வறுமை அதிகரிக்கும்போது பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டமும் பின்தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பேர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் மே மாதம் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 30 அன்று வழங்கப்பட்ட தனது பதவியேற்பு உரையில், மார்க்கோஸ் தனது ஜனாதிபதி பதவிக்காலம், ஒன்றரை தசாப்தங்களாக ஒரு இராணுவச் சட்ட ஆட்சியை ஆட்சி செய்த நாட்டின் மிருகத்தனமான மற்றும் ஊழல் நிறைந்த சர்வாதிகாரியான தனது தந்தையைப் போலவே இருக்கும் என்று உறுதியளித்தார். தனது தந்தையின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, மார்க்கோஸ் ஜூனியர் 'அதைச் செய்து முடிப்பேன்' என்று சபதம் செய்தார்.

பேர்டினண்ட் 'பொங்பொங்' மார்க்கோஸ் ஜூனியர், 13 மே 2022, குய்சன் நகரத்தின், படசான் ஹில்ஸில் நடந்த யூனிடீம் தேர்தல் பேரணியில் பேசுகிறார் (Image: Wikimedia)

சமூகரீதியாக வெடிப்புமிக்க 1970-72 ஆம் ஆண்டுகளில், செப்டம்பர் 1972 இல் இராணுவ ஆட்சியை முழுமையாக திணிப்பதற்கு முன்னர் முதிர்ந்த பேர்டினண்ட் மார்க்கோஸ் அரச ஒடுக்குமுறைக்கான சட்டபூர்வ அமைப்பை தயாரிப்பு செய்ததுடன் அதனை பரிசோதனை செய்தார். மார்க்கோஸ் ஜூனியர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து சில மாதங்கள் சர்வாதிகார ஆட்சி படிப்படியாக அதிகரிப்பதால் குறிப்பிடப்படுகின்றன.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி, மே தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட லாபன் என்ஜி மாசா [வெகுஜனங்களின் போராட்டம்] என்ற அரசியல் கட்சியின் தலைவரான வால்டன் பெல்லோ கைது செய்யப்பட்டு இணைய அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளானார். பெல்லோ ஒரு முன்னாள் செனட்டர் ஆவார். அவர் ஒரு முக்கிய சர்வதேச நற்பெயரைக் கொண்ட இடதுசாரியும் பூகோளமயமாக்கலை எதிர்ப்பவராவார். அவர் சீர்திருத்த அரசியலை அது ஒரு வகை சோசலிசம் போல ஊக்குவிக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பொது விவாதங்களில் ஈடுபட மறுத்ததற்காக முந்தைய ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்ற இன் மகள் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா டுரேற்றவை பெல்லோ 'கோழை' என அழைத்தார். டுரேற்ற துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரது நெருங்கிய உதவியாளர் பெல்லோ மீது அவரது பிரச்சார அறிக்கைகளுக்காக அவதூறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். பெல்லோ அவமானகரமாக கைது செய்தல் முறையின் மூலம் இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் ஒரு நாள் கழித்து பிணையில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு வெறுங்காலுடன ஒரு உள்ளூர் காவல் நிலையத்தில் தேடப்படும் புகைப்படம் எடுக்கப்பட்டார்.

பெல்லோ, செப்டம்பர் மாதம் டாவோ நகரில் உள்ள பிராந்திய விசாரணை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவதூறு புகார் 'அரசியல் துன்புறுத்தல்' என்று முற்றிலும் நியாயமான அடிப்படையில் அவர் நீதித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளார்.”

பெல்லோவின் கைது பேச்சு சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். மேலும் மார்கோஸின் இரண்டாவது அரசாங்கம் அனைத்து வகையான கருத்து வேறுபாடுகளையும் ஒடுக்கத் தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

16 பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் சாதாரண நபர்கள், கத்தோலிக்க தேவாலய அமைப்பின் உறுப்பினர்கள், பிலிப்பைன்ஸின் கிராமப்புற மதக்குழுவினர்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்ட பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPP) நிதியளித்த குற்றச்சாட்டில் ஆகஸ்ட் 15 அன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மக்கள் இராணுவத்தின் (NPA) உறுப்பினர்களாக இருந்து விலகியவர்கள் என்று அரசாங்கம் கூறும் இரண்டு அநாமதேய சாட்சிகள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் இந்த பதினாறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளை 'கம்யூனிஸ்டுகள்' என்று முத்திரை குத்துவதற்கு, மார்க்கோஸ் சீனியர் சர்வாதிகாரம் அதன் இராணுவ நீதிமன்றங்களில் இரகசிய சாட்சிகளை வழக்கமாக நியமித்தது. மேலும் இந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

மார்க்கோஸ் சீனியர் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியபோது, அவர் நேரடியாகக் கட்டுப்படுத்தாத அனைத்து செய்திகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்புகளையும் முடக்கினார். மேலும் அவர்கள் தனது சர்வாதிகாரத்திற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே அவற்றை மீண்டும் திறக்க அனுமதித்தார். மார்க்கோஸ் ஜூனியர் எதிர்க்கட்சி ஊடகங்களை முடக்கி, செய்திகளினதும், அரசியல் முன்னோக்கினதும் மாற்று ஆதாரங்களைத் தடை செய்கிறார்.

ஜூன் 8 அன்று, தேசிய பாதுகாப்பு குழுவின் 'கோரிக்கையின்' பேரில் தேசிய தொலைத்தொடர்பு ஆணையம் 27 வலைத் தளங்களை தடுக்க உத்தரவிட்டது. இது ரொட்ரிகோ டுரேற்ற நிர்வாகத்தின் கீழ் இயற்றப்பட்ட பிற்போக்குத்தனமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டியது.

தடைசெய்யப்பட்ட வலைத் தளங்களில் பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவை மற்றும் CPP நிறுவனரும் கருத்தியல் தலைவருமான ஜோஸ் மரியா சிசனின் தனிப்பட்ட பக்கமும் அடங்கும். தடையில் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தது BAYAN உட்பட சட்ட அரசியல் அமைப்புகளின் வலைத் தளங்கள் மற்றும் Bulatlat மற்றும் Pinoy Weekly போன்ற மாற்று செய்தி தளங்களும் உள்ளன. கடந்த காலத்தில் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமான விஷயங்களை வெளியிட்ட Monthly Review மற்றும் Counterpunch உள்ளிட்ட சர்வதேச வெளியீடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 29 அன்று, டுரேற்ற மற்றும் மார்க்கோஸ் நிர்வாகங்களை விமர்சிக்கும் நாட்டின் முன்னணி செய்தி வெளியீடுகளில் ஒன்றான Rappler இன் சான்றிதழ்களை இரத்து செய்ய பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் உத்தரவிட்டது. இதனை திரும்பப்பெறுவதற்கான கோரிக்கை தற்போது மேல்முறையீட்டில் உள்ளது.

இந்த எதேச்சாதிகார சூழ்ச்சிகளுக்கு அடிப்படையானது கடந்த காலத்தை மீண்டும் எழுதுவதும் இராணுவச் சட்ட ஆட்சியின் மறுஉயிர்ப்பு கொடுப்பதுமாகும். மார்க்கோஸ் சர்வாதிகாரத்தின் பெறுமதியான ஆவணங்களைக் கொண்ட ஜனாதிபதி அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இயங்காது செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நூலகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இருந்து 'நாசகரமானதாக' கருதப்படும் புத்தகங்களின் அதிகரித்துவரும் பட்டியலைத் தடை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாக்குதல் பரவலானது. பட்டியலிடப்பட்ட ஆசிரியர்களில் கவிஞரும் இலக்கியத்திற்கான தேசிய கலைஞருமான பியென் லும்பெரா உள்ளார்.

கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் கொண்டுவரப்படுகிறது. கல்விச் செயலாளரான துணை ஜனாதிபதி டுரேற்ற, சேமப்படை அதிகாரிகளின் பயிற்சிப் படையை (ROTC) ஒரு கட்டாமானதாக்க விரும்புவதாக அறிவித்தார். இது 2002 இல் முடிவடைந்த மார்க்கோஸ் காலக் கொள்கைக்கு மறுவாழ்வு அளித்தது. இது நீண்ட காலமாக மிருகத்தனமான துன்புறுத்தல்கள் மற்றும் பயிற்றுவித்தல்களுடன் தொடர்புடையது.

கலப்படமற்ற பிரச்சாரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஒரு பெரிய படமான Maid in Malacañang, மார்க்கோஸ் ஆட்சியை தூக்கியெறிந்ததை, ஒரு புத்திசாலித்தனமான மற்றும் கனிவான ஜனாதிபதி குடும்பத்தை நன்றிகெட்ட கும்பலால் வெளியேற்றுவதாக சித்தரிக்கிறது. மார்க்கோஸ் மற்றும் டுரேற்றக்கு விசுவாசமான கம்யூனிச எதிர்ப்பு தனிநபர்வழிபாட்டுத் தலைவர் அப்பல்லோ குயிபோலாய் தலைமையிலான Sonshine Media Network இன் தொலைக்காட்சி நிலையங்களில் இப்போது அரசாங்க அறிவிப்புகள் வழக்கமாக வெளியிடப்படுகின்றன. அவர் பாலியல் கடத்தலுக்காக தேடப்பட்டு, மேலும் இப்போது கடவுளின் குமாரனாக அவதாரம் எடுத்ததாகக் கூறுகிறார்.

ஊடுருவி செல்லும் இராணுவ சட்டத்தை நாங்கள் காண்கிறோம்.

மார்க்கோஸ் II நிர்வாகத்தின் அடக்குமுறை எந்திரம், ரொட்ரிகோ டுரேற்ற இன் பாசிச ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மீது கட்டமைக்கப்படுகிறது, ஆனால் பண்பில் புதிய ஒன்று உள்ளது. டுரேற்ற இன் ஆட்சியானது, பிலிப்பைன்ஸ் சமுதாயத்தின் உயரத்திற்கு பாய்ந்த ஒரு மாகாண போர்த் தளபதியின் முரட்டுத்தனம் மற்றும் நிலையற்ற தன்மையால் குறிக்கப்பட்டது. அவர் ஏழைகளுக்கு எதிராக பொலிஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார். போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற பெயரில், 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டதை மேற்பார்வையிட்டார்.

மார்க்கோஸ் II நிர்வாகம் குறைவான ஆளுமை கொண்டது. அதன் திட்டமிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒரு கணக்கிடப்பட்ட 'சட்டபூர்வ தன்மை' உள்ளது. இது மார்க்கோஸ் சீனியரால் எடுக்கப்பட்டதை அப்பட்டமாக நினைவூட்டுகிறது.

டுரேற்ற ஒரு உலகளாவிய நிகழ்வை வெளிப்படுத்தினார்: பெருகிவரும் சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையை எதிர்கொண்டு ஆளும் உயரடுக்கின் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புகிறது. மார்க்கோஸ் ஜூனியர் சர்வாதிகாரத்தின் திறந்த அரவணைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மேலதிக படியைக் பிரதிபலிக்கிறார்.

மார்க்கோஸ் ஜூனியர் செனட் மற்றும் காங்கிரஸ் இரண்டிலும் பெரும் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ளார், இது முதலாளித்துவத்தின் கணிசமான பெரும்பான்மை ஆதரவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆளும் வர்க்க சர்வாதிகாரத்தின் அரவணைப்பு, மற்றும் ஒடுக்குமுறைக்கான அனைத்து வகையான எதிர்ப்பையும் குறிவைப்பது, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து வெகுஜன எதிர்ப்பின் எழுச்சியை நசுக்குவதற்கான அரசியல் தயாரிப்புகளை மிக அடிப்படையான மட்டத்தில் வெளிப்படுத்துகிறது. ஆளும் உயரடுக்கு பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதால் மிகுந்த பதட்டத்தில் உள்ளது.

பிலிப்பைன்ஸ் புள்ளியியல் ஆணையம் (PSA) ஆகஸ்ட் 15 அன்று 20 மில்லியன் பிலிப்பைன்ஸ் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் என அறிவித்தது. கடைசியாக 2018 இல் தரவு சேகரிக்கப்பட்டதில் இருந்து அந்த எண்ணிக்கை 2.3 மில்லியன் மக்களால் அதிகரித்துள்ளது. வறுமை வரம்பு என்பது ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாத வருமானம் P12,030 (215 அமெரிக்க டாலர்) என வரையறுக்கப்படுகிறது. நாட்டின் மக்கள் தொகையில் 18 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த அற்ப அளவீட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.

இன்னும் மோசமான புள்ளிவிவரம், அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத பிலிப்பினோக்களின் விகிதமாகும், ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் P8,379 (150அமெரிக்க டாலர்) என்று வரையறுக்கப்படுகிறது. மக்கள் தொகையில் 5.9 சதவிகிதம் தினசரி அடிப்படையில் போதுமான உணவை வாங்க முடியவில்லை, 2018 முதல் 200,000 பேர் இந்த வரையறைக்குள் வந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் குடும்பங்களின் சராசரி வருமானம் முழுமையான வரையறையில் 2018 முதல் 2 சதவீதம் குறைந்துள்ளது மற்றும் பணவீக்கத்திற்கு ஈடுசெய்யப்படும்போது 10 சதவீதம் சரிந்தது. குறைந்தபட்ச ஊதியம் இன்னும் குறைந்து விட்டது. பிலிப்பைன்ஸில் குறைந்தபட்ச ஊதியங்கள் நாடு முழுவதும் வேறுபடுவதுடன், அவை பிராந்திய ஊதிய வாரியத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் விலை உயர்வுக்கு ஈடுசெய்யப்படும்போது குறைந்தபட்ச ஊதியங்கள் ஜூலை 2021 முதல் 10.7–16.9 சதவீதத்திலிருந்து குறைந்துவிட்டதாக BusinessWorld கணக்கிட்டது. வறுமையின் விளிம்பில் உழைக்கும் குடும்பங்களுக்கு இந்த புள்ளிவிவரங்கள் பேரழிவை ஏற்படுத்துகின்றன.

பிலிப்பைன்ஸ் சமூகம் ஒரு வெடிமருந்து கிடங்காகியுள்ளது. மார்கோஸின் தேர்தலைத் தொடர்ந்து Philippine Star இதழில் வெளியிடப்பட்ட ஒரு பதிப்பு, பிலிப்பைன்ஸ் ஆளும் வர்க்கம் உலகெங்கிலும் உள்ள அவர்களது சக ஆளுமைகளைப் போலவே அதே அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறது என்பதை தெளிவுபடுத்தி: 'மார்க்கோஸ் இலங்கையின் வழியில் செல்வதை தடுக்க வேண்டும்' என்றது.

ஜனாதிபதி பதவிக்கான மார்கோஸின் பிரச்சாரம் கடந்த காலத்தைப் பற்றிய பொய்களை நம்பியிருந்தது, அவை திட்டமிட்ட முறையில் தவறாகப் பயிற்றுவிக்கப்பட்ட பொதுமக்களின் பரந்த அடுக்குகளின் வரலாற்று அறியாமையால் சாத்தியமானது. இருப்பினும், ஜனரஞ்சக வாக்குறுதிகள் மூலம் அவர் ஒரு நல்ல ஆதரவைப் பெற்றார். ஏப்ரல் பிற்பகுதியில், பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில், சந்தையில் அரிசி விலையை மானியங்கள் மற்றும் விலை வரம்புகள் மூலம் ஒரு கிலோவுக்கு P20 (0.36 அமெரிக்க டாலர்) ஆகக் குறைப்பதாக அவர் உறுதியளித்தார். இது செயல்படுத்தப்பட்டிருந்தால் மிக அடிப்படையான உணவுத் தேவையின் விலையை பாதியாக குறைத்திருக்கும் என்பது உறுதி.

இருப்பினும், மார்க்கோஸ் II நிர்வாகம் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவில்லை; இது செய்தி நிறுவனங்களை முடக்குகிறது. குறிப்பிடத்தக்க நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அவரது தந்தையைப் போலவே, மார்க்கோஸ் ஜூனியரும் அடக்குமுறையிலும் சர்வாதிகாரத்திலும் அதிகரித்துவரும் அமைதியின்மைக்கான தீர்வைக் காணமுனைகின்றார்.

Loading