முன்னோக்கு

பிலிப்பைன்ஸில் அமெரிக்காவின் செயல்பாடுகள், சீனாவுடனான போரை அச்சுறுத்துகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

செவ்வாய்கிழமை, அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் இதுவரை அவை நடத்தியிராத மிகப் பெரிய போர் ஒத்திகைகளைத் தொடங்கின. இதில் சுமார் 12,000 அமெரிக்கர்கள், 5,000 பிலிப்பைனியர்கள் மற்றும் 111 ஆஸ்திரேலியர்கள் உட்பட 17,500 துருப்புக்கள் கலந்து கொண்டன. 18 நாட்கள் நீடிக்கும் இந்த இராணுவ நடவடிக்கைகள், வாஷிங்டன் விரைவில் சீனாவுடன் போருக்கு தயாராகி வருவதை தெளிவுபடுத்துகிறது.

ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, வியத்தகு முறையில் பிலிப்பைன்ஸ் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் வாஷிங்டனை நோக்கி மாற்றி, சீனாவுடன் நட்புறவைக் கோரிய ரோட்ரிகோ டுரேற்றயின் ஆறு ஆண்டுகால ஜனாதிபதிப் பதவியில் மோசமடைந்த உறவுகளை மீட்டமைத்தார். மார்கோஸ் ஜூனியர் ஒன்றரை தசாப்தங்களாக ஆட்சி செய்த அந்நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியின் மகன் என்பதோடு, அவர் தந்தையின் ஆட்சியில் நடத்தப்பட்டதைப் போலவே அதேபோன்ற பல குற்றங்களைச் செய்த குற்றவாளி ஆவார். மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க நீதிமன்றங்களில் அவர் 353 மில்லியன் டொலர்கள் அவமதிப்பு உத்தரவை எதிர்கொள்கிறார் என்றாலும், பைடென் நிர்வாகம் வாஷிங்டனின் போர் நோக்கங்களைப் பின்தொடர்வதற்காக இதை மூடிமறைக்க முயல்கிறது.

ஆத்திரமூட்டும் வகையில் தைவான் ஜனாதிபதி சாய் இங்-வெனின் அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து இந்தப் போர் ஒத்திகை நடக்கிறது. தைவான் தீவு மீதான சீனாவின் பிராந்திய உரிமைக்கோரல் ஓர் எச்சரிக்கை கோடு என்றும், அதை மீறுவதைப் பொறுத்துக் கொள்ளவியலாது என்பதையும் பெய்ஜிங் நீண்ட காலமாக தெளிவு படுத்தியுள்ளது. சாயின் அமெரிக்க விஜயத்தின் போது அப்பெண்மணி, ஓர் இறையாண்மை அரசின் பிரதிநிதிக்கு நிகரான முறையில் நடத்தப்பட்டதுடன், தைவான் துருப்புக்களுக்கு அமெரிக்க இராணுவம் பயிற்சி அளிப்பது குறித்து வெளிப்படையாக அவருடன் விவாதிக்கப்பட்டது. நீண்ட காலமாக இருந்து வரும் அமெரிக்காவின் ஒரே சீனா கொள்கைக்கு மரண அடி கொடுப்பதற்கு நெருக்கமாக மிக அருகாமையில் அது இருந்தது.

இராணுவவாத கொந்தளிப்புடன் விடையிறுத்த பெய்ஜிங், போர் அபாயத்தை உயர்த்தியது. மக்கள் விடுதலை இராணுவம் தைவானைச் சுற்றி வான்வழி மற்றும் கடல்வழி பயிற்சிகளை மேற்கொண்டதுடன், அத்தீவு மீது தாக்குல் நடத்துவதைப் போல ஒத்திகை நடத்தியது. சீனாவில் இருந்து பாயும் ஏவுகணைகள் தைவானில் சென்று வெடிப்பதைப் போன்ற ஒரு காணொளியை வெளியிட்டது.

வாஷிங்டனின் அசாத்திய ஆத்திரமூட்டல்களால் ஆசியா பசிபிக் பிராந்தியம் ஒரு வெடி உலையாக மாற்றப்பட்டுள்ளதுடன், அது வெடிக்கும் தருவாயில் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வாஷிங்டன் உலகெங்கிலும் நடத்தி உள்ள போர் ஒத்திகைகள் ஒவ்வொன்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் உலகளாவிய மோதல் வெடிப்பைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் தான், வாஷிங்டன் தென் கொரியாவில் மிக அதிக நாட்களுக்கு நீண்ட தொடர்ச்சியான இராணுவ ஒத்திகைகளை நடத்தி இருந்தது. இது சீனாவுடன் போருக்குத் தயாராகும் வகையில் உக்ரேன் போரின் அனுபவங்களை உள்ளீர்த்திருந்தது.

பாலிகாடன் (அதாவது, தோளோடு தோள் சேர்ந்து நடத்தப்படும் பயிற்சி) என்று அழைக்கப்படுகின்ற வருடாந்திர பயிற்சிகளான அவற்றின் கூட்டுப் போர் பயிற்சிகளை 38 ஆவது ஆண்டாக இப்போது பிலிப்பைன்ஸில் நடத்தி இருந்தன. மற்ற இடங்களில் நடத்தப்படும் வாஷிங்டனின் போர் பயிற்சிகளைப் போலவே, பாலிகாடன் பயிற்சிகளின் தன்மையும் அடிப்படையில் மாற்றப்பட்டு உள்ளது. இந்தப் பயிற்சிகள் “ரஷ்ய-உக்ரேனிய போரில் இருந்து எடுக்கப்பட்ட படிப்பினைகளைக் கொண்டிருப்பதாக” Philippine Daily Inquirer பத்திரிகை குறிப்பிட்டது.

கடந்த தசாப்தங்களில், இந்தப் பயிற்சிகள் பெரும்பாலும் உள்நாட்டு அடக்குமுறை மீதே ஒருமுனைப்பட்டு இருந்தன. கம்யூனிஸ்ட் கிளர்ச்சி, தெற்கு பிலிப்பைன்ஸில் ஆயுதமேந்திய மோரோ பிரிவினைவாத இயக்கம் மற்றும் பொதுவான உள்நாட்டு அமைதியின்மை ஆகியவற்றை அடக்குவதற்கு ஏற்ப பொலிகாடன் பயிற்சி நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

இந்தாண்டு பாலிகாடன் பயிற்சிகள் உலகப் போரின் விஷயமாக உள்ளது. வாஷிங்டன் உக்ரேனுக்கு அனுப்பும் அதே தளவாடங்களைப் பிலிப்பைன்ஸுக்கு வழங்கி வருகிறது என்ற உண்மையை அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் இராணுவ செய்தித் தொடர்பாளர்கள் வெளிப்படுத்தினார்கள். HIMARS சிறுபீரங்கி, பேட்ரியாட் ஏவுகணை மற்றும் ஜாவலின் ஏவுகணைகள், அவெஞ்சர் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரீப்பர் ட்ரோன்கள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாக சீனாவை இலக்கில் வைத்து இப்பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்டன.

தென் சீனக் கடல் அல்லது தைவான் விவகாரத்தில் வெடிக்கும் சீனாவுடனான ஒரு போருக்கான தயாரிப்பாக அந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. பிலிப்பைன்ஸ் ஆயுதப் படைகளின் ஓய்வு பெற்ற தலைமைத் தளபதி இம்மானுவேல் பாடிஸ்டா, 'தைவான் அல்லது தென் சீனக் கடல் மோதலில் பிலிப்பைன்ஸ் இழுக்கப்படாமல் இருப்பது சாத்தியமில்லை … உங்களால் போரைத் தடுக்க முடியாவிட்டால், போருக்குத் தயாராக இருங்கள்,” என்று பத்திரிகைக்குக் கூறிய போது, நாடு பணயத்தில் இருப்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அடுத்த இரண்டு வாரங்களில், அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் இராணுவப் படைகள் தென் சீனக் கடலில் நிஜமான குண்டுகளைக் கொண்டு பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளன. கடந்த காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்கார்பரோ (பனாடாக்) ஷோல் கடற்பகுதி அருகே ஓர் இராணுவக் கப்பலை அந்தப் பயிற்சி மூழ்கடிக்கும். எதிரி இராணுவப் படைகளிடம் இருந்து தீவுகளை மீட்பதை உருவகப்படுத்தி வடிவமைக்கப்பட்ட கடலோரப் பயிற்சிகளையும் அவை நடத்த உள்ளன.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தின் (EDCA) பரிந்துரைகளின்படி, பிலிப்பைன்ஸில் இன்னும் கூடுதலாக நான்கு தளங்களை மணிலா வாஷிங்டனுக்கு வழங்கும் என்ற அறிவிப்பை அடுத்து, இந்த மாற்றப்பட்ட போர் ஒத்திகைகள் நடக்கின்றன. இது இந்நாட்டில் உள்ள மொத்த அமெரிக்க இராணுவத் தளங்களின் எண்ணிக்கையை ஒன்பதாக ஆக்குகிறது.

சீனாவுடனான போருக்கு நான்கு புதிய தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தன. இவற்றில் மூன்று தைவானிலிருந்து பாஷி கால்வாயை அடுத்து வடக்கு மாகாணங்களான ககாயன் மற்றும் இசபெலாவில் உள்ளன. நான்காவது ஒன்று சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு ஏறக்குறைய மிக அருகாமையில் பாலவனின் மேற்கு விளிம்பில் உள்ளது.

இந்த இராணுவத் தளங்கள் முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும். வாஷிங்டன் இந்தத் தளங்களை 'மேம்படுத்தப்பட்ட இயங்குதன்மைக்கான' 'சுழற்சியிலான பிரசன்னத்திற்கு' சேவையாற்றும் தளங்களாகக் கூறுகிறது. ஆனால் இவை பிரத்யேகமாக அமெரிக்கர்களால் கட்டுப்படுத்தப்படும் வாடகை-இல்லா தளங்கள் என்பதோடு, எல்லை தாண்டிய அமெரிக்க இறையாண்மைக்கு உட்பட்டவை என்று EDCA இன் விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. இவை வாஷிங்டனின் போர் முனைவில் நவ-காலனித்துவ சொத்திருப்புகளாக உள்ளன.

1942 இல் ஜப்பானியப் படைகளிடம் பாடன் வீழ்ச்சி அடைந்த நாளை திங்கட்கிழமை குறித்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பும், திரும்பி வந்த அமெரிக்க இராணுவத்தின் அதனையடுத்த “விடுதலையும்” அந்நாட்டை சீரழித்தன. பேர்லின் மற்றும் வார்சா ஆகியவற்றுடன், மணிலாவும் போரில் மிகவும் நாசகமாக்கப்பட்ட தலைநகரங்களில் ஒன்றாக உள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றொரு உலகப் போருக்கு இழுத்துச் செல்லப்படுகிறதோ என்ற கவலையும் அச்சமும் அந்நாட்டில் நிலவுகிறது. அந்நாட்டுக்குள் அமெரிக்க துருப்புக்கள் வந்துள்ள நிலையில், அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை மணிலா பொலிஸ் சுற்றி வளைத்து சிறைக்கு இழுத்துச் சென்றது.

மார்கோஸ் ஒரு நினைவுகூட்டத்தில் ஆற்றிய உரையில், 'என்ன மாதிரியான தாக்குதல் நடவடிக்கைக்காக இருந்தாலும் நம் இராணுவத் தளங்களை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்றார். இந்தக் கூற்று பொய் என்பதை வரலாறு காட்டுகிறது. பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க தளங்கள் — கிளார்க் விமானப்படை தளம் மற்றும் சுபிக் கடற்படை தளம் ஆகியவை —அமெரிக்க பேரரசின் நரம்பு மையமாக இருந்தன. வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸ் மீது சரமாரியாக குண்டுகளை வீசி, நூறாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தப் போர் விமானங்கள் அங்கே தான் பழுது பார்க்கப்பட்டன மற்றும் அவற்றுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டன.

போர்ப் பயிற்சிகள் தொடங்கப்பட்ட போது, பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை செயலரும், பாதுகாப்புத்துறை செயலரும் ஏழாண்டுகளில் முதல்முறையாக 2+2 அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்களின் சமபலங்களைச் சந்திக்க வாஷிங்டனுக்குப் பயணித்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கனும் பாதுகாப்புத்துறை செயலர் இலாயிட் ஆஸ்டினும் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை செயலர் என்ரிக் மனலோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் கார்லிட்டோ கால்வேஸ் ஜூனியரைச் சந்தித்தனர்.

அவர்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். கடல்சார் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயத்தின் 2016 தீர்ப்புக்கு சீனா “முழுமையாக இணங்க” வேண்டும் என்று அந்த கூட்டறிக்கை வலியுறுத்தியது. அதுவே “இறுதியானதும் சட்டத்திற்கு உட்பட்டதும்” என்று நான்கு செயலர்களும் அறிவுறுத்தினர். வாஷிங்டனின் பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது. சீனா அந்த சர்வதேச தேச சட்டத்தில் கையெழுத்திட்ட ஒரு நாடு இல்லை என்றாலும் கூட அது அதை மதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. இந்தத் தீர்ப்பை அமுல்படுத்தும் நோக்கில் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் அமெரிக்காவும் பிலிப்பைன்ஸூம் கூட்டு ரோந்து பணிகளை நடத்தும் என்று 2+2 கூட்டம் அறிவித்தது. அனேகமாக இது பாலிகடான் ஒத்திகையின் போது தொடங்கப்படலாம்.

வாஷிங்டன் தூண்டுதலின் பேரில், பிலிப்பைன்ஸுக்கு ஜப்பானிய துருப்புக்களை அனுப்புவது தொடர்பாக மணிலா டோக்கியோவுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது. பாலிகாடன் பயிற்சிகளில் ஜப்பானியப் படைகள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டுள்ளன. ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நிர்வாகம் ஜப்பானியர்களுடன் இராணுவத் தள ஏற்பாடுகள் செய்வது மீதான சாத்தியக்கூறுகளையும் பேசி வருகிறது. ஜப்பானிய போர் விமானங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல்முறையாக டிசம்பர் 7, 2022 இல் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்தன. இது இந்தப் படையெடுப்பு நடந்த நினைவு தினத்திலேயே அந்நாட்டுக்குத் திரும்பிய ஓர் அதிர்ச்சியூட்டும் ஆத்திரமூட்டலாக இருந்தது.

உக்ரேன் பற்றி எரிந்து கொண்டிருக்கையில், ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இராணுவ அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில், உலகப் போருக்கான முன்னேறிய தயாரிப்புகள், உலக முதலாளித்துவ நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன. உலகெங்கிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளைப் போலவே, பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களும் கடும் வறுமையை எதிர்கொண்டுள்ளனர். மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர், அவர்களின் குடும்பங்களைப் பராமரிப்பதற்காக, வாழ்க்கைத் துணைவர்களையும் குழந்தைகளையும் விட்டு, வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சீனாவுடன் போருக்குத் தயாராகி வரும் இந்த அரசாங்கம் அந்நாட்டின் சமூக வளங்களை வீணடிக்கும் அதேவேளையில், ஊழல் பீடித்த செல்வாக்கான குடும்ப வம்சங்களின் ஒரு சிறிய அடுக்கு பரந்த செல்வ வளங்களைக் குவித்து வைத்துள்ளது.

உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் அவர்கள் மீதான அதிகரித்தளவிலான சுரண்டல் மற்றும் அதை அமுலாக்கும் அரசு எந்திரத்திற்கு எதிராக வெளிப்படையான போராட்டத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வழங்க முதலாளித்துவத்திடம் எதுவும் இல்லை. கொந்தளிப்பான உலக நிதிய அமைப்புமுறையை நெருக்கடிகள் அச்சுறுத்தி வரும் நிலையில், அதிகரித்து வரும் போர்க்குண மிக்க தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகை பலவந்தமாக மறுபங்கீடு செய்வதன் மூலம் அதன் இலாபங்களைப் பாதுகாக்க முயன்று வருகிறது.

உக்ரேன் மற்றும் தைவானில் செய்வது போலவே வாஷிங்டன் போரில் ஈடுபட்டிருப்பதுடன், பிலிப்பைன்ஸ் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதாக என்று தன்னைக் காட்டிக் கொள்கிறது.

பிலிப்பைன்ஸின் ஒரு சதுர அடி மண்ணைக் கூட சீனா ஒருபோதும் எடுத்ததில்லை. அது ஒருபோதும் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக இருந்ததில்லை.

இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா பிலிப்பைன்ஸை ஓர் இரத்தக்களரியான காலனித்துவப் போரில் கைப்பற்றியது. அதில் நூறாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், பிலிப்பைன்ஸ் மக்களின் ஜனநாயக விருப்பங்களை காலடியில் போட்டு நசுக்கியது. அமெரிக்காவின் உதவியோடு இப்போது மீண்டும் இராணுவமயமாகி வரும் ஜப்பான், பிலிப்பைன்ஸ் மக்களை கொடூரமாக மூன்று ஆண்டுகள் பயங்கரவாதத்திற்கு உட்படுத்தியது.

ஏகாதிபத்திய சக்திகள், எல்லாவற்றிற்கும் மேலாக வாஷிங்டன் தான், உலகைப் போருக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. அவை தடுக்கப்பட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், சாமானியத் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க, ஏப்ரல் 30 இல் ஓர் இணையவழி மே தினப் பேரணியை நடத்த உள்ளன. 

இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள்.

Loading