போருக்கான பைத்தியக்காரத்தனமான ஓட்டம்: உக்ரேனுக்கு டோரஸ் உலங்கு ஏவுகணைகளை அனுப்புதல், நேட்டோ தரைப்படைகளை குவித்தல், அணுகுண்டைப் பயன்படுத்துதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முதல் உலகப் போர் வெடித்த நூறாவது ஆண்டான 2014ல், பெரும் வல்லரசுகள் போருக்குள் “சறுக்கி சென்று விட்டனவா” அல்லது “தூக்கத்தில் நடந்து சென்றனவா” அல்லது அவர்கள் வேண்டுமென்றே அதைத் தொடங்கினார்களா என்ற பழைய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் படைக்குவிப்பில் இந்த கேள்வி மித மிஞ்சியதாக உள்ளது. ஐரோப்பிய சக்திகள் போருக்குள் சறுக்கிச் செல்லவில்லை, அவை அதற்குள் நேரடியாக தலையை முங்குகின்றன.

சமீபத்திய நாட்களில், முன்னணி ஐரோப்பிய அரசியல்வாதிகள், இராணுவத் தலைவர்கள் மற்றும் கருத்து உருவாக்குபவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் போதுமான அளவு செல்லவில்லை என்று ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர். துணிச்சலுக்கான சோதனையில் ஈடுபடும் வாலிபப் பையன்களைப் போல, ஒருவரையொருவர் கோழைகள், பலவீனமானவர்கள் மற்றும் புட்டினின் பயனுள்ள முட்டாள்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர்.

தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய இந்தப் புகைப்படத்தில், தென் கொரியாவில் நாட்டின் மேற்குக் கடற்கரையில், புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017 அன்று ஒரு பயிற்சியின் போது டோரஸ் ஏவுகணை பறக்கிறது [AP Photo/South Korea Defense Ministry]

மேற்கத்திய துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்ப வேண்டும் என்ற பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முன்மொழிவுடன் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) பகிரங்கமாக முரண்பட்டதை அடுத்து, “கோழைகளாக இருக்க வேண்டாம்” என்று மக்ரோன் தனது ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

கடந்த கோடைகாலம் வரை பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளராக இருந்த பென் வாலஸ், உக்ரேனுக்கு டோரஸ் உலங்கு ஏவுகணைகளை வழங்க மறுத்ததற்காக, ஷோல்ஸை “தவறான நேரத்தில் தவறான வேலையில் இருந்த தவறான மனிதர்” என்று திட்டினார்.

ரஷ்ய ஊடகங்கள், ஜேர்மன் இராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடலை இடைமறித்து கேட்டதை வெளியிட்டதைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ்களின் சொந்த வெளியீடான பிரிட்டனின் டெலிகிராப், “இராஜதந்திர ஆதாரத்தை” மேற்கோள் காட்டி, ரஷ்யா, “ஜேர்மனியை கூட்டணியில் பலவீனமான இணைப்பாக அடையாளம் கண்டுள்ளதுடன் ஜெர்மனியை இந்த சமன்பாட்டிலிருந்து வெளியே எடுக்க க்கூடிய ஒரு பயனுள்ள முட்டாளாக ஷோல்ஸ் இருக்கிறார்,” என்று எழுதியது.

ஷோல்ஸ், தனது பங்கிற்கு, அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் உக்ரேன் போரில் ஜேர்மனியைப் போல் பணத்தையும் ஆயுதங்களையும் கொட்டியதில்லை என்று பெருமையாகக் கூறுகிறார். பொருளாதார ஆராய்ச்சிக்கான கீல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட உக்ரேன் ஆதரவு கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, போரின் முதல் இரண்டு ஆண்டுகளில் ஜேர்மன் உதவிக் கொடைகள் மொத்தம் 22 பில்லியன் யூரோவாகும். இதில் 17.7 பில்லியன் யூரோ இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே ஆனதாகும். மொத்தம் 15.7 பில்லியன் யூரோவுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும், 1.8 பில்லியன் யூரோவுடன் பிரான்ஸ் 14வது இடத்திலும் உள்ளது.

அமெரிக்கர்கள் இணைவதற்கு முன்பாகவே லெபர்ட் டாங்கிகளை வழங்குவதை அவர் ஒருமுறை எதிர்த்தது போன்றே, காலம் கணிவதற்கு முன்பே டோரஸ் ஏவுகணைகளை விநியோகம் செய்வதை ஷோல்ஸ் எதிர்க்கிறார். அவர் ஜேர்மனியை முன்கூட்டியே அம்பலப்படுத்த விரும்பவில்லை. மறுபுறம், அவர் டோரஸ் ஏவுகணைகளை விநியோகம் செய்வதற்கான தனது விருப்பத்தை மூடிமறைக்கவில்லை.

ஜேர்மனிக்குள்ளேயே “யார் மிகவும் பொறுப்பற்ற போர்வெறியர்” என்ற போட்டியும் நடத்தப்படுகிறது. அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் ஊடகங்கள் ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரமடைய செய்வதற்காக இரவு பகலாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

ZDF மாலை செய்தியில், டோரஸ் ஏவுகணைகளை விநியோகம் செய்ய மறுத்ததற்காக பசுமைக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்டன் ஹொஃப்ரீடர் கோபமாக தனது சொந்த ஆளும் கூட்டணியின் அதிபரை குற்றம் சாட்டினார். அவர் புட்டின் குறித்து தனது பலவீனத்தையும் தலைமை பற்றாக்குறையையும் வெளிகாட்டியதாக சாடினார். தற்காப்பு பரப்புரையாளரும், தன்னைத்தானே போர் நிபுணர் என்றும் கூறிக்கொள்ளும் எக்னஸ் ஸ்ராக்-ஸிம்மர்மன் (சுதந்திர ஜனநாயக கட்சி-FDP) தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிராக ஜெர்மனி பாராளுமன்றத்தில் வாக்களித்தார். உக்ரேனுக்கு டோரஸ் ஏவுகணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்தார்.

மக்ரோன், ஷோல்ஸ் மற்றும் ஏனைய அனைத்து போர் வெறியர்கள் எடுக்கும் அபாயகரமான நடவடிக்கைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. அவர்கள் உயிராபத்தான துப்பாக்கி ரவையை சுழற்றிவிட்டு சுடும் ரஷ்ய விளையாட்டை அணு குண்டுடன் ஆடுகிறார்கள்.

அவர்களின் பிரச்சாரத்தில் வெளிப்படையான முரண்பாடு உள்ளது. ஒருபுறம், அவர்கள் புட்டினை தீமையின் உருவகம், ஐரோப்பா முழுவதையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ள எந்த குற்றத்தையும் செய்ய வல்ல, ஹிட்லரின் மறுபிறவி என்று அரக்கத்தனமாக சித்தரிக்கிறார்கள். மறுபுறம், ரஷ்யாவின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் பற்றிய புட்டினின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அவர்கள் நிராகரித்ததுடன், அவற்றை ஒரு “உளறல்” என்றும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறுகின்றனர்.

போர் தொடங்குவதற்கு முன்பு போலவே, நேட்டோ கிழக்கில் அதன் விரிவாக்கத்தைத் தொடர்ந்தால் மற்றும் உக்ரேனுக்கு ஆயுதம் கொடுத்தால், ரஷ்யா இராணுவ ரீதியில் எதிர்வினையாற்றும் என்ற அனைத்து எச்சரிக்கைகளையும் அவர்கள் காற்றில் வீசினர். இப்போது அணுசக்தி அபாய அதிகரிப்பு பற்றிய எச்சரிக்கைகளுக்கு முகங்கொடுக்கையிலும் அதையே செய்கிறார்கள்.

இந்த நடத்தைக்கு ஒரே ஒரு விளக்கம் தான் உள்ளது: அமெரிக்க அரசாங்கம், பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகம் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் அணு குண்டுகளை தாங்களாகவே பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. நீண்ட காலமாக வெறும் தடுப்பு வழிமுறைக்காகத் தான் அவற்றை வைத்திருப்பதாக குறைத்துக் கூறிய அதே ஆயுதங்களை, தற்போது பயன்படுத்துவது குறித்து அவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

2014 இல், அவர்கள் கியேவில் ஒரு வலதுசாரி, மேற்கத்திய சார்பு ஆட்சி அதிகாரத்திற்கு வர உதவினர், பின்னர் திட்டமிட்டு மறு ஒழுங்கு செய்து உக்ரேனிய இராணுவத்தை மறுஆயுதமயப்படுத்தினர், இதன் வழியில் ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை வேண்டுமென்றே தூண்டிவிட்டனர். அவர்கள் ரஷ்யாவை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் வறண்டு போகச் செய்து, பரந்த இயற்கை வளங்களைக் கொண்ட மிகப்பெரிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும் என்று நம்பினர்.

இப்போது இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்குப் பிறகு உக்ரேனிய இராணுவம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், அவர்கள் போரை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சிறிய அளவில் நுழைக்கப்பட்டுள்ள நேட்டோ தரைப்படைகளை நிலைநிறுத்துதல், மொஸ்கோவை அடையக்கூடிய ஆகவும் துல்லியமாக தாக்கக்கூடிய டோரஸ் உலங்கு ஏவுகணைகளை வழங்குதல், ரஷ்ய எல்லையில் மிகப்பெரிய நேட்டோ சூழ்ச்சிகள், மற்றும் பால்டிக் மற்றும் கருங்கடல்களை நேட்டோ ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதும் மொஸ்கோவை மேலும் ஒரு இராணுவ பதிலடியைக் கொடுக்கத் தூண்டும் நோக்கம் கொண்டவையாகும்.

புட்டின் மீது செல்வாக்குச் செலுத்தும் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் நேட்டோவுடன் நேரடியான போர் தவிர்க்க முடியாதது என்று முடிவு செய்வார்களாயின், தாக்குதலே சிறந்த தற்காப்பு என்று அவர்கள் முடிவு செய்யக் கூடும். அது நேட்டோவுக்கு ஒரு பாரிய போர் விரிவாக்கத்திற்கான சாக்குப்போக்கைக் கொடுக்கக் கூடும்.

அது பைத்தியக்காரத்தனம். ஆனால் முதல் உலகப் போரில் ஜேர்மனி இருமுனைப் போரை நடத்தத் தயாரான ஷ்லிஃபென் திட்டம், மற்றும் உலக வெற்றிக்கான ஹிட்லரின் மேலும் ஈவிரக்கமற்ற திட்டங்களும் பைத்தியக்காரத்தனமாக இருந்தன. ஆயினும்கூட, அவை தளபதிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தால் கசப்பான முடிவு வரை செயல்படுத்தப்பட்டு ஆதரிக்கப்பட்டன.

முதலாளித்துவ சக்திகளின் வெளியுறவுக் கொள்கை, குறிப்பாக போர்க் காலங்களில், கான்டியன் தர்க்கத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக ஏகாதிபத்தியத்தின் வர்க்க தர்க்கத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பல தசாப்தங்களாக அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஊக வாணிப மூலதனம் மலைகள் போல் குவிந்து வரும் போது, உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி மீண்டும் ஒரு நிலையை அடைந்துள்ளது. அதாவது முதலாளித்துவத்தின் அடிப்படையில் அதிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழி மட்டுமே உள்ள நிலையை அடைந்துள்ளது: ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே உலகம் வன்முறை மூலமாக மறுபங்கீடு செய்யப்பட வேண்டும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை கொடூரமாக அடிபணியச் செய்யவேண்டும்.

இது தான் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அனைத்து தரப்புகளும் ரஷ்யாவிற்கு எதிரான போரை ஆதரிப்பதற்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ஆதரிப்பதற்கும் காரணமாக உள்ளது. போர்-சார்பு கொள்கையானது பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகளால் மட்டுமன்றி, சமீபத்திய தசாப்தங்களில் பங்குச் சந்தை மற்றும் சொத்து ஏற்றம் ஆகியவற்றில் இருந்து இலாபம் ஈட்டிய பணக்கார உயர்-நடுத்தர வர்க்கங்களின் ஊதுகுழல்களாலும் ஆதரிக்கப்படுகிறது. தொழிலாளர்களை ஒழுக்கப்படுத்துவதற்கான பெரும் நிறுவன எந்திரங்களாக மாற்றப்பட்டுள்ள தொழிற்சங்கங்களும், பசுமைவாதிகள், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சியைப் போலவே அதிகரித்துவரும் உலகப் போருக்குப் பின்னால் அணி திரண்டுள்ளன.

பசுமைவாதிகள், குறிப்பாக, விரிவடையும் போர் போதை மயக்கத்தில் உள்ளனர். அவர்கள் ஆரம்ப காலத்தில் அணு ஆயுத கிடங்குகளை முற்றுகையிட்டு தடுத்தனர். இன்று, அவர்கள் அணுகுண்டை பயன்படுத்துவதற்காக உரக்க குரல் கொடுக்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக, தொழிலாள வர்க்கமும் மக்களில் பரந்த பிரிவுகளும் போர்-சார்பு கொள்கையை நிராகரிக்கின்றன. ARD Deutschlandtrend கணக்கெடுப்பின்படி, தொடர்ச்சியான பிரச்சாரம் இருந்தபோதிலும், பதிலளித்தவர்களில் 61 சதவீதம் பேர் டோரஸ் உலங்கு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதை எதிர்க்கின்றனர். 29 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவாக உள்ளனர். தங்கள் ஆதரவாளர்களில் பெரும்பாலோர் உக்ரேனுக்கு டோஸ் ஏவுகணைகளை வழங்குவதற்கு ஆதரவாக இருப்பதாக பசுமைவாதிகளும் சுதந்திர ஜனநாயக கடசியினரும் மட்டுமே காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த வெகுஜன எதிர்ப்பானது, ஸ்தாபனக் கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் கட்டமைப்பிற்குள் இருந்தால், போர் மற்றும் வெகுஜன படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வரவோ, அணு ஆயுதப் படுகொலையைத் தடுக்கவோ முடியாது. ஒரு அணுவாயுத பேரழிவைத் தடுப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த இயக்கம் போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சமூக சமத்துவமின்மைக்கும் அதன் மூல காரணமான முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்துடன் இணைக்கிறது.

இதற்காகவே சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சர்வதேச சகோதர அமைப்புக்களும் போராடுகின்றன.

Loading