ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தும் பேர்லின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்த சூளுரைத்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (இடது), ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் [AP Photo/Ebrahim Noroozi]

ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் போலாந்து பிரதம மந்திரி டொனால்ட் டுஸ்க் ஆகியோர் நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய படைகள் போர்முனையில் உருக்குலைந்து வருகின்ற நிலையில், ரஷ்யாவுடன் போரை தீவிரப்படுத்துவதற்கு அவர்களின் ஒன்றுபட்ட ஆதரவை அறிவிக்க மார்ச் 15 அன்று பேர்லினில் சந்தித்தனர்.

ஐரோப்பிய சக்திகளின் போர்வெறி அறிக்கைகள் உக்ரேனில் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஒரு முழுவீச்சிலான போரைத் தூண்ட அச்சுறுத்துகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், பிப்ரவரி 26 அன்று பாரிஸ் உச்சிமாநாட்டில், மக்ரோன் கூறுகையில், ரஷ்யாவை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவதை அவர் நிராகரிக்கவில்லை என்றார். ரஷ்யாவிற்குள் ஆழமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரேனுக்கு நீண்டதூர டாரஸ் ஏவுகணைகளை அனுப்ப பேர்லின் தயாரிப்பு செய்து வருகிறது என்பதை ஜேர்மன் அதிகாரிகளின் கசிந்த ஒலிப்பதிவு பின்னர் இதனை உறுதிப்படுத்தியது.

ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ஷொல்ஸ், மக்ரோன் மற்றும் டஸ்க் ஆகியோர் போரைத் தீவிரப்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவாக அவர்கள் ஒன்றுபட்டிருப்பதாக தெரிவித்தனர். தங்களது அதிர்ச்சியூட்டும் ஆக்கிரோஷ நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய பின்னர், அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், 20 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பத்திரிகையாளர் மாநாட்டை முடித்துக் கொண்டனர்.

“ரஷ்ய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான உக்ரேனின் போராட்டத்தின் மிகப்பெரிய அரசியல், இராணுவ மற்றும் நிதி ஆதரவாளர்களில் எங்கள் மூன்று அரசுகளும் உள்ளன. நாங்கள் உக்ரேனுடன் நெருக்கமாகவும், அசைக்க முடியாத வகையிலும் நிற்கிறோம். ... ஐரோப்பாவில் சுதந்திரத்தையும் அமைதியையும் பாதுகாக்க ஐக்கியமும் கூட்டு நடவடிக்கையும் இன்றியமையாதவை. முன்னெப்போதையும் விட, நமது ஒற்றுமையே நமக்கு பலத்தை அளிக்கிறது” என்று ஷொல்ஸ் கூறினார்.

சமாதானத்தை நேசிப்பதாக சிடுமூஞ்சித்தனமாக அறிவித்த அதேவேளையில், ஷொல்ஸ் மூன்று அரசாங்கங்களின் போர் திட்ட நிரலை முன்வைத்தார். உலக சந்தையில் உக்ரேனுக்கு கூட்டாக ஆயுதங்கள் வாங்குவதற்கும், உக்ரேனில் ஆயுத தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், உக்ரேனுக்கு நீண்டதூர பீரங்கிகளை வழங்குவதற்கும் மற்றும் உக்ரேனுக்கு கூடுதல் இராணுவ பயிற்சியாளர்களை அனுப்புவதற்கும் அவர் சூளுரைத்தார். உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவியை இன்னும் கூடுதலாக 5 பில்லியன் யூரோ வரை திரட்ட அவர் வாக்குறுதியளித்தார். யூரோ மண்டல வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஐரோப்பாவிற்கான எண்ணெய் விற்பனையில் இருந்து கிடைக்கும் ரஷ்ய நிதிகளின் வட்டி வருமானத்தை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த அவர் உறுதியளித்துள்ளார். இது ஒரு பிரம்மாண்டமான சர்வதேச திருட்டு நடவடிக்கையாகும்.

“சான்சிலர் கூறியதைப் போல, நாங்கள் மூவருமே ஒரே விருப்பத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் தயாராகவும், ஒருங்கிணைந்தும், ஏதாவது செய்ய தயாராகவும் இருக்கிறோம்” என்று மக்ரோன் ஷொல்ஸைப் பாராட்டினார்.

அவர்கள் என்ன செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை மக்ரோன் கூறவில்லை. ஆனால், ஷொல்ஸ் மற்றும் டஸ்க்கின் பக்கத்தில் நிற்கையில், உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான அவரது பிப்ரவரி 26 அச்சுறுத்தலை மற்ற ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எதிர்த்தனர் என்ற ஊடக செய்திகளை அகற்றுவதற்கு அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அவர் மேலும், இன்றைய கூட்டம் நமது ஒற்றுமையை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகும். வைய்மார் முக்கோணம் [பேர்லின், பாரிஸ் மற்றும் வார்சோவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான உத்தியோகபூர்வ பெயர்] உள்ளடக்கத்தில் நாங்கள் மூவரும் உடன்பட்டுள்ளோம் என்பதையும் நாங்கள் கூற விரும்புகிறோம்” என்று கூறினார்.

போர் விரிவாக்கத்திற்கான மூன்று சக்திகளின் ஒன்றுபட்ட ஆதரவை டுஸ்க் பாராட்டினார்: “இன்று, நாம் உண்மையிலேயே ஒரே குரலில், குறிப்பாக நமது கண்டத்தின் பாதுகாப்பு குறித்தும், நமது நாடுகளின் பாதுகாப்பு குறித்தும் பேசினோம். ... தயங்காத அதிபருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். சில நேரங்களில், அரசியலில், பேச்சுவார்த்தைகள் நீண்ட நேரம் எடுக்கும், தயக்கங்கள் உள்ளன. இங்கு அப்படி இல்லை” என்றார். “வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், உக்ரேனிய நிலைமை மோசமடையாமல் மேம்படும் வகையில், ‘இங்கும் இப்போதும் (hic et nunc)’ அதாவது, இங்கும் இப்பொழுதேயும் (here and now) நமது பணத்தை செலவிடுவதற்கு” அவர் அழைப்புவிடுத்தார்.

மக்ரோனைப் போலவே டஸ்க், டிரான்ஸ்னிஸ்ட்ரியா (Transnistria) பிராந்தியத்தில் ரஷ்ய அமைதிப்படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள மேற்கு உக்ரேனின் எல்லையில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய அரசான “மோல்டோவா குடியரசை கவனித்துக் கொள்ள” அழைப்பு விடுத்தார். உக்ரேனிய இராணுவத்தின் சங்கடத்திற்கு இடையே, ரஷ்ய துருப்புக்கள் இறுதியில் ஒடெசா துறைமுகத்தையும் மோல்டோவாவைச் சுற்றியுள்ள உக்ரேனின் முழுப் பகுதியையும் கைப்பற்றக்கூடும் என்ற ஊகங்கள் உள்ளன.

போலாந்தில் பெருகும் நெருக்கடி குறித்தும் டுஸ்க் மறைமுகமாக குறிப்பிட்டார், அங்கு விவசாயிகள் உக்ரேனிய தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு எதிராக உக்ரேனிய எல்லையை தடை செய்து வருகின்றனர். “நாங்கள் உக்ரேனுடனான வர்த்தகம் குறித்தும் விவாதித்தோம். இது இப்போது போலந்தில் ஒரு பிரச்சினை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனது கருத்தைப் புரிந்துகொண்டதற்கும், போலந்து நிலைப்பாட்டை ஆதரிக்க தயாராக இருப்பதற்கும் நன்றி,” என்று டஸ்க் கூறினார்.

இந்த “ஆதரவு” பேர்லினில் ஷொல்ஸ், மக்ரோன் மற்றும் டஸ்க் பகிரங்கமாக அறிவித்ததற்கும் அப்பால் செல்கிறது. திரைக்குப் பின்னால், ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடிய நீண்டகால திட்டங்கள் வரையப்பட்டு வருகின்றன. சமீபத்திய நாட்களில், நேட்டோ ரஷ்ய இலக்குகளைத் தாக்கினாலோ அல்லது தரைப்படை துருப்புகளுடன் மோதிக்கொண்டாலோ அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட ஒரு பாரிய பதிலடியைத் தொடங்க அது விரும்புவதாக கிரெம்ளின் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வந்துள்ளது.

மார்ச் 13 அன்று, அரசு தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தரைப்படை துருப்புகளை நிலைநிறுத்துவது குறித்த மக்ரோனின் கருத்துக்கள் குறித்து கருத்துரைத்தார்: “ஒரு இராணுவ-தொழில்நுட்ப கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். ... ரஷ்யாவுடன் இனியும் சிவப்புக் கோடுகள் இல்லை என்று கூறும் அரசாங்கங்களைப் பொறுத்த வரையில், இந்த விடயத்தில், ரஷ்யாவும் அவர்களுடன் இனி சிவப்புக் கோடுகளைக் கொண்டிருக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்றார்.

எவ்வாறிருந்த போதிலும், முன்னணி ஐரோப்பிய நேட்டோ சக்திகள் போரைத் தீவிரப்படுத்தும் திட்டங்களுடன் அழுத்தமளித்து வருகின்றன. கியேவுக்கு டாரஸ் உலங்கு ஏவுகணைகளை வழங்குவதை ஷொல்ஸ் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கின்ற அதேவேளையில், ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ் “அனைத்து டாரஸ் [ஏவுகணைகளையும்] செயல்பாட்டுக்கு கொண்டு வர” உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜேர்மன் நாளிதழ் டை வெல்ட் (Die Welt ) தெரிவிக்கிறது.

எம்பிடிஏ ஏவுகணைகளுக்கு உற்பத்தியாளர் எம்பிடிஏ சான்றிதழ் வழங்கியிருப்பது “சான்சிலரின் மனமாற்றத்தின் அறிகுறி” அல்ல என்றாலும், “ஜேர்மன் இராணுவத்தில் உள்ள அனைத்து டாரஸையும் செயல்பட வைப்பதற்கான முடிவு கூட்டாட்சி அரசாங்கத்திற்கு புதிய தெரிவுகளைத் திறந்து விடுகிறது. அவர் தனது சொந்த தேசிய பாதுகாப்பை அம்பலப்படுத்தாமல் உக்ரேனுக்கு அதிக ஏவுகணைகளை வழங்க முடியும்” என்று டை வெல்ட் எழுதுகிறது. சமீபத்தில் லண்டனால் முன்மொழியப்பட்ட பரிமாற்ற ஒப்பந்தம் என்றழைக்கப்படுவது, “அநேகமாக சாத்தியமாகும்.”

மக்ரோனே பேர்லினுக்கு பயணிப்பதற்கு முன்னதாக உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான அவரது அழைப்பை அவரே புதுப்பித்தார். வியாழனன்று மாலை தேசிய தொலைக்காட்சியில் பிரதான நேர நேர்காணல் ஒன்றில், அவர் கூறினார்: “இந்த தெரிவுகள் அனைத்தும் சாத்தியமே. உக்ரேனில் அமைதியை ஏற்படுத்த, நாம் பலவீனமாக இருக்க முடியாது,” என்றார். “ரஷ்யா போரில் வெல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நமது இலக்கை எட்டுவதற்கு அவசியமான வழிவகைகளைப் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை தீர்மானத்துடனும், விருப்பத்துடனும் மற்றும் தைரியத்துடனும் கூறுமாறு” அவர் அழைப்புவிடுத்தார்.

இந்த அச்சுறுத்தல்கள் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பரந்த நேட்டோ அணிதிரட்டலுடன் கைகோர்த்து வருகின்றன. பனிப்போர் முடிந்ததற்குப் பிந்தைய நேட்டோவின் மிகப்பெரிய பயிற்சியான “உறுதியான பாதுகாவலர் (Steadfast Defender)” பயிற்சி தற்போது நடந்து வருகிறது. இதில் 32 நாடுகளைச் சேர்ந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புக்கள் பங்கேற்கின்றனர். இந்த வாரம், டிராகன் 24 பயிற்சியின் பாகமாக 20,000ம் துருப்புக்கள் விஸ்டுலா (Vistule) ஆற்றைக் கடந்து போலந்திற்குள் நுழைந்தன.

நேட்டோவின் இராணுவத் தலைவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நேரடியான போருக்கு அவர்கள் தயாரிப்பு செய்து வருகின்றனர் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. இந்த ஒத்திகை உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளிப்புற தடுப்புமுறையின் ஒரு சமிக்ஞையாகும், என்று இந்த பயிற்சிக்கு தலைமை கொடுக்கும் அதிகாரிகளில் ஒருவரான ஜேர்மன் பிரிகேடியர் ஜெனரல் கன்னர் புரூக்னர் தெரிவித்தார்: “பயணிக்கும் ஒவ்வொரு கப்பலும், பறக்கும் ஒவ்வொரு விமானமும், வானில் பறக்கும் ஒவ்வொரு ஹெலிகாப்டரும், உருளும் ஒவ்வொரு டாங்கியும் ஒரு செய்தியை அனுப்புகின்றன. ... எங்களிடம் உள்ள தகைமைகளை நாங்கள் காட்டி வருகிறோம், தேவைப்பட்டால் அவற்றை நிலைநிறுத்துவதற்கான தீர்மானத்துடன் நாங்கள் அதை இணைத்து வருகிறோம்,” என்றார்.

ஆளும் வர்க்கம் அதன் போர் திட்டங்கள் குறித்தும் அணுஆயுத விரிவாக்கம் உட்பட அதன் பேரழிவுகரமான பின்விளைவுகள் குறித்தும் பொதுமக்களை இருட்டில் வைத்துள்ளது, ஏனென்றால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்கனவே பாரிய எதிர்ப்பு உள்ளது என்பது ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். சமீபத்திய ARD-Deutschlandtrend கருத்துக்கணிப்பின்படி, 61 சதவீதத்தினர் உக்ரேனுக்கு டாரஸ் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்குவதை எதிர்க்கின்றனர். தரைப்படை துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது, ஜேர்மனியில் 81 சதவீதமும் பிரான்சில் 68 சதவீதமும் ஆகும்.

நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் போர் திட்டங்களுக்கு சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த எதிர்ப்பை எவ்வாறு அணிதிரட்டுவது, நாகரிகத்தை அழிக்கக் கூடிய ஒரு பேரழிவுகரமான தீவிரப்பாட்டை எவ்வாறு தடுப்பது மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த அமெரிக்க-நேட்டோ போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பதே தீர்மானகரமான கேள்வியாகும்.

இங்கும் இப்பொழுதே, போர் ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் பரவக்கூடிய அபாயம் குறித்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் விழிப்பூட்டுவதற்கு போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களின் பரந்த ஒழுங்கமைப்பு அவசியமாகும். பல்வேறு முதலாளித்துவ அரசியல்வாதிகளும் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான முழுமையான போர் குறித்து அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை மறுப்பது, போர் விரிவாக்கத்திற்கான அவர்களின் ஒருமனதான ஆதரவால் அம்பலப்படுத்தப்படும் பொய்களாகும். போர் தொடுத்து வரும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தில் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு ஐக்கியப்பட்ட, சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இதை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.

Loading