பிலிப்பைன்ஸ் அதிபர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சீனாவுக்கு எதிராக உரை நிகழ்த்தினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் தனது நாட்டின் முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் “பாங்பாங்” மார்கோஸ் ஜூனியருக்கு, பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கம், வியாழன் அன்று சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், 21 டிசம்பர் 2023 அன்று அகுனால்டோ முகாம் இராணுவத் தலைமையகத்தில் பிலிப்பைன்ஸின் ஆயுதப் படைகளின் 88வது ஆண்டு விழாவில் பேசுகிறார். [Photo: X/Twitter @albomp]

மார்கோஸின் பேச்சு அவருக்கு ஏன் விருந்து கொடுக்கப்பட்டது என்பதை விரைவில் தெளிவுபடுத்தியது. சீனாவை வெளிப்படையாகப் பெயரிடாமல், அவர் பெய்ஜிங் மீது மெல்லிய மறைமுகமான கண்டனத்தைத் தொடுத்த அதே நேரம், சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போருக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இரு அமெரிக்க நட்பு நாடுகளுக்கு இடையே இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.

“பிராந்தியத்தில் நாம் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் பங்காளிகளாக ஒன்றிணைய வேண்டும். இதை எந்த ஒரு நாடும் தனியாக செய்ய முடியாது. எந்த ஒரு சக்தியும் தனியாக அவர்களை எதிர்த்து நிற்க முடியாது,” என்று அவர் அறிவித்தார்.

சீனாவின் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு எனப்படுவதை கண்டனம் செய்ய வாஷிங்டனால் பயன்படுத்தப்படும் கையிருப்பில் உள்ள சொற்றொடர்களால் இந்த உரை நிரம்பியிருந்தது. பிலிப்பைன்ஸ், “பிராந்திய அமைதியைக் குலைக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையை சிதைக்கும் மற்றும் பிராந்திய வெற்றியை அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னணியில் உள்ளது” என்று அவர் அறிவித்தார். பிலிப்பைன்ஸும் ஆஸ்திரேலியாவும் “சட்டத்தின் ஆட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கும் எதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, எங்கள் பங்காளிகளுடன் ஒரணி சேர வேண்டியிருந்தது,” என அவர் தெரிவித்தார்.

உண்மையில், முழு பிராந்தியத்தையும் ஆழமாக சீர்குலைத்தது அமெரிக்காதான். தனது பூகோள மேலாதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாக அது கருதும் சீனாவைச் சுற்றி வளைக்கும் இராணுவக் கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை அது ஒருங்கிணைத்துள்ளது. “சட்டத்தின் ஆட்சிமற்றும் சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்குபற்றி தொடர்ச்சியாக குறிப்பிடப்படுவதானது, வாஷிங்டன் தனது நலன்களை முன்னெடுப்பதற்கான விதிகளை உருவாக்க, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நிறுவப்பட்ட பூகோள கட்டமைப்பைப் பற்றியதாகும்.

ஒரு முன்னாள் அமெரிக்க காலனியாக இருந்த பிலிப்பைன்ஸ், குறிப்பாக தென் சீனக் கடலில் பெய்ஜிங்குடனான வாஷிங்டனின் அதிகரித்துவரும் ஆக்ரோஷமான மோதலில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. பிலிப்பைன்ஸின் “இறையாண்மை உரிமைகளை” பாதுகாப்பேன் என்று மார்கோஸ் உறுதியாக அறிவித்தார் - இது சீனாவுடனான அதன் பிராந்திய மோதல்களைக் குறிப்பதாகும். “எமது இறையாண்மை பிரதேசத்தின் ஒரு சதுர அங்குலத்தை கூட எந்த ஒரு வெளிநாட்டு சக்தியும் கைப்பற்றும் முயற்சியை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.

கடந்த தசாப்தத்தில், சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே தென் சீனக் கடலில் நீண்ட காலமாக நிலவி வரும் சர்ச்சைகளை அமெரிக்கா வேண்டுமென்றே தூண்டி விட்டது. அது கடல் சட்டத்தின் (UNCLOS) கீழ் சீன கடல்சார் உரிமை கோரல்களை சவால் செய்ய, நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் பிலிப்பைன்ஸை பினாமியாக பயன்படுத்தியது. எனினும் இந்த சட்டத்தை வாஷிங்டனின் ஒரு போதும் ஏற்றுக்கொண்டது கிடையாது. 2016 தீர்ப்பு தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு திட்டுகள், பவளப்பாறைகள் மற்றும் அம்சங்களைச் சுற்றியுள்ள நீரின் நிலையைப் பற்றி முடிவு செய்ததே அன்றி, பிராந்திய உரிமை அல்லது இறையாண்மை குறித்து அல்ல.

2022 இல் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சீனாவுடனான பதட்டத்தைத் தணிக்க முந்தைய ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டின் முயற்சிகளை மார்கோஸ் முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். அவர், தென் சீனக் கடலுக்கு நேரடி அருகில் உள்ள நாடுகளில் உட்பட பிலிப்பைன்ஸில் தங்கி இயங்கும் அமெரிக்காவின் ஏற்பாடுகளுக்கும் அத்துடன் அமெரிக்க இராணுவத்துடனான கூட்டுப் போர்ப் பயிற்சிகளும் புத்துயிர் அளித்து நீட்டித்துள்ளார். அவரது நிர்வாகமும், சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கும் அல்பனிஸ் அரசாங்கமும் ஒரே பாடல் புத்தகத்தில் இருந்தே பாடுகின்றன.

ஆரம்பத்திலிருந்தே, மார்கோஸின் பேச்சு, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானை எதிர்த்துப் போரிடுவதில் பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகளைப் பாராட்டியும், இன்று நெருக்கமான இராணுவ உறவுகளை நியாயப்படுத்தியவாறும் இராணுவவாதத்தில் மூழ்கியிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற, இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய போர் பயிற்சிகளில் 560 பிலிப்பைன்ஸ் துருப்புகள் மற்றும் 1,200 ஆஸ்திரேலிய இராணுவ துருப்புகள் மற்றும் 120 அமெரிக்க கடற்படையினர் பங்குபற்றிய கூட்டு இராணுவப் பயிற்சியான அலோன் பயிற்சியை அவர் பாராட்டினார். கடல் மற்றும் தரை நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய இந்தப் பயிற்சியானது பெயரளவில் தற்காப்பு எனப்பட்ட போதிலும், இது தென் சீனக் கடலில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளைக் கைப்பற்றுவதற்கான சாத்தியமான முயற்சிகளுக்கான ஒரு சோதனை ஓட்டமாகும்.

அமெரிக்காவைத் தவிர, பிலிப்பைன்ஸுடன் விஜயம் செய்யும் படைகள் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரே நாடு ஆஸ்திரேலியா என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியாவும் பிலிப்பைன்ஸும் ஒரு மூலோபாய கூட்டாண்மையில் கையெழுத்திட்டன என்று மார்கோஸ் குறிப்பிட்டார். இதன் மூலம் வருடாந்திர பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் மற்றும் வழக்கமான உயர்மட்ட கூட்டங்களை நிறுவியது. இந்த ஒப்பந்தம் தென் சீனக் கடலில் ஆத்திரமூட்டும் கூட்டு கடற்படை ரோந்துகளை முன்னறிவித்தது. இது 2016 UNCLOS முடிவையும் கூட அங்கீகரித்ததுடன் சீனாவிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குகின்ற, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான AUKUS இராணுவ ஒப்பந்தத்தையும் ஆதரித்தது.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் “சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்தல்” மீதான “எங்கள் பகிரப்பட்ட பார்வையை” மேம்படுத்தும் நோக்கில் “விரிவுபடுத்தப்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு” உட்பட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையேயான வேகமாக வலுவடைந்து வரும் இராணுவ உறவுகளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார். மார்கோஸ் மற்றும் அல்பனீஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இராணுவ பயன்பாடுகளைக் கொண்டிருக்கும் “இணையம் மற்றும் தீர்க்கமான தொழில்நுட்பம்” தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர்.

மார்கோஸைப் பாராட்டியதில், அவருடைய நிர்வாகத்தால் நடத்தப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல்களைப் பற்றி தொழிற்கட்சி அரசாங்கம் கண்களை மூடிக்கொண்டது. அமெரிக்க ஆதரவுடைய கொடூரமான சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் மார்கோஸின் மகனான மார்கோஸ், தனது தந்தையின் ஆட்சியில் இருந்து தூர விலகிக்கொள்வதற்கு மாறாக அதைப் பாராட்டினார். அவர் தனது முன்னோடியான துதர்தேயின் “போதைப்பொருளுக்கு எதிரான போர்” எனப்படும், நீதிக்கு புறம்பான கொலைகள், எதேச்சதிகாரமான கைதுகள் மற்றும் “காணாமல் ஆக்குதல்கள்”, எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஏழ்மையான தட்டினரை பயமுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இழிவான நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையானது, ஆர்வலர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு எதிரான தொடர்ச்சியான அரச வன்முறையை எடுத்துக்காட்டுகிறது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த கூட்டுக் கூட்டமும் மார்கோஸின் உரையை சலனமின்றிக் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்தது. இந்த தீவிர வலதுசாரி நபருக்கு எதிரான ஒரே பலவீனமான எதிர்ப்பு, “மனித உரிமை மீறல்களை நிறுத்து” என்று பசுமைக் கட்சியின் செனட்டர் ஜேனட் ரைஸ், ஒரு அடையாள அட்டையை தூக்கிப் பிடித்ததில் இருந்தது. அவர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எவ்வாறாயினும், ரைஸ் உட்பட எந்தவொரு கட்சிகளும் மற்றும் அரசியல்வாதிகளும், உரையின் மையமாக இருந்த இராணுவவாத செய்தியை எதிர்க்கவில்லை, ஏனெனில் அவை அனைத்தும் அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலுடன் அணிசேர்ந்து நிற்கின்றன.

அதன் சீன எதிர்ப்பு உந்துதலை நன்கு அறிந்த ஆஸ்திரேலிய ஊடகங்கள் மார்கோஸின் பேச்சைப் பாராட்டின. அரசு நடத்தும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் (ABC) ஆஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை நிறுவனத்தின் ஆய்வாளர் யூவான் கிரஹாமின் கருத்துக்களை மேற்கோளிட்டுள்ளது: “இங்கே நம்மிடம் ஆஸ்திரேலியாவில் பலமான நேரடி வார்த்தைகளில் பேசுகின்றி ஒரு தென்-கிழக்கு ஆசிய அரசாங்கத் தலைவர் இருப்பதோடு அவரது செயல்திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் உத்தரவாததத்தை முன்வைப்பதுடன் எதையும் மறைத்துப் பேசவில்லை,” என அவர் அறிவித்தார்.

மார்கோஸ் அடுத்த வாரம் மெல்போர்னில் நடைபெறவுள்ள ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு)-ஆஸ்திரேலியா உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். ஆசியனுடன் ஆஸ்திரேலியாவின் 50 ஆண்டு தொடர்பை இது குறிக்கும். இங்கு சீனாவுடனான வாஷிங்டனின் மோதலுக்கு முழுமையாக ஆதரவளிக்காதவர்களை வம்புக்கு இழுக்கும் முயற்சியில், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் பலருடன் அல்பனீஸ் விவாதங்களை நடத்துவார். அமெரிக்க போர் திட்டங்களுக்கு மார்கோஸ் நிர்வாகம் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் இருப்பதால் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவருக்கு பெருமை சேர்க்கப்பட்டது.

Loading