ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக உக்ரேனுக்கு பிரெஞ்சு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான அழைப்பை மக்ரோன் மீண்டும் வலியுறுத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வாரயிறுதியில் Le Parisien செய்தித்தாளுக்கு அளித்த ஒரு நேர்காணலில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், உக்ரேனில் தரைப்படை நடவடிக்கைகள் “ஏதோவொரு கட்டத்தில்” அவசியமாக இருக்கலாம் என்று மீண்டும் வலியுறுத்தினார். நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய படைகள் போர்முனையில் ஒரு இராணுவத் தோல்வியை முகங்கொடுக்கின்ற நிலையில், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலாந்து ஆகியவை ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்துவதற்கு ஒன்றுபட்ட ஆதரவை அறிவித்த வெள்ளிக்கிழமையன்று பேர்லினில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மக்ரோன் இந்தப் பேட்டியை அளித்தார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், மையத்தில், பிப்ரவரி 26, 2024 திங்கட்கிழமை, பாரிஸில் உள்ள எலிசே அரண்மனையில் ஒரு உரையை நிகழ்த்துகிறார். [AP Photo/Gonzalo Fuentes]

மக்ரோன் Le Parisien க்கு இவ்வாறு தெரிவித்தார்: “அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாரிப்பு செய்வதே எங்கள் கடமையாகும்,” அவர் மேலும் கூறினார்: “இத்தகைய சில சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப அவர்களின் பொறுப்புகளை ஏற்பார்கள் என்பதிலும் நான் உறுதியாக நம்புகிறேன்.”

ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்குள் ஒரு தரைப்படைத் தலையீட்டிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன என்பதை மக்ரோன் தெளிவுபடுத்தி வருகிறார். இது நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே அணு ஆயுதப் போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகிறது. அவர் கூறினார், அதாவது “அநேகமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில்—நான் அதை விரும்பவில்லை, நான் இந்த முன்முயற்சியை எடுக்க மாட்டேன்— ரஷ்ய படைகளை எதிர்ப்பதற்கு களத்தில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும், அவை என்னவாக இருந்தாலும். நம்மால் அதைச் செய்ய முடியும் என்பதே பிரான்சின் பலம்,” என்றார்.

ரஷ்யாவை எதிர்த்துப் போராட ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்குள் துருப்புக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளன என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். “ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள், மிகச் சிறிய நாடுகள் அல்ல, முற்றிலும் எங்கள் பக்கம் உள்ளன,” என்று மக்ரோன் கூறினார்.

பாரிஸில் பிப்ரவரி 26 அன்று நடந்த மாநாட்டில் ரஷ்யாவை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவதை நேட்டோ சக்திகள் நிராகரிக்கவில்லை என்று மக்ரோன் கூறிய சில வாரங்களுக்குப் பின்னர் உக்ரேனுக்கு துருப்புகளை நிலைநிறுத்துவதற்கான மக்ரோனின் அழைப்பு வந்தது. அந்த நேரத்தில், மக்ரோன் அறிவிக்கையில், உக்ரேனில் ரஷ்ய வெற்றியைத் தடுக்க “அனைத்து சாத்தியம்” இருப்பதாகவும், தனிப்பட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவது “விலக்கப்படவில்லை” என்றும் கூறினார்.

ஆரம்பத்தில், கடந்த மாதம் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கு மக்ரோன் சமிக்ஞை செய்த பின்னர், பிரெஞ்சு அதிகாரிகள் அவரது கருத்தைக் குறைத்துக் காட்டினர். அவ்வாறு செய்வதற்கு எந்த உறுதியான திட்டங்களும் இல்லை என்று கூறினர். வெளியுறவு மந்திரி ஸ்டீபன் செஜோர்னே கூறுகையில், குறிப்பிட்ட தேவைகளுக்காக பாரிஸ் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பலாம், ஆனால் ரஷ்யாவுடன் ஒரு போரில் சண்டையிட அல்ல என்று வாதிட்டார். செஜோர்னே கூறினார், “உக்ரேனை ஆதரிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை நாம் பரிசீலிக்க வேண்டும். இவை மிகவும் குறிப்பிட்ட தேவைகளுக்கு விடையிறுக்க வேண்டும், குறிப்பாக கண்ணிவெடி அகற்றல், இணையவழிப் பாதுகாப்பு, உக்ரேனிய பிராந்தியத்தின் தளத்திலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

அவர் மேலும் கூறினார்: “ அதன் சில நடவடிக்கைகளுக்கு போரிடுவதற்கு எல்லையைத் தாண்டாமல், உக்ரேனிய பிராந்தியத்தில் ஒரு இருப்பு தேவைப்படலாம். எதையும் நிராகரிக்கக்கூடாது. இதுதான் இன்றும் ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருந்தது, இப்போதும் உள்ளது.”

எவ்வாறிருப்பினும், செஜோர்னேயின் மறுப்புகள் ரஷ்யாவுக்கு எதிரான போர் திட்டங்களை மறைக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அணு ஆயுதப் போர் அபாயத்தை மறைக்கவும் வடிவமைக்கப்பட்ட பொய்கள் என்பதை மக்ரோனின் சமீபத்திய நேர்காணலும், கடந்த வார பேர்லின் உச்சிமாநாட்டில் தெரிவித்த கருத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. உண்மையில், ரஷ்யா மீது போர் தொடுக்க பிரான்ஸ் அதன் சொந்த இராணுவப் படைகளைப் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்று மக்ரோன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Le Parisien பத்திரிகையானது மக்ரோனிடம் வினவியது: “இராணுவத் தளபதிகள் இராணுவத் தயாரிப்புகளுக்கு ‘ஒரு வேளை’ தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்களா?” இதற்கு, மக்ரோன் பதிலளித்தார், “அனைத்து சூழ்நிலைகளுக்கும் நம்மை தயார் செய்து கொள்வதே நமது கடமையாகும். அது ஒரு தவறாக இருக்கும்; இதைச் செய்யாமல் இருப்பது தவறு” என்றார்.

இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டு, ஐரோப்பிய நேட்டோ சக்திகள் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மூன்றாம் உலகப் போரைத் தீவிரப்படுத்துவதற்கான பாதையைத் திறந்து விட்டுள்ளன.

நேட்டோ சக்திகள் துருப்புக்களை நிலைநிறுத்தும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஒரு போரின் பரந்த விரிவாக்கத்திற்கு வழிவகுக்கப் போவதாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரம், புட்டின் பின்வருமாறு எச்சரித்தார்: “ஒரு இராணுவ-தொழில்நுட்ப கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். ... ரஷ்யாவுடன் இனியும் சிவப்புக் கோடுகள் இல்லை என்று கூறும் அரசாங்கங்களைப் பொறுத்த வரையில், இந்த விடயத்தில், ரஷ்யாவும் அவர்களுடன் இனி சிவப்புக் கோடுகளைக் கொண்டிருக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்றார்.

மக்ரோன் வியாழனன்று அவரது பிரதான நேர TF1 தொலைக்காட்சி நேர்காணலின் போது, அணு ஆயுத போர் அபாயம் குறித்த புட்டினின் கருத்துக்களுக்கு அவரது சொந்த அச்சுறுத்தல்களைக் கொண்டு விடையிறுத்தார். அவர் கூறினார், “நாம் முதலில் பாதுகாக்கப்படுவதாக உணர வேண்டும், ஏனென்றால் நாம் ஒரு அணுசக்தி நாடாக இருக்கிறோம். நாங்கள் தயாராக இருக்கிறோம், [அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு] எங்களிடம் ஒரு கோட்பாடு உள்ளது,” என்றார்.

புட்டினின் எச்சரிக்கை ஒருபுறம் இருந்தாலும், மக்ரோன் ரஷ்யாவுக்கு எதிரான அவர்களின் அச்சுறுத்தல்களின் சாத்தியமான பேரழிவுகரமான பின்விளைவுகளைப் புறக்கணித்து, போர் அபாயத்தைக் குறைத்துக் காட்டி வருகிறார்.

இவ்விதத்தில், பேர்லினில் போர் உச்சிமாநாட்டிற்கு செல்வதற்காக மக்ரோன் உக்ரேனுக்கான ஒரு பயணத்தை இரத்து செய்தார் என்ற செய்திகள் குறித்து Le Parisien க்கு அவர் கருத்துரைக்கையில்: “ஆரம்பத்தில், நான் உக்ரேனுக்கு செல்ல நினைத்தேன். நான் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஜேர்மனியையும், போலந்தையும் என் பக்கத்தில் இன்னும் அதிகமாகவும், வித்தியாசமாகவும் செய்ய சம்மதிக்க வைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது என்று கூறினேன். நான் பின்னர் உக்ரைன் செல்வேன்” என்று மக்ரோன் கூறினார்.

மக்ரோனின் முடிவில் அநேகமாக ஒரு முக்கிய பாத்திரம் வகித்த மற்றொரு காரணி, ஜெலென்ஸ்கியை சந்திக்க கிரேக்க பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்ஸோடாகிஸ் மார்ச் 6 அன்று உக்ரேனுக்கு விஜயம் செய்ததன் விளைவாக இருந்தது. ஜெலென்ஸ்கியும் மிட்ஸோடாகிஸும் துறைமுக நகரமான ஒடெசாவில் இருந்தபோது, அவர்கள் சந்தித்துக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஒரு ரஷ்ய ஏவுகணை விழுந்து வெடித்தது. ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் தனது டெலிகிராம் சேனலில் ஒரு செய்தியில் இது உக்ரைனுக்கு விஜயம் செய்யும் நேட்டோ அரசுத் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று உறுதிப்படுத்தினார்.

“அனைவருக்கும் எல்லாம் தெளிவாக உள்ளது, ஒடெசாவில் குழு மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை, அவர்கள் இலக்காக இருந்திருந்தால், அது தாக்கப்பட்டிருக்கும்” என்று மெட்வெடேவ் அச்சுறுத்தினார். “ஆனால் இது துரதிர்ஷ்டவசமானது. முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட இடத்திற்கு அவர்கள் விரைந்தது மிகவும் மோசமானது.”

பிரெஞ்சு முதலாளித்துவ அரசுக்குள், இராணுவ தீவிரப்பாட்டின் அபாயம் வேகமாக அதிகரித்து வருவது குறித்து இராணுவப் பிரிவுகளின் கவலை அதிகரித்து வருகின்றன. வலதுசாரி சமூக-ஜனநாயக இதழான மரியான் (Marianne)  பிரெஞ்சு இராணுவ ஆதாரவளங்களில் இருந்து வந்த அறிக்கைகளின் ஒரு பட்டியலை பிரசுரித்தது.  அதில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பின்வருமாறு கூறினார்: “நம்மை நாமே கிண்டல் செய்யக் கூடாது, ரஷ்யர்களுடன் ஒப்பிடுகையில், எங்களிடம் ஒரு வேடிக்கை காட்டும் இராணுவம்தான் உள்ளது!” 

பிரான்சில் 205,000, ஜேர்மனி 184,000 மற்றும் இத்தாலியில் 170,000 உடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவின் கடமையிலுள்ள இராணுவ எண்ணிக்கை 1.5 மில்லியனாக உள்ளது. உக்ரேனுக்கு பாரிய நேட்டோ இராணுவ உதவி இருந்தபோதிலும், ரஷ்யப் பீரங்கிகள் முன்னரங்க நிலைகளில் உக்ரேனிய பீரங்கிகளை விட 10 க்கு 1 என்ற விகிதத்தில் அதிகமாக உள்ளன என்பதையும் வியாழனன்று இரவு மக்ரோன் ஒப்புக் கொண்டார். இதனால் தான் மக்ரோன் அனைவருக்குமான இராணுவ சேவையை மீண்டும் ஸ்தாபிக்க அழுத்தமளித்து வருகிறார், ஐரோப்பிய ஒன்றியமானது ஐரோப்பாவை ஒரு போர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு அழைப்பு விடுத்து வருகிறது.

கடந்த வாரம், பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றமானது பிரான்ஸ் மற்றும் உக்ரேனுக்கு இடையிலான 10 ஆண்டு பாதுகாப்பு உடன்படிக்கைக்கு பரந்த ஆதரவை வழங்கியது. இந்த உடன்பாடு இராணுவ ஒத்துழைப்பை, குறிப்பாக பீரங்கி மற்றும் வான் பாதுகாப்பு துறைகளில் வலுப்படுத்த அழைப்பு விடுக்கிறது. 2024 இல், பாரிஸ் “மூன்று பில்லியன் யூரோக்கள் வரை கூடுதல் ஆதரவு” உதவியை வழங்கும் என்று பிரெஞ்சு பிரதம மந்திரி காப்ரியல் அட்டல் அறிவித்தார். உக்ரேனிய போருக்கான பில்லியன் கணக்கான செலவுகள், கடந்த ஆண்டு மக்ரோனின் வெடிப்பார்ந்த செல்வாக்கிழந்த ஓய்வூதிய சீர்திருத்தத்தைப் போன்று, சமூக செலவினங்களில் பாரிய வெட்டுக்கள் மூலமாக நிதியாதாரமாக பெறப்பட உள்ளன.

மக்ரோன் மற்றும் அவரது ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, பாரிஸின் இலத்தீன் பகுதியில், பாந்தியன் முன்னால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

உக்ரேனுக்கு ஐரோப்பிய தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கு இங்கே பாரிய மக்கள் எதிர்ப்பு உள்ளது: ஜேர்மனியில் பதிலளித்தவர்களில் 81 சதவீதத்தினரும் பிரான்சில் 68 சதவீதத்தினரும் ஐரோப்பிய தரைப்படை துருப்புகளை அனுப்புவதை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டின. எவ்வாறிருப்பினும், போர் தீவிரப்படுத்தப்படுவதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து பெருகிவரும் எதிர்ப்புக்கு மத்தியில், ஆளும் வர்க்கம் அதன் இராணுவ சதித்திட்டங்களை அரசியல் ஸ்தாபகத்தில் எதிர்ப்பின்றி செயல்படுத்துகின்ற நிலையில், வரவிருக்கும் போர் அபாயம் குறித்து பொதுமக்கள் இருட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களின் முதுகுக்குப் பின்னால் மக்ரோன் தயாரிப்பு செய்து வரும் போருக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவங்களோ அல்லது போலி-இடது கட்சிகளில் உள்ள அவற்றின் பாதுகாவலர்களோ பிரெஞ்சு ஏகாதிபத்திய போரையும் அதன் குற்றங்களையும் எதிர்க்கப் போவதில்லை. முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஏகாதிபத்திய போருக்கு எதிராகப் போராடி, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு, போர்-எதிர்ப்பு கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதே முன்னோக்கிய பாதையாகும்.

Loading