில் மீண்டுமொருமுறை ஒரு பங்குச்சந்தை செயல்படத் தொடங்கியது. சமூகச் சூழலோ சமத்துவமின்மையை இன்னும் அதிகமாக சகித்துக் கொண்டிருப்பதாக மாறியது, ஒரு குறிப்பிட்ட அறநெறி மற்றும் அரசியல் வீழ்ச்சியைப் பிரதிபலித்த மனோபாவங்கள் கட்சி உறுப்பினர்களுக்குள், குறிப்பாக அதிகாரத்துவத்தின் மேல்மட்ட பதவிகளில் செயல்பட்டு வந்தவர்களிடையே, வெளிப்பாட்டைக் கண்டது. புதிய பொருளாதார கொள்கை, மிகத் தெளிவாக தேசியவாத உணர்வுகளின் ஒரு புத்துயிரூட்டலுக்கு பங்களிப்பு செய்தது. அக்டோபர் புரட்சி சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் வரலாறில் ஒரு மிகப் பிரமாண்ட நிகழ்வாகும். ஆனால் அது ரஷ்ய வரலாற்றிலும் ஒரு மாற்றத்திற்குரிய அத்தியாயமாக இருந்தது. சமூக மறுகட்டுமானத்தின் ஒரு சகாப்தகால செயல்திட்டத்தில் மில்லியன் கணக்கான மக்களை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை, அந்த புரட்சி நடவடிக்கைக்குள் இறங்க எழுப்பிவிட்டது. அந்த மேலெழுச்சி அன்றாட வாழ்வின் எண்ணிலடங்கா அம்சங்களை மாற்றியமைத்தது. கட்சியின் பல உறுப்பினர்களுக்கு குறிப்பாக போல்ஷிவிக் ஆட்சி யாருக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருந்ததோ அந்த கீழ்மட்ட மத்திய படிநிலையிலிருந்து வந்த புதிய நியமனங்களுக்கு அக்டோபர் புரட்சி ஒரு மகத்தான தேசிய புத்துயிரூட்டலின் தொடக்கமாக தென்பட்டது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தினது தோல்விகளின் பின்புலத்திற்கு எதிராக உலக சோசலிச புரட்சியின் தொலைநோக்கு பார்வையையும் விட, இந்த சக்திகளுக்கு தேசிய சோவியத் பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் நடைமுறை பணிகள் மிகமிக யதார்த்தமானதாக தெரிந்தன. கட்சிக்குள் அரசியல் வாழ்வின் தரம் சீரழிந்தது. 1920இல் இருந்தே முன்னணி போல்ஷிவிக்குகள் அரசு எந்திரம் அதிகாரத்துவமயமாவது குறித்து அவர்களின் கவலையை பலமுறை எழுப்பினர். உண்மையில் லெனின் சோவியத் ரஷ்யாவை "அதிகாரத்துவ திருப்பத்துடன் கூடிய தொழிலாளர்கள் அரசு" என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த கவலைகளுக்கு இடையிலும், அதிகாரத்துவமயமாக்கல் நிகழ்வுபோக்கானது ரஷ்யாவின் பின்தங்கியநிலைமையுடன் இணைந்தவிதத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த புறநிலை போக்குகளால் பேணி வளர்க்கப்பட்டது, அத்துடன் சமூக வாழ்வின் அனைத்து துறைகளுக்குள்ளும் அதிகாரத்துவம் ஊடுருவிய போது கட்சியே கூட தன்னைத்தானே காத்துக்கொள்ள முடியவில்லை. அரசியல்ரீதியாக ஊக்கம்மிகுந்த தொழிலாள வர்க்கம் இல்லாததால், அதிகாரத்துவ மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் அணுகுமுறைகள் வேகமாக கட்சியின் விவகாரங்களுக்குள் பரவியது. இந்த நிகழ்வுபோக்கின் மிக பகிரங்கமான வெளிப்பாடாக, அதிகரித்துவந்த ஸ்ராலினின் செல்வாக்கு இருந்தது, பொதுச் செயலாளராக அவரது பிரதான பொறுப்புகளில், முக்கிய கட்சி மற்றும் அரசு பதவிகளில் நியமிக்க தகுந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதும் உள்ளடங்கி இருந்தது. நியமன அதிகாரத்தை ஸ்ராலின், அவருக்கான ஆதரவாளர்களது ஒரு வலையமைப்பை கட்டமைக்க பயன்படுத்திய நிலையில், மேலும் மேலும், அது கட்சி ஜனநாயகத்தின் மரபார்ந்த வடிவங்களை மதிப்பிழக்கச் செய்ததோடு, அவற்றை பிரதியீடும் செய்தன. மார்ச் 1922இல், பதினோராவது கட்சி மாநாட்டில், அரசை நிர்வகித்த அதிகாரத்துவத்தால் கட்சி மூழ்கடிக்கப்படும் ஆபத்தில் இருந்ததாக லெனின் எச்சரித்தார். அதன்பின்னர் விரைவிலேயே அவர் பக்கவாத நோயில் முடங்கிப்போனார், அது பல மாதங்களுக்கு அவரை அரசியல் நடவடிக்கையிலிருந்து வெளியேற்றியது. 1922 இலையுதிர் காலத்தில் அவர் வேலைக்குத் திரும்பிய போது, கட்சிக்குள் இருந்த சூழ்நிலை எந்தளவுக்கு சீரழிந்திருந்தது என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிகாரத்துவ சீரழிவின் அந்த நிகழ்வுப்போக்கில், அவர் ஸ்ராலினையே முக்கிய நபராக அடையாளங்கண்டார். அவர் அரசியல்ரீதியாக-செயலூக்கத்துடன் இருந்த அந்த கடைசி மாதங்களின் வாழ்வில், லெனினால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் ஆவணங்களிலிருந்து, அவர் ஏப்ரல் 1923இல் நடைபெறவிருந்த இருபதாவது கட்சி மாநாட்டில் ஸ்ராலினுடன் ஒரு தீர்க்கமான மோதலுக்கு தயாரிப்பு செய்திருந்தார் என்பது தெளிவாக உள்ளது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஸ்ராலினை நீக்க வேண்டுமென அழைப்புவிடுத்து லெனினால் எழுதப்பட்ட பிரபல சாசனம், அத்துடன் அவருடனான அனைத்து தனிப்பட்ட உறவுகளையும் முறித்துக் கொள்ள அச்சுறுத்தி லெனின் ஸ்ராலினுக்கு எழுதிய கடிதம் ஆகியவை, கட்சி மாநாட்டில் லெனின் சமர்ப்பிக்க இருந்த அரசியல் தஸ்தாவேஜூகளின் பாகமாக இருந்தன. மார்ச் 1923இல் லெனினை பாதித்த கடுமையான பக்கவாத நோய், ஸ்ராலினின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றியது. லெனினின் கடைசிக்கால இயலாமையை பின்தொடர்ந்து வந்த மாதங்களில், ஸ்ராலின், சினோவியேவ் மற்றும் காமெனேவ்வின் "மூவரணியால்" (triumvirate) நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகாரத்துவ அணுகுமுறைகளுக்கு எதிர்ப்பு அதிகரித்தது. புதிய பொருளாதார கொள்கையின் விளைவுகள் மீது ஆழமடைந்துவந்த கவலைகளால் அரசியல் பதட்டங்கள் தீவிரமடைந்தன, இது குறிப்பாக, 1923 வசந்தகாலத்தில் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, தொழில்துறை மற்றும் விவசாய விலைகளுக்கு இடையில் மோசமடைந்துவந்த சமச்சீரற்றதன்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளில் தொடர்ந்துவந்த சீரழிவுகளில் வெளிப்பாட்டைக் கண்டது. இடது எதிர்ப்பு லெனின் இனி அரசியல் நடவடிக்கைக்குத் திரும்ப முடியாதென்பது தெளிவானதும், உள்கட்சி ஜனநாயகம் நசுக்கப்படுவதற்கு எதிராக பேசவேண்டிய அழுத்தத்தின் கீழ் ட்ரொட்ஸ்கி வந்தார். அக்டோபர் 8, 1923 இல், ட்ரொட்ஸ்கி மத்திய குழுவுக்கு ஒரு கடிதம் எழுதினார், அது பொருளாதார கொள்கையின் தீவிர பலவீனத்தின் மீது கவனத்தைச் செலுத்த அழைப்புவிடுத்தது, அத்துடன் கட்சி வாழ்வில் இருந்த அதிகாரத்துவமயமாக்கலை விமர்சித்திருந்தது. அதற்கடுத்து ஒரு வாரம் கழித்து, நாற்பத்தி-ஆறு பிரதான கட்சி உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு "பிரகடனத்தில்" அவரது விமர்சனங்கள் ஆமோதிக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் இடது எதிர்ப்பினது அரசியல் போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தன. ஸ்ராலினிசம், மார்க்சிச மற்றும் போல்ஷிவிச சித்தாந்தத்திலிருந்து இயல்பாகவே வளர்ந்தது என்ற கட்டுக்கதை வரலாற்று ஆதாரத்திற்கு முரண்பாடாக உள்ளது. அங்கே பத்தாயிரக் கணக்கான ஆவணங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பல தசாப்தங்களாக சோவியத் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தன, அவற்றில் மார்க்சிசத்தின் அபிவிருத்தி ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் வெளிப்பாட்டைக் கண்டிருந்தது. எதிர்ப்பின் தொலைநோக்குந்தன்மை "46 பேரின் பிரகடனத்தில்" வெளிப்பாட்டைக் கண்டது, அது கொள்கைகள் மற்றும் தலைமையின் அணுகுமுறையில் ஒரு தீவிர மாற்றம் இல்லையானால், சோவியத் ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடியும் மற்றும் கட்சியில் கன்னை சர்வாதிகாரத்தின் நெருக்கடியும், ரஷ்யா மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (RCP) தொழிலாளர்களது சர்வாதிகாரத்திற்கு பலத்த அடியாக இருக்கும். அதன் தோள்களில் இத்தகைய சுமையைக் கொண்டிருக்கும் ரஷ்ய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் மற்றும் அதன் RCP தலைமையும், பாட்டாளி வர்க்க போராட்டத்தின் ஒட்டுமொத்த முன்னணியையும் தோல்வியடையச் செய்யும் சாத்தியக்கூறை தவிர, வரவிருக்கின்ற புதிய உலகந்தழுவிய கொந்தளிப்பு கட்டத்திற்குள் நுழைய முடியாது," என்று எச்சரித்தது.13 கட்சிக்குள் அதிகாரத்துவவாதத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கை மீதான கருத்துவேறுபாடுகளே, 1923இல், எதிர்த்தரப்பினரின் உருவாக்கத்திற்கான விடயங்களாக இருந்தன. ஆனால் கட்சிக்குள் போராட்டம் நடத்தத்தொடங்கிய பின்னர் தான், வேலைத்திட்டம் மீதான முரண்பட்ட போக்குகளது கருத்துவேறுபாடுகளின் முழு ஆழமும், மற்றும், மிகவும் தீவிரமாக, அவை எதனை அடித்தளத்தில் கொண்டிருந்தனவோ அந்த எதிர்விரோத சமூக சக்திகளும் பகிரங்கமாக மேலெழுந்தன. முதலில், ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களும் மற்றும் 46 பேரின் தளமும் அந்த மூவரணியை நிலைகுலைத்தபோது, அது சில நேர்மையற்ற அரசியல் விட்டுக்கொடுப்புகளை வழங்க முன்வந்தது. ஆனால் பின்னர் அது அதன் நரம்புகளை மீட்டமைத்து, எதிர்தாக்குதல் நடத்தியது, அத்துடன் புதிய பொருளாதார கொள்கையின் கட்டமைப்புக்குள், சோவியத் ஆட்சியின் புதிய ஆதரவாளர் அடித்தளமாக மாறியிருந்த சமூக சக்திகளிடமும் முறையிட்டது. இதுதான், 1924 இறுதியில் ஸ்ராலினால் வெளிப்படுத்தப்பட்ட "தனியொரு நாட்டில் சோசலிச" தத்துவத்தின் அர்த்தமாகும். போல்ஷிவிக் புரட்சி அடித்தளமாக கொண்டிருந்த அந்த சர்வதேச முன்னோக்கின் மீதான இந்த திருத்தல்களால் தூண்டுதல் பெறவிருந்த பிரதிபலிப்பை ஸ்ராலின் அனுமானித்திருந்தாரா, அல்லது ட்ரொட்ஸ்கி ஏன் அத்தகைய நீண்டகால முக்கியத்துவம் கொண்ட அவரது புதிய தத்துவத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதையாவது அவர் புரிந்துகொண்டிருந்தாரா, என்பது சந்தேகத்திற்குரியதே. ஆனால், அங்கே கட்சியினது முன்னோக்கில் இத்தகைய ஒரு தேசியவாத மீள் கொள்கைமுறை வகுப்பை வரவேற்க கட்சிக்குள் ஒரு ஆதரவாளர் அடித்தளம் இருந்தது என்பதை ஸ்ராலின் நிச்சயமாக ஏற்கனவே உணர்ந்திருக்க வேண்டும், இங்கே பரந்த மக்களைக் குறித்து குறிப்பிட வேண்டியதே இல்லை. தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியெழுப்ப முடியுமென அறிவித்து, ஸ்ராலின் பத்தாயிரக் கணக்கான கட்சி அதிகாரத்துவவாதிகளின் மத்தியில், பெரிதும் பொதுவாக மாறியிருந்த அந்த நடைமுறைகள் மற்றும் கண்ணோட்டங்களை உறுதிப்படுத்திக்கொண்டு வந்தார். தனியொரு நாட்டில் சோசலிசம் தனியொரு நாட்டில் சோசலிசம்" தத்துவம் குறிப்பாக அதிகரித்துவந்த அதிகாரத்துவ அடுக்குகளுக்கு அழைப்புவிட்டது, அவை "தேசியவாத" சோவியத் பொருளாதாரத்தின் அபிவிருத்தியுடன் அவற்றின் சொந்த பொருளாதாய நலன்களை அடையாளங்காண, அதிகரித்துவந்த நனவுடன் முனைந்து வந்தன. ஆனால் அதிகாரத்துவவாதிகள் மட்டுமே இந்த முன்னோக்கிற்கு விடையிறுப்புக் காட்டவில்லை. தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளுக்குள் இருந்த பொது அரசியல் களைப்பு, அக்டோபர் புரட்சியின் சர்வதேசவாத அபிலாஷைகளிலிருந்து பின்வாங்குவதில் தன்னைத்தானே வெளிப்படுத்தியது. குறிப்பாக 1923 அக்டோபரில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து சோவியத் சமூகத்தின் நெருக்கடிக்கு ஒரு தேசியத் தீர்வு மீதான வாக்குறுதி, சுற்றிவளைக்கப்பட்ட புரட்சிக்கு ஒரு புதிய ஜீவநாடியை அளிப்பதாக பார்க்கப்பட்டது. அக்டோபர் புரட்சி வீண்போகவில்லை என்ற நம்பிக்கையை கொண்டு வர, சோவியத் மக்களுக்கு ஒரு காரணவிளக்கத்தை அளிப்பதில் "தனியொரு நாட்டில் சோசலிசம்" தத்துவம் மதிப்பார்ந்த செயல்பாடாக சேவை செய்தது என்றும், மற்றும் சர்வதேச புரட்சிகர இயக்கத்தின் தலைவிதியைச் சாராமல், ரஷ்யாவில் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறை மறுத்தவர்கள் தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தால் ஆர்வம்குன்றிப்போனார்கள் என்றும், தொழிலாளர்கள் அவர்களின் சொந்த முயற்சியினூடாக, சோசலிசத்தை வெற்றிகரமாக மாற்றி வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாக இருந்தது என்றும் ஸ்ராலின், அவரது மிகவும் பாரபட்சமற்ற தருணங்கள் ஒன்றில், குறிப்பிட்டார். இந்த வகையான வாதங்களுக்கு ட்ரொட்ஸ்கி 1928இல் பதிலளித்தார்: தனியொரு நாட்டில் சோசலிச தத்துவம் தவிர்க்கவியலாமல் சிக்கல்களைக் குறைமதிப்பீடு செய்ய இட்டுச் செல்கிறது, அந்த சிக்கல்களைக் கடந்து சென்று, கைப்பற்றிய வெற்றிகளை இன்னும் அதிகரிக்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் ஏற்கனவே 90 சதவீதம் சோசலிசம் யதார்த்தமாகிவிட்டதான" ஸ்ராலினின் அறிக்கையை விட மேலதிகமாக, சோசலிச-விரோத மற்றும் எதிர்புரட்சிகர கருத்துக்களை யாரும் காண முடியாது. ... புரட்சியின் பதினொன்றாவது ஆண்டில் தங்களைச் சுற்றி வறுமை, அவலம், வேலைவாய்ப்பின்மை, ரொட்டிக்காக காத்திருக்கும் நீண்ட வரிசைகள், கல்வியறிவின்மை, வீடற்ற குழந்தைகள், குடிப்பழக்கம், மற்றும் விபச்சாரம் ஆகியவை குறையாமல் இருப்பதைக் காணும், தொழிலாளர்கள், விவசாய கூலியாட்கள், மற்றும் ஏழை விவசாயிகளை வலுப்படுத்துவதற்கு தேனொழுகும் பொய்கள் அல்ல, கசப்பான உண்மைகளே அவசியமாகும். 90 சதவீத சோசலிசத்தை அடைந்துவிட்டோம் என்று அவர்களிடம் கதை அளப்பதற்கு மாறாக, நம்முடைய பொருளாதார மட்டம், நம்முடைய சமூக மற்றும் கலாச்சார நிலைமைகள், அண்ணளவாக இன்றும் முதலாளித்துவத்திற்கு மிக அண்மித்ததாகவே இருக்கிறது, மற்றும் சோசலிசத்தை விட ஒரு பின்தங்கிய மற்றும் கலாச்சாரமற்ற முதலாளித்துவமாக இருக்கிறது என்று அவர்களுக்கு கூற வேண்டும். மிகவும் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே நிஜமான சோசலிச கட்டுமான பாதைக்குள் நாம் நுழைய முடியும்; இதற்காக நாம் இரண்டு நெம்புகோல்களையும் அதாவது நம்முடைய உள்நாட்டு பொருளாதார முயற்சிகள் எனும் சிறிய நெம்புகோல் மற்றும் சர்வதேச பாட்டாளி வர்க்க போராட்டமெனும் நீண்ட நெம்புகோல் இரண்டையும் பயன்படுத்துவது அவசியமாகும் என்று அவர்களுக்கு நாம் கூற வேண்டும்.14 உலக சோசலிச புரட்சியின் அபிவிருத்தியின் மீது சோவியத் ஒன்றியம் பிரிக்கவியலாதவாறு சார்ந்திருப்பதன் மீதும், மற்றும் அதற்கு நேர்மாறாக இருந்த, தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதன் சாத்தியமின்மை மீதும் வைக்கப்பட்ட வலியுறுத்தல், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பால் நடத்தப்பட்ட போராட்டத்தின் தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட அடித்தளத்தை உள்ளடக்கி இருந்தது. இந்த மைய ஒருங்கிணைந்த கருத்துருவிலிருந்து இடது எதிர்ப்பின் தனித்தனியான உட்கூறுகளை அதாவது கட்சி ஜனநாயகத்தின் மறுஸ்தாபிதம், திட்டமிடலின் அபிவிருத்தி, தொழில்துறையைப் பலப்படுத்துதல் போன்றவற்றை பிரித்துப் பார்த்து, அதன் வேலைத்திட்டத்தை புரிந்துகொள்வது சாத்தியமே அல்ல. முற்றிலும் ட்ரொட்ஸ்கிக்கு அனுதாபமற்ற வரலாற்றாளர்கள் உட்பட, பெரும்பாலான வரலாற்றாளர்கள், உலக புரட்சிக்கான அவரது பொறுப்புறுதியை அவரது ஒட்டுமொத்த வேலைத்திட்டத்திலேயே மிகப் பலவீனமான அம்சமாக பார்க்கும் தரப்பில் சாய்ந்தார்கள். மேலும், இதனால், அவர்மீது அனுதாபம் கொண்ட வரலாற்றாளர்களும் கூட ஸ்ராலினிசத்திற்கான அவரது எதிர்ப்பை ஏதோ நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனையாக கையாள முனைந்தார்கள். உலகப் புரட்சியெனும் பொருந்தாத கற்பனையுருவைப் பின்பற்றுவதன் மூலமாக, ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்திற்கான அவரது எதிர்ப்பை ஒரு பாதுகாப்பான அடித்தளத்தில் நங்கூரமிடத் தவறியதாக அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த விமர்சனம், 1920கள் மற்றும் 1930களின் சர்வதேச தொழிலாளர்கள் இயக்கத்தில் நிலவிய புரட்சிகர சாத்தியத்திறனை படுமோசமாக குறைமதிப்பீடு செய்வதுடன், உலக புரட்சிக்கான அபிவிருத்தியின் மீது ஸ்ராலினிசத்தின் நிஜமான படுபயங்கர தாக்கத்தை ஏற்க தவறுகிறது. ஸ்ராலினிஸ்டுகளால் நடத்தப்பட்ட மூன்றாம் அகிலத்தின் (Comintern) அரசியல் பேரழிவு அதாவது, அதை சோவியத் அதிகாரத்துவத்தின் ஒரு தொங்குதசையாக மாற்றியமை அனைத்திற்கும் மேலாக 1926இல் பிரிட்டனில், 1927இல் சீனாவில், 1933இல் ஜேர்மனியில் மற்றும் 1936-37இல் ஸ்பெயினில், தொழிலாள வர்க்கம் அனுபவித்த கடுமையான தோல்விகளுக்கு பிரதான காரணமாக இருந்தது. இந்த தோல்விகள், அதற்குப் பின்னர், சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த நிகழ்வுகளின் போக்கை ஆழமாக பாதித்தன. நேர்மையான மனசாட்சியுள்ள சமகாலத்திய வரலாற்றாளர்கள் மத்தியிலும் கூட, ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பின், தீவிர முக்கியத்துவம் அளிக்க முழு தகுதியுள்ள சர்வதேச புரட்சிகர மூலோபாயம் குறித்த ஆய்வுகளில் இந்த தோல்விகள் என்ன இடத்தைப் பெறுகின்றன? பிற்போக்கான அரசியல் சூழல் மற்றும் தேங்கிய புத்திஜீவித கலாச்சாரமே, கல்வித்துறை மீது ஒரு வஞ்சகமான செல்வாக்கைச் செலுத்துகிறது. அவற்றின் துடிப்பார்ந்த நன்னம்பிக்கைவாதம் குறைவாகவே மிஞ்சியிருக்கிறது. முற்றிலுமாக நிராகரிக்காதுவிட்டாலும், சோசலிச புரட்சிக்கான ஒரு சாத்தியம் பற்றிய ஐயுறவே, சர்வதேச தொழிலாளர்கள் இயக்கத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த மட்டத்தின் படுமோசமான வீழ்ச்சிக்கு ஒரு பதிலாக உள்ளது. சமகாலத்திய வரலாற்றாளர்கள், ஒருகாலத்தில் தங்களைத்தாங்களே சோசலிசத்திற்கு அனுதாபிகளாக கருதியவர்களே கூட அந்த ஒரேயொரு காரணத்திற்காக ரஷ்ய புரட்சியை ஆராய உள்ளிழுக்கப்பட்டவர்கள் கூட இப்போது மார்க்சிஸ்டுகளின் தலைமையில் மற்றும் புரட்சிகர சர்வதேசியவாத அபிலாஷைகளால் சித்தரிக்கப்பட்ட ஒரு பாரிய தொழிலாளர் இயக்கத்தை கற்பனை செய்தும் பார்க்க சாத்தியமின்றி இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களின் தற்போதைய அவநம்பிக்கைவாதம் (pessimism) ஒரு பின்னோக்கிய குணாம்சத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்தகால புரட்சிகளைக் குறித்த அவர்களின் மதிப்பீடுகளிலிருந்து எதிர்காலம் குறித்த அவர்களின் தற்போதைய அவநம்பிக்கை உணர்வை, அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இறுதியில், இது தான் நம்மை இடது எதிர்ப்பின் நிகழ்கால முக்கியத்துவத்தை, சமகாலத்திய வரலாற்று ஆய்வுக்கான ஒரு விடயமாக கொண்டு வருகிறது. இது, ஆழ்ந்த தீவிர ஆராய்ச்சியாளர்களுக்கு, வளமான மற்றும் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இருக்கிறதென நான் கருதுகிறேன். சமீபத்தில் வரையில் இடது எதிர்ப்பைக் குறித்த ஒரு திட்டமிட்ட ஆய்வைப் புரிந்துகொள்ள அங்கே எந்த சாத்தியக்கூறும் இருக்கவில்லை. கொடுங்கோல் சர்வாதிகாரத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பின் இந்த அசாதாரண இயக்கத்தைக் குறித்து ஒப்பீட்டளவில் மிகச் சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் மிக முக்கிய அரசியல் போராட்டங்களில் ஒன்றான இது, நமது அறிவில் பெரிதும் வெறுமையாக இருப்பதே ஸ்ராலினிசத்தின் மரபியமாகும். சோவியத் அதிகாரத்துவம் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டதானது, அதன் அரசியல் எதிர்ப்பாளர்களை அவமதித்தது, குற்றகரமாக்கியது மற்றும் உடல்ரீதியாக அழித்தது ஆகியவற்றுடன் சேர்ந்திருந்தது. அந்த கொடூரம் வரலாற்று பொய்மைப்படுத்தலின் ஒரு பிரச்சாரத்துடன் சேர்ந்திருந்தது, அது ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட மகத்தான மார்க்சிச பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அனைத்து தடங்களையும் சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவிலிருந்து துடைத்தழிப்பதை அதன் நோக்கமாக கொண்டிருந்தது. இந்த வழியில் மட்டுந்தான், சோவியத் அதிகாரத்துவத்தால் ஸ்ராலினிசத்தை மார்க்சிசமாக பிழையாக அடையாளப்படுத்திக்காட்டி ஸ்தாபிக்க முடிந்தது. பாரிய பொய்களின் மாளிகைகளை தகர்ப்பதற்கான நிலைமைகள் இப்போது மேலெழுந்து வருகின்றன. ரஷ்யாவில் ஆவணக்களஞ்சியம் திறக்கப்பட்டமை, இதை சாத்தியமாக்கிய அரசியல் சூழல்கள் இருந்தபோதினும், இது சோவியத் ஆய்வுகளில் எதிர்கால மார்க்சிசத்திற்கான மிக ஆழமான புத்திஜீவித மற்றும் அரசியல் தாக்கங்களைக் கொண்டிருக்கும் என்பதோடு, ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஆவணங்களின் மற்றும் நீண்டகாலமாக மறைந்துகிடந்த கைப்பிரதிகளின் கண்டுபிடிப்புகளும், பிரசுரிப்புகளும் மற்றும் விமர்சனரீதியில் உள்ளீர்த்துக் கொள்வதும், மெதுவாக ஆனால் நிச்சயமாக, ரஷ்ய புரட்சியின் வரலாற்று அபிவிருத்தியைக் குறித்த மக்கள் நனவை மறுவடிவாக்கும். ஸ்ராலினிசத்திற்கு ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பால் முன்னெடுக்கப்பட்ட மார்க்சிச மாற்றீடை அங்கீகரிப்பது அங்கே அதிகரிக்கும். எதிர்ப்பில் இருந்த ஒரு சில முன்னணி நபர்களைப் பெயரிட வேண்டுமானால், ரகோவ்ஸ்கி, ப்ரியோப்ராஜென்ஸ்கி, பியாடாகோவ், ஜோஃப்பி, சோஸ்னோவ்ஸ்கி, எல்ட்சின், டெர்-வாகனியன், போகஸ்லாவ்ஸ்கி, விலென்ஸ்கி மற்றும் வோரொன்ஸ்கி போன்ற அறிவார்ந்த அரசியல் பிரபலங்கள் முக்கிய சுயசரிதைக்குரிய மனிதர்களாவார்கள்; மேலும், இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த அரசியல் மற்றும் புத்திஜீவித பிரபலங்களில் ஒருவரான ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை, புதிய மற்றும் அதிமுக்கிய தகவல்களின் வெளிச்சத்தில் மறுஆய்வு செய்யப்படும். மார்க்சிசமும் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான பாதையும், இந்த அதிமுக்கிய நிகழ்வுபோக்கிலிருந்துதான் புத்திஜீவித புத்துயிர்ப்பைப் பெறமுடியும். 1 Lecture delivered on October 25, 1995 at Glasgow University in Scotland. 2 Dmitri Volkogonov, Lenin: A New Biography (New York: The Free Press, 1994), p. 178. 3 Utopias in History, in Acts/Proceedings, 18th International Congress of Historical Sciences (Montreal, 1995), pp. 487489. 4 Dmitri Volkogonov, Stalin: Triumph and Tragedy (New York: Grove Weidenfeld, 1988), p. 254. 5 Ibid., pp. 255259. 6 Leszek Kolakowski, Main Currents of Marxism, Volume 3, The Breakdown (New York: Oxford University Press, 1978), p. 2. 7 Ibid., pp. 89 and p. 22. 8 Lars T. Lih, Oleg V. Naumov and Oleg V. Khlevniuk, ed., Stalins Letters to Molotov (New Haven: Yale University Press, 1995), p. 114. 9 Rosa Luxemburg, The Russian Revolution and Leninism or Marxism? (Ann Arbor: The University of Michigan Press, 1961), p. 28. 10 Ibid., pp. 7880. 11 Ibid., p. 80. 12 Lewis Siegelbaum, Soviet State and Society Between Revolutions, 19181929 (Cambridge: Cambridge University Press, 1992), pp. 6263. 13 Leon Trotsky, The Challenge of the Left Opposition 192325 (New York: Pathfinder Press, 1975), p. 450. 14 Leon Trotsky, The Third International After Lenin (New York: Pathfinder Press, 1996), pp. 8485. |