பிரெஞ்சு-ஆர்மேனிய எதிர்ப்புப் போராளி மிசாக் மனூக்கியானுக்கு மக்ரோன் போலியாக அஞ்சலி செலுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

1944 பிப்ரவரி 21 இல், பாரிஸிற்கு அருகிலுள்ள மோண்ட்-வலேரியெனில், புலம்பெயர்ந்த தொழிலாளியும், ஒரு கம்யூனிஸ்டுமான மிசாக் மனூக்கியான் மற்றும் அவரது குறிபார்த்தும் சுடும் வீரர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள்-புலம்பெயர்ந்தோர் பணியாளர் குழுவின் (FTP-MOI, Francs-tireurs et Partisans-Main d’Oeuvre Immigrée) எதிர்ப்புப் பிரிவின் (resistance unit) ஏனைய 23 அங்கத்தவர்களை நாஜி துருப்புகள் சுட்டுக் கொன்றன. 80 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த புதன்கிழமையன்று, மிசாக் மற்றும் அவரது மனைவி மெலினே மனூக்கியானின் உடல் எச்சங்களை பாரிஸில் உள்ள பாந்தியோனில்[1]மக்ரோன் அடக்கம் செய்தார்.

மனூக்கியான் எதிர்ப்புக் குழுவின் (Manouchian resistance group) எட்டு அங்கத்தவர்கள், நாஜிக்களால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சற்று முன்னதாக, பாரிஸுக்கு வெளியே மோண்ட்-வலேரியன் சிறையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அஞ்சலி நேர்மையற்றது மற்றும் அரசியல் வஞ்சகத்தனமானதாகும். மனூக்கியானைப் படுகொலை செய்த பாசிசவாதிகளின் அரசியல் வாரிசுகளுடன் மக்ரோன் உருவாக்கி வரும் கூட்டணிக்காக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) அதிகாரத்துவம் மற்றும் அதன் போலி-இடது கூட்டாளிகளின் ஆதரவைப் பாதுகாப்பதே அதன் நோக்கம் ஆகும். கடந்த வாரம் மக்ரோன், ஸ்ராலினிச நாளிதழ் L’Humanité க்கு அளித்த ஒரு நேர்காணலில் நவ-பாசிசவாத தேசிய பேரணி (RN) கட்சியை பாந்தியோனுக்கு அழைத்தார். “பிரெஞ்சு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளையும் அழைப்பதே எனது கடமை” என்று அவர் கூறினார்.

1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வர்க்கப் போராட்டங்களின் மீதான ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பாசிச பரிணாமத்தில் ஒரு புதிய கட்டம் மேலெழுந்து வருகிறது. மக்ரோன் மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்துகிறார் என்பதாலும், ரஷ்யாவுக்கு எதிரான மீள்ஆயுதமயமாக்கலுக்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக, 2023 இல் நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் அவரது செல்வாக்கிழந்த ஓய்வூதிய சீர்திருத்தத்தைத் திணித்தார் என்பதாலும் அவர் வெறுக்கப்படுகிறார். நேட்டோ போர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத்தின் கொள்கைகளுக்கு எந்தவொரு மக்களின் ஆதரவுத் தளமும் இல்லாத நிலையில், மக்ரோன் அதிவலது உடனான கூட்டணியில் ஒரு எதேச்சதிகார ஆட்சியை ஒருங்கிணைக்க விரும்புகிறார்.

மனூக்கியானுக்கு மக்ரோன் போலியாக அஞ்சலி செலுத்துவதை போலி-இடதுகள் ஆதரிப்பதானது, ஒரு ட்ரொட்ஸ்கிச புரட்சிகர மாற்றீட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசரத்தை எடுத்துக் காட்டுகிறது. ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களை நிறுத்துவதற்கான தொழிற்சங்க இயந்திரத்தின் முடிவை ஆதரித்த போலி-இடதுகள், போரையோ அல்லது போலிஸ் அரசையோ எதிர்க்கவில்லை. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஸ்ராலினிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிச ஓடுகாலிகளின் குட்டி-முதலாளித்துவ வழித்தோன்றல்களுக்கு எதிரான அதன் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பப் போராடும் ஒரு சக்தியாகும்.

மனூக்கியானுக்கு மக்ரோன் காட்டும் அஞ்சலி மோசடியானது, ஏனென்றால் மக்ரோனின் அனுதாபம் மனூக்கியானுக்கு மரணதண்டனை அளித்தவர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் தங்கியுள்ளது என்பது பகிரங்கமாக பதிவு செய்யப்பட்ட விடயமாகும். 2018 இல், “மஞ்சள் ஆடையாளர்கள்” (“yellow vest”) இன் போராட்டங்களை தாக்கி அடக்குவதற்கு அவர் கலகம் ஒடுக்கும் படைகளை அனுப்பிய அதேவேளையில், பிரான்சின் பாசிச ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியும் தண்டிக்கப்பட்ட துரோகியுமான பிலிப் பெத்தானை ஒரு “மாபெரும் சிப்பாய்” என்று புகழ்ந்தார். ஆனால், மனூக்கியான் மற்றும் பெத்தான் இருவரையும் ஒரே நேரத்தில் ஒருவர் பாராட்ட முடியாது, பெத்தானுடைய போலிஸ் அரசுதான் மனூக்கியானைப் பிடித்து படுகொலை செய்வதற்காக நாஜிக்களிடம் ஒப்படைத்தது.

ஆனால் இரண்டையும் செய்வதற்கான மக்ரோனின் முயற்சி ஒரு சிடுமூஞ்சித்தனமான அரசியல் சூழ்ச்சியாகும். தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் உடந்தையுடன் அவர் தனது ஓய்வூதிய சீர்திருத்தங்களை முன்னெடுத்ததில் இருந்து, கடந்த கோடையில் நஹேல் படுகொலை தொடர்பாக நடந்த கலகங்கள் வரை அவரது போலிஸ் மக்களை ஒடுக்கியுள்ளது. மேலும், காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை போரின் போது அவர் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தனியாகுவை ஒரு “நண்பர்” என்று அழைத்துள்ளார். பின்னர் அதிவலது தேசிய பேரணி (RN) கட்சியின் தலைவர் மரின் லு பென், இந்த குளிர்காலத்தில் நிறைவேற்றப்பட்ட மக்ரோனின் கடுமையான புலம்பெயர்வு சட்டத்தைப் பாராட்டினார், அதை நவ-பாசிசவாதிகளுக்கான “கருத்தியல் வெற்றி” என்று அதை அழைத்தார்.

எவ்வாறிருந்த போதிலும், பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களது போலி-இடது கூட்டாளிகளும் மனூக்கியானுக்கு மக்ரோன் போலியாக அஞ்சலி செலுத்தியதைப் பாராட்டினர். மக்ரோன் “கம்யூனிச மற்றும் வெளிநாட்டு எதிர்ப்பாளர் போராளிகளை (foreign resistance) தேசம் அங்கீகரிப்பதை நிறைவு செய்கிறார்” என்று கூறி, “இமானுவல் மக்ரோன் தலைமையிலான கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டிருந்தாலும், இது முன்னெப்போதும் இல்லாத அத்தியாவசிய நினைவுகூரல்” என்று L’Humanité நாளிதழ் தெரிவித்தது.

பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் (NPA) ஒலிவியே பெசன்ஸநோ, ஸ்ராலினிச எழுத்தாளர் லூயி அரகோனின் (Louis Aragon) ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்டு மனூச்சியோன் குழுவிற்காக அராஜகவாத பாடலாசிரியர் லியோ ஃபெர்ரேயின் (Léo Ferré) நன்கறியப்பட்ட பாடல் மூலமாக ஒரு ட்வீட் மூலம் மட்டுமே எதிர்வினையாற்றினார். பெசன்ஸநோ பின்வருமாறு அதில் கூறினார், “மனூக்கியான், அரகோன், ஃபெர்ரே, ஒரு போராட்டம், கவிதை, ஒரு பாடல். பிரான்ஸ் MOI (Main-d’Œuvre Immigrée குழு) இற்கும் மற்றும் பாசிச எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளது”.

அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன், மனூக்கியானுக்கு மக்ரோன் செலுத்திய அஞ்சலியை நவ-பாசிசவாதத்தின் மீதான கம்யூனிசத்தின் வெற்றி என்று அழைத்தார். பாந்தியோனில் லு பென்னை மனூக்கியானுக்காக நடந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது தான் ஒரு “இரகசிய களிப்பை” உணர்ந்ததாக மெலோன்சோன் தெரிவித்தார். இன்று, “பல ஆண்டுகளுக்குப் பின்னர், அது நிபந்தனையற்ற சரணாகதியாகும். தீவிர வலதுசாரிகள் கம்யூனிச எதிர்ப்பை மிகவும் கண்டித்த நிலையில், அதற்கு அஞ்சலி செலுத்த வருகிறார்கள்” என்றார்.

இது பொய்களின் மூட்டையாகும். மக்ரோனும் லு பென்னும் இரண்டாம் உலகப் போரின் போது பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பைக் கொண்டாடவில்லை. அதுபோன்றவொரு நகர்வை மக்ரோனும் லு பென்னும் விரும்பவில்லை. மாறாக, அவர்கள் பயப்படுகிறார்கள். 21 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் மீண்டும் இனப்படுகொலை மற்றும் உலகப் போருக்குள் மூழ்கி வருகின்ற நிலையிலும் கூட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தைத் தடுக்க அவர்கள் போலி-இடதுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

பாந்தியோன் சபையில் மக்ரோன் தனது உரையில் முன்வைத்த எதிர்ப்பு (resistance) குறித்த தவறான வரலாற்று முன்னோக்கை போலி-இடதுகளும் பகிர்ந்து கொள்கின்றன. “நீங்கள் ஒரு சிப்பாயாக இங்கு நுழைகிறீர்கள்,” என்று மனூக்கியான் குறித்து கூறிய மக்ரோன், “ஜெனரல் சார்ல்ஸ் டு கோலுடன் இணைந்த ஒரு முதலாளித்துவ-ஆதரவு எதிர்ப்புத் தலைவரான ஜோன் முலான் (Jean Moulin), 1964 இல் பாந்தியோனில் அடக்கம் செய்ய நுழைந்து ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர், “எதிர்ப்பின் (Resistance) இந்த பகுதியை” அவர் அங்கீகரித்திருப்பதாக அவர் கூறினார். இப்போது, மக்ரோன் கூறினார், “20 ஆம் நூற்றாண்டின் ஒரு சாகசப் பயணம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.”

மிசாக் மற்றும் மெலினே மனூக்கியான் 

ஜேர்மனியில் இருந்து பிரெஞ்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்த உதவிய மற்றும் அதன் பணி இப்போது முடிந்துவிட்ட வீரர்களின் இயக்கமாக எதிர்ப்பை (resistance) மக்ரோன் சித்தரித்தது தவறானது.  இரண்டாம் உலகப் போரின்போது தலைமறைவு போராளிகள் குழுக்களில் சேர்ந்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாஜி மற்றும் அதன் ஒத்துழைப்பு அதிகாரிகளை தாக்கிய மில்லியன் கணக்கான மக்கள், பெரும்பாலும் தொழிலாளர்கள் அல்லது விவசாயிகளாக இருந்தனர். தொழிற்சாலை அல்லது கிராமப்புற போராளிகள் குழுக்கள், பெரும்பாலும் கைதுகளில் இருந்து தப்பி ஓடும் தொழிலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். அவர்கள் ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தனர். அனைத்திற்கும் மேலாக, இந்தப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள், கண்டம் முழுவதிலும் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளின் இன்னும் பெரிய இயக்கத்தின் பாகமாக இருந்தனர். 

முதலாம் உலகப் போரின் போது ஒட்டோமான் சாம்ராஜ்யத்தில் ஆர்மேனியர்கள் மீதான பாரிய படுகொலையில் இருந்து தப்பியோடிய அகதிகளாக இருந்தவர்கள் மனூக்கியர்கள் ஆவர். மிசாக் ஒரு யூத வாகனத்துறை தொழிலாளி, மெலினே ஒரு தட்டச்சு செய்பவர் மற்றும் பாடகர் சார்லஸ் அஸ்னாவூரின் (Charles Aznavour) குடும்பத்தின் நண்பர். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் (Communist Party) இருந்த அதேவேளையில், ஸ்ராலினிசத்திற்கு எதிராக அல்லது 1938 இல் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபித்த பின்னர் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு அணியில் (Trotskyist opposition) இணையவில்லை என்றாலும், அவர்கள் சோவியத் சிறையில் இருந்து தப்பி பிரான்சுக்கு வந்திருந்த ஒரு இடது எதிர்ப்பாளரான அர்பென் டேவிட்டியன் டாரோவ் (Arben Dawitian Tarov) உடன் போரின் போது வேலை செய்தனர்.

ஒரு இடது எதிர்ப்பாளரும் மனூக்கியான் குழுவின் உறுப்பினருமான அர்பென் டாவிட்டியன் டரோவ்.

1941 இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்புக்குப் பின்னர், மற்றும் 1942 இல் மரண முகாம்களுக்கு நாடுகடத்துவதற்காக யூதர்களை பிரெஞ்சு போலிஸ் முதன்முதலாக சுற்றி வளைத்ததற்குப் பின்னர், அவர்கள் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்குள் (armed resistance) நுழைந்தனர். 1943 இல் —வார்சோ கெட்டோ எழுச்சி, ஏதென்ஸ் மற்றும் நெதர்லாந்தில் பொது வேலைநிறுத்தங்கள், மற்றும் இத்தாலிய தொழிலாளர்கள் முசோலினியைத் தூக்கியெறிந்த ஆண்டு— அவர்களுடைய குழுவானது பாரிஸில் செயலூக்கத்துடன் இருந்த பிரதான FTP பிரிவாக இருந்தது. அவர்கள் டஜன் கணக்கான தாக்குதல்களை நடத்தினர். மிகவும் பிரபலமாக, செப்டம்பர் 28, 1943 இல், அவர்கள் நாஜி SS ஜெனரல் ஜூலியஸ் ரிட்டரை (SS General Julius Ritter) சுட்டுக் கொன்றனர். அவர் பிரெஞ்சு தொழிலாளர்களை ஜேர்மனிக்கு பாரிய அளவில் நாடுகடத்துவதை ஒழுங்கமைக்க பணிக்கப்பட்டிருந்தார். 

பிரான்சின் பொது உளவுத்துறை சேவையின் 2 வது சிறப்பு படைப்பிரிவால் (Special Brigade of France’s General Intelligence, RG) வேட்டையாடப்பட்டு, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியால் (PCF) பாரிஸை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மிசாக் மனூக்கியானின் பிரிவு 1943 நவம்பரில் கைதுசெய்யப்பட்டது. இருப்பினும் மெலினே தப்பிவிட்டார். அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர்களின் படங்களுடன் வெளியிடப்பட்ட இழிபுகழ்பெற்ற “சிவப்பு சுவரொட்டி” (“Red Poster”), அவர்களை ஒரு யூத “குற்றங்களின் இராணுவம்” என்று கண்டனம் செய்தது. ஆனால் அதற்கு பதிலாக பிரெஞ்சு மக்களின் நீடித்த ஆதரவை வென்றெடுத்தது. மனூக்கியான் தனது மரணதண்டனைக்கு முன்னதாக, ஜேர்மனியர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்று அறிவித்தார்.

மனூக்கியான் குழு சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாக அதை ஆதரித்து செய்யப்பட்ட நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் பிரச்சார வெளியீடான “சிவப்புச் சுவரொட்டி”.

எதிர்ப்பு இயக்கத்தின் (resistance movement) தலைவிதியை ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்திற்கு வெளியில் புரிந்து கொள்ள முடியாது. எதிர்ப்பு போராட்டத்தில் இருந்த பல தொழிலாளர்களும் தங்களை முதலாளித்துவத்திற்கு எதிராக இயக்கப்பட்ட பாசிசத்திற்கு எதிரான ஒரு தேசியப் போரை அல்ல, ஒரு வர்க்கமாக தங்களைக் கண்டனர். ஆயினும், நான்காம் அகிலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் போராட்ட அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும், ஒரு ஐரோப்பிய மற்றும் சர்வதேச சோசலிசப் புரட்சிக்கும் இட்டுச் செல்ல, ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்திற்காக போராடியது. 

“தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற அதன் தவறான கோட்பாட்டின் அடிப்படையில், சோவியத் அதிகாரத்துவம், போரின் முடிவில் ஒரு ஐரோப்பிய சோசலிசப் புரட்சியை எதிர்த்தது. FTP போன்ற எதிர்ப்பு போராளிகள் (resistance militias) குழுக்களை இராணுவத்திற்குள் கட்டுவதற்கும், தொழிற்சாலை குழுக்கள் மற்றும் போராளிகள் குழுக்களைக் கலைப்பதற்கும், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பெருநிறுவன நிர்வாகிகளைக் கொண்ட தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கும் ஸ்ராலினிச கட்சியும் தொழிற்சங்க தலைமைகளும் முதலாளித்துவ அரசாங்கங்களுடன் சேர்ந்து வேலை செய்தன. தாராளவாத பெல்ஜிய பாதுகாப்பு மந்திரி பெர்னாண்ட் டெமெட்ஸ் (Fernand Demets) 1944 இல் தனது உதவியாளர்களிடம் கூறுகையில், “கோழி கத்தாமல் அதன் கழுத்தை நெரிப்பது” என்பதே எதிர்ப்பின் (resistance) மீதான கொள்கையாக இருந்தது என்றார். 

முதலாளித்துவ அல்லது ஸ்ராலினிச கூட்டணி சக்திகளானது 1940களில் புரட்சியைத் தவிர்க்க முடிந்த போதிலும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் (Trotskyist movement) மற்றும் கம்யூனிஸ்டுக்களின் எதிர்ப்பு (communist resistance) போராட்டம் இன்றும் பெரும் படிப்பினைகளைக் கொண்டுள்ளது. சோவியத் அதிகாரத்துவம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்தது. ஆனால் எதிர்ப்பின் (resistance) “சாகசப் பயணம்” என்று மக்ரோன் எதை அழைத்தாரோ அது முடிந்துவிடவில்லை. இனப்படுகொலை, உலகப் போர், எதேச்சாதிகார ஆட்சிகள் மற்றும் அவற்றைத் தோற்றுவிக்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டம் தொழிலாளர்களின் முடிவுறாத பணிகளாகும்.

தொழிற்சங்க இயந்திரங்களுக்கும் மக்ரோனின் போலிஸ் அரசுக்கும் இடையிலான “சமூகப் பேச்சுவார்த்தை” என்ற மூச்சுத்திணற வைக்கும் கட்டளையை உடைத்து வெளியேற, மனூக்கியான் போராட்டமானது ஒரு அத்தியாவசியமான மூலோபாய மாற்றீட்டை எழுப்புகிறது. மனூக்கியான் குழுவானது, நாஜி ஆட்சிக்கு எதிராக போராடிய ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்ட அமைப்புகளது வலையமைப்பின் பாகமாக இருந்தது. மக்ரோன் ஒரு பாசிசவாத ஆட்சிக்கு தலைமை கொடுக்கவில்லை, ஆனால் முதலாளித்துவ அரசுக்கு எதிரான, தொழிலாள வர்க்கத்தின் சாமானிய தொழிலாளர் அமைப்புகளின் ஒரு புதிய சர்வதேசக் கூட்டணியைக் கட்டமைப்பது மட்டுமே தொழிலாளர்களுக்கு முன்னாலிருக்கும் ஒரே பாதையாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மார்க்சிசத்தின் புரட்சிகர பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டங்களின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் புரட்சி சாத்தியமில்லை என்றும் ஸ்ராலினிஸ்டுகள்தான் புரட்சிகரப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முடியும் என்றும் கூறிய, மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையில் நான்காம் அகிலத்திற்குள்ளாக எழுந்த ஒரு போக்குக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்காக 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஸ்தாபிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முதல் பிரெஞ்சு பிரிவான பியர் லம்பேர்ட்டின் (Pierre Lambert) சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) பப்லோவாதத்திற்கு சரணடைந்தது. அது சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்துடன் கூட்டணியை தேடுவதற்காக 1971 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டது.

2016 இல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES), மக்ரோன் தனது பாசிசவாத கொள்கைகளை நியாயப்படுத்த மனூக்கியானை சிடுமூஞ்சித்தனமாக முன்மொழிவதற்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), பெசன்ஸநோ மற்றும் மெலோன்சோன் சரணடைவதை எதிர்க்கிறது. பப்லோவாதியான பெசன்ஸநோவும் முன்னாள் லம்பேர்ட்டிசவாதியான மெலோன்சோனும் ட்ரொட்ஸ்கிசத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக குட்டி-முதலாளித்துவ ட்ரொட்ஸ்கிச-விரோதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். “கோழி கத்தாமல் கழுத்தை நெரிக்க” வர்க்கப் போராட்டத்தில் அவர்கள் தலையிடுகிறார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு ஓய்வூதியங்களுக்கான போராட்டத்தின் போது சோசலிச சமத்துவக் கட்சி (PES) வலியுறுத்தியதைப் போல, அதாவது ஐரோப்பா முழுவதிலும் வெகுஜன வேலைநிறுத்த அலையின் பின்னணியில், சூழ்நிலைமையானது புறநிலைரீதியாக புரட்சிகரமானது என்று கூறியது. போர், போலிஸ் அரசு மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையாக கட்டியெழுப்புவதே புரட்சிகர உத்வேகத்துடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னால் உள்ள பணியாகும். ஒரு சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்காக போராடுவதும், மக்ரோனுடனான சரணாகதி மற்றும் ஒத்துழைப்புக்கு எதிராகப் போராடுவதும் மட்டுமே மனூக்கியானுக்கு செலுத்தும் ஒரு சரியான அஞ்சலியாக இருக்க முடியும்.

[1]பாந்தியோன் (Panthéon) பிரான்சின் பாரிஸிலுள்ள ஒரு கல்லறை ஆகும், முதலில் புனித ஜெனீவ்க்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயமாக கட்டப்பட்டது. இது இப்போது புகழ்பெற்ற பிரெஞ்சு குடிமக்களின் உடல் எச்சங்களைக் கொண்ட ஒரு மதச்சார்பற்ற கல்லறையாக செயல்படுகிறது.

Loading