முன்னோக்கு

காஸா இனப்படுகொலையும் ஆரோன் புஷ்னெல்லின் மரணமும்: அரசியல் படிப்பினைகள் என்ன?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் பின்வரும் விரிவுரையை வழங்கினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

பிப்ரவரி 25, 2024 அன்று, 25 வயதான ஆரோன் புஷ்னெல், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பிற்பகல் 1:00  மணிக்கு சற்று முன்னதாக, அவர் தூதரகத்தை நெருங்கி வருகை தந்து, ஆரோன் ஒரு அறிக்கையை நேரலையாக ஒளிபரப்பில் வழங்கினார். அவர் பின்வருமாறு அதில் கூறினார்:

நான் அமெரிக்க விமானப்படையின் கடமையிலுள்ள ஒரு உறுப்பினராக இருக்கிறேன். நான் இனிமேல் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். ஆனால் மக்கள் தங்கள் காலனித்துவவாதிகளின் கைகளில், பாலஸ்தீனத்தில் மக்கள் அனுபவித்து வரும் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் - இது ஒன்றும் கடுமையானது அல்ல. இதைத்தான் எங்கள் ஆளும் வர்க்கம் இயல்பானது என்று முடிவு செய்துள்ளது.

தூதரகத்திற்கு வந்தவுடன், ஆரோன் ஒரு தீப்பற்றி எரியக்கூடிய திரவத்தால் தன்னை நனைத்துக் கொண்டார், பின்னர் அதை அவர் பற்றவைத்தார். தீயில் எரிந்துகொண்டு “பாலஸ்தீனத்தை விடுதலை செய்” என்று முழக்கமிட்டார். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஒரு இரகசிய சேவை அதிகாரி, அந்த இளைஞனை நோக்கி துப்பாக்கியை நீட்டி, அவரை “தரையில் படுக்குமாறு” உத்தரவிட்டார். மற்றய அதிகாரிகள் வந்து தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். அதன் பின்னர் ஆரோன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏழு மணி நேரத்திற்குப் பிறகு இரவு 8:06 மணிக்கு தீக்காயங்களால் மரணித்தார்.

ஆரோன் புஷ்னெல்

எதிர்பார்த்தது போலவே, பைடென் நிர்வாகமானது தற்கொலை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. “கடவுள் நமது துருப்புகளை பாதுகாக்கட்டும்” என்ற வாசகத்துடன் ஒவ்வொரு உரையையும் முடிக்கும் ஜனாதிபதி பைடென், அமெரிக்க விமானப்படையின் ஒரு உறுப்பினரான ஆரோன் புஷ்னெல்லின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்து, ஒரு வார்த்தையைக் கூடக் கூறவில்லை.

பெரும்பாலும், இஸ்ரேலிய அரசின் கூட்டாளிகளும் சியோனிச-ஆதரவு ஊடக நிறுவனங்களும் அந்தச் சம்பவத்தைக் குறைத்துக் காட்டியதுடன், ஆரோன் எந்த அரசியல் அல்லது சமூக முக்கியத்துவமும் இல்லாத ஒரு நோய்வாய்ப்பட்ட தனிநபராக அவமதிக்கப்பட்டார்.

ஆனால் இது உலக மக்கள் தொகையின் மிகப் பெரிய பெரும்பான்மையினரின் விடையிறுப்பு அல்ல. கணக்கிலடங்கா மில்லியன் கணக்கானவர்கள் இந்நிகழ்வை ஒரு காணொளியாகவோ அல்லது புகைப்படமாகவோ பார்த்துள்ளனர். அது அதிர்ச்சியையும், துயரத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு கொடூரமான வழியிலான, ஒரு இளைஞனின் மரணமானது ஆரோக்கியமான மனித உணர்வுகளை ஆழமாக பாதிக்காமல் இருக்க முடியாது.

எவ்வாறிருப்பினும், ஆரோன் புஷ்னெல்லின் மரணத்தால் தூண்டிவிடப்பட்ட துயரமும், அவரது இலட்சியப் பின்பற்றலும் மற்றும் நேர்மைக்கான மரியாதையுமானது அவரது தற்கொலையை நியாயப்படுத்துவதற்கும் பாராட்டுவதற்கும் விரிவுபடுத்தப்படக்கூடாது. காஸா இனப்படுகொலைக்கும் மற்றும் மிகவும் பொதுவாக ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்கும் எதிரான அரசியல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு, “அதிதீவிர எதிர்ப்பு” (“extreme protest”) என்னும் பயனுள்ள ஒரு வடிவமாக சுய-அழிப்பு நடவடிக்கையைப் பரிந்துரைக்கவில்லை.

இப்போது ஆரோனின் தற்கொலையை ஆதரிப்பவர்கள், அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிப்பவர்களின் —கார்னெல் வெஸ்ட் (Cornel West) அவர்களில் ஒருவர் — முன்மாதிரியானது பொறுப்பற்றது மட்டும் அல்ல, அவைகள் காஸா இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான பரந்த போராட்டத்திற்கு எதிரான எதிர்ப்பின் மனச்சோர்வு மற்றும் அரசியல் நோக்குநிலை பிறழ்ச்சிக்கு பங்களிப்பு செய்து கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் மற்றும் அதை அடித்தளமாக கொண்டுள்ள முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிறுத்துவதற்கு, அவசியமான மில்லியன் கணக்கான மக்களின் அரசியல் நனவுடைய வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு எதிராக இவைகள் தனிப்பட்ட தியாகியின் பயனற்ற எதிர்ப்பு நடவடிக்கையை முன்வைக்கின்றன.

இந்தக் கருத்துக்கள் முழுவதும் இந்த விமர்சனத்தின் ஊடாக நான் விரிவுபடுத்துவேன். ஆனால் நான் முதலில் ஆரோனின் மரணத்தை அதன் பரந்த சமூகச் சூழலில் வைக்க விரும்புகிறேன்.

ஆரோனின் மரணத்தின் துல்லியமான சூழ்நிலைகளானது, நிச்சயமாக, விதிவிலக்கானவையாகும். ஆனால் தற்கொலை என்பது அமெரிக்காவில் மரணத்திற்கு ஒரு அசாதாரண காரணம் அல்ல. இது புறக்கணிக்கப்படக் கூடாத ஒரு முக்கியமான உண்மையாக இருக்கிறது.

2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இறப்புக்கான பதினொன்றாவது முக்கிய காரணியாக தற்கொலை இருந்துள்ளது. மொத்தம் 48,183 அமெரிக்கர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். 1.7 மில்லியன் தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன. குறிப்பிட்ட வயதினருக்கான தற்கொலை விகிதம் 100,000 பேருக்கு தோராயமாக 14 ஆக இருந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 132 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன, கடுமையான தனிப்பட்ட நெருக்கடி ஏற்பட்டதனால், ஒருவேளை தங்கள் உயிரை முடித்துக் கொண்ட சக மாணவர்கள், நண்பர்களைப் பற்றி இங்கே உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். 2021 ஆம் ஆண்டில் தற்கொலை இறப்புகளில் வெள்ளையர்களைச் சேர்ந்த ஆண்கள் 69 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர், அதே நேரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் 8.3 சதவீத தற்கொலை செய்தவர்களாக உள்ளனர். பெண்களின் தற்கொலைகளை விட ஆண்களின் தற்கொலைகள் நான்கு மடங்கு அதிகமாக இருக்கின்றன. அதிக தற்கொலை விகிதங்கள் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களிடையேயும், 75 முதல் 84 வயதுக்குட்பட்டவர்களிடையேயும் உள்ளன.

அமெரிக்காவில் தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான பிரிவினர் சிப்பாய்கள் மற்றும் முன்னாள் சிப்பாய்கள் ஆவர். படையினர் மத்தியில் தற்கொலைகளின் கணிசமான அதிகரிப்பானது, தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டுவரும் இந்த நாட்டுடன் தெளிவாக தொடர்புடையது.

2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், “தற்கொலை விகிதம் 2004-05, 2006-07 மற்றும் 2008-09 ஆண்டுகளில் முறையே 100,000 நபர்களில் ஆண்டுகளுக்கு 12.1, 18.1 இருந்து 24.5 வரை உயர்ந்துள்ளன” என்பதைக் காட்டுகிறது. இராணுவ சேவையிலிருக்கும் உறுப்பினர்களில் ஆபத்து மற்றும் பின்னடைவை மதிப்பிடுவதற்கான இராணுவ ஆய்வில் (The Army Study to Assess Risk and Resilience in Service Members), “தற்கொலை ஆபத்தானது வெள்ளையர்கள், ஆண்கள், பட்டியலிடப்பட்ட நிலைக்கு ஜூனியர் தரவரிசையில் வைக்கப்பட்டவர்கள், சமீபத்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் தற்போது அல்லது முன்னர் பணியமர்த்தப்பட்டு போரிற்கு அனுப்பப்பட்டவர்களுடன் தொடர்புடையதாக இருந்தது,”[1] இந்த விளக்கம் பெரும்பாலும் ஆரோன் புஷ்னெல்லுக்கும் பொருந்தக்கூடியதாகும்.

2013 ஆம் ஆண்டில், உளநிலைப் பாதிப்புக் கோளாறுகளிற்கான இதழ் (Journal of Affective Disorders) ஆல் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வானது, விமானப்படை பிரிவில் “தற்கொலைகள் அதிர்ச்சிதரும் அதிகரிப்பு” இருப்பதாக அறிவித்தது, இது 2010 இல் 27 ஆண்டுகளில் மிக உயர்ந்த விகிதத்தை எட்டியது. [2] இந்தப் போக்கு தொடர்கிறது. 2020 ஆம் ஆண்டில், விமானப் படையினர்களில் 109 தற்கொலைகள் நடந்தன. இந்த எண்ணிக்கையில் தீவிர பணியில் இருப்பவர்கள், ரிசர்வ் படையினர் மற்றும் பாதுகாப்பு காவலர் படை உறுப்பினர்கள் (members of the Guard) ஆகியோரும் அடங்குவர். 2021ல் 72 தற்கொலைகளும், 2022ல் 91 தற்கொலைகளும் நடந்துள்ளன. 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், விமானப்படைப் பிரிவில் 46 தற்கொலைகளைப் பதிவு செய்திருந்தது. விமானப்படை உறுப்பினர்களிடையே மரணத்திற்கான மிகப் பெரிய காரணமாக தற்கொலை இருந்துள்ளது.

விமானப்படையில் தற்கொலைகளுக்கான காரணத்தை மதிப்பிடுவதில், 2013 இல், உளநிலைப் பாதிப்புக் கோளாறுகளிற்கான இதழ் (Journal of Affective Disorders) ஆய்வானது “தற்கொலை செய்து கொள்ளும் பணியில் உள்ள விமானப்படை துருப்புக்களில் கால் பகுதியினர் மட்டுமே இதுவரை ஒரு போர் மண்டலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் 7% சதவீதத்திற்கும் குறைவானவர்கள் நேரடியாக போரை அனுபவித்துள்ளனர்.” எவ்வாறாயினும், விமானப்படை துருப்புக்களிடையே தற்கொலை தூண்டுதல்களுடன் தொடர்புடையதாக “ஏமாற்ற உணர்வு அல்லது கடுங்கழிவிரக்கம் அல்லது ‘நான் செய்ததைப் பற்றி மோசமாக உணர்கிறேன்’ என்று தெரிவித்ததை அறிக்கை கண்டறிந்தது. இத்தகைய உணர்வுகள் நேரடிப் போர்ச் சமர் அனுபவம் உள்ளவர்களிடையே குறிப்பிடத்தக்கவை என்றாலும், அத்தகைய உணர்வுகள் ஒரு பரந்த இராணுவ குழுவினரிடையே எந்த அளவிற்கு உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆரோன் புஷ்னெல்லின் தற்கொலையை மதிப்பிடுவதில் இந்தக் காரணியானது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது அவரது நடவடிக்கைகளின் அடித்தளத்தில் உள்ள மிக வலுவான அரசியல் உந்துதல் மற்றும் நோக்கங்களை மறுக்கவில்லை. ஆனால், அவரது மரணத்திற்கு வழிவகுத்த அனுபவங்களின் பரந்த சமூக உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதற்கு பங்களிப்பு செய்கிறது.

ஆரோன் புஷ்னெல், Reddit தளத்தில் “acebush1” என்ற புனைபெயரைப் பயன்படுத்தி இடுகையிட்டதாக இன்டர்செப்ட் (Intercept) பத்திரிகை தெரிவித்துள்ளது, மேலும் அது தெரிவித்தது:

Reddit இல் Acebush1 என்ற புனைபெயர் பயனர்கள், பெருந்தொற்று நோய் தோன்றிய தொடக்கத்தில் அவர்கள் பணரீதியான நெருக்கடிப் போராட்டங்களைப் பற்றி இடுகையிட்ட உடனேயே இராணுவத்தில் சேர்ந்தார்கள். மார்ச் 19, 2020 அன்று, Acebush1 பயனர்கள், Uber Eats ஓட்டுநராக வேலைக்கு சேருவது பற்றி விசாரித்தார்கள். அடுத்த மாதம் அவர்கள் பண உதவி கேட்டு பதிவிட்டனர்: அதாவது “உதவி தேவை- ஊக்க அல்லது வேலையின்மை நலன்களைப் பெற்றுக் கொள்ள இயலாது, பணம் தீர்ந்துவிடும் விளிம்பில் உள்ளோம்.”

மே 2020 இல், ஆரோன் விமானப்படையின் “அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பயிற்சி” திட்டத்தில் சேர்ந்தார். இறுதியில் அவர் சான் அன்டோனியோவில் உள்ள லாக்லாண்ட் விமானப்படை தளத்தில் அமர்த்தப்பட்டார். அவர் 531 வது புலனாய்வு ஆதரவு படைப்பிரிவில் சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு நிபுணராக பயிற்சி பெற்றார்.

ஆகஸ்ட் 2020 இல், இன்டர்செப்ட் பத்திரிகையின்படி, அவர் ஒரு இராணுவ விமானத்தின் வீடியோவை மறுபதிவிட்டார், அதற்கு ஒரு தலைப்பிட்டு இருந்தார், அதாவது விமானப்படையால் என்ன செய்ய முடிந்தது என்று வியப்பைக் குறிக்கும் ஒரு தலைப்பாக அது இருந்தது. ஆனால், அவருடைய பதிவுகள் விமானப்படை மற்றும் அவருடைய சொந்த அரசியல் கருத்துக்கள் பற்றிய அவருடைய அணுகுமுறையானது இடது பக்கத்தை நோக்கி கணிசமான மாற்றத்திற்கு உட்பட்டு வந்துகொண்டிருந்தார் என்பதைத் தெளிவாக்குகின்றன. அலபாமா சிறை வேலைநிறுத்தத்திற்கு அனுதாபம் தெரிவித்த அவர், 19 ஆம் நூற்றாண்டின் அராஜகவாத தத்துவஞானியான மேக்ஸ் ஸ்டிர்னரின் (Max Stirner) நினைவுப் படத்தையும் வெளியிட்டார். இன்டர்செப்ட் பத்திரிகை இவ்வாறு தெரிவிக்கிறது: “2023 இல், acebush1 ஆனது ‘சுதந்திர பாலஸ்தீனம்!’ என்ற தலைப்பில் ஒரு இடுகையை வெளியிட்டது மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரரான Elbit Systems பகுதியளவில் இயக்கப்படும் ஒரு ட்ரோன் நிறுவனமான UAV Tactical Systems ஐ ஒரு ஆர்வலர் கையகப்படுத்தும் ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.

ஜூன் 2023 இல், acebush1 இல் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

இது எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் பாதிக்கு மேல் கடக்கும் வரை உணராததால் எனது ஒப்பந்தத்தின் இறுதி வரை அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறேன், இந்தக் கட்டத்தில் எனக்கு ஒரு வருடம் மட்டுமே உள்ளது. இருப்பினும் என் வாழ்நாள் முழுவதும் நான் இதைச் சுமப்பேன் என்ற வருத்தம் உள்ளது.

தங்கள் உயிரை முடித்துக் கொண்ட அல்லது தங்கள் உயிரை முடித்துக்கொள்ள முயன்ற விமானப் படையினர்களிடையே வருத்தத்தின் காரணியை நினைவில் கொள்ளுங்கள். மற்றொரு அறிக்கையில், r/Airforce subreddit இல் வெளியிடப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்து, அதில் ஒரு பயனர் இவ்வாறு கேட்டார், அதாவது முன்னாள் படையினர்கள், அவர்கள் மீண்டும் இராணுவ சேவை செய்ய வேண்டியிருந்தால், இன்னும் அதை தேர்ந்தெடுத்திருப்பார்களா என்று கேட்டார், acebush1 இன் பதிலை இன்டர்செப்ட் கீழ்வருமாறு தெரிவிக்கிறது:

முற்றிலும் இல்லை. உலகத்தின் வன்முறை ஆதிக்கத்திற்கு நான் உடந்தையாக இருந்திருக்கிறேன், என் கைகளிலிருந்து இரத்தம் ஒருபோதும் அகலாது.

தற்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், விமானப்படையின் போர் நடவடிக்கைகளில் ஆரோன் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும், அவர் அமெரிக்காவால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெளிவாக உணர்ந்ததோடு குற்ற உணர்வையும் பகிர்ந்து கொண்டார். இது விமானப் படையினர்களிகளிடையே தற்கொலைகளில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக அடையாளம் காணப்பட்டதை உளநிலைப் பாதிப்புக் கோளாறுகளிற்கான இதழ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரோனின் இந்தக் குற்ற உணர்வானது தற்கொலைக்கு பங்களித்ததைப் பொறுத்தவரை, இது அவரது தார்மீக நேர்மைக்கு சான்றளிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, இது இப்போதைய சமூக ஒழுங்கை அதாவது முதலாளித்துவத்தில் வேரூன்றிய பொருளாதார, அரசியல் மற்றும் சித்தாந்த ஒடுக்குமுறை மற்றும் குற்றகரத்தன்மையின் பரந்த சமூகக் கட்டமைப்பானது ஆரோன் புஷ்னெல்லின் மரணத்தில் ஆழமாக உட்பதிந்திருக்கிறது. ஆரோனின் மரணம் குறித்த அனைத்து விளக்கங்களும், அவரது தனிப்பட்ட உளவியல் நிலையை மட்டுமே மையப்படுத்துகின்றன. தனிநபர் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைகிறார் என்பது தவறானவையாக இருக்கிறது. வெளிப்புறக் காரணிகளானது, அதாவது சமூக மற்றும் அரசியல் நிலைமைகளிலிருந்து எழும் காரணிகள், ஆரோனின் மரணத்திற்கு முதன்மையான மற்றும் தீர்க்ககரமான காரணமாக இருந்தன. ஆரோனின் தற்கொலை பற்றிய மிக முக்கியமான உண்மை இதுவாகத்தான் இருக்கிறது.

இஸ்ரேலிய அரசும் பைடென் நிர்வாகத்தில் அதன் ஆதரவாளர்களும் செய்த குற்றங்களுக்கு தற்கொலை மட்டுமே அவசியமான மற்றும் ஒரே பதில் என்று ஆரோன் ஏன் முடிவு செய்தார்? தெளிவாக ஒரு அரசியல் நிலைமைக்கு அவர் ஏன் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடிவு செய்தார்?

இந்தக் கேள்வியை ஆராய்வதில்தான் ஆரோனின் மரணத்தின் துயரமும் சமகால சமூகத்தின் மிகவும் கடினமான பிரச்சினைகளும் வெளிப்படுகின்றன. ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ள பூகோளப் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் இருந்து எழும் மிகச் சிக்கலான சமூகப் பிரச்சினைகள் கூட, வர்க்க நலன்கள் மூலம் மத்தியஸ்தம் செய்யப்படுகின்றன மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கின்றன, பொதுவாக ஒரு தனிப்பட்ட முறையில் பட்டறிந்து கொள்ளப்படுகின்றன மற்றும் பொதுவாக ஒரு தனிப்பட்ட முறையில் விளக்கப்படுகின்றன.

இந்தப் போக்கானது வெறுமனே தனிப்பட்ட மதிப்பீட்டில் உள்ள பிழையின் வெளிப்பாடு அல்ல. முதலாளித்துவத்தின் இயல்பு மற்றும் “தனியார் உடைமை” என்றழைக்கப்படுவது, சமூகம் வெறுமனே தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களின் ஒரு திரள் என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்துகிறது.

முதலில் மார்க்ஸ் தான், வரலாறு குறித்த சடவாதக் கருத்தாக்கத்தை விரிவுபடுத்தும் நிகழ்ச்சிப்போக்கில், இந்தக் கருத்தாக்கத்தை சவால் செய்ததுடன் அதை மறுத்து, 1845 இல் எழுதுகையில், “மனிதனின் சாராம்சம் என்பது ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்துள்ள அருவமான சாரம்சம் அல்ல. அதன் யதார்த்தத்தில் அது சமூக உறவுகளின் தொகுப்பாக இருக்கிறது.” [3]

அன்றாட வாழ்வின் தனிமனிதப் பண்பு, அதனுடன் தொடர்புடைய தனிநபர் தனிமைப்படுத்தல் மற்றும் அந்நியமாதல் உணர்வும் குறிப்பாக நமது காலகட்டம் போன்ற அரசியல் பிற்போக்குக் காலகட்டத்தில் சமூக மற்றும் வர்க்க ஒற்றுமையின் பிணைப்புகள் அரிக்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு தீங்கு விளைவிக்கும் பண்பைப் பெறுகின்றன. எவ்ஜெனி ப்ரோப்ராஜென்ஸ்கி என்னும் மார்க்சிச புரட்சியாளர், போல்ஷிவிக், பின்னர் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடது எதிர்ப்பு அணியில் ஒரு முக்கிய தலைவரும், இறுதியில் ஸ்ராலினின் களையெடுப்புகளால் பலியாக்கப்பட்ட ஒருவருமான இவரால் 1912 இல் எழுதப்பட்ட தொடர்ச்சியான கட்டுரைகளில், தற்கொலையை சமூகத்தால் நடத்தப்படும் “சமூக படுகொலையின்” ஒரு வடிவமாக வரையறுத்தார், குறிப்பாக வர்க்கப் போராட்டம் ஒடுக்கப்படுகையில் இது பரவலாக நடந்தேறுகிறது என்றார்.

எவ்ஜெனி ப்ரோப்ராஜென்ஸ்கி

அவர் இவ்வாறு எழுதினார்:

எதிர்ப்புரட்சி மற்றும் சமூகச் சீர்குலைவு நிறைந்த ஒரு சகாப்தத்தில் தற்கொலைகளின் உயர்ந்த சதவீதத்தை நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் விளக்குவது எளிதாக இருக்கிறது. ஒரு செழிப்பான சகாப்தத்தின் போது, பொதுவான இலக்குகளை அடைவதற்காக மக்கள் மிகவும் நெருக்கமாக அணிதிரள்கிறார்கள், தனிநபரின் தனிமைப்படுத்தல் குறைந்தபட்சமாக குறைக்கப்படுகிறது, கூட்டுச் சக்திவாய்ந்த சக்திகள் தனிநபரை அவரது வாழ்க்கையிலும் போராட்டத்திலும் ஆதரிக்கின்றன. சிதைவின் ஒரு சகாப்தத்தின் போது, பழைய தொடர்புகள் உடைந்து புதியவை இன்னும் தோன்றாத போது, சமூகத்தின் மையவிலக்கு சக்திகளானது மையச்சேர்ப்பு () மீது மேலோங்கி நிற்கும் போது, ஒரு முழுமையான எதிர் சித்திரம் நிலவுகிறது. சக்தியற்ற தனிமனிதன், சமூகத்தை எதிர்கொள்ளும் போது, தனது சமநிலையை இழந்து, பாதகமான சூழ்நிலைகளை முதன்முதலில் எதிர்கொள்வதிலேயே அழிந்து போகிறான், இது வேறு ஒரு காலப்பகுதியில் அவருக்கு எந்த அத்தியாவசிய விளைவுகளையும் ஏற்படுத்தாது. [4]

ஆரோனின் தற்கொலைக்கு வழிவகுத்த தனிப்பட்ட, சமூக மற்றும் அரசியல் காரணிகளின் தொடர்பு பற்றிய ஆழமான புரிதலுக்கு ப்ரோப்ராஜென்ஸ்கியின் பகுப்பாய்வு பங்களிக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவல்களின்படி, ஆரோன், மாசசூசெட்ஸின் ஆர்லியன்ஸில் உள்ள ஒரு மத வளாகத்தில் வளர்க்கப்பட்டார். இது இயேசுவின் சமூகம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குழு 1970 களின் நடுப்பகுதியில் இருந்து முன்னாள் உறுப்பினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆரோன் 2019 இல் குழுவில் இருந்து பிரிந்தார். அதைத் தொடர்ந்து, பெருந்தொற்று நோயால் அதிகரித்த பணச் சிக்கல்களின் அழுத்தத்தின் கீழ், அவர் இராணுவத்தில் சேர்ந்தார்.

அதன் அலட்சியம் மற்றும் மிருகத்தனமான கலாச்சாரம் அவரை வெறுப்படையச் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவர் இடதுசாரி அரசியலின் திசையில் நகர்ந்தார். மேலும் அடிக்கடி நடப்பதைப் போல, அவர் ஆரம்பத்தில் பல்வேறு மத்தியதர வர்க்க அரசியல் போக்குகளுடன் தொடர்புகளை உருவாக்கினார்.

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலானது, அரசியல் அர்த்தத்தில்,மதம் மற்றும் பிற்போக்குத்தனமான அமெரிக்க தேசியவாதத்தில் இருந்து ஆரோன் முறித்துக் கொண்டதன் விளைவுகளைக் கடந்து செல்லத் தொடங்கிய ஒரு கட்டத்தில் நிகழ்ந்தது. ப்ரோப்ராஜென்ஸ்கியின் பொருத்தமான வார்த்தைகளை இரவல் வாங்கி மறுபரிசீலனை செய்தால், ஆரோனின் “பழைய தொடர்புகள்” உடைந்தன, ஆனால் “புதியது” மட்டுமே வெளிப்படத் தொடங்கின.

இவ்வாறு ஆரோன் தனிப்பட்ட சுய தியாகத்தின் மூலம் காஸாவின் பயங்கரத்தை முடிவுக்குக் கொண்டுவர முயன்றார். தனது உன்னத நோக்கத்தை அடைய வேறு வழியை அவர் காணவில்லை. அவர் தனது தனிப்பட்ட தியாகத்தின் மூலம் மற்றய தனிநபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தனது தனிப்பட்ட துயரத்தையும் சீற்றத்தையும் பயனுள்ள நடவடிக்கையாக மாற்ற அவருக்கு வேறு வழி தெரியவில்லை. தனது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வதன் மூலம் தனது தனிப்பட்ட எதிர்ப்பை பதிவு செய்வதற்கான முடிவானது, மத-செல்வாக்கு செலுத்திய உலக கண்ணோட்டத்துடன் ஆரோன் புத்திஜீவித முறிவின் முழுமையின்மையையும், அத்துடன் முதலாளித்துவ-ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் கீழமைந்துள்ள புறநிலை முரண்பாடுகள் குறித்த ஒரு புரிதல் இல்லாமையையும் வெளிப்படுத்தியிருக்கிறது, இந்த புறநிலை முரண்பாடுகளானது முதலாளித்துவ-ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு அடித்தளமாக இருப்பது மட்டுமல்ல, மாறாக வர்க்க மோதலின் வெடிப்பைத் தூண்டுவதுடன், உலக சோசலிசப் புரட்சிக்கான சாத்தியக்கூறை உருவாக்கவும் செய்கிறது.

மீண்டும், ஆரோனின் வளர்ச்சியில் இந்த வரம்புகளானது முற்றிலும் தனிப்பட்டவரின் பண்பைக் கொண்டவை அல்ல, மாறாக, நிலவுகின்ற சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித நிலைமைகளின் வெளிப்பாடாகும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் வர்க்க ஒத்துழைப்புவாத தொழிற்சங்கங்களால் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட ஒரு அரசியல் மற்றும் சமூக பேரழிவான, அதாவது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரோன் பிறந்தார். ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த வெளிப்பாடுகள் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காணாமல் போயிருந்தன. ஆரோன் தனது வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க ஒரு வேலைநிறுத்தத்தைக் கண்டிருக்க மாட்டார்.

அனைத்திற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கியமையானது, பல்கலைக்கழகத்தை மையமாக கொண்ட புத்திஜீவிகளால் ஏறத்தாழ ஒருமனதாக மார்க்சிசத்தை மறுதலிப்பதுடன் கைகோர்த்திருந்தது. சோசலிசப் புரட்சியின் முன்னோக்கைப் போலவே, தொழிலாள வர்க்கத்துடன் சோசலிசத்தின் வரலாற்று ரீதியான தொடர்பும் நிராகரிக்கப்பட்டது. “இடது” அரசியல் என்பது, சமூக வர்க்கம் குறித்த தீர்மானகரமான பிரச்சினையின் மீது கவனம் செலுத்தாமல், மாறாக தனிநபர் அடையாளத்தின் பல்வேறு வடிவங்களின் மீது ஒருங்கே குவிந்த விதத்தில் மறுவிளக்கம் அளிக்கப்பட்டது. இது தனிமனிதவாதத்தின் பிற்போக்கான, மனவுறுதி குலைந்த கண்ணோட்டத்தின் செல்வாக்கை வலுப்படுத்தும் விளைவைக் கொண்டிருந்தது, இப்போதும் விளைவைக் கொண்டிருக்கிறது.

ஆரோனின் இலட்சியப் பின்பற்றலுக்கு அஞ்சலி செலுத்துவது முக்கியம் ஆகும். அவரது தனிப்பட்ட தியாகத்தை மறந்துவிடக் கூடாது. ஆனால் அவரது நினைவை கௌரவிப்பதற்கு அவரது மரணத்தில் இருந்து பொருத்தமான அரசியல் படிப்பினைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த இலக்கை நோக்கிச் செல்லுகையில், ஆரோனின் தற்கொலையை பெருமைப்படுத்தும் முயற்சிகளை மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்துவது தவிர்க்க முடியாத அரசியல் கடமையாகும். இஸ்ரேலிய அரசால் நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் தனிப்பட்ட உயிர்த்தியாகம் ஒரு பயனுள்ள மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம் என்று வலியுறுத்தும் அளவிற்குக் கூட இது உள்ளது.

ஆரோனின் தற்கொலையை நியாயப்படுத்தும் முயற்சிகளில் மிகவும் தொந்தரவளிப்பது, பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் எழுதிய “ஆரோன் புஷ்னெல்லின் தெய்வீகமான வன்முறை” என்ற கட்டுரையாகும். இது ஷீர்போஸ்ட் (Scheerpost)கன்சார்டியம் நியூஸ் (Consortium News) மற்றும் பல்வேறு இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மதப் புதிர்வாதம், நடுத்தர வர்க்க கற்பனாவாதம், அரசியல் நோக்குநிலை பிறழ்வு, வரலாற்று பொய்மைப்படுத்தல் மற்றும் பகுத்தறிவின்மையை பெருமைப்படுத்துதல் ஆகியவற்றின் கலவையை இந்தக் கட்டுரை கொண்டுள்ளது.

தற்கொலையை மத அர்த்தத்தில் வரையறுத்து, புஷ்னெல்லின் மரணம் “தீவிர தீமைக்கு (“radical evil”) எதிரான வன்முறையை நிறுத்தியது” என்று ஹெட்ஜஸ் பிரகடனம் செய்வதன் மூலம் தனது கட்டுரையைத் தொடங்குகிறார். போரை இயக்கிக் கொண்டிருக்கும் சமூக வர்க்கங்கள், பொருளாதார நலன்கள் மற்றும் புவிசார் அரசியல் மூலோபாயங்களை அடையாளம் காண்பதற்குப் பதிலாக, ஹெட்ஜஸ் ஒரு உண்மையான சமூக-பொருளாதார நிகழ்வுபோக்கை, “தீவிர தீமை” என்ற ஆன்மீக அருவமாக கரைக்கிறார். இது பொதுவாக தீய ஆவி என்றும் அறியப்படுகிறது. இந்த அடிப்படையில், ஹெட்ஜஸ் போருக்கான பொறுப்பை அரசாங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்தும், அவர்கள் எந்த சமூக வர்க்கத்தின் நலன்களுக்காக செயல்படுகிறார்களோ அந்த சமூக வர்க்கத்திடம் இருந்தும், பொதுவாக மனிதகுலத்திற்கு மாற்றுகிறார். ஆரோன் புஷ்னெல் “எங்கள் பாவங்களுக்காக இறந்தார்” என்று ஹெட்ஜஸ் கூறுகிறார். இவ்வாறாக, உட்குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியம், நேட்டோ மற்றும் அதன் இஸ்ரேலிய கூட்டாளிகளின் குற்றங்களுக்கு ஒட்டுமொத்த மனிதகுலமும் பொறுப்பாகும்.

இந்த மோதலை புதிராக மாற்றிய ஹெட்ஜஸ், அமெரிக்க இராணுவத்தை நன்மைக்கான ஒரு சக்தியாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறை கற்பனை செய்கிறார்.

அவர் இவ்வாறு கேட்கிறார்:

நியாயமான ஒரு உலகில், உணவு, தங்குமிடம், மருந்து வழங்குவதற்காக காஸா மீதான இஸ்ரேலிய முற்றுகையை அமெரிக்கக் கடற்படை உடைக்க வேண்டாமா? அமெரிக்க போர் விமானங்களானது காஸா மீது பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலத்தை ஏற்படுத்த திணிக்க வேண்டாமா? காஸாவிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுமாறு இஸ்ரேலுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்க வேண்டாமா? இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள், பில்லியன் கணக்கான இராணுவ உதவிகள் மற்றும் உளவுத் தகவல்களை வழங்குதல் ஆகியவை நிறுத்தப்பட வேண்டாமா? இனப்படுகொலை செய்தவர்களும், இனப்படுகொலையை ஆதரிப்பவர்களும் பொறுப்புக்கூற வேண்டாமா?

இந்தச் சாதாரண கேள்விகள்தான் புஷ்னெல்லின் மரணம் நம்மை எதிர்கொள்ள கட்டாயப்படுத்துகின்றன.

ஹெட்ஜஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், “இந்த ‘நியாயமான உலகத்தை’ அடைவதற்காக நாம் எந்த தேவாலயத்தில், யூத ஆலயத்தில் அல்லது மசூதியில் பிரார்த்தனை செய்ய வேண்டும்?” என்று கேட்க ஒருவருக்கு உரிமை உண்டு. அவரது கேள்விகள் “சாதாரணமானவை” அல்ல. அவைகள் வெறுமனே அபத்தமானவையாக இருக்கின்றன. அரசியல் யதார்த்தம் பற்றிய புரிதல் கொண்ட எந்த ஒரு அறிவார்ந்த நபரும் ஏன் அவற்றைக் கேட்க வேண்டும்? ஹெட்ஜஸின் கேள்விகள் தாராளவாதிகளால் கற்பனை செய்யப்பட்டதைப் போன்ற ஒரு உலகத்தை முன்வைக்கின்றன. அதில் “தீமை” மட்டுமே “நன்மையால்” பிரதியீடு செய்யப்பட்டால் அனைத்தும் நன்றாக இருக்கும். இது அடிப்படையில் அனைத்து கண்டன எதிர்ப்பு அரசியலின் (protest politics) தத்துவமாகும்.

ஆனால், இந்தக் கேள்விகள் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. ஹெட்ஜஸ் கற்பனை செய்த “நியாயமான உலகில்”, போர் விமானங்கள், பறக்க தடைவிதிக்கப்பட்ட மண்டலங்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகள் ஏன் தேவைப்படுகிறது? அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நன்மைக்கான ஒரு மாற்றத்தக்க மற்றும் சாத்தியமான சக்தியாக ஒருவர் கற்பனை செய்தால் மட்டுமே ஹெட்ஜஸின் “சாதாரண கேள்விகள்” அர்த்தமுள்ளதாக இருக்கும். மறுபுறம், இஸ்ரேலானது தூய மற்றும் மாற்ற முடியாத தீமையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. இந்த கருதுகோளில் கிறிஸ்தவ மற்றும் மதவெறிகொண்ட தொனிகள் தெளிவாக உள்ளன.

ஒரு கருணைமிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான அவரது தார்மீக முறையீட்டிற்கு ஆதரவாக, ஹெட்ஜஸ் கூறுகிறார், “முதலாவது வளைகுடா போரைத் தொடர்ந்து குர்திஷ்களைப் பாதுகாக்க 1991 இல் வடக்கு ஈராக்கில் கூட்டணிப் படைகள் தலையீடு செய்தன.” 1991 வளைகுடாப் போரானது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன் சேர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறை வெடிப்பின் தொடக்கத்தைக் குறித்தது என்பதை ஹெட்ஜஸ் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அந்தப் போரின் போது நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலம் என்ற பிரகடனத்திற்கும் குர்திஷ்களைப் பாதுகாப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜனாதிபதி முதலாவது புஷ் பின்பற்றிய கொள்கைகள் முற்றிலும் ஈராக் படையெடுப்பிற்கு மத்தியில் அமெரிக்க இராணுவத்தின் தந்திரோபாய நலன்கள் பற்றிய அவரது மதிப்பீட்டின் அடிப்படையில் ஆணையிடப்பட்டன.

ஹெட்ஜஸின் கட்டுரையின் மிகவும் கண்டிக்கத்தக்க பகுதிகளாக இருப்பது, புஷ்னெல்லின் “தன்னைத்தானே தீக்குளித்துக் கொள்வதை” “ஒரு சக்திவாய்ந்த அரசியல் செய்தி” என்று அவர் ஆவேசமாக வாதிடும் பகுதிகளாகும்.

அவர் இவ்வாறு அறிவிக்கிறார், “இது பார்வையாளரை உறக்கத்தில் இருந்து எழுப்புகிறது. இது பார்வையாளரை அனுமானங்களை கேள்வியாக கேட்க கட்டாயப்படுத்துகிறது. அது பார்வையாளனை நடவடிக்கையில் ஈடுபட வைக்க கெஞ்சுகிறது. இது அரசியல் அரங்காகும், அல்லது அதன் மிகவும் சக்திவாய்ந்த வடிவத்தில் மதரீதியான நடைமுறை வழக்கம் ஆகும்.”

புஷ்னெல்லின் தற்கொலைக்கு ஹெட்ஜஸ் தகுதியற்ற முறையில் ஒப்புதல் கொடுப்பது என்பது நடைமுறையில், அந்த இளைஞரின் மரணத்தில் நடந்த சம்பவத்திற்குப் பின்னர் தன்னை ஒரு கூட்டாளியாக மட்டுமல்லாது, மாறாக எதிர்கால எதிர்ப்புப் போராட்டத் தற்கொலைகளைத் தூண்டுபவராகவும் ஆக்கிக் கொண்டதானது அரசியல் யதார்த்தத்தில் முற்றிலும் தவறான சித்தரிப்பில் இருந்து தொடங்குகிறது. ஹெட்ஜஸ் எழுதுவதன் அடிப்படையில், காஸா மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பாரிய அலட்சியம் காட்டிய நிலைமைகளின் கீழ், பாலஸ்தீனியர்கள் பாரிய படுகொலை செய்யப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் அங்கே இருக்காத நிலைமைகளின் கீழ் ஆரோன் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒருவர் அனுமானிப்பதற்கு இட்டுச்செல்கிறது. ஆகையால், உலகளாவிய அக்கறையின்மையின் இத்தகைய நிலைமைகளின் கீழ், ஆரோனுக்கு தனது உயிரைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு என்ன இருந்தது, காஸா மக்கள் மீது சில வெளிப்படை அளவிலான அக்கறையைத் தூண்டுவதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியில் பயங்கரமான வன்முறைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதிலா?

ஆனால், ஹெட்ஜஸ் கற்பனை செய்து இட்டுக்கட்டிய நிலைமைக்கு நேரெதிராக, இஸ்ரேலிய தாக்குதலானது உலகெங்கிலும் பாரிய வெகுஜன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. கணக்கிலடங்கா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களானது, சில இடங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். பல சம்பவங்களில் ஏராளமான யூதர்கள் பங்கு பெற்றனர் மற்றும் கணிசமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கூட ஏற்பாடு செய்தனர் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நியூயோர்க் நகரில் அமைதிக்கான யூத குரல் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் செயல்திறனை மட்டுப்படுத்திய பிரச்சினையானது பொதுமக்களின் அலட்சியம் அல்ல. மாறாக, காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது, இன்னும் பரந்த முறையில் ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு மூன்றாம் உலகப் போருக்கு தயாரிப்பதற்கும், அணுவாயுதத்தைப் பயன்படுத்துவதற்கும் எதிராக அடித்தளமாக கொள்ளக்கூடிய ஒரு அரசியல் முன்னோக்கும் மூலோபாயமும் இல்லாததுதான் பிரச்சனையாகும்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களானது முதலாளித்துவ அரசியலின் இப்பொழுதுள்ள கட்டமைப்புகளின் வரம்புகளுக்குள்ளேயே உள்ளன. அவைகள் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வை நோக்கி செலுத்தப்படவில்லை, மாறாக முதலாளித்துவ அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள அழுத்தம் கொடுப்பதை நோக்கி இயக்கப்படுகின்றன.

உண்மையில், இதுதான் ஹெட்ஜஸ் விரும்பிய அரசியல் நோக்குநிலையாகும். துனிசியா, தெற்கு வியட்நாம் மற்றும் திபெத்தில் வரலாற்று ரீதியாக நிகழ்ந்தவற்றை குறிப்பாக வலியுறுத்தி, முந்தைய தற்கொலை நிகழ்வுகளை நடைமுறை வழக்கமாகயிருக்கும் சடங்குரீதியான தற்கொலைகளின் (துணிகரத் தற்கொலை) செயல்திறன்வாய்ந்த எடுத்துக்காட்டுகளாக அவர் குறிப்பிடுகிறார். “இந்த தனிப்பட்ட சுய-தியாகங்கள்,” “பெரும்பாலும் பாரிய வெகுஜன எதிர்ப்புக்கான அணிதிரள்வுப் புள்ளிகளாக ஆகிவிடுகின்றன” என்று அவர் எழுதுகிறார்.

இப்போது, இதுபோன்ற ஒரு தீவிரமான சம்பவம் போராட்டங்களைத் தூண்டிய அல்லது தீவிரப்படுத்திய நிகழ்வுகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் நடைமுறை வழக்கமாகயிருக்கும் சடங்குரீதியான தற்கொலைகள் (துணிகரத் தற்கொலை) சமுதாயத்தின் புரட்சிகர மாற்றத்திற்கான ஒரு பயனுள்ள மூலோபாயத்திற்கு பங்களிப்பு செய்ததாக எந்த நிகழ்வுகளும் இல்லை. உண்மையில், தெற்கு வியட்நாம் மற்றும் திபெத்தில் அவர் மேற்கோளிட்ட மூன்று நிகழ்வுகளில் இரண்டில், பிற்போக்கு அரசியல் சக்திகளால் தீக்குளிப்புத் தற்கொலை செய்யப்பட்டதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதன் சொந்த நோக்கங்களுக்காக அவைகள் சுரண்டப்பட்டன.

உதாரணமாக, 1963 இல், பௌத்த துறவியான Thích Quảng Đức என்பவர் தீக்குளித்தது, வடக்கு வியட்நாம் மற்றும் தேசிய விடுதலை முன்னணிக்கு (National Liberation Front) எதிராக ஒரு பயனுள்ள போராட்டத்தை நடத்த திறனற்றதாக கருதப்பட்ட இப்போதைய Diem ஆட்சியை தூக்கியெறியவும், ஒரு இராணுவ ஆட்சிக்குழுவை அதிகாரத்திற்கு கொண்டு வரவும் கென்னடி நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்சியைத் தூண்டிவிட்டது.

ஜுன் 11, 1963 இல், பௌத்த துறவியான Thích Quảng Đức என்பவர் தீக்குளிக்கிறார்

திபெத்தில் தீக்குளிப்புகளைப் பொறுத்தவரை, அவைகள் வாஷிங்டனின் நலன்களால் வழிநடத்தப்படுகின்றன அது பிரிவினைவாத இயக்கத்தை சீனாவிற்கு எதிரான ஆயுதமாக ஊக்குவிக்கிறது. இந்த இயக்கத்தில் துளியளவும் முற்போக்கானது எதுவுமில்லை. ஒரு இளம் தொழிலாளியின் தற்கொலை பாரிய எதிர்ப்புக்களைத் தூண்டிய துனிசியாவைப் பொறுத்தவரை, ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் தூக்கியெறியப்பட்ட அதே நபர்கள், முதலாவது அலைப் போராட்டங்களில் தூக்கியெறியப்பட்ட அதே அரசியல் சக்திகள், இப்போது மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர்.

ஆனால் ஹெட்ஜஸால், அவரது உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் எழுதுகிறார், அதாவது “தன்னைத்தானே பலியிடுதல் என்பது வேள்விப் பிறவிகள் ஆகும். அவைகள் புதியவற்றை முன்னறிவிக்கின்றன. அவைகள் மரபுகள் மற்றும் அதிகார அமைப்புகளை அதன் மிகவும் தீவிரமான வடிவத்தில் முற்றிலுமாக நிராகரிப்பதாகும்.”

இதில் உண்மை இல்லை. இது போன்ற நடவடிக்கைகளில் ஒன்றுமில்லை. சூழ்நிலைகளைப் பொறுத்து, அவைகள் தற்போதுள்ள ஆட்சியின் சேவகர்களில் மாற்றத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம். அல்லது, தற்பொழுது அதிகாரத்தில் இருப்பவர்களின் தற்போதுள்ள கொள்கையில் ஒரு மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அவைகள் நனவுபூர்வமாக இப்போதிருக்கும் சொத்துறவுகளைத் தூக்கியெறிவதை நோக்கியோ, முதலாளித்துவ அரசு மற்றும் அதன் ஸ்தாபனங்களை ஒழிப்பதை நோக்கியோ, அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதை நோக்கியோ திருப்பி விடப்படவில்லை.

மாறாக, மிக அடிப்படையான அர்த்தத்தில், நடைமுறை வழக்கமாகயிருக்கும் சடங்குரீதியான தற்கொலை (துணிகரத் தற்கொலை) நடவடிக்கைகள் அடிப்படையில் சோசலிசம் மற்றும் சோசலிசப் புரட்சியின் கண்ணோட்டத்துடன் பொருந்தாததாக இருக்கின்றன.  சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டமானது, சமூகத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பு குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது. சமூகப் புரட்சியின் அடிப்படை உந்து சக்தியானது முழுமையற்ற மற்றும் வெறித்தனமான கோபம் அல்ல, மாறாக உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் புறநிலை முரண்பாடுகள் மற்றும் இந்த முரண்பாடுகளைப் புரிந்துகொள்வதால் வழிநடத்தப்படும் பாரிய வெகுஜன சமூக நடவடிக்கை ஆகியவற்றைப் புரிந்து கொள்வதாகும்.

எவ்வாறிருப்பினும், அரசியல் யதார்த்தம் குறித்த ஒரு பகுத்தறிவார்ந்த புரிதலை பயனற்றது என்று ஹெட்ஜஸ் நிராகரிக்கிறார். இறையியலாளர் ரெய்ன்ஹோல்ட் நெய்பரின் (Reinhold Niebuhr) “ஆன்மாவில் ஒரு உன்னதமான வெறித்தனம்” மற்றும் “அத்தகைய வெறித்தனத்தைத் தவிர வேறு எதுவும் தீங்கு விளைவிக்கும் அதிகாரம் மற்றும் உயர் அதிகார பதவிகளில் ஆன்மீக அக்கிரமத்துடன் போராடாது” என்ற அவரது கூற்றை அவர் நினைவுபடுத்துகிறார். இது அரசியல் பகுத்தறிவின்மையை பெருமைப்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை, இது உண்மையில் வலதுசாரி நோக்கிய நோக்குநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது, இடது நோக்கியது அல்ல. வலதுசாரி அரசியலானது பகுத்தறிவற்ற உணர்வுகளுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. உண்மையான முற்போக்கு, இடதுசாரி, சோசலிச சிந்தனையானது விஞ்ஞானத்துடன் இணைந்துள்ளது.

ஹெட்ஜஸ் பின்வரும் பிரகடனத்துடன் தனது கட்டுரையை முடிக்கிறார்:

தெய்வீக வன்முறையானது ஒரு ஊழல் நிறைந்த மற்றும் மதிப்பிழந்த ஆளும் வர்க்கத்தை பயமுறுத்துகிறது. இது அவர்களின் சீரழிவான தன்மையை அம்பலப்படுத்துகிறது. எல்லோரும் பயத்தால் முடங்கிவிடுவதில்லை என்பதை இது விளக்குகிறது. இது தீவிர தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான எச்சரிக்கை அழைப்பு ஆகும். அதைத்தான் புஷ்னெல் நோக்கமாகக் கொண்டிருந்தார். அவரது தியாகம் நம் சிறந்த சுயத்தைப் பேசுகிறது.

இந்த விடயத்தை அப்பட்டமாக கூறுவதானால், ஹெட்ஜஸின் கட்டுரையானது நடுத்தர வர்க்க போலி-இடதுவாதத்தின் அவநம்பிக்கை, புத்திஜீவித திவால்நிலை மற்றும் அடிப்படையில் பிற்போக்குக் குணாம்சம், அதாவது பொதுவாக பல்கலைக்கழக வளாகங்களில் மேலாதிக்கம் செலுத்தும் சித்தாந்த கருத்தாக்கங்கள் குறித்துப் பேசுகிறது.

1940 இல், நான்காம் அகிலத்தின் அமெரிக்கப் பிரிவில் மேலெழுந்திருந்த ஒரு மார்க்சிச-விரோத போக்குக்கு எதிரான ஒரு உட்கட்சி அரசியல் போராட்டத்தின் பாதையில், லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிட்டார், வரலாற்றின் மாபெரும் சமூகப் புரட்சியானது அதாவது 1917 அக்டோபரில் ரஷ்யத் தொழிலாள வர்க்கமானது அதிகாரத்தைக் கைப்பற்றியமை, ஒரு பூமியை உலுக்கிய ஒரு நிகழ்வில் குண்டுகளை வீசுவதில் அது தொடங்கவில்லை, மாறாக இயங்கியல் சடவாத தத்துவத்தைப் பாதுகாத்தல் மற்றும் விரிவுபடுத்துவதுடன் தொடங்கிய கட்சியால் தலைமை கொடுக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டார்.

ட்ரொட்ஸ்கி, ரஷ்ய ஜனரஞ்சகவாதிகளால் செயற்படுத்தப்பட்ட பயங்கரவாத முறைகளுக்கு எதிராக, 1880களில் இருந்து ரஷ்ய மார்க்சிஸ்டுகளால் வழிநடத்தப்பட்டு வந்த நீண்ட நெடியப் போராட்டத்தை குறிப்பிட்டார். அந்த நேரத்தில், மார்க்சிஸ்டுகள் அரசாங்க அதிகாரிகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு எதிராக வாதாடினார்கள். இது தற்கொலை நடவடிக்கையிலிருந்து பல வழிகளில் வேறுபட்ட ஒரு நடைமுறையாகும், இது அந்த நேரத்தில் எந்த பிரதான அரசியல் போக்கினாலும் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வாதங்களில் ஹெட்ஜஸ் ஊக்குவித்த தற்கொலையானது “அரசியல் அரங்கத்தை” நிராகரிப்பதற்கு முற்றிலும் பொருத்தமான சில இன்றியமையாத கூறுபாடுகள் உள்ளன.

அடிப்படையான பிரச்சினை என்னவெனில், பயங்கரவாத அரசியலானது, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன நடவடிக்கைக்கு பதிலாக ஒரு தனிநபரின் வீரம் செறிந்த செயலை பதிலீடு செய்வதைக் குறிக்கிறது. பயங்கரவாதப் படுகொலைகளினால், பலியானவர் நாட்டின் தலைவராக இருந்தாலும் கூட, சமூகத்தில் ஒரு தீவிர மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. ஒரு கொடுங்கோலனுக்குப் பதிலாக மற்றொரு கொடுங்கோலன் நியமிக்கப்படுவார். மேலும், வெகுஜனங்களின் அரசியல் நனவை உயர்த்துவதற்குப் பதிலாக, பயங்கரவாத நடவடிக்கைகளானது கொலைசெய்பவர்களுக்கும் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் மோதலை வேடிக்கை பார்க்கும் செயலற்ற பார்வையாளர்கள் நிலைக்கு வெகுஜனங்களை தள்ளுகின்றன.

1938 நவம்பரில், இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக நடந்த ஒரு துயரச் சம்பவத்தை நினைவு கூர்ந்து நான் எனது உரையை முடிக்கிறேன்.

17 வயதான ஹெர்ஷல் கிரின்ஸ்பான் (Herschel Grynszpan) என்ற பெயரில் பாரிஸில் வசித்து வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த யூத குடியேறிய இளைஞன், ஜேர்மன் தூதரகத்தில் எர்ன்ஸ்ட் வோம் ராத் (Ernst vom Rath) என்ற நாஜி இராஜதந்திரியை படுகொலை செய்தார். இந்த நடவடிக்கை கவனமாக திட்டமிட்டு தயாரிக்கப்படவில்லை. இது தொடர்பான விசாரணையில், நாஜிக்கள் யூதர்களை துன்புறுத்தியதாலும், தன்னுடைய குடும்பத்தின் துன்பங்களாலும் சீற்றம் அடைந்த கிரின்ஸ்பான், பழிவாங்க ஜேர்மன் தூதரகத்திற்குச் சென்றார் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அவர் ஒரு குறிப்பிட்ட நபரை தனது இலக்காக தேர்வு செய்யவில்லை. அவருக்கு அரசியலில் அனுபவம் இல்லை. கிரின்ஸ்பான் தான் எதிர்கொண்ட முதல் அதிகாரியைச் சுட்டுக் கொன்றார், துரதிர்ஷ்டவசமாக வோம் ராத் தான் அந்த நபராக இருந்தார்.

இந்தப் படுகொலையானது நீண்டகால மற்றும் இழிவார்ந்த விளைவுகளைக் கொண்டிருந்தது. ஹிட்லரின் ஆட்சியானது ஜேர்மன் யூதர்கள் மீதான தாக்குதல்களை வன்முறையாக தீவிரப்படுத்த இந்தப் படுகொலையை சுரண்டிக்கொள்ள முடிவெடுத்தது. நவம்பர் 9, 1938 இல் வோம் ராத் இறந்த சில மணி நேரங்களுக்குள், நாஜிக்கள் யூத எதிர்ப்புப் படுகொலையைத் தொடங்கினர், அது கிறிஸ்டல்நாக்ட் என்று அறியப்பட்டது.

உடனடியாக கைது செய்யப்பட்ட க்ரின்ஸ்பன், பாசிஸ்டுகளிடமிருந்து மட்டுமல்ல, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்பட்ட “இடது” மக்கள் முன்னணி அரசாங்கத்திடமிருந்தும் கடுமையான கண்டனங்களுக்கு ஆளானார். பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் இடது அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கும் க்ரின்ஸ்பனை இவை கண்டனம் செய்தன.

கிரின்ஸ்பனுக்கு ஆதரவாக எழுப்பப்பட்ட ஒரே குரல் பிரான்சில் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடையதாகத்தான் இருந்தது. ஆனால் ட்ரொட்ஸ்கி, ஒரு சிறப்புவாய்ந்த கட்டுரையில், கிரின்ஸ்பானை துன்புறுத்துபவர்களுக்கு எதிராகப் பாதுகாத்தார். அதே நேரத்தில், அந்த இளைஞன் தேர்ந்தெடுத்த பயங்கரவாத வழிமுறையை நிராகரித்த அவர் அதனைத் தெளிவுபடுத்தினார். அவர் ஒரு பாசிச அதிகாரிக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு அரசியல் படுகொலைக்கு விடையிறுத்தார், ஒரு தற்கொலைக்கு அல்ல. ஆனால் கிரின்ஸ்பனின் உயிரையே பறித்த கிரின்ஸ்பனின் நடவடிக்கை பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனம் மாபெரும் பொருத்தத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கி பாசிசத்தின் பிரதிநிதி மீதான அந்த இளைஞனின் வெறுப்பையும் அவரினால் உணரப்பட்ட விரக்தியையும் புரிந்து கொண்டார்.

ஆனால் ட்ரொட்ஸ்கி, ஒரு புரட்சிகரத் தலைவர் என்ற முறையில், கிரின்ஸ்பானின் நடவடிக்கையை பின்பற்றுவதற்கு எதிராக இளைஞர்களுக்கு பலமாக ஆலோசனை கூறும் தனது சொந்த பொறுப்பை உணர்ந்திருந்தார். இந்தக் கட்டுரையானது காலத்தால் தனித்துவமானது, அவர் பின்வருமாறு எழுதினார்:

தார்மீக அர்த்தத்தில், அவரது செயல்பாட்டு நடைமுறைக்காக இல்லாவிட்டாலும், கிரின்ஸ்பான் ஒவ்வொரு இளம் புரட்சியாளருக்கும் ஒரு உதாரணமாக சேவை செய்யலாம். கிரின்ஸ்பான் உடனான நமது வெளிப்படையான தார்மீக ஐக்கியம், கொடுங்கோன்மை மற்றும் மிருகத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் சுய-தியாகம் செய்ய தகைமை கொண்ட அனைவருக்கும், கிரின்ஸ்பான்களாக இருக்கப்போகும் அனைவரிடமும் கூறுவதற்கு எங்களுக்கு கூடுதல் உரிமையை வழங்குகிறது: அதாவது வேறு பாதையைத் தேடுங்கள்! இது ஒரு தனியான பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கூடிய ஒரு மாபெரும் வெகுஜனப் புரட்சிகர இயக்கம் மட்டுமே, வர்க்கச் சுரண்டல், தேசிய ஒடுக்குமுறை மற்றும் இனரீதியான துன்புறுத்தல் ஆகியவற்றின் முழு கட்டமைப்பின் எந்தச் சின்னத்தையும் விட்டுவைக்காத ஒரு இயக்கமாக இருக்கும். பாசிசத்தின் முன்னெப்போதும் இல்லாத குற்றங்கள் முற்றிலும் நியாயப்படுத்தக்கூடிய பழிவாங்கலுக்கான ஒரு உணர்வை உருவாக்குகின்றன. ஆனால் பாசிஸ்ட்டுகளின் குற்றங்களின் வீச்சு மிகவும் அரக்கத்தனமாக இருப்பதால், இந்த உணர்வை, தனிமைப்படுத்தப்பட்ட பாசிச அதிகாரத்துவத்தினரை படுகொலை செய்வதன் மூலம் பூர்த்தி செய்ய முடியாது. அதற்கு உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட கோடானகோடி மக்களை இயங்க வைக்கச் செய்வதும், பழைய சமூகத்தின் கோட்டைகளின் மீது தாக்குதல் தொடுப்பதில் அவர்களுக்குத் தலைமை தாங்குவதும் அவசியமாகும். அடிமைத்தனத்தின் அனைத்து வடிவங்களையும் தூக்கியெறிவது, பாசிசத்தை முழுமையாக அழிப்பது மட்டுமே, சமகால கொள்ளைக்காரர்கள் மற்றும் குண்டர்கள் மீது இரக்கமற்ற முடிவைக் கொண்டிருக்கும் மக்களால் மட்டுமே மக்களின் கோபத்திற்கு உண்மையான திருப்தியை வழங்க முடியும். துல்லியமாக இந்தப் பணியைத்தான் நான்காம் அகிலம் தனக்குத்தானே நிர்ணயித்துக் கொண்டுள்ளது. அது தொழிலாளர் இயக்கத்தை ஸ்ராலினிச கொள்ளை நோயில் இருந்து தூய்மைப்படுத்தும். இளைஞர்களின் வீரம் செறிந்த தலைமுறையை அது தன் அணியில் அணிதிரட்டும். இது ஒரு சிறந்த மற்றும் இன்னும் மனிதபிமான எதிர்காலத்திற்கான பாதை ஏற்படுத்துவதைத் திறந்துவிடும்.

லியோன் ரொட்ஸ்கி

இந்த வார்த்தைகளானது நமது சொந்த காலத்திலும் எதிரொலிக்கின்றன என்பதோடு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியவற்றை மாற்றியமைப்பது, ஆரோன் புஷ்னெல்லின் துயரகரமான மரணத்திலிருந்து பெறப்பட வேண்டிய அரசியல் படிப்பினைகளை சக்திவாய்ந்த முறையில் தொகுத்தளிக்கின்றன.

உங்களில் உண்மையிலேயே போராட விரும்புபவர்களுக்கு, நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு சீற்றமும் பீதியும் அடைந்தவர்கள்; நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே, காஸாவில் குடிநீர் அனுமதிக்கப்படாமல், உணவின்றி இறந்து கொண்டிருக்கும் சிறுவர்களும், பச்சிளம் குழந்தைகளும் கூட முற்றிலும் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் வாழ்கின்றனர் என்பதை உணர்ந்தவர்கள்; “நல்லது, நாம் இன்னும் 30,000 காஸா மக்கள் கொல்லப்படக் கூடாது—ஒருவேளை 5,000, ஒருவேளை 10,000 பேர் இருக்கலாம், 15,000 பேர் இன்னும் அதிகமாக இருக்கலாம், ஆனால் 30,000 பேர் அல்ல,” என்று கூட கூறுகின்ற அமெரிக்க ஜனாதிபதியும், இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதைக் கண்டு சீற்றமும் அநியாயத்திற்கு எதிரான உணர்வையும் கொண்டவர்களாக உள்ளனர். இது பைடெனுக்கு கூட மிகவும் அதிகமாகும்.

நீங்கள் காண்பவற்றால் வெறுப்படைந்துள்ள உங்களில் சிலர், நீங்கள் எடுக்கப் போகும் அரசியல் முடிவுகள் என்ன? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன தேவை? தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளோ, சுய-தியாக நடவடிக்கைகளோ அல்ல. மாறாக, முதலாளித்துவ உற்பத்தியின் ஒட்டுமொத்த நிகழ்ச்சிப்போக்கில் அதன் புறநிலை பாத்திரத்தில், உற்பத்தி சக்திகளில் அதன் நிலை, அதன் சாத்தியமான பொருளாதார வலிமை, அதன் பூகோளரீதியான பண்பு, முதலாளித்துவத்தை மண்டியிட வைக்கும் திறன், இராணுவவாதத்தின் அஸ்திவாரங்களையே அழிக்கக்கூடிய, உண்மையில் அதனுடைய சக்தியிலேயே தங்கியிருக்கும் ஒரே சமூக சக்தியான தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி திரும்புவதாகும்.

இதுதான் எங்கள் கட்சி நிர்ணயித்துக் கொண்டுள்ள பணியாகும், இந்தப் பணியை, உலக சோசலிச வலைத் தளத்தை பிரசுரிப்பதன் மூலமாகவும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் நடவடிக்கையின் மூலமாகவும், மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களாக அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கு ஜெரி வைட் ஆகியோரின் தற்போதைய வேட்புமனுவின் மூலமாகவும் நாங்கள் செய்ய முனைகிறோம். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் பங்கேற்கவும் தலைமை தாங்கவும் மற்றும் வரவிருக்கும் சக்திவாய்ந்த இயக்கத்திற்கு ஒரு உண்மையான புரட்சிகர முன்னோக்கை வழங்கவும், கட்டவிழ்ந்துவரும் மற்றும் கட்டவிழ்ந்துவர வேண்டிய போராட்டங்களுக்கு கல்வியூட்டவும் அரசியல் ரீதியில் தயார் செய்யவும் நாங்கள் இந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்துகிறோம்.

ஆகவே உங்களது சீற்றத்தையும் அநியாயத்திற்கெதிரான உணர்வையும் நடைமுறையளவிலான அரசியல் நடவடிக்கையாக, மார்க்சிச தத்துவத்தில் தேர்ச்சி பெறுவதற்கும், வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும், கடந்த நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரப் போராட்டங்களுடன் உங்களை பரிச்சயப்படுத்திக் கொள்வதற்கும், தீர்மானகரமாக மாறுங்கள்.

நான் இதை சில அவசரத்துடன் சொல்கிறேன், ஏனென்றால் அவ்வளவு நேரம் இல்லை. நீங்கள் செய்திகளைப் தொடர்ந்து படித்து புரிந்துகொண்டு வருகிறீர்கள் என்றால், உக்ரேனில் நேட்டோவின் தலையீட்டிற்கான செயலூக்கமான விவாதங்கள் உள்ளன. பைடெனும் அவரது சகாக்களும் நேட்டோவில் உள்ள சக-சதிகாரர்களும் அணுஆயுத போர் அபாய ரஷ்யாவுடன் ஆபத்தான சூதாட்ட விளையாட்டை விளையாடி வருகின்றனர். வெகுஜன மரணத்தின் சாத்தியக்கூறு குறித்த அவர்களின் அலட்சியத்தை அவர்கள் நிரூபித்துள்ளனர். கோவிட் தொடர்பான அவர்களின் அணுகுமுறையிலும், அமெரிக்காவின் பூகோள மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதால் ஏற்பட்ட நூறாயிரக்கணக்கான உக்ரேனிய உயிர்களை அவர்கள் தியாகம் செய்துள்ள விதத்திலும் அவர்களின் அலட்சியத்தை நிரூபித்துள்ளனர். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை இராணுவ மோதலின் ஏற்றுக்கொள்ளத்தக்க வடிவமாக பரிசீலிக்கும் அவர்களின் விருப்பத்திலும் அவர்களின் அலட்சியத்தை நிரூபிப்பதாக இருக்கின்றது.

நாம் மாபெரும் அரசியல் கேள்விகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளோம். அவற்றைத் தீர்க்க முடியும். ஆனால் அவற்றைத் தீர்ப்பதற்கு, நாம் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் பெருந்திரளான வெகுஜனங்களின் விசுவாசத்தை வென்றெடுக்க வேண்டும். ஆரோன் புஷ்னெல்லின் மரணத்திலிருந்தும், நமது காலத்தின் நெருக்கடியைப் புரிந்துகொள்வதிலிருந்தும் நாம் பெற வேண்டிய அடிப்படையான, படிப்பினையாக இருப்பது இதுவேயாகும்.

[1]“Suicide rates double among US soldiers between 2004 and 2009, research shows,” BMJ, published 6 March 2014

[2] Journal of Affective Disorders, Volume 148 (2013), 37-41.

[3] “Theses on Feuerbach”, Marx-Engels Collected Works, Volume 5 (New York: International Publishers, 1976), p. 7

[4] E. A. Preobrazhensky, The Preobrazhensky Papers, Archival Documents and Materials, Volume 1: 1886-1920, edited by Richard Day and Mikhail M. Gorinov, translated by Richard Day [Chicago: Haymarket Books, 2015], pp. 243-44

(அ) When the centrifugal forces of society are dominant, it means that there are strong tendencies pulling individuals or groups away from the center or core of society. These forces often lead to fragmentation or disintegration within society, as people become more focused on their individual interests or affiliations rather than on common goals or unity. In contrast, centripetal forces pull individuals or groups towards the center of society, promoting cohesion and unity among its members. When centrifugal forces prevail over centripetal forces, it indicates a situation where societal cohesion is weakened, and there is a greater emphasis on individualism or division rather than collective identity or solidarity.

(அ) சமூகத்தின் மையவிலக்கு மற்றும் சமூகத்தின் மையச்சேர்ப்பு : சமூகத்தின் மையவிலக்கு சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் போது, ​​சமூகத்தின் மையத்திலிருந்து தனிநபர்கள் அல்லது குழுக்களை இழுக்கும் வலுவான போக்குகள் உள்ளன என்று அர்த்தம். இந்த சக்திகள் பெரும்பாலும் சமூகத்திற்குள் துண்டு துண்டாக அல்லது சிதைவை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் மக்கள் பொதுவான குறிக்கோள்கள் அல்லது ஒற்றுமையைக் காட்டிலும் தங்கள் தனிப்பட்ட நலன்கள் அல்லது இணைப்புகளில் அதிக கவனம் செலுத்த வைக்கப்படுகிறார்கள். மாறாக, மையச்சேர்ப்பு சக்திகள் தனிநபர்கள் அல்லது குழுக்களை சமூகத்தின் மையத்தை நோக்கி இழுக்கின்றன, அதன் உறுப்பினர்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கின்றன. மையச்சேர்ப்பு விட மையவிலக்கு சக்திகள் மேலோங்கும் போது, ​​அது சமூக ஒருங்கிணைப்பு பலவீனமடையும் சூழ்நிலையைக் குறிக்கிறது, மேலும் கூட்டு அடையாளம் அல்லது ஒற்றுமையை விட தனிநபர்வாதம் அல்லது பிரிவினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Loading